அத்தியாயம் 48 பிரார்த்தனைகள்

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 48
பிரார்த்தனைகள்

பாடம் : 1 அல்லாஹ்வை நினைவுகூருமாறு வந்துள்ள தூண்டல்.
5195. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன்.
அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலம் இடமாக விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5196. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு சாண் அளவு என்னை முன்னோக்கி வந்தால் ஒரு முழம் அளவு அவனை நான் முன்னோக்கிச் செல்வேன். ஒரு முழம் அளவு அவன் என்னை முன்னோக்கி வந்தால், (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு அவனை நான் முன்னோக்கிச் செல்வேன். இரு கை நீட்டளவு அவன் என்னை முன்னோக்கி வந்தால், அதைவிட விரைவாக (நெருங்கி) அவனிடம் நான் செல்வேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5197. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது "ஜும்தான்” எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, "செல்லுங்கள்: இது "ஜும்தான்" மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்" என்று சொன்னார்கள்.
மக்கள், "தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 2 அல்லாஹ்வின் திருநாமங்களும் அவற்றை மனனமிட்டவரின் சிறப்பும்.
5198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("அவற்றை மனனமிட்டவர்" என்பதைக் குறிக்க "மன் ஹஃபிழஹா" என்பதற்குப் பகரமாக) "மன் அஹ்ஸாஹா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
5199. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது (நூற்றுக்கு ஒன்று குறைவான) பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 3 இறைவனிடம் பிரார்த்திக்கும்போது வலியுறுத்திக் கேட்க வேண்டும். "நீ நினைத்தால் வழங்குவாயாக!" என்று கேட்கலாகாது.
5200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால் பிரார்த்தனையில் (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். "இறைவா! நீ நினைத்தால் எனக்கு வழங்குவாயாக!" என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்பந்திப்பதாகாது.) ஏனெனில்,இறைவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5202. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் பிரார்த்திக்கும்போது "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! நீ நினைத்தால் எனக்குக் கருணை புரிவாயாக!" என்று கேட்க வேண்டாம். (மாறாக) பிரார்த்திக்கும்போது (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். ஏனெனில், இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன். அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 4 ஒருவர் தமக்கு நேர்ந்த துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்புவது வெறுக்கத்தக்கதாகும்.
5203. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "தம்மைத் தாக்கிவிட்ட துன்பத்தின் காரணத்தால்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
5204. நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அனஸ் (ரலி) அவர்கள், "உங்களில் யாரும் மரணத்தை விரும்பவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிராவிட்டால், இறப்பை நான் விரும்பியிருப்பேன்" என்று கூறினார்கள்.
நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவித்தபோது, (அவர்களுடைய தந்தை) அனஸ் (ரலி) அவர்கள் உயிரோடு இருந்தார்கள்.
அத்தியாயம் : 48
5205. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடம் (அவர்களை உடல் நலம் விசாரிக்கச்) சென்றோம். அவர்கள் (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காக) தமது வயிற்றில் ஏழுமுறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் "மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திராவிட்டால், மரணத்தை வேண்டி நான் பிரார்த்தித்திருப்பேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5206. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வருவதற்கு முன்பே அதை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால்,அவரது (நற்)செயல் நின்றுவிடுகிறது. இறைநம்பிக்கையாளருக்கு அவரது ஆயுள் நன்மையையே அதிகமாக்கும்.
அத்தியாயம் : 48
பாடம் : 5 யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
5207. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5208. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறைமறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும்போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்" என்று (விளக்கம்) சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5209. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான். (ஆனால்,) மரணமோ அல்லாஹ்வைச் சந்திப்பதற்கு முன்பே நிகழ்ந்துவிடுகிறது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5210. ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(இதைக் கேட்ட) நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் போன்று இருந்தால் நாங்கள் (அனைவரும்) அழிந்தோம்" என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கூற்று யாருக்குப் பொருந்துகிறதோ அவர் (உண்மையில்) அழிந்தவர்தான். அது என்ன (ஹதீஸ்)?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று கூறினார்கள். எங்களில் மரணத்தை வெறுக்காதவர் யாருமில்லையே?" என்று சொன்னேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறத்தான் செய்தார்கள். ஆனால்,இதன் விளக்கம் நீங்கள் நினைப்பதைப் போன்றில்லை. பார்வை நிலை குத்தி, மூச்சிறைத்து, ரோமக்கால்கள் சிலிர்த்து நின்று, கைவிரல்கள் மடங்கிக் கொள்ளும் (மரண)வேளையில், யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" (என்பதே அதற்கு விளக்கம்) என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5211. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 6 இறைவனை நினைவுகூரல் (திக்ர்), பிரார்த்தனை (துஆ), இறைவனை நெருங்குதல் ஆகியவற்றின் சிறப்பு.
5212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்து கொள்வேன். அவன் என்னிடம் பிரார்த்திக்கும்போது அவனுடன் நான் இருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5213. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான்:
என் அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 48
5214. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவு கூர்ந்தால் நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோரிடையே அவன் நினைவுகூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடையே அவனை நான் நினைவுகூருவேன்.
அவன் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5215. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன்.
யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் அவருக்கு உண்டு. அல்லது நான் அதை விடக் கூடுதலாகவும் (அவருக்கு) வழங்குவேன்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 7 இம்மையிலேயே தண்டனையை விரைவாக வழங்கிவிடுமாறு பிரார்த்திப்பது வெறுக்கத்தக்கதாகும்.
5216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்" என்று கூறினார்.
அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) "அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) "உன்னால் அதைத் தாங்க முடியாது". அல்லது "உன்னால் அதற்கு இயலாது" என்று கூறிவிட்டு, நீ "இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.
பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 48
5217. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒருவரை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று மாறிவிட்டிருந்தார்.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், "இறைவனின் வேதனையைத் தாங்க உனக்குச் சக்தி இல்லை" என்று கூறியதாகக் காணப்படுகிறது. "பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 8 இறைவனை நினைவுகூரும் அவைகளின் சிறப்பு.
5218. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் -அவர்களை நன்கறிந்திருந்தும்- "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?" என்று (தனக்குத் தெரியாதது போலக்)கேட்கிறான். வானவர்கள், "அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்"
என்பார்கள். அதற்கு இறைவன், "அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?" என்று கேட்பான்.
அதற்கு வானவர்கள், "இல்லை, இறைவா!" என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான்.
மேலும், "உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்" என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?" என்று கேட்பான். அதற்கு வானவர்கள், "உன் நரகத்திலிருந்து, இறைவா!" என்று பதிலளிப்பார்கள்.
இறைவன், "அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?" என்று கேட்பான். வானவர்கள், "இல்லை" என்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான்.
மேலும், "அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்" என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், "அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்" என்று கூறுவான்.
அப்போது வானவர்கள், "இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்துகொண்டான்" என்று கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், "அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 9 "இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் (எங்களுக்கு) நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!" என்று பிரார்த்திப்பதன் சிறப்பு.
5219. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கத்தாதா (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்துவந்த பிரார்த்தனை எது?" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்துவந்த பிரார்த்தனை, "அல்லாஹும்ம! ஆத்தினா ஃபித் துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்" (இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் (எங்களுக்கு) நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!") என்பதாகும்" என்று விடையளித்தார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்ய நாடினால் இந்தப் பிரார்த்தனையையே செய்வார்கள். வேறு பிரார்த்தனைகள் செய்யும்போதும் இதைச் சேர்த்துக் கொள்வார்கள்.
அத்தியாயம் : 48
5220. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரப்பனா! ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்" (எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 10 லாயிலாஹ இல்லல்லாஹ் ("அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை") என்று உறுதிமொழிவது, சுப்ஹானல்லாஹ் ("அல்லாஹ் தூய்மையானவன்") என்று துதிப்பது மற்றும் பிரார்த்திப்பது ஆகியவற்றின் சிறப்பு.
5221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும்.
மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான ஒரு) நற்செயல் புரிந்தால் தவிர.
"சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் படுகின்றன; அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5222. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5223. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை கிடையாது. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் பத்து முறை ஓதுகிறாரோ அவர், இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் நால்வரை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்தவரைப் போன்றவர் ஆவார்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:)
அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் இந்த (மவ்கூஃப்) ஹதீஸை எனக்கு அறிவித்த சுலைமான் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதை அறிவித்துள்ளார்கள். அதில் அறிவிப்பாளர் ஷஅபீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்களிடம், "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள். ஆகவே, நான் அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களிடம் சென்று, "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடமிருந்து" என்று பதிலளித்தார்கள்.
ஆகவே, நான் இப்னு அபீலைலா (ரஹ்) அவர்களிடம் சென்று, "இதை யாரிடமிருந்து தாங்கள் செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களிடமிருந்து (நான் செவியுற்றேன்)" என்று சொன்னார்கள். (ஆகவே, இது அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்களின் சொல்லன்று; நபி (ஸல்) அவர்களின் ஹதீஸாகும்.)
அத்தியாயம் : 48
5224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை:)
1. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்குஅறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5225. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வ லாயிலாஹ இல்லல்லாஹு, வல்லாஹு அக்பர்" (அல்லாஹ் தூயவன்;அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று நான் கூறுவதானது, சூரியன் எதன் மீது உதிக்கிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5226. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் சொல்லிக் கொள்ள எனக்கு ஏதேனும் (துதி) வாக்கியத்தைக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு,அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, சுப்ஹானல்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அஸீஸில் ஹகீம் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அல்லாஹ் மிகவும் பெரியவன். அவனைப் பெரியவன் எனப் பெருமைப்படுத்துகிறேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என அதிகமாகப் புகழுகிறேன். அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ் (அனைத்துக் குறைபாடுகளிலிருந்தும்) தூய்மையானவன். மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அல்லாஹ்வின் உதவியின்றி யுக்தியுமில்லை; சக்தியுமில்லை.) என்று சொல்வீராக!" என்று கூறினார்கள்.
அதற்கு அந்தக் கிராமவாசி, "இவை என் இறைவனுக்குரியவையாகும். எனக்குரியவை என்ன?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும் மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸுக்னீ" என்று சொல்வீராக! என்றார்கள். (பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எனக்குக் கருணை புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக!")
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "வ ஆஃபினீ" (எனக்கு ஆரோக்கியம் வழங்குவாயாக!) என்ற சொல்லும் இந்த ஹதீஸில் உள்ளதா என என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், மூசா அல்ஜுஹனீ அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5227. தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (புதிதாக) இஸ்லாத்தைத் தழுவியவருக்கு "அல்லாஹும் மஃக்ஃபிர் லீ வர்ஹம்னீ, வஹ்தினீ, வர்ஸுக்னீ" என்று (கூறுமாறு) கற்பித்து வந்தார்கள். (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக; எனக்குக் கருணை புரிவாயாக; என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு வாழ்வாதராம் வழங்குவாயாக!)
அத்தியாயம் : 48
5228. தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் புதிதாக இஸ்லாத்தைத் தழுவினால், அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் கற்றுக்கொடுப்பார்கள். பிறகு "அல்லஹும்மஃக்பிர் லீ வர்ஹம்னீ வஹ்தினீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" எனும் இந்த வாக்கியங்களைச் சொல்லிப் பிரார்த்திக்கும்படி கட்டளையிடுவார்கள். (பொருள்: இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! என்னை நல்வழியில் செலுத்துவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக!)
அத்தியாயம் : 48
5229. தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக" என்றார்கள்.
இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, "இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 48
5230. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 11 குர்ஆனை ஓதுவதற்கும் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் ஒன்றுகூடுவதன் சிறப்பு.
5231. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிரமப்படுவோருக்கு உதவி செய்வது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5232. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும்போது, அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களைக் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5233. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்து, "நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வின்மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர்.
முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள்மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) வட்டமாக அமர்ந்திருந்த தம் தோழர்களில் சிலரிடம் வந்து, "நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழி காட்டியதற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத் தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! உங்கள்மீது சந்தேகம் கொண்டுச் சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்" என்று தெரிவித்தார் என்றார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 12 பாவமன்னிப்புக் கோருவதும் அதை அதிகமாகச் செய்வதும் விரும்பத்தக்கதாகும்.
5234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உள்ளத்தின் மீதும் திரையிடப்படுகிறது. நான் ஒவ்வொரு நாளும் நூறு முறை அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அஃகர்ரு பின் யசார் அல்முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நான் ஒவ்வொரு நாளும் அவனிடம் நூறுமுறை பாவமன்னிப்புக் கோருகிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5236. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுகமுடிவுக்கு)முன் யார் பாவமன்னிப்புக் கோரித் திருந்திவிடுகிறாரோ அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 13 மெல்லிய குரலில் இறைவனைத் துதிப்பதே விரும்பத்தக்கதாகும்.
5237. அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது மக்கள் உரத்த குரலில் "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) என்று (தக்பீர்) கூறலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மென்மையாக (மெதுவாக)க் கூறுங்கள். (ஏனெனில்), நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. (மாறாகச்) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்" என்று சொன்னார்கள்.
அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்று கூறிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ""லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்லுங்கள்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5238. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு மலைக் கணவாயில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஒவ்வொரு கணவாயில் ஏறும்போதும் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று (உரத்த குரலில்) அழைக்கலானார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. (எனவே, மெதுவாக அவனை அழையுங்கள்)" என்று சொன்னார்கள்.
பிறகு "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸே" (என்றழைத்து), "சொர்க்கத்தின் கருவூலங்களில் உள்ள ஒரு வார்த்தையை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தின்போது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.
அத்தியாயம் : 48
5239. மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒர் அறப்போருக்குச் சென்றோம்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் "நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவன் உங்களுடைய வாகனப் பிராணியின் கழுத்தைவிட உங்களுக்கு மிகவும் அருகிலிருக்கிறான்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. அந்த அறிவிப்பில் "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 48
5240. அபூமூசா அல்அஷ்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""சொர்க்கத்தின் கருவூலங்களில் உள்ள ஒரு வார்த்தையை" அல்லது "சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை" உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (அறிவியுங்கள்)" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்த வார்த்தை) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (என்பதாகும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 48
5241. அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "தொழுகையில் (அத்தஹிய்யாத் இருப்பில்) நான் பிரார்த்திப்பதற்கு ஒரு பிரார்த்தனையை எனக்குக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டேன். அப்போது "அல்லாஹும்ம இன்னீ ழலம்த்து நஃப்சீ ழுல்மன் கபீரன் (அல்லது கஸீரன்) வலா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. ஃபஃக்ஃபிர்லீ மஃக்ஃபிரத்தம் மின் இந்திக்க வர்ஹம்னீ. இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்" என்று கூறுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
(பொருள்: இறைவா! எனக்கு நானே பெருமளவில் (அல்லது "அதிகமாக") அநீதி இழைத்துக் கொண்டேன். உன்னைத் தவிர வேறெவரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன்னிடமிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக! மேலும், எனக்குக் கருணை புரிவாயாக! நிச்சயமாக நீ பெரிதும் மன்னிப்பவனும் அதிகக் கருணையுடையவனும் ஆவாய்.)
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் எனது தொழுகையிலும் எனது இல்லத்திலும் பிரார்த்திக்க ஒரு பிரார்த்தனையைக் கற்றுத்தாருங்கள்" என்று கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் "அதிகமாக (கஸீரன்) அநீதி இழைத்துக்கொண்டேன்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 14 குழப்பங்கள் (சோதனைகள்) முதலியவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5242. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு இறைவனிடம் வேண்டிப்) பிரார்த்தித்து வந்தார்கள்: அல்லாஹும்ம! ஃப இன்னீ அஊது பிக்க மின் ஃபித்னத்திந் நாரி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் கப்ரி, வ அதாபில் கப்ரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃபக்ரி, வ அஊது பிக்க மின் ஷர்ரி ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அல்லாஹும்மஃக்சில் கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப். அல்லாஹும்ம! ஃப இன்னீ அஊது பிக்க மினல் கசலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரம்."
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நரகத்தின் சோதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும்,மண்ணறையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும், செல்வத்தின் சோதனையின் தீங்கிலிருந்தும் வறுமையின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்; (மகா பொய்யன்) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
இறைவா! பனிக்கட்டி நீராலும் ஆலங்கட்டி நீராலும் என்னிலிருந்து என் பாவங்களைக் கழுவி விடுவாயாக! நீ வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவதைப் போன்று என் உள்ளத்தைத் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக! இறைவா! சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 15 இயலாமை, சோம்பல் உள்ளிட்டவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5243. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி வல்கசலி, வல்ஜுப்னி,வல்ஹரமி, வல்புக்ல். வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் (வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்)" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5244. அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (மேற்கண்ட) பல்வேறு அம்சங்களிலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் காக்குமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.
அத்தியாயம் : 48
5245. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் புக்லி, வல்கசலி, வ அர்த லில் உமுரி, வ அதாபில் கப்ரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்" எனப் பிரார்த்தித்து வந்தார்கள்.
(பொருள்: இறைவா! கருமித்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாத வயதிலிருந்தும், மண்ணறையின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அத்தியாயம் : 48
பாடம் : 16 விதியின் கேடு, அழிவில் வீழ்வது உள்ளிட்டவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5246. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விதியின் கேடு, அழிவில் வீழ்வது, எதிரிகள் (கைகொட்டிச்) சிரிக்கும் நிலைக்கு ஆளாவது, தாங்க முடியாத சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் அந்நாஜித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுகிறது: "இந்த நான்கில் ஒன்றை நான்தான் கூடுதலாக அறிவித்துவிட்டேனோ என்று சந்தேகப்படுகிறேன்" என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 48
5247. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.
(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5248. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக" என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.
இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுல மிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ மாலைப் பொழுதை அடையும்போது, "அஊது பிகலி மாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தேள் கொட்டிவிட்டது" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 48
பாடம் : 17 உறங்கச் செல்லும்போது படுக்கையில் கூற வேண்டியவை.
5249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள். பிறகு உன் வலப் பக்கத்தில் சாய்ந்து படு. பிறகு "அல்லாஹும்ம! இன்னீ அஸ் லம்த்து வஜ்ஹீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க; ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக் கல்லதீ அன்ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த" என்று ஓதிக்கொள்.
(பொருள்: இறைவா! எனது முகத்தை உனக்குக் கீழ்ப்படியச் செய்துவிட்டேன். என் காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். என் முதுகை உன்னளவில் சாய்த்து விட்டேன். உன்மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை. நீ அருளிய உனது வேதத்தையும் நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்.)
இந்தப் பிரார்த்தனையை (இரவின்) இறுதிப் பேச்சாக ஆக்கிக்கொண்டு, அன்றைய இரவில் நீ இறந்துவிட்டால், (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் நீ இறந்தவன் ஆவாய்.
இதன் அறிவிப்பாளரான பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இவற்றை நினைவிலிருத்துவதற்காகத் திரும்ப ஓதிக்காட்டினேன். அப்போது ("நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன்" என்பதற்குப் பதிலாக) "நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்" என்று நான் சொல்லிவிட்டேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அனுப்பிய உன் நபியையும் நான் நம்பினேன் என்று சொல்வீராக" என (திருத்தி)க் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் மன்சூர் (ரஹ்) அவர்களது (மேற்கண்ட) அறிவிப்பே முழுமையானதாகும். ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் (இறக்காமல்) காலைப் பொழுதை அடைந்தாலும் நன்மையையே அடைந்துகொண்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
5250. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், நீ இரவில் படுக்கைக்கு (உறங்க)ச் செல்லும்போது, "அல்லாஹும்ம! அஸ்லம்த்து நஃப்சீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹீ இலைக்க, வ அல்ஜஃத்து ழஹ்ரீ இலைக்க, வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க; ரக்ஃபத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க, ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன்ஸல்த்த வபி ரசூலிக்கல்லதீ அர்சல்த்த" என்று சொல்லும்படி உத்தரவிட்டார்கள்.
"அவர் (இவ்வாறு பிரார்த்தித்துவிட்டு உறங்கும்போது) இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்" என்றும் கூறினார்கள்.
(பொருள்: இறைவா! என்னை நான் உன்னிடம் ஒப்படைத்தேன். என் முகத்தை உன்னளவில் திருப்பிவிட்டேன். எனது முதுகை உன்னளவில் சாய்த்துவிட்டேன். என் காரியங்கள் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். உன்மீதுள்ள அன்பிலும் அச்சத்திலும்தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடம் இல்லை. நீ அருளிய உன்னுடைய வேதத்தையும் நீ அனுப்பிய உன் ரசூலையும் நான் நம்பினேன்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரவில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 48
5251. மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன மனிதரே! நீர் உமது படுக்கைக்குச் செல்லும்போது (இவ்வாறு சொல்வீராக...)" என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆயினும் அதில், ("நீ அனுப்பிய உன்னுடைய ரசூலையும் நம்பினேன்" என்பதற்குப் பகரமாக) "நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நான் நம்பினேன்" என்று கூறியதாகவும், (இவ்வாறு பிராத்தித்துவிட்டு) அன்றிரவிலேயே நீ இறந்துவிட்டால் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபிலேயே இறந்தவன் ஆவாய். காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால், (இந்தப் பிரார்த்தனைகளின்) நன்மைகளைப் பெற்றுக்கொள்வாய்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு பிரார்த்திக்குமாறு) ஒரு மனிதருக்கு உத்தரவிட்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "நீ காலையில் (உயிருடன் விழித்து) எழுந்தால் (இந்தப் பிரார்த்தனைக்கான) நன்மையைப் பெற்றுக்கொள்வாய்" எனும் குறிப்பு காணப்படவில்லை.
அத்தியாயம் : 48
5252. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்போது, "அல்லாஹும்ம! பிஸ்மிக்க அஹ்யா, வ பிஸ்மிக்க அமூத்து (இறைவா! உனது பெயராலேயே உயிர் பெறுகிறேன்; உனது பெயர் கூறியே இறக்கிறேன்.) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து விழித்தெழும்போது, "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நம்மை இறக்கச்செய்த பின்னர் நமக்கு உயிரூட்டினான். மேலும், அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.)" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 48
5253. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒருவர் உறங்கச் செல்லும்போது "அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா" (இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றிக்கொள்கிறாய். அதன் இறப்பும் வாழ்வும் உனக்கே உரியன. அதை நீ உயிரோடு விட்டுவைத்தால் அதை நீ காப்பாற்றுவாயாக! அதை நீ இறக்கச் செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்) என்று கூறும்படி உத்தரவிட்டார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "இதைத் தாங்கள் தங்கள் தந்தை உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்களைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5254. சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(எங்கள் தந்தை) அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள், எங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, "அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்தி வ ரப்பல் அர்ளி வ ரப்பல் அர்ஷில் அழீம். ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். ஃபாலிக்கல் ஹப்பி வந்நவா வ முன்ஸிலத் தவ்ராத்தி வல்இன்ஜீலி வல்ஃபுர்கான், அஊது பிக்க மின் ஷர்ரி குல்லி ஷையின். அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ், அல்லாஹும்ம! அன்த்தல் அவ்வலு; ஃப லைஸ கப்லக்க ஷைஉன், வ அன்த்தல் ஆகிரு; ஃப லைஸ பஅதக்க ஷைஉன். வ அன்த்தழ் ழாஹிரு; ஃப லைஸ ஃபவ்கக்க ஷைஉன், வ அன்த்தல் பாத்தினு; ஃப லைஸ தூனக்க ஷைஉன், இக்ளி அன்னா அத்தைன வ அஃக்னினா மினல் ஃபக்ர்"என்று கூறும்படி உத்தரவிடுவார்கள். மேலும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும் கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அரியணையின் அதிபதியே! எங்கள் இறைவா! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிரி(த்து தாவர வர்க்கத்தை முளைப்பி)ப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை அருளியவனே!
அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்; உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன்; உனக்குக் கீழே வேறொன்றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமையிலிருந்து காத்து எங்களைத் தன்னிறைவு கொள்ளச்செய்வாயாக!)
அத்தியாயம் : 48
5255. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் உறங்கச் செல்லும்போது மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி பிரார்த்திக்கும் படி உத்தரவிடுவார்கள்" என்று காணப்படுகிறது. மேலும் அதில், ("மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ்" என்பதற்குப் பகரமாக) "மின் ஷர்ரி குல்லி தாப்பத்தின் அன்த்த ஆகிதும் பிநாஸியத் திஹா" என்று இடம்பெற்றுள்ளது.
(பொருள்: அனைத்து உயிரினங்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய்.)
அத்தியாயம் : 48
5256. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (ஒரு முறை) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (தமக்கு ஒத்தாசையாகப் பணிபுரிய) அடிமை ஒருவரைத் தருமாறு கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்திஸ் ஸப்இ..." (இறைவா! ஏழு வானங்களின் அதிபதியே!...)" என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி பிரார்த்திக்குமாறு கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
5257. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது. பிறகு படுக்கத் தயாராகும்போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, பின்வருமாறு பிரார்த்தியுங்கள்:
சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ பிக்க வளஅத்து ஜன்பீ, வ பிக்க அர்ஃபஉஹு, இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா. வ இன் அர்சல்த் தஹா ஃபஹ்ஃபழ்ஹா பி மா தஹ்ஃபழு பிஹி இபாதக்கஸ் ஸாலிஹீன்.
(பொருள்: இறைவா! நீ (அனைத்துக் குறைகளிலிருந்தும்) தூய்மையானவன். என் இரட்சகா! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக்கொண்டால், அதை மன்னிப்பாயாக! அதை நீ (உன் வசம் வைத்துக்கொள்ளாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக!)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("சுப்ஹானக்கல்லாஹும்ம! ரப்பீ!" என்பதற்குப் பகரமாக) பிஸ்மிக்க ரப்பீ வளஅத்து ஜன்பீ (என் அதிபதியே! உன் பெயரால் என் விலாவை (தரையில்) வைத்தேன்)" என்றும், ("ஃப இன் அம்சக்த்த நஃப்சீ ஃபக்ஃபிர் லஹா" என்பதற்குப் பகரமாக) "ஃப இன் அஹ்யய்த்த நஃப்சீ ஃபர்ஹம்ஹா" என்றும் காணப்படுகிறது. (பொருள்: அதை நீ உயிரோடு வாழச்செய்தால் அதற்கு நீ கருணை புரிவாயாக!)
அத்தியாயம் : 48
5258. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது "அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ சகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய" என்று கூறுவார்கள்.
(பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.)
அத்தியாயம் : 48
பாடம் : 18 செய்தவற்றின் தீங்கிலிருந்தும் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் இறைவனிடம் பாதுகாப்புக் கோரல்.
5259. ஃபர்வா பின் நவ்ஃபல் அல்அஷ்ஜஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து, வ மின் ஷர்ரி மா லம் அஃமல்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் எனப் பதிலளித்தார்கள்.
(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஃபர்வா பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிய பிரார்த்தனை குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து. வ ஷர்ரி மா லம் அஃமல்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஃபர்வா பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("வ ஷர்ரி மா லம் அஃமல்" என்பதற்குப் பகரமாக) "வ மின் ஷர்ரி மா லம் அஃமல்" என்று சிறிய வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
5260. ஃபர்வா பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் "அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து வ ஷர்ரி மா லம் அஃமல்" என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும், நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அத்தியாயம் : 48
5261. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம! லக்க அஸ்லம்த்து, வ பிக்க ஆமன்த்து, வ அலைக்க தவக்கல்த்து, வ இலைக்க அனப்த்து, வ பிக்க காஸம்த்து. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி இஸ்ஸத்திக்க,லாயிலாஹ இல்லா அன்த்த, அன் துளில்லனீ, அன்த் தல் ஹய்யுல்லதீ லா யமூத்து, வல்ஜின்னு வல்இன்ஸு யமூத்தூன்" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உனக்கே அடிபணிந்தேன். உன்மீதே நம்பிக்கை கொண்டுள்ளேன். உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன் உதவியாலேயே (எதிரிகளிடம்) வழக்காடுவேன். இறைவா! நான் வழிதவறாமலிருக்க உனது வல்லமையின் மூலம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை. ஜின் இனத்தாரும் மனித குலத்தாரும் இறந்துவிடுவார்கள்; ஆனால் நீ இறக்காமல் நிலைத்திருப்பவன்.)
அத்தியாயம் : 48
5262. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்து, அதிகாலை முன்நேரத்தை அடைந்தால், "சமிஅ சாமிஉன் பி ஹம்தில்லாஹி வ ஹுஸ்னி பலாயிஹி அலைனா. ரப்பனா ஸாஹிப்னா. வ அஃப்ளில் அலைனா. ஆயிதம் பில்லாஹி மினந் நார்"என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: அல்லாஹ் நமக்குப் புரிந்த நல்லுபகாரத்திற்காக அவனை நாம் போற்றிப் புகழ்வதைக் கேட்பவர் கேட்டுவிட்டார். (அல்லது கேட்பவர் பிறருக்கு எடுத்துரைக்கட்டும்.) எங்கள் இரட்சகா! எங்களுடன் வருவாயாக! எங்கள்மீது கருணை பொழிவாயாக! நரக நெருப்பிலிருந்து காப்பாயாக!)
அத்தியாயம் : 48
5263. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: அல்லாஹும் மஃக்ஃபிர் லீ கத்தீஅத்தீ, வ ஜஹ்லீ, வ இஸ்ராஃபீ ஃபீ அம்ரீ, வ மா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அல்லாஹும்மஃக்ஃபிர்லீ ஜித்தீ, வ ஹஸ்லீ வ கத்தஈ வ அம்தீ, வ குல்லு தாலிக்க இந்தீ. அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து, வ மா அஉலன்த்து. வ மா அன்த்த அஉலமு பிஹி மின்னீ. அன்த்தல் முகத்திமு வ அன்த்தல் முஅக்கிரு. வ அன்த்த அலா குல்லி ஷையின் கதீர்.
(பொருள்: இறைவா! என் குற்றத்தையும் அறியாமையையும் என் செயலில் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னிப்பாயாக. மேலும், என்னைவிட நீ எதையெல்லாம் அறிந்துள்ளாயோ அதையும் மன்னிப்பாயாக! இறைவா! நான் வினையாகச் செய்ததையும் விளையாட்டாகச் செய்ததையும் தவறுதலாகச் செய்ததையும் வேண்டுமென்றே செய்ததையும் மன்னிப்பாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.
இறைவா! நான் முன்பு செய்ததையும் (அதன்) பின்பு செய்ததையும் இரகசியமாகச் செய்ததையும் பகிரங்கமாகச் செய்ததையும் என்னைவிட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னிப்பாயாக! நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். நீயே பின்னடைவு ஏற்படுத்துபவன். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்.)
- மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5264. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துவந்தார்கள்:
அல்லாஹும்ம! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ.
வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ.
வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ.
வஜ்அலில் ஹயாத்த ஸியாதத்தன் லீ ஃபீ குல்லி கைர்.
வஜ்அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்.
(பொருள்: இறைவா! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்துவாயாக!
நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்துவாயாக!
நான் திரும்பி வரவுள்ள மறுமையை எனக்குச் சீர்படுத்துவாயாக!
வாழ்க்கையை, எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்வதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!
மரணத்தை, எல்லாத் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புப் பெறுவதற்கு எனக்குக் காரணமாக்குவாயாக!)
அத்தியாயம் : 48
5265. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா, வத்துகா, வல் அஃபாஃப வல் ஃகினா" என்று பிரார்த்தித்துவந்தார்கள்.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("சுய கட்டுப்பாடு" என்பதைக் குறிக்க "அஃபாஃப்"என்பதற்குப் பகரமாக) "அல்இஃப்பத்த" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
5266. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்ததைப் போன்றுதான் நான் உங்களிடம் அறிவிக்கிறேன்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்:
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லா ஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யக்ஷஉ, வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.
(பொருள்: இறைவா! உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும் சோம்பலிலிருந்தும் கோழைத்தனத்திலிருந்தும் கருமித்தனத்திலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதைத் தூய்மைப்படுத்துவாயாக! அதைத் தூய்மைப்படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன்; அதன் காவலன். இறைவா! உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும் உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் திருப்தியடையாத மனத்திலிருந்தும் ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5267. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை நேரத்தை அடையும்போது, "அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ்;வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூடுதலாக மனனமிட்டதாகவும் என்னிடம் அறிவித்தார்கள்:
லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம! அஸ்அலுக்க கைர ஹாதி ஹில் லைலா. வ அஊது பிக்க மின் ஷர்ரி ஹாதிஹில் லைலா. வ ஷர்ரி மா பஅதஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்.
(பொருள்: ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். இறைவா! உன்னிடம் நான் இந்த இரவின் நன்மையை வேண்டுகிறேன். மேலும், உன்னிடம் நான் இந்த இரவின் தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையிலுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5268. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடையும்போது "அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ். வல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள், "லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து,வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" என்றும் இப்ராஹீம் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று கூறுகிறார்கள்.
(பொருள்: அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்.)
மேலும், நபி (ஸல்) அவர்கள், "ரப்பி! அஸ்அலுக்க கைர மா ஃபீஹாதிஹில் லைலத்தி வ கைர மா பஅதஹா. வ அஊது பிக்க மின் ஷர்ரி மா ஃபீஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரி மா பஅதஹா. ரப்பி! அஊது பிக்க மினல் கசலி, வ சூயில் கிபர். ரப்பி! அஊது பிக்க மின் அதாபின் ஃபிந்நாரி, வ அதாபின் ஃபில்கப்ர்" என்றும் கூறுவார்கள்.
(பொருள்: என் இறைவா! இந்த இரவிலுள்ள நன்மையையும் அதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். இந்த இரவிலுள்ள தீங்கிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். என் இறைவா! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.என் இறைவா! நரக நெருப்பிலுள்ள வேதனையிலிருந்தும் மண்ணறையிலுள்ள வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் காலைப் பொழுதை அடையும்போது "அஸ்பஹ்னா. வ அஸ்பஹல் முல்க்கு லில்லாஹ்" (நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். காலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.) என்று கூறி (மற்றதையும் ஓதி)னார்கள்.
அத்தியாயம் : 48
5269. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடையும்போது "அம்சைனா வ அம்சல் முல்க்கு லில்லாஹ். வல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, அல்லாஹும்ம! இன்னீ அஸ்அலுக்க மின் கைரி ஹாதிஹில் லைலா. வ கைரி மா ஃபீஹா. வ அஊது பிக்க மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஃபீஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் கசலி, வல்ஹரமி, வ சூயில் கிபரி, வ ஃபித்னத்தித் துன்யா, வ அதாபில் கப்ர்" என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் மாலைப் பொழுதை அடைந்தோம். மாலைப் பொழுதின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக யாருமில்லை.
இறைவா! இந்த இரவின் நன்மையையும் அதற்குப் பின்னுள்ள நன்மையையும் உன்னிடம் நான் வேண்டுகிறேன். அதன் தீமையிலிருந்தும் அதற்குப் பின்னுள்ள தீமையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! சோம்பலிலிருந்தும் தள்ளாமையிலிருந்தும் முதுமையின் கேட்டிலிருந்தும் இம்மையின் சோதனையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹசன் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதில் ("லா ஷரீக்க லஹு - அவனுக்கு இணையாக யாருமில்லை என்பதற்குப் பிறகு) "லஹுல் முல்க்கு. வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (ஆட்சி அவனுக்கே உரியது. புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக ஸுபைத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூடுதலாக அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5270. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு. வஹ்தஹு. அஅஸ்ஸ ஜுன்தஹு. வ நஸர அப்தஹு. வ ஃகலபல் அஹ்ஸாப வஹ்தஹு. ஃபலா ஷைய்அ பஅதஹு" என்று கூறிவந்தார்கள்
(பொருள்: அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவினான். கூட்டுப் படையினரை அவனே தனியொருவனாக வென்றான். அவனுக்குப் பின்னால் (நிலையானது) வேறெதுவும் இல்லை.)
அத்தியாயம் : 48
5271. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஹ்தினீ, வ சத்தித்னீ" (இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பீராக. அப்போது (வழி தவறியவனுக்குச் சரியான) வழியை நீர் காட்டுவதையும், (வளைந்த) அம்பை நிமிர்த்தி நேராக்குவதையும் நினைத்துக் கொள்வீராக" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஹுதா வஸ்ஸதாத" (இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் நேர்மையையும் வேண்டுகிறேன்) என்று சொல்வீராக என்றார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகி, தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள் இடம்பெறுகின்றன.
அத்தியாயம் : 48
பாடம் : 19 பகலின் ஆரம்ப நேரத்திலும் உறங்கச் செல்லும்போதும் இறைவனைத் துதித்தல்.
5272. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.
நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)" என்றார்கள்.
(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையைத் தொழச் சென்றபோது, அல்லது அதிகாலைத் தொழுகையைத் தொழுது முடித்தபின் என்னைக் கடந்து சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் (அந்த நான்கு சொற்களைச் சற்று வித்தியாசத்துடன்) "சுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி, சுப்ஹானல்லாஹி ரிளா நஃப்சிஹி, சுப்ஹானல்லாஹி ஸினத்த அர்ஷிஹி, சுப்ஹானல்லாஹி மிதாத கலிமாத் திஹி" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
(பொருள்: அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவன் உவக்கும் அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனது அரியணையின் எடையளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)
அத்தியாயம் : 48
5273. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட்டார். அப்போது போர்க் கைதிக(ளான அடிமைக)ள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். ஆகவே, (தம் பணிகளில் தமக்கு உதவ அடிமையொருவரைக் கேட்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணமுடியவில்லை. (எனவே,) ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.
அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு, எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். எனது நெஞ்சின் மீது அவர்களது பாதம் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணர்ந்தேன் (அந்த அளவுக்கு அவர்கள் எங்களிடையே நெருக்கமாக அமர்ந்தார்கள்).
பிறகு அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும் சொல்லுங்கள். அது உங்கள் இருவருக்கும் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நீங்கள் இருவரும் இரவில் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது..." என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது:
அலீ (ரலி) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை" என்று சொன்னார்கள். அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை" என்று பதிலளித்தார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்டேன் என அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
5274. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா (ரலி) அவர்கள் பணியாள் ஒருவரைக் கேட்பதற்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். தமது பணி(ச்சுமை) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது "நம்மிடம் உனக்குப் பணியாளர் கிடைக்கப்போவதில்லை. பணியாளர் ஒருவரை விடச் சிறந்த ஒன்றை உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உனது படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" என்றும், முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" என்றும் சொல்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 20 சேவல் கூவும்போது, இறைவனிடம் பிரார்த்திப்பது விரும்பத்தக்கதாகும்.
5275. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சேவல் கூவுகின்ற சப்தத்தைக் கேட்டால், அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள். ஏனெனில், அது வானவரைப் பார்த்திருக்கிறது (அதனால்தான் கூவுகின்றது.); கழுதை கத்தும் சப்தத்தைக் கேட்டால்,ஷைத்தானிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (அதனால்தான் கத்துகிறது.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 21 துன்பத்தின்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்:
லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம்.
லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம்.
(பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றால் பிரார்த்தித்து வந்தார்கள்; துன்பம் நேரும்போது அவ்வாறு கூறிவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றாலும் ("ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி") என்பதற்குப் பகரமாக "ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி (வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியுமான) என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு எதேனும் மனக்கவலை ஏற்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதனுடன், "லாயிலாஹ இல்லல் லாஹு ரப்புல் அர்ஷில் கரீம் (மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 22 சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கின்றேன்) என்று துதிப்பதன் சிறப்பு.
5277. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக" "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
5278. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தையை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான (அந்த) வார்த்தையை எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினேன். அதற்கு, "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வார்த்தை "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்பதாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 23 கண்ணெதிரே இல்லாத முஸ்லிம்களுக்காகப் பிரார்த்திப்பதன் சிறப்பு.
5279. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்திக்கும் போது, வானவர் "உனக்கும் அதைப் போன்றே கிடைக்கட்டும்!" என்று கூறாமல் இருப்பதில்லை.
இதை அபுத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5280. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், "ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!" என்று கூறுகிறார்.
இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா (ரலி) அவர்களின் மனைவி) உம்முத் தர்தா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5281. ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தர்தா (ரஹ்) அவர்கள் ஸஃப்வான் (ரஹ்) அவர்களின் மனைவியாக இருந்தார் (என்பது குறிப்பிடத்தக்கது). ஸஃப்வான் கூறுகிறார்:
நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காணமுடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், "இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?" என்று கேட்டார்.
நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில்,நபி (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும்போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக்கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்" என்று கூறினார்கள்.
பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 24 உணவு உண்ட பின்பும் பானம் பருகிய பின்பும் "அல்ஹம்து லில்லாஹ்" கூறுவது விரும்பத்தக்கதாகும்.
5282. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முறை உணவு உண்ட பின்னர் அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற, அல்லது ஒரு முறை பானம் அருந்திய பிறகு அதற்காக அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்கின்ற அடியான் குறித்து அல்லாஹ் உவகை கொள்கிறான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
பாடம் : 25 "நான் பிரார்த்தித்தேன். என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை" என்று கூறி அவசரப்படாத வரையில் ஒருவரது பிரார்த்தனை ஏற்கப்படுகிறது.
5283. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் பிரார்த்தித்தேன். ஆனால், என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை" என்று கூறி, உங்களில் ஒருவர் அவசரப்படாத வரையில் அவரது பிரார்த்தனை ஏற்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5284. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் என் இறைவனிடம் பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்க வில்லை" என்று கூறி,உங்களில் ஒருவர் அவசரப்படாத வரையில் அவரது பிரார்த்தனை ஏற்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 48
5285. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! "அவசரப்படுதல்" என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு, "ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை" என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 48
பாடம் : 26 சொர்க்கவாசிகளில் பெரும்பாலோர் ஏழைகளாவர்; நரகவாசிகளில் பெரும்பாலோர் பெண்களாவர் என்பதும் பெண்களால் ஏற்படும் சோதனை பற்றிய விளக்கமும்.
5286. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (சொர்க்கத்தில் நுழைந்துவிடாமல் கேள்வி கணக்கிற்காகத்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்; ஆனால், (தனவந்தர்களில்) நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு ஆணையிடப்பட்டிருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5287. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு வசிப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் வசிப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் நரகத்தை எட்டிப்பார்த்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற் றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5288. அபுத்தய்யாஹ் யஸீத் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு இரு துணைவியர் இருந்தனர். அவர் (ஒருமுறை) அவ்விருவரில் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் வந்தபோது, "இன்னவளிடமிருந்து வருகிறீர்களா?" என்று அந்த மற்றொரு மனைவி கேட்டார்.
அதற்கு முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள், "நான் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து வருகிறேன். இம்ரான் (ரலி) அவர்கள், "சொர்க்கத்தில் வசிப்போரில் மிகவும் குறைவானவர்கள் பெண்களே" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள், "எனக்கு இரு துணைவியர் இருந்தனர்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகி,மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 48
5289. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் ஸவாலி நிஅமத்திக்க, வ தஹவ்வுலி ஆஃபியத்திக்க, வ ஃபுஜாஅத்தி நிக்மத்திக்க, வ ஜமீஇ சகத்திக்க" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது.
(பொருள்: இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய (ஆரோக்கியம், செல்வம் போன்ற) நன்மைகள் (நோய், வறுமை போன்ற தீங்குகளாக) மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அத்தியாயம் : 48
5290. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் வேறு எந்தச் சோதனையையும் என(து வாழ்நாளு)க்குப் பிறகு நான் விட்டுச்செல்லவில்லை.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5291. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களுக்குப் பெண்களைவிட அதிகமாக இடரளிக்கும் எந்தச் சோதனையையும் நான் எனக்குப் பின்னால் மக்களிடையே விட்டுச்செல்லவில்லை.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசாமா பின் ஸைத் (ரலி) மற்றும் சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 48
5292. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகம் இனிமையானதும் பசுமையானதும் ஆகும். அதில் உங்களை அல்லாஹ் பொறுப்பாளர்களாக ஆக்கி,நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்க்கிறான். ஆகவே, இவ்வுலகத்தின் சோதனையிலிருந்தும் பெண்களின் சோதனையிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ இஸ்ராயீல் சமதாயத்தாரிடையே நடைபெற்ற முதல் குழப்பம் பெண்களால்தான் ஏற்பட்டது.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பஷ்ஷார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக (அவ்வாறு இனிமையும் பசுமையும் நிறைந்ததாக அதை ஆக்கியுள்ளான்)" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 48
பாடம் : 27 குகையில் சிக்கிக்கொண்ட மூவரின் நிகழ்ச்சியும், நல்லறங்களை முன்வைத்து உதவி கோருவதும்.
5293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில்) மூன்று பேர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது (திடீரென) மழை பிடித்துக்கொண்டது. ஆகவே, அவர்கள் மலைக்குகையொன்றில் ஓதுங்கினார்கள். (அவர்கள் உள்ளே நுழைந்த) உடனே மலையிலிருந்து உருண்டுவந்த ஒரு பாறை குகைவாசலை அடைத்துக்கொண்டது. (வெளியேற முடியாமல் திணறிய) அவர்கள் (மூவரும்) அப்போது தமக்குள், "நாம் (வேறெவருடைய திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக (என்று தூய்மையான முறையில்) செய்த நற்செயல்களை நினைத்துப் பார்த்து, அவற்றை முன்வைத்து அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அவன் நம்மை விட்டு இதை அகற்றிவிடக்கூடும்" என்று பேசிக்கொண்டனர்.
எனவே, அவர்களில் ஒருவர் இவ்விதம் (இறைவனிடம்) வேண்டினார்:
இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருவரும் மனைவியும் இருந்தனர். எனக்குச் சிறு குழந்தைகளும் உண்டு. நான் இவர்களைப் பராமரிப்பதற்காக ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தேன். மாலையில் அவர்களிடம் நான் திரும்பி வந்த பின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து, என் குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு முன்பாக என் தாய் தந்தையருக்கு முதலில் ஊட்டுவேன். ஒரு நாள் இலை தழைகளைத் தேடியபடி வெகுதூரம் சென்றுவிட்டேன். அதனால் அந்திப் பொழுதிலேயே (வீட்டுக்கு) வர முடிந்தது.
அப்போது (என் தாய் தந்தை) இருவரும் உறங்கிவிட்டிருக்கக் கண்டேன். உடனே எப்போதும் போல பால் கறந்து, பால் செம்புடன் வந்தேன். பெற்றோரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட மனமில்லாமல் அவர்கள் இருவருடைய தலைமாட்டில் நின்றுகொண்டேன். அவர்கள் இருவருக்குமுன் குழந்தைகளுக்கு ஊட்டுவதையும் நான் விரும்பவில்லை. என் குழந்தைகளோ எனது காலருகில் (பால் கேட்டுக்) கூச்சலிட்டுக்கொண்டிந்தனர். இதே நிலையில் நானும் அவர்களும் இருந்து கொண்டிருக்க, வைகறை வந்துவிட்டது.
(இறைவா!) நான் இச்செயலை உனது உவப்பை நாடியே செய்தேன் என்று நீ கருதியிருந்தால், எங்களுக்கு இந்தப் பாறையைச் சற்றே நகர்த்துவாயாக! அதன் வழியாக நாங்கள் ஆகாயத்தைப் பார்த்துக்கொள்வோம்.
அவ்வாறே அவர்களுக்கு அல்லாஹ் பாறையைச் சற்றே நகர்த்திக்கொடுத்தான். அதன் வழியாக அவர்கள் ஆகாயத்தைப் பார்த்தார்கள்.
இரண்டாமவர் பின்வருமாறு வேண்டினார்:
இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய புதல்வி ஒருத்தி இருந்தாள். பெண்களை ஆண்கள் நேசிப்பதிலேயே மிகவும் ஆழமாக அவளை நான் நேசித்தேன். (ஒரு நாள்) அவளிடம் அவளைக் கேட்டேன். நான் அவளிடம் நூறு பொற்காசுகள் கொண்டுவந்து கொடுத்தால் தவிர (எனக்கு இணங்க முடியாதென) அவள் மறுத்துவிட்டாள். நான் கடுமையாக உழைத்து, (அந்த) நூறு பொற்காசுகளைச் சேகரித்தேன்.
அவற்றை எடுத்துக்கொண்டு சென்று அவளைச் சந்தித்து, அவளுடைய இரு கால்களுக்கிடையே அமர்ந்தபோது அவள், "அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள். முத்திரையை அதற்குரிய (சட்டபூர்வ) உரிமை(யான திருமணம்) இன்றித் திறவாதே" என்று சொன்னாள். உடனே நான் அவளை விட்டுவிட்டு எழுந்துவிட்டேன்.
(இறைவா!) இதை உனது உவப்பைப் பெறவிரும்பியே நான் செய்ததாக நீ கருதினால், இந்தப் பாறையை எங்களுக்காக இன்னும் சற்று நகர்த்துவாயாக! அவ்வாறே அவர்களுக்கு (அல்லாஹ் இன்னும்) சற்றே நகர்த்தினான்.
மற்றொருவர் (பின்வருமாறு) வேண்டினார்: இறைவா! நான் ஒரு "ஃபரக்" அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்து கூலியாள் ஒருவரை பணியமர்த்தினேன். அவர் தமது வேலையை முடித்து விட்டு, "என் உரிமையை (கூலியை)க் கொடு" என்று கேட்டார். நான் ஒரு "ஃபரக்" அளவு நெல்லை அவர்முன் வைத்தபோது அதை அவர் (பெற்றுக்கொள்ளாமல்) புறக்கணித்து(ச் சென்று)விட்டார்.
பின்னர் நான் அதை நிலத்தில் விதைத்துத் தொடர்ந்து விவசாயம் செய்துவந்தேன். அதி(ல் கிடைத்த வருவாயி)லிருந்து பல மாடுகளையும் அவற்றுக்கான இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். பின்னர் (ஒரு நாள்) அவர் என்னிடம் வந்து, "அல்லாஹ்வை அஞ்சு! எனது உரிமையில் எனக்கு அநீதி இழைக்காதே" என்று கூறினார்.
அதற்கு நான், "அந்த மாடுகளிடத்திலும் அவற்றின் இடையர்களிடத்திலும் நீ சென்று, அவற்றை எடுத்துக்கொள். (அவை உனக்கே உரியவை)" என்று சொன்னேன். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வை அஞ்சு. என்னைப் பரிகாசம் செய்யாதே" என்று சொன்னார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்யவில்லை. இந்த மாடுகளையும் இடையர்களையும் நீயே எடுத்துக்கொள்" என்று சொன்னேன். அவர் அவற்றைப் பிடித்துக்கொண்டு சென்றார்.
(இறைவா!) நான் இந்த (நற்)செயலை உன் உவப்பைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதியிருந்தால் மீதியுள்ள அடைப்பையும் நீ அகற்றுவாயாக!
அவ்வாறே மீதியிருந்த அடைப்பையும் அல்லாஹ் அகற்றி (அவர்களை வெளியேற்றி) விட்டான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அனைவரது அறிவிப்பிலும் ("அவர்கள் மூவரும் நடந்து சென்றுகொண்டிருந்தனர்" என்பதைக் குறிக்க) "கரஜூ யம்ஷூன" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. சாலிஹ் பின் கைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "யத்தமாஷவ்ன" என்று காணப்படுகிறது.
உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "புறப்பட்டுச் சென்றனர்" என்று இடம்பெற்றுள்ளது. ("நடந்து சென்றனர்" என்று இல்லை.)
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் மூன்றுபேர் கொண்ட ஒரு குழுவினர் நடந்து சென்றனர். இறுதியில் இரவு ஓய்வு எடுப்பதற்காக ஒரு குகைக்குள் ஒதுங்கினர்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ள விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆயினும் அவற்றில், "ஒரு மனிதர் "இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய பெற்றோர் இருந்தார்கள். நான் இரவில் அவர்கள் இருவருக்கும் பால் கறந்து கொடுப்பதற்குமுன் குடும்பத்தாருக்கோ குழந்தைகளுக்கோ பால் கொடுப்பதில்லை" என்று கூறியதாகவும், மற்றொருவர், "அவள் (எனக்கு இணங்க) மறுத்துவிட்டாள். பஞ்சம் நிறைந்த ஓராண்டு வந்தபோது (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) அவள் என்னிடம் வந்தாள். (அவளை அடைந்துகொள்வதற்காக) அவளிடம் நான் நூற்று இருபது பொற்காசுகளைக் கொடுத்தேன்" என்று சொன்னதாகவும்,இன்னொருவர், "அவரது கூலியை முதலீடாக்கி (நான் விவசாயம் செய்து அதனால் கால்நடைச்) செல்வங்கள் பெருகி,ஆரவாரம் செய்து கொண்டிருந்தன" என்று கூறியதாகவும் காணப்படுகிறது.
மேலும், "பிறகு அவர்கள் மூவரும் அந்தக் குகையிலிருந்து வெளியேறி நடந்தனர்" என்றும் இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post