அத்தியாயம் 38 ஹவாலா

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 38

ஹவாலா

(ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல் 'ஹவாலா' எனப்படும்.)

பகுதி 1

ஹவாலாவை ஏற்றவர் பிறகு மாறலாமா?

''கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகிவிட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும்!' என்று ஹஸன் பஸரீ(ரஹ்) கதாதா(ரஹ்) ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

''இரண்டு பங்காளிகளுக்கிடையிலோ வாரிசுகளுக்கிடையிலோ சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்த பின்னர், இவரின் இருப்புக்கோ அவரின் கடனுக்கோ இழப்பு ஏற்பட்டால் அதற்கு அவரவரே பொறுப்பு!' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

2287. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!'

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

ஒருவருக்கு வரவேண்டிய கடன் ஒரு பணக்காரர் மீது மாற்றப்பட்டால் அதை அவர் மறுக்கக் கூடாது.

2288. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 3

இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு இன்னொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும்.

2289. லைமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. 'நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். 'ஏதேனும் (சொத்தை) இவர்விட்டுச் சென்றிருக்கிறாரா?' என்று நபி(ஸல்) கேட்டபோது 'இல்லை' என்றனர். நபி(ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது 'இறைத்தூதர் அவர்களே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு 'நபி(ஸல்) அவர்கள் 'இவர் கடனாளியா?' என்று கேட்டபோது 'ஆம்' எனக் கூறப்பட்டது. 'இவர் ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரோ?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'இல்லை' என்றனர். 'இவர் கடனாளியா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டபோது 'மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார்' என்று நபித்தேழர்கள் கூறினார். நபித்தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்' என்றனர். அப்போது அபூ கதாதா(ரலி) 'இவரின் கடனுக்கு நான் பொறுப்பு; தொழுகை நடத்துங்கள்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்
Previous Post Next Post