1a) இஸ்லாத்தின் மீது பரப்பப்படும் அவதூறுகள்: -
முஹம்மது நபி (ஸல்) அவர்களால்
போதிக்கப்பட்ட தீனுல் இஸ்லாத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்தனர்,
மேலும் இன்றளவும் இணைந்து வருகின்றனர். இதைப் பொறுக்க இயலாத மேலை நாட்டுச்
சக்திகளும், கிறிஸ்தவ மிஷனரிகளும் மேற்கத்திய ஊடகங்களின் உதவியுடன்
இஸ்லாத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சேற்றை
வாரியிரைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு
அவர்களால் இஸ்லாத்தின் மீது கூறப்படும் அவதூறுகளில் ஒன்று தான் இஸ்லாம்
பெண்களை இழிவுபடுத்தி கேவலப்படுத்துகிறது, கொடுமைப்படுத்துகிறது
என்பதாகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முந்தைய
காலக்கட்டங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு, போகப் பொருளாகவும்,
அடிமைகளாகவும், விபச்சாரிகளாகவுமே பயன்படுத்தப்பட்டனர். பன்டைய
காலந்தொட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வரையிலும் இஸ்லாமிய
பெண்களல்லாத மற்ற பெண்கள் சமுதயத்தில் கேவலமானவர்களாகவும், சொத்துரிமை
மறுக்கப்பட்டவர்களாகவும் போகப்பொருளாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு
வந்தனர். இவ்வாறு பெண்கள் பல்வேறு இன்னல்களையும், துன்பங்களையும்,
கொடுமைகளையும் அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், இஸ்லாம் மட்டுமே
பெண்களை: -
- கண்ணியப் படுத்தி கௌரவித்தது
- சொத்துரிமை வழங்கியது
- சமுதாயத்தில் அந்தஸ்தோடு வாழ வழிவகுத்தது.
இஸ்லாத்தைப் பற்றி அவதூறு கூறும் மேலை
நாட்டு கிறிஸ்தவ மிஷனரிகள் காலங்காலமாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டு
கேவலப்படுத்தப்பட்டதற்கு தங்களின் புனித வேத நூலான பைபிளில் கூறப்படும்
கருத்துக்களே காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். அல்லது மறைத்து
விடுகின்றனர்.
கட்டுரையின் இந்தப் பகுதியில் பெண்களின்
உரிமைகள் மற்றும் அந்தஸ்து குறித்து பைபிள் மற்றும் இஸ்லாம் என்ன
கூறுகின்றது என்பதைப் பார்ப்போம்.
1b) முதல் பாவத்திற்கு காரணம் ஒரு பெண்ணே!
பைபிள் பழைய ஏற்பாடு, ஆதியாகமம், 3 அதிகாரம்
6. அப்பொழுது ஸ்திரீயானவள்,
அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்
தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று
கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும்
திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து,
அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே
தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி,
தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்.
9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய
சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து,
ஒளித்துக்கொண்டேன் என்றான்.
11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று
உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின
விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை
நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை
வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர்
சர்ப்பத்தைப்பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும்
சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால்
நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ
கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்;
வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன்
உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து,
புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப்
புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ
உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
மேற்கண்ட பைபிளின் வசனங்களிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்: -
-
கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நம்பிக்கையான ‘முதல் பாவத்திற்கு’ ஒரு பெண்ணே காரணம்
-
அந்த பாவத்தின் காரணமாக பெண்கள் பிரசவ வலியினால் அவதியுறுவார்கள் என கடவுளால் தண்டனைக் கொடுக்கப்பட்டனர்.
-
பெண்ணின் பேச்சைக் கேட்டதினால் ஆதாம் (அலை) அவர்கள் தவறிழைத்தார்கள்
-
ஆதாமும் அவருடைய சந்ததியினரும் அவர்களுடைய கணவனின் கட்டளைக்கு அடிபணிந்து கிடக்க வேண்டும்.
-
ஏவாளை ஏமாற்றியதற்காக சர்ப்பம் சாபத்திற்குள்ளாகி தனது வயிற்றால் நகர்ந்து மண்ணைத் தின்கிறது.
-
மனிதர்களுக்கும் சர்ப்பத்திற்கும் பகை ஏற்பட்டு மனிதர்களால் சர்ப்பம் கொல்லப்படுவதற்கும், சர்ப்பம் மனிதர்களின் காலைக் கடிப்பதற்கும் இந்த நிகழ்ச்சியே காரணம்.
இனி, ‘பைபிளிலிருந்து
காப்பியடிக்கப்பட்டது’ என கிறிஸ்தவ மிஷனரிகள் கூறுகின்ற அல்-குர்ஆன்’ இந்த
நிகழ்ச்சி குறித்து என்ன கூறுகிறது எனப் பார்ப்போம்.
அல்-குர்ஆன் அத்தியாயம் 7, ஸூரத்துல் அஃராஃப்(சிகரங்கள்)
7:19 (பின்பு
இறைவன் ஆதமை நோக்கி:) ‘ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில்
குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்;
ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள்
இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்’ (என்று அல்லாஹ் கூறினான்).
7:20 எனினும்
அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு
வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான
எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, ‘அதன் கனியை நீங்கள்
புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது
(இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி
(வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை’
என்று கூறினான்.
7:21 ‘நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்’ என்று சத்தியம் செய்து கூறினான்.
7:22 இவ்வாறு,
அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே
இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின்
கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு
வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்;
(அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: ‘உங்களிருவரையும் அம்மரத்தை
விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான
பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?’ என்று கேட்டான்.
7:23 அதற்கு
அவர்கள்: ‘எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் –
நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்’ என்று கூறினார்கள்.
7:24 (அதற்கு
இறைவன், ‘இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர்
மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம்
இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம்
அனுபவித்தலும் உண்டு’ என்று கூறினான்.
7:25 ‘அங்கேயே
நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக)
நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்’ என்றும் கூறினான்.
மேற்கண்ட அல்-குர்ஆனின் வசனங்களிலிருந்து நாம் பெறும் தெளிவு என்னவெனில்: -
1) ஷைத்தான் ஆதாம் (அலை) மற்றும் ஹவ்வா
(அலை) அவர்கள் இருவரையுமே ஏமாற்றினான். பைபிள் கூறியது போன்று ஹவ்வா (அலை)
அவர்கள் தான் தவறிழைத்தற்கு முதற் காரணமல்ல.
2) பைபிளில் கூறப்பட்ட தண்டணைகளான ‘பெண்களுக்குப் பிரசவ வலி’, ‘பெண்கள்
புருஷன் மார்கள் பெண்களை ஆண்டு கொள்ளுவான்’, பாம்பு மண்ணைத் தின்கிறது
போன்ற அபத்தங்கள், பெண்களை இழிவு படுத்தும் வாசங்கள் அல்-குர்ஆனில் இடம்
பெறவில்லை.
கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் சிந்தனைக்காக சில கேள்விகள்: -
1) பெண்கள் தான் ஏவாளின் தவறுக்காக பிரசவ
வலியால் அவதிப்படுகிறார்கள் என்றால் மற்ற உயிரினங்கள் அனைத்தும் என்ன
பாவத்திற்காக பிரசவத்தின் போது அவதிப்படுகின்றன?
2) ஏவாள் செய்த தவறுக்கு தற்காலத்தில் வாழும் பெண்கள் எப்படி பொறுப்பாவார்கள்?
3) பெண்கள் தமது கணவனின் அடிமைகளா? அவர்களுக்கென்று உணர்ச்சிகளில்லையா?
4) சர்ப்பம் மட்டும் தானா தனது வயிற்றால்
ஊர்கின்றது? ஊர்வனவற்றில் மற்ற எந்தப் உயிரினங்களும் தனது வயிற்றால்
ஊர்வதில்லையா? மேலும் சர்ப்பம் மண்ணைத் தான் தின்கின்றதா?
தயவு செய்து சிந்தித்து விடை காண முன்வாருங்கள்.
பெண்களின் மாதவிடாய் குறித்து பைபிள்: -
மாதவிடாய் ஏற்பட்ட பெண் ஏழு நாள் தன்
விலக்கத்தில் இருக்க வேண்டும். அவளைத் தொடுகிறவனும் சாயங்காலம் வரைக்கும்
தீட்டுப்பட்டிருக்க வேண்டும். அவள் எதில் படுத்திருக்கிறாளோ அல்லது எதின்
மீது உட்கார்ந்திருக்கிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். அவள் படுக்கையை,
அவள் உட்கார்ந்த மணையைத்தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தண்ணீரில்
தோய்த்து, தண்ணீரில் முழுகி சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
என்ற கருத்தில் பைபிளின் பழைய ஏற்பாடு, லேவியராகமம் அதிகாரம்: 15, வசனம்: 19-23 ல் கூறப்பட்டிருக்கிறது.
மாதவிடாய் குறித்து இஸ்லாம்: -
அலி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம்
“ஒரு ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபட்டு வியர்வையின் காரணமாக அவர்களின்
ஆடைகள் அவர்களோடு ஒட்டிக் கொண்டாலோ அல்லது மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு
பெண்ணின் உடம்பில் அவனுடைய ஆடை ஒட்டிக் கொண்டாலோ அந்த ஆடைகள்
“அசுத்தமானதாகக்” கருதப்படுமா என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் , “இல்லை! அசுத்தம் என்பது விந்தும் , (மாதவிடாயின்) இரத்தமும் மட்டும்தான்” என்று பதிலளித்தார்கள்.
சிறிய விளக்கம்!
இறைவன் பெண்களுக்கு குழந்தைப்பேறுக்காக
நியமித்துள்ள மாதவிடாய் என்பதை பைபிள் அனுகும் விதத்தையும் இஸ்லாம்
மார்க்கம் அணுகும் விதத்தையும் அறிந்து இயற்கையோடு ஒத்துப்பாகிற மார்க்கம்
எது? என சிந்திக்க கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டுள்ளார்கள்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் ஏழு
நாட்களுக்கு தீட்டு பட்டிருப்பாள் என்பதோடல்லாமல் அவள் படுத்திருக்கும்
அல்லது உட்கார்ந்திருக்கும் அனைத்தும் தீட்டு பட்டிருக்கும் அவைகளைத்
தொடுகிறவனுக்கும் அந்த தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று பைபிள் கூறுகிறது.
தாங்களே செயல்படுத்தாத, நடைமுறைக்கு ஒத்துவராத இவைகள் இறைவனால்
அருளப்பட்டவைதானா? அல்லது இவைகள் பெண்களை இழிவுபடுத்துவது ஆகாதா? என
கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டும்.
ஆனால் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் அனுப்பிய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் போதனை என்ன வென்றால்,
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்ணோ அல்லது அவள் தொடுகின்ற எதுவுமே
தீட்டுகிடையாது, மாதவிடாயின் இரத்தம் மட்டுமே தீட்டாகும் எனக்
கூறுகின்றார்கள்.
அகில உலக மனிதர்களுக்கெல்லாம் நேர்வழி
வழிகாட்டுவதற்காக சத்தியம் எது? அசத்தியம் எது? என்று பிரித்தறிவதற்காக
இறைவன் அருளிய அவனுடைய சத்தியத் திருமறையிலே கூறுகிறான்: -
(நபியே!) பாக்கியம் பெற்ற
இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து
ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்-குர்ஆன்
38:29)
தங்களின் மதத்தைப் பரப்புகிறோம் எனக்
கூறிக்கொண்டு தங்களின் மதத்தின் மேன்மைகளைப் பற்றிக் கூறுவதை விட்டு விட்டு
இஸ்லாமிய மார்க்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசி வருகின்றனர் கிறிஸ்தவ
மிஷனரிகள். இவ்வாறு இவர்களால் புனைந்துரைக்கப்பட்ட அவதூறுகளில்
முக்கியமானது ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்துகிறது’
என்பதாகும். இது குறித்து நாம் இந்தக்
கட்டுரையின் முந்தைய இரு பகுதிகளில் விளக்கி வந்தோம். இதன் தொடர்ச்சியாக
மிஷனரிகளின் கூற்றுக்கு மறுப்பு அளிக்கும் விதத்திலும் அதே நேரத்தில்
மக்களுக்கு பெண்களின் உரிமைகள் குறித்து பைபிள் என்ன கூறுகிறது என தெளிவு
படுத்துவதற்காகவும் இதனை விளக்குகிறோம்.
பெண்கள் கல்வி கற்பது குறித்து பைபிள்: -
சபைகளில் உங்கள் ஸ்திரீகள்
பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள்
அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு
காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில்
விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
(பைபிள் புதிய ஏற்பாடு, I கொரிந்தியர், 14 வது அதிகாரம், வசனங்கள் 34-35)
அதாவது,
- சபைகளில் பெண்கள் பேசக் கூடாது! அதற்கு அவர்களுக்கு அதிகாரமும் இல்லை.
- பெண்கள் எந்த ஒன்றைக் கற்றுக் கொள்ள விரும்பினாலும் தத்தம் வீட்டில் தம் புருஷருடத்தில் மட்டும் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் கல்வி குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“கல்வியைக் கற்பது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்”. அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக், ஆதாரம் சுனன் திர்மிதி, ஹதீஸ் எண் : 218
இஸ்லாமிய மார்க்கத்திலே கல்வியைப்
பயில்வதிலே ஆண்களுக்கென்று ஒரு சட்டமும் பெண்களுக்கென்று ஒரு சட்டமும்
இல்லை. ஆண் பெண் இரு பாலாரும் கல்வியைக் கற்க வேண்டியது கடமை என்றே
அறிவிக்கப்பட்டுள்ளது.
பல பேர் அடங்கியிருக்கக் கூடிய சபைகளில்
பெண்கள் நபி (ஸல்)அவர்களிடம் கேள்விகள் பல கேட்டு நபி (ஸல்) அவர்கள்
விளக்கம் அளித்த எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கின்றது. மேலும் இன்றளவும்
நடைபெறும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளின் இறுதியில்
நடைபெறும் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளில் முஸ்லிமான பெண்களுக்கு
மட்டுமல்லாமல் கிறிஸ்தவ பெண்கள் உட்பட அனைத்து மதத்தைச் சேர்ந்த
பெண்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டு அவர்களுக்கு பதில் அளிப்பதன் மூலம்
அவர்களுடைய அறிவு தாகமும் தீர்த்து வைக்கப்படுகின்றது.
ஆனால் ‘இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி
வீட்டிலேயே முடக்கி வைத்திருக்கிறது’ என்று குற்றம் சுமத்துகின்ற கிறிஸ்தவ
மிஷனரிகள், இயற்கை நடைமுறைக்கு ஒத்துவராத, பின்பற்றி நடப்பதற்கு
தகுதியில்லாத, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ‘சபைகளில் உங்கள் ஸ்திரீகள்
பேசாமலிருக்கக்கடவர்கள்’ என்று தங்களுடைய பைபிள் குறிப்பிடுவதை ஏனோ மறந்து
விடுகின்றனர்.