பொதுவாக இஸ்லாத்தில் தோன்றிய பிரிவுகள் யாவும் ஓர் சிந்தனையை அல்லது ஒர் தனிமனித, அல்லது குழுவின் சிந்தனையைப் பிரதிபலிப்பதாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் மாத்ரீதிய்யா பிரிவினரும் இதில் இருந்து விதிவிலக்கானவர்கள் இல்லை.
இப்பிரிவினர் அபூமன்சூர் அல்மாத்ரீதி என்பவருடன் இணைத்துப் பேசப்படுகின்றனர். அஷ்அரிய்யாப் பிரிவினர் அபுல் ஹசன் அஷ்அரீ (ரஹ்) அவர்களின் மரணத்தின் பின்னர் அவருடன் இணைத்து அறியப்பட்டது போன்று இப்பிரிவினரும் அறியப்படுகின்றனர்.
மாத்ரூதிய்யா பிரிவினர் கடந்து வந்த காலகட்டங்கள்:
1. நிறுவிய காலம் (ஹிஜ்ரீ 333- முதல்...)
இக்காலப் பகுதி முஃதஸிலாப் பிரிவினர்களுக்கும் மாத்ரீதிய்யாக்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தேறிய கால கட்டம் என்று அறியப்படுகின்றது.
இக்காலத்தின் முக்கியமானவர்களுள் ஒருவராக முஹம்மத் பின் முஹம்மத் மஹ்மூத் அல்மாத்ரூதி அஸ்ஸமர்கந்தி என்பவர் அறியப்படுகின்றார். யூப்பிரடீஸ் நதிக்கு அப்பாலுள்ள ஸமர்கந்து
மாகாணத்தின் நகரங்களில் ஓர் நகர்தான் மாத்ரீத் என்ற நகரம். இந்த நகரத்துடன் இணைத்து அபூ மன்ஸுர் அல்மாத்ரீதி அறியப்படுகின்றார்.
2. உருவாக்க அல்லது அறிமுகக் காலம் (333- 500)
இமாம் அல்மாத்ரீதி அவர்களின் மரணத்தின் பின்னரான அவரது மாணவர்களினதும், அவர்களின் கருத்தால் தாக்கம் பெற்றவர்களினதும் பங்களிப்புக் காலம் என்றும் இதனைக் குறிப்பிட முடியும். ஸமர்கந்தில் வெளியான முதல் தர்க்கவியல்
பிரிவினர் என்று இவர்கள் அறியப்படுகின்றனர். இவர்கள் அகீதாவில் இமாம் மாத்ரீதி அவர்களின் போக்கையும் (கலை மற்றும் சட்டவியல் அம்சங்களில் இமாம் அபூஹனீபாவின் போக்கையும் சரி கண்டு தமது பிரச்சாரங்களை முடுக்கிவிட்டனர்.
இக்காலப் பகுதியில் இமாம் மாத்ரீதியின் கொள்கைச் சார்பாக பல நூல்களைத் தொகுத்து தமது பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதியில் மாத்ரீதிய்யா சிந்தனை அதன் உச்ச நிலையில் கொடிகட்டிப் பறந்தது என்பார்கள் அறிஞர்கள்.
இக்காலத்தின் சிந்தனை முன்னோடிகளாக அபுல்காசிம் இஸ்ஹாக் பின் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்ஹகீமுஸ் ஸமர்கந்தி மரணம் ஹிஜ்ரீ (342) என்பவரும், அப்தில் கரீம் பின் மூசா பின் ஈசா அல்பஸ்தவி அபூ முஹம்மத் மரணம் ஹிஜ்ரீ (390) என்பவரும் அறியப்படுகின்றனர். இவர்களைத் தொடர்ந்து இன்னும் பலர் மாத்ரீதிய்யா கோட்பாட்டை முன்னெடுத்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
3. தொகுப்பாக்க மற்றும் கோட்பாடுகள் நிறுவுதல் காலம்:
மாத்ரீதிய்யாக்களின் அகீதா கோட்பாட்டை நிறுவுதலும். நூல்கள் தொகுப்பாக்கக் காலமும் என அறியப்படும் இந்தக் காலப்பகுதி(ஹிஜ்ரீ 500-700) வரை என அறிஞர்களால் வரையறை செய்யப்படுகின்றது. இது மாத்ரீதிய்யாக்களின் காலக் கட்டங்களில் மிக முக்கியக் காலக் கட்டமாகக் கொள்ளப்படுகின்றது.
இக்கால அறிஞர்கள்:
அபுல் முயீன் அந்நசஃபி (438-508) என்ற மைமூன் பின் முஹம்மத் பின் முஃதமத் அந்நஸஃபி அல்மக்ஹுலி,
நஜ்முத்தீன் உமர் அந்நஸஃபி (537-462) என்ற அபூ ஹஃப்ஸ் நஜ்முத்தீன் உமர் பின் முஹம்மத் அல்ஹனஃபி அந்நஸஃபி ஆகிய இருவரும் பிரிசித்தி பெற்று விளங்கினார்கள்.
4. விரிவாக்க மற்றும் பரவலாக்கல் காலம் (ஹிஜ்ரீ 700 - 1300)
இது மாத்ரீதிய்யா சிந்தனையின் முக்கியக் காலப் பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. மாத்ரீதிய்யாக்களின் செல்வாக்கு ஓங்கி வளரவும், அவர்களின் சிந்தனைகள் பரவவும் உஸ்மானிய சாம்ராஜ்ய சுல்தான்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.
அதனால் புவியின் கிழக்கு, மேற்கு, அரபி, அஜமிகள் வாழும் பிரதேசங்கள், இந்தியா, துர்கி, ரோம், பாரசீகம் ஆகிய நாடுகள் இதன் சிந்தனைக்கு உந்தப்பட்டன.
இதன் விளைவாகவே இந்திய தேசத்தில் தேவ்பந்து மற்றும் நத்வதுல் உலமா போன்ற அரபுக் கலாநிலையங்கள் அமையப் பெற்றன. தேவ்பந்து மத்ரசாவில் ஹதீஸ், ஹதீஸ் விரிவுரை
போன்ற பாடங்கள் போதிக்கப்பட்ட போதும் இன்றுவரை அது சூஃபிஸ சிந்தனைத்தாக்கம் உள்ள ஓர் கல்லூரியாகவே விளங்குகின்றது. கலீல் அஹ்மத் ஸஹாரன்பூரி, மற்றும் பல அறிஞர்களின் நூல்கள், உரைகள் இதற்குச் சான்றாகும்.
அவ்வாறே நத்வதுல் உலமாவின் பாடப் புத்தகங்கள் ஹனஃபி மாத்ரீதிய்யா சிந்தனையின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகின்றன.
5. பரேலவி மத்ரசா:
இக்கல்லூரியானது அப்துல் முஸ்தபா (முஸ்தபாவின் அடிமை) என்ற புனைப் பெயரில் அறிமுகமான சூஃபிஸ சிந்தனையில் ஊறிப்போன, கப்ருவணங்கி மாத்ரூதி சிந்தனையாளரான அஹ்மத் ரிழாகான் என்பருடன் இணைத்துப் பேசப்படுகின்றது. ஹிஜ்ரீ 1272 முதல் இதன் காலப்பகுதியாகும்.
இந்தக் காலப் பகுதியில் இணைவைத்தல், மண்ணறை வணக்கத்தின் பக்கமாக அழைத்தல், தேவ்பந்து மத்ரசாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் போன்ற அம்சங்கள் தெளிவாகக் காணப்பட்டன. மட்டுமின்றி, அஹ்லுஸ்ஸுன்னா கோட்பாட்டில் நடக்கின்ற முஸ்லிம்கள் காஃ.பிர்களாகப் பார்க்கப்பட்டனர்.
6. மத்ரசதுல் கெளஸரி (ஹிஜ்ரீ 1296-1371)
முஹம்மத் ஸாஹித் அல்கெளஸரி என்பவர் பெயரில் இது அறியப்படுகின்றது. அஹ்லுஸ்ஸுன்னா முஸ்லிம்களும் அவர்களின் கொள்கையைப் பறைசாட்டுகின்ற நூல்களும் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்ட காலமாகும்.
கெளஸரி என்ற ஹனஃபி, மாத்ரீதியா கொள்கையில் கடும் போக்காளராகக் கொள்ளப்படுகின்றார். ஸலஃபுகளில் தலை சிறந்த இமாம்களான இப்னு குஸைமா, அபுல்ஹசன் அல்அஷ்அரீ, அல்ஆஜார்ரீ, அத்தாரகுத்னீ, அத்தஹபீ ஆகியோரது
கிரந்தங்களான முறையே அத்தவ்ஹீத், இல்பானா, அஷ்ஷரீஆ, அஸ்ஸிஃபாத், அல்வுலுவ்வு போன்றவையும் பல கிரந்தங்களும் இவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
அல்லாஹ்வுக்கு உருவம் கற்பிப்போர், வடிவம் கொடுப்போர் போன்ற ஆதாரமில்லாத கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சிக்கப்பட்டன. இவர் தவஸ்ஸுல் என்ற வாதத்தை முன்வைத்து இணைவைப்பு, மற்றும் கப்ர் வணக்கத்தின் பக்கம் மக்களைத் தூண்டினார் என்பதே இவரைப்
பற்றிய சுருக்கமான விமர்சனமாகும்.
மார்க்க அடிப்படைகளைப் பெறும் வழிகள்:
மாத்ரீதிய்யாக்கள் மார்க்க அடிப்படைகளைப் பெறுவதற்குப் பின்வரும் இரண்டு வழிமுறைகளை முன்வைக்கின்றனர்.
1. அல்அக்லிய்யாத், பகுத்தறிவு சார்ந்தது என்று அழைக்கப்படும் இப்பகுதி அல்இலாஹிய்யாத், 'இறைகோட்பாட்டுடன் தொடர்புடையது என்றும் கூறப்படும். இப்பகுதியில் கோட்பாட்டு அம்சங்கள் பகுத்தறிவின் மூலம் நிலைப்படுத்தப்படும், நக்ல் எனும் சான்றுகள் அதைத் தொடர்ந்ததாக விளங்கும். அத்தவ்ஹீத், மற்றும் ஸிஃபாத்கள் தொடர்பான விஷயங்கள் இதில் இடம் பெறும்.
2. அஷ்ஷரயிய்யாத்-இது(அஸ்ஸம்யிய்யாத்) என்றும் அழைக்கப்படுகின்றது.
பகுத்தறிவானது ஓர்அம்சத்தை இருப்பதாகவோ, இல்லை என்றோ உறுதிப்படுத்துகின்ற அம்சங்கள் இதில் இடம் பெறும். இதில் புத்தியைக் கொண்டு சிந்திக்க இடம் இல்லை.
உதாரணம், நுபுவ்வத், மண்ணறை வேதனை, மறுமை நாள் தொடர்பான அம்சங்கள்.
அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகிய மூலாதாரங்களே அங்கீகரிக்கப்பட்டதும், அனைவரும் அங்கீகரிக்கின்ற நடைமுறையுமாகும். அதனால் இது மார்க்கம் அங்கீகரிக்காத பிரிவாகும்.
பகுத்தறிவை முன்னிலைப்படுத்தி மார்க்க அடிப்படைகளை அணுகும் முறையானது பகுத்தறிவுக்கு உடன்பாடான மார்க்க அம்சங்களை அங்கீகரிப்பதும் இல்லாத போது அதனை நிராகரிப்பதும் என்ற கோட்பாட்டை ஃபலாஸிஃபாக்கள் எனப்படும் தத்துவியலாளர்கள் முன்வைத்தனர். இதன் தாக்கம் மாத்ரீதியாக்களிடம் ஊடுருவி உள்ளது. அதனால் மார்க்கத்தின் சான்றுகளை அணுகும் முறையிலும் அவர்கள் தவறிழைத்தனர். சரியான பகுத்தறிவு சரியான சான்றுடன் முரண்படாது என்பது அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடாகும்.
அஸ்மா, ஸிஃபாத்தில் மாத்ரீதிய்யாக்களின் நிலைப்பாடு:
அல்லாஹ்வின் அழகிய பெயர்களை அவர்கள்
நிலைப்படுத்தியுள்ளனர். இதில் அஹ்லுஸ்ஸுன்னாக்களுக்கு உடன் பட்டுள்ளனர். இருப்பினும், அல்லாஹ்வின் பெயர்களில் இடம் பெறாத தயாரிப்பாளன், பழமையானவன் குறித்த ஓர் உருவம் போன்ற பெயர்களை அல்லாஹ்வின் பெயர்களாகக் குறிப்பிடுகின்றனர். அதற்குச் சரியான ஆதாரம் கிடையாது.
அல்லாஹ்வின் பெயர்களாக வருவதற்கும் அவனைப் பற்றி அறிவிப்பதற்கும் அஹ்லுஸ்ஸுன்னாக்கள்
விதித்துள்ள வேறுபாடுகளை இவர்கள் வேறுபடுத்தி நோக்குவதில்லை. அல்லாஹ்வைப் பற்றி அறிவிப்பதற்குப் பொருத்தமான சொற்களைக் கொண்டு அறிவிக்கலாம். ஆனால் பெயர்கள் அவ்வாறு அல்ல. அவை தவ்கீஃபி சார்ந்ததாகும். அதாவது குர்ஆன், சுன்னாவில் அவை இடம் பெற வேண்டும்.
மாத்ரீதிய்யா சிந்தனையின் அச்சாணியாக விளங்கும் அபூ மன்சூர் அல்மாத்ரீதி அவர்கள் முர்ஜிஆ, ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷ்அரிய்யா, குல்லாபியா போன்ற பிரிவுகளின் சிந்தனைத் தாக்கம் பெற்றவராக விளங்கிய காரணத்தால் அவரைப் போன்று அஸ்மா, ஸிஃபாத்தில் பொருள் பாழடிப்பு, கருத்துச் சிதைவு
போன்ற குறைபாடுகளுக்கு மாத்ரீதிய்யாக்களும்
உட்படுவது தவிர்க்க முடியாததாகும்.
மாத்ரீதிய்யா அகீதாவின் உண்மை நிலை:
அல்லாஹ் இயல்பில் மனிதன் அவனை வணங்கி
வழிபடுபவனாகப் படைத்திருக்க, அதற்கு மாறாக
அல்லாஹ்வை அறிவதற்குப் பகுத்தறிவுதான்
முதன்மையானது என ஜஹ்மிய்யா, முஃதஸிலா, அஷ்அரிய்யா பிரிவுகள் போன்று இவர்களும்
வாதிடுகின்றனர்.
பருவ வயதை அடைந்த ஒருவர் முதலாவது தடவை கலிமாவைப் பொருள் அறிந்து மொழிவது என்பதே அடிப்படையாகும். அல்லாஹ்வைப் பகுத்தறிவைக் கொண்டுதான் அறிய வேண்டும் என்றிருப்பின் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு, வேதங்கள் வழங்கப்பட்டிருக்க மாட்டாது என்பதைக் கவனத்தில் கொள்க.
பகுத்தறிவானது நன்மை, தீமையைத் தீர்மானிக்கப் புறப்பட்டால் நிச்சயமாக அது மோசமான விளைவையே கொண்டுவரும். இதற்கு இன்றைய மனிதச் சட்டங்களால் ஆட்சி செய்யப்படும் நாடுகள் ஓர் உதாரணமாகும்.
அகீதா சார்ந்த அம்சங்களில் ஆஹாத் வகை சார்ந்த ஹதீஸ்களை அங்கீகரிப்பதில்லை. சட்டங்கள் சார்ந்த கிளை அம்சங்களில் மட்டும் அங்கீகரித்தல். அஷ்அரிய்யாக்களிடமும் இந்த நிலைப்பாடு
காணப்படுகின்றது.
இந்தப் போக்கு குர்ஆன், சுன்னாவுக்கு முரண்பாடான கோட்பாடாகும். நபித்தோழர்கள் காலத்தில் முதவாதிர், ஆஹாத் என்ற பிரிவுகொண்டு அகீதா விவகாரங்கள் அணுகப்படவில்லை
என்பதைக் கவனத்தில் கொள்க.
அல்குர்ஆன் அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சு அல்ல என்றும், மாறாக அது அல்லாஹ்வில் இருந்தும் புறப்பட்ட செவிமடுக்க முடியாத ஓர் பேச்சு என்றும், அதன் வாசகத்தை மட்டுமே செவியேற்கலாம் என்றும் வாதிடுகின்றனர். அதாவது குர்ஆன் படைக்கப்பட்டது என்ற வாதம்.
ஈமான் என்பது உள்ளத்தால் உண்மைப்படுத்தி,
அங்க, அவயவங்களால் நடைமுறைப்படுத்துவதாகும்,
வழிப்பட்டு நடப்பதால் அது அதிகரிக்கின்றது; பாவம் செய்வதால் குறைகின்றது என்ற அஹ்லுஸ்ஸுன்னாக்களின் விளக்கத்திற்கு மாறாக ஈமான் என்பது உண்மைப்படுத்துவதாகும்; அது கூடவோ, குறையவோ மாட்டாது என்றும் வாதிடுகின்றனர்.
அல்லாஹ் வணங்கி வழிபடத் தகுதியானவன் என்ற அஹ்லுஸ்ஸுன்னாக்களின் விளக்கத்திற்கு மாறாக அல்லாஹ் என்பவன் புதிதாக ஒன்றை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன் என வாதிடுவதன் மூலம் அல்லாஹ் என்பவன் படைப்பாளன் என்று அங்கீகரித்தால் போதும் என்ற பொருள் தருகின்றனர்.
மாத்ரீதிய்யா சிந்தனையின் செல்வாக்கு:
மாத்ரீதிய்யாவின் சிந்தனையைப் பிரிதிபலிக்கின்ற
நாடுகளாக ஹனஃபி மத்ஹப் செல்வாக்குள்ள நாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, இத்தாலி, இரஷ்யக்குடியரசுகள் போன்ற நாடுகள் முக்கியமானவையாகும்.
அஷ்அரிய்யாக்கள் சட்டத்துறையில் ஷாஃபி மத்ஹபையும், அகீதாவில் குல்லாபிய அஷ்அரிய்யா சிந்தனையையும் முன்னிலைப்படுத்துவது போல மாத்ரீதிய்யாக்கள் ஹனஃபி மத்ஹபையும், மாத்ரீதிய்யாக் கொள்கையையும் கடைப்பிடிக்கின்றனர்.
ஆக இரு முக்கியப் பிரிவினரும் அடிப்படையான
அகீதா அம்சத்தில் தமது இமாம்களை முன்மாதிரியாகக் கொள்ளவில்லை என்பதே உண்மை.
மற்றொரு பிரிவினர்:
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் எவ்விதக் கருத்தும் கூற முற்படாத மற்றோரு பிரிவினரும் இருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றி வரும் வசனங்களை, ஹதீஸ்களை வெளிப்படையான விளக்கத்தில் விளக்குவது வழிகேடானது என்றும் அல்லாஹ்வின் பெயர் என்பது பெயர் வைக்கப்பட்ட அவனது யதார்த்தத்தை மட்டுமே குறிக்கின்ற காரணத்தால் அவை ஓர் தாத்தையே குறிக்கும் என்றும் பல பெயர்கள் கொண்டு அவன் அழைக்கப்படுவது
அவனது ஓர்மைத் தன்மைக்கு எதிரானது என்றும் கூறுகின்றனர்.
அஷ்அரியாக்களும் மாத்ரூதிய்யாக்களும்:
அஷ்அரிய்யாப் பிரிவினர் அல்லாஹ்வின் அனைத்துப் பெயர்களையும் நிலைப்படுத்தினாலும் குறிப்பிட்ட சில பெயர்கள், அவற்றின் பண்புகளை மட்டுமே அஸ்மா, ஸிஃபாத் பகுதியில் நம்பி, நிலைப்படுத்துகின்றனர். மீதமான அனைத்துப் பண்புகளையும் நிராகரிக்கின்றனர். அல்லது தவறான விளக்கம் தருகின்றனர் என்பதே உண்மை.
அஷ்அரிய்யாக்கள், அவர்களோடு இணைத்துப்
பேசப்படுகின்ற மாத்ரூதிய்யாப் பிரிவினர் பின்வரும் பண்புகளை மட்டும் நிலைப்படுத்துகின்றனர்.
வாழ்வு,
அறிவு,
ஆற்றல்,வல்லமை,
கேள்வி,
பார்வை,
நாட்டம்,
பேச்சு
ஆகிய ஏழு பண்புகளை அல்லாஹ்வின் பண்புகளாக நிலைப்படுத்துகின்றனர். அதே வேளை, அல்பாகில்லானி, அபுல்மஆலீ அல்ஜுவைனி ஆகிய அறிஞர்கள் அறிதல், அடைதல், அடைவு என்ற எட்டாவது ஓர் பண்பையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது அல்இல்மு என்ற பண்பின் பொருளில் கட்டுப்படலாம் என்பதனாலோ என்னவோ அஷ்அரிய்யாக்கள் பண்புகள் ஏழு என்று மட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தப் பண்புகளை ஸிஃபாத்துல் மஆனி பொருள் சார்ந்த பண்புகள் என்றும், அஸ்ஸிஃபாத்துத் தாத்தியா அல்லாஹ்வின் உள்ளமையுடன் தொடர்பான
பண்புகள் என்றும் அழைக்கின்றனர்.
இவை ஒவ்வொரு பண்பும் அல்லாஹ்வின்
யதார்த்தத்தோடும், உள்ளமையோடும் தொடர்புடையதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.
பொருத்தம், மகிழ்ச்சி, சிரிப்பு, கோபம், வெறுப்பு,
அதிருப்தி போன்ற அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்பான வேறு பண்புகளை அஷ்அரிய்யாக்கள் அங்கீகரிப்பதில்லை.
பகுத்தறிவால் சிந்திக்கின்ற போது இவை அல்லாஹ்வுக்கு அவசியம் இருந்தாக வேண்டிய பண்புகள் என்று முடிவு செய்ய முடியும். அதற்கு ஆதாரம் தேடவேண்டிய அவசியம் இல்லை
என்பதை அடிப்படையாகக் கொண்டு இவை அஸ்ஸிஃபாத்துல் அக்லிய்யா, பகுத்தறிவு சார்ந்த பண்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
அத்துடன், இவை அல்லாஹ்வின் உள்ளமையுடன் தொடர்புபடுவதால் அஸ்ஸிபாதுல் வுஜுதிய்யா “உள்ளமை சார்ந்த பண்புகள்” என்றும் அழைக்கப்படுகின்றன. அதே வேளை, பண்புகள் என்பது படைப்புகளின் பண்புகள் போன்று புதிய தோற்றத்தைக் குறிப்பதாக அமைந்தால், அவை புதிய நிகழ்வைக் கொண்டவையாகும்; எனவே அவை அல்லாஹ்வுக்கு உரியவையாக இருக்க முடியாது. மாறாக, அவை படைப்பினங்களுக்கு உரிய பண்புகளாகும் என்ற காரணத்தின் அடிப்படையில் அவற்றை நிராகரிக்கின்றனர்.
உதாரணமாக அல்லாஹ்வின் கருணை, கோபம், சிரிப்பு, வெறுப்பு, மன்னிப்பு, அல்லாஹ் அடிவானத்திற்கு இறங்கிவருதல்
போன்ற இன்னோரென்ன அல்லாஹ்வின் செயல் சார்ந்த, அவனது விருப்பத்துடனும் நாட்டத்துடனும் தொடர்புடைய பண்புகளைக் குறிப்பிடலாம்.
இவை மீண்டும் மீண்டும் நடப்பதானது புதியதொரு நிகழ்வைத் தோற்றுவிக்கின்றது. அதனால் அவை படைப்பினங்கள் தொடர்பான பண்புகளாகும். எனவே அவற்றை அல்லாஹ்வின் பண்புகளாக அங்கீகரிப்பது படைப்பினங்களுக்கு அவனை ஒப்பிட்டதாகக் கொள்ளப்படும் என்று வாதிடுகின்றனர்.
இவற்றை அல்லாஹ்வின் தகுதிக்குத் தோதுவாக
நிலைப்படுத்தப்படுவதனால் அவனுக்கு எவ்விதக் குறையும் வரப்போவதில்லை. மாறாக அது அவனுக்குப் பெருமையாகவே அமையும் என்பதால் அஹ்லுஸ்ஸுன்னாப் பிரிவினர் அவற்றைப் படைப்பினங்களுக்கு ஒப்பிடாது, அல்லாஹ்வின் தகுதிக்குத் தோதுவாக நிலைப்படுத்தியுள்ளனர்.
மாத்ரீதிய்யாக்கள் என்போர் அஷ்அரிய்யாக்கள்
குறிப்பிடும் ஏழு பண்புகளோடும் - அத்தக்வீன் -
ஆக்குதல், உருவாக்கம் என்ற பொருளில் அமைந்த எட்டாவது ஓர் பண்பை அதிகமாகக் குறிப்பிடுகின்றனர்.
பண்புகள் என்பன புதிய நிகழ்வுகளை அறிவுறுத்துபவையாக இருப்பின் அஷ்அரிய்யாக்களைப் போன்று அவற்றை மாத்ரீதியாக்களும் நிராகரிக்கின்றனர்.
உதாரணமாக கோபம். இது ஓர் முறை ஏற்பட்டு, அது அடங்கியதும் பின்னர் ஏற்படும் போது அது மாற்றத்தை உள்ளடக்கிய ஓர் புதிய நிகழ்வாகக் கொள்ளப்படும். அதை ஒருவர் யதார்த்தமாகத் தேடிக் கொள்வது அல்ல. மாறாக வெளியில் இருந்து வந்து சேர்வதாகும். எனவே அவ்வாறான பண்புகள் புதியவை, புதிய நிகழ்வுகள் சார்ந்தவை, படைக்கப்பட்டவை,
அவை படைப்பினங்களின் பண்புகளாகவே இருக்க வேண்டும். அவற்றை அல்லாஹ்வின் பண்புகளாகக் கொள்ள முடியாது என வாதிடுகின்றனர்.
முன்னர் கூறப்பட்டுள்ள எட்டு பண்புகள் அல்லாத ஏனைய ஸிஃபாத்துகளை அஷ்அரிய்யாக்கள் போன்றே மாத்ரீதியாக்களும் நிராகரிக்கின்றனர். அல்லது, அவற்றை அங்கீகரித்து வெளிப்படையான பொருள் இன்றி அஷ்அரிய்யாக்கள் போன்று பொருள்களைச் சிதைத்து தவறான விளக்கம் தருகின்றனர்.
அது மட்டுமின்றி, தமது நிலைப்பாடு சரி என்றும், ஸலஃபுகளான முன்னோர்கள் அஸ்மா, ஸிஃபாத் விஷயத்தில் தவறான வழியில் இருந்தனர் என்றும் நம்புகின்றனர்.
ஆரம்பகால குல்லாபிய்யாக்கள், அஷ்அரிய்யாக்கள் அல்லாஹ்வின் நாட்டம், அவனது விருப்பம் ஆகிய பண்புகளோடு தொடர்பான பண்புகளைத் தவிர மேற்படி வந்துள்ள பண்புகளை நிலைப்படுத்துகின்றனர்.
அல்லாஹ்வின் நாட்டம், விருப்பம் ஆகிய பண்புடன் தொடர்பான பண்புகளை நிலைப்படுத்துவது அல்லாஹ்வின் ஆதியான -தாத்- யதார்த்தத் தன்மையோடு புதியவை கலந்து விடும் என்ற அச்சமே இதற்கான காரணம் என்றும் வாதிடுகின்றனர்.
அஹ்லுஸ்ஸுன்னாக்களின் மறுப்பு:
இவர்கள் மறுக்கின்ற இவ்வாறான பண்புகள் ஆரம்பம் முதல் அல்லாஹ்விடம் இருந்து வருபவை என்றும், அவை புதிதாக உண்டாகியவை அல்ல என்றும், அவற்றை அல்லாஹ் நாடுகின்ற போதுதான் நடைமுறைப்படுத்துகின்றான் என்றும் குறிப்பிடுகின்ற அஹ்லுஸ்ஸுன்னாக்கள் அவை நடக்கின்ற போது புதியவையாக இருந்தாலும் அவை அல்லாஹ்வுடன் தொடர்புடைவையே அன்றி மனிதர்களின் நிகழ்வுகளுடன் தொடர்புடையவை அல்ல. எனவே அவற்றை அல்லாஹ்வின் தகுதிக்குத் தோதுவாக நம்புவதுதான் கடமை என்றும் குறிப்பிடுகின்றனர்.
- ரிஸ்வான் மதனி