உள்ளடக்கம்:
அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்
ஸஹாபாக்கள் மத்தியில் பிரிவுகள் கிடையாது
ஸஹாபாக்கள் மத்தியில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினரின் முடிவு
ஸஹாபாக்கள் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை
ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?
சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது
ஸஹாபா விளக்கமும், சுய விளக்கமும்
உம்மத்தின் பிரிவுக்குக் காரணம் ஸஹாபாக்களின் பாதையைத் தவிர்ந்து கொண்டதும் விளக்கத்தில் எல்லை மீறுவதுமாகும்
சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஸலவாத்தும், ஸலாமும் அகிலத்திற்கு அருட்கொடையாக வந்த எங்கள் உயிரிலும் மேலான இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மீது உண்டாவதாக.
அல்குர்ஆனில் சொல்லப்படும் அல்-முஃமினீன் பாதை என்பது சஹாபாக்களின் பாதை என்பதன் ஆதாரங்கள்
அன்றைய தினம் இறக்கிய மார்க்கத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், அவர்களுடைய ஸஹாபாக்களும் எவ்வாறு பின்பற்றினார்களோ, அவ்வழிமுறையில் எவர்கள் பின்பற்றுகின்றார்களோ அவர்கள் “ஜன்னத்” சென்றடைவார்கள். அந்த வழிமுறையினைத் தவிர்ந்து அல்குர்ஆன், அஸ்ஸுன்னா என்று கூறி ஆதாரங்களை நிருபிக்கிறோம் என்று அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவில் காட்டினாலும் அவர்கள் “ஜன்னத்” சென்றடைய மாட்டார்கள் என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தீர்ப்பாகும்.
இதனையே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனக்கு முன்னால் ஒரு நேர்கோட்டினை வரைந்தார்கள். அதன் வலதிலும், இடதிலும் பல கோடுகளை வரைந்தார்கள். தனக்கு முன்னால் வரைந்த நேர்கோட்டில் தனது விரலை வைத்து, சூரத்துல் “அன்ஆம்” இன் 153 வசனத்தை ஓதிக் காட்டினார்.
وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ
”நிச்சயமாக இது நேரானதாக இருக்க என்னுடைய வழியாகும். இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும், மற்ற வழிகளைப் பினபற்றாதீர்கள். அவை, அவனுடைய வழியில் இருந்து உங்களைப் பிரித்து விடும் என்ற அல்குர்ஆன் வசனத்தைக் கூறி ஏனைய அனைத்துப் பாதைகளிலும் ஓர் ஷைத்தான் அழைப்பாளராக இருக்கின்றான் என்று எச்சரித்துள்ளார்கள். (முஸ்னத் அஹ்மத்);
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய நேர் பாதையில் ஷைத்தான் அழைப்பாளராக இல்லை. ஆனால் ஏனைய பாதைகளில் ஷைத்தான் அழைப்பாளராக இருந்து மனிதன் நேர்வழியில் செல்வதைத் தடுத்து “ஜன்னத்” சென்றவடைவதைத் தடுக்கின்றான். இதுவே அவர்கள் “நரகம்” சென்றடைவதற்கான காரணமாகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் இக்கூற்றினை அல்லாஹ் சுபஹானஹுதாலா அல்குர்ஆனில் பல இடங்களில் நிரூபித்திருக்கின்றான்.
அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் பகரா”வில் கூறியுள்ளான்,
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَآ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِىْ شِقَاقٍ ۚ فَسَيَكْفِيْکَهُمُ اللّٰهُ ۚ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُؕ
(விசுவாசம் கொண்டோரே!) நீங்கள் எதை ஈமான் கொண்டீர்களோ, அது போன்றதை அவர்களும் ஈமான் கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர் வழியை அடைந்து விடுவார்கள். இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்!) அல்லாஹ் போதுமானவன். (சூரத்துல் பகரா – 137)
அன்று அல்லாஹ் இவ்வாயத்தினை இறக்கும் போது “அவர்களும் விசுவாசம் கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர் வழியை அடைந்து விடுவார்கள்” என்று கூறுவது முன்றாம் நபர்களை ஆகும். "அன்று துன்யாவில் தோற்றம் பெறாதவர்களும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் காணப்படாதவர்களையே” மூன்றாம் நபர்கள் என்று அல்லாஹ் இந்த ஆயத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளான்.
“فَإِنْ آمَنُوا” - அவர்கள் அனைவரும் ஈமானைப் பெற்றுக் கொண்டால்
“بِمِثْلِ مَا آمَنتُم” - எம் முறையில் நீங்கள் ஈமான் பெற்றுக் கொண்டீர்களோ
மேற்கூறிய வசனத்தில் "ஆமன்த ” - நீ என்று ஒருமையில் கூறாமல் "آمَنتُم" - நீங்கள் (நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், ஸஹாபாக்களும்) என்று பன்மையில் கூறியுள்ளான். அதாவது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் எவ்வழிமுறையில் ஈமான் பெற்றுக் கொண்டார்களோ அவ்வழிமுறையில் நீங்கள் ஈமான் பெற்றுக் கொண்டால்
“ فَقَدِ اهْتَدَوا ” – நேர்வழி அடைவீர்கள்.
அதாவது பின்பற்றும் வழிமுறையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் ஸஹாபாக்களையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் நிஸா”வில் கூறியுள்ளான்,
وَمَنْ يُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْۢ بَعْدِ مَا تَبَيَّنَ لَـهُ الْهُدٰى وَ يَـتَّبِعْ غَيْرَ سَبِيْلِ الْمُؤْمِنِيْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰى وَنُصْلِهٖ جَهَـنَّمَ ؕ وَسَآءَتْ مَصِيْرًا
“நேரான வழி இன்னதென்று தெளிவான பின்னர் எவர், (நம்முடைய) இத்தூதருக்கு மாறு செய்து, விசுவாசிகளின் வழியல்லாத(வேறு வழியான)தைப் பின்பற்றுகிறாரோ அவரை நாம், அவர் திரும்பிய (தவறான) வழியிலேயே திருப்பிவிடுவோம். (பின்னர்) அவரை நரகில் புகுத்திவிடுவோம். அது சென்றடையுமிடத்தில் மிகக் கெட்டது. (நிஸா – 115)
“وَمَن يُشَاقِقِ الرَّسُولَ” – எவர்கள் தூதரிடம் இருந்து பிரிந்து செல்கின்றார்களோ
மேற்கூறிய வசனத்தில் “யுஹாலிபு ரசூல்” என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக “يُشَاقِقِ الرَّسُولَ” “பிரிந்து செல்பவர்” என்றே அல்லாஹ் கூறியுள்ளான்.
“யுஹாலிபு ரசூல்” என்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிராகச் செல்கின்றவர்கள். இங்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எதிரியினைப் பற்றிக் கூறவில்லை. அதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு எதிரி காபிராகும். ஆனால் “يُشَاقِقِ ” – பிரிந்து செல்பவன் என்ற சொல்லே இங்கு பாவிக்கப்பட்டுள்ளது. அரபியில் “ஷக்கத் தியாப்” என்றால் ஆடையினை கிளித்தவர்கள். அதாவது, ஆடை ஒன்றாக இருக்கும் பொழுது பிரிக்க வேண்டுமெனில் ஆடையை கிளிப்பார்கள். அவ்வாறே, அருமை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் சேர்ந்து இருந்த ஒருவர் தான் அவரிடம் இருந்து பிரிந்து செல்ல முடியும். அதாவது இங்கு “உம்மதி” – ரசூல் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களைப் பற்றியே பேசப்படுகின்றது. மாறாக, காபிர்களைப் பற்றி அல்ல.
தூதரிடம் இருந்து பிரிந்து செல்வது எப்படி என்றால் , நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறைகளை அறியாமல், அவர்களுடைய வாழ்க்கையினை அறியாமல் தனக்கு தேவையான முறையில் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும், ஏனைய கொள்கை சுமந்து வாழ்ந்தால், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து பிரிந்து விடுவோம். நபி வழி என்ற வழிமுறையினை அறியாமல் தனக்கு தேவை மாதிரி நடை, உடை, பாவனைகளை பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய கல்வியினை பெற்றுக் கொள்வார்களோ, அப்பொழுது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றுவார்கள். அவர்களுடைய அன்றாட காரியங்கள் அனைத்திலும் இன்னும் ஏனைய விஷயங்களான குடும்பவாழ்வு, சமூகவாழ்வு அல்லது தனிப்பட்ட விடையங்கள் அனைத்திலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடிப்படையை பின்பற்றுவார்கள். இவ்வாறு பின்பற்றும் போது அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இணைந்தவர்களாக இருப்பார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அடிப்படையை கற்கவில்லை என்றால், துன்யாவில் காணப்படும் எதாவது ஒன்றைப் பின்பற்றி வாழ்வார்கள். இதனால் அவர்கள் இன்னொரு கூட்டத்தினரோடு சேர்ந்துவிடுவாா்கள். அப்போது, நிச்சயமாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய அடிப்படையில் இருந்து பிரிந்து செல்வார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பதே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான காரணமாக அமையும். நபி வழியை விளங்குவதற்கு முயற்சிக்காமல் துன்யாவின் பிற விடையங்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் “கியாமத்” வாழ்வில் துன்யாவில் ஏதோவொரு வாழ்க்கையை வாழ்ந்தவராக, பின்பற்றியவராக வருவார்கள். மறுமை நாளில் வந்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றியதாக கூறுவார்கள். ஆனால், அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பின்பற்றி தனது வாழ்க்கையினை வாழ்தவர்கள் அல்ல.
ஏனென்றால் அவர்களுடைய ஆடையில், குடும்பவாழ்க்கையில், கொள்கையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எவைகளை எம்முறையில் முன்மாதிரியாக செயல்படுத்தினார்களோ, அம்முன்மாதிரிகளை அவ்வழிமுறையில் அவர்கள் பின்பற்றவில்லை. எனவே, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் இருந்து பிரிந்தவர்களாகவே காணப்படுவார்கள்.
இதுவே “ يُشَاقِقِ الرَّسُولَ ” - எவர் தூதரிடமிருந்து பிரிந்து செல்கின்றார்களோ ஆகும்.
மேலும், இஸ்லாமிய உம்மத்தில் உள்ள அனைவருக்கும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை முன்மாதிரியாக எடுக்கும்படி அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அல்குர்ஆனிலும், அஸ்ஸுன்னாவிலும் சத்தியம் இருக்கின்றது என்று இஸ்லாமிய உம்மத் சந்தேகம் கொள்ளாத ஓர் விஷயம் ஆகும். அவைகளில் சத்தியம் உள்ளதென்று அனைத்து உள்ளங்களும் அறிந்த ஓர் உண்மை. அவைகளைப் பெற்றுக் கொண்டு நாம் பின்பற்ற வேண்டும்.
இதனைத்தான் “مِنبَعْدِمَاتَبَيَّنَلَهُ الْهُدَىٰ” அவர்களுக்கு ஹிதாயத்ததை தெளிவு காட்டிய பின்னர், அதில் அவர்கள் கவனமில்லாமல் இருக்கின்றார்கள்;.
“وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ” – அல்மூஃமினீன் பாதையைத் தவிர்ந்து ஏனைய பாதைகளைப் பின்பற்றினால்
மேற்கூறிய வசனத்தில் “ الْمُؤْمِنِينَ “ என்ற வாா்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆயத் இறக்கப்பட்ட போது காணப்பட்ட “الْمُؤْمِنِينَ” அல்மூஃமினீகள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் ஆவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் “الْمُؤْمِنِينَ” - அல்மூஃமினீகளாக அக்காலத்தில் இருக்கவில்லை.
அதாவது, எவரெல்லாம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும், சஹாபாக்களும் இருந்த பாதைளைத் தவிர்ந்து வேறு பாதையில் செல்கின்றார்களோ,
“ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ” - அவர்கள் எப்பாதையினை நோக்கிச் செல்கின்றார்களோ அப்பாதையிலேயே செல்வதற்கு அவர்களை விட்டு விடுவோம்.
உதாரணத்திற்கு, ஒருவன் சூபியாவதற்கு ஆசைப்பட்டால் அவனை அதே பாதையில் செல்வதற்கு விட்டுவிடுவான். இன்னொருவன், அல்லாஹ்விடம் தர்க்கவாதியாகி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய அஹாதிஸ்களுடன் மோதுவதற்கு நாடுகின்றான், மேலும் இன்னொருவன் இச்சையுடன் வாழ்வதற்கு அல்லது அல்லாஹ்வை நிராகரிப்பதற்கு நாடுகின்றான் என்றால் அப்போது
“ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ” - அவர்கள் எதை நோக்கி நாடுகின்றார்களோ அதை நோக்கிச் செல்ல விட்டுவிடுவான்.
“ وَنُصْلِهِ جَهَنَّمَ” - ஆனால் அவர்கள் சென்றடையும் இடம் நரகமாகும். ஏனென்றால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸஹாபாக்களும் பின்பற்றிய பாதையைப் பின்பற்றாமல் வேறு பதைகளைப் பின்பற்றியதால்
“وَسَاءَتْ مَصِيرًا” - அவர்கள் சென்றடையும் இடம் மிகக் கெட்டது.
மேற்கூறப்பட்டவைகளை அல்லாஹ் சுபஹானஹுதாலா “சூரத்துல் நிஸா – 115ஆவது ஆயத்தில்” குறிப்பிட்டுள்ளான். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் ஸஹாபாக்களும் பின்பற்றாத பாதையினைப் பின்பற்றினால் அவர்கள் நரகத்தை சென்றடைவார்கள் ” என்ற கூற்றினையே மேற்கூறப்பட்ட ஆயத்துக்கள் எடுத்து காட்டுக்கின்றது.
ஸஹாபாக்கள் மத்தியில் பிரிவுகள் கிடையாது
ஸஹாபாக்கள் அவர்களின் பழக்கங்களையும் பண்புகளையும் செயல்களையும் கொள்கையையும் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். ஸஹாபாக்களின் வாழ்க்கைக் காலத்தில் இஸ்லாம் சிறப்பாக இருந்தது. அல்லாஹு தஆலா அவனது வேதமான சங்கை மிக்க அல் குர்ஆனை ஸஹாபாக்களின் மொழியில் இறக்கினான். இன்னும் அல்லாஹ் எவ்வாறு தனது வேதத்தை விளங்க வேண்டுமென்று நாடினானோ அவ்வாறே அந்த ஸஹாபாக்கள் விளங்கினார்கள். இன்னும் அவர்களுக்கு எதனைப் பற்றிய தெளிவு அவசியமாக இருந்ததோ அதனை அவர்கள் றஸுலுல்லாஹி (ﷺ) அவர்களின் சுன்னாவிலிருந்து பெற்றுத் தெளிவடைந்தார்கள். இதே அடிப்படையில் அபூ பக்ர் (رضي الله عنه), உமர் (رضي الله عنه) , உஸ்மான் (رضي الله عنه) ஆகியோரின் கிலாபத்தின் காலத்திலும் அந்த ஸஹாபாக்கள் செயற்பட்டார்கள்.
அதன் பின்னால் நிலை மாற ஆரம்பித்தது. சில மக்களின் உள்ளங்களில் உலக விஷயங்களும் அரசியலும் அதிகமானபோது அவர்கள் பித்னாவை உருவாக்கினார்கள். யஹுதியும், சூழ்ச்சிக்காரனுமான அப்துல்லாஹ் இப்னு ஸபா என்பவன் கலீபா உஸ்மான் (رضي الله عنه) அவர்களை கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு அந்த பித்னா (குழப்பம்) சென்றடைந்தது. அந்த நேரத்திலிருந்துதான் பித்னா உருவாக ஆரம்பித்தது.
அந்த பித்னாவைத் தொடர்ந்து தொடச்சியாக பிரிவுகள் உருவாக ஆரம்பித்தன. அந்தப் பிரிவுகளின் பெயர்கள் அவற்றின் நோக்கத்தையும் குறிக்கோளையும் எடுத்துக் காட்டுகிறது.
ஹவாரிஜ் என்ற பிரிவினர் அலி, முஆவியா (رضي الله عنهم) ஆகியோரை விட்டும் வெளியேறினார்கள். ("ஹரஜ"- என்றால் "வெளியேறுதல்" என்பதைக் குறிக்கிறது).
ஷீஆக்கள் தாங்கள் அலி(رضي الله عنه) அவர்களின் ஆதரவாளர்கள் என்று காட்டிக் கொண்டார்கள்.
அதன் பின்னால் சமூகத்திலும் மஸ்ஜித்களிலும் வாதங்களும் சர்ச்சைகளும் அதிகமாகின. அகீதா விஷயங்களிலும் இவ்வாறு வாதங்கள் அதிகரித்ததனால் பித்அத்தான கருத்துகள் வெளிவரத் தொடங்கின. இந்த வாதங்களின் விளைவாக மஃபத் அல் ஜுஹ்னி என்பவன் கத்ரை (விதி) மறுத்தான்.
மஃபத் அல் ஜுஹ்னியின் இவ்வாதத்தை அப்துல்லாஹ் இப்னு உமர் (رضي الله عنه) அவர்களும் இன்னும் ஏனையவர்களும் தவறென மறுத்தார்கள். அதன் பின்னால் ஈலான் அத்திமஷ்கி என்பவன் இர்ஜாவின் ("இர்ஜா"என்பது முர்ஜிய்யாவின் கொள்கையைக் குறிக்கிறது) வாதத்தை முன்வைத்தான். (அல் மிலல் வந்நிஹல்)
அதன் பின்னால் ஜஹ்ம் இப்னு ஸப்வான் என்பவனின் பெரும் பித்னா கிழக்கு நாடுகளில் பரவியது. அவன் அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தான். இது முஸ்லிம்களுக்கு அவர்களின் கொள்கையை சந்தேகத்துக்குரியதாக மாற்றி வைத்தது. இஸ்லாமிய உம்மத்தில் தோன்றும் தலைமுறைகளுக்கு இக்கொள்கை பெரும் துர்ப்பாக்கிய நிலையை உருவாக்கி விட்டது.
அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்தவர்கள் ஜஹ்மிய்யாவின் பித்அத்தில் மிகவும் கவனமாக இருந்ததோடு அதனைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கையும் செய்தார்கள்.
அக்காலப்பகுதியில்தான் வாஸில் இப்னு அதா என்பவனால் முஃதஸிலா கொள்கை (மத்ஹபுல் இஃதிஸால்) உருவானது. முஃதஸிலாக்கள் ஹவாரிஜைப் போன்றும் ஷீஆக்களைப் போன்றும் அரசியல் சார்ந்த அணுகுமுறையில் செயற்படவில்லை.
முஸ்தஸிலாவின் போக்கு முற்றிலும் அறிவு சார்ந்ததாக அமைந்திருந்தது. முஸ்தஸிலாவின் மத்ஹப் வாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அவர்களின் கருத்துகளை பலப்படுத்துவதற்கு அவர்கள் யூனானிலிருந்து வந்த "மன்திக்" எனப்படும் "தர்க்கக் கல்வியையும்" "பல்ஸபா" எனப்படும் "தத்துவத்தையும்" பயன்படுத்துவார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டுதான் முஃதஸிலாக்கள் ஸஹீஹாக வந்த ஆஹாத் ஹதீஸ்களை மறுக்கிறார்கள்.
ஸஹாபாக்கள் மத்தியில் நடந்த விவகாரங்கள் தொடர்பாக அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினரின் முடிவு
அந்த விவகாரங்கள் தொடர்பாக வந்துள்ள சில அறிவித்தல்கள் பொய்களாக உள்ளன. சில அறிவித்தல்கள் மேலதிகமாக இட்டுக்கட்டப்பட்டிருக்கின்றன. சில குறைத்துக் கூறப்பட்டுள்ளன. எனவே வந்துள்ள அறிவித்தல்களில் ஸஹீஹான அறிவித்தல்களின் அடிப்படையில் நாம் தீர்மானிப்பது என்னவென்றால்,
ஸஹாபாக்கள் மத்தியில் நிகழ்ந்தவற்றுக்காக அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். அவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில் அவர்கள் எடுத்த முடிவு சரியான என்றால் அவர்களுக்கு இரு கூலிகள் உண்டு. தவறானதாக இருப்பின் ஆராய்ச்சி செய்ததற்கான கூலியாக ஒரு கூலி உண்டு. இன்னும் ஸஹாபாக்கள் பாவம் செய்யாதவர்களென்பது அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினரின் நம்பிக்கையில் உள்ளதல்ல.
சிறிய பாவத்திலோ பெரிய பாவத்திலோ அவர்கள் ஈடுபடுவதற்கு சாத்தியமிருக்கிறது. என்றாலும் அவர்களின் சிறப்பினாலும் அவர்கள் செய்துள்ள நன்மைகளினாலும் அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவதற்கு அவர்கள் தகுதியானவர்களாகவே இருக்கிறார்கள்.
அவ்வாறு அவர்களுக்குக் கொடுக்கப்படும் மன்னிப்பு அவர்களுக்குப் பின்னால் யாரும் பெறுவதற்கு பாக்கியம் பெறாத மன்னிப்பாகும். அவர்கள் செய்திருக்கும் அதிகமான நன்மைகள் அவர்கள் செய்திருக்கும் தீமைகள் மன்னிக்கப்படுவதற்குப் போதுமானவையாக இருக்கின்றன.
இந்த அந்தஸ்து ஸஹாபாக்களுக்குப் பின்னால் வருகின்ற எவருக்கும் இல்லாத அந்தஸ்தாகும். நபி (ﷺ) அவர்களின் நாவிலிருந்தே ஸஹாபாக்களைச் சிறப்பித்துக் கூறிய வார்த்தைகள் இருக்கின்றன.
இந்த அந்தஸ்து ஸஹாபாக்களுக்குப் பின்னால் வருகின்ற எவருக்கும் இல்லாத அந்தஸ்தாகும். நபி (ﷺ) அவர்களின் நாவிலிருந்தே ஸஹாபாக்களைச் சிறப்பித்துக் கூறிய வார்த்தைகள் இருக்கின்றன.
"அந்த ஸஹாபாக்களில் ஒருவரின் கைப்பிடியளவு தர்மம் மற்றவர்கள் உஹத் மலையளவு தங்கத்தை தர்மம் செய்வதை விடவும் சிறந்ததாகும்"
என்று நபி( ﷺ)அவர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் கூறினால், ஸஹாபாக்கள் தங்களின் பாவங்களுக்காக அவர்கள் தவ்பா செய்திருக்கலாம். அவர்கள் செய்த நன்மைகளுக்காக அப்பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் முன்னர் செய்த நன்மைகளுக்காக பிற்காலங்களில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படலாம். அல்லது மறுமையில் நபி (ﷺ) அவர்களுடைய ஷஃபாஅத்தின் (சிபாரிசு) மூலம் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படலாம். அந்த நபியுடைய ஷஃபாஅத்திற்கு மனிதர்களில் மிகவும் தகுதியுள்ளவர்கள் ஸஹாபாக்கள்தான்.
அந்த ஸஹாபாக்கள் உலக வாழ்க்கையில் எதிர் கொண்ட கஷ்டங்களுக்காகவும் துன்பங்களுக்காகவும்; அவர்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடலாம். இதுதான் அவர்கள் செய்த பாவங்களுக்காக அவர்கள் அடையக்கூடிய நிலையென்றிருப்பின் அவர்களின் ஆராய்ச்சி (இஜ்திஹாத்) ரீதியாக நிகழ்ந்துவிட்ட தவறுகளுக்காக அவர்களின் நிலையை எவ்வாறு குறை சொல்ல முடியும். அவர்களின் ஆராய்ச்சி தவறாகிவிட்டாலும் அவர்களுக்கு ஒரு கூலி கிடைக்கிறது. அதன் மூலம் அவர்களின் அத்தவறு மன்னிக்கப்பட்டுவிடும்.
அந்த ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் கொண்ட நம்பிக்கையின் தரத்திலும் இன்னும் அவர்கள் செய்த ஜிஹாதிலும் அவர்கள் பெற்றுக் கொண்ட பயனுள்ள கல்வியிலும் மேலும் இது போன்று அவர்கள் செய்த நன்மைகளின் அடிப்படையிலும் பார்க்கும் போது யாரெல்லாம் ஸஹாபாக்களின் குறைகளையும் தவறுகளையும் எடுத்துக் காட்டுகிறார்களோ அவர்கள் காட்டுகின்ற குறைகளும் தவறுகளும் மிகக் குறைவானதே.
யார் அவர்களின் வரலாற்றை நல்ல நோக்கத்துடன் பார்க்கிறார்களோ அவர்கள் அந்த ஸஹாபாக்களுக்கு அல்லாஹ் கொடுத்துள்ள அருளையும் சிறப்பையும் அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் படைப்புகளில் நபிமார்களுக்குப் பின்னால் மிகவும் சிறப்பான கூட்டம் ஸஹாபாக்கள் தான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அவர்களுக்கு முன்னும் அவர்களுக்குப் பின்னும் அவர்களுக்கு சமமாக எந்தக் கூட்டமுமில்லை. இந்த இஸ்லாமிய உம்மத்தின் அனைத்துக் காலங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் கூட்டமாக அந்த ஸஹாபாக்கள் திகழ்கிறார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமானவர்கள்.
Reference : நூல் : அகீதது அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஆ பீ ஸஹாபா கிராம் - ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத் ஹபிழஹுல்லாஹ்
ஸஹாபாக்கள் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை
அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினரிடம் ஸஹாபாக்கள் பற்றிய கொள்கையும் நிலைப்பாடும் நடுநிலையானதாகும். இந்நடுநிலை தீவிரமான இரு பக்கங்களில் எதனையும் சாராத நடுநிலையாகும். இவ்விரு தீவிரமான போக்குகளில் ஒரு பக்கம் ஸஹபாக்களை அவர்களின் தரத்தை விடவும் உயர்த்தி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுத்து அவர்களின் மதிப்பதில் தீவிரப் போக்கை மேற்கொள்வது.
இது அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தின் நிலைப்பாடல்ல. அதே போன்று இன்னொரு பக்கம் அந்த ஸஹாபாக்களை மட்டந்தட்டிக் கொண்டு அவர்களைக் குறைகூறிக் கொண்டு அவர்களைத் திட்டிக் கொண்டு அவர்களின் அந்தஸ்தைக் குறைத்து விடுவது. இவ்விரு தீவிரப் போக்கிலிருந்தும் அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் தவிர்ந்திருக்கிறார்கள்.
இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையிலேயே அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் இருக்கிறார்கள். அதாவது ஸஹாபாக்களை இழிவுபடுத்துவதுமில்லை. அவர்களை அல்லாஹ்வை விடவும் அவனுடைய தூதரை விடவும் மதிப்பில் உயர்த்துவதுமில்லை. இவ்விரு போக்குகளும் தவறான போக்குகளாகும்.
அஹ்லுஸ்ஸுன்னதி வல் ஜமாஅத்தினர் ஸஹாபாக்கள் அனைவரையும் நேசிக்கிறார்கள். இன்னும் அவர்களை எந்த அந்தஸ்தில் வைப்பது நீதியானதோ அந்த அந்தஸ்தில் வைத்து விடுவார்கள். அந்த அந்தஸ்தின் எல்லை எதுவாக இருக்கிறதோ அந்த எல்லைக்கு மேல் உயர்த்தமாட்டார்கள். அதே போன்று அந்த ஸஹாபாக்களின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறவுமாட்டார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவின் நாவுகள் எப்போதுமே ஸஹாபாக்களைப் பற்றி நல்லதையே பேசுவதாக இருக்கும். அவர்களின் உள்ளங்கள் ஸஹாபாக்கள் மீதான நேசிப்பினால் நிறைந்திருக்கும்.
ஸஹாபாக்கள் மத்தியில் எந்த விஷயங்களிலெல்லாம் வேறுபாடுகள் காணப்பட்டதோ அதற்கான காரணம் அவர்களின் ஆராய்ச்சி ரீதியாக அவர்கள் எடுத்த முடிவுகளினால் ஏற்பட்டதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் ஆராய்ச்சி சரியானதாக இருந்தால் அவர்களுக்கு இரு கூலிகள் கிடைக்கும். அதன் முலம் பிறர் பயனடையும் போது அதன் மூலம் அவர்களுக்கு நன்மை சேர்ந்து கொண்டிருக்கும்.
அதே வேளை அவர்களின் ஆராய்ச்சி தவறாக அமைந்து விட்டால் அவர்களின் இஜ்திஹாதின் கூலியாக ஒரு கூலி கிடைப்பதோடு அவர்களின் தவறையும் அல்லாஹ் மன்னித்து விடுவான். அவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் தவறு செய்யாதவர்களல்ல. மனிதனென்ற ரீதியில் அவர்களிடமும் சரியானதும் தவறானதும் உள்ளன.
இருப்பினும் அவர்களின் நன்மைகள் ஏனைய மனிதர்களின் நன்மைகளை விடவும் எவ்வளவோ அதிகமாக இருக்கின்றன. அவர்களின் குறைகளும் தவறுகளும் ஏனைய மனிதர்களை விடவும் எவ்வளவோ குறைவாக இருக்கின்றன.
அது மட்டுமன்றி அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும் அல்லாஹ் அவர்களை திருப்தி கொண்டான் என்ற அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. அஹ்லுஸ்ஸுன்னாவுடைய அனைத்து நூல்களிலும் ஸஹாபாக்களைப் பற்றி நல்லவைகளே எழுதப்பட்டுள்ளன.
அல்லாஹு (سُبْحَانَهُ وَتَعَالَى) மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுத்த மனிதர்கள் அனைவரிலும் சிறந்தவரான றஸுலுல்லாஹ் (صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ) அவர்களுடைய தோழர்களாக இருப்பதற்கும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்கும் பாக்கியம் பெற்றவர்களாக அந்த ஹாபாக்கள் இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
(ஸஹாபாக்கள் பற்றிய அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கை - ஷெய்க் அப்துல் முஹ்ஸின் அல் அப்பாத்,
நூல் : அகீதது அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ பில் ஸஹாபா கிராம்)
ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?
கேள்வி :
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஸஹாபாக்கள் றஸுலுல்லாஹ்வையே முற்றிலும் பின்பற்றினார்கள். றஸுலுல்லாஹ்வைப் பின்பற்றுவதே போதுமாக இருக்கும் போது, ஸஹாபாக்களைப் பின்பற்றுமாறு உலமாக்கள் கூறுவது ஏன்?
பதில் :
இந்த வினாவில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் சொல்வதற்கு இலகுவானதாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தும் நிலையில் இல்லை.
அதாவது, நாம் "எவ்வாறு றஸுலுல்லாஹ்வை நேரடியே பின்பற்றுவது" எனக் கேட்டால், அதற்கு "ஹதீஸ் இருக்கிறதே' எனக் கூறுவார்கள். "அந்த ஹதீஸை சுமந்து வந்தவர்கள் யார்" எனக் கேட்டால் அதற்கு "ஸஹாபாக்கள்தான் அதனைச் சுமந்து வந்தார்கள்” என பதில் கூறுவார்கள்.
அவ்வாறாயின், ஒரு ஹதீஸ் அறிவிக்கும் விடயத்தை வைத்துக் கொண்டு, அந்த ஹதீஸ் எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டது என்று தெரியாமல், அந்த ஹதீஸ் அறிவிக்கும் விடயம் தொடர்பாக கூறும் ஏனைய ஹதீஸ்களை அறியாமல், எவ்வாறு ஒரு ஹதீஸின் அறிவிப்பை மட்டும் பின்பற்றுவது?
எம்மால் தேடிப் பிடிக்க முடியாத இக்கேள்விகளுக்கான பதிலை, நாம் ஸஹாபாக்களின் பால் திரும்பினால்தான் பெற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அவர்களின் நடவடிக்கைகளில்தான், றஸுலுல்லாஹ்வை பரிபூரணமாகப் பின்பற்றும் வழிமுறையை நாம் காண முடியும்.
சுன்னா என்பது ஒரு நபிமொழியைக் கூறிக் காட்டுவதல்ல. மாறாக, அந்நபிமொழி ஸஹாபாக்களின் காலத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டதோ அவ்வாறே நடைமுறைப்படுத்துவதே சுன்னாவாகும்.
இந்த அடிப்படையை அறியாத சிலர் ஸஹீஹுல் புஹாரியில் இருந்து ஒரு ஹதீஸைக் காட்டி, அதிலிருந்து சட்டத்தையும் எடுத்து இறுதியில் இதுதான் சுன்னா என்கிறார்கள். இங்கு ஹதீஸ் ஸஹீஹாகவும், தரமாகவும் இருப்பது மட்டும் போதுமானதல்ல. அந்த ஹதீஸின் விளக்கமும் தரமாகவும், சரியாகவும் இருக்க வேண்டும்.
இங்கு ஹதீஸ் அதன் ரிவாயத் ரீதியாக தரமானதாக இருந்தாலும், அந்த ஹதீஸை விளங்கியவர் தரமாகவும், பரிபூரணமாகவும் விளங்கினார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், அவரது சொந்த விளக்கத்திற்கு எவரும் உத்தரவாதம் அளிக்க முடியாது.
ஆனால் ஸஹாபாக்கள் விளங்கியிருப்பது தரமானதும், சரியானதும்தான் என்பதற்கு அல் குர்ஆன் உத்தரவாதமளிக்கிறது.
ஸஹாபாக்களைப் பற்றி அல்லா சுபஹானத்தாலா அல் குர்ஆனில் கூறுகின்றான்,
நான் அவர்களைத் திருப்தியடைந்தேன். அவர்களும் என்னை திருப்தியடைந்தார்கள். (9:100)
எனவே, நாம் ஸஹாபாக்களின் விளக்கத்தையும், அவர்கள் நடைமுறைப்படுத்தியதையும் புரிந்து கொண்டால்தான் ஹதீஸைப் பின்பற்றுவதில் தரமாக அமைய முடியும். இதனை தவிர்ந்து கொண்டு, நாம் ஹதீஸிலிருந்து நாமாக ஒரு விளக்கத்தை எடுக்கும் போது, அந்த விளக்கத்தின் அடிப்படையில் அமையும் எமது செயற்பாடுகளைச் சரியென்று கூறுவதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
இத்தவறான அணுகுமுறையினால்தான், இஸ்லாமிய உம்மத்தினுள் பித்அத்கள் உருவாகின. அதாவது ஹதீஸ்களையும், ஆயத்களையும் தாமாகவே விளங்கி அதிலிருந்து சட்டங்களை எடுப்பதன் காரணமாகவே பித்அத்கள் தோன்றுகின்றன.
ஸஹாபாக்களின் அடிச்சுவட்டுடன் விளக்கங்களை எடுக்கும் போது, புதிய விளக்கங்கள் உருவாகுவதில்லை. அத்தோடு, ஸஹாபாக்கள் அன்று செயற்பட்ட அடிப்படையில், இன்றும் எம்மால் செயற்பட முடிகிறது. ஸஹாபாக்களின் விளக்கத்தை விட்டுவிட்டால் புதியதொரு மார்க்கம் உருவாகி விடுகிறது. அப்புதிய மார்க்கமே பித்அத் எனப்படுகிறது.
எனவே ஸஹாபாக்கள் விளங்கிய பிரகாரம் நாம் மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு வழிகாட்டுவதற்கே உலமாக்கள் ஸஹாபாக்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறு கூறினார்கள்.
சத்தியம் ஸஹாபாக்களின் விளக்கத்தின் உள்ளே அடங்கியுள்ளது
குர்ஆன் சுன்னாஹ்வை ஸஹாபாக்கள் விளங்கிய அடிப்படையில் விளங்க கூடிய அந்த கூட்டம் ஏனையவர்களின் வார்த்தைகள், வழிகாட்டல்களை விடவும் ஸஹாபாக்கள், தாபியீன்களின் வார்த்தைகளுக்கும் வழிகாட்டல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பார்கள். அது கொள்கை, வணக்கவழிபாடு, அன்றாட நடவடிக்கை, குணாதிசயம், அரசியல் மற்றும் சமூக விடயங்கள் போன்ற எந்த அம்சமாக இருப்பினும் சரியே!.
மார்க்கத்தில் அடிப்படையான விஷயங்களிலும் ஏனைய விஷயங்களிலும் அல்லாஹ் அவனது தூதருக்கு அனுப்பிய வஹியின் அடிப்படையில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்கள் தூய்மையாகவும் உண்மையாகவும் உறுதியாகவும் தஃவா பாதையில் நிமிர்ந்து நிற்பார்கள். மேலும் இவர்கள் தான் நபித்துவத்தின் கல்வியை சுமப்பவர்கள்.
இதனை – நான் (பஸீரா) எனும் தெளிவோடு சுமப்பேன். அது போன்று என்னைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறுதான் இருப்பார்கள். அதாவது அல்லாஹ்வின் பால் அழைக்கும் அழைப்புப் பணியானது தெளிவோடு இருக்கும்.
அந்தத் தெளிவு என்பது என்னவென்றால் அவை அல்குர்ஆனின் ஆதாரங்களோடும் அஸ்ஸுன்னாவின் ஆதாரங்களோடும் அத்தெளிவு இருக்கும். அத்தெளிவை அந்த நபி பெற்றவராக இருப்பதுடன் அந்த நபியை அழைப்புப் பணியில் பின்பற்றுபவர்களும் தெளிவோடு இருப்பார்கள்.
அழைப்புப் பணியில் தெளிவுடன் இருப்பதன் அவசியத்தை அறிந்ததனால்தான் யாரும் ஒருவர் எந்தளவுக்குப் படித்தவராக இருந்தாலும் அவருக்கு அழைப்புப் பணி செய்யும் விஷயத்தில் உலமாக்கள் அவருக்கு அனுமதி கொடுக்காத வரை அயிம்மத்துஸ் ஸுன்னா (ஸுன்னாவுடைய இமாம்கள், உலமாக்கள் ) அவர்களை அழைப்புபணியை சுமப்பதற்கு தகுதியானவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனென்றால் அழைப்புப் பணியைச் சுமப்பவர் தெளிவைப் பெற்றவராக இருக்க வேண்டும். அது எத்தகைய தெளிவு என்றால் எத்திவைப்பதற்கு முன் கற்றுக்கொண்டதை தெளிவாக அறிந்தவராகவும், முழுமையாக விளங்கியவராகவும் இருக்க வேண்டும்.
இன்று பலர் குர்ஆனைப் படிக்கின்றார்கள் ஆயத்தின் விளக்கங்களை வாசிக்கின்றார்கள் வாசித்த பின் அதனை விளங்க முடியாத நிலைவருகின்ற போது அதனை தங்களுக்குள் மறைத்துக்கொண்டு தங்களது தேவைகேற்ப விளக்கமளிக்கின்றார்கள். இவ்வாறு விளக்கம் கொடுப்பது பஸீரா அல்ல.
மாறாக அந்த ஆயத்துடைய விளக்கங்களில் எந்தெந்த ஆயத்துக்களுக்கு என்னென்ன வரைவிலக்கனங்கள் இருக்கின்றன அதன் வரையரைகள் என்ன, அதற்கான ஸஹாபாக்களின் விளக்கங்கள் என்ன இன்னும் அதன் சட்டங்கள் என்ன என்று அனைத்தையும் அவர்கள் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
அதே போன்று இதற்கு முரணான விஷயங்களில் எப்படி குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையைக் கையாள வேண்டும் எனத்தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் எந்த ஆயத் எந்த ஆயத்துடன் சம்பந்தமானது என்பதை விளங்குவதுடன் ஒரு விஷயத்திற்கு எந்த ஆயத் தொடர்புடையுது எந்த ஆயத் அதனுடன் தொடர்பற்றது என்பதைப் புரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதேபோன்று எந்த ஹதீஸ்கள் எந்த ஹதீஸுடன் தொடர்புடையது இன்னும் எது தொடர்பற்றது என்பவற்றையெல்லாம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.
இவையனைத்தையும் எதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்? எமக்குத் தேவையான மாதிரி ஓதுவதாலும், வாசிப்பதனாலும், பெற்றுக்கொள்ள முடியுமா? ஒரு போதும் முடியாது. இவர்களுக்கு யார் இதனைக் கற்றுக்கொடுப்பது? ஆயத்துக்களின் வரையரைகள் என்னவென்றும், ஒரு ஆயத்தினை இன்னுமொரு ஆயத்துடன் எவ்வாறு சேர்த்து, பிரித்து விளங்குவதென்றும் மேலும் ஒரு ஹதீஸுடன் எந்த ஆயத்தினை அல்லது எந்த ஹதீஸினை சேர்த்து விளங்குவது என்பதையும் நபி அவர்கள் ஸஹாபாக்களுக்குக் காட்டிக் கொடுத்த வழிமுறை எவையென்பதையும் நாம் அறிந்துகொள்ளவில்லை என்றால் ஒவ்வொருவரும் அவர்களது தேவைகேற்ப ஹதீஸ்களை ஹதீஸ்களுடனும் ஆயத்துக்களுடனும் தொடர்புபடுத்தி தங்களுக்குத் தேவையான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
இந்த வழிமுறையில் வந்த கூட்டங்கள்தான் குர்ஆன் ஸுன்னாவின் பெயரில் அவரவரது தேவைக்கேற்ப வழிமுறைகளை உருவாக்கிக் கொண்டார்கள். இதனால்தான் இயக்கங்கள் வளர்ந்தன. இதனால்தான் மத்ஹபுகள், பிரிவுகள் வேறுபாடுகள் சர்ச்சைகள் போன்ற அனைத்தும் தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஏற்பட்டு இருக்கின்றன.
ஸஹாபாக்களின் காலத்தில் அவர்கள் கற்றவர்களாகவும் அதனைப் புரிந்த மார்க்க மேதைகளாக திகழ்ந்தும் அவர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருக்கவில்லை. அவர் அவர்களது தேவைக்கேற்ப அல்குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் விளக்கம் கொடுக்கவில்லை. நபித்தோழர்களிடத்தில் ஒரு ஆயத்திற்கு பலவிதமான விளக்கங்கள் இருக்கவில்லை. இதற்குக் காரணம் அவர்கள் அதன் வரையறைகளை அறிந்தவர்களாகவும் நன்கு புரிந்தவர்களாகவும் இருந்தார்கள்.
இதனால்தான் அந்த ஸஹாபாக்களின் காலத்தில் பித்அத் என்ற பேச்சிற்கே இடமிருக்கவில்லை.
அவர்கள் மத்தியில் பிரிவுகள் உருவாகவில்லை. அவர்களது கொள்கையும் மாறுபட்டதாக இருக்கவில்லை. இதனால் அந்த உம்மத்தின் மத்தியில் பிரிவுத்தன்மை தலைதூக்கவில்லை.
எப்பொழுது இஸ்லாமிய உம்மத் ஸஹாபாக்களின் வழிமுறையை ஓரம் கட்டிவிட்டார்களோ அன்றிலிருந்து குர்ஆன் விஷயத்தில் தான்தோன்றித்தனமான விளக்கங்களும், ஹதீஸ் விடயத்தில் அவரவருக்கென்று புதுப்புது விளக்கங்களும் வர ஆரம்பித்தன. அவர்களுடைய விளக்கத்திற்கு சார்பாக அவர்களுக்குத் தோன்றியது போன்று ஆயத்துக்களையும் ஹதீஸ்களையும் தொடர்புபடுத்தி கொள்வார்கள் இவ்வாறு தம் விருப்பத்திற்கேற்ப ஒன்றையொன்று சம்பந்தப்படுத்தி குர்ஆன், ஸுன்னாவின் பெயரில் ஆதாரம் என்று வாதிடுகின்றார்கள்.
இதனால்தான் இன்று அழைப்புப்பணியில் பல பிரிவுகள், இயக்கங்கள், கூட்டங்கள், மத்ஹபுகள், சர்ச்சைகள் என்று ஆகிவிட்டது. நிச்சயமாக குர்ஆன் ஆயத்துக்களினாலும் ஹதீஸ்களினாலும் இவ்வாறு பிரிவுகள் உருவாகுமென்றிருந்தால் அது முதலில் ஸஹாபாக்கள் மத்தியில் தான் உருவாகியிருக்க வேண்டும்.
ஏனென்றால் அவர்களைவிட மார்க்கத்தை தெளிவாக விளங்கிய கூட்டம் யாருமே கிடையாது. ஆயத்துக்களின் வரையரைகளையும் அதன் ஆழமான கருத்துக்களையும் அவர்களைவிடவும் விளங்கியவர்கள் எவருமில்லை. அந்தளவிற்கு விளங்கிய அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்ததன் காரணம் அவர்கள் அதற்கான வரையரைகளை சரிவரப் புரிந்து பேணிவந்தமையே ஆகும்.
அதனுடைய விளக்கங்களை சரியாக விளங்கிய காரணத்தினால் அவர்களுடைய கொள்கை ஒன்றாக இருந்தது. அவர்களுடைய வணக்கவழிபாடுகள் ஒன்றாக இருந்தது. அனைத்து அம்சங்களும் ஒன்றாகவே இருந்தன. அனைத்து விஷயங்களும் ஒரு அடிப்படையில் அமைந்த காரணத்தினால் அந்த மக்கள் வேறுபடவில்லை.
இமாம் அல் அவ்ஸாயி رحمه الله ( இறப்பு 157ஹிஜ்ரி):
முன்னோர்களின் அறிவித்தல்களை பற்றிக்கொள், மக்கள் உன்னை புறக்கணித்தாலும் சரியே !, மக்களின் அபிப்பிராயங்களில் கவனமாக இரு, அது அவர்களின் வார்த்தைகளால் எவ்வளவு அழகாக இருந்தாலும் சரியே. (கிதாபுல் ஷரியா இமாம் ஆஜூரி )
ஸஹாபா விளக்கமும், சுய விளக்கமும்
ஸலபி தஃவாவின் அழைப்பாளா்கள், எந்த காலத்திலும் அல் குர்ஆன் மற்றும் அஸ் சுன்னாவின் விளக்கத்தைப் பேசும் பொழுது, ஸஹாபாக்கள் கூறிய விளக்கத்தைத் தவிர வேறு எந்த விளக்கத்தையும் முன்வைக்கமாட்டார்கள்.
ஸலபி தஃவாவில் முன்வைக்கப்படுகின்ற விளக்கங்களின் அஸ்திவாரம் ஸஹாபாக்களின் விளக்கமாகும்.
எந்த காலமாக இருந்தாலும், இந்த அஸ்திவாரத்தின் மீது மேற்கொள்ளப்படுகின்ற தஃவாவில், ஏழு வானத்தில் மேல் இருந்து இறக்கப்பட்ட அல்குர்ஆனும், அஸ்சுன்னாவும் எவ்வித மாற்றமும் இல்லாமல் தூய்மையான வடிவில் எத்திவைக்கப்படுகின்றது. மேலும், இத்தஃவாவில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் மார்க்கம் எத்தகைய மதிப்போடு அமைந்திருந்ததோ அதே மதிப்போடுதான் அனைத்துக் காலங்களிலும் அமைந்திருக்கும்.
இவ்வாறு அனைத்துக் காலங்களிலும் அல்லாஹ் இறக்கிய மார்க்கத்தை இந்த பூமியில் மதிப்போடு முன்வைக்கும் தஃவாவாக ஸலபி தஃவா அமைந்திருக்கிறது.
ஸலபி தஃவா என்பது
அல்குர்ஆன் மற்றும் அஸ்சுன்னா பற்றிய கல்வி,
அக்கல்வியைக் கொண்டு அமல் செய்தல்,
அத்தஸ்பிய்யா - التصفية (அதாவது, சரியான கொள்கையைக் கற்றுக் கொடுத்து தவறான கொள்கையைக் களைதல்),
அத்தர்பிய்யா – التربية (பயிற்றுவித்தல்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
சுருங்கக் கூறினால், அல்குர்ஆன் மற்றும் அஸ்சுன்னாவின் பரிபூரணமான விளக்கத்தைச் சுமந்த தஃவாவே ஸலபி தஃவாவாகும்.
ஸலபி தஃவாவில் அல்குர்ஆனின் எந்த ஒரு வசனத்திற்கும் தனிவழியில் விளக்கம் கொடுக்கப்படுவது இல்லை. இதே போன்று, நபிமொழிகளின் விளக்கத்திலும் தனி விளக்கங்கள் கையாளப்படுவதில்லை. அல்குர்ஆனில் அல்லது நபிமொழிகளில் தனி விளக்கங்கள் கையாளப்படுகின்ற போது அது ஸலபி தஃவாவை விட்டும் வெளியேற்றப்படும். இதனால் இந்த தஃவா ஒரு தனி மனிதனின் தஃவா அல்லது ஒரு கூட்டத்தின் தஃவா என்றுதான் அழைக்கப்படும்.
வரலாற்றில் ஸலபி தஃவாவை விட்டும் வெளியேற்றப்பட்டவர்களுக்கு உலமாக்கள் பொருத்தமான பட்டத்தைக் கொடுத்தனா். இவ்வாறாக, அனைத்து வழிகேடான தஃவாவையும் ஸலபி தஃவாவை விட்டு பிரித்துக் காட்டினார்கள். இதனால் வழிகேடான தஃவா அனைத்தும் அதற்குரிய பெயர்களோடு அடையாளம் காணப்பட்டன. இதன் காரணமாகவே அனைத்துக் வழிகேடான கூட்டங்களின் தஃவத்தும் முஃதஸிலி, அஷ்அரி, ஜஹ்மி, முர்ஜிஈ, கதரி, ஜபரி போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டன.
இவ்வாறு அழைக்கப்படுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கிறது. அதாவது, அல்லாஹு தஆலா அவனது வேதத்தில் கூறியிருக்கும் விடயங்களும், அல்லாஹ்வின் தூதரின் நபிமொழிகள் இறக்கப்பட்ட காரணமும், அதன் வார்த்தைகளுக்குரிய விளக்கங்களும் அனைத்துக் காலங்களிலும் எவ்வித மாற்றத்துக்கும் உள்ளாகாமல் ஒரே நிலையில் இருக்க வேண்டும். அவ்வாறு மாற்றங்கள் ஏற்படாமல் இருக்க அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் விளக்கங்கள் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அனைத்துக் காலங்களிலும் விளங்கப்பட வேண்டும்.
காலத்துக்குக் காலம் விளக்கங்கள் மாற்றமடையக் கூடாது. அவ்வாறான மாற்றங்கள் தனி விளக்கம் கொடுப்பவர்களினால்தான் செய்யப்படுகின்றன. எனவேதான் வழிகேடுகளையும், அவ்வழிகேடுகளினால் உருவான வழிகெட்ட விளக்கங்களையும் இஸ்லாமிய உம்மத்துக்கு அடையாளம் காட்டிக் கொடுப்பது காலம் காலமாக உலமாக்களின் பாரிய பொறுப்பாக இருந்து வருகிறது. இப்பொறுப்பை உலமாக்கள் அனைத்துக் காலங்களிலும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்கள்.
அல்குர்ஆன் வசனங்களுக்கு தனி விளக்கங்கள் கொடுப்பதனால், இஸ்லாமிய உம்மத்தில் ஏற்படுகின்ற விளைவுகளுக்குப் பொருத்தமானதொரு உதாரணத்தை இங்கு பார்ப்போம்
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்,
وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ
உறுதியான நிலையை அடையும் வரை உமது இரட்சகனை வணங்குவீராக. (ஹிஜ்ர் - 15:99)
மேற்கூறிய அல்குர்ஆன் வசனத்தில் ' உறுதி ' என்பதற்கு الْيَقِينُ ( யகீன்) என்ற அறபி வாசகம் கையாளப்பட்டுள்ளது. இங்கு கூறப்பட்ட யகீன் என்ற வார்த்தைக்கு சூபிகள் ஒரு புது விளக்கத்தைக் கூறினார்கள். அதாவது, அல்லாஹ் அவனது அடியார்கள் உறுதி அடையும் வரை அவனை வணங்குமாறு கூறுவதால், யார் தன்னில் உறுதித் தன்மை ஏற்பட்டு விட்டதாக உணர்கிறாரோ, அவர் அதற்குப் பின்னால் இரட்சகனை வணங்க வேண்டிய தேவையில்லை என்று விளக்கம் கூறினார்கள். இவ்வாறு சூபிகள், அல்லாஹ்வை வணங்குவதை ஒரு குறிப்பிட்ட காலத்தோடு நிறுத்திக் கொள்வார்கள்.
ஆனால் மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் வசனத்திற்கு, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மாணவரான முஜாஹித் இப்னு ஜிப்ரி அல் மக்கி (றஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு விளக்கம் கூறுகிறார்கள்.
مُجَاهِدًا يَقُول : { حَتَّى يَأْتِيك الْيَقِين } قَالَ : الْمَوْت
'யகீன் என்பது மரணத்தைக் குறிக்கிறது'
எனவே, 'மரணம் வரும் வரை உன் இரட்சகனை வணங்குவீராக' என அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக ஒரு மனிதனின் நிலையைப் பொருத்த வரை, அவனுக்கு மரணம் வந்தடைந்ததன பின்புதான், தனது சரியான நிலையை அவன் உறுதியாக அறிந்து கொள்கிறான். அவன் வாழும் வாழ்க்கை ஒரு சக்கரம் போன்று சுழன்று கொண்டிருக்கிறது. எவ்வாறு இரவும் பகலும் வருகிறதோ அதே போன்றுதான்.
மனிதன் உலகில் வாழ்ந்து செயல்பட்டதற்கு ஏற்றவாறு, மறுமை நாளில் அவனுக்கு அதற்கான கூலி வழங்கப்படுகிறது. கூலி வழங்கப்படும் அந்நாளில்தான் மனிதன் தன் நிலையை உறுதியாக அறிகிறான். அந்த யகீன் (உறுதி), அவனது மரணம் அவனை வந்தடைந்த பின்புதான் அவனுக்குக் காட்டப்படுகிறது.
சூபிகள் தங்களுக்கு யகீன் வந்துவிட்டது எனக் கூறி, குறிப்பிட்ட காலத்துடன் அல்லாஹ்விற்கு வணக்கம் செய்வதை நிறுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால், மனிதர்களில் சிறந்தவரும், அல்லாஹ்வின் மிகச் சிறந்த அடியாருமாகிய அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை விடவும் யார்தான் சிறப்பாக அல்லாஹ்வை வணங்குபவராக இருக்க முடியும். அத்தகையதொரு தரமான நிலையில் அல்லாஹ்வுக்கு வணக்கம் செய்த பின்னாலும், அன்னாரின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதை நாம் ஹதீஸ்களின் மூலம் அறிகிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவில் நீண்ட நேரம் நின்று கால்கள் வீங்கும் அளவுக்கு வணங்குவதைக் கண்ட ஆயிஷா (றழியல்லாஹு அன்ஹா), அல்லாஹ்வின் தூதரிடம் 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையில் இருந்தும் இவ்வாறு நீங்கள் சிரமப்பட்டு வணங்குகிறீர்களே? எனக் கூறிய போது,
'நான் அல்லாஹ்வுக்கு ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?'
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். இதுவே அல்லாஹ்வின் தூதரின் நிலையாக இருந்தது. இத்தகையதொரு தன்மையில் இருந்த அல்லாஹ்வின் தூதரே, தான் உறுதியடைந்து விட்டதாகக் கூறி வணங்குவதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் சூபிகள், ஒரு குர்ஆன் வசனத்துக்கு தனி விளக்கத்தைக் கொடுத்து நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காட்டிய வழிமுறைக்கு முரணான ஒரு வழிமுறையை உருவாக்கி விட்டார்கள்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பாதையைத் தவிர்ந்து கொண்டவர்கள் நிச்சயமாக ஷைத்தானின் பாதையில்தான் செல்கிறார்கள். இவர்கள்தான் ஷைத்தானின் தோழர்களாவர்.
இதன் அடிப்டையில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா்கள் காட்டித் தராத ஒரு வணக்கம், பெயரளவில் வணக்கமாக இருந்தாலும் அது இஸ்லாம் காட்டிய வணக்கமாக மாட்டாது. இந்த உதாரணம், அல் குர்ஆனின் ஒரு வசனத்திற்கு தனி வழியில் விளக்கம் கொடுத்ததனால் வணக்கத்தில் அது ஏற்படுத்திய பாதிப்பை எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
நேர்வழியைத் தவிர்ந்த ஏனைய பாதைகளில் ஷைத்தான் அழைப்பாளனாக இருக்கிறான். அங்கே ஷைத்தான் அழைப்பாளனாக இருப்பதனால், அவன் அப்பாதையில் செல்பவர்களை மார்க்கத்தைப் பின்பற்றும் வழிமுறையை விட்டும் தூரமாக்கி விடுவான். அத்தோடு அவர்கள் செல்ல வேண்டிய பாதையையும் மாற்றி விடுகிறான். இதன் விளைவாக மனிதன் நேர்வழியை இழந்து விடுகிறான்.
உம்மத்தின் பிரிவுக்குக் காரணம் ஸஹாபாக்களின் பாதையைத் தவிர்ந்து கொண்டதும் விளக்கத்தில் எல்லை மீறுவதுமாகும்
இஸ்லாத்தின் அடிப்படை ரீதியாக அணுகும்போது ஸிராதுல் முஸ்தகீம் என்ற நேரான பாதையைத் தவிர்ந்து இன்னுமொரு பாதையினை தங்களின் பாதையாக எடுத்துக் கொண்ட பிரிவுகளை வழிகேடான பிரிவுகள் என்று நாம் பிரித்துக் காட்டுகிறோம்.
ஸிராதுல் முஸ்தகீம் என்பது அல்லாஹ்வின் (ﷺ) அவர்களும் அன்னாரின் பயிற்சிப் பாசறையில் வளர்ந்த ஸஹாபாக்களும் பின்பற்றிய பாதையாகும். இதற்கு மாறான பாதைகளை யாரெல்லாம் உருவாக்கினார்களோ அவர்கள் அனைவரினதும் பாதை வழிகேடான பிரிவுகளில் உள்ளடக்கப்படுகின்றன.
நாம் பின்வரும் சில முக்கிய வினாக்களுக்கு விடை காணும்பொழுது பிரிவுகளின் உண்மையான நிலையை தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.
• இஸ்லாமிய வரலாற்றில் பிரிவுகள் எவ்வாறு தோற்றம் பெற்றன?
• அதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன?
• இப் பிரிவுகள் தோற்றம் பெற்றது நேர்வழி பெற்றவர்களின் மூலமாகவா? அல்லது வழிகேடர்களின் மூலமாகவா ?
• நபி (ﷺ) அவர்களின் சிறப்பு மிக்க மாணவர்களும் பூமியில் குர்ஆனையும் சுன்னாவையும் மிகச் சிறப்பாக விளங்கியவர்களுமான ஸஹாபாக்களின் மத்தியில் பிரிவுகள் காணப்பட்டதா?
• முஸ்லிம் சமூகம் தங்கள் மத்தியில் எந்த விஷயத்தில் முரண்பட்டுப் போனதால் பிரிவுகள் தோன்றின?
• இவர்கள் பிரிந்து போனது தங்களின் சொந்தப் பிரச்சினையின் காரணமாகவா அல்லது இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றம் செய்ததன் காரணமாகவா?
இவ்வாறான கேள்விகளுக்கு நாம் சரியான விடையைக் அறிந்து கொள்வோமேயானால் பிரிவுகள் என்றால் என்ன? ஏன், எவ்வாறு அவை தோற்றம் பெற்றன என்பதைப் பற்றித் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அன்று ஸஹாபாக்கள் சென்ற பாதை என்னவென்று நாம் அறிந்து கொண்டால் வரலாற்றில் எந்த இடத்தில் பிரிவுகள் முளைக்கத் தொடங்கியது என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
எனது உம்மத் 73 கூட்டமாகப் பிரியும் என்று நபி (ﷺ) அவர்கள் முன்னறிவிக்கின்ற ஹதீஸினை உலமாக்கள் ஹதீஸ் "இஃப்திராகுல் உம்மா|(உம்மத்தின் பிரிவினைப் பற்றி அறிவிக்கும் ஹதீஸ்) என்று அழைக்கின்றனர். இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறிய ستفترق என்றால் 'பிரியும்' என்பதாகும்.
இவ்வார்த்தையில் எதிர்காலத்தின் பொருள்படக் கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதருடைய இவ்வார்த்தையின் அடிப்படையில் பிற்காலத்தில்தான் இந்த உம்மத் பிரியும் என்பதை நாம் புரிய முடியும்.
அதாவது, நபியும் ஸஹாபாக்களும் இருந்த அன்றைய காலத்தில் இந்த உம்மத்தில் பிரிவுகள் எதுவும் இருக்கவில்லை. இதனை உறுதிப்படுத்தும் முகமாக மற்றுமொரு இடத்தில் நபி (ﷺ) அவர்கள் கூறுகிறார்கள்:
لَاتَجْتَمِعُ أُمَّتِي عَلَى ضَلَالَةٍ.
'எனது உம்மத் வழிகேட்டில் ஒன்று சேரமாட்டாது.' (சுனன் திர்மிதி)
மேற்கூறப்பட்ட நபி மொழியின் அடிப்படையில், வழிகேடொன்று இந்த உம்மதினுள்ளே நுழையும் போது இந்த உம்மத் அந்த வழிகேட்டுடன் ஒன்று சேராது. அதனை விட்டும் ஒதுங்கி செல்லும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளமுடியும்.
அதாவது, ரஸுலுல்லாஹ் உருவாக்கிய உம்மத் வழிகேடொன்று வந்தால் அதனோடு சேர்ந்து செல்லாமல் அதனை விட்டும் ஒதுங்கி விடும். எனவே வழிகேடுகள் வருகின்ற போதுதான் பிரிவுகள் தோன்றுகின்றன என்ற உண்மையை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். எனவேதான் ஸஹாபாக்கள் மத்தியில் வழிகேடுகள், பிரிவுகள் தோன்றவில்லை. எவர்களெல்லாம் ஸஹாபாக்களின் பாதைக்கு முரணான பாதையைத் தங்களின் பாதைகளாக எடுத்துக் கொண்டார்களோ அத்தகையோர் மத்தியில் பிரிவுகள் தோன்றுவது உறுதியாகும்.
நிச்சயமாக ஸஹாபாக்களின் பாதையை விட்டும் விலகிப் போவதுதான் வழிகேடான பாதையை உருவாக்குவதற்கான அடிப்படையாகும் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளுங்கள். இதன் அடிப்படையை நபி (ﷺ) அவர்கள் தெட்டத் தெளிவாகக் காட்டித் தந்து விட்டார்கள். நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்
قَالَ رَسُوْلُ الله صلى الله عليه وسلم كُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٍ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ وَكُلُّ ضَلاَلَةٍ فِي النَّارِ
"எல்லா புதிய விஷயங்களும் பித்அத்கள், எல்லா பித்அத்களும் வழிகேடு, எல்லா வழிகேடும் நரகத்தில்".
எனவே, மார்க்கத்தினுள் புதிதாக நுழைகின்றவைகளே பித்அத்களாகும். மாறாக ஏற்கனவே மார்க்கத்தில் இருந்தவை பித்அத்களல்ல. புதிதாகத் தோன்றுகின்ற பித்அத்கள்தான் வழிகேடுகளாகும். அந்த வழிகேடுகள்தான் நரகம் கொண்டு போய்ச் சேர்க்கும். நபி (ﷺ) அவர்கள் கூறியதாக ஆயிஷா (رضی اللہ عنھا) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ٌقَالَ رَسُوْلُ الله صلى الله عليه وسلم مَنْ أَحْدَثَ في أمْرِنَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ
"யார் எங்களது காரியத்தில் அதில் இல்லாத ஒன்றை சேர்த்து விட்டாரோ அது நிராகரிக்கப்படும்".
அதாவது யார் மார்க்கத்தில் இல்லாததை புதிதாக ஏற்படுத்தி விடுகிறார்களோ அவ்விஷயங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும். எனவே மார்க்கத்தில் உள்ள விஷயங்கள் உண்மையானதும் தூய்மையானதும் பின்பற்றப் படுவதற்குத் தகுதியானதுமாகும்.
இதனடிப்படையில் நாம் விளங்குகின்ற போது பல உண்மைகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
நிச்சயமாக ஸஹாபாக்களின் காலத்தில் இவ்வாறான வழி கேடுகள் இருக்கவில்லை. அவர்கள் மத்தியில் பிரிவினை இருக்கவில்லை. கல்வியின் அடிப்படையில் நாம் பார்க்கின்ற போது இந்த மார்க்கத்தில் எப்போது புதிய விஷயங்கள் புகுத்தப்பட்டதோ அப்போதுதான் வழிகேடுகள் உருவாக ஆரம்பித்தன.
புதிதாக வந்தவைகள் வழிகேடுகள் உருவாக வழிவகுத்ததென்றால் நிச்சயமாக அவை பழையவற்றுக்கு முரணாக வந்திருக்க வேண்டும். பழையவை என்பது அன்று ரஸுலுல்லாஹ் (ﷺ) அவர்கள் காட்டிக் கொடுத்த வழிமுறையாகும்.
ரஸுலுல்லாஹ் (ﷺ) அவர்கள் எவற்றையெல்லாம் அவர்களுடைய சொல்லாலும் செயலாலும் அங்கீகாரத்தார்களோ, அதனை ஒரு வாழ்க்கை முறையாக உருவாக்கித் தந்தார்களோ அதுவே அவ்வழிமுறையாகும். தனது தூதரைப் பற்றி அல்லாஹ் அல் குர்ஆனில் கூறும் போது
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا
(நம்முடைய) தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். ( அல் குர்ஆன் - 59:07 )
மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
(உங்களில்) அல்வாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து அல்லாஹ்வையும் அதிகமாக நினைவு கூர்பவராக இருப்பவருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல் குர்ஆன் - 33:21)
மேற்கூறப்பட்ட அல் குர்ஆன் வசனங்கள், சிறப்பான முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது என்பதை நமக்கு கூறுகின்றன. அத்தூதரின் முன்மாதிரியில்தான் மார்க்கம் நமக்கு பூரணமாகக் கிடைக்கிறது. நமது கெட்டித்தனத்தினாலும் நமது ஆராய்ச்சியினாலும் ஒருபோதும் இந்த மார்க்கம் நமக்குப் பூரணமாகக் கிடைக்காது. அத்தூதரின் முன்மாதிரிக்கு முரணாகச் செயற்படுவதன் மூலமே பிரிவினைகள் தோன்றுகின்றன.
உண்மை இவ்வாறிருக்க இன்று நாம் நபிமொழிகளைப் பெற்றுக் கொண்டு அதனைக் கொண்டு நபிவழியின் பாதையைப் பின்பற்றாமல் நபிமொழிகளால் தனி வழியை உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறோம். நபிமொழிகளுக்கு நமது கருத்தையும் விளக்கத்தையும் கொடுக்கிறோம். ஆனால் சரியான விளக்கமென்பது நபிமொழியினை நபிவழியில் விளங்குவதன் மூலமே அடைய முடியும்.
இன்று நபியின் வார்த்தையைக் கூறிக் கொண்டே நபி வாழாத ஒரு வாழ்க்கையை நபியின் பெயரால் ஆதாரம் கூறுகின்ற சில கூட்டங்கள் எழுந்து விட்டன. இன்று நபி ( ﷺ ) வாழ்ந்திருந்தால் அவர்களும் காற்சட்டை (ட்ரவுசர்) தான் அணிந்திருப்பார்கள் என்று நபியை தங்களின் கணிப்பில் பார்க்கின்றவர்களும் இருக்கின்றார்கள்.
இவ்வாறு கூறக்கூடியவர்கள் நிச்சயமாக சமூகத்தின் போக்குடன் சாய்ந்து செல்பவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எந்த ஆடையை அஇம்மதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் இமாம்கள்) ஹராமான ஆடையென்று கூறியிருக்கின்றார்களோ அந்த ஆடையை இந்தக் கூட்டங்கள் ரஸுலுல்லாஹ்வின் ஆடையென்று கூறிவிட்டார்கள். இவர்களைப் பொருத்த வரை நபிமொழிகளின் விளக்கங்கள் என்பது இவர்களின் வெறும் கணிப்புகள் மட்டுமே!
இவர்களின் இந்த வழிமுறையில் ஒருபோதும் நபிமொழிகளின் விளக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு விளக்கம் கொடுப்பது விளக்கம் கொடுப்பதில் வரம்பு மீறுதல் அல்லது எல்லை மீறுதலாகும்.
ஒரு நபிமொழி இந்த உம்மத்தின் முதல் காலத்தில் எந்த விளக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்பட்டதோ அதே விளக்கத்தில்தான் இன்று நாமும் நடைமுறை செய்ய வேண்டும். எதன் காரணமாக அந்த ஹதீஸ் கூறப்பட்டதோ அதே காரணத்தையே நாமும் அதற்குக் கூற வேண்டும்.
மேலும், அந்த ஹதீஸ் மூலம் அன்று எந்த சட்டம் எடுக்கப்பட்டதோ அதே சட்டத்தையே நாமும் எடுக்க வேண்டும். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. அதாவது, ஒரு ஹதீஸிற்கு அன்று இருந்த சட்டம் ஒன்றாக இருக்க இன்று அதற்கு வேறொரு சட்டத்தை அமைத்து விட்டார்கள். நிச்சயமாக இது கவலைக்குரிய விஷயமாகும்.
ஒரு உதாரணத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.
இப்னு உமர் (رضي الله عنه) அவர்கள் தனது தாடியை ஒரு பிடிக்குக் கீழ் வெட்டியதாக ஸஹீஹான அறிவிப்புகள் வந்துள்ளன. இந்த அறிவிப்பை வைத்து சிலர் வாதாடுவது என்னவென்றால், அந்த ஸஹாபிக்கே தாடியை வெட்ட முடியுமென்றால் நாமும் விரும்பியவாறு நமது தாடியை வெட்டிக் கொள்ளலாம் என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். இப்னு உமர் (رضي الله عنه) தொடர்பான அறிவிப்பு என்ன அடிப்படையைச் சுமந்துள்ளது என்று கவனிக்காமல் அவ்வறிவிப்புக்கு தங்களின் தனி வழியிலான விளக்கத்தை இவர்கள் கொடுத்து விட்டார்கள்.
இதனைக் கல்வியின் அடிப்படையில் கூறுவதாயின் இது விளக்கம் கொடுப்பதில் வரம்பு மீறுதலாகும்.
இவர்கள் ஒரு ஸஹாபியின் செயலை அறிந்ததன் பின்னால் அந்த ஸஹாபியைப் பின்பற்றாமல் தங்களுடைய செயலுக்கு அந்த ஸஹாபியின் செயலை ஆதாரமாக எடுத்துக் கொண்டார்கள்.
இவர்கள் கூறுவது ஒரு புறமிருக்க, இப்னு உமர் (رضي الله عنه) அவர்களின் அறிவிப்பு தொடர்பாக அஇம்மதுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் இமாம்கள்) நமக்கு விளக்கமளித்திருக்கின்றார்கள். அதனைச் சுருக்கமாகச் சொல்வதாயின், இப்னு உமர்( رضي الله عنه) அவர்கள் தொடர்பான அறிவிப்பு தாடியை ஒரு பிடிக்குப் கீழ் வெட்ட வேண்டும் என்பதற்கு ஆதாரமே தவிர நாம் நினைத்தவாறு வெட்டிக் கொள்வதற்கு அது ஆதாரமல்ல.
அவ்வாறு தங்களின் தவறான செயலுக்கு ஒரு ஸஹாபியின் செயலை ஆதாரமாகக் காட்டுபவர்கள் தங்களையும் அந்த ஸஹாபியையும் சமமாகக் கருதிவிட்டார்கள்.
அந்த ஸஹாபி தனது தாடியை அவ்வாறு வெட்டியதற்கான காரணத்தையும் அதில் அமைந்துள்ள அடிப்படைகளையும் புரியாமல் ஒரு அறிவிப்புக்கு தங்களின் தனிவழியில் விளக்கத்தைக் கொடுத்து விட்டார்கள். அதன் மூலம் விளக்கம் கொடுப்பதில் எல்லை மீறி விட்டார்கள்.
சத்தியவாதியை அடையாளம் காணுவதும் சத்தியம் அடையாளம் காணுவதும்
பல நூற்றாண்டு காலங்களுக்கும் வரலாறுகளுக்கும் பின் பிறந்திருக்கும் மக்கள், எப்படி சத்தியத்தை விளங்கி பின்பற்றுவது என்பதை அறியாமல் , அசத்தியங்களையும், வழிகேடுகளையும், கெட்ட விஷயங்களையும் சத்தியம் என்று கருதி, நினைத்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும், தான் சத்தியம் என்று கருதியதன் பக்கம் மற்றவர்களையும் அழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். மேலும் தான் இருப்பது சத்திய பாதை என்பதை நிரூபிக்க , ஏனைய கொள்கை கோட்பாடுகளை தனது புத்தியினால், தர்க்கத்தினால், குதர்க்கங்களினால் , விவாதங்களினால் சவால் விட்டு , இன்னும் பேச்சுத் திறனால் , தனது புத்தியால் பிழை என நிரூபிக்க முயலுகின்றனர்.
இவ்வாறு மனித சமுதாயம் , தனிப்பாதைகளை தானாகவே அமைத்து சத்தியத்தை தேடவும், நிரூபிக்கவும் முற்பட்டு விட்டனர். இதே வழிமுறையை முஸ்லிம் சமுதாயமும் , அல்குர் ஆனையும் , சுன்னாவையும் கையில் வைத்துக் கொண்டு பிரயோகித்து தடுமாறுகிறார்கள்.
இந்த வழிமுறையில் சிக்கி இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து கூறு போட்டு விட்டார்கள் . தனது புத்தியால், தர்க்கத்தால், விவாதத்தால், தான் சரியென்று கருதி பெற்றுக் கொண்டதை, அல்குர் ஆன், சுன்னாவின் கொள்கையென்று கூறி , அதுதான் சத்தியமான பாதை, நேரானா பதை என்று எண்ணி சந்தோஷமும் கொள்கின்றனர். இது உண்மையில் , இந்த உம்மத்தின் ஒரு பரிதாபமான நிலையாகும்.
ஏனெனில், அல்லாஹ் (سبحان و تعالىٰ), நேரான பாதையை, சத்தியமான மார்க்கத்தை இறக்கி, அதனை அடையாளம் காட்டாமல் , அதனை அடையாளம் காணும் முறையை சொல்லி தராமல் விட்டு விடவில்லை.
மாறாக, அதற்கு இஸ்லாம் மிக இலகுவான வழிமுறையை கற்று தந்தது மட்டுமின்றி அந்த வழிமுறையை எடுத்து நடக்கும் படி கட்டளை இடுகின்றது, இன்னும் பிரார்த்திக்கவும் சொல்லுகின்றது.
பல வரலாற்றிற்கு பின்னர் பிறந்திருக்கும் நாம் , நமக்கு முன் சத்தியவாதிகள் வாழ்ந்தார்களா ? , அல்லது நாம்தான் சத்தியத்தினை அடையாளம் கண்ட முதலாவது மனிதனா ? என்று தேடிப்பார்க்க வேண்டும்.
தனக்கு முன்சென்ற சத்தியவாதிகளை அடையாளம் கண்டால் சத்தியவாதியின் பாதையினை அறிந்து கொள்ள முடியும். எனவே, முதலில் சத்தியத்தை சுமந்த சத்தியவாதியை அடையாளம் காண வேண்டும். இதற்காகவே
“ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ”
“நேர்வழியினை எனக்கு காட்டித்தருவாயாக” (அல்குர்ஆன் 1:5 )
என்ற துஆவை அல்லாஹ் நமக்கு கற்றுத் தந்திருக்கின்றான். எவ்வாறென்றால்
“ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ” –
“எவர்களுக்கு நேரான பாதை அருளாகக் கொடுக்கப்பட்டதோ அப்பாதையை எனக்கு காட்டுவாயாக”( அல்குர்ஆன் 1:6 )
என்று “ சத்தியவாதியையே ” அல்லாஹ் குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.
எனவே, சத்தியவாதியினை அடையாளம் காணாமல் சத்தியத்தினை அடையாளம் காண முடியாது மேலும் அதனை அடையவும் முடியாது.
இதனையே ரசூல் (ﷺ) அவர்கள் எனது உம்மத் 73 கூட்டமாக பிரியும் அதில் 72 கூட்டமும் வழிகேடு ஒன்று மட்டும் சுவர்க்கம் செல்லும் என்று சுவர்க்கம் நுழையும் நேரான பாதை என்பதை , அந்தப் பாதையில் உள்ளவர்களை அடையாளம் காட்டியே அப்பாதையினை அடையாளம் காட்டினார்கள் .
“ ما أنا عليه وأصحابي”
“எந்தப்பாதையில் நானும் எனது தோழர்களும் இருக்கின்றோமோ, என்று அந்தப்பாதையில் எவர் இருப்பாரோ அவரே சத்தியவாதியாவார்”.
என்றார்கள். இதில் சத்தியவாதியியை கொண்டே சத்தியபாதை அடையாளம் காட்டி, சத்தியத்தினையும் அசத்தியத்தினையும் இனம் காண்பதற்கு முன்னர் சத்தியவாதி யார் என்பதை குறிப்பிடுகின்றார்கள்.
அல்லாஹ் (سبحان و تعالىٰ) “சூரத்துல் அன்ஆம் 6 :153 .” ல் கூறியுள்ளான்:
“ وَأَنَّ هَٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ ”–
“இது என்னுடைய நேரான பாதையாகும். இப்பாதையினைப் பின்பற்று, ஏனைய பாதைகளைப் பின்பற்ற வேண்டாம்”.
“இங்கும் என்னுடைய நேரான பாதை” என்று சத்தியவாதியான நபியைக் கொண்டே இனம் காட்டப்பட்டுள்ளது. எனவே, சத்தியவாதிகளைப் அறிந்தாலே சத்தியத்தின் பாதையினை அறிந்து கொள்ள முடியும்.
சத்தியவாதி என்று எவருமே இல்லை. என்றாலும், நான் சத்தியத்தினை புரிந்து கொள்வேன் என்று தம்பட்டம் அடிப்பவர், சத்தியத்தை அடைய மாட்டார். அது ஷைய்த்தானின் ஓர் தந்திரமே ஆகும்.
ஏனென்றால்,. “ இவர் சத்தியவாதி ” என்று குறிப்பிட்டு அடையாளம் காட்டினால், அவர் செல்லும் பாதை சத்தியமாகி, உண்மையான சத்தியமான பாதை அசத்தியமான பாதையாகவும் ஆகிவிடும். இவ்வாறு சத்தியபாதையில் செல்லாமல் தடுப்பதே ஷெய்த்தானின் முதன்மையான குறிக்கோளாகும். அப்போதுதான் தனது தேவைக்கேற்ப அசத்தியத்தை சத்தியமாக மக்களிடத்தில் உருவாக்க முடியும்.
இதனாலேயே, சத்தியத்தை அடையாளம் காட்ட அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் சத்தியவாதியினை முதன்மையாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது .
“ لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ”
“எவர் அல்லாஹ்வையும் மறுமையையும் நாடுகின்றாரோ அவருக்கு , நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான ஓர் முன்மாதிரி உள்ளது”. (அல்குர்ஆன் 33:21)
நாம் முன்மாதிரியாக எடுப்பதற்கு சிறப்பான ஓர் நபியினை அல்லாஹ் அனுப்பியுள்ளான். மேலும் இந்த ஆயத்தில் அந்நபியை சத்தியவாதி என்று நிரூபித்து , அந்நபியின் வழி செல், அப்போதே நீ சத்தியத்தினை அடைந்து கொள்வாய் என்று அல்லாஹ் வழிகாட்டியுள்ளானே தவிர, சத்தியத்தை மட்டும் இறக்கி அதனை நீ பெற்றுக் கொள் , நீ விருப்பியவாறு பின்பற்று என்று கூறவில்லை.
அல்குர்ஆனை இறக்கி அதற்கு விளக்கம் அளிப்பதற்கு ஓர் நபியினையும் அனுப்பியுள்ளான். அந்நபியின் செயற்பாடுகளை முன்மாதிரியாக அமைத்து, அவரோடு ஒரு சமூகத்தினையும் உருவாக்கியுள்ளான். அந்த சமூகம் நேரான பாதையை கொண்ட சத்தியமான சமூகம். மேலும் அதனையே பின் தொடர்ந்து செல் என்றும் அடையாளம் காட்டியுள்ளான் .
எனவே, சத்தியபாதையினை அடையாளம் காண்பது , அடையாளம் காண்பது மூலமே சாத்தியமாகும். சத்தியவாதியை ஏற்றுக் கொண்டால், அவர்களுடைய கொள்கையினையும் வழிமுறையினையும் மேலும் அவர்களுடைய பாதையினையும் ஏற்றுக் கொள்வது இலகுவானதாகும்.
ஒரு மனிதர் தனது கல்வியினை தொடங்கும் போது, எல்லா முடிவுகளையும் கண்ட பின்னர் சத்தியத்தை பெற்றுக் கொள்ள முயல்கிறார் என்றால், கல்விகற்று முடியும் வரையிலும், வேறுபாடுகளுக்கெல்லாம் அறிந்து அதில் தீர்வு காணும் வரையிலும் குழப்பதில்தான் இருப்பார் .
அதுவரையிலும் அவரது ஹயாத் மற்றும் மவ்த்தின் நிலைப்பாடு என்ன? அவருடைய செயல்களின் நிலைப்பாடு என்ன? அவர் சம்பந்தமான நடவடிக்கைகள் என்ன? சத்தியத்தில் இருந்தாரா ? அல்லது அசத்தியத்தில் இருந்தாரா ? என , அவருடைய நிலைப்பாடுகள் அனைத்தும் பல கேள்விக் குறிகளாகவே இருக்கும் .
ஆனால், அவர் சத்தியவாதியுடன் இருந்தாரென்றால் அவர் ஆரம்பம் முதல் சத்தியத்தை பின்பற்றும் தன்மையினைக் கொண்டிருப்பார்.
நம்பிக்கையுடன் நபி (ﷺ) அவர்களிடம் நேரடியாக கேட்டு, கற்று, விளங்கி ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தியவைகளை தானும் நடைமுறைப்படுத்தி, அவர்களுடைய கொள்கைகளைப் பெற்றுக் கொண்டு, அப்பாதையில் தானும் வாழ்வேன் என்று ஒரு மாணவர் தனது கல்வியினை ஆரம்பிக்கும் போதே உறுதி கொண்டிருப்பார். சத்தியமான கொள்கையில் வளர்ந்து சத்திய உள்ளங்களைப் புரிந்து சத்தியவாதிகளுடன் சேர்ந்து கொள்வார்.
கல்வி கற்று முடிந்த பின்னர், தான் ஒரு அறிஞர் என்ற நிலையில் சத்தியம் எவ்வளவு பலமானது, ஆதாராமானது என்பதை அறிந்து கொள்வார்.
இவ்வாறு இல்லையெனில் இதற்கு முன், ஒரு மனிதர் என்ன ஆதாரத்தினைக் கொண்டு மார்க்கத்தில் ஒன்றை சரி அல்லது பிழை என காண்பார் ?. அவருடைய புத்திக்கு எட்டாதவையும் , தெரியாத கல்வியையும் கொண்டா ? இல்லை!.
எனவே தான் பின்பற்றுவதற்கு ஓர் கூட்டம் / முன்மாதிரி அவசியமாகின்றது. கல்வி கற்க தொடங்கும் மாணவருக்கு தொடங்குவதற்கு ஓர் வழிமுறை வேண்டும். அவருடைய நம்பிக்கைக்கு ஓர் அடிப்படை அவசியமாகின்றது. அவருடைய செயற்பாடுகளுக்கு ஓர் முன்மாதிரி அவசியமாகின்றது.
இவைகளுக்கு யாரை முன்மாதிரியாகக் கொள்வது ? ஒவ்வொருவரும் தனக்கு புரிந்தவற்றை பின்பற்றினால் அல்லது தான் வாசித்து தனக்கு விளங்குவதைப் பின்பற்றினால், ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு வழியை உருவாக்கிக் கொள்வார் தவிர வேறில்லை. இவ்வாறு இருக்கையில் எவ்வாறு முஸ்லிம் உம்மத் ஒற்றுமையாகி அனைவரும் சத்தியவாதி ஆக முடியும்?
மாறாக, சத்தியவாதிகள் என்று ஒரு கூட்டத்தினை அடையாளம் கண்டு பின்னர், அந்த கூட்டம் அருமை சஹாபாக்கள் தான் என்று அறிந்து, அவர்களின் வாழ்க்கையினை முன்மாதிரியாகக் கொண்டு அவ்வழியினை பின்பற்றி, நபி (ﷺ) அவர்களுடைய உபதேசங்களை எவ்வாறு ஸஹாபாக்கள் நடைமுறைப்படுத்தினார்களோ, அவ்வாறே பின்பற்றி, அவை தனக்கு அறிந்தவைகளோ அல்லது அறியாதவைகளோ ஆக இருந்தாலும் அவைகளை அருமை சஹாபாக்கள் போன்றே நடைமுறைப்படுத்தி பின்பற்ற வேண்டும் என்ற ஓர் அளவுகோலை கையாண்டால்,
அப்போதுதான் நிச்சயமாக அவரிந்தவரும் அறியாதவரும் சத்தியத்தில் இருப்பார் . கல்வியை கற்க தொடங்குவரும் , உலமாக்களும் சத்தியத்தில் இருப்பார்கள்.
எனவேதான் “கல்வியென்பது சுமக்கப்படும் ஓர் விடையமாகும்” தான் கூறப்படுகிறது. சுமப்பது என்றால், ஓர் இடத்தில் காணப்படும் ஒன்றை இன்னோர் இடத்திற்கு இடமாற்றம் செய்வதாகும்.
“ யஹ்மிலு ஹாதல் இல்ம் ” என்றே ரசூல் (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள். {ஆதாரம் : கிதாபுல் ஷரியா, ஷரஹ் அஸ்ஹாபுல் ஹதீஸ்}
கல்வியினை சுமப்பவர்கள் என்றால் அவர்கள் உருவாக்குபவர்கள் அல்லர், தன்னுடைய காலத்தில் அனைவருக்கும் எத்திவைத்து மேலும் பின்னால் வரும் காலங்களுக்கும் அதனை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பாக இருப்பவர்கள்.
இதுவே நேர்வழியில் உள்ள உலமாக்களின் பண்பாகும். அல்குர்ஆனை சுமப்பது என்றால் அல்குர்ஆன் எந்த விளக்கத்தோடு இறங்கியதோ அதனை அப்படியே விளங்கி பெற்றுக் கொள்வது ஆகும் .
அல்குர்ஆனை விளங்கி மனனமிட்டு பின்னால் வரும் சமூகத்திற்கும் அதனை எத்திவைப்பார்கள். அவ்வாறே ஹதீஸினையும் மனனமிட்டு சுமந்து பின்னால் வரும் சமூகத்திற்கும் எத்திவைப்பார்கள். இதுவே சுமந்து கொண்டு செல்வதன் வழிமுறையாகும். இதுவே, சத்தியத்தை உறுதியாக அறிந்து பின்பற்றும் வழிமுறையாகும்.
அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.
-அஷ்ஷெய்க் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி ஹபிழஹுல்லாஹ்