சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா

بسم الله الرحمن الرحيم


ஷெய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி  

மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.

“உங்களில் போராளிகள், சகிப்புத்தன்மை உடையோர் யார் என்பதை அறியாது சுவனத்தில் (எளிதாக) பிரவேசிக்கலாம் என நினைக்கின்றீர்களா? (ஆலுஇம்ரான். 142) என்ற இறை மறை வசனம் சுவனத்தின் பாதைக்கு வழியமைத்துக் கொடுத்த ஆரம்பகால மக்களின் தியாகத்தை வேண்டி நிற்கின்றது. மாத்திரமின்றி அதனை இலகுவாக அடையவும் முடியாது எனவும் அறிவிக்கின்றது.

சுவனத்திற்காக ஆசை வைப்போம் :

சுவனத்தை ஒரு முஃமின் ஆசை வைப்பதுடன், அதை அல்லாஹ்விடமும் வேண்டி நிற்கவேண்டும். நபிமார்கள், போராளிகள், நல்லடியார்கள் வசிக்கும் அந்த சுவனத்தில் கால் பதிக்க வேண்டுமே என்ற எண்ணம் ஒரு முஃமினிடம் காணப்படல் வேண்டும்.

இன்பம் நிறைந்த சுவனத்தின் வாரிசுக்காரர்களில் ஒருவராகவும் என்னை ஆக்கிடுவாயாக! (அஷ்ஷுஃரா. வசனம்: 85) என தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

என் இரட்சகனே! சுவனத்தில் எனக்கென்று ஒரு மாளிகை அமைத்திடு, ஃபிர்அவ்ன், அவனது (கொடுமையான) நடவடிக்கையில் இருந்து என்னைக் காத்திடு என்று அன்னை ஆசியா (ரழி) அவர்கள் பிரார்த்தனை செய்து பெற்றுக் கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நான் இந்தப்போரில் கொல்லப்பட்டால் நீங்கள் வாக்களிக்கின்ற சுவனம்! வானங்கள், பூமியை விட விசாலமானதா ? என உமைர் பின் ஹுமாம் (ரழி) அவர்கள் பத்ர் போரில் கேட்டு தனது கையில் இருந்த பேரீத்தம் கனிகளை வீசி எறிந்து விட்டு களத்தில் குதித்து ஷஹீதாகிய செய்திகளையும் அவை போன்ற நூற்றுக்கணக்கான செய்திகளையும் கவனித்தால் நமது எட்டுக்களும் சுவனத்தில் என்றாவது ஒரு நாள் வைக்கப்பட வேண்டுமே என்ற பேரார்வம் நம்மில் மேலிடுகின்றது.

சுவனம் நமக்காகவே படைக்கப்பட்டுள்ளது
சுவனம் முஃமின்களின் இறுதியான தங்குமிடமாகும். அது இறை விசுவாசிகளான நமக்காகத்தான் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் நுழைய நமக்கு உரிமை உண்டு. ஆனால் அதன் தகுதிகளுடன், அதற்குத் தகுதி பெற்ற மக்களாக நாம் மாற முயற்சி செய்ய வேண்டும்.

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு பிர்தௌஸ் எனும் சுவனச் சோலைகள் விருந்தாக (பேருபகாரமாக) உண்டு. அவர்கள் அதைவிட்டும் நகர்த்தப்படமாட்டார்கள். அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். (அல்கஹ்ப்: வசனம்: 107,108).

மனம் விரும்பும் இன்பங்கள் நிறைந்த அந்தச் சுவனம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ளது என்பதை அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நமக்கு நூற்றுக்கணக்கான இடங்களில் உணர்த்தியுள்ளார்கள்.

“நான் சுவனத்தில் நுழைந்தபோது ஒரு அழகான மாளிகையைக் கண்டேன்”. (புகாரி),

“சுவனத்துக் கனிகள் என் முன் காட்டப்பட்டது அதைப் பறிப்பதற்காகவே (தொழுகையில் இருந்தவாறு) முன்னோக்கிச் சென்றேன். (புகாரி, முஸ்லிம்).

“பிலாலே! உமது பாதணிகளின் ஓசைகளை சுவனத்தில் செவியுற்றேன். நீர் இஸ்லாத்தில் இணைந்த பின்னால் என்ன விரும்பத்தக்க அமல்கள் செய்தாய் என்று எனக்கு அறிவிப்பீராக! (புகாரி, முஸ்லிம்).

“நீங்கள் காணாத பலதை நான் காண்கின்றேன் “நான் கண்டதை நீங்கள் கண்டால் அதிகமதிகம் அழுவீர்கள், சிறியளவே சிரிப்பீர்கள் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே நீங்கள் எதைக் கண்டீர்கள் என ஸஹாபாக்கள் கேட்க, “நான் சுவனத்தையும், நரகத்தையும் கண்டேன்” எனக் கூறினார்கள் (புகாரி).

இவ்வாறு நூற்றுக்கணக்கான சான்றுகள் சுவர்க்கம் படைக்கப்பட்டிருப்பதை அறிவித்துக் கொண்டிருக்கின்றபோது அது மறுமையில்தான் படைக்கப்படும் என்று வாதிடுவது அறிவுடைமையாகாது. அவ்வாறு வாதிடுபவர்களின் வாதம் சரி என்பது வடிட்டிய தக்லீத் (கண்மூடித்தனமாகும்).

சுவனம் இப்போது படைக்கப்படுவது வீண் இல்லையா? என்று ஆரம்ப காலத்தில் முஃதஸிலாக்கள் கேட்டார்கள். அவர்களின் நாவில் சிலர் இப்போது பேசுகின்றார்கள். இத்தகையோரின் கருத்தைக் கேட்ட பலர் அவர்களது நாவில் சிலர் இப்போது சவாரி செய்கிறார்கள்.

“நிச்சயமாக எனது இரட்சனை நான் நம்பி விட்டேன். எனவே நீங்கள் எனக்கு செவிசாயுங்கள் என்றார். (அவரிடம்) நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது. என் இரட்சகன் என்னை மன்னித்து, சங்கைமிக்கவர்களில் ஒருவனாக என்னை ஆக்கியது பற்றி எனது சமுதாயம் அறிய வேண்டுமே என்றார் (யாஸீன், வசனம்: 25-27)

நல்லவர்களான நிலையில் எவரது உயிர்களை வானவர்கள் கைப்பற்றுகின்றார்களோ அவர்களிடம் உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் செய்தவற்றிக்காக சுவனத்தில் நுழையுங்கள் (என்று கூறுவார்கள்). (அந்நஹ்ல், வசனம்: 40-41).

சுவனம் இனித்தான் படைக்கப்படும் என்றால் அதில் நுழையுமாறு எவ்வாறு கூற முடியும்! அல்லாஹ்வின் வானவர்கள் இல்லாத ஒன்றில் நுழையுமாறு கூறுவார்களா? இந்த சாதாரண அறிவுகூட இல்லாமல் சிலர் புலம்புவதை சிலர் வேதமாக்கிக் கொள்கின்றனர்.

சுவனத்தின் அமைவிடம் :

சுவனம் வானலோக்கத்தில் இருப்பதை உறுதி செய்கின்ற பல சான்றுகள் அல்குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் காணக் கிடைக்கின்றன.

وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى (13) عِنْدَ سِدْرَةِ الْمُنْتَهَى (14) عِنْدَهَا جَنَّةُ الْمَأْوَى
[النجم : 13]

(முஹம்மதாகிய) அவர், அவரை (ஜிப்ரீலை மிஃராஜின்போது) ஸித்ரத்துல் முன்தஹாவில் நிச்சயமாகக் கண்டார். அந்த இடத்தில்தான் ஜன்னத்துல் மஃவா இருக்கின்றது. (அந்நஜ்ம். 13-15).

அபூஸலமா என்ற நபித்தோழர் மரணித்த போது (إن الروح إذا قبض تبعه البصر (مسلم) உயிர் (ரூஹ்) கைப்பற்றப்பட்டால் பார்வை அதனை மேல் நோக்கும் என்று கூறினார்கள் . (முஸ்லிம்). உயிர்கள் கைப்பற்றப்பட்டதும் அல்லாஹ்வின் ஆசிர்வாதத்தை, அல்லது சாபத்தைப் பெற வானலோகத்தை நோக்கி உயிர்கள் உயர்த்தப்படுகின்றது.

மற்றொரு சந்தர்ப்பத்தில், இறை நிராகரிப்பாளனின் உயிர் பற்றிக் குறிப்பிட்டபோது, ஒட்டகம் ஊசியின் துவாரத்தில் நுழையும்வரை அவர்கள் சுவனத்தில் பிரவேசிக்க மாட்டார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

அங்கு சுவனம் என்று குறிப்பிடுவது ஆதம் நபி (அலை) அவர்கள் குடியிருந்த, வானத்தில் உள்ள அந்த சுவனத்தைத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுவனம் பல படித்தரங்களைக் கொண்டதாகும்
மனிதர்களில் அதிகம் அமல் செய்பவர்கள் இருக்கின்றார்கள். குறைவாக அமல் செய்பவர்களும் இருக்கின்றார்கள். அதைக் கவனத்தில் கொண்டே அல்லாஹ்வின் சுவனமும் பல படித்தரங்களைக் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ آمَنَ بِاللَّهِ وَرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ هَاجَرَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نُنَبِّئُ النَّاسَ بِذَلِكَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِهِ كُلُّ دَرَجَتَيْنِ مَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ وَفَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ
(متفق عليه)

யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் யார் நம்பி, தொழுகையையும் நிலைநாட்டி, ரமளான் (மாத) நோன்பையும் நோற்கின்றாரோ அவரை சுவனத்தில் நுழைவிப்பது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாகும். அவர் ஹிஜ்ரத் செய்தாலோ, அல்லது அவர் பிறந்த ஊரில் வாழ்ந்தாலோ (மரணித்தாலோ) எதுவானாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! இதை மக்களுக்கு நாம் அறிவிக்கட்டுமா? எனக் கேட்டனர். நிச்சயமாக சுவனத்தில் நூறு படித்தரங்கள் (வகுப்புக்கள்) உள்ளன. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்காக அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். அவற்றில் இரு படித்தரங்களுக்கும் இடையில் உள்ள அளவு வானம், பூமி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டுகின்றபோது “அல்பிர்தௌஸ்” என்ற சுவனத்தை வேண்டுங்கள். அது சுவனத்தில் மத்தியும், சுவனத்தில் உயர்வானதுமாகும். அதன் மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்து சுவனத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் ஏழு வானங்களையும் கடந்து சென்றபோது கண்ட அற்புத நிகழ்வை எடுத்துக் கூறும் குர்ஆனின் வசனமும், பிர்தௌஸ் என்ற சுவனம் அல்லாஹ்வின் அமைவிடமான அர்ஷின் முகட்டில் முட்டிக் கொண்டிருப்பது போன்ற செய்தியும் கூறப்படுகின்றது.

இவ்விரண்டும் வானத்தில்தான் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அப்படி அறிந்த பின்னர் சுவர்க்கம் வானத்தில் இல்லை என சிலர் உளருவதை நம்புவது அறிவுடமையாகுமா ?

சுவனத்தின் நில அமைப்பு :

(அரையும், குறையுமாக ஷைத்தானின் துணையுடன் செய்திகளை அறிவிக்கின்ற) இப்னு ஷைய்யாத் என்பவன் சுவர்க்கத்து மண்ணின் நிறம் பற்றியும், அதன் தன்மை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் வினவியபோது ” தூய்மையான, வெண்ணிற கஸ்தூரி” போன்றது என அவனுக்கு பதில் கூறினார்கள் (முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹ்மத்).

இதன் மூலம் சுவனத்தின் மண்ணின் நிறம் தூய்மையான வெண்ணிற மண் என அறியலாம்.

புகாரியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில்: மிஃராஜின் போது “சுவனத்தில் நான் பிரவேசித்தேன் அங்கு மணல் குவியலைப்போன்ற முத்துக்கள் இருந்தன, அதன் மண் கஸ்தூரியினால் இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). அப்படியானால் அதன் நில அமைப்பு வெண்ணிறமான கஸ்தூரியை ஒத்ததாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.

சுவனத்தின் காவலர்கள் :

நரகத்தின் பிரதான காவலர் “மாலிக்” அவர்கள் என்றும், அத்துடன் பத்தொன்பது பேர்கள் காணப்படுவார்கள் என்றும் குர்ஆனிலும், ஹதீஸிலும் வந்ததை வைத்து விளங்க முடிகின்றது. சுவனத்தின் காவலர், காவலர்கள் பற்றி குர்ஆனும், ஹதீஸும் குறிப்பிடுவதைப் பார்க்கின்றபோது அவர்களின் எண்ணிக்கை பற்றி அல்லாஹ்வே அறிவான்.

சுவனத்தின் காவலரது பெயர் “ரிழ்வான்” என்பதைத் நாம் தேடிப் பார்த்தவரை ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடியவில்லை. சுவனம் பற்றி வர்ணிக்கப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட, அல்லது பலவீனமான செய்திகளில் ரிழ்வானே! என்று அழைத்து வரும் செய்திகளைக் காணமுடிகின்றது.

“பழாயிலுல் அவ்காத்”; “கன்ஸுல் உம்மால்” “அல்இலலுல் முதனாஹியா” ” தன்ஸீஹுஷ் ஷரீஅத்தில் மர்பூஆ| போன்ற நூல்களில் “ரிழ்வான்” என்ற பெயருடன் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில், பலவீனமான செய்திகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அப்படி இருப்பதாக ஸஹீஹான ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுபவர்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்போம் இன்ஷா அல்லாஹ்.

அப்படியானால் மாலிக் என்ற பெயர் போன்று சுவனக் காவலாளியின் பெயர் என்னதான் என்று நீங்கள் கேட்கலாம். خازن الجنة ஃ خزنة الجنة சுவனத்தின் காவலாளி- காவலாளிகள் என்று ஆதாரபூர்வமான செய்திகளில் காணமுடிகின்றது. ( الله أعلم)

தமது இரட்சகனை அஞ்சி வாழ்ந்தோர் சுவனத்தின் பக்கம் கூட்டம், கூட்டமாகக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அங்கு வந்ததும் அதன் காவலர்கள் “உங்கள் மீது (ஸலாம்) சாந்தி உண்டாகட்டும். நல்லவர்களாக வாழ்ந்தீர்கள். எனவே அதில் நுழைந்து நிரந்தமாக தங்குங்கள். என்று வரும் வசனத்தில் அதன் காவலர்கள் என இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (அஸ்ஸுமர்.73).

மறுமை நாளில் சுவனத்தின் வாயிலுக்கு நான் வந்து, (அதை) திறக்குமாறு வேண்டுவேன். அதன் காவலர் நீ யார் எனக் கேட்பார், நான் முஹம்மத் என்று கூறுவேன். உடனே அவர் உம்மைக் கொண்டே பணிக்கப்பட்டுள்ளேன். உமக்கு முன்னர் யாருக்கும் திறந்து விடமாட்டேன் என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (முஸ்லிம்). இங்கும் ( خازنஹாஸின்) காவலர் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

சுவனத்தின் பிரதான நுழைவாயிலின் விசாலம்
உலகில் எந்த ஒரு இல்லத்திற்கும் பிரதான நுழைவாயிலும், அந்த இல்லத்திற்குரிய பிற வாயில்கள் என்றும் இரு அமைப்பிலான வாயில்கள் இல்லாமல் இருப்பதில்லை. சுவனத்தின் பிரதான நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

நான் எனது உம்மத்திற்காக சிபாரிசு வேண்டுகின்றபோது முஹம்மதே உமது தலையை உயர்த்தி கேள்விக் கணக்கில்லாதவர்களை சுவனத்தின் வலது பக்க வாயில்களால் அனுப்புங்கள் என்று கூறப்படும். எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நிச்சயமாக சுவனத்தின் இரு பிரதான வாயில்களுக்கும் இடைப்பட்ட தூர அளவு மக்காவுக்கும் ஹிம்யருக்கும் (யமனில் ஒரு நகரம்) இடைப்பட்ட அல்லது மக்காவுக்கும், புஸராவுக்கும் (டமஷ்கஸில் உள்ள ஒரு நகரம்) இடைப்பட்ட தூர அளவாகும். (புகாரி, முஸ்லிம்).

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் ஹதீஸ்களில் நாற்பது ஆண்டுகள் நடை தூர அளவு என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் எவ்வளவு விசாலமானது என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் வழியாக மக்கள் நெருக்கிக் கொண்டு போகும் ஒரு நேரமும் வரும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். (புகாரி),

இது பிரதான வாயில் என்று சொல்ல முடியாது. சொர்க்கத்தில் நுழைந்த பின்னால் அழைக்கப்படும் வாயில்களையே குறிக்கலாம். (பத்ஹுல்பாரி)

யார் வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும், நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும், தூதரும் என்றும், ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் மர்யமுக்கு அவன் சொன்ன வார்த்தையும், ஆவியும் என்றும், சுவர்க்கம் உண்மையானது, நரகமும் உண்மையானது என்றும் சாட்சி சொல்கின்றாரோ அவர் செய்கின்ற அமலுடன் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தின் எட்டு வாயில்களில் ஒரு வாயில் வழியாக நுழைவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

உங்களில் ஒருவர் உழுச் செய்கின்றார், அதைப் பூரணமாகவும் செய்து முடித்து:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

“அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ், வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி, வரசூலுஹு” என்று கூறுகின்றாரோ நிச்சயமாக அவர் சுவர்க்கத்தின் எட்டு வாயில்களில் ஒரு வாயில் வழியாக நுழைவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

வாரத்தில் இரு தினங்கள் திறக்கப்படும் சுவன வாயில்கள் :

சுவனத்தின் வாயில்கள் ஆண்டுக்கொரு முறை மாத்திரம் திறக்கப்படுவதாகவே பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். ஆனால் வாரத்தில் இரு நாள் அது திறக்கப்டும் என்று பின்வரும் ஹதீஸ் மூலம் அறிய முடிகின்றது.

சுவர்க்கத்தின் வாயில்கள் திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணையாக்காதவர்களுக்கு (விஷேட) மன்னிப்பு வழங்கப்படுகின்றது. எந்த மனிதனுக்கும், அவனது சகோதரனுக்கும் இடையில் மனக்கசப்பு இருந்ததோ அவர்களைத் தவிர. அவ்விருவரும் சமாதானமாகும் வரை பொறுத்திருங்கள், அவ்விருவரும் சமாதானமாகும் வரை பொறுத்திருங்கள் என்று வானவர்களிடம் கூறப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ரமளான் முழுவதும் திறக்கப்படும் சுவன வாயில்கள்
ரமளான் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும், நகரத்தில் வாயில்கள் மூடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). இது ரமளான் மாதத்தை சிறப்பிக்கின்ற செய்தியாகும்.

இருப்பினும், சில நல்லறங்களின் காரணமாகவும் சுவனத்தில் வாயில்கள் திறக்கப்படுகின்றன என்ற உண்மையினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

1. ஓரிறைக் கொள்கையுடன் மரணித்தவர்களுக்காக சுவன வாயில்கள் திறக்கப்படுதல் (முஸ்லிம்),

2. உழுச் செய்து முடித்து ஓதுகின்ற பிரார்த்தைனையின் பயனாக திறக்கப்படும் சுவன வாயில்கள் (புகாரி, முஸ்லிம்),

3. வாரந்தோறும் திங்கள், மற்றும் வியாழன் நாட்களில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொருக்கும் (விஷேச) மன்னிப்பு வழங்கப்படுகின்றது. இருப்பினும், யாருக்கும், தனது சகோதரருக்கும் இடையில் குரோதம் காணப்படுகின்றதோ அவருக்கும் மன்னிப்பு நிறுத்தப்பட்டு, இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள், இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள், இவ்விருவரும் சமரசமாகும் வரை காத்திருங்கள் என்று கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், புகாரி).

சுவனத்தின் படித்தரங்கள் (வகுப்புக்கள்) 
சுவனம் பலதாகும். அவை பெயர்களைக் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது, சாதராண நிலையில் உள்ளது என்றெல்லாம் வகுப்புக்கள் உள்ளன.

قَالَ إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَاسْأَلُوهُ الْفِرْدَوْسَ فَإِنَّهُ أَوْسَطُ الْجَنَّةِ وَأَعْلَى الْجَنَّةِ أُرَاهُ فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ (صحيح البخاري

சுவனத்தில் நூறு படித்தரங்கள் (வகுப்புக்கள்) உள்ளன :

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களுக்காக அதனை அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கும் இடையில் உள்ள அளவு வானம், பூமி ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட அளவாகும். நீங்கள் அல்லாஹ்விடம் வேண்டுகின்ற போது “அல்பிர்தௌஸ்” என்ற சுவனத்தை வேண்டுங்கள். அது சுவனத்தில் மத்தியும், சுவர்க்கத்தில் உயர்வானதுமாகும். அதன் மேல் அர்ரஹ்மானின் அர்ஷ் இருக்கின்றது. அதிலிருந்து சுவனத்தின் நதிகள் பெருக்கெடுக்கின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்முஃமினூன் அத்தியாயத்தை ஆரம்பம் முதல் படித்துக் கொண்டு வாருங்கள். அதில் சுவனத்தைப் பெற முடியுமான சில காரியங்கள் கூறப்பட்டு இறுதியில் ” அவர்களே அல்பிர்தௌஸ் என்ற சுவனத்தை வாரிசாக்கிக் கொள்வோர், அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் என்று கூறப்படுவதைப் பார்ப்பீர்கள். (அல்முஃமினூன்; 1-11).

சுவனத்தின் பெயர்கள் :

சுவனம் பல பெயர்கள் கொண்டு வர்ணிக்கப் படுகின்றது, அவற்றில் சிலது பற்றி அறிவது ஈமானுக்கு உணர்வூட்டுவதாக இருக்கும் என்பதற்காக அவை பற்றி இங்கு தரப்படுகின்றன.

அல்ஃபிர்தவ்ஸ் :

இது பற்றி சுவனத்தின் படித்தரங்கள் என்ற தலைப்பில் தரப்பட்டுள்ள ஆதாரங்களைக் கவனத்தில் கொள்ளவும்.

ஜன்னா :

“ஜன்னத்”: என்று ஒருமையாகவும், “ஜன்னாத்” என்று பன்மையாகவும் உபயோகிக்கப்படும் இந்த வார்த்தையானது சாதாரண தோட்டத்தைக் குறிக்கவும், முஃமின்களின் இறுதியும், நிரந்தர இல்லமுமான சுவனங்களைக் குறிக்கவும் அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தையாகும். இதை குர்ஆனிலும், ஹதீஸிலும் அதிமதிகம் நீங்கள் காணமுடியும்.

ஒரு தினம் ஹாரிஸா (ரழி) அவர்களின் தாய் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவின் மீது நான் வைத்திருக்கும் பாசத்தையும். மதிப்பையும் நீங்கள் அறிவீர்கள். அவர் சுவனத்தில் இருந்தால் பொறுமை செய்து, நன்மையை -அல்லாஹ்விடம்- எதிர்பார்ப்பேன். ஆனால், அவரது நிலை வேறு எதுவாக இருந்தாலும் (அந்தக் கவலையினால்) நான் என்ன செய்வேன் என்பதை நீங்கள் அறியத்தான் போகின்றீர்கள் என்றார்கள். ஹாரிஸாவின் தாயே உனக்கென்ன நேர்ந்தது? அது ஒரு சொர்க்கமல்ல. அது பல சொர்க்கங்கள். உனது மகன் “அல்பிர்தௌஸ்” என்ற உயர்வான சொர்க்கத்தில் உள்ளார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இங்கு அது ஒரு சொர்க்கமல்ல, பல சொர்க்கங்கள் என்ற வாசகத்தின் மூலம் சுவர்க்கங்கள் ஒன்றல்ல பலதுதான். அதைக் குறிக்க ஜன்னா, ஜன்னத் என்ற வார்த்தைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதுடன், அல்ஃபிர்தௌவ்ஸ் என்ற உயர்ந்த சுவனம் பற்றியும் விளங்க முடிகின்றது.

மேலதிக தகவல்களுக்கு பின்வரும் வசனங்களைப் பார்க்கவும்:
அல்பகரா-35, 82, 111, 214, 221),
(ஆலுஇம்ரான்- 142, 185),
(அந்நிஸா-124),
(அல்அஃராஃப்-19, 22, 27, 40, 42,43,44, 46, 49, 50),
(அத்தவ்பா-111),
(யூனுஸ்-26),
ஹுத்-23, 108,119),
(அர்ரஃத்-35),
(அந்நஹ்ல்-32),
(மர்யம்-60,63),
(தாஹா-117, 121),
(அல்புர்கான்-24),
(அஷ்ஷுஃரா-85),
(அல்அன்கபூத்- 58),
(ஸஜ்தா-13),
யாஸீன்- 26,55),
அஸ்ஸுமர்- 73, 74)
(காபிர்-40),
(ஷுரா-7),
(ஸுக்ருஃப்-70, 73),
(அஹ்காஃப்- 16),
(முஹம்மத்-6,15),
(காஃப்-31),
(ஹஷ்ர்-20),
(அத்தஹ்ரீம்-11),
(அத்தஹ்ர்-12),
அல்ஹாக்கா-22),
(அல்மஆரிஜ்- 32),
(அல்காஷியா-12),

ஜன்னத்துல் மஃவா :

“மஃவா” என்ற சொல்லின் பொருள் ஒதுங்கும் தலம், தங்குமிடம் என்பதாகும். நரகத்தின் ஒதுங்குதலம், சுவனத்தின் ஒதுங்குதலம் என்பதைக் குறிக்க மஃவா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுவனம் பற்றி இடம் பெறுவதில், சிறந்த தங்குமிடம் என்றும், நரகம் பற்றி இடம் பெறுவதில் கெட்ட தங்குமிடம் என்றும் அடையாளப்படுத்தி கூறப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.

எவர் தனது இரட்சகன் முன்னிலையில் நிற்பதை அஞ்சி, (தனது) ஆத்மாவை மனோ இச்சையை விட்டும் கட்டுப்படுத்திக் கொள்கின்றாரோ நிச்சயமாக (அவர்) ஒதுங்கும் தலம் சுவர்க்கமாகும். (அந்நாஸிஆத். வசனம்: 40 – 41) என்பதை மொழி பெயர்க்கின்றபோது அவர் ஓதுங்கும் தலம் மஃவாதான் என்றும், மஃவா என்பதே அவருக்கான சொர்க்கம் என்றும் மொழி பெயர்க்கலாம்.

நிச்சயமாக (முஹம்மதாகிய) அவர் (ஜிப்ரீலாகிய) அவரை மீண்டும் ஒரு தடவை ஸித்ராவில் (ஸித்ரத்துல் முன்தஹாவில்) கண்டார். அங்குதான் “ஜன்னத்துல் மஃவா” சுவனம் இருக்கின்றது. (அந்நஜம். வசனம்: 13- 15) இங்கு மஃவா என்பது சுவனத்தின் பெயர்களில் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.

அத்ன் :

நிரந்தரம் என்ற பொருளைக் கொண்ட இந்தச் சொல்லை சுவர்க்கத்தைக் குறிக்கும் சொல்லுடன் இணைத்து கூறப்பட்ருக்கின்றது.

“நம்பிக்கையாளர்களான ஆண்கள், நம்பிக்கையாளர்களான பெண்கள் ஆகியோருக்கு சுவனச்சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான், அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள், அத்ன் சுவனச் சோலைகளில் சிறந்த குடியிருப்புக்களும், (அல்லாஹ்வின்) மாபெரும் பொருத்தமும் உண்டு, அதுவே மக்கதான வெற்றியாகும் (அத்தவ்பா: வசனம்: 72).

மேலும் விபரங்களுக்கு பார்க்க:
(அர்ரஃத். -23),
(அந்நஹ்ல் -31),
அல்கஹ்ஃப் -31),
(மர்யம்-61),
(தாஹா-76),
(பாத்திர்-33),
(ஸாத்-50),
(காபிர்-8),
(அஸ்ஸஃப்-61),
அல்பய்யினா-8)

அவர்களும், அவர்களின் மூதாதையர், மற்றும் மனைவியர், அவர்களின் சந்ததியினர் ஆகியோர் “அத்ன்” என்ற சுவனத்தில் நுழைவார்கள், வானவர்கள் அனைத்து வாயில்களாலும் நுழைந்து உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள். (அர்ரஃத் வசனம்:22-23)

عن سَمُرَةُ بْنُ جُنْدَبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَنَا أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ فَابْتَعَثَانِي فَانْتَهَيْنَا إِلَى مَدِينَةٍ مَبْنِيَّةٍ بِلَبِنِ ذَهَبٍ وَلَبِنِ فِضَّةٍ فَتَلَقَّانَا رِجَالٌ شَطْرٌ مِنْ خَلْقِهِمْ كَأَحْسَنِ مَا أَنْتَ رَاءٍ وَشَطْرٌ كَأَقْبَحِ مَا أَنْتَ رَاءٍ قَالَا لَهُمْ اذْهَبُوا فَقَعُوا فِي ذَلِكَ النَّهْرِ فَوَقَعُوا فِيهِ ثُمَّ رَجَعُوا إِلَيْنَا قَدْ ذَهَبَ ذَلِكَ السُّوءُ عَنْهُمْ فَصَارُوا فِي أَحْسَنِ صُورَةٍ قَالَا لِي هَذِهِ جَنَّةُ عَدْنٍ وَهَذَاكَ مَنْزِلُكَ قَالَا أَمَّا الْقَوْمُ الَّذِينَ كَانُوا شَطْرٌ مِنْهُمْ حَسَنٌ وَشَطْرٌ مِنْهُمْ قَبِيحٌ فَإِنَّهُمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا تَجَاوَزَ اللَّهُ عَنْهُمْ- صحيح البخاري

என்னிடம் இருவர் இன்றிரவு (கனவில்) வந்தனர். என்னை ஒரு தங்கம், வெள்ளிக் கற்களால் கட்டப்பட்ட ஒரு நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். எம்மை சில மனிதர்கள் (இடையில்) சந்தித்தனர். அவர்களில் தோற்றதில் அரைப்பகுதி நீ காண்கின்ற சிறந்த அழகைப் போன்றதாக இருந்தது. மற்ற அரைப்பகுதி நீ காண்கின்ற மிகவும் அசிங்கமான தோற்றமாக காட்சி தந்தது. அவர்களிடம் நீங்கள் இதோ இந்த நதியில் மூழ்கி விடுங்கள் எனக் கூறப்பட்டதும், உடனே அவர்கள் அதில் வீழ்ந்தார்கள். அவர்களிடம் (முதலில்) காணப்பட்ட அந்த தீய தோற்றம் அவர்களை விட்டும் அகன்று விட்டது. இதன் பின், மிகவும் அழகிய தோற்றத்தை உடையவர்களாக அவர்கள் மாறினர். (அந்த மனிதர்களிடம்) இது ஜன்னத்து அத்ன், இதுவே உனது தங்குமிடம் எனக் கூறப்பட்டது. ஒரு பகுதி அழகியதும், மறுபகுதி அசிங்கமுமான தோற்றத்தில் இருந்தோர் தமது நல்ல அமல்களுடன் தீய அமல்களையும் கலந்தவர்கள் இவர்கள் பற்றி விளக்கம் தரப்பட்டது. (புகாரி).

ஜன்னத்துன் நயீம், ஜன்னத்துல் குல்த் :

சுவனத்தைக் குறிக்க ஜன்னத்துன் நயீம், ஜன்னத்துல் குல்த், “ஜன்னத்து அத்ன்” என இடம் பெறும் வாசகங்களுடன் “ஜன்னா” (சொர்க்கம்) என்ற சொல் இணைக்கப்பட்டு, அதில் காணப்படும் இன்பங்கள், தன்மைகள் போன்றவற்றை விபரிக்கப்படுகின்றது. (அல்லாஹ்வே மிக அறிந்தவன்)

சுவனவாதிகளின் பண்புகள், தன்மைகள் :

உலகில் வாழும் மனிதர்களில் நல்லவர்களே சுவனத்தின் வாரிசுகள். சுவனம் ஒரு தூய்மையான தேசம். அதில் வசிக்க வருபவர்களும் தூய பண்புடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.

பாவிகளான முஸ்லிம்கள் நரகத்தில் போடப்பட்டு தூய்மைப் படுத்துப்படுவதும், ஸிராத் பாலத்தில் முன்னால் சிலர் தடுத்து பரிசுத்தப்படுவதும் இதற்காவே. இந்தத் தூய்மை ஆன்மீகத்துடன் தொடர்புடையது மாத்திரமல்ல, மனித உடலுடன் காணப்படும் வெளிப்படையான தூய்மையையும் குறிக்கும் என்பதை பின்வரும் நபி மொழி மூலம் அறிந்து கொள்ளலாம்.

சுவனத்தில் முதலாவது நுழையும் குழுவின் தோற்றம் :

 பௌர்ணமி இரவின் நிலவு போன்றதாகும். அவர்கள், அதில் (எச்சில்) துப்பமாட்டார்கள், மூக்கு சிந்தமாட்டார்கள், மலம் கழிக்கமாட்டார்கள், அவர்களின் சீப்புக்கள் தங்கம், வெள்ளியினாலானதாகும், அவர்களின் வாசனைத் திரவியம் தட்டு உலுவ்வா எனப்படும் மணக்கட்டையாகும். அவர்களின் வியர்வை வாசனை நிறைந்த கஸ்தூரியாகும், அவர்கள் ஒவ்வொருக்கும் இரு மனைவியர் இருப்பார்கள், அழகின் காரணமாக அவ்விருவரினதும் கெண்டைக்கால் மஜ்ஜை உள்ளிருந்து தெரியும். அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகளோ, குரோதமோ இருக்காது, அவர்களின் இதயங்கள் ஒரு மனிதனின் இதயம் போன்றதாகும். அவர்கள், காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதிப்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனவாதிகளின் காணிக்கை (முகமன்) :

உலகில் முஸ்லிம்கள் தமக்கு அறிமுகமான, அறிமுகமற்ற ஏனைய முஸ்லிம் சகோதரர்களுக்கு பரஸ்பர ஸலாம் கூறிக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் கட்டளை இட்டுள்ளது. “உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் நிலவட்டுமாக” என்ற சாதாரண பொருளுடைய வார்த்தையாக நாம் எண்ணி விடக்கூடாது அது பல சிறப்புக்களைக் கொண்டதாகும்.

சுவர்க்கத்தில் இருப்போர் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றபோது கூறிக்கொள்ளும் காணிக்கையாக ஸலாமை அல்லாஹ் அறிமுகம் செய்கின்றான்.

تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ

அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை ஸலாம் என்பதாகும். (அல்அஹ்ஸாப்: வசனம்:44)

تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ

அவர்களின் காணிக்கை ஸலாமாகும் (இப்ராஹீம்: வசனம்: 23)

சுவனத்து ஸலாம் பற்றிய தெளிவு :

ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய சுவனவாசிகளின் முகமன் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்:

“அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை “ஸலாம்” என்பதாகும்.” (அல்அஹ்ஸாப்: வச:44)

“அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்” (இப்ராஹீம்: வசனம்: 23) என இடம் பெறும் வசன அமைப்பினை ஆதாரமாகக் கொண்டு சிலர் “ஸலாம்” என்றும் கூறலாம் என வாதிடுகின்றனர்.

அந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கின்றபோது இந்த வாதம் சரியானது போன்று தோன்றினாலும் அது வசன அமைப்பின் முறைதான், ஸலாம் கூறும் முறையல்ல என்பதை பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

وَلَقَدْ جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ

”நமது (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது அவர்கள் (அவரைநோக்கி) ஸலாமா- என்று கூற, அவர் ஸலாம் என்று கூறினார்.” (ஹுத். வசனம்: 69)

إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ إِنَّا مِنْكُمْ وَجِلُونَ

“அவர்கள் (அவரிடம்) பிரவேசித்தபோது (அவரை நோக்கி) ஸலாமா- என்று கூறினார்கள்.” (அல்ஹிஜ்ர். வசனம்: 52)

إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُنْكَرُونَ

“அவர்கள் (அவரிடம்) பிரவேசித்தபோது (அவரை நோக்கி) ஸலாமா- என்று கூறினார்கள். அவர், ஸலாமுன் என (பதில்) கூறினார்.” (அத்தாரியாத். வசனம்: 25)

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا

”அங்கு அவர்கள் (சுவனவாசிகள்) எந்த வீண் கேழிக்கைகளையும் செவியுறமாட்டார்கள். ஸலாமா என்ற வார்த்தையைத் தவிர.” (மர்யம், வசனம்: 62)

إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا

“அங்கு அவர்கள் (சுவனவாசிகள்) எந்த வீண் கேழிக்கைகளையும் செவியுறமாட்டார்கள். ஸலாமா என்ற கூற்றைத் தவிர.” (அல்வாகிஆ. வசனம்: 26)

وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا

”அர்ரஹ்மானது அடியார்கள் பூமியின் மேல் பணிவாக நடப்பார்கள், அறிவீலிகள் அவர்களுடன் பேசினால் ஸலாமா எனக் கூறுவார்கள்.” (அல்ஃபுர்கான். வசனம்:63)

أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

”இன்னும் (சுவனவாசிகளான) அவர்கள் எங்கள் இரட்சகனே! எங்கள் மனைவியர் மூலமும், எமது சந்திகள் மூலமும் எமக்கு கண்குளிர்ச்சியை வழங்குவாயாக! இன்னும், எம்மை இறையச்சமுடையோருக்கு தலைவர்களாகவும் ஆக்கிடுவாயாக! என்றும் கூறுவர்கள். இவர்கள் தாம் பொறுமை செய்ததற்காக அறைகளை கூலியாக வழங்கப்படுவார்கள், அங்கு அவர்கள் காணிக்கை மூலமும், ஸலாமாவையும் கொண்டு வரவேற்கப்படுவார்கள். (அல்ஃபுர்கான். வசனம். 74-75)

இந்த வசனங்களில் ஸலாமா, ஸலாம் என்ற சொற்பிரயோகங்கள் இலக்கண நடைக்கு அமைவாக இடம் பெற்றுள்ளது.

அரபு இலக்கணத்தில் பயனிலைச் சொல்லின் இறுதியில் ளம்மதைன் (ரஃப்வு)க் குறியீடு இடம் பெறும். அதற்காகவே ஸலாமுன், ஸலாம் என்று இடம் பெற்றுள்ளது.

அதே வேளை வசனத்தின் அமைப்பு செயற்படு பொருளாக இருப்பின், அதன் இறுதி ‘ஃபத்ஹ்” செய்யப்பட்டதாக இருக்கும். அந்த அடிப்படையில்தான் “ஸலாமா” என இடம் பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்ண்டும்.

ஆகவே “அஸ்ஸலாமு அலைக்கும் என்பற்குப் பதிலாக” “ஸலாம்” அல்லது ஸலாமா என ஒருவரிடம் கூறலாம் என்று விளங்குவதும், விளக்குவதும் அரபு இலக்கண நடைகளைப் புரியாத குழப்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது தக்பீர், தஸ்பீஹ், தஹ்லீல், தஹ்மீத் போன்ற சொற்பிரயோகங்களை ஒத்தது என்று சுருக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

சுவர்க்கத்தில் ஆதம் நபி கூறிய ஸலாம் :

ஆதம் நபி (அலை) அவர்கள் எங்கோ ஒரு தோட்டத்தில் குடியிருக்கவில்லை, மாறாக அவர்கள் சுவனத்தில்தான் குடியிருந்தார்கள். அங்கிருந்துதான் இந்த பூமிக்கு அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். வானவர்களுக்கு அவர்கள் அங்கு கூறிய காணிக்கை அஸ்ஸலாமு அலைக்கும் என்பதாகும் என்பது பற்றி பின்வரும் செய்தி விளக்குகின்றது.

عن أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا ثُمَّ قَالَ اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنْ الْمَلَائِكَةِ فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ فَقَالُوا السَّلَامُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ فَزَادُوهُ وَرَحْمَةُ اللَّهِ فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ فَلَمْ يَزَلْ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الْآنَ

அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை அறுபது முழத்தில் படைத்தான். பின்னர் அந்த வானவர்கள் மீது ஸலாம் கூறு, அவர்கள் என்ன (காணிக்கை) பதில் தருகின்றார்கள் என்பதை செவிமடுத்துக் கேள், அதுதான் உம்முடையதும், உமது சந்ததியுடையதும் காணிக்கையாகும். அவர் அவர்களை நோக்கி அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினார், அவர்கள் அதற்குப் பதில் அளித்து, அஸ்ஸலாமு அலைக்க வரஹ்மத்துல்லாஹ் என்று கூறி, வரஹ்மத்துல்லாஹ்வை அதிகரித்தனர். சுவனத்தில் நுழையுவோர் அனைவரும் ஆதம் நபியின் தோற்றத்தில் இருப்பர். இன்றுவரையும் படைப்புக்கள் (உருவத்தில்) குறைந்து கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

ஆதம் நபி (அலை) அவர்கள் குடியிருந்த சுவனம் எது?

மரணத்தின் பின் நடைபெறும் கேள்விகணக்கின் பின்னர் முஃமின்கள் எந்த நிரந்தர சுவனத்தில் குடியமர்த்தப்பட இருக்கின்றனரோ அங்குதான் ஆதம் நபி (அலை) அவர்கள் முதலில் குடியிருந்தார்கள். அங்கிருந்துதான் வெளியேற்றவும் பட்டார்கள் என்பதை மேற்படி ஹதீஸ் இருந்து விளங்கிக் கொள்ளலாம். பின்வரும் ஹதீஸ் இதை இன்னும் தெளிவுபடுத்துகின்றது.

يَجْمَعُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى النَّاسَ فَيَقُومُ الْمُؤْمِنُونَ حَتَّى تُزْلَفَ لَهُمْ الْجَنَّةُ فَيَأْتُونَ آدَمَ فَيَقُولُونَ يَا أَبَانَا اسْتَفْتِحْ لَنَا الْجَنَّةَ فَيَقُولُ وَهَلْ أَخْرَجَكُمْ مِنْ الْجَنَّةِ إِلَّا خَطِيئَةُ أَبِيكُمْ آدَمَ

மறுமையில் உயர்ந்தவனும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் மனிதர்களை ஒன்றுதிரட்டுவான். அவ்வேளை முஃமின்கள் எழுந்து நிற்பார்கள். சுவனம் அவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவரப்படும். ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, எங்கள் தந்தையே! சுவனத்தை எமக்காத் திறக்கும்படி (அல்லாஹ்விடம்) வேண்டுங்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அவர்கள், இந்த சுவனத்தில் இருந்து (ஏற்கனவே) உங்கள் தந்தை ஆதத்தை வெளியேற்றியது அவரது தவறைத் தவிர வேறு என்ன என்று” கேட்பார்கள். (முஸ்லிம்)

சுவன வாசிகளின் தோற்ற அமைப்பு :

فَكُلُّ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ فَلَمْ يَزَلْ الْخَلْقُ يَنْقُصُ حَتَّى الْآنَ

சுவனத்தில் நுழையுவோர் அனைவரும் ஆதம் நபியின் தோற்றத்தில் இருப்பர். இன்றுவரையும் படைப்புக்கள் (உருவத்தில்) குறைந்து கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

சுவனத்தில் திருமணமாகாதவர் கிடையாது :

சுவனம் ஆண்களுக்கு மாத்திரமல்ல, பெண்களுக்கும் சொந்தமான அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நிறைந்த நிரந்தர இல்லமாகும். அதில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள், ஜின்கள் அனைவரும் பிரவேசிப்பர்.

ஆண், பெண் இரு சாராரில் எவர் நல்லறம் செய்கின்றாரோ அவரை நிச்சயமாக நாம் மணமான வாழ்வுக்கு உரித்தாக்குவோம். அவர்கள் செய்ததற்கான கூலியை மிகவும் சிறந்ததாக வழங்குவோம் (அந்நஹ்ல். வசனம்:97). என்ற அல்லாஹ்வின் கூற்றின் மூலம் இதை அறிந்து கொள்ளலாம்.

சுவனவாதிகளில் ஒவ்வொருவருக்கும் இரு மனைவியர் இருப்பர். (அழகின் காரணமாக) அவர்களின் இரு பாதங்களினதும் மஜ்ஜை தோலின் வெளிப்புறமாகத் தெரியும். சுவனத்தில் திருமணம் முடிக்காத யாரும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹுருல் ஈன் என்ற கன்னியர்களைக் கொண்டு அவர்களுக்கு நாம் மணம் முடித்து வைப்போம் என ஆண்களைப் பற்றி மாத்திரம் அல்குர்ஆன் எடுத்துக் கூறுவதை வைத்து பெண்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சுவனவாதிகளான ஆண், பெண் இருபாலரும் நிச்சயம் மணம் முடித்து வைக்கப்படுவர் என்பதை இந்த ஹதீஸின் மூலம் விளங்கலாம்.

சுவனத்துக் கன்னியர் :

ஹுருல் ஈன் என்ற கட்டழகு மங்கையர்களைத்தான் சுவனத்துக் கன்னியர் என்று கூறப்படும். சுவனவாதிகளுக்கு அல்லாஹ்வினால் படைத்து வைக்கப்பட்டுள்ள விஷேடமான படைப்பாகும். இவர்கள் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கலாம்.

(சுவனத்தில்) ஹுருன் ஈன் என்ற கன்னியர்களும் உள்ளனர். (அல்வாகிஆ. வசனம்: 22),

அவர்களுக்காக கண்பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டிருக்கும் (பெண்கள்) உள்ளனர். அவர்கள் மறைக்கப்பட்;ட முத்துக்களைப் போன்றவர்கள். (அஸ்ஸாஃப்பாத்: 48-49),

(சுவனவாதிகளான) அவர்கள் அடுக்குக் கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். ஹுருன் ஈன்களை நாம் அவர்களுக்கு மணம் முடித்து வைப்போம். (அத்தூர், வசனம்:20),

அவர்களை இதற்கு முன்னர் மனிதர்களோ, ஜன்களோ தீண்டியதில்லை. (அர்ரஹ்மான்.வசனம்: 70- 74).

மேலதிக விபரங்களுக்கு பார்க்க: (அல்பகரா- 25), (ஆலுஇம்ரான்- 15), அந்நிஸா- 57), (அத்துஹ்ஹான். 54), ( அர்ரஹ்மான்- 70, 71,72), (அல்வாகிஆ- 35-37), (அந்நபஃ- 33)

சுவனத்தில் வீண் பேச்சு இல்லை :

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا إِلَّا سَلَامًا وَلَهُمْ رِزْقُهُمْ فِيهَا بُكْرَةً وَعَشِيًّا
تِلْكَ الْجَنَّةُ الَّتِي نُورِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا

அங்கு (சுவனவாசிகளான) அவர்கள் எந்த வீண் கேழிக்கைகளையும் செவியுறமாட்டார்கள். ஸலாமா என்ற வார்த்தையைத் தவிர, அங்கு அவர்கள் காலையும், மாலையும் ஆகாரம் வழங்கப்படுவார்கள், அந்த சுவனத்தை நமது அடியார்களில் யார் பயபக்தியுடையோராக இருந்தார்களோ அதை அவர்களுக்கு நாம் உரித்தாக்குவோம். (மர்யம்-63,62)

சுவனவாதிகள் ஒருவரை ஒருவர் சந்திந்து அளவளாவிக் கொள்வர், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்பாக்கியம் பற்றி அவனைத் துதித்து புழ்ந்து கொள்வர், அல்லாஹ்வே! அந்த சுவனத்து மக்களாக நம்மையும் மாற்றுவாயாக!

சுவனவாதிகளின் பலம். (சக்தி) :

சுவனவாதிகள் உலக அமைப்பில் இருந்து எல்லாவிதத்திலும் வித்தியாசப்பட்டவர்கள். அதில் சுவனவாதிகள் சக்தியும் ஒன்றாகும். குர்ஆனில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் நாம் தரும் தகவல்களின் அடிப்படையை வைத்து இதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

சுவர்க்கவாதிகளில் ஒரு மனிதர் உண்ணுவது, குடிப்பது, இன்பம் அனுபவிப்பது, உடல் உறவு கொள்வது ஆகியவற்றில் நூறு மனிதர்களின் சக்தி கொடுக்கப்படுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், தாரமி).

சுவனவாதிகளின் முதலாவது உணவு. :

சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்த பின்னர் வகைவகையான உணவுகளை உண்ணுவார்கள் என்பதை நாம் அறிவோம். அவர்கள் சுவனத்தில் நுழைந்ததும் முதலாவது உண்ணும் உணவு மீனுடைய ஈரல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்).

பானம் :

சுவனவாதிகள் பருகும் பானங்கள் பல்சுவை நிறைந்தவை. அவற்றின் வகைகள் பற்றி அல்குர்ஆன் தனியாகப் பிரித்துக் கூறி இருக்கின்றது. ”

அவர்கள் அதில் ஸல்ஸபீல் எனப்படும் நீருற்றில் இருந்து இஞ்சி கலந்த பானம் புகட்டப்படுவார்கள். (அத்தஹ்ர்: வசனம்:17, 18).

நல்லவர்கள் நிச்சயமாக கற்பூரம் கலந்த பானத்தைக் குவலைகளில் இருந்து அருந்துவார்கள். (அத்தஹ்ர்: வசனம்: 5).

அவர்கள் முத்திரை பதிக்கப்பட்ட ரஹீக் எனும் பானத்தை அருந்துவார்கள், அதன் இறுதி கஸ்தூரியாகும்… அதன் கலவை தஸ்னீம் என்ற நீரூற்றில் இருந்தும் உள்ளதாகும். (அல்முதஃப்பிபீன். வசனம்: 24- 28).

அவர்களின் இரட்சகன் அவர்களுக்கு தூய்மையான பானத்தை அவர்களுக்குப் புகட்டுவான். (அத்தஹ்ர்: 21).

உலகில் மனிதன் அருந்தும் நீரால் அவனது உடல் நலத்திற்குக் கூட கேடுகள் வருவதைப் பார்க்கின்றோம். ஆனால் அவ்வாறானதொரு நிலை சுவனத்துப் பானங்களுக்கு இருக்கவே இருக்காது.

சுவனவாதிகளின் பாத்திரம் :

சுவனத்தில் தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை இவ்வுலகில் சுவனத்தை நம்பாத இறை மறுப்பாளர்கள்தாம் பாவிப்பார்கள்.

தங்கப்பல் கட்டுதல், உடைந்த பாத்திரத்தை தங்கத்தால் அடைத்தல் போன்ற சிறியளவு பாவனை மார்க்கதில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஹுதைஃபா (ரழி) அவர்கள் மதாயின் (ஈராக்கில் ஒரு நகரம்) நகரத்தில் இருக்கும் வேளை “தஹ்கான்” என்பவர் வெள்ளிப்பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதனை உடனே வீசி எறிந்த ஹுதைஃபா (ரழி) அவர்கள், நான் அதைப்பாவிக்க வேண்டாம் என்று தடுத்தேன். அதை அவர் தவிர்ந்து கொள்ளாததற்காகவே வீசினேன் எனக் கூறிவிட்டு மெல்லிய பட்டு, கோடிடப்பட்ட பட்டு ஆடை அணிவது, தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் பருகுவது ஆகியவற்றைத் தடை செய்த நபி (ஸல்) அவர்கள் இவை அவர்களுக்கு (இறைமறுப்பாளர்களுக்கு) இவ்வுலகிலும், மறுமையில் உங்களுக்கும் என்று கூறியதாக அறிவித்தார்கள் (புகாரி, முஸ்லிம், திர்மிதி).

புகாரியில் வரும் அறிவிப்பில் அவ்விரண்டிலும் உண்ணவோ, குடிக்கவோ வேண்டாம் என இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு பார்க்க: (சுக்ருஃப் 71), (அத்தஹ்ர்: 15,16,21), (அல்காஷியா:14).

சுவனவாதிகளின் காப்புக்கள் :

சுவர்க்கவாதிகளான முஃமின்கள் சுவனம் சென்ற பின்னர் தங்க வழையல்கள் (காப்புக்கள்) அணிவிக்கப்படுவார்கள். இதை அல்குர்ஆனில் காணலாம். “அதிலே அவர்கள் தங்கம், வைடூரியத்தினாலான வழையல்கள் அணிவிக்கப்படுவார்கள். அதில் அவர்களது ஆடை பட்டாகும் (ஃபாதிர்: 33)

அதே போன்றதொரு வசனத்தை அல்ஹஜ் வசனம் 23ல் காணலாம்.

“அவர்கள் வெள்ளியிலான வழையல்கள் அணிவிக்கப்படுவார்கள்” (அத்தஹ்ர்: 21)

சுவனத்துக் கூடாரம் :

சுவனத்தில் முத்துக்களால் துளை (துவாரம்) இடப்பட்ட ஒரு கூடாரம் உண்டு. அதன் அகலமும், (மற்றொரு அறிவிப்பில், அதன் உயரம், அகலம் சராசரி) அறுபது முழங்களாகும். (புகாரி, முஸ்லிம்).

நான்கு வகை நதிகள். :

இவை சுவனவாதிகள் பருகுவதற்காக அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ள நான்கு வகை நதிகளாகும். அல்குர்ஆனிலும். ஹதீஸ்களிலும் ஆறுகள் என்று பன்மையாக வந்திருப்பதையும் கவனத்தில் கொண்டு நான்கு நதிகள் என்று புரியாமல் நான்கு வகை நதிகள் என்று புரிந்து கொள்ளவும். சுவனவாதிகள் பருகும் பானங்களுடன் இணைத்து விளங்கிக் கொள்ளவும்.

அதிலே கலங்காத (நீர் கெட்டுவிடாத) ஆறுகள், சுவை கெட்டுவிடாத பாலாறுகள், குடிப்பவர்களுக்கு இன்ப சுவையைத் தரும் மது ஆறுகள், தூய்மையான தேனாறுகள் உண்டு (முஹம்மத்: வசனம்: 15).

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்ற போது நான்கு நதிகளைக் கண்டதாகவும் அதில் இரண்டு ஸித்ரத்துல் முன்தஹா பக்கம் சுவனத்தில் உள்ள இரு நதிகள் என்று விளக்கினார்கள். (புகாரி, முஸ்லிம்).

சுவனவாதிகளின் ஆடை அணிகலன்கள் :

மனிதனர்கள் நிர்வாணிகளாக எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவர் என அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. அது நபிமார்கள் உட்பட அனைவருக்கும் பொதுவானது என்பதைத்தான் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.

கண்ணியமிக்க மனிதர்களான நபிமார்கள் உலகில் எதிரிகளால் துன்புறுத்தப்பட்டு, விமர்சனம் செய்யப்படுவதை இன்றும் பார்க்கின்றோம். மறுமையில் இஸ்லாத்தின் எதிரிகள் எல்லாவகையிலும் கேவலப்படுத்தப்படுவார்கள், ஆனால் நபிமார்கள் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ்வால் கண்ணியப் படுத்தப்படுவார்கள். அதில் ஆடை அணிவிப்பதும் ஒன்றாகும்.

சுவனவாதிகளில் முதலாவதாக மஹ்ஷர் மன்றத்தில் ஆடை அணிவிக்கப்படும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களாகும். அவர்களைப் போன்று அனைத்து நபிமார்களும் அணிவிக்கப்படுவார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.

எங்கள் மத்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருநாள் உபதேசம் செய்ய எழுந்து நின்றார்கள். அப்போது, நிச்சயமாக நீங்கள் பாதணி (காலணி) அணியாதவர்களாகவும், நிர்வாணிகளாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்வின் பக்கம் மறுமையில் எழுப்பப்படுவீர்கள் எனக் குறிப்பிட்ட பின்னர், “நாம் ஆரம்பமாக படைத்ததைப் போன்றதொரு நிலைக்கு (உங்களை) மீட்டுவோம்” என்ற திருமறை வசனத்தைக் கூறினார்கள். பின்னர், படைப்புக்களில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக் குறிப்பிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

பல நூறு கோடி வருடங்கள் மனிதன் மண்ணறையில் வாழ்ந்தாலும் அவன் மறுமை விசாரணைக்காக எழுப்பப்படுவது என்பது உண்மையாகும். அப்படி எழுகின்றபோது அவன் ஆடை, விருத்த சேதனம்- கத்னா- காலணி என எதுவும் இல்லாமல்தான் எழுப்பப்படுகின்றான்.

அந்த வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கு இருக்குமா என்ற கேள்விக்குத்தான் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் இந்த உயர்தரமிக்க ஏற்பாடுகள் அமையப் பெற்றுள்ளன.

தடித்த, மென்மையான பட்டாடைகள் சுவனவாதிகளின் ஆடைகளாகக் கூறப்பட்டுள்ளன. பச்சை நிறமான பட்டுக்கள் என்று நிறம் அடையாளம் காட்டப்பட்டிருப்பதையும் பார்க்கின்றோம்.

அதில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும். (ஃபாதிர்: வசனம்: 33).

அவர்களின் மேல் மேனியின் மீது மென்மையான பட்டும், (வெளி உடம்பில்) தடிப்பமானதும் இருக்கும். (அத்தஹ்ர்: 21)

அவர்கள் தடித்த, மற்றும் மென்மையான பட்டுக்களை அணிந்தவர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கி இருப்பார்கள். (அத்துஹ்ஹான். வசனம்: 53),

அவர்கள் மெல்லிய, மற்றும் தடித்த பச்சை நிறப்பட்டுக்களை அணிந்து, உயர்ந்த ஆசனங்கள் மீது அமர்ந்திருப்பார்கள். (அல்கஹ்ஃப்: வசனம்: 31).

எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்களும் புரிந்தார்களோ அவர்களுக்கு சுவனச்சோலைகள் உண்டு. அதன் கீழால் நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். அங்கு அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (அல்ஹஜ்: வசனம்: 22)

(நன்மை செய்தவருக்குரிய கூலி) அத்ன் என்ற சுவனச் சோலைகளாகும். அதில் அவர்கள் தங்கத்திலான காப்புக்களும், இன்னும், முத்துக்களும் அணிவிக்கப்படுவார்கள், அதில் அவர்களது ஆடை ஹரீர் என்ற பட்டாகும் (ஃபாதிர்: வசனம்: 33).

(சுவனவாதிகளான) அவர்கள் வெள்ளியிலான காப்புக்கள் அணிவிக்கப்படுவார்கள். (அத்தஹ்ர்: 21)

பட்டாடை அணிவது, தங்க வெள்ளித்தட்டுக்களில் உணவு பரிமாறுவதும் இஸ்லாத்தில் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ள அம்சமாகும். அவை மறுமையில் சுவனவாதிகளுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது. ஆடை, அணிகலன்களை விரும்புவது மனித இயல்பாகும். இவ்வுலகில் வாழும்போது அதில் சில வரையறைகைள் கொண்டுவரப்படுவது தவிர்க்க முடியாததுதான். அதனைப் பொறுமையுடன் பேணிக்கொண்ட முஸ்லிம்களுக்கு அவர்கள் பூரண திருப்தி பெறும் அளவு ஆடை அணிகலன்கள் மூலமும் கண்ணியப் படுத்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியைப் பாரக்கின்றோம்.

நீங்கள் (உலகில்) மென்மையான, மற்றும் தடித்த பட்டுக்களை அணியாதீர்கள். தங்கம், வெள்ளிப்பாத்திரத்தில் பருகாதீர்கள். அதன் தட்டுக்களில் உண்ணாதீர்கள். நிச்சயமாக அவை உலகில் அவர்களுக்குரியதாகும். (இறை நிராகரிப்பாளர்களுக்கு உரியதாகும்) மறுமையில் நமக்குரியதாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

சுவனவாதிகளின் கட்டில்கள் :

அல்குர்ஆனில் கட்டில்கள் என்ற சொற்பிரயோகம் ஆறு இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஐந்து இடங்கள் சுவனவாதிகளின் கட்டில்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. சாய்மானக்கட்டில்கள் என்ற சொற்பிரயோகம் ஐந்து இடங்களிலும் அல்குர்ஆனில் பன்மையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ إِخْوَانًا عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ

(சுவனவாதிகளான) அவர்களின் இதயங்களில் காணப்படும் குரோதத்தை நாம் பிடுங்கி விட்டோம். கட்டில்கள் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் முன்னோக்கி (இருப்பார்கள்). (அல்ஹிஜ்ர்: வசனம்: 47).

فِي جَنَّاتِ النَّعِيمِ
عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ الصافات

(சுவனவாதிகளான அவர்கள்) சுவனச் சோலைகளில் கட்டடில்கள் மீது (சாய்ந்தவாறு) ஒருவரை முன்னோக்கியவர்களாக இருப்பார்கள்.(அஸ்ஸாஃப்பாத் : வசனம்: 43-44).

مُتَّكِئِينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ

அடுக்கப்பட்ட கட்டில்கள் மீது சாய்ந்தவாறு இருப்பார்கள். அவர்களுக்கு நாம் “”ஹுரூல் ஈன்” என்ற பெண்களை மணமுடித்து வைப்போம். (அத்தூர்: 20)

عَلَى سُرُرٍ مَوْضُونَةٍ
مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ

அவர்கள் தங்கத்தினால் தயார் செய்யப்பட்ட கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக, ஒருவரை ஒருவர் முன்னோக்கியவாறு இருப்பார்கள். (அல்வாகிஆ. வசனம்: 15-16).

فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ

அங்கு உயரமான கட்டில்கள் இருக்கின்றன. (அல்காஷியா. வசனம்: 13).

உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்தவாறு அமர்ந்திருப்பார்கள். (அல்கஹ்ஃப்: வசனம்: 31).

هُمْ وَأَزْوَاجُهُمْ فِي ظِلَالٍ عَلَى الْأَرَائِكِ مُتَّكِئُونَ

அவர்களும், அவர்களது மனைவியரும் உயர்ந்த சாய்மானக் கட்டில்கள் மேல் நிழல்களில் வீற்றிருப்பார்கள். (யாசீன்: 56)

அவர்கள் உயர்ந்த சாய்மானக் கட்டில் மேல் இருப்பார்கள், அங்கு அவர்கள் சூரியனையோ (கடுமையான உஷ்ணம்) கடும் குளிரையோ பார்க்கமாட்டார்கள்.(அத்தஹ்ர்: 31)

இவை மனிதன் உலகில் மனம் விரும்பும் பொருட்களாகும். அதனை மறு உலகில் நிரந்தரமாக வாழும் மனிதனுக்கு அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். அவை பெயர்களில் கட்டில்கள் என்றிருப்பினும் உலகில் நமது கட்டில்கள் போன்றது என்ற சிந்தனைய நாம் விட்டுவிட வேண்டும். ஏனெனில் இவை தரத்தால் உயர்ந்தவையாகவும், குறைபாடுகள் அற்றவையாகவும் மனம் திருப்திப்படும் விதத்திலும் இருக்கும்.

சுவனவாதிகளின் அறைகள் :

சுவனவாதிகளுக்கு வழங்கப்படும் அறைகள் பற்றி அல்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் தாராளமாகக் காணமுடியும்.

அவர்கள் பச்சை நிற தலையணைகள் மீதும், அழகிய விரிப்புக்களிலும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (அர்ரஹ்மான்: 76).

أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا

அவர்கள் பொறுமை காத்ததற்காக அறைகள் வழங்கப்படுவார்கள். மேலும், அங்கு தஹிய்யாவும், ஸலாமும் கொண்டு வரவேற்கப்படுவார்கள். (அல்புர்கான். வசனம்:75).

وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ

அவர்கள் (சுவனத்து) அறைகளில் அச்சமற்றவர்களாக இருப்பார்கள். (ஸபஃ: வசனம்: 37).

لَنُبَوِّئَنَّهُمْ مِنَ الْجَنَّةِ غُرَفًا

நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவனத்தில் அறைகளை தயார்படுத்தி வைப்போம். (அல்அன்கபூத்; வசனம்: 58).

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَهْلَ الْجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الْغُرْفَةَ فِي الْجَنَّةِ كَمَا تَرَاءَوْنَ الْكَوْكَبَ فِي السَّمَاءِ

நிச்சயமாக சுவனவாசிகள், நீங்கள் வானத்தில் சந்திரனைப் பார்ப்பது போன்று சுவனத்தில் தமது அறைகளை பார்ப்பார்கள். (முஸ்லிம்).

சுவன மாளிகை :

அரபியில் அறைகள் என்பதைக் குறிக்கப்பயன்படும் சொற்கள் வரும் இடங்களில் அறைகள் என்றே நாம் மொழியாக்கம் செய்துள்ளோம். இருந்தாலும் அவை பெரும் மாளிகைகளைக் கூட குறிக்கின்ற சொல்லாகவும் இருக்கலாம். (அல்லாஹ்வே அது பற்றி அறிந்தவன்)

ஆனால் சுவனத்து மாளிகை பற்றி பல ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளன அவற்றில் பின்வரும் செய்தியைக் கவனியுங்கள்.

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُنِي دَخَلْتُ الْجَنَّةَ فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ امْرَأَةِ أَبِي طَلْحَةَ وَسَمِعْتُ خَشَفَةً فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ هَذَا بِلَالٌ وَرَأَيْتُ قَصْرًا بِفِنَائِهِ جَارِيَةٌ فَقُلْتُ لِمَنْ هَذَا فَقَالَ لِعُمَرَ فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ فَذَكَرْتُ غَيْرَتَكَ فَقَالَ عُمَرُ بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَعَلَيْكَ أَغَارُ صحيح البخاري

நான் ஒரு போது சுவனத்தில் நுழைந்து பார்த்தேன். அப்போது அபூதல்ஹாவின் மனைவி நுமைஸா அங்கிருந்தார். ஒரு செருப்பினுடைய ஓசையையும் செவியுற்றேன். இது யாருக்குரியது என்று வினவினேன். அது பிலாலுக்குரியது என்றார் (வானவர்). ஒரு மாளிகையைக் கண்டேன், அங்கிருக்கும் முற்றவெளிக்கு அருகாமையில் ஒரு இளம் யுவதி நின்று கொண்டிருந்தார். இது யாருக்குரியது என்றேன். அது உமருக்குரியது என்றார் (வானவர்). உமர் (ரழி) அவர்களிடம் எடுத்துக் கூறிய நபி (ஸல்) அவர்கள், நான் அதற்குள் பிரவேசித்து அதைப் பார்க்க விரும்பினேன். உமது ரோஷம் எனக்கு நினைவிற்கு வந்தது. அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும். நானா உங்கள் மீது ரோஷப்படுவேன் எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். மனிதர்களும், ஜின்களும் தமது படைப்பாளனாகிய அல்லாஹ்வை அவர்களின் மரணத்தின் பின் அவன் அவர்களை உயிர்கொடுத்து எழுப்பியதும் நேரில் காணுவார்கள். முஃமின்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அல்லாஹ்வைக் கண்டு குதூகலிப்பார்கள். ஆனந்தமாக அந்த இரட்சகனோடு உரையாடுவார்கள். அந்த மறுமை நாள் என்பது மறுபிறவியைச் சொல்கின்ற நாளன்று. மாற்றமாக, அது ஒரு பிறவியை மீண்டும் பிரதி எடுக்கும் நாளாகும்.சுவனத்தில் நுழையும் அல்லாஹ்வின் அடியார்களான முஃமின்கள் அந்த அல்லாஹ்வுடன் நேரடியாகப் பேசுவார்கள் என்று பல நபிமொழிகள் தெரிவிக்கின்றன.

عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ

சுவனவாதிகள் சுவனத்தில் நுழைந்ததும், நான் உங்களுக்கு ஏதும் அதிகப்படியாகத் தந்திட நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று அல்லாஹ் (சுவனவாதிளை நோக்கி) கேட்பான். அதற்கு அவர்கள், எமது முகங்களை நீவெண்மையாக்கவில்லையா? எம்மை நீ சுவனத்தில் நுழைவிக்கவில்லையா? எம்மை நீ நரகத்தில் இருந்து காப்பாற்றவில்லையா? (இதை விடவும் வேறு என்ன இருக்கின்றது) என பதில் அளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திரையை நீக்குவான். இந்நிலையில் அவர்கள் தமது இரட்சகனைப் பார்ப்;பதை விட வேறு எந்த ஒன்றும் இவர்களுக்கு விருப்பமானதாகக் கொடுக்கப்பட்டமாட்டார்கள் (முஸ்லிம்: பாடம்: முஃமின்கள் அல்லாஹ்வை மறுமையில் பார்ப்பதை உறுதி செய்தல்).

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ بِهَذَا الْإِسْنَادِ وَزَادَ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ ] لِلَّذِينَ أَحْسَنُوا الْحُسْنَى وَزِيَادَةٌ صحيح مسلم

மற்றொரு அறிவிப்பில்: எவர்கள் நன்மைகளைச் செய்தார்களோ அவர்களுக்கு (நன்மைகளும்), அதிகப்படியானவைகளும் இருக்கின்றன என்ற வசனத்தை- அல்லாஹ்வை மறுமையில் காண்பதைச் சுட்டிக்காட்டி மேற்படி வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (முஸ்லிம்)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح البخاري)

சுவனவாதிகளிடம், சுவனவாதிகளே! என்று அழைப்பான். அப்போது எங்கள் இரட்சகனே உனது அழைப்பிற்கு நாம் உனது அழைப்பிற்கு வழிப்பட்டோம், உன்பாக்கியத்திற்கு வழிப்பட்டோம் என்று கூறுவார்கள். நீங்கள் நான் வழங்கி இருப்பதைப் பொருத்திக் கொண்டீர்களா? என்று கேட்பான் உனது படைப்புக்கள் யாருக்கும் வழங்காததை நீ எமக்கு வழங்கி இருக்க அதைக் கொண்டு நாம் பொருந்திக் கொள்ளாமல் இருக்க எமக்கென்ன நேர்ந்துள்ளது என்று கேட்பார்கள். நான் அதைவிட சிறந்ததை உங்களுக்கு தருகின்றேன் என்று கூறுவான். (சுவனவாதிகள்) அதைவிட சிறந்ததா (அது ) என்ன என (ஆச்சரியமாக) வினவுவார்கள்.

فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح البخاري)

“உங்கள் மீது நான் எனது திருப்தியை இறக்குகின்றேன், “இனி ஒரு போதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்” என்று கூறுவான். (புகாரி).

இவை மறுமையில் அல்லாஹ் தனது சுவனவாதிகளான அடியார்களுடன் அவனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்திப் பேசுவதை தெளிவுபடுத்தும் செய்திகளாகும்.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக அவன் குர்ஆன் கூறுபவைகளைகளையும், அவனது தூதர் குறிப்பிடும் போது இது போன்ற இன்னும் பல செய்திகளை இன்றும் மறுத்துப் பேசும் மௌலவிகள், முஃப்திக்கள், முல்லாக்கள், இவற்றிற்கு தவறான வியக்கியானம் தருபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இதனை மறுக்கும் இவர்கள், தவறான விளக்கத்தின் மீது கட்டப்பட்ட இறையியல் கோட்பாட்டில் தடம்புரண்ட நிலையில்தான் தமது இந்த இறைமை இன்மை கோட்பாட்டின் பக்கமாக மக்களை அழைக்கின்றார்கள்.

இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பற்றி விளக்குகின்ற போது காதின்றி கேட்பவன், கண் இன்றிப் பார்ப்பவன் என்றுதான் இன்றும் மாணவர்களுக்கு போதனை செய்து எங்குமில்லாத இறைவன் – அர்ஷலும் இல்லை, அர்சியிலும்- இல்லை எனக் காரசாரமாகப் போதனை நடத்துகின்றார்கள். மாணவர்களும் குருநாதாக்களின் கண்கெட்ட குருடர்களைப் போல நம்புகின்றார்கள். அல்லாஹ்வை அவனது அழகிய தோற்றத்தில் மறுமையில் நேரில் காணப்போகின்றோமே! அவன்தானே இந்த உலகத்தில் இதே தோற்றத்தில் இருக்க வேண்டும், அவனைத்தானே மறுமையில் பார்க்கவும் வேண்டும் என்று இந்த முல்லாக்களும் மாணவர்களும் ஒருநாளாவது தமது மனங்களை நோக்கிக் கேட்டிருப்பார்களா? அவ்வாறாயின் தாம் தவறாக நம்பும் தமது தவறான கோட்பாட்டை விட்டும் திருந்தியும் மாணவர்களையும், மக்களையும் திருத்தி இருப்பார்கள். அல்லாமதுல் குல்- எனப்பட்டம் போட்டுக் கொண்டு படைப்பாளனாகிய அல்லாஹ்வைப் பற்றியும், அவனது பெயர்கள், பண்புகள் பற்றியும் சரியான நம்பிக்கையில் இல்லாது என்ன செய்து என்ன செய்ய? சிந்தியுங்கள்.

عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَسَيُكَلِّمُهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ [صحيح البخاري ]

உங்களில் எவரும் மறுமையில் அல்லாஹ் அவரோடு பேசாமல் இருப்பதில்லை. அல்லாஹ்வுக்கும் அவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கமாட்டார்கள். (புகாரி) மற்றொரு அறிவிப்பில்:

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ وَلَا حِجَابٌ يَحْجُبُهُ -صحيح البخاري

உங்கள் எந்த ஒருவருடனும் அவரது இரட்சகன் பேசாமல் இருப்பதில்லை. அவனுக்கும் அம்மனிதனுக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர்களோ, அவரை மறைக்கின்ற திரையோ இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

இவ்வளவு தெளிவான ஹதீஸ்கள் படைப்பாளாகிய அல்லாஹ் தன்னை இந்த உலகில் மறைத்துக் கொண்டிருப்பது போன்று மறுமையில் மறைத்தவனாக இருக்கமாட்டான் எனக் கூறி இருக்க அவன் ஒன்றுமே இல்லாதவன் போல விளக்கம் தருவது எவ்வளவு பெரிய பாவம்? மறுமையில் அல்லாஹ் விசாரணை செய்வான் என்று நம்புகின்ற இவர்கள் இவ்வுலகில் அல்லாஹ்வை ஒன்றுமில்லாத ஒன்றாக நம்புவது முரண்பாடில்லையா? என்று சிந்தியுங்கள். மறுமையில் அல்லாஹ்வைப் பார்ப்பது உறுதி என்றால் இவ்வுலகிலும் அவன் அந்த தோற்றத்தில் இருக்கின்றான். ஆனால் மறைத்திருக்கின்றான். அவனது பண்புகளாக, தன்மைகளாக அவன் குறிப்பிடும் முகம், கை, கெண்டைக்கால், அர்ஷின்மீதிருத்தல், அவனது பேச்சு, வாழ்வு போன்ற பண்புகள் மனிதர்களிடம் இருப்பதால் அவற்றைப் பாழடித்து நம்பவேண்டும் என்ற போதனைதான் அவனை எங்குமே இல்லாதவனாக, இருந்தும் இல்லாதவனாக, அர்ஷின்மீதிலல்லாது எங்கும் நிறைந்தவனாக இவர்களை நம்பத்தூன்றியது.

இது பிற்காலத்தில் இறையியல் கோட்பாட்டில் உருவாக்கப்பட்ட மிகப் பெரும் வழிகேடாகும். தவறான அடிப்படைகளைக் கொண்ட போதனை நூல்கள் இதை இன்று அரபுக்கல்லூரிகளில் அகீதாப் பாடமாகப் போதனை செய்யப்படுகின்றது. அதற்காக அரபு மத்ரஸாக்களில் نور الظلام மற்றும், جوهرة التوحيد போன்ற நூல்கள் பாடநூல்களாகக் கொள்ளப்பட்டு மாணவர்கள் வழிகெடுக்கப்படுகின்றார்கள். அல்லாஹ்வின் தன்மைகள் யதார்த்தமானவைகள் அல்ல என்பதைப் போதிப்பதற்கு இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சென்று பட்டம் பெற்று வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது நம் நாட்டில் செத்துப்போன பாடத்திட்டங்களில் மடிந்து கிடக்கின்ற பாடநூல்களாகும். காலாவதியான நூல்களையும் கொள்கைகளையும் களைய வேண்டிய பொறுப்பில் உள்ள உஸ்தாதுமார்கள் சிலர் نور الظلام என்ற இருள் நூலுக்கு அரபியில் அணிந்துரை வழங்கி அரபு புத்தக விற்பனை நிலையங்களில் அதைப் பவணிவர வைத்துள்ளனர். அதற்கு அடிக்குறிப்பு எழுதிய மாணவருக்கோ உலகப்புகழ் பெற்ற அறிஞர் பட்டம். இத்தனைக்கும் அதில் இருப்பது ஸக்கஃப் என்ற ஒரு மகா பொய்யனின் பொய்ச் செய்திகளும் விளக்கங்களும்தான் என்பது அணிந்துரையும், மதிப்புரையும் வழங்கிய அந்த மர்கஸ் ஆசான்களின் கண்களுக்கு இன்னும் புலன்படவில்லை என்று நினைக்கின்றேன்.

அரபியில் எதைப் பேசினாலும் ஆமீன் கூறுவது போல அரபியில் நமது மாணவர் அடிக்குறிப்பு எழுதியுள்ளாரே! அதனால் அதற்கு அணிந்துரை என்ன? ஆணி உரையும் கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டனர். பாவம் இவர்கள் தாயிக்கள். கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடுக்காதே என்று சும்மாவா சொன்னார்கள். இப்போது விசயத்திற்கு வருவோம் அந்த نور الظلام என்ற இருள் நூலின் அடிக்குறிப்பில் என்ன இருக்கின்றது. அதில் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றி திரிபுபடுத்தி எழுதப்பட்டுள்ளது. உதாரணமாக அல்லாஹ்வின் பேச்சை எடுத்துக் கொண்டால் அதை அவன் தனது வானவர்களுடன் பேசியதாகத்தான் விளங்க வேண்டுமாம். அடியார்களுடன் அல்ல என்றாம். அப்படியானால் சுவனத்தில் நேரடியான அடியார்களுடன் பேசுவான் என்று வந்திருக்கும் ஹதீஸ்களை என்ன செய்வது? இது அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பாடப்போதனை போதிக்கின்ற முறையாகும். இவர்களின் அறிவில் இருப்பது போல அல்லாஹ்வும், அவனது தூதரும் அகீதாப்பாடம் போதிக்க வேண்டும் போல.

சுவனவாதிகளுடன் அல்லாஹ் பேசுவது யதார்த்தபூர்வமாகும். அது தொடர்பான செய்தியினை விமரசன நோக்குடன் எழுத நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.

كل نص أوهم التشبيها- أوله أو فوض ورم تنزيها

(படைப்புக்கு) ஒப்பாகும் நிலையை தோற்றுவிக்கின்ற அனைத்து சான்றுக்கும், தஃவீல் – மறுகருத்தை- வழங்கிவிடு. அல்லது, அதன் பொளை (அல்லாஹ்விடம்) ஒப்படைத்துவிடு. (அதனால்) தூய்மையை நாடு. என்ற அரபுக் கவிதையின் அடிப்படையில்தான் அகீதாப்பாடப் போதனைகள் நாட்டில் காணப்படும் அரபுக்கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் பண்புகளாக இடம் பெறும் வசனங்களை நிலைப்படுத்துவதால் அவனுக்கு உருவம் கற்பித்தாகும் என்ற விளக்கத்தினை இவர்களாகத்தான் உருவாக்கினர். அதுதான் அகீதாவில் வங்கரோத்து நிலையை இவர்களிடம் தோற்றுவித்தது. படைப்பினங்களுக்கு ஒப்பில்லாத பண்புகள் அல்லாஹ்விற்கு இருக்கின்றன. அதன் வெளிப்படையான பொருள் பற்றி நாம் அறிவோம். ஆனால் அவற்றின் யதார்த்த முறை பற்றி அறியமாட்டோம் என்ற ஆரம்பகால ஸஹாபாக்கள், இமாம்களின் போக்கினைப் போன்று இவர்கள் போதிப்பார்களாயின் அல்லாஹ்வைப் பற்றிய அறியாமை இருள் நாளடைவில் நீங்கிவிடும். சுவனவாதிகளின் நிம்மதிப் பெருமூச்சு மரணத்தின் போதும், அதன் பின்னுள்ள நிலைகளிலும் நிம்மதியான உயிர் துறத்தலும், அச்சமற்ற வாழ்வும் நமக்கு அவசியமானதாகும். மறுமையில் காணப்படும் பீதிகள் பற்றி அறிந்த ஒரு இறைவிசுவாசி இப்படித்தான் நினைப்பான்.

{الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إيمَانَهُم بِظُلْمٍ أُوْلَئِكَ لَهُمُ الأَمْنُ وَهُم مُّهْتَدُونَ} [الأنعام: 82]

எவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களது நம்பிக்கையை அநியாயத்துடன் கலக்கவில்லையோ அவர்களுக்கே (மறுமையில்) பூரண பாதுகாப்பு உண்டு. அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள் (அல்அன்ஆம்: 82)

இவ்வசனத்திற்கான நடைமுறை மஹ்ஷர் மன்றத்தில் அமுலுக்கு வரும் அதை இறை விசுவாசிகளான முஃமின்களைத் தவிர வேறு எவரும் இந்தப் பாக்கியத்தை அடைந்து கொள்ள மாட்டார்கள் என்று என்பதே இந்த வசனத்தின் பொருளாகும். இந்த வரிசையில்தான் சுவனவாதிகள் பல படி நிலைகளையும் தாண்டி இறையருளால் சுவனத்தில் கால்பதித்ததோடு பின்வருமாறு கூறி அல்லாஹ்வைப் புகழுவார்கள்.

وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ (34) الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ [فاطر : 34 ، 35]

எம்மை விட்டும் துன்பத்தை போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவார்கள். நிச்சமாக எமது இரட்சகன் மிக்க மன்னிப்பவனும், நன்றி பாராட்டுவனும் ஆவான். அவன் எத்தகையவன் என்றால் அவனது அருளால் நிரந்தர இல்லத்தை (சுவனத்தை) எமக்கு அவன் ஆகமாக்கினான். அதில் எமக்கு எவ்வித கஷ்டமும் பிடிக்காது. அதில் எமக்கு எவ்வித சோர்வும் ஏறடபடாது என்று அவர்கள் கூறுவார்கள். (ஃபாதிர்: 34-35)

இவ்வாறான பாக்கியத்தை நம்மனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக!

சுவனமானது இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும, குதூகலித்தும் மனிதர்கள், ஜின்கள் வாழவிருக்கின்ற நிரந்த வாழ்விடமாகும். அங்கு உலகில் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற, வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்ற நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அதன் இன்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது.

இருந்தும் அங்கு தயார் செய்யப்பட்டுள்ள இன்பங்கள் உலகில் எந்தக் கண்ணாலும் யாராலும் பார்க்கப்படவில்லை, எந்த காது அது பற்றிய யதார்த்த நிலையைக் கேள்விப்பட்டதில்லை, மேலும் எந்த மனித இதயமும் அதை சிந்தித்ததே கிடையாது என்ற கருத்தினை விளக்கும் ஆதாரபூர்வமான நபி மொழிகள் இடம் பெற்றுள்ளன.

சுவனத்தில் காணப்படக்கூடிய சுவாரஸ்யங்கள் சுவனம் தொடர்பான செய்திகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவை பற்றிய சுருக்கமான தகவல் இங்கு தரப்படுகின்றது. நாம் எடுத்தெழுதவிருக்கின்ற செய்திகள் ஒரு முஃமினைப் பொறுத்தவரை இதயத்திற்கும் இதமானவையாக இருக்கின்ற காரணத்தினால் ‘சுவனத்து சுவாரஸ்யங்கள் என தலைப்பிட்டோம்)

ஒரு கிராமவாசியின் ஜோக்கும், நபியின் சிரிப்பும்
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஒருநாள் தினம் ஹதீஸ் கூறிக் கொண்டிருந்த போது அவர்களுடன் கிராமப்புற மனிதர் ஒருவரும் கூட அமர்ந்திருந்தார். அப்போது ‘சுவனத்தில் விவசாயம் செய்ய ஒரு மனிதன் தனது இரட்சகனிடம் அனுமதி கோருவார். அதற்குப் பதில் தரும் வகையில் அல்லாஹ் நீ விரும்பியது (இங்கு) உனக்கில்லையா எனக் கேட்பான். அவர் ஆம். என்பார், அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என அவன் அல்லாஹ்விடம் கூறுவான் (அதில் அவன் ஈடுபட்டதும்) அது உடன் முளைத்து, அதன் தளைகள் கண்பார்வைக்கு கவர்ச்சியானதாகி, அது நன்றாக வளர்ந்து, அறுவடை செய்யும் நிலையையும் எட்டி, மலைகள் போன்று ஆகிவிடும். அந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ், ஆதமின் மகனே உன்னை நான் விட்டுவிடுகின்றேன். உன்னை எதனாலும் மன நிரப்பம் அடையச் செய்ய முடியாது என்று கூறுவான். உடனே அக்கிராமவாசி:

فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – صحيح البخاري

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விவசாயம் செய்ய விரும்பும் அந்த மனிதர் , ஒன்று குரைஷியராக அல்லது அன்ஸாரி ஒருவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில் அவர்கள்தாம் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே! என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய்விட்டுச் சிரித்துவிட்டார்கள் (புகாரி)

சுவனத்தில் விவசாயம் செய்தல், ஒருவர் தனது விருப்பிற்கு அமைவாக நடந்து கொள்ளுதல், உண்மையான அம்சங்களைக் கூறி ஜோக் செய்தல் மார்க்கம் அனுமதித்தமை போன்ற மற்றும் பல அம்சங்கள் இந்த ஹதீஸில் இருந்து நமக்கு விளங்கக் கிடைக்கின்றது.

மூதாட்டியுடன் நபி (ஸல்) அவர்கள் பண்ணிய உண்மையான தமாஸ் :

அல்லாஹ்வின் தூதரிடம் ஒரு மூதாட்டி வந்து அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் அவன் என்னை சுவனத்தில் நுழைவிக்க பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், இன்னாரின் தாயே என அழைத்து மூதாட்டிகள் (வயோதிபர்கள்) சுவனத்தில் நுழையமாட்டார்கள் எனக் கூறியதும் அப்பெண் அழுதவராக திரும்பினார். அவரிடம், சுவனத்தில் அம்மூதாட்டி (அவரது வயோதிக தோற்றத்தில்) நுழையமாட்டார் எனக் கூறிவிட்டு, அல்லாஹ் அல்குர்ஆனில் (சுவனவாதிகளான) அவர்களை நாம் புதுப்படைப்பாக்கி, கன்னியர்களாகவே ஆக்கியுள்ளோம் என்ற அல்வாகிஆ அத்தியாத்தில் இடம் பெறும் வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள். இந்தச் செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த ஆதாரத்திற்கு கொள்ள முடியுமான செய்தியாகும். (ஸில்ஸிலதுஸ்ஸஹீஹா)

சுவனத்தில் நுழைவோரின் வயதெல்லை முப்பத்தி மூன்று என்று திர்மிதி, அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. சுவனத்தில் நுழைவோர் முப்பத்தி மூன்று வயதை உடையவர்களாகவும், (முறுக்கேறிய) இளைஞர்களாகவும், மேனியில் முடி அற்றவர்களாகவும், தாடி முளைக்காதவர்களாகவும் இருப்பார்கள் (திர்மிதி, அஹ்மத்)

ஆதமின் நபியின் உயர்த்தை உடையவர்களாக சுவனவாதிகள் இருப்பார்கள் என்று புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. ஆதமின் உயரம் பற்றி செய்தி விபரமாக முன்னர் தரப்பட்டுள்ளது.

நரகத்தில் இருந்து தப்பினேன் பிழைத்தேன் என்ற நிலையில் காணப்படும் ஒரு சுவனவாதி :

சுவனத்தில் இறுதியாக நுழைந்த சுவனவாதிகளில் ஒருவர் நரகத்தை பார்த்து தப்பினேன் பிழைத்தேன் என்பதைப் பிரதிபலிப்பார். அது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

சுவனத்தில் இறுதியாக நுழையும் ஒரு மனிதன் அவன், -ஸிராத்- பாலத்தைக் கடந்து செல்லும் வேளை ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடவை தவழ்ந்தும் செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச்சுவாலை அவனை சில போது தீண்டிவிடும். அவன் அந்தப் பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப் பார்த்து

تَبَارَكَ الَّذِي نَجَّانِي مِنْكِ لَقَدْ أَعْطَانِي اللَّهُ شَيْئًا مَا أَعْطَاهُ أَحَدًا مِنْ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ

உன்னில் இருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், அவன் முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் எவருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக்கு அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).

சுவனவாதி பற்றிய மற்றொரு செய்தியின் தொடரில் ….. ‘அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கி வைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேறு எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன் என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். பின்னும் அவன் அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுபடுத்திக் கூறும்போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். ….. என்ற நீண்ட ஹதீஸின் தொடரில் மற்றொரு சுவாரஸ்யத்தைக் கேழுங்கள்.

அப்போது அவன் சுவனவாதிகளின் சப்தத்தை செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னை அதில் நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகையும், அதை போன்றதொரு மடங்கும் தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான்,

قَالَ يَا رَبِّ أَتَسْتَهْزِئُ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ

அப்போது அந்த சுவனவாதி, நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிகாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

குறிப்பு: இங்கு அல்லாஹ்வின் சிரிப்பு என்று கருத்துச் சிதைவின்றி நேரடியாகவே மொழிபெயர்த்துள்ளோம். காரணம் சிரிப்புضحك என்ற அரபு சொல் இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் வரும் இடங்களில் அதன் வடிவம், முறை பற்றிய எவ்வித வியாக்கியானமும் செய்யாது பொருள் சிதைவின்றி மொழி பெயர்ப்பதே அஹ்லுஸ்ஸுன்னாக்களின் நிலைப்பாடாகும். அல்லாஹ்வே அவற்றின் யதார்த்த நிலை பற்றி அறிந்தவன் என்பது நிலைப்பாடாகும்.

ஒவ்வொரு சுவனவாதிக்கும் தலா இரு மனைவியர் :

இந்த உலகில் இரண்டாவது மறுமணம் முடிக்கப் படாதபாடு படும் ஆண்களுக்கு இது ஒரு ஆறுதலாக இருக்கலாம். சுவனத்திற்குரியவராக தன்னை தயார்படுத்திக் கொண்டு பூரண நம்பிக்கையுடன் வாழும்போது அல்லாஹ் நிச்சயம் அதற்காக அருள் புரிவான்.

وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمْ زَوْجَتَانِ يُرَى مُخُّ سُوقِهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنْ الْحُسْنِ

(சுவனவாதிகளான) அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரு மனைவியர் இருப்பர், அவர்கள் இருவரினதும் கெண்டைக்கால் மஜ்ஜை அழகின் காரணமாக எலும்பின் வெளிப்புறமாக தெரியும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). ஆகா இப்படி பிரமாதமான அழகா என்று அங்கு சென்று பார்த்து பிரமிப்பதற்கு முன்னரே அவர்களின் அழகு பற்றி இங்கு அறிவிக்கப்பட்டு விட்டது.

சுவனவாதிகளின் முதல் உணவு :

சுவனத்தில் வகை தொகையான உணவுகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. பொரித்த பறவைகள், பழங்கள், மாமிசங்கள், நீரூற்றுக்கள், மதுபானங்கள், குடிபானங்கள் என எல்லாமே உண்டு. சுவனத்தில் முதலாவதாக வழங்கப்படும் உணவு பற்றியும் நபிமொழிகளில் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. அதுவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது. சுவையுங்கள் பார்க்கலாம்.

ஒரு யூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து)

وَأَمَّا أَوَّلُ طَعَامٍ يَأْكُلُهُ أَهْلُ الْجَنَّةِ فَزِيَادَةُ كَبِدِ الْحُوتِ

சுவனவாதிகள் முதலவதாக உண்ணும் உணவு எது என்று வினவினார். அதற்குப் இறைத்தூதர் அவர்கள் மீனின் ஈரல் எனப் பதில் அளித்தார்கள். (புகாரி)

பறவைகளாகச் சுற்றித்திரியும் உயிர்த்தியாகிகள்
இறைமார்க்கத்திற்காக உயிர் நீர்த்த உத்தமர்களின் உயிர்கள் சுவனத்தில் பச்சைப் பறவையின் தோற்றத்தில் சுற்றித்திரிவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹத் ஸஹாபாக்களைக் கூறி விளக்கினார்கள்.

உங்களது சகோதரர்கள் உஹதில் வீரமரணம் அடைந்த போது அவர்களின் உயிர்களை அல்லாஹ் பச்சை நிறப்பறவைகளின் வயிறுகளில் ஆக்கிவிட்டான். அவை சுவனத்து நதிகளுக்கு (ப் பறந்து) வந்து அதன் கனிகளைப் புசிக்கும். அர்ஷின் நிழலில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கத்திலான ஒரு விளக்கின் பக்கம் ஒதுங்கிக் கொள்ளும். தமக்கு வழங்கப்படும் பரிசுத்த இந்த உணவு, மற்றும் பானம் பற்றி சிந்திக்கும். அவர்கள், சுவனத்தில் இவ்வாறு நாம் உணவளிக்கப்படுவது பற்றியும், ஜிஹாதில் சோர்வடையவேண்டாம் என்றும், போரில் வீரியமாக இருக்க வேண்டும் என்றும் நம்மைப் பற்றிய செய்தியை உலகில் வாழும் (எமது சகோதரர்களுக்கு) யார்தான் அறிவிப்பார் எனப் பேசிக் கொள்வதை அல்லாஹ் பெறுப்பேற்று நானே அறிவிக்கின்றேன் எனக் கூறுவான். எனக் குறிப்பிட்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள்’ அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள் எனத் தொடரும் வசனத்தை ஓதிக் காண்பித்தாரகள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

சுவனத்தில் குதூகலிக்க அறுபது மைல் தூர அளவு கூடாரம் :

முத்துக்கள் பதிக்கப்பட்ட கூடாரம் ஒன்று சுவர்க்கத்தில் உள்ளது. அதன் தூர அளவு அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு ஓரங்களிலும் ஒரு சாரார் இருப்பர். மற்றவர்கள் அவர்களைக் காணமாட்டார்கள். முஃமின்கள் அதைச் சுற்றிவலம் வருவார்கள். (புகாரி)

நூறாண்டுகள் நடந்தாலும் துண்டிக்காத தொடர் நிழல் மரம் :

சுவனத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழலில் நடந்து செல்லும் மனிதர் நூறு ஆண்டுகள் நடந்து சென்றாலும் அது முடிவுறாதிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் விரும்பினால் நீண்ட நிழல்களும் இருக்கின்ற என்ற வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள் (புகாரி)

முஸ்லிமில் வரும் மற்றொரு அறிவிப்பில்: சுவனத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதில் பயிற்றப்பட்ட வேகமாக ஓடும் குதிரை நூறாண்டுகள் ஓடினாலும் அதன் நிழல் முடிவுறாது என்று இடம் பெற்றுள்ளது. (முஸ்லிம்)

ஹவ்ளுல் கவ்ஸர் நீர்த் தடாகத்தில் கிடைக்கும் இனிமையான நீர் :

இது மறுமையில் முஃமின்களுக்கு வழங்கப்படும் அற்புத நீராகும். ஸம்ஸம் நீரை விட அற்புதத் தன்மை வாய்ந்தாகும்.

நீங்கள் என்னை மறுமையில் ஹவ்ளில் சந்திக்கின்றவரை பொறுமையாக இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது இந்த ஹவ்ளைத்தான்.

எனது -ஹவ்ள்- நீர்த்தடாகம் ஒரு மாதகால நடைதூர அளவைக் கொண்டது. அதன் அமைப்பு நாற் சதுரமானது. அதன் நீரின் நிறம் வெள்ளியை விடவும் வெண்மையானது, அதன் வாசைன கஸ்தூரியை விட மணமானது. அதன் குவழைகள் வானில் காணப்படும் நட்சத்திரங்களின் அளவைப் போன்றது. அதில் இருந்து யார் நீர் அருந்தி விட்டாரோ அவர் என்றும் தாகிக்கவே மாட்டார். (முஸ்லிம்)

அல்லாஹ்வே இவ்வாறான பாக்கியங்களில் இருந்து எம்மை விலக்கி விடாதே!

சுவனவாதிகள் முதல் உணவு :

விருந்தினர் வீட்டில், வலீமா வைபவங்களில் விருந்தாளிகளை கௌரவிக்கும் முகமாக குளிர்பானங்கள் வழங்கப்படுவதை அவதானிக்கின்றோம். அதனால் நண்பர்களும், மாப்பிள்ளையும், மாப்பிள்ளை வீட்டாரும் மனம் குளிர்கின்றர். ஆகா! என்ன அழகான உபசரிப்பு என ஏங்கி விடுகின்றனர்.

மறுமையில் சுவனத்தில் நுழைவோரும் இப்படியான ஒரு கௌரவத்தைப் பெறுகின்றனர். சுவனத்தில் நுழைந்த பின்னால் அங்குள்ள கனிகள், பொரித்த பறவை மாமிசங்களை எல்லாம் உண்பதற்கு முன்னால் மீன் ஈரலில் காணப்படும் அதிகப்படியான ஒரு பாகம் வழங்கி உபசரிக்கப்படுகின்றனர். இது பற்றி பின்வரும் நபிமொழி தெளிவாக குறிப்பிடுகின்றது.

யூத அறிஞர்களில் ஒருவராக இருந்த பின்வரும் மூன்று கேள்விகள் கேட்டு சரியான பதில் கிடைத்த பின் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் இவ்வாறு கேட்டார்கள்.

முஹம்மத் அவர்களே! உம்மிடம் மூன்று கேள்விகள் நான் கேட்க விரும்புகின்றேன். அதை ஒரு நபியைத் தவிர வேறு யாரும் அறிந்திருக்க (அறிவிக்க) முடியாது எனக் கூறி விட்டு, மறுமையின் முதலாவது அடையாளம் என்ன? சுவனவாதிகளின் முதல் உணவு யாது? ஒரு குழந்தை தனது தந்தை அல்லது தாயின் சாயலில் இருப்பதன் அளவீடு என்ன? இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று முன்னர்தான் இது பற்றி ஜிப்ரீல் எனக்கு அறிவித்து தந்தார் என்றது அவர் வானவர்களில் யூதர்களின் விரோதியாச்சே என்றார். நபி (ஸல்) அவர்கள் பதில் கூற ஆரம்பித்தார்கள்.

மறுமையின் முதலாவது அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மனிதர்களை கிழக்கில் இருந்து மேற்கிற்கு விரட்டும், சுவனவாதிகள் முதலாவது உண்ணும் உணவு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் சுவை நிரம்பிய ஒரு பாகமாகும். ஆணின் விந்து (கருவரையில்) முந்திச் சென்றால் குழந்தை தந்தையின் சாயலில் பிறக்கின்றது, தாயின் நீர் முந்திச் சென்றால் குழந்தை தாயைப் போன்று பிறக்கின்றது. இரண்டு சம நிலையில் சென்றால் உறவினர்களில் ஒருவரைப் போன்று குழந்தை பிறக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறிய பதிலைக் கேட்ட இப்னு ஸலாம் (ரழி) அவர்கள் தூய திருக்கலிமாவை மொழிந்தவர்களாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். (புகாரி).

நம்மில் பலர் மீனின் ஈரல் என்றே விளங்கி வைத்துள்ளோம். அவ்வாறல்ல, மீன் ஈரலில் அதிகப்படியாக தொங்கிக் கொண்டிருக்கும் சுவைமிகுந்த ஒரு பாகம் என்றே ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அறுபது மைல்கள் தூர அளவிலான கூடாரம்
சுவனத்தில் முத்துக்களால் தயார் செய்யப்பட்ட கூடாரம் இருக்கும். அதன் அகலம் அறுபது மைல்கள் (தூரமாகும்). அதன் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குழுவினர் இருப்பர். அவர்கள் அங்கிருக்கும் மற்றவர்களைக் காணமாட்டார்கள். முஃமின்கள் அவர்களைச் சுற்றிவருவார்கள். இன்னும் வெள்ளியினாலான இரு சுவனங்களும் இருக்கும். அதன் பாத்திரங்கள், அவ்விரண்டிலும் உள்ள பொருட்களும் வெள்ளியிலானவையாகும். இன்னும் இருவேறு சுவர்கங்கள் அதன் வர்ணனைகள் இவ்வாறு இவ்வாறெல்லாம் காணப்படும். அங்குள்ள மக்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதற்கு பெருமை என்ற அவனது மேலாடைதான் திரையாக இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இவ்வாறான இன்பங்களை இறையடியார்களான முஃமின்களுக்கு அவர்களின் இரட்சகனாகிய அல்லாஹ் தயார் படுத்தி இருக்கின்றான். நாமும் அவனது அடியார்கள். இன்ஷா அல்லாஹ் நமக்கும் இதை அவன் வழங்கி கௌரவிப்பான் என்றே நம்பிக்கை கொண்டுள்ளோம். அதில் உறுதியாக இருந்த மரணிப்பதற்கு அவனே நமக்கு அருள் செய்ய வேண்டும்.
أحدث أقدم