அத்தியாயம் 48 அடைமானம்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 48
அடைமானம் 

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

பகுதி 1

ஊரிலிருக்கும்போது அடைமானம் வைத்தல்.

அல்லாஹ் கூறினான்:

நீங்கள் பயணத்திலிருந்தால், மேலும் (ஒப்பந்தப் பத்திரம் எழுதுவதற்கு) எந்த ஓர் எழுத்தரும் உங்களுக்குக் கிடைக்க வில்லையென்றால் அடகுப் பொருளைப் பெற்றுக் கொண்டு நீங்கள் கொடுக்கல் வாங்கல் செய்யலாம். (திருக்குர்ஆன் 02: 283)

2508. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் போர்க் கவசத்தை வாற் கோதுமைக்குப் பகரமாக அடகு வைத்திருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும் வாசனை நீங்கிய உருகிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். 'முஹம்மதின் வீட்டாரிடம், அவர்கள் ஒன்பது வீட்டினராக இருந்தும் கூட ஒரேயொரு ஸாஉ (தானியம் அல்லது பேரீச்சம் பழம்) தவிர, காலையிலோ மாலையிலோ வேறெதுவும் இருந்ததில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

பகுதி 2

கவசத்தை அடகு வைத்தல்.

2509. அஃமஷ்(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் அடைமானம் பற்றியும் கடனில் பிணை பற்றியும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டோம். அப்போது இப்ராஹீம் நகயீ(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (பிறகு பெற்றுக் கொள்வதாக) உணவுப் பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) தம் கவசத்தை அடைமானம் வைத்தார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என எமக்கு அஸ்வத்(ரலி) அறிவித்தார்' என்று கூறினார்கள்.

பகுதி 3

ஆயுதத்தை அடகு வைத்தல்.

2510. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை அல்லாஹ்வின் துதர்(ஸல்) அவர்கள், 'கஅபாவின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு யார் (தயாராக) இருக்கிறார்கள்? ஏனெனில், அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் அவன் பொல்லாங்கு விளைவித்து (தொல்லை தந்து)விட்டான்'' என்று கூறினார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நான் தயாராக இருக்கிறேன்'' என்று கூறினார்கள். (பிறகு) அவர்கள் கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, 'ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகள் (உணவுப் பொருளைக்) கடனாக எங்களுக்கு நீ தரவேண்டும் என்று விரும்புகிறோம்' எனக் கூறினார். அதற்கு அவன், 'உங்கள் பெண்களை என்னிடம் அடகு வையுங்கள்'' என்று கூறினான். அதற்கு முஹம்மத் இப்னு மஸ்லமா(ரலி), 'நீயோ அரபிகளிலேயே அழகு மிக்கவன். உன்னிடம் எப்படி எங்கள் பெண்களை நாங்கள் அடகு வைக்க முடியும்?' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவன், 'உங்கள் குழந்தைகளை என்னிடம் அடகு வையுங்கள்'' என்று கேட்டான். அதற்கு அவர், 'நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகளை அடகு வைக்க முடியும்? (அப்படி அடகு வைத்தல்) 'ஓரிரண்டு வஸக்குகளுக்காக அடகு வைக்கப்பட்டவன் தானே இவன்' என்று அவர்களை மற்றவர்கள் (இழிவாகப் பேசிப் பரிகாசமாக) ஏசுவார்களே! இது எங்களுக்கு அவமானமல்லவா? ஆயினும், நாங்கள் உன்னிடம் எங்கள் ஆயுதங்களை அடகு வைக்கிறோம்'' என்று கூறினார்கள். (அவனும் அதற்குச் சம்மதிக்க) பின்னர் வருவதாக வாக்களித்துச் சென்றார்கள். (பிறகு ஆயுதத்துடன் வந்து அதை அடகு வைக்கிற சாக்கில்) அவனைக் கொன்றுவிட்டார்கள்; பிறகு, அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொலை செய்துவிட்ட) செய்தியைத் தெரிவித்தார்கள். 2

பகுதி 4

அடைமானம் வைக்கப்பட்ட கால்நடையை வாகனமாகப் பயன்படுத்தலாம்; அதன் பாலைக் கறக்கலாம்.

இப்ராஹீம் நகயீ(ரஹ்) கூறினார்:

வழி தவறி வந்த பிராணியின் மீது (அதற்குப் போடுகிற தீனியின் அளவுக்கேற்ப) சவாரி செய்யலாம். அதற்குப் போடுகிற தீனியின் அளவுக்கேற்ப அதன் பாலைக் கறந்து (பயன்படுத்திக்) கொள்ளலாம். அடகுப் பிராணியும் அதைப் போன்றதே.

2511. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின், அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

2512. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமாரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும்தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்.

இதையும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.

பகுதி 5

யூதர்கள் முதலானவர்களிடம் அடகு வைத்தல்.

2513. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடமிருந்து உணவுப் பொருளை வாங்கினார்கள். (அதற்காக) தம் கவசத்தை அந்த யூதரிடம் அடகு வைத்தார்கள்.

பகுதி 6

அடகு வைப்பவர், அடகு வாங்குபவர் முதலானோர் கருத்து வேறுபட்டால் வாதி ஆதாரத்தைச் சமர்ப்பிப்பதும், பிரதிவாதி சத்தியம் செய்வதும் கடமையாகும்.

2514. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு (ஒரு வழக்கில் விளக்கம் கேட்டு) கடிதம் எழுதினேன். அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் பிரதிவாதி (தன் மீதுள்ள வழக்கை மறுப்பதற்கு) சத்தியம் செய்ய வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள்'' என்று குறிப்பிட்டு பதில் (கடிதம்) எழுதினார்கள்.

2515, 2516. அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கிறானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபமுற்ற நிலையில் அவனைச் சந்திப்பான்'' என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு, இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்'' என்று கூறினார்கள்.

பிறகு, அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்டார். நாங்கள் அவர் (இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர், 'அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது; எனவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (எங்கள்) வழக்கைத் தாக்கல் செய்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே, (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்பட மாட்டாரே' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கிறவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார்'' என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான்'' என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள்.
أحدث أقدم