நரகத்தில் சில காட்சிகள்




மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்

நரகம் என்பது மிகவும் கொடியது, யாரினாலும் அதனுடைய வேதனையை தாங்க முடியாது, நரகத்தில் பலவிதமான பயங்கரமான தண்டனைகளையும் அல்லாஹ் பாவிகளுக்கு தயார் பண்ணி வைத்துள்ளான். இந்த பயங்கரமான நரகத்தைப் பற்றி அல்லாஹ்வும், நபியவர்களும் கடுமையாக எச்சரித்த பல செய்திகளை தொடராக உங்கள் சிந்தனைகளுக்கு முன் வைக்க உள்ளேன்.

அல்லாஹ் நரகத்தைப் பற்றி பேசும் போது பின்வருமாறு கூறுகிறான்

“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்” -66:06

மேலும் மற்றொரு இடத்தில்

“(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது  மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது” -2:24

மேலும்

“நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்)” -21:98

மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் முதலாவது நமது குடும்பத்தை நரகத்தை விட்டு்ம் பாதுகாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட வேண்டும். நானும், எனது மனைவியும், எனது பிள்ளைகளும் குடும்பத்தோடு சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் இறை கடமைகளை சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நரகத்தின் எரி கொல்லிகளாக பாவிகளையும்,கற்களையும் தான் அல்லாஹ் ஏற்பாடு செய்துள்ளான். என்பதை பயந்து கொள்ள வேண்டும்.

மேலும் பாவிகள் மறுமை நாளில் எழுப்பப் படும் நிலையைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு எடுத்துக் கூறுகிறான்.

“அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்” -17:97

பாவிகள் மறுமை நாளில் முகம் குப்பற எழுப்பப்படுவார்கள் என்ற செய்தியை ஸஹாபாக்கள் கேட்டவுடன் யா ரஸூலுல்லாஹ் முகத்தினால் எப்படி நடக்க முடியும் என்று கேட்ட போது கால்களினால் நடக்க வைத்த அல்லாஹ் அவர்களை முகத்தினால் நடக்க வைப்பது இலகுவான காரியமாகும் என்று கூறினார்கள்.

நரகத்தின் பெயர்கள்…

பாவிகளை எரிப்பதற்காக தயார் செய்துள்ள நரகத்தை பல பெயர்களில் அல்லாஹ் குறிப்பிட்டு எச்சரிக்கிறான்.

அந்நார்:

“எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் (நாரில்) புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. -4:14

ஜஹன்னம்:

“(முஃமின்களே!) அல்லாஹ்வின் வசனங்கள் (சிலரால்)நிராகரிக்கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீங்கள் கேட்டால், அவர்கள் இதைவிட்டு வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் அவர்களோடு நீங்கள் உட்கார வேண்டாம்” என்று வேதத்தின் மூலம் அவன் உங்கள் மீது (கட்டளை) இறக்கியுள்ளான். அவ்வாறு உட்கார்ந்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும், காஃபிர்களையும் எல்லாம் நரகத்தில் (ஜஹன்னமில்)ஒன்றாகச் சேர்த்துவிடுவான். -4:140

ஜஹீம்:

“எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரக(ஜஹீம்)வாசிகள் ஆவார்கள்” -5:10

அஸ்ஸயீர்:

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பை (ஸயீரை)சித்தம் செய்திருக்கின்றான்” -33:64

ஸகர்:

“அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், (ஸகர்)“நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று அவர்களுக்கு கூறப்படும்) -54:48

அல்ஹூதமா:

“அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் (நரகில்)எறியப்படுவான்” -104:4

ளலா:

“அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும்(ளலா) நெருப்பாகும்” -70:15

தாருல்பவார்:

“அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில்(தாருல் பவாரில்) நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?”-14:28

“(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் – இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்” -14:29

அல்லாஹ்விற்கு கட்டுப்படாதவர்களை நரகத்தின் பல பெயர்களை சுட்டிக் காட்டிஎச்சரிக்கிறான்.

நரக நெருப்பின் தன்மை…

நரக நெருப்பின் தாக்கம் எப்படி இருக்கும். பாவிகள் இந்த உலகில் வாழும் போதே அதை விளங்கிக் கொள்ள வேண்டும். என்பதை பின் வரும் நபி மொழி மூலம் நபியவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’ என்றார்கள்.  -புகாரி 3265

அல்லாஹ் நரக நெருப்பை எழுபது பகுதிகளாக பிரித்து அதில் ஒரு பகுதியை தான் உலகில் தந்துள்ளான் என்றால் பாவிகளை சுட்டெரிக்கும் நெருப்பின் தாக்கம் (வீரியம் ) எப்படி இருக்கும் என்று எச்சரிப்பதற்காகவே இந்த செய்தியை நபியவர்கள் கூறினார்கள்.

நரகத்தின் ஆழம்…

நரகத்தின் ஆழத்தைப் பற்றி நாம் அறிவதற்காக வேண்டி பின்வரும் நபிமொழியை நபியவர்கள் கூறுவதை காணலாம்.

“ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது பயங்கரமான ஒரு சப்தத்தை கேட்டு தோழர்கள் திரும்பி பார்த்தார்கள் அப்போது நபியவர்கள் அந்த சப்தத்தை கேட்டீர்களா ? என்று தன் தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு ஆம் என்று தோழர்கள் கூறினார்கள். அல்லாஹ் எழுபது ஆண்டுகளுக்கு முன் நரகத்திற்கு மேலாக ஒரு பெரிய கல்லை போட்டான் அது இப்போது தான் அடி தட்டை சேர்ந்துள்ளது என்று பதில் கூறினார்கள்”. -முஸ்லிம்

மேலே இருந்து ஒரு கல்லை போட்டால் அது வேகமாக வரும், அதுவும் நரகத்தின் அடிதட்டை சேருவதற்கு எழுபது ஆண்டுகள் எடுத்துள்ளது என்றால் நரகத்தின் ஆழத்தை இவ்வளவு தான் என்று குறிப்பிட முடியாத அளவிற்கு எடுத்து காட்டப்பட்டுள்ளது.

நரகத்திற்கு ஏழு வாசல்கள்…

சுவர்கத்திற்கு எட்டு வாசல்கள் இருப்பதைப் போல நரகத்திற்கு ஏழு வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதை பின் வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்” -15:43

“அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” -15:44

இணை வைத்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது…

பொதுவாக மனிதன் பாவங்களுக்கு மத்தியில் படைக்கப்பட்டுள்ளான். செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு இரண்டு வழிகளை இஸ்லாம் காட்டுகிறது.முதலாவது நாம் செய்யும் அமல்கள் மூலம் பாவங்கள் அழிக்கப்படுகிறது. இரண்டாவது செய்த பாவத்தை அல்லாஹ்விடம் சொல்லி அதற்கான பாவமன்னிப்பை வேண்டுவதாகும். இந்த இரண்டு சந்தர்ப்பங்களை பயன் படுத்தாதவர்கள் மறுமையில் நஷ்டவாளிகளாகும். குறிப்பாக அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்கள் பாவமன்னிப்பு கேட்காமல் மரணித்துவிட்டால் அவர்களை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்கவே மாட்டான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது.

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்” -4:48

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்,

தொழுகையில் அலச்சியம்…

ஒரு மனிதர் மல்லாக்க படித்திருக்கிறார். அவரின் பக்கத்தில் ஒரு மனிதர் பெரிய கல்லை துாக்கி படுத்திபவரின் தலையில் ஓங்கி போடுகிறார். தலை சுக்கு நுாறாக சிதறி போகிறது. அடித்த வேகத்தில் அந்த கல் துார இடத்திற்கு போய் விட்டு, மீண்டும் அந்த மனிதரின் பக்கம் உருண்டு வருகிறது. அந்த கல் வருவதற்கு முன் அவரின் தலை மீண்டும் சரியாகி விடுகிறது. மீ்ண்டும் அந்த கல்லை அந்த மனிதர் எடுத்து அவரின் தலையையில் ஓங்கி போடுகிறார். முன்னைய போல தலை சிதறுகிறது. இவர் ஏன் இப்படி சித்தரவதைக்கு ஆளாக்கப்படுகிறார் என்று நபியவர்கள் காரணம் கேட்ட போது இவர் குர்ஆனை மனனம் செய்து மறந்தவர்.மற்றும் பர்ளான தொழுகையை அலச்சியம் செய்பவர் என்று கூறப்பட்டது.

பொய்யை பரப்பியவர்…

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம்பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டோருக்கு தண்டனை…

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், ‘இவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று என்னிடம் கூறினர்.

வட்டி வாங்கியோருக்கு தண்டனை…

அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், ‘இவ்விருவரும் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

நரகத்தின் காவலாளி மாலிக்…

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று கூறினர்… நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில்
நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார்.  -(புகாரி 7047)

கண்மூடித்தனமாக தலைவரை பின்பற்றியவர்ளுக்கு தண்டனை…

இந்த உலகில் பின் பற்றுபற்றுவதற்கு தகுதியானது குர்ஆனும், சுன்னாவுமாகும். அல்லாஹ் குர்ஆனில் சொல்லக் கூடிய அம்சங்களை நாளாந்தம் பின் பற்ற வேண்டும்.அதே போல நபியவர்கள் காட்டித்தந்த அமல்களை நாளாந்தம் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவைகளை விட்டு விட்டு அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார், அவர் நமது தலைவர், இவர் நமது பெரியார் என்று மார்க்கத்தை
சரியாக விளங்காமல் தலைவர்மார்களுக்கும், பெரியார்களுக்கும் பின்னால் செல்லக் கூடிய மக்களுக்காக பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு எச்சரிக்கிறான்.

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான். -33:64

“அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள். -33:65

“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். -33:66

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். -33:67

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்). -33:68

மறுமையில் நெருப்பில் சென்று ஓலமீடுவதை விட இந்த உலகத்திலே நிதானமாக சிந்தித்து நான் யாரை பின் பற்ற வேண்டும், நான் எதை எனது வாழ்நாளில் அமலாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை ஒரு தடவைக்கு பல தடவைகள் சிந்தித்து செயல்படுங்கள்.

முனாபிக்குகளுக்கான (நயவஞ்சகர்ளுக்கான ) தண்டனை…

நல்லவர்களைப் போல நடிப்பவர்கள் மகா கெட்டவர்கள். இவர்கள் உலகத்தில் நல்லவர்களைப் பால நடந்து கொண்டாலும் மறுமை நாளில் இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை அல்லாஹ் தயார் பண்ணி வைத்துள்ளான். பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று பயத்தோடு கவனியுங்கள்.

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். -4:145

நரகத்தில் குறைந்த தண்டனை…

நரகத்தில் பலவிதமான தண்டனைகளை பாவிகளுக்கு அல்லாஹ் ஏற்ப்பாடு செய்துள்ளான்.அந்த தண்டனைகளில் மிகவும் குறைந்த தண்டனை நபியவர்களின் சாச்சா அபூதாலிபுக்கு கொடுக்கப்படுவதாக நபியவர்களே பின்வருமாறு உறுதிப்படுத்துகிறார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், ‘அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்’ என்று சொல்ல கேட்டேன். (புகாரி-6564)

நரகத்திற்குள் பலவித தண்டனைகள்

சென்ற இரண்டு தொடர்களில் நரகத்தின் சில பயங்கரமான காட்சிகளையும் மற்றும் நரகத்தின் வேதனையை எந்த, எந்த, பாவத்திற்காக தண்டனையாக அனுபவிக்கிறார்கள் என்பதை பார்த்தோம்.

இந்த தொடரில் நரகத்திற்குள் பாவிகளுக்கு கிடைக்கும் அதி பயங்கர வேதனைகளை கவனிப்போம்.

ஆடை…
இந்த உலகத்தில் மானத்தை மறைக்க வித,விதமான ஆடைகளை மக்கள் அணிகிறார்கள். அதே நேரம் அல்லாஹ்வுக்கு மாறு செய்த பாவியாக இருந்து அவன் நரகத்திற்கு உரியவனாக தீர்ப்பளிக்கப்பட்டால், நரகத்திற்குள் பலவிதமான நரகத்தின் வேதனைகளை அனுபவிப்பான் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் நமக்கு எச்சரிப்பதை காணலாம்.

நரகத்தில் பாவிகளுக்கு ஆடை வழங்கப்படும். எப்படியான ஆடை என்றால் நெருப்பில் உண்டான ஆடையை அல்லாஹ் கொடுத்து வேதனையை கடுமையாக்குகிறான்.

“(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும். -22:19

சுடு நீர்…
உலகில் தாகிக்கும் போதெல்லாம் தேவையான அளவு தண்ணீரை குடிக்கிறோம். அதே நேரம் நரகத்தில் பாவிகள் வேதனையை அனுபவித்துக் காண்டு தண்ணீர்,தண்ணீர் என்று கூக்குரல் இடும் போது, அந்த பாவிகளுக்கு தண்ணீர் கொடுக்கப்படும் எப்படிப்பட்ட தண்ணீர் என்றால் கடுமையான சூடேற்றப்பட்ட கொதி நீரை பானமாக கொடுக்கப்படும் என்பதை பின் வரும் குர்ஆன் வசனங்கள் உறுதி படுத்துவதோடு, அந்த தண்ணீரை குடித்தால் குடல்கள் துண்டு, துண்டாக போகும் என்பதை குர்ஆன் எச்சரிக்கிறது.

“(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டுவிடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத்தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. -6:70

மேலும், “பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் :என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா? -47:15

சீல் (சலம்) கொடுக்கப்படும்…
சீல் என்பது பழைய புண்ணிலிருந்து நாற்றத்தோடு வெளியேறக்கூடியது. அல்லது காதுகளிலிருந்து நாற்றத்தோடு வெளிவரும். எங்கள் உடம்பிலிருந்து வெளிவரும் இந்த சலத்தின் நாற்றத்தை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. அதே நேரம் நரகத்தில் வேதனையை தாங்க முடியாமல் தண்ணீர், தண்ணீர் என்று கத்தும் போது கடுமையான நாற்றம் வீசும் சலத்தை இந்த குடி என்று கொடுக்கப்படும் என்பதை பின வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

“(அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது. -38:57

இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் – கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும். -38:56

நெருப்பு காற்று…
உலகில் உயிர் வாழ காற்று மிக அவசியமாகும். அதே நேரம் நரகத்திலும் காற்றும் வீசும், அந்த காற்று எப்படி பட்டது என்பதை கவனிப்போம்.

“(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -56:43

அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள். -56:42

நரகத்தில் விரிப்பு…
உலகில் நாம் தூங்கும் நேரங்களில் கீழே விரிப்பை விரிப்போம். நரகத்திலும் அல்லாஹ் நெருப்பிலான விரிப்பையும், போர்வையையும் கொடுத்து வேதனையை பாவிகளுக்கு அதிகப்படுத்துகிறான்.

“அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.” -7:41

தோல் கருகும்…
நரகத்தில் பாவிகளை எரிக்கும் போது நமது தோல் கருகி போகும். தோல் கருக, கருக மீண்டும், மீண்டும் புதிய தோலை அல்லாஹ் பாவிகளுக்கு போட்டுக் கொண்டே இருப்பான். ஏன் என்றால் தோலின் மூலம் தான் முழு உடம்பும் வேதனையை உணர முடியும். நரகத்தை படைத்த அல்லாஹ் இப்படி சொல்லிக் காட்டுகிறான்.

“யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான். -4:56

நரகத்தின் வேதனைகளை நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. ஆனால் வேதனைக்கு மேல் வேதனை என்றால் எப்படி இருக்கும்? பாவிகள் தாங்க முடியாத அளவிற்கு நரகத்தை அல்லாஹ் தயார் பண்ணி வைத்துள்ளான்.

நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது…
“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: நரகவாசிகளே! என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் இதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்பார். அவர்கள், ஆம் (அறிவோம்;) இதுதான் மரணம் என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை என்று கூறுவார்.
இதை  அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார் (புகாரி 4730)

மன்னிக்கப்படக்கூடிய நரகவாசிகள் மன்னிக்கப்பட்டு சுவத்திற்கு அனுப்பிய பிறகு, நரகவாசிகள் தொடராக வேதனையை அனுபவித்துக்
கொண்டே இருப்பார்கள்.

நரக நெருப்பின் தன்மை…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும் என்று கூறினார்கள். உடனே, இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், (அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் என்றார்கள். (புகாரி 3265)

உலக நெருப்பின் தாக்கத்தையே நம்மால் தாங்க முடியாது என்றால் இதை விட அறுபத்தொன்பது மடங்கு கடுமையாக சூடேற்றப்பட்ட
நெருப்பின் தாக்கத்தை நாம் பயந்து நல்லறங்களில் அதிகமாக நாம் ஈடுபட வேண்டும்.

நரகில் பாவியின் குடல் வெளியே…
பிறருக்கு நன்மையான விடயங்களை ஏவிவிட்டு, அவைகளை ஏவியவர்கள் செய்யாவிட்டால், நரகில் கிடைக்கும் தண்டனையை பின்
வரும் ஹதீஸ் எச்சரிப்பதை காணலாம்.

“மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை
செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, இன்னாரே! உமக்கேன் இந்த
நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க
வில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான்
செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் என்று
கூறுவார். (புகாரி- 3267)

நரகத்தில் ஒரு பெண்…
தன் வீட்டில் வசித்து வந்த பூனைக்கு எந்த விதமான உணவையும் கொடுக்காமல் கட்டிப் போட்டதினால் நரகத்தில் அவள் வேதனையை
அனுபவிக்கிறாள் என்று நபியவர்கள் எச்சரிப்பதை பின் வரும் ஹதீஸில் காணலாம்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று
அல்லாஹ் கூறினான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.(புகாரி 2365)

மனிதர்களோ, மிருங்களோ அனைத்து ஜீவராசிகளுடன் இரக்கமாக நடந்து கொள்ள வேண்டும். மீறினால் நரகில் தண்டனை அனுபவிக்க
வேண்டும், என்பதை தான் மேற்ச் சுட்டிக்க காட்டிய ஹதீஸ் நமக்கு எச்சரிக்கிறது.

நரகத்தில் பெண்கள்…
நரகத்தில் பெண்கள் அதிகமாக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். பெண்கள் அதிகமாக குறை பேசி திரிவதினாலும்,
கணவருக்கு நன்றி கெட்டவர்களாக இருப்பதினாலும், மேலும் மறுப்பதினாலும் அதிகமாக நரகத்தில் தண்டனைகளை அனுபவிக்கிறார்கள். அதனால் தான் அதிகமாக தர்மங்களை செய்வதன் மூலம் அந்த பயங்கரமான நரகத்தை விட்டும் பாதுகாப்பு பெறுவதற்கான வழியை நபியவர்கள் பெண்களுக்கு விசேடமாக கூறுகிறார்கள். அன்றாடம் நல்லமல்களை தொடராக செய்வதோடு குறிப்பாக அதிகமாக ஸதகாக்கள் கொடுக்க கூடிய பழக்கத்தை பெண்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.

“நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன் என்று கூறினார்கள். மக்கள் ஏன் (அது), அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் நிராகரிப்பே காரணம் என்றார்கள். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு கணவர்களை நிராகரி(த்து நிந்தி)க்கிறார்கள். (கணவர் செய்த) உதவிகளுக்கு நன்றி காட்ட மறுக்கிறார்கள். காலமெல்லாம் அவர்களில் ஒருத்திக்கு நீ உதவி செய்து, பிறகு உன்னிடம் ஏதேனும் (குறை ஒன்றைக்) கண்டால் உன்னிடமிருந்து எந்த நலனையும் ஒருபோதும் நான் கண்டதேயில்லை என்று சொல்லிவிடுவாள் என்று பதிலளித்தார்கள். (புகாரி- 1659)

எனவே குடும்பம் என்றால் பல கஷ்டங்கள் இருக்க தான் செய்யும் அதற்காக எதற்கெடுத்தாலும் கணவரை குறை சொல்லக் கூடிய
நிலையில் மனைவிமார்கள் இருக்க கூடாது. இருப்பதை கொண்டு சமாளித்து போக கூடிய நிலையை பெண்கள் அமைத்துக் கொள்ள
வேண்டும். கணவரைப் பற்றி தப்பாக வீட்டிற்குள்ளேயும், வீட்டிற்கு வெளியேயும், பேசி திரியக் கூடாது. பெண்கள் தங்களை
பக்குவபடுத்திக்கு கொள்வதோடு,அமல்களில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஏன் என்றால் அமல்களில் பெண்கள் குறை
நிலையிலே படைக்கப் பட்டுள்ளனர் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துகின்றன.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா? அதுதான் மார்க்கத்தில் அவளுக்குள்ள குறைபாடாகும். இதை அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.( புகாரி 1951)

மேலும் “அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ஆம் (பாதியளவு தான்) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அதுதான் அவளுடைய அறிவின் குறை பாடாகும் என்று கூறினார்கள்.(புகாரி 2658)

எனவே ஏற்கனவே அமல்களில் குறைவான நிலையில் படைக்கப்பட்டவர்கள், எல்லை மீறி கணவனின் குறைபாடுகளை விமர்சனம் செய்யும் போது மறுமையில் நிலைமை மிக மோசமாக மாறிவிடும் என்பதை புரிந்து பெண்கள் செயல் பட வேண்டும்.

நரகம் பேசும்…
பாவிகளை நரகில் போட்டுக் கொண்டிருக்கும் போது இன்னும் பாவிகள் இருக்கிறார்களா ? இன்னும் இருக்கிறார்களா ? என்று நரகம் கேட்டுக்கொண்டே இருக்கும் என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.

முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார்
நரகத்திடம் “உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா?” என்று கேட்கப்படும். அது, “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தன்னுடைய பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது “போதும்! போதும்!” என்று கூறும். (புகாரி 4849)

நரகமும், சுவர்க்கமும், தர்க்கம்…
நரகத்திற்குரியவர்கள் யார், சுவர்க்கத்திற்குரியவர்கள் யார் என்று நரகமும், சுவர்க்கமும், மாறி, மாறி பேசிக்கொள்வதை பின் வரும் ஹதீஸில் கவனிக்கலாம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், ‘பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்’ என்று சொன்னது. சொர்க்கம், ‘எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்’ என்று கூறியது.
அல்லாஹ் சொர்க்கத்திடம், ‘நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்’ என்று கூறினான். நரகத்திடம் ‘நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்’ என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் ‘போதும்! போதும்!’ என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான். (புகாரி 4850)

நரகத்தில் தற்கொலையாளிகள்…
உலகில் வாழும் போது வாழ்க்கையில் ஏற்ப்பட்ட ஏதோ ஒரு கஸ்டத்திற்காக யார் தற்கொலை செய்து கொள்கிறாறோ அவர் மறுமை நாளில் நரகில் வேதனைப் படுத்தப் படுவார்.

“ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். (கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள். (புகாரி 6493)

மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் (புகாரி 5778)

மேலும் “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆம்விடுகிறார் எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். (புகாரி 6105)

கீழாடையினால் நரகம்…
ஆண்கள் தன் கீழாடையை பெருமையுடன் கரண்டைக்கு கீழாக அணிந்தால் அவர் நரகில் வேதனை செய்யப் படுவார். அதனால் எனக்கு பெருமை இல்லை என்று கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிய முடியாது . அதுவும் ஒருவிதமான பெருமையாகும்.ஓரிரு நபித்தோழர்கள் கரண்டை காலுக்கு கீழ் ஆடை அணிந்த நேரத்தில் எவரும் எனக்கு பெருமை இல்லை என்று கூறவில்லை. அடுத்தது நபியவர்கள் கரண்டை காலுக்கு மேல் அணிவதை தான் தன் தோழர்களுக்கு வழி காட்டியுள்ளார்கள். எனவே நபி வழியே நம் வழி என்றால் ஆண்கள் ஆடை விடயத்திலும் நபி வழியை சரியாக பின்பற்ற வேண்டும்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்’ நபி(ஸல்) அவர்கள், ‘யார் தன்னுடைய ஆடையைப் பெருமையுடன் (தரையில் படும்படி) இழுத்துக் கொண்டு செல்கிறரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் கவனமாக இல்லாவிட்டால் என்னுடைய கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று கீழே சரிந்து விழுகிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் தற்பெருமையுடன் அப்படிச் செய்பவரல்லர்’ என்று கூறினார்கள் (புகாரி 5784)

மேலும் “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ கர்வத்தோடு தன்னுடைய கீழாடையை(த் தரையில் படும்படி) இழுத்துச் சென்றவனை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 5788)

மேலும் “நபி(ஸல்) அவர்கள்’ அல்லது ‘அபுல் காசிம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக் கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்று கொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமை நாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கிய படி அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 5789)

எனக்கு மாறு செய்தால்…
“அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி 7280)

நபியவர்கள் கொண்டு வந்த இந்த தூய மார்க்கத்தை நாம் அணு, அணுவாக வாழ்க்கையில் பின் பற்ற வேண்டும். நபியவர்கள் காட்டித் தராத எந்த செயல்களையும் நல்லது தானே, செய்தால் என்ன தப்பா, ஏன் கூடாது, பரம்பரை, பரம்பரையாக பின் பற்றி தானே வருகிறோம், என்று கூறி நபியவர்கள் காட்டித்தராத செயல்பாடுகளை செய்தால், அதுவே நம்மை நரகத்திற்கு தள்ளி விடும் என்பதை தான் நபியவர்கள் மேற்ச் சென்ற ஹதீஸில் நமக்கு கடுமையான முறையில் எச்சரிக்கிறார்கள்.

எனவே நாம் அமல் செய்வதற்கு முன், நாம் செய்யும் அமல்களை நபியவர்கள் நமக்கு வழிக்காட்டியுள்ளார்களா என்று முதலில் பார்க்க வேண்டும். அடுத்தது அந்த அமலை எவ்வாறு செய்யும் படி நமக்கு நபியவர்கள் வழி காட்டியுள்ளார்கள் என்பதை கவனித்து நாமும் அமல்களை வாழ்க்கையில் நடை முறைப்படுத்த வேண்டும்.

குதிகால் கழுவப்படா விட்டால் நரகம்…
“அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவிலிருந்து மதீனாவை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். சாலையிலிருந்த ஒரு நீர்நிலைக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது சிலர் அஸ்ர் (தொழுகை) நேரத்தில் அவசரப்பட்டனர். (அதற்காக) அவசர அவசரமாக அங்கத்தூய்மை (உளூ) செய்தனர். நாங்கள் அவர்களிடம் போய்ச்சேர்ந்த போது அவர்களுடைய குதிகால்களில் தண்ணீர் படாமல் சொட்டையாக அவை காட்சியளித்தன. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (சரியாகக் கழுவப்படாத இத்தகைய) குதிகால்களுக்கு நரக வேதனைதான். உளூவை முழுமையாகச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.(முஸ்லிம் 405)

வுளு என்பது மிக முக்கியமான ஓர் அமலாகும். அந்த அமலை நபியவர்கள் காட்டி தந்த பிரகாரம் சரியான முறையில் ஒழுங்காக செய்ய வேண்டும். வுளுவுடைய ஒவ்வொரு உறுப்புகளும் பரிபூரணமாக கழுவப்பட வேண்டும். சிலர் நடந்து கொண்டிருக்கும் ஜமாஅத் தொழுகையில் எப்படி சரி போய் சேர்ந்து விட வேண்டும் என்பதற்காக வுளுவை அவசர. அவசரமாக செய்வார்கள். இப்படி செய்யும் போது சில நேரங்களில் கழுவப்பட வேண்டிய வுளுவுடைய உறுப்பில் தண்ணீர் சரியாக படாமல் போய் விடலாம்.இதனால் நரகத்திற்கு போக வேண்டிய அவல நிலை ஏற்ப்பட்டு விடும். நல்லது செய்ய போய் நரகத்திற்கு போக வேண்டிய நிலை ? குறிப்பாக நமது காலை கழுவும் போது நன்றாக தேய்த்து, கால் விரல்களுக்கு இடையில் சிறிய விரலை உள்ளே விட்டு நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். வுளு என்ற முக்கியமான அமலில் நமது அலச்சியமே நரகத்திற்கு காரணமாகிவிடும்.

இரவு தொழுகை…
3738. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உயிரோடியிருந்த காலத்தில் ஒருவர் கனவொன்றைக் காண்பாராயின் நபி(ஸல்) அவர்களிடம் விவரித்துச் செல்வார். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் விசாரித்துச் சொல்வதற்காகக் கனவொன்று காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் மணமாகாத ஓர் இளைஞனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பள்ளி வாசலில் நான் உறங்குவது வழக்கம். (ஒரு நாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்; வானவர்கள் இருவர் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சுற்றுச் சுவரைப் போன்று அதற்கு சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. மேலும் கிணற்றின் இரண்டு பக்கங்களிலுமுள்ள கல்தூண்களைப் போன்று இரண்டு தூண்கள் அதற்கும் இருந்தன. அப்போது அதில் எனக்குத் தெரிந்த மக்கள் சிலர் இருந்தனர். உடனே நான், ‘நரகத்திலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருகிறேன்.’ என்று பிரார்த்திக்கலானேன். அப்போது (என்னை அழைத்து வந்த) அந்த வானவர்கள் இருவரையும் வேறொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம், ‘இனி ஒருபோதும் நீங்கள் பீதியடையமாட்டீர்கள்’ என்று கூறினார். நான் இதை (என் சகோதரியும் நபி – ஸல் அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் விவரித்துச் சொன்னேன். (புகாரி 3738)

மேலும்
ஹஃப்ஸா(ரலி) அதை நபி(ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அப்துல்லாஹ் (இப்னு உமர்) ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுதால் (நன்றாயிருக்கும்)’ என்று கூறினார்கள்.

(இதை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் – ரலி – அவர்களின் மகன்) சாலிம்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னதிலிருந்து) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இரவில் சிறிது நேரம் மட்டுமே உறங்குபவராயிருந்தார்கள்’ என்று கூறுகிறார்கள். (புகாரி 3739)

எனவே இரவு தொழுகையை சரியாக ஒருவர் தொழது வந்தால் நரகத்தை விட்டும் பாதுகாக்கப்படுவார் என்று நபியவர்கள் இந்த செய்தியை மைய்யப்படுத்தி சொல்கிறார்கள்.
أحدث أقدم