அத்தியாயம் 4 தொழுகை

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 4
தொழுகை

பாடம் : 1 தொழுகை அறிவிப்பின் (பாங்கு) துவக்கம்.
618. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்பு விடுப்பதெற்கென யாரும் இருக்கவில்லை. அவர்கள் ஒன்றுகூடி தொழுகை(க்கு வரவேண்டிய) நேரத்தை முடிவு செய்துகொள்வார்கள். ஒரு நாள் இதுதொடர்பாக அவர்கள் கலந்து பேசினர். அப்போது அவர்களில் சிலர், கிறிஸ்தவர்கள் மணி அடிப்பதைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர், யூதர்கள் கொம்பூதுவதைப் போன்று கொம்பூதுங்கள் என்றனர். அப்போது உமர் (ரலி) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை நீங்கள் நியமிக்கக் கூடாதா? என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பிலால் (ரலி) அவர்களிடம்) பிலாலே! எழுந்து தொழுகைக்காக (மக்களை) அழையுங்கள்! என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 2 தொழுகை அறிவிப்பு வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்ல வேண்டும்.
619. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இகாமத்தில் சொல்லப்படும்) கத் காமத்திஸ் ஸலாஹ் என்ற வாசகத்தைத் தவிர என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. (இகாமத்தில் அந்த வாசகத்தை மட்டும் இரண்டு முறை கூற வேண்டும்.)
அத்தியாயம் : 4
620. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காக, அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய (அறிவிப்பு) முறையை உருவாக்குவது குறித்து (நபித்தோழர்கள்) பேசினார்கள். அப்போது சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர். (இவை யூத, கிறிஸ்தவக் கலாசாரம் என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.) இதையடுத்து தொழுகை அறிவிப்பு வாசகங்கள் இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்கள் ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
621. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்:
முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமானபோது, தொழுகை நேரத்தை மக்களுக்கு அறிவிக்கும் முறை குறித்துப் பேசினார்கள். அவர்களில் சிலர், நெருப்பு மூட்டுவோம்; அல்லது மணி அடிப்போம் என்றனர்.
அத்தியாயம் : 4
622. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்பின் வாசகங்களை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றைப்படையாகவும் கூறும்படி பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 3 தொழுகை அறிவிப்பு முறை.
623. அபூமஹ்தூரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எனக்கு இந்தத் தொழுகை அறிவிப்பு(பாங்கு) முறையைக் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன்).
(பின்னர் மெதுவாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்; அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன்).
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்; முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன்).
பின்னர் மீண்டும் (சப்தமாக) அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
பின்னர் ஹய்ய அலஸ் ஸலாஹ் (தொழ வாருங்கள்) என்று இரு முறையும், ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியின் பக்கம் வாருங்கள்) என்று இரு முறையும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்குப் பிறகு) அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் பாங்கு சொல்லக் கற்றுக்கொடுத்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 4 ஒரே பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அறிவிப்பாளர்களை ஏற்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
624. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இரு தொழுகை அறிவிப்பாளர்கள் இருந்தனர். ஒருவர் பிலால் (ரலி) அவர்கள்; மற்றொருவர் கண்பார்வை இழந்த இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 5 கண்பார்வையற்றவர் தொழுகை அறிவிப்புச் செய்வது செல்லும்; (தொழுகை நேரத்தை அறிந்து சொல்ல) அவருடன் கண்பார்வை உள்ள ஒருவர் இருந்தால்.
625. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய பள்ளிவாசலு)க்கு இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளராக இருந்தார்கள். அன்னார் கண் பார்வையற்றவராவார். (அவருக்கு உதவியாளராக பிலால் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.)
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 6 (இஸ்லாமிய அரசின் துருப்புகள்) இணை வைப்பாளர்கள் வாழும் நாட்டில் (போருக்காகச் செல்லும்போது) அவர்களிடையே தொழுகை அறிவிப்பின் சப்தம் கேட்டால் அந்த மக்களைத் தாக்குவதை நிறுத்த வேண்டும்.
626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போர்க் காலத்தில்) ஃபஜ்ர் நேரம் ஆரம்பிக்கும்போது போர் தொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். (போரை ஆரம்பிக்கு முன்) ஃபஜ்ர் தொழுகையின் அறிவிப்பு சப்தத்தை எதிர்பார்ததுக் கொண்டிருப்பார்கள். அப்படி தொழுகை அறிவிப்பு சப்தத்தைக் கேட்டால் போரை நிறுத்திவிடுவார்கள். இல்லையென்றால் தாக்குவார்கள்.
(ஒரு முறை) ஒரு மனிதர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லக் கேட்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ இயற்கையில் (இஸ்லாத்தில்) இருக்கிறாய் என்று சொன்னார்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ நரகத்திலிருந்து (விடுதலை பெற்று) வெளியேறி விட்டாய் என்று சொன்னார்கள். நபித்தோழர்கள் அவர் யாரென்று பார்த்தபோது அவர் வெள்ளாடுகளை மேய்க்கும் ஓர் இடையர் என்று தெரிந்தது.
அத்தியாயம் : 4
பாடம் : 7 தொழுகை அறிவிப்பை (பாங்கை)க் கேட்பவர், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே கூறுவதும் பின்பு நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் கூறி, அவர்களுக்குச் சொர்க்கத்தின் உயர்ந்த பதவி கிடைப்பதற்காகப் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கதாகும்.
627. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை நீங்கள் செவியேற்றால், அறிவிப்பாளர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
628. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
629. அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர்,அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர், அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று சொன்னால் நீங்கள் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்(அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச்செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது) என்று சொல்லுங்கள். பின்பு அவர் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று சொன்னால் நீங்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொல்லுங்கள். பின்பு அவர் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்என்று சொன்னால் நீங்களும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள். பின்பு அவர் லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொன்னால் நீங்களும் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனப்பூர்வமாகச் சொல்லுங்கள். உங்களில் இவ்வாறு கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
630. அல்லாஹ்வின் தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பன், வபி முஹம்மதின் ரசூலன், வபில் இஸ்லாமி தீனன் என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.
(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நான் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (அஷ்ஹது (உறுதிமொழிகிறேன்) என்பதற்கு பதிலாக) வ அன அஷ்ஹது (நானும் உறுதிமொழிகிறேன்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 8 தொழுகை அறிவிப்புச் செய்வதன் (பாங்கு) சிறப்பும், தொழுகை அறிவிப்பைக் கேட்கும் போது ஷைத்தான் வெருண்டோடுவதும்.
631. ஈசா பின் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக அவர்களிடம் அழைப்பாளர் (முஅத்தின்) வந்தார். அப்போது முஆவியா (ரலி) அவர்கள்,மறுமை நாளில் மக்களிலேயே நீண்ட கழுத்து உடையவர்களாகத் தொழுகை அறிவிப்பாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டிருக்கிறேன் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
632. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் ரவ்ஹா எனும் இடம்வரை அவன் (வெருண்டோடிச்) சென்றுவிடுவான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் அ(ந்த ரவ்ஹா எனும் இடத்)தைப் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர்கள், அது மதீனாவிலிருந்து முப்பத்தாறு மைல் தொலைவிலுள்ள ஓர் இடமாகும் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்பை ஷைத்தான் செவியுற்றால் அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரம்) வெருண்டோடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான். இகாமத் சொல்லும் சப்தத்தைக் கேட்கும்போது அந்தச் சப்தத்தை கேட்காமலிருப்பதற்காக (மீண்டும் வெகுதூரம்) வெருண்டோடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வந்து (தொழக்கூடியவர்களின் உள்ளத்தில்) ஊசலாட்டத்தை ஏற்படுத்துகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
634. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்புச் செய்பவர் அறிவிப்புச் செய்ய ஆரம்பித்தால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் புறமுதுகுகிட்டு ஓடுகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
635. சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) என் தந்தை (அபூஸாலிஹ்) என்னை பனூ ஹாரிஸா கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். என்னுடன் எங்களுடைய அடிமை ஒருவரும் அல்லது எங்களுடைய நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது என்னுடன் வந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுவருக்கு அப்பாலிருந்து ஒருவர் அவரை அழைத்தார். என்னுடன் வந்தவர் அந்தச் சுவரின் மீதேறிப் பார்த்தபோது அங்கு யாரும் தென்படவில்லை. பின்னர் இதைப் பற்றி என் தந்தையிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், இப்படி ஒரு நிலையை நீ சந்திக்க நேரிடும் என்று நான் உணர்ந்திருந்தால் உன்னை நான் அனுப்பியிருக்கமாட்டேன். எனினும், (இது போன்ற) சப்தத்தை நீ கேட்டால் தொழுகை அறிவிப்பை நீ சப்தமாகக் கூறு. ஏனெனில், தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
636. நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
தொழுகைக்காக அறிவிப்புச் செய்யப்பட்டால் ஷைத்தான் தொழுகை அறிவிப்பைக் கேட்காமலிருப்பதற்காக வாயு வெளியேறிய வண்ணம் (வெகு தூரத்திற்கு) பின்வாங்கி ஓடுகிறான். தொழுகை அறிவிப்பு முடிந்ததும் மீண்டும் (பள்ளிவாசலுக்கு) வருகிறான். பின்னர் இகாமத் சொல்லப்பட்டால் பின்வாங்கி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிக்கப் பட்டதும் (திரும்பவும் பள்ளிவாசலுக்கு) வந்து, (தொழுது கொண்டிருக்கும்) மனிதரின் உள்ளத்தில் ஊசலாட்டத்தைப் போடுகிறான். அவரிடம் இன்ன இன்னதை நினை என்று தொழுகைக்கு முன்பு அவரது நினைவில் வராதவற்றையெல்லாம் (தொழுகையில் நினைத்துப் பார்க்கும்படி) கூறுகிறான். இறுதியில், அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
637. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (அந்த மனிதருக்குத் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும் என்பதற்கு பதிலாக) அந்த மனிதருக்குத் தாம் எப்படித் தொழுதோம் என்பதேகூடத் தெரியாமல் போய்விடும் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம்: 9 (தொழுகையின் தொடக்கத்தில் சொல்லப்படும்) தக்பீரத்துல் இஹ்ராம், ருகூஉவிற்குச் செல்லும்போதும் ருகூஉவிலிருந்து எழும்போதும் சொல்லப்படும் தக்பீர் ஆகியவற்றின்போது இரு கைகளையும் தோளுக்கு நேராக உயர்த்துவது விரும்பத் தக்கதாகும். சஜ்தாவிலிருந்து எழும்போது அவ்வாறு கைகளை உயர்த்தலாகாது.
638. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும்போது தம் தோள்களுக்கு நேராக தம்மிரு கைகளையும் உயர்த்துவதை நான் பார்த்திருக்கிறேன். மேலும், ருகூஉ செய்வதற்கு முன்பும் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் (அவ்வாறு செய்வார்கள்). இரண்டு சஜ்தாக்களுக்கு மத்தியில் கைகளை உயர்த்தமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
639. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவார்கள். ருகூஉச் செய்ய விரும்பும்போதும், ருகூஉவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறு செய்வார்கள். சஜ்தாலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்ய மாட்டார்கள்.
அத்தியாயம் : 4
640. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக இடம்பெற்றுள்ளது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம்மிரு கைகளையும் தம் தோள்களுக்கு நேராக இருக்கும் வகையில் உயர்த்திய பின் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் சொல்வார்கள்.
அத்தியாயம் : 4
641. அபூகிலாபா (அப்துல்லாஹ் பின் ஸைத் பின் அம்ர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பித்தால் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் சொல்லி தம்மிரு கைகளை உயர்த்துவதையும், அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பும்போதும், ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தும்போதும் தம்மிரு கைகளை உயர்த்துவதையும் நான் பார்த்திருக்கிறேன். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துகொண்டிருந்தார்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
642. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில் ஆரம்பத்) தக்பீர் சொல்லும்போதும், ருகூஉ செய்யும்போதும் தம்மிரு கைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறும்போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.
அத்தியாயம் : 4
643. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் தம்மிரு காதுகளின் கீழ் முனைகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்தியதை நான் கண்டேன் என (மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 10 தொழுகையில் ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூற வேண்டும். ருகூஉவிலிருந்து நிமிரும் போது மட்டும் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூற வேண்டும்.
644. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும் போதும் அன்னார் தக்பீர் கூறுவார்கள். தொழுது முடிந்ததும் அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 4
645. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் (ஆரம்பத்தில்) தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉச் செய்யும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு ருகூஉவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். பிறகு சஜ்தாவுக்காகச் சரியும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தாவுக்குச் செல்லும்போதும், பின்னர் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பின்பு தொழுது முடிக்கும்வரை இவ்வாறே தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்துவிட்டு எழும்போதும் தக்பீர் கூறுவார்கள் என்று கூறினார்கள்.
பிறகு உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
646. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றவுடன் தக்பீர் கூறுவார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
ஆனால், உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என அபூஹுரைரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டது அதில் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
647. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மர்வான் பின் ஹகம் என்பார், அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்த காலகட்டத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுவிக்கத் துவங்கும்போது தக்பீர் (தஹ்ரீம்) கூறுவார்கள் என்று தொடங்கி முந்தைய ஹதீஸைப் போன்றே (645) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் இந்த அறிவிப்பில், தொழுது முடித்துவிட்டு சலாம் கொடுத்ததும் பள்ளிவாசலில் இருப்பவர்களை முன்னோக்கி அமர்ந்துகொண்டு என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுததைப் போன்று தொழுகின்றவன் நானே என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 4
648. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு முறை நிமிரும்போதும் குனியும்போதும் தக்பீர் கூறிக்கொண்டிருந்தார்கள். (தொழுகை முடிந்ததும் அவர்களிடம்) நாங்கள், அபூஹுரைரா! இது என்ன தக்பீர்? என்று கேட்டோம். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை இவ்வாறுதான் அமைந்திருந்தது என்று பதிலளித்தார்கள்
அத்தியாயம் : 4
649. அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையில்) ஒவ்வொரு முறை குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறிவந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துவந்ததாகவும் அறிவிப்பார்கள்.
அத்தியாயம் : 4
650. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நானும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களும் அலீ பின் தாலிப் (ரலி) அவர்களுக்குப் பின்னால் (நின்று அவர்களைப் பின்பற்றித்) தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தாவுக்காகக் குனியும்போது தக்பீர் கூறினார்கள். (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள். நாங்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் இம்ரான் (ரலி) அவர்கள் (மகிழ்ச்சியுடன்) எனது கையைப் பிடித்து நமக்கு இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையைப் போன்றே தொழுவித்தார் அல்லது இவர் முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழுகையை எனக்கு நினைவுபடுத்திவிட்டார் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 11 (தொழுகையில்) ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதுவது கட்டாயமாகும். ஒருவருக்கு அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை முறைப்படி ஓதத் தெரியாமலும் அதைக் கற்றுக்கொள்ள முடியாமலும் போனால் அவருக்குத் தெரிந்த இதர இறைவசனங்களை அவர் ஓதிக்கொள்ளலாம்.
651. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
652. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
653. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறினார்கள். (மஹ்மூத் சிறுவராக இருந்தபோது) அவர்களது கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளி (வாயில் செலுத்திய பின்) அவரது முகத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (செல்லமாக) உமிழ்ந்தார்கள்.
அத்தியாயம் : 4
654. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் (குர்ஆனின் அன்னை எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தையும்) அதற்கு மேலாகவும் ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
655. அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவு பெறாததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் நாங்கள் இமாமக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கிறோம் (அப்போதுமா ஓத வேண்டும்)? என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல்,பிரார்த்தித்தல் ஆகிய) இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று கூறுவான். அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் (அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்று கூறுவான். (நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் என் அடியான் தன் காரியங்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.)
மேலும், அடியான் இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால், அல்லாஹ், இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான். அடியான் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று கூறுவான்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை அலாஉ பின் அப்திர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். அன்னார் தமது இல்லத்தில் நோயுற்றிருந்தபோது அவர்களைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். அப்போது நானே இந்த ஹதீஸ் குறித்து அன்னாரிடம் கேட்டேன்.
அத்தியாயம் : 4
656. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
657. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இவ்விரு அறிவிப்புகளிலும் தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயம்)தனை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன். அதில் ஒரு பகுதி எனக்கும் மற்றொரு பகுதி என் அடியானுக்கும் உரியதாகும் என்று அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
658. அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (அப்துர் ரஹ்மான் பின் யஅகூப்-ரஹ்) அவர்களும் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடைய நண்பர்களாக இருந்தனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக அவ்விருவரும் கூறினர்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனின் தோற்றுவாய் (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ளதாகும். இதை மூன்று முறை கூறினார்கள்.
அத்தியாயம் : 4
659. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் வசனங்களை) ஓதாமல் தொழுகையே கிடையாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் சப்தமிட்டு ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் சப்தமிட்டு ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் சப்தமின்றி அமைதியாக ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் சப்தமின்றி அமைதியாக ஓதுகிறோம்.
அத்தியாயம் : 4
660. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்கும்படி சப்தமிட்டு ஓதினார்களோ (அதைப் போன்றே) நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதினார்களோ (அதைப் போன்றே) நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதுகிறோம் என்று கூறினார்கள்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், (தொழுகையில்) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை)விடக் கூடுதலாக (எதையும்) நான் ஓதாமலிருந்தால்...? என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அதைவிட அதிகமாக ஓதினால் அது உமக்குச் சிறந்ததாகும். அத்துடன் முடித்துக்கொண்டாலும் அது உமக்குப் போதுமானதாகிவிடும் என்று பதிலளித்தார்கள்.
661. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசனங்களை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதினார்களோ அந்த ரக்அத்தில் நாங்களும் உங்களுக்குக் கேட்கும்படி சப்தமாக ஓதுகிறோம். அவர்கள் எந்த ரக்அத்தில் எங்களுக்குக் கேட்காத வகையில் சப்தமின்றி அமைதியாக ஓதினார்களோ நாங்களும் அந்த ரக்அத்தில் உங்களுக்குக் கேட்காத வகையில் அமைதியாக ஓதுகிறோம். ஒருவர் குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) மட்டும் ஒதுவது போதுமானதாகும். அதைவிட அதிமாக ஓதுவது சிறப்பிற்குரியதாகும்.
அத்தியாயம் : 4
662. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் பள்ளிவாசலுக்கு வந்து (அவசரமாக அவசரமாக) தொழலானார். (தொழுது முடித்ததும்) அவர் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லிவிட்டு நீர் திரும்பச் சென்று தொழுவீராக. ஏனெனில், நீர் முறையாகத் தொழவில்லை என்று சொன்னார்கள்.
அந்த மனிதர் திரும்பிப்போய் முன்பு தொழுததைப் போன்றே மீண்டும் தொழுதுவிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் சொன்னார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வ அலைக்கஸ் ஸலாம் (உன் மீதும் சாந்தி நிலவட்டும்) என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, நீர் (முறையாகத்) தொழவில்லை. எனவே, திரும்பச் சென்று தொழுவீராக என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர் சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிடச் சிறந்த முறையில் எனக்குத் தொழத் தெரியாது. எனவே, எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள் என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீர் தொழுகைக்கு நின்றதும் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவீராக. பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்வீராக. பிறகு (குனிந்து) ருகூஉச் செய்வீராக. அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி நேராக நிற்பீராக. பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வீராக. அதில் சற்று நேரம் நிலைகொள்வீராக. பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக. பிறகு இதே (நடை)முறையை உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 4
663. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்து தொழுதார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலின்) ஓர் ஓரத்தில் இருந்தார்கள்.
மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில் நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கத் தூய்மை (உளூ) செய்வீராக. பிறகு கிப்லாவை முன்னோக்கித் தக்பீர் கூறுவீராக என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 12 இமாமைப் பின்பற்றித் தொழக்கூடியவர் சப்தமாக (குர்ஆன் வசனங்களை) ஓதலாகாது.
664. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழுகை அல்லது அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுது முடித்ததும்) அவர்கள், சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (மிக்க மேலான உம்முடைய இறைவனின் பெயரைத் துதிப்பீராக!) என்று தொடங்கும் (குர்ஆனின் 87ஆவது) அத்தியாயத்தை எனக்குப் பின்னால் (நின்று) ஓதியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நான்தான் (ஓதினேன்). நன்மையை நாடியே அவ்வாறு செய்தேன் என்றார். (பிறகு மக்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் (சப்தமாக) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் தகராறு செய்வதாக நான் அறிந்தேன். (எனவே, உங்களில் எவரும் எனக்குப் பின்னால் நின்று தொழும்போது சப்தமாக ஓத வேண்டாம்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
665. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதர் சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (என்று தொடங்கும் 87ஆவது) அத்தியாயத்தை ஓதலானார். தொழுகையை முடித்துத் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களில் (எனக்குப் பின்னால் நின்று சப்தமாக) ஓதியவர் யார்? அல்லது உங்களில் ஓதிக்கொண்டிருந்தவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நான்தான் (ஓதினேன்) என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,உங்களில் சிலர் (எனக்குப் பின்னால் சப்தமிட்டு) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் அவர் தகராறு செய்வதாக எண்ணி விட்டேன். (எனவே, உங்களில் யாரும் எனக்குப் பின்னால் நின்று சப்தமாக ஓத வேண்டாம்) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
666. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்தார்கள். (தொழுகை முடிந்ததும்) உங்களில் சிலர் (குர்ஆன் வசனங்களை சப்தமாக) ஓதுவதன் மூலம் (என்னை ஓதவிடாமல்) என்னுடன் தகராறு செய்வதாக அறிந்தேன் (எனவே, உங்களில் யாரும் எனக்குப் பின்னால் நின்று சப்தமாக ஓத வேண்டாம்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 13 (தொழுகையில்) பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதலாகாது என்று கூறுவோரின் ஆதாரம்.
667. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருடன் (அவர்களுக்குப் பின்னால் நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்களில் யாருமே பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை (சப்தமாக) ஓதியதை நான் கேட்டதில்லை.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
668. கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ஷுஅபா ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்:
நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், நீங்கள் இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், ஆம். அது குறித்து நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்(டுத் தெரிந்துகொண்)டோம் என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 4
669. அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தொழுகையின் தொடக்கத்தில் தக்பீர் கூறிய பின்) சுப்ஹானக்கல்லாஹும்ம வ பி ஹம்திக்க, தபாரக்கஸ்முக்க, வ தஆலா ஜத்துக்க, வலா இலாஹ ஃகைருக்க என்று சப்தமிட்டுக் கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். உனது பெயர் சுபிட்சம் வாய்ந்தது. உனது பெருமை உயர்வானது. உன்னைத் தவிர வேறு இறைவனில்லை.)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) மற்றும் உஸ்மான் (ரலி) ஆகியோருக்குப் பின்னால் (நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று ஓதியே (தொழுகையை) ஆரம்பித்து வந்தார்கள். அவர்கள் (அதை) ஓதுவதற்கு முன்போ, பின்போ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 14 பிஸ்மில்லாஹ் குர்ஆனிலுள்ள ஒவ்வோர் அத்தியாயத்தின் முதல் வசனமாகும்; (9ஆவது அத்தியாயமான) பராஅத்(அத்தவ்பா) அத்தியாயத்தைத் தவிர என்று கூறுவோரின் ஆதாரம்.
670. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள். அப்போது அவர்கள் (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், சற்று முன் (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) ஓர் அத்தியாயம் எனக்கு அருளப்பெற்றது என்று கூறிவிட்டு அந்த அத்தியாயத்தை (பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர். ஃபஸல்லி லி ரப்பிக்க வன்ஹர். இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர்.
(பொருள்: அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்... (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு அல்கவ்ஸரை நல்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக! நிச்சயமாக உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்.)
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்கவ்ஸர் என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று பதிலளித்தோம். அவர்கள்,அது ஒரு (சொர்க்க)நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த்தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் (தண்ணீர் அருந்துவதற்காக) அதை நோக்கி வருவார்கள். அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும். அப்போது அவர்களில் ஓர் அடியார் (தண்ணீர் அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். உடனே நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள் என்பதற்கு பதிலாக) எங்களிடையே பள்ளிவாசலில் இருந்தார்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும், (உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை என்பதற்கு பதிலாக) அந்த மனிதர் உங்களுக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கிவிட்டதை என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அது ஒரு நதி. என்னுடைய இறைவன் சொர்க்கத்தில் அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் ஒரு நீர் தடாகம் உள்ளது என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம் பெற்றுள்ளது. ஆனால், அதன் குவளைகள் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைப் போன்று (அதிகமாகக்) காணப்படும் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
பாடம் : 15 (தொழுகையின் ஆரம்பத்தில்) தக்பீரத்துல் இஹ்ராம் கூறிய பின் நெஞ்சுக்குக் கீழ் தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கைமீது வலக் கையை வைப்பதும், சஜ்தாவில் தோள்களுக்கு நேராக நிலத்தில் இரு கைகளையும் (விரித்து) வைப்பதும் (விரும்பத் தக்கதாகும்).
671. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன்.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் (ரஹ்) அவர்கள் இரு காதுகளுக்கு நேராக என்று விவரித்தார்கள்.-
பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பியபோது தம் கைகளை ஆடையிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு சஜ்தாச் செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(ளை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) சஜ்தாச் செய்தார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 16 தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது.
672. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்தொடர்ந்து தொழுகையில் (அமர்வில்) அஸ்ஸலாமு அலல்லாஹ், அஸ்ஸலாமு அலா ஃபுலான் (அல்லாஹ்வுக்குச் சாந்தி உண்டாகட்டும்: இன்னாருக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறிவந்தோம். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம்,நிச்சயமாக அல்லாஹ்வே சலாம் (சாந்தியளிப்பவன்) ஆவான். எனவே, நீங்கள் தொழுகையி(ன் இருப்பி)ல் அமர்ந்தால் அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் (சொல்,செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்!) என்று கூறுங்கள். இவ்வாறு நீங்கள் கூறினாலே வானம் பூமியிலுள்ள நல்லடியார்கள் அனைவருக்கும் சலாம் கூறியதாகும். மேலும், அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார்கள் என்றும் நான் உறுதி கூறுகிறேன்) என்றும் கூறுங்கள். பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
673. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில் பிறகு நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
674. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பிறகு நீங்கள் நாடியவற்றை அல்லது நீங்கள் விரும்பியவற்றை (அல்லாஹ்விடம்) கோரிப் பிரார்த்திக்கலாம் என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
675. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் (இருப்பில்) அமர்ந்திருந்தால் என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. (அதன் இறுதியில்) பிறகு நீங்கள் (விரும்பிய) பிரார்த்தனையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
676. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையே எனது கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எனக்கு அவர்கள் கற்றுத்தந்தார்கள்
மற்ற அறிவிப்பாளர்கள் அத்தஹிய்யாத் (ஓதும் விதத்)தை அறிவித்திருப்பதைப் போன்றே இந்த ஹதீஸின் அறிவிப்பாளரும் அறிவித்துள்ளார்.
அத்தியாயம் : 4
677. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயம் ஒன்றைக் கற்றுத் தருவதைப் போன்று (தொழுகையின் இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்கு (பின்வருமாறு) கற்றுத்தந்தார்கள்:
அத்தஹிய்யாத்துல் முபாரக்காத்துஸ் ஸலவாத்துத் தய்யிபாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் சுபிட்சங்களும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் குர்ஆனைக் கற்பிப்பதைப் போன்று என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
678. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகை இருப்பில் ஓதப்படும்) அத்தஹிய்யாத்தை எங்களுக்குக் கற்றுத் தருவார்கள்.
அத்தியாயம் : 4
679. ஹித்தான் பின் அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமுசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தபோது ஒரு மனிதர் உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி (நன்மை,தானதருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது) என்று கூறினார். அபூமூசா (ரலி) அவர்கள் தொழுகையை முடித்து சலாம் கொடுத்துத் திரும்பியதும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போது மக்கள் அமைதியாயிருந்தனர். மீண்டும் உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அப்போதும் மக்கள் அமைதியாயிருந்தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), ஹித்தான்! நீங்கள்தாம் அதைக் கூறியிருக்க வேண்டும் என்று சொல்ல, அதை நான் கூறவில்லை. அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு என்னைக் கண்டிப்பீர்களென பயந்துவிட்டேன் என்றேன் நான். அப்போது மக்களில் ஒருவர் நான்தான் அவ்வாறு கூறினேன்.அதன் மூலம் நல்லதையே நாடினேன் என்று சொன்னார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
உங்களுடைய தொழுகையி(ல் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றினார்கள். (அதில்) நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக்கொடுத்தார்கள்.
அப்போது அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி)த் தொழுவிக்கட்டும். அவர் (இமாம்), தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று சொல்லுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன் (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, இது (இமாம் உங்களுக்கு முன் ருகூஉச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு ருகூஉச் செய்து, இமாமுக்குப் பிறகு நிமிர்வதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய ருகூஇன் நேரமும் சமமாகி விட்டது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், அவர் (இமாம்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான்) என்று கூறினால் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்) என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு செய்தால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான்.
மேலும், அவர் (இமாம்) தக்பீர் கூறி சஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி சஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன் சஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன் சஜ்தாலிருந்து எழுவார். எனவே இது (அதாவது இமாம் உங்களுக்கு முன் சஜ்தாச் செய்து, உங்களுக்கு முன் நிமிர்வது) அதற்கு (நீங்கள் இமாமுக்குப் பிறகு சஜ்தாச் செய்து, இமாமுக்குப் பிறகு எழுவதற்கு)ச் சமமாகிவிட்டது (அதாவது இருவருடைய சஜ்தாவின் நேரமும் சமமாகிவிட்டது) என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்களுடைய முதல் சொல் இதுவாக இருக்கட்டும்: அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வ ரஹ்மத் துல்லாஹி வ பரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு.
(பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் பாராட்டுகளும் வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் சுபிட்சமும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்.)
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
680. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் அவர் (இமாம்) ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள் என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான் எனும் வாசகம் அபூஅவானா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகாமில் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் தகவலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் பின் உக்தி அபிந் நஸ்ர் (ரஹ்) அவர்கள் அவர் (இமாம்) ஓத ஆரம்பித்தால் நீங்கள் வாய்மூடி இருங்கள் என்ற இந்த ஹதீஸ் தொடர்பாகக் கடுமையாக விமர்சித்தார்கள். அப்போது முஸ்லிம் (ரஹ்) அவர்கள் (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் வரக்கூடிய) சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்களைவிடச் சிறந்த நினைவாற்றல் உள்ள ஒருவரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஸ் இருக்கிறதே! என்று பதிலளித்தார்கள். அப்போது முஸ்லிம் (ரஹ்) அவர்கள், அந்த ஹதீஸ் சரியானதுதான்; என்னிடம் ஏற்கப்பட்டது தான் என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், அப்படியானால் அவர்கள் அறிவித்த ஹதீஸை நீங்கள் ஏன் இடம்பெறச் செய்யவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு முஸ்லிம் (ரஹ்) அவர்கள் என்னிடம் சரியானதாக உள்ள எல்லா ஹதீஸையும் நான் இதில் இடம்பெறச்செய்து விடுவதில்லை; (என் பார்வையில்) ஒருமித்தக் கருத்துப்படி சரியாக உள்ள ஹதீஸையே இங்கு இடம்பெறச் செய்துள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 4
681. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான் என்று தீர்மானித்துவிட்டான் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 17 (தொழுகையின் இறுதி அமர்வில்) அத்தஹிய்யாத்திற்குப் பின்னால் நபி (ஸல்) அவர்கள்மீது ஸலவாத் ஓதுவது.
682. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களுடைய அவையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்கள்மீது ஸலவாத் கூறும்படி அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். எனவே, உங்கள்மீது நாங்கள் ஸலவாத் கூறும் முறை யாது? என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) அமைதியாக இருந்தார்கள். அதனால் அவர்களிடம் அவர் (இதைக்) கேட்காமலிருந்திருக்க வேண்டும் என்றுகூட நாங்கள் எண்ணினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு ஸலவாத்) கூறும்படி சொன்னார்கள்:
அல்லாஹும்ம, ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம,வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்றாஹீம ஃபில் ஆலமீன இன்னக்க ஹமீதும் மஜீத்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக! அகிலத்தாரில் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் அளித்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சமளிப்பாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
பிறகு (எனக்கு) சலாம் சொல்லும் முறை, நீங்கள் (ஏற்கெனவே) அறிந்துவைத்திருப்பதைப் போன்றுதான் என்று அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
683. அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது (அவர்களிடம்) நாங்கள், (அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி சலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால்,உங்கள்மீது நாங்கள் எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம். அப்போது அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியனும் பெருமைக்குரியவனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
684. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
685. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வ பாரிக் அலா முஹம்மதின் (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நீ சுபிட்சம் வழங்குவாயாக!) என்று (மட்டுமே) இடம்பெற்றுள்ளது. (அதன் ஆரம்பத்தில்) அல்லாஹும்ம (இறைவா!) என்பது இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 4
686. அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள்மீது எப்படி ஸலவாத் கூற வேண்டும்?என்று கேட்டோம். அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி, வ துர்ரியத்திஹி, கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா அஸ்வாஜிஹி வ துர்ரியத்திஹி, கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம. இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.
(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ கருணை புரிவாயாக! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியர் மற்றும் சந்ததியினருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்.)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
687. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 18 (தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து கூறுவதும் ஆமீன் கூறுவதும்.
688. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாம், சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறும்போது நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். எவருடைய இந்த வார்த்தை வானவர்களின் வார்த்தைக்கு (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸின் கருத்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
689. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம், (அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதி முடித்து) ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் கூறுங்கள். ஏனெனில்,எவருடைய ஆமீன், வானவர்கள் கூறும் ஆமீனுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிடுகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம் : 4
690. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னுஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
692. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) உங்களில் ஒருவர் ஆமீன் கூற, வானத்திலுள்ள வானவர்களும் ஆமீன் கூற, அவற்றில் ஒன்று மற்றொன்றுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
693. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓதக்கூடியவர்(இமாம்), ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று கூறும் போது, அவருக்குப் பின்னால் நிற்பவர் ஆமீன் கூறி, அவர் கூறும் ஆமீன், வானத்திலுள்ள (வான)வர்கள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 19 இமாமை மஃமூம் பின்தொடர்தல்.
694. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப் பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. எனவே, நாங்கள் அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது தொழுகையின் நேரம் வந்துவிடவே அவர்கள் எங்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்தவாறே தொழுதோம். அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் (தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் (குனிந்து நிமிரும்போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால் நீங்கள் ரப்பனா வ லக்கல் ஹம்து (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று கூறுங்கள். அவர் அமர்ந்தவாறு தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தவாறே தொழுங்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
695. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களுக்குச் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. பின்னர் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழவைத்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 4
696. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அனஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களது வலப்பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று கூறியதாகவும், மேலும் மேற்கண்ட ஹதீஸ்களிலுள்ள மற்றக் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாகவும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
697. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களுடைய வலப்பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று காணப்படுகிறது. மேலும், இந்த அறிவிப்பில் இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவு)ம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
698. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நபி (ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் அவர்களது வலப்பக்க விலாவில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது என்று இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில், மேற்கண்ட அறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள (இமாம் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள் எனும்) அதிகப்படியான குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
699. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரையிலிருந்து விழுந்ததால்) உடல் நலிவுற்றார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களை உடல்நலம் விசாரிக்க வந்தனர். அப்போது (தொழுகை நேரம் வந்துவிடவே) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடி தொழுவித்தார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றவாறு தொழுதனர். உடனே உட்கார்ந்து தொழுமாறு அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். தொழுது முடித்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இமாம் பின்பற்றப் படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் குனிந்(து ருகூஉசெய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் (ருகூஉவிலிருந்து தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் உட்கார்ந்தவாறு தொழுதால் நீங்களும் உட்கார்ந்தவாறே தொழுங்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
700. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
701. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களுக்குப் பின்னால் நாங்கள் (நின்றவாறே) தொழுதோம். அவர்கள் அமர்ந்தவாறே எங்களுக்குத் தொழுவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூற, அதை அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குக் கேட்கும் விதமாக (உரத்த குரலில்) கூறிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நாங்கள் நின்றவாறு தொழுதுகொண்டிருந்தோம். உடனே எங்களையும் உட்கார்ந்து தொழுமாறு சைகை செய்தார்கள். உடனே நாங்கள் உட்கார்ந்தவாறே அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அவர்கள் சலாம் கொடுத்(து தொழுகையை முடித்த)ததும்,நீங்கள் சிறிது நேரத்திற்கு முன் பாரசீகர்கள் மற்றும் ரோமர்களைப் போன்று நடந்து கொள்ளப் பார்த்தீர்கள். அவர்கள்தாம் தங்கள் மன்னர்கள் அமர்ந்திருக்கும்போது நின்றுகொண்டு இருப்பார்கள். நீங்கள் அவ்வாறு செய்யாதீர்கள். உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
702. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தக்பீர் கூறும்போது எங்களுக்குக் கேட்கும் விதமாக அபூபக்ர் (ரலி) அவர்கள் (சப்தமாக) தக்பீர் கூறினார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 4
703. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவருடன் நீங்கள் முரண்படாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச் செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கின்றான்) என்று கூறினால்,நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து (அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எல்லாப் புகழும் உனக்கே உரியது) என்று கூறுங்கள். அவர் சஜ்தா (சிரவணக்கம்) செய்தால் நீங்களும் சஜ்தாச் செய்யுங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் அமர்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 20 (தொழுகையில்) தக்பீர் கூறுவதிலும் பிற செயல்களிலும் இமாமை முந்தலாகாது.
704. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (தொழுகை முறையை)க் கற்றுக் கொடுத்தார்கள். (அப்போது) நீங்கள் இமாமை முந்தாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள். அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அவர் வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள் எனும் குறிப்பு இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பில் இமாமுக்கு முன்பாக நீங்கள் தலையை உயர்த்தாதீர்கள் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
705. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் கூறினார்கள்:
இமாம் என்பவர் கேடயமே ஆவார். எனவே, அவர் உட்கார்நது தொழுதால் நீங்களும்
உட்கார்ந்தே தொழுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறுங்கள். பூமியில் உள்ளோரின் (இந்த துதிச்) சொல் வானிலுள்ளோரின் (துதிச்) சொல்லுடன் (நேரத்தால்) ஒத்து அமைந்துவிட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் அவருக்காக மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
706. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க்ள் கூறினார்கள்:
இமாம் பின்பற்றப்படுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச்செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்தே தொழுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 21 இமாமுக்கு நோய், பயணம் உள்ளிட்ட காரணம் ஏதேனும் ஏற்பட்டால் மக்களுக்குத் தொழுவிக்கத் தமக்கு பதிலாக மற்றொருவரை நியமிப்பதும், நின்று தொழ முடியாத காரணத்தால் அமர்ந்து தொழுதுகொண்டிருக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் நிற்பதற்கு சக்தி பெற்றிருந்தால் அவர் நின்றே தொழ வேண்டும்; உட்கார்ந்து தொழும் இமாமைப் பின்பற்றித் தொழுகின்றவர் உட்கார்ந்தே தொழ வேண்டும் எனும் சட்டம் நிற்பதற்குச் சக்தி உள்ளவர் விஷயத்தில் மாற்றப்பட்டுவிட்டது என்பதும்.
707. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிக்கக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (கூறுகிறேன்) என்று சொல்லிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில் மக்கள் தொழுது விட்டனரா? என்று நபியவர்கள் கேட்டார்கள். நாங்கள், இல்லை, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். ஆனால், (எழ முடியாமல்) மயக்கமுற்றுவிட்டார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது மக்கள் தொழுது விட்டனரா? என்று கேட்டார்கள். நாங்கள், இல்லை; அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே!என்று சொன்னோம். அப்போது தண்ணீர் தொட்டியில் எனக்காகத் தண்ணீர் வையுங்கள் என்றார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்துவிட்டு எழ முற்பட்டார்கள். ஆனால், (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்றுவிட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, மக்கள் தொழுதுவிட்டனரா? என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள், இல்லை;அவர்கள் உங்களை எதிர்பாத்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! என்றோம்.
-அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் வீற்றிருந்தனர்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள் என்று சொன்னார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (அன்னார் இளகிய மனமுடையவராக இருந்தார்கள்) உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள் என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், இதற்கு நீங்கள்தாம் (என்னைவிடத்) தகுதியுடையவர் என்று கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதைக் கண்டபோது இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹர் தொழுகைக்காகப் புறப்பட்டுவந்தார்கள். (அவ்விருவரில் அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒருவராவார்கள்.)அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்க வேண்டாமென அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மை அழைத்துவந்த அவர்கள்) இருவரிடமும், என்னை அபூபக்ர் அவர்களுக்குப் பக்கத்தில் உட்காரவையுங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்று தொழுதார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா? என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆகட்டும் (சொல்லுங்கள்) என்றார்கள். ஆகவே,நான் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை. ஆயினும், அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த மற்றொரு மனிதரின் பெயரை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், அவர்தாம் அலீ (ரலி) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
708. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தபோதுதான் முதலில் அவர்களுக்கு உடல் நலம் குன்றியது. அப்போது எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒரு கையை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் (தோள்)மீதும் மற்றொரு கையை மற்றொரு மனிதரின் (தோள்)மீதும் வைத்து(த் தொங்கி)க்கொண்டு, தம் கால்கள் பூமியில் இழுபட (எனது வீட்டிற்கு)ப் புறப்பட்டுவந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த மற்றொரு மனிதர் யார் தெரியுமா? அவர்தாம் அலீ (ரலி) என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
709. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்குமிடையே தொங்கியபடி (எனது வீட்டிற்கு)ப் புறப்பட்டு வந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த மற்றொரு மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் இல்லை (தெரியாது) என்று பதிலளித்தேன். அதற்கு அவர் அலீ (ரலி) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
710. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறச் சொன்னார்கள்.) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேறு ஒருவரை தொழுவிக்க ஏற்பாடு செய்யும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய இறப்பு)க்குப் பின் அவர்களுடைய இடத்தில் (இமாமாக) நிற்கும் எவரையும் மக்கள் நேசிப்பார்கள் என்று என் மனதில் தோன்றவில்லை; மாறாக, அவர்களது இடத்தில் யார் வந்தாலும் அவரை ஒரு துர்குறியாகவே மக்கள் கருதுவார்கள் என்பதால்தான் திரும்பத் திரும்ப (அவ்வாறு) நான் வலியுறுத்தினேன். அந்தப் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் அவர்களிடமிருந்து மாற்றி (வேறு யாரிடமாவது ஒப்படைத்து)விட வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அத்தியாயம் : 4
711. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிகிச்சைக்காக) எனது இல்லத்துக்கு வந்தபோது அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறுங்கள்! என்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் அவர்கள் இளகிய மனமுடையவர்; அவர் குர்ஆனை ஓதினால் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே,அபூபக்ர் (ரலி) அவர்களை விடுத்து மற்றொரு மனிதருக்கு நீங்கள் கட்டளையிட்டால் நன்றாக இருக்குமே! என்று கூறினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இடத்தில் முதன் முதலாக நிற்பவரை மக்கள் துர்குறியாகக் கருதுவதை நான் விரும்பாததே இவ்வாறு நான் கூறியதற்குக் காரணமாகும். இரண்டு அல்லது மூன்று முறை நான் அதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன். ஆனால் நபியவர்கள், அபூபக்ர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று கூறிவிட்டு, (பெண்களாகிய) நீங்கள் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் தாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
712. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாயிருந்தபோது அவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்! என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நான், அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்றவர்; (தொழுகைக்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுது கொண்டிருப்பார்கள்.) அவர்களால் (சப்தமிட்டு ஓதி) மக்கள் கேட்கும்படி செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே! என்று சொன்னேன். அப்போது அபூபக்ரிடம் சொல்லுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும் என்று (மீண்டும்) நபியவர்கள் சொன்னார்கள். உடனே நான் (மற்றொரு துணைவியாரான) ஹஃப்ஸாவிடம் அபூபக்ர் (ரலி) வேகமாகத் துக்கப்படுகின்றவர்; உங்களது இடத்தில் அவர் நின்றால் அவரால் மக்களுக்குக் கேட்கும்படி செய்ய முடியாது; உமர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால் என்ன?என்று நபியவர்களிடம் கூறுங்கள் என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே சொன்னார். அதற்கு (பெண்களாகிய) நீங்கள் யூசுஃபுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள்தாம். மக்களுக்குத் தொழுவிக்கும்படி அபூபக்ரிடம் சொல்லுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். அவ்வாறே மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தங்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினர். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதைக் கண்டார்கள். உடனே எழுந்து இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியபடி தம் கால்கள் பூமியில் இழுபடப் புறப்பட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை உணர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் பின்வாங்க ஆரம்பித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் அமர்ந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் நின்றுகொண்டு தொழலானார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ரும், அபூபக்ர் அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
713. மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது... என்று இடம்பெற்றுள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைத்துவரப்பட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்தத் தக்பீரை மக்களுக்குக் கேட்கும் விதமாக சப்தமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்து மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கவாட்டிலிருந்துகொண்டு மக்களுக்குக் கேட்கும் விதமாக (தக்பீர்) கூறிக்கொண்டிருந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
714. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினார்கள். அவ்வாறே அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இதனிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குச் சற்று உடல்நலம் தேறியிருப்பதை உணர்ந்தார்கள். எனவே, அவர்கள் (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் (தொழுமிடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு நேராக அவர்களது பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழ, மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
715. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இவ்வாறிருக்க, (ஒரு) திங்கள் கிழமை அன்று மக்கள் தொழுகை வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரைச் சீலையை விலக்கி, நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் குர்ஆன் பிரதியின் தாளைப் போன்று (பொலிவுடன்) இருந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்து (மகிழ்ச்சியோடு) புன்னகைத்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்ததைக் கண்டு மகிழ்ச்சியால் தொழுகையிலிருக்கும் போதே (இன்ப) அதிர்ச்சியடைந்தோம். அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாக்கில் நகர்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்டு வரப்போகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்துவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களை நோக்கி உங்கள் தொழுகையை நிறைவுசெய்யுங்கள் என்று தமது கையால் சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறைக்குள்) நுழைந்து திரைச் சீலையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
716. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திங்கள் கிழமையன்று (தமது அறையின்) திரைச் சீலையை விலக்கியபோது நான் அவர்களைப் பார்த்ததுதான் இறுதியாக நான் பார்த்ததாகும் என்று இடம்பெற்றுள்ளது.
(இதற்கு முந்தைய) ஸாலிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதுமாகும்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
717. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (இறுதியாக எங்களுக்கு அமர்ந்து தொழுவித்துவிட்டுப் போனதிலிருந்து) மூன்று நாட்கள் அவர்கள் வெளியில் வரவில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த முன்சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது அறையின்) திரைச் சீலையைப் பிடித்து உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் எங்களுக்குத் தெரிந்தபோது (நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம். எந்த அளவிற்கென்றால்) எங்களுக்குக் காட்சியளித்த அவர்களது முகத்தை விடவும் மகிழ்வூட்டுகின்ற எந்தக் காட்சியையும் நாங்கள் கண்டதில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (தொழுகையைத் தொடர) முன்னே செல்லுமாறு தமது கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு இறக்கும்வரை நபி (ஸல்) அவர்களை எங்களால் பார்க்க முடியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
718. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டு அவர்களது நோய் கடுமையானபோது, அபூபக்ரை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்! என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் இளகிய மனமுடையவர்; (தொழுகைக்காக) நீங்கள் நிற்குமிடத்தில் அவர்கள் நின்றால் (மனம் நெகிழ்ந்து அழுது கொண்டிருப்பார்கள்.) அவர்களால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ரிடம் சொல்லுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்! (பெண்களாகிய) நீங்கள் நபி யூசுஃப் (அலை) அவர்களுடைய (அழகில் மயங்கிய) தோழிகள் போன்(று உள்நோக்கத்துடன் பேசுகின்)றவர்கள் என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்நாளிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 22 இமாம் வருவது தாமதமானால் மக்கள் தங்களுக்குத் தொழுவிக்க மற்றொருவரை முன்னிறுத்தலாம்.ஆனால், அவரை முன்னிறுத்துவதால் குழப்பம் உண்டாகுமோ என்ற அச்சம் ஏற்படாதிருக்க வேண்டும்.
719. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குபா பகுதியிலிருந்த பனூ அம்ர் குலத்தாரிடையே தகராறு ஏற்பட்ட செய்தி வந்ததையொட்டி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த) பனூ அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவர்களிடம் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிடவே, தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, (நபியவர்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால்) நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்கிறீர்களா, நான் இகாமத் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சரி என்று கூறிவிட்டு, மக்களுக்குத் தொழுவித்தார்கள்.மக்கள் தொழுகையில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக்கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு உணர்த்த) கை தட்டினார்கள்.(பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.) மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே (முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள் என்று சைகை செய்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை இதற்குப் பணித்தமைக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள்; பிறகு (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள். பின்னர் (தொழுது முடித்து) திரும்பியதும் அபூபக்ரே! நான் உங்களை அங்கேயே நிற்குமாறு பணித்தும்கூட நீங்கள் அங்கேயே நிற்காமலிருந்ததற்குக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அபூக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு (இந்த) அபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), நீங்கள் ஏன் (இந்த அளவு) அதிகமாகக் கை தட்டினீர்கள்? ஒருவருக்குத் தமது தொழுகையில் ஏதேனும் தோன்றினால் (அதை உணர்த்துவதற்காக) அவர் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூறட்டும்! ஏனெனில், அவர் அவ்வாறு கூறும் போது அவர்பால் கவனம் செலுத்தப்படும். கை தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
720. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் (ரலி) அவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பிறகு (நெஞ்சைத் திருப்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்துவந்து வரிசையில் நின்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
721. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அம்ர் பின் அவ்ஃப் குலத்தாரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
மேலும், இந்த அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை வரிசைகளை விலக்கிக் கொண்டு முன்வரிசைக்கு அருகில் வந்து நின்றார்கள் என்றும், அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே) பின்வாக்கில் நகர்ந்தார்கள் என்றும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
722. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகைக்கு முன் இயற்கைக்கடனை நிறைவேற்றுவதற்காக ஒதுக்குப் புறத்திற்குச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் நான் ஒரு (தண்ணீர்)பாத்திரத்தை எடுத்துச் சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தேவையை முடித்துவிட்டு) என்னிடம் திரும்பி வந்தபோது பாத்திரத்திலிருந்த தண்ணீரை அவர்களுடைய கைகளில் ஊற்றினேன். அவர்கள் (மணிக்கட்டுவரை) மூன்று முறை கைகளைக் கழுவினார்கள். பின்னர் முகத்தைக் கழுவினார்கள். பிறகு (முழங்கைவரைக் கழுவுவதற்காகத்) தமது நீளங்கியை முழங்கைகளிலிருந்து வெளியிலெடுக்க முயன்றார்கள். நீளங்கியின் கைப் பகுதி இறுக்கமாக இருந்த காரணத்தால் தம் கைகளை நீளங்கியில் நுழைத்து நீளங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியில் எடுத்தார்கள். பிறகு கைகைளை மூட்டுவரை கழுவினார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக) இரு காலுறைகள்மீதும் ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்யலா)னார்கள். பின்னர் (பள்ளிவாசலை நோக்கிச்) சென்றார்கள். நானும் அவர்களுடன் சென்றேன். அப்போது மக்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைத் தொழுவிக்கச் சொல்லி (அவர்களுக்குப் பின்னால் நின்று) தொழுதுகொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அந்தத் தொழுகையின்) இரு ரக்அத்களில் ஒரு ரக்அத்தான் கிடைத்தது. எனவே, கிடைத்த அந்த இறுதி ரக்அத்தை மக்களுடன் சேர்ந்து தொழுதார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (தொழுகையை முடிப்பதற்காக) சலாம் கொடுத்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, (எஞ்சிய ஒரு ரக்அத்தைத் தொழுது) தமது தொழுகையை நிறைவு செய்தார்கள். இ(வ்வாறு நபியவர்களை முந்திக் கொண்டு தாங்கள் தொழுத)து, முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஆகவே, அவர்கள் பல முறை தஸ்பீஹ் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின் மக்களைப் பார்த்து, நீங்கள் செய்தது நல்லதுதான் அல்லது நீங்கள் செய்தது சரிதான் என்று குறித்த நேரத்தில் மக்கள் தொழுததைப் பாராட்டும் வகையில் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (நபி (ஸல்) அவர்கள் வந்ததும்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களைப் பின்னுக்கு கொண்டுவர நான் நினைத்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் (தொழுவிக்கட்டும்)! என்று கூறினார்கள் என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 23 தொழுகையில் (இமாமுக்கு ஏற்பட்ட தவறைச் சுட்டிக்காட்ட) ஏதேனும் (செய்ய வேண்டுமெனத்) தோன்றினால் ஆண்கள் சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று கூற வேண்டும்; பெண்கள் கை தட்ட வேண்டும்.
723. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்கும் கைதட்டுதல் பெண்களுக்கும் உரியதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அறிஞர்களில் பலரை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தஸ்பீஹ் கூறி, சைகை செய்வார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
724. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில், தொழுகையில் எனும் குறிப்பு அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 24 தொழுகையைச் சிறந்த முறையில் (அதன் வழிமுறைகளைப் பேணி) முழுமையாகவும் உள்ளச்சத்துடனும் தொழ வேண்டும் எனும் கட்டளை.
725. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் (ஒருவரைப் பார்த்து), இன்னாரே, நீங்கள் நல்ல முறையில் தொழக் கூடாதா? தொழுதுகொண்டிருப்பவர் தாம் எப்படித் தொழுகிறோம் என்பதைக் கவனிக்கக் கூடாதா?அவர் தமக்காகத்தானே தொழுகிறார்? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்கு முன்னால் இருப்பவர்களைப் பார்ப்பதைப் போன்றே எனக்குப் பினனால் இருப்பவர்களையும் பார்க்கிறேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) நான் நோக்கும் திசை இதுதான் (இத்திசையில் மட்டுமே நான் பார்க்கிறேன்) என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுடைய ருகூஉம் (குனிதலும்) சஜ்தாவும் (சிரவணக்கமும்) எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக, எனது முதுகுக்குப் பின்னாலும் உங்களை நான் பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் செம்மையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் எனக்குப் பின்னால் அல்லது என் முதுகுக்குப் பினனால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
728. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்யுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் என் முதுகுக்குப் பின்னால் நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும்போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும்போதும் உங்களை நான் காண்கிறேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 25 இமாமை முந்திக்கொண்டு ருகூஉ மற்றும் சஜ்தா போன்றவற்றைச் செய்யலாகாது.
729. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள். தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, மக்களே! நான் (உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் உங்களுடைய) இமாம் ஆவேன். எனவே ,(தொழுகையில்) குனிதல் (ருகூஉ), சிரவணக்கம் (சஜ்தா), நிற்றல்(கியாம்) மற்றும் (சலாம் கொடுத்துத்) திரும்புதல் ஆகியவற்றில் என்னை முந்தாதீர்கள். ஏனெனில், நான் உங்களை எனக்கு முன்னாலும் பார்க்கிறேன்;எனக்குப் பின்னாலும் பார்க்கிறேன். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் பார்த்ததை நீங்கள் பார்த்திருந்தால் நிச்சயமாக நீங்கள் குறைவாகவே சிரிப்பீர்கள்; அதிமாக அழுவீர்கள் என்று கூறினார்கள். மக்கள் நீங்கள் எதைப் பார்த்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள்,சொர்க்கத்தையும் நரகத்தையும் நான் பார்த்தேன் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
730. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (சலாம் கொடுத்துத்) திரும்புதல் என்பது இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
731. முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) இமாமுக்கு முன்னால் தமது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய தலையைக் கழுதையின் தலையாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்ச வேண்டாமா?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
732. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் இமாமுக்கு முன்னால் தனது தலையை உயர்த்துகின்றவர், அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக அல்லாஹ் மாற்றிவிடுவதை அஞ்சாமல் இருக்க முடியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
733. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ரபீஉ பின் முஸ்லிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவருடைய முகத்தைக் கழுதையின் முகமாக அல்லாஹ் மாற்றிவிடுவதை (அவரால் அஞ்சாமல் இருக்க இயலாது) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 26 தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்கு வந்துள்ள தடை.
734. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை திரும்பிவராமல் போகட்டும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் பிரார்த்திக்கும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக் கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை பறிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 27 தொழுகையில் அடக்கத்தோடு இருக்க வேண்டும்; சலாம் கொடுக்கும்போது கையால் சைகை செய்வதோ கையை உயர்த்துவதோ கூடாது. முன் வரிசையை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும்; வரிசைகளில் (இடைவெளியின்றி) நெருக்கமாகவும் இணைந்தும் நிற்க வேண்டும்.
736. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் நாங்கள் தொழுதுகொண்டிருந்தபோது எங்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். அப்போது (நாங்கள் சலாம் கொடுக்கையில் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தோம். இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் உங்களது கைகளைச் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று உயர்த்திக்கொண்டிருக்கிறீர்கள்? தொழுகையில் அடக்கத்தோடு இருங்கள் என்று கூறினார்கள். பிறகு (மற்றொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது நாங்கள் வட்ட வட்டமாக (தனித்தனிக் குழுவாக) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள், ஏன் (ஓரணியில் இணையாமல்) பிரிந்து பிரிந்து நிற்கிறீர்கள்? என்று கேட்டார்கள். பிறகு (இன்னொரு முறை) அவர்கள் எங்களிடம் வந்தபோது, அறிந்துகொள்ளுங்கள்! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் அணிவகுத்து நிற்பதைப்போன்று நீங்கள் அணிவகுத்து நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! வானவர்கள் தம் இறைவனுக்கு முன்னால் எப்படி அணிவகுத்து நிற்கிறார்கள்? என்று கேட்டோம். அதற்கு வானவர்கள் (முதலில்) முதல் வரிசையைப் பூர்த்தி செய்வார்கள்; வரிசைகளில் ஒருவரோடு ஒருவர் (இடைவெளி விடாமல்) நெருக்கமாக நிற்பார்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
737. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழு(து சலாம் கொடுக்கு)ம்போது அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் (அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உங்கள் மீது நிலவட்டுமாக, அல்லாஹ்வின் சாந்தியும் அருளும் உங்கள்மீது நிலவட்டுமாக) என்று கூறி, இரு புறங்களிலும் கையை உயர்த்தி சைகை செய்துவந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் உங்கள் கைகளால் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று சைகை செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்களில் ஒருவர் (அத்தஹிய்யாத் இருப்பில்) தமது கையைத் தொடையின் மீது வைத்துக்கொண்டு, பிறகு தமக்கு வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் அமர்ந்திருக்கும் தம் சகோதரர்மீது சலாம் கூறினால் போதும் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
738. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது நாங்கள் சலாம் கொடு(த்து தொழுகையை முடி)க்கும்போது எங்கள் கைகளால் சைகை செய்தவாறு அஸ்ஸலாமு அலைக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும், உங்கள்மீது சாந்தியுண்டாகட்டும்) என்று சலாம் கூறிவந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, ஏன் நீங்கள் உங்கள் கைகளால் சண்டிக் குதிரை வாலை (உயர்த்துவதை)ப் போன்று சைகை செய்து கொண்டிருக்கிறீர்கள்? உங்களில் ஒருவர் சலாம் கொடு(த்து தொழுகையை முடி)க்கும் போது (தமக்கு அருகிலிருக்கும்) தம் தோழரின் பக்கம் திரும்பட்டும்; கையால் சைகை செய்ய வேண்டாம் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 28 தொழுகை வரிசைகளைச் சீராக்கி ஒழுங்குபடுத்துவதும், முதல் வரிசை மற்றும் அடுத்தடுத்த வரிசைகளின் சிறப்பும்,முதல் வரிசையில் நிற்பதற்காக முந்திக் கொண்டு போட்டியிடுவதும், (அறிவில்) சிறந்தோருக்கு முதலிடம் அளித்து அவர்களை இமாமுக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்க வைப்பதும்.
739. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையி(ன் ஆரம்பத்தி)ல் எங்களுடைய தோள்களைத் தடவி (அவை சமமாக இருக்கின்றனவா என்று சரி) பார்ப்பார்கள்; மேலும், நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும். உங்களில் அறிவிற்சிறந்தவர்கள் எனக்கு அருகில் (முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும், பிறகு அவர்களுக்கு அடுத்து உள்ளவர்களும் நிற்கட்டும் என்று கூறுவார்கள்.
தொடர்ந்து அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆனால், நீங்களோ இன்று (வரிசையில் சீராக நிற்காத காரணத்தால்) கடுமையான கருத்துவேறுபாட்டுடன் காணப்படுகின்றீர்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
740. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் அறிவிற்சிறந்தவர் எனக்கு அருகில் (தொழுகையில் முதல் வரிசையில்) நிற்கட்டும். பிறகு அவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள் (அடுத்த வரிசையில்) நிற்கட்டும். (இதை மூன்று முறை கூறினார்கள்.) மேலும், (தொழுகைக்கு ஒன்றுகூடும்போது) கடைத்தெரு(வில் கூச்சலிடுவதைப் போன்று) கூச்சலிடுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
741. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
742. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகை) வரிசைகளை முழுமையாக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில், நான் எனது முதுகுக்குப் பின்னாலும் உங்களைக் காண்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
743. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையில் வரிசைகளை ஒழுங்கு படுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், வரிசையை ஒழுங்குபடுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதில் அடங்கும்.
அத்தியாயம் : 4
744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்திவிடுவான்.
இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
745. நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வளைந்த) அம்புக் குச்சிகளைச் சீராக்குவதைப் போன்று எங்கள் (தொழுகை) அணிகளைச் சீராக்குவார்கள். இதை நாங்கள் (நன்கு) புரிந்து கொண்டோம் என்று அவர்கள் கருதியவரை (இவ்வாறு செய்துவந்தார்கள்). பின்னர் ஒரு நாள் அவர்கள் வந்து (தொழுவிப்பதற்காக) நின்று தக்பீர்(தஹ்ரீம்) கூறப்போகும் நேரத்தில் ஒரு மனிதரின் நெஞ்சு வரிசையிலிருந்து (விலகி) வெளியேறியவாறு நிற்பதைக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் அடியார்களே! உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள். இல்லையெனில்,அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை (பிளவை) ஏற்படுத்தி விடுவான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் அணியி(ல் நிற்பதி)லும் உள்ள(நன்மை)தனை மக்கள் அறிவார்களாயின் அ(தை அடைந்துகொள்வ) தற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுப்ஹுத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
747. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலர் (தொழுகையில் முன் வரிசையில் சேராமல்) பின்னால் விலகி நிற்பதைக் கண்டார்கள். அப்போது முன் வரிசைக்கு வந்து என்னைப் பின்பற்றித் தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றித் தொழட்டும். மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலர் பள்ளிவாசலின் பிற்பகுதியில் (நிற்பதைக்) கண்டார்கள்...என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 4
748. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகையில்) முன்வரிசையில் இருக்கும் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் அல்லது மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்துகொள்ள போட்டியேற்பட்டு) சீட்டுக் குலுக்கிப்போடும் நிலையேற்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில்,முதல் வரிசையில் இருக்கும் நன்மையை அடைந்து கொள்வதற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும் நிலையே ஏற்படும் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
749. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 29 ஆண்களுக்குப் பின்னால் நின்று தொழும் பெண்கள், ஆண்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்திய பின்னரே தம் தலைகளை சஜ்தாவிலிருந்து உயர்த்த வேண்டும் என்ற கட்டளை.
750. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில் மேலாடையில்லாமல்) ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால்,சிறுவர்களைப் போன்று அவர்கள் தம் கீழாடைகளை பிடரிகள்மீது கட்டிக்கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுதுகொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால், பெண்களே! ஆண்கள் (சஜ்தாவிலிருந்து) நிமிரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் என்று (நபியவர்கள் பிறப்பித்த உத்தரவை) ஒருவர் கூறுவார்.
அத்தியாயம் : 4
பாடம் : 30 குழப்பம் ஏற்படாதிருப்பின், பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம்; நறுமணம் பூசிக்கொண்டு அவர்கள் வரலாகாது.
751. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய மனைவி பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவளை அவர் தடுக்க வேண்டாம்.
இதை சாலிம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
752. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் மனைவியர் உங்களிடம் பள்ளிவாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கள். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால், நீயோ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறுகிறாயே? என்றார்கள்.
அத்தியாயம் : 4
753. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் அடியார்க(ளான பெண்க)ள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
754. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அத்தியாயம் : 4
755. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர்,பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (அவர்கள் வெளியே செல்ல) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால், நீ அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று கூறுகிறாயா?என்று கூறி, தம் புதல்வரைக் கண்டித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
756. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல நீங்கள் அனுமதியளியுங்கள் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது அவர்களுடைய புதல்வர் வாகித் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அனுமதி கொடுத்தால் அவர்கள் அதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் புதல்வருடைய நெஞ்சில் அடித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதை உனக்கு அறிவிக்கிறேன்; ஆனால் நீ முடியாது என்று கூறுகிறாயே என்று (கடிந்து) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
757. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவித்தபோது அவர்களுடைய புதல்வர் பிலால் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் கூறுகிறேன்; ஆனால், நீயோ அவர்களைத் தடுப்போம் என்று கூறுகிறாயே! என்று (கண்டித்துக்) கூறினார்கள்.
அத்தியாயம் : 4
758. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.
இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
759. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;
நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
அத்தியாயம் : 4
760. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
761. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இன்று) பெண்கள் உருவாக்கியுள்ள (அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்திருப்பார்களேயானால் பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டார்களா? என்று கேட்டேன். அதற்கு அம்ரா (ரஹ்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 31 சப்தமிட்டு (குர்ஆன்) ஓதப்படும் தொழுகைகளில், சப்தமிட்டு ஓதுவதால் இடையூறு ஏற்படும் என்ற அச்சமிருந்தால், (ஒரேயடியாகக்) குரலை உயர்த்தாமலும் (ஒரேயடியாகக்) குரலைத் தாழ்த்தாமலும் நடுநிலையாக ஓத வேண்டும்.
762. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம் தொடர்பாகப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தலைமறைவாக இருந்துவந்தார்கள். அப்போது தம் தோழர்களுடன் தொழும் வேளையில் சப்தமிட்டுக் குர்ஆனை ஓதிவந்தார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிட்டால், குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த (நபிய)வர்களையும் அவர்கள் ஏசுவார்கள். ஆகவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் தன் நபியிடம் நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் ஓதுவதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களைவிட்டு ஒரேடியாக மறைத்துவிடாதீர்கள்; அவர்களது செவிக்கு எட்டுமாறு ஓதுங்கள். அதிகமாகச் சப்தமிட்டு ஓதாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கைகொள்ளுங்கள் என்று கூறினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
763. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம், பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றதாகும்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்கள் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 32 குர்ஆன் ஓதப்படும்போது காது தாழ்த்திக் கேட்க வேண்டும்.
764. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசரம் அவசராமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டுவரும் போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும் இதழ்களையும் (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. இது அவர்களது வதனத்திலேயே காணப்படலாயிற்று. ஆகவே அல்லாஹ், (நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16,17) வசனங்களை அருளினான்.
அதாவது உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் என்று இறைவன் கூறினான். மேலும் நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது நாம் (வானவர் மூலம் வேதவசனங்களை) அருளும்போது, அதைக் கவனத்துடன் கேளுங்கள் என்று கூறினான். பின்னர் அதை விளக்குவதும் எமது பொறுப்பாகும் எனும் (75:19ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது உங்கள் நாவினால் அதை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நமது பொறுப்பாகும் என்று கூறினான்.
(இந்த வசனங்கள் அருளப்பெற்ற) பின்னர் தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) அவர்கள் தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை அமைதியாகக்) கேட்டுக் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும்போது அல்லாஹ் வாக்களித்தபடி நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
765. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) இந்த வேதஅறிவிப்பை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
(வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வேதஅறிவிப்பு (வஹீ) கொண்டு வரும்போது) நபி (ஸல்) அவர்கள் தம் இதழ்களை, (எங்கே இறைவசனங்கள் மறந்துவிடப் போகின்றனவோ என்ற அச்சத்தால் மனனமிடுவதற்காக) அசைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால் அவர்கள் சிரமத்தை அனுபவித்தார்கள்.
-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் இதழ்களை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன் என்று என்னிடம் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் மூசா பின் அபீஆயிஷா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் இதழ்களை அசைத்ததைப் போன்று நான் உங்களுக்கு அசைத்துக் காட்டுகிறேன் என்று சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறிவிட்டு, (அவ்வாறே) அசைத்துக் காட்டினார்கள்.
தொடர்ந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
(நபி (ஸல்) அவர்கள் தம் இதழ்களை அசைத்துக்கொண்டிருந்தபோது) அல்லாஹ் இந்த வேதஅறிவிப்பை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் எனும் (75:16, 17) வசனங்களை அருளினான். அதாவது, உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வதும் (எமது பொறுப்பாகும்) என்று இறைவன் கூறினான்.
மேலும், நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் எனும் (75:18ஆவது) வசனத்தையும் அருளினான். அதாவது நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதைக் கவனத்துடனும் அமைதியாகவும் கேளுங்கள். பின்னர் அதை உங்கள் நாவால் ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் என்று கூறினான்.
(இவ்வசனங்கள் அருளப்பெற்ற பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வஹீ கொண்டு) வரும்போது நபி (ஸல்) அவர்கள் கவனத்துடன் கேட்பார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் (வசனங்களை அருளிவிட்டுச்) சென்றுவிடும்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஓதிக் காட்டியபடி அவற்றை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 33 சுப்ஹுத் தொழுகையில் (நபி (ஸல்) அவர்கள்) சப்தமிட்டுக் குர்ஆன் ஓதியதும் ஜின்களுக்கு ஓதிக் காட்டியதும்.
766. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜின்களுக்கு(க் குர்ஆனை) ஓதிக்காட்டவுமில்லை; ஜின்களை அவர்கள் பார்க்கவுமில்லை. (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் உக்காழ் எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப் பட்டுவிட்டது. மேலும், (வானுலகச் செய்திகளை ஒட்டுக்கேட்கச் செல்லும்) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் (எரிகற்கள்) ஏவிவிடப்பட்டிருந்தன. ஷைத்தான்கள் தம் கூட்டத்தாரிடம் (ஒரு செய்தியும் கிடைக்காமல் வெறுமனே) திரும்பியபோது உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கூட்டத்தார் கேட்டார்கள். அதற்கு ஷைத்தான்கள் நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது; மேலும், எங்கள்மீது தீப்பந்தங்கள் ஏவப்பட்டன என்று கூறினர். ஏதேனும் புதியதொரு நிகழ்ச்சி ஏற்பட்டதே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் விரவிச் சென்று, நமக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடையாக உள்ள இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள் என்றார்கள். அவ்வாறே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை,மேல்திசை எங்கும் விரவிச் சென்றார்கள். அவர்களில் ஒரு குழுவினர் திஹாமா எனும் பகுதியை நோக்கிச் சென்றனர். உக்காழ் சந்தைக்குச் செல்லும் வழியில் நக்ல் எனுமிடத்தில் அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு ஃபஜ்ர் தொழுகை தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை ஷைத்தான்கள் செவியுற்றபோது நமக்கும் வானுலகச் செய்திக்கும் இடையே தடையாக இருப்பது இதுதான் என்று கூறிக்கொண்டு,தங்கள் கூட்டத்தாரிடம் திரும்பினர். அவர்களிடம், எங்கள் சமுதாயமே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமான ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம். அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே, அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் (இனி) ஒருபோதும் எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம் என்று கூறினர். இதையடுத்து அல்லாஹ் தன்னுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு நிச்சயமாக ஜின்களில் சிலர் (குர்ஆனைச்) செவியேற்றனர் என எனக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக! எனும் (72:1ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 4
767. ஆமிர் பின் ஷரஹ்பீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்கமா (ரஹ்) அவர்களிடம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அல்கமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உங்களில் யாராவது இருந்தீர்களா? என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: இல்லை; ஆனால், ஒரு நாள் இரவு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது திடீரென அவர்களைக் காணவில்லை. எனவே, பள்ளத்தாக்குகளிலும் மலைக் கணவாய்களிலும் அவர்களைத் தேடிப்பார்த்தோம். (அவர்கள் அங்கு கிடைக்காமல் போகவே) ஜின் அவர்களைத் தூக்கிச் சென்றிருக்கும்; அல்லது மர்மமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். பின்னர் அன்றைய மோசமான இரவை (ஒரு வழியாக)க் கழித்தோம்.
அதிகாலையில் நபி (ஸல்) அவர்கள் ஹிரா மலைக்குன்றின் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் காணாமல் நாங்கள் தேடினோம். நீங்கள் கிடைக்காமல்போகவே அந்த மோசமான இரவை (ஒருவாறு) கழித்தோம் என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஜின்களில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். எனவே அவருடன் சென்று ஜின்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினேன் என்று கூறினார்கள். பிறகு எங்களை அழைத்துச் சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் காட்டினார்கள். ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட) உணவு குறித்துக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்பட்ட ஒவ்வொரு பிராணியின் எலும்பும் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகும். அது உங்கள் கரங்களில் இறைச்சியைவிட நிறைவானதாக இருக்கும். ஒவ்வொரு கெட்டிச் சாணமும் உங்களுடைய கால்நடைகளுக்குத் தீவணமாகும் என்று கூறினார்கள்.பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), எனவே, நீங்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்பு எலும்பு, கெட்டிச் சாணம் ஆகிய) அவ்விரண்டின் மூலம் துப்புரவு (இஸ்தின்ஜா) செய்யாதீர்கள்; அவ்விரண்டும் உங்களுடைய சகோதரர்க(ளான ஜின்க)ளின் உணவாகும் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் என்பது வரை இடம்பெற்றுள்ளது.
-ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் (தங்களது) உணவு குறித்து ஜின்கள் வினவினர். அவர்கள் (அரபு) தீபகற்பத்தைச் சேர்ந்த ஜின்கள் ஆவர்.
அத்தியாயம் : 4
768. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ்,மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அறிவிப்பிலும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் என்பது வரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
769. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இருக்கவில்லை. அவர்களுடன் நான் இருந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அத்தியாயம் : 4
770. அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்களிடம், ஜின்கள் குர்ஆனைச் செவிமடுத்த அந்த இரவில் ஜின்களும் அங்கு இருந்தார்கள் என்பதை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் ஒரு மரம்தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜின்களைப் பற்றித் தெரிவித்தாக உங்கள் தந்தை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 34 லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல்.
771. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தும்போது லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் (அதனுடன் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓர் அத்தியாயம் என) இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்கள் காதில் விழும் அளவுக்கு (குரலுயர்த்தி) ஓதுவார்கள். லுஹ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீளமாகவும், இரண்டாவது ரக்அத்தில் (அதைவிடக்) குறைவாகவும் ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
772. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் மற்றும் அஸ்ர் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை எங்கள் காதில் விழும் அளவுக்கு (சப்தமிட்டு) ஓதுவார்கள். பிந்திய இரு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை (மட்டுமே) ஓதுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
773. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் மற்றும் அஸ்ர் தொழுகைகளில் எவ்வளவு நேரம் நிலையில் நின்றார்கள் என்பதை நாங்கள் மதிப்பிட்டுவந்தோம்:
லுஹ்ர் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் (முப்பது வசனங்களைக் கொண்ட) அலிஃப், லாம், மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயம் ஓதும் அளவுக்கும், அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள். அஸ்ர் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் லுஹ்ர் தொழுகையின் பின்னிரு ரக்அத்கள் அளவுக்கும்,அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அலிஃப், லாம், மீம் தன்ஸீல் என்பதற்கு பதிலாக முப்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு (நிற்பார்கள்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
774. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் தலா முப்பது வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில் பாதி அல்லது பதினைந்து வசனங்கள் அளவும் ஓதுவார்கள். அஸ்ர் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் தலா பதினைந்து வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில் பாதியளவும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
775. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கூஃபாவாசிகள் (தம் ஆளுநரான அபூ இஸ்ஹாக்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் புகார் கூறினர். சஅத் அவர்கள் தொழுவிப்பது குறித்து அவர்கள் (குறை) கூறினர். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பித் தம்மிடம் வருமாறு கூறினார்கள். அவ்வாறே சஅத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அப்போது சஅத் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் தொழுகை தொடர்பாக மக்கள் கூறிய குற்றச்சாட்டை எடுத்துரைத்தார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே அவர்களுக்குத் தொழுவித்து வருகிறேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பிந்திய இரு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள்,அபூஇஸ்ஹாக்! உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
776. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், (கூஃபா நகர) மக்கள், தொழுகை நடத்துவது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (என்னிடம்) முறையிட்டனர் (இது குறித்து நீங்கள் என்ன விளக்கம் கூறுகிறீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், நானோ (தொழுகையின்) முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக் காட்டிய முறையைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் நான் செய்யவில்லை என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அல்லது உங்களைப் பற்றி எனது எண்ணமும் அதுவே என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
777. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் கிராமவாசிகள் எனக்குத் தொழுகையைக் கற்றுத்தருகிறார்களா? என்று (சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
778. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) லுஹ்ர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது ஒருவர் பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றி, அங்கத் தூய்மை செய்துவிட்டுத் திரும்பிவந்து விடுவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் (முதல் ரக்அத்தில்) நீண்ட நேரம் (குர்ஆன் வசனங்களை) ஓதிவந்ததே இதற்குக் காரணம்.
அத்தியாயம் : 4
779. கஸ்ஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களைச் சுற்றி நிறையப் பேர் குழுமியிருந்தனர். மக்கள் அனைவரும் கலைந்து சென்றதும் நான், (இதோ) இவர்கள் உங்களிடம் கேட்டதையெல்லாம் நான் உங்களிடம் கேட்கமாட்டேன். நான் உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றிக் கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், (நபியவர்களின் முழு நிறைவான தொழுகையைப் போன்று உங்களால் தொழ இயலாது என்பதால்) இது தொடர்பாகக் கேட்பதில் உங்களுக்குப் பயன் இல்லை என்று கூறினார்கள். நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) லுஹர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது எங்களில் ஒருவர் பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றுவார். பிறகு தமது இல்லத்திற்குச் சென்று அங்கத் தூய்மை செய்துவிட்டுப் பள்ளிவாசலுக்குத் திரும்பிவருவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருந்து கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 35 சுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல்.
780. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அல்முஃமினூன்(எனும் 23ஆவது) அத்தியாயத்தை ஓதலானார்கள். அதில் மூசா (அலை), ஹாரூன் (அலை) ஆகியோரைப் பற்றிய (23:45ஆவது) வசனம் அல்லது ஈசா (அலை) அவர்களைப் பற்றிய (23:50ஆவது) வசனம் வந்ததும் (இந்த இடத்தில் அறிவிப்பாளர் முஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் அன்னார் சொன்ன வார்த்தை குறித்து வேறுபடுகிறார்கள்.) நபி (ஸல்) அவர்களுக்கு இருமல் ஏற்பட்டுவிட்டது. உடனே (அவர்களால் தொடர்ந்து ஓத முடியாமல்) ருகூஉச் செய்துவிட்டார்கள். அந்தத் தொழுகையில் நானும் கலந்துகொண்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அத்தோடு நிறுத்திக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துவிட்டார்கள் என்று காணப்படுகிறது.
மேலும் இந்த அறிவிப்பில், (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களது பெயரில் இப்னுல் ஆஸ் என்பது இடம்பெறவில்லை. (ஆகவே, இந்த அப்துல்லாஹ் நபித்தோழரான அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் அல்லர்.)
அத்தியாயம் : 4
781. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் பின்வாங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக எனும் (81:17ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
782. குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் தொழுதேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அப்போது) எங்களுக்குத் தொழுவித்தார்கள். (அத்தொழுகையில்) காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்று தொடங்கும் 50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் வந்நக்ல பாசிகா(த்)தின் எனும் (10ஆவது) வசனத்தை அன்னார் ஓதியபோது, நானும் அதைத் திரும்ப ஓதலானேன்; ஆனால், அவர்கள் ஓதிய(தன் பொருள் என்னவென்ப)து எனக்குப் புரியவில்லை.
அத்தியாயம் : 4
783. குத்பா பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள காஃப் அத்தியாய)த்தை ஓதுவதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
784. ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையின் சகோதரர் (குத்பா பின் மாலிக்-ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களுடன் சுப்ஹுத் தொழுகை தொழுதேன். முதல் ரக்அத்தில் நபி (ஸல்) அவர்கள் கனிகள் நிறைந்து, குலைகள் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற நீண்ட நெடிய பேரீச்ச மரங்களையும் (நாமே முளைக்கச் செய்தோம்) எனும் (50:10ஆவது) வசன(ம் இடம்பெற்றுள்ள காஃப் அத்தியாய)த்தை (ஓதினார்கள்) என்று கூறினார்கள். சில வேளைகளில், காஃப் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள் என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 4
785. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஆரம்பக் காலத்தில்) ஃபஜ்ர் தொழுகையில் காஃப் வல்குர்ஆனில் மஜீத் எனும் (50ஆவது) அத்தியாயத்தை ஓதிவந்தார்கள். அதற்குப் பின்னர் அவர்களது தொழுகை சுருக்கமாகவே அமைந்தது.
அத்தியாயம் : 4
786. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் தொழுகை குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகவே தொழுவிப்பார்கள்; இதோ இவர்கள் தொழுவிப்பதைப் போன்று (நீளமாகத்) தொழுவிக்கமாட்டார்கள் என்று கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் காஃப் வல்குர்ஆனில் மஜீத் (என்று தொடங்கும் 50ஆவது அத்தியாயம்) போன்றதை ஓதுவார்கள் என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
787. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் வல்லைலி இதா யஃக்ஷா (என்று தொடங்கும் 92ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள்.
அஸ்ர் தொழுகையில் அது போன்றதையும் சுப்ஹுத் தொழுகையில் அதைவிடப் பெரிய (அத்தியாயத்)தையும் ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
788. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையில் சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா... (என்று தொடங்கும் 87ஆவது) அத்தியாயத்தை ஓதுவார்கள். சுப்ஹுத் தொழுகையில் அதைவிடப் பெரிய(அத்தியாயத்)தை ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
789. அபூபர்ஸா நள்லா பின் உபைதா அல் அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்.
- அபூபர்ஸா நள்லா பின் உபைதா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள்.
அத்தியாயம் : 4
790. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் வல்முர்சலாத்தி உர்ஃபன் எனும் (77ஆவது) அத்தியாயத்தை ஓதினேன். அதைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள், என்னருமை மகனே! இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டி (ஒன்றை) நீ எனக்கு நினைவுபடுத்திவிட்டாய். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் இ(ந்த அத்தியாயத்)தை ஓதக் கேட்டதே நான் கடைசியாக அவர்களிடமிருந்து செவியுற்றதாகும் என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், சாலிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை அவர்கள் எங்களுக்குத் (தலைமையேற்றுத்) தொழுவிக்க வில்லை என்று (உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
791. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (56ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 36 இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல்.
792. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் வத்தீனி வஸ் ஸைத்தூனி எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 4
793. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூனி எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 4
794. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையில் வத்தீனி வஸ்ஸைத்தூனி எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதியதை நான் கேட்டேன். அவர்களைவிட அழகிய குரலில் வேறு யாரும் ஓதி நான் கேட்டதில்லை.
அத்தியாயம் : 4
795. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு (தம் கூட்டத்தாரிடம்) திரும்பிச் சென்று (நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழுத தொழுகையை மீண்டும்) தம் கூட்டத்தாருக்குத் தொழுவிப்பார்கள்.
ஒரு நாள் இரவில் முஆத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுது விட்டுத் தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு (அதே இஷாவை)த் தொழுவித்தார்கள்.அதில் (பெரிய அத்தியாயமான) அல்பகராஎனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். அப்போது ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகி சலாம் கொடுத்தார். பின்னர் தனியாகத் தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார். மக்கள் அவரிடம், இன்னாரே, நீர் நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிவிட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (நான் நயவஞ்சகன் அல்லன்). நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (இது குறித்து) தெரிவிப்பேன் எனக் கூறினார்.
அவ்வாறே அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பகல் வேளைகளில் வேலைவெட்டிகளில் ஈடுபடுகின்றவர்கள். நாங்கள் ஒட்டகங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் பின் ஜபல் அவர்கள் (நேற்றிரவு) உங்களுடன் இஷாத் தொழுதுவிட்டு வந்து (எங்களுக்குத் தொழுவித்தார். அதில் பெரிய அத்தியாயமான) அல்பகரா அத்தியாயத்தை ஓதலானார். (எனவேதான் விலகிச் சென்று தனியாகத் தொழுதேன்) என்று கூறினார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி, முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா? என்று கேட்டுவிட்டு, (நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் போது சற்று சிறிய அத்தியாயமான) இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக; இன்ன அத்தியாயத்தை ஓதுவீராக என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், (நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம்) வஷ்ஷம்ஸி வ ளுஹாஹா, வள்ளுஹா வல்லைலி, வல்லைலி இதா யஃக்ஷா, சப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா ஆகிய (முறையே 91, 93,92,87ஆவது) அத்தியாயங்களை ஓதுவிராக என்று கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் எமக்கு அறிவித்தார்களே? என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், (ஆம்) இது போன்றுதான் (அறிவித்தார்கள்) என்றார்கள்.
அத்தியாயம் : 4
796. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் அல்அன்சாரி (ரலி) அவர்கள் தம் தோழர்க(ளான எங்க)ளுக்கு (ஒரு நாள்) இஷாத் தொழுகை தொழுவித்தபோது (நீளமான அத்தியாயத்தை ஓதித் தொழுகையை) நீட்டினார். உடனே எங்களில் ஒருவர் விலகிச் சென்று தனியாகத் தொழுதார். இதுபற்றி முஆத் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர் ஒரு நயவஞ்சகர் (முனாஃபிக்) என்று முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியபோது அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று முஆத் (ரலி) அவர்கள் கூறியதைத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஆத்! நீர் குழப்பவாதியாக இருக்க விரும்புகின்றீரா? நீர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும்போது வஷ்ஷம்ஸி வ ளுஹாஹா (91),சப்பிஹிஸ்ம ரப்பிக்க (87), இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க (96), வல்லைலி இதா யஃக்ஷா (92) ஆகிய(வற்றைப் போன்ற சற்று சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
797. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவின்) இறுதித் தொழுகையான இஷாவைத் தொழுவார்கள். பிறகு தம் கூட்டத்தாரிடம் திரும்பிச் சென்று அதே தொழுகையை அவர்களுக்குத் தொழுவிப்பார்கள்.
அத்தியாயம் : 4
798. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷாத் தொழுகை தொழுவார்கள். பிறகு தம் கூட்டத்தாரின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு (அதே தொழுகையை)த் தொழுவிப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 37 தொழுகையைச் சுருக்கமாக அதே நேரத்தில் நிறைவாகத் தொழுவிக்குமாறு இமாம்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை.
799. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, இன்னார் தொழுகையை நீண்ட நேரம் எங்களுக்குத் தொழுவிப்பதால் சுப்ஹுத் தொழுகை(யின் ஜமாஅத்து)க்குச் செல்லாமல் நான் தாமதித்துவிடுகிறேன் என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைக்குக் கோபமடைந்ததைவிடக் கடுமையாக வேறு எந்தச் சொற்பொழிவின் போதும் கோபமடைந்து அவர்களை நான் கண்டதில்லை. பிறகு அவர்கள், மக்களே! உங்களில் வெறுப்பூட்டும் சிலர் உள்ளனர். ஆகவே, உங்களில் எவர் மக்களுக்குத் தொழுவிக்கின்றாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில்,அவருக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும் அலுவல் உடையவர்களும் உள்ளனர் என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
800. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுவித்தால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அ(வருக்குப் பின்னால் தொழுப)வர்களில் சிறுவர்களும் முதியவர்களும் பலவீனர்களும் நோயாளிகளும் உள்ளனர். அவர் தனியாகத் தொழுதால் தாம் விரும்பியவாறு தொழுதுகொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
801. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்காகத் தொழுவிக்க நின்றால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில்,அவர்களிடையே முதியவர்களும் பலவீனர்களும் உள்ளனர். அவர் தனியாகத் தொழ நின்றால் தாம் விரும்பிய அளவுக்கு நீட்டித் தொழுதுகொள்ளட்டும்.
அத்தியாயம் : 4
802. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், மக்களிடையே பலவீனர்களும் நோயாளிகளும் அலுவலுடையோரும் உள்ளனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் நோயாளிகள் என்பதற்கு பதிலாக முதியவர்கள் எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
803. உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என் உள்ளத்தில் (பெருமை) ஏதும் ஏற்பட்டுவிடுவதை நான் அஞ்சுகிறேன் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அருகில் வாருங்கள்! என்று என்னை அழைத்து, என்னைத் தமக்கு முன்னால் அமரவைத்தார்கள். பிறகு தமது கரத்தை என் நெஞ்சில் மார்புகளுக்கிடையே வைத்தார்கள். பிறகு திரும்புங்கள் என்றார்கள். (நான் திரும்பியதும்) தமது கரத்தை என் தோள்களுக்கிடையே முதுகில் வைத்தார்கள். பிறகு நீங்கள் உங்கள் கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவியுங்கள். எவர் ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கிறாரோ அவர் சுருக்கமாகத் தொழுவிக்கட்டும். ஏனெனில், அவர்களிடையே முதியவர்கள் உள்ளனர்; அவர்களிடையே நோயாளிகளும் பலவீனர்களும் அலுவலுடையோரும் உள்ளனர். உங்களில் ஒருவர் தனியாகத் தொழுதால் அவர் தாம் விரும்பியபடி தொழுதுகொள்ளட்டும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
804. உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு இறுதியாகச் செய்த உபதேசம், நீங்கள் ஒரு சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தால் அவர்களுக்கு (சிரமம் ஏற்பட்டு விடாமல்) சுருக்கமாகத் தொழுவியுங்கள் என்பதேயாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
805. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே நேரத்தில் ஏதொன்றும் விடுபடாமல்) நிறைவாகவும் தொழுவிப்பார்கள்.
இதை அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
806. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை மிகச்சுருக்கமாகவும்(அதே நேரத்தில்) நிறைவாகவும் தொழுவிப்பவர்களாய் இருந்தார்கள்.
இதை கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
807. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட மிகச்சுருக்கமாகவும் (அதே சமயம்) முழுமையாகவும் தொழுவிக்கக்கூடிய வேறு எந்த இமாமுக்குப் பின்னாலும் ஒருபோதும் நான் தொழுததில்லை.
இதை ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநிம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
808. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக்கொண்டிருக்கும்போது (பின்னால் தொழும் பெண்களிடையே உள்ள) குழந்தை தன் தாயிடம் அழுதுகொண்டிருப்பதைச் செவியேற்பார்கள். உடனே சுருக்கமான அத்தியாயத்தை அல்லது சிறிய அத்தியாயத்தை ஓதுவார்கள்.- இதை ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
809. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையைத் துவக்குவேன். அப்போது (பின்னால் தொழும் பெண்களிடையே) குழந்தை அழுவதைச் செவியேற்பேன். குழந்தைமீது தாய்க்குள்ள கடுமையான ஈடுபாட்டை எண்ணி நான் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக்கொள்வேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 38 தொழுகையின் முக்கிய நிலை(களான நிற்றல், குனிதல், சிரம்பணிதல் ஆகியவை) களை நிறுத்தி நிதானமாகச் செய்வதும், அவற்றைச் சுருக்கமாக அதே நேரத்தில் முழுமையாக நிறைவேற்றுவதும்.
810. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் முஹம்மத் (ஸல்) அவர்களது தொழுகையை ஊன்றிக் கவனித்தேன். தொழுகையில் அவர்களது நிற்றல் (கியாம்),குனிதல் (ருகூஉ), குனிந்து நிமிர்ந்த பின் நிலைகொள்ளல், அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிரவணக்கங்களுக்கிடையிலான அமர்வு, பிறகு சலாம் கொடுப்பதற்கும் எழுந்து செல்வதற்கும் இடையேயான இடைவெளி ஆகியவற்றின் கால அளவுகள் ஏறக்குறைய சம அளவில் அமைந்திருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
811. ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கிலுள்ள) கூஃபா நகரை, இப்னுல் அஷ்அஸ் காலத்தில் ஒரு மனிதர் வெற்றி கொண்டார். (அவரது பெயரையும் அறிவிப்பாளர் குறிப்பிட்டார்,) அந்த மனிதர் (மத்தர் பின் நாஜியா), அபூஉபைதா பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்களை மக்களுக்கு (தலைமை தாங்கி)த் தொழுவிக்குமாறு பணித்தார். அவ்வாறே அபூஉபைதா அவர்களும் தொழவைக்கலானார்கள். அவர்கள் தொழுகையில் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால், பின்வருமாறு நான் சொல்லும் அளவிற்கு நிற்பார்கள்: அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி,வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅத். அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத்.
(பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, நீ நாடும் இன்ன பிற பொருட்கள் யாவும் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது.)
தொடர்ந்து ஹகம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை (நிற்றல்), அவர்களது குனிதல் (ருகூஉ), குனிந்து எழு(ந்ததும் நிலைகொள்)வது, அவர்களின் சிரவணக்கம் (சஜ்தா), இரு சிர வணக்கங்களுக்கிடையிலான அமர்வு ஆகியன ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த ஹதீஸை அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், நான் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களது தொழுகை இவ்வாறு அமைந்திருக்கவில்லையே என்று கூறினார்கள்.
- ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹகம் (ரஹ்) அவர்கள், மத்தர் பின் நாஜியா என்பார் கூஃபா நகரை வெற்றி கொண்டபோது அபூஉபைதா (பின் அப்தில்லாஹ் பின் மஸ்ஊத்-ரஹ்) அவர்களை மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுவிக்குமாறு கூறினார் என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
812. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள் (எங்களிடம்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குத் தொழுவிக்கிறேன்; அதில் எந்தக் குறையும் வைக்கமாட்டேன் என்று கூறினார்கள். (பிறகு தொழுவித்தார்கள்.)
அனஸ் (ரலி) அவர்கள் (தொழுவித்தபோது) ஒன்றைச் செய்வார்கள். ஆனால், அவ்வாறு நீங்கள் செய்வதை நான் பார்த்ததில்லை. அனஸ் (ரலி) அவர்கள் குனிந்து (ருகூஉ செய்து) நிமிர்ந்ததும் (நீண்ட நேரம்) நேராக நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ! என்று எவரேனும் கூறிவிடுவார். அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்து தலையை உயர்த்தியதும் இருப்பில் (நீண்ட நேரம்) நிலைகொண்டிருப்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ! என்று எவரேனும் கூறிவிடுவார்.
அத்தியாயம் : 4
813. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட மிகச் சுருக்கமாக, அதே நேரத்தில் நிறைவாகத் தொழுவிக்கக்கூடிய எவருக்குப் பின்னாலும் நான் தொழுததில்லை. அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும்) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. அபூபக்ர் (ரலி) அவர்களது தொழுகை(யின் ஒவ்வொரு நிலையும் அவ்வாறே) சமமான அளவிலேயே அமைந்திருந்தது. உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது ஃபஜ்ர் தொழுகையை நீண்ட நேரம் தொழுவித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும் நீண்ட நேரம் நிலையில் நிற்பார்கள். எந்த அளவிற்கென்றால் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று கூறுவோம். பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். இரு சிரவணக்கங்களுக்கிடையே (நீண்ட நேரம்) அமர்ந்திருப்பார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் மறந்துவிட்டார்களோ என்று நாங்கள் கூறுவோம்.
அத்தியாயம் : 4
பாடம் : 39 இமாமைப் பின்தொடர்ந்து தொழுவதும், எதையும் அவர் செய்த பின்பே செய்வதும்.
814. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் (அன்னார் பொய் உரைப்பவர் அல்லர்):
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுது வந்தோம். அப்போது அவர்கள் குனிந்து (ருகூஉ செய்து) தலையை உயர்த்திவிட்டால் அவர்கள் பூமியில் தமது நெற்றியை வைக்காதவரை (எங்களில்) யாரும் தமது முதுகை (சஜ்தாச் செய்வதற்காக) வளைப்பதை நான் கண்டதில்லை. (அவர்கள் சஜ்தாவுக்குச் சென்ற) பிறகுதான் பின்னாலிருப்பவர்கள் சஜ்தாவுக்குச் செல்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
815. அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறிவிட்டால் அவர்கள் சஜ்தாச் செய்யாதவரை எங்களில் யாரும் எங்கள் முதுகை (சஜ்தாவிற்காக) வளைக்கமாட்டோம்; (அவர்கள் சஜ்தாச் செய்த) பிறகுதான் நாங்கள் சஜ்தாச் செய்வோம் என்று பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள். அன்னார் பொய் உரைப்பவர் அல்லர்.
அத்தியாயம் : 4
816. முஹாரிப் பின் திஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ (ரலி) அவர்கள் (பள்ளிவாசலில்) சொற்பொழிவு மேடையிலிருந்தபடி (பின்வருமாறு) கூறுவதை நான் கேட்டுள்ளேன்:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுவந்தோம். அப்போது அவர்கள் ருகூஉச் செய்த பிறகுதான் நாங்கள் ருகூஉச் செய்வோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறிய பின் அவர்கள் (சஜ்தாவிற்குச் சென்று) தமது நெற்றியை பூமியில் வைப்பதை நாங்கள் பார்க்கும்வரை நாங்கள் நின்றுகொண்டேயிருப்போம். பிறகுதான் அவர்களைப் பின்தொடர்வோம்.
அத்தியாயம் : 4
817. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) இருக்கும்போது அவர்கள் சஜ்தாச் செய்துவிட்டதைப் பார்க்காதவரை எங்களில் எவரும் (சஜ்தாச் செய்வதற்காக) தமது முதுகை வளைக்கமாட்டார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. அதில் அவர்கள் சஜ்தாச் செய்து கொண்டிருப்பதை நாங்கள் பார்க்காதவரை என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
818. அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள் ஃபலா உக்ஸிமு பில் குன்னஸில் ஜவாரில் குன்னஸி எனும் வசன(ங்கள் இடம் பெற்றுள்ள 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் முழுமையாக சஜ்தாவிற்குப் போய்ச்சேராதவரை எங்களில் எவரும் தமது முதுகை (சஜ்தாவிற்காக) வளைக்கமாட்டார்.
அத்தியாயம் : 4
பாடம் : 40 ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை.
819. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது முதுகை நிமிர்த்திவிட்டால் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
820. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்து சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும்), அல்லஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது என்று துதிப்பார்கள்.
(பொருள்: இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
821. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவிலிருந்து நிமிர்ந்ததும்), அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து, மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித். அல்லாஹும்ம, தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸ(க்)கி என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. இறைவா, பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (வஸக் எனும் சொல்லுக்கு பதிலாக) தரன் எனும் சொல் இடம்பெற்றுள்ளது. யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தனஸ் எனும் சொல் இடம் பெற்றுள்ளது. (எல்லாவற்றுக்கும் பொருள்: அழுக்கு.)
அத்தியாயம் : 4
822. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தமது தலையை உயர்த்தியதும் ரப்பனா! ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வல்அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். அஹக்கு மா காலல் அப்து, வ குல்லுனா ல(க்)க அப்துன். அல்லாஹும்ம, லா மானிஅ லிமா அஉதைத்த, வலா முஉத்திய லிமா மனஉத்த, வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் என்று கூறுவார்கள்.
(பொருள்: எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் நிரம்பும் அளவுக்கு, நீ நாடும் இன்ன பிற பொருள்கள் யாவும் நிரம்பும் அளவுக்குப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நாங்கள் அனைவரும் உன் அடிமைகள்தாம். அடியார்கள் கூறும் சொற்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தது, இறைவா! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது என்பதேயாகும்.)
அத்தியாயம் : 4
823. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தியதும் அல்லாஹும்ம, ரப்பனா, ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல் அர்ளி, வ மா பய்னஹுமா, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது. அஹ்லஸ் ஸனாயி வல்மஜ்த். லா மானிஅ லிமா அஉதைத்த, வ லா முஉத்திய லிமா மனஉத்த, வ லா யனஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா, எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, இன்னும் அவற்றுக்கிடையே உள்ளவை நிரம்ப மற்றும் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது. புகழுக்கும் மாண்புக்கும் உரியவனே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமிலர். எந்தச் செல்வரின் செல்வமும் அவருக்கு உ(ந்தன் வேதனை த)ன்னிலிருந்து பயன் அளிக்காது.)
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் வமில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது (மற்றும் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழனைத்தும் உனக்கே உரியது) என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னால் உள்ளது குறிப்பிடப்படவில்லை.
அத்தியாயம் : 4
பாடம் : 41 ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓதுவதற்கு வந்துள்ள தடை.
824. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில் உடல் நலிவுற்றிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கி (பள்ளிவாசலுக்குள் நோக்கி)னார்கள். அப்போது மக்கள், அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். (அவர்களிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களே! நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு முஸ்லிம் காண்கின்ற அலலது அவருக்குக் காட்டப்படுகின்ற நல்ல (உண்மையான) கனவுகளைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அறிந்து கொள்ளுங்கள்: ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கையில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன். ருகூஉவில் வலிவும் மாண்பும் உடைய இறைவனை மகிமைப்படுத்துங்கள். சஜ்தாவில் முனைந்து பிரார்த்தியுங்கள். உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
825. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது தமது அறையின்) திரைச் சீலையை விலக்கினார்கள். அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் காரணத்தால் அவர்களது தலையில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது அவர்கள், இறைவா! (உன் செய்திகளை) நான் (மக்களிடம்) சேர்த்துவிட்டேனா? என்று மும்முறை கூறிவிட்டு, நபித்துவத்தின் நற்செய்திகளிலிருந்து ஒரு நல்ல அடியார் காண்கின்ற அல்லது அவருக்குக் காட்டப்படுகின்ற (நல்ல) கனவைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை என்று சொன்னார்கள்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
826. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று எனக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
827. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் இருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னைத் தடுத்தார்கள்.
அத்தியாயம் : 4
828. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னைத் தடுத்தார்கள். உங்களையும் தடுத்தார்கள் என்று நான் கூற மாட்டேன்.
அத்தியாயம் : 4
829. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் நேசர் (நபி (ஸல்) அவர்கள்) ருகூஉ அல்லது சஜ்தாச் செய்துகொண்டிருக்கும் போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென என்னைத் தடுத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
830. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ருகூஉச் செய்துகொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓதவேண்டாமென என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்றே இடம்பெற்றுள்ளது. சஜ்தாவிலிருக்கும் போது குர்ஆனை ஓதக்கூடாது என்பது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அறிவிப்பிலும் சஜ்தாவில் குர்ஆனை ஓதலாகாது என்பது பற்றிய குறிப்பு இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 4
831. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ருகூஉச் செய்துகொண்டிருக்கும்போது குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென நான் தடை விதிக்கப்பெற்றுள்ளேன்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் அலீ (ரலி) அவர்களது பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 4
பாடம் : 42 ருகூஉவிலும் சஜ்தாவிலும் ஓத வேண்டியவை.
832. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் தம் இறைவனிடம் (அவனது அருளுக்கு இலக்காகி) இருக்கும் நிலைகளில் மிக நெருக்கமானது, அவர் சஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (சஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
833. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது சஜ்தாவில் அல்லாஹும் மஃக்பிர்லீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆகிரஹு, வ அலானிய்யத்தஹு வ சிர்ரஹு என்று பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: இறைவா! என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! அவற்றில் சிறியதையும் பெரியதையும்,ஆரம்பமாகச் செய்ததையும் இறுதியாகச் செய்ததையும், வெளிப்படையாகச் செய்ததையும் மறைமுகமாகச் செய்ததையும் மன்னிப்பாயாக.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
834. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனின் (110ஆவது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் வகையில், தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபி ஹம்திக, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ (இறைவா! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று அதிகமாகக் கூறிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
835. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னால் சுப்ஹானக வபி ஹம்திக அஸ்தஃக்ஃபிருக வ அதூபு இலைக்க (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்) என்று அதிகமாகக் கூறிவந்தார்கள். (ஒருநாள்) நான், அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகள் என்ன? இவற்றைத் தாங்கள் புதிதாகக் கூறத் துவங்கியுள்ளீர்களே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது... (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகிறேன் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
836. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது... என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது முதல் ஒவ்வொரு தொழுகையிலும் சுப்ஹானக்க ரப்பீ வபி ஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ என்று கூறாமல் அல்லது பிரார்த்திக்காமல் இருந்ததில்லை.
(பொருள்: என் அதிபதியே! உனைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!)
அத்தியாயம் : 4
837. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) மிகுதியாக சுப்ஹானல் லாஹி வபி ஹம்திஹி,அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி (அல்லாஹ் மிகத் தூயவன் எனப் புகழ்ந்தவனாய் அவனைத் துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்) என்று கூறிவந்தார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
என் சமுதாயத்தார் தொடர்பாக நான் ஓர் அடையாளத்தைக் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுவிட்டேன். (அதுதான் இந்த அத்தியாயமாகும்): அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து, மேலும்,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டங்கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக; மேலும், அவனிடமே பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் பாவமன்னிப்புக் கோரலை ஏற்பவனாக இருக்கிறான் (110:1-3). இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும்.
அத்தியாயம் : 4
838. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், நீங்கள் ருகூஉவில் என்ன ஓதுவீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று ஓதுகிறேன். ஏனெனில், இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருநாள் இரவில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடினேன். அவர்கள் தம் மற்றத் துணைவியரில் எவரிடமாவது சென்றிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே அவர்களைத் தேடிப் போனேன். (அவர்களை எங்கும் காணாமல்) பின்னர் திரும்பிவந்தேன். அப்போது அவர்கள் (தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்) ருகூஉவில் அல்லது சஜ்தாவில் சுப்ஹானக்க வபி ஹம்திக்க லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் ஓர் எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நீங்கள் மற்றோர் எண்ணத்தில் இருக்கிறீர்கள் என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
839. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள் அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா!
உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.)
அத்தியாயம் : 4
840. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது) தமது ருகூஉவிலும் சஜ்தாவிலும் சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ் என்று கூறுவார்கள்.
(பொருள்: (இறைவா! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதி.)
அத்தியாயம் : 4
841. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 43 சஜ்தாவின் சிறப்பும், அதை (அதிகமாகச்) செய்யுமாறு வந்துள்ள தூண்டுதலும்.
842. மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக சஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு சஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு தகுதியை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள் என்றார்கள்.
பின்னர் நான் அபுத்தர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அத்தியாயம் : 4
843. ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தேன். அவர்கள் (இரவுத் தொழுகைக்காக எழுந்தபோது) இயற்கைக்கடனை நிறைவேற்றி(ய பின் துப்புரவு செய்து) கொள்வதற்கும் அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்வதற்கும் தண்ணீர் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம் (ஏதேனும்) கோருவீராக! என்று என்னிடம் கூறினார்கள். உடனே நான், சொர்க்கத்தில் நான் உங்களுடன் இருக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றேன். அதற்கு வேறு ஏதேனும் (கோருவீராக!) என்றார்கள். நான் (இல்லை) அதுதான் என்றேன். அதற்கு அவர்கள், அப்படியானால் உமது கோரிக்கை நிறைவேற அதிகமாகச் சஜ்தா செய்து எனக்கு உதவுவீராக! என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 44 சிரவணக்கத்தின்(போது பூமியில் பட வேண்டிய) உறுப்புகளும், தொழும்போது தலைமுடி, ஆடை ஆகியவற்றை(க் கீழே படாமல்) பிடித்துக்கொள்ளல், (ஆண்கள்) தலைமுடியைச் சுருட்டி கொண்டை போட்டுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு வந்துள்ள தடையும்.
844. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சிர வணக்கம் (சஜ்தா) செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; (சிர வணக்கத்தின்போது தரையில் படாதவாறு) தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக்கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கப் பட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபுர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள், மற்றும் நெற்றி ஆகிய ஏழு உறுப்புகள் படுமாறு (சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்); தமது தலைமுடி, ஆடை ஆகியவற்றைப் பிடித்துக் கொள்ள வேண்டாமென்று தடை விதிக்கப்பட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
845. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படியும், (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) நான் பிடித்துக்கொள்ளக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
846. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்; முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ள வேண்டாம் என்று தடை விதிக்கவும்பட்டார்கள்.
அத்தியாயம் : 4
847. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு (முழங்)கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். (நெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது) தமது கையால் தமது மூக்கை நோக்கி (மூக்கு உட்பட என்பதைப் போன்று) சைகை செய்தார்கள். நாம் ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளோம்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
848. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் நெற்றி-மூக்கு, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்(களின் நுனி)கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு சஜ்தாச் செய்யும்படி கட்டளையிடப்பட்டுள்ளேன். நான் முடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடித்துக்கொள்ள வேண்டாம் எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் அவருடன் ஏழு உறுப்புகள் சிரவணக்கம் செய்கின்றன: அவருடைய முகம்,இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள் மற்றும் இரு பாதங்(களின் நுனி)கள் ஆகியவையே அவை.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
849. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யபபட்ட அடிமை குறைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் தமது தலைமுடியைப் பின்பக்கமாகக் கொண்டையிட்டுத் தொழுதுகொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவர்கள் எழுந்து சென்று அவருடைய கொண்டையை அவிழ்த்து விடலானார்கள். அவர் தொழுது முடித்ததும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கித் திரும்பி உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் எனது தலைமுடியை அவிழ்த்துவிட்டீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தொழுகின்றவரின் நிலை பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டவாறு தொழுபவரின் நிலைக்கு ஒத்திருக்கிறது என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 45 சஜ்தாவில் உள்ளங்கைகளைத் தரையில் வைத்து, விலாப் புறங்களைவிட்டு முழங்கைகளையும் தொடைகளிலிருந்து வயிற்றையும் அகற்றிவைத்து (முறையாக) நடுநிலையோடு சஜ்தாச் செய்வது.
850. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சஜ்தாவில் நடுநிலையைக் கையாளுங்கள். உங்களில் எவரும் தம் கைகளை நாய் பரப்பி வைப்பதைப் போன்று பரப்பி வைக்க வேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள வலா யப்சுத் எனும் சொற்றொடர்) வலா யத்தபஸ்ஸத் என்று இடம் பெற்றுள்ளது. (இரண்டுக்கும் பொருள்: பரப்பி வைக்க வேண்டாம்.)
அத்தியாயம் : 4
851. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சஜ்தாச் செய்யும்போது உள்ளங்கைகளை (தரையில்) வையுங்கள்; முழங்கைகளை (தரையிலிருந்து) அகற்றி வையுங்கள்.
இதை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 46 தொழுகை முறை; தொழுகையை எப்படி ஆரம்பிப்பது, எப்படி முடிப்பது?; ருகூஉ, சஜ்தாச் செய்யும் முறை; அவற்றில் நடுநிலையைக் கையாளுவது; நான்கு ரக்அத் தொழுகைகளில் ஒவ்வோர் இரண்டு ரக்அத் முடிந்ததும் அத்தஹிய்யாத் ஓதுவது; இரு சஜ்தாக்களுக்கு மத்தியிலும் முதல் அத்தஹிய்யாத்திலும் அமர்கின்ற முறை ஆகியவை குறித்த மொத்த விவரங்கள்.
852. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கைகளையும் விரித்துவைப்பார்கள்.
அத்தியாயம் : 4
853. அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை (விலாவிலிருந்து) அகற்றிவைப்பார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது தம்மிரு அக்குள்களைவிட்டுக் கைகளை விரித்து வைப்பார்கள். எந்த அளவிற்கென்றால் நான் அவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்ப்பேன் என்று (அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
854. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது, ஓர் ஆட்டுக் குட்டி நினைத்தால் அவர்களின் இரு கைகளுக்கிடையே கடந்து சென்றுவிட முடியும் (அந்த அளவுக்கு அவர்கள் கைகளைத் தரையிலிருந்து அகற்றி வைப்பார்கள்).
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
855. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது பின்னாலிருந்து (பார்த்தால்) அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை விரித்து (இடைவெளி விட்டு) வைப்பார்கள். அவர்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்ததும்) தமது இடது தொடையின் (காலின்) மீது லாவகமாக அமர்ந்துகொள்வார்கள்.
அத்தியாயம் : 4
856. (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தாச் செய்யும்போது தம் அக்குள்களின் வெண்மையைப் பின்னாலிருப்பவர் பார்க்கும் அளவுக்குக் கைகளை அகற்றி வைப்பார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான வகீஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) வள்ஹ் எனும் சொல்லுக்கு வெண்மை என்று பொருள்.
அத்தியாயம் : 4
857. (நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்குவார்கள்;அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்... என்று (குர்ஆன்) ஓத ஆரம்பிப்பார்கள். ருகூஉச் செய்யும்போது தலையை உயர்த்தவுமாட்டார்கள்; ஒரேடியாகத் தாழ்த்தவுமாட்டார்கள். மாறாக, நடுநிலையாக வைத்திருப்பார்கள்.ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தினால் நிமிர்ந்து நிற்காமல் சஜ்தாவுக்குச் செல்லமாட்டார்கள். சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தினால் நேராக நிமிர்ந்து உட்காராமல் (இரண்டாவது) சஜ்தாச் செய்ய மாட்டார்கள்.ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் அத்தஹிய்யாத் ஓதுவார்கள். (அந்த அமர்வில்) இடது காலை விரித்துவைத்து, வலது காலை நட்டுவைப்பார்கள். மேலும், ஷைத்தான் உட்காருவதைப் போன்று (கால்களை நட்டுவைத்து, புட்டத்தைத் தரையில் படியவைத்து) உட்கார வேண்டாம் என்றும், மிருகங்கள் உட்காருவதைப் போன்று முழங்கைகளைத் தரையில் பரப்பி வைத்து உட்கார வேண்டாம் என்றும் தடை விதித்துவந்தார்கள். அவர்கள் சலாம் கூறியே தொழுகையை முடிப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகாலித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் (ஷைத்தான் அமர்வதைப் போன்று என்பதைக் குறிக்க மூலத்தில் வந்துள்ள உக்பா என்பதற்கு பதிலாக) அகிப் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 4
பாடம் : 47 தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு ஒன்றை வைத்துக்கொள்வது.
858. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் (தொழும்போது) தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக்கொண்டு தொழட்டும். அந்தக் கட்டைக்கு அப்பால் கடந்துசெல்பவரை அவர் பொருட்படுத்த வேண்டாம்.
இதைத் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
859. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (திறந்தவெளிகளில்) தொழுது கொண்டிருப்போம். அப்போது எங்களுக்கு முன்னால் கால்நடைகள் கடந்துசெல்லும். எனவே, இது பற்றி நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினோம். அப்போது அவர்கள், உங்களில் ஒருவர் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். பிறகு அவரை எது கடந்துசென்றாலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், பிறகு அவரை யார் கடந்துசென்றாலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
860. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக்கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றதை வைத்துக்கொள்ளுமாறு கூறினார்கள்
அத்தியாயம் : 4
861. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தபூக் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழுபவர் (தமக்கு முன்னால்) தடுப்பு வைத்துக்கொள்வது பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்ற ஒன்றை (தடுப்பாக) வைத்துக் கொள்ளுமாறு கூறினார்கள்.
அத்தியாயம் : 4
862. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தன்று (தொழுவிப்பதற்காகத் தொழுகைத் திடலுக்குப்) புறப்படும்போது (முனை அகலமான) ஈட்டியை எடுத்துவருமாறு உத்தரவிடுவார்கள். (தொழுகைத் திடலில்) அவர்களுக்கு முன்னால் அந்த ஈட்டி (தடுப்பாக நட்டு) வைக்கப்படும். பிறகு அதை நோக்கித் தொழுவிப்பார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் இருப்பார்கள். பொதுவாகப் பயணத்திலும் இவ்வாறே செய்வார்கள். இதனால் தான் (நம்) தலைவர்களும் இவ்வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
863. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (கைப்பிடி உள்ள) கைத்தடியை நட்டுவைத்து அதை நோக்கித் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அது (முனை அகலமான) ஈட்டியாகும் என்று உபைதுல்லாஹ் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
864. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (திறந்தவெளியில் தொழும்போது) தமது வாகன (ஒட்டக)த்தைக் குறுக்கே (தடுப்பாக) வைத்து,அதை நோக்கித் தொழுவார்கள்.
அத்தியாயம் : 4
865. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வாகன (ஒட்டக)த்தை நோக்கித் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளரதொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தை நோக்கித் தொழுதார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
866. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்கள் (உள்ளே சென்று) நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தை வெளியே கொண்டுவந்தார்கள். மக்களில் சிலர் அதை (பிலால் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகப்) பெற்றுக்கொண்டனர். மற்றச் சிலர் அதைப் பெற்றவர்களிடமிருந்து பெற்று(த் தம்மீது தடவி)க்கொண்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்தவர்களாக வெளியே வந்தார்கள். (அதை அவர்கள் உயர்த்திப் பிடித்துக்கொண்டு வந்ததால் அவர்களின் கால்கள் வெளியில் தெரிந்தன.) இப்போதும் நான் நபி (ஸல்) அவர்களுடைய கால்களின் வெண்மையைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. பிறகு பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள் ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது இங்கும் அங்குமாக (அதாவது, வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும்) திரும்பியபோது நான் அவர்களது வாயையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களுக்காக (கைப்பிடி உள்ள) கைத்தடி ஒன்று (தடுப்பாக) நட்டுவைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். அவர்களுக்கு முன்னால் (அந்தக் கைத்தடிக்கு அப்பால்) கழுதை, நாய் ஆகியன தடையின்றி கடந்து சென்றுகொண்டிருந்தன. பிறகு நபி (ஸல்) அவர்கள் அஸ்ரையும் இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பின்னர் மதீனாவிற்குத் திரும்பிச் செல்லும்வரை (கடமையான நான்கு ரக்அத் தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுவித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
867. அபூஜுஹைஃபா வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜின்போது) தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தேன். பிலால் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்து) மிச்சம் வைத்த தண்ணீரை வெளியே எடுத்துவருவதையும் பார்த்தேன். அந்த மிச்சத் தண்ணீருக்காக மக்கள் போட்டியிட்டுக் கொள்வதையும் நான் பார்த்தேன். அந்தத் தண்ணீரில் சிறிதளவைப் பெற்றவர் அதைத் (தம் மேனியில்) தடவிக்கொண்டார். அதில் சிறிதும் கிடைக்காதவர் (தண்ணீர் கிடைத்த) தம் தோழரின் கையிலுள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க்கொண்டார். பிறகு பிலால் (ரலி) அவர்கள் ஒரு கைத்தடியை எடுத்து வந்து நட்டுவைப்பதை நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிவப்பு நிற அங்கியொன்றை அணிந்தவர்களாக (தம் கணைக்கால்கள் தெரியுமளவுக்கு அங்கியை) உயர்த்திப் பிடித்தபடி வெளியில் வந்தார்கள். பிறகு அந்தக் கைத்தடியை நோக்கி (நின்று) மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்தக் கைத்தடிக்கு அப்பால் மனிதர்களும் கால்நடைகளும் கடந்துசெல்வதை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 4
868. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மாலிக் பின் மிஃக்வல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நண்பகல் நேரமானபோது பிலால் (ரலி) அவர்கள் வந்து தொழுகைக்காக அறிவிப்புச் செய்தார்கள் எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
869. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின்போது ஒரு நாள்) நண்பகல் நேரத்தில் பத்ஹாவை (அப்தஹ்) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் அங்கத் தூய்மை செய்துவிட்டு லுஹர் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்து, அஸ்ர் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் கைத்தடி ஒன்று (நடப்பட்டு) இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அந்தக் கைத்தடிக்கு அப்பால் பெண்கள் மற்றும் கழுதைகள் (உள்ளிட்ட கால்நடைகள்) கடந்துசென்றுகொண்டிருந்தன எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
870. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஹகம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரின் மிச்சத்தைப் பெற்றுக்கொள்ள மக்கள் போட்டியிடலாயினர் என அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
871. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது) மினாவில் (தடுப்பு எதையும் முன்னோக்காமல்) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் பெட்டைக் கழுதையொன்றில் பயணித்தபடி (அவர்களை) நோக்கிச் சென்றேன். -அந்த நாளில் நான் பருவ வயதை நெருங்கிவிட்டிருந்தேன்.- (தொழுதுகொண்டிருந்தவர்களின்) அணிக்கு முன்னால் நான் கடந்துசென்று (கழுதையிலிருந்து) இறங்கி அதை மேயவிட்டு விட்டுத் தொழுகை அணியினூடே நுழைந்து (நின்று)கொண்டேன். அ(வ்வாறு நான் தொழுகை அணியைக் கடந்துசென்ற)தற்காக என்னை யாரும் ஆட்சேபிக்கவில்லை.
அத்தியாயம் : 4
872. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது கழுதையொன்றில் பயணித்தபடி நான் அவர்களை நோக்கிச் சென்றேன். (எனது) கழுதை (தொழுகையாளிகளின்) அணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்துசென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் சேர்ந்துகொண்டேன்.
அத்தியாயம் : 4
873. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (அப்போது) நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் (மக்களுக்குத்) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
874. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மினா, அரஃபா என்ற குறிப்பு இடம்பெறவில்லை. மாறாக, விடைபெறும் ஹஜ்ஜின் போது அல்லது மக்காவெற்றி நாளில் என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 48 தொழுதுகொண்டிருப்பவருக்கு முன்னால் குறுக்கே செல்பவரைத் தடுப்பது.
875. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னால் கடந்து செல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச்செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டு தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
876. ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்ற ஒரு ஹதீஸையும் அவர்களிடம் நான் கண்ட ஒரு நிகழ்ச்சியையும் உமக்குக் கூறுகிறேன்:
நான் ஒரு வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று அபூசயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்று விடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து அதை நோக்கித் தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது பனூ அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்துசெல்ல முற்பட்டார். உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்துசெல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைக் கண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்லப்பார்த்தார். அபூசயீத் (ரலி) அவர்கள் முன்னைவிடக் கடுமையாக அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் அப்படியே நின்றுகொண்டு அபூசயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.
பிறகு மக்களை விலக்கிக்கொண்டு (மதீனாவின் ஆளுநராயிருந்த) மர்வான் பின் ஹகமிடம் சென்று நடந்ததை அந்த இளைஞர் முறையிட்டார். அபூசயீத் (ரலி) அவர்களும் மர்வானிடம் சென்றார்கள். அப்போது மர்வான், அபூசயீத் (ரலி) அவர்களிடம், உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே! என்று கேட்டார். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக்கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது, அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுக்கும்போது அவருடன் சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவன்தான் ஷைத்தான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் (எனவே தான், அந்த இளைஞரை அவ்வாறு நான் தடுத்தேன்) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
877. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்கு முன்னே கடந்துசெல்ல அவர் அனுமதிக்க வேண்டாம். (அவரைத் தடுக்கட்டும்.) அவர் (விலகிக்கொள்ள) மறுக்கும்போது சண்டையிட(நேர்ந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில்,அவருடன் கூட்டாளி (ஷைத்தான்) உள்ளான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
878. புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் அனுப்பி, தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன செவியேற்றார்கள் என்று கேட்டுவருமாறு சொன்னார்கள். (நான் சென்று கேட்டேன்.) அப்போது அபூஜுஹைம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர் அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்கு முன்னால் கடந்துசெல்வதைவிட நாற்பது (நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுந்நள்ர் சாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் நாட்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது மாதங்களில் நாற்பது என்று சொன்னார்களா, அல்லது வருடங்களில் நாற்பது என்று சொன்னார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அபூஜுஹைம் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (இது தொடர்பாக) என்ன கேட்டார்கள் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அனுப்பினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 49 தொழுபவர் தடுப்புக்கு அருகில் நெருங்கி நிற்க வேண்டும்.
879. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழநிற்கும் இடத்திற்கும் (பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் அமைந்த) சுவருக்கும் இடையே ஓர் ஆடு கடந்து செல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது.
அத்தியாயம் : 4
880. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்கு அருகில் (உள்ள தூண் அருகே) கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழுவார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து (இந்தத் தூணை முன்னோக்கி நின்று) தொழுவார்கள். சொற்பொழிவு மேடைக்கும் (மிம்பர்) கிப்லாவுக்கும் இடையே ஓர் ஆடு கடந்துசெல்லும் அளவுக்கு இடைவெளி இருந்தது என்றும் குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
881. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில்) குர்ஆன் வைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்திலிருந்த தூணருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். அவர்களிடம் நான், அபூ முஸ்லிம்! தாங்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதையே தேர்ந்தெடுத்துக் கொள்வதை நான் காண்கிறேனே (என்ன காரணம்)? என்று கேட்டேன். அதற்கு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இந்தத் தூணுக்கு அருகில் தொழுவதைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதை நான் பார்த்திருக்கிறேன் (ஆகவேதான், நானும் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்) என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 50 தொழுபவருக்கு முன்னால் தடுப்பு எந்த அளவு இருக்க வேண்டும்?
882. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள், உங்களில் ஒருவர் (திறந்தவெளியில்) தொழ நிற்கும் போது தமக்கு முன்னால் வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது இருந்தால் அதுவே அவருக்குத் தடுப்பாக அமைந்துவிடும். சாய்வுக்கட்டை போன்றது இல்லாவிட்டால் கழுதை, பெண் மற்றும் கறுப்புநாய் ஆகியன அவரது (கவனத்தை ஈர்த்து) தொழுகையை முறித்துவிடும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். உடனே நான், அபூதர் (ரலி) அவர்களே! சிவப்பு நிற நாய், மஞ்சள் நிற நாய் ஆகியவற்றை விட்டுவிட்டுக் கறுப்பு நிற நாயை மட்டுமே குறிப்பிடக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், என் சகோதரரின் புதல்வரே! நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கறுப்பு நாய் ஷைத்தான் ஆகும் என்று கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ், மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தடுப்பு இல்லாமல் தொழுகின்றவரின்) தொழுகையைப் பெண் (முறித்துவிடுவாள். மேலும்), கழுதை, நாய் ஆகியவை(யும்) முறித்துவிடும். வாகன (ஒட்டக)த்தின் (சேணத்திலுள்ள) சாய்வுக்கட்டை போன்றது அதிலிருந்து பாதுகாத்துவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 4
பாடம் : 51 தொழுபவருக்கு முன்னால் குறுக்கே படுத்திருப்பது.
884. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசை (கிப்லாவு)க்கும் இடையே குறுக்குவாக்கில் ஜனாஸா (சடலம்) போன்று படுத்துக்கொண்டிருப்பேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
885. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாக தொழுது முடிப்பார்கள். அப்போது நான் அவர்களுக்கும் தொழும் திசைக்கும் (கிப்லா) இடையே குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன். அவர்கள் இறுதியில் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னை எழுப்பிவிடுவார்கள். நான் (எழுந்து) வித்ர் தொழுகை தொழுவேன்.
அத்தியாயம் : 4
886. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), தொழுகையை முறிக்கக் கூடியவை எவை? என்று கேட்டார்கள். நாங்கள், பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது) என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும் போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
887. மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் அருகில் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும் என்பது பற்றி பேசப்பட்டது. அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், (பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் (அவர்களின்) கிப்லாவுக்குமிடையே கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருக்க அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
888. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (நாய்கள், கழுதைகள், பெண்கள் ஆகியோர் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்துவிடும் என்று கூறிய ஒருவரிடம்), எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டிருப்பேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கட்டிலின் நடுப்பகுதிக்கு நேராக (நின்று) தொழுவார்கள். (ஏதேனும் தேவை ஏற்பட்டால்,) அவர்களது பார்வையில் படும்விதமாக எழுந்து அமரப் பிடிக்காமல் கட்டிலின் இரு கால்களினூடே மெல்ல நழுவி, எனது போர்வையிலிருந்து நழுவிச் சென்றுவிடுவேன் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 4
889. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (சஜ்தாச் செய்யுமிடத்தில்) இருந்துகொண்டிருக்கும். அவர்கள் (நிலையிலிருந்து) சஜ்தாவுக்கு வரும்போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக்கொள்வேன். அவர்கள் (மீண்டும்) நிலைக்குச் சென்றுவிட்டால் நான் (மறுபடியும்) கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாட்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருக்கவில்லை.
அத்தியாயம் : 4
890. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு எதிரில் மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் நான் இருந்துகொண்டிருப்பேன். சில நேரங்களில் அவர்கள் சஜ்தாச் செய்யும்போது அவர்களது ஆடை என்மீது படும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
891. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அவர்களது விலாப் பக்கத்தில் (படுத்துக்கொண்டு) இருப்பேன். நான் போர்த்தியிருந்த போர்வையில் ஒரு பகுதி அவர்கள்மீது அவர்களது விலாப் புறத்தில் கிடக்கும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
பாடம் : 52 ஒரே ஆடையில் தொழுவதும் அதை அணியும் முறையும்.
892. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவது குறித்துக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் உண்டா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
893. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை அழைத்து, எங்களில் ஒருவர் ஒரே அடையை அணிந்து தொழலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒவ்வொருவரும் இரு ஆடைகள் வைத்திருக்கிறாரா? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
895. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது (வலது தோள் மீதிருக்கும் ஓரத்தை இடது கைக்குக் கீழேயும் இடது தோள் மீதிருக்கும் ஓரத்தை வலது கைக்குக் கீழேயுமாக) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், (அதன் இரு ஓரங்களையும் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக்கொண்டார்கள் என்பதைக் குறிக்க மூலத்தில்) முஷ்தமிலன் என்று குறிப்பிடாமல் முதவஷ்ஷிஹன் என்று குறிப்பிடபபட்டுள்ளது. (இரண்டு சொற்களுக்கும் பொருள் ஒன்றே.)
அத்தியாயம் : 4
896. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அப்போது அதன் இரு ஓரங்களையும் அவர்கள் மாற்றிப்போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 4
897. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை போர்த்திக்கொண்டு அதன் இரு ஓரங்களையும் மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஈசா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் தம் தோள்கள்மீது (மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுதார்கள்) எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 4
898. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 4
899. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்கள் இடம்பெற்றுள்ள அறிவிப்பில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன் என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 4
900. அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பல ஆடைகளிருக்கவே ஒரே ஆடையை அணிந்து, (அதன் இரு ஓரங்களையும்) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்திருக்கிறேன் என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 4
901. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் ஒரு பாயில் சஜ்தாச் செய்துகொண்டிருந்ததை நான் கண்டேன். மேலும், அவர்கள் ஒரே ஆடையை அணிந்து (அதன் இரு ஓரங்களையும்) மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததையும் நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 4
902. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அதன் இரு ஓரங்களையும் தம் தோள்கள் மீது போட்டுக்கொண்டு (தொழுததை நான் பார்த்தேன்) எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அபூபக்ர் பின் அபீஷைபா, சுவைத் பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், (அதன் இரு ஓரங்களையும்) மாற்றிப் போட்டுக்கொண்டு எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
Previous Post Next Post