எழுதியவர்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
அல்லாஹுத்தஆலாவினது ஹலாலான ரிஸ்க்கை ஒரு மனிதன் தேடிக்கொள்ளும் பொருட்டு இஸ்லாம் வியாபாரத்தை ஹலாலாக்கியிருக்கின்றது. ஒரு மனிதன் தனது குடும்பத்தை வறுமையிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழியாகவும் இந்த வியாபாரம் அமைந்திருக்கின்றது. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கினான், வட்டியை ஹராமாக்கினான்.” (அல்பகறா: 275)
இஸ்லாம் ஒரு மனிதனுக்குத் தேவையான அனைத்து விடயங்களிலும் வழிகாட்டியுள்ளது. அவன் மேற்கொள்ளக்கூடிய வியாபாரம் எவ்வாறு இருக்க வேண்டும், அதில் அவன் தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என்ன என்பதை அழகாகக் கூறித்தந்திருக்கின்றது. எனவே, இவ்வழிகாட்டல்களை வியாபாரத்தில் ஈடுபடக்கூடிய முஸ்லிம்கள் கடைபிடிப்பது அவர்களது கடமையாகும். வியாபாரிகளுக்கு இஸ்லாம் கூறுகின்ற வழிமுறைகளில் சிலவற்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
1. வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும்.
வியாபாரத்தில் ஈடுபடும் சகோதரர்கள் அவர்களுடைய வியாபார விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். அல்லாஹுத்தஆலாவும், அவனது தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறு பல இடங்களில் வஸிய்யத் செய்திருக்கின்றார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “உங்களுக்கு முன்னால் இருந்த வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறு நாம் நிச்சயமாக வஸிய்யத் செய்திருக்கின்றோம்.” (அந்நிஸா: 131)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறு நான் உங்களுக்கு வஸிய்யத் செய்கிறேன்.” (அபூதாவூத், திர்மிதீ)
அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் வஸிய்யத்திற்கேற்ப எமது அனைத்து விடயங்களிலும் நேரங்களிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கின்றோம்.
மார்க்கம் அனுமதித்த விதத்தில் வியாபாரத்தை நடாத்திச் செல்வதும், மார்க்கம் அனுமதிக்காத விடயங்களை வியாபாரத்தினுள் நுழைவிக்காமல் இருப்பதுமே வியாபாரத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்கின்ற சரியான அமைப்பாகும்.
வியாபாரத்தில் ஈடுபடுகின்ற சகோதரர்கள் சரியான முறையில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளாததன் காரணமாக அவர்களுடைய வியாபாரங்களில் மனிதர்களை அவர்கள் ஏமாற்றுகின்றார்கள், பொய் கூறுகின்றார்கள். இவ்வாறான ஏமாற்று, பொய், வட்டி ஆகியன கலக்கப்பட்ட வியாபாரத்தின் மூலமே சரியான ஒரு இலாபத்தை அடைய முடியும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளாததன் காரணமாக அது அவர்களுக்கு இலாபத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், அல்லாஹ் அவனைப் பயப்படுகின்றவர்களுக்கே அதிகமாகக் கொடுக்கின்றான்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “யார் அல்லாஹ்வைப் பயந்துகொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் அனைத்து நெருக்கடிகளிலிருந்தும் வெளியேறக்கூடிய ஒரு வழியை ஏற்படுத்துவான். அவன் எண்ணிப்பார்க்காத புறத்திலிருந்து அவனுக்கு ரிஸ்க் அளிப்பான்.” (அத்தலாக்: 2, 3)
இறையச்சத்தின் மூலமே நெருக்கடிகளிலிருந்தும் நஷ்டத்திலிருந்தும் வெளியேற முடியும் என்பதை இவ்வசனங்கள் விபரிக்கின்றன. மாறாக, சில வியாபாரிகள் கருதுவதுபோல் வட்டி, ஏமாற்று, பொய் ஆகியன மூலம் வியாபாரத்தில் இலாபத்தை அடைந்துகொள்ள முடியாது. எனவே, வியாபாரத்தில் ஈடுபடுகின்ற முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அதுவே அவர்களது வியாபாரம் இலாபமடைவதற்குரிய காரணமுமாகும்.
2. அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் பாழாக்கும் விதத்தில் எவருடைய வியாபாரமும் அமைந்துவிடக்கூடாது.
வியாபாரத்தை இஸ்லாம் ஹலாலாக்கியுள்ளது என்பதற்காக அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறக்கடிக்கச் செய்யக்கூடியதாக அது அமைந்துவிடக்கூடாது. இன்று அதிகமான முஸ்லிம்கள் வியாபாரத்தில் உள்ள ஈடுபாடின் காரணமாக அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஐவேளைத் தொழுகைகளைத் தொழுதல், மார்க்க அறிவு சார்ந்த பாடங்களில் கலந்து கொள்ளல், நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல் ஆகிய வணக்க வழிபாடுகளில் இவர்களுடைய ஆர்வம் குறைந்து வருகின்றது.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “விசுவாசம் கொண்டவர்களே! உங்களுடைய செல்வங்களும், உங்களுடைய பிள்ளைகளும் அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உங்களை வீணாக்கிவிட வேண்டாம். இன்னும், எவர்கள் அதைச் செய்கிறார்களோ அவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்.” (அல்முனாபிகூன்: 9) வியாபாரம் அல்லாஹ்வுக்குச் செய்யப்பட வேண்டிய வணக்க வழிபாடுகளை விட்டும் ஒரு மனிதனைத் திருப்பிவிடக்கூடாது என்பதை அல்லாஹ் இவ்வசனத்தில் குறித்துக் காட்டுகின்றான். எவர்களுக்கு இந்நிலை ஏற்படுமோ அவர்கள் நஷ்டவாளிகளாக மாறுவார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
எவர்கள் தமது வியாபாரத்துடன் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் சரிவர நிறைவேற்றுகின்றார்களோ அவர்களை அல்லாஹ் அல்குர்ஆனில் புகழ்ந்து கூறியிருப்பதோடு அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கூலியையும் குறிப்பிட்டுள்ளான். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(அவ்வாறு துதி செய்யும்) ஆண்களைப் பொறுத்த வரையில் அவர்களை வணிகமோ விற்பனையோ அல்லாஹ்வை நினைவு கூறுவதைவிட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதைவிட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் வீணாக்கிவிடாது. இன்னும் ஒரு நாளை அவர்கள் பயந்து கொண்டிருப்பர். அதில் இதயங்களும் பார்வைகளும் தடுமாற்றமடைந்துவிடும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு மிக அழகானதை அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியாகக் கொடுப்பதாகவும், தன் பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகமாக்கவும் (இவ்வாறு தொழுது தஸ்பீஹ் செய்து வருவார்கள்.) மேலும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு கணக்கின்றியே கொடுப்பான்.” (அந்நூர்: 37, 38)
ஆகவே, அல்லாஹ்வுக்கு வணக்கம் செலுத்துகின்ற விடயத்தில் வியாபாரத்தில் ஈடுபடும் சகோதரர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் வியாபாரத்தை மேற்கொள்கின்ற இடத்தில் பள்ளிவாசல்கள் காணப்படின் அங்கு சென்று தொழ வேண்டும். பள்ளிவாசல்கள் காணப்படாவிடின் அல்லது, இருந்தும் அவற்றில் தொழுவதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியிருக்காவிடின் தாம் தொழில் செய்யும் இடத்திலாவது ஏனையோருடன் ஜமாஅத்தாகத் தொழ முற்பட வேண்டும்.
3. வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் வட்டியை விட்டும் தூரமானவர்களாக இருக்க வேண்டும்.
வட்டி ஒரு மனிதனை நரகின் பால் கொண்டு செல்லும். மேலும், வட்டி இஸ்லாத்தில் பெரும்பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. வட்டியுடன் தொடர்புள்ளவனுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனைகள் பற்றியும் இஸ்லாம் கூறியிருக்கின்றது. இவைகளைப் பற்றிய அறிவின்றி அல்லது, அறிந்தும் அதனைப் பொருட்படுத்தாதவர்களாக அதிகமான முஸ்லிம்கள் வட்டித் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
வட்டி குறித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “வட்டி சாப்பிடக்கூடியவர்கள் ஷைத்தான் தீண்டியதால் எவனை அவன் நினைவிழக்கச் செய்தானோ அவன் எழுப்பப்படுவது போலன்றி அவர்கள் எழமாட்டார்கள்.” (அல்பகறா: 275)
மறுமை நாளில் வட்டி சாப்பிட்டவன் எவ்வாறான ஒரு தோற்றத்தில் இருப்பான் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்தியுள்ளது. இது அவனுக்கு மறுமை நாளில் கிடைக்கவிருக்கும் தண்டனையாகும்.
மேலும், அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும், நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பின் வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டுவிடுங்கள். ஆகவே, நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள்.” (அல்பகறா: 275)
வட்டியை சாப்பிடுபவன் அல்லாஹ்வுடனும் தூதருடனும் போர் செய்வதற்குச் சமன் என்பதை இவ்வசனம் குறித்துக் காட்டுகின்றது. மேலும், உண்மையான விசுவாசிகளிடம் வட்டி சாப்பிடுகின்ற மோசமான பண்பு இருக்கக்கூடாது என்பதையும் இவ்வசனம் உணர்த்துகின்றது.
ஆகவே, வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் வட்டியை விட்டும் தூரமாகியிருக்க வேண்டும். அவர்களது இவ்வுலக வாழ்க்கையும் மறு உலக வாழ்க்கையும் நலவாக அமைவதற்கு வியாபாரம் ஒரு காணரமாக அமைந்தவிடும்.
வட்டியின் மூலம் பாரிய இலாபத்தை அடைய முடியும் என்பதே பெரும்பாலானவர்களின் நோக்காகும். ஆனால், வட்டி அழியக்கூடியது என்பதை அல்லாஹ் அல்குர்ஆனில் உறுதிப்படுத்தியுள்ளான்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ் வட்டியை அழிப்பான், தர்மங்களை வளர்ப்பான்.” (அல்பகறா: 276)
எவர்களெல்லாம் தனது சொத்துக்களிலிருந்து செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ் பணத்திலிருந்து மேலதிகமாக வழங்குவான். யார் வட்டியின் மூலம் இலாபத்தை நாடுகின்றார்களோ அவர்களது குறிக்கோள் நிறைவேற்றப்படமாட்டாது. மாறாக, அந்தப் பணங்கள் யாவும் அழிக்கப்படும் என்பதை இவ்வசனம் குறிப்பிட்டிருக்கின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வட்டி குறித்து எச்சரித்திருக்கின்றார்கள். அவர்கள் ஹஜ்ஜதுல் விதா பேருரையில் பின்வருமாறு கூறினார்கள்: ‘ஜாஹிலிய்யாக் கால வட்டிகளில் அனைத்துவிதமான வட்டிகளும் என்னுடைய பாதத்திற்குக் கீழ் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளன.” (முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழித்துவிடக்கூடிய ஏழு பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியைக் கூறியிருக்கின்றார்கள். மேலும், வட்டியுடன் தொடர்புடைய யாவரும் சபிக்கப்பட்டவர்கள் என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வட்டியைச் சாப்பிடுபவன், அதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவன், அதை எழுதுபவன், அதற்குச் சாட்சியாக இருக்கும் இருபவர் ஆகியோரை சபித்தார்கள். அவர்கள் அனைவரும் சமமானவர்களே என்று அவர்கள் கூறுகின்றார்கள்.” (முஸ்லிம்)
வட்டியைப்பற்றிக் கூறுவதாயின் விரிவான தகவல்களை நாம் கூறலாம். என்றாலும், இதுபோன்ற ஆதாரங்களைப் புரிந்து கொண்ட ஒரு முஸ்லிம் ஒருபோதும் வட்டியின் பக்கம் திரும்பமாட்டான் என்று நாம் ஆசை வைக்கின்றோம். எனவே, வியாபாரத்தில் வட்டியை ஒழிப்போம்! அல்லாஹ்வின் கூலியையும் திருப்தியையும் பெற்றுக்கொள்வோம்!
4. வியபாரத்தில் ஏமாற்று நடவடிக்கைகளை தவிர்ந்து கொள்ள வேண்டும்.
வியாபாரத்திலோ அல்லது அதுவல்லாத காரியங்களிலோ பிறரை ஏமாற்றுவது மார்க்கத்தில் அனுமத்திக்கப்பட்டதல்ல. ஏனெனில், அது ஒரு முஸ்லிமை நோவினைப்படுத்தும் காரியமாக அமைந்துள்ளது. சிலர் ஏமாற்றுத் தொழிலின் மூலம் அதிகமான இலாபத்தை ஈட்டிக்கொள்கின்றனர். ஆனால், அப்பணங்களை பல தேவைகளுக்கு இழப்பதற்கு அவன் நிர்ப்பந்திக்கப்படுவான். மார்க்க அடிப்படையில் வியாபாரம் செய்து குறைவான இலாபத்தை பெறுபவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் அதிகமாகக் கொடுப்பான்.
வியாபாரத்திலோ அதுவல்லாத இடங்களிலோ பிறரை ஏமாற்றுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். ஒரு முறை அவர்கள் ஓர் உணவுக் குவியலின் அருகால் சென்று கொண்டிருந்தபோது அதில் அவர்கள் தன் கையை நுழைத்தார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் படிந்தது. அப்போது அவர்கள்: “இவ்வுணவுக்குச் சொந்தக்காரனே! இது என்ன?” என்று கேட்டார். அதற்கு அம்மனிதர்: ‘அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் அதில் படிந்துவிட்டது” என்றார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ‘மனிதர்கள் பார்ப்பதற்காக வேண்டி அதை நீ உணவுக்கு மேலால் வைத்திருக்கக் கூடாதா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல” என்று கூறினார்கள். (முஸ்லிம்)
வியாபாரத்தில் ஏமாற்று நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.
சிலர் பொருட்களில் காணப்படும் குறைகளை மறைத்து அப்பொருட்களை சிறந்த பொருட்களாக மனிதர்களிடம் காண்பித்து அவர்களை ஏமாற்றி வியாபாரத்தை மேற்கொள்கின்றனர். இவைகள் அனைத்தும் முற்றாக தவிர்ந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். அல்லாஹ்வை பயந்து கொள்ளும் எந்தவொரு முஸ்லிமுக்கும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது ஆகாது. பிறரை ஏமாற்றுவது உண்மையான விசுவாசியின் பண்புமல்ல என்பதை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
5. பொய் வியாபாரத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
வியாபாரத்தில் பொய் கூறி அவர்களுடைய பொருட்களை விற்பனை செய்யும் பலர் இருக்கின்றனர். பொதுவாகவே பொய் என்பது மார்க்கம் தடை செய்த ஒன்றாகும். மேலும், நயவஞ்சகனுக்குரிய அடையாளமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொய்யை குறிப்பிட்டுள்ளார்கள்.
சிலர் வியாபாரப் பொருட்களை பொய் சத்தியம் செய்து விற்பனை செய்யக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். இது கடுமையாக எச்சரிக்கப்பட்ட ஒரு குற்றச் செயலாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “மூன்று நபர்கள் உள்ளனர். அவர்களுடன் அல்லாஹ் பேசமாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான், அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு. கரண்டையின் கீழ் ஆடை அணிபவன், நன்மையைச் சொல்லிக்காட்டுபவன், பொய் சத்தியம் செய்து தன் பொருளை விற்பவன் ஆகியோரே அம்மூவருமாவார்கள்.”
பொய் சத்தியம் செய்து விற்பது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. ஆகவே, குறையுள்ள ஒரு பொருளை நல்ல பொருளாகக் காண்பித்து அதற்காகப் பொய் சத்தியம் செய்து அதை விற்பதை விட்டும் வியாபாரிகள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
பொருட்களில் உள்ள குறைகளை மறைத்து விற்பனை செய்வதன் மூலம் தமக்கு நலவு கிடைக்கும் என்பதே வியாபாரிகளின் எதிர்பார்ப்பு. ஆனால், இவ்வியாபாரத்தில் அல்லாஹ்வின் பரகத் ஏற்படாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். “வாங்குபவருக்கும் விற்பவருக்கும் அவர்களிருவரும் பிரிந்து செல்லாத வரைக்கும் அவர்களுக்குத் தெரிவுச் சுதந்திரம் இருக்கின்றது. அவர்கள் இருவரும் உண்மை கூறி, குறைகளைத் தெளிவுபடுத்தினால் அவர்களுடைய வியபாரத்தில் அபிவிருத்தி செய்யப்படும். அவர்கள் பொய் கூறி, குறைகளை மறைத்தால் அவர்களுடைய வியாபாரத்தின் அபிவிருத்தி அழிக்கப்படும்” என்று அவர்கள் கூறினார்கள். (புஹாரீ, முஸ்லிம்)
எவ்வாறான வியாபாரத்தில் பரகத் இருக்கின்றது என்பதை இங்கு நாம் விளங்கிக் கொள்ளலாம். பொய், ஏமாற்றுதலின் மூலம் நாம் இலாபத்தை எதிர்பார்க்கின்றோம். ஆனால், அல்லாஹ் கலப்படமற்ற வியாபாரத்திலேயே பரகத்தை வைத்திருக்கின்றான்.
எனவே, ஏமாற்றம் செய்து, பொய் கூறி, பொருட்களில் உள்ள குறைகளை வாங்குவோருக்கு தெரிவிக்காது அவைகளை மறைத்து விற்பனை செய்யும் முஸ்லிம்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய பிரகாரம் உண்மை கூறி, குறைகளைத் தெளிவுபடுத்தி விற்பனையில் ஈடுபட வேண்டும். நிச்சயமாக இவ்வாறான வியாபாரத்திலேயே அதிகமான இலாபத்தை ஈட்டிக்கொள்ள முடியும் என்பதையும் நாம் புரிந்து கொள்வோம்.