ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 29
குற்றவியல் தண்டனைகள்
பாடம் : 1 திருட்டுக் குற்றத்திற்கான தண்டனையும், திருட்டின் குறைந்தபட்ச அளவும்.
3478. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கால் தீனார் (பொற்காசு) அல்லது அதற்கு மேல் திருடியதற்காகத் திருடனின் கையைத் துண்டித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடியதற்காக ஒரு) திருடனின் கை வெட்டப்படமாட்டாது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3480. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கால் தீனார் அல்லது அதற்கு மேற்பட்டதற்காகவே தவிர (அதைவிடக் குறைவானதைத் திருடிய ஒருவனுடைய) கை வெட்டப்படமாட்டாது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3482. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் தோல் கேடயம் அல்லது தோல் கவசத்தின் விலையைவிடக் குறைவான பொருளுக்காகத் திருடனின் கை துண்டிக்கப் பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையவை ஆகும்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஹீம் பின் சுலைமான் (ரஹ்), அபூஉசாமா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அன்று அப்பொருட்கள் (ஒவ்வொன்றும்) விலை மதிப்புடையவை ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3483. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் விலை மதிப்புள்ள ஒரு தோல் கேடயத்தைத் திருடியவரின் கையைத் துண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இருபத்தோரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இவற்றில், சில அறிவிப்புகளில் "விலை" என்பதைக் குறிக்க "கீமத்” எனும் சொல்லும், வேறுசில அறிவிப்புகளில் "ஸமன்” எனும் சொல்லும் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 29
3484. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் சாபம் திருடன்மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைத் திருடுகிறான்;அதற்காக அவனது கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான். அதற்காகவும் அவனது கை துண்டிக்கப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அஃமஷ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவன் கயிற்றைத் திருடினாலும் சரி, தலைக்கவசத்தைத் திருடினாலும் சரி (அவனது கை துண்டிக்கப்படுகிறது)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 2 உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி யார் திருடினாலும் கை துண்டிக்கப்படுவதும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்கு வந்துள்ள தடையும்.
3485. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள், "அந்தப் பெண் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பேசி, தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கச்) சொல்வது யார்?" என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் துணிந்து பேச முடியும்?" என்று சொன்னார்கள்.
அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று பின்வருமாறு உரையாற்றினார்கள்:
மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால், அவர்கள் அவரை (தண்டிக்காமல்) விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும், நான் அவரது கையைத் துண்டித்தே இருப்பேன்.

3486. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது, ("மக்ஸூமி” எனும் குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் திருடிவிட்டாள். இந்த விஷயம் குறைஷியருக்குக் கவலையளித்தது. அவர்கள், "அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசுபவர் யார்?" என்று பேசிக் கொண்டார்கள். பிறகு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப்பிள்ளையான உசாமா பின் ஸைதைத் தவிர வேறு யார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் துணிந்து பேச முடியும்?" என்று (தங்களுக்குள்) பேசிக்கொண்டனர். பின்னர் அந்தப் பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அவளுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.
உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அப்போது, "அல்லாஹ் விதித்த தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா நீ பரிந்துரைக்கிறாய்?" என்று கேட்டார்கள். அதற்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோருங்கள்" என்றார்கள்.
அன்று மாலை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) எழுந்து நின்று அல்லாஹ்வை,அவனது தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
இறைவாழ்த்துக்குப் பின்! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் அழிந்துபோனதற்குக் காரணமே, அவர்களில் உயர் குலத்தார் திருடிவிட்டால் அவரை (தண்டிக்காமல்) விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள்மீது தண்டனையை நடை முறைப்படுத்துவார்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமா பின்த் முஹம்மதே திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்தே இருப்பேன்"என்று கூறிவிட்டு, திருடிய அப்பெண்ணின் கையைத் துண்டிக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவளது கை துண்டிக்கப்பட்டது.

அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அந்தப் பெண் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி திருந்தினார்; திருமணமும் செய்து கொண்டார். அதன் பின்னரும் அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்வேன்" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 29
3487. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்ஸூமி” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மக்களிடம் (வீட்டுப்) பொருட்களை இரவல் வாங்குவாள். பிறகு அவற்றைத் தர மறுப்பாள். (இந்நிலையில் அவள் ஒரு பொருளைத் திருடிவிட்டாள்.) எனவே, அவளது கையை வெட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவளுடைய குடும்பத்தார் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்து (அவளுக்காகப் பரிந்துரைக்குமாறு) பேசினார்கள். அவ்வாறே உசாமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3488. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ மக்ஸூம் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்பெண் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் (தண்டனையிலிருந்து) காப்பாற்றும்படி கோரினாள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே (இக்குற்றத்தைச்) செய்திருந்தாலும் அவரது கையை நான் துண்டித்தே இருப்பேன்" என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணின் கை துண்டிக்கப்பட்டது.
அத்தியாயம் : 29
பாடம் : 3 விபச்சாரத்திற்கான தண்டனை.
3489. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர்; என்னிடமிருந்து பெற்றுக் கொள்வீர். அல்லாஹ் (வாக்களித்திருந்ததைப் போன்று), பெண்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமாகாத பெண்ணுடன் மணமாகாத ஆண் விபச்சாரம் செய்துவிட்டால் நூறு சாட்டையடிகள் வழங்கி, ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தப்பட வேண்டும். மணமான பெண்ணுடன் மணமான ஆண் விபச்சாரம் செய்துவிட்டால், நூறு சாட்டையடிகள் வழங்கி கல்லெறி தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3490. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது, அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கறுத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்படவே அவர்கள் இந்நிலையைச் சந்தித்தார்கள்.
பின்னர் அவர்களைவிட்டு அந்நிலை விலகியதும், "(விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்). மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச்சட்டமாகும்). மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும்.

3491. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "மணமாகாதவர்களுக்குச் சாட்டையடியும் நாடு கடத்தலும் வழங்கப்படும்; மணமானவர்களுக்குச் சாட்டையடியும் கல்லெறி தண்டனையும் வழங்கப்படும்" என்று இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஓராண்டு (நாடு கடத்தல்) என்றோ நூறு (சாட்டையடிகள்) என்றோ (எண்ணிக்கை குறிப்பு) இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 29
பாடம் : 4 மணமானவர்கள் விபச்சாரம் புரிந்தால் (சாகும்வரை) கல்லெறி தண்டனை வழங்குதல்.
3492. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதமர்ந்தபடி (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு (குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும்.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 5 விபச்சாரம் புரிந்துவிட்டதாக ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தல்.
3493. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது முஸ்லிம்களில் ஒருவர் வந்து அவர்களை அழைத்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்துக்கு நேராக வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று கூறினார்.
அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக் கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு தடவை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது, அவரை அழைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குப் பைத்தியமா?" என்று கேட்டார்கள். அவர், "(எனக்குப் பைத்தியம்) இல்லை" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம் (திருமணமாகிவிட்டது)" என்று சொன்னார். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்" என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (பொது மைய வாடியிலுள்ள) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவர்மீது விழுந்தபோது, (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச் சென்று பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்" என்று கூறினார்கள் என அவர்களிடம் செவியுற்ற ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள குறிப்பு இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3494. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்ட போது அவர்களை நான் பார்த்தேன். அவர் உயரம் குறைந்த மனிதராகவும் கட்டுடல் கொண்டவராகவும் இருந்தார். அவரது உடலில் மேல்துண்டு இருக்கவில்லை. அவர், தாம் விபச்சாரம் செய்துவிட்டதாகத் தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் இப்படிச் செய்திருக்கலாம் (முத்தமிட்டிருக்கலாம், அணைத்திருக்கலாம்)" என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த அற்பன் விபச்சாரம் செய்துவிட்டான்" என்று கூறினார். ஆகவே, அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றுகையில், "அறிந்துகொள்ளுங்கள். நாம் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்கு) புறப்படும்போதெல்லாம் மக்களில் சிலர் ஊரிலேயே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு, (பால் போன்ற) குறைவான பொருளை(ப் பெண்களுக்குக் கெட்ட எண்ணத்துடன்) வழங்குகிறார்கள். அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களில் ஒருவர் என்னிடம் அகப்பட்டால் மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் விதத்தில் (மிகக் கடுமையாக) அவரைத் தண்டிப்பேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 29
3495. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரம் செய்துவிட்ட ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அவர் உயரம் குறைந்தவராகவும் தலைவிரி கோலத்துடனும் கட்டுடலுடனும் காணப்பட்டார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு முறை திருப்பி அனுப்பினார்கள். பிறகு அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நாம் அல்லாஹ்வின் பாதையில் (அறப் போருக்குப்) புறப்படும்போதெல்லாம் உங்களில் சிலர் ஊரிலேயே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு, (பால் போன்ற) குறைவான பொருளைப் பெண்களில் சிலருக்கு(க் கெட்ட எண்ணத்தோடு) வழங்குகிறார்கள். அவர்களில் யாரையேனும் அல்லாஹ் என்னிடம் அகப்படச் செய்தால் "அவரை நான் பிறருக்குப் பாடமாக ஆக்கிவிடுவேன்" அல்லது "அவரை மற்றவர்களுக்குப்
அத்தியாயம் : 29
பாடம் புகட்டும் வகையில் தண்டித்துவிடுவேன்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை (மாஇஸ் (ரலி) அவர்களை) நான்கு முறை திருப்பியனுப்பினார்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஷபாபா பின் சவார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரண்டு முறை திருப்பியனுப்பினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூஆமிர் அல்அகதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவரை இரண்டு முறை அல்லது மூன்று முறை திருப்பியனுப்பினார்கள்" என்று (ஐயப்பாட்டுடன்) காணப்படுகிறது.
3496. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "உம்மைப் பற்றி எனக்குக் கிடைத்த செய்தி உண்மையா?" என்று கேட்டார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள், "என்னைப் பற்றி தங்களுக்கு என்ன செய்தி கிட்டியது?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீர் இன்ன குடும்பத்து இளம் பெண்ணுடன் தவறான உறவு கொண்டுவிட்டதாக எனக்குச் செய்தி எட்டியது" என்றார்கள்.
அதற்கு மாஇஸ் (ரலி) அவர்கள், "ஆம்" என்று கூறி, தமக்கெதிராக நான்கு முறை சாட்சியம் (கூறி ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார்கள். பின்னர் (அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு) நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட, அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.

3497. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் எனப்படும் அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் மானக்கேடான ஒரு செயலைச் செய்துவிட்டேன். ஆகவே, எனக்குத் தண்டனையை நிலைநாட்டுங்கள்"என்று கூறினார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலமுறை திருப்பி அனுப்பினார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், "அவரைப் பற்றித் தவறாக எதையும் நாங்கள் அறியவில்லை. ஆயினும், அவர் ஒரு செயலைச் செய்துவிட்டு, "தம்மீது தண்டனை நிறைவேற்றப்பட்டால் தவிர அக்குற்றத்திலிருந்து தம்மால் வெளியேற முடியாது" என்று கருதுகிறார்" என்று கூறினர்.
பிறகு மாஇஸ் (ரலி) அவர்கள் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவருக்குக் கல்லெறி தண்டனையை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஆகவே, நாங்கள் அவரை "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடிக்கு அழைத்துச் சென்றோம். (கல்லெறியும்போது தப்பி ஓடாமலிருப்பதற்காக) அவரை நாங்கள் கட்டி வைக்கவுமில்லை. (அவரை நிறுத்துவதற்காக) நாங்கள் குழியும் தோண்டவில்லை.
அவரை எலும்பு, மண் கட்டி, சுட்ட செங்கல் ஆகியவற்றால் அடித்தோம். அடி தாங்க முடியாமல் அவர் ஓடினார். அவருக்குப் பின்னால் நாங்களும் ஓடினோம். இறுதியில் அவர் (பாறைகள் நிறைந்த) "அல்ஹர்ரா"ப் பகுதியின் முனைக்குச் சென்று எங்களுக்காக நிமிர்ந்து நின்றார். நாங்கள் அவர்மீது "ஹர்ரா"வின் பெருங்கற்களை எறிந்தோம். அவர் அமைதியாகிவிட்டார்.
பின்னர் அன்று மாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று உரையாற்றினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போருக்காக நாம் புறப்படும்போதெல்லாம் சிலர் (போருக்குச் செல்லாமல்) நம்முடைய குடும்பத்தாரிடையே தங்கிவிடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிட்டுக்கொண்டு இருந்துவிடுகிறார்கள். இத்தகைய (இழி)செயலை செய்யும் மனிதர் எவரேனும் என்னிடம் கொண்டுவரப்பட்டால் அவருக்குத் தக்க தண்டனை வழங்குவது என்மீது கடமையாகும்" என்று கூறினார்கள்.
(அன்றைய நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாஇஸ் (ரலி) அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரவுமில்லை; (தண்டனையை நிறைவேற்றிய பின் அவரை) இழித்துப் பேசவுமில்லை.
அத்தியாயம் : 29
3498. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அன்று மாலை நபி (ஸல்) அவர்கள் (எங்களிடையே) நின்று அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "இறைவாழ்த்துக்குப் பின்! சிலருக்கு என்ன நேர்ந்தது? நாம் அறப் போருக்குப் புறப்பட்டுச் சென்றால் மக்களில் சிலர் நம்முடன் வந்து சேராமல் (இங்கேயே) தங்கி விடுகின்றனர். அவர்கள் மலை ஆடு (புணரும்போது) சப்தமிடுவதைப் போன்று சப்தமிடுகிறார்கள் என்று கூறினார்கள்" எனக் காணப்படுகிறது. அதில் "நம்முடைய குடும்பத்தாரிடையே"எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், தாவூத் பின் அபீஹிந்த் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸின் ஒரு பகுதியே இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மாஇஸ் (ரலி) அவர்கள் தாம் விபச்சாரம் செய்ததை மூன்று முறை ஒப்புக்கொண்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3499. புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (விபச்சாரக் குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப் படுத்துங்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான்! நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனிடம் மீளுவாயாக" என்று கூறினார்கள்.
அவ்வாறே மாஇஸ் (ரலி) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டு, அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். நீர் திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவீராக" என்று கூறினார்கள். மாஇஸ் (ரலி) அவர்கள் மறுபடியும் திரும்பிச் சென்றுவிட்டு அதிக நாள் தாமதிக்காமல் திரும்பிவந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் முன்பு போன்றே பதிலுரைத்தார்கள். நான்காவது முறை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எதிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்?" என்று கேட்டார்கள். அவர், "விபச்சாரக் குற்றத்திலிருந்து” என்று விடையளித்தார். அப்போது அவர்கள், "இவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளதா?" என்று கேட்டார்கள். அவர் பைத்தியக்காரர் அல்லர் எனத் தெரிவிக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள், "இவர் மது அருந்தியுள்ளாரா?" என்று கேட்டார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, அவரது வாயை (ஊதச் சொல்லி) முகர்ந்து பார்த்தார். மதுவின் வாடை வரவில்லை.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் விபச்சாரம் செய்தீரா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்” என்று (வாக்குமூலம்) கூறினார். அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அவர் தொடர்பாக மக்க(ளிடையே கருத்து வேறுபாடு தோன்றி அவர்க)ள் இரு பிரிவினராக ஆயினர். சிலர், "அவர் அழிந்தார். அவரை அவருடைய குற்றம் சுற்றிவளைத்துக் கொண்டுவிட்டது" என்று கூறினர். வேறு சிலர், "மாஇஸின் பாவமன்னிப்பை விஞ்சிய பாவ மன்னிப்பு இல்லை. அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தமது கையை நபியின் கையில் வைத்து, "என்னைக் கல்லால் அடித்துக்கொல்லுங்கள்" என்று கூறினார்" என்றனர். இவ்வாறே இரண்டு அல்லது மூன்று நாட்கள் நகர்ந்தன.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது மக்கள் வந்து, சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "மாஇஸ் பின் மாலிக்குக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ், மாஇஸ் பின் மாலிக்கின் பிழையைப் பொறுப்பானாக!" என்று வேண்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரினார். அது ஒரு சமுதாயத்துக்கே பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் அது போதுமானதாகும்" என்று கூறினார்கள்.
பிறகு "அஸ்த்” குலத்தின் ஒரு கிளையான "ஃகாமித்” கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான்! நீ திரும்பிச் சென்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுவாயாக" என்று கூறினார்கள்.
அதற்கு அப்பெண், "மாஇஸ் பின் மாலிக்கைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் திருப்பி அனுப்பப் பார்க்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "என்ன அது?" என்று கேட்டார்கள். அப்பெண், "நான் விபச்சாரத்தால் கர்ப்பமுற்றவள்" என்றார்.
நபி (ஸல்) அவர்கள், "நீயா (அது)?" என்று கேட்டார்கள். அப்பெண் "ஆம்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது வயிற்றிலுள்ள மகவைப் பெற்றெடுக்கும்வரை (பொறுமையாக இரு; பிறகு வா!)" என்றார்கள். பிரசவிக்கும்வரை அவளைப் பராமரிக்கும் பொறுப்பை அன்சாரிகளில் ஒருவர் ஏற்றுக்கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஃகாமிதிய்யா குலத்தாளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நாம் இப்போது அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்போவதில்லை. பாலூட்டும் அன்னையின்றி நிற்கும் சிறு வயதுக் குழந்தையாக அவளது பிள்ளையை விட்டுவிடவும் நாம் விரும்பவில்லை" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, "அவனுக்குப் பாலூட்டும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். பின்னர் அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 29
3500. புரைதா பின் அல்ஹசீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மாஇஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நானே அநீதி இழைத்துக்கொண்டேன். நான் விபச்சாரம் செய்துவிட்டேன். என்னைத் தாங்கள் தூய்மைப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார். (அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.) மறு நாளும் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்" என்று கூறினார். அப்போதும் அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பியனுப்பிவிட்டார்கள்.
பிறகு அவருடைய குலத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி, "அவருடைய அறிவில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் அறிகிறீர்களா? அவரிடம் ஏதேனும் ஆட்சேபகரமான நடவடிக்கையைக் காணுகிறீர்களா?" என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், "முழுமையான அறிவோடுதான் அவர் உள்ளார் என்றே நாங்கள் அறிகிறோம். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களில் நல்ல மனிதர்களில் ஒருவராக உள்ளார்" என்று கூறினர்.
பிறகு மூன்றாவது முறையாக அவர் வந்தபோதும் அவருடைய குலத்தாரிடம் மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பி அவரைப் பற்றி விசாரித்தார்கள். அப்போதும் அவர்கள், "அவருக்கு எந்தக் கோளாறுமில்லை. அவரது அறிவிலும் எந்தக் குறையுமில்லை" என்று தெரிவித்தனர். நான்காவது முறை அவர் வந்து முன்பு போன்றே கூறியபோது, அவருக்காகக் குழியொன்றைத் தோண்டும்படி பணித்தார்கள். பிறகு அவரைக் கொண்டுசென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அடுத்து "ஃகாமிதிய்யா” குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்துவிட்டேன். (உரிய தண்டனையை நிறைவேற்றி) என்னைத் தூய்மைப்படுத்துங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை திருப்பியனுப்பிவிட்டார்கள். அப்பெண் மறு நாள் (வந்து), "அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னைத் திருப்பியனுப்புகிறீர்கள்? மாஇஸ் அவர்களைத் திருப்பி அனுப்பியதைப் போன்று என்னையும் தாங்கள் திருப்பியனுப்புகிறீர்கள் போலும். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தகாத உறவில் ஈடுபட்டு) கர்ப்பமுற்றுள்ளேன்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, நீ சென்று குழந்தை பெற்றெடு (பிறகு திரும்பி வா)" என்று சொன்னார்கள். குழந்தை பெற்றெடுத்த பின் அந்தப் பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இது நான் பெற்றெடுத்த குழந்தை" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ சென்று குழந்தைக்குப் பாலூட்டு! பால்குடி மறந்த பின் திரும்பி வா" என்றார்கள்.
பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் அச்சிறுவனுடன் வந்தார். அவனது கையில் ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது. அப்பெண், "அல்லாஹ்வின் தூதரே! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கிறான்"என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அச்சிறுவனை முஸ்லிம்களில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டார்கள். ஆகவே, அவருக்காக நெஞ்சளவு குழி தோண்டப்பட்டது. (பின்னர் அக்குழிக்குள் அப்பெண்ணை நிறுத்திய பின்) மக்களுக்குக் கட்டளையிட, அவருக்குக் கல்லெறி தண்டனையை மக்கள் நிறைவேற்றினார்கள். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்துக் கொண்டுவந்து, அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். இரத்தம் காலித் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.
அப்போது அவரை காலித் ஏசினார்கள். காலித் (ரலி) அவர்கள் ஏசியதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, "காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார். பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட பாவமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்" என்று கூறினார்கள். பிறகு அப்பெண்ணுக்கு இறுதித்தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு பணித்து, அவருக்காகத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர் அடக்கமும் செய்யப்பட்டார்.

3501. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரத்தால் கர்ப்பமுற்றிருந்த ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தண்டனைக்குரிய ஒரு குற்றத்தை நான் செய்துவிட்டேன். என்மீது தண்டனையை நிலைநாட்டுங்கள்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் காப்பாளரை அழைத்துவரச் செய்து, "இவளை நல்ல முறையில் கவனித்துவாருங்கள். குழந்தை பிறந்ததும் இவளை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்கள். காப்பாளர் அவ்வாறே செய்தார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவள்மீது அவளுடைய துணிகள் சுற்றப்பட்டன. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுக்காக இறுதித் தொழுகை நடத்தினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவளுக்காகத் தாங்கள் தொழவைக்கிறீர்களா? இவள் விபச்சாரம் புரிந்தவள் ஆயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவள் அழகிய முறையில் மன்னிப்புத் தேடிவிட்டாள். மதீனாவாசிகளில் எழுபது பேரிடையே அது பங்கிடப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக அமையும். உயர்ந்தோன் அல்லாஹ்வுக்காகத் தன் உயிரையே அர்ப்பணித்த இப்பெண்ணின் பாவமன்னிப்பைவிடச் சிறந்ததை நீர் கண்டுள்ளீரா?" என்று கேட்டார்கள்.

3502. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் கூறியதாவது:
கிராமவாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். அல்லாஹ்வின் சட்டப்படியே எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டும்" என்று சொன்னார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவருடைய எதிரி, "ஆம் எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார். பின்னர் அந்தக் கிராமவாசி "என்னைப் பேச அனுமதியுங்கள்" என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பேசு” என்றார்கள்.
அவர், "என் மகன் இவரிடம் பணியாளனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. ஆகவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்குப் பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் ஈட்டுத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் கல்வியாளர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும்தான் தண்டனையாகத் தரப்பட வேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) வழங்கப்பட வேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்" என்று கூறினார்.
இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன். அடிமைப் பெண்ணும் நூறு ஆடுகளும் (உம்மிடமே) திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்" என்று கூறிவிட்டு, (அருகிலிருந்த உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி), "உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபச்சாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டாள். ஆகவே,அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பாடம் : 6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை உண்டு.
3503. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விபச்சாரம் புரிந்துவிட்ட ஒரு யூத ஆணும் யூதப் பெண்ணும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டனர். யூதர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து "விபச்சாரம் செய்துவிட்டவனுக்கு (அளிக்கப்படும் தண்டனை குறித்து) நீங்கள் (உங்களுடைய) "தவ்ராத்” (வேதத்)தில் என்ன காண்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு யூதர்கள், "அவர்கள் இருவர் முகத்திலும் கரி பூசி, அவர்களிருவரையும் ஒட்டகத்தில் ஏற்றி, முகம் திருப்பி அமரவைப்போம். பின்னர் அவ்விருவரும் (ஊரைச்) சுற்றிக் கொண்டு வரப்படுவர்" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உண்மையாளர்களாயின் ‘தவ்ராத்"தைக் கொண்டுவாருங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் ‘தவ்ராத்"தைக் கொண்டுவந்து வாசித்துக்காட்டினர். கல்லெறி தண்டனை குறித்த வசனம் வந்தபோது, அதை வாசித்துக் கொண்டிருந்த (யூத) இளைஞர் அந்த வசனத்தின் மீது தமது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை வாசித்தார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (யூதமத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "அவரைக் கையை எடுக்கச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். உடனே அந்த இளைஞர் தமது கையை எடுத்தார். அங்கே (விபச்சாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி கூறும் வசனம் இருந்தது. ஆகவே,அவ்விருவரையும் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது.
அவர்கள்மீது கல்லெறிந்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அந்தப் பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அந்த யூதர் தமது உடலால் அவளை மறைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 29
3504. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "விபச்சாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணுக்கும் யூதப் பெண்ணுக்கும் கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்விருவரையும் யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யூதர்கள் தம் சமுதாயத்தாரில் விபச்சாரம் செய்துவிட்டிருந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் அழைத்து வந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3505. அ. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, "விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் "ஆம்" என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, "மூசா (அலை) அவர்களுக்குத் ‘தவ்ராத்"தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம். (அதே குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! இவர்கள் உனது சட்டமொன்றைச் சாகடித்துவிட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்" என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்..." என்று தொடங்கும் வசனத்தை "அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்" (5:41) என்பதுவரை அருளினான். அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி,கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள் என்று யூதர்கள் கூறினர்.
மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்:
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர். (5:44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர். (5:45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர். (5:47)
இந்த (5:47ஆவது) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்.)

- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரைச் சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தர விட்டார்கள்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னர் வசனங்கள் அருளப் பெற்றது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை.ஆ. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரம் புரிந்த) "அஸ்லம்” குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கும், யூதர் ஒருவருக்கும், அவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கும் சாகும்வரை கல்லால் அடிக்கும் தண்டனையை நபி (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மற்றொரு பெண்ணுக்கும்” என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3506. அபூஇஸ்ஹாக் சுலைமான் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "(சாகும்வரை) கல்லால் அடிக்கும் தண்டனையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்களா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம் (நிறைவேற்றினார்கள்)” என்று பதிலளித்தார்கள். நான், குர்ஆனில் ‘அந்நூர்" எனும் (24 ஆவது) அத்தியாயம் அருளப்பெறுவதற்கு முன்பா? அல்லது அதற்குப் பின்பா (எப்போது அந்தத் தண்டனையை நிறைவேற்றினார்கள்)?" என்று கேட்டேன். அவர்கள் "எனக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.

3507. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது வெளிப்பட்டுவிட்டால், அவளுக்கு (உரிமையாளர் ஐம்பது) சாட்டையடி வழங்கட்டும். (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்டவேண்டாம். பிறகு (மறுபடியும்) அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்கு (ஐம்பது) சாட்டையடி கொடுக்கட்டும். (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்டவேண்டாம். மூன்றாவது முறையும் அவள் விபச்சாரம் செய்து அது வெளிப்பட்டுவிட்டால், அவளை ஒரு முடிக்கற்றைக்காவது (அற்ப விலைக்காவது) விற்றுவிடட்டும்!

3508. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூன்று முறை அவளுக்குச் சாட்டையடி வழங்க வேண்டும். நான்காவது முறை அவள் விபச்சாரம் செய்துவிட்டால், அவளை விற்று விடட்டும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3509. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கணவனில்லாத ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)?"என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவள் விபச்சாரம் செய்தால் அவளைச் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மீண்டும் சாட்டையால் அடியுங்கள். பின்னரும் விபச்சாரம் செய்தால் மறுபடியும் சாட்டையால் அடியுங்கள். அதன் பின்னர் (அவள் விபச்சாரம் செய்தால்) அவளை ஒரு கயிற்றுக்காவது விற்றுவிடுங்கள்" என்று கூறினார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அவளை விற்றுவிட வேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்பது எனக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்லமா அல்கஅனபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள "ளஃபீர்" எனும் சொல்லுக்கு "கயிறு" என்பது பொருள் என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பொருள் கூறினார்கள்.

3510. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்துவிட்டால் (அவளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும்)? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் "ளஃபீர்" என்பதற்கு ‘கயிறு" என்பது பொருள் என இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறிய சொற்பொருள் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) ஆகியோர் வழியாக (தலா இரு அறிவிப்பாளர்தொடர்களில்) நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இந்த அறிவிப்புகளிலும் "அவளை விற்றுவிட வேண்டும் என்பது, மூன்றாவது தடவைக்குப் பிறகா, அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா" என்பதில் ஐயப்பாடு எழுப்பப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 7 மகப்பேறு ஏற்பட்டுள்ள பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல்
3511. அபூஅப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(ஒரு நாள்) அலீ (ரலி) அவர்கள் (எங்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! உங்கள் அடிமைகள்மீதும் குற்றவியல் தண்டனையை நிறைவேற்றுங்கள். அவர்கள் திருமணமானவர்களாக இருக்கட்டும்; திருமணமாகாதவர்களாக இருக்கட்டும். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப்பெண் ஒருவர் விபச்சாரம் செய்து விட்டார். எனவே, அவருக்குச் சாட்டையடிகள் வழங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.
ஆனால், அவருக்கு அப்போதுதான் மகப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்தது. அவருக்குச் சாட்டையடி தண்டனையை நிறைவேற்றினால் (எங்கே) அவரை நான் கொன்றுவிடுவேனோ என அஞ்சினேன். (எனவே, தண்டனையைத் தள்ளிவைத்தேன்.) இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "நீங்கள் செய்தது சரிதான்" என்று அவர்கள் கூறினார்கள்.

அதில், "அவர் திருமணம் முடித்தவராக இருக்கட்டும்; திருமணம் முடிக்காதவராக இருக்கட்டும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த ஹதீஸில், "அவள் குணமடை(ந்து இயல்பு நிலையை அடை)யும்வரை அவளை விட்டுவிடுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
பாடம் : 8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை
3512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவரை இரு பேரீச்ச மட்டைகளால் ஏறக்குறைய நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) அவ்வாறே செய்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் "(குர்ஆனில் கூறப்பட்டுள்ள) குற்றவியல் தண்டனைகளிலேயே குறைந்தபட்ச தண்டனையான எண்பது (சாட்டையடிகள் வழங்கலாம்)" என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(மது அருந்திய) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 29
3513. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக்காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடு(க்குமாறு உத்தரவு பிறப்பி)த்தார்கள். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த வேளையில், (சிரியா, இராக் போன்ற பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்டு) மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது (வாழ்க்கை வசதிகள் பெருகி,குடிப்பழக்கம் அதிகரித்தது. அப்போது), "மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று மக்களிடம் கேட்டார்கள்.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "(குர்ஆனில் கூறப்பட்ட) குற்றவியல் தண்டனைகளிலேயே மிகவும் குறைந்தபட்ச தண்டனையை (எண்பது கசை யடி) அதற்குரிய தண்டனையாக நீங்கள் ஆக்க வேண்டுமென நான் கருதுகிறேன்" என்றார்கள். இதன்படி உமர் (ரலி) அவர்கள் எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள்.

3514. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகக் காலணியாலும் பேரீச்ச மட்டையாலும் நபி (ஸல்) அவர்கள் நாற்பது முறை அடிக்குமாறு உத்தரவிட்டுவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் "மக்கள் கிராமப்புறங்களிலும் செழிப்பான பகுதிகளிலும் குடியேறியபோது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 29
3515. அபூசாசான் ஹுளைன் பின் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் (அங்கு) கொண்டுவரப்பட்டார். அவர் சுப்ஹுத் தொழுகை இரண்டு ரக்அத் தொழுவித்துவிட்டு, "உங்களுக்கு நான் இத்தொழுகையைக் கூடுதலாக்கப் போகிறேன்" என்று கூறியிருந்தார்.
அப்போது அவருக்கெதிராக இருவர் சாட்சியமளித்தனர். அவர்களில் ஒருவரான ஹும்ரான் பின் அபான், "அவர் (வலீத்) மது அருந்தியிருந்தார்" என்று சாட்சியம் அளித்தார். மற்றொருவர் வலீத் வாந்தியெடுத்ததைத் தாம் கண்டதாகச் சாட்சியமளித்தார். உஸ்மான் (ரலி) அவர்கள், "அவர் மது அருந்தியதாலேயே வாந்தியெடுத்தார்" என்று கூறிவிட்டு, "அலீயே! நீங்கள் எழுந்து அவருக்கு (மது அருந்திய குற்றத்திற்காக)ச் சாட்டையடி வழங்குங்கள்" என்று கூறினார்கள்.
உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் புதல்வரிடம்) "ஹசனே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்கு" என்று கூறினார்கள். அதற்கு ஹசன் (ரலி) அவர்கள், (உஸ்மான் (ரலி) அவர்கள்மீது கோபம் கொண்டவரைப் போன்று) "ஆட்சியின் குளிர்ச்சிக்குப் பொறுப்பேற்றவர்களையே அதன் வெப்பத்துக்கும் பொறுப்பேற்கச் செய்யுங்கள்" என்று கூறிவிட்டார்கள். உடனே அலீ (ரலி) அவர்கள் (தம் சகோதரரின் புதல்வரிடம்) "அப்துல்லாஹ் பின் ஜஅஃபரே! நீர் எழுந்து அவருக்குச் சாட்டையடி வழங்குவீராக" என்று சொன்னார்கள். அவ்வாறே அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அவர்கள், வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் எத்தனை முறை அடிக்கிறார் என்பதை) எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாற்பது அடியானதும் "போதும் நிறுத்து" என்றார்கள்.
பிறகு, "(மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) நபி (ஸல்) அவர்கள் நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் (தமது ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) எண்பது சாட்டையடிகள் வழங்கினார்கள். எல்லாம் (பின்பற்றத் தகுந்த) வழிமுறைகளே. ஆயினும், இ(றைத்தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் வழங்கிய நாற்பது சாட்டையடிகளான)து எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் இந்த ஹதீஸை அப்துல்லாஹ் அத்தானாஜ் (ரஹ்) அவர்களிடமிருந்தே (நேரடியாகக்) கேட்டிருந்தேன். ஆனால், அதை மனனம் செய்ய வில்லை. (பின்னர் இப்னு அபீஅரூபா (ரஹ்) அவர்களிடம் கேட்டே இப்போது அறிவிக்கிறேன்) என இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3516. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்துபோனால் (அதற்காக) நான் கவலை அடையப்போவதில்லை. குடிகாரனைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரன் இறந்துபோனால் அவனுக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிவிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட தண்டனை எதையும்) வழிமுறையாக்கவில்லை.

பாடம் : 9 (குற்றவியல் தண்டனை அல்லாமல்) கண்டிப்புக்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு.
3517. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படமாட்டாது.
இதை அபூபுர்தா அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 29
பாடம் : 10 தண்டனைகள் குற்றங்களுக்கான பரிகாரமாகும்.
3518. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; திருடுவதில்லை; கொல்லக் கூடாதென அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றிக் கொல்வதில்லை" என்று என்னிடம் உறுதிமொழி அளியுங்கள்" என்று கூறினார்கள்.
மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து. அதற்காக அவர் (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிட்டால். அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து,பின்னர் அல்லாஹ் அதை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவரது விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படும். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; நாடினால் அவரைத் தண்டிப்பான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 29
3519. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைப்பதில்லை...”” எனத்தொடங்கும் பெண்கள் தொடர்பான (60:12ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 29
3520. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி வாங்கியதைப் போன்றே, (ஆண்களாகிய) எங்களிடமும் "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்யமாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டோம்; எங்களில் சிலர் வேறுசிலர் மீது அவதூறு கூறமாட்டோம்" என உறுதிமொழி வாங்கினார்கள்.
மேலும், "இந்த உறுதிமொழியை உங்களில் யார் நிறைவேற்றுகின்றாரோ அவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. தண்டனைக்குரிய குற்றத்தை உங்களில் எவரேனும் செய்து, அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். யாருடைய குற்றத்தை அல்லாஹ் மறைத்துவிட்டானோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; நாடினால் அவரை மன்னிப்பான்.
அத்தியாயம் : 29
3521. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வுக்கு நாங்கள் எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; திருடமாட்டோம்;கொல்லக்கூடாதென அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி கொலை செய்யமாட்டோம்;கொள்ளையடிக்க மாட்டோம்; (இறைவனுக்கோ இறைத்தூதருக்கோ) மாறுசெய்யமாட்டோம். இவற்றின்படி நாங்கள் செயல்பட்டால் (எங்களுக்கு) சொர்க்கம் உண்டு. இவற்றில் எதையேனும் நாங்கள் செய்து, அதை அல்லாஹ் மூடி மறைத்துவிட்டால், அதைப் பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த தலைவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
அத்தியாயம் : 29
பாடம் : 11 வாயில்லாப் பிராணிகள், சுரங்கம், கிணறு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு இல்லை.
3522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று (விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க (விப)த்துக்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

3523. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிணற்றால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது. சுரங்கத்தால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பாகம் (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.