அத்தியாயம் 86 குற்றவியல் தண்டனைகள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 86

குற்றவியல் தண்டனைகள்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி

தண்டனைக்குரிய குற்றங்கள் பற்றிய எச்சரிக்கை 2

பகுதி 1

விபச்சாரமும் குடியும்

(இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என) இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

ஒருவர் விபசாரம் புரியும்போது, இறை நம்பிக்கையின் (ஈமான்) ஒளி அவரிடமிருந்து அகற்றப்படுகிறது.3

6772 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (மது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான். (மக்களின் மதிப்புமிக்க) செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கக் கொளளையடிப்பவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்கமாட்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அதில் கொள்ளையடிப்பது பற்றிக் கூறப்படவில்லை.

பகுதி 2

மது அருந்துபவனை அடிப்பது குறித்து வந்துள்ளவை.5

6773. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாகப் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி(ஸல) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் வழங்க உத்தரவிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 3

வீட்டுக்குள்ளேயே தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவது.

6774 உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

குடி போதையிலிருந்து 'நுஐமான்' என்பவர், அல்லது 'அவரின் புதல்வர்' நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்களும் (காலணியாலும் பேரீச்ச மட்டையாலும்) அவரை அடித்தார்கள். அவரைக் காலணியால் அடித்தவர்களில் நானும் ஒருவனாவேன்.6

பகுதி 4

பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் (குடிகாரரை) அடித்தல்.

6775 உக்பா இப்னு அல்ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்.

போதையிலிருந்து 'நுஐமான்' என்பவர், அல்லது 'அவரின் புதல்வர்' நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் (மிகவும்) வேதனைப்பட்டார்கள். மேலும், அவரை அடிக்கும்படி வீட்டிலிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனவே, அவர்கள் பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அவரை அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.

6776 அனஸ்(ரலி) அறிவித்தார்.

மது அருந்திய குற்றத்திற்குத் தண்டனையாக பேரீச்ச மட்டையாலும் காலணியாலும் அடித்திடும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் ஆட்சிக் காலத்தில்) நாற்பது சாட்டையடிகள் கொடுத்(திட உத்தரவு பிறப்பித்)தார்கள்.

6777. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மது அருந்திய ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது அவர்கள் 'இவரை அடியுங்கள்'' என்றார்கள். எங்களில் சிலர் கையால் அடித்தனர். சிலர் காலணியால் அடித்தனர். இன்னும் சிலர் (முறுக்கப்பட்ட) தம் துணியால் அடித்தனர். (தண்டனை முடிந்து அவர்) திரும்பியபோது மக்களில் சிலர், அல்லாஹ் உம்மைக் கேவலப்படுத்துவானாக!'' என்று கூறி (சாபமிட்ட)னர். நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு கூறி, இவருக்கெதிராக ஷைத்தானுக்கு ஒத்தாசை செய்யாதீர்கள்'' என்றார்கள்.

6778 அலீபின் அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

நான் தண்டனை நிறைவேற்றியதால் எவரேனும் இறந்தால் (அதற்காக) நான் கவலை அடையப் போவதில்லை; குடிகாரரைத் தவிர! ஏனெனில், (தண்டனை வழங்கப்பட்டதால்) குடிகாரர் இறந்தால் அவருக்காக நான் உயிரீட்டுத் தொகை வழங்கிடுவேன். இதற்குக் காரணம், (மது அருந்தியவனுக்குத் தண்டனையாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குறிப்பிட்ட எதையும்) வழிமுறையாக்கவில்லை.

6779 சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும், உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம் மது அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள் கையாலும் காலணியாலும் மேலங்கியாலும் அடிப்போம்.

உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) நாற்பது சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். (மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.

பகுதி 5

குடிகாரணை சபிப்பது வெறுக்கப்பட்டதாகும். மேலும், அவன் மார்க்கத்திலிருந்து வெளியேறியவன் அல்லன்.

6780 உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார். அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டு வரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும்! இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.

6781 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

போதையிலிருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பியபோது ஒருவர் (அவரைப் பார்த்து), 'அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும்'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்கள் சகோதருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள்'' என்றார்கள்.

பகுதி 6

திருடன் திருடுகிறபோது...

6782 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரிகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.7

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 7

திருடனைப் பெயர் குறிப்பிடாமல் (பொதுவாக) சபித்தல்.8

6783 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது ஏற்படட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக்கவசத்தைத் திருடுகிறான்; அதனால் அவனுடைய கை வெட்டப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதனாலும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

'தலைக்கவசம்' என்பது இரும்பாலான தலைக்கவசத்தையும் 'கயிறு' என்பது ஒரு சில திர்ஹம்கள் (வெள்ளிக்காசுகள்) பெறுமானமுள்ள கயிற்றையும் குறிக்கும் என்று (இதன் அறிவிப்பாளர்கள்) கருதுகிறார்கள்.

பகுதி 8

தண்டனைகள் (குற்றங்களுக்கான) பரிகாரமாகும்.

6784 உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தோம். அப்போது அவர்கள், 'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; விபசாரம் செய்வதில்லை என்று என்னிடம் உறுதிமொழி கூறுங்கள்'' என்று கூறி, இது தொடர்பான (திருக்குர்ஆன் 60:12 வது) வசனத்தை முழுவதும் ஓதினார்கள். மேலும், இந்த உறுதிமொழியை உங்களில் நிறைவேற்றுகிறவருக்குரிய பிரதிபலன் இறைவனிடம் உண்டு. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையேனும் ஒருவர் செய்து அதற்காக அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையேனும் ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் (அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்.) அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்'' என்றார்கள்.9

பகுதி 9

ஓர் இறைநம்பிக்கையாளர் குற்றவியல் தண்டனைக்காகவோ (மனித) உரிமை (மீறலு)க்காவோ தவிர, (வேறு எந்தக் காரணங்களுக்காகவும் வேதனை அனுபவிப்பதிலிருந்து) காக்கப்படவேண்டும்.

6785 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (ஆற்றிய உரையில்), 'மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியும்?' என்று கேட்டார்கள். மக்கள், 'இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்'' என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) நபி(ஸல்) அவர்கள், 'மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இதோ இந்த ஊர் '(மக்கா') தான்'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். மக்கள், 'இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள் தான்'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'உங்களுடைய இந்த நகரத்தில் உங்களுடைய இந்த மாதத்தில் உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்'' என்று கூறிவிட்டு, 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?' என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், 'ஆம்'' என்று நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர். பிறகு, 'உங்களுக்கு அழிவுதான்'' அல்லது 'உங்களுக்குக் கேடுதான்'! எனக்குப் பின்னால் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் இறைமறுப்பாளர்கள் நீங்கள் மாறிவிடவேண்டாம்'' என்றார்கள்.10

பகுதி 10

குற்றவியல் தண்டனைகளை நிலை நாட்டுவதும், இறைவனின் புனிதச் சட்டங்கள் சீர்குலைக்கப்படும்போது நடவடிக்கை எடுப்பதும்.

6786 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(பொதுவாக) இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் படி நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பெற்றால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே -அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் எப்போதும் தேர்வு செய்வார்கள். அது பாவமான விஷயமாயிருந்தால் அதிலிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென என்று எவரையும் எப்போதும் அவர்கள் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக) அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர.11

பகுதி 11

உயர்ந்தவர் தாழ்ந்தவர் அனைவர் மீதும் தண்டனையை நடைமுறைப்படுததுவது.

6787 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

('மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த) ஒரு பெண் (திருடியபோது) தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பது) தொடர்பாக உசாமா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்கள் தாழ்ந்தவர்களின் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். உயர்ந்தவர்களை விட்டு விடுவார்கள். எனவேதான் அவர்கள் அழிந்துபோயினர். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (என் புதல்வி) ஃபாத்திமாவே இ(ந்தக் குற்றத்)தைச் செய்திருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்றார்கள்.12

பகுதி 12

ஆட்சியாளரிடம் வழக்கு சென்றுவிட்டால் தண்டனை(யைக் கைவிடுவது) தொடர்பாகப் பரிந்துரைப்பது வெறுக்கப்பட்டதாகும்.

6788 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

'மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்?' என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்?' என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:

மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்.

பகுதி 13

''திருடிய ஆண், திருடிய பெண் ஆகியோரின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 05:38 வது) வசனத் தொடரும்,13 எந்த அளவு திருடினால் (கை) வெட்ட வேண்டும்? என்பது பற்றியும்.14

அலீ(ரலி) அவர்கள் (திருட்டுக் குற்றத்திற்காக) முன் கையை (மணிக்கட்டுவரை) துண்டித்தார்கள்.15

திருடிவிட்ட ஒரு பெண்ணின் (வலக் கரத்தைவிட்டுவிட்டு) இடக்கரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து கத்தாதா(ரஹ்) அவர்கள் 'அவ்வளவுதான். (இனி வலக்கரம் துண்டிக்கப்படாது)'' என்று கூறினார்கள்.

6789 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

6790 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6791 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கால் தீனாருக்காக (பொற் காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப்படும்.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

6792 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தின்' விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

6793 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) 'தோல் கேடயம்' அல்லது 'தோல் கவசத்தை 'விடத் தாழ்ந்த பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புள்ளதாகும்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் முர்சலாக (தொடர் முறிந்ததாக) வந்துள்ளது.

6794 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் 'தோல் கவசம்' அல்லது 'தோல் கேடயத்தின்' விலையை விடத் தாழ்ந்த (விலையுள்ள) பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையதாகும்.

6795 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதில்) 'கீமத்துஹு' என அறிவித்தார்கள் என்று லைஸ்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இரண்டுக்கும் பொருள்: விலை)

6796. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

6797 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

6798 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காகத் திருடனின் கையைத் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதிலாக) 'கீமத்துஹு' (அதன் விலை) என அறிவித்தார்கள்.

6799 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.16

பகுதி 14

திருடனின் பாவமன்னிப்புக் கோரிக்கை17

6800 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(திருட்டுக் குற்றம் புரிந்துவிட்ட 'மக்ஸூமி' குலத்தைச் சேர்ந்த ஃபாத்திமா பின்த் அஸ்வத் என்ற) ஒரு பெண்ணின் கையை நபி(ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அதன் பிறகு, அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். அப்போது நான் அவளுடைய தேவையை நபி(ஸல்) அவர்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வேன். அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி(த் திருந்தி)யிருந்தாள்.18

6801 உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

நான் (பத்துப் பேருக்கும் குறைவான) ஒரு குழுவினருடன் (சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணை கற்பிப்பதில்லை; திருடுவதில்லை; குழந்தைகளைக் கொல்வதில்லை; உங்களிடையே அவதூறு கற்பித்து அதைப் பரப்புவதில்லை; எந்த நற்செயலிலும் எனக்கு மாறு செய்வதில்லை'' என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்குகிறேன். உங்களில் (இவற்றை) நிறைவேற்றுகிறவரின் பிரதிபலன் அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களான இ)வற்றில் எதையேனும் ஒருவர் செய்து, (அதற்காக) அவர் இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அதுவே அவருக்குப் பரிகாரமாகவும் அவரைத் தூய்மையாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். (அவற்றில் எதையேனும் ஒருவர் செய்து பின்னர்) அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுவார்; அல்லாஹ் நாடினால் அவரைத் தண்டிப்பான்: அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று கூறினார்கள்.19

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

கை வெட்டப்பட்டதற்குப் பின் திருடன் பாவமன்னிப்புக்கோரி மனம் திருந்திவிட்டால் அவனுடைய சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறே குற்றவியல் தண்டனைகள் பெற்ற அனைவரும்; அதைச் செய்தவர்கள் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவர்களின் சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்.

பகுதி 15

இறைமறுப்பாளர்கள் மற்றும் மதம் மாறியோரில் வன்முறையாளர்கள்.

அல்லாஹ் கூறினான்:

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராகப் போர் தொடுத்து, பூமியில் கலகம் விளைவித்துக் கொண்டிருப்போரின் தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும். அல்லது தூக்கிலடப்படவேண்டும். அல்லது மாறுகை, மாறுகால் வெட்டப்படவேண்டும். அல்லது நாடு கடத்தப்படவேண்டும். (திருக்குர்ஆன் 05:33)20

6802 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

'உக்ல்' குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்பரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரைவிட்டுவிடச் செய்தார்கள்.21

பகுதி 16

மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோரின் காயங்களுக்கு மருந்திடாமல் அவர்கள் மாண்டுபோகும் வரை நபி(ஸல்) அவர்கள் அப்படியேவிட்டுவிட்டார்கள்.

6803 அனஸ்(ரலி) அறிவித்தார்.

உரைனா குலத்தாரின் கை கால்களை நபி(ஸல்) அவர்கள் வெட்டச் செய்தார்கள். அவர்கள் இறக்கும் வரை அவர்களின் காயங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் மருந்திடவில்லை.22

பகுதி 17

மதம் மாறி வன்முறையில் ஈடுபட்டோருக்கு அவர்கள் சாகும்வரை தண்ணீர் தரப்படவில்லை.

6804 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு) உக்ல் குலத்தாரில் (பத்துக்கும் குறைவான) சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் ஏழைகள் மற்றும் அகதிகளின் சாவடியாக அமைந்திருந்த) திண்ணையில் தங்கி இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு மதீனாவின் தட்பவெப்பநிலை ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்கள் 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரின் (பொறுப்பிலிருக்கும்) ஒட்டகங்களை நீங்கள் சென்றடைவதைத் தவிர (வேறு வழி இருப்பதாக) நான் காணவில்லை'' என்று கூறினார்கள். எனவே, அவர்கள் அந்த ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்தி நலமும் உடல் வளமும் பெற்றனர். பிறகு (அந்த ஒட்டகங்களின்) மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு ஒட்டக மந்தையை ஓட்டிச் சென்றுவிட்டனர். அப்போது இரைந்து சப்தமிட்டபடி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து நடந்ததைத் தெரிவித்)தார். உடனே நபி(ஸல்) அவர்கள் 'உக்ல்' குலத்தாரைப் பின்தொடர்ந்து சென்று அவர்களைப் பிடித்து வருவதற்காகச் சிலரை அனுப்பி வைத்தார்கள். பகல் பொழுது உச்சிக்கு வருவதற்குள் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பிடித்துக் கொண்டுவரப்பட்டார்கள். அப்போது ஆணிகளை பழுக்கக் காய்ச்சி கண் இமைகளின் ஓரங்களில் சூடிடுமாறு பணித்தார்கள். அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டச் செய்து அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அப்படியேவிட்டுவிடச் செய்தார்கள். பிறகு, மதீனாவின் புறநகாரிலிருந்த 'ஹர்ரா'ப் பகுதியில் அவர்கள் போடப்பட்டார்கள். அவர்கள் குடிப்பதற்கு நீர் கேட்டுக் கொண்டிருந்தனர். இறக்கும்வரை அவர்களுக்குக் குடிப்பதற்கு நீர் தரப்படவில்லை.

(அறிவிப்பாளர்) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்முறையில் ஈடுபட்டார்கள்.

பகுதி 18

வன்முறையாளர்களின் கண்களில் நபி(ஸல்) அவர்கள் சூடிடச் செய்தது.

6805 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

'உக்ல்' அல்லது 'உரைனா' (குலத்தாரில் பத்துப்பேருக்கும் குறைவான) சிலர் மதீனா வந்தனர். அப்போது (அவர்கள் வயிற்று உபாதையால் பாதிக்கப்பட்டனர். எனவே) நபி(ஸல்) அவர்கள் பால் தரும் ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே அவர்கள் (சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும்) அருந்தி நிவாரணம் பெற்றனர். பிறகு அவர்கள் மேய்ப்பரைக் கொலை செய்துவிட்டு அந்த ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். அதிகாலையில் இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களைத் தேடி ஆட்களை அனுப்பிவைத்தார்கள். சூரியன் உச்சியை அடைவதற்குள் அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார்கள். அப்போது அவர்களின் கை கால்களைத் தரித்து அவர்களின் கண்களில் சூடிடுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு, அவர்கள் ஹர்ராப் பகுதியில் எறியப்பட்டனர். அவர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டும் வழங்கப்படவில்லை.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ கிலாபா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த (உக்ல்) குலத்தார் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; இறைநம்பிக்கை கொண்ட பின் நிராகரித்துவிட்டார்கள். அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கும் எதிராக வன்செயல்களில் ஈடுபட்டார்கள். (எனவேதான் கொடுஞ் செயல் புரிந்த அவர்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது.)

பகுதி 19

மானக்கேடான செயல்களைக் கைவிட்டவரின் சிறப்பு.23

6806 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் தன்னுடைய (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்:

1. நீதிமிக்க ஆட்சியாளர்.

2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.

3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில்) கண்ணீர் சிந்திய மனிதன்.

4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்.

5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்.

6. அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்' என்று கூறியவர்.

7. தம் இடக் கரம் செய்த தர்மத்தை வலக் கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 24

6807. 'தம் இரண்டு கால்களுக்கிடையே உள்ள(மர்ம உறுப்பி)ற்கும், தம் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ள(நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.25

பகுதி 20

விபசாரம் புரிவோருக்கு நேரும் பாவம்

அல்லாஹ் கூறினான்:

(இறைவனின் உண்மையான அடியார்கள்) விபசாரம் செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 25:68)

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். திண்ணமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (திருக்குர்ஆன் 17:32)

6808 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும் மது (அதிகமாக) அருந்தப்படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவதும் 'மறுமை நாளில் அடையாளங்களில் உள்ளதாகும்; அல்லது 'இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது'.

6809 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அடியான் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்து கொண்டு விபசாரம் புரியமாட்டான். அவன் திருடுகிறபோது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு திருடமாட்டான். மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு மது அருந்தமாட்டான். மேலும் அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்துகொண்டு கொலை செய்யமாட்டான்.26

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இக்ரிமா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

''இத்தகைய அடியானிடமிருந்து எவ்வாறு இறைநம்பிக்கை கழற்றப்படும்?' என்று நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'இவ்வாறுதான்' என்று தம் விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காட்டிவிட்டு அவற்றை(ப் பிரித்து) வெளியிலெடுத்தார்கள். 'அவன் மனம் திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டால் அந்த இறைநம்பிக்கை அவனிடம் திரும்பவும் வந்து விடுகிறது'' என்று கூறியவாறு தம் விரல்களை மீண்டும் கோத்துக் காட்டினார்கள்.

6810 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்'' என்று சொன்னார்கள். 'பிறகு, எது (பெரிய பாவம்)?' என்று கேட்டேன். அவர்கள், 'உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்'' என்றார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். 'உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்'' என்றார்கள்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் அம்ர் இப்னு அலீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் இப்னு மஹ்தீ(ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுக்கும் அபூ வாயில்(ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூ மைசரா(ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரை விட்டுவிடுக! விட்டுவிடுக! என்று கூறினார்கள்.

பகுதி 21

திருமணமானவ(ர் விபசாரம் புரிந்தால் அவ)ருக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்கி) வழங்குதல். 27

ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவன் தன் சகோதரியுடன் தவறான உறவுகொண்டுவிட்டால் அவனுக்கு (அந்நிய பெண்களுடன்) விபசாரம் புரிந்தவனுக்குரிய தண்டனையே வழங்கப்படும்.28

6812 ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(விபசாரம் புரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு மக்கள் கூடும்) வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) அன்று கல்லெறி தண்டனையை நிறைவேற்றியபோது அலீ(ரலி) அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைப்படியே நான் இவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினேன்'' என்றார்கள்.29

6813 அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம்' (வழங்கினார்கள்) என்று பதிலளித்தார்கள். நான், '(குர்ஆனின் 24 வது அத்தியாயமான) 'அந்நூர்' அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?' என்று கேட்டேன். அவர்கள் 'எனக்குத் தெரியாது'' என்றார்கள்.30

6814 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

'பனூ அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த (மாஇஸ் இப்னு மாலிக் என்றழைக்கப்பட்ட) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் விபசாரம் புரிந்து விட்டேன்'' என்றார். மேலும், நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் (ஒப்புதல் வாக்குமூலம்) அளித்தார். எனவே, அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவு பிறப்பித்தார்கள். அவர் திருமணமானவராக இருந்தார்.

பகுதி 22

(விபசாரம் புரிந்துவிட்ட) பைத்தியக்காரன் மற்றும் பைத்தியக்காரிக்கு (அவர்கள் திருமணமானவர்களாக இருந்தாலும்) கல்லெறி தண்டனை வழங்கப்படாது.

உமர்(ரலி) அவர்களிடம் அலீ(ரலி) அவர்கள், 'பைத்தியக்காரன் தெளிவடையும் வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும் வரையிலும் சிறுவன் பருவ வயதை அடையும் வரையிலும் தூங்குபவன் விழிக்கும் வரையிலும் அவர்களிடமிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது (-தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது) என்று தங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.31

6815 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் திரும்பத் திரும்ப அதையே நான்கு முறை சொல்லித் தமக்கெதிராகத் தாமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை அழைத்து நபி(ஸல்) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், '(எனக்குப் பைத்தியம்) இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'உமக்குத் திருமணமாகிவிட்டதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (திருமணமாகிவிட்டது)'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் கொண்டு சென்று கல்லெறி தண்டனை நிறைவேற்றுங்கள்'' என்றார்கள்.32

6816 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (மதீனாவில் பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். கற்கள் அவரின் மீது விழுந்தபோது (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோட ஆரம்பித்தார். அவரை நாங்கள் (விரட்டிச் சென்று பாறைகள் நிறைந்த) அல்ஹர்ராப் பகுதியில் பிடித்து அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.33

பகுதி 23

விபசாரம் செய்வதனுக்கு இழப்புதான்.

6817 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களும் ஸம்ஆவின் புதல்வரும் (ஓர் அடிமைப் பெண்ணின் மகன் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாகச்) சர்ச்சையிட்டுக் கொண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அப்து இப்னு ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன். தாய் யாருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை சொந்தமாகும்'' என்று கூறிவிட்டு, (தம் துணைவியாரான சவ்தா அவர்களிடம்) 'சவ்தா! ஸம்ஆவின் அடிமைப் பெண்ணின் மகனைவிட்டு நீ உன்னைத் திரையிட்டு மறைத்துக்கொள்!'' என்றார்கள்.

(அபூ அப்தில்லாஹ் புகாரியாகிய நான் கூறுகிறேன்:) லைஸ் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா(ரஹ்) அவர்கள், 'விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்'' என்பதையும் அதிகப்படியாக எமக்கு அறிவித்தார்கள்.34

6818 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு தாய் எவருடைய அதிகாரத்தில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தாளோ அவருக்கே குழந்தை உரியது. விபசாரம் புரிந்தவனுக்கு இழப்பு (தண்டனை)தான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 24

(மஸ்ஜிதுந் நபவீ அருகிலிருந்த) 'பலாத்' எனுமிடத்தில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்.36

6819 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்'' என்றார்கள். (அப்போது அருகில் இருந்த முன்னாள் யூத அறிஞரான) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'தவ்ராத்தைக் கொண்டுவரும்படி அவர்களிடம் கூறுங்கள், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அவ்வாறே 'தவ்ராத்' கொண்டு வரப்பட்டபோது, யூதர்களில் ஒருவர் (அதில் பதிவாயிருந்த) கல்லெறி தண்டனை ('ரஜ்கி') பற்றிய வசனத்தின் மீது தம் கையை வைத்(து அந்த வசனத்தை 'யாருக்கும் தெரியாதபடி மறைத்)தார். மேலும், அதற்கு முன் பின்னிருந்த வசனங்களை வாசித்துக் காட்டலானார்.

அப்போது அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!'' என்றார்கள். அவர் தம் கையை எடுத்தபோது, அதில் கல்லெறி தண்டனை பற்றிய வசனம் அவரின் கைக்குக் கீழே இருந்தது. எனவே, (அவர்கள் இருவருக்கும் தவ்ராத் வேதத்தில் உள்ளபடி) கல்லெறி தண்டனை நிறைவேற்றுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது அவர்கள் இருவருக்கம் 'பலாத்' எனும் இடத்தில் வைத்து கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. (அவர்களின் மீது கல் விழுந்தபோது) அந்த யூதர் அவளின் மீது (கல்படாமல் தடுப்பதற்காகக்) கவிழ்ந்து படுத்துக் கொண்டதை பார்த்தேன்.

பகுதி 25

(பெருநாள்) தொழுகைத் திடலில் கல்லெறி தண்டனை நிறைவேற்றுதல்.

6820 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பனூஅஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் (மாஇஸ் இப்னு மாலிக்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுத் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம் நபி(ஸல) அவர்கள், 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். எனவே நபி(ஸல்) அவர்கள், அவருக்கத் தண்டனை வழங்குமாறு உத்தரவிட பெருநாள் தொழுகைத் திடல் (முஸல்லா) அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்.

அறிவிப்பாளர்களான யூனுஸ் இப்னு யஸீத்(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்) ஆகியோர் 'அவருக்கு (ஜனாஸா) தொழவைத்தார்கள்'' என்பதைக் கூறவில்லை.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய என்) இடம் 'நபி(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழவைத்தார்கள் என்ற தகவல் சரியானதா?' என வினவப்பட்டது. '(ஆம்) அறிவிப்பாளர் மஅமர்(ரஹ்) அவர்கள் அவ்வாறே அறிவித்தார்கள்'' என்று பதிலளித்தேன். 'மஅமர் அல்லாதோர் அவ்வாறு அறிவித்துள்ளனரா?' என்று கேட்கப்பட்டது. 'இல்லை' என்று கூறினேன்.

பகுதி 26

குற்றவியல் தண்டனைக்குரியதல்லாத பாவம் ஒன்றை ஒருவர் செய்துவிட்டு அது குறித்து (ஆட்சித்) தலைவரிடம் தெரிவித்தால்...?

அவர் பாவமன்னிப்புக் கோரி மனம் திருந்திய பின்னால் அவர் ஆட்சித் தலைவரிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டுவந்தால் அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அவர்கள், 'இத்தகைய மனிதருக்கு நபி(ஸல்) அவர்கள் தண்டனை வழங்கவில்லை'' என்றார்கள்.

இப்னு ஜுரைஜ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ரமளான் மாதத்தில் (பகல் நேரத்தில்) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்ட ஒரு மனிதரை நபி(ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. மேலும், (இஹ்ராம் கட்டிய நிலையில்) மான் வேட்டையாடிய (கபீஸா என்ப)வரை உமர்(ரலி) அவர்கள் தண்டிக்கவில்லை.

மேலும், இந்தத் தலைப்பை ஒட்டி நபி(ஸல்) அவர்களிடமிருந்து இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.37

6821. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டு (இது குறித்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இதற்குப் பரிகாரமாக விடுதலை செய்ய உன்னிடம் ஓர் அடிமை உண்டா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இரண்டு மாதங்கள் உம்மால் நோன்பு நோற்க முடியுமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை (இயலாது)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!'' என்றார்கள்.38

6822 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ரமளான் மாதத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் கரிந்து போனேன்'' என்றார். நபி(ஸல) அவர்கள், 'எதனால் அப்படி?' என்று கேட்டார்கள். அவர், 'நான் ரமளான் மாதத்தில் (நோன்பு வைத்துக்கொண்டு) என் மனைவியைப் புணந்துவிட்டேன்'' என்றார். அவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள், 'தர்மம் செய்!'' என்றார்கள். அவர், '(தர்மம் செய்ய) என்னிடம் ஏதுமில்லை'' என்று கூறிவிட்டு, (அப்படியே) அமர்ந்துகொண்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் கழுதையை ஓட்டிக்கொண்டு வந்தார். அவரிடம் உணவு இருந்தது.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு காசிம்(ரஹ்) அவர்கள் 'நபி(ஸல்) அவர்களிடம் அவர் கொண்டு வந்த உணவு என்ன? என்பது எனக்குத் தெரியாது'' என்றார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'கரிந்து போனவர் எங்கே?' என்று கேட்டார்கள். அவர், 'இதோ நான் இங்குதான் இருக்கிறேன்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக் கொண்டுபோய் தர்மம் செய்!'' என்றார்கள். அவர், 'என்னைவிடத் தேவையானவருக்கா? என் குடும்பத்தாருக்கு உணவே இல்லை'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால், அவர்களுக்கே உண்ணக்கொடு'' என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: முந்தைய ஹதீஸ் இதைவிடத் தெளிவாக உள்ளது. (அதில்) 'உம் வீட்டாருக்கே உண்ணக்கொடு'' என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.39

பகுதி 27

ஒருவர் (தாம் செய்த குற்றத்தைத்) தெளிவாகக் குறிப்பிடாமல் தண்டனையை நிறைவேற்றுமாறு முன்மொழிந்தால், (ஆட்சித்) தலைவர் அவரின் குற்றத்தை (துருவிக் கேட்காமல்) மறைத்திடலாமா?

6823 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருமனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றை செய்துவிட்டேன். எனவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்தபோது அவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்துவிட்டேன். எனவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (தொழுதேன்)'' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவ்வாறாயின் அல்லாஹ் 'உம்முடைய பாவத்தை' அல்லது உமக்குரிய தண்டனையை' மன்னித்துவிட்டான்'' என்றார்கள்.

பகுதி 28

(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம் '(அவளை) நீ தொட்டிருக்கக் கூடும்'' என்றோ, 'அவளை நோக்கி (கண்ணால் அல்லது கையால்) சைகை செய்திருக்கக்கூடும்'' என்றோ (ஆட்சித்) தலைவர் சொல்லாமா?

6824 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், '(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திருக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!'' என்றார்கள். அவர், '(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் 'அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?' என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், 'ஆம்' என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பகுதி 29

(தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பவரிடம் 'உனக்குத் திருமணமாம்விட்டதா?' என்று (ஆட்சித்) தலைவர் கேட்பது.

6825 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது ஒருவர் வந்து அவர்களை அழைத்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்'' என்று தம்மைக் குறித்தே கூறினார். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்த பகுதிக்கு வந்து 'இறைத்தூதர் அவர்களே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்'' என்றார். (மீண்டும்) அவரைவிட்டு நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர் (திரும்பவும்) நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர் (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்கெதிராகத் தாமே நான்கு முறை சாட்சியம் அளித்தபோது அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, 'உமக்குப் பைத்தியமா?' என்று கேட்டார்கள். அவர், 'இல்லை, இறைத்தூதர் அவர்களே!'' என்றார். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், 'உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இவரைக் கொண்டுசென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்'' என்று கூறினார்கள்.40

6826 இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

ஜாபிர்(ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒருவர் (ஜாபிர் கூறினார்கள் எனக்) தெரிவித்தார். அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன். அப்போது அவரை (பெருநாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். அவரின் மீது கல் விழத் தொடங்கியதும். (வலி தாங்காமல்) அவர் வேகமாக குதித்தோடினார். அவரை நாங்கள் (பாறைகள் நிறைந்த) அல்ஹர்ராப் பகுதியில் பிடித்து கல்லெறி தண்டனை நிறைவேற்றினோம்.41

பகுதி 30

விபசார(க் குற்ற)த்தை ஒப்புக்கொள்ளல்

6827, 6828 அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மஸ்ஜிந் நபவீ பள்ளிவாசலில்) இருந்தோம். அப்போது (கிராமவாசி) ஒருவர் எழுந்து, 'அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: தாங்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே எங்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும்'' என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி எழுந்து, '(ஆம்) எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்!'' என்று கூறினார். (பின்னர் அந்தக் கிராமவாசி) 'என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்று கேட்டுக்கொள்ள நபி(ஸல்) அவர்கள், 'பேசு!'' என்றார்கள். அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் சில அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்கி) வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தார்கள்'' என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உன்னிடமே திருப்பித் தரப்படவேண்டும். உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி, 'உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக் கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!'' என்றார்கள். அவ்வாறே உனைஸ் அவர்கள் அவளிடம் செல்ல, அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, அவளுக்கு உனைஸ் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.42

அறிவிப்பாளர் அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள் என்று அவர் கூறவில்லையா?' எனக் கேட்டேன். அவர்கள் 'இது தொடர்பாக எனக்குச் சந்தேகம் உள்ளது. எனவே, சில வேளைகளில் அதை அறிவிக்கிறேன். சில வேளைகளில் மௌனமாகி விடுகிறேன்'' என்று கூறினார்கள்.

6829 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கூறினார்: காலப் போக்கில் மக்களில் சிலர் 'இறை வேதத்தில் கல்லெறி (ரஜ்கி) தண்டனை காணப்படவில்லையே?' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறி விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். அறிந்துகொள்ளுங்கள்: திருமணமான ஒருவர் விபசாரம் புரிந்து, அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது நிச்சயமாகும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'அறிந்து கொள்ளுங்கள்! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள். அவர்களுக்குப் பின் நாங்களும் அதனை நிறைவேற்றினோம்'' (என்றும் உமர்(ரலி) கூறினார்). இவ்வாறுதான் நான் மனனமிட்டுள்ளேன்.

பகுதி 31

விபசாரத்தால் கர்ப்பமுற்ற பெண் முடித்தவளாக இருக்கும்போது கல்லெறி தண்டனை வழங்குதல்.43

6830 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒரு நாள்) நான் 'மினா' பெருவெளியில் அவரின் முகாமில் இருந்து கொண்டிருந்தபோது அவர் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பி வந்தார். இது உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது (ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு) நடந்தது.

(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒருவர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் சென்று, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்து விட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு, 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள் முன் நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப் போகிறேன்'' என்றார்கள். உடனே நான், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோறும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள் முன் நிற்கும்போது அவர்கள்தாம் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல, அதற்கு உரிய பொருள் தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போன போக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் மதீனா சென்று சேரும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பார்'' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்'' என்றார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்து சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களை சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவரின் முட்டுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; அதற்கும் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களிடம், 'உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம் வரை எப்போதுமே) சொல்லியிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்'' என்று கூறினேன். அதற்கு ஸயீத் அவர்கள் 'அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை'' என்று கூறி என்னிடம் மறுத்தார்கள்.

அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மௌனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்'' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)

நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும்.

அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்.

மேலும், உங்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறுகூதாக எனக்குச் செய்தி எட்டியது. '(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது' என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஆம்! அது எப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த்தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்துவிட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூ பக்ர்(ரலி) அவர்களைப் போன்று இல்லை.44 முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின் ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்'' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம்.

அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்'' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)'' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்'' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூசாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது'' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்'' என்று கூறினார்.

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்'' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.

இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்'' என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)'' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்'' என்றார்.

உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)'' என்று கூறினேன்.45 மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்து விடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம்.

ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

பகுதி 32

திருமணமாகாத இருவர் (விபசாரம் புரிந்துவிட்டால்) அவர்களுக்கு (நூறு) சாட்டையடிகளும் நாடுகடத்தலும் தண்டனையாக வழங்கப்படும்.

அல்லாஹ் கூறினான்:

விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் ஆகிய இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி வழங்குங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், உறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்று)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் இறைநம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தார் நேரில்) பார்க்கட்டும்.

விபசாரம் செய்த ஆண் ஒரு விபசாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர வேறு யாரையும் மணமுடிக்க மாட்டான். விபசாரியை, விபசாரம் செய்த ஓர் ஆண், அல்லது இணைவைப்பாளன் தவிர வேறு யாரும் மணமுடிக்கமாட்டர். இறைநம்பிக்கையாளர்களுக்கு இது தடை செய்யப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 24:2,3)

(இந்த வசனத்திலுள்ள) 'இரக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது' என்பதற்கு இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் தண்டனைகளை நிலைநாட்டும் விஷயத்தில் இரக்கம் ஏற்பட்டு விடக் கூடாது' என்று (விளக்கம்) கூறினார்கள்.

6831 ஸைத் இப்னு காலித் அல்ஜுஹைனீ(ரலி) அறிவித்தார்.

மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு நூறு கசையடிகள் கொடுத்து, அவரை ஓராண்டு காலம் நாடு கடத்தவேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட கேட்டுள்ளேன்.46

6832 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களும் நாடு கடத்தும் தண்டனையை நடைமுறைப்படுத்தினார்கள். பிறகு, அதுவே வழிமுறையாக நீடித்தது.47

6833 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்துவிட்டவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நூறு சாட்டையடி) தண்டனைகொடுத்து அவரை ஓராண்டுக் காலம் நாடு கடத்துமாறு தீர்ப்பளித்தார்கள்.

பகுதி 33

பாவங்கள் புரிவோரையும் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலிகளையும் (வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது.48

6834 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், 'அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்!'' என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் இன்னாரை வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் இன்னாரை வெளியேற்றினார்கள்.49

பகுதி 34

ஆட்சித்தலைவர், தாம் இருக்கும் இடத்தில் வெளியே தண்டனையை நிறைவேற்றுமாறு அடுத்தவருக்கு உத்தரவிடுவது.

6835, 6836 அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

கிராமவாசிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) அமர்ந்திருந்தார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள் விவகாரத்தில்) அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து, 'அவர் சொல்வது உண்மைதான், இறைத்தூதர் அவர்களே! அவருக்கு அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளியுங்கள்'' என்றார். (பின்னர் கிராமவாசி,) 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தபோது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (அதற்குத் தண்டனையாக) என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிடவேண்டும் என்று என்னிடம் மக்கள் தெரிவித்தார்கள். எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து அவனைக் காப்பாற்றும் நோக்கில்) அதற்கு பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாக வழங்கப்படவேண்டும் என்று என்னிடம் கூறினர்'' என்றார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்படவேண்டும். உம்முடைய மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகளும் ஓராண்டுக்கு காலம் நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி, 'உனைஸ்! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று (அவள் விபசாரக் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்கு (அங்கேயே) கல்லெறி தண்டனை வழங்குங்கள்'' என்று தீர்ப்புக் கூறினார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் சென்று (குற்றத்தை ஒப்புக்கொண்ட) அவளுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றினார்கள்.50

பகுதி 35

''உங்களில் யாருக்கு இறைநம்பிக்கையுள்ள சுதந்திரமான பெண்களை மணந்துகொள்ள சக்தியில்லையோ, அவர்கள் இறைநம்பிக்கையுள்ள அடிமைப் பெண்களில் தமக்கு உடைமையானவர்களை (மணந்துகொள்ளலாம்;) அல்லாஹ் உங்களின் இறைநம்பிக்கையை நன்கறிவான். உங்களில் சிலர் மற்றச் சிலரிலிருந்து வந்தவர்கள்தாம். எனவே, அவர்களை அவர்களின் உரிமையாளர்களின் அனுமதியின்பேரில் மணந்துகொள்ளுங்கள். அவர்களுக்குரிய மணக்கொடையை முறைப்படி கொடுத்து விடுங்கள். அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும், விபசாரம் செய்யாதவர்களாகவும், கள்ள நட்புக் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். முறைப்படி அவர்கள் திருமணம் செய்த பின் மானக் கேடாக நடந்துகொண்டால், மணமுடித்துக் கொண்ட சுதந்தரமான பெண்களின் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அவர்களுக்கு விதிக்கப்பெறும். தவிர, உங்களில் பாவத்தில் ஈடுபட்டுவிடுவோம் என அஞ்சுகிறவருக்கே இச்சட்டம். எனினும், நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும். இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 04:25 வது) இறைவசனம். 51

பகுதி 36

அடிமைப்பெண் விபசாரம் செய்தால் (சட்டம் என்ன)?

6837, 6838 அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

''ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்தால்... (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்)?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள். மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்டையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்கள், '(அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது முறைக்குப் பிறகா? அல்லது நான்காவது முறைக்குப் பிறகா?' என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.52

பகுதி 37

அடிமைப்பெண் விபசாரம் செய்தால் அவளிடம் கடுமையாக நடந்து கொள்ளலாகாது; அவளை நாடுகடத்தலாகாது.

6839 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஓர் அடிமைப் பெண் விபசாரம் செய்து அது வெளிப்பட்டால், அவளுக்கு (எசமான்) கசையடி வழங்கட்டும்; (அதற்கு மேல் அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். பிறகு, (மறுபடியும்) அவள் விபசாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்; (அவளிடம்) கடுமை காட்ட வேண்டாம். மூன்றாம் முறையும் அவள் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடட்டும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.53

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 38

இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தார் திருமணமான பின் விபசாரம் செய்து ஆட்சித் தலைவர் முன் நிறுத்தப்பட்டால் சட்டம் என்ன?

6840 அபூ இஸ்ஹாக் சுலைமான் அஷ்ஷைபானீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள் என்றார்கள். நான் (குர்ஆனின் 24 வது அத்தியாயமான) 'அந்நூர்' அத்தியாயம் அருளப்படுவதற்கு முன்பா? அல்லது அதற்கு பின்பா (எப்போது கல்லெறி தண்டனை வழங்கினார்கள்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'எனக்குத் தெரியாது'' என்று பதிலளித்தார்கள்.54

இன்னும் சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. சிலருடைய அறிவிப்பில் ('அந்நூர் அத்தியாயம்' என்பதற்கு பதிலாக) 'அல்மாயிதா அத்தியாயம்' என்று இடம் பெற்றுள்ளது. (அந்நூர் அத்தியாயம் எனும்) முதல் அறிவிப்பே சரியானதாகும்.

6841 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்து 'தவ்ராத்' வேதத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபசாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்களுக்குச் சாட்டையடி வழங்கப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.

(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை தழுவிய) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை (ரஜ்கி) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது'' என்றார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் கல்லெறி தண்டனை பற்றிக் கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தார். அவரிடம் அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) அவர்கள், 'உன் கையை எடு!'' என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது.

யூதர்கள், 'இவர் (-அப்துல்லாஹ் இப்னு சலாம்) உண்மையே சொன்னார், முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது'' என்றார்கள். உடனே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கிடுமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண் அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து காப்பதற்காக அவளின் மீது கவிழ்ந்து மறைத்துக் கொள்வதை பார்த்தேன்.55

பகுதி 39

ஒருவர் நீதிபதியிடமும் பொதுமக்களிடமும் தம் மனைவி மீதோ, மற்றவரின் மனைவி மீதோ விபசாரக் குற்றம் சாட்டினால், அவளுக்கு ஆளனுப்பி அந்தக் குற்றச்சாட்டு குறித்து நீதிபதி விசாரணை செய்யவேண்டுமா?

6842 6843 அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

இரண்டு பேர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர், '(நபியே!) அல்லாஹ்வின் சட்டப்படி எங்களிடையே தீர்ப்பளியுங்கள்'' என்றார். அவரைவிட விளக்கமுடையவராயிருந்த மற்றவர், 'ஆம், இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். (பின்னர் கிராமவாசியான முதல் நபர்) 'என்னைப் பேச அனுமதியுங்கள்'' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'பேசு'' என்றார்கள். அவர், 'என் மகன், இதோ இவரிடம் கூலிக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். என் மகனைக் கல்லால் அடித்துக் கொன்றுவிட வேண்டும் என்று என்னிடம் மக்கள் கூறினர். நான் (இந்த தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் என்னுடைய அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையை வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் விசாரித்தபோது என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனையாகத் தரப்படவேண்டும் என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் அவர்கள் தெரிவித்தனர்'' என்றார்.

இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: உம்முடைய ஆடுகளும் உம்முடைய அடிமைப் பெண்ணும் உம்மிடமே திருப்பித் தரப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, அவரின் மகனுக்கு (திருமணமாகாததால்) நூறு கசையடிகள் வழங்கினார்கள். ஓராண்டுக் காலத்திற்கு அவரின் மகனை நாடு கடத்தினார்கள். (அருகிலிருந்த) உனைஸ் அல்அஸ்லமீ(ரலி) அவர்களிடம், 'அந்த மற்றொரு மனிதரின் மனைவியிடம் சென்று அவள் (தன் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்!'' என்று கூறினார்கள். அவ்வாறே உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரணை செய்தபோது அவளும் (தன்னுடைய குற்றத்தை) ஒப்புக்கொண்டாள். எனவே அவளுக்கு உனைஸ்(ரலி) அவர்கள் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.56

பகுதி 40

ஆட்சியாளர் (அனுமதி) இல்லாமல் ஒருவர் தம் குடும்பத்தாருக்கோ மற்றவர்களுக்கோ பகுதி புகட்டுதல்.57

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் தொழுது கொண்டிருக்கும்போது, தமக்குக் குறுக்கே மற்றொருவர் நடந்துசெல்ல முனைந்தால், அவரைத் தடுத்து நிறுத்தட்டும். அதற்கு அவர் மறுத்தால் அவருடன் போராடட்டும்.

இதை அறிவிக்கும் அபூ ஸயீத்(ரலி) அவர்கள் (தம் வாழ்க்கையில்) இதைக் கடைப்பிடித்தார்கள்.58

6844 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பனூ முஸ்தலிக் போரிலிருந்து திரும்பும் வழியில்) தம் தலையை என் மடி மீது வைத்துக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் (எனக்கருகில் வந்து), 'இறைத்தூதர்(ஸல்) அவர்களையும் மக்களையும் தண்ணீரில்லாத இடத்தில் தடுத்து (தங்கவைத்து)விட்டாயே!' எனக் கடிந்துகொண்டார்கள். அப்போது அவர்கள் தங்களின் கையால் என் இடுப்பில் குத்த ஆரம்பித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தலை என் மடிமீது இருந்த காரணத்தாலேயே நான் அசையாது இருந்தேன். அப்போது அல்லாஹ் 'தயம்மும்' உடைய வசனத்தை அருளினான்.59

6845 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(என் கழுத்தாணியை நான் தொலைத்துவிட்டதால் அந்தப் பயணத்தைத் தொடர முடியாமல் நீர் நிலைகள் இல்லாத ஓரிடத்தில் நாங்கள் தங்க நேரிட்டபோது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் வந்து என்னை வேகமாக ஓர் அடி அடித்தார்கள். மேலும், 'ஒரு கழுத்தணிக்காக மக்களை (செல்ல விடாமல்) தடுத்துவிட்டாயே!'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்துக் கொண்டிருந்தால் நான் அசையாடிதிருந்தேன். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னை அடித்த அடியில்) எனக்கு ஏற்பட்ட வலியினால் எனக்கு மரணம் வந்துவிட்டதைப் போன்று இருந்தது... (தொடர்ந்து) முந்தைய ஹதீஸைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 41

ஒருவர் தம் மனைவியுடன் அந்நிய ஆடவர் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டு அவரைக் கொன்றுவிட்டால் (என்ன சட்டம்)?

6846 முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்கள், 'என் மனைவியுடன் ஓர் ஆண் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், என் வாளின் கூர்மையான பகுதியாலேயே நிச்சயம் நான் அவனை வெட்டுவேன்'' என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஸஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? நான் சஅதைவிட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்'' என்றார்கள்.60

பகுதி 42

குறிப்பால் உணர்த்துவது தொடர்பாக வந்தவை.61

6847 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! (வெள்ளை நிறமுடைய எனக்கு) என் மனைவி கறுப்பான ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்துள்ளாள். (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)'' என்று (சாடையாகக்) கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?' என்று கேட்டார்கள். அதற்கவர், 'ஆம்' என்றார். 'அவற்றின் நிறம் என்ன?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் 'சிவப்பு'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் இருக்கின்றதா?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம்' என்றார். நபி(ஸல்) அவர்கள், '(தன்னுடைய தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?' என்று கேட்டார்கள். அவர், 'அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என கருதுகிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக்கூடும்'' என்றார்கள்.62

பகுதி 43

கண்டிப்பதற்காகவும் பாடம் புகட்டுவதற்காகவும் எத்தனை முறை அடிக்கலாம்?63

6848 அபூ புர்தா(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

6849 அப்துர் ரஹ்மான் இப்னு ஜாபிர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற (நபித்தோழர்) ஒருவர் கூறினார்:

''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எந்த (சாதரண) குற்றத்திற்காகவும் பத்து அடிகளுக்கு மேலான தண்டனை கிடையாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

6850 அபூ புர்தா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கும் மேல் வழங்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.

6851 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(சூரியன் மறைந்தபின் துறக்காமல்) தொடர் நோன்பு நோற்க வேண்டாமென்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் 'அவ்வாறாயின், நீங்கள் தொடர் நோன்பு நோற்கின்றீர்களே, இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உணவும் பானமும் அளிக்கிற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்'' என்றார்கள். தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மக்கள் மறுத்தபோது ஒரு நாள் தொடர் நோன்பு நோற்க அவர்களை அனுமதித்தார்கள். பிறகு, அடுத்த நாளும் (தொடர் நோன்பு நோற்க) அனுமதித்தார்கள். பின்னர் (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (உங்களால் இயலாத அளவுக்குத் தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன்'' என்று மக்கள் தொடர் நோன்பிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்தில் - கூறினார்கள்.64

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

6852 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (நிறுக்கப்படாமல், அளக்கப்படாமல்) குத்துமதிப்பாக உணவுப் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த மக்கள், அவற்றை(க் கைப்பற்றி) தம் இருப்பிடங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காமல் அதே இடத்தில் விற்றதற்காக அடிக்கப்பட்டனர்.65

6853 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தமக்கிழைக்கப்பட்ட (கொடுமைகளில்) எதற்காகவும் தமக்கென ஒருபோதும் எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ங்கள் சீர்குலைக்கப்பட்டு, (அதற்காக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று இருந்தால் தவிர!66

பகுதி 44

மானக்கேடான செயலையும் குற்றச் சாட்டையும் சந்தேகத்தையும் ஒருவர் சாட்சி இல்லாமல் வெளியிடுவது.

6854 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அந்தத் தம்பதியர் இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த இடத்தில் நானும் இருந்தேன். -அப்போது எனக்குப் பதினைந்து வயது நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பிரிந்து கொள்ள உத்தரவிட்டார்கள். அப்போது அந்தப் பெண்ணின் கணவர், 'இவளை நான் என்னிடமே (மனைவியாக) வைத்துக் கொண்டிருந்தால் நான் இவள் மீது சொன்ன குற்றச்சாட்டு பொய்யாகிவிடும்'' என்று கூறி (மணவிலக்கு அளித்து)விட்டார்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:) 'அவள் இப்படி இப்படி (உருவம் கொண்ட) குழந்தையைப் பெற்றெடுத்தால் அவளுடைய கணவன் சொன்னது உண்மை. அவள் இப்படி இப்படி அரணையைப் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் கணவன் சொன்னது பொய்'' என்று ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடமிருந்து நான் மனனமிட்டுள்ளேன்.

பிறகு, 'அந்தப் பெண் அருவருக்கப்பட்ட தோற்றத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தாள்' என்றும் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.67

6855 காசிம் இப்னு முஹம்மத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத்(ரஹ்) அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறைவேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறைவேற்றியிருப்பேன்' என்று கூறியது இந்தப் பெண் தொடர்பாகத்தானா?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், 'இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டாள் எனப் பகிரங்கமாகப் பேசப்பட்டு வந்த பெண் ஆவாள்'' என்று கூறினார்கள்.68

6856 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு நாள் மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம்(ரலி) அவர்கள், 'நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்'' என்றார்கள். எனவே, ஆஸிம்(ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவரின் மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.

(இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி(ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், 'இல்லை; (அவன் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டுவந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.)'' என்று பதிலளித்தார்கள்.69

பகுதி 45

பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது

(அல்லாஹ் கூறினான்:)

யார் கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களுக்கு நீங்கள் எண்பது சாட்டையடி வழங்குங்கள்; பின்னர் அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள் நிச்சயமாக அவர்கள் தாம் தீயவர்கள். எனினும், (இவர்களில்) இதற்குப் பின்னர் பாவமன்னிப்புக்கோரி தங்களைத் திருத்திக்கொள்கிறவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கிறான். (திருக்குர்ஆன் 24:45)

(மேலும், அல்லாஹ் கூறினான்:)

யார் இறைநம்பிக்கையுடைய ஒழுக்கமுள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (திருக்குர்ஆன் 24:23)

6857 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)'' என்று கூறினார்கள்.70

பகுதி 46

அடிமைகளின் மீது அவதூறு கூறுதல்

6858. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 47

வழக்கு நடைபெறும் இடத்தில் இல்லாத ஒருவரின் மீது ஆட்சித் தலைவருடைய உத்தரவின் பேரில் மற்றொரு மனிதர் தண்டனையை நிறைவேற்றலாமா?

இவ்வாறு உமர்(ரலி) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

6859 6860 அபூ ஹுரைரா(ரலி) மற்றும் ஸைத் இப்னு காலித் அல்ஜுஹனீ(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:

(கிராமவாசி) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன்: நீங்கள் அல்லாஹ்வின் சட்டப்படியே எங்களிடையே தீர்ப்பளிக்கவேண்டும்'' என்றார். அப்போது அவரைவிட விளக்கமுடையவராக இருந்த அவரின் எதிரி (பிரதிவாதி) எழுந்து 'அவர் சொல்வது உண்மைதான்; எங்களிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்'' என்று கூறினார். (பின்னர் அக்கிராமவாசி) 'என்னைப் பேச அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'பேசு!'' என்று கூறினார்கள். அவர், 'என் மகன் இவரிடம் வேலைக்காரனாக இருந்தான். அப்போது இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். (என் மகனுக்குக் கல்லெறி தண்டனை வழங்கிட வேண்டும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.) எனவே, நான் (இந்தத் தண்டனையிலிருந்து என் மகனைக் காப்பாற்றுவதற்காக) அதற்கு பதில் நூறு ஆடுகளையும் ஓர் அடிமையையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு அறிஞர்கள் சிலரிடம் நான் விசாரித்தபோது, என் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தலும் தான் தண்டனை என்றும், இந்த மனிதரின் மனைவிக்குக் கல்லெறி தண்டனை (ரஜ்கி) வழங்கப்படவேண்டும் என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்'' என்று கூறினார்.

இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்கள் இருவருக்கிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: நூறு ஆடுகளும் அடிமையும் உம்மிடமே திருப்பித் தரப்பட வேண்டும். உம்முடைய மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலம் நாடு கடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு, அருகிலிருந்த உனைஸ்(ரலி) அவர்களை நோக்கி 'உனைஸே! நீங்கள் இந்த மனிதரின் மனைவியிடம் சென்று கேளுங்கள். அவள் (விபசாரக் குற்றத்தை) ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுங்கள்'' என்றார்கள். அவ்வாறே (உனைஸ்(ரலி) அவர்கள் அவளிடம் சென்று விசாரிக்க) அவளும் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டாள். எனவே, உனைஸ் அவர்கள் அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்கள்.71
Previous Post Next Post