அத்தியாயம் 89 நிர்ப்பந்திக்கப்படுதல்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 89

(குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்கப்படுதல்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி, தம் உள்ளம் இறைநம்பிக்கையில் (சலனமின்றி) அமைதியுடன் இருக்கும் நிலையில் இறைமறுப்பை வெளியிடுகிறவரைத் தவிர (அதாவது அவரின் மீது குற்றமில்லை). ஆனால், யார் மன நிறைவுடன் இறைமறுப்பை ஏற்கிறவர்களின் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும். இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 16:106)

மேலும், அல்லாஹ் கூறினான்:

இறைநம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) இறைநம்பிக்கையாளர்களை விடுத்து மற்ற மறுப்பாளர்களை(த் தம்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களி(ன் தொல்லைகளி)லிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகவே தவிர. எவரேனும் அவ்வாறு செய்தால், அல்லாஹ்வின் பொறுப்பில் அவர்கள் இலர். (திருக்குர்ஆன் 03:28)

(அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றாது) தமக்குத் தாமே அநீதி இழைத்தவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்போது 'நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?' என்று கேட்பார்கள். (அதற்கவர்கள்) 'நாங்கள் பூமியில் (கொடுமையை எதிர்க்க முடியா) பலவீனர்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள். 'அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இல்லையா? அதில் (ஹிஜ்ரத் செய்து) நீங்கள் நாடு கடந்து போயிருக்கக் கூடாதா?' என (வானவர்கள்) கேட்பார்கள். எனவே, இத்தகையோர் ஒதுங்குமிடம் நரகம் தான்; சென்றடையும் இடங்களில் அது மிகக் கெட்டதாகும். (ஆனால்) ஆண்களிலும், பெண்களிலும், சிறுவர்களிலும் பலவீனமானவர்களைத் தவிர. ஏனெனில், இவர்கள் எவ்வித உபாயமும் தெரியாதவர்கள்; (வெளியேறிச் செல்ல) வழியும் அறியாதவர்கள். அத்தகையோரை அல்லாஹ் மன்னிக்கப் போதுமானவன். ஏனெனில், அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், (பிழைகளை) மறைப்பவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 04:97-99)

பலவீனமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரைக் காப்பதற்காக இறைவழியில் போர் புரியாதிருக்க உங்களுக்கு என்ன காரணம் உள்ளது? அவர்களோ, 'எங்கள் இறைவா! அக்கிரமக்காரர்கள் உள்ள இந்த ஊரைவிட்டு எங்களை வெளியேற்றிவிடுவாயாக! எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரை அளித்திடுவாயாக! மேலும், எங்களுக்கு உன்னிடமிருந்து உதவியாளரையும் அளித்திடுவாயாக!'' என்று பிரார்த்திக்கிறார்கள். (திருக்குர்ஆன் 04:75)

(இவ்வசனங்களில்,) அல்லாஹ் கட்டளையிட்ட ஒன்றைக் கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லா பலவீனர்களை தான் மன்னிப்பதாக அல்லாஹ் தெரிவிக்கிறான். நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட்டவரும் பலவீனராகத்தான் இருப்பார். (நிர்ப்பந்திப்போரால்) அவருக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதைத் தவிர அவருக்கு வேறு வழி கிடையாது. ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள், '(எதிரிகளிடமிருந்து) தற்காத்துக் கொள்வதென்பது மறுமைநாள் வரை இருக்கிற ஓர் அம்சமாகும்'' என்று கூறினார்கள்.

திருடர்களின் நிர்பந்தத்தால் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்ட ஒருவர் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகையில், '(மணவிலக்கு) எதுவும் நிகழாது'' என்று கூறினார்கள். இக்கருத்தையே இப்னு உமர்(ரலி), இப்னு ஸுபைர்(ரலி), ஷஅபீ (ரஹ்) மற்றும் ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) ஆகியோரும் கூறியுள்ளனர்.

மேலும், 'எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6940 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தொழுகையில், 'இறைவா! அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ, ஸலமா இப்னு ஹிஷாம், வலீத் இப்னு வலீத் ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா! (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார் மீது உன்னுடைய பிடியை இறுக்குவாயாக! யூசுஃப் (அலை) அவர்கள் காலத்தில் நீ அனுப்பிய (பஞ்சமான) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளை அனுப்புவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.2

பகுதி 1

இறைமறுப்பை விட அடி, உயிரிழப்பு, அவமானம் ஆகியவற்றை ஒருவர் ஏற்பது.3

6941 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.4

6942 கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(கூஃபா பள்ளிவாசலொன்றில் கூடியிருந்த மக்களிடம்) ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூறினார்: நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக உமர் அவர்கள் என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டுள்ளேன். உஸ்மான்(ரலி) அவர்களுக்கு நீங்கள் செய்த (துரோகத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) 'உஹுத்' மலை தகர்ந்து போனால் அதுவும் சரியானதே!5

6943 கப்பாப் இப்னு அல்அரத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தம் சால்வை ஒன்றைத் தலையணையாக வைத்துச் சாய்த்துக் கொண்டிருந்தபோது அவர்களிடம், (இஸ்லாத்தின் எதிரிகள் எங்களுக்கிழைக்கும் கொடுமைகளை) நாங்கள் முறையிட்டபடி 'எங்களுக்காக இறைவனிடம் நீங்கள் உதவி கோரமாட்டீர்களா? எங்களுக்காகப் பிரார்த்திக்கமாட்டீர்களா?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே (ஓரிறைக் கொள்கையை ஏற்று இறைத்தூதரை நம்பிய) ஒருவர் பிடிக்கப்பட்டு, அவருக்காக மண்ணில் குழி தோண்டப்பட்டு, அவர் அதில் நிறுத்தப்படுவார். பின்னர் ரம்பம் கொண்டுவரப்பட்டு அவரின் தலையில் வைக்கப்பட்டு, அது இரண்டு பாதியாகப் பிளக்கப்படும. (பழுக்கக் காய்ச்சிய) இரும்புச் சீப்புகளால் அவர் (மேனி) கோதப்பட, அது அவரின் தசையையும் எலும்பையும் கடந்து சென்றுவிடும். ஆயினும் அ(ந்தக் கொடுமையான)து, அவரை (அவர் ஏற்றுக் கொண்ட) அவரின் மார்க்கத்திலிருந்து பிறழச் செய்யவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இஸ்லாத்தின்) விவகாரம் முழுமைப்படுத்தப்படுவது உறுதி. எந்த அளவிற்கென்றால் வானத்தில் பயணம் செய்யும் ஒருவர் (யமனிலுள்ள) 'ஸன்ஆவிலிருந்து 'ஹள்ரமவ்த்' வரை பயணம் செல்வார். (வழியில்) அல்லாஹ்வையும் தவிர வேறெதற்கும் (வேறெவருக்கும்) அவர் அஞ்சமாட்டார். ஆயினும், (தோழர்களே!), நீங்கள் தாம் (கொடுமை தாளாமல் பொறுமை குன்றி) அவசரப்படுகின்றீர்கள்'' என்றார்கள்.6

பகுதி 2

பொருளாதார காரணங்களுக்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ ஒருவர் தம் சொத்துக்களை விரும்பியோ விரும்பாமலோ விற்க வேண்டிய கட்டாயம் நேர்வது.

6944 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, 'யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்று 'பைத்துல் மித்ராஸ்' எனுமிடத்தை அடைந்தோம். அங்கு நபி(ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, 'யூதர்களே! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (இவ்வுலகிலும் மறு உலகிலும்) நீங்கள் சாந்தி அடைவீர்கள்'' என்று அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்கள். அதைக் கேட்ட யூதர்கள், 'அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டீர்கள்'' என்று கூறினார்கள். 'இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு மீண்டும் (இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்து) அவ்வாறே கூறினார்கள். அப்போதும் யூதர்கள், 'அபுல் காசிமே! நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள்'' என்று கூறினர். பிறகு மூன்றாம் முறையும் (அவ்வாறே) நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, 'பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை (இந்த ஊரிலிருந்து) நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் யார் தம் (அசையாச்) சொத்துக்கு பதிலாக ஏதேனும் (விலையைப்) பெற்றால் அச்சொத்தை அவர் விற்றுவிடட்டும். இல்லையேல், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்'' என்றார்கள்.7

பகுதி 3

நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டவரின் திருமணம் செல்லாது.8

அல்லாஹ் கூறினான்:

தங்களின் கற்பைப் பேணிக் காக்க விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை அற்பமான உலக வாழ்க்கை வசதிகளை நாடி, விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவரேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 24:33)

6945 கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா(ரலி) அறிவித்தார்.

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்துவைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.9

6946 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! பெண்களிடம் அவர்களின் திருமணம் தொடர்பாக யோசனை கேட்கப்படவேண்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்றார்கள். நான், 'அவ்வாறாயின் கன்னிப் பெண்ணிடம் யோசனை கேட்கப்படும்போது அவள் வெட்கப்பட்டுக்கொண்டு மௌனமாக இருப்பாளே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவளுடைய மௌனமே சம்மதமாகும்'' என்றார்கள். 10

பகுதி 4

நிர்ப்பந்தத்தின் போரில் ஒருவர் ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்யவோ அல்லது விற்கவோ செய்தால் அது செல்லாது.

(இதுவே அனைவரின் கருத்தாகும். ஆனால்,) சிலர் இவ்வாறு கூறிவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார்கள்: (இவ்வாறு நிர்பந்திக்கப்பட்டவரிடமிருந்து) வாங்கியவர் தாம் வாங்கிய அந்த அடிமை விஷயத்தில் ஏதேனும் நேர்த்திக்கடன் செய்வதாக எண்ணினாலோ, அவ்வாறே அந்த அடிமைக்குப் 'பின்விடுதலை' அளித்தாலோ அவரின் எண்ணப்படி அது செல்லும்.11

6947 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் (தமக்குச் சொந்தமான) ஓர் அடிமையை தம் ஆயுட்காலத்திற்குப் பிறகு விடுதலை செய்து விடுவதாக அறிவித்தார். அப்போது அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறெந்தச் செல்வமும் இருக்கவில்லை. இந்த விஷயம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  'இந்த அடிமையை என்னிடமிருந்து விலைக்கு வாங்குபவர் யார்?' என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹாம்(ரலி) அவர்கள் எண்ணூறு வெள்ளிக் காசுகள் (திர்ஹம்) கொடுத்து விலைக்கு வாங்கினார்கள். அந்த கிப்தீ(எகிப்து) அடிமை (விற்கப்பட்ட) முதல் ஆண்டிலேயே இறந்துவிட்டான்.12

பகுதி 5

விதவைப் பெண்களை பலவந்தமாக மணப்பதும்), நிர்ப்பந்தங்களில் அடங்கும்.

(நிர்ப்பந்தம் என்பதைக் குறிக்க) இக்ராஹ், குர்ஹ், கர்ஹ் ஆகிய சொற்கள் (பயன்படுத்தப்படுகின்றன. இவை) அனைத்துக்கும் பொருள் ஒன்றே.

6948 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(அறியாமைக் காலத்தில்) ஒருவர் இறந்துவிட்டால் அவரின் வாரிசுகளே அவரின் மனைவியின் மீது அதிக உரிமை உடையவர்களே இருந்து வந்தனர். அவர்களில் சிலர் விரும்பினால் அவளைத் தாமே மணந்துகொள்ளவும் செய்வார்கள்; நினைத்தால் (வேறெவருக்காது) அவளை மணமுடித்துக் கொடுத்து விடுவார்கள். நினைத்தால் மணமுடித்தக் கொடுக்கா(மல் அப்படியேவிட்டுவிடுவார்கள்; வாழ அனுமதிக்க)மாட்டார்கள். ஆக, அவளுடைய வீட்டாரைவிட (இறந்துவிட்ட கணவனின் வாரிசுகளான) அவர்கள் தாம் அவளின் மீது அதிக உரிமையுடையவர்களாக இருந்தார்கள்.

அப்போதுதான் இது தொடர்பாக 'இறைநம்பிக்கையாளர்களே! (விதவைப்) பெண்களை நீங்கள் பலவந்தமாக அடைவது அனுமதிக்கப்பட்டதன்று'' எனும் (திருக்குர்ஆன் 04:19 வது) இறைவசனம் அருளப்பெற்றது.13

பகுதி 6

ஒரு பெண் விபசாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டால் (அதாவது கற்பழிக்கப்பட்டால்) அவளுக்குத் தண்டனை கிடையாது.

ஏனெனில், அல்லாஹ் கூறினான்:

எவரேனும் அந்தப் பெண்களை (விபசாரத்திற்காக) நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 24:33)

6949 ஸஃபிய்யா பின்த் அபீ உபைத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(என் கணவருடைய தந்தை கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில்) அரசாங்க அடிமைகளில் ஒருவன் (ஆட்சியாளர் அதிகாரத்திற்குட்பட்ட) குமுஸ் நிதியிலுள்ள ஓர் அடிமைப் பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்துவிட்டான். எனவே, உமர்(ரலி) அவர்கள் அவனுக்கு (ஐம்பது) கசையடி கொடுத்து (ஆறு மாத காலத்திற்கு) அவனை நாடு கடத்தவும் செய்தார்கள். ஆனால், அந்த அடிமையினால் பலவந்தப்படுத்தப்பட்டாள் என்பதால் அந்த அடிமைப் பெண்ணுக்கு அவர்கள் கசையடி தண்டனை வழங்கவில்லை.

அடிமையல்லாத ஒருவன் கற்பழித்துவிட்ட கன்னியான அடிமைப் பெண் குறித்து ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: கன்னி கழியாதிருந்த அந்த அடிமைப் பெண்ணுக்குரிய விலையை நீதிபதி நிர்ணயி(த்து கன்னி கழிந்ததால் ஏற்பட்ட இழப்பீட்டைக் கற்பழித்தவனிடமிருந்து வசூலி)ப்பார். மேலும், கற்பழித்த) அவனுக்குக் கசையடி தண்டனை வழங்கப்படும். ஆனால், கன்னி கழிந்த அடிமைப் பெண்ணுக்கு இழப்பீடு ஏதும் வழங்க வேண்டுமன்று அறிஞர்களின் தீர்ப்புகளில் காணப்படவில்லை. ஆயினும், அவளைக் கற்பழித்தவனுக்குத் தண்டனை உண்டு.

6950 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இறைத்தூதர்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் துணைவியாரான சாரா அவர்களுடன் தம் தாயகத்தைத் துறந்து சென்றார்கள். 'மன்னன் ஒருவன்' அல்லது கொடுங்கோலன் ஒருவன்' இருந்த ஓர் ஊருக்குள் அவர்கள் இருவரும் நுழைந்தார்கள். (இச்செய்தியறிந்த) அவன் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் ஆளனுப்பி '(உம்முடனிருக்கும்) அப்பெண்ணை என்னிடம் அனுப்பிவை'' என்று கூறினான். (இப்ராஹீம்(அலை) அவர்களும் (வேறு வழியின்றி) அவ்வாறே சாரா அவர்களை அனுப்பிவைத்தார்கள். அவன் (தவறான எண்ணத்துடன்) சாரா அவர்களை நோக்கி எழுந்து வந்தான். சாரா அவர்கள் எழுந்து அங்கசுத்தி (உளூ) செய்து, தொழுதுவிட்டு, 'அல்லாஹ்வே நான் உன்னையும் உன்னுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிரு(ப்பது உண்மையாக இரு)ந்தால் இந்த நிராகரிப்பாளன் என்னை ஆட்கொள்ள விடாதே'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்துக் கொண்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.14

பகுதி 7

தம் நண்பருக்கு உயிர்ச் சேதமோ உடல் சேதமோ ஏற்படுமென ஒருவர் அஞ்சும்போது 'இவர் என் சகோதரர் தாம்' என்று சத்தியம் செய்(து காப்பாற்று)வது.

அவ்வாறே நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொருவரும் அஞ்சும்போது காப்பாற்றலாம். ஏனெனில், ஒரு முஸ்லிம் தம் சகோதர முஸ்லிமை அக்கிரமக்காரனை விட்டுக் காப்பதும், அவனுக்காகப் போராடுவதும், (தக்க சமயத்தில் காலை வாரிவிடுவதன் மூலம்) அவனுக்குத் துரோகம் இழைக்காமலிருப்பதும் அவசியமாகும்.15 அவ்வாறு அநீதி இழைக்கப்பட்டவனைக் காப்பதற்காக ஒருவர் போராடி(யதில் அக்கிரமக்காரன் கொல்லப்படுவானா)னால் அவரின் மீது பழிவாங்கல் தண்டனை கிடையாது.16

ஒரு முஸ்லிமிடம், 'நீ இந்த மதுவை அருந்தவேண்டும்; அல்லது இந்த செத்தப் பிராணியின் மாமிசத்தை நீ புசிக்க வேண்டும்; அல்லது உன்னுடைய அடிமையை நீ விற்கவேண்டும்; அல்லது (இன்னாருக்கு) நீ கடன் கொடுக்க வேண்டியுள்ளது என ஒப்புக் கொள்ள வேண்டும்; அல்லது (இன்னாருக்கு) நீ கட்டாயம் அன்பளிப்பு வழங்க வேண்டும்; அல்லது நீ செய்த ஒப்பந்தம் ஒன்றை முறித்துக் கொண்டதாக அறிவிக்கவேண்டும். இல்லையேல், உன் தந்தையை அல்லது உன் இஸ்லாமியச் சகோதரனை நாங்கள் கொன்று விடுவோம்'' என்பன போன்ற மிரட்டல் விடப்பட்டால் மேற்சொன்னவற்றை அவர் செய்வது செல்லும். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்'' என்று கூறினார்கள்.

ஒரு முஸ்லிமிடம், 'நீ இந்த மதுவை அருந்த வேண்டும்; அல்லது இந்த செத்த பிராணியின் மாமிசத்தை நீ புசிக்கவேண்டும். இல்லையேல், உன் மகனை அல்லது உன் தந்தையை அல்லது மணமுடிக்கத் தகாத (உன்) நெருங்கிய உறவினரை நாங்கள் கொலை செய்துவிடுவோம்' என்று (அக்கிரமக்காரனால் மிரட்டிக்) கூறப்பட்டால் மேற்சொன்னவற்றைச் செய்வதற்கு அவருக்கு அனுமதியில்லை. ஏனெனில், இவர் நிர்ப்பந்தத்திற்குள்ளக்கப்பட்டவர் அல்லர் என்று சிலர் கூறுகின்றனர். அதே சமயம், ஒருவரிடம் 'இந்த அடிமையை நீ விற்றுவிடு; அல்லது இன்னாருக்கு) நீ கடன் தர வேண்டியுள்ளதென ஒப்புக்கொள்; அல்லது (இன்னாருக்கு) அன்பளிப்பு வழங்கு. இல்லையேல், உன் தந்தையை அல்லது உன் மகனை நாங்கள் கொன்றுவிடுவோம்'' என (அக்கிரமக்காரர்களால்) கூறப்பட்டால் (சொன்னபடி) அவ்வாறே செய்வது அவருக்கு அவசியமாகும் என்பது தான் அனுமானம். ஆயினும், பொருத்தமான மரபுப்படி இந்த வியாபாரமும் அன்பளிப்பும் இதில் நடந்த எல்லா ஒப்பந்தங்களும் செல்லாமல் போய்விடும் என்றும் கூறுகிறார்கள். இதன் மூலம், முதலில் கூறிய தங்களின் கருத்துக்குத் தாங்களே முரண்படுகிறார்கள்.17 அது மட்டுமின்றி, குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஆதாரமின்றி மணமுடிக்கத் தகாத இரத்த பந்த உறவினர்களுக்கும் இதர உறவினர்களுக்கும் இடையே வேறுபாடும் காட்டுகின்றனர்.18

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் துணைவியாரைப் பார்த்து (கொடுங்கோல் மன்னனுக்கு முன்னால்) 'இவள் என் சகோதரி'' என்று கூறினார்கள். இது ('கொள்கைச் சகோதரி' என்ற) மார்க்க அடிப்படையில் கூறப்பட்டதாகும்.

இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

சத்தியம் செய்யும்படி கூறுபவன் அக்கிரமக்காரனாயிருந்தால் சத்தியம் செய்தவரின் எண்ணத்தைப் பொறுத்தே அது அமையும்; சத்தியம் செய்யும்படி கூறுபவன் அக்கிரமத்திற்குள்ளானவனாயிருந்தால் அப்போது சத்தியம் செய்யும்படி கூறியவனின் எண்ணத்தைப் பொறுத்தே அது அமையும்.19

6951 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்: அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டுவிடவுமாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகிறான்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.20

6952 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்றார்கள். அப்போது ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவுவேன். (அதுதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவுவேன்? கூறுங்கள்!'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.21
Previous Post Next Post