அத்தியாயம் 78 நற்பண்புகள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 78

நற்பண்புகள்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி 1

(பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு) நன்மை செய்வதும் உறவைப் பேணி வாழ்வதும்.

அல்லாஹ் கூறினான்:

தன் தாய் தந்தையருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். (திருக்குர்ஆன் 29:08)

5970 வலீத் இப்னு அய்ஸார்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூ அம்ர் அஷ்ஷைபானீ(ரஹ்), '(இதோ!) இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று கூறினார்கள்:

நான் நபி(ஸல்) அவர்களிடம் 'கண்ணியமும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?' என்று கேட்டேன். அவர்கள் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது'' என்றார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். 'தாய் தந்தையருக்கு நன்மை செய்வது'' என்றார்கள். (நான் தொடர்ந்து) 'பிறகு எது?' என்றேன். அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுதல்'' என்று பதிலளித்தார்கள். இவற்றை (மட்டுமே) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் அவர்களிடம் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் நிறைய பதிலளித்திருப்பார்கள்.2

பகுதி 2

அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை உள்ளவர் யார்?

5971 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். 'உன் தாய்'' என்றார்கள். அவர், 'பிறகு யார்?' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 3

பெற்றோரின் அனுமதியுடனேயே அறப்போர் புரியவேண்டும்.

5972 அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (இருக்கிறார்கள்)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு'' என்றார்கள்.3

பகுதி 4

எவரும் தம் பெற்றோரை ஏசக் கூடாது.

5973 அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்

''ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?' என்று கேட்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள், 'ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)'' என்றார்கள்.4

பகுதி 5

பெற்றோருக்கு நன்மை செய்தவரின் பிரார்த்தனை (துஆ) ஏற்கப்படுவது.

5974 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது (திடீரென்று) மழை பிடித்துக் கொண்டது. எனவே, அவர்கள் (ஒதுங்குவதற்காக) ஒரு மலைக் குகையை நோக்கிப் போனார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை அவர்களின் குகை வாசலை அடைத்துக் கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், 'நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்யைமான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் இ(ப் பாறை)தனை (நம்மைவிட்டு) அகற்றிவிடக் கூடும்'' என்று பேசிக்கொண்டனர்.

எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்.

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டு வந்து என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். (ஒரு நாள்) இலை தழைகளைத் தேடியபடி வெகு தூரம் சென்று விட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது. அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போன்று பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்கும் முன் குழந்தைகளுக்கு முதலில் ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ என்னுடைய காலருகில் (பசியால்) கதறிக்கொண்டிருந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருக்க, வைகறை வந்துவிட்டது. (இறைவா!) நான் இச்செயலை உன்னுடைய திருப்தியை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால் எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்திடுவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.

அவ்வாறே அல்லாஹ் அவர்களுக்குச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தான்.

இரண்டமாவர் (பின்வருமாறு) வேண்டினார்.

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டு வந்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறந்துவிட்டாள். நான் முயற்சிசெய்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன். நான் அதனுடன் சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள் 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! முத்திரையை அதற்குரிய (சட்ட பூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறக்காதே'' என்று சொன்னாள். உடனே நான் அவளைவிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். (இறைவா!) இதை உன் திருப்தியைப் பெற விரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக (இன்னும் சற்று) நகர்த்திடுவாயாக!

அவ்வாறே (அல்லாஹ்) அவர்களுக்கு (இன்னும்) சற்றே நகர்த்திக்கொடுத்தான்.

மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்:

இறைவா! நான் ஒரு 'ஃபரக்' அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை (பணிக்கு) அமர்த்தினேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையை (கூலியை)க் கொடு'' என்று கேட்டார். நான் (நிர்ணயித்தபடி) அவரின் உரிமையை (கூலியை) அவர் முன் வைத்தேன். அதை அவர் பெற்றுக்கொள்ளாமல் (என்னிடமே)விட்டுவிட்(டுச் சென்று விட்)டார். பின்னர் நான் அதை (நிலத்தில் விதைத்து) தொடர்ந்து விவசாயம் செய்து வந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்துவிட்டேன். பின்னர் (ஒருநாள்) அவர் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! எனக்கு அநியாயம் புரியாதே! என்னுடைய உரிமையை என்னிடம் கொடுத்துவிடு'' என்று கூறினார்.

அதற்கு நான், 'அந்த மாடுகளிடமும் அவற்றின் இடையர்களிடமும் நீ செல்! (அவை உனக்கே உரியவை)'' என்று சொன்னேன். அதற்கு அம்மனிதர், 'அல்லாஹ்வுக்கு அஞ்சிடு! என்னைப் பரிகாசம் செய்யாதே!'' என்று கூறினார். நான், 'உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்'' என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்தபடி நடந்தார். (இறைவா!) நான் இந்த(நற்) செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதமுள்ள அடைப்பையும் நீ அகற்றிடுவாயாக!

அவ்வாறே அல்லாஹ் அப்பாறையை அவர்களைவிட்டு (முழுமையாக) அகற்றிவிட்டான்.5

பகுதி 6

பெற்றோரைப் புண்படுத்துவதும் பெரும் பாவங்களில் ஒன்றாகும்.

இது குறித்து இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.6

5975 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அன்னையரைப் புண்படுத்தவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான். மேலும், (தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.

என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.7

5976 அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)'' என்று கூறினோம். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்'' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, 'அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)'' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் 'அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்றேன்.8

5977 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பெரும்பாவங்கள் தொடர்பாகக் குறிப்பிட்டார்கள்' அல்லது 'அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது'. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)'' என்று கூறிவிட்டு, 'பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவத்தை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று கேட்டார்கள். 'பொய் பேசுவது' அல்லது 'பொய் சாட்சியம்' (மிகப் பெரும் பாவமாகும்)'' என்று கூறினார்கள்.9

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்:

'பொய் சாட்சியம்' என்றே நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்றே நான் அநேகமாகக் கருதுகிறேன்.

பகுதி 7

(இறைவனுக்கு) இணைவைக்கும் பெற்றோராயினும் அவர்களின் உறவையும் பேணி வாழ்வது.10

5978 அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் என் தாயார் ஆசையாக என்னிடம் வந்தார். (அப்போது அவர் இணைவைப்பவராக இருந்தார்.) நான் நபி(ஸல்) அவர்களிடம் '(என் தாயார் வந்துள்ளார்.) அவருடன் உறவைப் பேணிக்கொள்ளட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று கூறினார்கள்.11

''எனவே, அஸ்மாவின் தாயர் தொடர்பாக, 'மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 60:8 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்'' என (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.

பகுதி 8

கணவன் உள்ள ஒரு பெண் தன் தாயுடன் உறவைப் பேணி வாழ்வது.

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்'' என்று கூறினார்கள்.

5980 அபூ சுஃப்யான்(ரலி) அறிவித்தார்

(பைஸாந்திய மன்னர்) ஹெராக்ளியஸ் (வணிகர்களாகச் சென்றிருந்த மக்காவைச் சேர்ந்தவர்களிடையே இருந்த) என்னை அழைத்து வரச் சொல்லி ஆளனுப்பினார். (நான் அவரிடம் சென்றேன்.) அப்போது ஹெராக்ளியஸ், 'அவர் (நபி(ஸல்) அவர்கள்) உங்களுக்கு என்னதான் போதிக்கிறார்?' என்று கேட்டார். நான், 'தொழுகை, தர்மம், கற்பொழுக்கம், உறவைப் பேணி வாழ்வது ஆகியப் பண்புகளை எங்களுக்குக் கட்டளையிடுகிறார்'' என்று பதிலளித்தேன்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.12

பகுதி 9

(இறைவனுக்கு) இணைவைக்கும் சகோதரனுடனும் உறவைப் பேணி வாழ்வது.

5981 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்'' என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி), 'நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோ, மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்'' என்று கூறினார்கள்.

எனவே, உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13

பகுதி 10

உறவைப் பேணி வாழ்வதன் சிறப்பு

5982 அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குத் தெரிவியுங்கள்'' என்று வினவப்பட்டது.13

5983 அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) கூறியாதாவது:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்'' என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், 'இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?' என்று கூறினார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்'' என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்றவேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்'' என்று கூறிவிட்டு, 'உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக'' என்று கூறினார்கள்.

அம்மனிதர் (அப்போது) தம் வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்.14

பகுதி 11

உறவை முறிக்கும் பாவத்திற்கான தண்டனை

5984 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.15

பகுதி 12

உறவைப் பேணி வாழ்வதால் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கித் தரப்படும்.

5985 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.16

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5986 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

தம் வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகிறவர் தம் உறவைப் பேணி வாழட்டும்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 13

உறவைப் பேணி வாழ்பவருடன் அல்லாஹ்வும் உறவுபாராட்டுகிறான்.

5987 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்'' என்று கூறி(மன்றாடி)யது.

அல்லாஹ், 'ஆம். உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ், 'இது உனக்காக நடக்கும்'' என்று சொன்னான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.17

5988 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும்.18 எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவுபாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்'' என்று கூறினான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5989 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, 'அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்).

என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பகுதி 14

உறவைப் பசுமையாக்க வேண்டும்.

5990 அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்

இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஒளிவு மறையின்றி பகிரங்கமாகவே கூறினார்கள்.

''முஹம்மத் இப்னு ஜஅஃபர்(ரஹ்) அவர்களின் (மூல நூல்) பிரதியொன்றில் 'இன்னார்' எனும் (சொல் உள்ள) இடம் (நிரப்பப்படாமல்) வெற்றிடமாக உள்ளது'' என அறிவிப்பாளர் அம்ர் இப்னு அப்பாஸ்(ரஹ்) கூறினார்.

அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அவர்களின் வழியாக வரும் அன்பஸா இப்னு அப்தில் வாஹித்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள், 'ஆயினும் அவர்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்து போகவிடாமல்) பசுமையாக்குவேன்'' என்று கூறினார்கள் என அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளது. அதாவது, 'அவர்களின் உறவைப் பேணி நடந்துகொள்வேன்'' என்றார்கள்.

பகுதி 15

பதிலுக்கு பதில் உறவு கொண்டாடுபவர் உறவைப் பேணுகிறவர் அல்லர்.

5991 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார்.19

என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் சிலர் இதை அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களின் பொன்மொழி என்றும், வேறு சிலர் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி என்றும் கூறுகிறார்கள்.

பகுதி 16

(இறைவனுக்கு) இணைவைப்பவராக இருந்தபோது உறவைப் பேணிய ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் (அதற்கான நன்மை இப்போது கிடைக்குமா)?

5992 ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார்

நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் உறவைப் பேணுதல், அடிமைகளை விடுதலை செய்தல், தானதர்மம் செய்தல் ஆகிய நற்செயல்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு நற்பலன் ஏதும் உண்டா? கூறுங்கள்!'' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்)களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்'' என்று பதிலளித்தார்கள்.20

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 17

பிறருடைய பெண் குழந்தைத் தம்முடன் விளையாட ஒருவர் அனுமதிப்பதும், அவளை முத்தமிடுவதும் அவளுடன் நகைச்சுவையாகப் பேசுவதும்.

5993 உம்மு காலித்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்துகொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இது) நன்றாயிருக்கிறதே! (இது) நன்றாயிருக்கிறதே!'' என்று (என் சட்டை குறித்துச்) கூறினார்கள். நான் (நபி(ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையில் விளையாடத் தொடங்கினேன். உடனே, என் தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!'' என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு. பிறகும் (அதைக்) கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதை (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்துவிடு'' என்று (என்னுடைய நீண்ட ஆயுளுக்காகப் பிரார்த்தித்துக்) கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்), '(அந்தச் சட்டை நிறம் மாறி பழுப்பேறி மக்கள்) பேசும் அளவிற்கு உம்மு காலித்(ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்'' என்று கூறுகிறார்கள்.21

பகுதி 18

(ஒருவர் தம்) குழந்தைகளின் மீது அன்பு காட்டுவதும் அவர்களை முத்தமிட்டு அணைத்துக் கொள்வதும்.

நபி(ஸல்) அவர்கள் (தம் குழந்தை) இப்ராஹீமைத் தூக்கி (உச்சி) முகர்ந்து முத்தமிட்டார்கள்.

இதை அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ஸாபித் இப்னு அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.22

5994 அப்துர் ரஹ்மான் இப்னு அபீ நுஅம்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது ஒருவர் அவர்களிடம், '(இஹ்ராம் கட்டியவர்) கொசுக்களைக் கொன்று விட்டால் பரிகாரம் என்ன?' என்று கேட்டார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 'நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?' என்ற கேட்டார்கள். அவர், 'நான் இராக்வாசி'' என்று பதிலளித்தார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) (தம்மருகில் இருந்தவர்களிடம்), 'இவரைப் பாருங்கள். கொசுக்களைக் கொன்றால் பரிகாரம் என்ன? என்று இவர் என்னிடம் கேட்கிறார். ஆனால், (இராக்வாசிகளான) இவர்களோ நபி(ஸல்) அவர்களின் (புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களின்) புதல்வரைக் கொன்றுவிட்டார்கள். (ஆனால்) நபி(ஸல்) அவர்கள், '(ஹஸன் ஹுசைன் ஆகிய) அவர்கள் இருவரும் உலகின் இரண்டு துளசி மலர்கள் ஆவர்'' என்று (பாராட்டிக்) கூறக் கேட்டேன்'' என்று கூறினார்கள்.23

5995 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை தவிர வேறெதுவும் அவருக்கு என்னிடம் கிடைக்கவில்லை. எனவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்றார். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்றார்கள்.

5996 அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோளின் மீது (சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய வண்ணம் எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்க இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள். அவர்கள் ருகூஉ செய்யும்போது உமாமாவைக் கீழிறக்கிவிட்டார்கள். (சஜ்தாலிருந்து நிலைக்கு) உயரும்போது அவரை மீண்டும் (தோளில்) ஏற்றினார்கள்.24

5997 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் இப்னு அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉ இப்னு ஹாபிஸ் அத்தமீமீ(ரலி), 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள்.

5998 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் உம்முடைய இதயத்திலிருந்து அன்பைக் கழற்றிவிட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார்கள்.

5999 உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!'' என்றார்கள். நாங்கள், 'இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது'' என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்'' என்று கூறினார்கள்.

பகுதி 19

அல்லாஹ் அன்பை நூறு பாகங்களாகப் பங்கிட்டான்.

6000 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தன்னுடைய குட்டியைவிட்டுக் கால்குளம்பைத் தூக்கிக் கொள்கிறது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 20

உணவளிக்க வேண்டுமே என அஞ்சி ஒருவர் தம் குழந்தையையே கொலை செய்வது (கொடிய) பாவமாகும்).

6001 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நான், 'இறைத்தூதர் அவர்களே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?' என்று கேட்டேன். 'உன்னைப் படைத்த, இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்'' என்று பதிலளித்தார்கள். 'பிறகு எது?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது'' என்று கூறினார்கள். நான், 'பிறகு எது?' என்றேன். 'உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது'' என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், 'அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.25

பகுதி 21

சிறு குழந்தையை மடியில் வைத்தல்

6002 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு சிறு குழந்தையைத் தன்னுடைய மடியில் வைத்து இனிப்புப் பொருளை மென்று அதன் வாயிலிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் மீது அந்தக் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. எனவே, அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதன் மீது ஊற்றச் செய்தார்கள்.26

பகுதி 22

தொடையின் மீது சிறு குழந்தையை வைத்துக்கொள்வது.

6003 (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்புப் பேரரான) உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தம் ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் இப்னு அலீ(ரலி) அவர்களைப் பிடித்து தம் இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக்கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு, 'இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்களின் மீது அன்பு செலுத்துவாயாக!'' என்றார்கள்.27

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அத்தைமீ(ரஹ்) கூறினார்:

(நான் இந்த ஹதீஸை அபூ உஸ்மான் அந்நஹ்தீ(ரஹ்) அவர்களிடமிருந்து அபூ தமீமா இப்னு முஜாலித்(ரஹ்) வாயிலாகக் கேட்டேனா? அல்லது நேரடியாக அபூ உஸ்மானிடமே கேட்டேனா? என) இந்த ஹதீஸ் விஷயத்தில் எனக்குக் சந்தேகம் இருந்தது. இந்நிலையில் இத்தனை முறை இதை அறிவித்துவிட்டோமே என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன். பின்னர் (எடுத்துப்) பார்த்தபோது அபூ உஸ்மானிடமிருந்து (நேரடியாக) நான் கேட்டவற்றில் இதுவும் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டேன்.

பகுதி 23

(பழைய உறவை) மதித்து நடப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

6004 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

கதீஜா(ரலி) அவர்களின் மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் வேறெவரின் மீதும் நான் ரோஷம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் (அடிக்கடி) நினைவுகூர்வதை நான் கேட்டுவந்தேன்.

-என்னை நபி(ஸல்) அவர்கள் மணம் புரிந்துகொள்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே கதீஜா இறந்துவிட்டிருந்தார்.

மேலும், முத்துமாளிகை ஒன்று சொர்க்கத்தில் கதீஜாவுக்குக் கிடைக்கவுள்ளது என்று அவர்களுக்கு நற்செய்தி சொல்லும் படி நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் இறைவன் கட்டளையிட்டிருந்தான். இன்னும் நபி(ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து (அதன் இறைச்சியில்) சிறிதளவை கதீஜா(ரலி) அவர்களின் தோழியரிடையே அன்பளிப்பாகப் பங்கிட்டுவிடுவார்கள்.28

பகுதி 24

அநாதையை வளர்ப்பவரின் சிறப்பு

6005 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி நபி(ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி(ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள்.29

பகுதி 25

கணவனை இழந்த கைம்பெண்களுக்காகப் பாடுபடுபவர்.

6006 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர் 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார்.

இதை ஸஃப்வான் இப்னு சுலைம்(ரஹ்) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.30

பகுதி 26

ஏழைகளுக்காகப் பாடுபடுபவர்

6007 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுபவர் 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்.'

அப்துல்லாஹ் அல்கஅனபீ(ரஹ்) கூறினார்.

அல்லது 'சோர்ந்துவிடாமல் இரவு முழுவதும் நின்று வணங்கி பகல் முழுவதும் விடாது நோன்பு நோற்பவர் போன்றவராவார்' என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) மாலிக்(ரஹ்) அறிவித்தார் என்றே கருதுகிறேன்.31

பகுதி 27

மனிதர்களிடமும் மிருகங்களிடமும் அன்பு காட்டுவது.

6008 அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்

(பனூ லைஸ் தூதுக் குழுவில்) சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களுடன் இருபது நாள்கள் தங்கினோம். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் (ஊரில்) நாங்கள்விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம்.

-நபி(ஸல்) அவர்கள் நல்ல தோழராகவும் இரக்க குணமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுங்கள். அவர்களை (கடமையானவற்றைச் செய்யுமாறு) பணியுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு (தொழுகை அறிவிப்புச்) சொல்லட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தொழுகை நடத்தட்டும்'' என்றார்கள்.32

6009 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

''ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) 'எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்'' என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தன்னுடைய காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தம் வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவரின் பாவங்களை) மன்னித்தான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.33

6010 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றார்கள். அவர்களுடன் நாங்கள் நின்றோம். அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி, 'இறைவா! எனக்கும் முஹம்மது அவர்களுக்கும் (மட்டும்) அருள் புரிவாயாக! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே!'' என்று பிரார்த்தித்தார். (தொழுது முடித்து) நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம், 'விசாலமானதை, அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கிவிட்டாயே!'' என்று கூறினார்கள்.

6011 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

6012 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.34

6013 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர் (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்.

என ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 28

அண்டைவீட்டார் குறித்த அறிவுரை

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணைவைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், (பயணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளியாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் (அன்புடன்) நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமும் தற்பெருமையும் உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 04:36)

6014 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன். 35

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6015 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அவ்வப்போது) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கிவிடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 29

எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவனுடைய பாவத்தின் நிலை.

('நாசவேலைகள்' என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள 'பவாயிக்' எனும் சொல்லில் இருந்து பிறந்ததும், 42:34 வது இறைவசனத்தின் மூலத்தில் உள்ளதுமான) 'யூபிக்ஹுன்ன' எனும் சொல்லுக்கு 'அவற்றை அழித்துவிடுவான்' என்று பொருள். (திருக்குர்ஆன் 18:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவ்விகன்' எனும் சொல்லுக்கு 'நாசம்' என்று பொருள்.

6016 அபூ ஷுரைஹ்(ரலி) அறிவித்தார்

''அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 30

எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்குத் தான் அளிக்கும் சிறிய அன்பளிப்பைக் கூட அற்பமாகக் கருதவேண்டாம்.

6017 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

''முஸ்லிம் பெண்களே! (உங்களில்) எந்தப் பெண்ணும் தன் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் கால் குளம்பை (அன்பளிப்பாக) அளித்தாலும் அதை அற்பமாகக் கருத வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.36

பகுதி 31

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம்.

6018 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6019 அபூ ஷுரைஹ் அல்அதனீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்'' என்று கூறினார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், '(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.

பகுதி 32

வீட்டு வாசலின் நெருக்கத்தை வைத்து அண்டை வீட்டா(ரில் யாரு)க்கு முன்னுரிமை அளிப்பது (என்பதைத் தீர்மானிப்பது).

6020 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நான், 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இருவரில் யாருடைய வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று பதிலளித்தார்கள்.37

பகுதி 33

நற்செயல்கள் அனைத்தும் தர்மமே

6021. 'எல்லா நற்செயலும் தர்மமே' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 38 என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

6022 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

''தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், '(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்'' என்று கூறினார்கள். மக்கள், 'அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்' அல்லது 'அதை அவர் செய்யாவிட்டால்' (என்ன செய்வது?)'' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்'' என்றார்கள். மக்கள், '(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்போது அவர் 'நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்' என்றார்கள். '(இதையும்) அவர் செய்யாவிட்டால்?' என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், 'அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்'' என்றார்கள்.39

பகுதி 34

இன்சொல்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இன் சொல்லும் தர்மமாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்க. 40

6023 அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்

(ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.

பிறகும் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போதும் தம் முகத்தைத் திருப்பினார்கள்.

பிறகு, 'பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் கொலைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)'' என்றார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) '(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) இரண்டு முறை (குறிப்பிட்டார்கள்) என்பதில் சந்தேகமில்லை. (மூன்றாவது முறை குறிப்பிட்டார்களா என்பதில் தான் சந்தேகம் உள்ளது)'' என்று கூறினார்கள்.

பகுதி 35

எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுதல்.

6024 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) கூறினார்

யூதர்களில் ஒரு குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அஸ்ஸாமு அலைக்கும்' (-உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட நான் அவர்களுக்கு 'வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (-அவ்வாறே உங்களின் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)'' என்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்'' என்று கூறினார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்தான் 'வ அலைக்கும்' (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)'' என்று கேட்டார்கள்.

6025 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்'' என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது. 41

பகுதி 36

இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பது.

6026 அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

''இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.42

6027 (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் 'யாசித்தபடி' அல்லது 'ஒரு தேவை நிமித்தமாக' வந்தார். நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி '(இவருக்காக என்னிடம்) பரிந்துரையுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் அளிக்கப்படும். அல்லாஹ், தான் நாடியதை தன்னுடைய தூதரின் நாவினால் நிறைவேற்றுவானாக'' என்றார்கள்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.43

பகுதி 37

''யாரேனும் ஒரு நன்மையான செயலுக்குப் பரிந்துரைத்தால் அதன் நன்மையில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு. (அவ்வாறே) யாரேனும் ஒரு தீய செயலுக்குப் பரிந்துரைத்தால், அதன் குற்றத்தில் அவருக்கும் ஒரு பங்குண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 04:85 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'கிஃப்ல்'' எனும் சொல்லுக்குப் 'பங்கு' என்று பொருள்.

''கிஃப்லைனி' என்பதற்கு அபிசீனிய மொழியில் 'இரண்டு பலன்கள்' என்று பொருள்'' என அபூ மூஸா(ரலி) கூறினார்.

6028 அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

'யாசகர்' அல்லது 'தேவையுடையவர்' எவரேனும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தால் நபியவர்கள் (தம் தோழர்களை நோக்கி, 'இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள். அதனால் உங்களுக்கும் நற்பலன் வழங்கப்படும்; அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை நிறைவேற்றுவானாக'' என்று கூறுவார்கள்.44

பகுதி 38

நபி(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவராக இருக்கவில்லை.

6029 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

முஆவியா(ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, 'அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை'' என்று கூறிவிட்டு, 'நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் கூறினார்கள்.45

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

6030 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

யூதர்கள் (சிலர்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்) என்று (முகமன்) கூறினர். உடனே நான், '(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும், அல்லாஹ் தன்னுடைய கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்களின் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்'' என்று (அவர்களுக்கு பதில்) சொன்னேன். (அப்போது) நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! நிதானம்! (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும், வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது நான், 'அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் (அவர்களுக்கு அளித்த பதிலை) நீ கேட்கவில்லையா? ('அஸ்ஸாமு' எனும் சொல்லைத் தவிர்த்து 'வ அலைக்கும்' - அவ்வாறே உங்களின் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு பதிலளித்துவிட்டேன். அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படாது'' என்று கூறினார்கள்.46

6031 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.

6032 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்'' என்று (என்னிடம்) கூறினார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரின் தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்)விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவராவார்'' என்று கூறினார்கள். 47

பகுதி 39

நற்பண்பும், தயாளகுணமும், வெறுக்கப்பட்ட கருமித்தனுமும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் மனிதர்களிலேயே அதிகம் வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ரமளான் மாதத்தில் இன்னும் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள்.48

அபூ தர்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எனக்கு எட்டியபோது நான் என் சகோதரரிடம், 'இந்த (மக்கா) பள்ளத்தாக்கிற்கு நீ பயணம் மேற்கொண்டு, அவரின் சொல்லை செவியேற்பாயாக'' என்று கூறினேன். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து, 'அவர் நற்குணங்களை(க் கடைப்பிடிக்கும்படி) ஏவக் கண்டேன்'' என்றார்.49

6033 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களை எதிர்கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் சென்றுவிட்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூ தல்ஹா(ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்தவண்ணம், 'பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள்'' என்று (மக்களைப் பார்த்துச்) கூறினார்கள். பிறகு, ' '(தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல்' என்று கூறினார்கள்.50

6034 முஹம்மத் இப்னு முன்கதிர்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் எது கேட்கப்பட்டாலும் ஒருபோதும் அவர்கள் 'இல்லை' என்று சொன்னதில்லை என ஜாபிர்(ரலி) கூறக் கேட்டேன்.

6035 மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர்' என்று கூறுவார்கள்'' என்று கூறினார்கள்.51

6036 அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

''ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் 'புர்தா' (சால்வை) ஒன்றைக் கொண்டு வந்தார்'' என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறிவிட்டு, 'புர்தா என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?' என மக்களிடம் கேட்டார்கள். அப்போது மக்கள், 'அது சால்வை'' என்றனர். அப்போது ஸஹ்ல்(ரலி), 'அது கரை வைத்து நெய்யப்பட்ட சால்வையாகும்'' என்று கூறினார்கள். (தொடர்ந்து கூறினார்கள்:) அப்போது அந்தப் பெண்மணி, 'இதனை நான் உங்களுக்கு அணிவிக்க(வே நெய்து) உள்ளேன்; இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். அது தேவையாயிருந்ததால் நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதை அணிந்(து கொண்டு வந்)தபோது நபித்தோழர்களில் ஒருவர் அதைப் பார்த்துவிட்டு, 'இறைத்தூதர் அவர்களே! இது மிகவும் அழகாயிருக்கிறதே! இதை எனக்கு அணிவித்து விடுங்களேன்'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'சரி'' என்று கூறிவிட்டு அவர்கள் (அதைக் கழற்றுவதற்காக) எழுந்து சென்றுவிட்டபோது, அந்தத் தோழரிடம் அவரின் நண்பர்கள் 'நீர் செய்தது அழகல்ல் நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் தான் அதைப் பெற்றுக்கொண்டார்கள். தம்மிடம் (உள்ள) ஏதேனும் ஒன்று கேட்கப்பட்டால் அதை அவர்கள் கொடுக்காமல் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே'' என்று கூறி அவரைக் கண்டித்தனர். அதற்கு அவர் 'நபி(ஸல்) அவர்கள் அதை அணிந்ததால் ஏற்பட்ட சுபிட்சத்தை (பரக்கத்தை) அதில் எதிர்பார்த்தேன்; நான் (இறக்கும் போது) அதில் கஃபனிடப்படலாம் (என்று எண்ணியே அதை கேட்டேன்)'' என்று கூறினார். 52

6037 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட்)காலம் குறுகிவிடும்; நற்செயல் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக மக்களின் (மனங்களில்) கருமித்தனம் உருவாக்கப்படும் 'ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று கூறினார்கள்.

மக்கள், 'ஹர்ஜ் என்றால் என்ன?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'கொலை கொலை'' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

6038 அனஸ்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை 'ச்சீ'' என்றோ, '(இதை) ஏன் செய்தாய்'' என்றோ, 'நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?' என்றோ அவர்கள் சொன்னதில்லை.

பகுதி 40

ஒருவர் தம் குடும்பத்தாரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

6039 அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

''தம் வீட்டாரிடம் இருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?' என்று நான் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளை நபி(ஸல்) அவர்கள் செய்துவந்தார்கள். தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகைக்காக எழுந்து (சென்று) விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள்.53

பகுதி 41

அன்பு அல்லாஹ்விடமிருந்தே ஆரம்பமாகிறது.

6040 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடியாரை அல்லாஹ் நேசிக்கும் பொழுது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களை அவன் அழைத்து 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே நீங்களும் அவரை நேசியுங்கள்'' என்று கூறுவான். எனவே, அவரை ஜிப்ரீலும் நேசித்துவிட்டு விண்ணகத்தில் வசிப்பவர்களை அழைத்து 'அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்'' என்று ஜிப்ரீல் அறிவிப்பார். உடனே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்குப் பூமியில் வசிப்பவர்களிடமும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.54

பகுதி 42

அல்லாஹ்வுக்காக நேசம் கொள்வது

6041 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராகுவது.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.55

பகுதி 43

இறைநம்பிக்கையாளர்களே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 49:11 வது) இறைவசனம்.

6042 அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) அறிவித்தார்

உடலில் இருந்து வெளியேறும் ஒன்(றான வாயுக் காற்)றைக் கேட்டு எவரும் சிரிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், (பெண்கள் தொடர்பாக) 'நீங்கள் உங்கள் மனைவியை ஏன் காளையை அடிப்பது போல் அடிக்கிறீர்கள்? பிறகு நீங்களே அவளை (இரவில்) அணைத்துக் கொள்ள வேண்டிவருமே!'' என்றும் கூறினார்கள்.

ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'அடிமையை அடிப்பது போல் (ஏன் அடிக்கிறீர்கள்?)'' என்று காணப்படுகிறது. 56

6043 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மினாவில் (தங்கியிருந்தபோது 'துல்ஹஜ்' பத்தாம் நாள் உரையாற்றுகையில்) 'மக்களே! இது என்ன நாள் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்தான் நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'இது புனித நாள்'' என்று கூறினார்கள்.

(பிறகு) 'இது எந்த நகரம் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'இது புனித நகரம்'' என்று கூறினார்கள். (பிறகு) 'இது என்ன மாதம் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'இது புனித மாதம்'' என்று கூறிவிட்டு, 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்றுள்ளதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் மானமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறினார்கள்.57

பகுதி 44

ஏசுவதற்கும் சபிப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை.

6044 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.58

6045 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் மற்றவரை 'பாவி' என்றோ, 'இறைமறுப்பாளன்' என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது.

என அபூ தர்(ரலி) அறிவித்தார்.

6046 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ ஏசுபவராகவோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும்போது கூட 'அவருக்கென்ன நேர்ந்தது? அவரின் நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள்.59

6047 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர், தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார்.60 தனக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்ச்சை செய்வது(ம், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும்) எந்த மனிதனுக்கும் தகாது.61 எதன் மூலம் தம்மைத்தாமே தற்கொலை செய்துகொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.

இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

6048 சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்கு மிகக் கடுமையான கோபம் ஏற்பட்டு அவரின் முகம் புடைத்து, நிறம் மாறிவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோபமான)து போய்விடும்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில்) ஒருவர் (கோபத்திலிருந்த) அந்த மனிதரை நோக்கி நடந்து நபி(ஸல்) அவர்கள் கூறியதை எடுத்துக்கூறி 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு'' என்றார். அதற்கு அம்மனிதர் '(கலைப்படும்படி) பிணி ஏதேனும் எனக்கு ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறீரா? நான் என்ன பைத்தியக்காரானா? (உம்முடைய வேலையைக் கவனிக்கச்) செல்!'' என்றார்.62

6049 உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ரமளானில் வரும்) லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) பற்றி (அது ரமளான் மாதத்தில் எந்த இரவு என்று) மக்களுக்குத் தெரிவிப்பதற்காக (தம் வீட்டிலிருந்து) புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தார்கள். (இதைக் கண்ணுற்ற) நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ர்' பற்றி உங்களுக்குத் தெரிவிப்பதற்காக நான் (வீட்டிலிருந்து) புறப்பட்டேன். அப்போது இன்னாரும் இன்னாரும் தமக்குள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாகவே இருக்கலாம். எனவே, (ரமளான் மாதத்தின் இருபத்து) ஒன்பதாவது, (இருபத்து) ஏழாவது, (இருபத்து) ஐந்தாவது இரவுகளில் அதனைத் தேடிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.63

6050 மஅரூர் இப்னு சுவைத்(ரஹ்) அறிவித்தார்

நான் அபூ தர் அல் கிஃபாரீ(ரலி) (அவர்களை மதீனாவுக்கருகில் உள்ள 'ரபதா' எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது) அவர்களின் மீது ஒரு மேலங்கியும், அவர்களின் அடிமையின் மீது (அதே மாதிரியான) ஒரு மேலங்கியும் இருக்கக் கண்டேன். நான் (அவர்களிடம்), '(அடிமை அணிந்திருக்கும்) இதை நீங்கள் வாங்கி (கீழங்கியாக) அணிந்தால் (உங்களுக்கு) ஒரு ஜோடி ஆடையாக இருக்குமே! இவருககு வேறோர் ஆடையைக் கொடுத்துவிடலாமே'' என்று கூறினார். அப்போது அபூ பக்ர்(ரலி) கூறினார்.

எனக்கும் ஒரு மனிதருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபியல்லாதவராவார். எனவே, நான் அவரின் தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் என்னைப் பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீர் இன்னாரை ஏசினீரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். 'அவரின் தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசினீரா?' என்று கேட்டார்கள். நான் (அதற்கும்) 'ஆம்'' என்று பதிலளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நீர் அறியாமைக் காலத்துச் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கிறீர்'' என்று கூறினார்கள். நான், 'வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலுமா? (அறியாமைக் கால குணம் கொண்டவனாய் உள்ளேன்?)'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்று கூறிவிட்டு, '(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். எனவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவரின் சகோதரரை அல்லாஹ் வைத்துள்ளானோ அவர் தம் சகோதரருக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவரின் சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்தால் அவருக்குத் தாமும் ஒத்துழைக்கட்டும்'' என்று கூறினார்கள்.64

பகுதி 45

நெட்டையானவர், குட்டையானவர் என்றெல்லாம் (ஒருவரைப் புனைபெயரில்) மக்கள் அறிமுகப்படுத்துவது.

''இரண்டு கைக்காரர்'' என்ன சொல்கிறார்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.65

ஒரு மனிதரைக் கொச்சைப்படுத்தும் நோக்கமில்லாமல் கூறப்படும் எந்தப் (புனை) பெயரும் அனுமதிக்கப்பட்டதே.

6051 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நான்கு ரக்அத் தொழுகையான) லுஹ்ர் தொழுகையை (மறந்து) இரண்டு ரக்அத்களாகத் தொழுகை நடத்திவிட்டு சலாம் கொடுத்துவிட்டார்கள்.

பிறகு எழுந்து பள்ளிவாசலின் தாழ்வாரத்திலிருந்த (பேரீச்சங்) கட்டையினை நோக்கிச் சென்று அதன் மீது தம் கையை வைத்து (நின்று) கொண்டார்கள். அன்று (பள்ளிவாசலில் இருந்த) மக்களில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் இருந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் (அது குறித்துப்) பேச அஞ்சினர். மக்களில் சிலர் வேகமாக வெளியேறிச் செல்லலாயினர். அப்போது அவர்கள் '(தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?' என்று பேசிக்கொண்டனர். மக்களில் (கிர்பாக்' எனும் இயற்பெயருடைய) ஒருவரும் இருந்தார். அவரை நபி(ஸல்) அவர்கள் 'இரண்டு கைக்காரர்' (துல் யதைன்) என்று அழைப்பது வழக்கம். அவர், 'அல்லாஹ்வின் நபியே! தாங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை(யின் ரக்அத்) குறைந்துவிட்டதா?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், '(என் எண்ணப் படி) நான் மறக்கவுமில்லை. தொழுகை குறைந்துவிடவுமில்லை'' என்று கூறினார்கள். அவர், 'இல்லை; தாங்கள் மறந்துவிட்டீர்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். 'இரண்டு கைக்காரர் (துல்யதைன்) சொல்வது உண்மையா?' என (மக்களிடம்) நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். (மக்களும் உண்மையே என்று தெரிவித்தனர்.) பிறகு நபி(ஸல்) அவர்கள் எழுந்து இன்னும் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தி 'சலாம்' கொடுத்தார்கள். பிறகு தக்பீர் ('அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன்' எனக்) கூறி 'முன்பு செய்ததைப் போன்று' அல்லது 'அதை விடவும் நீண்ட' (மறதிக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். பின்னர் (சிரவணக்கத்திலிருந்து) எழுந்து 'தக்பீர்' கூறினார்கள். பின்னர் மீண்டும் 'முன்பு செய்ததைப் போன்று' அல்லது 'அதைவிட நீளமாக' சிரவணக்கம் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி 'தக்பீர்' கூறினார்கள். 66

பகுதி 46

புறம் பேசுதல்67

''(இறை நம்பிக்கையாளர்களே!) உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம்பேச வேண்டாம். உங்களில் எவரேனும் ஒருவர் தம் இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும், நீங்கள் பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன்; மிக்க கருணையாளன்'' எனும் (திருக்குர்ஆன் 49:12 வது) இறைவசனம். 68

6052 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு மண்ணறைகளை (கப்றுகளை)க் கடந்து சென்றார்கள். அப்போது '(மண்ணறைகளிலுள்ள) இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்) இருவரும் வேதனை செய்யப்படவில்லை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள் சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார்'' என்று கூறினார்கள்.

பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நாட்டார்கள். பிறகு, 'இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்'' என்று கூறினார்கள்.69

பகுதி 47

அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியது.

6053 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனூநஜ்ஜார் குடும்பமாகும்.

என அபூ உசைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.70

பகுதி 48

குழப்பவாதிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமானவர்கள் குறித்து (மற்றவர்களை எச்சரிக்க) குறை கூறுவது அனுமதிக்கப்பட்டதே!

6054 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒருவர் (எங்கள் வீட்டுக்குள் வர) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று (அவரைப் பற்றிச்) கூறினார்கள். (வீட்டுக்கு) உள்ளே அவர் வந்தபோது, (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிட(மு)ம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசிவிட்டு எழுந்து சென்றதும்) நான், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள்; பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே?' என்று கேட்டேன். (அப்போது) நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! மக்கள் எவரின் அவருவருப்பான பேச்சுகளிலிருந்து (தங்களைத்) தற்காத்துக் கொள்ள அவரைவிட்டு ஒதுங்கிறார்களோ அவரே மக்களில் தீயவராவார். (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து மற்றவர்களை எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்)'' என்றார்கள்.71

பகுதி 49

கோள் சொல்வது பெரும்பவாங்களில் ஒன்றாகும்.72

6055 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தபோது தம் மண்ணறைகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு மனிதர்களின் (கூக்) குரலைச் செவியுற்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் '(இவர்கள்) இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு மாபெரும் (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. ஆனாலும், அது ஒரு (வகையில்) பெரிய (பாவச்) செயல்தான். இவர்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது (தம் உடலை) மறைக்கமாட்டார். இன்னொருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்துகொண்டிருந்தார்'' என்று கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை 'இரண்டு துண்டாக' அல்லது 'இரண்டாகப்' பிளந்து ஒரு துண்டை இவரின் மண்ணறையிலும் மற்றொரு துண்டை இவரின் மண்ணறையிலும் (ஊன்றி) வைத்தார்கள். அப்போது 'இவ்விரண்டின் ஈரம் உலராத வரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம்'' என்று கூறினார்கள்.73

பகுதி 50

கோள் சொல்வதன் தீமை

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) குறை கூறித் திரிகிறான், கோள் சொல்லி அலைகிற (எவருக்கும் நீங்கள் இணங்கிவிடாதீர்கள்.) (திருக்குர்ஆன் 68:11)

மேலும் அல்லாஹ் கூறினான்:

குறை சொல்லிக் கொண்டும் புறம் பேசிக் கொண்டும் திரிகிற எவருக்கும் கேடுதான். (திருக்குர்ஆன் 104:01)

(இதன் மூலத்தில் உள்ள ஹுமஸத், லுமஸத் ஆகியவற்றின் வினைச்சொற்களான) யஹ்மிஸு, யல்மிஸு ஆகிய சொற்களுக்கும் 'யஈபு' எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. (குறை கூறுதல்.)

6056 ஹம்மாம் இப்னு ஹாரிஸ்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் '(இங்குள்ள) ஒருவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை (கலீஃபா) உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களிடம் போய்ச் சொல்கிறார்'' என்று கூறப்பட்டது.

அப்போது ஹுதைஃபா(ரலி) 'கோள் சொல்கிறவன் சொர்க்கம் செல்லமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

பகுதி 51

''பொய் பேசுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 22:30 வது) இறைவசனம்.

6057 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் (நோன்பைப் பற்றிய) அறியாமையையும் கைவிடாதவர் (நோன்பின் போது) தம் உணவையும் பானத்தையும் (வெறுமனே) கைவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.74

அறிவிப்பாளர் அஹ்மத் இப்னு யூனுஸ்(ரஹ்) கூறினார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீ திஃப்(ரஹ்)) இதன் அறிவிப்பாளர் தொடரை (விளக்கவில்லை. அவையில் இருந்த) ஒருவர் (அதை) எனக்கு விளக்கினார்.

பகுதி 52

இரட்டை முகத்தான் பற்றிக் கூறப்பட்டவை

6058 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவனாக இரட்டை முகத்தானைக் காண்பீர். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான்.75

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 53

தம் நண்பரைப் பற்றிப் பேசப்படும் தகவலை அவருக்குத் தெரிவித்(து அவரை விழிப்படையச் செய்)தல்.

6059 இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில், ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடவில்லை'' என்று (மனத்தாங்கலுடன்) பேசினார். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம் (அம்மனிதர் கூறியதைச்) சொன்னேன். (அதைக் கேட்ட) உடனே அவர்களின் முகம் (கோபத்தினால் நிறம்) மாறிவிட்டது. (தொடர்ந்து) அவர்கள், '(இறைத்தூதர்) மூஸாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் சகித்துக்கொண்டார்கள்'' என்று கூறினார்கள்.76

பகுதி 54

(யாரையும் அளவு கடந்து) புகழ்வது வெறுக்கப்படட செயலாகும்.

6060 அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொரு மனிதரை அளவு கடந்து புகழ்ந்து கொண்டிருப்பதைச் செவியுற்றார்கள். அப்போது அவர்கள், 'அந்த மனிதரின் முதுகை 'அழித்துவிட்டீர்கள்' அல்லது 'ஒடித்து விட்டீர்கள்' என்று (கடிந்து) கூறினார்கள்.77

6061 அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

ஒரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றிப் புகழ்ந்துரைத்தார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுதான். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீரே!'' என்று பல முறை கூறினார்கள். பிறகு, 'உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், '(அவர் குறித்து) நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்' என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகச் கருதினால் மட்டுமே கூறட்டும். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று (யாரும்) கூற வேண்டாம்.

காலித் இப்னு மஹ்ரான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், '(நபி(ஸல்) அவர்கள் தம் முன் புகழ்ந்தவரைப் பார்த்து) உனக்கு அழிவுதான்'' என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.78

பகுதி 55

ஒருவர் தம் சகோதரர் குறித்து தாம் அறிந்தவற்றைக் கூறிப் புகழ்வது.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார்.

(யூத அறிஞராயிருந்து முஸ்லிமான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்களைத் தவிர பூமியின் மீது நடக்கிற வேறெவரைக் குறித்தும் 'இவர் சொர்க்கவாசி' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டதில்லை.79

6062 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழங்கி குறித்து (ஆடையைப் பெருமையுடன் தரையில் படும்படி இழுத்துச் செல்கிறவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று) குறிப்பிட்டபோது அபூ பக்ர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என் கீழங்கியின் இரண்டு பக்கங்களில் ஒன்று (இடுப்பில் நிற்காமல் கீழே) விழுந்துவிடுகிறதே!'' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் (தற்பெருமையுடன் கீழங்கியைத் தொங்க விடும்) அவர்களில் உள்ளவர் அல்லர்'' என்று கூறினார்கள்.80

பகுதி 56

''நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் (உங்களை) ஏவுகிறான். அன்றியும் மானக்கேடான செயல்கள், பாவங்கள், அக்கிரமங்கள் ஆகியவற்றைச் செய்வதற்குத் தடை விதிக்கிறான். நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 16:90 வது) இறைவசனம்.

''(மனிதர்களே!) உங்களுடைய அக்கிரமங்கள் எல்லாம் உங்களுக்கே கேடாக முடியும்'' எனும் (திருக்குர்ஆன் 10:23 வது) இறைவசனம்.

''அதன்பின்னர் அவனுக்குக் கொடுமை இழைக்கப்படுமானால் நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவுவான்'' எனும் (திருக்குர்ஆன் 22:60 வது) இறைவசனம்.

மேலும், முஸ்லிமுக்கெதிராகவோ இறைமறுப்பாளருக்கெதிராகவோ வன்மத்தைத் தூண்டாமல் இருப்பது.

6063 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்று வந்துவிட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள். அவர்கள் ஒரு நாள் என்னிடம், 'ஆயிஷா! நான் எந்த விவகாரத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டிருந்தேனோ அதில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (நான் உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் என் கால்மாட்டிலும் மற்றவர் என்னுடைய தலைமாட்டிலும் அமர்ந்தனர். அப்போது என் கால்மாட்டில் அமர்ந்திருந்தவர் என் தலைமாட்டில் அமர்ந்திருந்தவரிடம் (என்னைக் காட்டி), 'இந்த மனிதரின் நிலை என்ன?' என்று கேட்க, மற்றவர், 'இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார். முதலாமவர், 'இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?' என்றுகேட்க, மற்றவர், 'லபீத் இப்னு அஃஸம்' என்று பதிலளித்தார். முதலாமவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறை, (தலைவாரும்) சீப்பு, சிக்குமுடி ஆகியவற்றில் (சூனியம்) செய்யப்பட்டு 'தர்வான்' (குலத்தாரின்) கிணற்றில் ஒரு பாறைக்கடியில் வைக்கப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார்.

எனவே, நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்கு) வந்து (பார்த்துவிட்டு), 'இந்தக் கிணறுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்டது. அந்தக் கிணற்றினைச் சுற்றியிருந்த பேரீச்சம் மரங்களின் தலைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்றிருந்தன. அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்றிருந்தது'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட அது வெளியே எடுக்கப்பட்டது. நான், 'இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறை)தனைப் பிரித்துப் பார்க்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். நானோ (அதைப் பிரித்துக் காட்டுவதால்) மக்களுக்கெதிராகத் வன்மத்தைத் தூண்டி விடுவதை அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள்.

(நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்த) லபீத் இப்னு அஃஸம், பனூ ஸுரைக் குலத்தாரிலுள்ள ஒருவன் ஆவான். (அவன்) யூதர்களின் நட்புக் குலத்தவன் ஆவான்.81

பகுதி 57

பொறாமையும் பிணக்கும் தடை செய்யப்பட்டவையாகும்.

அல்லாஹ் கூறினான்:

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டாகும் தீங்கிலிருந்து (பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுக). (திருக்குர்ஆன் 113:05)

6064 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6065 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

பகுதி 58

இறைநம்பிக்கையாளர்களே! பெரும்பாலான சந்தேகங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகங்களில் சில பாவமாகும். மேலும், (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள் (எனும் 49:12 வது இறைவசனம்).82

6066 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 59

அனுமதிக்கப்பட்ட சந்தேகம்

6067 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''இன்னாரும் இன்னாரும் நம்முடைய மார்க்கத்தில் எதையும் அறிந்ததாக நான் கருதவில்லை'' என்று (இருவரைப் பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) லைஸ்(ரஹ்) கூறினார்: அவர்கள் இருவரும் நயவஞ்சகர்களாய் இருந்தனர்.

6068 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'ஆயிஷா! இன்னாரும் இன்னாரும் நாம் எந்த மார்க்கத்தில் இருக்கிறோமோ அதை அறிந்திருப்பவர்களாக நான் கருதவில்லை'' என்று கூறினார்கள்.83

பகுதி 60

இறைநம்பிக்கையாளர் தாம் புரிந்துவிட்ட பாவங்களை (பகிரங்கப்படுத்தாமல்) மறைப்பது.84

6069 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, 'இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்'' என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6070 ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார்

ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், '(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?' என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

''உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். எந்த அளவிற்கென்றால் இறைவன் தன் திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். அப்போது இறைவன், 'நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம்' என்பார். இறைவன் (மீண்டும்) 'இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?' என்று கேட்பான். அப்போதும் அவர், 'ஆம்' என்று கூறி (தம் பாவச்) செயல்களை ஒப்புக் கொள்வார். பிறகு அவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்(திருந்)தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்' என்று கூறுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.85

பகுதி 61

அகங்காரம்

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 22:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸானிய இத்ஃபிஹி' எனும் சொல்லுக்க 'அகங்காரம் கொண்டவனாக' என்று பொருள். 'இத்ஃபிஹி' எனும் சொற்றொடருக்கு 'அவனுடைய பிடரியில்' என்று பொருள்.

6071 ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை), 'சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பிணவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே,) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்'' என்று கூறினார்கள்.86

6072 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

மதீனாவாசிகளின் (சாதாரண) அடிமைப் பெண்களில் ஒருத்தி கூட இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். (அந்த அளவிற்கு மிக எளிமையானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.)

பகுதி 62

(மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருப்பதும், 'தம் சகோதரரிடம் மூன்று நாள்களுக்கு மேல் ஒருவர் பேசாமல் இருப்பது அனுதிக்கப்பட்டதன்று' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதும்.

6073, 6074, 6075 நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்

ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்'' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்'' என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்'' என்று கூறிவிட்டார்கள்.

ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும் நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!'' என்று கூறினார்கள். எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள்.

(அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்'' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்'' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்'' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள்.

மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்'' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி) இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.87

6076 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

6077 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) ஸலாமை முதலில் தொடங்குகிறவர்தாம் இவர்கள் இருவரில் சிறந்தவராவார்.

என அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

பகுதி 63

(இறை நெறிக்கு) மாறு செய்பவருடன் பேசாமல் இருக்கலாம்.88

நான் (மற்றும் இரண்டு நண்பர்கள் தக்கக் காரணமின்றி தபூக் போரில்) நபி(ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியபோது, 'எங்களுடன் பேச வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள்'' என கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார். (இவ்வாறு) ஐம்பது நாள்கள் (பேசாமலிருந்தார்கள்) என்றும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.89

6078 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன்னுடைய கோபத்தையும் உன்னுடைய திருப்தியையும் நான் நன்றாக அறிவேன்'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அதை எவ்வாறு தாங்கள் அறிந்துகொள்வீர்கள்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), 'ஆம்; முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய். நீ கோபமாய் இருக்கும்போது (பேசினால்), 'இல்லை; இப்ராஹீம்(அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக' என்று கூறுவாய்'' என்று கூறினார்கள். நான், 'ஆம் (உண்மைதான்). நான் தங்களின் பெயரைத் தான் கோபித்துக் கொள்வேன் (தங்களின் மீதன்று)'' என்று கூறினேன்.99

பகுதி 64

ஒருவர் தம் தோழரை ஒவ்வொரு நாளும் (ஒரு முறை) சந்திப்பாரா? அல்லது காலை மாலை (இரண்டு முறை) சந்திப்பாரா?

6079 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என் பெற்றோர் (அபூ பக்ர் - உம்மு ரூமான்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தார்கள். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் (மக்காவில்) எந்த நாளும் எங்களுக்குக் கழிந்ததில்லை. நாங்கள் ஒரு நாள் உச்சிப்பொழுதின்போது அபூ பக்ர்(ரலி) அவர்களின் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்மிடம் வருகை தராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாறாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார். (அதற்கு) அபூ பக்ர்(ரலி) ஏதோ (முக்கிய) விவகாரம் தான் நபியவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச்செய்திருக்கிறது'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள், '(ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு (இறைவனிடமிருந்து) அனுமதி வழங்கப்பட்டுவிட்டது'' என்றார்கள்.

பகுதி 65

சந்திப்பு

ஒருவர் ஒரு கூட்டத்தாரைச் சந்தித்து அவர்களிடம் (சிறிதேனும்) உணவு உண்பது; நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்கள் அபுத்தர்தா(ரலி) அவர்களைச் சந்தித்து அவரிடம் உணவருந்தினார்கள்.

6080. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாரைச் சந்தித்துவிட்டு அவர்களிடம் உணவருந்தினார்கள். பிறகு அவர்கள் புறப்பட விரும்பியபோது வீட்டில் உள்ள ஓர் இடத்தை ஒதுக்கித் தரும்படி பணித்தார்கள். எனவே, நபியவர்களுக்காகப் பாய் விரிக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன் மீது நபியவர்கள் தொழுதார்கள். அக்குடும்பத்தினருக்காகப் பிரார்த்தனையும் புரிந்தார்கள்.

பகுதி 66

(தம்மைச் சந்திக்கவரும்) தூதுக் குழுவினர்களுக்காக ஒருவர் தம்மை (ஆடையணிகலன்களால்) அலங்கரித்துக் கொள்வது.

6081. யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அல் ஹள்ரமீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

சாலிம் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் என்னிடம், 'அல்இஸ்தப்ரக்' என்றால் என்ன?' என்று கேட்டார்கள். நான், 'கெட்டியான முரட்டுப் பட்டு'' என்று பதிலளித்தேன். அப்போது அவர்கள், (என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறக்கேட்டுள்ளேன் என்றார்கள்; (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் ஒருவரின் மீது கெட்டியான பட்டு அங்கி ஒன்றைக் கண்டார்கள். அதை (அவரிடமிருந்து வாங்கி) நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து 'இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் விலைக்கு வாங்கி மக்களின் தூதுக் குழு தங்களிடம் வரும்பொழுது இதைத் தாங்கள் அணிந்து கொள்ளுங்கள்'' என்றார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(மறுமைப்) பேறற்ற (ஆட)வர்களே (இது போன்ற) பட்டை (இம்மையில்) அணிந்துகொள்வார்கள்'' என்றார்கள்.

இது நடந்து சில நாள்கள் கழிந்த பிறகு (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு ஒரு பட்டு அங்கியை கொடுத்தனுப்பினார்கள். உடனே அதை எடுத்துக் கொண்டு உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இதை எனக்குத் தாங்கள் கொடுத்தனுப்பியுள்ளீர்கள். (ஆனால்) இது போன்ற (பட்டு அங்கி) விஷயத்தில் தாங்கள் வேறு விதமாகக் கூறினீர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(இதை விற்று) இதன் மூலம் (வருவாயாகக் கிடைக்கும்) செல்வத்தை நீங்கள் அடைந்துகொள்ளும் பொருட்டே இதை உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்'' என்றார்கள்.

இந்த நபி மொழியின் காரணமாகவே இப்னு உமர்(ரலி) அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்படுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள்.

பகுதி 67

(ஒப்பந்த அடிப்படையில் இருவருக்கிடையே) சகோதரத்துவத்தையும் (குலங்களிடையே) நட்புறவையும் ஏற்படுத்துவது.

அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி(ஸல்) அவர்கள் சல்மான் அல் ஃபார்சீ(ரலி) அவர்களுக்கும் அபுத்தர்தா(ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் மதீனா வந்தபோது எனக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள்.

6082. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (மதீனாவாசிகளான) எங்களிடம் (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களுக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். பிறகு (அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்கள் மணமுடித்துக் கொண்டபோது அவரிடம்) 'ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா(மணவிருந்து) கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6083. ஆஸிம் இப்னு சுலைமான் அல் அஹ்வல்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்தில் (மனிதர்களாக ஏற்படுத்திக் கொள்கிற ஒப்பந்த) நட்புறவு முறை இல்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனத் தங்களுக்குச் செய்தி கிடைத்தா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி(ஸல்) அவர்கள் என்னுடைய வீட்டில் வைத்து குறைஷி (முஹாஜிர்)களுக்கும் (மதீனா) அன்சாரிகளுக்கும் இடையே நட்புறவு முறையே ஏற்படுத்தியிருந்தார்களே!'' என்றார்கள்.

பகுதி 68

புன்னகையும் சிரிப்பும்

ஃபாத்திமா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக (ஒன்றை)ச் சொன்னார்கள். உடனே நான் சிரித்தேன்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அல்லாஹ்வே சிரிக்க வைக்கிறான்; அழச் செய்கிறான்.

6084. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரிஃபாஆ அல்குறழீ(ரலி) அவர்கள் தம் துணைவியாரை ஒட்டுமொத்த மணவிலக்குச் செய்துவிட்டார்கள். அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்கள் அவரை மணந்தார்கள். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் ரிஃபாஆ அவர்களிடம் (மனைவியாக) இருந்தேன். என்னை அவர் மூன்று தலாக்குகளில் இறுதித் தலாக் சொல்லிவிட்டார். அவருக்குப் பிறகு என்னை அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர் மணந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டாம் கணவரான) இவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இதோ இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான்'' என்று கூறி தம் முகத்திரையின் குஞ்சத்தைப் பிடித்துக் காட்டினார். (அப்போது) அபூ பக்ர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி) அவர்கள் அந்த அறையின் வாசலில் அனுமதிக்காக (காத்துக்கொண்டு) அமர்ந்திருந்தார்கள். காலித் அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை அழைத்து, 'அபூ பக்ரே! இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முன்னிலையில் பகிரங்கமாக இப்படிப் பேசக்கூடாதென இவரை நீங்கள் கண்டிக்கக் கூடாதென?' என்று கேட்கலானார்கள். (ஆனால்) இறைத்தூதர்(ஸல்) அவர்களோ புன்னகை செய்ததைவிடக் கூடுதலாக (வேறெதும்) செய்யவில்லை.

பிறகு நபி(ஸல்) அவர்கள் (அப்பெண்ணிடம்), 'நீ (முதல் கணவர்) ரிஃபாஆவிடமே திரும்பச் செல்ல விரும்புகிறாய் போலும், நீ (உன் இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் அது முடியாது'' என்றார்கள்.

6085. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வீட்டுக்குள் வர) அவர்களிடம் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அப்போது நபியவர்களிடம் (அவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் (குடும்பச் செலவுத் தொகையை) அதிகமாக்கித் தரும்படி குரலை உயர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்(தபடி எழுந்)து கொண்டனர். நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்த உடன் உமர்(ரலி) அவர்கள் உள்ளே வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது உமர்(ரலி) அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! தங்களை அல்லாஹ் (வாழ்நாள் முழுதும்) சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்த இவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்துகொண்(டு உள்ளே சென்று விட்)டார்களே!'' என்றார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'இவர்கள் (எனக்கு அஞ்சுவதை விட) அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள், இறைத்தூதர் அவர்களே! என்று கூறிவிட்டுப் பிறகு அப்பெண்களை நோக்கி, 'தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், 'அல்லாஹ்வின் தூதருன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கின்றீர்கள்'' என்று பதிலளித்தார்கள்.

(அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அது இருக்கட்டும் கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ஓர் அகன்ற பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் எதிர்கொண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறு பாதையில் தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.

6086. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாயிஃபில் (அதனை முற்றுகையிட்ட படி) இருந்துகொண்டிருந்தபோது, 'இறைவன் நாடினால் நாம் நாளை (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், 'தாயிஃபை வெற்றி கொள்ளும் வரை நாங்கள் (திரும்பச் செல்ல மாட்டோம்) இங்கேயே இருப்போம்'' என்று கூறினார்கள். (அவர்களின் தயக்கத்தைக் கண்ட) நபி(ஸல்) அவர்கள், 'முற்பகலிலேயே போர் புரியுங்கள்'' என்றார்கள். அவ்வாறே எதிரிகளுடன் அவர்கள் கடுமையாகப் போர் புரிந்ததில் அவர்களுக்கு அதிகமான காயங்கள் ஏற்பட்டன.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம்'' என்றார்கள். நபித்தோழர்கள் இப்போது (ஏதும் பதிலளிக்காமல் அதை ஆதரிக்கும் வகையில்) அமைதியாக இருந்தார்கள். இதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.

6087. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் அழிந்துவிட்டேன்; நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியுடன் புணர்ந்துவிட்டேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக'' என்றார்கள். அவர், 'என்னிடம் அடிமை இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்பீராக'' என்றார்கள். அவர், 'எனக்கு சக்தியில்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக'' என்று கூறினார்கள். அவர், 'என்னிடம் ஏதுமில்லை'' என்றார் அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அரக்' கொண்டு வரப்பட்டது. அதில் பேரீச்சம்பழம் இருந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அரக்' என்பது (15ஸாஉ பிடிக்கும்) ஒரு முகத்தலளவை ஆகும்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'கேள்வி கேட்டவர் எங்கே?' என்று கேட்க, அவர் வந்தார். அவரிடம்) 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!'' என்றார்கள். அந்த மனிதர் 'என்னை விட ஏழையாக இருப்போருக்கா நான் தர்மம் செய்வது? கருங்கற்கள் நிறைந்த (மதினாவின்) இரண்டு மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எங்களை விடப் பரம ஏழையான குடும்பத்தார் யாருமில்லை'' என்றார். (இதை; கேட்ட) நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். (பிறகு) 'அவ்வாறாயின் நீங்களே (அதற்கு உரியவர்கள்)'' என்றார்கள்.

6088. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரை கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி அந்தச் சால்வையால் (அவர்களை) வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி(ஸல்) அவர்களின் தோள்பட்டையில் அடையாளம் பதித்துவிட்டிருந்ததை கண்டேன். பிறகு அவர், 'முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்'' என்றார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டுப் பிறகு அவருக்குக் கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.

6086. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) அறிவித்தார்.

நான் இஸ்லாத்தை தழுவியதிலிருந்த நான் நபியவர்களைச் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) நபி(ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் (சிரித்தவர்களாகவே) அல்லாமல் வேறுவிதமாக அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.

இதைக் கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.

6090. 'என்னால் குதிரையில் சரியாக அமர முடியவில்லை'' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அவர்களை என் நெஞ்சில் தம் கரத்தால் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப் பெற்றவராகவும் ஆக்குவாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

6091. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

உம்மு சுலைம்(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) 'இறைத்தூதர் அவர்களே! சத்தியத்தைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா? என்ற கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளிப்பது அவளின் மீது கடமைதான்.)'' என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்டு நான் சிரித்தவாறு, 'பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'பிறகு எவ்வாறு குழந்தை (தாயின்) சாயலில் பிறக்கிறது?' என்று கேட்டார்கள்.

6092. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களை நான் ஒருபோதும் ஒரேயடியாகத் தம் உள்நாக்குத் தெரியும் அளவுக்குச் சிரிக்கக் கண்டதில்லை. அவர்கள் (பெரும்பாலும்) புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.

6093. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது (கிராமவாசி) ஒருவர் வந்து, '(இறைத்தூதர் அவர்களே! மழை பொய்ந்துவிட்டது. (எங்களுக்கு) மழை வேண்டிய உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வானத்தை (அண்ணாந்து) பார்த்தார்கள். (அதில் மழை) மேகம் ஏதும் இருக்கவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் ஒன்றொடொன்று திரள ஆரம்பித்தது. பிறகு மழை பொழிந்தது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் (எல்லாம் நிரம்பி) வழிந்தோடின. இடையறாமல் அடுத்த ஜுமுஆ வரை அம்மழை நீடித்தது.

பிறகு 'அந்த மனிதர்' அல்லது 'வேறொரு மனிதர்' எழுந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஜுமுஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர், '(தொடர்) மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைவிட்டு மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்'' என்றார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப்புறங்களில்(உள்ள மானாவரி நிலங்கள், நீர்நிலைக்கு ஆகியவற்றுக்கு இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! என்று இரண்டு அல்லது மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள். அந்த(த் திரண்ட) மேகம் மதீனாவிலிருந்து (விலகி) வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றது. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தன்னுடன் தூதரின் மதிப்பையும் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு (நேரடியாகக்) காட்டினான்.

பகுதி 69

''இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும், வாய்மையாளர்களுடன் இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09:119 வது ) இறைவசனமும், பொய் தடை செய்யப்பட்டிருப்பதும்.

6094. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

6095. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று. பேசினால் பொய் சொல்வான்; வாக்களித்தால் மாறு செய்வான்; அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில் மோசடி செய்வான்)

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6096. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் இன்றிரவு (கனவில்) இருவரைப் பார்த்தேன். அவர்கள் என்னிடம் வந்து (என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று பல காட்சிகளைக் காட்டினார்கள். அவற்றில் ஒன்றுக்கு விளக்கமளிக்கையில்) 'தாடை சிதைக்கப்பட்ட நிலையில், நீங்கள் பார்த்தீர்களே அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச, அது அவரிடமிருந்து பரவி உலகம் முழுவதையும் அடையும். எனவே, (நீங்கள் பார்த்த) அந்தத் தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை கொடுக்கப்படும். என்று கூறினார்கள்.

என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

பகுதி 70

நன்னடத்தை

6097. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அசைவு(நடை), தோற்றம் (உடை), நடத்தை(பாவனை) ஆகிய அனைத்திலும் மக்களிலேயே மிகவும் ஒப்பானவர். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் தாம். (இப்னு உம்மி அப்த் எனப்படும் அவர்கள்) தம் இல்லத்திலிருந்து புறப்பட்டது முதல் வீடு திரும்பும் வரை (அவ்வாறு இருப்பார்கள்) தம் வீட்டாருடன் தனியாக இருக்கும்போது அவர்கள் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று எங்களுக்குத் தெரியாது.

(அறிவிப்பாளர்) இஸ்ஹாக் இப்னு இப்ராஹீம்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நான் அபூ உசாமா(ரஹ்) அவர்களிடம் 'இந்த ஹதீஸை அஃமஷ்(ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்கள்?' என்று கேட்டேன். (அதற்கு அவர்கள் 'ஆம்' என்றார்கள்.)

6098. தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் கூறினார்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள், 'உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். நடத்தையில் சிறந்தது முஹம்மத்(ஸல்) அவர்களின் நடத்தையாகும்'' என்று கூறினார்கள்.

பகுதி 71

மனவேதனையின்போது பொறுமை காப்பது.

அல்லாஹ் கூறினான்:

பொறுமையாளர்கள் தங்களின் பிரதிபலனை கணக்கின்றியே பெறுவார்கள். (திருக்குர்ஆன் 39:10)

6099. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு 'யாருமில்லை' அல்லது 'ஏதுமில்லை' மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். (இது அவனோ அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறான்.

என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

6100. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்'' என்று (அதிரப்தியுடன்) கூறினார்.

நான், 'நிச்சயம் (இதைப் பற்றி) நபி(ஸல்) அவர்களிடம் சொல்வேன்'' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் இதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி(ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அளித்தது. அவர்களின் முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்களிடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள், '(இறைத்தூதர்) மூஸா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக் கொண்டார்'' என்றார்கள்.

பகுதி 72

மக்களை நேருக்கு நேர் கண்டிக்(கத் தயங்கி முகத்தை முறிக்)காமலிருப்பது.

6101. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள். (மற்றவர்களுக்கும்) அதைச் செய்ய அனுமதி அளித்தார்கள். அப்போது ஒரு கூட்டத்தார் அதைச் செய்வதிலிருந்து தவிர்த்துகொண்டனர். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, 'சிலருக்கு என்ன நேர்ந்தது? நான் செய்கிற ஒன்றைச் செய்வதிலிருந்து தவிர்த்துகொள்கிறார்களாமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களைவிட அல்லாஹ்வை மிகவும் அறிந்தவன்; அவனை மிகவும் அஞ்சி நடப்பவன் ஆவேன்'' என்றார்கள்.

(சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகக் கண்டிக்கவில்லை.)

6102. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்துவிட்டால், அந்த வெறுப்பினை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துவிடுவோம்.

பகுதி 73

தகுந்த காரணமின்றி தம் சகோதரரை 'இறைமறுப்பாளர்' என்று கூறுகிறவர், அவர் தாம் அப்படி ஆவார்.

6103. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி 'காஃபிரே!'(இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

6104. 'ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரைப் பார்த்து காஃபிரே! (இறைமறுப்பாளனே!) என்று அழைத்தால் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

6105. 'இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார் எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார். இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.

பகுதி 74

தகுந்த காரணத்தினாலோ அறியாமையினாலோ அவ்வாறு (முஸ்லிமை 'இறைமறுப்பாளர்' என்று) கூறியவர் காஃபிராகி விடுவதில்லை எனக் கருதுவோரின் கூற்று.

உமர்(ரலி) அவர்கள், ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ(ரலி) அவர்களைப் பார்த்து, (அவர் முஸ்லிம்களின் இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரிவித்துக் கடிதம் எழுதிய போது) 'இவர் நயவஞ்சகர்'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(ஹாத்திப் பத்ருப் போரில் பங்கெடுத்தவர். எனவே, உமரே!) உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர் மன்னித்துவிட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம்'' என்று கூறினார்கள்.

6106. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ ஸலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு (நபி(ஸல்) அவர்களுடன் தொழுத) அதே தொழுகையைத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும்போது) அவர்களுக்கு (நீண்ட அத்தியாயமான) 'அல்பகரா' எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒருவர் (தனியாக விலகிச் சென்று) விரைவாகத் தொழுது(விட்டுத் தம் பணியைக் கவனிக்கச் சென்று)விட்டார். இச்செய்தி முஆத்(ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், 'அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்)'' என்றார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்களின் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுகை நடத்தியபோது (நீண்ட அத்தியாயமான) அல்பகராவை ஓதினார்கள். எனவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (முஆத்(ரலி) அவர்களிடம்), 'முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?' என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், '(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதும்!'' என்றும் சொன்னார்கள்.

6107. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) 'லாத்'தின் மீதும் 'உஸ்ஸா'வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்கு பரிகாரமாக) 'லாயிலாஹ இல்லல்லாஹு' (வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும். தம் நண்பரிடம், 'வா! சூது விளையாடுவோம்' என்று கூறுகிறவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6108. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்து கொண்டிருந்தபோது அவர்களை அடைந்தேன். அப்போது உமர்(ரலி) அவர்கள் தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களை அழைத்து, 'அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் தந்தையர் மீது சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துவிட்டான். சத்தியம் செய்யமுற்படுபவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது மௌனமாக இருந்துவிடட்டும்' என்று கூறினார்கள்.

பகுதி 75

இறை ஆணை(மீறப்பட்டது)க்காகக் கோபப்படுவதும் கடுமையாக நடந்து கொள்வதும் அனுமதிக்கப்பட்டதே.

அல்லாஹ் கூறினான்: நபியே! (உங்களுடன் போரிடும் இந்த) இறைமறுப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீங்களும் போரிடுங்கள்; அவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 66:09)

6109. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு) என்னிடம் வந்தார்கள். என் வீட்டில் உருவப் படங்கள் உள்ள திரைச் சீலை ஒன்றிருந்தது. (அதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தினால்) நிறமாறிவிட்டது. பிறகு அவர்கள் அந்தத் திரையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். மேலும் அவர்கள், 'மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடினமான வேதனைக்குள்ளாவோரில் இந்த உருவப் படங்களை வரைகிறவர்களும் அடங்குவர்'' என்றார்கள்.

6110. அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து. 'இறைத்தூதர் அவர்களே!) இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு (ஃபஜ்ருடைய ஜமாஅத்திற்கு)ச் செல்வதில்லை'' என்று கூறினார். இதைக் கேட்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆற்றிய உரையின்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் கடிமையாகக் கோபம் கொண்டதை கண்டேன். அப்போது அவர்கள், 'மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துகிறவர்களும் உங்களில் உள்ளனர். உங்களில் யாரேனும் மக்களுக்கு (தலைமையேற்றுத்) தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் நோயாளிகளும் முதியோரும் அலுவல் உடையோரும் இருக்கின்றனர்'' என்று கூறினார்கள்.

6111. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுது கொண்டிருக்கையில் பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (சுவரில் உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். அதனால் கோபமடைந்த அவர்கள் அதை (மட்டை ஒன்றினால்) தம் கரத்தாலேயே சுரண்டிவிட்டார்கள். பிறகு, 'நீங்கள் தொழுகையில் இருக்கும்போது இறைவன் உங்கள் எதிரே இருக்கிறான். எனவே, எவரும் தொழுகையில் இருக்கும்போது தம் முகத்துக்கு எதிரே உமிழ வேண்டாம்'' என்றார்கள்.

6112. ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (சாலையில்) கண்டெடுக்கும் பொருளைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஒரு வருட காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்! பிறகு, அதன் முடிச்சையும் அதன் பை(உறை)யையும் பாதுகாத்து வைத்திரு! பிறகு (யாரும் உரிமை கோராவிட்டால்) நீயே அதனைச் செலவழித்துக் கொள்! பின்னர் அதன் உரிமையாளர் உன்னிடம் (அதன் அடையாளத்தைக் கூறியபடி) வந்தால் அவரிடம் அதை ஒப்படைத்து விடு!'' என்றார்கள்.

அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! வழிதவறி (நம்மிடம் வந்து சேர்ந்து)விட்ட ஆட்டை என்ன செய்வது? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதை நீ பிடித்துக் கொள். ஏனெனில், அது உனக்கு உரியது; அல்லது உன் சகோதரருக்கு உரியது; அல்லது ஓநாய்க்குரியது'' என்றார்கள். அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! வழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது? என்று கேட்டார். (இதை அவர் கேட்ட) உடன் கோபத்தால் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரண்டு கன்னங்களும் சிவந்துவிட்டன' அல்லது 'அவர்களின் முகம் சிவந்துவிட்டது'. பிறகு 'உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதை அதன் எசமான் சந்திக்கும் வரை (நடப்பதற்கு) அதன் குளம்பும் (குடிப்பதற்கு) அதன் தண்ணீர் பையும் அதனிடம் உள்ளதே!'' என்று கேட்டார்கள்.

6113. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தின் ஓர் இரவில்) பாயினால் ஒரு சிறிய அறையை (பள்ளிவாசலில்) அமைத்துக் கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித்தோழர்களில்) சிலரும் வந்து நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களின் குரலை எழுப்பி (சப்தமிட்ட)னர். (நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களின் வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வந்து, '(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செய்ல தொடர்ந்து கொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்களின் மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (எனவேதான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தம் வீட்டிலேயே நிறைவேற்றுவது தான் சிறந்ததாகும்'' என்றார்கள்.

பகுதி 76

கோபத்தைத் தவிர்த்தல்

அல்லாஹ் கூறினான்:

(இறைவனையே முற்றிலும் நம்பியிருப்போர் எத்தகையோரெனில்,) அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற்குள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள். (திருக்குர்ஆன் 42:37)

மேலும், அல்லாஹ் கூறினான்:

(பயபக்தியாளர்கள் எத்தகையோரெனில்,) அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் தானம் செய்வார்கள். சினத்தை விழுங்கக் கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். (இத்தகைய) நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். (திருக்குர்ஆன் 03:134)

6114. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6115. சுலைமான் இப்னு ஸுரத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து விட்டிருக்கக் கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்'' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், நபி(ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா? என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்'' என்றார்.

6116. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு'' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர் (''அறிவுரை கூறுங்கள்'' எனப்) பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு'' என்றே சொன்னார்கள்.

பகுதி 77

நாணம்

6117. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ(ரஹ்) அவர்கள் கூறினார்:

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள், 'நாணம் நன்மையே தரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று கூறினார்கள். அப்போது புஷைர் இப்னு கஅப்(ரஹ்) அவர்கள், 'நாணத்தில் தான் கம்பீரம் உண்டு; நாணத்தில் தான் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது'' என்று கூறினார். அப்போது அவரிடம் இம்ரான்(ரலி) அவர்கள் 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏட்டில் உள்ளவை குறித்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே! என்று கேட்டார்கள்.

6118. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது தொடர்பாகத் தம் சகோதரரைக் கண்டித்துக் கொண்டிருந்தார். 'நீ (அதிகமாக) வெட்கப்படுகிறாய். (இதனால் உனக்கு வரவேண்டிய நன்மைகள் பாதிக்கப்படுகின்றன.) வெட்கத்தால் உனக்கு நஷ்டம் தான்'' என்பது போல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டுவிடு! நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்'' என்றார்கள்.

6119. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிகக் கூச்ச சுபாவம் உள்ளவர்களாய் இருந்தார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அபீ உத்பா(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 78

நாணம் இல்லையேல் நாடியதைச் செய்து கொள்.

6120. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மக்கள் முந்தைய இறைத்தூதர்களின் (முது) மொழிகளிலிருந்து அடைந்து கொண்ட ஒன்றுதான். 'உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள்'' என்பதும்.

என அபூ மஸ்ஊத் உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

பகுதி 79

மார்க்க உண்மைகளைக் கேட்டறிவதற்கு வெட்கப்படலாகாது.

6121. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

உம்மு சுலைம்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்புக் கடமையாகுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம், அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளிப்பு அவளின் மீது கடமைதான்)'' என்று பதிலளித்தார்கள்.

6122. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

''இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று உராய்வதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், 'அது இன்ன மரம்; அது இன்ன மரம் என்று கூறினார். அது பேரீச்சமரம் தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அது பேரீச்ச மரம்'' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இப்னு உமர்(ரலி) அவர்கள், 'நான் அது குறித்து என் தந்தை உமர்(ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள், 'நீ அதைச் சொல்லியிருந்தால் அது எனக்கு இன்ன இன்னவற்றை விட உகப்பானதாய் இருந்திருக்கும்'' என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

6123. ஸாபித் அல்புனானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

''ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கூறினார். அப்போது அந்தப் பெண் (மணந்துகொள்ள) தங்களுக்கு நான் தேவையா? என்று கேட்டார். என அனஸ்(ரலி) கூறினார். அப்போது அனஸ்(ரலி) அவர்களின் புதல்வியார் 'என்ன வெட்கங்கெட்டதனம்!'' என்று (ஆச்சரியத்துடன்) கேட்டதற்கு அனஸ்(ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரிடம் தன்னை மணந்து கொள்ளும்படி கோரிய அந்தப் பெண் உன்னைவிடச் சிறந்தவராவார்'' என்றார்கள்

பகுதி 80

''(மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; சிரமப்படுத்தாதீர்கள்'' எனும் நபிமொழி.

நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிதையும் சுலபத்தையும் விரும்பி வந்தார்கள்.

6124. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் ('விடைபெறும்' ஹஜ்ஜுக்க முன்பு யமன் நாட்டுக்கு) அனுப்பியபோது எங்கள் இருவரிடமும், 'மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள் (பிளவு பட்டுவிடாதீர்கள்)'' என்றார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (பிறந்தகமான) யமன் நாட்டில் தேனில் 'அல்பித்உ' எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் 'மிஸ்ர்' என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டதாகும்.'' என்று பதிலளித்தார்கள்.

6125. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

6126. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்வு செய்து கொள்ளும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் அதிலிருந்து (விலகி) வெகு தொலைவில் நிற்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்காக எதிலும் (யாரையும்) ஒரு பேதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக அல்லாஹ்வின் சார்பாகத் தண்டிக்க வேண்டுமென்று இருந்தலே தவிர (அப்போது மட்டும் பழிவாங்குவார்கள்.)

6127. அஸ்ரக் இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நாங்கள் (ஈரானிலுள்ள) 'அஹ்வாஸ்' எனுமிடத்திலிருக்கும் ஓர் ஆற்றங் கரையில் இருந்து கொண்டிருந்தோம். அதில் தண்ணீர் வற்றிப் போயிருந்தது. அப்போது அபூ பர்ஸா அல் அஸ்லமீ(ரலி) அவர்கள் குதிரை யொன்றில் வந்து (இறங்கி) அந்தக் குதிரையை அவிழ்த்துவிட்டுத் தொழுதார்கள். அப்போது அந்தக் குதிரை நடக்கலாயிற்று. உடனே அபூ பர்ஸா(ரலி) அவர்கள் தங்களின் தொழுகையை விட்டுவிட்டு குதிரையைப் பின்தொடர்ந்து சென்று, அதை அடைத்து பிடித்தார்கள். பிறகு வந்து தம் தொழுகையை நிறைவு செய்தார்கள்.

எங்களிடையே (மாறுபட்ட) சிந்தனை கொண்ட (காரிஜிய்யாக்களில்) ஒருவர் இருந்தார். அவர், 'ஒரு குதிரைக்காகத் தம் தொழுகையையே விட்டுவிட்ட இந்த முதியவரைப் பாருங்கள்'' என்று கூறியவாறு (சபித்தவராக) முன்னோக்கி வந்தார். உடனே அபூ பர்ஸா(ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பிரிந்ததிலிருந்து என்னுடன் யாரும் (இவ்வளவு) கடுமையாக நடந்து கொண்டதில்லை. என்னுடைய இல்லம் தொலைவில் உள்ளது. நான் (என்னுடைய குதிரையை)விட்டுவிட்டு தொழுது கொண்டிருந்தால் (அது எங்காவது போய்விடும். பிறகு) நான் என் வீட்டாரிடம் இரவு வரை போய்ச் சேர முடியாது'' என்று கூறினார்கள். மேலும், தாம் நபி(ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்ததாகவும் அப்போது நபி(ஸல்) அவர்கள் (எதிலும்) எளிதாக நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்கள்.

6128. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு கிராமவாசி மஸ்ஜிது(ந் நபவீ பள்ளி வாசலு)க்குள் சிறுநீர் கழித்துவிட்டார். அவரைத் தாக்குவதற்காக அவரை நோக்கி மக்கள் குதித்தெழுந்தனர். அப்போது மக்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றி விடுங்கள். (எப்போதும்) நளினமாக நடந்து கொள்ளவே நீங்கள் அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக நடந்து கொள்ள நீங்கள் அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள்.

பகுதி 81

மக்களுடன் மலர்ச்சியாகப் பழகுவதும் குடும்பத்தாருடன் நயமாக நடந்து கொள்வதும்.

இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்: மக்களுடன் (இனிமையாகப்) பழகு; (அதே நேரத்தில்) உன் மார்க்கத்தைக் காயப்படுத்தி விடாதே.

6129. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள்.

6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

பகுதி 82

மக்களுடன் கனிவாகப் பேசுவது

''சிலருக்கு முன்னால் நாங்கள் (மனித நேய அடிப்படையில்) சிரித்துப் பேசுவோம். ஆனால், (அவர்களின் தீய செயல்களால்) அவர்களை எங்கள் மனம் சபித்துக் கொண்டிருக்கும்'' என அபுத்தர்தா(ரலி) கூறினார் எனச் சொல்லப்படுகிறது.

6131. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (எங்கள் வீட்டுக்குள் நுழைய) நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடுங்கள்; (இவர்) அந்தக் கூட்டத்தாரிலேயே (மிக) மோசமானவர்'' என்றார்கள். (வீட்டுக்குள்) அவர் வந்தபோது (எல்லாரிடமும் பேசுவது போல்) அவரிடமும் கனிவாகப் பேசினார்கள். (அவர் சென்றதும்) நான், 'இறைத்தூதர் அவர்களே அந்த மனிதரைப் பற்றித் தாங்கள் ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆயிஷா! மக்கள் யாருடைய அருவருப்பான பேச்சுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக அவரிடமிருந்து ஒதுங்குகிறார்களோ அவரே இறைவனிடம் அந்தஸ்தில் மிகவும மோசமானவர்'' என்று கூறினார்கள்.

6132. அப்துல்லாஹ் இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அவற்றை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து ஒன்றை மக்ரமா இப்னு நவ்ஃபல்(ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்த வைத்தார்கள். மக்ரமா(ரலி) அவர்கள் வந்தபோது நபி(ஸல்) அவர்கள் (அந்த அங்கியுடன் வந்து) 'உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன்'' என்றார்கள்.

அய்யூப்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அந்த ஆடையை எடுத்து வந்து அவரிடம் காட்டியவாறு'' என்றும், 'மக்ரமா(ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது'' என்றும் கூறப்பெற்றுள்ளது.

ஹாத்திம் இப்னு வர்தான்(ரஹ்) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன'' என்று மிஸ்வர்(ரலி) அவர்களிடமிருந்தே (அறிவிப்பாளர் தொடர் முறிவுறாமல் முத்தஸிலாக) அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 83

இறை நம்பிக்கையாளர் ஒரே புற்றில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.

முஆவியா(ரலி) அவர்கள், 'அனுபவசாலியே அறிவாளியாவார்'' என்றார்கள்.

6133. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இறைநம்பிக்கையாளர் ஒரே புறத்தில் இரண்டு முறை தீண்டப்படமாட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 84

விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமை

6134. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'நீர் இரவெல்லாம் நின்று வணங்குவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டதே! (அது உண்மைதானா?) என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று பதிலளித்தேன். (அதற்கு) நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறு செய்யாதீர்! (சிறிது நேரம்) தொழுவிராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! (சில நாள்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாள்கள் நோன்பை விட்டுவிடுவீராக! ஏனெனில், உம்முடைய உடலுக்கச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம்முடைய கண்ணிற்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச் செய் வேண்டிய கடமையும் உமக்கு உண்டு. உம்முடைய வயது நீளக்கூடும். (அப்போது உம்மால் தொடர் நோன்பும் தொடர் வழிபகுதி சாத்தியப் படாமல் போகலாம். எனவே) ஒவ்வொரு மாதமும் (ஏதேனும்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும். ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அது போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில்) மூன்று நாள்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோற்றதற்குச் சமமாகும்.) எனவே, இது காலமெல்லாம் நோற்றதாக அமையும்'' என்று கூறினார்கள்.

ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால் என் மீது சிரமம் சுமத்தப்பட்டது. நான் '(இறைத்தூதர் அவர்களே!) இதற்கு மேலும் என்னால் முடியும்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் வாரத்திற்கு மூன்று நோன்பு நோற்றுக் கொள்க'' என்றார்கள். நான் (மறுபடியும்) சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன். அதனால் என் மீது சிரமம் சுமத்தப்பட்டது. 'இதற்கு மேலும் என்னால் முடியும் (இறைத்தூதர் அவர்களே!)'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் இறைத்தூதர் தாவூத் அவர்கள் நோற்றவாறு நோன்பு நோற்றுக் கொள்வீராக'' என்றார்கள். 'இறைத் தூதர் தாவூத் அவர்களின் நோன்பு எது?' என்று கேட்டேன். '(ஒரு நாள்விட்டு ஒரு நாள் நோற்பதால்) ஆண்டில் பாதி நாள்கள் நோற்பதாகும்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 85

விருந்தினரைக் கண்ணியப்படுத்துவதும் தாமே அவர்களுக்குப் பணிவிடை செய்வதும்.

அல்லாஹ் கூறினான்:

இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்;

'விருந்தினர்' என்பதை (அரபியில்) 'ஸவ்ர்' என்றும், 'ளைஃப்' என்றும் கூறுவர். வேர்ச் சொல்லான இது ஒருமை, பன்மை அனைத்துக்கும் பொருந்தும், 'ரிழா' (திருப்தி) 'அத்ல்' (நீதி) ஆகிய சொற்களைப் போல் ஃகவ்ர் (வற்றுதல்) எனும் சொல், ஆண்பால், (மாஉ-தண்ணீர்), பெண்பால் (பிஃர்-கிணறு) ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்து நிலைகளுக்கும் பொருந்தும்.

6135. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும் (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று.

என அபூ ஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில், 'அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்'' என்று அதிகபட்சமாக இடம் பெற்றுள்ளது.

6136. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6137. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எங்களை ஒரு சமூகத்தாரிடம் அனுப்பி வைக்கிறீர்கள். நாங்களும் (அங்கு) சென்று அவர்களிடம் தங்குகிறோம். ஆனால், அவர்கள் எங்களை உபசரிக்க மறுக்கின்றனர்கள். அவ்வாறெனில், அது குறித்து தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?' என்று கேட்டோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம், 'நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் செல்ல, அவர்கள் விருந்தினர்களுக்கு வேண்டிய வசதிகளை உங்களுக்குச் சய்து தர ஏற்பாடு செய்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படிச் செய்யவில்லையென்றால் அவர்களிடமிருந்து விருந்தினர்களான உங்களுக்குத் தேவையான விருந்தினர் உரிமையை (நீங்களே) எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று பதிலளித்தார்கள்.

6138. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 86

விருந்தினருக்காக உணவு தயாரிப்பதும் அவர்களுக்காகச் சிரமமெடுத்துக் கொள்வதும்.

6139. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

சல்மான் அல்ஃபார்சீ(ரலி) அவர்களையும் அபுத்தர்தா(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒப்பந்தச்) சகோதரர்களாக ஆக்கினார்கள். எனவே, சல்மான்(ரலி) அவர்கள் அபுதர்தா(ரலி) அவர்களை (அவரின் இல்லத்திற்குச் சென்று) சந்தித்தார்கள். அப்போது (அபுத்தர்தாவின் துணைவியார்) உம்முத் தர்தா(ரலி) அவர்களை அழுக்கடைந்த ஆடையுடன் சல்மான் கண்டார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அதற்கு உம்முத் தர்தா, 'உங்கள் சகோதரர் அபுத்தர்தாவிற்கு உலகமே தேவையில்லை போலும்'' என்றார். பிறகு, அபுத்தர்தா(ரலி) அவர்கள் வந்து சல்மான்(ரலி) அவர்களுக்காக உணவு தயார் செய்தார்கள். பிறகு 'சல்மானே! நீங்கள் சாப்பிடுங்கள்! நான் (நஃபில்) நோன்பு நோற்றுள்ளேன்'' என்றார்கள். அபுத்தர்தா அதற்கு சல்மான்(ரலி) அவர்கள், 'நீங்கள் சாப்பிடாத வரை நான் சாப்பிடமாட்டேன்'' என்றார்கள். எனவே, (சல்மானுடன்) அபுத்தர்தா(ரலி) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) நிற்கப் போனார்கள்.

அப்போது சல்மான்(ரலி) அவர்கள், 'தூங்குங்கள்'' என்றார்கள். எனவே, அபுத்தர்தா(ரலி) அவர்கள் தூங்கிவிட்டார்கள். பிறகு, தொழுவதற்காக எழுந்தார்கள். அப்போதும் சல்மான்(ரலி) அவர்கள், 'தூங்குங்கள்'' என்றார்கள்.

இரவின் கடைசி நேரம் ஆனதும் சல்மான்(ரலி) அவர்கள் 'இப்போது எழுங்கள்'' என்றார்கள். பிறகு அவர்கள் இருவரும் தொழுதார்கள். அப்போது சல்மான்(ரலி) அவர்கள் அபுத்தர்தா(ரலி) அவர்களிடம், 'உங்களுடைய இறைவனுக்காகச் செய்ய வேண்டிய கடமைகள் உங்களுக்கு உள்ளன. மேலும், உங்கள் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. உங்கள் குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உங்களுக்கு உள்ளன. எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவருக்குச் சேர வேண்டிய உரிமைகளை வழங்குங்கள்'' என்று கூறினார்கள். பின்னர் அபுத்தர்தா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் சென்று (சல்மான் அவர்கள் தமக்குச் சொன்னதை) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'சல்மான் உண்மையே சொன்னார்'' என்றார்கள்.

அபூ ஜுஹைஃபா வஹ்புஸ் ஸுவாஈ(ரலி) அவர்களுக்கு 'வஹ்புல் கைர்' என்றும் பெயர் சொல்லப்படுகிறது.

பகுதி 87

விருந்தினரிடம் கோபத்தையும் பதற்றத்தையும் வெளிப்படுத்துவது வெறுக்கப்பட்டதாகும்.

6140. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (மூன்று பேர் கொண்ட) ஒரு குழுவினர் விருந்தினராக வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் என்னிடம், 'உன் விருந்திரைக் கவனித்துக் கொள். நான் நபி(ஸல்) அவர்களிடம் செல்கிறேன். நான் வருவதற்கு முன் அவகளை விருந்துண்ணச் செய்துவிடு'' என்று கூறினார்கள். நான் சென்று, எங்களிடமிருந்த உணவை அவர்களிடம் கொண்டு வந்து, 'உண்ணுங்கள்!'' என்றேன். அதற்கு அவர்கள், 'வீட்டுக்காரர் எங்கே?' என்று கேட்டனர். நான் அவர்களிடம், 'நீங்கள் உண்ணுங்கள்'' என்றேன். அவர்கள் 'வீட்டுக்காரர் வரும் வரை நாங்கள் சாப்பிட மாட்டோம்'' என்று கூறினர்.

அதற்கு 'நான் அளிக்கும் விருந்தை ஏற்று உண்ணுங்கள். ஏனெனில், நீங்கள் உண்ணாத நிலையில் என் தந்தை வந்துவிட்டால் அவர்கள் நம்மைக் கண்டிப்பார்கள்'' என்றேன். ஆனால், அவர்கள் (சாப்பிட) மறுத்துவிட்டார்கள். மேலும், அபூ பக்ர்(ரலி) அவர்கள் வந்தால் என் மீது கோபப்படுவார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். என் தந்தை வந்தபோது நான் அவர்களிடமிருந்து விலகி (ஒளிந்து) கொண்டேன். அவர்கள் 'விருந்தாளிகளுக்கு) என்ன செய்தீர்கள்?' என (வீட்டாரிடம்) கேட்டார்கள். அவர்கள் நடந்ததைத் தெரிவித்தார்கள். அப்போது என் தந்தை, 'அப்துர் ரஹ்மானே!'' என்று கூப்பிட்டார்கள். நான் (பயத்தினால் பதிலளிக்காமல்) மௌனமாயிருந்தேன். பிறகு 'அப்துர் ரஹ்மானே!'' என்று (மீண்டும்) கூப்பிட்டார்கள். நான் (அப்போதும்) மௌனமாயிருந்தேன். பிறகு (மூன்றாம் முறை) 'அறிவில்லாதவனே! உன் (இறைவன்) மீது சத்தியம் செய்கிறேன். என் குரல் உனக்குக் கேட்குமானால் நீ வந்ததாக வேண்டும்'' என்றார்கள். உடனே நான் வெளியே வந்தேன். 'தங்கள் விருந்தினரிடமே கேளுங்கள்'' என்றேன். அப்போது விருந்தினர், 'அவர் எங்களிடம் உணவைக் கொண்டு வந்தார். (நாங்கள் தாம் ஏற்றுக் கொள்ளவில்லை)'' என்றனர். என் தந்தை, 'என்னைத்தானே எதிர்பார்த்தீர்கள்? அல்லாஹ்வின் மீதானையாக! (இவ்வளவு தாமதத்திற்குக் காரணமாகிவிட்ட) நான் இன்றிரவு சாப்பிடப் போவதில்லை'' என்றார்கள். மற்றவர்களோ 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சாப்பிடாத வரை நாங்களும் சாப்பிட மாட்டோம்'' என்று கூறினர். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'இன்றிரவைப் போன்று ஒரு தர்மசங்கடமான இரவை நான் கண்டதில்லை'' என்று கூறிவிட்டு, 'உங்களுக்கு என்ன கேடு'' எங்கள் விருந்தை ஏன் நீங்கள் ஏற்க மறுக்கிறீர்கள்? (அப்துர் ரஹ்மானே!) உன் உணவைக் கொண்டு வா!'' என்றார்கள். நான் கொண்டு வந்தேன். அதில் என் தந்தை தம் கையை வைத்து 'அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம்) (நான் உண்ண மாட்டேன் எனச் சத்தியம் செய்த) முதல் நிலை ஷைத்தானினால் விளைந்தது'' என்றார்கள். பிறகு அவர்களும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.

பகுதி 88

விருந்தாளி தம் தோழரிடம் 'நீங்கள் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்'' என்று கூறுவது.

இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் வந்துள்ளது.

6141. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் 'தம் விருந்தாளியுடன்' அல்லது 'தம் விருந்தினருடன்' (எங்கள் வீட்டிற்கு) வந்தார்கள்.

பிறகு மாலையில் (இஷாத் தொழும் வரை) நபி(ஸல்) அவர்களிடம் இருந்தார்கள். பிறகு அவர்கள் (திரும்பி) வந்தபோது என் தாயார் (உம்மு ரூமான்) 'இன்றிரவு தங்கள் 'விருந்தாளியை' அல்லது 'விருந்தினரை' இங்கேயே (காத்து) இருக்கும்படி செய்து விட்டீர்களே!'' என்று கேட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'அவர்களுக்கு நீ இரவு சாப்பாடு கொடுக்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு என் தாயார் 'நான் 'இவரிடம்' அல்லது 'இவர்களிடம்' சப்பிடச் சொன்னேன். ஆனால் 'இவர்' அல்லது 'இவர்கள்' (சாப்பிட) மறுத்துவிட்டனர்'' என்று கூறினார்கள். இதனால் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள்; ஏசினார்கள்; 'உன் மூக்கறுந்து போக'' என (என்னை)த் திட்டினார்கள். மேலும், தாம் சாப்பிடப்போவதில்லை எனச் சத்தியம் செய்தார்கள். நான் ஒளிந்து கொண்டேன். அப்போது அவர்கள், 'அறிவில்லாதவனே!'' என்று (என்னை) அழைத்தார்கள். 'என் தந்தை சப்பிடாமல் தாமும் சாப்பிடப் போவதில்லை என்று என் தாயாரும் சத்தியம் செய்தார்கள். என் தந்தை சாப்பிடாதவரை தாங்களும் சாப்பிடப்போவதில்லை என 'விருந்தாளி' அல்லது 'விருந்தாளிகளும்' சத்தியம் செய்தனர். அப்போது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் 'இந்த நிலை ஷைத்தானால் ஏற்பட்டுவிட்டது போலும்'' என்று கூறிவிட்டு உணவு கொண்டு வரச்சொல்லி தாமும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.

அவர்கள் ஒவ்வொரு கவளம் உணவு எடுக்கும் போதும் அதன் கீழ் பகுதியிலிருந்து (உணவு) அதிகமாகிக் கொண்டே இருந்தது. அப்போது என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), 'பனூ ஃபிராஸ் குலத்தவளே! இது என்ன (பெருக்கம்)?' என்று கேட்டார்கள். என் கண் குளிர்ச்சியின் மீது சத்தியமாக! நாம் சாப்பிடுவதற்கு முன்னால் இருந்ததை விட இப்போது (மும்மடங்கு) கூடுதலாக உள்ளதே!'' என்று கூறினார்கள். பிறகு அனைவரும் சாப்பிட்டோம். அந்த உணவை நபி(ஸல்) அவர்களுக்கும் கொடுத்தனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்களும் அதைச் சாப்பிட்டார்கள்.

பகுதி 89

வயதில் மூத்தவருக்கு மரியாதை செய்வதும், வயதில் மூத்தவரே முதலில் பேசவும் கேள்வி கேட்கவும் தொடங்குவதும்.

6142,6143 ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களும் ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்களும் கூறினார்கள்:

அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் முஹய்யிஸா இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களும் (பேரீச்சம் பழம் கொள்முதல் செய்வதற்காகச் சென்ற தம் தோழர்களைத் தேடி) கைபருக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பேரீச்சந் தோப்புக்குள் பிரிந்துவிட்டனர். பின்னர் அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டார்கள். எனவே, (கொல்லப்பட்டவரின் சகோதரரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களும் ஹுவய்யிஸா இப்னு மஸ்ஊத்(ரலி) முஹய்யிஸா இப்னு மஸ்ஊத்(ரலி) ஆகியோரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (கொல்லப்பட்ட) தங்கள் நண்பரைக் குறித்துப் பேசினார்கள். அப்போது அப்துர் ரஹ்மானே (பேச்சைத்) தொடங்கினார். அவர் அந்த மூவரில் வயதில் சிறியவராக இருந்தார். எனவே நபி(ஸல்) அவர்கள் '(வயதில்) மூத்தவரை முதலில் பேசவிடு'' என்றார்கள்.

-யஹ்யா இப்னு ஸயீத் அல்அன்சாரி(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'வயதில் பெரியவர், பேசும் பொறுப்பை ஏற்கட்டும்'' என்று இடம் பெற்றுள்ளது.

எனவே, (வயதில் மூத்தவர்களான) ஹுவய்யிஸாவும் முஹய்யிஸாவும் தம் (கொல்லப்பட்ட) நண்பர் குறித்துப் பேசினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(யூதர்களே ஜம்பது பேர் சத்தியம் (கஸாமத்) செய்வதன் மூலம் 'உங்களில் கொல்லப்பட்டவர்' அல்லது 'உங்கள் நண்பரின் உயிரீட்டுத் தொகையை நீங்கள் பெற்றுக் கொள்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கண்ணால் காணாத விஷயமாயிற்றே! (எவ்வாறு நாங்கள் சத்தியம் செய்வது?)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால், (பிரதிவாதிகளான) யூதர்களில் ஐம்பது பேர் (தாங்கள் கொலை செய்யவில்லை என்று) சத்தியம் செய்து உங்களை(ச் சத்தியம் செய்வதிலிருந்து) விடுவிக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! (யூதர்கள்) இறைமறுப்பாளர்களான கூட்டமாயிற்றே! (அவர்களின் சத்தியத்தை எப்படி ஏற்க முடியும்?)'' என்று கேட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களே (கொல்லப்பட்டவருக்கான உயிரீட்டுத் தொகையைக்) கொல்லப்பட்டவரின் உறவினர்களுக்குத் தம் சார்பாக வழங்கினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(நபி(ஸல்) அவர்கள் ஈட்டுத் தொகையாக வழங்கிய) அந்த ஒட்டகங்களில் ஒன்றை கண்டேன். அது அவர்களின் ஒட்டகத் தொழுவத்திற்குள் நுழைந்தது. அது தன்னுடைய காலால் என்னை உதைத்துவிட்டது.

யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அவர்களுடன் (தாமும் அந்த ஒட்டகத்தைக் கண்டதாக) ஸஹ்ல்(ரலி) கூறினார் எனவே எண்ணுகிறேன்'' என்று இடம் பெற்றுள்ளது.

புஷைர் இப்னு யஸார்(ரஹ்) அவர்களிடமிருந்து யஹ்யா(ரஹ்) அவர்கள் வழியாக வந்துள்ள மற்றோர் அறிவிப்பில் ஸஹ்ல்(ரலி) அவர்கள் மட்டும் இதை அறிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. (ராஃபிஉ இப்னு கதீஜ் ரலி) அவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை.

6144. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒரு மரத்தைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அதன் நிலை ஒரு முஸ்லிமின் நிலைக்குச் சமமாகும். அந்த மரம் தன் அதிபதியின் ஆணைக்கேற்ப எல்லா நேரங்களிலும் கனி தருகிறது. அதன் இலை உதிர்வதில்லை. (அது எந்த மரம்?)'' என்று கேட்டார்கள். என் மனத்தில் அது பேரீச்சம் மரம் தான் என்று தோன்றியது. ஆயினும், (அதைப் பற்றிப்) பேச நான் விரும்பவில்லை. அங்கு (மூத்தவர்களான) அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் (ஏதும் பேசாமல்) இருந்தார்கள். அவர்கள் பேசாமலிருக்கவே, நபி(ஸல்) அவர்கள், 'அது பேரீச்ச மரம் தான்'' என்றார்கள். நான் என் தந்தை(உமர்(ரலி) அவர்களுடன் வெளியில் வந்தபோது, 'தந்தையே! அது பேரீச்ச மரம்தான் என்று என் மனத்தில் தோன்றியது'' என்றேன். அவர்கள், ஏன் அதை நபி(ஸல்) அவர்களிடம் நீ சொல்லவில்லை? நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்னதை விட எனக்கு மிகவும் விருப்பமனாதாய் இருந்திருக்குமே! என்றார்கள். தாங்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் பேசாமல் இருந்ததைக் கண்டதாலேயே நான் (அது குறித்துப் பேச) விரும்பவில்லை'' என்றேன்.

பகுதி 90

கவிதை, யாப்பிலக்கணப் பாடல் (ரஜஸ்), ஒட்டகப் பாட்டு (ஹுதாஃ) ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டதும் வெறுக்கப்பட்டதும்.

அல்லாஹ் கூறினான்:

இன்னும் அந்தக் கவிஞர்கள் (எத்தகையோரென்றால்), அவர்களை வழிகேடர்கள் தாம் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (பாதையிலும்) அலைந்து திரிவதை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை(ச் செய்ததாக) அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்து தங்களுக்கு (வசைப்பாடல் மூலம்) அநீதியிழைக்கப்பட்ட பின்னர் (அதற்குப்) பதிலடி தருகிறார்களோ அவர்களைத் தவிர, அநீதியிழைத்தவர்கள், தாம் எந்த நிலைக்கு ஆளாவார்கள் என்பதை விரைவில் அறிந்து கொள்வார்கள். (திருக்குர்ஆன் 26: 224 - 227)

(திருக்குர்ஆன் 26: 225 வது வசனத்திலுள்ள) 'அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிகிறார்கள்'' என்பதற்கு 'எல்லா வீண் வேலைகளிலும் அவர்கள் மூழ்குவார்கள் என்று பொருள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் விவரித்தார்கள்.

6145. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நிச்சயமாகக் கவிதையிலும் ஞானம் (ஹிக்மத்) உண்டு.

என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

6146. ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு போரின் போது) நடந்து கொண்டிருக்கையில் அவர்களுக்குக் (காலில்) கல் பட்டுவிட்டது. இதனால் அவர்களின் (கால்) விரலில் (காயமேற்பட்டு) இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள்,

''நீ சொட்டுகிற ஒரு விரல்தானே!

நீ பட்டதெல்லாம் இறைவழியில் தானே!''

என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள்.

6147. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல், (கவிஞர்) லபீத் இப்னு ரபீஆ சொன்ன (''அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' எனும் சொல்தான். (கவிஞர்) உமய்யா இப்னு அபிஸ் ஸல்த் (தம் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்துவிட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6148. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சொன்று கொண்டிருந்தபோது மக்களிடையேயிருந்த ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம், 'உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?' என்று கூறினார்.

ஆமிர்(ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி மக்களுக்காகப் (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள்.

''இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்கமாட்டோம்; தர்மம் செய்திருக்கவுமாட்டோம்; தொழுதிருக்கவுமாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம்; உன் வழியைப் பின்பற்றும் வரை எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க்களத்தில் எதிரியைச்) சந்திக்கும்போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்களின் மீது அமைதியைப் பொழிவாயாக! (அறவழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்துவிடுவோம். எங்களிடம் மக்கள் (அபயக்) குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்)'' என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போன்று பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடலாயின.)

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'யார் இந்த ஒட்டகவோட்டி?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆமிர் இப்னு அக்வஃ'' என்று பதிலளித்தனர். அப்போது, 'அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்தப் பிரார்த்தனையின் பொருள் புரிந்த) ஒருவர், 'இறைத்தூதரே! (ஆமிருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகிவிட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார்.

பிறகு, நாங்கள் கைபருக்கு வந்து கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அதன் பிறகு (யூதர்களான) அவர்களுக்கெதிராக அல்லாஹ் (எங்களுக்கு) வெற்றியளித்தான். அவர்கள் வெற்றி கொள்ளப்பட்ட அன்றைய மாலை நேரத்தில் மக்கள் (ஆங்காங்கே) அதிகமாக நெருப்பு மூட்டினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன நெருப்பு?' எதற்காக (இதை மூட்டியிருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 'இறைச்சி சமைப்பதற்காக'' என்று மக்கள் பதிலளித்தனர்.

''எந்த இறைச்சி?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'நாட்டுக் கழுதைகளின் இறைச்சி'' என்று மக்கள் கூறினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அவற்றைக் கொட்டிவிட்டு அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைச்சிகளைக் கொட்டிவிட்டு அதன் பாத்திரங்களை நாங்கள் கழுவி (வைத்து)க் கொள்ளலாமா?' என்று கேட்டார். 'அப்படியே ஆகட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்றபோது (என் தந்தையின் சகோதரர்) ஆமிர்(ரலி) அவர்களின் வாள் குட்டையானதாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனை வெட்டப் போனபோது அன்னாரின் வாளின் மேற்பகுதி அன்னாரின் முழங்காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள். (கைபரை வென்று, மதீனா நோக்கி) மக்கள் திரும்பியபோது (நிகழ்ந்தவற்றை) ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(கவலையினால்) நிறம் மாறிப்போயிருந்த என்னைப் பார்த்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் அவர்களின் நற்செயல்கள் அழிந்துவிட்டன. (அவர் தம் வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்தார்) என மக்கள் கூறுகிறார்கள்'' என்று சொன்னேன். அதற்கு (நபி(ஸல்) அவர்கள் 'யார் இதைச் சொன்னவர்?' என்று கேட்டார்கள். 'இதை இன்னாரும் இன்னாரும் உசைத் இப்னு ஹுளர் அல் அன்சாரி அவர்களும் கூறினர்'' என்றேன். (இதை கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இதைக் கூறியவர் உண்மைக்குப் புறம்பாகக் கூறிவிட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, புனிதப் போரில் பங்குகொண்ட நன்மையென) இரண்டு நன்மைகள் உண்டு'' என்று கூறியவாறு தம்மிரு விரல்களையும் அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) 'அவர் துன்பங்களைத் தாங்கினார். (இறைவழியில்) புனிதப் போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்த) இவரைப் போன்ற அரபிகள் பூமியின் பிறப்பது அரிது'' என்றார்கள்.

6149. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) தம் துணைவியர் சிலரிடம் சென்றார்கள். (அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் அத்துணைவியருடன் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஒட்டகவோட்டியிடம்) 'உமக்கு நாசம்தான். அன்ஜஷா! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் (தம்முடன் இருந்த இராக்கியரிடம்) கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை கூறினார்கள். உங்களில் ஒருவர் அதைச் சொல்லியிருந்தால் (இங்கிதம் தெரியாத நீங்கள்) அதற்காக அவரை(க் கேலி செய்து) விளையாடியிருப்பீர்கள். 'நிதானமாக ஓட்டிச் செல். கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே'' என்பது தான் அந்த வார்த்தை.

பகுதி 91

இணைவைப்பாளர்களைத் தாக்கிப் பாடுதல்

6150. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இணைவைப்பாளர்களைத் தாக்கி வசைக் கவி பாட (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'குறைஷியரான அவர்களுடன் பின்னிப் பிணைந்துள்ள) என் வமிசப் பரம்பரையை என்ன செய்வாய்?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான்(ரலி) அவர்கள், 'குழைத்த மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போன்று தங்களை(யும் தங்கள் வமிச் பரம்பரையையும் வசையிலிருந்து) உருவியெடுத்துவிடுவேன்'' என்ற பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை (அவதூறு பரப்புவதில் சம்பந்தப்பட்டதால்) ஏசிக் கொண்டே போனேன். அப்போது அவர்கள், 'அவரை ஏசாதே! ஏனெனில், அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக (இணைவைப்பவர்களைத் தாக்கி) பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார்'' என்றார்கள்.

6151. ஹைஸம் இப்னு அபீ சினான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் தங்களின் பேச்சுக்கிடையே நபி(ஸல்) அவர்களப் பற்றிக் குடிப்பிட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர். (நபி(ஸல்) அவர்களைப் பராட்டிய பின்வருமாறு) அவர் பாடினார் என்றார்கள்:

எங்களிடையே இறைத்தூதர் இருக்கிறார்கள். வைகறை பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்; குருட்டுத்தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காண்பித்தார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன். இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் அழுந்திக் கிடக்கும்போது இவர்கள் படுக்கையிலுருந்து எழுந்து தொழுவார்கள்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

6152. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம், 'அபூ ஹுரைரா! இறைத்தூதர் சார்பாக (எதிரிகளுக்குக் கவிதைகளின் மூலம்) பதிலடி கொடுப்பீராக. இறைவா! தூய ஆன்மா(ஜிபிரீல்) மூலம் ஹஸ்ஸானை வலுப்படுத்துவாயாக! என்று கூறியதை நீங்கள் செவியுற்றீர்கள் அல்லவா?' என்று விவரம் கேட்டார்கள்.

அதற்கு அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், 'ஆம்'' என்று பதிலளித்தார்கள்.

6153. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பனூகுறைழா போரின்போது, கவிஞர்) ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், 'எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். (வானவர்) ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்'' என்று கூறினார்கள்.

பகுதி : 92

இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது வெறுக்கப்பட்டதாகும்.

6154. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒருவரின் வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதவிடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6155. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு மனிதரின் வயிற்றில் புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, அது கவிதையால் நிரம்பியிருப்பதை விட மேலானதாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 93

'உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும் 'அல்லாஹ் (அவளுடைய கழுத்தை) அறுக்கட்டும்', 'அவளுக்குத் தொண்டை வலி வரட்டும்' ஆகிய வார்த்தைகளை நபி(ஸல்) அவர்கள் (செல்லமாகப்) பயன்படுத்தியது.

6156. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்ற பிறகு, என் வீட்டினுள் வர அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ்(ரலி) அவர்கள் அனுமதி கோரினார்கள். அப்போது நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்கும் வரை( உள்ளே வர) அனுமதிக்க மாட்டேன். ஏனெனில், அபுல் குஜஸின் சகோதரர் (அஃப்லஹ்) எனக்குப் பாலூட்டியவர் அல்லர். மாறாக, அபுல்குஜஸ் அவர்களின் மனைவியே எனக்குப் பாலூட்டினார்'' என்றேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! இந்த மனிதர் எனக்குப் பாலுட்டியவர் அல்லர். மறாக, இவருடைய (சகோதரரின்) மனைவியே எனக்குப் பாலூட்டினார்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு (உள்ளே வர) அனுமதி கொடு! ஏனெனில், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கை மண்ணைக் கவ்வட்டும்'' என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இதனால்தான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்கள், 'இரத்த உறவினால் மணமுடிக்கத் தடை செய்யப்பட்டவர்களைப் பால்குடி உறவினாலும் மணமுடிக்கத் தடை செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

6157. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியரான) ஸஃபிய்யா(ரலி) அவர்கள் தங்களின் கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது.

அப்போது நபி(ஸல்) அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாய்'' என்று கூறினார்கள். பிறகு, 'நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா? என்று கேட்டார்கள். ஸஃபிய்யா(ரலி) அவர்கள், 'ஆம்'' என்றார்கள். 'அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகிவிட்டது) நீ புறப்படு'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

பகுதி 94

'அவ்வாறு கருதப்படுகிறது' (ஸஅமூ) என்பது (போன்ற வார்த்தைகள்) தொடர்பாக வந்துள்ளவை.

6158. உம்மு ஹானீ பின்த் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

'மக்கா வெற்றி' ஆண்டில் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருக்க, அவர்களை அவர்களின் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் அவர்களுக்கு சலாம் (முகமன்) சொன்னேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'யார் அது?' என்று கேட்டார்கள். 'நான் உம்மு ஹானீ பின்த் அபீ தாலிப் (வந்திருக்கிறேன்)'' என்று பதிலளித்தேன். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உம்மு ஹானீயே வருக!' எனக்கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் குளித்து முடித்தவுடன் ஒரே ஆடையை (தம் உடலில்) சுற்றிக் கொண்டவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். தொழுது முடித்ததும், 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரர் (அலீ இப்னு அபீ தாலிப்) நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் இன்ன மகனைக் கொலை செய்யப்போவதாகக் கருதுகிறார்'' என்று கூறினேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்மு ஹானீயே! நீ அடைக்கலம் அளித்தவருக்கு நாங்களும் அடைக்கலம் அளித்துவிட்டோம்'' என்று கூறினார்கள்.

உம்மு ஹானீ(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) ஆகும்.

பகுதி 95

'உனக்குக் கேடுதான்:' (வைலக்க) என்று கூறுவது தொடர்பாக வந்துள்ளவை.

6159. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'அதில் ஏறிச் செல்லுங்கள்'' என்றார்கள். அதற்கவர் 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே? என்றார். நபி(ஸல்) அவர்கள், '(பராவாயில்லை) அதில் ஏறிச் செல்லும்!'' என்றார்கள். (மீண்டும்) அவர், 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே! என்றதும் 'அதில் ஏறிச் செல்க. உமக்குக் கேடுதான். ('வைலக்க') என்றார்கள்.

6160. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம், 'அதில் ஏறிச் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர், 'இது குர்பானி ஒட்டகமாயிற்றே, இறைத்தூதர் அவர்களே?' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரண்டாவது முறையில்' அல்லது 'மூன்றாவது முறையில்' 'இதில் ஏறிச் செல்லும்! உமக்குக் கேடுதான்'' என்றார்கள்.

6161. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் கறுப்பு நிற அடிமையான அன்ஜஷா எனப்படுபவரும் இருந்தார். அவர் பாட்டிப்பாடி (ஒட்டகத்தை விரைந்தோடச் செய்து) கொண்டிருந்தார். அவரிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உமக்கு நாசம்தான் (வைஹக்க). அன்ஜஷா! நிதானம்! (ஒட்டகத்தின் மேலுள்ள) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!'' என்று கூறினார்கள்.

6162. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உனக்குக் கேடுதான் (வைலக்க!) உன் சகோதரரின் கழுத்தைத் துண்டித்துவிட்டாயே!'' என மூன்று முறை கூறிவிட்டு, 'உங்களில் ஒருவர் (தம் சகோதரரைப்) புகழ்ந்தேயாக நான் (இவ்வாறு) எண்ணுகிறேன்' என்று (மட்டும்) அவர் கூறட்டும். அதுவும் அவர் (அவ்வாறு இருக்கிறார் என) அறிந்தால் அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை அல்லாஹ்வை முந்திக் கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்'' என்று கூறினார்கள்.

6163. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களை ஒரு நாள் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தை குலத்தைச் சேர்ந்த, 'துல்குவைஸிரா' எனும் மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்துகொள்ள வில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்?' என்று கூறினார்கள். உடனே (அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், 'இவரின் கழுத்தைக் கொய்ய என்னை அனுமதியுங்கள் (இறைத்தூதர் அவர்களே!)'' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இல்லை, (இவரைவிட்டுவிடுங்கள்). நிச்சயமாக இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீராக. (அந்த அளவுக்கு) அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்) வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதை போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்தற்கான அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று அறிய) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடக்காது.

பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும் அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் கிடைக்காது. அ(ம்பான)து, சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் கிளம்புவார்கள். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரின் இரண்டு (புறக்) கைகளில் ஒன்று 'பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்' அல்லது 'துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்''' என்றார்கள்.

நான் நிச்சயமாக இந்த நபிமொழியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும் அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) அவர்கள் போரிட்டபோது அலீ(ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். (அந்தப் போரில்) கொல்லப்பட்டவர்களிடையே (நபி(ஸல்) அவர்கள் இனங்காட்டிய) அந்த மனிதரைத் தேடிக் (கண்டுபிடித்துக்) கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் வர்ணனையின்படியே அவர் இருந்தார் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன்.

6164. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் அழிந்துவிட்டேன், இறைத்தூதர் அவர்களே!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், “உமக்கு நாசம்தான் (வைஹக்க- என்ன நடந்தது?)” என்று கேட்டார்கள். அந்த மனிதர்,  'நான் ரமளான் மாதத்தில் (நோன்பு நோற்றுக் கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்வீராக!'' என்றார்கள் அவர், '(அதற்கான வசதி) என்னிடம் இல்லையே!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின், தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்பீராக!'' என்றார்கள். அவர் என்னால் இயலாது'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின், (அறுபது) ஏழைகளுக்கு உணவளிப்பீராக!'' என்றார்கள். அவர் '(அதற்கான வசதி) என்னிடம் இல்லை'' என்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்களிடம் (15 ஸாஉ கொள்ளளவு பிடிக்கும் அளவையான) 'அரக்' ஒன்று கொண்டுவரப்பட்டது. (அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன.)  உடனே நபி(ஸல்) அவர்கள், 'இதைப் பெற்று தர்மம் செய்வீராக!'' என்றார்கள். அதற்கு அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! என் குடும்பத்தார் அல்லாதோருக்கா (இதை நான் தர்மம் செய்ய)? என் உயிர் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! மதீனா எனும் கூடாரத்தின் இரண்டு மருங்கிலும் என்னை விடத் தேவையனோர் யாருமில்லை'' என்றார். (இதைக் கேட்ட) உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்துவிட்டு '(இதோ) இதைப் பெற்றுக் கொள்வீராக!'' என்றார்கள்.

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில் '('வைஹக்க' என்பதற்கு பதிலாக) 'வைலக்க' (உனக்குக் கேடுதான்) என்று காணப்படுகிறது.

6165. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

கிராமவாசி ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நாடு துறந்து (ஹிஜ்ரத்) செல்வது பற்றி எனக்குத் தெரிவுயுங்கள்'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உனக்கு நாசம்தான் (வைஹக்க!) ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் இருக்கின்றதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் இருக்கின்றது)'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஒட்டகத்துக்குரிய ஸகாத்தை நீ கொடுத்து வருகிறாயா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் நீ கடலுக்கு அப்பால் சென்று கூட வேலை செய்(து வாழலாம்.) அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்க) ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்'' என்றார்கள்.

6166. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (தம் 'விடைபெறும்' ஹஜ் உரையில்) 'உங்களுக்குக் கேடுதான் (வைலக்கும்)'' அல்லது 'உங்களுக்கு அழிவுதான் (வைஹக்கும்)'. எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டிமாய்த்துக் கொள்ளும் இறை மறுப்பாளர்களான நீங்கள் மாறிவிடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'வைஹக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'வைலக்கும்' அல்லது 'வைஹக்கும்' என்று இடம் பெற்றுள்ளது.

முஹம்மத் இப்னு ஸைத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'வைலக்கும்' அல்லது 'வைஹக்கும்' என்று இடம் பெற்றுள்ளது.

6167. அனஸ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! மறுமை நாள் எப்போதும் சம்பவிக்கும்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கென்ன கேடு! அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்?' என்று கேட்டார்கள். அவர் 'நான் அதற்காக (ஏதும்) முன்முயற்சி செய்யவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், '(அப்படியானால்,) நீ யாரை நேசிக்கிறாயோ அவர்களுடன் (மறுமையில்) இருப்பாய்!'' என்றார்கள். உடனே நாங்கள், 'நாங்களும் அவ்வாறுதானா?' என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்'' என்றார்கள். (இதைக் கேட்டு) அன்று நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.

-அப்போது முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் அடிமை (எங்களைக்) கடந்து சென்றார்கள். அவர் என் வயதொத்த (சிறு)வராக இருந்தார்.

''இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே மறுமை சம்பவிக்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதாவது அவ்வளவு நெருக்கத்தில் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்.)

இந்த ஹதீஸை ஷுஅபா(ரஹ்) அவர்கள் கத்தாதா(ரஹ்) அவர்கள் வழியாக அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து சுருக்கமாக அறிவித்தார்கள்.188

பகுதி 96

வலிவும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை நேசிப்பதன் அடையாளம்.189

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்காக மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கருணை உடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 03:31)

6168. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்.190

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

6169. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. அவர் விஷயத்தில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்'' என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

6170. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

''(இறைத்தூதர் அவர்களே!) ஒருவர் (நன்) மக்களை நேசிக்கிறார். ஆனால், (செயல்பாட்டிலும் சிறப்பிலும்) அவர்களை அவர் எட்டவில்லை. (இவரைக் குறித்துத் தாங்கள் என்ன கருதுகின்றீர்கள்?)'' என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'மனிதன் யார் மீது அன்புவைத்துள்ளானோ அவர்களுடன் தான் இருப்பான்'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

6171. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'மறுமை நாள் எப்போது வரும்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அதற்காக என்ன முன்முயற்சி செய்துள்ளாய்?' என்று கேட்டார்கள். அவர், 'அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும், நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய்'' என்று கூறினார்கள்.191

பகுதி97

ஒருவர் மற்றொருவரிடம் 'விலகிப்போ' என்று கூறுவது.192

6172. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(தன்னை இறைத்தூதர் என வாதிட்டு வந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவன்) இடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உனக்காக ஒன்றை நான் (மனத்தில்) மறைத்து வைத்துள்ளேன். அது என்ன (சொல்)?' என்றார்கள். அவன், 'அத்துக்'' ('அத்துகான்' எனும் 44 வது அத்தியாயம்) என்றான். நபி(ஸல்) அவர்கள், 'தூர விலகிப்போ'' என்றார்கள்.193

6173. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களோடு உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் (தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டுக் கொண்டிருந்த) இப்னு ஸய்யாத் (எனும் யூதச் சிறுவனை) நோக்கி நபித் தோழர்கள் சிலருடன் நடந்தார்கள். 'பனூ மஃகாலா' குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் இப்னு ஸய்யாத் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் அவனுடைய முதுகில் தட்டும் வரை அவன் (இவர்கள் வந்தருப்பதை) உணர வில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நான் இறைத்தூதர்தாம் என்று நீ உறுதி கூறுகிறாயா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை (ஏறெடுத்து)ப் பார்த்துவிட்டு இப்னு ஸய்யாத்,''நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்'' என்றான்.

பிறகு இப்னு ஸய்யாத் (நபி(ஸல்) அவர்களிடம்), 'நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்று) உறுதி கூறுகின்றீர்களா?' என்று கேட்டான். உடனே நபி(ஸல்) அவர்கள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு, 'நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டேன்'' என்று கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதிடம் '(உன்னிடம்) நீ என்ன காண்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத் என்னிடம், 'மெய்யான செய்திகளும் பொய்யான செய்திகளும் (மனத்தில் தோன்றும் ஓர் உதிப்பாய்) வருகின்றன'' என்று சொன்னான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உனக்கு இப்பிரச்சினையில் (ஷைத்தானால் மெய்யும் பொய்யும் கலந்து) குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு, 'நான் (உன்னைச் சோதிப்பதற்காக) ஒன்றை மனத்தில் மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்!)'' என்று கேட்டார்கள். 'அது அத்துக் (அத்துகான் எனும் 44 வது அத்தியாயம்)'' என்று பதிலளித்தான். உடனே நபி(ஸல்) அவர்கள் 'தூர விலகிப்போ; நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது'' என்றார்கள். (அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், 'இவனைக் கொல்ல எனக்கு அனுமதியளிப்பீர்களா? இவனுடைய கழுத்தைக் கொய்துவிடுகிறேன்'' என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவன் அவனில்லையென்றால் இவனைக் கொல்வதால் உங்களுக்கு நன்மையேதும் இல்லை'' என்றார்கள்.194

6174. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அதற்குப் பின் (இன்னொரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நோக்கி நடந்தனர். (தோட்டத்திற்குள்) நுழைந்தவுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடுவதற்கு முன்னால் அவனிடமிருந்து அவனுடைய பேச்சு எதையாவது கேட்டுவிடவேண்டுமென்று திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்துக்கொண்டு நடக்கலானார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் குஞ்சம் வைத்த போர்வைக்குள் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்ட இப்னு ஸய்யாதின் தாய் இப்னு ஸய்யாதிடம், 'ஸாஃபியே!' இது இப்னு ஸய்யாதின் பெயராகும் - என்றழைத்து, 'இதோ! முஹம்மது (வருகிறார்)'' என்று கூறினாள். உடனே இப்னு ஸய்யாத் (சுதாரித்துக் கொண்டு தானிருந்த நிலையிலிருந்து) விலகிக் கொண்டான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அவள் அவனை அப்படியே விட்டிருந்தால் அவன் (தன்னுடைய உண்மை நிலையை) வெளியிட்டிருப்பான்'' என்றார்கள்.195

6175. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்கே உரிய பெருமைகளால் புகழ்ந்த பிறகு, '(மகா பொய்யன்) தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது 'அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ் அவர்கள் அவனைக் குறித்துத் தம் சமூகத்தாரை எச்சரித்திருக்கிறார்கள். அவனைப் பற்றி (இதுவரை) எந்த இறைத்தூதரும் தம் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்கு நான் கூறுகிறேன்: அவன் ஒற்றைக் கண்ணன். ஆனால், அல்லாஹ் ஒற்றை கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்'' என்றார்கள்.196

அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய) நான் கூறுகிறேன்:

('விலகிப்போ' எனும் பொருள் கொண்ட 'இக்ஸஃ' எனும் சொல்லின் இறந்தகால வினைச் சொல்லான) 'கஸஃத்துல் கல்ப' எனும் சொல்லுக்கு 'நாயை தூர விரட்டினேன்'' என்று பொருள். 'காஸிஈன்' என்பதற்கு 'விரட்டப்பட்டவர்கள்' என்று பொருள்.

பகுதி 98

'நல்வரவு' (மர்ஹபா) கூறல் 197

ஆயிஷா(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள் (தம் புதல்வி ஃபாத்திமாவைக் கண்டதும்) 'என் புதல்விக்கு நல்வரவு'' என்று கூறினார்கள்.198 உம்மு ஹானீ(ரலி) கூறினார்: நான் (என் ஒன்றுவிட்ட சகோதரரான) நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், 'உம்மு ஹானீக்கு நல்வரவு!'' என்று கூறி (வரவேற்கலா)னார்கள்.199

6176. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது, 'இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த தூதுக் குழுவினரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!'' என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அப்போது அக்குழுவினர் 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆ குலத்தைச் சேர்ந்த ஒரு கூட்டத்தாராவோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (இறை மறுப்பாளர்களான) முளர் குலத்தார் (தடையாக) உள்ளனர். (போர் தடை செய்யப்பட்ட) புனித மாதங்களில் தவிர (வேறு மாதத்தில்) தங்களிடம் நாங்கள் வந்து சேர முடிவதில்லை. எனவே (வாய்மையையும் பொய்மையையும் பாகுபடுத்தும்) சில தீர்க்கமான விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள். அத(னைக் கடைப்பிடிப்பத)ன் மூலம் நாங்கள் சொர்க்கம் சொல்வோம். எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் தங்கிவிட்ட)வர்களுக்கு அறிவிப்போம்'' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்கு (விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்). நான்கு (விஷயங்களைத் தடை செய்கிறேன்). தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தைச் கொடுங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோருங்கள். உங்களுக்குக் கிடைக்கு போர்ச் செல்வத்திலிருந்து ஐந்திலொரு பங்கை (குமுஸ்) கொடுத்து விடுங்கள்.

மேலும், (மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை; மண் சாடி; பேரீச்ச மரத்தின் பீப்பாய்; தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் நீங்கள் பருகாதீர்கள்'' என்றார்கள்.200

பகுதி 99

(மறுமையில்) மனிதர்கள் தம் தந்தையர் பெயருடன் (இணைத்து) அழைக்கப்படுவர்.

6177. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு 'இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

6178. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்படும். அப்போது 'இது இன்னார் மகன் இன்னாரின் மோசடி(யைக் குறிக்கும் கொடி)'' என்று கூறப்படும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.201

பகுதி 100

(மனக் குழப்பத்திலுள்ள) ஒருவர் ('என் மனம் அசுத்தமாகிவிட்டது' எனும் பொருள் பொதிந்த) 'கபுஸத் நஃப்ஸீ' எனும் சொல்லைக் கூற வேண்டாம்.

6179. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் ('என் மனம் அசுத்தமாகிவிட்டது’  எனும் பொருள் பொதிந்த) 'கபுஸத் நஃப்ஸீ' எனும் சொல்லைக் கூற வேண்டாம். மாறாக, ('என் மனம் கனத்துவிட்டது' எனும் பொருள் கொண்ட) 'லம்சத் நஃப்ஸீ' எனும் சொல்லையே கூறட்டும்.202

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6180. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) யாரும் ('என் மனம் அசுத்தமாகிவிட்டது’  எனும் பொருள் பொதிந்த) 'கபுஸத் நஃப்ஸீ' எனும் சொல்லை ஆள வேண்டாம். மாறாக, ('என் மனம் கனத்துவிட்டது' எனும் பொருள் தரும்) 'லம்சத் நஃப்ஸீ' எனும் சொல்லையே ஆளட்டும்.

என ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அறிவித்தார்.

பகுதி 101

காலத்தை ஏசாதீர்கள்.

6181. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில் தான் இரவுபகல் (இயக்கம்) உள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.203

6182. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

திராட்சையை ('கண்ணியமானது' எனும் பொருள் கொண்ட) 'அல்கர்ம்' என்று பெயரிட்டழைக்காதீர்கள். 'மோசமான காலமே!' என்று (காலத்தை ஏசிக்) கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 102

''கண்ணியத்திற்குரியது ('அல்கர்ம்') இறைநம்பிக்கையாளரின் இதயமே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது. 204

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையில் திவாலானவன் யாரெனில் மறுமைநாளில் திவாலாகுபவனேயாவான்.

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே (உண்மையில்) வீரன் ஆவான்.

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே உரியது.

இவ்வாறு ஆட்சியதிகாரத்தின் எல்லையை நபியவர்கள் இறைவனுடன் முற்றுப்பெறச் செய்துள்ள அதே வேளையில் அரசர்கள் குறித்துப் பின்வருமாறு அல்லாஹ் கூறினான்:

அரசர்கள் ஒரு நகரத்துக்குள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அவர்கள் அழித்துவிடுகிறார்கள். (திருக்குர்ஆன் 27:34)205

6183. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மக்கள் (திராட்சைப் பழத்திற்கு) 'அல்கர்ம்' (கண்ணியமானது) என்று சொல்கின்றனர். உண்மையில் இறைநம்பிக்கையாளரின் இதயமே 'அல்கர்ம்' (கண்ணியத்திற்குரியது) ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 103

''என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று சொல்வது. 206

இது தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.207

6184. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் தவிர வேறெவருக்கும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தாய் தந்தையரை அர்ப்பணிப்பதாகக் கூறியதை நான் கேட்டதில்லை. (ஸஅத் அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அம்பெய்யுங்கள். உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகாட்டும்'' என்று கூறியதைக் கேட்டேன். இது உஹுதுப் போர் நாளில் நடைபெற்றதாகவே எண்ணுகிறேன். 208

பகுதி 104

''அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்று கூறுவது.

அபூ பக்ர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், 'எங்கள் தந்தையரும் எங்கள் அன்னையரும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்'' என்றார்கள்.209

6185. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்கள் தம்முடனிருந்த (தம் துணைவியாரான) ஸஃபிய்யா(ரலி) அவர்களைத் தம் வாகனத்தில் பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது (நபியவர்களின்) அந்த ஒட்டகம் இடறி விழுந்தது. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே வீழ்த்தப்பட்டனர். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணைக் கவனி!'' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள் தங்களின் துணியைத் தம் முகத்தில் போட்டு (மூடி)க் கொண்டு (அன்னை) ஸஃபிய்யா(ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்களின் மீது அத்துணியைப் போட்டார்கள். உடனே அப்பெண்மணி (ஸஃபிய்யா(ரலி) எழுந்துகொண்டார்கள். பிறகு அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (நபி(ஸல்) மற்றும் அன்னை ஸஃபிய்யா(ரலி) ஆகிய) அவர்கள் இருவருக்காகவும் அவர்களின் சிவிகையைக் கட்டி (சீராக்கி)னார்கள். அவர்கள் இருவரும் அதில் ஏறிக் கொண்டனர். பிறகு நாங்கள் அனைவரும் பயணப்பட்டு 'மதீனாவின் புறநகர் அனைவரும் பயணப்பட்டு 'மதீனாவின் புறநகர் பகுதிக்கு வந்தபோது' அல்லது 'மதீனாவை நெருங்கியபோது' நபி(ஸல்) அவர்கள், 'பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாக, எங்கள் இறைவனுக்குப் பணிந்தவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக (நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்)'' என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக்கொண்டேயிருந்தார்கள்.210

பகுதி 105

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான பெயர். 211

6186. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் 'காசிம்' என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), 'உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு 'அபுல் காசிம்' எனும் பெயர் இருப்பதே காரணம்)'' என்று சொன்னோம். எனவே, அவர் நபி(ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!'' என்று கூறினார்கள்.212

பகுதி 106

''என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.

இதை அனஸ்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.213

6187. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் 'காசிம்' என்று பெயர் சூட்டினார். அப்போது மக்கள் 'நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் (இது குறித்துத் தீர்ப்பு) கேட்கும் வரை (குழந்தையின் தந்தையான) அவரை, 'அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கமாட்டோம்'' என்று கூறினர். (அவ்வாறே நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டோம்.) அப்போது நபி(ஸல்) அவர்கள், 'என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள்; ஆனால், என்னுடைய ('அபுல் காசிம்' எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள்'' என்று கூறினார்கள்.

6188. அபுல் காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால் என்னுடைய (அபுல் காசிம் எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 214

6189. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் 'காசிம்' என்று பெயர் சூட்டினர். அப்போது மக்கள், 'உம்மை நாங்கள் 'அபுல் காசிம்' (காசிமின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்து உமக்கு மகிழ்ச்சியூட்டமாட்டோம்'' என்று கூறினர். எனவே, அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் மகனுக்கு அப்துர் ரஹ்மான் என்று பெயர் சூட்டுங்கள்'' என்றார்கள். 215

பகுதி 107

'அல்ஹஸ்ஷ்ன்' (முரடு) எனும் பெயர்

6190. முஸய்யப் இப்னு ஹஸ்ணன்(ரலி) அறிவித்தார்.

என் தந்தை (ஹஸ்ஷ்ன் இப்னு அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஹஸ்ஷ்ன்' (முரடு) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(இல்லை) நீங்கள் (இனிமேல்) 'ஸஹ்ல்' (மென்மை)'' என்றார்கள். அவர், 'என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்'' என்றார். அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குண நலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.

இதை ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

பகுதி 108

ஒரு பெயரை அதைவிடச் சிறந்த பெயராக மாற்றியமைப்பது. 216

6191. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ(ரலி) அவர்களின் புதல்வர் 'முன்திர்' என்பவர் பிறந்தவுடன் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், அக்குழந்தையைத் தம் மடியில் வைத்தார்கள். அப்போது (குழந்தையின் தந்தை) அபூ உசைத்(ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (திடீரென) நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் நடந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. உடனே அபூ உசைத்(ரலி) அவர்கள் தம் புதல்வரை நபியவர்களின் மடியிலிருந்து எடுத்துவிடுமாறு கூற, அவ்வாறே (குழந்தை) தூக்கப்பட்டது. (சிறிது நேரத்தில்) தன்னிலைக்குத் திரும்பிய நபி(ஸல்) அவர்கள் 'அந்த குழந்தை எங்கே?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ உசைத்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! குழந்தையை (வீட்டுக்கு) அனுப்பிவிட்டோம்'' என்று கூறினார். 'அக்குழந்தையின் பெயரென்ன?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, 'இன்னது' என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூ உசைத் கூறினார்கள். (அப்பெயர் பிடிக்காததால்) நபி(ஸல்) அவர்கள் 'அல்ல; (இனிமேல்) அவர் பெயர் 'முன்திர்' (எச்சரிப்பவர்) ஆகும்'' என்று கூறினார்கள். எனவே, அன்று அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தாம் 'முன்திர் எனப் பெயர் சூட்டினார்கள்.

6192. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸைனப்(ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது 'அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள்.217

6193. ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

என் பாட்டனார் (ஹஸ்ஷ்ன்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டார்கள். அவர் ஹஸ்ஷ்ன் (முரடு) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'இல்லை; நீங்கள் (இனிமேல்) 'ஸஹ்ல்' (மென்மை)'' என்றார்கள். அவர், 'என் தந்தை எனக்குச் சூட்டிய பெயரை நான் மாற்றமாட்டேன்'' என்றார்.

அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குணநலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது. 218

பகுதி 109

இறைத்தூதர்களின் பெயர்களைச் சூட்டுவது.

''நபி(ஸல்) அவர்கள் தம் புதல்வர் இப்ராஹீமை முத்தமிட்டார்கள்'' என்று அனஸ்(ரலி) கூறினார்.219

6194. இஸ்மாயீல் இப்னு காலித் அல்பஜலீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான், இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், 'தாங்கள் நபி(ஸல்) அவர்களின் புதல்வர் இப்ராஹீம்(ரலி) அவர்களைப் பார்த்தீர்களா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், '(ஆம், பார்த்திருக்கிறேன். எனினும்,) அவர் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இறைத்தூதர் ஒருவர் இருப்பார் என (இறைவனால்) தீர்மானிக்கப்பட்டிருந்தால், நபி(ஸல்) அவர்களின் புதல்வர் (இப்ராஹீம் (ரலி) உயிர் வாழ்ந்திருப்பார். ஆனால், முஹம்மத்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த இறைத்தூதரும் இல்லை (என்பதே இறைவனின் முடிவாகும்.)

6195. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

(தம் புதல்வர்) இப்ராஹீம்(ரலி) அவர்கள் இறந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இவருக்குப் பாலூட்டக் கூடிய செவிலித் தாய் சொர்க்கத்தில் இருக்கிறார்'' என்றார்கள்.220

6196. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அல் அன்சாரி(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், ('அபுல் காசிம்' எனும்) என் குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். ஏனெனில், நானே உங்களிடையே பங்கீடு செய்பவன் (காசிம்) ஆவேன்'' என்று கூறினார்கள். 221

என அனஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள். 222

6197. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய ('அபுல் காசிம்' எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். என்னைக் கனவில் கண்டவர் உண்மையில் என்னைத்தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.223

6198. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அக்குழந்தைக்கு நபி(ஸல்) அவர்கள் 'இப்ராஹீம்' என்று பெயர் சூட்டி பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயிலிட்டார்கள். அவனுக்காக சுபிட்சம் வேண்டிப் பிரார்த்தனையும் புரிந்துவிட்டு என்னிடம் அவனைத் தந்தார்கள்.

அக்குழந்தையே அபூ மூஸா(ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும். 224

6199. முஃகீரா ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களின் புதல்வர்) இப்ராஹீம்(ரலி) அவர்கள் இறந்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. 225

இதே ஹதீஸை அபூ பக்ரா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.226

பகுதி 110

'வலீத்' எனப் பெயர் சூட்டுவது

6200. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை தொழுகையில்) நபி(ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ('குனூத்' எனும் சிறப்புப் பிரார்த்தனையில் பின்வருமாறு) கூறினார்கள்:

இறைவா! வலீத் இப்னு அல்வலீத், ஸலமா இப்னு ஹிஷாம், அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரையும் மக்காவிலுள்ள ஒடுக்கப்பட்ட இறை நம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை) கொண்ட முளர் குல்த்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக! 227

பகுதி 111

நண்பரின் பெயரில் சில எழுத்துக்களைக் குறைத்து (சுருக்கமாக) அழைப்பது. 228

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் என்னை 'அபூ ஹிர்!' என அழைத்தார்கள்.229

6201. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கிறார்'' என்றார்கள். நான், (சலாமுக்கு பதில் கூறும் முகமாக) 'வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்' (அவரின் மீதும் இறை சாந்தி பொழியட்டும். மேலும், அல்லாஹ்வின் கருணையும் பொழியட்டும்) என்று கூறினேன். மேலும், 'நாங்கள் பார்க்க முடியாதவற்றை (நபி) அவர்கள் பார்க்கிறார்கள்'' என்றும் ஆயிஷா(ரலி) கூறினார். 230

6202. அனஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு பயணத்தில் என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் பயணப் பொருட்களுடன் (அவற்றின் காவலராக) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் அடிமையான 'அன்ஜஷா' (நபியவர்களுடைய) துணைவியரின் ஒட்டகங்களைப் பாட்டுப் பாடி ஓடச் செய்து கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷ்! நிதானமாக ஓட்டிச் செல்! (ஒட்டகச் சிவிகைக்குள் இருக்கும்) கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்துவிடாதே!'' என்றார்கள். 231

பகுதி 112

சிறுவனுக்குக் குறிப்புப் பெயர் சூட்டுவதும் குழந்தை பிறப்பதற்கு முன்பே ஒருவருக்குக் குறிப்புப் பெயர் சூட்டுவதும் (செல்லும்.) 232

6203. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு 'அபூ உமைர்' என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), 'அபூ உமைரே! பாடும் உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?' என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். 223

பகுதி 113

ஒருவருக்கு வேறு குறிப்புப் பெயர் இருக்கவே 'அபூ தூரப்' (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயர் சூட்டுவது.

6204. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) அவர்களுக்கு 'அபூ துராப்' (மண்ணின் தந்தை) எனும் குறிப்புப் பெயரே மிகவும் பிரியமானதாக இருந்தது. மேலும், அப்பெயர் சொல்லி தாம் அழைக்கப்படுவதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்களுக்கு 'அபூ துராப்' என்று நபி(ஸல்) அவர்களே பெயர் சூட்டினார்கள். (அப்பெயர் அவர்களுக்கு சூட்டப்பட்டதற்கான காரணம்:) ஒரு நாள் அலீ(ரலி) அவர்கள் (தம் துணைவியாரான) ஃபாத்திமா(ரலி) அவர்களின் மீது (ஏதோ காரணத்திற்காகக்) கோப்பட்டு வெளியேறிச் சென்று பள்ளிவாசலில் ஒரு சுவரில் சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். அவர்களைத் (தேடியவாறு) பின்தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ஒருவர், 'அவர் இதோ பள்ளிவாசலில் சுவரில் சாய்ந்து படுத்திருக்கிறார்'' என்று கூறினார். எனவே, அலீ(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். (படுத்திருந்தால்) அலீ(ரலி) அவர்களின் முதுகில் நிறைய மண் படிந்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் அலீயின் முதுகிலிருந்த மண்ணைத் துடைத்தவாறே 'அபுதுராபே! (மண்ணின் தந்தையே! எழுந்து) அமருங்கள்'' என்று கூறினார்கள். 234

பகுதி 114

அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்

6205. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு 'மன்னாதி மன்னன்' (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

6206. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர், (உலகில்) ஒரு மனிதன் தனக்கு 'மன்னாதி மன்னன்' (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'பெயர்களில் மிகவும் கேவலமானது..'' என்றும், வேறு சிலர் ('மலிக்குல் அம்லாக்' என்பதற்குப் பாரசீக மொழியில்) ஷாஹான் ஷாஹ் (அரசர்களுக்கு அரசன்) என்று விளக்கம் கூறினர்'' என்றும் வந்துள்ளது.

பகுதி 115

இணைவைப்பாளரின் குறிப்புப் பெயர்

மிஸ்வர்(ரலி) கூறினார்: நபி(ஸல்) அவர்கள், 'அபூ தாலிப் அவர்களின் புதல்வர் (அலீ, என் மகள் ஃபாத்திமாவை மணவிலக்குச் செய்துவிட) விரும்பினாலே தவிர!'' என்று கூறக் கேட்டேன். 235

6207. உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஃபதக்' நகர் முரட்டுத் துணி விரிக்கப்பட்ட கழுதையொன்றின் மீது அமர்ந்து, தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலம் குன்றி) இருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். இது பத்ருப் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது. நாங்கள் இருவரும் பயணப்பட்டு ஓர் அவையைக் கடந்து சென்றோம். அந்த அவையில் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் இப்னு சலூல் இருந்தார். அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக் கொள்வதற்கு முன் இது நடந்தது. அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணைவைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு பிரிவினரும் இருந்தனர். முஸ்லிம்களில் (கவிஞர்) அப்துல்லாஹ் இப்னு ராவாஹா(ரலி) அவர்கள் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்துகொண்டபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் மேல் துண்டால் தம் மூக்கைப் பொத்திக்கொண்டு, 'எங்களின் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்'' என்றார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அ(ந்த அவையில் இருந்த)வர்களுக்கு சலாம் சொன்னார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்) பால் அழைத்தார்கள். மேலும், அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள்.

இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை (இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி,) 'மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை தராதீர். உம்மிடம் வருவோரிடம் (இதை) எடுத்துரையுங்கள்'' என்றார். (இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்கள், 'ஆம். இறைத்தூதர் அவர்களே! (இதை) எங்கள் அவைகளில் வெளிப்படுத்துங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்'' என்றார்கள். இதையொட்டி முஸ்லிம்களும், இணை வைப்பாளர்களும், யூதர்களும் (ஒருவரையொருவர்) ஏசத் தொடங்கி தாக்கிக் கொள்ளும் அளவுக்குச் சென்றார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும் வரை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள்.

பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலேறிப் பயணத்தைத் தொடர்ந்து ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் சென்று, 'சஅதே! அபூ ஹுபாப் (அப்துல்லாஹ் இப்னு உபை) சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? அவர் இப்படி இப்படிச் சொன்னார்'' என்று அப்துல்லாஹ் இப்னு உபை சொன்னதைக் கூறினார்கள். (இதைக் கேட்ட) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவரை மன்னித்துவிடுங்கள். தங்களுக்கு வேதத்தை அருளியவன் மீது சத்தியமாக! இந்த (மதீனா) நகரவாசிகள் (அப்துல்லாஹ் இப்னு உபை எனும்) அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடி சூட்டிட முடிவு செய்துவிட்டிருந்த நேரத்தில் அல்லாஹ் தங்களின் மீது அருளிய சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு வந்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய இந்த சத்திய(மார்க்க)த்தின் மூலம் அல்லாஹ்வே (இந்த நகரத்தாரின்) அந்த முடிவை நிராகரித்துவிட்டதைக் கண்ட அவர் ஆத்திரப்பட்டார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்'' என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்கள் தாம் தோழர்களும் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப இணைவைப்பாளர்களையும் வேதக்காரர்களையும் மன்னித்துவிடுபவர்களாகவும், (அவர்களின்) தொல்லைகளை சகித்துக் கொள்பவர்களாகவும் இருந்தனர். அல்லாஹ் கூறினான்:

(இறை நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய செல்வங்களிலும் உங்களுடைய உயிர்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும், உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணை வைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிந்தனைகளை நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள். (அப்போதெல்லாம்) நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால் அதுதான் உறுதிமிக்க செயல்களில் ஒன்றாகும். (திருக்குர்ஆன் 03:186)

மேலும் அல்லாஹ் கூறினான்:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இறை நம்பிக்கை கொண்டதற்குப் பின் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றிவிட வேண்டும் என்று வேதக்காரர்களில் பலர் விரும்புகின்றனர். (இது) அவர்களுக்கு உண்மை தெளிவாகிவிட்ட பின்னர் அவர்களில் உள்ளத்துள் எழுந்த பொறாமையினாலேயாகும். ஆயினும், அல்லாஹ் தன் ஆணையைப் பிறப்பிக்கும் வரை (அவர்களை) நீங்கள் மன்னித்துவிட்டு விடுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவன். (திருக்குர்ஆன் 02:109)

'அவர்களை மன்னித்துவிட்டுவிட வேண்டும்' என்பதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அவர்களின் விஷயத்தில் (திட்டவட்டமான நடவடிக்கையெடுக்கும் படி) ஆணை இறைவனிடமிருந்து தமக்கு வரும் வரை அவர்களை மன்னித்துவிட்டு விடவேண்டும்' என்பதையே விளக்கமாகக் கண்டார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பத்ருப் போர் புரிந்தபோது (அவர்களுடன் போரிட்ட) குறைஷித் தலைவர்களையும் இறைமறுப்பாளர்களின் தலைவர்களையும் பத்ரில் அவர்களின் மூலம் அல்லாஹ் அழித்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்கள் தாம் தோழர்களும் வெற்றிவாகை சூடியவர்களாக, போர்ச் செல்வங்களைப் பெற்றவர்களாக(ப் பத்ரிலிருந்து) திரும்பினார்கள். அவர்களுடன் குறைஷித் தலைவர்கள் மற்றும் இறை மறுப்பாளர்களின் தலைவர்கள் ஆகியோர் சிறைக் கைதிகளாக வந்தனர். அப்போது (அப்துல்லாஹ்) இப்னு உபை இப்னி சலூலும், அவருடன் இருந்த சிலை வணங்கும் இணைவைப்பாளர்களும், '(இஸ்லாம் எனும்) இந்த விஷயம் மேலோங்கிவிட்டது. எனவே, அல்லாஹ்வின் தூதரிடம், இஸ்லாத்தை ஏற்பதாக உறுதி மொழி அளித்துவிடுங்கள்'' என்று கூறி, (வெளித் தோற்றத்தில்) இஸ்லாத்தை ஏற்றனர். 236

6208. அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அறிவித்தார்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! அபூ தாலிப் (அப்து மனாஃப்) அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபாகரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பாவராகவும் தங்களுக்காக (தங்கள் எதிரிகளின் மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!'' என்று கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள், 'ஆம்; அவர் இப்போது (கணுக்கால் வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத்திற்குச் சென்றிருப்பார்'' என்று கூறினார்கள். 237

பகுதி 116

சிலேடையாகப் பேசுவது பொய் ஆகாது. 238

அனஸ்(ரலி) கூறினார்:

அபூ தல்ஹா(ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் (நோயுற்றிருந்து) இறந்துவிட்டார். (இது தெரியாமல்) அபூ தல்ஹா(ரலி) அவர்கள் (தம் துணைவியரிடம்), 'பையன் எவ்வாறிருக்கிறான்?' என்று கேட்டார்கள். அதற்கு (அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள், 'அவனுடைய மூச்சு அமைதியாக உள்ளது. அவன் (நன்கு) ஓய்வெடுத்துக் கொண்டுவிட்டான் என்றே நம்புகிறேன்'' என்று பதிலளித்தார். அபூ தல்ஹா(ரலி) அவர்கள் தம் மனைவி கூறியது உண்மைதான் என்று எண்ணிக் கொண்டார்கள்.239

6209. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது பாட்டுப்பாடி ஒட்டக மோட்டுபவர் ஒருவர் (அன்ஜஷா என்பவர்) பாடினார். அப்போது (அவரிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா! உனக்குக் கேடுதான்! மெல்லப்போ. கண்ணாடிக் குடுவைகளை (பெண்களை) உடைத்து விடாதே!'' என்றார்கள்.240

6210. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது 'அன்ஜஷா' என்றழைக்கப்பட்ட ஓர் அடிமை பாட்டுப் பாடி (ஒட்டகத்திலிருந்த) பெண்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா'' நிதானமாக ஓட்டிச்செல். கண்ணாடிக் குடுவைகளை அதாவது பெண்களை உடைத்துவிடாதே'' என்றார்கள்.

6211. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு 'அன்ஜஷா' என்றழைக்கப்பட்ட 'பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர்' ஒருவர் இருந்தார். அவர் அழகிய குரல் வளம் கொண்டவராக இருந்தார். (அவர் ஒரு முறை ஒட்டகத்தில் பெண்கள் இருக்க பாடிக்கொண்டிருந்த போது) அவரிடம் நபி(ஸல்) அவர்கள், 'அன்ஜஷா! நிதானம்! கண்ணாடிக் குடுவைகளை உடைத்துவிடாதே!'' என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மென்மையான பெண்களைக் கருத்தில் கொண்டே நபி(ஸல்) அவர்கள் (கண்ணாடிக் குடுவைகள் என்று சிலேடையாகக்) கூறினார்கள்.

6212. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை எதிரிகள் படையெடுத்து வருவதாக) மதீனாவில் பீதி நிலவியது. உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா(ரலி) அவர்களின் குதிரை ஒன்றில் ஏறி (விவரமறிந்து வரத் துணிவுடன்) புறப்பட்டார்கள். (திரும்பி வந்து) '(பீதி ஏற்படுத்தும்) எதையும் நாம் காணவில்லை. (தங்கு தடையின்றி) ஓடும் கடலாகவே நாம்  இந்தக் குதிரையைக் கண்டோம்'' என்றார்கள். 241

பகுதி 117

இருக்கும் ஒன்றை இல்லை என்று கூறுவது: அது சரியில்லை என்பதைக் குறிக்க. 242

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் இரண்டு மண்ணறைகளைக் காட்டி '(இவற்றில் அடக்கம் செய்யப்பட்டுள்ள) இவர்கள் இருவரும் பெரிய பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை; (இருப்பினும்) அதுவும் பெரிய பாவம் தான்'' என்றார்கள்.243

6213. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல'' என்று பதிலளித்தார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)'' என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்'' என்று கூறினார்கள்.244

பகுதி 118

வானத்தை அண்ணாந்து பார்த்தல்.245

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என்று. மேலும், வானத்தை (அவர்கள் பார்க்க வேண்டாமா?) அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்று. (திருக்குர்ஆன் 88:17, 18)

ஆயிஷா(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்கள்.246

6214. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பிறகு (சுமார் மூன்று வருடம்) எனக்கு வேத அறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. இதற்கிடையில் (ஒரு நாள்) நான் நடந்து போய்க் கொண்டிருந்தேன். அப்போது வானிலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கு ஹிரா (குகையில்) என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்துக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டிருந்தார்.

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 247

6215. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நான் (என் சிறிய தாயார்) மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் இரவு தங்கினேன். அவர்களிடம் நபி(ஸல்) அவர்களும் இருந்தார்கள். 'இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி' அல்லது 'அதில் சிறிது நேரம்' ஆனபோது நபி(ஸல்) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) அமர்ந்து வானத்தைப் பார்த்தவாறு 'நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு - பகல் மாறி, மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன'' எனும் (திருக்குர்ஆன் 03:190 வது) இறைவசனத்தை ஓதினார்கள். 248

பகுதி 119

(ஆழ்ந்த யோசனையில் உள்ள) ஒருவர் நீரிலும் களிமண்ணிலும் குச்சியால் தட்டுவது.

6216. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் தோட்டங்களில் ஒன்றில் இருந்தேன். நபி(ஸல்) அவர்களின் கையில் தடி ஒன்று இருந்தது. (ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த) அவர்கள் அந்தத் தடியால் நீருக்கும் களிமண்ணுக்கும் இடையே (தரையில்) அடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து (வாயிற் கதவைத்) திறக்கும்படி கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'அவருக்காகத் திறந்துவிடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்றார்கள். நான் சென்றேன். அங்கே அபூ பக்ர்(ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக (வாயிற்கதவைத்) திறந்தேன். அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருப்பதாக (நபி(ஸல்) அவர்கள் கூறிய) நற்செய்தியைத் தெரிவித்தேன். பிறகு ஒருவர் வந்து (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் அனுமதி கேட்க) நபி(ஸல்) அவர்கள், 'அவருக்குத் திறந்துவிடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுங்கள்'' என்றார்கள். அங்கு உமர்(ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்காக(க் கதவைத்) திறந்து அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்க விருப்பதாக (நபி(ஸல்) அவர்கள் கூறிய) நற்செய்தியைத் தெரிவித்தேன். பிறகு ஒருவர் (கதவைத்) திறக்கும்படி கோரினார். (நான் நபியவர்களிடம் சென்று அனுமதி கேட்க) சாய்ந்து கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் (நேராக நிமிர்ந்து) அமர்ந்து '(அவருக்கும் திறந்து விடுங்கள்; அவருக்கு நேரவிருக்கும் ஒரு துன்பத்தையடுத்து சொர்க்கம் அவருக்குக் கிடைக்கவிருக்கிறது என்று அவருக்கு நற்செய்தி சொல்லுங்கள்'' என்றார்கள். நானும் சென்றேன். (கதவைத் திறந்தேன்.) அங்கு உஸ்மான்(ரலி) அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கும் நற்செய்தியைத் தெரிவித்து, நபி(ஸல்) அவர்கள் கூறியதையும் தெரிவித்தேன். அவர்கள் '(எனக்கு நேரவிருக்கும் அந்தத் துன்பத்தின் போது) அல்லாஹ்வே (பொறுமையைத் தந்து) உதவி புரிபவன் ஆவான்'' என்றார்கள். 249

பகுதி 120

(ஆழ்ந்த சிந்தனையில் உள்ள) ஒருவர் தம் கையிலுள்ள பொருளால் நிலத்தைக் கீறுவது.

6217 அலீ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ('பகீஉல் ஃகர்கத்' எனும் பொது மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அவர்கள் ஒரு தடியால் தரையைக் கீறிய வண்ணம் (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், 'தம் இருப்பிடம் சொர்க்கமா அல்லது நரகமா எனத் தீர்மானிக்கப்படாத ஒருவரும் உங்களில் இல்லை'' என்று கூறினார்கள்.

அப்போது மக்கள் (சிலர்), 'நாங்கள் (இதையே) நம்பி (நல்லறங்கள் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார் பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்'' எனும் (திருக்குர்ஆன் 92:5-7 ஆகிய) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 250

பகுதி 121

ஆச்சரியம் மேலிடும்போது இறைவனை; பெருமைப்படுத்துவதும் துதிப்பதும். 251

(ஒரு நாள் இரவில்) நபி(ஸல்) அவர்கள் (திடீரென) விழித்தெழிந்து (பிரமிப்புடன்), 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன். இன்றிரவு) இறக்கிவைக்கப்பட்ட கருவூலங்கள் தாம் என்ன? (இன்றிரவு) இறக்கி வைக்கப்பட்ட குழப்பங்கள் தாம் என்ன? இந்த அறைகளில் உள்ள பெண்களை எழுப்பிவிடுகிறவர் யார்? தம் துணைவியர் குறித்தே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் (அல்லாஹ்வைத்) தொழட்டும்! ஏனெனில், இவ்வுலகில் உடையணிந்திருக்கும் எத்தனையோ பெண்கள் மறுமையில் நிர்வாணமானவர்களாய் இருப்பார்கள்'' என்று கூறினார்கள். 252

உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் நபி(ஸல்) அவர்களிடம், 'தங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?' என்று (ஒரு சந்தர்ப்பத்தில்) கேட்டேன். அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நான் (ஆச்சரியப்பட்டவாறு) 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னேன் 253

6219 நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாள்களில் (மஸ்ஜிதுந்நபவீ) பள்ளிவாசலில் 'இஃதிகாஃப்' இருந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளி வாசலுக்குச்) சென்றேன். (அந்த) இரவில் சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்ல எழுந்தபோது, என்னை அனுப்பி வைப்பதற்காக என்னுடன் நபி(ஸல்) அவர்களும் எழுந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான உம்மு ஸலமா(ரலி) அவர்களின் இல்லத்தை ஒட்டியிருந்த பள்ளிவாசலின் வாயில் அருகில் வந்தபோது அன்சாரிகளில் இருவர் எங்களைக் கடந்து சென்றனர். அவர்கள் இருவரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சலாம் கூறிவிட்டுப் போய்க் கொண்டேயிருந்தனர். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இருவரையும் பார்த்து, 'சற்று பொறுங்கள்! (என்னுடன் இருக்கும்) இந்தப் பெண் ஸஃபிய்யா பின்த் ஹுயை தான்'' என்றார்கள். அந்த இருவரும் (வியப்புடன்) 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்), இறைத்தூதர் அவர்களே!'' என்றனர். நபி(ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை அவர்கள் இருவருக்கும் பளுவாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் ஆதமின் மகனின் (மனிதனின்) இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் (சந்தேகம் அல்லது தீய எண்ணம் எதையாவது) அவன் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்'' என்றார்கள். 254

பகுதி 122

கல்சுண்டு விளையாட்டு ('கத்ஃப்') தடை

6220. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்.

கல்சுண்டு விளையாட்டிற்கு ('கத்ஃப்') நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள், 'அது வேட்டைப் பிராணியையும் கொல்லாது; எதிரியையும் வீழ்த்தாது. மாறாக, அது கண்ணைப் பறித்து விடும்; பல்லை உடைத்துவிடும்'' என்றார்கள்.255

பகுதி 123

தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்வது.

6221. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கருகில் இரண்டு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக' என்று) மறுமொழி கூறினார்கள். மற்றொருவருககு மறுமொழி கூறவில்லை. அப்போது அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'இவர் (தும்மியவுடன்) 'அல்ஹம்துலில்லாஹ்' என்று இறைவனைப் புகழ்ந்தார். அவர், 'அல்ஹம்து லில்லாஹ்' என்று இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். அவருக்கு மறுமொழி பகரவில்லை)'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 124

தும்மியவர் ('அல்ஹம்துலில்லாஹ்' என்று) அல்லாஹ்வைப் புகழ்ந்தால், அவருக்கு ('யர்ஹமுகல்லாஹ் - அல்லாஹ் உமக்குக் கருணைபுரிவானாக' என்று) மறுமொழி கூறுவது.

இது குறித்து அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.256

6222. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள்.

எங்களுக்குக் கட்டளையிட்ட ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது.

2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது.

3. தும்மிய(வர் 'அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று கூறினால் அ)வருக்கு ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என்று) மறுமொழி கூறுவது.

4. விருந்து அழைப்பை ஏற்றுக் கொள்வது.

5. சலாமுக்கு (முகமனுக்கு) பதில் உரைப்பது

6. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது.

7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது.

(ஆண்களாகிய) எங்களுக்கு அவர்கள் தடை செய்த ஏழு விஷயங்கள் இவைதாம்:

1. 'தங்க மோதிரம் அணிவது' அல்லது 'தங்க வளையம் அணிவது' 2. சாதாரணப் பட்டு அணிவது. 3. அலங்காரப் பட்டு அணிவது. 4. மென்பட்டு அணிவது 5. மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. 257

பகுதி 125

தும்மல் விரும்பத்தக்கது; கொட்டாவி விரும்பத்தகாதது. 258

6223. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('யர்ஹமுக்கல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) 'ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 126

தும்மிய(வர் அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அவ)ருக்கு எவ்வாறு மறுமொழி கூற வேண்டும்?

6224. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நீங்கள் தும்மினல், 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) 'உங்கள் சகோதரர்' அல்லது 'நண்பர்' யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக 'யர்ஹமுக்கல்லாஹ்' என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) 'யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்' (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 127

தும்மியவர் 'அல்ஹம்துலில்லாஹ்' (-எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லவில்லையானால், அவருக்கு (''யர்ஹமுக்காஹ் - அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்'' என்று) மறுமொழி சொல்லத் தேவையில்லை.

6225. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கருகில் இருவர் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி(ஸல்) அவர்கள் ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என) மறுமொழி கூறினார்கள். இன்னொருவருக்கு மறுமொழி கூறவில்லை. அப்போது அந்த மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! இவருக்கு மறு மொழி கூறினீர்கள். எனக்கு மறுமொழி கூறவில்லையே!'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் (தும்மியவுடன்) ('அல்ஹம்துலில்லாஹ்' என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் ('அல்ஹம்துலில்லாஹ்' என்று கூறி) இறைவனைப் புகழவில்லை. (எனவே, இவருக்கு மறுமொழி பகர்ந்தேன். உமக்கு மறுமொழி பகரவில்லை)'' என்று பதிலளித்தார்கள். 260

பகுதி 128

கொட்டாவி வரும்போது வாயில் கையை வைத்துக் (கட்டுப்படுத்திக்) கொள்ளவேண்டும்.

6226. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். எனவே, ஒருவர் தும்மியவுடன் 'அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ('அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக' என) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைக் கட்டப்படுத்தட்டும். ஏனெனில், உங்களில் ஒருவர் (கட்டுப்படுத்தாமல் 'ஹா' என்று சப்தமிட்டுக்) கொட்டாவிவிட்டால் அதைப் பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 261
Previous Post Next Post