இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப்படுத்திட அல்லாஹ் அவனின் இறுதித் தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பி அவர்கள் மீது அவனின் கடைசி வேதம் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஸுலாகப் பிரகடனப்படுத்தப்பட்டது முதல் அவர்கள் வாழ்வின் இறுதி நாள் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் எவர் எவரெல்லாம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் சந்தித்து மரணிக்கும்போது முஸ்லிம்களாக மரணித்தனரோ அவர்கள் ஒவ்வொருவரும் ‘ஸஹாபி’ என அழைக்கப்படுகின்றனர்.
‘ஸஹாபி’ என்ற பதம் மொழி வழக்கில் தோழர் எனும் அர்த்தத்தை சுமந்திருந்த போதிலும் இஸ்லாமிய ஷரீஆவின் பரிபாஷையில் முன்னர் கூறப்பட்ட அர்த்தத்திலேயே தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.
அருமை நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவில் தன்னந்தனியாக அல்லாஹ்வின் தூதை எடுத்துக்கொண்டு மக்கள் முன் சென்ற வேளை அவர்களுடன் கைகோர்த்து முன் நின்று இஸ்லாத்தை பரப்புவதில் தியாக சிந்ததையுடன் இயங்கிய மக்கா முஸ்லிம்கள், பின்னர் நபியவர்கள் மதீனாவுக்குச் சென்று இஸ்லாமியபிரசாரத்தில் ஈடுபட்ட வேளை அங்கு வைத்து ஒத்துழைத்த மதீனா முஸ்லிம்கள் அனைவரும் பொதுவில் ஸஹாபிகளாவர்.
இம்மாமனிதர்களை சந்தேகத்துக்கு இடம் வைக்காது அல்லாஹ் அவர்களை மிகச் சரியான அளவுகோல் கொண்டு அளந்து விட்டான். அவர்கள் யார்? அவர்களின் சிறப்பு, மகிமை, அந்தஸ்து என்ன? இதோ குர்ஆனும் ஸுன்னாவும் பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
“முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் முன்னைய முந்தியவர்கள் மேலும் அவர்களை நன்முறையில் பின்பற்றினார்களேஅவர்கள் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். மேலும் அவர்கள் அவனைப் பொருந்திக்கொண்டார்கள். மேலும் அவற்றுக்குக் கீழால் ஆறுகள் ஓடக்கூடிய சுவனங்களை அவர்கள் அவற்றில் நிரந்தரமாக இருக்கும் நிலையில்அவன் அவர்களுக்கு தயார் செய்து வைத்துள்ளான். அது மகத்தான வெற்றியாகும்”. (09:100)
النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومُ أَتَى السَّمَاءَ مَا تُوعَدُ وَأَنَا أَمَنَةٌ لأَصْحَابِى فَإِذَا ذَهَبْتُ أَتَى أَصْحَابِى مَا يُوعَدُونَ وَأَصْحَابِى أَمَنَةٌ لأُمَّتِى فَإِذَا ذَهَبَ أَصْحَابِى أَتَى أُمَّتِى مَا يُوعَدُونَ
‘நட்சத்திரங்கள் வானத்திற்குப் பாதுகாப்பாகும். அவை சென்று விட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்ட (அழிவு) வந்துவிடும். நான் எனது தோழர்களுக்கு பாதுகாப்பாவேன். நான் சென்று விட்டால் எனது தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (குழப்பங்கள்) வந்துவிடும். எனது தோழர்கள் எனது உம்மத்திற்குப் பாதுகாப்பாவார்கள். அவர்கள் சென்றுவிட்டால் எனது உம்மத்தினருக்க வாக்களிக்கப்பட்டவை வந்துவிடும்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம் )
நபித் தோழர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒன்றாக வாழ்ந்தவர்கள். நபியவர்களுக்கு வஹீ அருளப்படுவதை நேரடியாகப் பார்த்தவர்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் குர்ஆன் சுன்னா மூலம் எதை நாடுகிறார்கள் என்பதை நன்கறிந்தவர்கள். அவற்றை விளங்குவதில் சிக்கல்கள் வரும்போது அவற்றுக்கான விளக்கத்தை நேரடியாக நபியவர்களிடம் பெற்றுக் கொண்டவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல் குர்ஆனையும் சுன்னாவையும் நபித் தோழர்களுக்குப் போதித்தபோது அதன் மூலம் தான் நாடும் கருத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். நபித் தோழர்கள் அல் குர்ஆனை அதன் கருத்துக்களைப் பூரணமாகப் புரிந்துகொண்டார்கள் . எனவேதான் அல் குர்ஆன் சுன்னாவை மிகச் சரியாக விளங்க வேண்டுமாக இருந்தால் நபித்தோழர்களின் விளக்கத்தின் ஒளியில் நின்று விளங்க முற்பட வேண்டும்.
அல் குர்ஆன் சுன்னா வாசகங்கள் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை நாடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள, இதற்காக அல் குர்ஆன் அருளப்பட்ட அரபு மொழியை அறிந்து கொள்வதுடன் ஸஹாபாக்களும், தாபியீன்களும், ஏனைய உலமாக்களும் குறிப்பிட்ட சொற்களுக்கு என்ன அர்த்தங்களைக் கூறியுள்ளார்கள்என்பதையும் அறிதல் வேண்டும்.
அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தின் நிழலில்நின்று விளங்க முயற்சிக்க வேண்டுமென்பது தெளிவாகின்றது. குறிப்பாக இந்த அம்சம் மிகவும் கவனத்தில்கொள்ளப்பட வேண்டியதாகும். ஏனெனில் அல் குர்ஆன் சுன்னாவை விளங்கும்போது ஸஹாபாக்களின் விளக்கத்தை ஒதுக்கி விட்டு தமது சுய சிந்தனையின் அடிப்படையில் விளங்க முற்பட்டபோதே இஸ்லாமிய வரலாற்றில் பலவழிகேடுகள் தோன்றின என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும்.
எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது. ஒரு விடயத்துடன் எந்த ஆயத் தொடர்புடையுது. எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது .அதேபோன்று எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது. இன்னும் எது தொடர்பற்றது. இவையனைத்தையும் அருமை ஸஹாபாக்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள் . ஆயத்துக்களின் வரையரைகள்என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும்ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்து விளங்குவது என்பதையும் நபி அவர்கள்ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்து ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தேவையான விளக்கங்களை கற்றுக்கொடுத்தார்கள் .
ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாக திகழ்ந்தும்அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை. அவர் அவர்களது தேவைக்கேற்ப அல்குர்ஆனுக்கும் அல்ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை. நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள். இதனால்தான் அந்த ஸஹாபாக்களின் காலத்தில் பித்அத் என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.
அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை. அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை. இதனால்அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதுக்கவில்லை. எபபொழுது உம்மத்தே இஸ்லாமிய ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டிவிட்டார்களளோ அன்று தொடக்கம் ஒவ்வொருவரும் குர்ஆன் விடயத்தில் தான்தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விடயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வரஆரம்பித்து விட்டன. அவர்களுடைய விளக்கத்திற்கு சார்பாக அவர்களுக்குத் தோன்றியது போன்று ஆயத்துக்களையும் ஹதீஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள். இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், சர்ச்சைகள் என்று ஆகிவிட்டது. நிச்சயமாக குர்ஆன் ஆயத்துக்களினாலும் ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது. ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமிலர். அந்தளவு தூரம் விளங்கிய அவாகள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான் வரையரைகளை சரிவரப் புரிந்து பேணி வந்தமையேயாகும். அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது. அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தன. அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. விடயங்கள் அனைத்தும் ஒரு அடிப்படையோடு இருந்த காரணத்தினால் அந்த மக்கள்வேறுபடவில்லை.
ஆம்! அவர்களை நேசிக்க வேண்டும். அவர்களின் பெயர்களை சொல்லும்போது,
கேட்கும்போது, எழுதும்போது ‘ரழியல்லாஹு அன்ஹ்’ என்று கூறுவது சிறப்பாகும்.
அவர்களின் நேர்மையை நம்ப வேண்டும். இஸ்லாத்தில் அவர்கள் முந்தியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது சிறப்புக்களைப் பரப்ப வேண்டும். மனிதர்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிணக்குகள் பற்றி பேசாதிருத்தல் வேண்டும். அவர்களை வெறுப்பவர்கள், கோபிப்பவர்கள், நிந்திப்பவர்கள், குறைசொல்பவர்கள், நையாண்டிபண்ணுபவர்கள்,
விமர்சிப்பவர்கள், இழித்துப் பேசுபவர்கள், ஏசுபவர்கள், திட்டுபவர்கள்,
சபிப்பவர்கள், மட்டு மரியாதையற்ற முறையில் அவர்களைக் கையாளுபவர்கள்
போன்றோரை விட்டு நீங்கி இருத்தல் வேண்டும். இவை அஹ்லுஸ் சுன்னா வல் ஜமா
அத்தினரின் நம்பிக்கைக் கோட்பாடான அகீதா சார்ந்ததாகும்.
சிறப்புமிக்க நபித் தோழர்களை கண்ணியப்படுத்துவது நேசிப்பது என்பது சர்வ சாதாரணமான விடயமன்று. உண்மையில் அது முழுக்க முழுக்க அகீதாவுடன் பின்னிப் பிணைந்தது, இதில் ஏற்படுகின்ற கொஞ்ச நஞ்ச அசைவும், ஆட்டமும், தளர்வும்கூட மிகப் பாரதூரமானது. ஏனெனில் ஸஹாபிகள் ஊடாகத்தான் குர்ஆனையும் ஸுன்னாவையும் அப்பழுக்கற்ற முறையில் அணு அணுவாக அப்படியே அல்லாஹ் பாதுகாத்து அடுத்தவர் கையில் தவழச் செய்தான். அவர்களின் முதன்மையில், நேர்மையில், மகிமையில் ஊறு ஏற்படுமென்றால் அது இஸ்லாம் என்ற கட்டிடத்துக்கே சந்தேகமின்றி பங்கம் ஏற்படுத்தும்.
கண்ணியமிக்க நபித் தோழர்களை ஏதோ நம்மைப் போன்று சாமானியர்களாக எண்ணுவது, நோக்குவது, கையாளுவதுவளர்ந்து, முற்றி அவர்களை தரக்குறைவாக பேசவும், எழுதவும், வாய்க்கு வந்தவாறெல்லாம் தாறுமாறாக விமர்சிக்கவும்இன்று சமூகத்தில் சிலர் தலைப்பட்டுள்ளனர். இப்போக்கு இத்தகையோரது நம்பிக்கையின் அடிப்படையையே ஆட்டம்காணச் செய்யும். ஸஹாபிகளை வெறுப்பவர் காஃபிர் என இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அறுதியாக, உறுதியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.
பின்வரும் ஹதீஸ் கவனத்துக்குரியது:
‘என் தோழர்கள் விடயத்தில் அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! என் தோழர்கள் விடயத்தில்அல்லாஹ்வை அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள்! எனக்குப் பின் அவர்களை நீங்கள் இலக்காக எடுத்துக் கொள்ளவேண்டாம்! எவர் அவர்களை நேசித்தாரோ என்னை நேசிப்பதன் நிமித்தம் அவர் அவர்களை நேசித்தார். மேலும் எவர்அவர்களை வெறுத்தாரோ என்னை வெறுப்பதன் நிமித்தம் அவர் அவர்களை வெறுத்தார். மேலும் எவர் அவர்களைதுன்புறுத்தினாரோ திண்ணமாக அவர் என்னை துன்புறுத்தி விட்டார். என்னை எவர் துன்புறுத்தினாரோ நிச்சயமாகஅவர் அல்லாஹ்வை துன்புறுத்தி விட்டார். எவர் அல்லாஹ்வை துன்புறுத்தினாரோ அல்லாஹ் அவரைப் பிடிப்பான்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழியல்லாஹு அன்ஹு), நூல்:திர்மிதி).
தம்மை, தம்மிடமிருந்தவற்றை அப்படியே இஸ்லாத்துக்காக அர்ப்பணிப்பு செய்த நபித் தோழர்கள், யதார்த்தத்தில்தீனுல் இஸ்லாத்தின் பாதுகாப்பு அரண்கள், இஸ்லாத்தின் தூண்கள், அவர்களின் உதிரம் அதன் நீர், அவர்களின்தியாகம் அதன் உரம். மனமார ஏற்போம்! மதிப்போம்! போற்றுவோம்! கண்ணியப்படுத்துவோம்!
அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள ஸஹாபாக்களின் விளக்கத்தில் விளங்கமுயற்சிபோம். ஸஹாபிகளின் சிறப்பு, பெருமையை பின்பற்ற வேண்டும் என்பதை பறைசாற்றுகின்ற. குர்ஆன்வசனங்கள், ஹதீஸ்கள், அறிஞர் பெருமக்களின் கூற்றுக்களை அடிக்கடி எமக்கிடையே பிரஸ்தாபிக்க வேண்டும். இவ்வழியில் நம் உள்ளங்களில் அவர்களின் அன்பு பொங்கிப் பிரவகிக்கும், அவர்களின் நேசம் நிரம்பி வழியும். அருமைசஹாபாக்கள் மீதான அன்பை, மரியாதையை, அவர்களின் கண்ணியத்தை, அந்தஸ்தை நமது உள்ளங்களிலே ஊட்டிவளர்த்திட வேண்டும்.
ஆக, அல் குர்ஆனையும் சுன்னாவையும் சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலமே இஸ்லாத்தைப் பூரணமாக அதன் தூய்மையான வடிவில் புரிந்து பின்பற்ற முடியும். எனவே, அதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றிஅவற்றை சரியான முறையில் புரிந்து கொள்ள முயற்சிப்போமாக.
-நபிவழி நம் வழி