அத்தியாயம் 12 அச்சநிலைத் தொழுகை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 12
அச்சநிலைத் தொழுகை

பகுதி1

அச்சமான நேரத்தில் தொழுவது.

அல்லாஹ் கூறினான்:

''நீங்கள் பூமியில் பயணம் செய்து நிராகரிப்பவர்கள் உங்களைத் தாக்கக் கூடும் என்று நீங்கள் அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்களின் மீது குற்றமாகாது. நிச்சயமாக நிராகரிப்பவர்கள் உங்களுக்குப் பகிரங்க விரோதிகளாக உள்ளனர். நபியே நீர் அவர்களுடன் இருக்கும்போது அவர்களுக்கு (ப் போர்க்களத்தில்) தொழுகை நடத்தினால் ஒரு பிரிவினர் தங்கள் ஆயுதங்களைத் தாங்கியவர்களாக உம்முடன் நின்று தொழட்டும்! அவர்கள் ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும், தொழாத அடுத்த பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். அவர்களும் தங்கள் ஆயுதங்களையும் எச்சரிக்கை உணர்வையும எடுத்துக் கொள்ளட்டும். நிராகரிப்பவர்கள். நீங்கள் உங்கள் ஆயுதங்களிலும் தளவாடங்களிலும் கவனக்குறைவாக இருப்பதையும் திடீரென உங்களைத் தாக்குவதையும் விரும்புகின்றனர். மழையினால் உங்களுக்கு இடையூறு இருந்தால் அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை(க் கீழே) வைத்து விடுவது உங்களின் மீது குற்றமாகாது. (ஆனாலும்) எச்சரிக்கை உணர்வைப் பிடித்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக இறைவன் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் படுத்தி வைத்துள்ளான்.'' (திருக்குர்ஆன் 4:101, 102)

942. ஷுஐப் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார்களா? என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன்.

'நான் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ஸல்) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்' என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார்.

பகுதி 2

நின்றும், வாகனத்தின் மீது அமர்ந்தும், போர்க்களத் தொழுகையைத் தொழலாம்.

943. நாஃபிவு அறிவித்தார்.

'(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்' என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.

''எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.

பகுதி 3

போர்க்களத் தொழுகையில் ஒருவர் மற்றவருக்குப் பாதுகாப்பாக இருத்தல்.

944. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் அவர்களுடன் நின்றனர். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி(ஸல்) அவர்கள் ருகூவு செய்தபோது அவர்களில் சிலர் (மட்டும்) ருகூவு செய்தனர். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அவர்களுடன் ஸஜ்தாச் செய்தனர்.

பிறகு இரண்டாவது ரக்அத்துக்காக நபி(ஸல்) அவர்கள் எழுந்தபோது ஸஜ்தாச் செய்தவர்கள் எழுந்து தங்கள் சகோதரர்களைப பாதுகாக்கும் பணியில் ஈடுபட, மற்றொரு கூட்டத்தினர் வந்து ருகூவு செய்து ஸஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தனர்.

பகுதி 4

கோட்டைகளை முற்றுகையிட்டு வெல்லும் போதும் எதிரிகளைக் களத்தில் சந்திக்கும் போதும் தொழ வேண்டும்.

வெற்றி நெருங்கிய நிலையில் அவர்களுக்குத் தொழ இயலாவிட்டால் ஒவ்வொருவரும் தனியாகச் சைகை மூலம் தொழ வேண்டும். சைகை மூலம் தொழ இயலாவிட்டால் போர் முடிவுக்கு வரும்வரை அல்லது அச்சமற்ற நிலையை அடையும் வரை தொழுகையைத் தாமதப் படுத்தி அதன் பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். அதற்கும் அவர்களுக்கு இயலாவிட்டால் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாவும் செய்வார்கள். தக்பீர் கூறுவது மட்டும் போதாது. அச்சமற்ற நிலை வரும் வரை அவர்கள் பிற்படுத்தலாம் என அவ்ஸாயீ, மக்ஹுல் ஆகியோர் கூறுகின்றனர்.

துஸ்தர் எனும் ஊரில் அமைந்த கோட்டையை ஃபஜ்ரு தோன்றும் வேளையில் நாங்கள் முற்றுகையிட்டோம். போர் கடுமையாக மூண்டது. தொழ இயலவில்லை. நண்பகலில் தவிர எங்களால் தொழ முடியவில்லை. அபூ மூஸா(ரலி) உடன் நாங்கள் அதைத் தொழுதோம். எங்களுக்கு வெற்றி கிடைத்தது. அந்த ஒரு தொழுகை அளித்த மகிழ்ச்சியை இவ்வுலகமும் அதிலுள்ளவையும் எனக்கு அளிக்க முடியாது என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள்.

945. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அகழ்ப்போரின்போது குரைஷி இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே உமர்(ரலி) வந்து 'இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையத் துவங்கும் வரை நான் அஸர் தொழவில்லை' என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் இது வரை அஸர் தொழவில்லை'' என்று கூறிவிட்டு, புத்ஹான் என்னுமிடத்திற்குச் சென்று உளுச் செய்துவிட்டு, சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃரிபையும் தொழுதனர்.

பகுதி 5

எதிரிகளைத் தேடிச் செல்பவரும் எதிரிகளால் தேடப்படுவரும் வாகனத்தின் மீது சைகை மூலம் தொழலாம்.

ஷுரஹ்பீல் இப்னு ஸகித் என்பவரும் அவரின் தோழர்களும் வாகனத்தின் மீதே தொழுதது பற்றி அவ்ஸாயீ இடம் கேட்டேன். 'நேரம் தப்பிவிடும் என்று அஞ்சினால் அது கூடும் என்பதே நம்முடைய கருத்தாகும்' என அவர் குறிப்பிட்டார் என வலீத், கூறுகிறார். மேலும் வலீத் பின்வரும் ஹதீஸையும் தமக்குச் சான்றாகக் கொள்கிறார்.

946. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பனு குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழ வேண்டாம்'' என்று கூறினார்கள்.

வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். 'பனூ குரைலாக் கூட்டத்தினர் வசிக்கும் இடத்தை அடையும் வரை நாம் அஸர் தொழவேண்டாம்' என்று சிலர் கூறினர். வேறு சிலர் 'இந்த அர்த்தத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை எனவே நாம் தொழுவோம்' என்றனர். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி(ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.

பகுதி 6

இருள் இருக்கும் போதும் அதிகாலையிலும் ஸுப்ஹுத் தொழுவதும் தாக்குதலின் போதும் போர்க்களத்திலும் தொழுவதும்.

947. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஸுப்ஹுத் தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். பிறகு 'அல்லாஹ் மிகப் பொரியவன்! கைபர் வீழ்ந்தது! ஒரு கூட்டத்தினரின் மீது நாம் தாக்குதல் தொடுத்தால் அவர்களின் முடிவு கெட்டதாக அமையும்!'' என்று கூறினார்கள்.

கைபர் வாசிகள் வீதிகளில் ஓடிக் கொண்டே 'முஹம்மதும் அவரின் படையினரும் வந்துவிட்டனர்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், எதிரிகளின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். போரில் ஈடுபட்டவர்களைக் கொன்றார்கள். சிறுவர்களைக் கைதிகளாகப் பிடித்தார்கள். (கைதியாகப் பிடிபட்ட) ஸஃபிய்யா(ரலி) திஹ்யா அல்கல்பீக்குக் கிடைத்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைத்தார்கள். அவரை விடுதலை செய்ததையே மஹராக ஆக்கி அவரை நபி(ஸல்) அவர்கள் மணந்தார்கள்.

இச்செய்தியை ஸாபித் கூறுகையில் அவரிடம் 'அபூ முஹம்மதே! நபி(ஸல்) அவர்கள் என்ன மஹர் கொடுத்தார்கள் என்பதை அனஸ்(ரலி) அவர்களிடம் நீங்கள் கேட்டீர்களா?' என்று அப்துல் அஸீஸ் கேட்டபோது, 'அவரின் விடுதலையையே மஹராக' ஆக்கியதாகக் கூறிவிட்டுப் புன்முறுவல் பூத்தார். இந்தத் தகவவை ஹம்மாத் அறிவித்தார்.

Previous Post Next Post