அத்தியாயம் - 12 உணவுகள்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 12  உணவுகள்

உணவுகள்

1345 ''விலங்குகளில் கீறிக் கிழிக்கும் ஒவ்வொன்றையும் உண்பது விலக்கப்பட்டதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1346 இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது ஓர் அறிவிப்பில், (தடை செய்தார்கள்) என்றுள்ளது. ''பறவைகளில் கால் நகங்களால் பிடித்துத் தூக்கி உண்பவை'' என்பதும் உள்ளது.

1347 கைபரில் நாட்டுக் கழுதையின் கறியை உண்ணக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். மேலும், குதிரைக் கறியை (உண்ண) அனுமதியளித்தார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

புகாரியில், ''குதிரைகளுக்கு அனுமதியளித்தார்கள்'' என்றுள்ளது.

1348 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு யுத்தங்களில் பங்கு கொண்டுள்ளோம். (அப்போது) நாங்கள் வெட்டுக்கிளியை உண்போம் என இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1349 முயல் சம்பவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், ''அவர் (அபூ தல்ஹா) அதை அறுத்து நபி(ஸல்) அவர்களுக்கு அதன் பிட்டத்தைக் கொடுத்தார். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1350 எறும்பு, தேனீ, ஹுத்ஹுத் மற்றும் சிட்டுக்குருவி ஆகிய நான்கு உயிரினங்களைக் கொல்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத்

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1351 நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம், ''கழுதைப்புலி வேட்டைப் பிராணியா? (ஹலாலா?)'' என்று கேட்டேன். அவர் 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள் இதைக் கூறியுள்ளார்களா? என்று நான் கேட்டதற்கு, ''ஆம்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள் என இப்னு அபீ அம்மார்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இது புகாரி மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1352 இப்னு உமர்(ரலி) அவர்களிடம் முள்ளம் பன்றியைப் பற்றி (அதைச் சாப்பிடலாமா என்று) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''(நபியே!) கூறும். எனக்கு அறிவிக்கப்பட்ட வஹீயில் உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; ஆனால், செத்த பிராணியையும் ஓடும் இரத்தத்தையும், பன்றி இறைச்சியையும் தவிர, திண்ணமாக இவை அசுத்தங்களாகும். மேலும், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பாவமானவற்றைத் தவிர'' என்னும் (6:145) இறை வசனத்தை ஓதினார்கள் அப்போது அவரிடமிருந்த முதியவர் ஒருவர், நபி(ஸல்) அவர்களிடம் முள்ளம் பன்றி பற்றிய பேச்சு வந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ''அது அருவருப்பானவற்றில் ஒன்று'' என்று கூறினார்கள்'' என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன் என்றார். அதைக் கேட்ட இப்னு உமர்(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள், ''அப்படிக் கூறியிருந்தால், அது அவர்கள் கூறியவாறு தான்'' என்று சொன்னார்கள். அஹ்மத், அபூதாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1353 ''அசுத்தங்களை உண்ணும் கால்நடைகளையும் அவற்றின் பாலையும் உண்ணக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1354 காட்டுக் கழுதையைப் பற்றிய சம்பவத்தைக் கூறும் போது நபி(ஸல்) அவர்கள் அதிலிருந்து உண்டார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1355 நாங்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை அறுத்து அதை உண்டோம் என, அஸ்மா பின்த்து அபீ பக்கர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1356 நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் உடும்பு(கறி) உண்ணப்பட்டது என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1357 தவளையைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மருத்துவர், ''அதை மருந்துக்காக உபயோகிக்கலாமா?'' என்று கேட்டதற்கு, அதைக் கொல்ல வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு உஸ்மான் அல்குரஷிய்யா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், மற்றும் நஸயீ. இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



வேட்டையாடுதலும் (உணவுக்காக) அறுக்கப்படும் பிராணிகளும்

1358 ''கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக அல்லது வேட்டைக்காக அல்லது விவசாய நிலத்தைப் பாதுகாப்பதற்காக அன்றி, எவரொருவர் நாய் வளர்க்கின்றாரோ அவருடைய நற்செயல்களுக்கான ஊதியத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவு குறைந்து கொண்டிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1359 ''நீ உன்னுடைய நாயை (வேட்டைக்காக) அனுப்பினால் (அதை அனுப்பும் போது), 'பிஸ்மில்லாஹ்' கூறி அனுப்பு அது உன்னிடம் (எதையேனும் வேட்டையாடிக்) கொண்டுவந்து அதை நீ உயிருடன் கண்டால் அதை (உண்பதற்கு) அறுத்துக் கொள்! அப் பிராணியை அது கொன்று விட்டிருந்து அதிலிருந்து அது (நாய்) எதையும் உண்ணாது இருந்தால் அதைப் புசித்துக் கொள்! உன்னுடைய நாயுடன் வேறு நாயைக் கண்டு அது (வேட்டைப் பிராணி) கொல்லப்பட்டிருந்தால், அதை உண்ணாதே! ஏனெனில், அந்த இரண்டில் எது அதைக் கொன்றது என்பது உனக்குத் தெரியாது. இன்னும் நீ உன்னுடைய அம்மை எய்யும் போது அல்லாஹ்வின் அம்மை எய்யும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறிக் கொள். (நீ வேட்டையாடிய அந்தப் பிராணி) உன்னைவிட்டு ஒடி உன்னுடைய அம்பின் காயத்தைத் தவிர வேறு காயம் ஏதும் இல்லாமல் அதை நீ (மறுநாள்) கண்டால் நீ விரும்பினால், அதை புசித்துதக் கொள்! அது தண்ணீரில் மூழ்கி இருக்க நீ கண்டால் அதை நீ உண்ணாதே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதீ இப்னு ஹாதிம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசனம் இடம் பெற்றுள்ளது.

1360 மிஃரான் எனும் ஆயுதத்(தால் வேட்டையாடுவ)தைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டதற்கு ''அதன் கூர்மையான பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தால் அதைப் புசித்துக் கொள்! அதனுடைய அகலப் பகுதியால் காயம் ஏற்பட்டிருந்தால் அதை சாப்பிடாதே! ஏனெனில், அது அடித்துக் கொல்லப்பட்டதாகும்'' என்று கூறினார்கள் என அதீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1361 ''நீ அம்மை எய்த போது அது (வேட்டையாடப்பட்ட பிராணி) உன்னை விட்டு மறைந்துபின்னர் அதை (சில நாட்களில்) நீ கண்டால் அது துர்வாடை வீசவில்லை எனில் புசித்துக் கொள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ சஅலபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1362 ''எங்களிடம் சிலர் கறியைக் கொடுக்கின்றனர். அவர்கள், அதன் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறினார்களாக இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது'' என்று ஒரு கூட்டத்தார் நபி(ஸல்) அவர்களிடம் கூறியதற்கு, ''நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி உண்ணுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1363 (கூர்மையற்ற கல் போன்றவற்றை) எறிந்து வேட்டையாடுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். இன்னும் ''அது எந்தப் பிராணியையும் வேட்டையாடவும் செய்யாது; எதிரிக்குத் தண்டனையையும் கொடுக்காது. ஆனால், அது பல்லை உடைக்கும்; கண்ணைத் தோண்டி எடுத்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1364 ''உயிருள்ள எவற்றையும், (வேட்டையாடப் பழகுவதற்காகக்) குறி வைக்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1365 பெண்ணொருத்தி ஆடு ஒன்றைக் கல்லால் அறுத்து விட்டாள். அதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு அதை உண்ணுமாறு கட்டளையிட்டார்கள் என கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

1366 ''பல் மற்றும் நகத்தைத் தவிர்த்து அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு எதுவெல்லாம் இரத்தத்தை ஓட்டுகிறதோ, அதனால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்ணுங்கள். ஏனெனில், பல் எலும்பாகும். நகமோ அபிசீனியர்களின் ஆயுதமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1367 ''கால்நடைககைள் கட்டி வைத்துக் கொல்வதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்'' என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1368 ''அல்லாஹ் ஒவ்வோர் உயிருக்கும் உபகாரம் செய்ய வேண்டுமென விதியாக்கியள்ளான். எனவே நீங்கள் (ஓர் உயிரை உணவுக்காகக்) கொன்றால் நல்லவிதமாகக் கொன்று விடுங்கள். அறுத்தால் அதை நல்லவிதமாக அறுத்து விடுங்கள். நீங்கள் உங்கள் கத்தியை நன்றாகத் தீட்டிக் கொண்டு; அறுக்கப்படும் பிராணிக்கு சிரமமேற்படாதவாற அறுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1369 ''(சினையாக உள்ள) தாய்ப்பிராணியை அறுத்தாலே வயிற்றிலுள்ள குட்டியையும் அறுத்தாம் விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1370 ''(ஒரு பிராணியை அறுக்க) முஸ்லிமிற்கு அவனது பெயரே போதுமானது. அவன் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூற மறந்துவிட்டால் அதைக் கூறிவிட்டுப் பிறகு உண்ணட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

இதன் அறிவிப்பாளர் ஞாபகசக்தி குறைந்தவர் என்பதால் ளயீஃப் எனும் தரத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வரிசையில் முஹம்மத் இப்னு யஜீதிப்னு ஸினான் என்பவர் உண்மையாளர் என்றாலும் ஞாபகசக்தி குன்றியவர்.

1371 இன்னும் இது ஸஹீஹ் எனும் தரத்திலும் மவ்கூஃப் எனும் தரத்திலும் இப்னு அப்பாஸ் வாயிலாக அப்துர்ரஸ்ஸாக்கில் இடம் பெற்றுள்ளது.

1372 இதற்குச் சான்றாக அபூதாவூதில் முர்ஸல் எனும் தரத்தில், ''முஸ்லிமால் அறுக்கப்பட்டது அல்லாஹ்வின் பெயர் சொல்லப்பட்டிருந்தாலும், சொல்லப்படாதிருந்தாலும் அனுமதிக்கப்பட்டது தான்'' என்று உள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.



குர்பானி

1373 நபி(ஸல்) அவர்கள் கொம்புகளுடைய இரண்டு செம்மறியாட்டுக் கிடாய்களை அவற்றின் கழுத்தின் மீது தன் காலை வைத்து அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்பீர் கூறி; அறுத்து குர்பானி கொடுப்பார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிப்பில் தமது கரத்தால் அவற்றை அறுப்பார்கள்'' என உள்ளது. மற்றொரு அறிவிப்பில், ''கொழுத்த இரண்டு ஆடுகளை'' என்று உள்ளது. அபூ அவானாவின் ஸஹீஹில், ''விலை உயர்ந்த இரண்டு ஆடுகள்'' என்று உள்ளது. முஸ்லிமுடைய மற்றொரு அறிவிப்பில் ''பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்'' என்று கூறுவார்கள் என்று உள்ளது.

1374 காலும், முட்டியும், கண்ணைச் சுற்றியுள்ள இடமும் கருப்பு நிறமாயுள்ள செம்மறி ஆட்டுக் கிடாய் ஒன்றை குர்பானி கொடுப்பதற்காகக் கொண்டு வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது ''ஆயிஷாவே! கல்லில் கத்தியைத் தீட்டிக் கூராக்கு!'' என்று கூறினார்கள். அவ்வாறே நானும் அதைக் கூர் தீட்டி பிறகு எடுத்துக் கொடுக்க, நபி(ஸல்) அவர்கள் அதைக் கையில் எடுத்து (ஆட்டைப்) படுக்கவைத்து, பின்னர் அறுத்தார்கள் (அப்போது) அல்லாஹ்வின் பெயரால் முஹம்மதிடமிருந்தும், முஹம்மதுடைய குடும்பத்தாரிடமிருந்தும், முஹம்மதுடைய சமுதாயத்திடமிருந்தும், ''இரட்சகனே! இதை ஏற்றுக் கொள்வாயாக!'' என்று கூறினார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்ததாக முஸ்லிமில் உள்ளது.

1375 ''வசதி இருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ, அவர் நமது தொழும் இடத்திற்கு வரவேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், இப்னுமாஜா

இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1376 ஈதுல் அல்ஹா தொழுகையில் நான் நபி(ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டேன். தொழுகை முடிந்ததும் ஏற்கனவே அறுக்கப்பட்டுவிட்டிருந்த ஓர் ஆட்டைக் கண்டார்கள். உடனே, ''எவர் தொழுகைக்கு, முன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதில் மற்றோர் ஆட்டை அறுக்கட்டும். எவர் (இன்னும்) அறுக்கவில்லையோ, அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி இப்போது அறுக்கட்டும்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப் இப்னு ஸுஃப்யான்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1377 நான்கு பிராணிகளை குர்பானிக்காக அறுப்பது கூடாது. அவையாவன: 1. நான்கு தெரியும் படியாக கண் பொட்டையான பிராணி 2. வெளிப்படையாகத் தெரியும்படியாக நோயுற்றிருக்கும் பிராணி 3. ஊனம் வெளிப்படையாகத் தெரியுமளவிற்குள்ள நொண்டியான பிராணி 4. எலும்பு மஜ்ஜை பலவீனமான வயது முதிர்ந்த பிராணி. இதை பராஉபின் ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

இதை திர்மிதியும் இப்னு ஹிப்பானும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்துள்ளனர்.

1378 ''குர்பானிக்காக பல் முளைத்த பிராணியையே அறுங்கள்; அது உங்களுக்குக் கிடைக்காவிட்டால் (அப்போது மட்டும்) மூன்று வயது செம்மறியாட்டை அறுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1379 ''கூர்ந்து கவனித்து கண்ணிலும் காதிலும் குறை இல்லாத பிராணியையே குர்பானி கொடுக்கத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும், காதின் ஓரம் கிழிக்கப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கின்ற பிராணியையும், பின் காது கிழிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருக்கும் பிராணியையும், காதுகள் இரண்டும் கிழிக்கப்பட்டுப் பிளந்திருக்கின்ற பிராணியையும், முன்பற்கள் விழுந்து விட்ட பிராணியையும் குர்பானி கொடுக்கக் கூடாது என்றும் எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என்று அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ, நஸயீ இப்னுமாஜா, அபூதாவூத்

திர்மிதீ, இப்னுஹிப்பான்,  ஹாகிம் ஆகியோர் இதை ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்துள்ளனர்.

1380 நபி(ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) அவர்களுடைய ஒட்டகங்களை அவர்கள் சார்பாக அறுத்து குர்பானி கொடுக்கும் பணியை கவனித்துக் கொள்ளும்படியும், அவற்றின் இறைச்சிகளையும், அவற்றின் தோல்களையும் (அங்கேயே) ஏழைகளிடையே பங்கிட்டு விடும் படியும் அதை அறுப்பதற்காக (அறுப்பவருக்கு) அதிலிருந்து எதையும் (கூலியாகத்) தரக்கூடாது என்றும் எனக்குக் கட்டளை இட்டார்கள்.

1381 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யா ஆண்டில் ஒட்டகம் மற்றும் மாட்டை ஏழு நபர்கள் சார்பாக குர்பானியாகக் கொடுத்தோம் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்



அகீக்கா

1382 ஹஸன் மற்றும் ஹுசைன்(ரலி) சார்பாக நபி(ஸல்) அவர்கள், ஆளுக்கு ஓர் ஆட்டை அகீகா கொடுத்தார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்

இது இப்னு குஸைமா, இப்னுல் ஜாரூத் மற்றும் அப்துல் ஹக்கில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூஹாதமில் முர்ஸல் எனும் தரமே மேலோங்கி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1383 அனஸ்(ரலி) வாயிலாக இப்னு ஹிப்பானில் இதே போன்று ஹதீஸ் பதிவாகியள்ளது.

1384 ''ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடுகளுக்கு, பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் அகீகா கொடுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டாகள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1385 உம்மு குர்ஸ் அல்கஅபிய்யாஹ் வாயிலாக அஹ்மத் மற்றும் நால்வரில் இது போன்று ஹதீஸ் உள்ளது.

1386 ''ஒவ்வொரு குழந்தையும் அதன் ஆகீகாவுக்குப் பிணையாக வைக்கப்பட்டுள்ளது. அதன் சார்பாக அது பிறந்த ஏழாவது நாளில் குர்பானி கொடுக்கப்பட வேண்டும். அதன் குர்பானி கொடுக்கப்பட வேண்டும். அதன் தலையை மழித்து அதற்குப் பெயர் சூட்ட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சமுரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா.

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Previous Post Next Post