ரமழானை பயனுள்ளதாக மாற்றுவோம்

தொகுப்பு : ரஸீன் அக்பர் மதனி
அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம்,
சவுதி அரேபியா.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

இந்த ரமழான் மாதத்தின் சிறப்புக்களைப் பற்றி அல்குர்ஆனும் சுன்னாவும் பலதரப்பட்ட சிறப்புக்களை கூறுகின்றன. அதனடிப்படையில் சில சிறப்புக்களைப்பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்

1-அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாக இருக்கின்றனது:

(2:185)شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ
‘(இந்த) ரமழான் மாதம் எப்படிப்பட்டது என்றால், அதில்தான் (புனிதமிக்க) அல்குர்ஆன் இறக்கப்பட்டது.’ (அல்பகரா: 185)

2- ஆயிரம் (1000) மாதங்களை விடச் சிறந்த இரவு இம்மாதத்திலேயே இறுக்கின்றது:

(إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣

‘நிச்சயமாக இதனை நாம் (லைலதுல் கத்ர்) கண்ணியமிக்க இரவில் இறக்கி வைத்தோம். கண்ணியமிக்க இரவு எது என்பதைபற்றி உமக்கு அறிவித்தது எது. கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாகும்.’ (அல்கத்ர்:1-3)

3- கடமையான நோன்பு நோற்கப்படவேண்டிய மாதமாகும் :

(2:185﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
‘உங்களில் எவர் இம்மாதத்தை (ரமழானை) அடைந்துகொள்கின்றாரோ அவர் நோன்பு நோற்றுக்கொள்ளபட்டும்.’ (அல்பகரா : 185)

4- கடமையாக்கப்பட்ட நோன்பை நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தவர்களாகவும் நோற்பதனால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன :

‘ مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ’

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவர்களாகவும் நோன்பு நோற்கிறானோ அவனின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ (புஹாரி, முஸ்லிம்)

5- கடமையான நோன்புக்குரிய கூலியை தானாவே வழங்குவதாக அல்லாஹுத்தஆலா பொருப்பெடுத்துக்கொண்டுள்ளான்:
அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் : ஆதமின் பிள்ளைகளின் அனைத்து செயல்களும் பத்து தொடக்கம் எழுநூறு மடங்குவரை நன்மை கொடுக்கப்படும். அல்லாஹுத்தஆலா கூறுகிறான் : நோன்பைத் தவிர அது எனக்குரியது, அதற்குறிய கூலியை நானே கொடுப்பேன். எனக்காக வேண்டி இச்சையையும் உணவையும் விட்டுவிடுகிறான். (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

6- பாவங்கள் மன்னிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘ஐவேளைத்தொழுகைக்கும் , ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றுமொரு ஜும்ஆவிற்கும், ஒரு ரழமானிலிருந்து மற்றுமொரு ரமழானுக்கு மத்தியிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அவன் பெரும்பாவங்களிலிருந்து தவிர்ந்து கொண்டிருந்தால்.’ (ஆதாரம்: முஸ்லிம்)

7- இம்மாதத்திலேயே சுவனத்தின் வாயில்கள் திறக்கப்ட்டு, நரகத்தின் வாயில்கள் மூடப்பட்டு, ஷைத்தான்கள் விளங்கிடப்படுகின்றனர்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘ரமழான் வந்துவிட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, மேலும் நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்கள் விளங்கிடப்படுகின்றனர். (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

8- இதில் நோன்பாளியின் துஆக்கள் (பிரார்த்தனைகள்) அங்கீகரிக்கப்படக்கூடிய மாதமாகும் :
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படமாட்டாது:
முதலாவது நோன்பாளி நோன்பு திறக்கின்றவரை,
இரண்டாவது நீதியான இமாம்,
மூன்றாவது அநியாயம் இழைக்கப்பட்டவன்.’ (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா, முஸ்னத் அஹ்மத்)

குறிப்பு : இது ஹஸன் தரத்திலான ஹதீஸாகும். இதிலே குறிப்பாக நோன்பாளி நோன்பு திறக்கும்வேளையில் என்றில்லாமல் பொதுப்படையாக வந்துள்ளது. அதாவது நோன்பாளி நோன்பு பிடித்தது தொடக்கம் அவன் நோன்பு திறக்கின்றவரையுள்ள அனைத்து நேரங்களிலும் அவனின் துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. அதேபோன்று நோன்பு திறக்கும்போது கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படுகின்றன என்ற செய்தி பலவீனமானதாகும்.

9- நோன்பு நரகிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு கேடயமாகும் :
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: போராட்டத்திலிருந்து ஒருவனை எப்படி கேடயம் பாதுகாக்குமோ அதுபோன்று நோன்பு நரகிலிருந்து பாதுகாக்கக்கூடிய ஒரு கேடயமாகும்.’ (ஆதாரம் : இப்னு மாஜா)

10- சுவனத்தில் நோன்பாளிக்கு என்று பிரத்தியேகமான நுழைவாயில் உண்டு :
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சுவனத்திற்கு எட்டு வாயில்கள் உள்ளன. அதிலே ரய்யான் என்று சொல்லப்படக்கூடிய வாயிலும் உள்ளது. நோன்பாளியைத்தவிர வேறு எவரும் அவ்வாயிலினூடாக நுழைய மாட்டார்கள்.’ (ஆதாரம் : புஹாரி)

இப்படிப்படிப்பட்ட இன்னும் எத்தனையோ சிறப்புக்களையும், அருள்களையும் கொண்டமாதத்தையும், ரமழானையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு சில விடயங்களைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்…

முதலாவது விடயம்: இரவுத்தொழுகையைப் பேணுதலாகத் தொழுதுவருதல்.

இரவுத்தொழுகை என்பது இஷாத் தொழுகையின் பிற்பாடு பஜ்ர் வரை தொழப்படும் தொழுகைகளுக்கே கூறப்படுகின்றன.
இரவுத்தொழுகையைப் பொருத்தவரையில் அது வருடம் முழுவதும் தொழப்படக்கூடிய தொழுகையாகும். என்றாலும் அதனை ரமழானில் நிறைவேற்றுவதால் சிறப்பான பயனை வைத்திருப்பதாக அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

‘مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ’

‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவர்களாக நின்று வணங்குகிறார்களோ அவர்களின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.’ (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

அதே போன்று

‘مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ’

‘யார் லைலதுல் கத்ர் இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவர்களாகவும் நின்று வணங்குகிறார்களோ அவர்களின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.'(ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

பொதுவாக இரவுத்தொழுகையைப் பொருத்தவரையில் அதனைப் பேணுவது முஃமீன்களின் பண்புகளில் ஒன்றாக இருக்கின்றது. இதனைப் பற்றி அல்லாஹுத்தஆலா பின்வருமாறு கூறுகிறான்

وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا (25:64)

‘இன்னும் அவர்கள் எத்தகையோரெனில், தங்கள் இரட்சகனை ஸுஜுது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக்கழிப்பார்கள்.’ (அல்புர்கான் : 64)

كَانُوا قَلِيلًا مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ ﴿١٧﴾ وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
(51:17-18)

‘இரவில் வெகுசொற்ப நேரமே தூங்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். மேலும், அவர்கள் விடியற்காலைகளில் மன்னிப்புக்கோரிக் கொண்டிருப்பார்கள்.’ (அத்தாரியாத் : 17-18)

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا
(32:16)
‘அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு (தூக்கத்திலிருந்து) விலகிவிடும்ளூ தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும், ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள்.’ (அஸ்ஸஜ்தா : 16)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லலாஹ்வின் தூதர் அவர்களே! வணக்கததிற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருமில்லை என்றும் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சிகூறுவதுடன், ஐவேளைத் தொழுது, (ரமழானில்) நோன்பு நோற்று, ரமழானின் (இரவுகளில்) நின்று வணங்கி, ஸகாத் கொடுத்தால் என்ன கருதுகிறீர்கள் என்று வினவினார். அதற்கு நபியவர்கள் கூறினார்கள் : யார் இந்த நிலையில் மரணிக்கின்றாரோ அவர் இரண்டு உண்மையாளர்களுடனும், (ஒரு) ஷஹீதுடனும் இருப்பார் என்றார்கள். (ஆதாரம் : இப்னு ஹிப்பான்)

பர்ளுத்தொழுகைகளுக்கு பிறகு சிறந்த தொழுகையாக இந்த இரவுத்தொழுகை இருக்கின்றது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘கடமையாக்கப்பட்ட (ஐவேளைத்) தொழுகைகளுக்கு பின்னர் மிகவும் சிறப்பான தொழுகையாக கருதப்படுவது இரவுத்தொழுகையாகும்.’ (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்)

பாவங்களுக்குரிய பரிமாகரமாகவும், தீமைகளுக்கு ஒரு தடையாகவும் இருக்கின்றது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘நீங்கள் இரவுத்தொழுகையை (பற்றிப்) பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக அது உங்களுக்கு முன் இருந்த நல்லடியார்களின் வழக்கமாக இருந்தது, மேலும் அது உங்கள் இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதுடன் பாவங்களுக்குரிய பரிமாகரமாகவும், தீமைகளுக்கு ஒரு தடையாகவும் இருக்கின்றது. (ஆதாரம் : திர்மிதி)

இரவுத்தொழுகையைப் பேணுவதால் சுவனத்தில் அமைதியாக நுழைவதற்கு சந்தர்ப்பமாக இருக்கின்றது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘மனிதர்களே! நீங்கள் உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்புங்கள், உணவும் கொடுங்கள், இன்னும் மனிதர்கள் உறங்கும் வேலையில் தொழுவீர்கள் என்றால் சுவனத்தில் சாந்தியுடனும், சமாதானத்துடனும் நுழைவீர்கள்.’ (ஆதாரம் : திர்மிதி)

இரவுத்தொழுகையையும் பேணுபவர்களுக்கு என்றே சிறப்பான சுவனமொன்று தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘நிச்சயமாக சுவனத்தில் ஒரு அறை இருக்கின்றது. அதன் உள்பகுதி வெளிப்பகுதியிலிருந்தும், வெளிப்பகுதி உள்பகுதியிலிருந்தும் தென்படும். அதன்போது ஒரு கிராமவாசி எழுந்து, இவைகள் யாருக்காக தயார்படுத்திவைக்கப்பட்டுள்ளது? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், யாரின் பேச்சு மிகவும் அழகாக இருக்கின்றதோ இன்னும் உணவும் வழங்குகின்றானோ, நோன்பை வழமையாக்கிக் கொண்டு, மனிதர்கள் உறங்குகின்ற இரவு வேலையில் அல்லாஹ்வுக்காக தொழுகின்றானோ அத்தகையோருக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்கள். (ஆதாரம் : திர்மிதி)

இரவுத்தொழுகையைப் பொருத்தவரையில் கணவன் மனைவிக்கு மத்தியில் பரஸ்பரம் ஞாபகமூட்டக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு
அல்லாஹ் அருள்புரிய வேண்டும் என நபியவர்கள் பிரார்த்தித்தார்கள்:

நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள் : இரவில் எழுந்து (இரவுத்தொழுகையை) தொழுது, தன் மனைவியையும் அதற்காக எழுப்புகின்றபோது அவள் (எழும்ப) மறுக்கின்றபோது அவளின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பாட்டுகின்ற ஒரு மனிதனுக்கு அல்லாஹுத்தஆலா அருள்பாளிப்பானாக. இன்னும் (அதேபோல்) இரவில் எழுந்து (இரவுத்தொழுகையை) தொழுது, தன் கணவனையும் அதற்காக எழுப்புகின்றபோது அவர் (எழும்ப) மறுக்கின்றபோது அவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பாட்டுகின்ற ஒரு பெண்ணுக்கு அல்லாஹுத்தஆலா அருள்பாளிப்பானாக. (ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத், நஸாஈ, இப்னு மாஜா)

இரண்டாவது : அல்குர்ஆனுடனான தொடர்பை அதிகரித்துக் கொள்ளல்

இந்த ரமழான் மாதம் எப்படிப்பட்டது என்றால், இதில்தான் குர்ஆன் இறங்கப்பட்டது என்று அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ

‘ரமழான் மாதம் எப்படிப்பட்டது என்றால் அதில்தான் (புனிதமிக்க) அல்குர்ஆன் இறக்கப்பட்டதாகும்.’ (அல்பகரா: 185)

எனவே, அல்குர்ஆன் இறக்கப்பட்ட இந்த மாதத்தில் அல்குர்ஆனுடன் அதிகமாக தொடர்புவைத்துக் கொள்ளவேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஒவ்வொரு ரமழான் இரவுகளிலும் சந்தித்து அவர்களை அல்குர்ஆனை
ஓதச்செய்பவராக இருந்தார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழானின் ஒவ்வோர் இரவும் -ரமழான் முடியும் வரை- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட அதிகமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ள் நல்லவற்றை வாரி வழங்குவார்கள். (ஆதாரம்: புஹாரி-4997)

அல்குர்ஆன் ஓதுவதனால் நாம் பல நம்மைகளை பெற்றுக்கொள்ளலாம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘யாரேனுமொருவர் அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஓதினால் அவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை என்பது பத்து மடங்குகளாகும். மேலும், நான் அலிப் லாம் மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக, அலிப் என்பது ஒரு எழுத்து லாம் என்பது ஒரு எழுத்து மீம் என்பது ஒரு எழுத்தாகும் (மொத்தமாக அலிப் லாம் மீம் என்பது மூன்று எழுத்துக்களாகும்.) (ஆதாரம் : திர்மிதி)

இன்னும் இக்குர்ஆன் நாளை மறுமையில் அதனை ஓதியவருக்காக பரிந்துரை செய்யக்கூடியதாக இருக்கின்றது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ‘அல்குர்ஆனை ஓதுவீராக , நிச்சயமாக அது நாளை மறுமையில் அதனை ஓதியவருக்கு பரிந்துரை செய்யக்கூடியதாக வரும்.’ (ஆதாரம் : முஸ்லிம்)

மேலும் கூறினார்கள் : ‘(அல்லாஹ்வின்) அடியானுக்கு நோன்பும் , அல்குர்ஆனும் பரிந்துரை செய்யும். நோன்பு கூறும் என் இறைவனே! இந்த அடியானை பகல் நேரத்தில் உணவைவிட்டும், இச்சைகளைவிட்டும் தடுத்திருந்தேன். எனவே, இவனுக்காக எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக என்று கூறும். இன்னும், அல்குர்ஆன் கூறும் இவனை இரவு நேரத்தில் தூங்குவதைவிட்டும் தடுத்தேன். எனவே, அவைகள் இரண்டும் பரிந்துரை செய்யும். (ஆதாரம்: அஹ்மத், தபரானீ, ஹாகிம்)

இந்த குர்ஆனை உடையவர்கள்தான் பூமியில் அல்லாஹ்வின் கூட்டத்தினர்கள்:
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்விற்கு மனிதர்களில் சில கூட்டத்தினர் இருக்கின்றனர் என்றார்கள். அதற்கு (ஸஹாபாக்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே அவர்கள் யார் என்று கேட்டார்கள்? அதற்கு நபியவர்கள் : அல்குர்ஆனின் கூட்டத்தினரே அல்லாஹ்வின் கூட்டத்தினர்’ என்று பதிலளித்தார்கள். (ஆதாரம்: நஸாஈ, இப்னு மாஜா)

மேலும் இந்த குர்ஆனை அதிகமதிகமாக ஓதுவதன் மூலம் நாளை மறுமையில் உயர்ந்த படித்தரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : (நாளை மறுமையில்) அல்குர்ஆனை உடையவர்களுக்கு கூறப்படும் : ஓதுவீராக இன்னும் உயர்ந்து செல்வீராக இன்னும் உலகில் எந்த அடிப்படையில் அழகிய (தஜ்வீத்) முறையில் ஓதினீர்களோ அந்த வகையில் ஓதுவீராக. நிச்சயமாக உன்னுடைய அந்தஸ்த்து (அல்குர்ஆனின்) கடைசி வசனத்தை ஓதுகின்ற இடத்திலேயே உள்ளது. (ஆதாரம்: திர்மிதி, அபூதாவூத்)

இந்த குர்ஆன் மூலமே ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் உள்ளது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘இந்த குர்ஆனைக்கொண்டே ஒரு சமூகத்தை உயர்த்துகின்றான். இன்னும், மற்றவர்களை இதன் மூலம் தாழ்த்துகின்றான்.’ (ஆதாரம் : முஸ்லிம்)

அல்குர்ஆன் ஓதுகின்ற சமூகத்திற்கு அமைதியும், அருளும் இறங்குகின்றது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் வீடுகளிலொன்றில் ஒரு சமூகம் ஒன்றுகூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதியவர்களாக தங்களுக்கு மத்தியில் அதனை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் படித்துக்கொள்கின்றார்களோ அவர்கள் மீது அமைதி இறங்குவதுடன், (அல்லாஹ்வின்) அருள் அவர்களை சூழ்ந்து கொள்வதுடன், மலக்குமார்களும் அவர்களை சூழ்ந்துகொள்கினறனர். இன்னும் அல்லாஹுத்தஆலா இவர்களைப்பற்றி தன்னிடமுள்ளவர்களிடம் நினைவுகூறுகிறான். (ஆதாரம் : முஸ்லிம்)

சிறந்த சமூகம் குர்ஆனை கற்று மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பவரே:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : ‘உங்களில் சிறந்தவர் அல்குர்ஆனை கற்றுக்கொண்டு அதனை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுப்பவரே’ (ஆதாரம் : புஹாரி)

அல்குர்ஆனை அழகிய முறையில் இனிமையா ஓதுவது கடமையாகும்:
இப்படிப்பட்ட சிறப்புக்களைக்கொண்ட அல்குர்ஆனை ஓதுகின்றபோது அழகிய முறையில் இனிமையாக ஓதுவதற்கு நாம் நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘யார் அல்குர்ஆனை (அழகிய முறையில்) குரலெடுத்து (இனிமையாக தஜ்வீத் முறைப்படி) ஓதவில்லையோ அவன் எங்களைச் சார்ந்தவனில்லை’ (ஆதாரம் : புஹாரி)

மூன்றாவது : பாவமன்னிப்புக் கோரல்
மனிதர்களைப் பொருத்தவரைவில் அவர்கள் அடிப்படையிலே பாவங்கள் செய்யக்கூடியவர்கள். இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் : ‘ஆதமின் மக்கள் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே, அவர்களில் சிறந்தவர்கள் யாரென்றால் பாவமன்னிப்பு கேட்பவர்களே’ (ஆதாரம் : இப்னுமாஜா)

நம் வாழ்வில் நம்மை அறிந்தோ அறியாமலே எத்தனையோ பாவங்களை செய்கின்றோம். எனவே, நாம் அதிகமதிகம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரக் கூடியவர்களாக இருக்கவேண்டும். ஏனெனில், அல்லாஹுத்தஆலா தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்காத்துக் கொண்டிருக்கின்றான்.
அல்லாஹுத்தஆலா கூறுகிறான் :
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ

‘(நபியே!) நிச்சயமாக, நானே மிக்க மன்னிக்கிறவன்ளூ மிகக் திருபையுடையவன் என என் அடியார்களுக்குத் தெரிவிப்பீராக!’ (அல்ஹிஜ்ர் : 49)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

‘மேலும் (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக:) ‘நிச்சயமாக நாம், (அவர்களுக்கு) மிகச்சமீபமாக இருக்கின்றேன். அழைப்பாளரின் அழைப்புக்கு, அவர் என்னை அழைத்தால் நாம் பதிலளிப்பேன் ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் (என்னுடைய கட்டளைகளை ஏற்று) எனக்கு பதில் அளிக்கவும் மேலும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.’ (அல்பகரா:186)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ
الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

‘தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையற்றோராக நீங்கள் ஆகிவிடவேண்டாம். நிச்சயமா அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்துவிடுவான் (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன், மிகக்கிருபையுடையவன் என்று (நபியே!) நீர் கூறுவீராக.’ (அல்ஜுமர் : 53)

மேலும், அல்லாஹுத்தஆலா முஃமீனான அடியானின் பண்புகளைப்பற்றி கூறிவிட்டு. பின்னர் அவனுக்கு முரணாக நடப்பவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்குவதாகவும், அவர்களில் மன்னிப்புக்கோரியவர்களுக்கு தீமைகளை நன்மையாக மாற்றிவிடுவதாகவும் பின்வருமாறு கூறுகிறான்.

إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

‘(இப்பாவங்களிலிருந்து) எவர் தவ்பாச்செய்து, விசுவாசமும் கொண்டு நற்செயலும் செய்தாரோ அவரைத்தவிர, எனவே அத்தகையோர் அவர்களுடைய தீமைகளை நன்மைகளாக அல்லாஹ் மாற்றிவிடுவான் மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மிக்க கிருபையுடையவனாக இருக்கிறான்.’ (அல்புர்கான் : 70)

முன்-பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்களே அதிகமாக பாவமன்னிப்பு வேண்டுபவர்களாக இருந்தார்கள் :
இதனைப்பற்றி இப்னு உமர் (றழி) அவர்கள் கூறினார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அமர்வில் (மஜ்லிஸில்) நூறு தடவைகள் ‘ரப்பிஃ பிர்லீ வதுப் அலய்ய இன்னக அன்தத் தவ்வாபுர் ரஹீம்’ என்று கூறுவதை நாங்கள் எண்ணுவதாக இருந்தால் எண்ணக்கூடியவர்களாக இருந்தோம். (ஆதாரம் : அபூதாவூத்)

ஒரு அடியான் பாவத்தை செய்துவிட்டு பின்னர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரினால் அவன் பாவத்தை செய்யாதவன் போலாவன் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘(ஒரு) பாவத்தை செய்துவிட்டு அதன் பின்னர் பாவமன்னிப்பு கேட்பவர், பாவம் செய்யாவதவரைப் போன்றாவார்.’ (ஆதாரம் : இப்னு மாஜா)

எம் மரணம் வரமுன்னர் எம்பாவங்களுக்குரிய மன்னிப்பை இறைவனிடத்தில் கேட்கவேண்டும் :
عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: ‘ إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ ‘.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘நிச்சயமாக அல்லாஹுத்தஆலா அடியானின் பாவமன்னிப்பை அவனின் உயிர் தொண்டைக்குழியை அடையாத வரை ஏற்றுக்கொள்கின்றான்.’ (ஆதாரதம் : திர்மிதி)
ஒரு குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட நேரத்தை மாத்திரம் நாங்கள் பாவமன்னிப்புக்கு என்று வைத்துக்கொள்ளாமல், வாழ்வின் எல்லா விநாடிகளிலும் இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்கவேண்டும். ஏனெனில் எல்லாப்பொழுதுகளிலும் அடியானின் பாவங்களை மன்னிக்கக்காத்துக் கொண்டிருக்கின்றான்.
عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ: ‘إِنَّ اللَّهَ عز وجل يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்கள் : ‘சூரியன் மேற்கில் உதிக்கின்ற வரை நிச்சயமாக அல்லாஹுத்தஆலா இரவு நேரத்தில் தன் கரத்தை விரித்தவண்ணம் உள்ளான் பகல் பொழுதுகளில் பாவம் செய்தவனின் பாவங்களை மன்னிப்பதற்காக. இன்னும், அவன் பகல் பொழுதுகளில் தன் கரத்தை விரித்தவண்ணம் உள்ளான் இரவு நேரத்தில் பாவம் செய்தனின் பாவங்களை மன்னிப்பதற்காக.’ (ஆதாரம்; : முஸ்லிம்)

அல்லாஹுத்தஆலா தன்னிடம் பாவமன்னிப்பு கேட்கும் அடியானை அதிகம் விரும்புகிறான் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (றழி) அன்ஹு அவர்கள் கூறினார்கள். இதற்கு ஒரு சம்பவத்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உதாரணமாக கூறினார்கள் :

‘ஒரு மனிதன் பாலைவனத்தில் தன் ஒட்டகத்துடன் பயணித்துக் கொண்டிருக்கும் வேலையில் ஒரு இடத்தில் இழைப்பாருவதற்காக ஒதுங்கி உறங்குகிறான். பின்னர் அவன் கண்விழித்து பார்க்கின்றபோது அவனது கட்டுச்சாதணங்களுடன் ஒட்டகத்தை காணவில்லை. எனவே, அவன் அதனை தேடலானால் அதனால் அவன் மிகவும் (கலப்படைந்து) தாகம் ஏற்பட்டுவிட்டது. பின்னர், அவன் உறங்கிய இடத்திற்கு திரும்பிச் சென்று மீண்டும் உறங்கினான். சிறிது நேரத்தின்பின் கண்விழித்து பார்க்கையில் அவனது ஒட்டகம் கட்டுச்சாதணங்களுடன் அவன் முன் காட்சியளிக்கின்றது. இதன் மூலம் ஏற்பட்ட மகிழ்ச்சி (வெள்ளத்தின்) காரணமாக (தன்னையறியாமலே) யா அல்லாஹ்! நீ தான் என்னுடைய அடிமை நான் உனது (ரப்பு) எஜமான் என்று மாற்றி கூறிவிட்டான். அல்லாஹ்வோ இந்த மனிதனை விட மிகமிக அதிகமாக தன்னுடைய முஃமினான அடியான் ஒருவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கேட்கும்போது சந்தோஷமடைகிறான்.’ (ஆதராம் : முஸ்லிம்)

மேலும் பாவமன்னிப்பை இறைவனிடம் வேண்டுவதுடன், இன்னும் அவனிடம் சுவனத்தையும் கேட்கவேண்டும். எனவே, நாம் அல்லாஹ்விடம் கேட்கும்போது கஞ்சத்தனமில்லாமல் முழுமையாக கேட்கவேண்டும்:
‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சுவனத்தில் 100 படித்தரங்கள் உள்ளன. அவைகள் அல்லாஹ்வின் பாதையில் போராடியவர்களுக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. (அவற்றில்) இரண்டு படித்தரங்களுக்கு மத்தியிலுள்ளவைகளுக்கு இடைப்பட்டது வானம் பூமிக்கு இடைப்பட்டதைப் போன்ற (விசாலம் உடைய)தாகும். எனவே, நீங்கள் அல்லாஹ்விடம் (சுவனத்தை) கேட்டால் அவனிடம் ‘பிர்தௌவ்ஸ்’ எனும் சுவனத்தை கேளுங்கள். ஏனெனில், அதுதான் சுவனத்தின் மத்தியில் மற்றும் உயரத்தில் உள்ளது. இன்னும் அதற்கு மேலே அல்லாஹ்வின் அர்ஷ் காணப்படுகின்றது. அதிலிருந்தே சுவனத்தின் நதிகள் ஊற்றெடுக்கின்றன.’ (ஆதாரம்: புஹாரி-2790)

எனவே, நாம் அவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்புக்கோர வேண்டும். அந்த அடிப்படையில் பாவமன்னிப்புக்கு என்று சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவைகளை கருத்தில்கொண்டு பாவமன்னிப்புக்கேட்கும் போது முழுமையான பயனை அடைந்துகொள்ளலாம் (இன்ஷா அல்லாஹ்). அவைகளாவன,
1- பாவத்திலிருந்து விடுபடவேண்டும்.
2- தான் செய்த பாவத்திற்காக கவலைப்பட வேண்டும்.
3- மீண்டும் அப்பாவத்தில் பால் மீளமாட்டேன் என்று உறுதிபூண்டுதல்.
4- மற்றவர்களுக்கு அநியாயம் இழைத்திருந்தால், அவர்களிடமே அதற்குரிய மன்னிப்பை வேண்டவேண்டும் பின்னர் அல்லாஹ்விடம் மன்னிப்பு வேண்டவேண்டும்.
மேற்கூறப்பட்டவைகளில் முதல் மூன்று விடயங்களும் அடியானுக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியிலுள்ள விடயங்களுக்கான பாவமன்னிப்புக்கான நிபந்தனைகளாகும். ஆனால், நான்காவது கூறப்பட்ட விடயம் ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் மத்தியில் நிகழ்ந்த விடயத்திற்கானது. ஏனெனில், அடியான் அதனை மன்னிக்காதவரை அல்லாஹ்வும் அதனை மன்னிப்பதில்லை.

எனவே, இந்த ரமழானை பிரயோசமுடையதாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதற்காகவேண்டி மேற்கூறப்பட்ட மூன்று விடயங்களான இரவுத்தொழுகை, குர்ஆனுடனான தொடர்பு, பாவங்களுக்கான மன்னிப்பு போன்ற விடயங்களில் அதிகம் கரிசணை செலுத்தி பேணுதலாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் ரமழானின் முழுமையான பயனையடைந்து கொள்வதற்காக வல்லவன் அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பானாக!

யாரும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

أحدث أقدم