ஹதீஸ்களை படிப்பதோடு ஹதீஸ் கலையையும் கற்றுக்கொள்வது இன்றைய காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
இமாம் நவவி கூறினார்கள் கல்வியைத்தேடுதல் அனைத்து நஃபிலான வணக்கங்களையும் விட சிறந்தது.
அடிக்குறிப்பு:
ஸஹீஹ் முஸ்லீம் புத்தகத்தில் தலைப்பு வாரியாக பிரித்தவர் இமாம் நவவி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஷாஃபி மத்ஹபை சார்ந்த சிறந்த அறிஞர். இமாம் ஷாஃபி அவர்களின் கருத்துக்கு இவர்களின் கருத்து முரண்பட்டால் பெரும்பாலான சந்தர்ப்பங்களின் இவரது கருத்தையே முற்படுத்தப்படும். المجموع شرح المهذب என்ற மிகப்பெரும் ஃபிக்ஹ் புத்தகத்தை எழுதியவர்.
இமாம் அஹ்னஃப் (ரஹ்) கூறுகிறார்கள் கல்வியில்லாமல் வரக்கூடிய கண்ணியம் அனைத்தும் இழிவானதே.
علم الحديث ஹதீஸ்களை பற்றிய அறிவு:
ஹதீஸ் துறையில் உழைப்பவர்கள், ஹதீஸ் துறையில் ஆய்வுகள் மேற்கொள்பவர்கள், ஹதீஸ் துறையில் தங்கள் வாழ்க்கையை கழிப்பவர்கள்ஆகியோர் உண்மையில் அல்லாஹ்வின் நபியின் குடும்பத்தார் ஆவார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களை காணவில்லை அவர்களுடன் பேசவில்லை எனினும் அவர்களது மூச்சுக்காற்றோடு இரண்டறக் கலந்தவர்கள் ஆவர். என்றொரு கவிஞர் கூறினார்.
ஹதீஸ் கலையில் தங்களது வாழ்வை அர்ப்பணித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அடிக்குறிப்பு:
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) திருமணம் செய்யவில்லை.
குறிப்பாக சமகாலத்தில் வாழ்ந்து மரணித்த ஷேக் யூனுஸ் (ரஹ்) அவர்களை கூறலாம். அவர்கள் வாழ்நாளை முழுவதும் திருமணம் செய்ய நேரம் ஒதுக்காமல் ஸஹீஹ் புஹாரியில்(அதன் விளக்கவுரை மற்றும் அது சார்ந்த பணிகளில்) அர்ப்பணித்தவராவார்.
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) யா அல்லாஹ் என்னுடைய கலீஃபாக்களுக்கு ரஹ்மத் செய்வாயாக என்று பிரார்த்தித்தார்கள் அப்போது அவர்கள் யார் என்று கேட்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) என்னுடைய ஹதீஸுகளை அறிவித்து அதை மக்களிடம் கற்றுத்தருபவர்கள் என கூறினார்கள்.
இமாம் சுஃபியான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) கூறுகிறார்கள் அதிகமான கல்விகள் இருக்கிறது ஆயினும் உலூமுல் ஹதீஸை விட சிறந்த கல்வியை நான் அறியவில்லை.
இமாம் இப்னு கித்தான் (ரஹ்) அஹ்லுஸ்சுன்னாஹ்வினருக்கும் பித்அத் வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் பித்அத் வாதிகளிடம் ஹதீஸை சொன்னால் அவர்கள் கோபப்படுவார்கள்.நேரான வழியிலுள்ளவர்களிடம் அதை சொன்னால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
மனிதர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்கள்
لا يزال ناس من أمتي منصورين، لا يضرهم من خذلهم حتى تقوم الساعة
இந்த சமூகத்தில் சில மனிதர்கள் வெற்றிபெற்றுக்கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு மாறு செய்பவர்களால் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது. (அந்த நபர்கள் யார் என விளக்கம் கேட்டபோது; ஹதீஸ்கலைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணிப்பவர்கள் என கூறப்பட்டது)
ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம்.
இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும்.
சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது.
ஸூரத்துல் அன்ஃபால் 8:38
وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ
பனீ இஸ்ராயீல் 17:77
سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا
ஸூரத்துல் கஹ்ஃப 18:55
اِذْ جَآءَهُمُ الْهُدٰى وَيَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمْ سُنَّةُ الْاَوَّلِيْنَ اَوْ يَاْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا
ஸூரத்துல் அஹ்ஜாப 33:62
سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا
இன்னும் பல இடங்களில் இந்த வார்த்தை இடம்பெறுகின்றது.
சுன்னத் என்றால் நடைமுறை என்ற அர்த்தம் வரும்.
«من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها،
யார் என்னுடைய அழகிய நடைமுறையை நடைமுறைப்படுத்துகிறாரோ அவருக்கு அந்த அழகிய நடைமுறையின் கூலியும்; அமல் செய்தவரின் கூலியும் கிடைக்கும்.
ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள்.
உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர்.
ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர்.
பொதுவாக சுன்னத் என்றால்
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவற்றை குறிக்கும்.
ஸஹீஹான ஹதீஸ் ளயீஃபான ஹதீஸ் என்று கூறுவது போல சுன்னத்தை கூற மாட்டோம்.
நடைமுறையில் சுன்னத் என்பது பித்அத்திற்கு எதிரானது என்பர்.
அறிஞர்களில் சிலர் ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் என்றும் கூறுவர்.
இமாம் சுபியான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) ஹதீஸ் கலை இமாம் என்றும் கூறப்படுவார். ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லை மட்டுமே ஆய்வு செய்தவராக இருந்தார்கள்.
இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் ஸஹாபாக்களின் நடைமுறைகளை பற்றி ஆய்வு செய்வதில் சிறந்து விளங்கினார்கள். ஆகவே அவரை சுன்னத்தின் இமாம் என அழைத்தனர்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப்பற்றி கூறுகையில் அவருக்கு சுன்னத்தின் அறிவும் ஹதீஸின் அறிவும் நன்றாக இருந்தது என சில அறிஞர்கள் வேறுபடுத்திக் காட்டுவதுண்டு.
ஆகவே சுன்னத்திற்கும் ஹதீஸிற்கும் ஒரே அர்த்தம் தான் எனினும் உலமாக்கள் சில வேளைகளில் இவற்றை நுணுக்கமாக பிரிக்கின்றனர் என புரிந்து கொண்டோம்.
ஹதீஸ் என்ற வார்த்தை குர்ஆனில் சில இடங்களில் இடம் பெறுகின்றது.
ஸூரத்துத் தூர் 52:34
فَلْيَاْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖۤ اِنْ كَانُوْا صٰدِقِيْنَؕ
ஸூரத்துல் கஹ்ஃபு 18:6
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
போன்ற சில இடங்களில் இடம்பெறுகின்றது.
குர்ஆனில் ஹதீஸ் என்ற வார்த்தைகள் செய்தி, தகவல் என்ற பொருளில் இடம் பெறுகின்றது.
ஹதீஸ் என்ற பெயர் வரக்காரணம் என்ன?
குர்ஆன் ஆரம்பமில்லாதது القرآن قديم
நபியுடைய வார்த்தைகள் كلام النبى – حديث ஹதீஸ்
அகராதியில் Modern Science இற்கு العلم الحديث என்றிருக்கும்.
ஹதீஸும் ஹபரும்:
சில அறிஞர்கள் நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்கு முன்னால் வந்த செய்திகளை ஹபர் என்றும் பின்னர் வந்த செய்திகளை ஹதீஸ் என்றும் பிரிக்கின்றனர்.
சில அறிஞர்கள் خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ என்ற அடிப்படையில் அவற்றை அவ்வாறு பிரிக்க வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.
ஹதீஸும் அசர் (الاثر)
மொழி வழக்கில் அசர் (الاثر) என்றால் காலடித்தடத்தை குறிக்கும்.
ரிவாயத்
இது روى- يروى என்ற வார்த்தையின் مصدر ஆகும். சில சமயங்களில் மஸ்தருக்கு اسم فاعل அல்லது اسم مفعول இன் பொருள் தரப்படும்.
ரிவாயத் என்ற வார்த்தை مجهول ஆன فعل ஆக இருப்பினும் اسم مفعول இன் (مروىّ – அறிவிக்கப்பட்ட செய்தி) என்ற பொருள் வரும்.
ஹதீஸுகளை நாம் இரண்டாக பிரிப்போம்
1. ஹதீஸுன்நபவி الحديث النبوي – நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள்.
2. ஹதீஸ் அல்குதுஸி الحديث القدسي – அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறியவை.
மேற்கண்ட இரண்டு வகை ஹதீஸுகளிலும் ஸஹீஹ் ஆன ஹதீஸுகளும் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளும் இருக்கின்றன.
அல் குர்ஆன்
ஹதீஸ் அல் குதுஸி
எந்த மாறுதலும் ஏற்படாது
மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது
தெளிவான வஹீ.وحي جلي
وحي خفي. மறைவான வஹீ
குர்ஆன் ஓதினால் ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை
இவற்றை ஓதினால் குர்ஆனைப்போல நன்மை கிடைக்காது.
தொழுகையில் ஓதலாம்
தொழுகையில் ஓத முடியாது
அர்த்தத்தை அறிவித்தல் கூடாது
அர்த்தத்தை அறிவித்தல் கூடும் الرواية بالمعنى
ஹதீஸுகள் அனைத்தும் கிரந்தங்களில் தொகுக்கப்பட்ட காரணத்தினால் இன்றைய நிலையில் الرواية بالمعنى நாம் செய்யக்கூடாது.
அறிஞர்களின் கூற்றுப்படி சில ஹதீஸுகள் வேறு வேறு வார்த்தைகளில் அறிவிக்கப்படுவது الرواية بالمعنى -வினால் அல்ல நபி (ஸல்) வெவ்வேறு சபைகளில் அந்த ஹதீஸுகளை அவ்வாறு அறிவித்திருக்கும் காரணமே (اختلاف المجالس) என்கின்றனர்.
ஹதீஸில் 2 விஷயங்களை நாம் பார்க்கலாம்
1. சனத் السند (அறிவிப்பு தொடர்)
2. மத்தன் المتن (செய்தி)
இந்த السند – தைப் பற்றி உள்ள கல்விக்கு علم الرواية என்றும் المتن – னைப் பற்றி உள்ள கல்விக்கு علم الدراية என்றும் கூறுவார்கள்.
அரபு மொழியில் المتن என்றால் முதுகுத் தண்டு என்று பொருள் ஆகும். மூல புத்தகங்கள் அனைத்தும் المتن என்று அழைக்கப்படும்.
இஸ்லாத்தை எப்போதும் ஆய்வு செய்யும் மேற்கத்தியர்கள் (orientalist – المستشرقون) என்றழைக்கப்படுவர். இவர்களின் கூற்றுப்படி இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸில் எப்போதும் السند ஐ மட்டுமே ஆய்வு செய்கின்றனர் மாறாக المتن ஐ ஆய்வு செய்வதில்லை என்பார்கள். ஃபிரன்சு புரட்சியின் பின்னணி உடைய சிலர் இஸ்லாத்தை நவீன (modern) வரையறைகள் வைத்து அணுக ஆரம்பித்தபோது ஹதீஸுகளை மீண்டும் மறுஆய்வு செய்யவேண்டுமென முடிவெடுத்தனர்.
இதனடிப்படையில் தான் பல ஹதீஸுகள் மேற்கத்தியர்களின் தாக்கத்தால் மறுக்கப்பட்டன.
المتن இல் உலமாக்களின் பங்கு
1. ناسخ ومنسوخ – மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்
2. مختلف الحديث ومشكل الحديث – முரண்பட்ட செய்திகள்
3. سبب الورود – நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள்
ناسخ ومنسوخ
மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்
كنت نهيتكم عن زيارة القبور فزوروها فانها تذكركم الموت ] رواه مسلم
நபி (ஸல்) – இறந்தவர்களின் கப்ருகளை சந்திக்க செல்வதை தடுத்திருந்தேன் ஆனால் நீங்கள் கப்ருகளுக்கு செல்லுங்கள் அது உங்கள் மறுமை சிந்தனையை அதிகரிக்கும் (முஸ்லீம்)
تَوَضَّؤوا مِمَّا مَسَّتِ النَّارُ
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நெருப்பு தீண்டியதை தின்றால் உளூ செய்யுங்கள் – (منسوخ – மாற்றப்பட்டுவிட்டது) (முஸ்லீம்)
நபி (ஸல்) அவர்கள் ஆட்டை சாப்பிட்டு விட்டு உளூ செய்யவில்லை என்ற ஹதீஸ் அதற்கு பின்னர் வந்தது (ناسخ – மாற்றக்கூடியது )
பொதுவாக இவ்வாறான ஹதீஸுகளை அறிவிக்கையில் முதலில் منسوخ ஐ அறிவித்து விட்டு ناسخ ஐ அறிவிப்பார்கள்.
அலி (ரலி)ஒரு நீதிபதியிடம் ناسخ ومنسوخ ஐ பற்றி தெரியுமா என்று கேட்டார்கள் .அவர்கள் இல்லையென்றதும் هلكت و أهلكت (நீயும் அழிந்து மக்களையும் அழித்து விட்டாய்) என்றார்கள்.
உதாரணம்:-
சாராயம் படிப்படியாக தடுக்கப்பட்ட விவரமில்லாமல் ஒருவர் குர்ஆனை அணுகினால் அவர் சாராயத்தை ஹலால் என்று புரிந்து கொள்ளக்கூடும். ஆகவே ناسخ ومنسوخ சம்மந்தமான அறிவு குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
مختلف الحديث ومشكل الحديث
முரண்பட்ட செய்திகள்
நபி (ஸல்) ஒரு குப்பைமேட்டின் பகுதியில் நின்று சிறுநீர் கழித்தார்கள்(திர்மிதி)
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) நின்று சிறுநீர் கழித்ததாக எவரேனும் உங்களுக்கு அறிவித்தால் அதை நீங்கள் நம்பவேண்டாம் (திர்மிதி)
இதனை ஆய்வு செய்த உலமாக்கள் நபி (ஸல்) வீட்டில் நின்று சிறுநீர் கழித்ததே இல்லை மேலும் அது குப்பைமேடாக இருப்பதின் காரணமாக தன் ஆடையில் பட்டுவிடும் என்ற காரணத்தினால் நின்று கழித்தார்கள். ஆகவே ஒருவர் நிர்பந்தத்தின் அடிப்படையில் நின்று சிறுநீர் கழிக்கலாம் என விளக்கமளித்துள்ளனர்.
سبب الورود
நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள்
குர்ஆனில் ஒரு வசனம் இறக்கப்பட்ட காரணத்தை سبب النزول என்பது போல சில காரணத்திற்காக நபி (ஸல்) அறிவித்த செய்திகளே سبب الورود எனப்படும்.
உதாரணம்:-
أبوهريرة يقول سأل رجل النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إنا نركب
البحر ونحمل معنا القليل من الماء فإن توضأنا به عطشنا أفنتوضأ بماء البحر
فقال رسول الله صلى الله عليه وسلم هو الطهور ماؤه الحل ميتته
அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீரைப்பற்றி கேட்டபோது அன்னார் கூறினார்கள் “கடல் நீர் தூய்மையானது அதில் மரித்தவைகளும் ஹலாலானவைகளாகும்”என பதிலளித்தார்கள். (திர்மிதி)
காரணம்:-
கடலில் அதிகமாக பயணிக்கக்கூடிய ஒரு ஸஹாபி கடல் நீரில் உளூ செய்யலாமா என்று கேட்டபோது.
நபி (ஸல்) இதை அறிவித்தார்கள்.
إذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ إذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلا
يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ
அபூகத்தாதா (ரலி) – நபி (ஸல் )- நீங்கள் மஸ்ஜிதில் நுழைந்தால் இரு ரக்காத் தொழாமல் அமர வேண்டாம் (புஹாரி, முஸ்லீம்)
காரணம்:-
அபூ கத்தாதா (ரலி) பள்ளிக்குள் நுழைந்தபோது அனைவரும் அங்கு அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது நபி (ஸல் )ஏன் அமர்ந்துவிட்டீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது நீங்கள் அனைவரும் அமர்வதைக் கண்ட நானும் அமர்ந்து விட்டேன் என்று கூறியபோது தான் நபி (ஸல்) இந்த செய்தியை அறிவித்தார்கள்.
ஆகவே மேற்கூறப்பட்ட மூன்று விஷயங்களையும்(ناسخ ومنسوخ ,مختلف الحديث ومشكل الحديث, سبب الورود ) மதன்( المتن இல் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மத்தனில் இட்டுக்கட்டப்பட்ட (موضوع) ஆன ஹதீஸுகள் இடம் பெற்றிருக்கின்றனவா என்று கவனிக்கப்பட வேண்டும்.
இரண்டு வகைகளில் இட்டுக்கட்டப்பட்ட (موضوع) இருக்கிறது.
1. ஸனத் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع)
2. மதன் ரீதியாக இட்டுக்கட்டப்பட்டவை (موضوع)
ஸனத் ரீதியாக ஒரு ஹதீஸை (موضوع) இட்டுக்கட்டப்பது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :-
அவற்றை அறிவித்தவர் பொய்யர் என்பது மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்ட விஷயமாக இருக்கும்.
அறிவிப்பாளரே தான் பொய் சொன்னதாக குறிப்பிட்டிருப்பார்.
உதாரணம்:
நூஹ் இப்னு அபீ மரியம் என்பவர் மக்கள் குர்ஆனை விட்டும் தூரமாகியிருப்பதால் அவர்களை குர்ஆனின்பால் நெருங்க வைப்பதற்காக நானே பல ஹதீஸுகளை இட்டுக்கட்டியுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிலர் யாரிடமிருந்து ஹதீஸுகளை அறிவிப்பதாக கூறுகிறாரே அவர் வாழ்ந்த காலத்தில் இவர் வாழ்திருக்க மாட்டார். அல்லது அவர் வாழ்ந்த ஊருக்கு இவர் சென்றிருக்கவே மாட்டார்.
உதாரணம்:
மைமூன் இப்னு அஹ்மத் என்பவர் தாம் ஹிஷாம் இப்னு அம்மார் அவர்களை சந்தித்ததாக கூறுகிறார். அப்போது இப்னு ஹிப்பான்( ரஹ்) அவரிடம் ஹிஷாம் இப்னு அம்மார் ஷாமில் இருக்கிறார் நீங்கள் ஷாமிற்கு செல்லவில்லையே என்று கேட்டபோது “நான் ஹிஜ்ரி 250 இல் சென்றேன் என்று அவர் பதில் கூறியதும் ஹிஷாம் இப்னு அம்மார் அதற்கு முன்னதாகவே இறந்து விட்டாரே என்று கேட்டார்கள்.
ஆகவே மைமூன் இப்னு அஹ்மத் இட்டுக்கட்டி பொய் கூறுகிறார் என்பதை இப்னு ஹிப்பான் (ரஹ் ) அவர்கள் அறிந்துகொண்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு இஸ்ஹாக் அல் கிர்மானி என்பவர் நான் முஹம்மத் இப்னு அபீ யாகூத் என்பவரிடம் ஹதீஸ் கலையை படித்தேன் என்றார். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னதாகவே இவர் இறந்து விட்டதாக அஸ்மாஹு ரிஜாலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது போன்று தான் காணாத நபர்களிடமும் கேட்காத நபர்களிடமும் ஹதீஸுகளை கேட்டதாக தகவல் தருவதாலேயே ஹதீஸ் கலை உலமாக்கள் தபக்காத்து ரிஜால் (طبقات الرجال) -ஐ குறித்து நூல்களை எழுதியுள்ளனர்.
உதாரணம்:-
இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) அவர்களின் தத்ரீபு ராவி
(تدريب الراوي) போன்ற நூற்களில் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பிறந்த காலம், அவர்கள் பிரயாணம் செய்த ஊர்கள், மரணித்த காலங்கள், அவரைப்பற்றி பிற்காலத்தில் வந்தவர்கள் கூறிய கருத்துக்கள் (மறதியாளரா? பொய்யரா…?) போன்றவை குறித்த அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இமாம் சுஃபியான் அஸ் சவ்ரீ (ரஹ் ) - எப்பொழுது சில அறிவிப்பாளர்களிடம் நாங்கள் பொய்களை கண்டோமோ அப்பொழுதே தபக்காத்து ரிஜால் (طبقات الرجال) ஐ உருவாக்கிவிட்டோம்.
தன்னுடைய சுயநலத்திற்காக இட்டுக்கட்டியிருப்பார்.
உதாரணம் :
ஹலீம்(கோதுமையும் கறியும் சேர்த்து செய்யும் அரபு உணவு) வியாபாரி ஒருவர் ஹலீமை உண்டால் முதுகு தண்டிற்கு நல்லது என நபி (ஸல்) கூறியிருக்கிறார் என இட்டுக்கட்டுவது.
ஸனத்தை பற்றிய அறிவு என்பது அறிவிப்பாளர் தொடரை பற்றிய அறிவு
தபக்காத்து ரிஜால் (طبقات الرجال) என்பது ஒவ்வொரு அறிவிப்பாளரின் தனிப்பட்ட செய்திகளை குறிக்கும் ஆய்வுகள் ஆகும்.
மத்தன் ரீதியாக ஒரு ஹதீஸை (موضوع) இட்டுக்கட்டப்பட்டது என்று அறிவிப்பதற்கான காரணிகள் :-
1. அந்த வார்த்தையை கண்டால் அது நபி (ஸல்) அவர்களின் வார்த்தையல்ல என்று கண்டறிய முடியும்.
2. அறிவுக்கு பொருந்தாத விஷயங்களாக இருக்கும்.
உதாரணம்:-
அல்லாஹ் குதிரையை படைத்தான் குதிரையை ஓட விட்டான் பிறகு அதன் வியர்வையால் தன்னை படைத்தான்.
இமாம் இப்னுல் ஜவ்ஸீ ( ரஹ்) கூறுகிறார்கள் (موضوع) ஆன ஹதீஸுகளை 3 அடிப்படையில் அணுக வேண்டும்.
1. குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
2. ஸஹீஹான ஹதீஸுக்கு முரண்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
3. அறிவுக்கு முரண்படுகிறதா என்று பார்க்க வேண்டும்.
3. குர்ஆனுக்கு நேரடியாக முரண்படக்கூடியதாக இருக்கும்
உதாரணம் :
நபி ( ஸல்) – நான் என் மீது சத்தியமிட்டு கூறுகின்றேன் எவருடைய பெயர் முஹம்மது, அஹமத் என்று இருக்கிறதோ அவர் நரகத்திற்கு செல்லவே மாட்டார்.
4. வரலாற்று நிகழ்வுகளுக்கு முரணாக இருக்கும்.
உதாரணம்:
கைபர் யுத்தம் நடந்தபோது அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜிஸ்யா கடமையாக்கினார்கள்.
முஆவியா இப்னு அபூசுஃபியான் (ரலி) அவர்கள் ஸஅத் இப்னு முஆத் (ரலி) அவர்களை சாட்சியாக வைத்து தான் கடிதம் எழுதினார்கள் என்று இடம்பெறுகிறது.
ஆனால் ஸஅத் இப்னு முஆத் (ரலி) கைபர் யுத்தம் நடப்பதற்கு முன்னரே கந்தக் யுத்தத்தின் சிறிது காலத்திலேயே இறந்து விட்டார்கள்.
மேலும் முஆவியா இப்னு அபூசுஃபியான் (ரலி)அவர்கள் மக்கா வெற்றிக்கு பின்னால் தான் இஸ்லாத்தை தழுவினார்கள்.
ஆகவே இந்த அறிவிப்பு வரலாற்றுக்கு முரணாக இருக்கிறது.
5. அறிவுக்கு எட்டாத அளவுக்கு அளவில்லா நன்மையை கூறக்கூடியதாக இருக்கும்.
உதாரணம் :-
யார் லுஹா தொழுகையை தொழுகிறாரோ அவருக்கு 70 நபிமார்களின் நன்மை கொடுக்கப்படும்.
யார் லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுகிறாரோ அப்போது அல்லாஹ் ஒரு பறவையை படைப்பின் அதற்கு 70,000 நாவு இருக்கும் ஒவ்வொரு நாவும் 1000 மொழி பேசக்கூடியதாக இருக்கும்.
இட்டுக்கட்டப்பட்ட (موضوع) ஆன ஹதீஸ்களை உருவாக்கியதன் காரணங்கள் :-
1. இஸ்லாத்திற்கு அவப்பெயர் உருவாக்குவது.
2. தன்னுடைய மத்ஹபை(போக்கை, செயலை, கொள்கையை, புரிதலை) உறுதிப்படுத்துவதற்கு.
உதாரணம்:-
إذا رأيتم معاوية على منبري فاقتلوه
முஆவியா(ரலி)யை இந்த மிம்பரில் பார்த்தால் அவரைக் கொன்று விடுங்கள்.(ஷியாக்கள் உருவாக்கிய ஹதீஸ்)
من رفع يديه في الصلاة فلا صلاة له
யாரொருவர் தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துகிறாரோ அவருக்கு தொழுகையில்லை (ஹனஃபீ மத்ஹபினர் உருவாக்கியது)
3. தங்களுடைய ஊரை உயர்த்திக் கூறுவதற்காக.
உதாரணம்:-
பாக்தாதை புகழ்ந்தும் இஸ்தான்பூலை தாழ்த்தியும் கூறப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் உள்ளன.
4. இனம் மற்றும் மொழியை உயர்ந்ததென்று கூறுவதற்கு இட்டுக்கட்டப்பட்டவை
உதாரணம்:-
அல்லாஹ் கோபத்திலிருந்தால் அரபியிலும்; மகிழ்ச்சியாக இருந்தால் பார்ஸீ மொழியிலும் வஹீ அனுப்புவான்.
5. உலக காரணங்களுக்காக இட்டுக்கட்டப்பட்டவை.
உதாரணம் :-
அரசர்களை புகழ்ந்து ஹதீஸ்களை உருவாக்குதல்.
6. மக்களிடம் ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக புதிய செய்திகளை கூறுவது.
இமாம் சுயூத்தி (ரஹ்) تحذير الخواص من أكاذيب القصاص என்ற புத்தகத்தில் (பேச்சாளர்கள் ஹதீஸின் பெயரால் கூறிய கதைகளையெல்லாம் தொகுத்திருக்கிறார்.)
7. ஆர்வமூட்டுவதற்காக இட்டுக்கட்டுவது
இறுதியான இரு வகைகளும் ஆபத்தானவையாகும் என ஹதீஸ் கலை வல்லுனர்கள் அறிவிக்கின்றனர்.
மேற்கூறப்பட்ட எந்த காரணிகளும் இல்லாமல் அறிவிப்பாளருக்கு தெரியாமலே موضوع இடம்பெற்றிருக்கும்.
உதாரணம்:-
இமாம் லைத் இப்னு சஅத் அவர்கள் இமாம் மாலிக் மதீனாவில் சிறந்து விளங்கிய போது அவர் எகிப்தில் மிகப்பெரும் இமாமாக இருந்தார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் இப்னு ஸாலிஹ் என்றொரு எழுத்தாளர் இருந்தார்கள். அப்துல்லாஹ் அவர்களது அண்டை வீட்டார் ஒருவர் அப்துல்லாஹ் அவர்களைப் போலவே எழுதி அவர் வீட்டில் தூக்கிப்போடுவார்.அப்துல்லாஹ் அவர்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் சேர்த்து வைத்து விடுவார்கள். இவ்வாறாக லைத் இப்னு சஅத் அவர்களுக்குதெரியாமலேயே அவர் சொன்னதாக பல செய்திகள் அவரது தொகுப்பிற்குள் இடம்பெற்று விட்டன.
ஒரு அறிஞர் பிரபலமாவதற்கு முக்கிய காரணம் பிரபலமான மாணவர்கள் இருப்பது தான்.
அக்காலத்தின் எழுத்து முறைகள்
உதாரணம்:-
ஒருவர் மதீனாவில் சில ஹதீஸ் கிடைக்கப்பெற்றால் அதை பக்தாதிற்கு கொண்டு சென்று அதை பத்து பேர் குறிப்பு எடுப்பார்கள். அங்கிருந்து ஷாம் தேசத்திற்கு செல்லும் . இவ்வாறாக அது பரவும்.
இன்றளவிலும் எழுத்துப்பிரதிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் இருக்கின்றனர்.
மேற்கூறப்பட்ட எந்த செய்திகளிலும் இமாம்கள் தங்களுடைய தனிப்பட்ட அறிவை முற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தனை எவ்வாறு அணுகவேண்டும் என்ற அணுகுமுறையின் முன்னோடி ஆயிஷா (ரலி)என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவிக்கின்றனர்.
ஆயிஷா (ரலி)அவர்களின் தனி நிலைப்பாடுகள் استدراك عائشة என்ற தலைப்பில் 3-4 புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறன.
அவையனைத்தையும் தொகுத்து ஒரே புத்தகமாக السيدة عائشة وتوثيقها للسنة என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதில் ஏறத்தாழ எழுபத்து ஐந்து ஹதீஸுகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் தனி நிலைப்பாடு எடுத்ததாக கூறப்படுகிறது.
மத்தனை பற்றி கற்கும்போது استدراك عائشة வை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமென்ன?
ஆயிஷா (ரலி) இருபத்து ஐந்துக்கும் மேற்பட்ட ஸஹாபாக்களின் விஷயங்களில் தனி நிலைப்பாடுகள் எடுத்திருப்பினும் குறிப்பிட்ட நான்கு பேர்களின் சில அறிவிப்புகளில் தனி நிலைப்பாடு அதிகமாக எடுத்துள்ளார்கள்.
1. உமர்( ரலி) – எட்டு விஷயங்கள்
2. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – எட்டு விஷயங்கள்
3. அபூஹுரைரா (ரலி) – ஒன்பது விஷயங்கள்
4. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) – ஆறு விஷயங்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்களும் உள்ளனர் ஏற்காதவர்களும் உள்ளனர்.
உதாரணம் :-
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அபசகுனம் என்பது (எதிலாவது இருக்கமுடியும் என்றால்) பெண், வீடு, குதிரை ஆகிய மூன்று விஷயங்களில் தான் (இருக்க முடியும்). என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புஹாரி Volume :5 Book :67
இந்த ஹதீஸுக்கு ஆயிஷா (ரலி) முஸ்லீம் அல்லாதவர்களுக்கு தான் இந்த விஷயங்களில் அபசகுனம் இருக்கிறது என்று விளக்கமளித்தார்கள்.
ஆயிஷா (ரலி) எந்த அடிப்படையில் தன்னுடைய தனி நிலைப்பாட்டை முன்வைத்தார்கள்?
❁ ஹதீஸின் தொடரில் சில திருத்தங்களுடன் பிறரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்துவது.
❁ குர்ஆனை முன்வைத்து கருத்து கூறினார்கள்.
❁ அவர்களது சொந்த புரிதலாக கூறினார்கள்.
❁ தனிப்பட்ட விஷயங்களின் காரணமாக தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள்.
❁ மற்றவர்கள் மறந்தவற்றை ஞாபகமூட்டும் வகையில் தனி நிலைப்பாடு எடுத்திருப்பார்கள்.
உதாரணம் :-
அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
மரணக் காயமுற்றிருந்தபோது ‘சகோதரரே!’ எனக் கூறியவராக ஸுஹைப்(ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போது உமர்(ரலி) ‘உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?’ எனக் கேட்டார்.
புஹாரி Volume :2 Book :23
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய விளக்கமாவது :- ஒருவரது சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் நிலையில் எவ்வாறு பிறர் அழுவதால் மய்யித் வேதனைசெய்யப்படும் என்பதாகும்.
3318. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அபூ ஹுரைரா(ரலி) வழியாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹாரி Volume :3 Book :59
3467. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி Volume :4 Book :60
மேற்கூறப்பட்ட ஹதீஸுகளுக்கு ஆயிஷா (ரலி)யின் தனிப்பட்ட கருத்து – ஒரு முஃமின் கண்ணியமானவன். பூனையை கட்டிப்போட்ட சிறிய விஷயத்திற்கு அல்லாஹ் அவரை நரகில் புகுத்த மாட்டான் என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும்போது தங்களது பின்னல்களை அவிழ்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.
ஆயிஷா (ரலி) அதை மறுத்து நாங்கள் கடமையான குளிப்பை குளிக்கும்போது எங்கள் தலைகளை மூன்று முறை கோதி விடுவோம். ஆனால் பின்னல்களை அவிழ்த்ததில்லை என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி )அளவு கடந்த ஞாபக சக்தியும் அளவு கடந்த அறிவும் கிடைக்கப்பெற்றவர்களாக இருந்தார்கள்.
உதாரணம்:
عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، أَمَرَتْ أَنْ يَمُرَّ بِجَنَازَةِ سَعْدِ بْنِ أَبِي
وَقَّاصٍ فِي الْمَسْجِدِ، فَتُصَلِّيَ عَلَيْهِ، فَأَنْكَرَ النَّاسُ ذَلِكَ عَلَيْهَا، فَقَالَتْ: مَا أَسْرَعَ مَا
نَسِيَ النَّاسُ، «مَا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى سُهَيْلِ ابْنِ الْبَيْضَاءِ
إِلَّا فِي الْمَسْجِدِ»
சஹத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் மரணமடைந்தபோது அவர்களது ஜனாஸாவை பள்ளியில் தொழவைக்குமாறு கூறினார்கள். அப்போது ஸஹாபாக்கள் பள்ளியில் ஜனாஸா தொழவைப்பதா என்று சர்ச்சை எழுப்பியபோது. ஆயிஷா (ரலி)- மக்கள் இவ்வளவு சீக்கிரமாக மறந்துவிட்டார்களே !!! சுவைத் இப்னு பைளா (ரலி) என்ற ஸஹாபி மரணித்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு பள்ளியில் தொழவைத்தார்களே என்று கூறி ஞாபகமூட்டினார்கள்.
அதிகபட்சமாக ஆயிஷா (ரலி )தனி நிலைப்பாடு எடுத்தது 25 – 75 ஹதீஸுகள் என கூறப்படுகிறது. இதில் அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடும் இருக்கிறது.
ஆயிஷா (ரலி)யின் தனி நிலைப்பாட்டை ஏற்பவர்களும் மறுப்பவர்களும் இருப்பினும் மத்தன் ரீதியாக ஹதீஸுகளை அணுகவேண்டும் என்பதில் ஆயிஷா( ரலி) முன்னோடியாக திகழ்கிறார்கள் என்பதில் உலமாக்கள் ஒருமித்த கருத்தில் ஒன்றுபடுகின்றனர்.
السند والإسناد
ஸனத் السند – அறிவிப்பாளர் தொடர்.
உதாரணம் :-
இமாம் புஹாரி(ரஹ்) முதல் நபி (ஸல்) அவர்கள் வரை.
இஸ்னாத் الإسناد – ஒரு அறிவிப்பாளர் தான் யாரிடமெல்லாம் கேட்டார் என்ற தொடரை அறிவிப்பது.
சனத் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
அறிவிப்பாளர் தொடர் السند
முஹம்மத் நபி (ஸல்)
⬇️
ஸஹாபாக்கள்
⬇️
தாபியீன்கள்
⬇️
தபஅ தாபியீன்கள்
⬇️
இமாம் புஹாரி அவர்களுடைய ஆசிரியரின் ஆசிரியர்
⬇️
இமாம் புஹாரி அவர்களின் ஆசிரியர்
⬇️
இமாம் புஹாரி
அறி்ஞர்கள் இவர்களை பல்வேறு விதமாக பிரிக்கிறார்கள். அதை தபகா الطبقات என்று கூறுவர்.
ஸஹாபாக்களில் பத்திற்கும் மேற்பட்ட தபகாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
உலமாக்கள் الإسناد ஐ பற்றி கூறியவை:-
وقال عبد الله بن المبارك رحمه الله: “الإسناد من الدين، ولولا
الإسناد لقال من شاء ما شاء”. رواه مسلم في مقدمة صحيحه
இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) :- இஸ்னாத் மார்க்கத்தில் உள்ளதாகும் . அது இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் தனக்கு தோன்றியதைக் கூறுவார்கள்.
سَمِعْتُ سُفْيَانَ الثَّوْرِيَّ , يَقُولُ : ” الَإسْنَادُ سِلَاحُ الْمُؤْمِنِ , فَإِذَا لَمْ يَكُنْ مَعَهُ سِلَاحٌ
, فَبِأَيِّ شَيْءٍ يُقَاتِلُ ؟ “
இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) – சனது தான் ஒரு முஃமினின் ஆயுதம். சனத் இல்லையென்றால் எந்த ஆயுதத்தை வைத்து அவர் போர் புரிவார்.
وقال الإمام الأوزاعي رحمه الله تعالى: (ما ذهاب العلم إلا ذهاب الإسناد
இமாம் அவ்சாயீ (ரஹ்) – இஸ்நாத் போகும் வரை தீன் மக்களிடமிருந்து போகாது.
ஆகவே இயன்றவரை ஹதீஸை சனதுடன் கூற முயற்சிக்க வேண்டும்.
இமாம் ஷுஃபா(الامام شعبة بن الحجاج) (ரஹ்) – சனத் இல்லாமல் அறிவிக்கப்படும் ஹதீஸ் கடையில் விற்கப்படும் காய்கறியைப் போன்றது.
சமீபத்தில் வாழ்ந்த மொரோக்கோவை சேர்ந்த அறிஞர் அப்துல் ஹை அல் கத்தானி (عبد الحي الكتاني) – சனத் இல்லையென்றால் யூத கிறிஸ்தவர்கள் தங்கள் வேதங்களில் விளையாடியது போல் இஸ்லாத்தில் விளையாடப்பட்டிருக்கும்.
ஆரம்ப காலங்களில் ஸஹாபாக்கள் சனதை பற்றி கேட்டதில்லை. உஸ்மான் (ரலி) அவர்களது மரணத்திற்குப் பின்னரே அதைப்பற்றி கேட்க ஆரம்பித்தனர்.
தாபியீ ஒருவர் கூறினார்கள் – நாங்கள் பஸராவில் இருந்தோம். எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில தகவல்கள் வரும், ஆனால் நாங்கள் அதை நம்பாமல் மதீனாவிற்கு சென்று அங்குள்ள சஹாபாக்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அதை ஏற்றுக் கொள்வோம்.
இமாம் அபூதாவூத் அத் தயாலிஸீ (أبو داود الطيالسي) – நாங்கள் நான்கு பேரிடமிருந்து ஹதீஸை கற்றுக் கொள்வோம்
1. இமாம் ஸுஹ்ரீ (امام الزهري)
2. இமாம் கத்தாதா (امام قدادة)
3. இமாம் அபூ இஸ்ஹாக் (امام ابو اسحاق)
4. இமாம் அஹ்நஷ்
சோதனை செய்யப்பட்ட ஹதீஸ்:
و من هذا ما يرويه ابن عبد البر عن الشعبى عن الربيع ابن خشيم قال: ((من قال
لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيى و يميت، و هو على كل
شيئ قدير، عشر مرات كن. له كعتق رقاب أو رقبة : قال الشعبى فقلت للربيع بن
خشيم: من حدثك بهذا الحديث؟ فقال: عمرو بن ميمون الأودية فلقيت عمرو بن
ميمون، فقلت: من حدثك بهذا الحديث؟ فقال: عبد الرحمن بن أبى ليلى. فلقيت ابن
أبى ليلى فقلت: من حدثك؟ قال: أبو أيوب الأنصارى صاحب رسول صلى الله عليه
وسلم قال يحيى بن سعيد: ((و هذا أول ما فتش عن الإسناد))
இஸ்லாமிய வரலாற்றில் முதல் முதலில் சனத் சோதிக்கப்பட்ட அறிவிப்பாளர் தொடர் :
இப்னு அப்துல் பர்(إبن عبد البر)
⬇️
சுஹ்பா(الشعبى)
⬇️
இப்னு ஹூசைம்(إبن خشيم)
⬇️
அம்ரு இப்னு மைமூன்(عمرو بن ميمون)
⬇️
அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா
(عبد الرحمن بن ابى ليلى)
⬇️
அபூ அய்யூப் அன்சாரி(ابو أيوب الأنصارى )
⬇️
முஹம்மது (ஸல்) (محمد ﷺ)
சனதை பற்றிய கல்வியில் நாம் பெற்றவை
1. تراجم الرجال – ஒரு அறிவிப்பாளரின் முழு வரலாறு – பிறந்த காலம்,பயணித்த ஊர்கள், வாழ்ந்த காலம், அவர்களுடைய ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள், அவர்களது மாணவர்கள் பற்றிய விவரங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கும்.
2. الجرح والتعديل –
الجرح ↔ அறிவிப்பாளரைப்பற்றிய விமர்சனங்கள் (அவரை பலஹீனப்படுத்தும் காரணிகள்)
التعديل ↔ அறிவிப்பாளரை பலப்படுத்தும் அவரைப்பற்றிய நன்மையான விஷயங்கள்.
அரபு உலகத்தில் எழுத்து பற்றிய பார்வை:
எழுத தெரிந்தவர்கள் தமக்கு எழுத தெரியும் என்பதை காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அரபுகளில் அதிகமானோர் தாம் கற்றதை மனனம் செய்வதையே சிறந்ததாக கண்டார்கள்.
ஆரம்ப காலத்தில் நபி (ஸல் ) அவர்கள் ஹதீஸுகளை எழுதி வைப்பதை தடுத்தார்கள். ஏனெனில் குர்ஆன் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. ஆகவே ஹதீஸுகளை எழுதி வைத்தால் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்ற காரணத்தினால் தடுத்திருந்தார்கள். பிற்காலத்தில் ஹதீஸுகளை எழுதுவதற்கு அனுமதியளித்தார்கள்.
ஹதீஸுகளை எழுதுதல் என்பது இரு முறைகளில் எழுதப்பட்டது:-
1. الكتابة الفرديىة தனி நபர்கள் ஹதீஸுகளை எழுதி தொகுத்து வைத்திருந்தனர்.
உதாரணம்:-
அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) – நபி (ஸல்) அவர்களது காலத்தில் நபி(ஸல் ) அவர்களின் அனுமதியுடன் முதன்முதலில் ஹதீஸுகளை தொகுத்து எழுதியது நான் தான் எனக் கூறினார்கள்.
மேலும் அலி (ரலி), அபூஹுரைரா (ரலி), வாஇல் இப்னு ஹுஜுர் (ரலி) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி), ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அல் அன்ஸாரீ (ரலி) (ஹஜ்ஜின் சட்டங்களை அதிகமாக தொகுத்து வைத்திருந்தார்கள். இமாம் முஸ்லீம் அவர்கள் தனது தொகுப்பில் இவர்களது தொகுப்பிலிருந்து தான் அதிகமாக ஹஜ்ஜின் பாடத்தில் சேர்த்திருக்கிறார்கள்), இவர்களிடமும் சில தொகுப்புகள் இருந்தன.
2. والكتابة الرسمية – முறைப்படுத்தி தொகுத்தல்:-
இவ்வாறு ஹதீஸுகளை முதன்முதலில் முறைப்படுத்தி தொகுத்தவர் ابن شهاب الزهرى – இப்னு ஷிஹாப் அஸ் ஸுஹ்ரீ(ரஹ்) என்பவராவார். இவர் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் ஆசிரியராவார்.
எந்த ஒரு சனதை எடுத்துக்கொண்டாலும் கீழ்கண்ட ஆறு பேரை கடந்தே அது செல்லும்.
1. அறிவிப்புத்தொடர் மதீனா வாசிகள் தொடர்பானதாக இருந்தால் ابن شهاب الزهرى இமாம் ஸுஹ்ரீ(ரஹ்) என்ற தாபியி அவர்கள் வழியாகவே வரும்.
2. மக்கா வாசிகள் மூலமாக கிடைத்த சனத் ஆக இருந்தால் عمرو بن دينار (அம்ர் இப்னு தீனார்(ரஹ்) என்ற தாபியியின் வழியாக வரும்.
3. பஸரா வாசிகளின் மூலமாக கிடைத்த சனத் ஆக இருந்தால் قتادة بن دعامة (கத்தாத இப்னு தஆமா) அல்லது يحيى بن ابى كثير யஹ்யா இப்னு அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் வழியாக வரும்.
4. கூஃபா வாசிகள் மூலமாக ابو اسحاق அபூ இஸ்ஹாக்(ரஹ்), மற்றும் சுலைமான்(ரஹ்) அவர்கள் வழியாகவும் வரும்.
ஹதீஸ் கிரந்தங்கள் எவ்வாறெல்லாம் தொகுக்கப்பட்டன:-
1. தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டது
2. சஹாபாக்களுடைய தரம் வரிசையின் படி தொகுக்கப்பட்டது.
3. எழுத்துவரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்டது.
الجامع
ஜாமிஃ என்றால் அதில் அகீதா, சட்டதிட்டங்கள்(ஃபிக்ஹ்),
மறுமையை நினைவூட்டக்கூடிய விஷயங்கள் இருக்க வேண்டும் (الرقاق), உண்ணுதல் மற்றும் பருகுதல், பயணம் பற்றிய ஒழுக்கங்கள், தஃப்சீர், வரலாறு(التاريخ), சீரா (السيرة), மறுமையின் அடையாளங்கள், சிறப்புகள்( المناقب), ஆகிய தலைப்புக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
(புகாரியில் 97 பாடங்கள் உள்ளன,
முஸ்லிமில் 54 பாடங்கள் உள்ளன,
திர்மிதியில் 50 பாடங்கள் உள்ளன).
4 வகை ஜாமிஃ தொகுப்புகள்
الجامع صحيح البخاري
الجامع صحيح ومسلم
جامع الترمذي
جامع معمر بن راشد الازدى
السنن
இவற்றில் பெரும்பாலும் மர்ஃபூஃ(مرفوع) ஆன ஹதீஸுகள் இடம்பெற்றிருக்கும். ஃபிக்ஹ் கிதாபை போன்றே பாடங்கள் அமைக்கப் பெற்றிருக்கும்.
ஸுனன் தொகுப்புகள்
سنن أبي داود ஸுனன் அபீ தாவூத்
سنن نسائی ஸுனன் நஸயீ
سنن ابن ماجة ஸுனன் இப்னு மாஜா
سنن دارمي ஸுனன் தாரமீ
سنن الكبرى ஸுனனுல் குப்ரா
مصنفات
இவை ஸுனன்களைப் போன்றே இருப்பினும் இதில் موقوف மவ்கூஃப் ஆன ஹதீஸுகளும் مقطوع மக்தூ’ ஆன ஹதீஸுகளும் இடம் பெறும்.
مصنف عبد الرزاق – இது 11 பாகங்களைக்கொண்ட இந்த நூலில் 19418 ஹதீஸுகள் இடம் பெற்றுள்ளன.
مصنف ابن أبي شيبة – இது 15 பாகங்களைக் கொண்டதாகும்.
موطأ
இவை முஸன்னபாத்துகள் போன்றே இருப்பினும் அவற்றை தொகுத்த இமாம்களின் கருத்தும் இவற்றில் இடம்பெற்றிருக்கும்.
مجامع
ஆறு கிரந்தங்களின்(صحاح الستة) கலவையாக இவை இருக்கும்.
வகைகள்:
جامع الأصول
كنز العمال
الزوائد
வேறு எந்த ஹதீஸ் கிரந்தங்களிலும் இடம் பெறாத தனித்தனி கிரந்தங்களில் மட்டுமே இடம் பெற்ற ஹதீஸ் தொகுப்புக்களை தொகுப்பதே ஜவாயித் எனப்படும். இந்த வகையில் 3 புத்தகங்கள் உள்ளதாக அறிகிறோம்.
المستدرك
ஒரு ஹதீஸ் தொகுப்பாளரின் நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பினும் தங்கள் கிரந்தங்களில் அந்த ஹதீஸுகளை கொண்டு வந்திருக்க மாட்டார்கள். அவ்வாறான ஹதீஸுகளை இமாம் ஹாகிம் அவர்கள் المستدرك على الصحيحين (அல் முஸ்தத்ரக் அலா சஹீஹய்ன்) என தொகுத்துள்ளார்கள்.
المستخرجات
இதன் ஆசிரியர் சனதை முழுமையாக அறிவிக்காமல் தன்னுடைய சனதிற்கு ஒத்திருக்கக்கூடிய ஹதீஸுகளை மற்ற கிரந்தகளிலிருந்து எடுத்து தனது கிரந்தத்தில் பதிவு செய்திருப்பார். புஹாரி முஸ்லீம் போன்ற கிரந்தங்களுக்கு முஸ்தஹரஜாத் நூற்கள் உள்ளன.
اجزاء
ஒரு தலைப்பில் உள்ள ஹதீஸுகளை மட்டுமாக தொகுப்பது.
உதாரணம் :
இமாம் புஹாரி (القراءة خلف الامام) இமாமுக்கு பின்னால் தொழும்போது கிராத் ஓதுவதைப்பற்றிய தொகுப்பு.
தொழுகையில் இரு கைகளை உயர்த்துதல் (رفع اليدين) பற்றிய தொகுப்புகள் தொகுத்தது போலவே
ரியாளுஸ்ஸாலிஹீன்
அத்தர்கீப் அத்தர்கீப் (الترغيب والترهيب)
ஷமாயிலு திர்மிதி الشمائل للترمذي நபி ஸல்) அவர்களின் வர்ணனையைப்பற்றிய தொகுப்பு.
راوي الحديث ஹதீஸ் அறிவிப்பாளர்கள் அடிப்படையில் 3 வகையாக பிரிக்கலாம்:
அறிவிப்பாளர்கள் வரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்ட நூற்களும் உள்ளன. அறிவிப்பாளர்களின் பெயர் வரிசை அடிப்படையில் தொகுக்கப்பட்ட தொகுப்புகளும் உள்ளன.
مسند
معجم
اطراف
இவை 3 உம் அறிவிப்பாளர்களின் பெயர்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட புத்தகங்களாகும்.
அறிவிப்பாளர் பெயர்வரிசைப்படி தொகுத்தல் 3 விதமாக இடம்பெறும்.
இமாம் அஹ்மத் முஸ்னத் அஹ்மதில் தொகுத்தது போல ஸஹாபாக்களின் பெயர் அடிப்படையில் தொகுத்திருப்பார்கள்.
முஃஜம் கபீர், தப்றானீ – இவை ஸஹாபாக்களின் பெயர்கள் அடிப்படையில் தொகுத்த நூற்கள் ஆகும்.