பலவீனமான சுபஹ் குனூத்தை குனூத் நாஸிலாவாக மாற்றி ஓதும் பரிதாபம்

வழிப்படுதல், 
மௌனித்தல், 
பிரார்த்தனை செய்தல், 
நீண்ட வணக்கம் போன்ற கருத்துக்களை அரபி மொழிவழக்கில் தரும் குனூத் என்ற சொல், முஸ்லிம்களுக்கு  பிரச்சினை, நாட்டில்  வாழமுடியாத அச்சம், வரட்சி, பஞ்சம், போன்ற அணர்த்த நிலைகளில் ஐங்கால   தொழுகையில் இறுதி ரகஅத்தில் சந்தர்ப்பத்தை மையப்படுத்தியதாக ஓதப்படும்  வாசகங்களைக்  கூற வரும் ஒரு வணக்கமாகும்  . 

மூன்று வகையான குனூத்துகள்:

1) குனூத் அந்நாஸிலா.

 2) சுபஹ் குனூத்

3) வித்ரு குனூத்

இவற்றில் குனூத் நாஸிலா தெளிவான சுன்னாவாகும். ஆனால் இரண்டாம் மூன்றாம்க குனூத்கள் விஷயத்தில் அறிஞர்கள் மற்றும் மத்ஹபுகள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. 

சுபஹ் குனூத் ஹதீஸ் கலை வல்லுனர்களால் பலவீனப்படுத்தப்பட்டிருந்தும் ஷாஃபிஈ மத்ஹப் சார்ந்த மக்கள் அதனை ஃபர்ளு போல கடைப்பிடிக்கின்ற அதே நேரம், ஹனஃபி
ஹன்பலி மத்ஹபினர்  பிற்கால மக்களால் வணக்க வழிபாடுகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒதுக்கப்பட வேண்டிய நபிவழிக்கு முரணான பித்ஆ சார்ந்த செயலாகாக அதனைப் பார்க்கின்றனர்.

அத்துடன், ஹனஃபி மத்ஹபை கண்மூடித்தனமாகப் பின்பற்றும்  ஆப்கானிஸ்தானிலும் இந்திய துணைக்கண்ட கடும்போக்கு ஹனஃபி மத்ஹப் பள்ளிகளிலும் சுபஹ் குனூத் பெரிய பாவமாக நோக்கப்படுவதால் சுபஹில் குனூத் ஓதுவோர் தாக்கப்படும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு. 

இந்திய மண்ணில்  மத்ஹபு வெறியாளர்கள்  மத்தியில் காணப்பட்ட சண்டைகள் காரணமாக 800 ஆண்டுகால இஸ்லாமிய ஆட்சிக்கு முடிவு வந்தது என அறிஞர் ஸித்தீக் ஹஸன் கான் ரஹி தனது 
الدين الخالص என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது இதனை முன்பு சுட்டிக்காட்டிய கருத்தை உறுதி செய்கின்றது.

சுபஹ் குனூத்தை பலவீனமாக்கி குனூத் நாஸிலாவை சுன்னாவாக காண்பதுடன், கூடவே வித்ர் குனூத்தையும் ஆதரிப்போர்  தமக்கு வித்ரில் ஓதக் கற்றுத்தரப்பட்ட வாசகங்களையே சுபஹ் குனூத் ஆதரவாளர்கள் காப்பி செய்து ஓதுவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டு எவ்வாறு குனூத் விவகாரத்தில் எவ்வாறு கருத்தில் கொள்ளப்பட வேண்டுமோ அவ்வாறே #குனூத் நாஸிலா பெயரில்   #சுபஹ் குனூத்தை பள்ளிகள் தோறும் மௌலவிகள் ஓதுவது அது தொடர்பான அறியாமையும் உலமா சபையின் பொடுபோக்கும் என்பதை கவனித்துக் கொள்ளவும் வேண்டும்.

ஹதீஸ் நூல்களில் இடம் பெறும் வாசகங்கள்
----
 عَنْ أبِي هُرَيْرَةَ، ﵁، قالَ: قالَ رَسُولُ اللهِ ﷺ (اللَّهُمَّ أنْجِ عَيّاشَ بْنَ أبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أنْجِ سَلَمَةَ بْنَ هِشامٍ، اللَّهُمَّ أنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وطْأتَكَ عَلى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْها سِنِينَ كَسِنِي يُوسُفَ.) «. وفي رواية:»

 (أنَّ النَّبِيَّ ﷺ كانَ إذا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ يَقُولُ: اللَّهُمَّ أنْجِ عَيّاشَ بْنَ أبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أنْجِ سَلَمَةَ بْنَ هِشامٍ، اللَّهُمَّ أنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وطْأتَكَ عَلى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْها سِنِينَ كَسِنِي يُوسُفَ.) «.

- وفي رواية:» (كانَ النَّبِيُّ ﷺ يَدْعُو فِي القُنُوتِ: اللَّهُمَّ أنْجِ سَلَمَةَ بْنَ هِشامٍ، اللَّهُمَّ أنْجِ الوَلِيدَ بْنَ الوَلِيدِ، اللَّهُمَّ أنْجِ عَيّاشَ بْنَ أبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أنْجِ المُسْتَضْعَفِينَ مِنَ المُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وطْأتَكَ عَلى مُضَرَ، اللَّهُمَّ سِنِينَ كَسِنِي يُوسُفَ.) 

மேற்படி நபிமொழிகள் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட மேலும் பல ஹதீஸ் கிரந்தங்களில் குனூத் நாஸிலா பற்றிய அத்தியாயங்களில் இடம் பெறும் நபிவழிப் பிரார்ர்த்தனைகளாகும்.
 
அவற்றில் இடம் பெறும் வாசகங்கள் அற்புதமான பொருட்களைத் தருபவைகளாகும். அவற்றை மாதிரியாகக் கொண்டு சமகால நிகழ்வுகளைக் கூறிப் பிரார்த்திப்பதை விடுத்து, ஆபத்துக் கெல்லாம் யா முகைதீன் என்றும், எடுத்ததெற்கெல்லாம் "அல்ஃபாத்திஹா" ஓதி அனைத்தையும் முடித்துக் கொள்வது போன்று சுபஹ் குனூத் ஒன்றும் துஆக்களின் தலையான 
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار 
 கிடையாது.

குனூத் தொடர்பான தகவல்களை அறிய 
---
١) كتب حديثية البخاري ومسلم وغيرهما.
٢) نصب الراية في تخريج أحاديث الهداية للزيلعي رحمه الله 
٣) تلخيص الخبير للحافظ ابن حجر العسقلاتي  رحمه الله 

٤) نيل الأوطار للشوكاني رحمه الله 
மேலும் பல நூல்கள்.

உலமா சபையினர் கவனத்திற்கு!
 -----
ஊர்ஜிதமான கருத்தின் அடிப்படையில்
குனூத் நாஸிலாவை அடிக்கடி வெளிவரும் அரச வர்த்தமானி போன்று அறிவிப்பதைத் தவிர்த்து,  நாட்டில் எவ்வாறான கால சூழ் நிலைகளில் ஓதப்படல் வேண்டும் என்பதுடன், ஓதப்பட வேண்டிய பொருத்தமானதும் சரியானதுமான வாசகங்களை    மௌலவிகளுக்கு கற்றுக் கொடுங்கள். 

இந்த நூற்றாண்டிலும் இது போன்ற சிறிய விஷயங்களில் விடப்படும் தவறு பெரிய தவறாகும் என்பதை நாம் கூறாமலே நீங்கள் அறிவீர்கள்.


-எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

أحدث أقدم