அத்தியாயம் 41 கவிதை

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 41
                                            
கவிதை

4540. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)" என்றேன். "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு"என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் "உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 41
4541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 41
4542. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
(கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் பாடல்தான்.
(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர்கள் யாத்த பாடல்களிலேயே மிக உண்மையானது,
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் பாடல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல் (கவிஞர்) லபீத் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடியவையே" எனும் சொல்தான். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பில், இதைவிடக் கூடுதலான தகவல் இல்லை.
அத்தியாயம் : 41
4546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "புரையோடும் அளவுக்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 41
4547. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடப் புரையோடும் அளவுக்குச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 41
4548. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்" எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 41
பாடம் : 1 பகடைக்காய் விளையாட்டு ("நர்த ஷீர்") தடை செய்யப்பட்டதாகும்.
4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Previous Post Next Post