இணைவைத்தல் - ஷிர்க்



அறிமுகம்: 

‘ஷிர்க்' என்றால் அரபி மொழியில் 'பங்கு' என்று அர்த்தம். நீங்களும், உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள். தமிழில் அதை 'குழுமம்' என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை 'ஷிர்க்கா' என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை 'ஷரீக்' என்கிறார்கள். எல்லாரும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக் கொள்கையை (கம்யூனிஸக் கொள்கையை) அரபியில் 'இஷ்திராகிய்யா' என்கிறார்கள்.
 
இஸ்லாத்தில் 'ஷிர்க்' என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். 

அதாவது. . . . .

1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்'

2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது 'ஷிர்க்'

3) நன்மையையும் தீமையையும் தரக்ககூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது 'ஷிர்க்'

4) அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தி இருப்பதாக நம்பி அல்லது இன்னொருவருக்கு சக்தி இருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப் படுத்த முயற்சி செய்தால் அது 'ஷிர்க்'

5) அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது 'ஷிர்க்'

6) அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும் அளவுக்கு சக்தி இருக்கின்றது என்று யாரைப் பற்றியாவது நம்பினால் இது 'ஷிர்க்'

7) இறந்து போன அவ்லியாக்கள், நல்லடியார்கள் நமக்காக அல்லாஹ்விடம் வாதாடுவார்கள் என்ற நம்பினால் அது 'ஷிர்க்'அதே போன்று.

8) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான ஆற்றலும் வல்லமையும் இன்னொரு பொருளுக்கும் இருப்பதாக நினைத்தால் அதுவும் 'ஷிர்க்'

9) அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரங்களை இன்னொரு பொருளுக்கு அளித்தால் அதுவும் 'ஷிர்க்'

10) அல்லாஹ்வுடைய ஆணைகளையும் கட்டளைகளையும் புறந்தள்ளிவிட்டு இன்னொரு பொருளுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அதனுடைய கட்டளைகளுக்கு செவி சாய்த்தால் அதுவும் 'ஷிர்க்'

11) அல்லாஹ்வுடைய கட்டளைகளை இப்போது கடைப்பிடிக்க முடியாது என்று ஒதுக்கிவிட்டு இன்னொரு பொருளின் கட்டளையை கடைப்பிடிக்க முன்வந்தால் அதுவும் 'ஷிர்க்'

12) இறைவனின் தூதர் எடுத்துரைத்த இறைவனுடைய சட்ட திட்டங்களை இந்தக் காலத்தில் கடைப்பிடிக்க முடியாது. அவை இந்தக்காலத்துக்கு பொருந்தி வராதவை என்றுமுடிவு கட்டிவிட்டு வேறுவேறு கொள்கைகளை பின்பற்றத் தொடங்கினால் அதுவும் 'ஷிர்க்'

இவ்வளவு பெரிய கொடும்பாவமான ஷிர்க் என்பதன் பொருள் என்ன? அதை ஏன் அல்லாஹ் மன்னிப்பதைல்லை? என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிவதுகட்டாயக் கடைமையாகும். அவ்வாறு அறியும் போதுதான், அதை விட்டு விலகி, உண்மையாகவும் தூய்மையாகவும் அல்லாஹ்வை வணங்க முடியும். 

ஷிர்க் என்பது சிலைகளை வணங்குவதும், கோவில்களுக்குச் சென்று அவைகளுக்கு வழிபடுவதும் மட்டும்தான் என முஸ்லிம்களில் பலர் கருதி வருகின்றனர். இதனால் ஷிர்க்கான பல செயல்களை செய்து விட்டு அவைகள் ஷிர்க் அல்ல என்றும் எண்ணுகின்றனர்.

இந்த தப்பெண்ணத்தால் பலர் பாதிக்கப்பட்டு ஷிர்க்கான செயல்களை செய்து தங்களை நரகநெருப்பிற்காக சித்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள் இஸ்லாமிய பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் ஒருவனாக ஆகிவிடுவதால் மட்டும் ஷிர்க்கை விட்டு தூய்மையாகி விடலாம் என்று. எனவே இவர்களிடம் ஷிர்க்கான செயல்களைச் செய்யாதீர்கள் விட்டு விடுங்கள் என்று கூறும்போது,

நாங்கள் என்ன ஹிந்துக்களா? நாங்கள் ராமனை வணங்குகிறோமா? கிருஷ்ணணை வணங்குகிறோமா? எங்களைப் பார்த்து ஷிர்க்கான செயல்கள் புரிகிறோம் என்று கூறுகின்றீர்களே? என்று கேட்கின்றனர். ராமன், கிருஷ்ணன் போன்றவர்களை வணங்குவது மட்டும்தான் ஷிர்க் என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள். இதற்குக் காரணம் ஷிர்க்கைப் பற்றிய அவர்களின் அறியாமையே ஆகும்.

ஷிர்க் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் செய்யவேண்டிய வணக்க வகைகளில் எதையாவது அல்லாஹ் அல்லாதாருக்குச் செய்வது, படப்பினங்களில் எதையாவது, எவரையாவது அல்லாஹ்வுக்கு நிகராக்குவது, இதுதான் ஷிர்க்காகும். அதாவது தவ்ஹீத் என்னும் ஏக இறைக்கொள்கைக்கு நேர் முரணானதுதான் ஷிர்க் முஸ்லிம்கள் அனைவருக்கும் லாயிலாஹா இல்லல்லாஹ் என்னும் கலிமாவை மொழிந்திருக்கிறார்கள். இக்கலிமாவின் பொருள் வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்பதாகும். இந்த கலிமத்துத் தவ்ஹீதை நம்பி அதன்படி செயல்படுவதுதான் ஏக இறை நம்பிக்கையாகும்.


அஷ்ஷிர்க் விளக்கம்:

வணக்க வழிபாடுகளிலும்‌, ருபூபிய்யத்‌ எனும்‌ இறைசக்தி சார்ந்த அம்சங்களிலும்‌ இறைவனுக்கு நிகராக ஒருவனை ஏற்படுத்துவதே இணைவைத்தலாகும்‌.

பொதுவாக வணக்க வழிபாடுகளில்‌ இணைவைத்தல்‌ என்பது அல்லாஹ்வுடன்‌ சேர்த்து மற்றொருவரை அழைத்தல்‌ அல்லது இறைவனுக்கு மாத்திரம்‌ நிறைவேற்ற வேண்டிய சில வணக்கங்களை இறைவன்‌ அல்லாதவர்களுக்கு நிறைவேற்றுவதாகும்‌.

உதாரணமாக: அறுத்துப்பலியிடுதல்‌, நேர்ச்சை வைத்தல்‌, அல்லாஹ்‌ அல்லாதவர்களை அஞ்சுதல்‌, வேண்டுதல்‌, அன்புவைத்தல்‌ போன்றவையாகும்‌.

இணைவைத்தல்‌ பெரும்‌ பாவங்களில்‌ ஒன்றாகுவதற்கான காரணங்கள்‌

1-இறைவழிபாடு சம்பந்தப்பட்ட விடயங்களில்‌ படைத்தவனுக்கு படைப்பினங்களை ஒப்பிடுவதாகும்‌. இறைவனுடன்‌ மற்றொருவரை யார்‌ இணைவைக்கிறாரோ அவர்‌ மற்றொரு கடவுளை இறைவனுக்கு ஒப்பிடுகிறார்‌. இது அநியாயங்களில்‌ பெரும்‌ அநியாயமாகும்‌. இறைவன்‌ கூறுகிறான்‌:

நிச்சயமாக இணைவைத்தல்‌ மிகப்‌ பெரிய அநயாயமாகும்‌. (லுக்மான்‌ : 13)

அநியாயம்‌ என்பது ஒரு விடயத்தை அது வைக்கப்பட வேண்டிய இடமல்லாது வேறு இடத்தில்‌ வைப்பதாகும்‌. எனவே யார்‌ அல்லாஹ்‌ அல்லாது ஒருவனை வணங்குகிறானோ அவன்‌ வணக்கத்தை உரிய இடத்தில்‌ வைக்கவில்லை என்றே பொருள்‌. 

மேலும்‌ வணங்க (சக்தி) தகுதி உள்ளவனை விட்டு வேறு தெய்வங்களுக்கு வணக்கங்களை பரிமாறிவிட்டான்‌, எனவே தான்‌ இது அநியாயங்களில்‌ பெரும்‌ அநியாயமாகும்‌.

2- பாவமன்னிப்பு தேடாதவரை அல்லாஹ்‌ இணைவைப்பாளனை மன்னிக்க மாட்டான்‌.

இறைவன்‌ கூறுகிறான்‌:

நிச்சயமாக அல்லாஹ்‌ தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்‌. இதனைத்‌ தவிர (மற்ற) எதனையும்‌ தான்‌ நாடியோருக்கு மன்னிப்பான்‌ (அந்நிஷா : 48)

3-. இணைவைப்பவனுக்கு அல்லாஹ்‌ சுவர்க்கத்தை தடை செய்துள்ளான்‌. மேலும்‌ அவன்‌ நரகத்தில்‌ நிரந்தரமாக இருப்பான்‌. இறைவன்‌ இதனை வருமாறு கூறுகிறான்‌:

எவர்‌ அல்லாஹற்வுக்கு இணைவைக்கிகறாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ்‌ சுவனபதியைத்‌ தடுத்துவிடுகிறான்‌ மேலும்‌ அவர்‌ தங்குமிடம்‌ நரகம்தான்‌ இன்னும்‌ (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்‌) உதவி செய்வோர்‌ யாருமில்லை. (அல்மாஇதா : 72)

4- இணைவைத்தல்‌ எல்லா அமல்களையும்‌ வீணாக்கிவிடும்‌. இதை இறைவன்‌ இவ்வாறு கூறுகிறான்‌:

அதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும்‌, தன்‌ அடியார்களில்‌ அவன்‌ நாடுகிறவருக்கு இதன்‌ மூலம்‌ நேர்‌வழி காட்டுகிறான்‌ இன்னும்‌ அவர்கள்‌ (அல்லாஹ்வுக்கு) இணைவைத்திருந்தால்‌ அவர்கள்‌ செய்து கொண்டிருந்த நன்மையானவைகள்‌ யாவும்‌ அவர்களை விட்டு அழிந்து விடும்‌. (அல்‌அன்ஆம்‌ : 88)

இறைவன்‌ கூறுகிறான்‌:

நபியே! நீர்‌ இணைவைத்தால்‌ நிச்சயமாக உம்முடைய செயல்கள்‌ யாவும்‌ அறிந்து விடும்‌, நிச்சயமாக நீர்‌ நஷ்டமடைபவர்களிலும்‌ ஆகிவிடுவீர்‌ என உமக்கும்‌, உமக்கு முன்னிருந்தவர்களுக்கும்‌ (வஹி) அறிவிக்கப்பட்டது. (அஸ்ஸூமர்‌ : 65)

5- இணைவைத்தல்‌ பெரும்‌ பாவங்களில்‌ ஒன்றாகும்‌.

ஒரு முறை நபி (ஸல்‌) அவர்கள்‌ ஸஹாபாக்களை நோக்கி பெரும்‌ பாவங்களை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? எனக்‌ கேட்டார்கள்‌. ஆம்‌ அல்லாஹ்வின்‌ தூதரே என்றார்கள்‌ ஸஹாபாக்கள்‌. பின்பு நபி (ஸல்‌) அவர்கள்‌, இறைவனுக்கு இணைவைத்தலும்‌ பெற்றோரைத்‌ துன்புறுத்துவதுமாகும்‌ என்றார்கள்‌.(ஆதாரம்‌ : புஹாரி, முஸ்லிம்‌)

எனவே இணைவைத்தல்‌ அநியாயங்களில்‌ மிக மோசமானதாகும்‌. இன்னும்‌ தவ்ஹீத்‌ என்பது நீதத்தில்‌ மிக சிறந்ததாகும்‌. எனவே இந்த நோக்கத்திற்கு கடும்‌ முரணாக ஷிர்க்‌ இருப்பதால்‌ அது பாவங்களில்‌ பெரும்‌ பாவமாக இருக்கிறது. எனவேதான்‌ இணைவைத்த அனைவர்‌ மீதும்‌ இறைவன்‌ சுவர்க்கத்தை தடை செய்துள்ளான்‌.

இணைவப்பவனின்‌ நல்ல அமல்களையோ அவனது பரிந்துரையையோ பிரார்த்தனை, நல்லாதரவையோ மறுமையில்‌ இறைவன்‌ ஏற்க மறுக்கிறான்‌.

எனவே, இணைவைத்தவன்‌ மடையர்களில்‌ மிக மடையனாவான்‌. அல்லாஹ்வின்‌ படைப்புக்கு இறைவனை ஒப்பிடுகிறான்‌. இது அவனுடைய மடமையின்‌ உச்சகட்டமாகும்‌.

மேலும்‌ அவனின்‌ அநியாயங்களில்‌ உச்சகட்டமாகும்‌. நடைமுறையில்‌ இணைவைப்பவன்‌ இறைவனுக்கு அநியாயம்‌ இழைக்காவிட்டாலும்‌ அவனுக்கே அவன்‌ அநியாயம்‌ இழைத்துக்‌ கொள்கிறான்‌.

6: அல்லாஹ்வுக்கு எதையும்‌ இணையாக ஆக்குவது அவனது பரிசுத்தத்‌ தன்மைக்கு குறை கற்பிப்பதாக அமைகிறது. அல்லாஹ்‌ அவற்றிலிருந்து முற்றிலும்‌ பரிசுத்தமானவன்‌. அல்லாஹ்‌ தனக்கு எவ்வித இணையுமில்லை என்று உறுதிப்படுத்திய பின்னரும்‌ அவனுக்கு ஒருவன்‌ இணை கற்பிக்கிறான்‌ என்றால்‌ அவனது முறைகெட்ட பிடிவாதத்திற்கு அது ஒன்றே போதுமானது.


ஷிர்க்கின்‌ வகைகள்‌

ஷிர்க்‌ இரண்டு வகைப்படும்‌:

1-பெரிய ஷிர்க்‌: இது மனிதனை இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றுகிறது. இதிலிருந்து பாவமன்னிப்பு செய்யாத நிலையில்‌ அவன்‌ இறந்தால்‌ அவன்‌ நரகத்தில்‌ நிரந்தரமாக இருப்பான்‌. இறைவனுக்கு மாத்திரம்‌ நிறைவேற்ற வேண்டிய வணக்கங்களை இறைவன்‌ அல்லாதவர்களுக்கு நிறைவேற்றுவதை இது குறிக்கின்றது. 

உதாரணமாக : அல்லாஹ்‌ அல்லாத வேறு தெய்வங்களிடம்‌ பிரார்த்தனை செய்தல்‌, பலி கொடுத்து நெருங்குதல்‌, அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்கள்‌ மற்றும்‌ ஜின்கள்‌, இறந்தவர்கள்‌ போன்றவர்களுக்கு நேர்ச்சை செய்தல்‌, இறந்தவர்களை பயப்படுதல்‌ அல்லது ஜின்கள்‌, ஷைத்தான்கள்‌ ஏதும்‌ தீங்குகள்‌ செய்யலாம்‌ அல்லது வியாதிகளை ஏற்படுத்தலாம்‌ என்று அஞ்சுதல்‌, மேலும்‌ அல்லாஹ்வால்‌ மாத்திரம்‌ முடியுமானவற்றை அல்லாஹ்‌ அல்லாதவர்களிடம்‌ வேண்டுதல்‌.

குறிப்பாக தற்போது நடப்பது போல்‌ அவ்லியாக்கள்‌, நல்லடியார்கள்‌ போன்ற அடக்கஸ்தலங்களை நாடி தேவைகளைக்‌ கேட்பதும்‌, கஷ்டங்களை நீக்க அவர்களை நாடுவதும்‌ பெரிய ஷிர்கிற்கு சில உதாரணங்களாகும்‌.

இறைவன்‌ கூறுகிறான்‌:

“தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ்‌ அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்‌) வணங்குகிறார்கள்‌ ' இன்னும்‌ அவர்கள்‌, “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம்‌ மண்றாட்டம்‌ செய்பவை”” என்றும்‌ கூறுகிறார்கள்‌' (யூனுஸ்‌ : 18)

2-சிறிய ஷிர்க்‌: இது மனிதனை இஸ்லாத்தில்‌ இருந்து வெளிப்படுத்தாது என்றாலும்‌ அல்லாஹ்‌ ஒருவன்‌ என்ற கொள்கையில்‌ இருந்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மேலும்‌ பெரிய ஷிர்க்‌ ஏற்பட இது காரணமாக இருக்கிறது.

இது இரண்டு வகைப்படுகிறது :

முதல்‌ பிரிவு: வெளிரங்கமான ஷிர்க்‌ - இது செயலாலும்‌, சொல்லாலும்‌ ஏற்படுகிறது.

அல்லாஹ்‌ அல்லாதவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்வது சொல்லால்‌ ஏற்படும்‌ ஷிர்க்காகும்‌.

யார்‌ அல்லாஹ்‌ அல்லாதவர்களைக்‌ கொண்டு சத்தியம்‌ செய்கிறானோ அவன்‌ இறைவனை நிராகரித்து விட்டவனாவான்‌ அல்லது இணைவைத்தவனாவான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ மொழிந்தாரகள்‌. (ஆதாரம்‌ திர்மதி)

அல்லாஹ்வும்‌ நீயும்‌ நாடியது போல்‌ என்று கூறுவதும்‌ சொல்லால்‌ ஏற்படும்‌ ஷிர்காகும்‌.

ஒரு முறை ஒரு மனிதர்‌ நபி (ஸல்‌) அவர்களைப்‌ பார்த்து தாங்களும்‌ அல்லாஹ்வும்‌ நாடியது போல்‌ எனக்‌ கூறினார்‌. உடனே நபி (ஸல்‌) அவர்கள்‌, இறைவனுக்கு ஒப்பாக என்னை ஆக்கிவிட்டீரா! எனக்‌ கேட்டார்கள்‌. மேலும்‌ அல்லாஹ்வின்‌ நாட்டம்‌ மாத்திரமே எனக்கூறு என்று அந்த மனிதனைப்‌ பணித்தார்கள்‌. (ஆதாரம்‌ : நஸாயி)

மேலும்‌ ஒரு மனிதனை குறித்து அல்லாஹ்வும்‌ இந்த மனிதரும்‌ இல்லையென்றால்‌ எனக்‌ கூறுவதும்‌ சொல்லால்‌ ஏற்படும்‌ இணைவைத்தலை குறிக்கிறது. இதில்‌ சரியானது எதுவெனில்‌ “அல்லாஹ்வின்‌ நாட்டப்படியும்‌, அதன்‌ பின்‌ தாங்கள்‌ நாடுகின்ற படியும்‌” என்று கூறுவதே சிறந்த முறையாகும்‌. ஏனெனில்‌ அல்லாஹ்வின்‌ நாட்டத்தை முற்படுத்தி மனிதனின்‌ நாட்டத்தைப்‌ பிற்படுத்துவதுதான்‌ சிறந்தது என்பதை ஹதீஸில்‌ வந்துள்ள (ஸும்ம) என்ற அரபு வார்த்தை குறிப்பிடுகிறது. மேற்படி கருத்தை ஒத்ததாகவே பின்வரும்‌ திருமறை வசனமும்‌ அமைகிறது.

இறைவன்‌ இவ்வாறு கூறுகிறான்‌: இன்னும்‌ அகிலத்தாரின்‌ இரட்சகனகிய அல்லாஹ்‌ நாடினாலன்றி நீங்கள்‌ நல்லறிவு பெறமாட்டீர்கள்‌ (அத்தக்விர்:29)

இது போன்ற வாக்கியங்களில்‌ வரும்‌ (الواو) வாவு கூட்டாக செய்வதையும்‌, இருவர்‌ சேர்ந்து செய்வதையும்‌ குறிக்கின்றது. மேலும்‌ இந்த வாவு தொடர்ச்சியை குறிக்காது மாறாக இணைந்து வருவதையும்‌, இணைந்து செய்வதையுமே குறிக்கிறது. உதாரணமாக, எனக்கு அல்லாஹ்வையும்‌, உன்னையும்‌ தவிர வேறு யாருமில்லை. இன்னும்‌ இது அல்லாஹ்வுடைய பரக்கத்தையும்‌, உன்னுடைய பரக்கத்தையும்‌ கொண்டேதான்‌ என்றும்‌ கூறுவதும்‌ மற்றொருவரை இணைகற்பிக்கும்‌ வார்த்தைகளாக அமைகிறது.

செயல்களால்‌ ஏற்படுபவைகள்‌: உதாரணமாக, துன்பங்களை நீக்கும்‌ என்று தாயத்து, நூல்‌ போன்றவற்றை அணிதல்‌ அல்லது பாதுகாப்புக்காக அணிதல்‌, கண்‌ திருஷ்டிக்காக அஞ்சி தாயத்து அணிவதையும்‌ உதாரணமாகக்‌ கூறலாம்‌. இதனால்‌ துன்பங்கள்‌ நீக்கப்படுமென்றோ அல்லது பாதுகாப்பு கிடைக்குமென்றோ நம்பிக்கை வைத்தால்‌ அவர்‌ சிறிய ஷிர்க்‌ எனும்‌ இணைவைத்தலை செய்தவராவார்‌. ஏனெனில்‌ அல்லாஹ்‌ இவைகளை அவற்றிற்கு காரணமாக ஆக்கவில்லை. ஆனால்‌ குறிப்பாக இவைகள்‌ துன்பங்களை நக்கும்‌ அல்லது துன்பங்களை போக்கி விடும்‌ என்று யார்‌ நம்பிக்கை வைக்கின்றாரோ அப்போது அது பெரிய ஷிர்க்காக மாறிவிடுகிறது. ஏனெனில்‌ இது அல்லாஹ்‌ அல்லாதவர்களுடன்‌ மனிதனை தொடர்படுத்துகிறது, இணைகிறது.

இரண்டாவது பிரிவு: மறைவான ஷிர்க்‌ : இது நாட்டங்களிலும்‌, எண்ணங்களிலும்‌ ஏற்படுகிறது. இறைவனிடம்‌ நெருக்கத்தைப்‌ பெறுவதற்கான நல்லமல்களை புகழுக்காகவோ அல்லது முகஸ்துதிக்காவோ ஒருவன்‌ செய்கின்ற போது அவை ஷிர்க்குடன்‌ கலந்த வணக்கங்களாக மாறுகின்றன. குரலழகைக்‌ காட்ட சப்தமிட்டு குர்‌ஆன்‌ ஓதுதல்‌, புகழுக்காக தொழுதல்‌, தர்மம்‌ செய்தல்‌ என்பனவற்றை அதற்கு உதாரணங்களாக குறிப்பிடலாம்‌.

ஆகவே எவர்‌ தன்‌ இரட்சகனை சந்திக்க ஆதரவு வைக்கின்றாரோ, அவர்‌ நற்கருமங்களைச்‌ செய்யம்‌ தன்‌ இரட்சகனின்‌ வணக்கத்தில்‌ அவர்‌ எவரையும்‌ இணையாக்க வேண்டாம்‌. (அல்கஹப்‌ : 110)

நபி (ஸல்‌) அவர்கள்‌ ஒரு முறை மொழிந்தார்கள்‌ : நான்‌ தாங்கள்‌ மீது அஞ்சுவதெல்லாம்‌ சிறிய ஷிர்க்கை ஆகும்‌. சிறிய ஷிர்க்‌ என்றால்‌ என்னவென்று நபித்‌ தோழர்கள்‌ வினவினர்‌ அதுதான்‌ முகஸ்துதி என நபி (ஸல்‌) அவர்கள்‌ சொன்னார்கள்‌. (ஆதாரம்‌ : அஹ்மத்‌)

இவைகளுக்கு பல உதாரணங்களைக்‌ கூறலாம்‌: உலக ஆசைக்காக தொழில்‌ புரிதல்‌, ஹஜ்‌ கடமையை நிறைவேற்றல்‌, அதான்‌ சொல்லுதல்‌, மக்களைத்‌ தொழுவித்தல்‌, மார்க்க அறிவைக்‌ கற்றல்‌, செல்வத்திற்காக போர்‌ செய்தல்‌ இவைகள்‌ அனைத்தும்‌ உலக ஆசைக்காகவும்‌, செல்வத்திற்காகவும்‌ அமையுமென்றால்‌ இவைகள்‌ சிறிய ஷிர்க்கில்‌ இணைகிறது.

நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறினார்கள்‌ : “பொற்காசு, வெள்ளிக்காசு, பூம்பட்டுத்‌ துணி, சதுர கருப்புத்‌ துணி ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன்‌ துர்பாக்கியவானாவான்‌. அவனுக்கு (செல்வம்‌) கிடைத்தால்‌ திருப்தியடைவான்‌ செல்வம்‌ வழங்கப்படாவிட்டால்‌ அதிருப்தியடைவான்‌:. (ஆதாரம்‌ : புஹாரி)

மேலும்‌ இமாம்‌ இப்னுல்‌ கையூம்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறகிறார்கள்‌ : எண்ணங்களிலும்‌ நாட்டங்களிலும்‌ ஷிர்க்‌ என்பது அலையில்லா கடல்‌ போன்றதாகும்‌. இதிலிருந்து தப்பித்துக்‌ கொள்பவர்கள்‌ மிகக்‌ குறைவானவர்களே, ஒருவன்‌ தன்‌ அமல்களைக்‌ கொண்டு அல்லாஹ்‌ அல்லாதவர்களை நாடி இன்னும்‌ அல்லாஹ்வை நெருங்குவதை அல்லாமல்‌ வேறொன்றை எண்ணி அவைகளிடம்‌ கூலியையும்‌ வேண்டினால்‌ அவன்‌ எண்ணத்திலும்‌ நாட்டத்திலும்‌ இணைவைத்துவிட்டான்‌.

மேலும்‌ தூய எண்னமென்பது, செயல்‌, சொல்‌, நாட்டம்‌, எண்ணம்‌ அனைத்திலும்‌ இறைவனுக்காக என்று தூய எண்ணம்‌ ஏற்படுவதாகும்‌. இது தான்‌ ஹனீபிய்யா எனும்‌ நபி இப்ராஹீம்‌ சந்ததியின்‌ மார்க்கமாகும்‌. இறைவன்‌ அவனுடைய அனைத்து அடியார்களுக்கும்‌ இதைக்‌ கொண்டுதான்‌ ஏவியுள்ளான்‌. இதைத்‌ தவிர வேறு ஒன்றை இறைவன்‌ ஏற்றுக்கொள்ள மாட்டான்‌. மேலும்‌ மறுமையில்‌ அவர்‌ நஷ்டமடைந்தோரில்‌ இருப்பார்‌. இது நபி இப்ராஹீம்‌ (அலை) அவர்களின்‌ மார்க்கமாகும்‌. இதை யார்‌ மறுக்கிறார்களோ அவர்‌ மிக மோசமான மடையர்களில்‌ நின்றும்‌ இருப்பார்‌.


பெரிய ஷிர்க்‌ சிறிய ஷிர்க்‌ இரண்டிற்கிடையிலும்‌ உள்ள வேறுபாடு

1-பெரிய ஷிர்க்‌ மனிதனை இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றுகிறது. சிறிய ஷிர்க்‌ இஸ்லாத்தை விட்டும்‌ வெளியேற்றாது.

2-பெரிய ஷிர்க்‌ மனிதனை நரகத்தில்‌ நிரந்தரமாக இருக்கச்‌ செய்கிறது. சிறிய ஷிர்க்‌ மனிதனை நரகத்தில்‌ நிரந்தரமாக இருக்கச்‌ செய்யாது.

3-பெரிய ஷிர்க்‌ அனைத்து அமல்களையும்‌ வீணாக்கி விடுகிறது. சிறிய ஷிர்க்‌ எல்லா அமல்களையும்‌ வீணாக்கி விடாது என்றாலும்‌ முகஸ்துதி கலந்த வணக்கங்களையும்‌, உலகாதாய இலாபத்திற்காக செய்யப்படும்‌ வணக்கங்களையும்‌ தவிர.

4- பெரிய ஷிர்க்‌ உடையவனின்‌ உயிர்‌ உடமை இரண்டிற்கும்‌ இஸ்லாம்‌ பாதுகாப்பு அளிக்காது, சிறிய ஷிர்க்‌ உடையோனின்‌ உயிர்‌, உடமை இரண்டிற்கும்‌ இஸ்லாம்‌ பாதுகாப்பளிக்கும்‌.


Previous Post Next Post