அத்தியாயம் 39 முகமன் (ஸலாம்)

ஸஹீஹ் முஸ்லிம்
அத்தியாயம் 39
முகமன் (ஸலாம்)

பாடம்: 1 வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்ல வேண்டும்.
4364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 2 முகமனுக்குப் பதிலுரைப்பது சாலையில் அமர்வதன் ஒழுங்கு முறைகளில் ஒன்றாகும்.
4365. அபூதல்ஹா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் வீட்டு முற்றங்களில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களிடையே நின்று, "சாலையோரங்களில் அமர்ந்து (பேசிக்) கொண்டிருப்பதற்கு உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? சாலையோரங்களில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் "அவசியத்தை முன்னிட்டே அமர்கிறோம். (இங்கு அமர்ந்துதான் பல விஷயங்கள் குறித்து) நாங்கள் பேசிக்கொள்கிறோம்;கலந்துரையாடுகிறோம்" என்று கூறினோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைத் தவிர்க்க முடியாது என்றிருந்தால், சாலைகளுக்கு அவற்றின் உரிமையை வழங்கிவிடுங்கள். (அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நல்ல பேச்சுக்களைப் பேசுவதும் (அவற்றின் உரிமை) ஆகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
4366. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு வழங்க வேண்டிய உரிமையை வழங்கிவிடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "சாலையின் உரிமை என்ன?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், முகமனுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 3 முகமனுக்குப் பதிலுரைப்பது, ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாகும்.
4367. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்தாகும். 1. முகமனுக்குப் பதிலுரைப்பது 2. தும்மி ("அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறி)யவருக்கு ("யர்ஹமுகல்லாஹ்" என்று) மறுமொழி கூறுவது 3. விருந்தழைப்பை ஏற்பது. 4. நோயாளியை நலம் விசாரிப்பது 5. ஜனாஸாவில் கலந்து கொள்வது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(பொதுவாக) இந்த ஹதீஸை மஅமர் (ரஹ்) அவர்கள், ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து "முர்சலா"கவே அறிவிப்பார்கள்.
ஒரு முறை மஅமர் (ரஹ்) அவர்கள், "ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்தும்,சயீத் அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் கூறியதாவது" என்று (முஸ்னதாக) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 39
4368. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்" என்று கூறினார்கள். "அவை யாவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவாயாக. அவர் உன்னை விருந்துக்கு அழைத்தால் அவருக்குப் பதிலளிப்பாயாக. அவர் உன்னிடத்தில் அறிவுரை கூறச்சொன்னால் அவருக்கு அறிவுரை கூறுவாயாக. அவர் தும்மி "அல்ஹம்துலில்லாஹ்" என்று கூறினால் (யர்ஹமு கல்லாஹ் என்று) அவருக்கு மறுமொழி கூறுவாயாக. அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல்நலம் விசாரிப்பாயாக. அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வாயாக" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 4 வேதக்காரர்களுக்கு (நாம்) முதலில் முகமன் கூறுவது தடை செய்யப்பட்டதாகும் என்பதும் அவர்களுக்கு எவ்வாறு பதில் முகமன் கூற வேண்டும் என்பதும்.
4369. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வேதக்காரர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4370. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், "வேதக்காரர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால், நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு பதில் (முகமன்) கூற வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள் என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினால் அவர்களில் சிலர் "அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "அலைக்க" (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4372. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) "வ அலைக்க" (நீ சொன்னது உனக்கும் உண்டாகட்டும்) என்று கூறுவீராக"என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4373. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு "அஸ்ஸாமு அலைக்கும்" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் "அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா" (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகிறான்" என்று கூறினார்கள்.
நான் "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான்தான் "அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (நளினமாகச்) சொல்லிவிட்டேனே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது. அவற்றில் ("அலைக்கும்" என்பதற்கு முன்) "வ" எனும் (இடைச்)சொல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4374. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க"" (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி முகமன்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (பதில்) சொன்னார்கள். நான் "அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு" (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் (முகமன்) கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே" என்று கூறினார்கள். நான், "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்தான் அவர்கள் சொன்னதற்கு "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக) பதில் சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா)?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் "(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்" (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 39
4375. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க" (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று முகமன் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வ அலைக்கும்" (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று (நளினமாக பதில்) கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, "அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; நான் கேட்டுவிட்டு அவர்களுக்கு (நளினமாக) பதில் சொல்லிவிட்டேனே! அவர்களுக்கு எதிராக நாம் செய்த பிரார்த்தனை ஏற்கப்படும். நமக்கெதிராக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்கப்படாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4376. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் சாலையில் சந்தித்தால், சாலையின் நெருக்கடியான பகுதியில் அவரை ஒதுங்கிப்போகச் செய்யுங்கள். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "யூதர்களை நீங்கள் சந்தித்தால்" என்றும், முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வேதக்காரர்கள் தொடர்பாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் (மேற் கண்ட ஹதீஸில் உள்ளபடி) கூறினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்களை நீங்கள் சந்தித்தால்" என்று அந்த இணைவைப்பாளர்களில் யாருடைய பெயரும் குறிப்பிடாமல் அறிவிக்கப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம்: 5 (பெரியவர்கள்) சிறாருக்கு முகமன் கூறுவது விரும்பத்தக்கதாகும்.
4377. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது, அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4378. சய்யார் பின் அபீசய்யார் வர்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள்.
"(ஒரு முறை) நான் அனஸ் (ரலி) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அச்சிறுவர்களுக்கு முகமன் (சலாம்) கூறினார்கள். மேலும், அனஸ் (ரலி) அவர்கள், "(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அச்சிறுவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) கூறினார்கள் என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 6 வீட்டுவாசலில் திரையை விலக்கிவைத்திருப்பது போன்ற அடையாளங்களை, உள்ளே செல்ல அனுமதியாகக் கருதலாம்.
4379. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(என் வீட்டுவாசலில்) திரை விலக்கப்படுவதும், எனது அரவத்தை நீ செவியுறுவதும் என்னிடம் (வீட்டுக்குள்) நீ வரலாம் என்பதற்கான அனுமதியாகும். நானாக (வரவேண்டாம் எனத்) தடுக்காதவரை" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 7 இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்காகப் பெண்கள் வெளியே செல்லலாம்.
4380. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"பர்தா" அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னர் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா (ரலி) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக (இரவு நேரத்தில்) வெளியே சென்றார்கள். சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமும் (உயரத்துக்கு ஏற்ற) பருமனும் உள்ளவராக இருந்தார்கள். அவரை அறிந்தவர்களுக்கு அவர் (பர்தா அணிந்து சென்றாலும் அவர்) யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களைப் பார்த்து (அறிந்து) விட்டு, "சவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! (பர்தா அணிந்திருந்தாலும்) நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அறிந்து கொள்ளப்படுகிற நிலையில்) எப்படி வெளியே வருகிறீர்கள் என்பது குறித்து யோசித்துப் பாருங்கள்" என்று சொன்னார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பிவந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது கையில் இறைச்சி கலந்த எலும்புத்துண்டு ஒன்று இருந்தது. சவ்தா (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் இப்படி இப்படிச் சொன்னார்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) வந்தது. பின்னர் அந்நிலை விலக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் அந்த எலும்புத்துண்டு (அப்படியே) இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்திருக்கவில்லை. மேலும், அவர்கள் "(பெண்களே!) நீங்கள் உங்கள் (அடிப்படைத்) தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீ ஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சவ்தா (ரலி) அவர்கள் பெண்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்டவராயிருந்தார்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அவர்களது அறிவிப்பில் "அதாவது கழிப்பிடங்களுக்கு(ச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது)" என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறியதாகக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "சவ்தா (ரலி) அவர்கள் மக்களிலேயே நல்ல உயரமான உடல்வாகு கொண்ட பெண்ணாக இருந்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4381. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியர் (மதீனாவின்) புறநகர்ப் பகுதிகளுக்கு இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு வேளைகளில் புறப்பட்டுச் செல்வார்கள். ("புற நகர்ப் பகுதிகள்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) "மனாஸிஉ" எனும் சொல், விசாலமான இடங்களைக் குறிக்கும். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தங்கள் துணைவியரைத் திரைக்குள்ளிருக்குமாறு கூறுங்கள்" என்று சொல்வார்கள்.
ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இந்நிலையில் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் ஓர் இரவில் இஷா நேரத்தில் வெளியே சென்றார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் உயரமான பெண்ணாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, "சவ்தாவே! (நீங்கள் பர்தா அணிந்திருந்தாலும்) நாங்கள் உம்மை யார் என்று அடையாளம் தெரிந்துகொண்டோம்" என்று கூறினார்கள். பர்தா தொடர்பான சட்டம் அருளப்பட வேண்டுமென்ற பேராவலிலேயே இவ்வாறு கூறினார்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவ்வாறே பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 8 அந்நியப் பெண்ணுடன் தனிமையில் இருப்பதும் அவளிடம் செல்வதும் தடை செய்யப்பட்டதாகும்.
4382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவனத்தில் வையுங்கள்! கன்னிகழிந்த எந்தப் பெண்ணுடனும் எந்த ஆணும் இரவில் (தனியாகத்) தங்க வேண்டாம்;அவர் அவளை மணந்துகொண்டவராகவோ (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினராகவோ இருந்தால் தவிர!
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4383. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்" என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் (அவள் இருக்குமிடத்திற்குச் செல்வது) குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர் ("அல்ஹம்வு") மரணத்திற்கு நிகரானவர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4384. லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்ஹம்வு" என்பது கணவருடைய சகோதரர், கணவருடைய தந்தையின் சகோதரரின் புதல்வர் போன்ற உறவினர்களைக் குறிக்கும்.
அத்தியாயம் : 39
4385. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (தனிமையிலிருந்த தம் துணைவியாரிடம்) அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, "(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்" என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்" என்று கூறிவிட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, "இன்றைய தினத்திற்குப்பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்;அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 9 ஒருவர் தம் மனைவியுடனோ அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய பெண் உறவினர் ஒருவருடனோ தனிமையில் இருப்பதை யாரேனும் பார்த்தால் "இவர் (எனக்கு) இன்ன (உறவுடைய) பெண்" என்று கூறி, கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும்.
4386. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருடன் இருந்தார்கள். அப்போது அவர்களைக் கடந்து ஒரு மனிதர் சென்றார். நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்தார்கள். அவர் வந்ததும், "இன்ன மனிதரே! இவர் என்னுடைய இன்ன துணைவி ஆவார்" என்று கூறினார்கள். அப்போது அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் தங்களைச் சந்தேகிக்கப்போவதில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4387. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) "இஃதிகாஃபி"ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். அப்போது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது இல்லத்திலேயே என் வசிப்பிடம் இருந்தது.
அப்போது அன்சாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று நில்லுங்கள். இவர் (என் துணைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்" என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகிறான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தைப் போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்றோ, அல்லது "எதையேனும் போட்டுவிடுவான்" என்றோ சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4388. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் பள்ளிவாசலில் "இஃதிகாஃப்" இருந்தபோது,அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளிவாசலுக்குச்) சென்றேன். (அந்த இரவில்) சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தேன். என்னை வீட்டுக்கு அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள்... பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.
ஆயினும், அதில் "ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களை எல்லாம் சென்றடைகிறான்" என்று இடம்பெற்றுள்ளது. "ஓடுகிறான்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
பாடம் : 10 ஓர் அவைக்குச் செல்பவர், அங்கு இடைவெளி ஏதேனும் இருக்கக் கண்டால் அதில் அமர்ந்துகொள்ளலாம். இல்லாவிட்டால், பின்வரிசையிலேயே அமர வேண்டும்.
4389. அபூவாகித் அவ்ஃப் பின் அல்ஹாரிஸ் அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்தனர். அவர்களில் இருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். மற்றொருவர் (கண்டுகொள்ளாமல்) சென்றுவிட்டார்.
(உள்ளே வந்த) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீற்றிருந்த அவைக்கு) முன்னால் வந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் வட்டமான அந்த அவையில் இடைவெளி இருப்பதைக் கண்டு அதில் அமர்ந்துகொண்டார். மற்றொருவர் பின்வரிசையில் அமர்ந்துகொண்டார். மூன்றாமவரோ திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம் பேசி) முடித்ததும், "இம்மூவரைப் பற்றி உங்களுக்கு நான் சொல்லட்டுமா? அவர்களில் ஒருவரோ, அல்லாஹ்விடம் ஒதுங்கினார். அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான். மற்றவரோ (மக்களைத் தாண்டிச் செல்ல) வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் (அவரைத் தண்டிக்க) வெட்கப் பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்தினார். எனவே, அல்லாஹ்வும் அவரை அலட்சியப் படுத்தினான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூவாகித் அல்லைஸீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 11 ஒரு மனிதர் முந்திச் சென்று தமக்கு அனுமதிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருக்கும் போது, அவ்விடத்திலிருந்து அவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
4390. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டுப் பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4391. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு அந்த இடத்தில் அமரவேண்டாம். மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கு இடமளியுங்கள்" என்பது இடம் பெறவில்லை. அவற்றில் இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் (நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம்) வெள்ளிக்கிழமை அன்றா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "வெள்ளிக்கிழமை அன்றும் அது அல்லாத மற்ற சமயங்களிலும்தான் என்று விடையளித்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4392. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு, அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் அமர வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்காக யாரேனும் அவரது இடத்திலிருந்து எழுந்(து இடமளித்)தால் அங்கு அவர்கள் அமரமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4393. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை அன்று உங்களில் ஒருவர், தம் சகோதரர் அமர்ந்த இடத்தில் தாம் அமர்வதற்காக அவரை எழுப்பிவிட்டு அங்கு அமர வேண்டாம். மாறாக, "(நகர்ந்து) இடமளியுங்கள்" என்று கூறட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 12 ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்.
4394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூஅவானா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டு..." என்று இடம்பெற்றுள்ளது. (அதில் "உங்களில் ஒருவர்" எனும் குறிப்பு இல்லை.)
அத்தியாயம் : 39
பாடம் : 13 அந்நியப் பெண்கள் உள்ள இடத்திற்கு அலிகள் செல்ல வந்துள்ள தடை.
4395. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆணோ பெண்ணோ அல்லாத) அலி ஒருவர் என் அருகில் இருந்துகொண்டிருந்தார். அப்போது வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இருந்தார்கள். அப்போது அந்த அலி என் சகோதரரிடம், "அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவே! நாளை உங்களுக்கு "தாயிஃப்" நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன். (அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு (சதை மடிப்புகளு)டனும் வருவாள்" என்று சொன்னார்.
அதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அலிகளான) இவர்கள் (அந்நியப் பெண்களான) உங்களிடம் வர வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4396. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடம் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலி ஒருவர் வருவார். அவர் பாலுறவு வேட்கையில்லாதவர்களில் ஒருவர் என்றே கருதிவந்தார்கள். ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஒருவரிடம் இருந்தபோது, அங்கு நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அந்த அலி ஒரு பெண்ணைப் பற்றி வர்ணித்துக் கொண்டிருந்தார். "அவள் வந்தால் நாலு (சதை மடிப்புகளு)டன் வருவாள். போனால் எட்டு (சதை மடிப்புகளு)டன் போவாள்" என்று அவர் சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், "இவர் இங்குள்ள (பெண்களின்) நிலைமை பற்றியும் அறிவார் என்று நான் ஏன் கருதக்கூடாது? (அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வர வேண்டாம்" என்று கூறினார்கள். எனவே, அவரை(ப் பெண்களைவிட்டு)த் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 14 சாலையில் களைப்புற்றுவிட்ட அந்நியப் பெண்ணை, ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்வது செல்லும்.
4397. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்தபோதே) மணந்துகொண்டார். இந்தப் பூமியில் அவருக்கு அவரது குதிரையை(யும் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும்) தவிர வேறு எந்தச் சொத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.
அந்தக் குதிரைக்கு நான் தீனி போடுவேன்; அதைப் பராமரிக்கும் பொறுப்புகளை நானே கவனித்துக்கொள்வேன்; (அதற்குத்) தண்ணீர் புகட்டுவேன்; அதை ஓட்டிச் செல்வேன்; தண்ணீர் இரைக்கும் அவரது ஒட்டகத்துக்காகப் பேரீச்சங் கொட்டைகளை இடித்து, அதற்கு ஊட்டுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத்தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத்தருவார்கள். அப்பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாக ஒதுக்கிய நிலத்திலிருந்து நானே பேரீச்சங் கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலைமீது வைத்துச் சுமந்து வருவேன். அந்த நிலம் (என் வீட்டிலிருந்து) இரண்டு மைல் (3.5 கி.மீ) தொலைவில் இருந்தது.
ஒரு நாள் நான் பேரீச்சங் கொட்டைகளை என் தலைமீது சுமந்து வந்துகொண்டிருந்தேன். (வழியில்) நான், (என் சகோதரி ஆயிஷாவின் கணவரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர்களுடன் அவர்களுடைய தோழர்கள் சிலரும் இருந்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். என்னைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொள்வதற்காக "இஃக், இஃக்" என்று சொல்லித் தமது ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால், நான் அவர்களது ஒட்டகத்தில் ஏறிக்கொள்ளவில்லை.)
(நான் வீட்டுக்கு வந்து என் கணவர் ஸுபைர் (ரலி) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்துவிட்டு) "நான் வெட்கப்பட்டேன். மேலும், உங்களின் ரோஷத்தை நான் அறிந்துள்ளேன்" என்று கூறினேன். அதற்கு என் கணவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நீ வாகனத்தில் வருவதைவிடப் பேரீச்சங்கொட்டைகளை நீ சுமந்து வந்ததுதான் எனக்குக் கடினமானதாக இருக்கிறது" என்று கூறினார்.
(இவ்வாறாக வீட்டுப் பணிகளில் பெரும்பகுதியை நானே மேற்கொண்டுவந்தேன்.) இறுதியாக (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் எனக்கு ஓர் (அடிமைப் பெண்) ஊழியரை அனுப்பிவைத்தார்கள். அந்த ஊழியர் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். என்னவோ எனக்கு விடுதலை கிடைத்தது போல் இருந்தது.
அத்தியாயம் : 39
4398. அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களின் வீட்டுப் பணிகளைக் கவனித்துவந்தேன். என் கணவரிடம் குதிரையொன்று இருந்தது. அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பைப் போன்று வேறெந்தப் பணியும் எனக்குக் கடினமானதாக இருக்கவில்லை. அதற்காக நானே புற்பூண்டுகள் திரட்டுவேன்; அதைப் பராமரிப்பேன்; அதை நானே மேய்ப்பேன்.
பிறகு எனக்கு (என் தந்தை அபூபக்ர் மூலம், பெண்) ஊழியர் ஒருவர் கிடைத்தார். நபி (ஸல்) அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் வந்தபோது, அவர்களில் (பெண்) ஊழியர் ஒருவரை எனக்கு (என் தந்தை வழியாகக்) கொடுத்தார்கள். அந்தப் பெண் (ஊழியர்) குதிரையைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்தார்.
(இந்நிலையில்) ஒரு மனிதர் என்னிடம் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறி (அனுமதி கோரி)னார். நான் "உங்களுக்கு அனுமதி அளித்தால் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் அதை மறுப்பார். எனவே, (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் (வீட்டில்) இருக்கும்போது நீங்கள் வந்து (இது போன்று) அனுமதி கேளுங்கள்" என்று கூறினேன்.
அவ்வாறே அம்மனிதர் வந்து, "அப்துல்லாஹ்வின் அன்னையே! நான் ஓர் ஏழை. நான் தங்கள் வீட்டு நிழலில் வியாபாரம் செய்ய விரும்புகிறேன்" என்று கேட்டார். உடனே நான் (அவருக்கு மறுப்புத் தெரிவிப்பது போல்) மதீனாவில் உமக்கு என் வீட்டைத் தவிர வேறிடம் கிடைக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அப்போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம், "உனக்கு என்ன ஆயிற்று? ஓர் ஏழை வியாபாரி (நமது வீட்டு நிழலில்) வியாபாரம் செய்வதை நீ ஏன் தடுக்கிறாய்?" என்று கேட்டார். பிறகு அவர் வியாபாரம் செய்து (நல்ல) வருமானத்தைத் தேடிக் கொண்டார்.
அவருக்கே (எனது) அந்த அடிமைப் பெண்ணை நான் விற்றேன். அந்தக் காசை நான் எனது மடியில் வைத்துக்கொண்டிருந்த போது (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து, "அதை எனக்கு அன்பளிப்பாக வழங்கு" என்று கேட்டார். நான் "இதை ஏற்கெனவே தர்மமாக அளி(க்கத் தீர்மானி)த்து விட்டேன்" என்று கூறினேன்.
அத்தியாயம் : 39
பாடம் : 15 (மூவர் உள்ள இடத்தில் அவர்களில்) ஒருவரை விட்டுவிட்டு, அவரது சம்மதமின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசுவது தடை செய்யப்பட்டதாகும்.
4399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூவர் இருக்கும்போது ஒருவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்;நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும்வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாம)வரை வருத்தமடையச் செய்யும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4401. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது உங்கள் நண்ப(ர் ஒருவ)ரை விட்டுவிட்டு, இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். அ(வ்வாறு பேசுவ)து அவரை வருத்தமடையச் செய்யும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 16 மருத்துவமும் நோயும் ஓதிப்பார்த்தலும்.
4402. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள், "பிஸ்மில்லாஹி யுப்ரீக்க, வ மின் குல்லி தாயின் யஷ்ஃபீக்க, வ மின் ஷர்ரி ஹாசிதின் இதா ஹசத, வ ஷர்ரி குல்லி தீ அய்னின்" என்று ஓதிப்பார்ப்பார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (ஓதிப் பார்க்கிறேன்). அவன் உங்களுக்கு குணமளிப்பானாக! அனைத்து நோயிலிருந்தும் உங்களுக்குச் சுகமளிப்பானாக. பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது ஏற்படும் தீமையிலிருந்தும் கண்ணேறு உள்ள ஒவ்வொருவரின் தீமையிலிருந்தும் (காப்பானாக!).
அத்தியாயம் : 39
4403. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்தபோது அவர்)களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். அப்போது, "பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க" என்று ஓதிப்பார்த்தார்கள்.
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப்பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்.)
அத்தியாயம் : 39
4404. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணேறு உண்மையாகும்.
அத்தியாயம் : 39
4405. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணேறு உண்மையாகும். தலைவிதியை ஏதேனும் ஒன்று வெல்ல முடியுமானால், கண்ணேறு அதை வென்றிருக்கும். (கண்ணேறுக்குக் காரணமான) உங்களிடம் குளித்துக் கொள்ளுமாறு கோரப்பட்டால் குளித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 17 சூனியம்.
4406. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அல்அஃஸம் எனப்படும் யூதன் ஒருவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்துவிட்டான். இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் அல்லது ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள்.
பிறகு கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர்.
என் தலைமாட்டில் இருந்தவர் என் கால்மாட்டில் இருந்தவரிடம், அல்லது கால்மாட்டில் இருந்தவர் என் தலைமாட்டில் இருந்தவரிடம் "இந்த மனிதருக்கு என்ன நோய்?" என்று கேட்டார். மற்றவர், "சூனியம் செய்யப்பட்டுள்ளார்" என்று சொன்னார். அதற்கு அவர், "யார் அவருக்குச் சூனியம் வைத்தார்?" என்று கேட்டார். மற்றவர், "லபீத் பின் அல்அஃஸம்" என்று பதிலளித்தார். அவர், "எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?" என்று கேட்க, மற்றவர், "சீப்பிலும் சிக்கு முடியிலும்" என்று பதிலளித்தார். மேலும், ஆண் பேரீச்சம்பாளையின் உறையில் என்றும் கூறினார்.
அவர், "எங்கே அ(ந்தச் சூனியம் வைக்கப்பட்டுள்ள)து?" என்று கேட்க, மற்றவர், "தூ அர்வான்" குலத்தாரின் கிணற்றி(லுள்ள கல் ஒன்றின் அடியி)ல் என்று பதிலளித்தார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அங்கு சென்றார்கள்.
பிறகு (என்னிடம்), "ஆயிஷா! அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தன" என்று சொன்னார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே? அதைத் தாங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "இல்லை; அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். மக்களிடையே தீமையைப் பரப்ப நான் விரும்பவில்லை. எனவே, அதை நான் புதைத்துவிடும் படி கட்டளையிட்டுவிட்டேன். அவ்வாறே புதைக்கப்பட்டுவிட்டது" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 39
4407. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்று அந்தக் கிணற்றைப் பார்த்தார்கள். கிணற்றருகில் பேரீச்ச மரங்கள் இருந்தன" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் நான், "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் பிரித்துக் காட்டுங்கள்" எனக் கேட்டேன் என்றே காணப்படுகிறது. "அதைத் தாங்கள் எரித்திருக்கக் கூடாதா?" என்று கேட்டதாகவோ, "அதை நான் புதைத்துவிடும்படி கட்டளையிட்டேன். அவ்வாறே அது புதைக்கப்பட்டு விட்டது" என்று கூறியதாகவோ இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
பாடம் : 18 விஷம்.
4408. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதப் பெண் ஒருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை (அன்பளிப்பாக)க் கொண்டுவந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். பிறகு அவள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அவளிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தர்கள்.
அப்போது அவள், "நான் உங்களைக் கொல்ல விரும்பினேன்" என்றாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதற்காக, அல்லது எனக்கெதிராக அல்லாஹ் உன்னைச் சாட்டியிருக்க வில்லை" என்று கூறினார்கள். மக்கள், "அவளை நாங்கள் கொன்றுவிடலாமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்நாக்குச் சதையில் அ(ந்த விஷத்தின் அடையாளத்)தை நான் தொடர்ந்து பார்த்துவந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யூதப் பெண் ஒருத்தி இறைச்சியில் விஷத்தை வைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தாள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 39
பாடம் : 19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.
4409. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒரு மனிதர் நோய்வாய்ப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு, "அத்ஹிபில் பாஸ ரப்பந் நாஸ். வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்" (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை) என்று பிரார்த்திப்பார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது உடல் கனத்து விட்டபோது, அவர்கள் செய்துவந்ததைப் போன்றே செய்வதற்காக அவர்களது கையை நான் பிடித்தேன். உடனே அவர்கள் எனது கையிலிருந்து தமது கையை உருவிக்கொண்டு விட்டுப் பிறகு, "இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக! மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக" என்று கூறினார்கள். நான் அவர்களை உற்றுப் பார்த்தபோது அவர்களது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹுஷைம், ஷுஅபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், (அவர்களது "வலக் கரத்தால்" தடவினார்கள் என்பதற்குப் பதிலாக) "அவர்கள் தமது கரத்தால் தடவினார்கள்" என்று (பொதுவாக) இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் தமது வலக் கரத்தால் தடவினார்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 39
4410. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், "அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ். இஷ்ஃபிஹி. அன்த்ததஷ் ஷாஃபீ. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்" என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.)
அத்தியாயம் : 39
4411. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயாளி ஒருவரிடம் சென்றால், "அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ், வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்" என்று அவருக்காகப் பிரார்த்திப்பார்கள்.
(பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவருக்காகப் பிரார்த்தித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அதில் ("அன்த்தஷ் ஷாஃபீ" என்பதற்குப் பதிலாக) "வ அன்த்தஷ் ஷாஃபீ" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4412. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அத்ஹிபில் பாஸ, ரப்பந் நாஸ். பி யதிகஷ் ஷிஃபாஉ. லா காஷிஃப லஹு இல்லா அன்த்த" (மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்குவாயாக. உன் கரத்திலேயே நிவாரணம் உள்ளது. உன்னைத் தவிர நோயை நீக்குபவர் வேறெவரும் இல்லை) என்று ஓதிப்பார்ப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பதும் ஓதி ஊதுவதும்.
4413. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வீட்டாரில் யாரேனும் நோய்வாய்ப்பட்டு விட்டால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ("அல்முஅவ்விதாத்") ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள்மீது ஊதி அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4414. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களை ஓதித் தம்மீது ஊதிக்கொள்வார்கள். அவர்களது (இறப்புக்கு முன்) நோய் கடுமையானபோது, நான் அவற்றை ஓதி அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே (அவர்களின் உடல்மீது) தடவிக் கொண்டிருந்தேன். நபியவர்களின் கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் எந்த அறிவிப்பிலும் "அவர்களது கரத்திற்குள்ள வளத்தை (பரக்கத்தை) நாடியே அவ்வாறு செய்தேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே அவ்வாறு இடம்பெற்றுள்ளது.
யூனுஸ், ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களைத் தமது கையில் ஓதி ஊதி, அதைத் தம்மீது தடவிக்கொள்வார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத்தக்கதாகும்.
4415. அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஓதிப்பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு ஒவ்வொரு விஷக்கடிக்கும் ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 39
4416. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக்கடிக்கு (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 39
4417. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யாரேனும் ஒரு) மனிதருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அல்லது கொப்புளமோ காயமோ ஏற்பட்டால், தமது ஆட்காட்டி விரலைப் பூமியில் வைத்து (மண்ணைத் தொட்டு) விட்டு அதை உயர்த்தி, "அல்லாஹ்வின் பெயரால்! எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் நோயுற்றிருப்பவரைக் குணப்படுத்தும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("குணப்படுத்தும்" என்பதைக் குறிக்க) "யுஷ்ஃபா" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "லி யுஷ்ஃபா சகீமுனா" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4418. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுக்காக ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4419. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுக்காக ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்.
அத்தியாயம் : 39
4420. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஓதிப்பார்த்தல் குறித்துக் கூறியதாவது:
விஷக்கடி, சின்னம்மை, கண்ணேறு ஆகியவற்றுக்காக (ஓதிப்பார்ப்பதற்கு) அனுமதியளிக்கப் பட்டுள்ளது.
அத்தியாயம் : 39
4421. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறு, விஷக்கடி, சின்னம்மை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4422. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த ஒரு சிறுமியின் முகத்தில் படர்தாமரை இருப்பதைப் பார்த்துவிட்டு, "இவளுக்குக் கண்ணேறுபட்டிருக்கிறது. எனவே, இவளுக்கு ஓதிப்பாருங்கள்" என்று சொன்னார்கள். அதாவது அவள் முகத்தில் மஞ்சள் நிறத்தில் படர்தாமரை இருப்பதைக் கண்டார்கள்.
அத்தியாயம் : 39
4423. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்த்துக்கொள்ள "ஹஸ்ம்" குடும்பத்தாருக்கு அனுமதியளித்தார்கள். மேலும்,அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களிடம், "என் சகோதரர் (ஜஅஃபரின்) மக்களுடைய உடல்களை நான் மெலிந்திருக்கக் காண்கிறேனே ஏன்? அவர்கள் வறுமையில் வாடுகின்றனரா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், "இல்லை; கண்ணேறு அவர்களை வேகமாகப் பாதிக்கிறது" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள். நான் அவர்களிடம் (ஒரு துஆவை) எடுத்துரைத்தேன். நபி (ஸல்) அவர்கள் "(அதையே) அவர்களுக்கு ஓதிப்பார்ப்பீராக" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4424. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பாம்புக்கடிக்கு ஓதிப் பார்ப்பதற்கு "பனூ அம்ர்" குலத்தாருக்கு அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும் ஜாபிர் (ரலி) அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது எங்களில் ஒருவரைத் தேள் கொட்டிவிட்டது. அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்" என்றார்கள் என்றும் கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்களில் ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா (அர்கீஹி)?" என்று கேட்டார்"என்று இடம்பெற்றுள்ளது. "நான் ஓதிப்பார்க்கட்டுமா (அர்கீ)" எனும் வாசகம் இல்லை.
அத்தியாயம் : 39
4425. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாய் மாமன் ஒருவர் தேள்கடிக்காக ஓதிப்பார்த்துவந்தார். இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்ப்பதற்குத் தடை விதித்துவிட்டார்கள். எனவே, அவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை செய்தீர்கள். நான் தேள்கடிக்காக ஓதிப்பார்த்துவருகிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடிந்தால் அவ்வாறே செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4426. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். அப்போது அம்ர் பின் ஹஸ்ம் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தேள்கடிக்காக ஓதிப்பார்க்கும் வழக்கம் எங்களிடம் இருந்தது. (ஆனால்,) தாங்களோ ஓதிப்பார்க்க வேண்டாமெனத் தடை விதித்துவிட்டீர்கள்!" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அ(வர்கள் ஓதிப்பார்த்துவ)ந்த வாசகத்தைக் கூறுமாறு கேட்டார்கள். அவர்கள் அ(ந்த வாசகத்)தைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் (இதில்) குறையெதையும் காணவில்லை. உங்களில் ஒருவரால் தம் சகோதரருக்குப் பயனளிக்க முடியுமானால் அவ்வாறே பயனளிக்கட்டும்!"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 22 (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லாத வரை ஓதிப்பார்ப்பதில் குற்றமில்லை.
4427. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பிக்கும் வாசகம் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 23 குர்ஆன், அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்கள் ஆகியவற்றால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம்.
4428. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் ஒரு பயணத்தின் போது ஓர் அரபுக் குலத்தாரைக் கடந்துசென்றார்கள். அவர்கள் அக்குலத்தாரிடம் விருந்தளிக்குமாறு கோரியும் அவர்கள் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் (அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது). அப்போது அவர்கள் (நபித்தோழர்களிடம்) "உங்களிடையே ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? ஏனெனில், (எங்கள்) குலத்தின் தலைவர் தேள்கடிக்கு உள்ளாகி இருக்கிறார்" என்று கூறினர்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "ஆம்" என்று கூறிவிட்டு, அவரிடம் சென்று அவருக்கு "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தின் மூலம் ஓதிப்பார்த்தார். உடனே அவர் குணமடையவும் செய்தார். (ஓதிப்பார்த்த நபித்தோழருக்கு) ஓர் ஆட்டு மந்தை (சன்மானமாகக்) கொடுக்கப்பட்டது. அத்தோழர் அதை ஏற்க மறுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூ(றி அனுமதிபெ)றாத வரை (நான் ஏற்கமாட்டேன்)" என்று கூறிவிட்டார்.
அவ்வாறே அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். "அல்லாஹவின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! "அல்ஃபாத்திஹா" மூலமாகத்தான் நான் ஓதிப்பார்த்தேன்" என்று கூறினார்.
அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். மேலும், "அது (அந்த அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தகுந்தது என்பது உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டுவிட்டு, "அவர்களிடமிருந்து அ(ந்தச் சன்மானத்)தைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுடன் எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அந்த நபித்தோழர் "குர்ஆனின் அன்னை" எனப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஊதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அந்த மனிதர் வலி நீங்கி குணமடைந்தார்" என்று அபூபிஷ்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4429. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஒரு பெண் எங்களிடம் வந்து, "எங்கள் கூட்டத் தலைவரை தேள் கொட்டிவிட்டது. அவர் உடல் நலிவுற்றுள்ளார். ஓதிப் பார்ப்பவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறாரா?" என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒரு மனிதர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்துக்கூட ("நழுன்னுஹு") பார்த்ததில்லை. அவர் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்க்க, அந்தத் தலைவர் குணமடைந்து விட்டார். ஆகவே, அவருக்குச் சில ஆடுகளை வழங்கியதோடு எங்களுக்குப் பருகுவதற்குப் பாலும் கொடுத்தனர்.
(அந்த நண்பர் திரும்பி வந்தபோது) அவரிடம், "உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?" என்று கேட்டோம். அவர், "அவருக்கு நான் "அல்ஃபாத்திஹா" அத்தியாயத்தைத்தான் ஓதிப் பார்த்தேன்" என்று சொன்னார். அவரிடம் நான், "நபி (ஸல்) அவர்களிடம் செல்லும்வரை இதை அசைத்துவிடாதீர்கள்" என்று சொன்னேன்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அதைப் பற்றி அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "அது (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்; அதில் ஒரு பங்கை எனக்கும் ஒதுக்குங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், "அவளுடன் எங்களில் ஒரு மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட ("நஃபின்ஹு") இல்லை" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 24 (நோய்க்காகப்) பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது விரும்பத்தக்கதாகும்.
4430. நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, "பிஸ்மில்லாஹ்" என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை "அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு" என்று சொல்வீராக" என்றார்கள்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 25 தொழுகையில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தக்கூடிய ஷைத்தானிடமிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரல்.
4431. அபுல்அலாஉ அல்ஆமிரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! (நான் தொழுது கொண்டிருக்கும்போது) எனக்கும் எனது தொழுகைக்கும் எனது ஓதலுக்குமிடையே ஷைத்தான் தடையாய் நின்று எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்" என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன்தான் "கின்ஸப்" எனப்படும் ஷைத்தான் ஆவான். அவனை நீங்கள் உணர்ந்தால் அவனிடமிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் கோரி, உங்கள் இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிடுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் செய்தபோது, என்னிடமிருந்து அவனை அல்லாஹ் அப்புறப்படுத்திவிட்டான்.
- மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் "மூன்று தடவை" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அபில்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 26 ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு என்பதும் மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
4432. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4433. ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு "நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் விடமாட்டேன். ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதில் நிவாரணம் உள்ளது" என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4434. ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் எங்கள் வீட்டாரிடம் வந்தார்கள். அப்போது (எங்கள் வீட்டில்) ஒருவருக்குக் கொப்புளம் அல்லது காயம் ஏற்பட்டிருந்தது. ஜாபிர் (ரலி) அவர்கள், "உமது உடம்புக்கு என்ன?" என்று கேட்டார்கள். அவர், "கொப்புளம் ஏற்பட்டு எனக்குக் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
உடனே அவர்கள், "இளைஞரே! குருதி உறிஞ்சி எடுப்பவரை அழைத்துவருவீராக" என்றார்கள். அதற்கு அவர், "அபூஅப்தில்லாஹ் அவர்களே! குருதி உறிஞ்சி எடுப்பவரை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் "குருதி உறிஞ்சும் கருவியை இ(ந்தக் கொப்புளத்)தில் பொருத்தப்போகிறேன்"என்றார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஈக்கள் என்னைத் துன்புறுத்துகின்றன; அல்லது ஆடை அதில் பட்டு என்னை வேதனைப்படுத்துகிறது. அதுவே என்னைச் சிரமப்படுத்துகிறது. (இந்நிலையில் குருதி உறிஞ்சும் கருவியைப் பொருத்தினால் என்னால் தாங்க முடியாது)" என்றார்.
அவர் சடைந்துபோவதைக் கண்ட ஜாபிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் இருக்கிறதென்றால், (நோயின் தன்மைக்கு ஏற்றபடி) குருதி உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்துவது, அல்லது நெருப்பால் சூடிடுவதில்தான் அது உள்ளது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஆயினும்) சூடிடுவதை நான் விரும்பவில்லை"என்று கூறினார்கள் என்றார்கள்.
அவ்வாறே குருதி உறிஞ்சி எடுப்பவர் வந்து காயத்தைக் கீறி குருதி உறிஞ்சி எடுத்தார். அந்த இளைஞருக்கு ஏற்பட்டிருந்த வலி நீங்கியது.
அத்தியாயம் : 39
4435. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் குருதி உறிஞ்சி எடுக்குமாறு அபூதைபாவுக்குக் கட்டளையிட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அபூதைபா, உம்மு சலமா (ரலி) அவர்களுக்குப் பால்குடிச் சகோதரராக, அல்லது பருவ வயதை அடையாத இளவலாக இருந்தார் என்றும் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4436. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் மருத்துவர் ஒருவரை அனுப்பிவைத்தார்கள். அவர் உபை பின் கஅப் (ரலி) அவர்களின் நரம்பு ஒன்றைத் துண்டித்து (குருதியை வடியச் செய்து,பின்னர்) அதன்மீது சூடிட்டார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவர், உபை பின் கஅப் (ரலி) அவர்களின் நரம்பு ஒன்றைத் துண்டித்தார்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4437. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அகழ்ப்போரின்போது உபை பின் கஅப் (ரலி) அவர்களின் நாடி நரம்பில் அம்பு பாய்ந்து விட்டது. (இரத்தம் நிற்பதற்காகக் காயத்தின்மீது) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூடிட்(டுக் கொள்ளுமாறு உத்தரவிட்)டார்கள்.
அத்தியாயம் : 39
4438. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அகழ்ப்போரின்போது) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் நாடி நரம்பில் அம்பு பாய்ந்து விட்டது. (இரத்தம் நிற்பதற்காக) நபி (ஸல்) அவர்கள் தமது கையிலிருந்த கத்தியால் அதன்மீது சூடிட்டார்கள். பிறகு அந்தக் காயம் வீங்கிவிட்டது. எனவே, மீண்டும் அதன்மீது சூடிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4439. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நாவிதர் ஒருவர் மூலம்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். நாவிதருக்கு அதற்குரிய கூலியைக் கொடுத்தார்கள். மேலும், மூக்கில் சொட்டு மருந்து இட்டுக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 39
4440. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். எவரது கூலியிலும் அவர்கள் அநீதி இழைத்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4441. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடுமையான காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4445. ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் காய்ச்சல் ஏற்பட்ட பெண் கொண்டுவரப்பட்டால், தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவளது சட்டையின் கழுத்துப் பகுதியில் ஊற்றி விடுவார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "காய்ச்சலைத் தண்ணீரால் தணியுங்கள். (ஏனெனில்) காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது" என்று கூறினார்கள்" என்றும் சொல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தண்ணீரை எடுத்து அவளது ஆடையின் உட்பகுதியில் ஊற்றினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "காய்ச்சல், நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல், நரகத்தின் கடுமையான கொதிப்பால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடுமையான கொதிப்பால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக் கொள்ளுங்கள்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களைவிட்டு" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
பாடம் : 27 (நோயாளியை வற்புறுத்தி, அல்லது அவர் மயக்கத்திலிருக்கும்போது) வாய் ஓரத்தில் மருந்தூற்றி சிகிச்சையளிப்பது வெறுக்கத் தக்கதாகும்.
4448. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்று (அரை மயக்கத்தில்) இருந்தபோது, அவர்களது வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் "மருந்து ஊற்ற வேண்டாம்" என்று எங்களுக்குச் சைகை செய்தார்கள். "நோயாளி மருந்தை வெறுப்பது போன்று தான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)" என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது, "ஒருவரும் விடுபடாமல் (வீட்டிலுள்ள) அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்; அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (என் வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 28 இந்தியக் குச்சியால் சிகிச்சையளிப்பது; அதுவே கோஷ்டக் குச்சி (அல்லது அகில்) ஆகும்.
4449. உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரி உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தமது மடியில் உட்காரவைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள்.
உம்முகைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையுடன் சென்றேன். அப்போது (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.
(இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியைப் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஓரத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4450. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் கட்ட ஹிஜ்ரத் மேற்கொண்டவர்களில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரும் உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு சாப்பிடும் பருவத்தை அடையாத என்னுடைய ஆண் குழந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குழந்தைக்கு அடிநாக்கு அழற்சி ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சி தொண்டையில் திரியை அழுத்திவைத்திருந்தார்).
(இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்தியக் குச்சியை (அதாவது கோஷ்டக் குச்சியை)ப் பயன்படுத்துங்கள். அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியும் ஒன்றாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு கைஸ் (ரலி) அவர்கள், "அந்த ஆண் குழந்தைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்தது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அந்தச் சிறுநீர் மீது தெளித்துவிட்டார்கள். நன்கு (தண்ணீர் ஊற்றிக்) கழுவவில்லை" என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 29 கருஞ்சீரகத்தால் சிகிச்சையளிப்பது.
4451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கருஞ்சீரகத்தில் "சாமை"த் தவிர, அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா, யூனுஸ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் கருஞ்சீரகத்துக்கு (பாரசீக மொழியில் அளிக்கப்பட்டுள்ள) "ஷூனீஸ்" எனும் விளக்கம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த நோயானாலும் அதற்குக் கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 30 "தல்பீனா" (எனும் பால் பாயசம்) நோயாளியின் மனதுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.
4453. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால்,அதற்காகப் பெண்கள் ஒன்றுகூடுவர். பிறகு ஆயிஷா (ரலி) அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்றப் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள்.
அப்போது ஒரு பாத்திரத்தில் "தல்பீனா" (எனும் பால் பாயசம்) தாயரிக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு "ஸரீத்" எனும் (ரொட்டித் துண்டுகளைக் கறிக்குழம்பில் இட்டுத் தயாரிக்கப்படும் "தக்கடி" எனும்) உணவு தயாரிக்கப்படும். அதில் "தல்பீனா" ஊற்றப்படும்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், தல்பீனா (எனும் பாயசம்) நோயாளியின் மனதுக்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்" என்று சொல்வார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 31 தேனூட்டி சிகிச்சையளிப்பது.
4454. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "என் சகோதரருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அவருக்குத் தேன் ஊட்டுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் தேனூட்டிவிட்டுப் பிறகு (மீண்டும்) வந்து, "அவருக்கு நான் தேனூட்டினேன். ஆனால், வயிற்றுப்போக்கு அதிகரிக்கவே செய்தது" என்று சொன்னார். இவ்வாறே (தேனூட்டுமாறு) மூன்று தடவை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான்காவது தடவை அவர் வந்தபோது "அவருக்குத் தேன் ஊட்டுங்கள்" என்று கூறினார்கள். அப்போதும் அவர், "அவருக்கு நான் தேனூட்டவே செய்தேன்; வயிற்றுப்போக்கு அதிகரிக்கவே செய்தது" என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. (அவருக்குத் தேன் ஊட்டுங்கள்)"என்று சொன்னார்கள். அம்மனிதர் மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் சகோதரரின் இரைப்பை கெட்டுவிட்டது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தேன் ஊட்டுங்கள்" என்று கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
பாடம் : 32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை.
4455. ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளைநோயைப் பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உசாமா (ரலி) அவர்கள், "கொள்ளைநோய் என்பது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது"அல்லது "உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது" (அவர்களின் குற்றங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) "தண்டனை" அல்லது "வேதனை" ஆகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் வந்துவிட்டால் அதிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து வெளியேறிச் செல்லாதீர்கள்" என்று சொன்னார்கள்" எனப் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
அதிலிருந்து தப்பியோடும் நோக்கத்துடன் மட்டுமே நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்குத் தடையில்லை.)
அத்தியாயம் : 39
4456. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொள்ளைநோய் என்பது தண்டனையின் அடையாளமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் அடியார்களில் (தான் நாடிய) சிலரைச் சோதிக்கின்றான். அது (ஓர் ஊரில் இருப்பது) குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து வெருண்டோடாதீர்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இது அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்), குதைபா (ரஹ்) உள்ளிட்டோரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வாசகமாகும்.
அத்தியாயம் : 39
4457. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தக் கொள்ளைநோய் "உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது" அல்லது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது" சாட்டப்பட்ட தண்டனையாகும். (நீங்கள் வசிக்கும்) ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள். ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4458. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் கொள்ளைநோய் பற்றிக் கேட்டார்.
அப்போது (அங்கிருந்த) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதைப் பற்றி உமக்கு நான் தெரிவிக்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார்மீது" அல்லது "உங்களுக்கு முன்னர் இருந்த சிலர்மீது" அல்லாஹ் அனுப்பிய "வேதனை"அல்லது "தண்டனை" ஆகும். அது ஓர் ஊரில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். அது உங்களிடம் (உங்கள் ஊருக்குள்) வந்துவிட்டால் (அதிலிருந்து) தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த (கொள்ளை) நோய் ஒரு தண்டனையாகும். அதன்மூலம் உங்களுக்கு முன்னிருந்த சில சமுதாயத்தார் வேதனை செய்யப்பட்டனர். பின்னர் அதில் சிறிதளவு பூமியில் எஞ்சிவிட்டது. எனவே, அது ஒருமுறை வரும். ஒருமுறை போகும். ஆகவே, அது ஓர் ஊரில் இருப்பதாகக் கேள்விப்படுபவர், அங்கு செல்லவே வேண்டாம். அது ஏற்பட்டிருக்கும் ஊரில் வசிப்பவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக (அங்கிருந்து) வெளியேறவே வேண்டாம்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4460. ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மதீனாவில் இருந்தபோது கூஃபாவில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக எனக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அதாஉ பின் யசார் (ரஹ்) உள்ளிட்டோர் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீ ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டுவிட்டால் அங்கிருந்து நீ வெளியேறாதே! அது ஓர் ஊரில் ஏற்பட்டிருப்பதாக உனக்குச் செய்தி கிடைத்தால், அங்கு நீ செல்லாதே" எனக் கூறினார்கள்" என்றனர்.
நான், "யாரிடமிருந்து (இதை நீங்கள் செவியுற்றீர்கள்)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆமிர் பின் சஅத் பின் அபீவக் காஸ் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்" என்று பதிலளித்தார்கள். உடனே நான் ஆமிர் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர் வெளியூர் சென்றிருப்பதாகக் கூறினர்.
ஆகவே, நான் ஆமிரின் சகோதரர் இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களைச் சந்தித்து அது குறித்துக் கேட்டேன். அப்போது இப்ராஹீம் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களுக்கு உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள். அங்கு நானுமிருந்தேன். உசாமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த (கொள்ளை)நோய் ஒரு தண்டனை, அல்லது வேதனை, அல்லது வேதனையின் மிச்சமாகும். அதன்மூலம் உங்களுக்கு முன்னிருந்த சிலர் வேதனை செய்யப்பட்டனர். நீங்கள் ஓர் ஊரில் இருக்க, அங்கு கொள்ளைநோய் ஏற்பட்டு விட்டால், அங்கிருந்து நீங்கள் வெளியேறிச் செல்லாதீர்கள். அது ஓர் ஊரில் ஏற்பட்டிருப்பதாக உங்களுக்குச் செய்தி கிடைத்தால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து அறிவிப்பாளர் ஹபீப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உடனே நான் இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களிடம், "உசாமா (ரலி) அவர்கள் (உங்கள் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் இதை அறிவித்தபோது நீங்கள் கேட்டீர்களா? சஅத் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லையா?" என்று கேட்டேன்.
அதற்கு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், "ஆம் (சஅத் (ரலி) அவர்கள் அதை மறுக்கவில்லை)" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில் ஹதீஸின் ஆரம்பத்தில் உள்ள அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் சஅத் பின் மாலிக் (ரலி), குஸைமா பின் ஸாபித் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி) ஆகிய மூன்று நபித்தோழர்கள் வழியாகவும் (மூன்று அறிவிப்பாளர் தொடர்களில்) வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் சஅத் (ரலி) அவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதை) அறிவித்தனர்" என்று இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்ராஹீம் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4461. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (மக்களின் நிலையை ஆராய்வதற்காக) ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். "சர்ஃக்" எனும் இடத்தை அடைந்த போது, (மாகாண) படைத்தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது எனறு தெரிவித்தனர்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், "ஆரம்பக்கால முஹாஜிர்களை என்னிடம் அழைத்து வாருங்கள்" என்று சொல்ல,அவர்களை நான் (உமர் (ரலி) அவர்களிடம்) அழைத்துவந்தேன். அவர்களிடம் ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியுள்ளது என்று தெரிவித்து (அங்கு போகலாமா? மதீனாவுக்கே திரும்பிச் சென்றுவிடலாமா? என்று) ஆலோசனை கேட்டார்கள்.
இது தொடர்பாக முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களில் சிலர், "தாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் புறப்பட்டுவிட்டீர்கள். அதிலிருந்து பின்வாங்குவதை நாங்கள் உசிதமாகக் கருதவில்லை" என்று சொன்னார்கள்.
வேறுசிலர், "உங்களுடன் (மற்ற) மக்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களும் உள்ளனர். அவர்களையெல்லாம் இந்தக் கொள்ளைநோயை நோக்கிக் கொண்டுசெல்வதை நாங்கள் சரியென்று கருதவில்லை" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள் "நீங்கள் போகலாம்" என்று சொல்லிவிட்டுப் பிறகு, "என்னிடம் (மதீனாவாசிகளான) அன்சாரிகளை அழைத்து வாருங்கள்" என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துவந்தேன். அவர்களிடமும் உமர் (ரலி) அவர்கள் ஆலோசனை கேட்டார்கள். அவர்களும் முஹாஜிர்களைப் போன்றே கருத்துத் தெரிவித்துக் கருத்து வேறுபாடு கொண்டனர். உமர் (ரலி) அவர்கள் "நீங்களும் போகலாம்" என்று கூறினார்கள்.
பிறகு, "மக்கா வெற்றி ஆண்டில் (மதீனாவுக்குப்) புலம்பெயர்ந்துவந்த குறைஷிப் பெரியவர்களில் யார் இங்கு உள்ளனரோ அவர்களை என்னிடம் அழைத்துவாருங்கள்" என்று சொல்ல, நான் அவர்களை அழைத்துவந்தேன். அவர்களில் எந்த இருவருக்கிடையேயும் கருத்து வேறுபாடு எழவில்லை. அவர்கள் (அனைவரும்) மக்களுடன் நீங்கள் (மதீனாவுக்குத்) திரும்பிவிட வேண்டும்; அவர்களை இந்தக் கொள்ளைநோயை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது என நாங்கள் கருதுகிறோம்" என்று கூறினர்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள் மக்களிடையே "நான் காலையில் (என்) வாகனத்தில் (மதீனா) புறப்படப்போகிறேன்;நீங்களும் காலையில் பயணத்திற்குத் தயாராகுங்கள்" என்று அறிவிப்புச் செய்தார்கள்.
அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?" என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், "அபூ உபைதா! உங்களைத் தவிர வேறு எவரேனும் இவ்வாறு கூறியிருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். (உமர் (ரலி) அவர்கள், தமக்கு மாறாகக் கருத்துக் கூறுவதை வெறுப்பார்கள்.) ஆம். நாம் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம். உங்களிடம் ஓர் ஒட்டகம் இருந்து, அது ஒரு பக்கம் செழிப்பானதாகவும் மறு பக்கம் வறண்டதாகவும் உள்ள இருகரைகள் கொண்ட ஒரு பள்ளத்தாக்கில் இறங்கிவிட்டால், செழிப்பான கரையில் நீங்கள் அதை மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் அதை நீங்கள் மேய்க்கிறீர்கள். வறண்ட கரையில் அதை நீங்கள் மேய்த்தாலும் அல்லாஹ்வின் விதிப்படிதான் நீங்கள் மேய்க்கிறீர்கள், அல்லவா?" என்று கேட்டார்கள்.
அப்போது தமது தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து, "இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து தப்புவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்" என்று சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தமது முடிவை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப அமையச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு (மதீனாவுக்கு)த் திரும்பிச் சென்றார்கள்.
அத்தியாயம் : 39
4462. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேலும், உமர் (ரலி) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களிடம் "ஒருவர் செழிப்பான கரையை விட்டுவிட்டு வறண்ட கரையில் தமது ஒட்டகத்தை மேயவிட்டால் அவரைக் கையாலாகாதவர் என்று நீங்கள் கருதுவீர்களா, சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூஉபைதா (ரலி) அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் "அவ்வாறாயின் செல்லுங்கள்" என்று கூறிய அவர்கள்,பயணம் மேற்கொண்டு மதீனா வந்தடைந்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால் இதுதான் நமது தங்குமிடம்" என்று சொன்னார்கள்" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4463. அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். "சர்ஃக்" எனுமிடத்தை அவர்கள் அடைந்த போது ஷாம் நாட்டில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், "ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால்,அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளை நோய் பரவிவிட்டால், அதிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறாதீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "சர்ஃக்" எனுமிடத்திலிருந்து திரும்பினார்கள்.
இந்த ஹதீஸ், சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில் "அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நபிமொழியின் காரணத்தாலேயே உமர் (ரலி) அவர்கள் மக்களுடன் (மதீனாவுக்குத்) திரும்பிச் சென்றார்கள்" என்று சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 33 தொற்றுநோய், பறவை சகுனம், ஆந்தை பற்றிய நம்பிக்கை, "ஸஃபர்" எனும் வயிற்று நோய் (தொற்று நோய் என்பது) பற்றிய எண்ணம், நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகிறது எனும் நம்பிக்கை, வர்ணஜாலம் காட்டும் சாத்தான் பற்றிய நம்பிக்கை ஆகியன கிடையாது என்பதும், நோய் கண்ட ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டுசெல்லக் கூடாது என்பதும்.
4464. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது; ஸஃபர் (தொற்று நோய்) என்பது கிடையாது;ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது" என்று சொன்னார்கள். அப்போது கிராமவாசி ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்திரியும்) ஒட்டகங்களிடம், சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து, அவற்றுக்கிடையே கலந்து அவை அனைத்தையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச்செய்தது யார்?" என்று திருப்பிக் கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4465. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள். அப்போது ஒரு கிராமவாசி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி கேட்டார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
4466. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நபி (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது" என்று சொன்னார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளபடி கேட்டார்" என்று இடம் பெற்றுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள் தொற்று நோய் கிடையாது; ஸஃபர் (தொற்று நோய்) என்பது கிடையாது; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4467. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது" என்று கூறினார்கள் என்றும், "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
இவ்விரு ஹதீஸ்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். பிறகு "தொற்றுநோய் கிடையாது" எனும் ஹதீஸை அறிவிப்பதை நிறுத்திவிட்டு, "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்பதை மட்டும் அறிவிக்கலானார்கள்.
அப்போது (அபூஹுரைரா (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரரின் புதல்வர்) ஹாரிஸ் பின் அபீதுபாப் (ரஹ்) அவர்கள், "அபூஹுரைரா! இந்த ஹதீஸுடன் மற்றொரு ஹதீஸையும் நீங்கள் அறிவிப்பதை நான் கேட்டிருக்கிறேனே! ஆனால், அதை நீங்கள் அறிவிக்காமல் அமைதியாகிவிடுகிறீர்களே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது" என்று கூறினார்கள் என நீங்கள் அறிவித்து வந்தீர்களே?" என்று கேட்டார்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அது பற்றி தமக்குத் தெரியாது என்று மறுத்தார்கள். "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்பதை மட்டுமே கூறினார்கள்.
ஹாரிஸ், தாம் கூறுவதை ஏற்காததைக் கண்ட அபூஹுரைரா (ரலி) அவர்கள் கோபமுற்று அபிசீனிய மொழியில் ஏதோ சொன்னார்கள். "நான் என்ன சொன்னேன் என்று நீ அறிவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு ஹாரிஸ் "இல்லை"என்றார். அபூஹுரைரா (ரலி) அவர்கள் "நான் (அதை) மறுக்கிறேன்" என்றார்கள்.
அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! (முன்னர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொற்றுநோய் கிடையாது என்று கூறினார்கள்" என அறிவித்துவந்தார்கள். (அதை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் மறந்து விட்டார்களா? அல்லது நபிகளாரின் ஒரு ஹதீஸ் மற்றொரு ஹதீஸை மாற்றிவிட்டதா என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4468. மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அபூஹுரைரா (ரலி) அவர்கள் "தொற்றுநோய் கிடையாது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்துவிட்டு, "நோய் கண்ட கால்நடையை ஆரோக்கியமான கால்நடையிடம் கொண்டுசெல்லக் கூடாது" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கையும் (உண்மை) இல்லை; நட்சத்திர இயக்கத்தால்தான் மழை பொழிகிறது என்பதும் (உண்மை) இல்லை; ஸஃபர் (தொற்று நோய்) என்பதும் கிடையாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் "ஸஃபர் கிடையாது" என்பதற்கு விளக்கமளிக்கையில், "ஸஃபர் என்பது வயிறாகும்" என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம், "(அது) எப்படி?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "வயிற்றில் உருவாகும் ஒரு புழுவாகும் என்று சொல்லப் படுவதுண்டு" என்றார்கள்.
ஆனால், ஜாபிர் (ரலி) அவர்கள், ("வர்ண ஜாலம் காட்டும் சாத்தான்" என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) "ஃகூல்" என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. ஆயினும், பல வண்ணம் காட்டுவதே இந்த "ஃகூல்" என்பதாகும்.
இதை அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 34 பறவை சகுனமும் நற்குறியும் அபசகுனம் எதில் உள்ளது என்பதும்.
4473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்" என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது, "நற்குறி என்பது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீங்கள் செவியுறுகின்ற நல்ல (மங்கலகரமான) சொல்தான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "செவியுற்றேன்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஷுஐப் பின் அல்லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. (மங்கலகரமான) நல்ல, அழகான சொல்லே நற்குறி ஆகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4475. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது" என்று சொன்னார்கள். அப்போது "நற்குறி என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "(மங்கலகரமான) நல்ல சொல்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; (ஆனால்) நற்குறியை நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கை (உண்மை) இல்லை; பறவை சகுனம் ஏதும் கிடையாது. (ஆனால்,) நான் நற்குறியை விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனம் (இருப்பதென்றால்) மனை, மனைவி, புரவி (குதிரை) ஆகிய மூன்றில்தான் இருக்கும். - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருப்பதென்றால்) மூன்று விஷயங்களில்தான். மனைவியிலும் குதிரையிலும் (குடியிருக்கும்) வீட்டிலும்தான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபசகுனம் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களைத் தவிர வேறெவரது அறிவிப்பிலும் தொற்றுநோய், பறவை சகுனம் ஆகியவை பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 39
4480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனத்தில் ஏதேனும் உண்மை இருக்குமானால், குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும்தான் இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "உண்மை" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 39
4481. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனம் எதிலேனும் இருக்குமானால், குதிரையிலும் வீட்டிலும் மனைவியிலும்தான் இருக்கும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது -அதாவது அபசகுனம்- (எதிலேனும்) இருக்குமானால், மனைவியிலும் குதிரையிலும் வீட்டிலும்தான் இருக்கும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4483. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அ(பசகுனமான)து எதிலேனும் இருக்கு மானால், வீட்டிலும் பணியாளரிலும் குதிரையிலும் தான் இருக்கும்.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 35 சோதிடம் பார்ப்பதும் சோதிடர்களிடம் செல்வதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4484. முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்) கொண்டிருந்தோம்" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். மேலும், "நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக் கொண்டிருந்தோம்" என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், "இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதிலிருந்து) தடுத்துவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா பின் அல் ஹகம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பறவை சகுனம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது; சோதிடர்கள் பற்றிய குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், "எங்களில் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நபிமார்களில் ஒருவர் (இவ்வாறு) கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்று பதிலளித்தார்கள்" என முஆவியா பின் அல்ஹகம் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4485. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! சோதிடர்கள் (சில வேளைகளில்) எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகிவிடுவதைக் காண்கிறோமே (அது எப்படி)?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அது ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்ட உண்மையான சொல்லாகும். அ(ந்த உண்மையான கருத்)தை ஜின் தனது சோதிட நண்பனின் காதில் போட, அதனுடன் அவன் நூறு பொய்களைக் கூட்டி(ச் சொல்லி) விடுகிறான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 39
4486. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மக்களில் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (பொருட்படுத்தத்தக்க) ஒரு பொருள் அல்லர்" என்று சொன்னார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகிவிடுகிறதே?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த உண்மையான சொல் (வானவர்களிடமிருந்து) ஜின் (கள்ளத்தனமாக) எடுத்துக்கொண்டதாகும். அது தன் சோதிட நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகிறான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4487. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரி நபித்தோழர்களில் ஒருவர் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்:
ஒரு நாள் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (வானிலிருந்து) ஒரு நட்சத்திரம் எறியப்பட்டு ஒளிர்ந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் "இதைப் போன்று (வானிலிருந்து) நட்சத்திரம் எறியப்பட்டால், நீங்கள் அறியாமைக் காலத்தில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள். (அறியாமைக் காலத்தில் இவ்வாறு நட்சத்திரம் எறியப்பட்டால்) இன்றிரவு ஒரு மாமனிதர் பிறந்திருக்கிறார்; ஒரு மாமனிதர் இறந்திருக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தோம்" என்று பதிலளித்தனர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருடைய பிறப்புக்காகவோ யாருடைய இறப்புக்காகவோ அது எறியப்படுவதில்லை. மாறாக, வளமும் புகழும் கொண்ட நம் இறைவன் ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டால், அரியணையை (அர்ஷ்) சுமக்கும் வானவர்கள் இறைவனை(ப் போற்றி)த் துதிக்கின்றனர். பிறகு (அதைக் கேட்டு) அதற்கடுத்த வானிலுள்ள (வான)வர்களும் (இறைவனைப் போற்றித்) துதிக்கின்றனர். (இவ்வாறே ஒவ்வொரு வானிலுள்ள வானவர்கள் துதிக்கின்றனர்.) இறுதியில் அத்துதி பூமிக்கு அருகிலுள்ள வானவர்களை வந்தடைகிறது.
பின்னர் அரியணையைச் சுமக்கும் வானவர்களுக்கு அருகிலிருப்பவர்கள், அரியணையைச் சுமக்கும் வானவர்களிடம், "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று வினவுகின்றனர். அதற்கு அரியணையைச் சுமக்கும் வானவர்கள் இறைவன் என்ன சொன்னான் என்பதை அவர்களிடம் தெரிவிக்கின்றனர். உடனே வானிலிருப்போரில் சிலர் வேறுசிலரிடம் அது குறித்து விசாரித்துக் கொள்கின்றனர்.
முடிவில் அச்செய்தி பூமிக்கு அருகிலுள்ள வானத்தை வந்தடைகிறது. உடனே அதை ஜின்கள் ஒட்டுக்கேட்டு, அதைத் தம் (சோதிட) நண்பர்களிடம் போடுகின்றனர். (அப்போது) அவர்கள்மீது நட்சத்திரங்கள் எறியப்படுகின்றன. உள்ளது உள்ளபடி சோதிடர்கள் தெரிவிப்பது உண்மையாகும். ஆயினும், அவர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) கூறுகின்றனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அன்சாரி நபித்தோழர்கள் சிலர் கூறினர் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அவ்ஸாஈ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக (மக்களிடம்) அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆயினும், சோதிடர்கள் அதில் சேர்த்துக் கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று காணப்படுகிறது. மேலும், அவர்களது அறிவிப்பில், "அ(வ்வான)வர்களது அச்சம் விலகியதும் அவர்கள் "உங்கள் இறைவன் என்ன சொன்னான்?" என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் "உண்மையே சொன்னான்" என்று பதிலளிக்கின்றனர் (34:23)" என்று இடம்பெற்றுள்ளது.
மஅகில் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவ்ஸாஈயின் அறிவிப்பில் உள்ளதைப் போன்றே "ஆயினும், சோதிடர்கள் அதில் பொய்யைக் கலந்து கூடுதலாக அறிவிக்கின்றனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4488. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலரிடமிருந்து ஸஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 36 தொழுநோயாளிகள் போன்றோரிடமிருந்து விலகியிருப்பது.
4489. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் தூதுக்குழுவில் தொழுநோயாளி ஒருவர் இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நாம் உம்மிடம் உறுதிமொழி பெற்றுவிட்டோம். நீர் திரும்பிச் செல்லலாம்" என்று கூறியனுப்பினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 37 பாம்பு உள்ளிட்டவற்றைக் கொல்வது.
4490. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள ("துத் துஃப்யத்தைன்" எனும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்" என்று உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குட்டை வால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும், முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் கொல்லும் படி உத்தரவிட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4491. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பாம்புகளை(க் கொல்லுங்கள். குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் கர்ப்பத்தைக் கலைத்துவிடும்; பார்வையைப் பறித்துவிடும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(என் தந்தை) இப்னு உமர் (ரலி) அவர்கள் கண்ணில்படும் ஒவ்வொரு பாம்பையும் கொன்றுவந்தார்கள். (ஒரு நாள்) அவர்கள் பாம்பொன்றைக் விரட்டிக்கொண்டிருப்பதைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), அல்லது ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4492. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாய்களைக் கொல்லும்படி உத்தரவிடுவதை நான் கேட்டுள்ளேன். அவர்கள், "பாம்புகளையும் நாய்களையும் கொல்லுங்கள்; (குறிப்பாக) முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவை இரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவை இரண்டின் விஷத்தன்மை காரணமாகவே அவற்றைக் கொல்லும்படி உத்தரவிட்டுள்ளார்கள் என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் என் கண்ணில் படும் எந்தப் பாம்பையும் கொன்றுவந்தேன். இந்நிலையில் ஒரு நாள் வீட்டில் வசிக்கும் பாம்பொன்றை நான் விரட்டிக்கொண்டிருந்தேன். அப்போது என்னை ஸைத் பின் அல்கத்தாப் (ரலி), அல்லது அபூ லுபாபா (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். நான் அந்தப் பாம்பைத் தேடிக்கொண்டிருந்தேன்.
அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்வே, நிறுத்துங்கள் (அதைக் கொல்லாதீர்கள்)" என்று கூறினார்கள். நான் "அவற்றைக் கொல்லும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தர விட்டுள்ளார்கள்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாம் எனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4493. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இந்நிலையில் என்னைக் கண்ட அபூலுபாபா பின் அப்தில் முன்திர் (ரலி), ஸைத் பின் அல்கத்தாப் (ரலி) ஆகிய இருவரும், "வீடுகளில் வசிக்கும் பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள் என்று கூறினர்" என இடம்பெற்றுள்ளது.
யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பாம்புகளைக் கொல்லுங்கள்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. "முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் கொல்லுங்கள்" என்பது இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 39
4494. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களது வீட்டில் பள்ளிவாசலுக்குச் சமீபமாகச் செல்லும் வகையில் ஒரு வாசல் அமைப்பது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பேசினார்கள். (வாசலமைக்கும் பணி நடைபெற்றபோது) பணியாளர்கள் பாம்பின் சட்டையொன்றைக் கண்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "பாம்பைத் தேடிப் பிடித்துக் கொல்லுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு அபூலுபாபா (ரலி) அவர்கள், "அதைக் கொல்லாதீர்கள்; ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலுள்ள (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4495. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் எல்லாப் பாம்புகளையும் கொன்றுவந்தார்கள். அபூ லுபாபா பின் அப்தில் முன்திர் அல்பத்ரீ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளிலுள்ள பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறியதும் (அவற்றைக் கொல்வதை) நிறுத்திவிட்டார்கள்.
அத்தியாயம் : 39
4496. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறியதை நான் கேட்டேன்.
அத்தியாயம் : 39
4497. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4498. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூலுபாபா பின் அப்தில் முன்திர் அல்அன்சாரீ (ரலி) அவர்களது இல்லம் "குபா"வில் இருந்தது. பின்னர் அவர்கள் மதீனாவுக்குக் குடிபெயர்ந்தார்கள். (ஒரு நாள்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது வீட்டில்) வாசல் ஒன்றை அமைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது வீட்டில் வசிக்கும் பாம்பு ஒன்று வெளிப்பட்டது.
அங்கிருந்தவர்கள் அதைக் கொல்ல முற்பட்டனர். அப்போது அபூலுபாபா (ரலி) அவர்கள் அவற்றை (அதாவது வீடுகளில் வசிக்கும் பாம்புகளை)க் கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் கொல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவையிரண்டும் பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் (வயிற்றிலுள்ள) சிசுக்களைக் கலைத்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 39
4499. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு நாள் தமது கட்டட இடிபாடுகளுக்கு அருகிலிருந்த போது (மெல்லிய வெண்ணிறப்) பாம்பு ஒன்று மின்னுவதைக் கண்டார்கள். உடனே "இந்தப் பாம்பை விரட்டிப் பிடித்துக் கொல்லுங்கள்"என்று கூறினார்கள். (அங்கிருந்த) அபூலுபாபா அல்அன்சாரீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருக்கும் (மெல்லிய வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்ல வேண்டாமெனத் தடை செய்துள்ளார்கள்; குட்டைவால் (அல்லது வால் இல்லாத) பாம்பையும் முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் உள்ள பாம்பையும் தவிர. ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையைப் பறித்துவிடும்; பெண்களின் வயிற்றிலுள்ளதைக் கலைத்துவிடும் என்று கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (தம் தந்தை) உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு அருகிலுள்ள கோட்டையொன்றின் அருகில் பாம்பொன்றைத் தேடிக்கொண்டிருந்தபோது, அவர்களைக் கடந்து அபூலுபாபா (ரலி) அவர்கள் சென்றார்கள்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 39
4500. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்களுக்கு "வல்முர்சலாத்தி உர்ஃபன்" (ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) என்று தொடங்கும் (77ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது. அதை நாங்கள் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியுற்றுக்கொண்டிருந்தோம்.
அப்போது பாம்பு ஒன்று (புற்றிலிருந்து) வெளியேறி எங்களிடையே வந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "அதைக் கொல்லுங்கள்" என்றார்கள். உடனே அதைக் கொல்ல போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக்கொண்டு (தனது புற்றுக்குள் நுழைந்து)விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களை அதன் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றியதைப் போன்று, அதையும் உங்கள் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4501. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒருவருக்கு "மினா"வில் பாம்பு ஒன்றைக் கொல்ல உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (ஒரு நாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
4502. ஹிஷாம் பின் ஸுஹ்ரா (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமை அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது அவர்கள் தொழுதுகொண்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அவர்கள் தொழுகையை முடிக்கும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அப்போது வீட்டின் மூலையிலிருந்த பேரீச்சமர காய்ந்த குச்சிகளுக்கு இடையிலிருந்து ஏதோ அசையும் சப்தத்தை நான் கேட்டேன். உடனே நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே ஒரு பாம்பு இருந்தது. அதைக் கொல்வதற்காக நான் துள்ளிக் குதித்து எழுந்தேன்.
உடனே அபூசயீத் (ரலி) அவர்கள் அமருமாறு எனக்குச் சைகை செய்தார்கள். ஆகவே, நான் அமர்ந்துகொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபின் அவ்வீட்டிலிருந்த ஓர் அறையை எனக்குச் சுட்டிக்காட்டி, "இந்த அறையை நீர் காண்கிறீரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
இந்த அறையில் புதிதாகத் திருமணமான எங்கள் இளைஞர் ஒருவர் இருந்தார். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அகழ்ப்போருக்குப் புறப்பட்டுச் சென்றபோது, அந்த இளைஞர் நண்பகல் நேரங்களில் தம் வீட்டாரிடம் திரும்பிச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். (அவர் திரும்பிச் செல்லப்போனபோது) அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது ஆயுதத்தை உம்முடனேயே வைத்துக்கொள். ஏனெனில், பனூ குறைழா யூதர்களை உம்முடைய விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே அந்த மனிதர் (தம்முடன்) ஆயுதத்தை எடுத்துக்கொண்டார்.
பிறகு அவர் திரும்பி வந்தபோது அவரது (புது) மனைவி வீட்டு வாசலில் இரு நிலைக் கால்களுக்கிடையே நின்றுகொண்டிருந்தாள். உடனே அவர் அவள்மீது எறிவதற்காக ஈட்டியை நோக்கித் தமது கையைக் கொண்டு சென்றார். உடனே அவருடைய மனைவிக்கு ரோஷம் ஏற்பட்டு, "ஈட்டி எறிவதை நிறுத்துங்கள். (முதலில்) வீட்டுக்குள் நுழைந்து,நான் வெளியே வந்து நின்றதற்கு என்ன காரணம் என்பதைப் பாருங்கள்" என்று கூறினாள். அவ்வாறே அவர் வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது, அங்கு மிகப் பெரிய பாம்பு ஒன்று படுக்கை விரிப்பின் மீது சுருண்டு கிடந்தது.
உடனே அவர் அதன் அருகில் ஈட்டியைக் கொண்டுசென்று (அதன் மீது ஈட்டியைச் செலுத்தி) அதன் உடலுக்குள் ஈட்டியைச் செருகினார். பிறகு அறையிலிருந்து வெளியே வந்து வீட்டி(ன் வளாகத்தி)ல் அந்த ஈட்டியை நட்டு வைத்தார். அந்த ஈட்டியில் கிடந்து பாம்பு துடித்தது. பிறகு அவ்விருவரில் யார் முதலில் இறந்தார்கள். அந்த பாம்பா? அல்லது அந்த இளைஞரா என்பது தெரியவில்லை. (பாம்பும் இளைஞரும் இருவருமே இறந்துவிட்டனர்.)
உடனே நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தகவல் தெரிவித்தோம்; "அவரை (மீண்டும்) உயிர்ப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்கள் நண்பருக்காக நீங்கள் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்று சொன்னார்கள்.
பிறகு "மதீனாவில் ஜின்கள் சில இஸ்லாத்தைத் தழுவியுள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் (பாம்பு வடிவத்தில்) கண்டால், அதற்கு நீங்கள் (வெளியேறுமாறு) மூன்று நாட்கள் அறிவிப்புச் செய்யுங்கள். அதற்குப் பின்னரும் அது உங்களுக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 39
4503. மேற்கண்ட ஹதீஸ் அபுஸ்ஸாயிப் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அமர்ந்திருந்தபோது அவர்களது கட்டிலுக்குக் கீழே ஏதோ அசையும் சப்தத்தைக் கேட்டோம். நாங்கள் உற்றுப் பார்த்தபோது அங்கு பாம்பு ஒன்று இருந்தது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்த வீடுகளில் வசிப்பவை சில உள்ளன. அவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் அவற்றுக்கு மூன்று நாட்கள் நெருக்கடி கொடுங்கள். (மூன்று நாட்களுக்குள்) சென்றுவிட்டால் சரி. இல்லாவிட்டால் அதைக் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்" என்றும்,மக்களிடம் "நீங்கள் சென்று உங்கள் நண்பரை அடக்கம் செய்யுங்கள்" என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4504. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 38 பல்லியைக் கொல்வது நல்லது.
4505. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லிகளை (அடித்து)க் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4506. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பல்லிகளைக் கொல்வதற்கு அனுமதி கேட்டேன். நபியவர்கள் அவற்றைக் கொல்லுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்த பெண்மணி ஆவார்கள்.
அத்தியாயம் : 39
4507. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு "தீங்கிழைக்கக்கூடிய பிராணி" (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4508. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லிக்கு "ஃபுவைசிக்" ("தீங்கிழைக்கக்கூடியது") என்று (பெயர்) குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹர்மலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கொல்லும்படி உத்தரவிட்டதை நான் கேட்டதில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
4509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4510. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அனைவரது அறிவிப்பிலும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது. ஆனால், ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் பின்வருமாறு காணப்படுகிறது:
முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "முதலாவது அடியில் கொன்றவருக்கு எழுபது நன்மைகள் (எழுதப்படும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 39 எறும்புகளைக் கொல்வதற்கு வந்துள்ள தடை.
4511. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், "ஓர் எறும்பு உம்மைக் கடித்துவிட்ட காரணத்தால் (எனது) தூய்மையைப் போற்றும் சமுதாயங்களில் ஒரு சமுதாயத்தையே எரித்துவிட்டீரே!" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4512. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்து தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே அப்புறப்படுத்தப்பட்டதும் அந்த எறும்புப் புற்றை எரித்துவிடும்படி கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ் "(அந்த) ஒரே ஓர் எறும்பை நீர் தண்டித்திருக்கக் கூடாதா?"என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4513. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதிஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்திற்குக் கீழே தங்கினார். அப்போது அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அவர் மரத்திற்குக் கீழேயிருந்த தமது மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. பிறகு அந்த எறும்புப் புற்றையே நெருப்பால் எரித்துவிடுமாறு கட்டளையிட்டார். அவ்வாறே செய்யப்பட்டது. அப்போது அல்லாஹ், "(அந்த) ஒரே ஓர் எறும்பை நீர் தண்டித்திருக்கக் கூடாதா?" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.
அத்தியாயம் : 39
பாடம் : 40 பூனையைக் கொல்வதற்கு வந்துள்ள தடை.
4514. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4515. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பூனைக்கு உண்ணவும் கொடுக்காமல், பருகவும் கொடுக்காமல், பூமியின் புழு பூச்சிகளைத் தின்னவும் விடாமல் (சாகும்வரை அதைத் துன்புறுத்திக்கொண்டு) இருந்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவள் அதைக் கட்டிவைத்திருந்தாள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், (புழு பூச்சிகள் என்பதைக் குறிக்க "கஷாஷ்" என்பதற்குப் பதிலாக) "ஹஷராத்" எனும் சொல் ஆளப்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 41 வாயில்லாப் பிராணிகளுக்கு நீர் புகட்டுவது, உணவளிப்பது ஆகியவற்றின் சிறப்பு.
4516. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் ஒரு பாதை வழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) கிணறு ஒன்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அந்த மனிதர் (தமது மனதுக்குள்) "எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே (கடுமையான) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்!" என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு, அதைத் தமது வாயால் கவ்விய படி மேலேறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதைச் செவியுற்ற) மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த மிருகங்கள் விஷயத்திலும் (அவற்றுக்கு உதவுவதால்) எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஆம்;) உயிர் பிராணிகள் ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
4517. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரியான ஒரு பெண், கடும் வெப்பம் நிறைந்த ஒரு நாளில் நாயொன்று ஒரு கிணற்றைச் சுற்றி வந்துகொண்டிருப்பதைக் கண்டாள். அது தாகத்தால் தனது நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருந்தது. உடனே அப்பெண் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை நிரப்பி வந்து அதற்குப் புகட்டி)னாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4518. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முன்னொரு காலத்தில்) ஒரு நாய் கிணறு ஒன்றைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தது. அது தாகத்தால் செத்துவிடும் நிலையில் இருந்தது. அப்போது பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபசாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே அவள் தனது காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவமன்னிப்பு வழங்கப்பட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Previous Post Next Post