தனியாக ஒருவர் மாத்திரம் ஒரு ஸஃப்பில் மஃமூமாக நின்று தொழுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

"யார் ஸஃப் - வரிசைக்கு பின்னால் தனியாக நின்று தொழுகிறாரோ அவருக்குத் தொழுகை இல்லை" என்று ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

அவ்வாறு தனியாக ஒரு வரிசையில் நின்று தொழுத ஒருவரை மீண்டும் தொழுமாறு நபி (ﷺ) அவர்கள் கூறியதாகவும் இன்னொரு ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

மேற்படி இரு ஹதீஸ்களின் அடிப்படையில் தனியாக ஒருவர் ஸஃப்புடன் சேராமல் தனித்து நின்று இமாமை பின்பற்றித் தொழுவதால் அவரது தொழுகை பாத்திலாகும்; செல்லுபடியாகாது என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். இதுவே சரியான கருத்தாகும்.

எனினும் ஸஃப்பில் இணைந்து கொள்வதற்கு இடமில்லாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு சர்ச்சை இருக்கின்றது. அந்நேரத்தில் மஃமூம் தனியாக நின்று தொழுதால் தொழுகை பாத்திலாகமாட்டாது; செல்லுபடியாகும் என்பதே சரியான நிலைப்பாடாகும்.

எந்த ஓர் ஆத்மாவையும் அல்லாஹ் அதன் சக்திக்கு மேலால் (பொருப்பு சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை.[2:286] 

மற்றும் 

அல்லாஹ்வை உங்களால் முடியுமான அளவு பயந்து கொள்ளுங்கள் [64:16] 

போன்ற  அல்குர்ஆன் வசனங்கள் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. இக்கருத்தை இமாம் அல்பானி மற்றும் இப்னு உஸைமீன் ஆகிய அறிஞர்களும் பின்வரும் ஃபத்வாக்களில் தெளிவுபடுத்தியுள்ளனர்:

இமாம் அல்பானி (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: 
அவர் முடியுமாக இருந்தால் கட்டாயமாக ஸஃப்பில் இணைந்துகொள்ள வேண்டும்; முடியாவிட்டால் தனியாக நின்று (இமாமை பின் தொடர்ந்து) தொழுதுகொள்வார். அவருடைய தொழுகை செல்லுபடியானதே. காரணம் *{அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் ஒரு வசதிக்கு அப்பால் கஷ்டப்படுத்துவதில்லை.}* 
(ஒருவர் தனித்து நின்று தொழுததன் காரணமாக) மீண்டும் தொழுமாறு கட்டளையிடப்பட்ட ஹதீஸை பொருத்தவரையில் ஸஃப்பில் இணைந்து, அதிலுள்ள இடைவெளியை அடைக்க வேண்டும் என்ற வாஜிபை - கட்டாயக் கடமையை விட்டதன் காரணமாக கூறப்பட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஸஃப்பில் இணைந்து கொள்வதற்கு இடைவெளி கிடைக்காதவரோ (மேற்படி கட்டாயக்கடமையில்) குறை செய்தவராக முடியாது. எனவே இந்நிலையில் அவரது தொழுகை செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுப்பது புத்தி சாதுரியமானதல்ல. 
الضعيفة ( 2 / 322 )

இமாம் உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்:
ஸஃப்பில் இணைந்து நிற்பது கட்டாயம் - வாஜிப் என்பதே பலமான கருத்தாகும். எனவே, ஸஃப்பிற்குப் பின்னால் தனித்து நிற்கின்றவருடைய தொழுகை பாத்திலாகும். ஸஃப்பில் இணைந்திருத்தல் என்ற வாஜிபை விட்டதற்காக அவர் மீண்டும் அத்தொழுகையை தொழவேண்டும். ஆனாலும் இந்த வாஜிப் ஏனைய வாஜிப்களை போன்று அதற்குரிய இடம் தவறிவிட்டால் அல்லது மார்க்க ரீதியாகவோ புலனுக்குட்பட்டோ அதனை செய்யமுடியாமல் இருந்தால் அக்கடமை நீங்கிவிடும். ஆதாரம்:
*{உங்களால் முடியுமான அளவு அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்}* என்று அல்லாஹ் கூறுகிறான். 
நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: *(நான் உங்களுக்கு ஏதாவது ஒரு கட்டளையை இட்டால் அதிலிருந்து முடியுமான அளவு நீங்கள் செய்துகொள்ளுங்கள்)* 
எனவே, ஸஃப்பில் இடம் இருந்தால் அதில் இணைந்து கொள்வது அவருக்கு கட்டாயமாகும்; இடம் இல்லாவிட்டால் அவர் மீதிருந்த வாஜிப் நீங்கிவிடும்...
- ஸஃப்பில் இடம் கிடைக்காதபோது ஜமாஅத் தொழுகையை விடுவது ஜமாஅத் தொழுகை என்ற வாஜிபை நிறைவேற்ற சக்தி இருந்தும் அதனை விட்டதாக அமையும்; அதனால் அது பாவம் செய்வதாக அமையும். 
- ஸஃப்பில் இடம் கிடைக்காதபோது ஸஃப்பிற்கு பின்னால் இருந்து ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றினால் முடியுமான அளவு தன் மீது உள்ள வாஜிபை நிறைவேற்றியதாக அமையும்.
- அதாவது ஜமாஅத்துடன் தொழுபவருக்கு இரண்டு விடயங்கள் கட்டாயமாகும்.
 *முதலாவது*: ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றுதல்.
 *இரண்டாவது*: அவர்களுடன்  ஸஃப்பில் இணைந்து நிற்றல்.
இவற்றில் ஒன்றை செய்ய முடியாதிருந்தால் அடுத்ததை செய்வது கட்டாயமாகும்.
ஸஃப்பிற்குப் பின்னால் தனித்து நிற்பவருக்கு தொழுகை இல்லை என்ற ஹதீஸை பொருத்தவரை அவர் ஸஃப்பில் இணைந்து நிற்கவேண்டும் என்ற வாஜிபை விட்டதனால் அவருடைய தொழுகை பாத்திலாகின்றது. எனினும் அதனை செய்வதற்கு அவருக்கு சக்தி இல்லை என்றால் அவர் மீதுள்ள அக்கடமை நீங்கிவிடுகிறது. தனக்கு சக்தி இல்லாத ஒன்றை விட்டதற்காக அவருடைய தொழுகையை நபி (ﷺ) அவர்கள் பாத்திலாக்க மாட்டார்கள்.
இதனை போன்றது தான் *"ஃபாதிஹஹ் ஓதாதவருக்கு தொழுகை இல்லை"* என்ற ஹதீஸும். எனவே, ஃபாதிஹஹ் ஓத முடியாதவர் அதனை ஓதாமலேனும் குர்ஆனில் தன்னால் முடியுமானதை ஓதித் தொழவேண்டும்...

-ஸுன்னா அகடமி
أحدث أقدم