கப்று வணங்கிகள் என்போர் யார்?
சாதராண இந்திரியத்துளியில் இருந்து மனிதைனைப் படைத்து, பின்னர் அவனை
மரணிக்கச் செய்து, அதன்பின்பும் அவனது விரல்ரேகைளில் கூட எவ்வித மாற்றமும்
இல்லாது அதே அமைப்பில் அவனை எழுப்புவற்கு சக்தி பெற்ற அகலங்களின
அதிபதியாகிய அல்லாஹ்வைவிட்டுவிட்டு, மரணித்த சிலருக்கு தாமாக சில
சிறப்புக்களையும், கராமத்துக்களையும் வழங்கி அவர்கள் பேரில் கப்றுகளை கட்டி
அவர்களின் மகிமைகளை எடுத்துக் கூறி அல்லாஹ்விடம் நேரடியாகப்
பிரார்த்திப்பதை விட்டும் முஸ்லிம்களை தடுக்கின்ற கூட்டத்தினரை கப்று
வணங்கிகள் என அழைக்கலாம்.
அடையாளங்கள்
ஒருவர் கப்று வணங்கிதான் என்பதன் அளவு கோலாக நாம் மேலே சொன்ன
அமசங்களுடன் அவர்களுக்காக நேர்ச்சை செய்தல், அவர்களின் மண்ணறையில்
அறுத்துப்பலியிடுதல், அவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் தேவைகளை வேண்டுதல்,
அவர்களின் பெயரால் விழா எடுத்தல், கந்தூரி கொடுத்தல், அவர்களின்
மண்ணறைகளுக்கு பயனம் செய்தல், அவற்றைப் புனிதமாக்குதல், அங்கு தலையைத்
தாழ்த்தி மரியாதை செய்தல், அல்லது சுஜுத் செய்தல், போன்ற மார்க்கம்
அனுமதிக்காத காரியங்களை அரங்கேற்றுவோரை கப்று வணங்கிகள் என நாம்
அடையாளப்படுத்த முடியும்.
மரணித்தவர்கள் செவிமடுப்பார்களா?
மரணித்தவர்கள் செவிமடுப்பதாக நம்பிக்கை கொள்ளும் இவர்கள் தமது தேவைகளை
அந்த மாகான்கள் நிறைவேற்றி வைப்பதாகவும் நம்புகின்றனர். இது இஸ்லாமிய
நம்பிக்கைக்கு முரணான இறை நிராகரிப்பாளர்களின் நம்பிக்கையாகும்.
மரணித்தவர்களுக்கும் இவ்வுலகிற்கும் இடையில் தொடர்பு துண்டிக்கப்பட்ட
நிலையே காணப்படும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறியமாட்டார்கள்.
وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ
‘அவர்களுக்கு முன்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை ஒரு திரை இருக்கும்’. (அத்தியாயம்: 25. வச: 100).
إِن تَدْعُوهُمْ لَا يَسْمَعُوا دُعَاءكُمْ وَلَوْ سَمِعُوا مَا اسْتَجَابُوا لَكُمْ وَيَوْمَ الْقِيَامَةِ يَكْفُرُونَ بِشِرْكِكُمْ وَلَا يُنَبِّئُكَ مِثْلُ خَبِيرٍ
(மரணித்த) அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்கள் அழைப்பை
செவியேற்கமாட்டார்கள், அப்படித்தான் செவியேற்றாலும் அவர்கள் உங்களுக்கு
பதில்தரமாட்டார்கள், இன்னும் மறுமைநாளில் உங்களின் இணைவைப்பைக் கொண்டு
அவர்கள் நிராகரிப்பார்கள், அறிந்தவனை (அல்லாஹ்வை)ப்போல் உமக்கு யாரும் (இது
பற்றி) உணர்த்தமாட்டார்கள். (அத்தியாயம் : பாதிர். வச: 14)
إِنَّمَا يَسْتَجِيبُ الَّذِينَ يَسْمَعُونَ
செவியேற்பவர்கள்தாம் பதில் தருவார்கள். (அத்: அல்அன்ஆம். வச: 36)
மரணித்தவர்களிடம் கேள்விகேட்டும் இரு வானவர்களிடமும் நல்லமுறையில் பதில்
கூற வாய்ப்பளிக்கப்பட்ட மனிதன் தனது மகிழ்ச்சியான இந்தச் செய்தியை தனது
குடும்பத்தவர்களிடம் சொல்லிவிட்டு வருவதற்கு அனுமதி வேண்டுகின்ற போது அந்த
வானவர்கள்
نَمْ كَنَوْمَةِ الْعَرُوسِ الَّذِي لَا يُوقِظُهُ إِلَّا أَحَبُّ أَهْلِهِ إِلَيْهِ حَتَّى يَبْعَثَهُ اللَّهُ مِنْ مَضْجَعِهِ ذَلِكَ -سنن الترمذي
புதியமாப்பிள்ளையை அவனுக்கு நெருக்கமான அவனது குடும்பத்தவர்கள்தாம் அவனை
எழுப்புவார்கள். அவன் உறங்குவது போன்று நீயும் அந்தப்படுக்ககையில் இருந்து
அல்லாஹ் எழுப்புகின்றவரை உறங்கிக்கொள் எனக் கூறுவார்கள் என்பதாக நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதற்கு மாற்றமான விளக்கங்களைக் கூறி மக்களை
மரணித்தவர்களிடம் தமது தேவையை வேண்டலாம் என கூப்பாடு போடுகின்றனர் சில
கோமாளிகள்.
كُلُّ ابْنِ آدَمَ يَأْكُلُهُ التُّرَابُ إِلَّا عَجْبَ الذَّنَبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ
ஆதமின் மகனை (மனிதனை) முழுமையாக மண் அரித்துவிடும், அவனில் இருக்கும்
‘அஜ்புஸ்ஸஜப்’ என்ற முள்ளம் தண்டைத்தவிர. அதிலிருந்துதான் அவன் (ஆரம்பமாக)
படைக்கப்பட்டான், (மறுமைக்காக) அதிலிருந்துதான் (மீண்டும்) அவன்
உருவாக்கப்படுவான். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ فَاللَّهُ هُوَ الْوَلِيُّ وَهُوَ يُحْيِي الْمَوْتَى وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அவனை (அல்லாஹ்வை) அன்றி அவ்லியாக்களை எடுத்துக் கொண்டனரா? அல்லாஹ்வாகிய
அவனே (உண்மையான) வலி. மரணித்தவர்களை அவனே உயிர்ப்பிக்கின்றான். அவன்
யாவற்றின் மீது ஆற்றல் உடையவன். (அஷ்ஷுரா. வச:09)
رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلًا
(அவன்) கிழக்கு, மற்றும் மேற்குத் திசைகளின் இரட்சகன். அவனை அன்றி
வணங்கி வழிபடத்தகுதியானவர் யாருமில்லை. அவனைப் பொறுப்பாளனாக எடுத்துக்
கொள். (அல்முஸ்ஸம்மில். வச: 09).
இவர்கள் குறிப்பிடுகின்ற அவ்லியாக்கள், நாதாக்கள், ஷேக்குகள்,
சாதாத்துக்கள் அனைவரும் மண்ணில் மக்கிப்போவார்கள் என்பதையே இந்த ஹதீஸ்
குறிப்பிடுகின்றது. அவ்வாறு மக்கிப்போன பின்னால் இவர்கள் பிரார்த்திப்பது
யாரிடம்? மண்ணிடமா? இவர்களின் நம்பிக்கையில் சாகாவரம் பெற்ற மகான்களிடமா?
கப்று வணங்கிகளின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்
வாதம்: 1) ‘எமது இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை
நிதர்சனமாகவே நாம் பெற்றுக் கொண்டோம், உங்கள் இரட்சகன் உங்களுக்கு
வாக்களித்ததை நீங்கள் உண்மையாகவே பெற்றுக் கொண்டீர்களா? என ‘பத்ர்’ போரில்
கொல்லப்பட்டுக் கிடந்த குரைஷிக் காஃபிர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர்
பேசியுள்ளார்களே! இது மரணித்தவர்கள் செவிமடுப்பார்கள் என்பதைத்தானே
காட்டுகின்றது.
மறுப்பு: இது புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ்
கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள ஆதாரபூர்வமான நிகழ்வு என்பதில் இரண்டாம்
கருத்திற்கு இடமில்லை. எனினும் இது மரணித்தவர்களிடம் தேவைகளை வேண்டலாம்
என்பதற்கு எந்தவகையிலும் பொருத்தமற்ற ஆதாரமாகும்.
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் பத்ரில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த கொடிய
காஃபிர்களை நோக்கி தமது தேவைகளைக் கேட்கவில்லை, மாற்றமாக இவர்கள் கொலை
செய்யப்பட்டுக் கேவலப்படுத்தப்பட்டதன் பின்னணியைக் கருத்தில் கொண்டு அதை
உணர்த்தவே இவ்வாறு கூறினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்கும் பத்ரில்
கொல்லப்பட்ட காஃபிர்களுடக்கும் தொடர்பான விஷேடமான நிகழ்வாகும்.
அது மாத்திரமின்றி, மரணித்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்பதே நபி
(ஸல்) அவர்களின் நிலைப்பாடும், ஸஹாபாக்களின் உறுதியான நம்பிக்கையுமாகும்.
அதனால்தான் ‘அல்லாஹ்வின் தூதரே! உயிர்கள் அற்ற வெறும்பிணங்களாகி விட்ட,
முண்டங்களுடனா நீங்கள் பேசுகின்றீர்கள்? என உமர் (ரழி) அவர்கள் கேட்டார்கள்
‘ நான் போதித்தது உண்மைதான் என்பதை அவர்கள் இப்போது அறிகிறார்கள்’ என
அல்லாஹ்வின் தூதர் விளக்கமளித்தார்கள். (புகாரி)
காஃபிரானவர்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சியை மகான்கள் எனப்படுவோருடன் பொருத்திப் பார்க்கலாமா? சிந்தியுங்கள்.
வாதம் 2: நபிமார்கள் மண்ணறைகளில் உயிருடன்
இருக்கின்றனர். எனவே அவர்களிடமும், அவ்லியாக்களிடமும் தேவைகளை வேண்டிப்
பிரார்த்திக்கலாம். மிஃராஜின் போது நபி மூஸா (அலை) அவர்கள் தொழுகையை
குறைத்து வரும்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதால், அதை அவர்கள்
குறைத்துக் கொண்டு வந்தது மரணித்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதைக்
காட்டவில்லையா?
மறுப்பு : மனிதர்கள் அனைவருக்கும் மரணம் பொதுவான விதியாகும். அதிலிருந்து நபிமார்கள், அவ்லியாக்கள் விலக்கப்பட்டவர்கள் அல்லர். அதையும் மீறி ஒருவன் கருத்துக் கூற முற்பட்டால் அவனை இஸ்லாமிய வரையறைக்குட்பட்டவனாக கருதவே முடியாது.
மிஃராஜ் என்பது அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ் ஏற்படுத்திய விஷேஷ
நிகழ்வாகும். அதில் அவனது பல அத்தாட்சிகளை அவருக்கு காண்பித்தான். வேறு
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு இவ்வாறானதொரு நிகழ்வு
நடைபெறவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கும், நபி முஹம்மத் (ஸல்)
அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதில் ஒன்றாகும்.
தொழுகையைக் குறைத்து கேட்கும்படி மூஸா (அலை) அவர்கள் கூறியதை நபி (ஸல்)
அவர்கள் கூறியதால்தான் நம்புகின்றோம். அதே போல் அவ்லியாக்களின் உடல்களை மண்
திண்ணாது என்றும், அவர்கள் மண்ணறையில் இருந்தவாறு உலகில் நடப்பதை
அறிவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் எங்கேனும் கூறியுள்ளார்களா?
அடுத்ததாக, கப்ரில் இருந்தவாறு நபி (ஸல்) அவர்கள் சிபாரிசு
செய்யமாட்டார்கள். மறுமையிலேயே சிபாரிசு செய்வார்கள் என்பதை புகாரி,
முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் காண முடிகின்றது. இமாம்
புகாரியின் கிரந்தத்தத்தில் சிபாரிசு பற்றி செய்தி பல இடங்களில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.
அவர்கள் (நபிமார்கள்), “முஹம்மதிடம் செல்லுங்கள்” எனக் கூறுவார்கள்.
உடனே அம்மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே! நீர்
அல்லாஹ்வின் தூதர், நபிமார்களில் இறுதியானவர், முந்திய, பிந்திய பாவங்களை
அல்லாஹ் உமக்காக மன்னித்து விட்டான். உமது இரட்சகனிடம் எமக்காக சிபாரிசு
வேண்டுவீராக! எமது நிலையினை நீர் கவனிக்க வேண்டாமா? எனக் கூறுவர். இதைக்
கூறும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்
فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي
عَزَّ وَجَلَّ ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ
الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ
يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْأخرجه البخاري من أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
உடன் அர்ஷின் கீழ் வந்து, மகத்துவமிக்க எனது இரட்சகனுக்கு நான் சுஜுதில்
விழுந்து விடுவேன். பின்பு அல்லாஹ் அவனது புகழாரங்களில் இருந்தும்,
அவனுக்குரிய அழகிய துதியையும் எனக்கு திறந்து தருவான் (மற்றொரு
அறிவிப்பின்படி உதிப்பாக்குவான்). எனக்கு முன்னர் அவன் அதை யாருக்கும்
திறந்து கொடுத்ததில்லை. பின்னர் முஹம்மதே! உமது தலையை உயர்த்தி, கேளும்
கொடுக்கப்படும், பரிந்துரை செய்யும். உமது பரிந்துரை ஏற்றுக்
கொள்ளப்படும்’, எனக் கூறப்படும். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்) போன்ற பல
ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படும் செய்திகளைப்பார்த்தால் சிபாரிசு என்பது
மறுமை நாளில் எல்லாமனிதர்களின் கண் எதிரே நடக்கும் நிகழ்வுதான் என்பதையும்,
கப்ரு வாழ்க்கைக்கும், ஷஃபாஅத்திற்கும் இடையில் கடுகு அளவுகூட சம்மந்தம்
இல்லை என்பதையும் அறியலாம்.
ஒவ்வொரு நபிக்கும் பதிலளிக்கப்படும் ஓர் அழைப்பிருந்தது. அதைக் கொண்டு
அவரகள், அவசரமாக (உலக வாழ்க்கையிலேயே அதனை) அழைத்துவிட்டனர். எனது
பிரார்த்தனையை எனது சமுதாயத்தின் மறுமை (ஷபாஅத்திற்காக) மன்றாட்டத்திற்காக
நான் ஒதுக்கி வைத்துள்ளேன் (புகாரி), என நபி (ஸல்) அவர்கள் கூறியதை சரியாக
சிந்திப்போர் மண்ணறைகளில் மன்றாட்டம் நடத்துவார்களா?
அல்லாஹ்வின் தூதர் தனது இறுதி நேர உரைகளில், “நான் உங்களை ‘ஹவ்ழுல்
கௌஸர்’ நீர் தடாகத்தில் (ஏற்பாட்டாளன் போன்று) எதிர்பார்த்தவனாக இருப்பேன்.
(புகாரி, முஸ்லிம்) உங்களுக்குள் சர்ச்சைகள் தலைதூக்கும் போதெல்லாம் அந்த
‘ஹவ்ழ்’ நீர் தடாகத்தில் என்னை நீங்கள் சந்திக்கின்றவரை பொறுமையாக
இருங்கள். (புகாரி, முஸ்லிம்) என தனது தோழர்களிடம் கூறியது மண்ணறையில்
இருந்து கொண்டு உலகில் நடப்பதை தன்னால் அவதானிக்க முடியாது என்பதற்காக
அன்றி வேறு எதற்காகக் கூறினார்கள் ?
அது மாத்திரமின்றி, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உலகில் உயிர்வாழ்கின்ற
போதே மறைவான செய்திகளை அறிய முடியாதிருந்திருக்கிறார்கள் என்பதற்கு
நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் தபூக் பயணத்தில் இருந்து திரும்பியதும் வராமல்
இருந்தவர்களை விசாரணை நடத்திய போது அவர்கள் நடந்து கொண்ட முறையையும்
ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.
அப்போருக்குச் செல்லாது தங்கிவிட்ட முனாஃபிக்குகள், நபி (ஸல்)
அவர்களிடம் வந்து பல சாக்குப் போக்குகளைக் கூறி, சத்தியமும் செய்தனர்.
அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்டோராக இருந்தனர் எனக் கூறப்படுகின்றது.
فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَانِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ
அவர்களின் வெளிப்படையான காரணத்தை ஏற்றுக் கொண்ட அல்லாஹ்வின் தூதர்
அவர்கள் அவர்களுடன் உறுதி மொழியும் செய்து கொண்டு, அவர்களுக்காக
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் வேண்டினார்கள். (அதே நேரம்) அவர்களின்
அந்தரங்க விஷயங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள். (புகாரி)
இந்த நிகழ்வு கப்ரில் நடப்பதை அல்ல, உலகில் ஒரு மனிதனுடன் தொடர்புடைய
மறைவானவற்றையே நபி (ஸல்) அவர்கள் அறிய முடியாதவர்கள்
இருந்திருக்கின்றார்கள் என்பதைக் காட்டவில்லையா?
இதைப் புரியாத பலர் பெரியார்கள் சுயநினைவிழந்த நிலையில், மரணிப்பவர்கள்,
மண்ணறையில் வைக்கப்பட்டதும் விழித்துக்கொள்வார்கள், உலகில் நடப்பதை
அறிவார்கள் என்றெல்லாம் உளருவதைப் பார்க்கின்றோம். இதுவும் இஸ்லாத்தில்
இல்லாத புதிய சித்தாந்தமாகும்.
வாதம் 3:
وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنْفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا
அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிவதற்காகவேயன்றி (மனிதர்களிடம்) நாம்
தூதர்களில் எவரையும் அனுப்பவில்லை. அவர்கள் தமக்கு அநீதி இழைத்ததும்
உம்மிடம் வந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவதுடன், இத்தூதரும்
அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை மிக்க மன்னிப்பாளனாகவும்,
நிகரற்ற அன்புடையோனாகவும் கண்டு கொள்வார்கள். (அந்நிஸா. வச:64) என்ற
வசனத்தையும் ஆதாரமாகக் கொள்வதில் என்ன தப்பு இருக்கின்றது!
மறுப்பு: இவர்கள் எடுத்து வைக்கின்ற குர்ஆன் வசனம் முனாபிக்குகள் விசயத்தில் இறங்கியதாகும்.
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு வார்த்தைகளால்
தொல்லை தந்த நயவஞ்சகர்கள் திருந்தி வாழ விரும்பினால் இந்த வழிமுறையைக்
கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிடுகின்றானே தவிர மரணித்த
நபியிடம் மன்றாடும் படி கூறவில்லை. நபித்தோழர்கள் இந்த வசனத்தை
இப்படித்தான் புரிந்திருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்கள்,
துன்பங்களின் போது அவர்களின் மண்ணறையில் தமது தேவைகளையும், கஷ்டங்களையும்
நிவர்த்தி செய்யுமாறு வேண்டாதிருந்தது மாபெரும் சான்றாகும்;.
உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் ஹிஜ்ரி, 18ல் ஏற்பட்ட ‘ஆமுர்ரமாதா’
எனப்படும் மாபெரும் வறட்சி ஆண்டு பற்றியும், சிரியாவில் ஏற்பட்ட “தாவூன்”
என்ற தொழு நோய் பற்றியும் அறிவீர்கள். இவற்றிற்கெல்லாம் அல்லாஹ்வின்
தூதரின் மண்ணறைக்கு வந்து அவர்கள் மன்றாடவில்லை, கலீபா உமர் (ரழி) அவர்கள்
தனது ஆட்சியில் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்த போது பயன்படுத்திய வாசகம்
புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்துப்
பாருங்கள்.
عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ
كَانَ إِذَا قَحَطُوا اسْتَسْقَى بِالْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ
فَقَالَ اللَّهُمَّ إِنَّا كُنَّا نَتَوَسَّلُ إِلَيْكَ بِنَبِيِّنَا
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَسْقِينَا وَإِنَّا نَتَوَسَّلُ
إِلَيْكَ بِعَمِّ نَبِيِّنَا فَاسْقِنَا قَالَ فَيُسْقَوْنَ-صحيح البخاري-
மக்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட போது, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப்
(ரழி) அவர்களைக் கொண்டு மழைவேண்டுபவர்களாக உமர் (ரழி) அவர்கள்
இருந்தார்கள். அல்லாஹ்வே! நமது நபியைக் கொண்டு (முன்றிறுத்தி) நாம் மழை
வேண்டுபவர்களாக இருந்தோம். அதனால் நீ எமக்கு மழையைப் பொழிவிப்பாய், நாம்
உன்னிடம் நமது நபியின் சிறிய தந்தையை முன்நிறுத்தி (மழைவேண்டி)
உதவிதேடுகின்றோம். ஆகவே எமக்கு மழையைத் தருவாயாக! எனக் கூறுவார்கள்.
அதற்காக மழையும் பெற்றிருக்கின்றார்கள் என அனஸ் (ரழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். (புகாரி).
கப்று வணங்கிகள் இந்த ஹதீஸை பொது மக்களிடம் தவறாகவே விளக்குவார்கள்.
அல்லாஹ்வின் தூதரிடம் ஸஹாபாக்கள் கூட வஸீலா வேண்டி இருப்பதாக உளருவார்கள்.
உண்மையில் ஸஹாபாக்கள், அல்லாஹ்வுடைய தூதரிடம் நேரடியாகவோ, அல்லது
மறைமுகமாகவோ வஸீலா வேண்டி இருந்தால், அல்லாஹ்வின் தூதரே! எமக்கேற்பட்ட
வரட்சிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றுதான் கூறி இருக்க
வேண்டும்.
அவ்வாறு கூறாது, அல்லாஹ்வுடைய தூதர் உயிருடன் இருக்கின்ற போது நடந்த ஒரு
நிகழ்வை நினைவுபடுத்தி ‘அல்லாஹ்வே’ என அல்லாஹ்வை அழைத்து நடந்ததைக் கூறிய
பின்னர், உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நபி (ஸல்) அவர்களின் நெருங்கிய
உறவினரில் ஒருவரை முன் நிறுத்தி மழை வேண்டி பிரார்த்தனை
செய்திருக்கின்றார்கள்.
மார்க்க அறிவில் உயர் நிலையில் காணப்பட்ட ஸஹாபாக்கள், இவ்வாறு பிரார்த்தித்தது நபி (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர், அவர்களிடம் எந்தவிதமான கோரிக்கைளையும் முன்வைக்கக்கூடாது என்று அவர்கள் புரிந்ததனால்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நபியின் மண்ணறைக்குச் சென்று பாவமன்னிப்புக்கோரலாம், தேவைகளைக்
கேட்கலாம் என்பதை மறுத்துரைக்கும் பின்வரும் நபி மொழியைக் கவனியுங்கள். ஒரு
முறை அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தலைவலி, தலைவலி எனக்கதறி அழுதார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்,
…ذَاكِ، لَوْ كَانَ وَأَنَا حَيٌّ فَأَسْتَغْفِرَ لَكِ وَأَدْعُوَ لَكِ-صحيح البخاري-
நான் உயிருடன் இருக்கும் நிலையில் நீ எனக்கு முன்னர் மரணித்தால் உன்னைக்
குளிப்பாட்டி, கபனிட்டு, உனக்காக பாவமன்னிப்பு தேடுவேன், உனக்காக
பிரார்த்தனையும் செய்வேன் எனக் கூறினார்கள். (புகாரி).
இந்த செய்தியை சிந்தித்தால் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும்
போதுதான் நபி (ஸல்) அவர்களின் பாவமன்னிப்புக் கோரல் சாத்தியமானது என்பதை
அறிந்து கொள்ள முடியும்.
ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டு நடைபெற்ற உஹத் போரில் (இஸ்லாத்தில் இணையுமுன்)
காபிர்களின் அணி சார்பாக தலைமை தாங்கி வந்த அபூசுப்யான் (ரழி) அவர்கள்,
قال أبو سفيان يوم أحد . لنا العزى ولا عزى لكم . فقال رسول الله صلى الله عليه وسلم – :قولوا : الله مولانا ولا مولى لكم
‘எங்களுக்கு (கண்ணிமளிக்கும்) உஸ்ஸாக் கடவுள் இருக்கின்றது, உங்களுக்கு
‘உஸ்ஸா (கண்ணியமளிக்கும்) உஸ்ஸாக் கடவுள் இல்லையே! என்று கூறியபோது
‘அல்லாஹ் எங்கள் (மௌலானா) பாதுகாவலன், உங்களுக்கு (மௌலா) பாதுகாப்பளிப்பவன்
இல்லை எனக் கூறிவிடுங்கள் எனப்பணித்தார்கள். (புகாரி).
நபி (ஸல்) அவர்களின் போதனை முறையைக் கவனித்தால் அவர்கள் உயிருடன்
இருக்கின்ற போது கஷ்டமான நிலையிலும் அல்லாஹ்வையே பாதுகாவலாக
எடுத்திருக்கின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கப்ரில் உயிருடன் இருக்கின்றார்கள், மரணிக்கவில்லை
என்ற குருட்டு வாதத்தை முன்வைப்போரின் கூற்றை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்
கொண்டாலும் அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்பையோ, தேவைகளையோ இப்போதும்
வேண்டமுடியாது. ஏனெனில் பத்ர், உஹத் போன்ற போர்க்களங்களில் வானவர்கள்தாம்
அவர்களுக்கு உதவி செய்திருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.
வாதம் 04: ஆதம் நபி
(அலை) அவர்கள் தவறு செய்த போது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் வஸீலாக்
கேட்கவில்லையா? அது மாத்திரம் இவர்களுக்கு போதுமான ஆதரமாக இல்லையா ?
மறுப்பு: இந்தச் செய்தி ஆதராமற்ற செய்தியாகும் என்பதை
ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவாகச் சொல்லிவிட்டார்கள். இதை பெரிய ஆதராம் என்ற
பெயரால் கூறி தொடர்ந்தும் மக்கள் மத்தியில் உளம்புவது ஒரு வகை நோயாகும்.
முல்லா அலிஅல்காரி (ரஹ்) என்ற அறிஞர் தனது ‘அல்மவ்ழூஆத்’ (நபியின்
புனையப்பட்டவைகள்) என்ற நூலில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளார்கள். கஸஸுல்
அன்பியா என்ற நூலில் இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும் இது ஏற்றுக் கொள்ள
முடியாத செய்தி என்று கூறியுள்ளார்கள். ஹதீஸ் கலையில் பூரண
அறிவில்லாதவர்களே இதை ஒரு ஆதராமாகக் கொள்வார்கள்.
வாதத்திற்கு இதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொண்டாலும், ஒரு நபி மற்றொரு
நபியின் பொருட்டால் கேட்டார்கள் என்பதை மகான்களுக்குப் பொருத்திக் கூறலாமா?
என்று சிந்தியுங்கள்.
வாதம் 5:நாங்கள்
இறைநேசர்களை வணங்கவில்லையே! நாம் பாவிகளாக இருப்பதால் இவர்கள் மூலமாக
அல்லாஹ்விடம் நெருங்குகின்றோம். இதில் என்ன தவறு இருக்கிறது?
மறுப்பு: இதே வார்த்தையைத்தான் மக்காவாழ் காபிர்களும்
கூறினார்கள். (பார்க்க: அத்தியாயம் அஸ்ஸுமர்: வச: 03.) (யூனுஸ்: வச:
18).(ஸாத்: வச:05) இந்த வசனங்களைத் திரும்பத்திரும்பப் படியுங்கள்.
தொழுது, நோன்பு நோற்று, அல்லாஹ்வை வணங்குகின்றவர்களைப் பார்த்து இதைக்
கூறலாமா என்ற ஆதங்கம் பலர் மனதில் தோன்றவே செய்யும். இதைவிட அல்லாஹ்வின்
வசனம் ஆயிரம் மடங்கு உண்மை என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்.
இணைவைப்பாளர்கள் உம்ராச் செய்கின்ற போது, இறைவா! உனக்கு
கட்டுப்பட்டுவிட்டேன்’ எனக் கூறும் வார்த்தையைச் செவிமடுக்கும் அல்லாஹ்வின்
தூதர் அவர்கள்
فَيَقُولُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْلَكُمْ قَدْ قَدْ فَيَقُولُونَ إِلَّا شَرِيكًا هُوَ لَكَ تَمْلِكُهُ وَمَا مَلَكَ يَقُولُونَ هَذَا وَهُمْ يَطُوفُونَ بِالْبَيْتِ
போதும்! போதும்! (இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்) எனக் கூறுவார்கள்.
(அவர்கள் அதையும் மீறி) நீ உனக்கென சொந்தமாக வைத்திருக்கும் ஒரு
இணைதெய்வத்தையும், அது சொந்தமாக்கியுள்ளதையும் தவிர என அல்லாஹ்வின் அந்த
இல்லத்தை தவாப் செய்து கொண்டே (இந்த இணைவைப்பு வார்த்தையைக்) கூறுவார்கள்
என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (முஸ்லிம்).
ஒருவர் வணக்கம் செய்வதால் அவர் முஸ்லிமாகிவடுவதில்லை. மாற்றமாக அந்த
வணக்கம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகளையும் அந்த வணக்கம்
பொதிந்திருக்க வேண்டும்.
வாதம் 6: உத்தம நபியின் மண்ணறையில் மன்றாடிய ‘உத்பி’
என்ற கிராம வாசிக்கு மன்னிப்புக் கிடைத்ததாக ‘இப்னு கஸீர்’ என்ற தப்ஸீருடைய
இமாம் கூறி இருக்கிறார்களே! அவரை விட நீங்கள் பெரிய அறிஞரா?
பதில்: மண்ணறையில் அடங்கப்பட்டவர்களிடம் மன்றாடுவது
கூடும் என நியாயப்படுத்துவோர் இந்த உத்பி என்ற விலாசமற்ற கிராமப்புற ஒரு
மனிதன் பேரில் புனையப்பட்ட சம்வத்தையும் ஆதாரமாகக் கொள்வது மிகப் பெரும்
தவறாகும். கற்பனையான ஒன்றை ஆதாரமாக
சித்தரித்துக் கூறுவது எந்த வகையிலும் ஏற்க முடியாதாகும். கப்று
வணங்கிகளுக்கு வேண்டுமானால் அது ஒரு பெரிய ஆதாரமாகத் தோன்றலாம். ஆனால்
இஸ்லாத்தில் இது போன்ற பொய்களை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
‘உத்பி’ என்ற கிராமவாசி யார் என்று அறியப்படாதவர். விலாசமற்ற ஒருவர்
மூலம் அறிவிக்கப்படும் செய்தியை ஆதாரத்திற்கு கொள்ள முடியாது என ஹதீஸ்கலை
இமாம்கள் முடிவு செய்வார்கள். அந்த விதியின்படி அப்படையில் இந்தச்
செய்தியும் ஆதாரமற்றதாகும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களது தப்ஸீரில் ஆதாரத்திற்கு கொள்ள முடியாத
பல செய்திகள் இடம் பெற்றுள்ளன என்பதை நீங்கள் முதலில் கவனத்தில் கொள்ள
வேண்டும். அவர்கள் கூறுவது அனைத்தும் சரியானது என அவர்கள் உத்தரவாதம்
தரவில்லை. அரபு நூலில் வந்துவிட்டது என்பதற்காக அது ஆதாரமாகிவிடாது.
இரண்டாவதாக: குறித்த அந்தச் செய்தியில்
‘அறிவிக்கப்படுகின்றது’ என்ற உறுதியற்ற வாசகத்தொடரே
பயன்படுத்தப்பட்டுள்ளது. அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதியற்ற வாசக அமைப்பு
எனப் பொருள் கொள்வார்கள்.
மூன்றாவதாக: கவிதையால் மார்க்கத்தை நிலை நிறுத்த முடியாது என்று குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பார்க்கின்றோம்.
وَالشُّعَرَاءُ يَتَّبِعُهُمُ الْغَاوُونَ
கவிஞர்களை வீணர்கள்தாம் பின்பற்றுவார்கள். (அஷ்ஷுஅரா.வச:224)
என்ற வசனத்தையும்,
وَمَا عَلَّمْنَاهُ الشِّعْرَ وَمَا يَنْبَغِي لَهُ إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ وَقُرْآنٌ مُبِينٌ
நாம் அவருக்கு கவிதையைக் கற்றுக்கொடுக்கவுமில்லை, அது அவருக்கு
அவசியமும் இல்லை. அது இறை நினைவும், தெளிவான அல்குர்ஆனுமே அன்றி வேறில்லை.
(யாசீன்: 69)
என்ற வசனத்தை சிந்தித்தால் கவிதையால் மார்க்கத்தை நிலைப்படுத்த அல்லாஹ்வே விரும்பவில்லை என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் அவரது மண்ணறையில் கவிதை பாடி
பாவமன்னிப்பு வேண்டியவருக்கு மன்னிப்புக்கிடைத்ததாக நம்புவது எவ்வாளவு
பெரும் முட்டாள்தனம் என்பதை பார்க்க வேண்டும்.
இது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஸஹாபி ஒருவரால் பாடல்
பாடப்பட்டு நபி (ஸல்) அவர்களால் அங்கீகரிக்கப்படட ஒரு கனவு போல் கிடையாது
என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
நான்காவதாக: கனவின் வெளிப்பாடு மார்க்கமாகுமா?
பெரியார்கள் பேரில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்கள் தீய கனவின் வெளிப்பாடாகவே
உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இது ஒரு
சாத்வீக வழியிலான அணுமுறை என்றே கூற வேண்டும். இது திவாலாகிப் போன பணவைப்பு
முறை போன்றதாகும். இதில் இடப்படும் பணத்திற்கு தர்ஹாக் காவலர்களே
நிர்வாகிகளாகும்.
மரணித்த எங்கள் தந்தை கப்று, தர்ஹாக் கட்டச் சொன்னார், சந்தனக் கூடு
எடுக்கச் சொன்னார், விழா கொண்டாடச் சொன்னார் என்றால் உடனே அதை நிறைவேற்றி
தயாராகிவிடும் இவர்கள் இது தீய கனவு என முடிவு செய்வதில்லை. எனது அத்தா
(தந்தை) என்னைக் கிணற்றில் விழச் சொன்னார் என்றால் அவர்கள் அதை நிறைவேற்றத்
தயாராக இல்லை. ஏன் இது கெட்ட கனவு என்று முடிவு செய்யும் திறண்
இருக்கின்றது.
நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் கனவில் கண்டோம் என்பதற்காக அதன்
மூலம் மார்க்கத்தை உறுதி செய்ய முடியுமா என்றால் முடியாது என ஷாஃபி
மத்ஹபின் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தீர்ப்புக்
கூறியுள்ளார்கள்.
قال النووي رحمه الله: …… لَا يَجُوز إِثْبَات حُكْم شَرْعِيّ بِهِ
لِأَنَّ حَالَة النَّوْم لَيْسَتْ حَالَةَ ضَبْطٍ وَتَحْقِيقٍ لِمَا
يَسْمَعُهُ الرَّائِي ، وَقَدْ اِتَّفَقُوا عَلَى أَنَّ مِنْ شَرْطِ مَنْ
تُقْبَلُ رِوَايَتُهُ وَشَهَادَتُهُ أَنْ يَكُون مُتَيَقِّظًا لَا
مُغَفَّلًا وَلَا سَيِّئَ الْحِفْظِ وَلَا كَثِيرَ الْخَطَأِ وَلَا
مُخْتَلَّ الضَّبْطِ ، وَالنَّائِم لَيْسَ بِهَذِهِ الصِّفَة فَلَمْ
تُقْبَلْ رِوَايَتُهُ لِاخْتِلَالِ ضَبْطِهِمقدمة شرح النووي على مسلم50/1
உறக்கத்தின் நிலையில் கனவு காண்பவர் அதனை உறுதி செய்து, சரியான
ஒழுங்கமைப்பில் இல்லாததால் கனவால் மார்க்க சட்டத்தை நிலைப்படுத்த முடியாது.
ஒருவரின் சாட்சியம் ஏற்க்கப்பட அவர், விழிப்புணர்வுள்ளவராகவும்,
அபாரமறதிக்கு உட்படாதவராகவும், மனனத்தில் குறைவில்லாதவராகவும், அதிமதிகம்
தவறிழைக்காதவராகவும், ஞாபகம் குன்றிடாதவராகவும் இருக்க வேண்டும்.
(இவரதுசாட்சியமே ஏற்றுக் கொள்ளப்படும்) இதில் அறிஞர்கள் ஒருமுத்தி
கருத்தில் உள்ளனர். உறக்கத்தில் இருப்பவன் இந்த நிலையில் கிடையாது. அவனது
ஞாகபத்தன்மையில் குறைவு இருக்கும். ஆகவே அவனது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள
முடியாது எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஷரஹ்முஸ்லிம்).
அப்படியானால் உத்பி என்ற விலாசமற்ற கிராமவாசி நபி (ஸல்) அவர்களின்
மண்ணறையில் மன்றாடியதற்காக தனது பாவம் மன்னிக்கப்பட்டதாக் குறிப்பிடும்
கனவை இந்த அடிப்படையிலாவது ஏற்றுக் கொள்ள முடியுமா என நீங்களே
சிந்தியுங்கள்.
எழுதியவர் : மௌலவி அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி