வேதங்களை நம்புவது

அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட வேதங்களை நம்பிக்கை கொள்ள வேண்டும். குர்ஆன் அவ்வேதங்களை மாற்றம் (நசஹ்) செய்தது என்றும், குர்ஆனுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களில் மாற்றம், திருத்தங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் நம்ப வேண்டும். 
                                                
 மனிதர்களுக்கு வழிகாட்டுவதற்காக அல்லாஹ் மனிதர்களிலிருந்தே அவன் தேர்ந்தெடுத்த நபிமார்கள் மூலம் அருளிய செய்திகளே வேதங்கள் எனப்படும். 
                                                
 வேதங்கள் என்பதற்கு அரபியில் அல்குத்பு எனப்படும். இதன் ஒருமைச் சொல் அல்கிதாப் (வேதம்) என்பதாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட எல்லா நபிமார்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டன. அல்லாஹ்விடமிருந்து வேதம் பெறாத எந்த நபியும் இல்லை. 
                                                
 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ 

 நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை. (அல்குர்ஆன் : 35:24) 
                                                
 كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً  فَبَعَثَ اللّٰهُ النَّبِيّٖنَ مُبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ وَاَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَـقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيْمَا اخْتَلَفُوْا فِيْهِ 

 (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்; அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; (அல்குர்ஆன் : 2:213) 
                                                
 ஒவ்வொரு நபிக்கும் கொடுக்கப்பட்ட வேதங்களின் பெயர்களை அல்குர்ஆன் குறிப்பிடாத அதே வேளையில் ஒரு சில நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதங்களின் பெயர்களை மட்டுமே குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. 
                                                
 தவ்ராத் வேதம் - நபி மூஸா (அலை) அவர்களுக்கும், 
 இன்ஜீல் வேதம் - நபி ஈஸா (அலை) அவர்களுக்கும். 
                                                
 وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ‌ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌ ۙ وَّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّـلْمُتَّقِيْنَ 
 
 இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல்குர்ஆன் : 5:46) 
                                                
 ஜபூர் வேதம் - நபி தாவூத் (அலை) அவர்களுக்கும், 
                                                
 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْ بَعْدِهٖ‌  وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌  وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ 
 
 (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்குர்ஆன் : 4:163) 
                                                
 ஃபுர்கான் (அல்குர்ஆன்) வேதம் - முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 
                                                
 அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட எல்லா தூதர்களையும் பாகுபாடின்றி நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது போல், எல்லா தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன என்பதையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். 
                                                
 وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ 

 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் : 2:4) 
                                                
 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِيْدًا 

 முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும், இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ அவர் வழிகேட்டில் வெகு தூரம் சென்றுவிட்டார். (அல்குர்ஆன் : 4:136) 
                                                
 ஒரு சமூகம் எந்த மொழி பேசியதோ அந்த மொழியிலேயே அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்து, அதே மொழியிலே வேதங்களையும் அருளினான். 
                                                
 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِيُبَيِّنَ لَهُمْ‌ 

 ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; (அல்குர்ஆன் : 14:4) 
                                                
 வேதங்களைப் பெற்றுக் கொண்ட சமூகத்தினரைப் பற்றி அல்லாஹ் கூறும் போது குறிப்பாக யூத, கிறிஸ்தவர்கள் பற்றிக் குறிப்பிடும் போது அவர்கள் தங்களது வேதங்களான தவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதங்களை முறையாக பாதுகாத்திடவில்லை, அதில் திரிபுகள் செய்தனர் என்று குறிப்பிடுகிறான். 
                                                
 مِنَ الَّذِيْنَ هَادُوْا يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ 

 யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்;  (அல்குர்ஆன் : 4:46) 
                                                
 فَبِمَا نَقْضِهِمْ مِّيْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِيَةً‌  يُحَرِّفُوْنَ الْـكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ‌ۙ وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰى خَآٮِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِيْلًا مِّنْهُمْ‌ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ‌  اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ 

 அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் : 5:13) 
                                                
 இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள், இறுதித் தூதர் என்பதனால், அவரது வருகைக்குப்பின் இறைத்தூதர்கள் வரமாட்டார்கள். வருகை முற்றுப் பெற்றதனாலே, எந்தவொரு வேதமும் வழங்கப்படாது. எனவே அல்குர்ஆன் அரபு சமூகத்திற்கு மட்டுமன்றி உலக மக்களுக்குரிய வேதமாகவும், வழிகாட்டியாகவும் அல்லாஹ்வினால் அருளப்பட்டது. 
                                                
 تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ 

 உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். 
(அல்குர்ஆன் : 25:1) 
                                                
 يٰۤـاَيُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمْ بُرْهَانٌ مِّنْ رَّبِّكُمْ وَاَنْزَلْنَاۤ اِلَيْكُمْ نُوْرًا مُّبِيْنًا 

 மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். (அல்குர்ஆன் : 4:174) 
                                                
 ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் தவ்ராத்தின் ஒரு பிரதியைக் கொண்டு வந்து, அல்லாஹ்வின் தூதரே! இதோ இது தவ்ராத்தின் பிரதியாகும் எனக் கூறினார்கள்.   அப்போது நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.   உமர் (ரலி) அப்பிரதியை வாசிக்கலானார்கள்.   அப்போது நபி (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால்) மாறத் தொடங்கியது.   உடனே அபூபக்கர் (ரலி), உமரே! உனக்கு நாசமுண்டாகட்டும் அல்லாஹ்வின் தூதரின் முகத்தை நீர் பார்க்கவில்லையா எனக் கூறினார்கள்.   உடனே நபி(ஸல்) அவர்களின் முகத்தை பார்த்த உமர்(ரலி), அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் கோபத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்.   அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டேன் எனக் கூறினார்கள். 
 அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வை ரப்பாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களை நபியாகவும் பொருந்திக் கொண்டோம் எனக் கூறிவிட்டு, முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, மூஸா (அலை) உங்களுக்கு மத்தியில் வந்தால், என்னை ஏற்று பின்பற்றுவதை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால் வழிகெட்டு விடுவீர்கள். மூஸா (அலை) உயிருடன் இருந்து என் நபித்துவத்தை அடைந்து கொண்டால் அவரும் என்னையே பின்பற்ற வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) நூல்: தாரமி 449. 
                                                
 பாதுகாக்கப்பட்ட வேதம்: 
                                                
 இறுதிவேதமான அல்குர்ஆனை பாதுகாத்திடும் பொறுப்பினை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இன்று வரை எந்த மாற்றமும் திரிபுமின்றி புனித குர்ஆன் மனன வடிவிலும் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. 
                                                
 اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ 

 நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்குர்ஆன் : 15:9) 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
Previous Post Next Post