சாப்பாட்டின் ஒழுங்கு முறைகள்

 -மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-

நாம் சாப்பிடும் போது எந்த ஒழுங்குகளை கடைப்பிடித்து சாப்பிட வேண்டும் என்பதை நபியவா்கள் நமக்கு அழகான முறையில் கற்று தந்துள்ளார்கள். அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக கவனிப்போம்.

“நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்” (2:172)

இந்த வசனத்தில் இரண்டு முக்கியமான விடயங்களை நாம் காணலாம். முதலாவது உங்களுக்கு வழங்கப்பட்ட உணவுகளில் நல்லதை சாப்பிடுங்கள். அதாவது ஹலாலான உணவு வகைகளை சாப்பிடுங்கள். என்பதாகவும், இரண்டாவது அந்த உணவை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் “ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் உங்களை (ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை”. ( 7- 31)

இந்த வசனத்தின் மூலம் எந்த உணவாக இருந்தாலும் வீண் விரயம் செய்யக் கூடாது, அப்படி வீண் விரயம் செய்பவா்கள் இறைவனின் சாபத்திற்கு உரியவா்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு குா்ஆன் வசனங்களின் அடிப்படையில் நாம் சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை அவதானிப்போம்.

உணவும் பிஸ்மியும்
பொதுவாக எல்லா சந்தா்ப்பங்களிலும் நாம் பிஸ்மி சொல்லி நமது செயல்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதை பின்வரும் ஹதீஸ் நமக்கு தெளிவுப் படுத்துவதை காணலாம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்.
என ஜாபிர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3280)

அது மட்டுமல்ல செருப்பணியும் போதும், சட்டையை அணியும் போதும், இப்படி அடிக்கடி பிஸ்மியோடு அன்றாட தினத்தைக் கழிக்க வேண்டும். அந்த வரிசையில் நாம் சாப்பிடும் போது பிஸ்மி சொல்லித்தான் சாப்பிட வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

(நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. (புகாரி 5376, முஸ்லிம் 4111, 4112)

முதலாவதாக பிஸ்மி சொல்ல வேண்டும், இரண்டாவது வலது கையால் சாப்பிட வேணடும், மூன்றாவது நமக்கு முன் உள்ள பகுதியிலிருந்து எடுத்து சாப்பிட வேண்டும், என்பதை சாப்பாட்டின் ஒழுங்கு முறை கற்றுத் தருகிறது.

பிஸ்மி சொல்ல மறந்தால்
பசியின் வேகத்தில் அல்லது மறதியின் காரணமாக பிஸ்மி சொல்ல மறந்து, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பிஸ்மி சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தவுடன் உடனே “பிஸ்மில்லாஹி பி(f) அவ்வலிஹி வ ஆகிரிஹி” ( இப்னு ஹிப்பான் )

மேலும் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து) விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4105)

மேலும் ” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை” என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது” என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்” என்று சொல்கிறான். (முஸ்லிம் 4106)

வலது கையால் சாப்பிடுவது
சாப்பிடும் போதும், குடிக்கும் போதும், எடுக்கும் போதும், கொடுக்கும் போதும், வலதை தான் பயன் படுத்த வேண்டும் என்பதை பின் வரும் நபி மொழி நமக்கு வழிகாட்டுகிறது.

”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4108)

மேலும் “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் “இடக் கையால் வாங்காதீர்கள். இடக் கையால் கொடுக்காதீர்கள்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்4109)

மேலும் ” சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வலக் கையால் உண்பீராக!” என்று சொன்னார்கள். அவர், “என்னால் முடியாது” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மால் முடியாமலே போகட்டும்!” என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது. ( முஸ்லிம் 4110)

மேலும் இப்னு மாஜாவில் பதிவு செய்யப் பட்ட ஹதீஸில் மேலதிகமாக ”வலது கையால் பிடியுங்கள், வலது கையால் கொடுங்கள், ஏன் என்றால் ஷைத்தான் இடது கையால் கொடுக்கிறான், எடுக்கிறான். என்று நபி (ஸல்) அவா்கள் கூறினார்கள்.

எனவே நமது சகல விடயங்களிலும் வலதை முற்படுத்த வேண்டும் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

கீழே விழுந்த உணவு
நாம் சாப்பிடும் போது நம்மை அறியாமல் நாம் உண்ணும் உணவிலிருந்து கீழே தவறி விழுந்து விட்டால் அதில் துாசி ஏதாவது பட்டிருந்தால் துாசியை தட்டிவிட்டு சாப்பிடும் படி பின் வரும் ஹதீஸ் நமக்கு சொல்லித் தருகிறது.

” அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது உணவுக்கவளம் (உண்ணும்போது தவறி) விழுந்துவிட்டால் அவர் அதை எடுத்து, அதில் ஒட்டியிருப்பதை அகற்றி(ச் சுத்தம் செய்து)விட்டு அதை உண்ணட்டும். அதை ஷைத்தானுக்கு விட்டுவிட வேண்டாம். மேலும், (உண்ட பின்) தம் விரல்களை உறிஞ்சுவதற்கு முன் கைக்குட்டையால் கையைத் துடைத்துவிட வேண்டாம். ஏனெனில், தமது உணவில் எந்தப் பகுதியில் வளம் (பரக்கத்) உள்ளது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4137)

மேலும் நாம் சாப்பிட்ட தட்டையும் வழித்து சாப்பிட வேண்டும் என்பதையும் நபியவா்கள் சொல்லித் தருகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உட்கொண்டால், அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல் அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத்தராமல் அதை அவர் துடைத்துக்கொள்ள வேண்டாம்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 4132)

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விரல்களால் உணவு உட்கொள்வார்கள். உண்டு முடித்ததும் அவ்விரல்களை உறிஞ்சுவார்கள். (முஸ்லிம் 4135)

எனவே நாம் சாப்பிட்ட பின் கைவிரல்களையும், தட்டையும் வழித்து சூப்ப வேண்டும், என்பதை நமது நடைமுறையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

பருகும் பாத்திரத்தில் மூச்சு விட தடை
சாப்பிடும் போதும் சரி, வேறு எந்த எந்த சந்தர்ப்பத்திலும் சரி ஊதி குடிக்க கூடாது மேலும் தண்ணீரில் மூச்சும் விடக் கூடாது என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை காணலாம்.

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
(முஸ்லிம் 4124)

மேலும் ” அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி)வந்தார்கள். மேலும், “இதுவே நன்கு தாகத்தைத் தணிக்கக்கூடியதும் (உடல்நலப்) பாதுகாப்பிற்கு ஏற்றதும் அழகிய முறையில் செரிக்கச் செய்யக்கூடியதும் ஆகும்” என்று கூறினார்கள்.
ஆகவேதான், நானும் பருகும்போது மூன்று முறை மூச்சு விட்டு(ப் பருகி) வருகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(முஸ்லிம் 4126)

உணவை குறை கூற கூடாது
எந்த உணவாக இருந்தாலும் தனக்கு பிடித்தால் சாப்பிட்டுக் கொள்வது, தனக்கு பிடிக்கா விட்டால் அந்த உணவை சாப்பிடாமல் விட்டு விடுவது. அது அல்லாமல் முன் வைக்கப் பட்ட உணவை குறை கூற கூடாது. என்பதை பின் வரும் நபி மொழி சாட்சி சொல்கிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. ஒரு பொருள் பிடித்தால் அதை உண்பார்கள்; பிடிக்காவிட்டால் (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.( முஸ்லிம் 4190)

வலதை முற்படுத்தல்
நாம் உணவையோ, பானத்தையோ பறிமாறும் போது இருப்பவர்களின் வலதை கவனித்து பறிமாற வேண்டும் என்பதை பின் வரும் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தண்ணீர் கலந்த பால் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்களுக்கு வலப்பக்கம் கிராமவாசி ஒருவரும் இடப்பக்கம் அபூபக்ர் (ரலி) அவர்களும் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாலைப்) பருகிய பின் (மீதியை வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டு, “(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கம் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்பக்கமிருப்பவருக்கும் (கொடுக்கவேண்டும்)” என்று சொன்னார்கள். (முஸ்லிம் 4127)

மேலும் “அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தபோது, அருந்துவதற்குத் தண்ணீர் கேட்டார்கள். ஆகவே,அவர்களுக்காக நாங்கள் ஓர் ஆட்டின் பாலைக் கறந்தோம். பிறகு எனது இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, அதில் கலந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்தினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபியவர்களின் இடப் பக்கத்திலும், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களின் முன் பக்கத்திலும், ஒரு கிராமவாசி நபியவர்களுக்கு வலப் பக்கத்திலும் இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “இதோ அபூபக்ர் (அவருக்கு மீதியுள்ள பாலைக் கொடுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று (இடப்பக்கத்திலிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்களைக் காட்டிக் கூறினார்கள். எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலப்பக்கமிருந்த) அந்தக் கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் கொடுக்கவில்லை.

மேலும், “(பரிமாறும்போது முதலில்) வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்). வலப்பக்கத்தில் இருப்பவர்களே (முன்னுரிமையுடையவர்கள்)” என்று கூறினார்கள்.

(இறுதியில்) அனஸ் (ரலி) அவர்கள், “இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்; இதுவே நபிவழியாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம் 4129)

ஒரு குடலுக்கு உண்ணல்
ஆற்றிலே போட்டாலும் அளந்து போட வேணடும் என்பார்கள். வயிற்றிலே போட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். சாப்பாடு நல்ல ருசியாக இருக்கிறது என்பதற்காக வாய்முட்ட சாப்பிடக் கூடாது. என்பதை பின்வரும் ஹதீஸ் நமது சிந்தனைக்கு வருகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதருடைய உணவு இரு மனிதருக்குப் போதுமானதாகும். இரு மனிதரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4184)

மேலும்
4185. ”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான். இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 4185)

சாய்ந்து கொண்டு சாப்பிடக் கூடாது
அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்’ என்று கூறினார்கள். (புகாரி 5399)

உணவும் தொழுகையும்
கடுமையான பசியாக இருக்கிறது சாப்பாடு் தயாராக உள்ளது, தொழுகை நேரமும் வந்து விட்டது என்றால் முதலில் சாப்பிட்டு விட்டு தொழும் படி ஹதீஸ் நமக்கு வழி காட்டுகிறது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்.) (புகாரி 5463)

நன்றி கூறல்
சாப்பிட்டு விட்டு, அல்லது தண்ணீரை குடித்து விட்டு அந்த உணவை தந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் உவகை கொள்கிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( முஸ்லிம் 5282)

எனவே நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த அடிப்படையில் சாப்பாட்டை சாப்பிடக் கூடிய பழக்கத்தை அமைத்துக் கொள்வதோடு, சாப்பிட்டப் பின் அந்த உணவை தந்த அல்லாஹ்விற்கு அதிகமாக நன்றி செலுத்தக் கூடிய து ஆக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.
Previous Post Next Post