புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 5 நோன்பு
நோன்பு
670 ''ஓரிரு நாட்கள் நோன்புடன் ரமளானை எதிர் கொள்ளாதீர்கள். எவரேனும் வேறு நோன்பு நோற்பவராக இருப்பின் அவர் நோற்றுக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
671 ''சந்தேகத்திற்குரிய நாளில் எவர் நோன்பு நோற்றாரோ, அவர், அபுல் காஸிமுக்கு (எனக்கு) மாறு செய்தார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார்.
இது புகாரியில் 'முஅல்லக்' எனும் தரத்திலும், மவ்ஸூல் எனும் தரத்திலும், இப்னு குஸைமா, அஹ்மத், அபீதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸாயீ ஆகிய நூல்களில் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
672 ''பிறையைப் பார்த்து நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள். இன்னும் பிறையைப் பார்த்து நோன்பை முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் மீது மேகம் சூழ்ந்திருந்தால் அதற்காக (நாட்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
''உங்களுக்கு மேகமூட்டதால் சந்தேகம் ஏற்படுமாயின் அதற்காக முப்பது (நாட்களைக்) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்'' என்று முஸ்லிமிலும், ''முப்பது நாட்களை பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்'' என்று புகாரியிலும் உள்ளது.
673 புகாரியுடைய மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா(ரலி) வாயிலாக, ''ஷஅபானுடைய முப்பது நாட்களைக் பூர்த்தியாக்கிக் கொள்ளுங்கள்'' என்று உள்ளது.
674 மக்கள் பிறையைப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்களிடம் நானும் பார்த்தாகச் செய்தி கொடுத்தேன். (அதனால்) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
675 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு நாட்டுப் புறத்தார் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பிறையைப் பார்த்து விட்டேன்'' என்று கூறினார். அதற்கு, ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என, நீ சாட்சி கூறுகிறாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
676 ''ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் எவர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஃப்ஸர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
திர்மிதீ மற்றும் நஸயீயில் இது மவ்கூஃப் எனும் தரத்தைப் பெற்றுள்ளது. இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் மர்ஃபூஃ ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ''இரவில் எவர் (நோன்பிற்கான) நிய்யத் செய்யவில்லையோ, அவருக்கு நோன்பு இல்லை' எனும் வாசகம் தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது.
677 ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் நுழைந்து ''(உண்பதற்கு) ஏதாவது உள்ளதா?'' என்று கேட்டார்கள். நாங்கள் ''இல்லை'' என்றோம். அப்போது அவர்கள், ''நான் நோன்பாளியாக உள்ளேன்'' என்று கூறினார்கள். பின்னர் மறுநாள் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். ''அன்பளிப்பாக மாவு கொஞ்சம் வந்துள்ளது'' என்று நான் கூறினேன். ''அதைக் கொண்டு வாருங்கள். நான் நோன்பாளியாக காலை நேரத்தை அடைந்தேன் என்று கூறினார்கள். பின்னர் அதை உண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
678 ''நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சவுத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
679 ''ஆரம்பநேரத்தில், (விரைவாக) நோன்பைத் துறப்பவனே என்னுடைய அடியார்களில் என்னிடம் அதிக அன்பிற்குரியவன் ஆவான்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
680 ''ஸஹர் செய்யுங்கள் (சாப்பிடுங்கள்) ஏனெனில், அதில் பரக்கத் (அருள்வளம்) உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
681 ''உங்களில் எவரேனும் நோன்பைத் துறந்தால், அவர் பேரீச்சம்பழத்தைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். அது அவருக்குக் கிடைக்கவில்லை எனில், தண்ணீரைக் கொண்டு நோன்பு துறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சுலைமான் இப்னு ஆமிர் அள்ளப்பிய்யி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் இது ஸஹீஹ் என்னும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
682 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை செய்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டதற்கு, ''உங்களில் யார் என்னைப் போன்றுள்ளார்? என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான். நீர் புகட்டுகின்றான்'' என்று சொன்னார்கள். தொடர் நோன்பைக் கைவிட அவர்கள் மறுத்த போது அவர்களுடன் சேர்ந்து ஒரு நாள் தொடர் நோன்பு நோற்றார்கள். மறுநாளும் நோற்றார்கள். பின்னர் பிறையைக் கண்டார்கள். பின்னர் பிறையைக் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''பிறை தெரியத் தாமதமாம் இருந்தால் நான் இன்னும் அதிகமாக உங்களை நோன்பு நோற்கச் செய்திருப்பேன்'' என்று அவர்கள் தொடர் நோன்பை கைவிட மறுத்ததைக் கண்டிப்பது போல் கூறினார்கள். புகாரி, முஸ்லிம்
683 ''எவர் பொய் சொல்வதையும், அதன்படி செயல்படுவதையும், செயல்படுவதையும், முட்டாள் தனத்தையும் விட்டுவிடவில்லையோ; அவர் உண்ணுவதையும், பருகுவதையும் விட்டு விடுவது அல்லாஹ்விற்குத் தேவை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
684 நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியை) முத்தமிடுவார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் கட்டியணைப்பார்கள். ஆனால், அவர்கள் தம் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தியுடையவராக இருந்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
685 நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
686 நபி(ஸல்) அவர்கள் பகீஃ எனும் இடத்தில் ரமளான் மாதத்தில் இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் வந்து ''இரத்தம் குத்தி எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் நோன்பை முறித்துக் கொண்டார்'' என்று கூறினார்கள் என, ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, மற்றும் இப்னுமாஜா
அஹ்மத், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
687 ஜஃபர் இப்னு அபீதாலிப் அவர்கள். நோன்பு நோற்ற நிலையில் இரத்தம் குத்தி எடுக்கும் போது, நபி(ஸல்) அவர்கள் அவரைக் கடந்து செல்கையில், ''இருவரும் நோன்பை முறித்துக் கொண்டனர்'' என்று கூறினார்கள். (அப்போது இரத்தம் குத்தி எடுப்பது தடுக்கப்பட்டிருந்தது). அப்போது தான் நான் நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வது, விரும்பத் தகாததாக ஆக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும். பின்னர் நபி(ஸல்) அவர்கள் நோன்பாளிகளுக்கு இரத்தம் குத்தி எடுத்துக் கொள்ள சலுகை அளித்து விட்டார்கள். மேலும், நோன்பு நோற்ற நிலையில் அனஸ்(ரலி) அவர்கள், இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள் என்று அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். தாரகுத்னி
இது பலமான அறிவிப்பாளர்களைக் கொண்ட ஹதீஸாகும்.
688 நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் சுர்மா போட்டுக் கொண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமான எந்த ஒரு ஹதீஸும் ஸஹீஹ் எனும் தரத்தில் இல்லையென திர்மிதீயில் உள்ளது.
689 எவர் நோன்பிருக்கும் நிலையில் மறதியாக உண்ணுகிறாரோ, பருகுகிறாரோ அவர் தம்முடைய நோன்பைப் பூர்த்தியாக்கிக் கொள்ளட்டும். (நோன்பை முறித்து விட வேண்டாம்). ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணச் செய்தான்; பருகச் செய்தான் என நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
690 ''எவர் ரமளான் மாதத்தில் மறதியாக நோன்பை முறித்து விட்டாரோ, அவர் மீது களாவும் இல்லை; பரிகாரமும் இல்லை'' என்று ஹாம்மில் இடம் பெற்றுள்ளது. மேலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
691 எவருக்கு (நோன்பு நோற்ற நிலையில்) அவரையும் மீறி வாந்தி வந்ததோ அவர் மீது (நோன்பு)களா இல்லை. இன்னும் எவர் (நோன்பு நோற்ற நிலையில் வேண்டுமென்றே வாந்தி எடுத்து விட்டாரோ, அவர் மீது (நோன்பு)களாவாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
அஹ்மதில் இது 'மஃலூல்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாரகுத்னீயில் 'பலமானது' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
692 நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொண்ட ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கி வெளியேறினார்கள். அப்போது 'குரா உல் கமீம்' எனும் இடத்தை அடையும் வரை நோன்பு நோற்றார்கள். மக்களும் நோன்பு நோற்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதை உயர்த்தினார்கள். மக்களனை வரும் அதைப் பார்த்தனர். நபி(ஸல்) அவர்கள் அதனைக் குடித்து விட்டார்கள். அதற்குப் பின்னரும் சிலர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் நோன்பு நோற்றவர்களாகவே உள்ளனர் என்ற செய்தி அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு ''அவர்கள் பாவிகள்! அவர்கள் பாவிகள்!'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.
693 (அப்போது) நிச்சயமாக அந்த மக்களுக்கு நோன்பு நோற்பது கஷ்டமாக இருக்கிறது. அவர்கள், (நபியாகிய) தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகைக்குப் பின் அதைக் குடித்தார்கள் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
694 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் பயணத்திலும் நோன்பு நோற்க சக்தி பெற்றவனாக இருக்கிறேன். அதனால் என் மீது குற்றமாகுமா?'' என்று நான் கேட்டதற்கு, ''இது அல்லாஹ்விடம் இருந்து வந்துள்ள சலுகையாகும். எவர் அதை எடுத்துக் கொண்டாரோ அவர் சிறப்படைந்தார். இன்னும் எவர் நோன்பு நோற்க விரும்பினாரோ அவர் மீது குற்றமில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹம்ஸா இப்னு அம்ர் அல் அஸ்லமீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) கேட்டதாக ஆயிஷா(ரலி) வாயிலாக புகாரி, முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
695 ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக, ஓர் ஏழைக்கு ஸஹர் மற்றும் இப்தார், உணவு உண்ணச் செய்ய வேண்டும். களா செய்ய வேண்டியது இல்லை என்று வயோதிகர்களுக்கு நபி(ஸல்) அவர்களால் சலுகை அளிக்கப்ட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னி, ஹாகிம்
இரண்டிலும் இது ''ஸஹீஹ்'' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
696 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்'' என்று கூறியதற்கு, ''எது உன்னை அழித்தது?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''ரமளானில் என் மனைவியுடன் உறவு கொண்டு விட்டேன்'' என்று கூறினார். ''உன்னால் ஒர் அடிமையை விடுதலை செய்ய இயலுமா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ''இயலாது'' என்றார். ''அப்படியானால், அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க இயலுமா?'' என்று கேட்டார்கள். அதற்கும் ''இயலாது'' என்றார்.
பின்னர் (அங்கேயே) அமர்ந்து கொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு தட்டு கொடுக்கப்பட்டது. அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன. (அதை அவரிடம் வழங்கி) ''இதை தர்மம் செய்வீராக!'' என்றனர். அதற்கவர், ''எங்களை விட ஏழைகளுக்கா? இந்த மதீனாவிற்குள் எங்களை விட ஏழைகள் எவரும் இல்லையே?'' என்றார். அதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். ''நீர் சென்று உமது குடும்பத்தாருக்கு இதை வழங்குவீராக!'' என்றும் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், நஸயீ, திர்மிதி, மற்றும் இப்னு மாஜா.
இங்கு முஸ்லிமின் வாசம் இடம் பெற்றுள்ளது.
697 நபி(ஸல்) அவர்கள் உடலுறவு கொண்டு, குளிப்பு கடமையான நிலையில் காலை நேரத்தை அடைந்து பின்னர் குளிப்பார்கள். மேலும் நோன்பு நோற்பார்கள் என்று ஆயிஷா மற்றும் உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார் புகாரி, முஸ்லிம்
'அவர்கள் களாச் செய்யமாட்டார்கள்' எனும் வாசகம் உம்மு ஸலமா(ரலி) வாயிலாக முஸ்லிமில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
698 ''தன் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் எவர் இறந்து விடுகிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளர் நோற்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்
உபரின நோன்பு மற்றும், நோன்பு தடை செய்யப்பட்ட நாட்கள்
699 அரஃபா தின நோன்பு பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை மன்னித்து விடும்'' என்று கூறினார்கள். இன்னும் ஆஷூராதின நோன்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, நோன்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, ''கடந்த வருடத்தின் பாவங்களை மன்னித்து விடு'' என்று கூறினார்கள். இன்னும் அவர்களிடம் திங்கள் கிழமை நோன்பு பற்றி கேட்கப்பட்டதற்கு, ''அந்நாளில் தான் நான் பிறந்தேன். அதில் நான் (நபியாக) அனுப்பப்பட்டேன். அதில் தான் என் மீது (குர்ஆன்) அருளப்பட்டது'' என்று அவர்கள் கூறினார்கள் என, அபூகத்தாதா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
700 ''ரமளான் மாதத்தின் நோன்பை நோற்ற ஒருவர், ''பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பை நோற்பாரானால், அவ்வருடம் முழுவதும் அவர் நோன்பு நோற்றவர் போன்றாவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
701 ''எவர் அல்லாஹ்வுடைய பாதையில் ஒருநாள் நோன்பு நோற்கிறாரோ, அவருடைய முகத்தை நரக நெருப்பை விட்டு எழுபதாண்டு கால அளவுக்கு தூரமாக்காமல் அல்லாஹ் விடுவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
702 நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்காமலிருக்க மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்பார்கள். இன்னும் அவர்கள் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கூறுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருப்பார்கள். ரமளான் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் முழுமையாக நோன்பு நோற்றவராக நபி(ஸல்) அவர்களை நான் பார்க்கவில்லை. இன்னும் அவர்கள் ஷஅபான் மாதத்தில் நோன்பு நோற்ற அளவு மற்ற மாதத்தில் நோன்பு நோற்று நான் பார்த்ததில்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இங்கு இடம் பெற்றுள்ளது.
703 மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, திர்மிதீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
704 ''கணவன் இருக்கும் நிலையில் அவனுடைய அனுமதியில்லாமல் ஒரு பெண் (நஃபிலான) நோன்பு நோற்பது ஆகுமானதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது. ''ரமளானைத் தவிர'' எனும் வாசகம் அபூ தாவூதில் அதிகப்படியாக உள்ளது.
705 ''யவ்முல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்று அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
706 ''அய்யாமுத் தஷ்ரிக் (ஹஜ் பெருநாளுக்குப் பின்புள்ள மூன்று நாட்கள்) உண்பதற்கும், பருகுவதற்கும், அல்லாஹ்வை நினைவு கூர்வதற்கும் உள்ள நாட்களாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுபைஷா அல்ஹுதலிய்யீ (ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
707 பலிப்பிராணி கிடைக்காத நபரைத் தவிர்த்து மற்றவர்கள் அய்யாமுத் தஷ்ரிக் நாட்களில் நோன்பு நோற்க அனுமதி இல்லை என இப்னு உமர்(ரலி) மற்றும் ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி
708 ''வெள்ளிக்கிழமை இரவன்று நின்று வணங்குவதற்கு ஏனைய இரவுகளை விட முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். வழக்கமாக (தொடர்ந்து) நோன்பு நோற்பவரைத் தவிர, வேறு எவரும் மற்ற தினங்களை விட வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
709 ''உங்களில் எவரும் வெள்ளிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்காதீர்கள். அதற்கு முன்பு ஒருநாள் அல்லது அதற்குப் பின்பு ஒருநாள் நோன்பு நோற்பதைத் தவிர'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
710 ''ஷஅபான் மாதத்தின் பாதிப்பகுதியை அடைந்துவிட்டால் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
711 கடமையாக்கப்பட்ட நோன்பைத் தவிர்த்து உங்களில் எவரும் சனிக்கிழமை (மட்டும்) நோன்பு நோற்க வேண்டாம். உங்களில் எவரேனும் (அன்று எதுவும் கிடைக்கப் பெறாமல்) திராட்சைத் தோலையோ அல்லது ஏதேனும் மரக்குச்சியையோ பெற்றுக் கொண்டால், அதை (யாவது) மென்று கொள்ளவும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸம்மா பின்த்து புஸ்ர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
இது மாலிக்கில் முன்கர் மற்றும் அபூதாவூதில் மன்ஸூக் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
712 நபி(ஸல்) அவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக நோன்பு நோற்பவராக இருந்தார்கள். ''இவை இரண்டும் இணை வைப்பாளர்களின் பெருநாட்கள். நான் அவர்களுக்கு மாறு செய்ய விரும்புகிறேன்'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். நஸயீ
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இப்னு குஸைமாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
713 அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (ஹாஜிகள்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு குஸைமாவிலும் ஹாம்மிலும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
714 ''எவர் காலமெல்லாம் நோன்பு நோற்றாரோ அவர் நோன்பு நோற்கவே இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
715 அபூகதாதா(ரலி) வாயிலாக, ''அவர் நோன்பு நோற்கவும் இல்லை. நோன்பு நோற்காமல் இருக்கவுமில்லை'' எனும் வாசகம் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
இஃதிகாப் மற்றும் ரமளான் இரவுகளில் நின்று வணங்குதல்.
716 ''இறை நம்பிக்கையோடும், நன்மையை நாடியும் எவர் ரமளானில் (இரவுகளில்) நின்று வணங்குகிறாரோ அவருடைய கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
717 நபி(ஸல்) அவர்கள் (ரமளானுடைய இறுதிப் பத்து நாட்களை) அடைந்து விட்டால், வரிந்து கட்டிக் கொண்டு இரவு முழுவதும் விழித்திருப்பார்கள். தம்முடைய குடும்பத்தார்களையும் எழுப்பி விடுவார்கள்'' என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
718 நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மரணத்தை அளிக்கும் வரை ரமளானுடைய இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள். அவர்கள் மரணமடைந்த பின்பு அவர்களுடைய மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
719 நபி(ஸல்) அவர்கள் இஃதி காஃப் இருக்க விரும்பினால், ஃபஜ்ர் தொழுவார்கள். பின்னர் இஃதிகாஃபில் நுழைந்து விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
720 நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும் நிலையில் என் பக்கம் தம் தலையை நீட்டுவார்கள். நான் தலையை சீவி விடுவேன். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும் போது தம்முடைய சுய தேவைக்காகவே தவிர வீட்டினுள் நுழைய மாட்டார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
721 ''நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லாமலும், ஜனாஸாவில் கலந்து கொள்ளாமலும், பெண்ணைத் தொடாமலும், அவளைக் கட்டியணைக்காமலும், தன்னுடைய முக்கியத் தேவைக்கன்றி வேறு எதற்காகவும் பள்ளிவாசலை விட்டு வெளியில் வராமலும் இருப்பது இஃதிகாஃப் இருப்பவர் மீது சுன்னத்தாகும். இன்னும் நோன்பில்லாமல் இஃதிகாப் இல்லை. மேலும் தொழுகைக்காக மக்கள் கூடுகின்ற பள்ளிவாசலில் தவிர வேறு எங்கும் இல்லை'' என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
722 ''தனக்குத் தானே விதித்துக் கொண்டதைத் தவிர இஃதிகாஃப் இருப்பவர் மீது வேறு எந்த நோன்பும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ, ஹாகிம்
இதில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளது.
723 நபித்தோழர்களில் சிலருக்கு லைலத்துல் கத்ரு பிந்திய இரவில் (இருப்தாக) கனவில் காண்பிக்கப்பட்டது. இதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள், ''உங்கள் கனவுகள் எல்லாம் (ரமளானில்) கடைசி ஏழு நாட்களிலேயே சேர்ந்து அமைந்திருப்பதை நான் காண்கிறேன். எவராவது அதைத் தேடுபவராக இருப்பின் கடைசி ஏழு நாட்களில் தேடிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
724 லைலத்துல்கத்ர் இரவைப் பற்றிக் குறிப்பிடுகையில், ''அது 27வது இரவு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா இப்னு அபீஸுஃப்யான்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது இது சம்பந்தமாக ஃபத்ஹுல் பாரி(புகாரியின் விரிவிரை)யில் 40 கருத்துகள் இடம் பெற்றுள்ளன.
725 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! லைலத்துல் கத்ர் எதுவென அறிந்து கொண்டால் நான் என்ன கூறுவது?'' என்று கேட்டதற்கு, ''யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிக்க கூடியவன்; மன்னிப்பை விரும்புபவன்; என்னை மன்னிப்பாயாக! என்று கூறவும்'' என நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
இது திர்மிதீ மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
726 ''மஸ்ஜிதுல்ஹராம் என்னுடைய இந்த மஸ்ஜித் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று மஸ்ஜிதுகளை தவிர்த்து வேறு எந்தப் பள்ளிவாசலுக்கும் செல்ல (விசேஷ) பயணத் தயாரிப்புகளை மேற்கொள்ளாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்