அத்தியாயம் 16 கிரகணங்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 16

கிரகணங்கள்

பகுதி 1

சூரிய கிரகணத்தின்போது தொழுவது.

1040. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஆடையை இழுத்துக் கொண்டு பள்ளிக்குள் நுழைந்தார்கள். நாங்களும் நுழைந்தோம். கிரகணம் விலகும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

1041. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.''

என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

1042. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.''

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.

பகுதி 2

கிரகணத்தின்போது தர்மம் செய்தல்.

1044. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள் தொழுங்கள் தர்மம் செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.

பகுதி 3

கிரகணத் தொழுகைக்கு அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுப்பது.

1045. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ(தொழுகைக்குத் தயாராகுக!) என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

பகுதி 4

கிரகணத்தின்போது இமாம் உரை நிகழ்த்துவது:

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தியதாக ஆயிஷா(ரலி) அஸ்மா(ரலி) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.

1046. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் -முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம்- ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹதிமா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுக்களும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரகணம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ வாழ்விற்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும்போது விரைந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.

நான் உர்வாவிடம் உங்கள் சகோதரர் மதீனாவில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லயே என்று கேட்டேன. அதற்கு அவர், ஆம்! அவர் நபி வழிக்கு மாற்றம் செய்துவிட்டார்' என்று விடையளித்தார் என கஸீர் இப்னு அப்பாஸ் குறிப்பிட்டார்.

பகுதி 5

சந்திர கிரகணத்திற்குப் பயன்படுத்தும் வார்த்தையைச் சூரிய கிரகணத்திற்கும் பயன் படுத்தலாமா?

1047. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். நின்று தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி ஸமில்லாஹு லிமன்ஹமிதா என்றார்கள். எழுந்து முன்போன்றே நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ஓதினார்கள். இது முன்பு ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முந்தைய ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். அடுத்த ரக்அத்களிலும் இது போன்றே செய்தார்கள். சூரிய கிரகணம் விலகியபோது ஸலாம் கொடுத்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'சூரியன் சந்திரன் ஆகிய இரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.

(குறிப்பு: திருக்குர்ஆன் (திருக்குர்ஆன் 75:08) என்ற) வசனத்தில் சந்திர கிரகணத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையை இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்கள்.)

பகுதி 6

கிரகணத்தின் மூலம் மனிதர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான் என்ற நபிமொழி.

1048. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

''சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அதன் மூலம் அல்லாஹ் தன்னுடைய அடியார்களை எச்சரிக்கிறான்'.

என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 7

கிரகணத்தின்போது கப்ருடைய வேதனையைவிட்டும் பாதுகாப்புத் தேடுதல்.

1049/1050 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக!' என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கப்ருடைய வேதனையைவிட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார்கள்.

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் (இல்லம்) திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவைவிடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து ஸஜ்தாச் செய்தார்கள். தொழுது முடித்து அல்லாஹ் நாடிய செய்திகளை மக்களுக்குச் சொன்னார்கள். பின்னர் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

பகுதி 8

கிரகணத் தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தல்.

1051. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் அமர்ந்தார்கள். அதன் பிறகு கிரகணம் விலகியது.

அன்று செய்த ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை' என்று ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார்கள்.

பகுதி 9

கிரகணத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது.

இப்னு அப்பாஸ்(ரலி) ஸம்ஸம் கிணற்றிற்கு அருகே மக்களுக்கு ஜமாஅத்தாகக் கிரகணத் தொழுகை நடத்தினார்கள். அவர்களின் மகன் அலி, இப்னு உமர்(ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்துள்ளனர்.

1052. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அப்போது தொழுதார்கள். அத்தொழுகையில் பகரா அத்தியாயம் ஓதுமளவுக்கு நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ஸஜ்தாச் செய்தார்கள். கிரகணம் விலகிய நிலையில் தொழுது முடித்தார்கள். (முடித்ததும்) 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணத்தை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என்று நபி(ஸல) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் எதையோ பிடிக்க முயன்று பிறகு பின் வாங்கியது போல் நாங்கள் கண்டோமே ( அது ஏன்?)' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நான் சொர்க்கத்தைப் பார்த்தேன். அதன் ஒரு குலையைப் பிடிக்க முயன்றேன். அதை நான் பிடித்திருந்தால் இந்த உலகம் உள்ளளவும் நீங்கள் அதை உண்பீர்கள். மேலும் நரகத்தையும் கண்டேன். அதை விட மோசமான காட்சியை ஒருபோதும் நான் கண்டதில்லை. மேலும் நரகவாசிகளில் பெண்களையே அதிகமாகக் கண்டேன்' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏன்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பெண்கள் நிராகரிப்பதன் காரணத்தினால்' என்று விடையளித்தனர். 'அல்லாஹ்வையோ நிராகரிக்கிறார்கள்' என்று கேட்கப்பட்டதற்குக் 'கணவனை நிராகரிக்கிறார்கள் காலமெல்லாம் ஒருத்திக்கு நீ உதவிகள் செய்து உன்னிடம் ஏதேனும் ஒரு குறையைக் கண்டால் உன்னிடம் எந்த நன்மையையும் நான் காணவில்லை என்று கூறி விடுவாள்' என்று விடையளித்தார்கள்.

பகுதி 10

கிரகணத் தொழுகையை ஆண்களுடன் பெண்களும் சேர்ந்து தொழுவது

1053. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு சூரிய கிரகணத்தின்போது ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். 'ஆம்' என்பது போல் சைகை செய்தார்கள். எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு 'நான் இதுவரை காணாத அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன் செர்க்கம், நரகம் உட்பட, மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் சோதனை போல் அல்லது அதுற்கு நெருக்கமான அளவுக்கு நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் ஒருவரிடம் வானவர் வந்து 'இம்மனிதரைப் பற்றி உம்முடைய முடிவு என்ன? என்று கேட்பார். நம்பிக்கையாளர் உறுதியுடனிருந்தவர் 'அவர்கள் முஹம்மது நபியாவார்கள். எங்களிடம் தெளிவான மார்ககத்தையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று, நம்பிப் பின் பற்றினோம்' என்று கூறுவார். அவரிடம், நல்லவராக நீர் உறங்குவீராக! நிர் நம்பிக்கையாளராக இருந்ததை நாம் நிச்சயமாக அறிவோம்' என்று கூறப்படும். நயவஞ்சகர் சந்தேகத்திலிருந்தவர் (இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் போது) 'மக்கள் எதையோ சொன்னார்கள் நானும் சொன்னேன். எனக்கு எதுவும் தெரியாது' என்று விடையளிப்பார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பகுதி 11

சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்வது விரும்பத்தக்கது.

1054. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

பகுதி 12

கிரகணத் தொழுகையைப் பள்ளியில் தொழுவது:

1055 / 1056 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் 'கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக! என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'கப்ருடைய வேதனையைவிட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்றார்கள்.

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் இல்லம் திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. ஸஜ்தாச் செய்தார்கள். அது முதல் ஸஜ்தாவை விடக் குறைவானதாக இருந்தது. தொழுது முடித்து அல்லாஹ் நாடிய செய்திகளை மக்களுக்குச் சொன்னார்கள். பின்னர் கப்ருடைய வேதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 

பகுதி 13

எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை.

இது பற்றி அபூ பக்ரா(ரலி) மூகீரா(ரலி), அபூ மூஸா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

1057. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

''சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. அவ்விரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எனவே கிரகணத்தைக் காணும்போது நீங்கள் தொழுங்கள்.''

என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்றிறார்கள்.

1058. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மீண்டும் நீண்ட நேரம் ஓதினார்கள். இது முதலில் ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது. பிறகு மீண்டும் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு தலையை உயர்த்தி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். பின்னர் எழுந்து இரண்டாம் ரக்அத்திலும் இவ்வாறே செய்தார்கள். பின்னர் எழுநது (மக்களை நோக்கி) 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. அவ்விரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவற்றைத் தன்னுடைய அடியார்களுக்கு அல்லாஹ் காட்டுகிறான். எனவே கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு நீங்கள் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

பகுதி 14

கிரகணத்தின்போது இறைவனை நினைவு கூர்தல்.

1059. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

பகுதி 15

கிரகணத்தின்போது பிரார்த்தித்தல்

நபி(ஸல்) அவர்கள் வழியாக ஆயிஷா(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகியோர் இது குறித்து அறிவித்துள்ளனர்.

1060. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.

இப்ராஹீம்(ரலி) மரணித்த நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.

'இப்ராஹீமின் மரணத்திற்காகக் கிரகணம் ஏற்பட்டது' என்று மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும் வரை தொழுங்கள்' என்று கூறினார்கள்.

பகுதி 16

கிரகணத் தொழுகையின் சொற்பொழிவில் 'அம்மா பஃது' என்று கூறுவது.

1061. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

கிரகணம் விலகியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்து உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டு 'அம்மாபஃது' என்றார்கள்.

பகுதி 17

சந்திர கிரகணத்தின் போதும் தொழுதல்

1062. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

1063. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையை இழுத்தவர்களாகப் பள்ளிக்குச் சென்றார்கள். மக்களும் அவர்களை நோக்கி விரைந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள். கிரகணம் விலகியதும் 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணம் பிடித்தால் அது விலகும்வரை தொழுங்கள் பிரார்த்தியுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களின் மகன் மரணித்தபோது மக்கள் பேசியதற்கு மறுப்பாகவே இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

பகுதி 18

கிரகணத் தொழுகையில் முதல் ருகூவை நீட்டல்.

1064. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுச் செய்து கிரகணத் தொழுகையை மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் முதல் ருகூவை நீண்ட நேரமும் அதற்கடுத்த ருகூவை அதைவிடக் குறைந்த நேரமும் செய்தார்கள்.

பகுதி 19

கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுதல்.

1065. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் 'ஸமி அல்லாஹு லிமன் ஹமிதா, ரப்பனா வ லகல் ஹம்து' என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

1066. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது தொழுகைக்குரிய தயாராகுங்கள்' என்று அழைப்பதற்காக ஒருவரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். (மக்கள் கூடியதும்) முன்னே சென்று இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்து தொழுகை நடத்தினார்கள்.

உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் மதீனாவில் கிரகணத் தொழுகை தொழும்போது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத்கள் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்ய வில்லையே என உர்வாவிடம் கேட்டேன். அதற்கவர் 'ஆம்' அவர் நபிவழிக்கு மாறுசெய்துவிட்டார்' என்று கூறினார் என ஸுஹ்ரி குறிப்பிட்டார்.
Previous Post Next Post