அத்தியாயம் 73 குர்பானி (தியாக)ப் பிராணிகள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 73

குர்பானி (தியாக)ப் பிராணிகள்

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பகுதி 1

குர்பானி கொடுப்பது நபிவழியாகும்.

இப்னு உமர்(ரலி), 'அது நபி வழியும் (மக்களால்) அறியப்பட்ட ஒரு நடை முறையுமாகும்'' என்று கூறினார்கள்.2

5545. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்

(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப்பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது'' என்று கூறினார்கள்.

உடனே (தொழுகைக்கு முன்பு அறுத்து விட்டிருந்த) அபூ புர்தா இப்னு நியார்(ரலி) எழுந்து, '(இறைத்தூதர் அவர்களே!) என்னிடம் ஒரு வயதுடைய (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அதை அறுத்திடுவீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது'' என்று கூறினார்கள்.3

''(பெருநாள்) தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றியவராவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

இதையும் பராஉ(ரலி) அவர்களே அறிவித்தார்கள்.4

5546. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கிறவர் தம(து சொந்த செலவு)ககாகவே அறுத்தவராவார். தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறவரின் (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகி விடும்; மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவராவார்'' என்று கூறினார்கள்.

பகுதி 2

குர்பானிப் பிராணிகளை மக்களிடையே தலைவர் பங்கிடுவது.

5547. உக்பா இப்னு ஆமிர் அல்ஜுஹைனீ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளைப் பங்கிட்டார்கள். அப்போது எனக்கு (என்னுடைய பங்காக) ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று கிடைத்தது நான், 'இறைத்தூதர் அவர்களே! ஒரு வயதுடைய வெள்ளாடுதான் எனக்குக் கிடைத்தது'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'அதையே நீங்கள் குர்பானி கொடுங்கள்'' என்று கூறினார்கள்.5

பகுதி 3

பயணி மற்றும் பெண்களுக்குக் குர்பானி உண்டா?6

5548. ஆயிஷா(ரலி) கூறினார்

(நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும் முன் 'சாரிஃப்' எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் 'உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'இ(ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். எனவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி வருவதைத் தவிர'' என்று கூறினார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான், 'இது என்ன?' என்று கேட்டேன். மக்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.7

பகுதி 4

ஹஜ் பெருநாளில் இறைச்சியை விரும்பி உண்ணுதல்.

5549. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

'ஈதுல் அள்ஹா' பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் '(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள்.

அப்போது ஒருவர் (அபூ புர்தா) எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்'' என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டார் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் ஒரு வயது பூர்த்தியான வெள்ளாடு இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும்) கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்று எனக்குத் தெரியாது. பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள்ள பிரித்துக் கொண்ட (பின் குர்பானி கொடுத்த)னர்.8

பகுதி 5

துல்ஹஜ் பத்தாவது நாள் மட்டுமே குர்பானி கொடுக்கவேண்டும் என்போரின் கூற்று.9

5550. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (துல்ஹஜ் 10ஆம் நாள் மக்காவில் ஆற்றிய உரையில்), 'வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதா (அல்ஆகிரா)வுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்'' என்று கூறிவிட்டு, 'இது எந்த மாதம்?' என்று கேட்டார்கள்.

நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்று பதிலளித்தோம். அம்மாதத்திற்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது துல்ஹிஜ்ஜா மாதம் அல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம்'' என்று சொன்னோம். 'இது எந்த நகரம்?' என்றும் கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்று சொன்னோம். அப்போதும் அவர்கள் இந்நகரத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு 'இது (புனித) நகரமல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம்'' என்றோம்.

அடுத்து 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். நாங்கள் 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அப்போதும் அந்த நாளுக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணும் அளவுக்கு அவர்கள் மௌனமாக இருந்துவிட்டு, 'இது 'குர்பானி கொடுக்கும்' (நஹ்ருடைய) நாளல்லவா?' என்று கேட்டார்கள். நாங்கள் 'ஆம்' என்றோம்.

(பின்னர் பின்வருமாறு) கூறினார்கள்: உங்களின் இந்த(ப் புனித) மாதத்தில் உங்களின் இந்த(ப் புனித) நகரத்தில், உங்களின் இந்த நாள் புனிதம் பெற்றிருப்பதைப் போன்றே உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியனவும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் வினைகள் குறித்து விசாரிப்பான். அறிந்துகொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக்கொள்கிற வழிகேடர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (என் கட்டளைகளை)த் தெரிவித்து விடுங்கள். ஏனெனில், இச்செய்தியை (நேரடியாக)க் கேட்டவரை விட அவர் யாரிடம் தெரிவிக்கிறாரோ அவர்களில் சிலர் இதை நன்கு காப்பவராயிருக்கலாம்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) இதை அறிவிக்கும்போது, 'நபி(ஸல்) அவர்கள் உண்மையே கூறினார்கள்'' என்று கூறுவார்கள்.

பிறகு 'நான் தெரிவித்துவிட்டேனா? நான் தெரிவித்துவிட்டேனா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.10

பகுதி 6

(பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானி கொடுப்பது.

5551. நாஃபிஉ(ரஹ்) கூறினார்

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அந்த அறுக்குமிடத்திலேயே, அதாவது நபி(ஸல்) அவர்கள் அறுத்த இடத்திலேயே தம் குர்பானிப் பிராணிகளை அறுத்துவந்தார்கள்.

5552. இப்னு உமர்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.

பகுதி 7

கொம்புகள் உள்ள இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களை நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தது.

அவையிரண்டும் கொழுத்தவை என்று (மற்றோர் அறிவிப்பில்) கூறப்படுகிறது.

உமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) கூறினார்:

நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள்.

5553. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் தினத்தில்) இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். நானும் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தேன்.

5554. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக கடாக்கள் பக்கம் சென்று தம் கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.11

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

5555. உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே குர்பானிப் பிராணிகளாகப் பங்கிடும் படி ஒர் ஆட்டு மந்தையை என்னிடம் அளித்தார்கள். (அவ்வாறே நானும் பங்கிட்டேன். இறுதியில்) வெள்ளாட்டுக் குட்டி ஒன்று மீதி இருந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள், 'நீங்கள் அதைக் குர்பானி கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள்.12

பகுதி 8

''ஒரு வயதுடைய வெள்ளாட்டைக் குர்பானி கொடுப்பீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது'' எனும் நபிமொழி.

5556. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) கூறினார்

அபூ புர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம், 'உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)'' என்று கூறினார்கள். அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)'' என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது'' என்று சொல்லிவிட்டு, 'தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர், தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்'' என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 13

அறிவிப்பாளர் ஷஅபீ (ரஹ்) கூறினார்:

''என்னிடம் ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது'' என அபூ புர்தா(ரலி) கூறினார்.

5557. பராஉ(ரலி) கூறினார்

அபூ புர்தா(ரலி) (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரிடம் 'அதற்கு பதிலாக வேறொன்றை அறுப்பீராக!'' என்று கூறினார்கள். அதற்கு அபூ புர்தா(ரலி), 'என்னிடம் ஒரு வயதுடைய வ்வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை; (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)'' என்று வினவினார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்: 'அது இரண்டு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது'' என்று அபூ புர்தா(ரலி) சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள், 'இதையே அதற்கு பதிலாக அறுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது'' என்று கூறினார்கள்.

இது பற்றிய அனஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில், 'என்னிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாட்டைத் தவிர வேறொன்றுமில்லை'' என்று அபூ புர்தா(ரலி) கூறினார் என உள்ளது.

பகுதி 9

குர்பானிப் பிராணிகளைத் தம் கையால் அறுப்பது.14

5558. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, 'தக்பீர்' (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.15

பகுதி 10

பிறருடைய குர்பானிப் பிராணியை அறுப்பது.

இப்னு உமர்(ரலி) அவர்களுக்கு அவர்களின் ஒட்டகத்தை அறுப்பதற்கு ஒருவர் உதவினார். அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) தம் புதல்வியருக்கு அவர்கள் கரங்களாலேயே அறுக்கும்படி கட்டளையிட்டார்கள்.

5559. ஆயிஷா(ரலி) கூறினார்

(நபி(ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) 'சாரிஃப்' எனுமிடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அப்போது அழுதுகொண்டிருந்தேன். அவர்கள், 'உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்' என்றேன். அவர்கள், இ(ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி வராதே'' என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்.16

பகுதி 11

(பெருநாள்) தொழுகைக்குப் பிறகு (குர்பானிப் பிராணிகளை) அறுப்பது.

5560. பராஉ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) 'நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருந்நாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது'' என்று கூறினார்கள்.

அப்போது அபூ புர்தா(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)'' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'முதலில் அறுத்ததற்கு பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் 'அது செல்லாது' அல்லது 'நிறைவேறாது' என்று பதிலளித்தார்கள்.17

பகுதி 12

(பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் (தொழுகை முடிந்த பின்) மீண்டும் (வேறொன்றை) அறுக்கவேண்டும்.

5561. அனஸ்(ரலி) கூறினார்

(ஈதுல் அள்ஹா பெருநாளில்) நபி(ஸல்) அவர்கள், '(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்'' என்று கூறினார்கள். அப்போது ஒருவர், 'இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்'' என்று சொல்லிவிட்டு, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். நபி(ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றதைப் போல் இருந்தது. அந்த மனிதர், 'என்னிடம் இரண்டு (இறைச்சி) ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)'' என்று கேட்க, நபி(ஸல்) அவர்களும் அவருககு அனுமதியளித்தார்கள்.

அந்த அனுமதி மற்றவர்களுக்கும் பொருந்துமா? அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. -பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள் பக்கம் சென்று அவற்றை அறுத்தார்கள். பிறகு மக்கள் ஒரு சிறு ஆட்டு மந்தைக்குச் சென்று அவற்றை அறுத்தார்கள்.18

5562. ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், '(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்கு பதிலாக) வேறொன்றை (தொழுகைக்கப் பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்'' என்று கூறினார்கள்.19

5563. பராஉ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளில் தொழுதுவிட்டு, 'நம்முடைய தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடித்துத்) திரும்பும் வரை (குர்பானிப் பிராணியை) அறுக்க வேண்டாம்'' என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா(ரலி) எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்க முன்பே அறுத்து) அதைச் செய்துவிட்டேனே?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அது நீங்கள் அவசரப்பட்டு (அறுத்து)விட்ட பொருளாகும்'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் 'என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. நான் அதை அறுக்கலாமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'சரி (நீங்கள் அறுக்கலாம்). பிறகு உங்களைத் தவிர வேறெவருக்கும் அது செல்லாது'' என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆமிர் ஷஅபீ (ரஹ்), 'அதுவே (அவர் தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) அவரின் இரண்டு குர்பானிகளில் சிறந்ததாகும்'' எனக் கூறுகிறார்கள்.

பகுதி 13

அறுக்கப்படும் பிராணியின் பக்கவாட்டில் கால் வைத்(து மிதி)த்துக் கொள்வது.

5564. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்து வந்தார்கள். அப்போது தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தம் கரத்தால் அவற்றை அறுப்பார்கள்.20

பகுதி 14

பிராணியை அறுக்கும்போது 'தக்பீர்' ('அல்லாஹ் அக்பர் - அலலாஹ் மிகப் பெரியவன்' என்று) கூறுவது.

5565. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் ('பிஸ்மில்லாஹ்') கூறினார்கள். தக்பீரும் ('அல்லாஹு அக்பர்') கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.21

பகுதி 15

ஒருவர் தம் தியாகப் பிராணியை (ஹஜ்ஜில்) அறுப்பதற்காக அனுப்பி வைப்பதால் அவரின் மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது.22

5566. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) கூறினார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, 'இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தம் தியாகப் பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தம்) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம் அந்த ஒட்டகத்திற்கு (அது தியாகப் பிராணி என்பதைக் காட்டும் அடையாளமாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள் வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்து கொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன்.

அப்போது ஆயிஷா(ரலி) (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தியாகப் பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் (இந்தத்) தியாகப் பிராணிகளை (ஹஜ் பருவத்தில்) கஅபாவிற்கு அனுப்புவார்கள். எனினும், அவர்களின் குடும்பத்திலிருந்த மற்ற ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில் எதுவுமே மக்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பும் வரை அவர்களுக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கவில்லை'' என்று கூறினார்கள்.23

பகுதி 16

குர்பானிப் பிராணிகளின் இறைச்சிகளில் உண்ணத் தக்கவையும், சேமிக்கத் தக்கவையும். 24

5567. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தியாகப் பிராணிகளின் இறைச்சியை (குர்பானிக்கறியை) மதீனாவுக்குச் செல்லும்போது பயண உணவாக எடுத்துச் செல்வோம்.25

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்), (தம் அறிவிப்புகளில் 'தியாகப் பிராணிகளின் இறைச்சி' என்பதைக் குறிக்க மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள 'லுஹூமுல் அளாஹீ' எனும் சொல்லுக்கு பதிலாக) 'லுஹூமுல் ஹத்யி' எனும் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கையாண்டுள்ளார்கள்.

5568. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்

நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்தவர் 'இது எங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சி'' என்று கூறினார். நான், 'இதை எடுத்து விடுங்கள். நான் இதை உண்ண மாட்டேன்'' என்று சொன்னேன். பிறகு எழுந்து புறப்பட்டு என் சகோதரர் அபூ கத்தாதா(ரலி) அவர்களிடம் சென்றேன். அபூ கத்தாதா(ரலி), அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களின் தாய் வழிச் சகோதரராகவும் பத்ருப்போரில் பங்கெடுத்தவராகவும் இருந்தார்கள். நான் நடந்ததை அவர்களிடம் கூற, அவர்கள் 'நீங்கள் பயணம் சென்ற பின் மறு உத்தரவு பிறந்தது'' என்று கூறினார்கள்.26

5569. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்'' என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் 'இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்'' என்று பதிலளித்தார்கள்.

5570. ஆயிஷா(ரலி) கூறினார்

நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி(ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் 'மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்'' என்று கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்துவதற்கல்ல் மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.27

5571. அபூ உபைத் ஸஅத் இப்னு உபைத்(ரஹ்) கூறினார்

நான் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகையில் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அவர்கள் குத்பா- உரை நிகழ்த்தினார்கள். அப்போது 'மக்களே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த இரண்டு பெருநாள்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என உங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று 'உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்' ஆகும். மற்றொன்றோ 'நீங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்' ஆகும்'' என்று கூறினார்கள்.

5572. அபூ உபைத்(ரஹ்) (தொடர்ந்து) கூறினார்

பின்னர் நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் குத்பா - உரை நிகழ்த்தும் முன்பே தொழுதுவிட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரண்டு பெருநாள்கள் ஒன்றுசேர்ந்து (கிடைத்து) உள்ளன. எனவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் ஜுமுஆவை (வெள்ளிக் கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) தம் இல்லத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்துவிட்டேன்'' என்று கூறினார்கள்.

5573. அபூ உபைத்(ரஹ்) (தொடர்ந்து) கூறினார்

பிறகு நான் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் குத்பா-உரை நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று நாள்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்'' என்று கூறினார்கள்.28

இதைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5574. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானிப் பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள்.
Previous Post Next Post