அத்தியாயம் 70 உணவு வகைகள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 70

உணவு வகைகள்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி 1

''நாம் உங்களுக்கு அளித்துள்ள தூய்மையான உண்பொருட்களை உண்ணுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 20:81 வது) இறைவசனமும், 'நீங்கள் சம்பாதித்த நல்ல பொருள்களிலிருந்து செலவு செய்யுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 02:267 வது) இறைவசனமும், '(தூதர்களே) தூய்மையானவற்றிலிருந்து உண்ணுங்கள்; நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்பவற்றை நான் நன்கறிபவன் ஆவேன்'' எனும் (திருக்குர்ஆன் 23:51 வது) இறைவசனமும்.2

5373. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.3

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்:

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்அனீ' எனும் சொல்லுக்குக் 'கைதி' என்று பொருள்.

5374. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

முஹம்மத்(ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை.

5375. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

எனக்கு (பசியினால்) கடும் சோர்வு ஏற்பட்டது. எனவே, நான் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்.4 (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வினாலும் பசியினாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), 'அபூ ஹுரைரா!' என்று அழைத்தார்கள். நான், 'இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், இறைத்தூதர் அவர்களே; கட்டளையிடுங்கள்'' என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என்னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தம் இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இன்னும் அருந்துங்கள், அபூ ஹிர்!'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு 'மீண்டும் (அருந்துங்கள்)'' என்றார்கள். நான் வயிறு நிரம்பும் வரை மீண்டும் அருந்தினேன். எனவே, வயிறு (உப்பி) பாத்திரத்தை போன்றாகிவிட்டது.

பிறகு, நான் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். '(என் பசியைப் போக்கும் பொறுப்பினை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்துவிட்டான், உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக் காட்டும்படி உங்களிடம் கேட்டேன்'' என்று சொன்னேன். உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமான தாய் இருந்திருக்கும்'' என்று கூறினார்கள்.5

பகுதி 2

உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுவதும், வலக்கரத்தால் உண்பதும்.

5376. (நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!'' என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.

பகுதி 3

(கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பது.

அனஸ்(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஒவ்வொருவரும் அவரவர் (கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்'' என்று கூறினார்கள்.6

5377. நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) (அவர்களுக்கு) அவர்களின் (முதல் கணவர் மூலம் பிறந்த) புதல்வரான உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்

நான் ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் உணவு உண்டேன். தட்டின் ஓரங்களிலிருந்து எடுத்து உண்ணத் தொடங்கினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு'' என்று கூறினார்கள்.

5378. வஹ்ப் இப்னு கைசான் அபீ நுஐம்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப்பட்டது. அவர்களுடன் அவர்களின் வளர்ப்பு மகன் உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்'' என்று கூறினார்கள்.

பகுதி 4

உடனிருப்பவர் தம் செயலால் அருவருப்பு அடையவில்லை என்றால் (உணவருந்தும்) ஒருவர் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் (உணவுப் பொருளைத்) தேடுவது (ஒழுக்கக்கேடு ஆகாது).

5379. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தையற்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவுக்காக (விருந்துக்கு) அழைத்தார். நானும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை கண்டேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.7

பகுதி 5

உணவு உண்பது உள்ளிட்ட செயல்களில் வலக் கரத்தைப் பயன்படுத்துவது.

உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்

என்னிடம் நபி(ஸல்) அவர்கள் 'உன் வலக் கரத்தால் சாப்பிடு'' என்று கூறினார்கள்.8

5380. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் காலணி அணியும் போதும், தலைவாரிக் கொள்ளும்போதும் தம்மால் இயன்ற வரை வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்.

(இந்த ஹதீஸை) இதற்கு முன் (இராக்கில் உள்ள) 'வாஸித்' நகரில் வைத்து அஷ்அஸ்(ரஹ்) அறிவித்தபோது 'நபி(ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)'' என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள்.9

பகுதி 6

வயிறு நிரம்பும் அளவுக்கு உண்ணுதல்10

5381. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அபூ தல்ஹா (ஸைத் அல்அன்சாரி(ரலி) தம் துணைவியார் உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம், 'நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி) வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின் முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உன்னை அபூ தல்ஹா அனுப்பினாரா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். 'உணவுடனா அனுப்பியுள்ளார்?' என்று அவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம், 'எழுந்திருங்கள்'' என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூ தல்ஹா(ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூ தல்ஹா(ரலி) (என் தாயாரிடம்) 'உம்மு சுலைமே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!'' என்று கூறினார்கள். (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி), 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தாமே நபி(ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!'' என்று கூறினார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைக் கூறினார்கள். பிறகு 'பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியுங்கள்'' என்று (அபூ தல்ஹாவிடம்) கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு, 'மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்'' என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.11

5382. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நூற்றி முப்பது பேர் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உங்களில் யாரிடமாவது உணவேதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் 'ஒரு ஸாஉ' அல்லது 'அது போன்ற அளவு' உணவு(மாவு)தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது.

(சற்று நேரத்திற்குப்) பின் மிக உயரமான பரட்டைத் தலை கொண்ட இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், '(இவை) விற்பதற்கா? அல்லது அன்பளிப்பா?' என்று கேட்டார்கள்.

அவர் 'இல்லை. விற்பதற்காகத்தான் (கொண்டு வந்துள்ளேன்)'' என்று பதிலளித்தார்.

அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி(ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொரிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்றி முப்பது போரில் ஒருவர் விடாமல் அனைவருக்கும் அதன் ஈரலில் ஒரு துண்டை நபி(ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு அவரிடமே (நேரடியாக) அதைக் கொடுத்துவிட்டார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து(ப் பாதுகாத்து) வைத்தார்கள். பிறகு இரண்டு (அகன்ற) தட்டுகளில் அந்த ஆட்டு இறைச்சியை வைத்தார்கள். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரண்டு தட்டுகளிலும் மீதியிருந்தது. எனவே, நான் அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிச் சென்றேன்.12

5383. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.13

பகுதி 7

''கண் பார்வையற்றவர், கால் ஊனமுற்றவர் மற்றும் நோயாளி ஆகியோர் (பிறர் இல்லங்களுக்குச் சென்று உணவருந்துவதில் அவர்கள்) மீது எந்தக் குற்றமும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 24:61 வது) இறைவசனமும், பயணச் செலவைப் பகிர்ந்துகொள்வதும், உணவைச் சேர்ந்து உண்பதும்.

5384. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் 'சஹ்பா' எனும் இடத்தில் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உணவைக் கொண்டுவரும்படி கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்: ஸஹ்பா என்பது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ள இடமாகும்.

அப்போது மாவுதான் கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் மென்று சாப்பிட்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படி பணித்தார்கள். (தண்ணீர் வந்தவுடன்) வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் கொப்பளித்தோம். எங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), 'இந்த ஹதீஸை நான் யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) அவர்களிடமிருந்து முதலாவதாகவும் இறுதியாகவும் கேட்டேன்'' என்று கூறுகிறார்கள். 14

பகுதி 8

மிருதுவான ரொட்டியும், உணவு மேசை மற்றும் விரிப்பின் மீது (வைத்துச்) சாப்பிடுவதும்.

5385. கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருந்தார். அப்போது 'நபி(ஸல்) அவர்கள் தாம் இறக்கும் வரை மிருதுவான ரொட்டியையோ, வெந்நீரால் முடி களையப்பட்டுத் தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டையோ உண்டதில்லை'' என்று அனஸ்(ரலி) கூறினார்.

5386. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா(ரஹ்) அவர்களிடம், 'அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார்கள்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'உணவு விரிப்பில்'' என்று பதிலளித்தார்கள்.

5387. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கி, (கைபருக்கும் மதீனாவுக்கும் இடையே மூன்று நாள்கள்) தங்கினார்கள். அப்போது நான் அவர்களின் வலீமா - மணவிருந்துக்காக முஸ்லிம்களை அழைத்தேன். நபி(ஸல்) அவர்கள் தோல் விரிப்புகளைக் கொண்டுவரும்படி பணித்தார்கள். அவ்வாறே அவை (கொண்டு வந்து) விரிக்கப்பட்டன. பிறகு, அவற்றில் பேரீச்சம் பழங்கள், பாலாடைக் கட்டி, நெய் ஆகியன வைக்கப்பட்டன. 15

அம்ர் இப்னு அபீ அம்ர்(ரஹ்) வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில் அனஸ்(ரலி) கூறினார்

(அன்னை) ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (வலீமா - மணவிருந்திற்காக) தோல் விரிப்பில் 'ஹைஸ்' எனும் ஒரு வகைப் பண்டத்தைத் தயாரித்து வைத்தார்கள்.16

5388. வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) அறிவித்தார்

ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். 17 இரண்டு கச்சுடையாளின் மகனே!' என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ்வின் தாயார்) அஸ்மா(ரலி), 'என்னருமை மகனே! அவர்கள் உன்னை இரண்டு கச்சுகளைச் சொல்லிக் குறை சொல்கிறார்கள். 'இரண்டு கச்சுகள்' என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது என் கச்சுதான் அதை நான் இரண்டு பாதிகளாகக் கிழித்து அவற்றில் ஒன்றினால் (ஹிஜ்ரத் பயணத்தின் போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோல் பை(யின் வா)யைக் கட்டினேன். மற்றொன்றை அவர்களின் உணவு விரிப்புக்காக வைத்தேன்'' என்று கூறினார்கள்.18

அறிவிப்பாளர் வஹ்ப் இப்னு கைசான்(ரஹ்) கூறினார்கள்:

(இதன் பின்) ஷாம்வாசிகள் இரண்டு கச்சுகளைக் குறிப்பிட்டு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்களைக் குறை கூறும்போது அவர்கள் 'ஆம்! (உண்மைதான்.) இறைவன் மீதாணையாக! இது ஒரு கூப்பாடு இதில் உன் மீது எந்தக் குறையுமில்லை'' என்று (ஒரு கவிதை வாரியை மேற்கோள் காட்டி தமக்குத் தாமே) கூறுவார்கள்.

5389. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

என் தாயாரின் சகோதாரியான உம்மு ஹுஃபைத் பின்த் ஹாரிஸ் இப்னி ஹஸ்ன்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உடும்புகளையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த உடும்புகளை எடுத்து வரக் கூறினார்கள். அவை (சமைக்கப்பட்டு) அவர்களின் விரிப்பின் மீது உண்ணப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் அவற்றை அருவருப்பது போல் தோன்றியது. அவற்றை உண்ணாமல்விட்டுவிட்டார்கள். அவை தடைசெய்யப்பட்டவையாக இருந்திருந்தால் நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை உண்ணப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி அவர்கள் கட்டளையிட்டிருக்கவுமாட்டார்கள்.19

பகுதி 9

மாவு

5390. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) அறிவித்தார்

நாங்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவிலுள்ள இடமாகும். அப்போது தொழுகை நேரம் வந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரச்கூறினார்கள். மாவைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. அதை அவர்கள் மென்று சாப்பிட்டார்கள். நாங்களும் அவர்களுடன் மென்று சாப்பிட்டோம். பிறகு அவர்கள் தண்ணீரைக் கொண்டு வரச் சொல்லி வாய் கொப்பளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் தொழுதிட நாங்களும் தொழுதோம். ஆனால், நபி(ஸல்) அவர்கள் (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.20

பகுதி 10

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவுப் பொருளையும் அதன் பெயர் அவர்களுக்குக் குறிப்பிடப்பட்டு அது என்னவென்று அவர்கள் அறிந்துகொள்ளாத வரை அந்த உணவை உண்டதில்லை.

5391. 'அல்லாஹ்வின் வாள்' என்றழைக்கப்படும் காலித் இப்னு வலீத்(ரலி) அறிவித்தார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதாரி ஹுஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை'' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

பகுதி 11

ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமாகும்.

5392. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.21

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 12

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்.22

இது குறித்து அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்.

5393. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

இப்னு உமர்(ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச்சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர்(ரலி) 'நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி(ஸல்) அவர்கள் 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்' எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.

5394. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; 'இறைமறுப்பாளன்' அல்லது 'நயவஞ்சகன்' ஏழு குடல்களில் சாப்பிடுவான். இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அறிவிப்பளர்களில் ஒருவரான அப்தா இப்னு சுலைமான்(ரஹ்), 'இதை எனக்கு அறிவித்த உபைதுல்லாஹ் இப்னு உமர்(ரஹ்), 'இறைமறுப்பாளன்', 'நயவஞ்சகன்' ஆகிய இரண்டு சொற்களில் எதைக் கூறினார் என்று எனக்குத் தெரியாது (நினைவில்லை)'' என்று கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடாரிலும் வந்துள்ளது.

5395. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்

(மக்காவாசியான) அபூ நஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறை மறுப்பாளன் ஏழு குடல்களில் சாப்பிடுவான்' என்று கூறினார்கள்' எனக் கூறினார்கள். அதற்கு அபூ நஹீக் 'நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதாரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே இதில் விதிவிலக்கு உண்டு)'' என்று கூறினார்.

5396. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5397. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஒருவர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகிவட்டார். இவ்விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்'' என்று கூறினார்கள்.

பகுதி 13

சாய்ந்தபடி சாப்பிடுவது23

5398. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

5399. அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், 'நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்'' என்று கூறினார்கள்.

பகுதி 14

பொரித்த உணவு

அல்லாஹ் கூறினான்:

(அதன் பின்னர்) அவர் (-இப்ராஹீம்-) பொரித்த காளைக் கன்றி(ன் இறைச்சியி)னை உடனே கொண்டு வந்தார். (திருக்குர்ஆன் 11:69)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹனீஃத்' எனும் சொல்லுக்குப் 'பொரிக்கப்பட்டது' என்று பொருள்.

5400. காலித் இப்னு வலீத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதை உண்பதற்காக அவர்கள் தங்களின் கையைக் கொண்டுபோனார்கள். அவர்களிடம், 'இது உடும்பு'' என்று சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தங்களின் கையை இழுத்துக்கொண்டார்கள். நான், 'இது தடை செய்யப்பட்டுள்ளதா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை. ஆனால், இது என் சமுதாயத்தாரின் பூமியில் இருப்பதில்லை. எனவே, என் மனம் இதை விரும்பவில்லை'' என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, நான் அதைச் சாப்பிட்டேன்.24

மற்றோர் அறிவிப்பில், ('பொரிக்கப்பட்டது' என்பதைக் குறிக்க 'மஷ்விய்யு' எனும் சொல்லுக்கு பதிலாக) 'மஹ்னூஃத்' எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

பகுதி 15

அல்கஸீரா (கோதுமைக் குறுணைக் கஞ்சி)

'அல்கஸீரா' என்பது (கோதுமைக்) குறுணையால் தயாரிக்கப்படும் (கஞ்சி) உணவாகும்; 'அல்ஹாரீரா' என்பது பாலால் தயாரிக்கப்படும் (பாயசம்) உணவாகும் என்று நள்ர் இப்னு ஷுமைல்(ரஹ்) கூறினார்கள்.

5401. பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளம் வழிந்தோடும். அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. எனவே, இறைத்தூதர் அவர்களே! தாங்கள் வந்து என்னுடைய வீட்டில் தொழுகை நடத்த வேண்டுமென்றும் (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்பினேன்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ' 'இன்ஷா அல்லாஹ்' (அல்லாஹ் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்'' என்று கூறினார்கள்.

தொடர்ந்து இத்பான்(ரலி) கூறலானார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் மறுநாள் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். வீட்டினுள் வந்த நபி(ஸல்) அவர்கள் உடனே உட்காரவில்லை. பிறகு என்னிடம், '(இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன்.

நபி(ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று 'தக்பீர் (தஹ்ரீமா)' கூறினார்கள். நாங்கள் (அவர்களுக்குப் பின்னே) அணிவகுத்து நின்றுகொண்டோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு 'சலாம்' கொடுத்தார்கள். நாங்கள் தயாரித்திருந்த 'கஸீர்' எனும் (கஞ்சி) உணவி(னை உட்கொள்வத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். (நபி(ஸல்) அவர்கள் வந்திருந்ததைக் கேள்விப்பட்ட) அந்தப் பகுதி மக்களில் கணிசமான பேர் (சிறுகச் சிறுக) வந்து என் வீட்டில் திரண்டுவிட்டனர். அம்மக்களில் ஒருவர், 'மாலிக் இப்னு துக்ஷுன் எங்கே?' என்று கேட்டதற்கு அவர்களில் மற்றொருவர், 'அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர். (எனவேதான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'அப்படிச் சொல்லதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் 'லா இலாஹ இல்லல்லாஹு'' (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதரே!) அவர் (மாலிக் இப்னு துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்களின் மீது அபிமானம் கொண்டிருப்பதையும் காண்கிறோம். (எனவேதான் அவ்வாறு சொல்லப்பட்டது)'' என்று கூறினோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான் அல்லவா?' என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்:

பனூ சாலிம் குலத்தாரில் ஒருவரும் அவர்களில் முக்கியமானவர்களில் ஒருவருமான ஹுசைன் இப்னு முஹம்மத் அல் அன்சாரி(ரஹ்) அவர்களிடம் முஹ்மூத் இப்னு ரபீஉ அல்அன்சாரி அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை (''இது உண்மைதான்'' என்று) உறுதிப்படுத்தினார்கள்.25

பகுதி 16

பாலாடைக் கட்டி

ஹுமைத் அத்தவீல்(ரஹ்) கூறினார்

நான் அனஸ்(ரலி) கூறக் கேட்டேன்.

நபி(ஸல்) அவர்கள் (அன்னை) ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (மணவிருந்தில் விரிக்கப்பட்ட உணவு விரிப்பில்) பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றை வைத்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில் '(மணவிருந்துக்காக) நபி(ஸல்) அவர்கள் 'ஹைஸ்' எனும் உணவைத் தயாரித்தார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.26

5402. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களுக்கு என் தாயாரின் சகோதாரி (உம்மு ஹுஃபைத்) அவர்கள் உடும்பு, பாலாடைக் கட்டி, பால் ஆகியவற்றை அன்பளிப்புச் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் உணவு விரிப்பின் மீது உடும்பு வைக்கப்பட்டது. அது விலக்கப்பட்டதாக இருந்திருப்பின் அவ்வாறு வைக்கப்பட்டிராது. நபி(ஸல்) அவர்கள் (உடும்பை மட்டும்விட்டுவிட்டு) பாலை அருந்தினார்கள். பாலாடைக் கட்டியையும் சாப்பிட்டார்கள்.27

பகுதி 17

தண்டுக் கீரையும் வாற் கோதுமையும்

5403. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துவந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக் கீரையின் தண்டுகளை எடுத்து தன்னுடைய பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் வாற்கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க் கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமைத் தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்து வந்தோம். நாங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்புதான் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வெடுப்போம். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவர் பரிமாறிய) அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை.28

பகுதி 18

குழம்பிலிருந்து இறைச்சியை எடுத்துக் கடித்துச் சாப்பிடுவது.

5404. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஆட்டின்) சப்பை எலும்பு ஒன்றை (அது வெந்து கொண்டிருந்த பாத்திரத்தில் இருந்து) எடுத்து அதிலிருந்த இறைச்சியைக் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள். ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.

5405. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (குழம்புப்) பாத்திரத்திலிருந்து எலும்பொன்றை எடுத்து (அதிலிருந்து இறைச்சியைக் கடித்து)ச் சாப்பிட்டார்கள். பிறகு தொழுதார்கள்; ஆனால் (புதிதாக) அங்கசுத்தி (உளூச்) செய்யவில்லை.

பகுதி 19

முன்னங்கால் சப்பை எழும்பிலிருந்து இறைச்சியைக் கடித்துச் சாப்பிடுவது.

5406. அபூ கத்தாதா(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில்) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்.29

5407. அபூ கத்தாதா அஸ்ஸலமீ(ரலி) கூறினார்

நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஓரிடத்தில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் முன்னால் தங்கியிருந்தார்கள். மக்கள் அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. அப்போது மக்கள் ஒரு காட்டுக் கழுதையைக் கண்டனர். நானோ என்னுடைய செருப்பைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். அவர்கள் அக்கழுதை குறித்து எனக்கு அறிவிக்கவில்லை. (ஆனால்,) நான் அதைப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நான் (தற்செயலாக) அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று அதற்குச் சேணமிட்டு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக் கொள்ள) நான் மறந்துவிட்டேன். நான் அவர்களிடம் 'அந்தச் சாட்டையையும் ஈட்டியையும் எடுத்து என்னிடம் கொடுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு (இஹ்ராம் கட்டியிருந்த) அவர்கள், 'மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குச் சிறிதும் நாங்கள் உமக்கு உதவமாட்டோம்'' என்று கூறினார்கள்.

நான் கோபமுற்று இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு (குதிரையின் மீது) ஏறினேன். காட்டுக் கழுதையைத் தாக்கி அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு அதை (மக்களிடம்) கொண்டு வந்தேன். அதற்குள் அது இறந்துவிட்டிருந்தது. மக்கள் அதை(ச் சமைத்து) உண்பதற்காக அதன் மீது பாய்ந்தார்கள். பிறகு அவர்கள் 'தாம் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் அதை உண்டது சரிதானா?' என்று சந்தேகம் கொண்டார்கள். அப்போது நாங்கள் (அல்லாஹ்வின் தூதாரிடம்) சென்றோம். நான் (அதன்) முன்னங்கால் சப்பையை (எடுத்து) என்னிடம் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றவுடன் இது குறித்து அவர்களிடம் வினவினோம். அவர்கள், 'அதிலிருந்து மிச்சம் மீதி ஏதாவது உள்ளதா?' என்று கேட்டார்கள். நான் அந்த முன்னங்கால் சப்பையை எடுத்துக் கொடுத்தேன். அதன் எலும்பைக் கடித்துத் துப்பும் வரை அதை அவர்கள் சாப்பிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.30

அபூ கத்தாதா(ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் தமக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக (அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு ஜஅஃபர்(ரஹ்) கூறினார்.

பகுதி 20

இறைச்சியைக் கத்தியால் துண்டித்து உண்பது.

5408. அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களைத் தம் கரத்திலிருந்து ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டுவதைப் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே, அவர்கள் அந்த ஆட்டுச் சப்பையையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) கீழே போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.31

பகுதி 21

நபி(ஸல்), அவர்கள் எந்த உணவையும் குறை கூறியதில்லை.

5409. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)விட்டுவிடுவார்கள்.32

பகுதி 22

வாற்கோதுமையில் (உமியை நீக்க) ஊதுவது.33

5410. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்

ஸலமா இப்னு தீனார்(ரஹ்) ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (சலித்து) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை மாவை நீங்கள் பார்த்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நான், 'அப்படியானால் நீங்கள் வாற்கோதுமையைச் (சல்லடையில்) சலிப்பீர்கள் தானே?' என்று கேட்க, அவர்கள் 'இல்லை; ஆனால், நாங்கள் அதை (வாயால்) ஊதி (சுத்தப்படுத்தி) வந்தோம்'' என்று கூறினார்கள்.

பகுதி 23

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் சாப்பிட்டுவந்தவை.

5411. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம் பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.

5412. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு போரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். (உண்பதற்கு) 'ஹுப்லா' அல்லது 'ஹபலா' எனும் (முள்) மரத்தின் இலையைத் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடு கழிக்கிற (கெட்டிச் சாணத்)தைப் போன்றே மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) 'பனூஅசத்' குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூறி, என்னுடைய) இஸ்லாம் தொடர்பாக என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால், (இதுவரை நான் செய்துவந்த வழிபாட்டு) முயற்சியெல்லாம் வீணாகி, நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என வருந்தினேன்.)34

5413. அபூ ஹாஸிம்(ரஹ்) கூறினார்

நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு ஸஹ்ல்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும் வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை'' என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?' என்று கேட்டேன். அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும் வரை சல்லடையைக் கண்டதேயில்லை'' என்றார்கள். நான், 'கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டுவந்தீர்கள்? சலிக்காமலேயா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பன பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்'' என்றார்கள்.35

5414. ஸயீத் இப்னு அபீ ஸயீத் அல்மக்புரீ(ரஹ்) கூறினார்

(நபித்தோழர்) அபூ ஹுரைரா(ரலி) (ஒரு நாள்), தம் முன்னே பொரிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடுவதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூ ஹுரைரா(ரலி) அவர்களை(த் தம்முடன் அதைச் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வாற்கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்றார்கள்'' என்று கூறினார்கள்.

5415. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அவர்களிடம், 'எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், '(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது'' என்று பதிலளித்தார்கள்.36

5416. ஆயிஷா(ரலி) கூறினார்

முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.

பகுதி 24

'அத்தல்பீனா' (பால் பாயசம்)37

5417. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அவர்களின் குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் 'தல்பீனா' (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா(ரலி) கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு 'ஸாரீத்' (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் 'தல்பீனா' ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா(ரலி) 'இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், 'தல்பீனா' (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்'' என்று சொல்வார்கள்.

பகுதி 25

'அஸ்ஸாரீத்' (தக்கடி எனும் உணவு.)38

5418. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஆண்களில் பல பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவையும் தவிர வேறெவரும் முழுமைபெறவில்லை. மற்ற பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு எல்லா வகை உணவுகளையும் விட 'ஸாரீது'க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.39

5419. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு மற்ற எல்லா வகையான உணவுகளையும் விட 'ஸாரீது'க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.40

5420. அனஸ்(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் அவர்களின் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றேன். அவர் நபி(ஸல்) அவர்கள் முன்னே 'ஸாரீத்' எனும் உணவு இருந்த ஒரு தட்டை வைத்தார். பிறகு தம் வேலையைப் பார்க்கச் சென்றார். (அத்தட்டில்) நபி(ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார்கள். நானும் அதைத் தேடி எடுத்து அவர்கள் முன்னே வைக்கலானேன். அதற்குப் பின் நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.41

பகுதி 26

முடி அகற்றப்பட்டு பொரிக்கப்பட்ட ஆடு, அதன் முன்கால் சப்பை மற்றும் விலா (ஆகியவற்றை உண்பது).

5421. கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) கூறினார்

நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றுவருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ்(ரலி), 'சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த மட்டில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தங்களின் கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை'' என்று கூறினார்கள்.42

5422. அம்ர் இப்னு உமய்யா அள்ளம்ரீ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டு, அதிலிருந்து (இறைச்சியை) உண்டதை பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியை எறிந்துவிட்டுத் தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.43

பகுதி 27

முன்னோர்கள் தம் வீடுகளிலும் பயணங்களிலும் சேமித்து வைத்துவந்த உணவு, இறைச்சி உள்ளிட்டவை.

''நபி(ஸல்) அவர்களுக்காகவும் (எங்கள் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்காகவும் (அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது) பயண உணவு தயாரித்தோம்'' என ஆயிஷா(ரலி) அவர்களும் அஸ்மா(ரலி) அவர்களும் கூறினார்கள்கள்.44

5423. ஆபிஸ் இப்னு ரபீஆ அல்கூஃபீ(ரஹ்) கூறினார்

நான், ஆயிஷா(ரலி) அவர்களிடம் '(ஈதுல் அள்ஹா' பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாள்களுக்கு மேல் வைத்துச்சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகும் கூட அதைச் சாப்பிட்டுவந்தோம்'' என்று பதிலளித்தார்கள். 'உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடுமபத்தார் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

5424. ஜாபிர்(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின்போது அறுக்கப்படும்) தியாகப் பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும் போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்.45

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

இப்னு ஜுரைஜ் (அப்துல் மலிக் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான், அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்களிடம், 'ஜாபிர்(ரலி) 'மதீனாவுக்கு நாங்கள் வந்து சேரும் வரை' எனும் வாக்கியத்தையும் சேர்த்து அறிவித்தார்களா? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 28

'அல்ஹைஸ்' (எனும் பலகாரம்)46

5425. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல்(ரலி) அவர்களிடம், 'உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா(ரலி) (தம் வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சேகவம் புரிந்துவந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் 'இறைவா! துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன்.

நாங்கள் கைபரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை நான் அவர்களுக்குச் சேவகம் செய்து கொண்டேயிருந்தேன். ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை (கைபர் போர்ச் செல்வத்தில் தம் பங்காகத்) தேர்ந்தெடுத்துக்கொண்ட பின் அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்காக ஓர் 'அங்கியால்' அல்லது 'ஒரு போர்வையால்' தமக்குப் பின்னே திரை அமைத்துப் பிறகு அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொள்வதை பார்த்தேன். நாங்கள் '(சத்துஸ்) ஸஹ்பா' எனும் இடத்தை அடைந்தபோது அவர்கள் 'ஹைஸ்' எனும் பலகாரத்தைத் தயாரித்து ஒரு தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு என்னை அவர்கள் அனுப்பிட நான் (வலீமா விருந்திற்காக) மக்களை அழைத்தேன். அவர்கள் வந்து விருந்து சாப்பிட்டார்கள். அது (அன்னை) ஸஃபிய்யா(ரலி) அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய(தற்கு அளித்த வலீமா - மணவிருந்)தாக அமைந்தது.

பிறகு அவர்கள் முன்னேறிச் செல்ல அவர்களுக்கு 'உஹுத்' மலைழ தென்பட்டது. அவர்கள், 'இது நம்மை நேசிக்கிற ஒரு மலை. இதை நாமும் நேசிக்கிறோம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரை நெருங்கிவிட்டபோது 'இறைவா! இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையேயுள்ள அதன் நிலப்பரப்பை நான் புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் 'ஸாஉ' மற்றும் அவர்களின் 'முத்(து)' ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக'' என்று பிரார்த்தித்தார்கள்.47

பகுதி 29

வெள்ளி கலந்த பாத்திரத்தில் உண்பது48

5426. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) கூறினார்

நாங்கள் ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள 'தைஃபூன்' நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னி ஆராதனை செய்பவர் (மஜூஸி) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவரின் மீது வீசியெறிந்தார்கள். பிறகு 'நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்...'' என்று கூறினார்கள். (அதாவது 'பல முறை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்'' என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி(ஸல்) அவர்கள் 'சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியனவாகும்'' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பகுதி 30

உணவு பற்றிய குறிப்பு

5427. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று; சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறைநம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது; (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகிற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பானதாகும்.

என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.49

5428. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு உள்ள சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட 'ஸாரீத்' எனும் உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.50

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

5429. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. எனவே, பயணி தாம் நாடிச் சென்ற நோக்கத்தை முடித்துக் கொண்டுவிட்டால், உடனே தம் வீட்டாரை நோக்கி விரைந்து வரட்டும்!

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.51

பகுதி 31

ரொட்டிக் குழம்பு

5430. காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) கூறினார்

(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பாரீரா(ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன:

1. (அன்னை) ஆயிஷா(ரலி) அவரை வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்போது பாரீராவின் எசமான்கள் 'அவளுடைய வாரிசுரிமை ('வலா') எங்களுக்கு உரியதாகவே இருக்கும்'' என்று கூறினார்கள். அதை ஆயிஷா(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது, அவர்கள் 'நீ விரும்பினால், பாரீராவின் வாரிசுரிமை உனக்கேயுரியது என்று நீ அவர்களுக்கு நிபந்தனையிடலாம். ஏனெனில், வாரிசுரிமை (அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே கிடைக்கும்'' என்று கூறினார்கள்.

2. அவ்வாறே அவர் விடுதலை செய்யப்பட்டபோது அவர் தம் (அடிமைக்) கணவருடன் அவரின் மணபந்தத்தில் நீடிக்கவும் செய்யலாம். அல்லது கணவரைப் பிரிந்துவிடவும் செய்யலாம் என (இரண்டில் விரும்பியதைச் செய்து கொள்ள) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்.

3. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அடுப்பில் பாத்திரம் ஒன்று கொதித்துக் கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் காலை உணவைக் கொண்டு வரும்படி பணித்தார்கள். உடனே அவர்களுக்கு ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் 'இறைச்சி (சமைக்கப்பட்ட)தனை நான் பார்க்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு வீட்டார், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! ஆனால் அது பாரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சியாகும். அதை அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தார்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அது அவருக்கு தர்மமாகும். நமக்கு அன்பளிப்பாகும்'' என்று கூறினார்கள்.52

பகுதி 32

இனிப்புப் பண்டமும் தேனும்

5431. ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பி வந்தார்கள்.

5432. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

('நபிமொழிகளை அதிகமாக அபூ ஹுரைரா அறிவிக்கிறாரே' என்று மக்கள் என்னைப் பற்றிக் குறை கூறிக் கொண்டிருந்தார்கள்.) நான் என் பசி அடங்கினால் போதும் என்று நபி(ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். அந்தக் காலக் கட்டத்தில் புளித்து உப்பிய (உயர் தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; (மெல்லிய) பட்டாடையை நான் அணிவதுமில்லை; இன்னவரோ இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. (பசியின் காரணத்தால்) நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன்.

என்னை ஒருவர் (தம் இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக ('எனக்கு விருந்தளியுங்கள்' என்ற பொருள் கொண்ட 'அக்ரினீ' எனும் சொல்லைச் சற்று மாற்றி) 'அக்ரிஃனீ-எனக்கு (ஓர்) இறைவசனத்தை ஓதிக் காட்டுங்கள்' என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும். மக்களிலேயே ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) தாம் ஏழைகளுக்கு அதிகமாக உதவுபவராவார். அவர் எங்களை அழைத்துச் சென்று தம் வீட்டிலிருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத நெய் (அல்லது தேன்) பையை எங்களிடம் கொண்டு வருவார். அதை நாங்கள் பிளந்து அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நாக்கால் வழித்து உண்போம்.53

பகுதி 33

சுரைக்காய்

5433. அனஸ்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் அடிமையும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர்களுக்கு சுரைக்காய் (உணவு) கொண்டுவரப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் உண்ணத் தொடங்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை (விரும்பி)ச் சாப்பிடுவதைப் பார்த்ததிலிருந்து அதை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.54

பகுதி 34

ஒருவர் தம் சகோதரர்களுக்காக உணவு தயாரிக்க சிரமம் எடுத்துக்கொள்வது.

5434. அபூ மஸ்வூத் உக்பா இப்னு ஆமிர் அல்அன்சாரி(ரலி) கூறினார்

அபூ ஷுஐப் என்று அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவர் அந்தப் பணியாளரிடம், 'எனக்காக உணவு தயாரித்து வை! (ஐந்து பேரை விருந்துக்கு அழைக்கவிருக்கிறேன். அந்த) ஐவரில் ஒருவராக இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைக்கவிருக்கிறேன்'' என்று கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களை ஐந்து போரில் ஒருவராக அழைத்தார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்துவிட்டார். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் என்னை ஐந்து போரில் ஒருவராக (விருந்துக்கு) அழைத்தீர்கள்! இந்த மனிதரோ எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்கு அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரைவிட்டு விடலாம்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப்(ரலி) 'இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.55

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு யூசுஃப்(ரஹ்) கூறினார்:

முஹம்மத் இப்னு இஸ்மாயீல் (அல்புகாரீ (ரஹ்) அவர்கள், '(விருந்தில்) ஒரு வட்டிலில் (ஸஹனில்) அமர்ந்துள்ள நபர்கள் மற்றொரு வட்டிலில் இருந்து (உணவை) எடுத்துண்ணலாகாது. ஆனால், ஒரே வட்டிலில் அமர்ந்திருப்போர் (வேண்டுமானால், அதிலுள்ள உணவை) ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளலாம்; அல்லது (அதைச் செய்வதைக்கூட) கைவிடலாம்'' என்று கூறினார்கள்.56

பகுதி 35

ஒருவரை விருந்துக்கு அழைத்துவிட்டு (அவருடன் சேர்ந்து உண்ணாமல் விருந்தளிப்பவர்) தம் பணியைக் கவனிக்கலாம்.

5435. அனஸ்(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அவர்கள் செல்லுமிடமெல்லாம்) செல்கிற சேவகனாக இருந்தேன். (ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர் உணவும் அதன் மீது சுரைக்காய்க் குழம்பும் உள்ள ஒரு தட்டை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார்கள். அதை நான் பார்த்தவுடன் சுரைக்காயை அவர்களுக்கு முன்னால் ஒன்று சேர்த்து வைக்கலானேன். அப்போது அந்தப் பணியாளர் தம் பணியைக் கவனிக்கச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் இப்படிச் செய்வதை (பிரியமாக சுரைக்காய் உண்பதை)ப் பார்த்த பின் நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.57

பகுதி 36

கறிக்குழம்பு

5436. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

தையற்காரர் ஒருவர் நபி(ஸல்) அவர்களைத் தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி(ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர் வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காயையும் உப்புக்கண்டமும் இருந்த குழம்பையும் நபி(ஸல்) அவர்களின் முன்னால் வைத்தார். நபி(ஸல்) அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.58

பகுதி 37

உப்புக்கண்டம்

5437. அனஸ்(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களிடம் சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பு கொண்டு வரப்பட்டதைக் கண்டேன். அப்போது அவர்கள் சுரைக்காயைத் தேடி உண்பதைப் பார்த்தேன்.

5438. ஆயிஷா(ரலி) கூறினார்

(நபி(ஸல்) அவர்கள்) அதை (குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு மேலும் சேமித்து வைத்து உண்பதை) மக்கள் பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில் தான் அப்படி(த் தடை) செய்தார்கள். வசதியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நாங்கள் ஆட்டுக் காலை எடுத்து வைத்துப் பதினைந்து நாள்களுக்குப் பிறகு அதை உண்டுவந்தோம். முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தினர் குழம்புடன் கூடிய வெள்ளைக் கோதுமை ரொட்டியை (தொடர்ச்சியாக) மூன்று நாள்கள் கூட வயிறு நிரம்ப உண்டதில்லை. 59

பகுதி 38

ஒருவர் வட்டிலில் இருந்து எதையேனும் எடுத்து மற்றவருக்குக் கொடுப்பது, அல்லது அவர் முன் வைப்பது.

அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) கூறினார்: (ஒரே வட்டிலில் அமர்ந்திருப்போர் அதிலுள்ளதை) ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதில் தவறில்லை. (ஆனால்,) ஒரு வட்டிலில் இருந்து மற்றொரு வட்டிலுக்குப் பரிமாறுவது கூடாது.

5439. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

தையற்காரர் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அருகே வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பையும் வைத்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் துழாவுவதை கண்டேன். அன்றிலிருந்து சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.

(மற்றோர் அறிவிப்பில்) ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் இப்னி அனஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள். அனஸ்(ரலி), 'நான் சுரைக்காயை ஒன்று சேர்த்து நபி(ஸல்) அவர்கள் முன் வைத்தேன்'' என்று கூறினார்கள்.60

பகுதி 39

பேரீச்சச் செங்காய்களுடன் வௌ்ளரிக் காயை(யும் சேர்த்து) உண்பது.

5440. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர் இப்னு அபீ தாலிப்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வௌ்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை கண்டேன்.

பகுதி 40

5441. அபூ உஸ்மான்(ரலி) கூறினார்

நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களின் துணைவியாரும் அவர்களின் பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறைவைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர் தொழுது முடித்தவுடன் இன்னொரு வரை தொழுகைக்கு எழுப்புவார். அபூ ஹுரைராவுடன் தங்கியிருந்தபோது) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு முறை) தம் தோழர்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். எனக்கு ஏழு பேரீச்சம் பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழமாக இருந்தது.

5441. (மற்றோர் அறிவிப்பில்) அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து எனக்கு ஐந்து பழங்கள் கிடைத்தன் அவற்றில் நான்கு (கனிந்த) பேரீச்சம் பழங்களும் (நன்கு கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழம் ஒன்றும் இருந்தன. பிறகு நான் அந்தத் தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழத்தை என் கடைவாய்ப் பல்லால் மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.61

பகுதி 41

பேரீச்சச் செங்காய்களும் பேரீச்சங்கனிகளும்.

அல்லாஹ் கூறினான்: மேலும், (ஈசாவின் அன்னை மர்யமிடம் வானவர் கூறினார்:) பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைப் பிடித்துச் சற்று உலுக்குங்கள். அது உங்களின் மீது புத்தம் புதிய செங்காய்களை உதிர்க்கும் (திருக்குர்ஆன் 19:25)

5442. ஆயிஷா(ரலி) கூறினார்

நாங்கள் இரண்டு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம் பழம் மற்றும் தண்ணிரால் வயிறு நிரம்பியிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.62

5443. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம் பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்) வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத்திருந்தார். 'ரூமா' கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. எனவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. எனவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டு வரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் 'புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்'' என்று கூறினார்கள். நான் என்னுடைய பேரீச்சந் தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர் 'அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்'' என்று கூறலானார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சம் மரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அவர் யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி(ஸல்) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு '(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?' என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி(ஸல்) அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு, எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு, 'ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உன்னுடைய கடனை) அடைப்பாயாக!'' என்று கூறினார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (என்னுடைய கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதமிருந்தது. நான் புறப்பட்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், 'நான் இறைத்தூதர்தாம் என்று நானே சாட்சியம் அளிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அரீஷ்' (பந்தல்) மற்றும் 'அர்ஷ்' ஆகிய சொற்களுக்குக் 'கட்டடம்' என்று பொருள். '(இச்சொல்லில் இருந்து பிறந்த) 'மஅரூஷாத்' எனும் சொல்லுக்குத் திராட்சை முதலியவற்றின் பந்தல் என்று பொருள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

பகுதி 42

பேரீச்சங் குருத்தை உண்ணுதல்

5444. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்'' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள் பேரீச்ச மரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்'' என்று நினைத்தேன். எனவே, நான் 'அது பேரீச்சம் மரம் தான், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூற விரும்பினேன். பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்து போரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். எனவே, மௌனமாகிவிட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களே, 'அது பேரீச்ச மரம் தான்'' என்று கூறினார்கள்.63

பகுதி 43

'அல்அஜ்வா' (எனும் அடர்த்தியான மதீனாப் பேரீச்சம் பழம்).

5445. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு 'அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 44

(பலர் இருக்கும் இடத்தில் ஒருவரே) இரண்டு பேரீச்சம் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவது.

5446. ஜபலா இப்னு சுஹைம்(ரஹ்) கூறினார்

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், '(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்'' என்று சொல்வார்கள். பிறகு, 'ஒருவர் தம் சகோதரரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தாலே தவிர'' என்று சொல்வார்கள். 64

''அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றாகும்'' என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா(ரஹ்) கூறினார்.

பகுதி 45

வெள்ளரிக்காய்

5447. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை பார்த்திருக்கிறேன்.65

பகுதி 46

பேரீச்ச மரங்களில் உள்ள வளம் (பரக்கத்).

5448. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்ச மரமாகும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.66

பகுதி 47 ஒரே சமயத்தில் இரண்டு வகைப் பழங்களை அல்லது இரண்டு வகை உணவுகளைச் சேர்த்து உண்பது.

5449. அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , வெள்ளரிக்காய்களுடன் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை பார்த்திருக்கிறேன்.67

பகுதி 48

பத்துப் பத்துப் பேராக விருந்தாளிகளை அனுமதிப்பதும், பத்துப் பத்துப் பேராக உணவு விரிப்பில் அமர்வதும்.

5450. அனஸ்(ரலி) கூறினார்

என் தாயார் உம்மு சுலைம்(ரலி) ஒரு 'முத்(து)' அளவு வாற்கோதுமையை எடுத்து நொறுகலாக அரைத்து (பால் கலந்து) கஞ்சி தயாரித்துத் தம்மிடமிருந்த நெய் உள்ள தோல் பை ஒன்றையும் எடுத்து (அதிலிருந்த நெய்யை அந்தக் கஞ்சியில்) ஊற்றினார்கள். பிறகு என்னை நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே அமர்ந்திருக்க நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள், 'என்னுடன் இருப்பவர்களும் (வரலாமா)?' என்று கேட்டார்கள். நான் சென்று (என் தாயாரிடம்), 'நபி(ஸல்) அவர்கள் தம்முடன் இருப்பவர்களும் வரலாமா? என்று கேட்கிறார்கள்'' என்று சொன்னேன். உடனே (என் தாயாரின் இரண்டாம் கணவர் (அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இது (என் மனைவி) உம்மு சுலைம் தயாரித்த (சிறிதளவு) உணவுதான்'' என்று கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டினுள்) வந்தார்கள். அந்த உணவு கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'என்னிடம் பத்துப்பேரை வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே பத்துப் பேர் வந்தார்கள். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'என்னிடம் (இன்னுமொரு) பத்துப்பேரை வரச் சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் பத்துப் பேரும் வந்து வயிறு நிரம்பும் வரை உண்டார்கள். பிறகு மீண்டும் '(மற்றுமொரு) பத்துப்பேரை என்னிடம் வரச்சொல்லுங்கள்'' என்று கூறினார்கள். இவ்வாறே நாற்பது பேரை எண்ணும் வரை கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களும் உண்டுவிட்டு எழுந்தார்கள். நான் அதிலிருந்து ஏதேனும் குறைந்துள்ளதா என்று கவனிக்கலானேன். (குறையாமல் அப்படியே இருந்தது.)68

பகுதி 49

வெள்ளைப்பூண்டு மற்றும் (வாடையுள்ள) கீரை வகைகளை உண்பது விரும்பத் தக்கதன்று.

இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

5451. அப்துல் அஸீஸ் இப்னு ஸுஹைப்(ரஹ்) கூறினார்

அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிக்கிறீர்கள்?' என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ்(ரலி), '(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனக் கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள்.70

5452. அதாஉ(ரஹ்) கூறினார்

நபி(ஸல்) அவர்கள், 'வெள்ளைப்பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் 'நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்' அல்லது 'நம் பள்ளிவாசலிலிருந்து விலகியிருக்கட்டும்'' என்று சொன்னதாக ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.71

பகுதி 50

'அல்கபாஸ்' அது 'மிஸ்வாக்' மரத்தின் பழமாகும்.

5453. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் 'மர்ருழ் ழஹ்ரான்' எனுமிடத்தில் ('கபாஸ்' எனும்) மிஸ்வாக் மரத்தின் பழத்தைப் பறித்துக் கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இதில் கறுப்பானதைப் பறியுங்கள்; ஏனெனில், அதுதான் மிகவும் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்கள். அப்போது 'தாங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?' என்று கேட்கப்பட்டது. அவர்கள், 'ஆம்! அதை மேய்க்காத இறைத் தூதரும் உண்டா?' என்று கேட்டார்கள்.72

பகுதி 51

உணவு உண்ட பின் வாய் கொப்பளித்தல்.

5454. சுவைத் இப்னு நுஅமான்(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபருக்குப் புறப்பட்டோம். நாங்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரக் கூறினார்கள். அவர்களிடம் மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் (அனைவரும்) உண்டோம். பிறகு நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம்.

5455. சுவைத்(ரலி) கூறினார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் 'ஸஹ்பா' எனுமிடத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரக் கூறினார்கள். மாவு மட்டும்தான் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அவர்களுடன் அதை மென்று உண்டோம். பிறகு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாய் கொப்பளித்தார்கள். நாங்களும் அவர்களுடன் வாய் கொப்பளித்தோம். பிறகு, எங்களுடன் அவர்கள் மஃக்ரிப் தொழுகை தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.

யஹ்யா இப்னு ஸயீத்(ரஹ்) கூறினார்: 'ஸஹ்பா' எனும் அந்த இடம் கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ளது.73

பகுதி 52

விரல்களைக் கைக்குட்டையால் துடைப்பதற்கு முன் அவற்றை நாக்கால் வழித்து உறிஞ்சுவது.

5456. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தம் கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ளவேண்டாம்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 53

கைக்குட்டை(யால் துடைப்பது)

5457. ஸயீத் இப்னு ஹாரிஸ்(ரஹ்) கூறினார்

நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம், 'நெருப்புத் தீண்டிய (சமைத்த) உணவை உண்பதால் (தொழுகைக்காக மீண்டும்) அங்கசுத்தி (உளூ) செய்ய வேண்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'தேவையில்லை. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் அது போன்ற உணவு அரிதாகவே எங்களுக்குக் கிடைத்து வந்தது. அவ்வாறு எங்களுக்கு அது கிடைக்கும்போது எங்கள் முன்கைகள், மேல்கைகள் மற்றும் பாதங்கள் தாம் எங்களின் கைகுட்டைகளாக இருந்தன. பிறகு நாங்கள் தொழுவோம். (நெருப்பால் சமைத்த உணவை உண்டதற்காகப் புதிதாக) அங்கசுத்தி செய்யமாட்டோம்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 54

உணவு உண்ட பின் சொல்ல வேண்டிய பிரார்த்தனை.

5458. அபூ உமாமா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்த பின்) தம் உணவு விரிப்பை எடுக்கும்போது 'அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.)

5459. அபூ உமாமா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் 'உணவு உண்ட பின்' அல்லது 'தம் உணவு விரிப்பை எடுக்கும் போது' 'அல்ஹம்துலில்லாஹி கஅபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்'' என்று கூறுவார்கள். (பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது; மறுக்க முடியாதது ஆகும்.)

சில வேளைகளில், 'ல(க்)கல் ஹம்து ரப்பனா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா'' என்று கூறுவார்கள். (பொருள்: உனக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப் பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க இயலாதது ஆகும்.)

பகுதி 55

பணியாளுடன் உண்பது

5460. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு 'ஒரு பிடி அல்லது இருபிடிகள்' அல்லது 'ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்' உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.74

பகுதி 56

உணவு உண்டுவிட்டு (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறவர் (பசியைப்) பொறுத்துக் கொள்ளும் நோன்பாளியைப் போன்றவராவார்.

இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.75

பகுதி 57

விருந்துக்கு அழைக்கப்படும் ஒருவர் தம்முடன் மற்றவரும் வரலாமா என (அனுமதி) கேட்பது.

அனஸ்(ரலி) கூறினார்:

ஒரு முஸ்லிம் (நல்வழியில் சம்பாதிப்பது குறித்து) சந்தேகம் கொள்ளப்படாதவராக இருந்தால், அவரிடம் நீ செல்லும்போது அவர் (அளிக்கும்) உணவை நீ உண்ணலாம்; அவர் (வழங்கும்) பானத்தை நீ பருகலாம்.

5461. அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) கூறினார்

அபூ ஷுஐப் எனும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவருக்கு இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அபூ ஷுஐப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்கள் தம் தோழர்களுடன் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் வாட்டத்தைக் கண்டார். உடனே இறைச்சிவிற்கும் தம் பணியாளிடம் சென்று, 'ஐந்து பேருக்குப் போதுமான உணவொன்றை எனக்காகத் தயார் செய். நான் அந்த ஐந்து போரில் ஒருவராக நபி(ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்'' என்று கூறினார். உடனே அந்தப் பணியாளர் அவருக்காகச் சிறிய அளவில் ஓர் உணவைத் தயாரித்தார். பிறகு அபூ ஷுஐப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (உணவுண்ண) அழைத்தார்கள். அப்போது நபியவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்தார். எனவே, நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஷுஐபே! ஒருவர் எம்மைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் நினைத்தால் அவருக்கும் (நம்மோடு உணவருந்த) அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரைவிட்டுவிடலாம்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ ஷுஐப்(ரலி), '(அவரைத் திருப்பி அனுப்ப) வேண்டாம். நான் அவருக்கு அனுமதியளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.76

பகுதி 58

இரவு உணவு வைக்கப்பட்டால் அந்த உணவை விடுத்து (தொழுகைக்கு) விரைந்து செல்லவேண்டாம்.

5462. அம்ர் இப்னு உமய்யா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கரத்திலிருந்த ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டு போ(ட்டுச் சாப்பி)டுவதை பார்த்தேன். அப்போது தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் அதையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை.77

5463. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இரவு உணவு உங்களுக்கு முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கத் தொழுகைக்கு 'இகாமத்' சொல்லப்பட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் சொல்லுங்கள்.)

இதைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5464. நாஃபிஉ(ரஹ்) கூறினார்

ஒருமுறை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) இரவு உணவு அருந்தினார்கள். அப்போது (தொழுகையில்) இமாம் ஓதியதை இப்னு உமர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.

5465. நபி(ஸல்) அவர்கள் கூறினார்

தொழுகைக்கு 'இகாமத்' சொல்லப்பட்டுக் கொண்டிருக்க இரவு உணவு வந்துவிட்டால் முதலில் உணவை அருந்துங்கள். (பின்னர் தொழுங்கள்.)

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பில் '(இரவு உணவு வந்துவிட்டால்'' என்பதற்கு பதிலாக) 'இரவு உணவு வைக்கப்பட்டால்'' என்று கூறப்பட்டுள்ளது.78

பகுதி 59

''நீங்கள் உணவருந்திவிட்டால் (உடனே) கலைந்து சென்றுவிடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தொடர்.

5466. அனஸ்(ரலி) கூறினார்

பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் அருளப்பட்ட சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நானே. உபை இப்னு கஅப்(ரலி) என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப் பின் மக்களை வலீமா மணவிருந்துக்காக அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்ற பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறு சிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் கருதித் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போதும் அந்தச் சிலர் அதே இடத்தில் அமர்ந்திருந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி விட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப்(ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்றுவிட்டிருந்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தமக்கும் எனக்குமிடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது.79
Previous Post Next Post