முர்ஜியாக்கள் யார்?

மொழி ரீதியாக பிற்படுத்துதல், தாமதப்படுத்துதல் என்பதற்குத் தான் "இர்ஜா" என்று கூறுவார்கள். 

அல்லாஹ் கூறுகிறான்: 

 قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَۙ 

 அதற்கவர்கள் “அவருக்கும், அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணை கொடுத்து விட்டு பல பட்டிணங்களுக்கு(ச் சூனியக்காரர்களைத்)திரட்டிக் கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக- என்று கூறினார்கள்.  (அல்குர்ஆன் : 26:36) 

இஸ்லாமிய மரபில்  முதலாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய இரண்டு குழுக்களுக்கு சூட்டப்பட்ட பெயராகும். இமாம் இப்னு உயைய்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். முர்ஜியாக்கள் இரண்டு விதமாக உள்ளனர் ஒன்று அலீ (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களின் காரியத்தை பிற்படுத்துங்கள் என்று கூறியவர்கள். இரண்டாவது ஈமான் என்பது சொல் மட்டும் தான் அதில் அமல் அடங்காது என்று கூறக்கூடிய இன்றைய கால முர்ஜியாக்கள் ஆவார்கள்.  (தஹ்தீபுல் ஆஸார் 2/659) 

இமாம் தப்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

முர்ஜியாக்களுக்கு முர்ஜியா என்று பெயர் சூட்டப்பட்டக் காரணம்தான் இதன் சரியாண பொருள் ஆகும். அதனை முன்னரே நாம் தெளிவுபடுத்தியுள்ளோம். பிற்படுத்துதல் என்பது தான் அதன் பொருள். அவர்கள் அலீ (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) அவர்களின் காரியத்தை அல்லாஹ்விடத்தில் பிற்படுத்தினார்கள். இன்னும் அவ்விருவரின் அதிகாரத்தை விட்டும் விலகினார்கள், அவன் தான் முர்ஜியா ஆவான். அதே போன்றுதான் ஈமானை விட்டு அமலையும், கட்டுப்படுதலையும் பிற்படுத்துபவனும் முர்ஜியா ஆவான். ஆனாலும் பிற்காலத்தில் தோன்றிய மார்க்க ரீதியான பிரிவினர்களான ஈமான் என்பது சொல் மட்டும் தான் அதில் அமல் அடங்காது என்று கூறக்கூடியவர்கள் தான் முர்ஜியாக்கள் ஆவார்கள். அவர்களின் மத்ஹபினர்கள் மார்க்கச் சட்டங்கள் ஈமானின் அடங்காது என்றும் கூறினார்கள். (தஹ்தீபுல் ஆஸார் 2/661) 

இதன் அடிப்படையில் ஈமான் என்பது சொல் மட்டும்தான் அதில் அமல் அடங்காது. இன்னும் ஈமான் அதிகரிக்கவும் செய்யாது, குறையவும் செய்யாது என்பது தான் முர்ஜியாக்கள் என்பதன் பொருள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். 


முர்ஜியாக்கள் எப்போது தோன்றினார்கள்: 

முர்ஜியாக்களின் வழிகேடு ஸஹாபாக்களின் இறுதிகாலத்தில் தோன்றியது. 

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) போன்ற ஸஹாபாக்களின் இறுதிகாலத்தில் கத்ரியாக்கள் தோன்றினார்கள்.  இதற்கு நெருக்கமான காலகட்டத்தில் முர்ஜியாக்களும் தோன்றினார்கள். ஜஹ்மியாக்களைப் பொறுத்தவரை தாபீயீன்களின் இறுதி காலத்தில் கலீஃபா உமர் பின் அப்துல் அஸீஸ் (ரலி) அவர்களின் மரணத்திற்கு பிறகு உருவானார்கள். (மஜ்மூஉல் ஃபதாவா 20/301) 


 முர்ஜியாக்களின் அகீதா: 

அஹ்லுஸ்ஸுன்னாவினருக்கு மாற்றமான ஏராளமான கொள்கைகள் இவர்களிடமுள்ளன.   அவர்கள் கூறினார்கள், 

 ஈமான் என்பது உள்ளத்தால் உண்மைப்படுத்துவது மட்டும்தான் அல்லது உள்ளத்தால் உண்மைப்படுத்துவதும் நாவால் மொழிவதும்தான்.   ஈமானின் எதார்த்தத்தில் அமல் என்பதில்லை. இன்னும் அது ஈமானின் ஒரு பகுதியுமல்ல. ஒட்டுமொத்தமாக அமல் செய்வதை விட்டுவிட்டாலும் அது ஈமானுக்கு முரணல்ல. மேலும் பாவிகளும் பரிபூரணமான ஈமானையுடையவர்கள் ஆவார்கள்.   அவர்களிடம்  அமல்களைப் பொறுத்தவரை ஈமானின் ஃபரளும் மார்க்கத்தின் பலன்களும்தான். அது ஈமானின் யதார்த்தத்தைச் சார்ந்ததல்ல. இன்னும் ஈமான் என்பது கூடவும் செய்யாது குறையவும் செய்யாது. ஏனெனில் ஒரு விஷயத்தை உண்மைப்படுத்தி அதை உறுதிப்படுத்தினால் அதில் கூடுதல் குறைவு என்பது ஏற்படாது என்பது தான் அவர்களின் வாதம். 

ஷெய்க். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

முர்ஜியாக்கள் பலக்குழுக்களாக உள்ளன. அவர்களில் சிலர் அல்ஜஹ்மு பின் ஸஃப்வான் கூறியதைப்போன்று  ஈமான் என்பது அறிவது மட்டும் தான் என்று கூறுகிறார்கள்.  இது மிகவும் ஆபத்தான கூற்றாகும். இவ்வாறு சொல்வது குஃப்ர் ஆகும்.  ஏனெனில் ஃபிர்அவ்னும்  மனதளவில் அல்லாஹ் தான் படைப்பாளன் என்பதை உறுதியாக அறிந்திருந்தான். 

 قَالَ لَقَدْ عَلِمْتَ مَاۤ اَنْزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَآٮِٕرَ‌  وَاِنِّىْ لَاَظُنُّكَ يٰفِرْعَوْنُ مَثْبُوْرًا 

 (அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.  (அல்குர்ஆன் : 17:102) 

 உள்ளத்தால் அவனும் அல்லாஹ்வை அறிந்திருந்தான்  எனவே அவனையும் முஃமின் என்று கூற முடியுமா? 

 நிராகரிப்பாளர்களைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: 

 قَدْ نَـعْلَمُ اِنَّهٗ لَيَحْزُنُكَ الَّذِىْ يَقُوْلُوْنَ‌ فَاِنَّهُمْ لَا يُكَذِّبُوْنَكَ وَلٰـكِنَّ الظّٰلِمِيْنَ بِاٰيٰتِ اللّٰهِ يَجْحَدُوْنَ 

 (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை; ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் 6:33) 

 தூதர்  உண்மையாளர் தான் என்று அம்மக்கள் அறிந்திருந்தார்கள். அப்படியானால் அவர்களும் நம்பிக்கையாளர்கள்.  அல்ஜஹ்மு பின் ஸஃப்வானின் மத்ஹபின் அடிப்படையில் அனைவருமே மூஃமின்கள்‌. முர்ஜியாக்களின் கொள்கையில் இது மிக மோசமான கொள்கையாகும். அவர்களில் சிலர் ஈமான் என்பது அறிவது மட்டுமல்ல மாறாக உள்ளத்தால்  உண்மைபடுத்துவதும் தான் என்று கூறுகிறார்கள்‌.  ஆனாலும் அமல் செய்ய தேவையில்லை என்று கூறுகிறார்கள். இது அஷாயிராக்களின் கூற்றாகும். சந்தேகத்திற்கு இடமில்லாமல் இதுவும் அடிப்படையில்லாத கருத்தாகும். ஆனாலும் ஜஹ்மின் கருத்தைப்போன்றதல்ல. வேறு சிலர் ஈமான் என்பது நாவால் அங்கிகரிப்பது தான் உள்ளாத்தால் நம்பவேண்டியதில்லை  என்று கூறுகிறார்கள். இது கராமியாக்களின் கூற்றாகும். இதுவும் பாத்திலான (தவறான) கூற்றாகும். ஏனெனில், நயவஞ்சகர்கள் நாவினால் ஷஹாதா கூறியிருந்தார்கள் இருந்தும் அல்லாஹ் அவர்களை நரகின் அடித்தட்டில் இருப்பதாக தீர்ப்பளித்தான்.  அவர்களில் குறைந்த பட்ச வழிகேட்டை உடையவர்கள் ஈமான் என்பது உள்ளத்தால் நம்புவதும், நாவால் மொழிவதும் தான் என்று கூறுகிறார்கள். ஆனாலும் இவர்களும் அமல் செய்ய வேண்டியதில்லை என்பதில் மற்றவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்கள். 


 முர்ஜியாக்களைக் குறித்து ஸலஃபுகளின் விமர்சனம்: 

இமாம் அவ்ஸாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். இமாம் யஹ்யா (ரஹ்) மற்றும் இமாம் கதாதா (ரஹ்) ஆகியோர்கள் கூறுவார்கள், மனோ இச்சையை பின்பற்றுவோர்களில் முர்ஜியாக்களைவிட  இந்த சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் வேறு யாருமில்லை.  (அஸ்ஸுன்னா - 1/318) 

 இமாம் ஃபுளைல் பின் இயாள் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக முர்ஜியாக்கள் ஈமான் என்பது சொல் மட்டும் தான் அமல் இல்லை என்று கூறுகிறார்கள். ஜஹ்மியாக்கள் ஈமான் என்பது சொல்லும் இல்லை, செயலுமில்லை அறிவது மட்டும் தான் என்று கூறுகிறார்கள். அஹ்லுஸ்ஸுன்னாவினர் கூறுகிறார்கள் ஈமான் என்பது அறிவது, சொல்வது, செயல்படுத்துவது ஆகியவையாகும். (அஸ்ஸுன்னா - 1/305) 

சுருக்கமாக சொல்வதாக இருந்தால், முர்ஜியாக்கள் அகீதாவின் அடிப்படையான விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆவின் கொள்கைக்கு முரண்படுகிறார்கள். 

அஹ்லுஸ்ஸுன்னாவினரிடத்தில் ஈமான் என்பது சொல்லும், செயலுமாகும். அது அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும். அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதனால்  ஈமான் அதிகரிக்கும். அவனுக்கு மாறுசெய்வதனால் ஈமான் குறையும் என்பதாகும். முர்ஜியாக்கள் இதில் முரண்படுகிறார்கள்.  ஈமான் என்பது அவர்களிடம் உண்மைபடுத்துவதும், சொல்வதும்தான் அதிகரிக்கவோ, குறையவோ செய்யாது. இன்னும் கட்டுப்படுவதும் மாறு செய்வதும் ஈமானில் அடங்காது என்றும் கூறினார்கள். 

இமாம்  இப்னு பத்தா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

ஸகாத்தும், ஸலாத்தும் ஈமானில் அடங்காது என்று முர்ஜியாக்கள் வாதிடுகிறார்கள். அல்லாஹ் அவர்களை பொய்யர்களாக்கி அவர்களின் முரண்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளான். அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு கருணைபுரியட்டுமாக!  நற்செயல்கள் மூலம் தான் அல்லாஹ்வின் பொருத்தமும், நரக வேதனையைவிட்டு பாதுகாப்பும், மறுமையில் நிலையான இன்பமும், மூஃமிகளுக்கு அல்லாஹ்விடமிருந்து பாராட்டும் கிடைக்கிறது. சொல்லை அல்லாஹ் அமலுடன் இணைத்துக்கூறுகிறான். நிய்யத்தை, இக்லாஸுடன் இணைத்துக் கூறுகிறான். இதன் அடிப்படையில் ஈமான் என்பது மூன்று பொருளை உள்ளடக்கியுள்ளது. அதில் ஒன்றை விட்டு ஒன்றை பிறிக்கமுடியாது. ஒன்றில்லாமல் மற்றொன்று பயனளிக்கவும் செய்யாது. ஆக ஈமான் என்பது நாவால் மொழிவது, உடலால் அமல் செய்வது, உள்ளத்தால் அறிவது ஆகியவையாகும். யாருடைய உள்ளங்கள் சறுகிவிட்டதோ, யாருடைய அறிவோடு ஷைத்தான் விளையாடினானோ அத்தகைய வழிதவறிய முர்ஜியாக்கள் இதற்கு மாற்றமாக கூறுகிறார்கள். இவை அனைத்தையும் அல்லாஹ் அவனது வேதத்திலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களது சுன்னாவிலும் கூறியுள்ளார்கள்.  (அல் இபானத்துல் குப்ரா - 2/779) 

- அஷ்ஷெய்க்  M. பஷீர் ஃபிர்தவ்ஸி
أحدث أقدم