திருக்குர்ஆன் கூறும் நபிமார்கள் - சிறு குறிப்பு

1.    ஆதம் (அலை)
ஆதம் (அலை) அவர்கள் முதல் மனிதரும் நபியும் ஆவார்கள். ஆனால், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக அனுப்பபட்ட முதல் நபி நூஹ்(அலை) அவர்கள் ஆவார்கள்.

இஸ்லாமிய நம்பிக்கைப்படி அல்லாஹ் முதல் மனிதரைக் களிமண்ணால் படைத்தான். அவ்வாறு படைக்கப்பட்டவரின் பெயர் தான் ஆதம். இவர் தான் முழு உலகில் வாழும் அனைத்து மக்களின் தந்தையாவார். அவரிலிருந்து அவரது பெண் துணையை இறைவன் படைத்தான். கிறித்தவர்கள் இவரை ஆதாம் என்பர்.


2.    இத்ரீஸ் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆன் 19:56, 21:85 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதுவும் இவரைப் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை.


3.    நூஹ் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஆரம்ப காலத்தில் அனுப்பப்பட்ட தூதராவார். திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் ஆதம், இத்ரீஸ் தவிர மற்ற எல்லா நபிமார்களுக்கும் இவர் முந்தியவராவார். இவர் 950 வருடங்கள் வாழ்ந்தார்.


4.    ஹுத் (அலை)
'ஹூத்' எனும் இறைத்தூதர் அனுப்பப்பட்ட சமுதாயமே 'ஆது' சமுதாயம் எனப்படும். இவர்கள் மிகவும் வலிமை மிக்கவர்களாக இருந்தனர். ஹூத் நபியை ஏற்க மறுத்து அக்கிரமம் புரிந்ததால் வறண்ட காற்றை அனுப்பி இறைவன் அவர்களை அழித்தான்.


5.    ஸா­லிஹ் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். ஸாலிஹ் நபியின் சமுதாயத்தின் பெயர் ஸமூத். இவர்கள் மலைகளைக் குடைந்து குகைகள் அமைத்து வாழ்ந்தவர்கள்.


6.    இப்ராஹீம் (அலை)
இறைத் தூதர்களில் அதிகமான அருள் பெற்றவர் இப்ராஹீம் தான். இவரது தகுதியைப் பெரிதும் அல்லாஹ் உயர்த்தியுள்ளான். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமின்றி இஸ்ஹாக், யாகூப், தாவூத், ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் அனைவரும் இவரது வழித் தோன்றல்களே.

யூதர்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் பெரிதும் மதிக்கின்ற மகானாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். இவரை 'ஆப்ரஹாம்' என்று யூத கிறித்தவர்கள் கூறுவார்கள்.


7.    லூத் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இப்ராஹீம் நபியின் சகோதரரின் மகனாகவும் சமகாலத்தவராகவும் இருந்தார். ஆயினும் வேறுபகுதியில் இவர் இறைத்தூதராக நியமிக்கப்பட்டார்.

இவரது சமுதாயம் பலகடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்தது மட்டுமின்றி ஆண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை நல்வழிப்படுத்த இவர் அனுப்பப்பட்டார்.


8.    இஸ்மாயீல் (அலை)
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்மாயீல். இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இஸ்மாயீலின் வழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். யூத, கிறித்தவர்கள் இவரை 'இஸ்மவேல்' என்பர்.


9.    இஸ்ஹாக் (அலை)
இப்ராஹீம் நபியின் இன்னொரு புதல்வர் இஸ்ஹாக். இவரும் இறைத்தூதர்களில் ஒருவர் என்பதைத் தவிர இவரைப் பற்றி அதிகமான விபரங்கள் ஏதும் திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. பல நபிமார்களுடன் இணைத்து இவரும் நல்லவராக இருந்தார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இவரது பிரச்சாரம், அதில் சந்தித்த பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை. இவர் இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு  13 வயது இளையவர்


10.    யஃகூப் (அலை)
இப்ராஹீம் நபியின் மகன் இஸ்ஹாக். இஸ்ஹாக்குடைய மகன் யாகூப். யாகூபின் மற்றொரு பெயர் தான்  "இஸ்ராயீல் " இஸ்ரவேலர்கள் எனப்படுவோர் யாகூப் நபியின் வழித்தோன்றல்களாக இருப்பதால் அவர்கள் இஸ்ராயீலின் மக்கள் என்று கூறப்படுகின்றனர். கிறித்தவர்கள் இவரை இஸ்ரவேல், யாகோப், ஜேக்கப் என்பர்.


11.    யூஸுஃப் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மற்ற இறைத்தூதர்களை விட பல தனிச்சிறப்புக்கள் இவருக்கு உள்ளன.

பாரம்பரியம், குலம் என்ற அடிப்படையில் மிகச் சிறந்தவர் ஒருவர் இருக்க வேண்டுமானால் அதற்கு முதல் தகுதி பெற்றவர் இவராகத்தான் இருக்க முடியும்.

இவரும் இறைத்தூதராக இருந்தார். இவரது தந்தை இஸ்ராயீலும் என்றழைக்கப்படும் யஃகூபும்  இறைத்தூதராவார். அவருடைய தந்தை இஸ்ஹாக்கும் இறைத்தூதராவார். அவருடைய தந்தை இப்ராஹீமும் இறைத்தூதராவார். இந்தக் கருத்தில் நபிமொழியும் உள்ளது.
(புகாரி 3382, 3390, 4688)

திருக்குர்ஆனில் இவருடைய வரலாறு மட்டுமே சிறுபிராயம் தொடங்கி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. யூஸுஃப் என்ற பெயரில் அமைந்த அத்தியாயம் பெரும் பகுதி இவரது வரலாறால் நிரம்பியுள்ளது. இவருடைய வரலாற்றை அழகிய வரலாறு என்று அல்லாஹ்வும் சிலாகித்துக் கூறியுள்ளான்.

இவரைப் பற்றி அறிந்து கொள்ள சிரமப்படத் தேவையில்லை. யூஸுஃப் என்ற 12வது அத்தியாயத்தில் ஒரே இடத்தில் இவரது வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளதைக் காண்க.


12.    ஷுஐப்(அலை)  
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். மூஸா (அலை) இவருடைய மகளைத் திருமணம் முடித்திருந்தார்கள். இவர் ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததுடன் தனது சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சுரண்டலையும், அளவு நிறுவைகளில் மோசடி செய்ததையும் கண்டித்துப் பிரச்சாரம் செய்தார்.

மத்யன். இந்நகரம் ஷுஐப் நபி அவர்கள் வாழ்ந்த நகராகும். இந்நகர மக்கள் அளவு நிறுவைகளில் மோசடி செய்பவர்களாகவும், பல தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் இறுதிவரை திருந்தாததால் அழிக்கப்பட்டனர்.


13.    மூஸா (அலை)
மூஸா நபி திருக்குர்ஆனில் மிக அதிகமான இடங்களில் குறிப்பிடப்படும் இறைத்தூதர் ஆவார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்கள். மூஸாவிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசினான். கிறித்தவர்கள் இவரை மோஸே அல்லது மோஸஸ் என்பர்.


14.    ஹாரூன் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவர் ஆவார். மேலும் இவர் மூஸா (அலை) அவர்களின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார். இவரும் மூஸா நபியும் சேர்ந்து இரட்டைத் தூதர்களாக ஃபிர்அவ்ன் கூட்டத்தாருக்கு அனுப்பப்பட்டனர்.


15.    தாவூத் (அலை)
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஸுலைமான் நபியின் தந்தையுமாவார். டேவிட் அல்லது தாவீது ராஜா என்று கிறித்தவர்கள் இவரைக் குறிப்பிடுவார்கள்.


16.    ஸுலைமான் (அலை)
ஸுலைமான் அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது தந்தை தாவூது (தாவீது) அவர்களும் இறைத்தூதராகவும், மன்னராகவும் திகழ்ந்தார். ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி மற்ற எவருக்கும் வழங்கப்படாத மகத்தான ஆட்சியாகும்.

யூத கிறித்தவர்கள் இவரை சாலமோன் என்பர்.


17.    அய்யூப் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர்.

இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர்.


18.    துல்கிஃப்ல் (அலை) 
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி 21:85, 38:48 ஆகிய இரு வசனங்களில் மட்டுமே திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அதிகமான விபரம் எதையும் இவரைப் பற்றி கூறவில்லை.


19.    இல்யாஸ் (அலை)
இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் இல்யாஸீன் என்று 37:130 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். 37:123, 6:85 வசனங்களில் இவரைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இவர் தமது சமுதாயத்தின் பல கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த விவரம் தவிர அதிகமான விவரம் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை.


20.    அல்யஸஉ (அலை)
அல்யஸஉ என்பார் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரைப் பற்றி திருக்குர்ஆனில் 6:86, 38:48 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. அதிகமான விவரங்கள் எதுவும் இவரைப் பற்றிக் கூறப்படவில்லை


21.    யூனுஸ் (அலை)
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவரது சமுதாயத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இறைவனின் தண்டனை வரப்போகும் அறிகுறிகள் தென்பட்டவுடனே திருந்திக் கொண்டனர். அறிகுறிகள் தென்பட்டவுடன் திருந்திக் கொண்ட வேறு எந்தச் சமுதாயமும் கிடையாது.

இவருக்கே தெரியாமல் இவரது சமுதாயத்தை இறைவன் காப்பாற்றியதால் இவர் இறைவனிடம் கோபித்துக் கொண்டு சென்றார். எனவே இவரை அல்லாஹ் தண்டித்தான். கிறிஸ்தவர்கள் இவரை ஜோனா என அழைக்கின்றனர்.


22.    ஸக்கரிய்யா (அலை)
இவரும் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவர் ஈஸா நபியின் தாயாரை எடுத்து வளர்த்தவர் என்பதற்கு குர்ஆனில் சான்றுகள் உள்ளதால் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் எனலாம்.


23.    யஹ்யா (அலை)
இவர் ஸகரிய்யா நபியின் மகனும் இறைத்தூதருமாவார். இவர் ஸகரிய்யா நபியின் தள்ளாத வயதில் பிறந்தவர். யூத, கிறித்தவர்கள் இவரை ஜான் அல்லது யோவான் என்பர்.

24.    ஈஸா (அலை)
கிறித்தவர்கள் கர்த்தரின் குமாரர் எனக் குறிப்பிடும் இயேசுவை திருக்குர்ஆன் ஈஸா எனக் கூறுகிறது.

ஈஸா நபியவர்கள் சில அற்புதங்கள் நிகழ்த்தியதையும், தந்தையின்றிப் பிறந்ததையும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவரும் மற்ற இறைத்தூதர்களைப் போல் ஒரு தூதராவார். இறைவனுக்கு மகன் இருக்க முடியாது என்பதால் இவர் இறைமகன் அல்லர் என்று குர்ஆன் அடித்துக் கூறுகிறது.


25.    முஹம்மது (ஸல்) 
இறைத்தூதர்களில் இறுதியானவர் நபி முஹம்மது (ஸல்) ஆவார்கள். இறுதி நாள் வரை தோன்றுகின்ற மனித சமுதாயம் முழுமைக்கும் இவர்கள்தான் கடைசி நபியாவார்கள். இவர்களுக்குப் பின்னர் எந்த இறைத்தூதரும் வரமாட்டார்கள். தூதுத்துவம் இவர்களோடு நிறைவு பெற்றுவிட்டது

அல்லாஹ் கூறுகிறான் :
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை.
(அல்குர்ஆன் 40:78)

முதல் மனிதரிலிருந்து இறுதித் தூதராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை ஏராளமான தூதர்கள் உலகின் பல பாகங்களுக்கும், பல்வேறு மொழிகள் பேசும் மக்களுக்கும் நல்வழி காட்ட அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு அனுப்பப்பட்ட தூதர்களின் எண்ணிக்கை குறித்து திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏற்கத்தக்க பொன்மொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை.

ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹ்மத் உள்ளிட்ட சில நூல்களில் பதிவு  செய்யப்பட்டு உள்ளது.
أحدث أقدم