இஸ்லாம் – முந்தைய இறைவேதங்கள் மீது நம்பிக்கை வைக்க கூறும் மார்க்கம்!

உலகில் உள்ள மதங்களில் முந்தைய இறைத்தூதர்களையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் நம்ப வேண்டும் என வலியுறுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம் தான். இவ்வாறு நம்பிக்கை கொள்வது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளில் (ஈமான்) மிக முக்கியமானதாக இருக்கிறது. முந்தைய தீர்க்கதரிசிகளையும், அவர்களுக்கு அருளப்பட்ட வேதங்களையும் ஒருவர் நம்ப மறுத்தால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது.

மேலும் இறைத்தூதர்கள் அனைவரும்,
- கண்ணியமானவர்கள் என்றும்,
- ஸாலிஹான நல்லடியார்கள் என்றும்,
- அவர்களிடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்றும்,
-அவர்களை மரியாதைக்குறைவாகவோ அல்லது அவர்களின் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படும் விதத்திலோ பேசக் கூடாது என்றும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.

தீர்க்கதரிசிகள் அனைவரும் நேர் வழிசார்ந்த ஸாலிஹான நல்லடியார்களாவார்கள்: -

அல்லாஹ் கூறுகிறான்: -
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் – இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே. (அல்-குர்ஆன் 6:84-85)

(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார். (அல்-குர்ஆன் 19:51)

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம். (அல்-குர்ஆன் 21:72)

இன்னும், லூத்தையும் (நபியாக்கி) – நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர். (அல்-குர்ஆன் 21:74)

இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே! இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே! (அல்-குர்ஆன் 21:85-86)

முந்தைய இறைத்தூதர்களுக்கும் வேதம் வழங்கப்பட்டது: -

அல்லாஹ் கூறுகிறான்: -
(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்றாஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். (அல்-குர்ஆன் 4:163)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது
பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 5:46 )

முந்தைய இறைத்தூதர்களின் மீதும் அவர்களுக்கு இறக்கப்பட்டதின் மீதும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கிடையே பாகுபாடு காட்டக் கூடாது: -

அல்லாஹ் கூறுகிறான்: -
(முஃமின்களே!)’நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்’ என்று கூறுவீர்களாக. (அல்-குர்ஆன் 2:136)

‘அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 3:84)

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: ‘நாம் இறை தூதர்களில்  எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்’ என்று கூறுகிறார்கள். (அல்-குர்ஆன் 2:285)

யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:152)

அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார். (அல்-குர்ஆன் 37:37)

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன்னால் உள்ள மார்க்கங்களின் நிலை

வானம், பூமி மற்றும் இவைகளுக்குகிடையே உள்ள எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்கிறான்  என்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏக மனதாக  நம்பிக்கைக் கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே ஒருவன் தான் நமக்கு நேர்வழி காட்டி நம்மை மோட்சம் அடைய செய்வதற்கு தகுதியானவனாக இருக்க முடியும். எனவே உண்மையான மார்க்கம், வாழ்க்கை நெறி போன்றவைகள் படைப்பாளனாகிய அந்த ஒருவனிடம் இருந்தே தான் வர வேண்டும்.

படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. எனவே அவனை அந்த அழகிய பெயர்களான கடவுள், இறைவன், மாலிக், பகவான் இப்படி எதை வேண்டுமானாலும் அழைக்கலாம். இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை என்று உறுதியாக நம்ப வேண்டும் என்பது ஒன்று தான் மிக முக்கியமான விஷயம். படைப்பாளன் ஒருவன் தான். ஆகையால் நம்முடைய வணக்கங்கள் அனைத்தும் அவன் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது.

நம்மை படைத்தவன், முதல் மனிதனை படைத்ததில் இருந்து மனிதர்கள் மோட்சம் அடைவதற்காக தன் புறத்தில் இருந்து வேதங்களை தான் தேர்ந்தெடுத்தவர்கள் மூலம் தொடர்ந்து அனுப்பினான். இப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், படைத்தவனின் தூதுவத்தை உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் அவர்கள் பேசுகின்ற மொழியில் எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டார்கள். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் படைத்த அந்த ஒரே இறைவனை வணங்க வேண்டும்; அவனுக்கு எந்த துணையையும் கற்பிக்கக்கூடாது என்பது தான் அந்த தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொன்ன ஒரே முக்கியமான தூது செய்தியாகும்.

காலங்கள் உருண்டோட, அந்த தூதர்களின் போதனைகள் மறக்கப்பட்டோ அல்லது மனிதர்களால் மாற்றப்பட்டோ விட்டன. அவைகள் பல்லாயிரம் வருடங்களாக நடைபெற்று வந்தது. உலகம் முழுவதும் ஒரே வட்டத்துக்குள் வந்த போது தொழில் நுட்பங்கள் தகவல் பரிமாற்றங்கள் மூலம் செய்திகள் அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் என்ற நிலை வந்த போது இறைவன் தன்னுடைய கடைசி வேதத்தை இறுதி தூதர் மூலமாக அனுப்பினான். முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி தூதராகவும், புனிதமான திருக் குர்ஆனை இறுதி வேதமாகவும் முஸ்லிமாகிய நாங்கள் நம்புகிறோம். ‘உலகம் முடியும் வரை உள்ள எல்லா மனித இனத்துக்கும் ஒளி விளக்காக இந்த திருக்குர்ஆன் உள்ளது’ என்று இறைவன் கூறி உள்ளான். மேலும் இந்த குர்ஆனை மாற்றவோ,  இதில் எதையும் சேர்க்கவோ இயலாதவாறு பாதுகாப்பதற்கு இறைவனே பொறுப்பேற்றுக் கொண்டான்.

முஸ்லிமாகிய நாங்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருகுர்ஆன், ஒரே இறைவனால் வழங்கப்பட்டது என்று நம்புகிறோம். மேலும் இந்த குர்ஆன், இதுவே கடைசி வேதம் என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு உலக முடிவு நாள் வரை, வேறு தூதர் வரமாட்டார் என்றும் கூறுகிறது. ஆகவே முஸ்லிமாகிய நாங்கள், முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எந்த மார்க்கத்தையும் நம்புவதில்லை.
ஆகையால், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறுதி தூதர் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதத்தை இறுதி வேதம் என்று நான் கூறுவது ஒரு தலைப்பட்சமாக உங்களுக்குத் தோன்றலாம். இதை உறுதி செய்யவோ அல்லது மறுக்கவோ வேண்டுமெனில், நேர்மை உள்ளம் கொண்ட உங்களைப் போன்றவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், குர்ஆனை படித்து, இது இறைவனால் வழங்கப்பட்டதா அல்லது மனிதர்களால் எழுதப்பட்டதா என்று முடிவு செய்ய வேண்டியது தான். முழு குர்ஆனையும் படித்த பிறகு தான் நான் கூட இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறினேன். குர்ஆன் படிப்பதற்கு இலகுவானதும் எல்லாவற்றையும் தெளிவாக, சுருக்கமாக விவரிப்பதாகவும் உள்ளது.

குர்ஆனில் இறைவன் மனித குலம் அனைத்துக்கும் சவால் விடுகின்ற ஒரு குர்ஆன் வசனத்தை கூறுகிறேன். அந்த சவால் 1400 வருடங்களுக்கும் மேலாக முறியடிக்கப்படாமல் உள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்: -

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது. (அல்-குர்ஆன் 2:23-24)

படைப்பாளனின் இறுதிவேதம்!

படைப்பாளன் நீங்களா? இறைவனா? உங்களைப் படைப்பவன் அல்லாஹ்வே!

அகிலங்களின் இறைவனான அல்லாஹ் கூறுகிறான்: -

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா? உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் – எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:57-62)

உங்களின் உணவுகளான பயிர்களை முளைப்பிக்கச் செய்பவன் அல்லாஹ்வே!

(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். ‘நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம். ‘மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்’ (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). (அல்-குர்ஆன் 56:63-67)

உங்களின் குடிநீரை உருவாக்குபவனும் அல்லாஹ்வே!

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? (அல்-குர்ஆன் 56:68-70)

நெருப்பை உண்டு பண்ணுபவனும் அல்லாஹ்வே!

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம். ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன் 56:71-74)

அல்குர்ஆன் அகிலங்களின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் இறுதிவேதமாகும்: -

நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும். நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது. தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள். அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது. அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா? நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா? (அல்-குர்ஆன் 56:75-82)
Previous Post Next Post