தவ்ஹீத் பிரச்சாரமும் ஆட்சியை முன்னிலைப்படுத்தும் இயக்கங்களது தஃவாக்கள நிலையும்

எழுதியவர் : முஜாஹித் இப்னு ரஸீன் (6 November 2011)

‘தவ்ஹீத் சொல்லப்பட வேண்டும். ஷிர்க், பித்அத்கள் எதிர்க்கப்பட வேண்டும். ஆயினும் இவற்றை விட முதன்மைப் படுத்தப்பட வேண்டியது இஸ்லாமிய ஆட்சியும், அதற்கான திட்டங்களும், வழிவகைகளும்தான்’ என்று பிரசாரம் செய்து வருகின்ற இரு இயக்கங்களான ஜமாஅத்தே இஸ்லாமி, டீ,ஏ என்றழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமூன் ஆகிய இயக்கங்கள் தஃவாக் களத்தில் என்ன செய்தன? தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன? தவ்ஹீத் பிரசாரம் பற்றிய இவ்வியக்கங்களின் பார்வை என்ன? தவ்ஹீத் பிரசாரம் புரியும் அமைப்புக்களையும், தனிமனிதர்களையும் இவர்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்கள்? போன்றவற்றை இதனூடே அலச விளைகின்றோம்.

தவ்ஹீத் பிரசார வரலாறு ஒரு சுருக்க அறிமுகம்:

தவ்ஹீத் பிரசாரத்தின் கடந்த கால, நிகழ்கால வரலாற்றை மேலோட்டமாய் பர்த்து விட்டு மேற்படி விடயத்துக்குள் நுழைவது பொருத்தமானது என்பதால் அது தொடர்பில் சில அம்சங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் ஆரம்பிக்கப்பட்ட தவ்ஹீத் பிரசாரம் 1948ல் தான் இலங்கையில் அமைப்பு ரீதியாக அப்துல் ஹமீத் பக்ரீ (ரஹ்) அவர்களால் உத்வேகம் பெற்றது. மகான்களின் பெயரால், மத்ஹபுகளின் பெயரால், நபிகளாரின் பெயரால், இஸ்லாத்தின் பெயரால் அன்று நிலை கொண்டிருந்த ஷிர்க், பித்அத்கள் அனைத்தும் எதிர்கப்பட்டன. தம்மால் முடிந்த போது ஆங்காங்கே காணப்பட்ட சில கப்ர்கள் தகர்க்கப்பட்டன. அதன் விளைவாக தவ்ஹீத் பிரசார மையங்களாகக் காணப்பட்ட ஓலைகளால் ஆன சில பள்ளிவாயில்கள் எரிக்கப்பட்டன. இவ்வாறான இன்னல்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தில் மார்க்கம் எனும் பேரில் காணப்பட வழிகேடுகள், பிரமதக் கலாசாரங்கள், மூடநம்பிக்கைகள் அனைத்திற்கும் எதிராகவே இப்பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. இவ்வாறு இப்பிரசாரத்தை அன்று முதல் இன்று வரை முன்னெடுக்கும் ஒர் அமைப்புத்தான் பரகஹதெனியவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஜம்இய்யத்து அன்ஸாரிஸ்ஸுன்னத்தில் முஹம்மதிய்யவாகும்.  பலத்த சிரமங்களுக்கிடையில் தேசிய ரீதியில் ஆரம்ப காலங்ளில் தவ்ஹீத் பிரசாரத்தைக் கொண்டு சென்றதில் இந்த ஜம்இய்யாவின் பணி அளப்பரியது. இதன் போது வன்முறைகளோ, அடிதடிகளோ, கொலை முயற்சிகளோ எதுவும் பிரயோகிக்கப்படவில்லை. இன்று வரை இந்த இலட்சணங்கள் அன்றிருந்தவாறே காணப்படுகின்றன. இதைக் கடைபிடிப்பதில் தவ்ஹீத் சகோதரர்கள் தாராளத் தன்மையோடு இன்றைக்கும் நடந்து கொள்வது அல்லாஹ் செய்த மிகப்பெரும் அருளெனலாம். ‘அல்குர்ஆனையும் ஸுன்னாவையும் பின்பற்றுங்கள்’ என்பதே தவ்ஹீத் பிரசாரத்தின் உயிர்நாடியாகவிருந்தது.

 இவ்வாறு உயர்ந்த இலக்கிற்காக மக்களிடம் முறையாக முன்வைக்கப்பட்ட இப்பிரசாரம் வன்முறைகளால் எதிர்கப்பட்டது. இவ்வடிப்டையில் நிருமானிக்கப்பட்ட பள்ளிவாயில்கள் எரிக்கப்பட்டன. உடைக்கப்பட்டன. தமது கொள்கையைப் பிறரிடம் திணிக்காது நபிவழிப் படி தொழுகையில் விரலசைத்த சகோதரர்களின் விரல்கள் உடைக்கப்பட்டன. இது அற்பமான ஸுன்னத்தா அளப்பெரியதா இது தேவைதானா என்ற கொச்சை ஆய்வுகளுக்கு அப்பால் நின்று கருத்துரிமை என்ற இடத்தில் இருந்து நோக்கினால் இது மிகப் பெரும் அநீதி என்பதை உணரலாம். இதற்கான வழக்குகள் இன்றுவரை நடைபெறுகின்றன. அல்லாஹ்வின் அருளால் இன்று இலங்கையின் நாலா பக்கங்களிலும் தௌஹீத் பிரசாரம் வேரூன்றிவிட்டதால் அதை முன்னெடுப்பதற்காகவென்று பல்வேறு அமைப்புக்கள் உருவாகி அழைப்புப் பணியை தம்மால் முடிந்தளவில் கொண்டு செல்கின்றன. முஸ்லிம்களை மட்டும் இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பிரசாரப் பணியில் பிர மதத் தோழர்கள் மையப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தவ்ஹீத் பிரசார அமைப்புகளின் முன்னெடுப்புக்கள்:

அழைப்புப் பணிக்கப்பால் தேசிய ரீதியில் பல்வேறுபட்ட சமூகப் பணிகள் தவ்ஹீத் இயக்கங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அனர்த்தங்கள், அழிவுகளால் பாதிப்புற்றமக்களுக்கு மனிதாபிமானப் பணிகள் செய்வதில் தவ்ஹீத் அமைப்புக்களின் வகிபாகம் தவிர்க்க முடியாதவொன்றாகக் காணப்படுகின்றது.

இப்பேற்பட்ட  பணிகளைப் புரியும் தவ்ஹீத் அமைப்புக்கள் தமது பிரசாரப் போக்கில் ஏனைய அமைப்புக்களிலிருந்தும் பிரிந்து நிற்பதற்கு அடையாளமாகவுள்ள பிரதான அம்சம் யாதெனில்,  தாம் எங்கு பிராசாரம் செய்தாலும் அங்கு காணப்படும் இஸ்லாத்துக்கு முரணாண விடயங்களை முதலில் சுட்டிக்காட்டுவதாகும். இதன் போது தமக்கு என்ன நேர்ந்தாலும் அதைப் பற்றி ஒருக்காலும் அவை கவலைப்படுவதில்லை. ‘தம் அமைப்பிற்கு ஆள் குறைந்து விடும், கிடைத்த சந்தர்ப்பம் நழுவி விடும்’ என்றெல்லாம் ஒரு போதும் அவை பிரசாரப் பணியில் வளைவு, நெலிவை ஏற்படுத்துவதில்லை.

    உதாரணமாகச் சொல்வதாயின், ஓரிடத்தில் அவ்லியா கௌரவிப்பு என்ற பேரில கப்ர் வணக்கம் நடைபெறுகின்றதென்றால் அவ்விடத்தில் தமக்கு மார்க்கத்தைச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கின்றதென்றால் நிரந்தர நரகில் தள்ளும் பெரும் பாவமான அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் கப்ர் வணக்கத்தைச் சுட்டிக்காட்டாமல் நற்பண்புகள் பற்றியும், ஒற்றுமை பற்றியும் தவ்ஹீத் அமைப்புக்கள் அவ்விடத்தில் பேசமாட்டாது. மாறாக கப்ர் வணக்கத்தைப் பற்றியே அவ்விடத்தில் அவை பேசும். இதனால் தவ்ஹீத் பிரசாரத்துக்கு பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பின. ‘காதியானியாவாக இருந்தாலும் சரியே, ஷீஆவாகவிருந்தாலும் சரியே, கப்ர் வணங்கியானாலும் சரியே, எதுவானாலும் சரியே, அவற்றையெல்லாம் விட்டு விட்டு எல்லோரையும் முஸ்லிம்களாய் பார்ப்போம்’ என்ற கருத்தை தவ்ஹீத் அமைப்புக்கள் ஒருபோதும் பிரசாரம் செய்யவில்லை. ஏற்பதுமில்லை. எதையும் தெளிவாக முன்வைக்கும் இப்பிரசாரப் போக்கினால் தவ்ஹீத் அமைப்புக்கள் பெரும் சிக்கல்களைச் சந்தித்தாலும் அவற்றின் பிரசாரப் பணியில் நபிமார்கள் இணைவைப்பிற்கு எதிராகப் பிரசாரம் செய்யும்போது ஏற்பட்டதைப் போல எங்கும் எதிர்ப்புக்கள் எழுந்தன. இருந்தாலும் இவற்றுக்கு மத்தியில்தான் சுமார் 50 வருடங்களாக மற்றைய அமைப்புக்களைப் போன்று தலைமைத்துவமோ, அங்கத்துவர்களை திருப்திப்படுத்தும் திட்டங்களோ இல்லாமல் இலங்கையில் மிகப் பெரும் வளர்ச்சியை தௌஹீத் கொள்கை எட்டியுள்ளது. தேசியளவில் எந்தப் பகுதியிலும் இன்று தவ்ஹீத் பேசும் சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பது அல்லாஹ் சத்தியத்துக்கு வழங்கிய வெற்றியின் வெளிப்பாடு எனலாம். ஆயிரம் திட்டங்களோடும், ஊழியர்களோடும், தலைமைகளோடும் பழங்காலமாக இலங்கையில் இயங்கி வரும் ஏனைய இயக்கங்கள் இத்தகைய வளர்ச்சியைக் காணாவில்லையென்பதும் கவனிக்கத்தக்கதாகும். அதற்காகத் தவ்ஹீத் பேசுபவர்கள் எல்லோரும் புனிதர்கள், சுவர்க்க வாசிகள் என்று கூறுவதாக விளங்கக் கூடாது. தவ்ஹீத் பேசுபவர்களிடம் பல் வேறு தவறுகள் மார்க்கத்தின் பெயராலும், ஏனைய அம்சங்களின் பேராலும் ஏற்பட்டுள்ளன. அவற்றைச் சுட்டிக் காட்டி வெளிப்படையாகவே  உபதேசங்கள் அவ்வப்போது இடம் பெறுகின்றன. இம்மாதிரியில்தான் இலங்கைத் தவ்ஹீத் அமைப்புக்களின் நிலை காணப்படுகின்றது.

தவ்ஹீத் பிரச்சார அமைப்புக்களை நோக்கிய விமரிசனங்களும் விளக்கங்களும்:

இவ்வாறு பிரசாரம் செய்யும் இவ்வமைப்புக்களைப் பார்த்து இஸ்லாமிய ஆட்சி பற்றிப் பேசும் இயக்கங்களான டீ,ஏ என்றழைக்கப்படும் இஹ்வானுல் முஸ்லிமூன், ஜமாஅத்தே இஸ்லாமி ஆகியன பல்வேறுபட்ட விமரிசனங்களை செய்துவருகின்றன.

அவற்றில் ஒன்று:

 ‘விரலாட்டுவதும், தொழுகையில் நெஞ்சில் கைவைத்து தக்பீர் கட்டுவதும், கப்ருடைப்பதும்தான் இவர்களுக்கு என்றைக்கும்…….. ஈராக்கைப் பார்க்க வேண்டாமா?…… பலஸ்தீனைப் பார்க்க வேண்டாமா……? கஷ்மீரிலும், செச்னியாவிலும் நடப்பதை அறிய வேண்டாமா…..? அங்கே எத்தனை குழந்தைகள் கொல்லப் படுகின்றார்கள் என்று தெரியுமா……? இன்னும் என்னென்ன கொடுமைகள் அங்கே நடைபெறுகின்றன என்று தெரியுமா…………….?’
என்பதுதான். ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் இவைகளெல்லாம் தெரியும் போலவும், தவ்ஹீத் அமைப்புக்களுக்கு இவை பற்றி எதுவுமே தெரியாது போலவும் இவ்வியக்கங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றன. தவ்ஹீத் பேசும் நாங்கள் சர்வதேச ரீதியில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றித் தெரிந்துள்ளோம். அல்லலுறும் நம் சொந்தங்களுக்காய் மறைமுகமாய் நம்மால் முடிந்தளவில் உதவுகிறோம். பிராத்திக்கின்றோம். இவை அவர்களுக்காய் நாம் செய்பவை. இவற்றை நாம் எவருக்கும் விளம்பரம் செய்வதில்லை. ஆனால் நாம் பலஸ்தீனையும், ஈராக்கையும்………….வைத்துப் பிழைப்பு நடாத்துவதில்லை. பாடல் வெளியிடுவதில்லை. சினிமா எடுப்பதில்லை. இவற்றுக்கு செலவாகும் பணத்தையெல்லாம் சேர்த்து பாதிப்புற்ற மக்களுக்கு அனுப்புகின்றோம் இவைதான் நாம் செய்பவை. ஆனால் இவ்வியக்கத்தவர்கள் தவ்ஹீத் பேசும் நாம் நமது பிரசாரத்தினால் முஸ்லிம்களுக்குள் பிளவேற்படுத்துவதாகவும், பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதாகவும் தவறான கருத்துக்களை மக்களிடையே விதைக்கின்றனர். இது நமைப் பற்றிய அவர்களின் ஒரு வகையான பார்வையாகும்.

பின்வரும் வகையிலும் விமரிசிக்கின்றனர்:

‘தவ்ஹீத் பேசுபவர்களுக்கு விரலாட்டுவதும், தொழுகையின் போது நெஞ்சில் கைவைத்து தக்பீர் கட்டுவதும், கப்ருடைப்பதும்தான் தெரியும், இயக்கங்களை அணுசரித்துப் போகத் தெரியாது. அணுகுமுறை சரியில்லை……’ என்ற கருத்து பொதுவாக இந்த இயக்கத்தவர்களிடம் காணப்படுகின்றது. ‘நீங்களும், நாங்களும் ஒன்றுதான்…….’ என்று சமாளிப்பதற்காக சில வார்த்தைகளை அவர்கள் நம்மிடம் கூறினாலும் உத்தியோகபூர்வமாகத் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் போது இவ்வாறுதான் கூறுவார்கள். தவ்ஹீத் பேசும் இரு அமைப்புக்களிடையில், நபர்களுக்கிடையில், குழுக்களுக்கிடையில் ஏதாவது மார்க்கப் பிரச்சிணை ஏற்படுமாயின் அவர்களில் தமது கருத்துக்கு சார்பானவர்களிடம் சென்று ‘பாருங்கள் இவர்களுக்கு இன்னும் இது விளங்கவில்லையே’ என்று தவ்ஹீத் பேசும் மற்றத் தரப்பைப் போட்டுக் கொடுக்கும் வழக்கமும் இவர்களிடமுண்டு. உதாரணமாகச் சொல்வதாயின், உள்நாட்டுப் பிறையா? வெளிநாட்டுப் பிறையா? என்ற சர்ச்சசையில் உள்நாட்டுப் பிறைக்கு சார்பான தவ்ஹீத் சகோதரர்களை ஆதரித்தும், சர்வதேசப் பிறையைப் பின்பற்றும் தவ்ஹீத் சகோதரர்களை எதிர்த்தும் இவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதைக் குறிப்பிடலாம். தவ்ஹீத் சகோதரர்களில் ஒரு சாரார் தமக்குப் பின்புலமாயுள்ளனர் என நினைத்துக் கொண்டு சர்வதேசப் பிறையை ஆதரிக்கின்ற தவ்ஹீத் சகோதரர்களை கிண்டல் செய்யும் தொணியில் ‘அமாவாசையில் பிறை பார்க்கிறார்கள்’ என்றெல்லாம் விமரிசிக்கின்றனர். இது இக்லாஸோடு செய்யப்படும் விமரிசனமன்று, மாற்றமாக தவ்ஹீத் சகோதரர்களைக் கேலி செய்யும் நோக்கோடு வெளிப்படுத்தப் படுபவையே. தவ்ஹீத் சகோதரர்களிடம் காணப்படும் சில கருத்து வேறுபாடுகளை வைத்துக் கொண்டு தாம் நினைத்தவாறெல்லாம் தவ்ஹீத் சகோதரர்களை இவர்கள் விமர்சனம் செய்கின்றனர். ‘ஸலபிகள், கலபிகள், குறாபிகள் என்றெல்லாம் பிரிக்கக் கூடாது எல்லோரையும் முஸ்லிம்களாகவே பார்க்க வேண்டும்’ என்று கூறி, தவ்ஹீத் சகோதரர்களிடம்தான் இவ்வாறான பாகுபாடுகள் காணப்படுவதாக இவர்கள் ஒரு சஞ்சிகையில் எழுதினர். அப்படியாயின், ‘ஸலபிகள், கலபிகள், குறாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத் என்றெல்லாம் பிரிக்கக் கூடாது எல்லோரையும் முஸ்லிம்களாகவே பார்க்க வேண்டும்’ என்று சொல்வது பொருத்தமாகவிருக்கும் என்று அதற்கு பதில் கூறலாம். ஸலபிகள், கலபிகள், குறாபிகள் எனப்பிரிப்பது பிரிவினையாயின், ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத் என வகுப்பதும் பிரிவினைதான். ஆகவே இந்த அனைத்து அமைப்புக்களையும் பிரிவினையாகக் குறைகண்டு அதன் பின்பு ‘ஸலபிகள், கலபிகள், குறாபிகள், ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத் என்றெல்லாம் பிரிக்கக் கூடாது எல்லோரையும் முஸ்லிம்களாகவே பார்க்க வேண்டும்’என்று கூறினால்தான் ஒரு வாதத்துக்கேனும் இந்த ஒற்றுமைக் கோஷத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்பதை இவர்கள் உணர வேண்டும்.

இவர்களால் முன்வைக்கப்படும் இன்னொரு விமரிசனம்:

 ‘தவ்ஹீத் பேசுபவர்களுக்கென்று தலைமைத்துவமில்லை, திட்டமிடல் இல்லை, பண்பாடில்லை, இலக்கொன்றில்லை……. ஆனால் நமக்கென்று தலைமையுள்ளதுளூ படித்தரங்களுள்ளன. கிளைகள் காணப்படுகின்றனள. அங்கத்தவர்களிடையே முறையான பிணைப்புக்காணப்படுகின்றது…………’ போன்ற வார்த்தைகளால் நம்மைப் பார்த்து குறைகூறுகின்றார்கள். இவ்வாறு கூறி நம்மில் சிலரையும் அவர்கள் வென்றெடுத்துள்ளார்கள். நாளை மறுமையில் அல்லாஹ் நம் எல்லோரையும் எழுப்பி, ‘ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் எங்கே?, சரி, நீங்கள் ஒரு தலைமைத்துவத்திலிருந்தீர்கள்.’ டீஏ இயக்கத்தவர்களெல்லாம் வாருங்கள். நீங்களும் ஒரு தலைமைத்துவத்தில்தான் இருந்தீர்கள்.’ ‘தவ்ஹீத் கருத்திலுள்ளவர்களெல்லாம் வாருங்கள், நீங்கள் மட்டும் ஏன் ஒரு தலைமையில் இயங்கவில்லை. பிரிந்து கிடந்தீர்கள்’ என்று விசாரிப்பானா?, அனைத்து அமைப்புக்களையும் பார்த்து ‘எல்லோரும் ஒரே தலைமையின் கீழ் இயங்காமல் ஏன் பிரிந்து இருந்தீர்கள்?’ என்று விசாரிப்பானா? ஜமாஅத்தே இஸ்லாமி என்று சொல்லி அதற்கொரு தலைமையிருந்து அதற்குக் கட்டுப்பட்டால் போதும் அதுதான் தலைமை…….. என்ற மாதிரியல்லவா இவர்களின் கருத்து இருக்கின்றது.

ஆகவே தலைமைத்துவம் என்பது இவர்கள் சொல்வதைப் போன்றன்று. அது விசாலமான ஓர் அத்தியாயமாகும். நபியவர்களின் தலைமைத்துவத்திற்குப் பின்னால் அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடுத்த தலைமைத்துவம் வரும் வரையில் தவ்ஹீத் அமைப்பு இப்படித்தான் இருக்கும். தவ்ஹீதைப் பிரசாரம் செய்ய பல அமைப்புக்கள் காணப்படலாம். அவை தேசத்துக்குத் தேசம் வேறுபடலாம். ஆனால் அவை தவ்ஹீதுக்கு உரிமையாளர் கிடையாது. எனவே தவ்ஹீதுக்கு அங்கத்துவப் படிவமும் கிடையாது. யாரெல்லாம் தவ்ஹீத் கருத்தை மனதாற ஏற்கின்றார்களோ மறுகனமே அவர்கள் தவ்ஹீத்வாதிகளாக மாறிவிடுவார்கள் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்களின் இன்னொரு விமரிசனம்:

‘ஊரூராய்ப் போனார்கள் உம்மத்தை இரண்டாக்கி விட்டார்கள்’ என்று நம்மைக் குறை சொல்கின்றார்கள். தவ்ஹீத் சகோதரர்கள் யாரும் எங்கேயும் இன்னொருவரிடம் தமது கருத்துக்களைத் திணிக்கவில்லை. யாருக்கும் தமது கருத்தைப் பின்பற்றும் உரிமையுண்டு என்பதால் தமது கொள்கையை அவர்கள் பின்பற்றுகிறார்கள் இதனால் அவர்கள் அடிக்கப்படுகிறார்கள். இங்கு தவறு எத்தரப்பால் ஏற்படுகின்றது என்பதை யாரும் தெரிந்து கொள்வர். இதை வைத்துத்தான் நம்மை ‘குழப்பவாதிகள்’ என்று இவர்கள் கூறுகின்றனர்.

தப்லீக் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களால் தவ்ஹீத் சகோதரர்கள் தாக்கப்பட்டால் ‘தாக்கியவர்கள் அசல்களல்ல, நகல்களே’ என்று அதற்கு விளக்கம் சொல்வதைப் பார்க்கலாம். அப்படியென்றால் தவ்ஹீத் அமைப்பில் இவ்வாறு நகல்கள் இல்லையா?, இருந்தால் ஏன் அவர்கள் இவ்வாறு அடிப்பதில்லை??.இவ்வாறான ரௌடிக்கலாசாரத்தை டீஏ இயக்கமும் தற்போது கையிலெடுத்து விட்டது. இந்தியாவில் இது துவங்கி விட்டது. இலங்கையிலும் துவங்கப் போகின்றது.

தவ்ஹீத் பிரச்சார அமைப்புகளுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகள்.

1- ஜமாஅத்தே இஸ்லாமி என்பது ஒரு கொள்கையின் பெயரல்ல. அது ஓரியக்கத்தின் பெயராகும். இதுபோலத்தான் டீஏ, தப்லீக் ஜமாஅத் போன்ற பெயர்களும். இவை ஒரு கொள்கையின் பெயரல்ல. குறிப்பிட்ட இரு இயக்கங்களின் பெயர்களாகும். எனவேதான் ஜமாஅத்தே இஸ்லாமிவாதி, டீஏ வாதி, தப்லீக் ஜமாஅத் வாதி என்று யாரும் அழைப்பதில்லை. ஆனால் தவ்ஹீத் பேசும் ஒருவரைப் பார்த்து ‘இவர் ஒரு தவ்ஹீத் வாதி’ என்று சொல்லப்படுவதைப் பார்க்கின்றோம். ‘தவ்ஹீத்’ என்பது ஒரு கொள்கையென்பதாலேயே இவ்வாறு வழங்கப்படுகின்றது. எனவே தவ்ஹீத் இயக்கங்கள் என நாம் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதே நாம் கொண்டுள்ள கொள்கையை அடிப்படையாக வைத்துத்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஆகவே தவ்ஹீத் கொள்கையை பல இயக்கங்கள் பிரசாரம் செய்யலாம், அவை இன்று நேர் வழியிலிருந்து நாளை வழிதவறலாம் என்றிருந்தாலும் இவ்வியக்கங்கள் பிரசாரம் செய்த தவ்ஹீத் கொள்கை ஒரு போதும் வழிகேடாகமாட்டாது. அது என்றைக்கும் சத்தியமே என்பதை மனதில் ஆழமாய் பதித்துக் கொள்ள வேண்டும்.

2- ஜமாஅத்தே இஸ்லாமியை ஆதரிப்பவர்களும், டீஏ வை ஆதரிப்போரும், தப்லீக் ஜமாஅத்தை ஆதரிப்போரும் ‘நாமும் தவ்ஹீத் வாதிகள்தான்’ என்று கூறுவார்கள். ஆனால் தவ்ஹீத் வாதிகள் யாருமே ‘நானும் ஜமாஅத்தே இஸ்லாமிதான்’ அல்லது ‘நானும் டீஏதான்’ அல்லது ‘நானும் தப்லீக் ஜமாஅத்துத்தான்’ என்று கூறமாட்டார்.  ஏனென்றால் இவைகளெல்லாம் வெறும் இயக்கங்கள் ஆனால் தவ்ஹீத் என்பது ஒரு கொள்கையாகும். அதனால்தான் அவர் தன் கொள்கையை விட்டு விட்டு வேறோர் இயக்கத்தைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்துவதை விரும்புவதில்லை. இந்த பலமான கொள்கை உறுதியானது நமது சஞ்சிகைகளிலும், இன்னோரன்ன தஃவா நடவடிக்கைகளிலும் தெளிவாகத் தெரியக் கூடியதாகவுமுள்ளது.

3- ஏனைய இயக்கங்களைப் பார்ப்போமானால் கட்டுப்பாடுமிக்க ஒரு தலைமைத்துவமொன்று அங்கு காணப்படும், ஆனால் தவ்ஹீத் சகோதரர்களுக்கு இவ்வாறான தலைமைத்துவமொன்றில்லை. ஆனாலும் இதை நாம் ஒரு குறையாகக் கருதமாட்டோம். ஒரு நிரையாகவே கருதுகிறோம். தவ்ஹீத் பிரசாரம் செய்யும் அமைப்புக்களுக்கு தலைமைத்துவமொன்று அவசியமென்றாலும் தவ்ஹீத் என்ற கொள்கைக்கு தலைமைத்துவமொன்று வரமுடியாது. இஸ்லாமிய ஆட்சியொன்று வந்து தலைமைத்துவமொன்று ஏற்பட்டாலேயன்றி வேறொரு தலைமைத்துவமொன்று தவ்ஹீத் கொள்கைக்கு வரமுடியாது. இயக்கத் தலைமைகளுக்கு இஸ்லாத்தில் ஒரு பெறுமதிமிக்க வசனமும் கிடையாது. இஸ்லாமியத் தலைமை ஒன்றுக்கே அனைத்துப் பெறுமதியும் உண்டு. எனவே இந்த இயக்கங்களுக்குள் சுருங்கிய தலைமைகளால் அங்கத்துவர்கள் மாத்திரம் சந்தோசப்படலாம்.

4- தவ்ஹீத் அமைப்பைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இயக்கங்களிலும் அங்கத்தவர்களிடம் ‘பைஅத்’ பெறும் வழமை காணப்படுகின்றது.  ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ, தப்லீக் ஜமாஅத், ஏத்தாளையிலுள்ள ஜமாஅத்துத் தக்பீர்(காபிராக்கும் ஜமாஅத்) போன்ற எல்லா இயக்கங்களிலும் தலைவரிடம் பைஅத் பெறும் வழமையுள்ளது. ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தில் இவ்வாறான வழமையொன்று கிடையாது. இது தவ்ஹீத் பிரச்சாரத்திற்கும் ஏனைய இயக்கங்களுக்குமிடையில் உள்ள மிக முக்கிய வேறுபாடு. தவ்ஹீத் வாதிகளின் சிந்தனைகள் பூட்டுப்போடப்படாமல் இருப்பதற்கும் ஏனைய அமைப்பினர் மார்க்கவிடயங்களை கண்மூடி ஏற்பதற்கும் இந்த வேறுபாடே மிக முக்கிய காரணம்.

5- பொதுவாக மற்ற இயக்கங்களில் ‘படிமுறை செயற்திட்டம்’ என்றொரு முறை காணப்படுகின்றது. உதாரணமாகக் கூறுவதென்றால் தமது இயக்கத்தை ஆதரிப்பவருக்கு முஅய்யித் என்றும், அமைப்பில் இணைந்தவருக்கு முன்தஸிப் என்றும் உயர்பீடத்திலுள்ளவருக்கு ஷுரா அங்கத்தவர் என்றும் படிமுறையடிப்படையில் பட்டம் வழங்கப்படுவதைக் கூறலாம். ஓவ்வொரு ஜமாஅத்திலும் இந்தப் பெயர்களில் வித்தியாசம் காணப்பட்ட போதிலும் விடயம் ஒன்றாகவேயுள்ளது. ஆனால் தவ்ஹீத் அமைப்பில் இவ்வாறான படிமுறையொன்று இல்லை. ஏனெனில் இதை யாராலும் துல்லியமாகக் கணித்துச் சொல்ல முடியாது. இயக்கம் நடத்துகிறோம் என்பதற்கு வேண்டுமென்றால் இது பிரயோஜனப்படலாம்.

6- தவ்ஹீத் அமைப்பானது, விளைவுகளை வைத்து, எவ்வாறு பிரசாரம் செய்ய வெண்டும்? எதைப் பிரசாரம் செய்ய வேண்டும்? என்று எடைபோடுவதில்லை. உதாரணமாக 50 வருட நமது தஃவாப் பணியில் வீழ்ச்சிகளை நாம் சந்தித்துள்ளோம் என்றால் இதை வைத்து தஃவாவுக்காக நாம் மேற்கொண்ட மொத்த முயற்சியையுமே குறை காணமாட்டோம். மாற்றமாக ‘இது அல்லாஹ் தந்த முடிவென்றே எண்ணுவோம்’. ஏனென்றால் உலகில் முதல் இறைத்தூதரான நபி நூஹ் (அலை) அவர்கள் 950 வருடம் தஃவாப் பணிசெய்தார்கள். ஆனால் வெறும் அறுபது நபர்களே இதை ஏற்றார்கள். அதே நேரம் நபி(ஸல்) அவர்கள் 23 வருடம் பிரசாரம் செய்து மிகப்பெரும் வெற்றி பெற்றார்கள். இதை வைத்து நபி(ஸல்) அவர்கள் திட்டமிட்டு, திறமையாக பிரசாரம் செய்தார்கள் என்றும், நூஹ் (அலை) அவர்கள் திட்டமிடவில்லை, திறமையாக பிரசாரம் செய்யவில்லையென்றும் நாம் கூறமாட்டோம். மாற்றமாக இருவரும் முயற்சியை சரியாக எடுத்தார்கள் வேறுபட்ட இரு முடிவுகளை அல்லாஹ் கொடுத்தான் என்றுதான் சொல்வோம். இதனால்தான் எதிர்ப்புக்களின் போது தவ்ஹீத் பிரச்சார அமைப்புக்கள் கொள்கையைத் தளர்த்துவதில்லை.

7- ஏனைய இயக்கங்களைப் பார்ப்போமாயின் தமது இயக்கத்தவர்கள் செய்யும் தவறுகளைப் பகிரங்கமாகச் சுட்டிக் காட்டமாட்டார்கள். தமக்குள்ளேயே இரகசியமாகப் பேசிக்கொள்வார்கள். சுட்டிக்காட்டிக்கொள்வார்கள். காரணம் ஒரு முஃமினது குறையை மறைப்பது கடமையெனச் சொல்லி ஈமானை இயக்க எல்லைக்குள் அடக்கிக்கொள்வார்கள். ஆனால் தவ்ஹீத் சகோதரர்களைப் பொருத்தமட்டிலே இவ்வாறு ஒத்தடம் போடமாட்டார்கள். தவ்ஹீத் வாதி பிழை செய்தாலும், யார் பிழை செய்தாலும் அதை முறையாகப் பகிரங்கமாக சுட்டிக்காட்டித் திருத்தப் பார்ப்பார்கள் இன்று வரைக்கும் இதே நிலையிலேயே தமது அழைப்புப் பணியை அவர்கள் தொடர்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். இவர்களிடம் கருத்துச் சுதந்திரம் கிடையாது. அளவுகடந்த இயக்கக் கட்டுப்பாடு காணப்படுகின்றது. அதனால்தான் ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த ஒருவரை அதே அமைப்பிலிருக்கும் இன்னொருவர் விமரிசிப்பதில்லை. இதைப் போலவே டீஏயிலிருக்கும் ஒருவரை அதே அபை;பிலிருக்கும் இன்னொருவரும் விமரிசிப்பதில்லை. ஆனால் தவ்ஹீத் கருத்திலிருப்பவவர்கள் தம் அமைப்பைச் சேர்ந்த இன்னொருவரைப் பகிரங்கமாகவே விமரிசிப்பர். தம் அமைப்பிலிருக்கும் ஒருவர் தவறிழைக்கும் போது அதைப் பகிரங்கமாகவே விமர்சித்து சுட்டிக்காட்டும் வழமை தவ்ஹீத் அமைப்பில்தான் காணப்படுகின்றது. அது அவ்வமைப்பிலிருக்கும் கருத்துச் சுதந்திரத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு இதில் யாரும் யாரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதும் கிடையாது. இவ்வியல்புகளோடுதன் தவ்ஹீத் அமைப்பு இயங்கி வருகின்றது.

8- தவ்ஹீத் பேசும் நாம், இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு போதுமே செயல்படுவதில்லை. ஆனால் பிற அமைப்புக்களிடம் இவ்வாறான பண்புகள் காணப்படுகின்றன. தமது இயக்கத்தின் வளர்ச்சியை முழு நோக்காகக் கொண்டு செயற்படுபவனையாக அவை காணப்படுகின்றன. உதாரணமாகச் சொல்வதானால் மாற்றுக் கொள்கையிலிருக்கும் பள்ளிவாசல்களுக்கு இவர்கள் சென்றால் அங்கு மார்க்கத்துக்கு முரணாணவைகள் நடைபெற்றால் ‘இவர்களை மெல்லத் திருத்துவோம்’ என்று கூறிக் கொண்டு, கண்டும் காணதது போல் நடந்து கொள்வார்கள். ‘அந்த மகான்… இந்த மகான்…’ என்று மார்க்கத்தின் பெயரால் கட்டுக் கதைகள் சொல்லப்பட்டாலும் இதே பாணியில் மௌனித்து விடுவார்கள். ‘முஹம்மதே மௌனமாக இரு முஹியுத்தீன் அப்துல் காதிர் ஜீலானீ அவர்கள் தூங்குகிறார்கள்’, ‘நபியவர்களின் சிறு நீரை ஒரு பெண்மணி குடித்தாள்‘ போன்ற புனைக்கதைகள் அங்கே சொல்லப்பட்டாலும் ‘தமது மெல்லத்திருத்துவோம்’ படலத்தின் படி சும்மா இருப்பார்கள். இவ்வாறு ஷிர்க்கான, பித்அத்தான அம்சங்கள் நடைபெறும் போதெல்லாம் ‘எல்லோருக்கும் கருத்துச் சுதந்திரமுண்டு’ என்று கூறி அதை நியாயப்படுத்தும் இவர்கள், அதே பள்ளிவாசலில் தமது இயக்கம் விமர்சிக்கப்படும் போது கொதித்தெழுகிறார்கள். அதே மிம்பரில் ‘ஹஸனுல் பன்னா யார் தெரியுமா?’ என்று சொல்லப்பட்டதும் அந்தப் பள்ளிப் பக்கமே போக மறுக்கின்றார்கள். அவ்லியாக்களின் பெயரால், நபியவர்களின் பெயரால் பச்சை பச்சையாக வழிகேடுகளும், இஸ்லாத்தைத் தகர்க்கும் அம்சங்களும் கூறப்பட்ட போதெல்லாம் கருத்துச் சுதந்திரம்தானே என தாராளத் தன்மையோடிருந்தவர்கள், இஸ்லாத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற ஷீயாக்கொள்கை பரப்பப்படும் போதெல்லாம் ‘கருத்துக்களம்தானே யாரும் எதையும் சொல்லலாம்’ என்று ஜனநாயக நிறம்; பூசியவர்கள், தமது இயக்கம் விமரிசிக்கப்படும் போது கொதிக்கின்றார்கள் என்பதிலிருந்து இவர்களிடம் வேரூன்றியிருக்கும் இயக்க வெறியின் நிறம் தெரிகின்றது. இஸ்லாம் விமர்சிக்கப்படும் போது மௌனிப்பவர்கள் தம் இயக்கம் விமரிசிக்கப்படும் போது சீறிப்பாய்கின்றார்கள் என்பதிலிருந்து,  இயக்க வளர்ச்சிதான் இவர்களுக்கு முக்கியமே ஒழிய இஸ்லாமல்ல என்பது தெளிவாகின்றது.

இதை இன்னும் தெளிவாகச் சொல்வதாயின், கொழும்பிலுள்ள இவர்களின் நூலகத்தில் வழிகேடுகளை விளம்பரம் செய்யும் சஞ்சிகைள் விற்பனைக்குள்ளன. இவற்றையெல்லாம் அனுமதிக்கும் இவர்கள், தமது இயக்கத்தை விமர்சிக்கும் புத்தகங்களையோ, சீடிக்களையோ விற்பனைக்கு அனுமதிப்பதில்லை. இஸ்லாம் தகர்க்கப்பட்டாலும் தமது இயக்கம் காக்கப்படவேண்டும் என்ற இவர்களின் நிலைப்பாடுதான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்பதில் முரண்பட முடியாது.

இஸ்லாம் விமர்சிக்கப்பட்டால், நபித்தோழர்கள் கொச்சைப் படுத்தப்பட்டால் வாய்மூடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், ஹஸனுல் பன்னா, யூஸுப் கர்ளாவீ போன்றவர்கள் விமரிசிக்கப்படும் போது, ‘அறிஞர்களை இப்படி விமரிசிக்கலாமா?, நான் சஉதி சென்றிருந்த போது அங்குள்ள ஒரறிஞரிடம் ‘அறிஞர்களை இப்படி விமரிசிப்பது பற்றிக் கேட்டேன். அதற்கவர் ‘நாமெல்லாம் இவ்வாறு தரக் குறைவாக அறிஞர்களை விமரிசிப்பதில்லை’ எனக் கூறினார்’ என்று சொல்லி  விமரிசித்தவர்களை பெயர் கூறி விமரிசிப்பார்கள். இஸ்லாம் விமரிசிக்கப்படும் போது பெயர் சொல்லாமலும், எதிர்க்காமலும் இருந்தவர்கள் தமது இயக்கம் விமரிசிக்கப்படும் போது பெயர் சொல்லி விமர்சிக்கின்றார்கள் என்றால் இயக்கம்தான் இவர்களின் உயிர்நாடியாகவுள்ளது இஸ்லாமல்ல என்பது விளங்குகின்றது.

இயக்கம் வளர்ப்பதுதான் இவர்களின் இலக்கு என்பதற்கு இன்னுமோர் உதாரணம்:

தமது இயக்கத்துக்குப் பாதிப்பு ஏதும் ஏற்படாது என்றிருந்தால் இவர்கள் எதையும் செய்வார்கள். இயக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்றிருந்தால் அதில் வளைந்து கொடுப்பார்கள். எல்லா இயக்கங்களும் எதிர்க்கின்ற அமைப்புக்களை, கொள்கைகளை வரிந்து கட்டிக் கொண்டு விமரிசிக்கும் வழமை இவர்களுக்குண்டு. உதாரணமாகச் சொல்வதானால், மஹ்தி பௌன்டேசன் என்றொரு கூட்டம் உருவாகி இஸ்லாத்தின் பெயரால் புதிய கொள்கைகளைக் கூறிய போது அதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இவர்களின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும் போது ‘இது மட்டும்தானா வழிகேடு’ என்றெண்ணம் தோன்றுகின்றது. இதைப் போலத்தான் காதியானிகளையும், வஹ்ததுல் வுஜூத் கொள்கையையும் எதிர்த்தார்கள். ஆனால் இன்று இலங்கையில் மிக வேகமாக பல்வேறு கோணங்களிலும் பரப்பப்பட்டு வரும் ஷீஆக் கொள்கையை இவர்கள் எதிர்க்கமாட்டார்கள். அப்படித்தான் எதிர்த்தாலும் ‘ஷீஆக்கள் வழிகேடுதான். ஆனால் இப்போது அவர்கள் திருந்திவிட்டனர், இஸ்லாமிய ஆட்சிக்காக உழைக்கின்றனர்’ என்று பூசி மெழுகுவார்கள். இதுவெல்லாம் இவர்கள் தம் இயக்கத்தைப் பாதுகாக்க எடுக்கின்ற பிரயத்தனங்களைக் காட்டுகின்றன.

‘யாருக்கும் எதையும் பேசும் சுதந்திரமிருக்குது’ என்று கருத்துச் சுதந்திரம் பேசும் இவர்கள், மாதம்பையில் தவ்ஹீத் சகோதரர்கள் சிலர் ஒன்று சேர்ந்து இப்தார் நிகழ்சியொன்றை ஏற்பாடு செய்ய முனைந்த போது கடுமையாக எதிர்த்தார்கள். ஏன் இந்தப் போர்க்கொடி?? தப்லீக் ஜமாஅத்துக்கு தமது  பள்ளியில் இடம் கொடுக்க முடியுமென்றால், தரீக்காவாதிகளுக்கு இடம் கொடுக்க முடியுமென்றால், ஒரேயோர் இப்தார் நிகழ்ச்சிக்காக தவ்ஹீத் சகோதரர்களுக்கு இடம் வழங்க ஏன் இவர்கள் மறுக்கின்றார்கள்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

9- பிறரைத் தமது கொள்கையின் பால் கவர்ந்திழுப்பதற்காக தாம் என்ன கொள்கையில் இருக்கின்றோம் என்பதைக் கூட இவர்கள் மறந்துவிடுகின்றனர். கூட்டு துஆ பிழையென்பதை இவர்கள் ஏற்கின்றார்கள். அதைப் பகிரங்கமாகவும் சொன்னார்கள். ஆயினும் தமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக பள்ளியில் நற்குணங்களைப் பற்றி உரை நிகழ்த்திவிட்டு தொழுத பின்னர் கூட்டு துஆ ஓதுகின்றார்கள். இதைக் கேட்டால் கூடாதென்கின்றார்கள்.  ஆனால் அதைச் செய்கின்றார்கள். அதில் அல்லாஹ்வின் சட்டத்திற்கு முரண்படுகின்றார்கள். ‘இப்படிச் செய்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விடலாம்’ என்று அதற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள். இது எவ்வகையிலும் சாத்தியமற்றதாகும். ஏனென்றால் நபியவர்கள் நாற்பது வருட காலமாக மக்களால் நல்லவராக அங்கீகரிக்கப் பட்டிருந்தார்கள் ஆனால் 40ம் வருடம் தவ்ஹீதைச் சொன்ன போது அதே மக்களால் அடிக்கப்பட்டார்கள். ஆகவே தவ்ஹீத் என்பது சொன்னால் எதிர்க்கப்படும். அதே எதிர்ப்புக்களுக்கு மத்தியில்தான் அது வளர்ச்சி பெறும். ஸுலைமான் நபி போன்று ஆட்சி, அதிகாரமிருந்தால் எதிர்ப்புக்கள் எழாமலிருக்கலாம். சமகாலத்தைப் போன்ற நிலையிலிருந்தால் எதிர்ப்புக்கள் வரும் என்பதே நிதர்சனமாகும்.

எல்லா அமைப்புக்களோடும் இவர்கள் சமாளித்துப் போவார்கள் ஆனால் தவ்ஹீத் அமைப்போடு இவர்களுக்கு சமாளிக்க முடியாது. என்னதான் சமாளிப்புச் செய்தாலும் அது என்றோ ஒரு நாளில் வெடித்து விடும். மக்களை மெல்ல மெல்லத் திருத்தலாம் என்று கூறி கத்தம், கந்தூரி, மீழாத் விழாக்களில் சமாளித்த இவர்களில் ஒரு சாரார் மறு பக்கம் போனார்களேயன்றி அங்கிருந்து யாரும் இவர்களின் பக்கம் வரவில்லை. இப்படி அங்கும் இங்கும் சமாளிப்பவர்கள் தவ்ஹீத் பள்ளிக்கு வந்தால் சமாளிப்பதில்லை. வயிற்றில் கை வைத்துக்கட்டுபவர் அவ்வாறே தொழுவார், விரலசைக்கதாவர் விரலசைக்காமலே தொழுவார். இங்கு சமாளித்துப் பிரயோசனமில்லை என்பதால்தான் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்.

இது போன்ற பல முகங்கள் தவ்ஹீத்வாதிகளாகிய எங்களுக்கில்லை. அது இருக்க வேண்டுமென்ற அவசியமும் நமக்கில்லை. ஏனென்றால் எங்களுக்கு இயக்கமில்லை. எங்களுக்கு உறுப்பினர் தேவையில்லை. ஆகவே எங்கள் கொள்கையைச் சொல்வதில் எங்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. சொல்வதை நேருக்கு நேர் தெளிவாக சொல்வது எங்கள் பண்புகளில் ஒன்று. இதில் எங்களுக்கு முகஸ்துதி கிடையாது. ஆல்குர்ஆனும், ஹதீஸும் எதையெல்லாம் சொல்கின்றதோ அதை நாம் எங்கும் சொல்வோம். அதில் ஒரு போதும் வலைந்து கொடுக்கமாட்டோம். இதைச் சொல்வதால் யாரும் வெளியே போவதில் எங்களுக்கு நஷ்டமுமில்லை. உள்ளே ஒருவர் வருவதால் எங்களுக்கு இலாபமுமில்லை.

11- யாரவது ஒருவர் ‘நான், தாயத்து, தட்டு, தகடு, கப்ர் வணக்கம், ஷேகு, முரீது பித்தலாட்டம்  போன்ற அனைத்தையும் விட்டு விட்டேன்’. என்று சொன்னால் ‘இவர்  தவ்ஹீதை ஏற்றுக் கொள்கிறார் ஆகவே இவர் ஒரு தவ்ஹீத்வாதி’ என்று கூறுவோம். ஆனால் ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ போன்ற இயக்கங்களில் ஒருவர்  சேர்வதானால்  ‘நானும் ஜமாஅத்தே இஸலாமிதான், நானும் டீஏ தான் என்று அவர் சொல்ல வேண்டும்’. அபூபக்கர் ரழி அவர்கள்தான் வந்தாலும் இவ்வாறு சொன்னால்தான் அவருக்கும் இவ்வியக்கங்களில் அங்கத்துவம் கிடைக்கும். ஆனால் அவரால் தவ்ஹீத் அங்கத்தவராக ஆகிவிடலாம் ஏனென்றால் தவ்ஹீத் அமைப்பில் அங்கத்துவப் படிவமெல்லாம் கிடையாது. நாம்  நபியவர்களை தவ்ஹீத்வாதி என்போம், நபித்தோழர்களைத் தவ்ஹீத்வாதிகள் என்போம். ஆனால் ஜமாஅத்அத்தே இஸ்லாமியின் கொள்கையில்தான் அல்லது டீஏயின் கொள்கையில்தான் நபியவர்களும், நபித்தோழர்களும் இருந்தார்கள் என்று அவ்வியக்கத்தவர்களால் சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆகவே இவ்வாறான அடிப்படை இயல்புகளைக் கவனிக்கும் போது இந்த இயக்கங்களின் சரியான முகத்தைக் கண்டு கொள்ள முடிவதுடன் யாரோ உருவாக்கி, யாரோ வகுத்த தமது இயக்கத்துக்கு இஸ்லாமிய சாயம் பூசி, தம்மிடமுள்ள குறைகளையெல்லாம் மறைத்துக் கொண்டுதான் தவ்ஹீதைப் பிரசாரம் செய்யும் நமைப் பார்த்து ‘விரலாட்டுவதும், கப்ருடைப்பதும்தான் இவர்களுக்கு எப்போதும்……’ என்று பரிகாசம் செய்கிறார்கள்.

தவ்ஹீதைக் கருத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக நம் சகோதரர்கள் அடிக்கப்படுகிறார்கள், ஊர்நீக்கம் செய்யப்படுகிறார்கள் ஆனால் ஏனைய இயக்கங்களில் சேர்வோருக்கு இத்தகைய இன்னல்கள் பொதுவாக ஏற்படுவதில்லை என்பது இந்தக் கொள்கையின் உண்மைத் தன்மையினை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

இதுவரைக்கும் நாம் அலசியது. தவ்ஹீத் அமைப்புக்களுக்கும் ஏனைய அமைப்புக்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் தவ்ஹீத் பிரச்சார அமைப்பிற்கு எதிராக முன்வைக்கப்படும் விமரிசனங்களுக்கான பதில்களையும். இனி ஆட்சியை முதன்மைப்படுத்தும் இயக்கங்களின் தஃவாக்கள நடவடிக்கைகளின் மறுபக்க விளைவுகளை ஆதாரங்களுடன் தருகிறோம்

ஆட்சி பேசும் இயக்கங்களது தஃவாக்கள நிலைகள்:

1-அரபு நாடுகளை விமரிசிப்பதையும் ஈரானைப் பாராட்டுவதையும்  கொள்கையாக்கிக் கொண்டமை.

 இவர்கள் சவூதியை மிகக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள். தவ்ஹீதை தனது ஆட்சிக் கொள்கையாகக் கொண்டமைக்குத்தான் இவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் இழப்புகளைச் சந்திக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு உதவுவதெல்லாம் அதே சவூதிதான். இந்தோனேசியாவில் சுமார் ஐந்து இலட்சம் முஸ்லிமகள் கிறிஸ்தவர்களாக மதம் மாறியபோது அங்கு சென்று தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் அந்த நாடுதான். சர்வதேச நிவாரண அமைப்பு என்ற நிருவனத்தின் தலைமை நிருவனமான ராபிதத்துல் ஆலமுல் இஸ்லாமி சவூதியில்தான் உள்ளது.

ஏதோ சர்வதேச முஸ்லிம்கள் பற்றி தமக்குத்தான் கவலையுள்ளது என்று பிதற்றிக் கொள்ளும் இவர்கள் செய்வதெல்லாம் பலஸ்தீனையும், கஷ்மீரையும், செச்னியாவையும் வைத்து இசையுடன் கலந்த பாடல்கள் வெளியிடுவதும், கவிதை எழுதுவதும்தான். இதனால் இவர்களுக்கு நல்ல வருவாய்தான் ஏற்பட்டதே தவிர வேறொன்றும் விளைந்ததில்லை. இந்தப்பாடல்களாலும், கவிதைகளாலும் உணர்வு பெற்ற யாராவது பலஸ்தீனுக்குச் சென்று போராடியுள்ளாரா? ஆனால் இவர்கள் விமரிசிக்கும் சவூதியிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இது போன்ற நாடுகளுக்குச் சென்று போர் புரிந்து கொல்லப்படுகின்றார்கள். அது போல மற்றைய அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு போராடுகின்றார்கள். இப்போராட்டங்கள் பற்றிய ஆவணங்களைப் பார்;த்தால் இதைத் தெரிந்து கொள்ளலாம். இலங்கையிலிருந்து ஒருவர் கூட இவ்வாறு போராடுவதற்காக பலஸ்தீனுக்கோ, கஷ்மீருக்கோ அல்லது வேறெந்த முஸ்லிம் நாட்டுக்கோ செல்லவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரானின் ‘கும் நகரம்’ வரை போகும் இவர்களுக்கு ஏன் பலஸ்தீனுக்குப் போகமுடியாது. எல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள்தான். இவைகளைப் பார்ப்பதால், படிப்பதால் உணர்வுகள் தூண்டப்படலாமே தவிர வேறெதுவும் ஏற்படப் போவதில்லை. உணர்வுகளைத் தட்டியெழுப்பும் வகையில் நாமும் பேசுகிறோம். எழுதுகிறோம். அப்படியாயின் எங்களை  விட மேலதிகமாக இவர்கள் செய்துள்ளது சீடி வெளியிட்டதும், சஞ்சிகைகளில் சில பக்கங்களை ஒதுக்கியதும்தான். பலஸ்தீனுக்காகப் பேசும் இவர்கள் மீது அரசாங்கத்தின் சந்தேகப்பார்வை விழும் போது ‘நாமும் அரசுடன்தான் உள்ளோம்’ என்று அரசையும் சமாளித்துக் கொள்கிறார்கள்.

2-மேற்கத்தேய மோகம்

‘மேற்கத்தேயத்தை நாம் வண்மையாக எதிர்க்கின்றோம்’ என்று பரவலாக இவர்கள் பேசுவதையும், எழுதுவதையும் காணலாம். ஆனால் இதைச் சொல்லும் இவர்களின் இலட்சணத்தைப் பார்த்தால் முகத்தில் தாடியில்லை. சுத்தமாய் முகச்சவரம் செய்திருப்பார்கள். கோட்டும், டைய்யும் அணிந்து கரண்டைக்குக் கீழ் ஆடை அணிந்திருப்பார்கள், பெண்கள் ஆண்களோடு சகஜமாகப் பழகலாம் என்பார்கள், பெண்கள் பாட்டுப்படலாம், நடனமாடலாம் என்று சொல்வார்கள்…… இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். இதைத்தானே மேற்கத்தேயக் கலாசாரம் என்கிறோம். மேற்கத்தேயத்தை எதிர்ப்பவர்கள் இவற்றையெல்லாம் வெறுக்க வேண்டுமே?

3-சினிமாவை ஊக்குவித்தல்

சினிமாவைப் பற்றி இவர்களிடம் வித்தியாசமான கருத்துக்கள் காணப்படுகின்றன. ‘இஸ்லாமிய சினிமாவொன்று உருவாகல் வேண்டும். அதிலும் ஈரானிய சினிமா தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருகின்றது. சர்வதேச கவனத்தைத் தன்பால் அது ஈர்க்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஈரானில் சினிமாவுக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. அவை நீக்கப்பட வேண்டும்……..’ என்று ஈரானிய சினிமாவைப் புகழ்ந்து கொண்டு போகிறார்கள். கடந்த 2007 மார்ச்சில் வெளிவந்த ‘எங்கள் தேசம்’ பத்திரிகையில் ‘தடைகளுக்கு மத்தியில் முன்னேறி வரும் ஈரானிய சினிமா’ என்று ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. அதில் கீழ்வரும் செய்திகள் கூறப்படுகின்றன. ‘ஈரானியப் புரட்சியின் பின் அங்கு பெண் இயக்குனர்களுக்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது’ என்று இரு பெண்களின் பெயர்கள் கூறி தொடர்ந்து செல்லும் அவ்வாக்கத்தில் ‘இவர்கள் போன்ற பெண் இயக்குனர்கள் பெண்களைக் கருப்பொருளாகக் கொண்ட படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றுள் ‘நர்கிஸ்’ என்ற படம் அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒரு திரைப்படமாகவிருந்தது. பலமான சட்டங்களுக்கு ஊடாக ஏற்படுகின்ற ஆண்,பெண் உறவு முறைகளில் ஏற்படுகின்ற உன்னத சந்தர்ப்பங்களை உளப்பூர்வமாக சமர்ப்பிக்க அவள் முன்வந்துள்ளாள். ஓர் அழகான பெண்ணையும் மற்றும் அவளுடன் இணைந்து கொள்கின்ற ஒரு கள்வனையும், அவனின் சட்டபூர்வ மனைவியையும் கருப்பொருளாகக் கொண்ட ‘நர்கீஸ்’ சர்வதேச விருது பெற்ற திரைப்படமாக மாறியது. காதல் எனும் மாயைக்காக வேண்டி சமுதாயக் கட்டுப்பாடுகளையும், விழுமியங்களையும் தகர்த்தெரிகின்ற இளைஞர்கள் தொடர்பாக இத்திரைப்படம் அலசி ஆராய்கின்றது. இம்முறை லண்டன் சர்வதேச திரைப்பட அரங்கில் பங்கு கொண்டிருந்த ‘டைம் போஸ்’ என்ற திரைப்படமானது அலி றிஸா ஆமினீ எனும் இளம் திரைப்பட இயக்குனரால் உருவாகியதாகும். அது மாத்திரமின்றி படர்ந்த பனியின் மீது பயணிக்கின்ற ஒரு கற்பினிப் பெண்ணும் அங்கே காட்சி தருகின்றாள் அவள் தனது காதலனைத் தேடியவாறு வருகின்றாள் அவள் தன்னைக் கைவிட்டுச் சென்ற காதலன், மற்றும் தான் வயிற்றில் சுமக்கின்ற குழந்தையோடும், இறைவனோடும், தன்னோடும் அவளது பயணம் நெடுகிலும் நீண்டதொரு சம்பாசனையோடு செல்கின்றாள்.’ என்று கட்டுரை தொடர்கின்றது இப்படி கேடு கெட்ட காட்சிகளை உன்னதப்படுத்தி ஜமாஅதே இஸ்லாமியின் எங்கள் தேசம் சஞ்சிகை எழுதுகிறது. . சினிமா என்றாலே குப்பைதான் என்பதில் யாரும் முரண்பட முடியாது. அதில் ஈரானிய சினிமாவும் விதிவிலக்காகாது. இதற்கு வேறு இஸ்லாமிய சினிமாவென்று முத்திரை குத்துவது எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. லண்டன் திரைப்பட விழாவில் விருது பெறுவது பெருமைக்குரியதொன்றல்ல மாறாக இஸ்லாத்துக்கு மிகப் பெரும்  இழுக்காகும்.

சினிமாவை ஆதரிப்பது மட்டுமல்லாது அதற்கு இஸ்லாத்தின் பேரால் ஒழுங்கு விதிகளையும் வகுத்திருப்பது நகைப்புக்குரியதும், வெட்கித் தலை குனிய வேண்டியதுமாகும். யூஸுப் கர்ளாவி அவர்களே இந்த விதிகளைக் கூறியுள்ளார். அது பற்றிய விவரங்கள் 98ம் ஆண்டு நவம்பர், டிசம்பர்களில் வெளியான அல்ஹஸனாத்தில் 15ம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள விடயமாவது:

‘முஸ்லிம் பெண்கள் நடிப்புத்துறையில் ஈடுபடலாம் என்ற தலைப்பில் ‘ஆதம் (அலை) முதல் முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையுள்ள இறைத் தூதர்களைப் பற்றி அல்குர்ஆன் கூறும் போது எந்த இடத்திலும் பெண்களின் இருப்பை அலட்சியப்படுத்தவில்லை. ஆதம், ஹவ்வா, நூஹும் அவரின் மனைவியும், லூத்தும், மனைவியும், இப்றாஹீமுடைய இரண்டு மனைவியரும், ஆதத்தின் இரு மகன்களின் நிகழ்ச்சி, மூஸா நபியின் பிறப்பும் அவரின் அண்ணையும், சகோதரியும், பிர்அவ்னின் மனைவி, சுஐப் நபியின் இரு மகள் மூஸாவோடு நடத்திய உரையாடல், யூஸுப் நபியும் எகிப்து ஆட்சியாளரின் மனைவியும் முக்கிய பாத்திரங்களாய் இடம் பெற்ற ஒரு முழு அத்தியாயம். ஈஸா நபியும், அன்னை மரியமும், ஸைதும் ஸைனபும் என அல்குர்ஆன் விவரிக்கும் அத்தனை நிகழ்வுகளிலும் முக்கிய ரோலில் (சினிமாவில் பயன்படுத்தப்படும் வார்த்தையை தூய்மையானவர்களுக்கப் பயன்படுத்துகிறார்) பெண்ணிருக்கின்றாள். பின்னர் எப்படி நாம் பெண்களைப் புறக்கணிக்க முடியும்? பெண்கள் நடிப்புத் துறையில் ஈடுபடுவதி பற்றி மார்க்க அறிஞர்கள் கூடி இஜ்திஹாத் செய்து முடிவு எடுப்பது அடிப்டையில் தீர்மானிக்கலாம் என்று கூறிய அவர் (யூஸுப் கர்ளாவி) ‘இது கூடாது. ஹராம் என்று சொல்வது எளிது ஆனால் அது தீர்வாகாது. ஓவ்வொரு விடயத்திலும் ஹராம் ஹராம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது பிரச்சினையை  வளர்ப்பதுடன் மக்கள் அவர்களுக்குப் பிடித்த வழியில் சென்று கொண்டிருப்பார்கள். ஆகையால் தெளிவான நவீன தீர்வுகளை சொல்ல வேண்டும். பெண்களே இல்லாமல் கதைகளை உருவாக்குவதை யாரும் ஏற்கமாட்டர். ஆனால் பெண் நடிப்புத் துறையில் ஈடுபடும் போது ஒரு சில ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அவள் உடை அணியும் முறை இஸ்லாமிய முறைப்படி இருக்க வேண்டும். இயக்குனரும் படப்பிடிப்பாளரும் பெண்களின் வடிவழகை ஆபாசமாய் காட்டக் கூடாது. தரக்குறைவான வசனங்களைத் தவிர்க்க வேண்டும். இந்த வரம்புகளையெல்லாம் கடைபிடிக்கும் முஸ்லிம் பெண் கலைஞர்கள் இன்றுள்ளனர். நான் அவர்களைப் பார்த்துள்ளேன் எனது இக்கருத்துக்களை அவர்கள் பெரிதும் வரவேற்றனர். முஸ்லிம் உலகில் முதலாவது இஸ்லமிய செட் லைட் சனல் 99 ஜனவரியில் செயல்படத் தொடங்கும் பிரபல சவுதி தொழிலதிபர் ஷேஹ் ஸாலிஹ் அப்துல்லாஹ் காமிலுக்கு இது தொடர்பில் ஊக்கமளித்ததும் நான்தான்’ என்று அந்த ஆக்கம் செல்கின்றது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் அவதானிக்கும் போது சிரிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்????????????? ஓட்டு மொத்த சினிமா வழிகேட்டிற்கும் இவர்கள்தான் காரணம் என்பதை இதில் ஏற்றுக்கொள்கிறார்கள்.

மீள்பார்வை 2010 நவம்பர் மாத இதழில் இஸ்லாமிய சினிமா ஹோலில் ஆண் ரசிகர்களுக்கும் பெண் ரசிகர்களுக்கும் மத்தியில் கருப்புத் திரையொன்று போடப்பட வேண்டும் என பரிதாபமான நிபந்தனையைச் சொல்லியுள்ளார்கள்.

பலஸ்தீனில் அக்கிரமம் நடந்தேறும் போது பேசும் பேச்சா இது? விரலாட்டுவதையே பேசக் கூடாது என்று கூறும் நீங்கள் அதை விடச் சின்ன விடயமான இந்த சினிமா விவகாரத்தையெல்லாம் பேசலாமா??

 4. சில்லறைப் பிரச்சனை பிரச்சனைகளென மார்க்க விடயங்களை அலட்சியப்படுத்தல்.

‘மார்க்கத்துக்காக நாம் சிலதை விட்டுக் கொடுக்கின்றோம்’ என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் மக்கள் ஜுப்பா அணிதலை விரும்புகிறார்கள் இவர்கள் அதந்குத் தயாரா? தாடி வளாப்பதை மக்கள் விரும்புகிறார்கள் ஜமாஅத்தே இஸ்லாமி, டீஏ அன்பர்கள் இதற்குத் தயாரா? இதற்கெல்லாம் அவர்கள் தயாரில்லை. மார்க்கத்தை விட்டுக் கொடுக்க அவர்கள் தயார். விட்டுக்கொடுப்பதற்கு நாம் மார்க்கத்தின் உரிமையாளர்களல்ல. அதற்குறியவன்தான் அதனை விட்டுக்கொடுக்க வேண்டும். அவன் விட்டுக்கொடுத்தவைகளைத்தான் சலுகைகள் என்றழைக்கிறோம். ஆயிரம் ரூபாய் சதங்கள் என்ற சில்லறைகளால் ஆனதுதான் 2 சதத்தைப் புறக்கணித்தான் அது ஆயிரமாக முடியாது. சுமூகத்தின் ஒற்றுமைக்காக தாடி மயிரை கொஞ்சம் நீளமாக வளர்க்கத் தயாராக இல்லை. சேட் ஆடையை களற்றி ஜுப்பா அணியத் தயாராக இல்லை. இசையை விடத் தயாராக இல்லை. ஜமாஅதே இஸ்லாமி சகோதரர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.

ஜமாஅத்தே இஸ்லாமிக்கு சில நல்ல பகுதிகள் இருந்தாலும் டீஏவுக்கு அப்படி எதுவுமில்லை. தவ்ஹீத் பிரசாரத்துக்கும், சில போது ஜமாஅத்தே இஸ்லாமிக்கு எதிராகவும் சதி தீட்டும் வேலைகளைக் கைக் கொண்டது டீஏதான் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அவை வெடிக்கும் நேரம் பார்த்து சுற்றுலா செல்வது போன்ற தந்திரங்களையெல்லாம் கையாண்டு தமது கைங்கரியங்களை அவ்வியக்கம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

5. ஆட்சி பற்றிய சரியான விளக்கமின்மையால் போலி இஸ்லாமிய ஆட்சி நாடகமாடும் ஈரானிய சீயாக்களுக்கு சார்பாக நேரடியாகவே ஆதரவளித்தல்.

இஸ்லாமி ஆட்சி என்ற பேரில் இவர்கள் ஷீஅக்களோடு எந்தளவுக்கு ஒத்துப் போகின்றார்கள் என்பதைக் கீழ்வரும் செய்தியிலிருந்து விளங்கலாம்:

99ல் வெளியான அல்ஹஸனாத்தின் ஆசிரியர் கருத்தில் பின்வருமாறு தமது சீயா ஆதரவை வெளிப்படுத்தினார்கள்

‘நபிப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள், இஸ்லாமிய ஆட்சி மன்னராட்சியாக மாறுவதை சகிக்க முடியாமல் உண்மையான கிலாபத்தை நிலை நிறுத்தும் நோக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த கூபாவை நோக்கி மதீனாவைத் துறந்து செல்கிறார்கள். கர்பலாவில் வைத்து அவர்கள் ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே மன்னராட்சி தொடர்ந்தது. ஹி 100ல் கலீபா உமரிப்னு அப்துல் அஸீஸ் மீண்டும் உண்மையான கிலாபத்தை நிறுவிய வேளை அவர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள். எனவே மன்னராட்சி இன்னும் தொடர்கின்றது. இடையில் வலிமையற்ற மன்னர்கள் தோன்றும் போதெல்லாம் மன்னராட்சி புரட்சிகள் மூலம் கைமாற வேண்டியிருந்தது. ஆதனால் பல வெட்டுக் குத்துக்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பதிவாகின. எனினும் 1924 வரை ஏதோ ஒரு வகையில் காணப்பட்ட முஸ்லிம்களின் கிலாபத் திட்டமிட்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இஸ்லாமிய சாம்ராஜியம் சிறு நாடுளாகக் கூறுபோடப்பட்டு மன்னர்கள், இராணுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கிலாபத் மறைந்து எழுபத்தைந்து முஹர்ரம்கள் வந்து சென்று விட்டன. நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயத்துல்லாக்களின் ஆட்சியொன்றை அடைந்து கொண்டது. மன்னர்களுக்குத் தலை சாய்த்துப் பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைத்துவத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது. புரட்சிக்குழுக்களெல்லாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முடிவை நோக்கியே வருகின்றன…’ என்று அவ்வாக்கம் காணப்படுகின்றது.

இவ்வாக்கத்தில் காணப்படும் ஷீஆக்களுக்கு ஆதாரவனதும், இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணாணதுமான கருத்துக்கள்:

1- முஹர்ரம் இதழில் (99 மார்ச்) இக்கருத்துக்கள் வெளியாவதிலிருந்து ஷீஆக்கள் கொண்டாடும் முஹர்ரம் விழாவை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

2- ‘நபிப் பேரர் ஹுஸைன் (ரழி) அவர்கள் இஸ்லாமி ஆட்சி மன்னராட்சியாக மாறுவதை சகிக்க முடியாமல் உண்மையான கிலாபத்தை நிலை நிறுத்தும் நோக்கில் தமக்கு ஆதரவளிக்க முன் வந்த கூபாவை நோக்கி மதீனாவைத் துறந்து செல்கிறார்கள்’ இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். முஆவியா (ரழி) அவர்களின் மகன் யஸீத் அரியணை ஏறினால் அது மன்னராட்சி என்றால் அலீ (ரழி) அவர்களின் மகன் ஹுஸைன் ஆட்சிக்கு வருவதும் மன்னராட்சியே. ஆனால் உண்மையில் ஹுஸைன் (ரழி) அவர்கள் போனது ஆட்சிக்காகவன்று. அவர் போனதெல்லாம் வேறொரு விடயத்துக்காகத்தான்.

3-‘ஹி 100ல் கலீபா உமரிப்னு அப்துல் அஸீஸ் மீண்டும் உண்மையான கிலாபத்தை நிறுவிய வேளை அவர்களும் ஷஹீதாக்கப்பட்டார்கள்’ என்ற வசனத்தின் மூலம் யஸீத் , உமரிப்னு அப்துல் அஸீஸ் இருவருக்கும் இடைப்பட்ட ஆட்சியாளர்களை இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் நபியவர்கள் இவ்வாட்சியாளர்களை நல்லவர்கள் என்று கூறியுள்ளார்கள். அதைப்பின்வரும் ஹதீஸ் கூறுகின்றது.

صحيح مسلم 10 – (1822) عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ: كَتَبْتُ إِلَى جَابِرِ بْنِ سَمُرَةَ مَعَ غُلَامِي نَافِعٍ، أَنْ أَخْبِرْنِي بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَكَتَبَ إِلَيَّ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ …..يَقُولُ: «لَا يَزَالُ الدِّينُ قَائِمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ، أَوْ يَكُونَ عَلَيْكُمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً، كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ»
‘மறுமை வரைக்கும் அல்லது குறைஷ் குலத்தைச் சேர்ந்த பனிரெண்டு கலீபாக்கள் உங்களில் இருக்கும் வரைக்கும் இந்த மார்க்கம் நிலையானதாய் இருக்கும்’ என நபியவர்கள் சொன்னார்கள்.
ஆறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 1822

ஆனால் இவர்கள் இதற்கு மாற்றமாக இடைப்பட்ட அனைத்து கலீபாக்களையும் தட்டி விட்டு உமரிப்னு அப்துல் அஸீஸ் அவர்களை மட்டும் நல்லவராகச் சொல்கிறார்கள்.

4-‘இஸ்லாமிய சாம்ராஜியம் சிறு நாடுளாகக் கூறுபோடப்பட்டு மன்னர்கள், இராணுவ ஜெனரல்கள், சர்வாதிகாரிகள், கம்யூனிஸ்டுகள் போன்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் ஒப்படைக்கப்பட்டது’ என்ற வசனத்தின் மூலம் சவுதி, குவைட், ஐக்கிய அரபு இராச்சிய மன்னர்கள் அனைவரும் பேர்தாங்கிகள் ஈரானின் ஆட்சியாளர் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர் என்று சொல்ல வருகிறார்கள். அதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறையை மிக்க சரிகாண்கின்றார்கள். ஜனநாயக ஆட்சி முறை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானதாகும். அபூபக்கர் (ரழி) அவர்கள் தெரிவு செய்யப்பட்ட முறையும் அவருக்குப் பின்னால் வந்த ஆட்சியாளர் தெரிவு செய்யப்பட்ட முறையும் ஜனநாயக ஆட்சி முறையல்ல. இதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

4- ‘கிலாபத் மறைந்து எழுபத்தைந்து முஹர்ரம்கள் வந்து சென்று விட்டன. நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் இன்று இஸ்திரமான ஆயத்துல்லாக்களின் ஆட்சியொன்றை அடைந்து கொண்டது’ என்ற வசனத்தின் மூலம் ஈரானிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள ஷீஆக்கள் மட்டுமே நபிப் பேரர் உணர்வில் வாழ்ந்தவர்களாகும். ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த மற்றைய அனைத்து இயக்கங்களும்  நபிப்பேரார் உணர்வில் வாழவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்கிறார்கள். இந்த வரிகளில் இவர்கள் சீயாக்களை தெளிவாக ஆதரிப்பதையும் சீயாக்களைத் தவிர மற்ற யாரும் பேரர் ஹுஸைனை மதிக்கவில்லை என்றும் தெளிவாகச் சொல்வதை சிந்தனையுள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.

5- ‘மன்னர்களுக்குத் தலை சாய்த்துப் பழகிவிட்ட சமுதாயம் இன்னும் அடிமைத்துவத்தில் ஆழ்ந்து கிடக்கின்றது’ என்ற வசனத்தின் மூலம் நேரடியாகவே அரபுநாடுகளையும் சீயாக்கள் அல்லாதவர்களையும் தாக்குகின்றார்கள். விமரிசிக்கிறார்கள்.

6- ‘புரட்சிக்குழுக்களெல்லாம் ஹுஸைன் (ரழி) அவர்களின் முடிவை நோக்கியே வருகின்றன…’ என்ற வசனத்தின் மூலம் ஆட்சிக்கெதிராகக் கிளர்ச்சி செய்வதையும், முஸ்லிம் நாடுகளுக்குள் வன்முறைகளைத் தூண்டுவதையும் இவர்கள் சரிகாண்கின்றார்கள். சவூதியில் இருப்பது ஒரு முழுமையான இஸ்லாமிய ஆட்சியல்ல ஏதோ ஒரு வகையில் அங்கு தொழுகை நிலை நாட்டப்படுகின்றது. இஸ்லாமிய சட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுன்றன. ஷிர்க்கிற்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் பல்வேறு சேவைகள் செய்யப்படுகின்றன. சர்வதே அளவில் இடம் பெறும் போராட்டங்களுக்கு மறைமுகமாகப் பல உதவிகள் செய்யப்படுகின்றன. ஆப்கானில் பமியான் சிலை உடைக்கப்பட்ட போது ஜமாஅத்தே இஸ்லாமியும், டீஏயும் மறைமுகமாக அதைக் கண்டித்தபோது சவூதி அமைச்சர்களால் சிலை உடைப்பு சரியானதே என அரிக்கை கொடுக்கப்பட்டது. இத்தனையும் இருக்கும் போதுதான் அந்நாட்டுக்கு எதிராகக் கிளம்புவதை இவர்கள் ஆதரிக்கின்றார்கள்.

ஷீஆக்களை ஆதரிப்பதில் டீஏ இயக்கத்துக்கு அலாதிப்பிரியம் காணப்படுகின்றது. ஏனெனில் கொமைனீ ஈரானைக் கைப்பற்றிய போது அவரை ஆதரிக்க முதலில் அங்கு சென்றவர்கள் இஹ்வானியர்கள்தான். இவர்கள் எப்படியெல்லாம் ஷீஆக்களை ஆதரிக்கின்றார்கள் என்பதைக் கீழே பார்ப்போம்.

2007 மார்ச் மாதம் வெளியான மீள்பார்வையில் கருத்து வேறுபாடுகளில் பிளவை ஏற்படுத்தக் கூடாது என்ற தலைப்பில் கர்ளாவி அவர்களின் பத்வா வெளியாகியிருந்தது. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளாவன.

‘பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள் முஸ்லிம் உம்மத்தை பல கூறுகளாகப் பிரித்து விடக் கூடாது. என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூஸுப் அல் கர்ளாவி அவர்கள் தெரிவித்துள்ளார். ஈராக்கில் தற்போது நிலவும் ஷீஆ, ஸுன்னி கருத்து முரண்பாடு பற்றிக் கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்…………ஈராக்கில் ஷீஆக்களும், ஸுன்னிகளும் தமக்குள்ளிருக்கும் எதிர்ப்புக்களைக் கைவிட வேண்டும். அடுத்தவர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலில் எத்தரப்பும் ஈடுபடக்கூடாது. ஷீஆக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஸுன்னிகள் பிரசாரம் செய்யக் கூடாது. ஸுன்னிகள் கூடுதலாக வாழும் பகுதியில் ஷீஆக்கள் தமது கொள்கையைப் பிரசாரம் செய்யக் கூடாது……’ என்று அவ்வாக்கம் சீயா ஆதரவை தெளிவாகவே சொல்கிறது

இதிலே கவனிக்க வேண்டிவைகள் எதுவெனில்,

ஷீஆக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் இடையில் காணப்படுவது  பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள்தான் அகீதா ரீதியானதல்ல என்று சொல்கிறார். அப்படியென்றால் ஷீஆக்கள் இன்று நம்மிடமுள்ள அல்குர்ஆனைப் பிழை காண்பது, ஆயிஷா நாயகியை விபச்சாரி என்பது, அபூபக்கர்,உமர் உத்மான் போன்ற பெரும் நபித்தோழர்களை முனாபிக்குகள் என்று ஷீஅக்கள் கூறுவது,………. போன்ற அனைத்தும்  பிக்ஹு ரீதியான கருத்து வேறுபாடுகள்தான் அகீதா ரீதியானதல்ல என்று கர்ளாவி சொல்கிறார். ஆனாலும் ஷீஆக்களுக்கும், ஸுன்னிகளுக்கும் இடையில் காணப்படுவது அகீதா ரீதியான  கருத்து வேறுபாடுகள்தான் என்பதை. ‘ஸுன்னிகள் கூடுதலாக வாழும் பகுதியில் ஷீஆக்கள் தமது கொள்கையைப் பிரசாரம் செய்யக் கூடாது……’ என்ற வார்த்தைகள் மூலம் தன்னை அறியமலேயே ஏற்றுக் கொள்கின்றார்.

ஷீஆக்களை ஆதரிப்பதில் டீஏ இயக்கத்துக்கு இருக்கும் பங்களிப்பை மென்மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கீழ்வரும் செய்தி காணப்படுகின்றது. ஷீஆக்களின் இலங்கைக்கான முகவர்களில் ஒன்றாக விளங்கும் வெலிகம மிலேனியம் கல்விஸ்தாபனம் எனும் அமைப்பால் வெளியிடப்பட்ட ‘இஸ்லாமிய உலகும் சவால்களும்’ என்ற நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள மீள்பார்வையின் ஆசிரியர் ரவூப் ஸெய்ன் தனது அணிந்துரையில் ‘இது போன்ற திறந்த கருத்தாடல்கள் வரவேற்கப்பட வேண்டும்…..’ எனப்பாராட்டியுள்ளார். ஆனால் அந்நூலின் 57ம் பக்கத்தில் வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் நோக்கு என்ற தலைப்பில் பீஜே அவர்களை ‘குறை ஆன்மீக வாதிகள், விரல் நுனியில் மார்க்கத்தைச் செய்பவர்கள். அறிவில்லாதவர்கள், தர்காவை உடைப்பவர்கள், ஈரானுக்கெதிராகப் பேசுபவர்கள்………. ‘ என்றெல்லாம் கண்டவாறு விமர்சிக்கப்பட்டிருந்தது. ரவூப் ஸெய்னுக்கு நெருக்கமான ஒருவரிடம் இது பற்றிக் கேட்ட போது ‘தனக்கு இப்புத்தகத்தை அனுப்பும் போது குறித்த வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் நோக்கு என்ற தலைப்பு இருக்கவில்லை என்று ரவூப் ஸெய்ன் கூறியதாக அறிந்தோம். ஒருவேளை அப்படி நடந்திருக்கலாம் என்று பார்த்தாலும் மறுபடியும் அவர் அதே நிருவனத்தின் ‘கருத்துக்கண்ணோட்டம்’ என்ற தொடர் நூலுக்கு இவ்வாறு அணிந்துரையளித்திருக்கின்றார். ‘வாதப்பிரதிவாதங்கள்’ என்ற அந்நூலின் பின்பக்கத்தில் சந்திர சேகர் என்ற ஒருவர் ‘யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா? என்று இந்து மதத்தில் குழப்பம் இருப்பதாக ஏகடியம் பேசியவர்கள் தொழுகையில் விரலை ஆட்டுவதா வேண்டாமா என்பதிலிருந்து ஆரம்பித்து இஸ்லாத்தின் ஒவ்வொரு தலத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்….’ என்று தவ்ஹீதை விமர்சித்தெழுதியதைப் பிரசுரித்துள்ளனர். அந்நூலில் தவ்ஹீதை எதிர்த்தும், ஆதரித்தும் விமரிசனம் என்ற பேரில் சில ஆக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன அவற்றுள் இறுதியாக வரும் ஆக்கத்தில் தவ்ஹீதை மிகக் கடுமையாக விமரிசித்து, அதாவது, ‘சிந்திக்கச் சக்தியற்ற ஒரு சமுதாயத்தைத் திருப்புவது மிகவும் இலகுவானது. பீஜே அதைச் செய்கின்றார். ஆனால் ஈரான் இந்த அனைத்துத் தகுதிகளையும் பெற்று சுதந்திரத்துடன் தலை நிமிர்ந்து நிற்கின்றது…..’ என்று அவ்வாக்கம் தொடர்கின்றது.

இந்நூலுக்கு சகோதரார் ரவூப் ஸெய்ன் இலங்கை வானொலியில் நூல் விமரிசனம் செய்கின்றார் அதில் ‘இந்து மதத்தின் அடிப்படைகளைக் கலந்துதான் இஸ்லாம் வளர்ந்துள்ளது’ என்ற சந்திரசேகரனின் ஒரு கருத்துக்கு மட்டும் மறுப்புச் சொல்லி விட்டு மற்றையவற்றை விட்டுவிட்டார். இதை கருத்துக்கண்ணோட்டம் என்ற மறு தொடரில் ஹுஸைன் மவ்லான போட்டிருகின்றார். இது எதைப் போலுள்ளது என்றால் ஹஸனுல்பன்னா தாஹா ஹுஸைனின் நூலை விமரிசித்தாராம். பின்னர் தாஹா ஹுஸைன் ஹஸனுல்பன்னாவிடம் ‘இது போன்றொரு விமரிசனதத்தை உலகில் ‘யாராலும் செய்ய முடியாது’ என்றாராம். இதைப் போலத்தான் சகோதரர் ரவூப் ஸெயினின் விமரிசனமும் காணப்படுகின்றது.

‘கருத்துக்கண்ணோட்டம்’ என்ற 2வது நூலின் 6ம் பக்கத்தில் வஹாபிஸம் ஒரு சமூக அரசியல் பார்வை என்ற தலைப்பில் தொடர்ந்து இடம் பெறும் விடயங்களாவன, வானொலி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான விமரிசனத்தின் எழுத்து வடிவம் என்ற தலைப்பில் சந்திர சேகரனின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன அதில்

‘………….. இந்தியாவில் இதுவரை சூபிஸம்தான் வளர்ந்தது என்றும், வஹாபிஸத்தின் வருகை பல பாதாகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் சகோதரர் ரவூப் ஸெய்ன் எந்த மறுப்பையும் கூறவில்லை. ஆனால் ‘சந்திர சேகரன் தனது கட்டுரையில் இந்து மதத்தின் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டு இஸ்லாம் வளர்ந்ததாகக் கூறும் கருத்தில் நாம் சிறிதேனும் உடன்பட  முடியாது…..’ எனக் கூறுகின்றார். அப்படியென்றால் மற்றைய இரண்டிலும் தான் உடன்படுவதாக சகோதரர் ரவூப் ஸெய்ன் மறைமுகமாகக் கூறுகின்றார்.

சகோதரர் ரவூப் ஸெய்னின் இக்கட்டுரை இடம் பெற்றுள்ள அப்புத்தகத்தில் ஹுஸைன் மவ்லான பின்வருமாறு எழுதுகின்றார். ‘மேற்படி ஆராயப்பட்ட உணர்வுபூர்வமான வராலற்று நிகழ்வுகளின் அடிப்படையிலே இமாம்களினதும் நல்லடியார்களினதும் ஸியாரத்துக்குச் சென்று அவர்களை நினைவு கூறுகிறோம். அவர்களின் பொருட்டால் அந்த ஆன்மீக உள்ளுணர்வுடன் பிரார்த்தனை புரிகிறோம். இதே அடிப்டையில்தான் முஆவியாவையும், யஸீதையும், இப்னு ஸுஊதையும், முஹம்மதிப்னு அப்துல் வஹாபையும் சபிக்கின்றோம்…’ என்று வசைபாடியுள்ளார். இதற்குப் போய் சகோதரர் ரவூப் ஸெய்ன் ஆதரவளித்துள்ளார். ஸஹாபாக்களை இவ்வாறு பச்சை பச்சையாகத் திட்டுபவனுக்கெல்லாம் அணிந்துரையளிக்கும் உங்களைப் பார்த்து இனிமேலும் நாம் மௌனமாக இருக்கலாமா?????

இந்தக் குப்பைகளெல்லாம் டீஏ, ஜமாஅத்தே இஸ்லாமியிலிருக்கும் பொது மக்களுக்குத் தெரியாது. ஆகவே அவர்கள் இவற்றைப் பார்க்க வேண்டும் இவைகள் உண்மைதானா என்பதை ஆராய வேண்டும். இவ்வாக்கத்தில் காணப்படும் உணர்ச்சி வசமான வார்த்தைப்பிரயோகங்களை வைத்து இதை வாசிக்காமல் விடக் கூடாது. உங்கள் உலமாக்களிடம் சென்று இவற்றை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இவை எழுதப்படுகின்றன என்பதை மனதில் கொண்டு சிந்திக்க முன்வாருங்கள்.


أحدث أقدم