புத்தாண்டும் முஸ்லிம்களின் மனநிலையும்

- வழங்கியவர்: அஷ்ஷெய்க் முபாரக் மதனி

புதுவருடம் பிறக்கும் சமயத்தில் கிருஸ்தவர்களும் ஏனைய சமூகங்களும் சந்தோஷமான மனநிலையில் இருக்கும் இவ்வேளையில் முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்க வேண்டும்?

முஸ்லிம்களை பொறுத்தவரை காலண்டர், நாட்களை கணக்கிடுவதற்கும், முக்கியமான வணக்கங்களை செய்வதற்கும், என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த காலத்திலிருந்தே, அல்லாஹ்வின் வேதத்தில் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆக இருந்திருக்கிறது.

 اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتٰبِ اللّٰهِ يَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ‌  ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ اَنْفُسَكُمْ‌  وَقَاتِلُوا الْمُشْرِكِيْنَ كَآفَّةً كَمَا يُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً‌   وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏ 

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஓர் ஆண்டுக்கு) பன்னிரண்டுதான். (இவ்வாறே) வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு (மாதங்கள்) சிறப்புற்றவை. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் நீங்கள் (போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம். எனினும், இணைவைத்து வணங்குபவர்களில் எவரேனும் (அம்மாதங்களில்) உங்களுடன் போர் புரிந்தால் அவ்வாறே நீங்களும் அவர்கள் அனைவருடனும் (அம்மாதங்களிலும்) போர் புரியுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் இறை அச்சமுடையவர்களுடன் இருக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 9:36)

முஹர்ரம், ஸஃபர், ரபீஉல் அவ்வல் , ரபீஉஸ்ஸானி போன்ற மாதங்களின் பெயர் வேதத்தில் சொல்லப்பட்டாலும் , எது முதல் மாதம் என்று ஆரம்ப காலத்தில் தெரியாத நிலையில்தான் இருந்துள்ளது.

 நபி ﷺ அவர்களுக்கு முன் காலத்தில் பல காலண்டர்களை பயன்படுத்தியுள்ளார்கள். அதில் சில காலண்டர்களில் அவர்களது அரசர்களின் பெயர், அவர்களது கடவுள்களின் பெயர், இடம்பெற்றுள்ளது.

அரேபியாவில் அங்கே நடக்கக்கூடிய நிகழ்வுகளை கொண்டு அமையப்பெற்றிருக்கும் காலண்டரை தான் பயன்படுத்தி உள்ளார்கள்.

"உதாரணமாக : யானை ஆண்டு

நபி ﷺ அவர்கள் காலத்திலும் இந்த நிகழ்வுகளை கொண்ட காலண்டர் தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. முஹர்ரம், ஸபர், என்ற மாதங்கள்தான் இருந்துள்ளது.

உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக இருந்தபொழுது தான் முஸ்லிம்களுக்கென்று காலண்டர் உருவாக்கப்பட்டது.

இஜ்மாவின் அடிப்படையில் காலண்டர் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலையில், பல கருத்துக்களுக்கு மத்தியில்  நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்ததிலிருந்து அவர்களுடைய ஹிஜ்ரத்தை வைத்து காலண்டர் உருவாக்கப்பட்டது.

அதில் முதல் மாதம் முஹர்ரம் என்று அறிவித்து மொத்தம் 12  மாதங்களின் வரிசையையும் அறிமுகப்படுத்தினார்கள்.

நடைமுறையில் நாம் அனைவரும் பயன்படுத்துவது சூரியனை அடிப்படையாகக் கொண்ட காலண்டர் ஆகும்.

இது கவலைப்பட வேண்டிய ஒரு அம்சமாகும்.

இஸ்லாமிய நாடுகளில் கூட இந்த சூரியனை அடிப்படையாக கொண்ட காலண்டருக்கு மாறி வருகிறார்கள்.

இஸ்லாமிய காலண்டர் பிறையையும், ஹிஜ்ராவையும், அடிப்படையாகக் கொண்ட காலண்டர் ஆகும்.

இந்த உலகத்திற்கு தலைமை தாங்குகின்ற முழு பொறுப்பையும் சிறப்பம்சங்களையும் அல்லாஹ் நம் சமுதாயத்திற்கு கொடுத்துள்ளான்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏ 

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 3:110)

وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ 

(நபியே! நீர் கூறுவீராக:)” கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விசுவாசிகளுக்கும் உரியதாகும், (அல்குர்ஆன் : 63:8)

وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْكُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏ 

(விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம்,  கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள். (அல்குர்ஆன் : 3:139)

குர்ஆனில் இந்த உலகத்தில் சிறந்தவர்கள், கண்ணியமானவர்கள். உலகத்தை நிர்வகிக்க கூடிய ஆற்றலை பெற்றவர்கள், ஆட்சி செய்ய தகுதியானவர்கள் மூஃமின்கள் தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதற்கு எடுத்துக்காட்டாக: காதிசியா நிகழ்வில் ரிபியி பின் ஆம் (ரலி)  என்ற நபித்தோழர் ருஷ்தும் என்ற பாரசீக மன்னர் அரண்மனைக்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மெலிந்த குதிரையின் மேல் ஏறி  செல்கிறார், அப்பொழுது அவரை காவலாளி  உள்ளே அனுமதிக்கவில்லை.

நான் முஸ்லிம்களின் பிரதிநிதி வந்துள்ளேன் என்று சொன்னார்; பிறகு காவலாளி அவரை குதிரை இல்லாமல் உள்ளே செல்லுங்கள் என்றார்.

நான் வருவதாக இருந்தால் குதிரையுடன் தான் வருவேன் என்று கூறி, பின் ருஷ்தும்  அவர்கள் அனுமதி கொடுக்க குதிரையுடன் சென்றார்.

உள்ளே வந்து குதிரையை ஒரு தூணில் கட்டி விட்டு ருஷ்துமுக்கு முன்னால் சென்று நின்றதும் ருஷ்தும் அவரை பார்த்து  என்ன விஷயமாக வந்துள்ளீர்கள்?' என்று கேட்டார்.

அதற்கு அந்த சஹாபி; ' நான் வரவில்லை அல்லாஹ் என்னை அனுப்பி இருக்கிறான். மனிதன் மனிதனுக்கு அடிமைப்பட்டு இழிவுபடுகிற நிலையிலிருந்து அவனை விடுவித்து சர்வ உலகங்களுக்கும் இரட்சகனான அல்லாஹ் ஒருவனுக்கே அவன் அடிமைப்பட வேண்டுமென்று மனிதனை அழைத்து செல்ல அல்லாஹ் எங்களை அனுப்பி இருக்கிறான். மதங்களின் அடக்கு முறையில் இருந்து மனிதர்களை விடுவித்து இஸ்லாத்தின் நீதியின் பால் அழைப்பு விடுக்க அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான். இந்த குறுகிய உலக ஆசையில் இருந்து மனிதனை விடுவித்து பரந்த மறுமையை நோக்கி அழைத்துச் செல்ல அல்லாஹ் எங்களை அனுப்பி இருக்கிறான். நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாமில் இணைந்திடுங்கள்; உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் ; அதற்குள் யோசித்து முடிவு சொல்லுங்கள். இல்லை என்றால் யுத்தம் என்று கூறி செல்கிறார்.

இதுதான் இஸ்லாம் கற்றுத் தந்த தன்னம்பிக்கை, கண்ணியம்.

ஆனால் இன்று முஸ்லிம்களின் நிலை? தாழ்வு மனப்பான்மைக்கு உட்படுத்தப்பட்டுள்ளோம்!

இதற்கு காரணம் என்ன?

நபி ﷺ அவர்கள் , "அழித்து விடுவதற்காக ஏனைய சமுதாயங்கள் ஒருவர் ஒருவரை அழைக்கும் காலம் தூரத்தில் இல்லை" என்று சொன்னார்கள்.

எடுத்துக்காட்டாக : விருந்தளிக்க கூடியவர் தனது விருந்தாளியை எப்படி அழைப்பாரோ, அப்படி ஏனைய சமூகத்தவர்கள் ஒருவர் ஒருவரை அழைப்பார்கள்.

அதில் முஃமின்கள் வெள்ளத்தால் அடிக்கப்பட்டு, செல்லும் நுரைகளைப் போல் செல்வார்கள்.

அப்பொழுது ஸஹாபாக்கள் கேட்டார்கள் நாங்கள் கொஞ்சம் பேர்கள்தான் இருப்போமா?

அதற்கு நபி ﷺ இல்லை நீங்கள் அதிகமானவர்கள் இருப்பீர்கள்; ஆனால் அல்லாஹ் எதிரிகளின் உள்ளத்தில் உங்களைப் பற்றிய அச்சத்தை எடுத்துவிட்டு, உங்கள் மனதில் வஹ்னை போட்டுவிடுவான் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். "வஹ்ன் என்றால் என்ன யா ரஸூலல்லாஹ்" என்று சஹாபாக்கள் கேட்டார்கள்.

 வஹ்ன் என்பது உலக ஆசையும் மரணத்தை வெறுக்கும் மனோநிலையும் என்று நபி ﷺ அவர்கள் பதிலளித்தார்கள்.

இன்றைக்கு நாம் இந்த நோயினால் தான் பிடிக்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சருகுகள், பதருகள், நுரை போல் கனமில்லாமல் இல்லாமல் ஆகி விட்டோம்.

கனம் என்பது என்ன?

கனம் என்பது நம் ஈமான்.

ஈமானிய வறுமை:  ஈமான் இல்லாமல் நிறைய உள்ளங்கள் வறுமையில் உள்ளது.

புத்தாண்டிற்கு இன்று நிறைய இஸ்லாமிய சகோதரர்கள், சகோதரிகள்  வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மூலம் சிறிய கூச்சம் கூட இல்லாமல் கடுகளவு கூட இறையச்சம் இல்லாமல் வாழ்த்து சொல்கிறார்கள்.

ஹிஜ்ரா புத்தாண்டுக்கே வாழ்த்து சொல்லவே நமக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு இருக்க ரோமர்களின் கிறிஸ்தவர்களின் பிழையான தவறான அவர்களின் கடவுள்களின் பெயர்களை தாங்கிய இந்த புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது தான் வஹ்ன், ஃகுசா என்ற நிலை ஆகும். இதனால் தான் நாம் இன்று இவ்வளவு பலவீனமாக இருக்கிறோம்.

இதில் நாம் அனைவரும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். நாம் புத்தாண்டை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.

வேறு வழி இல்லாமல் நாம் இந்த காலண்டரை பயன்படுத்தினாலும், நம் பிள்ளைகளுக்கு நாம்  பிறையை அடிப்படையாகக் கொண்ட ஹிஜ்ரா  காலண்டரை சொல்லிக்கொடுக்க வேண்டும். நமக்குள் அதை நடைமுறை படுத்த முயற்ச்சி செய்ய வேண்டும்.

இத்தா உடைய விஷயம் நோன்புடைய விஷயம் பணம் கொடுக்கல் வாங்கல்கள் போன்றவற்றை நம்மால் முடிந்த வரை ஹிஜ்ரா காலண்டரின் அடிப்படையில் நடைமுறை படுத்த முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நாம்  கவலைப்படவும் வேண்டும். கவலைக்கும், முயற்சிக்கும் அல்லாஹ் கூலி தருவான்.

ஃபேஷன் என்று வாழ்த்து சொல்லும் முஸ்லிம் சகோதர சகோதரிகள் மாற்று மதத்தினரை பின்பற்றுகிறார்கள்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள் : யார் மாற்று மதத்தினர் கலாச்சாரத்தையும் மத அம்சங்களுக்கு ஒத்துப் போகிறார்களோ அவரும் அவர்களை சேர்ந்தவர்தான்.

அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தின் உலமாக்கள் எல்லோரும் இவ்வாறான வாழ்த்து சொல்வதை ஹராம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் சில மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் மைனாரிட்டி சமுதாயம் மெஜாரிட்டி சமுதாயத்திற்கு வாழ்த்து சொல்வதில் என்ன தவறு? என்று வழி கெடுக்கும் கூட்டம் , உலமாக்கள் , சிந்தனையாளர்கள் சீர்திருத்தவாதிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள். இதிலும் நாம் மிக  கவனமாக இருக்க வேண்டும்.

நாம் ஏற்றிருக்கும் அல்லாஹ்வின் கொள்கையின் பக்கம் அவர்களும் வரவேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.

வழிகேடு வழிகேடு தான். ரிபியி பின் ஆம் (ரலி) அவர்களின் துணிச்சல் நம்மிடம் ஈமான் இருந்தால் வரும்.

இந்தப் புத்தாண்டு நமக்கான புத்தாண்டு அல்ல, நமக்கும் இந்த புத்தாண்டுக்கும் சம்பந்தமில்லை.

புத்தாண்டு வருவதற்காக நம் கடைகளில் ஹேப்பி நியூ இயர் என்று போடக்கூடாது , இப்படி உழைத்த காசு நமக்கு தேவையா?

(கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் கார்டு, கிறிஸ்துமஸ் தாத்தா, அதற்கான விளக்குகள், புத்தாண்டுக்கான கார்டு)

இந்த மாற்றுமத பண்டிகைகளை தொடர்புடைய எந்த ஒரு செயலும் பாவமாகும்.

நமக்கு என்று  ஒரு தனித்துவம், நமக்கென்று தனியான கொள்கையை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அதில் நாம் தெளிவாகவும் உறுதியாக இருக்க வேண்டும்.

நம் மற்ற சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் ஹிதாயத்தை தர வேண்டுமென்று துஆ செய்ய வேண்டும்.

இதை  வைத்து மகிழ்ச்சி அடைந்தால் பாவத்தை வைத்து மகிழ்ச்சி அடைவதாக அர்த்தம்.

பாவத்தை வைத்து முஸ்லிம் சந்தோஷம் அடைய முடியாது, கூடாது.

இன்றைக்கு வேகமாக செல்கிறது காலம்.

நபி ﷺ அவர்கள் முன்னறிவிப்பு செய்தது போல் "மறுமைநாளின் அடையாளம் காலம் சுருங்கி விடுவது. ஒரு வருடம் ஒரு மாதம் போல் ஆகிவிடும், ஒரு மாதம் ஒரு வாரம் போல் ஆகிவிடும், ஒரு வாரம் ஒரு நாள் போல் ஆகிவிடும்.

இப்பொழுது ஒரு முஃமின் விழிப்படைய வேண்டும். மறுமை நெருங்கிக் கொண்டிருந்தது. மறுமை என்ற நாள் ஒன்று வரும். அப்பொழுது உலகம் அழியும் என்ற நம்பிக்கை நம்மிடத்தில் உள்ளது.

நபி ﷺ அவர்கள் மறுமை நாளுக்கான ஒரு சில அடையாளங்களை ஒரு சில அடையாளங்களை கூறியிருக்கிறார்கள்.

உலமாக்கள் இந்த மறுமைநாளின் அடையாளத்தை இரண்டாக பிரித்துள்ளார்கள் . சிறிய பெரிய அடையாளங்கள்.

நபி ﷺ பெரிய அடையாளங்கள் நூலில் கோர்த்த முத்துக்கள் போல் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும் என்றார்கள்.

நபி ﷺ அவர்கள் சிறிய அடையாளங்களான கொலை அதிகரிக்கும், விபச்சாரம் பெருகி விடும், மதுபானம், இசைக்கருவிகள், வட்டி , ஹலால் ஆக்கப்படும், மஸ்ஜிதை பெரிதாக கட்டுவார்கள் ஆனால் தொழுகையாளிகள் குறைந்து விடுவார்கள், கல்வி உயர்த்தப்படும், அறிவிலிகள் தலைவர்களாக வருவார்கள், காலம் சுருங்கி விடும் என்றார்கள்.

இது போன்ற நிலைதான் இன்று ஆகிவிட்டது.

இன்றைய நிலையில் ஈமான் உள்ள ஒரு மனிதன் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

நபி ﷺ அவர்களிடம் ஒருவர் கேட்டார் "மறுமை எப்பொழுது வரும்?" என்று, அதற்கு நபி ﷺ "நீ மறுமைக்காக என்ன தயார் செய்து வைத்துள்ளாய்?" என்று கேட்டார்கள்.

நாம் நமக்குள் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி இது

காலங்கள்  வேகமாக செல்கிறது . மறுமை நம்மை நெருங்கிக் கொண்டே வருகிறது. இது ஒவ்வொருவரும் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் தருணமாகும்.

நாம் எல்லோருமே மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையை நம்பியவர்கள் மரணம் நிச்சயமாக உள்ளது என்று நம்பியவர்கள். உலகம் அழிந்த பிறகு அல்கியாமா குப்ரா எனும் அந்த மறுமை ஆரம்பிக்கும். ஆனால் நாம் மரணித்தவுடன் நமக்கு அல்கியாமா அஸ்ஸுக்ரா என்ற மறுமை நமக்கு ஆரம்பித்துவிடும். காலம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் போது நமக்கு அந்த கவலையும் பயமும் வரவேண்டும்.

நபி ﷺ அவர்கள் என் சமூகத்தின் வயது 60-70 இடையில் என்று கூறினார்கள்.

60 வயதை தாண்டி செல்பவர், தவ்பா செய்து நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.

நபி ﷺ அவர்கள் சொன்னார்கள்: யார் சிறந்தவர் என்றால் யாருடைய ஆயுள் நீடித்து நல்ல அமல்கள் செய்கிறாரோ அவர். யார் மிகவும் மோசமானவர்கள் என்றால் யார் ஆயுள் நீடித்து, மோசமான செயல்கள் செய்கிறாரோ அவர்.

60 வயதை தாண்டும் அவர் மறுமையில் (தப்பிப்பதற்கு) நியாயம் சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

குறிப்பாக வயோதிகர்கள் (ஆண்களும் , பெண்களும்) கவனமாக இருக்க வேண்டும்.

புத்தாண்டு பிறக்கும் போது நமது மனோநிலை எப்படி இருக்க வேண்டும் என்றால் வாழ்த்து சொல்வதோ, கடைகளை அலங்கரிப்பது, இவ்வாறான பொருட்களை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வதும் கூடாது. இது தெளிவான ஹராம்.

இதையும் தாண்டி நாம் செய்வோமானால் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக நிற்போம்.

காலம் வேகமாக ஓடுகிறது என்றால் மறுமையும் வேகமாக வருகிறது என்று நம்மை நாம் மாற்றிக் கொண்டு அல்லாஹ்விடத்தில் தவ்பா , இஸ்திஃக்ஃபார் செய்து அல்லாஹ்விற்கு விருப்பமான அடியானாக நம்மை மாற்றி கொள்ளவேண்டும்.

குறிப்பாக வயோதிகர்கள் ஃபித்னாவில் இருந்து விலகி தன்னை மாற்றி அல்லாஹ்விடம் தொடர்புபடுத்தி கொள்ள வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை காலத்தையும் நேரத்தையும் அவனுக்கு பொருத்தமான வழியில் கழிப்பதற்கு அருள் பாலிப்பானாக. ஆமீன் 
Previous Post Next Post