- மௌலவி யூனுஸ் தப்ரீஸ்
நாம் ஒவ்வொரு நாளும் ஐந்து நேரங்கள் ஜமாஅத்துடன் தொழுது வருகிறோம். தொழுகையின் ஒரு அங்கமாக இருக்க கூடிய ஸப்புகள் விசயத்தில் நமக்கு சரியான தெளிவுகள் இருக்கின்றனவா என்பதை இதை வாசிக்க கூடிய வாசகர்கள் தெரிந்திருக்க வேண்டும். பின் வரக் கூடிய ஸப்புகள் சம்பந்தமான அனைத்து ஹதீஸ்களையும் வாசித்து விட்டு இறுதியில் ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்.
ஸfப்புகளின் சிறப்புகளும் எச்சரிக்கைகளும்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புகாரி - 615, 654, 721, 2689, முஸ்லிம் : 746, 748 )
மேற்ச் சென்ற ஒரு ஹதீஸில் பல சிறப்புகளை உள்ளடக்கி அமல்களின் பக்கம் நபியவர்கள் நமக்கு ஆர்வம் ஊட்டுகிறார்கள். குறிப்பாக தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டுவிட்டதென்றால் முதலாவதாக நாம் நிற்க்கும் அணியை சரிசெய்ய வேண்டும். அதற்காக இவ்வளவு சிறப்பு என்று நேரடியாக நபியவர்கள் கூறாமல், அதன் நன்மையை அறிவார்களேயானால் போட்டி போட்டுக் கொள்வார்கள் என்று வழிக் காட்டுகிறார்கள். இங்கு இரண்டு முக்கியமான விசயங்களை கவனிக்க வேண்டும். முதலாவது முதல் ஸப்பில் இடம் பிடிக்க வேண்டும். இரண்டாவது நபியவர்கள் ஸப்பை ( வரிசையை) வழிக்காட்டியதன் பிரகாரம் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் ஸப்பு சரியாக இருந்தால் தான் நாம் தொழும் தொழுகை முழுமை அடையும். நாம் ஸப்பு விசயத்தில் அலட்சியமாக இருப்போமேயானால் நாம் தொழுத தொழுகை குறைபாடாகவே இருக்கும் என்பதை பின் வரும் ஹதீஸ் எச்சரிப்பதை கவனிக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புகாரி -722, முஸ்லிம் -741, 743)
ஸப்புகள் சம்பந்தமாக நபியவர்கள் வழிக்காட்டிய நிறைய ஹதீஸ்களை பின்வருமாறு காணலாம்.
"ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது"
(ஒரு நாள் நாங்கள் தொழுதுகொண்டிருந்தபோது எங்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது (நாங்கள் சலாம் கொடுக்கையில் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தோம். இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் உங்களது கைகளைச் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று உயர்த்திக்கொண்டிருக்கிறீர்கள்? தொழுகையில் அடக்கத்தோடு இருங்கள் என்று கூறினார்கள். பிறகு (மற்றொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது நாங்கள் வட்ட வட்டமாக (தனித்தனிக் குழுவாக) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ஏன் (ஓரணியில் இணையாமல்) பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள்? என்று கேட்டார்கள். பிறகு (இன்னொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது, அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப்போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்? என்று கேட்டோம். அதற்கு வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள்.
(ஆதாரம் -முஸ்லிம் : 736)
மேலும்
"அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது"
நபி (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று கூறுவார்கள்.
தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
(ஆதாரம் -முஸ்லிம் : 739)
மேலும்
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை) வரிசைகளை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் எனது முதுகுக்குப் பின்னாலும் உங்களைக் காண்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் - புகாரி -718, 719, 729, முஸ்லிம் - 742)
மேலும்
"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்"
உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்திவிடுவான்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் - புகாரி -717, முஸ்லிம் : 744 )
மேற்ச் சென்ற ஹதீஸ்களில் பல தகவல்களை முன் வைத்து நபியவர்கள் நமக்கு வழிக் காட்டுகிறார்கள்.
முதலாவதாக முதல் வரிசையின் முக்கியத்துவங்களையும், நன்மைகளையும் நினைவுப்படுத்தி அதற்காக ஆர்வமூட்டுவதை காணலாம்.
இரண்டாவதாக தொழுகையின் வரிசை சரியாக இருந்தால் தான் நாம் தொழும் தொழுகையில் பூரணமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
மூன்றாவதாக தொழுகை வரிசை சரியாக இல்லாமல் முன்னுக்குப் பின் முரண்பாடாக இருக்குமேயானால், நமது உள்ளங்களிலும் அல்லாஹ் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுவான். அதாவது நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடுவான்.
அதேபோல இன்னும் சில முக்கியமான விசயங்களையும் மேற்ச் சென்ற ஹதீஸ்கள் கற்றுத் தருகின்றன. அதாவது முதலாவது வருபவருக்கே முதல் வரிசையில் முதலிடமாகும். அதே நேரத்தில் வரிசையில் நிற்பவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர். கருப்பர், வெள்ளையர். செல்வந்தர், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற சமத்துவத்தை உறுதிப் படுத்துவதை காணலாம்.
ஸfப்புகள் சம்பந்தமாக இன்னும் சில ஹதீஸ்களை பார்ப்போம்.
" நீங்கள் உங்கள் வரிசைகளை நெருக்கமாகவும், சமீபமாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். மேலும் கழுத்துக்கு நேராக நில்லுங்கள். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக வரிசையின் இடைவெளிகளில் சிறிய கறுப்பு ஆட்டுக் குட்டி தோற்றத்தில் ஷைத்தான் நுழைகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள். ( ஆதாரம் -அபூதாவூது )
மற்றொரு ஹதீஸில்... "யார் ஸப்பை சேர்ந்து இருக்கிறாறோ அவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்கிறான். யார் ஸப்பை துண்டித்து நிற்கிறாறோ அவரை அல்லாஹ் துண்டித்து விடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அபூதாவூது)
மேற்ச் சென்ற அனைத்து ஹதீஸ்களும் தொழுகையில் வரிசையின் முக்கியத்துவங்களையும்,
எச்சரிக்கைகளையும் எடுத்துக் காட்டுகின்றன. அதே நேரம் பின் வரக் கூடிய அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி தொழுகையில் எப்படி வரிசையில் நிற்க வேண்டும் என்பதை வழிக் காட்டுகின்றது.
"அனஸ்(ரலி) கூறினார்கள். உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.
( ஆதாரம் புகாரி -725. )
மேற்ச் சென்ற அத்தனை ஹதீஸ்களுக்கும் ஒரே வரியில் அனஸ் (ரலி) அவர்களின் விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கின்றது. அனஸ் (ரலி) அவர்கள் நபியவர்களுடன் சிறு வயதிலிருந்தே ஒன்றாக இருந்து வருகிறார்கள். அது போல நபியவர்களுக்குப் பின்னால் தொழுதும் உள்ளார்கள்.
எனவே தொழுகைக்காக ஸப்பில் நிற்க கூடியவர்கள் எப்படி நிற்க வேண்டும் என்பதை மிக சரியாக நமக்கு வழிக் காட்டுகிறார்கள். அந்த அடிப்படையில் தொழுகைக்காக வரிசையில் நிற்க கூடியவர்கள் தனக்கு பக்கத்தில் இருக்க கூடியவரின் தோள்புஜத்துடன் தனது தோள் புஜத்தையும் தனக்கு பக்கத்தில் இருக்க கூடியவரின் கால் பாதத்துடன் தனது கால் பாதத்தையும் சேர்த்து நெருக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஸப்புடைய விசயத்தில் மூன்று சாரார்கள் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டும்.
முதலாவது பள்ளியில் கடமை புரியக் கூடிய இமாம்கள்.
இவர்களைப் பொருத்தவரை பள்ளியில் இமாம்கள் என்றடிப்படையில் தனக்கு என்ன என்ன பொறுப்புகள் இருக்கின்றனவோ அதை எல்லாம் சரியாக கவனித்து நடைமுறைப் படுத்த வேண்டும். குறிப்பாக இது தொழுகையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதால் பள்ளி இமாம்கள் ஸப்புகள் விசயத்தில் அதிமுக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனோ தானோ என்று அலட்சியமாக இருக்க கூடாது.
வெறுமனே ஸப்புகளை சரி செய்யுங்கள், நேராக நில்லுங்கள், இடைவெளி விடாதீர்கள் என்று வாயளவில் மட்டும் சொல்லி விட்டு தொழுகையை ஆரம்பிக்க கூடாது.
நபியவர்கள் ஸப்புகளை ஒழுங்காக சரிசெய்து விட்டு தான் தனது இமாமுடைய பணியை (தொழுகையை) ஆரம்பிப்பார்கள். ஏன் என்றால் ஸப்பு நெருக்கமாக சரியாக இல்லாவிட்டால் தொழுகை குறைபாடாகவே இருக்கும். எனவே பள்ளி இமாம்கள் தனது தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன்பு இந்த ஸப்புகளை ஒழுங்கான முறையில் சரிசெய்து விட்டு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.
அனஸ் (ரலி) அவர்கள் எடுத்து காட்டியது போல ஸப்புகளுக்கு இடையில் இடைவெளிகள் இல்லாத அளவிற்கு ஸப்புகளை சரி செய்ய வேண்டும். பொதுமக்கள் ஸப்புகளுக்காக போடப் பட்ட கோட்டில் சரியாக நிற்குகிறார்கள். ஆனால் பக்கத்தில் இருப்பவரின் கால் பாதத்துடன் கால் பாதமோ, தோள் புஜத்துடன் தோள் புஜத்தையோ சேர்த்து நெருக்கமாக நிற்க தெரியவில்லை. என்வே அதற்கு பள்ளி இமாம் பொது மக்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
இரண்டாவது சாரார் பொதுமக்களாவர்.
ஒவ்வொரு நாளும் ஜமாஅத்துடன் தொழும் பொதுமக்களுக்கு தொழுகையுடைய சட்ட திட்டங்களை சரியாக படித்து, விளங்கி நடைமுறைப் படுத்த தெரிந்திருக்க வேண்டும். எனது இந்த தொழுகையில் பரிபூரணமான கூலி (நன்மை) கிடைக்க வேண்டும் என்றால் முதலில் தொழுகையில் ஸப்பை நபியவர்கள் வழிக் காட்டியது போல நான் ஸப்பை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் ஸப்புகள் விசயத்தில் அலட்சியமாக இருப்போமேயானால் நாம் தொழும் தொழுகை குறை பாடாகவே இருக்கும் என்பதை விளங்கி கொள்ளுங்கள்.
மூன்றாவதாக பள்ளி நிருவாகிகளாவர். (பள்ளி நம்பிக்கையாளர்கள்)
பள்ளியின் நிருவாகிகள் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த பள்ளியில் நிருவாகிகளாக செயல் படுகிறார்கள் என்றால் தனது சகல பள்ளி பொறுப்புகள் பற்றி கவனமாக செயல்பட வேண்டும். தொழுகையில் ஸப்புடைய விசயத்தில் பொதுமக்களுக்கு சரியாக வழிக் காட்ட வேண்டும். பொதுமக்கள் ஸப்புகளில் சரியாக நிற்காவிட்டால் பள்ளி இமாமிடம் தனிப்பட்ட முறையில் எடுத்து சொல்லி அதை சரிகட்ட வேண்டும்.
ஏன் என்றால் மூன்று சாரார்களும் பொறுப்புதாரிகள். அவரவர்களின் பொறுப்புகள் பற்றி மறுமையில் அல்லாஹ்வால் விசாரிக்கப் படுவார்கள். எனவே தொழுகையில் ஸப்புடைய விசயத்தில் சரியாக நடைமுறைப் படுத்தி, பூரண நன்மைகளைப் பெற்றுக் கொள்ள அல்லாஹ் அருள் பாலிப்பானாக. !