முன்னுரை:
எல்லாம் வல்ல நாயன் அல்லாஹூத்தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாக, இறுதித் தூதர் கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் மீதும், அன்னாருடைய குடும்பத்தினர் மீதும், அன்னாருடைய வாழ்க்கை வழிமுறைகளை அப்படியே பின்பற்றிய ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபயீன்கள் மற்றும் முஃமினான முஸ்லிமான நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.
இவ்வாக்கம் ‘ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்களின் நூலான ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ வின் விரிவுரையாகும். இஸ்லாம் பல நம்பிக்கை சார்ந்த அம்சங்களைத் தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அவ்வம்சங்களைப்பற்றி ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிந்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். அதற்கான முயற்சிகள் புத்திஜீவிகளினாலும் அறிஞர்பெருமக்களினாலும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படவேண்டும்.
அம்முயற்சிகள் நனிசிறக்கும் உரைகளாகவோ எழுத்துருப்பெற்ற நூற்களாகவோ சஞ்சிகைகளாகவோ மொழிபெயர்ப்புக்களாகவோ இருக்கலாம். இத்தகைய முயற்சிகள் அற்றுப்போகும் பட்சத்தில் எம் சமூகத்தினர் துடுப்பற்ற ஓடம்போலாகிவிடுவர்.
இம்முயற்சியின் ஓரங்கமாக எனது இந்த விளக்கவுரை இருக்கும் என நினைக்கின்றேன். எம் முன்னோர்களில் பலர் உருக்குலைந்த இந்த அகீதாவை தர்க்கவாதிகள் மற்றும் வழிகேடர்கள் கரங்களில் இருந்து மீட்டி எமக்கு தெளிவுபடுத்தித்தந்துள்ளார்கள். புத்திக்கு முதலிடம் கொடுத்து இஸ்லாத்தை அரட்டை அரங்கமாக மாற்றியவர்களின் நாவை அடக்கிய அவர்களின் பணிகள் போற்றத்தக்கவை அல்லாஹ் அவர்களுக்கு அருள்புரியட்டும்.
இத்தகைய செயல் வீரர்கள் பட்டியலில் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பிரதானமானவராவார். இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் இவர் ஆற்றிய சேவைகள் எண்ணிடலங்காது. அவற்றின் அடையாளச் சின்னங்களே எம்மத்தியில் தவழக்கூடிய அவரின் நூற்களாகும். இத்தகைய நூற்கள் அவர் வாழ்ந்த காலத்தில் காணப்பட்ட வழிகேடர்களுக்கு மாத்திரமல்லாது அவை என்றென்றும் வரலாற்றில் தோன்றக்கூடிய பகுத்தறிவுவாதிகளுக்கு சாவுமணியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதனைக் கருத்தில் கொண்டே அன்னாரின் நூற்களில் ஒன்றான இந்நூலை விளக்கவுரைக்காக எடுத்துக்கொண்டுள்ளேன். இந்நூல் தம்மை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்தவர்கள் என்று பறைசாற்றிக்கொண்டு அவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக நடக்கின்றவர்களுக்கு சிறந்த தெளிவாக இருக்கும். அதிலும் குறிப்பாக அல்லாஹ்வின் திருநாமங்கள் பண்புகள் விடயத்தில் தெளிவற்றுக்கிடப்பவர்களுக்கும் சிறந்த முன்மாதிரி நூலாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
எனது இவ்விளக்கவுரையை அறிஞர்களின் கருத்துக்களுக்கு முதலிடமளித்து அமைத்துள்ளேன். இந்த நூலை வியாக்கியானம் செய்த அறிஞர்களின் விளக்கவுரைகளை மைற்கற்களாகக்கொண்டே என்பிரயாணத்தை ஆரம்பித்துள்ளேன். இப்பணியைப் பூரணமாக நிறைவேற்றி முடித்திட எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் துணை புரிவானாக.
M.T.M.ஹிஷாம் மதனீ
அல் அகீததுல் வாஸிதிய்யா நூலின் ஆசிரியர்ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு:
இவரின் பெயர் ‘அஹ்மத்’ ஆகும். இவரின் தந்தையின் பெயர் ‘அப்துல் ஹலீம்’ ஆகும். இவரின் பாட்டனார் ‘அப்துஸ்ஸலாம்’ ஆவார். இவரின் பூட்டனார் ‘தைமியா’ ஆவார். மேலும், இவர் ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 10ந் நாள் ‘ஹர்ரான்’ என்ற இடத்தில் பிறந்தார். பின்பு தனது குடும்பம் சகிதம் ‘திமஸ்ஸுக்’ நகரை நோக்கிப் புறப்பட்டு அங்கேயே வாழ்ந்து வந்தார்.
இமாமவர்கள் மிகப்பெரிய அறிஞராகவும் பிரசித்திபெற்ற போராளியாகவும் இருந்தார்கள். இவர் உயிர்வாழும் காலத்தில் தனது சிந்தனை, அறிவு, தேகம் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் போராடக்கூடியவராக இருந்தார். மேலும், இமாமவர்கள் அறிவின் உச்சநிலையை அடைந்திருந்தார்கள். தனக்கு மார்க்கத்திலிருந்து தெளிவான விடயங்களை செயலுருப்படுத்துவதில் மிகவும் துணிச்சல் மிக்கவராகக் காணப்பட்டார்;. இதனால் இவருக்கு அதிகமான விரோதிகள் காணப்பட்டனர்.
இவரின் பிற்பட்ட கால வரலாற்றில் இவருக்கு ஆட்சியாளர்களால் பல இடைஞ்சல்கள் நிகழ்ந்தன. பலமுறைகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஈற்றில் ஹிஜ்ரி 728ம் ஆண்டு ஸவ்வால் மாதம் 20ந் நாள் ‘திமஸ்க்’ கோட்டையில் சிறைவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கையில் மரணத்தைத் தழுவினார். அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து சுவனபதியில் நுழையச் செய்வானாக.
இது இமாமவர்களின் அகீதா தொடர்பான பிரதான நூலாகும். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், பண்புகள், மற்றும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் ஈமான் கொள்வது தொடர்பான விடயங்களில் ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் நிலைப்பாடு, அவர்களின் செயல்சார்ந்த அம்சங்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தக்கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.
‘வாஸித்’ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சில நீதிபதிகள் இமாமவர்களிடத்தில் வந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நூதன அனுஸ்டானங்கள், மற்றும் மார்க்கத்திற்குப் புறம்பான அம்சங்கள் பற்றிக்கூறி அங்கலாய்த்தார்கள். அவர்களின் அங்கலாய்ப்பின் முடிவுரையில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், மற்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாக ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் கொள்கை கோட்பாடுகளைப்பற்றி எழுதித்தருமாறு விண்ணப்பித்தார்கள். இதன் பேறாகவே இந்நூல் பிரசவித்தது. இக்குழந்தைக்கு ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ என்றும் நாமம் சூட்டப்பட்டது.
قال المصنف رحمه الله
بسم الله الرحمن الرحيم
الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله الا الله وحده لا شريك له إقرارا به وتوحيدا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما مزيدا
நூலாசிரியர் கூறுகின்றார்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பம் செய்கின்றேன்.
அல்குர்ஆனில் ஸூரதுல் பராஆ(தெளபா) தவிர்ந்த ஏனைய அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில் வந்திருப்பதையும் நபியவர்கள் பிஸ்மிலை முற்படுத்தி தனது மடல்களை எழுதுவதையும் கருத்தில் கொண்டும் இந்நூலாசிரியர் தனது நூலையும் இவ்வாசகத்தைக் கொண்டே ஆரம்பித்துள்ளார் எனக் கருதமுடியும்.
இவ்வார்த்தையில் இடம்பெற்றிருக்கக்கூடிய ‘ب’ வானது ‘உதவிதேடல்’ என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இவ்வாசகத்தின் பொருளானது ‘ அல்லாஹ்வின் துணையுடன் எனது இந்தக் காரியத்தைத் துவங்குகின்றேன்’ என்று அமையும்.
மேலும், பிஸ்மிலில் இடம்பெற்றிருக்கும் ‘الله’ என்ற வார்த்தையானது பரிசுத்தமான, ஒருவனான எமது இறைவனைக் குறிக்கின்றது. இவ்வார்த்தை ‘أله’ என்ற வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இவ்வார்த்தைக்கு ‘வணங்கப்பட்டான்’ என்று பொருள் கொள்ளப்படும். இதனடிப்படையில் ‘اله’ என்ற சொல்லின் பொருள் ‘வணங்கப்படுபவன்’ என்றாகும். எனவே, அல்லாஹ் வணங்கப்படுபவனாக உள்ளான்.
‘மேலும், அல்லாஹ் விசுவாசி(களாகிய உங்)கள் மீது மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.’ (அஹ்ஜாப்: 43)
இமாமவர்கள் தனது நூலின் துவக்கத்தை அல்லாஹ்வைத் துதி செய்து, இரு சாட்சிகளையும் கூறி, நபியவர்கள் மீது ஸலாத்தையும் ஸலாமையும் காணிக்கையாக்கி அமைத்துள்ளார்கள். அதன் தமிழ் வடிவம் பின்வருமாறு:
எல்லாப் புகழும் அல்லாஹூத்தஆலாவுக்கே! அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர்வழியைக்கொண்டும், சத்திய மார்க்கத்தை கொண்டும் அனுப்பி வைத்தான், சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (தன் தூதரை அனுப்பி வைத்தான்); இன்னும், (இதற்கு) சாட்சியாக இருக்க அல்லாஹ்; போதுமானவன். –அல்பத்ஹ்:28 – நிச்சயமாக அல்லாஹ்வைத்தவிர வேறு கடவுள் இல்லை என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை என்பதை உறுதிப்படுத்தியவனாகவும் ஒருமைப்படுத்தியவனாகவும் நான் சாட்சி கூறுகின்றேன். மேலும், நிச்சயமாக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அவனுடைய அடியானும் திருத்தூதருமாவார் என்றும் சாட்சி சொல்கின்றேன். அல்லாஹ் அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மென்மேலும் ஸலாத்தையும் ஸலாமையும் சொல்வானாக.
أما بعد : فهذا اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة
குறிப்பு (1), குறிப்பு (2)
‘ஹிதாயத்’ என்ற வார்த்தை இரு கருத்துக்களில் பயன்படுத்தப்படும்:
1. ‘அத்தலாலா வல்பயான்’
2. ‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’
‘அத்தலாலா வல்பயான்’ என்பது, நேர்வழியை தெளிவுபடுத்தும் பணியாகும். இப்பணியை நபியவர்கள் மேற்கொள்வார்கள். இதனை அல்லாஹூத்தஆலா பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தில் பிரஸ்தாபிக்கின்றான்.
(நபியே!) நிச்சயமாக நீர் (மனிதர்களுக்கு) நேரான வழியின் பால் வழிகாட்டுவீர். (அஷ்ஷூரா:52)
‘அத்தவ்பீக் வல் இல்ஹாம்’ என்பது, நேர்வழியை வழங்கும் பணியாகும். இப்பணியை அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு எவராலும் செய்ய முடியாது. இது குறித்து அல்லாஹூத்தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.
(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியோரை நேர் வழியில் செலுத்திவிடமாட்டீர், எனினும் அல்லாஹ் தான் நாடியோரையே நேர் வழியில் செலுத்துகின்றான். மேலும், நேர்வழி பெறுகிறவர்களை அவனே மிக அறிந்தவன். (அல்கஸஸ்: 56)
(1) பொருள்: அடுத்து, இது மறுமை நாள்வரை வெற்றி மற்றும் உதவி பெறக்கூடிய கூட்டத்தின் கொள்கையாகும்.
(2) விளக்கம்:
(أما بعد) இவ்வாசகமானது ஒரு விடயத்திலிருந்து மற்றொரு விடயத்திற்கு நகரும் போது உபயோகிக்கப்படும்;. நபியவர்களின் வழிமுறை என்ற அடிப்படையில் இவ்வாசகத்தை அழைப்புப் பணியில் ஈடுபடக்கூடிய அனைவரும் உபயோகிப்பது கடமையாகும்.
(فهذا) இவ்வாசகத்தின் மூலம், இந்நூலில் இடம்பெற்றிருக்கக்கூடிய அனைத்து அகீதா சார்ந்த அம்சங்களும் நாடப்படுகின்றன.
(اعتقاد) இச்சொல் اعتقد என்ற மூலச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். اعتقد என்பது ஒரு விடயத்தை கொள்கையாக – அகீதா – எடுத்துக் கொள்வதாகும். எனவே, அகீதா என்பது, ‘ஒருவர் ஒரு விடயத்தை மனதால் ஏற்றுக் கொள்ளல்’ என்ற மையக்கருத்தை உணர்த்துகின்றது. இவ்வார்த்தையின் மூலச் சொல் கயிற்றால் ஒரு பொருளை பிணைத்துக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. பின்பு இதே வாசகம் ஒரு விடயத்தை உள்ளத்தால் உறுதியாக நம்புவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
(الفرقة) கூட்டம், அமைப்பு என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(الناجية) இப்பண்பானது இன்பங்கள் பல பெற்று இன்மையிலும் மறுமையிலும் அழிவு, மற்றும் தீங்குகளை விட்டும் ஈடேற்றம் பெற்ற ஒரு கூட்டத்தைக் குறிக்கின்றது. மேலும், இப்பண்பானது புகாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் இடம்பெற்றுள்ள ஒரு ஹதீஸில் இருந்து பெறப்பட்டதாகும். அந்த செய்தியின் தமிழ் வடிவமானது, ‘என்னுடைய உம்மத்தில் ஒரு கூட்டம் உதவி பெறும் நிலையில் உண்மையில் நிலைத்திருப்பார்கள். அல்லாஹூத்தஆலாவின் (மறுமை தொடர்பான) கட்டளை அவர்களுக்கு மத்தியில் வரும் வரை உதவி புரியாது விட்டுவிட்டவர்களினால் எவ்விதத் தீங்கும் இழைக்க முடியாது.
(المنصورة) அதாவது, இக்கூட்டத்தினருக்கு மாறு செய்பவர்களைவிட்டும் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கூட்டமாக இருக்கும் என்ற கருத்தைக் கொடுக்கின்றது. இத்தகைய பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்ட கூட்டம் எது? என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் பலவாறான கருத்துக்கள் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் பின்வரும் கூற்றுக்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன்.
– அக்கூட்டமானது அஹ்லுல் ஹதீஸினரைக் குறிக்கின்றது : இக்கருத்தை அறிஞர்களான யஸீத் இப்னு ஹாரூன், அஹ்மத் இப்னு ஹன்பல், இப்னுல் முபாரக், அலீ இப்னு மதீனி, அஹ்மத் இப்னு ஸினான், புகாரி (ரஹ்) போன்றோர் கூறுகின்றனர்.
– அக்கூட்டமானது அரேபியர்களைக் குறிக்கின்றது : இக்கருத்தை இப்னு மதீனி (ரஹ்) அவர்கள் பிறிதோர் அறிவிப்பில் கூறியுள்ளார்.
أهل
குறிப்பு (1)
– ‘அக்கூட்டமானது முஃமீன்களில் உள்ள அனைத்து குழுவினரையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதனடிப்படையில், முஃமீன்களில் உள்ள போராளிகள், இஸ்லாமிய சட்டக்கலை அறிஞர்கள், ஹதீஸ்களை அறிஞர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பவர்கள், இஸ்லாம் கூறும் துறவறத்தைப் பேணுபவர்கள் மற்றும் வணக்கஸ்தாரிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குழுவினரை தன்னகத்தே கொண்டதாக இருக்கும். மேலும், அவர்கள் அனைவரும் ஒரே நாட்டில் ஒன்றாக வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. அவர்கள் ஓரிடத்திலோ அல்லது உலகின் பல பாகங்களிலோ பரந்து வாழலாம். இன்னும், அவர்கள் அனைவரும் ஒரே பிரதேசத்தில் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. மாற்றமாக, அவர்கள் அனைவரும் கடைசியில் ஒன்று சேரும் வரை தத்தம் பிரதேசங்களில் உள்ளவர்களோடு மாத்திரம் தொடர்புள்ளவர்களாகக் கூட இருக்கலாம்.’ இக்கருத்தை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
– இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறும் போது: அக்கூட்டமானது பைதுல் முகத்தஸ்ஸில் இருக்கும் என்றும் அவர்கள் அனைவரும் ஷாம் வாசிகளாகவும் ஜிஹாத் செய்வதற்கு ஆற்றல் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். (பத்ஹூல் பாரி)
– இந்த ஹதீஸ் தொடர்பாக ‘பத்ஹூல் மஜீத்’ இன் ஆசிரியர், ‘அஷ்ஷேய்க் அப்துர் ரஹ்மான் இப்னு ஹஸன் ஆலி ஷெய்க்’ (ரஹ்) அவர்கள் கூறும் போது: ‘அக்கூட்டத்தினர் சொற்ப தொகையினராக இருந்தும் கூட அவர்களை ஒதுக்கியவர்களினாலும் அவர்களுடன் முரண்பட்டுச் சொன்றவர்களினாலும் எவ்விதத் தீங்கும் செய்ய முடியாது போய்விடும். இந்நிலை அவர்கள் என்றென்றும் முழுமையாக உண்மையில் நிலைத்திருப்பவர்கள் என்ற நன்மாராயத்தை தெரிவிக்கக்கூடியதாக இருக்கின்றது’ என்கிறார்.
நிச்சயமாக இத்தகைய நன்மாராயத்தைப் பெற்ற கூட்டம் ‘அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்’ ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதை இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களே மேற்குறிப்பிடப்பட்ட அறபி வாசகத்தின் ஈற்றில் கூறியுள்ளார். அது தொடர்பான விரிவான விளக்கத்தை பிறகு காண்போம்.
(إلى قيام الساعة) இவ்வாசகத்தின் மூலம் ‘அவர்கள் மரணிப்பதற்கான வேளை வரும் வரை’ என்ற பொருள் நாடப்படுகின்றது. அவ்வேளையானது முஃமின்கள் மற்றும் காபிர்கள் என்ற பிரிவினருக்கு ஏற்ற விதத்தில் அமைந்திருக்கும். முஃமின்களைப் பொருத்தளவில் அவர்களை நோக்கி ஒரு மெல்லிய காற்று வீசப்படும். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரினதும் உயிர்கள் கைப்பற்றப்படும். ஈற்றில் உலகில் கெட்டமனிதர்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் மறுமை ஏற்படும். இதனைப் பின்வரும் நபிமொழிகளின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
‘பூமியில் ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்று சொல்வதற்குக் கூட ஒருவரும் இல்லாது போகும் வரை மறுமை ஏற்படமாட்டாது.’ (முஸ்லிம்) பிறிதோர் அறிவிப்பில், ‘பிறகு அல்லாஹூத்தஆலா ஒரு காற்றை அனுப்புவான், அக்காற்றானது ‘மிஸ்க்’ எனும் வாடையை உடையதாகவும் பட்டைவிட மென்மையானதாகவும் இருக்கும். மேலும், அக்காற்றானது உள்ளத்தில் அணுவாளவு கூட ஈமான் உள்ள எவரையும் விட்டுவைக்காது. இறுதியில் கெட்ட மனிதர்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் நிலையில் மறுமை ஏற்படும். (முஸ்லிம், ஹாகிம்)
குறிப்பு (1) (أهل) இங்கு أهل என்ற வாசகத்தை கஸ்ரு (ـــِ) செய்தும் ரப்உ (ـــُ) செய்தும் வாசிக்கலாம். கஸ்ரு செய்து வாசித்தால் முன்பு வசனத்தில் இடம்பெற்ற فِرْقَة (கூட்டம்) என்பதற்குப் பகரமாக வந்துள்ளது என்றும், ரப்உ செய்து வாசித்தால் மறைமுகமாக هم (அவர்கள்) என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டு விளக்கமாக வந்துள்ளது என்றும் கூற முடியும்.
السنة
குறிப்பு (1)
விளக்கம்:
குறிப்பு (1) இச்சொல்லுக்குப் ‘பாதை’ என்று பொருளாகும். அப்பாதையானது நபியவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை அடியொட்டியதாக இருக்கும். இங்கு ‘அஹ்லுஸ் ஸூன்னத்’ (ஸூன்னாவை சார்ந்தவர்கள்) என்பதின் மூலம் அக்கூட்டத்தாருக்கும் ஸூன்னாவுக்கும் இடையிலான தொடர்பை பிரதிபலிக்கச் செய்கின்றது. மாற்றமாக, பித்அத்வாதிகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களைப் பொருத்தளவில் அவர்களின் குணாதிசயங்களுக்குத் தக்கவாறு அவைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில், அவர்களில் சிலர் தாங்கள் புரிகின்ற பித்அத்களை மையமாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக கதரிய்யாக்களையும் முர்ஜிய்யாக்களையும் குறிப்பிடலாம். மேலும் சிலர், தாங்கள் பின்பற்றுகின்ற தலைவர்களை அடிப்படையாகக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஜஹ்மிய்யாக்கள் சிறந்த உதாரணமாகும். வேறு சிலர், தாங்கள் புரிகின்ற மோசமான செயல்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றனர். இதற்கு உதாரணமாக றாபிழாக்களையும் ஹவாரிஜ்களையும் கூறலாம்.
கதரிய்யாக்கள்
அறிமுகம்:
‘கதர்’ என்னும் அறபுப் பதத்திற்கு ‘விதி’ என்று பொருளாகும். இதனடிப்படையில் விதியை மறுப்பவர்களே ‘கதரிய்யாக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். ஸகாப்பாக்களின் இறுதிக்காலத்தில் மஃபத் அல் ஜூஹனி என்பவனால் இக்கொள்கை உலகில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஈராக் நாட்டின் பஸரா நகரத்தின் ஆளுநராக இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூஸூப் என்பவரால் இவன் கொலை செய்யப்பட்டான். இக்கொள்கை கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஸோஸான் என்பவன் வழியாகவே மஃபத் அல் ஜூஹனிக்குக் கிடைத்தது.
இமாம் அவ்ஸாஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘முதன் முதலில் விதியைப் புறக்கணித்துப் பேசியவன் ஸோஸான் என்பவனே, இவன் ஈராக் நாட்டைச் சார்ந்த கிறிஸ்தவன் ஆவான். இவன் இஸ்லாத்தைத் தழுவி இஸ்லாத்தில் சிறிது காலம் இருந்துவிட்டு மீண்டும் மதம்மாறி கிறிஸ்தவ மதத்தில் இணைந்து கொண்டான்.
எனவே, ஸோஸான் வழியாக இக்கொள்கை முறையே மஃபத் அல் ஜூஹனிக்கும் அவனிடமிருந்து டமஸ்கஸ் நகரத்தைச் சார்ந்த கயலான் என்பவனுக்குத் கிடைத்தது. பின்னர் இக்கொள்கை பரிணாமம் பெற்று உலகின் பல நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. (அஷ் ஷரீஆ: 243)
கொள்கை:
பின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டோர் கதரிய்யாக்களாவர்.
1. உலகில் நடைபெறுகின்ற செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் கற்பனைக்கோ அல்லது அவனது அறிவுக்கோ அப்பாற்பட்டதாகும்.
2. எல்லாச் செயல்களும் நடைபெற்று முடிந்த பின்னரே அவன் அவைகளைப் பற்றி அறிந்து கொள்கிறான்.
இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் நடைபெறாதவரை அவைகளை அல்லாஹ் அறியமாட்டான் என்று கூறுபவர் கதரிய்யாக்களைச் சார்ந்தவராவார்.’
(அல்லாலகாஈ: 4:701)
இமாம் அபூ ஸவ்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘மனிதனது செயல்களை அல்லாஹ் படைக்கவில்லை. மற்றும், பாவச் செயல்களை அல்லாஹ் மனிதன் மீது விதியாக்கவோ அவைகளைப் படைக்கவோ மாட்டான் என்று கூறுபவர்களே கதரிய்யாக்களாவர்.’
முர்ஜிஆக்கள்
அறிமுகம்:
முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)
கொள்கை:
முர்ஜிஆக்களின் கொள்கை தொடர்பாக இமாம் அஹ்மத் இப்னு அன்பல் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : ‘ஈமான் என்பது, கலிமாவை நாவினால் மொழிவது மாத்திரமாகும். மனிதர்கள் மத்தியில் ஈமானின் தரத்தில் வித்தியாசம் கிடையாது. எனவே, மனிதர்கள் நபிமார்கள், மலக்குகள் அனைவருடைய ஈமானும் ஒரே தரத்தையுடையதாக இருக்கும். மேலும், ஈமான் கூடவோ குறையவோ மாட்டாது. இன்னும், எவரேனும் கலிமாவை தனது நாவினால் மாத்திரம் கூறி விசுவாசம் கொண்டு (அமல் செய்யாவிடினும் கூட) அவர் உண்மையான முஃமின் ஆவார். மேலே சொல்லப்பட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டோர் முர்ஜிஆக்கள் எனப்படுவர்’ என்கிறார்.
மேற்கூறப்பட்ட முர்ஜிஆக்களது கருத்துக்களைப் பார்க்கும் போது, ‘ஈமானுக்கும் அமலுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை’ என்ற கருத்தை அவர்கள் கூறுகின்ற காரணத்தினால், இறைநிராகரிப்பாளர்களுக்கு தாம் செய்த நல்லறங்கள் பயனளிக்காதது போன்று முஃமின்களுக்கும் தமது பாவச் செயல்கள் எந்தத் தீங்கும் செய்யாது என்று நம்பிக்கை கொள்வதே இவர்களது கோட்பாடாக உள்ளது என்பதை புரிய வைக்கின்றது.
வகைகள்:
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: முர்ஜிஆக்கள் மூன்று வகைப்படுவர்.
1. ஈமான் என்பது உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கையாகும் என்போர் முதலாம் வகையினர். இவர்களில் பெரும்பாலானோர் ஈமானுக்கும் அமலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர். எனினும், மற்றும் சிலர் ஈமானுக்கும் அமலுக்கும் எந்தத் தெடர்பும் இல்லை என்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டாது கருத்தையே ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவனும் அவனைப் பின்பற்றியோரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.
2. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிவது மாத்திராகும். இவர்கள் ‘கராமிய்யாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
3. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிந்து அதனை உள்ளத்தல் விசுவாசம் கொள்வதை மட்டுமே குறிக்கும் என்போர் மூன்றாவது வகையினர், இவர்கள் ‘முர்ஜிஅதுல் புகஹா’ என்று அழைக்கப்படுவர்.
முர்ஜிஆக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
முர்ஜிஆக்கள் முஸ்லிம்களா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்ற நிலைப்பாட்டில் கீழ்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன:
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘… முர்ஜிதுல் புகஹாக்கள் பற்றிய தீர்ப்பும் அவ்வாறுதான். இவர்களுடைய பித்அத்துக்கள் புகஹாக்களுடைய பித்அத்களைச் சார்ந்தவைகளோ! அவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளல்ல என்பதில் மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படவில்லை. ஆயினும், இவர்களுடைய பித்அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளே என சில மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர், இது மிகவும் தவறான கருத்தாகும். அமல்கள் ஈமான் சார்ந்ததல்ல என்கிற இவர்களது கருத்து குப்ரை ஏற்படுத்தக் கூடியது என்று சில அறிஞர்கள் கூறினர். எனினும், அமல்களை விட்டுவிடுதல் அல்லது அலட்சியம் செய்தல் ஈமானின் கடமையை விட்டுவிடுவதாகக் கருதப்படுமே தவிர ஈமானைப் புறக்கணிப்பதாகக் கருதப்படமாட்டாது. முர்ஜிஆக்களில் சிலர் மறுமையில் தண்டனை வழங்கப்படும் என்கிற விடயத்தைப் புறக்கணிக்கின்றனர். இன்னும் சிலர், அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் யதார்த்தமாக நடைபெற முடியாத சில தண்டனைகளைக் கூறி மனிதர்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு மறுமையில் வழங்கப்படும் தண்டனையைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் இறை நிராகரிப்பாளர்களாவர். (மஜ்மூஉல் பதாவா: 20:104)
ஜஹமிய்யாக்கள்
அறிமுகம்:
‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவரைப் பின்பற்றுகின்றவர்கள் ஜஹமிய்யாக்கள் எனப்படுவர். ஜஹம் இப்னு ஸப்வான் குராஸானில் (ஈரான்) உள்ள திர்மித் எனும் பகுதியைச் சேர்ந்தவர். இவர் சில தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் அடிப்படையாகக் கொண்டவர். இவர் அல்லாஹ்வைப் பற்றியே அதிகமாகத் தர்க்கம் புரிந்துள்ளார்.
கொள்கைகள்:
ஜஹம் இப்னு ஸப்வானுடைய அடிப்படைக் கொள்கைகள் கீழ்வருமாறு:
1. அல் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற நம்பிக்கை.
2. அல்லாஹ், நபி மூஸா (அலை) அவர்களுடன் பேசவில்லை, அவன் பேசவும் மாட்டான்.
3. அல்லாஹ்வை (மறுமையில்) காணமுடியாது.
4. அல்லாஹ் அர்ஷின் மீது இல்லை,
என்பன போன்ற குர்ஆனுக்கும் நபிவழிக்கும் நேரடியாக முரண்படுகின்ற கருத்துக்களை உலகம் முழுவதும் பரவச் செய்ததன் மூலம் குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் எதிராகப் புரட்சி செய்ததுடன் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினரின் கொள்கைகளையும் எதிர்த்து வந்தார்.
மேற்கூறப்பட்ட அம்சங்களுடன் மேலும் மூன்று முக்கியமான அடிப்படைக் கொள்கைகளையும் அறிமுகம் செய்தார். அவைகளாவன:
1. அல்லாஹ்வின் இயல்புகள் மற்றும் பண்புகள் ஆகியவற்றைப் பாழ்படுத்துதல்: அல்லாஹ்வை பண்புகள் கூறி வர்ணித்து அவனைப் படைப்புகளுக்கு ஒப்பாக்குவதையே இது குறிக்கும். இப்படியான தவறான கருத்தைச் சொல்லி அக்கருத்தை நிலைநிறுத்துவதற்காக அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் பண்புகளை மறுத்துரைக்கின்றனர்.
2. நிர்ப்பந்தம்: மனிதன் எதனையும் தானாகச் செய்ய முடியாது. ஏனெனில், மனிதனுடைய எல்லாச் செயல்களும் அல்லாஹ்வின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன. எனவே, மனிதன் எதனையும் தானாகச் செய்கின்ற ஆற்றலையோ தேர்வு செய்கின்ற சுதந்திரத்தையோ பெற மாட்டான் என்கிறார்.
3. ஈமான் என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்வதாகும். எனவே, நாவினால் அல்லாஹ்வைப் புறக்கணிக்கின்ற ஒரு மனிதன் இறை நிராகரிப்பாளராகமாட்டான். ஏனெனில், ஒரு மனிதன் அல்லாஹ்வைப் புறக்கணிப்பதால் அவனிடமிருந்து அல்லாஹ்வைப் பற்றிய அறிவு நீங்கிவிடுவதில்லை. மேலும், முஃமின்கள் அனைவரும் ஈமானில் ஒரே தரத்தையுடையவர்களாவர். ஈமானைப் பொறுத்தவரை அவர்களிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது.
மேலே குறிப்பிடப்பட்ட மூன்று அடிப்படைகளுமே ஜஹமிய்யாக்களின் வழிகேட்டுக்கு மிக முக்கியமான காரணங்களாக இருந்துள்ளன. ஜஹம் இப்னு ஸப்வானுக்கு இக்கொள்கை ‘ஜஃத் இப்னு திர்ஹம்’ மூலம் கிடைத்தது. இவர் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்தவர். மேற்கூறப்பட்ட கொள்கைகளால் கவரப்பட்டு வழி கெட்டவர்களில் ஒருவரான ஜஃத் இப்னு திர்ஹம் ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று ஈராக்கில் வைத்துக் கொல்லப்பட்டார். (மீஸானுல் இஃதிதால்: 1:369)
இக்கொள்கையை முதலில் அறிமுகம் செய்தவர் நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்த ‘லபீத் இப்னு அஃஸம்’ தான் எனவும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜஹமிய்யாக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ‘ஜஹமிய்யாக்கள் காபிர்கள் என்பதே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களதும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்தின் அறிஞர்களதும் கருத்தாகும்.’
(மஜ்மூஉல் பதாவா: 12-4)
ஜஹமிய்யாக்கள் இறைநிராகரிப்பாளர்கள் ஆவார்கள் என ஸலபுஸ்ஸாலிஹீன்களில் 500 அறிஞர்கள் தீர்ப்புக் கூறியுள்ளதாக இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூனிய்யா:1:115)
ஜஹமிய்யாக்களின் புதிய பரிணாமம்:
ஜஹமிய்யாக்கள் என்போர் இன்று உலகத்தில் இல்லை என்று சிலர் கருதுகின்றனர். ஜஹமிய்யாக்கள் என்ற பெயரில் இவர்கள் காணப்படாவிடினும் அவர்களது கொள்கைகளுடனும் கோட்பாடுகளுடனும் வாழக்கூடிய மக்கள் காணப்படுகின்றனர். ஜஹமிய்யாக்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் முழுமையாக அஷ்அரிய்யாக்களும் முஃதஸிலாக்களும் பின்பற்றுகின்றனர்.
றாபிழாக்கள்
அறிமுகம்:
‘றாபிழா’ என்ற வார்த்தை ‘றபழ’ என்ற பதத்திலிருந்து பிறந்ததாகும். இதன் பொருள் ‘புறக்கணித்தல்’ என்பதாகும்.
கலீபாக்களான அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் ஆட்சியைப் புறக்கணித்தவர்களே றாபிழாக்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் ‘இமாமிய்யாக்கள்’ என்ற பெயரிலும் அழைக்கப்படுவர்.
அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘எனது தந்தை (அஹ்மத் இப்னு ஹன்பல்) அவர்களிடம் றாபிழாக்கள் எனப்படுவோர் யாவர்? என்று கேட்டேன். அதற்கவர், அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரை சபிப்பவர்களே றாபிழாக்கள் ஆவர்’ எனப் பதிலுரைத்தார்.
பிரிவுகள்:
றாபிழாக்களுக்கு மத்தியிலும் பல பிரிவுகள் உள்ளன. அவர்கள் மத்தியில் 15 பிரிவினர்கள் இருப்பதாகச் சில அறிஞர்களும், 20 பிரிவினர்கள் இருப்பதாக வேறு சில அறிஞர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கொள்கை:
நபி (ஸல்) அவர்கள் தனது மரணத்திற்குப் பின் அலி (ரலி) அவர்கள்தான் அடுத்த ஆட்சியாளர் என்பதைத் தெளிவாகவும், பகிரங்கமாகவும் கூறியிருந்தார்கள். எனினும், நபியவர்கள் மரணித்த பின்னர் அலி (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக நியமிக்காததால் பெரும்பாலான ஸஹாபாக்கள் வழிகெட்டு விட்டனர். ஏனெனில், ஆட்சிப் பொறுப்பானது நபியவர்களால் தெளிவாகச் சொல்லப்பட்ட அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதில் மாற்றங்கள் இடம்பெறக் கூடாது. இன்னும், இமாமத் என்பது ஒர் இபாதத் ஆகும்… என்றவாறு அவர்களது கொள்கை விளக்கம்; நீண்டு கொண்டு சொல்கின்றது.
மேலும், றாபிழாக்களின் மிகவும் பிரசித்தி பெற்ற இமாம்களில் ஒருவரான முபீத் (முஹம்மது பின் முஹம்மது) என்பவர் கூறும் போது, மறுமை நாள் ஏற்படுவதற்கு முன்னர் மரணித்தவர்களில் அதிகமானோர் நிச்சயம் உலகிற்கு மீண்டும் திரும்பி வருவார்கள் என்றும், ஈமானில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களும், குழப்பம் விளைவிப்பதில் உச்சகட்டத்தை அடைந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு திரும்பிவருவர் என்றும் கூறியுள்ளார்.
(அவாஇலுல் மகாலாத்: 51, 95)
அதே போன்று, அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இவர்கள் இறைவனுக்கு ‘பதாஅத்’ எனும் பண்பு உண்டென்று கூறுகின்றனர். ‘பதாஅத்’ என்பதற்கு இரு கருத்துக்கள் உள்ளன.
1. மறைந்திருந்த பின்னர் தோன்றுதல்,
2. புதிய கருத்துத் தோன்றுதல்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு எதுவுமே மறைந்து விடுவதில்லை. அவ்வாறிருக்க மறைந்திருந்த அல்லது தெரியாதிருந்த ஒரு விடயம் இறைவனுக்குப் பின்னர் தெரியவந்தது என்று எவ்வாறு கூறமுடியும்? அத்தோடு, இறைவனின் அறிவு அனைத்தையும் சூழ்ந்தது, அவன் ஞானம் மிக்க மகத்தானவனாக இருக்கும் போது புதியதொரு விடயம் எவ்வாறு அவனுக்குத் தோன்ற முடியும்? அவன் அறிவு, ஆற்றல் மற்றும் அனைத்திலுமே ஆரம்பமானவனாக இருக்கும்போது, இவ்வாறு அவனுக்கு ‘பதாஅத்’ உண்டென்று கூறுவது, அவன் மீது வேண்டுமென்றே அபாண்டம் கூறுவதைப் போலல்லவா இருக்கின்றது?
மேலும், இவர்கள் இறைவன் மீது ‘பதாஅத்’ எனும் பண்பு உண்டென்று கூறுவதைப் புனித வணக்கமாகக் கருதுகின்றனர். இது போன்ற கருத்துக்களை விளங்குவதில் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினர் தடம் புரண்டு விட்டனர் எனவும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத் இமாம்களைப் பற்றிக் குறை கூறிகின்றனர்.
மேற்கூறப்பட்டவைகள் யாவும் றாபிழாக்களுடைய அடிப்படைகளாகும். அவ்வடிப்படைகள் அனைத்திலும் முஃதஸிலாக்கள், கவாரிஜ்கள், ஸைதிய்யாக்கள், முர்ஜிஆக்கள், மற்றும் அஹ்லுஸ் ஸூன்னத் வல் ஜமாஅத்தினர் ஆகிய அனைவரும் முரண்பட்ட கருத்துக்களையே கொண்டுள்ளனர். எம் முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் தமது நூற்களில் றாபிழாக்களைக் கண்டித்திருப்பதோடு மட்டுமின்றி இவர்கள் தான் மிக மோசமான பிரிவினர்கள் என்றும் அடையானப்படுத்தியுள்ளனர்.
மேலும், இவர்களைப் பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:
‘இஸ்லாத்தில் தேன்றியுள்ள அனைத்துப் பிரிவினர்களிடமும் பித்அத்களும் வழிகேடுகளும் காணப்படுகின்றன. எனினும், அவர்களில் எவரும் றாபிழாக்களைவிடக் கெட்டவர்கள் அல்லர். மேலும், அவர்களைவிட முட்டாள்களும், பொய்யர்களும், அநியாயக்காரர்களும், பாவச் செயல்களில் ஈடுபடுவோரும் வேறு எவரும் இல்லை. இன்னும், இறை நிராகரிப்பிற்கு மிக நெருக்கமானவர்களும், ஈமானின் அடிப்படைகளைவிட்டும் மிகத்தூரமானவர்களும் இவர்களே’ என்கிறார்.
ஹவாரிஜ்கள்
அறிமுகம்:
‘நேர்வழி நடந்த கலீபாவான அலி (ரழி) அவர்களுக்கு எதிராகப் புரட்சிகளில் ஈடுபட்டோர் ஹவாரிஜ்கள் ஆவர்’. ஆயினும் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து, இஸ்லாமிய ஆட்சியாளருக்கு எதிராகப் புரட்சி செய்பவர்கள் அனைவரும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உருவாக்கம்:
ஹவாரிஜ்கள் உருவான காலம் தொடர்பாகப் பல கருத்துக்கள் உள்ளன. அக்கருத்துக்களில் பிரதானமான கருத்தாக பின்வரும் கருத்து கருதப்படுகின்றது.
ஹிஜ்ரி 36 மற்றும் 37ல் நடைபெற்ற ஸிப்பீன் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் போரில் ஈடுபட்ட இருதரப்பினரும் முடிவு செய்தனர். அதற்காக ஸஹாபாக்களான அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி), அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) ஆகியோரை நடுவர்களாக நியமித்தனர். கலீபா அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த சிலர் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து அவருக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். தம் தரப்பிலுள்ள நியாயங்களைத் தெளிவுபடுத்துவதற்காக இவர்களுடன் கலீபா பல அமர்வுகளை நடத்தினார்கள். எனினும், கிளர்ச்சியாளர்கள் அலி (ரலி) அவர்களின் தரப்பிலிருந்த நியாயங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதன் பின்னணியில் தான் கலீபா அலி (ரலி) அவர்களுக்கும் இக்கிளர்ச்சியாளர்களுக்குமிடையில் ஹிஜ்ரி 38ஆம் ஆண்டு ‘நஹ்ர்வான்’ என்ற இடத்தில் யுத்தம் மூண்டது.
பெயர்களும் பிரிவுகளும்:
இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் இவர்கள் ‘ஹரூரிய்யா’, ‘அஷ்ஷூராத்’, ‘அல்மாரிகா’, ‘அல் முஹக்கிமா’, ‘அந்நவாஸிப்’ போன்ற பல பெயர்களில் பிரபலமாகியுள்ளனர். மேலும், இவர்களுக்குள் பல உப பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் ‘அல்முஹக்கிமா’, ‘அல்அஸாரிகா’, ‘அந்நஜ்தாத்’, ‘அஸ்ஸஆலிபா’, ‘அல்இபாழிய்யா’, ‘அஸ்ஸபரிய்யா’ ஆகிய பிரிவுகள் முன்னணியில் திகழ்கின்றன.
கொள்கை:
இவர்கள் கலீபாக்களான உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரையும், ஜமல் யுத்தத்தில் கலந்துகொண்ட ஸஹாபாக்களையும், ஸிப்பீன் யுத்தத்தில் நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறுகின்றனர். இது மட்டுமின்றி, நடுவர்களாக நியமிக்கப்பட்ட இரு ஸஹாபாக்களையும் ஏற்றுக் கொண்ட ஏனைய ஸஹாபாக்களையும் இறை நிராகரிப்பாளர்கள் என்றும் கூறுகின்றனர். அத்துடன் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதைத் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கொண்டுள்ளனர். மேலும், பெரும்பாவங்களில் ஈடுபடுவது இறைநிராகரிப்பை ஏற்படுத்தும் என்பதையும் தங்களது அடிப்படைக் கோட்பாடாகக் கருதுகின்றனர்.
மார்க்கத் தீர்ப்பு:
ஹவாரிஜ்கள் இறை விசுவாசிகளா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்பது குறித்து இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஹவாரிஜ்கள் இறை நிராகரிப்பாளர்கள் அல்ல என்பதே பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தும், ஸஹாபாக்களின் ஏகோபித்த முடிவுமாகும். கலீபா அலி (ரலி) அவர்களோ ஏனைய நபித்தோழர்களோ ஹவாரிஜ்களை இறை நிராகரிப்பாளர்கள் என்று கூறவில்லை. இவர்கள் முஸ்லிம்கள் ஆனால், எல்லை மீறிய அநியாயக்காரர்கள் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.
குறிப்பு:
இத்துடன் பித்அத்வாதிகளின் பட்டியலில் இடம்பெறக்கூடிய சில குழுவினர் பற்றிய சுருக்கமான தகவல் நிறைவு பெறுகின்றது. அவசியம் ஏற்படும் போது எனது விரிவுரையின் இடையில் இன்னும் பல விரிவான தகவல்களைத் தருகின்றேன். மேலும், பித்அத்வாதிகளில் உதாரணத்திற்காக எடுத்துக் கொண்டவர்களை மாத்திரமே இங்கு தெளிவுபடுத்தியுள்ளேன். அவர்களல்லாத இன்னும் பலர் உள்ளனர். அவர்களின் பெயர்கள் இடம்பெறும் போது அது குறித்த தகவல்களையும் உங்கள் பார்வைக்குத் தருகின்றேன். இன்ஷா அல்லாஹ்.
أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه
விளக்கம்:
(الجماعة)
இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர். மேலும், அத்தகையவர்கள் சொற்ப தொகையினராக இருந்தாலும் சரியே! இதனைப் பின்வரும் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகின்றது. ‘ஜமாஆத்தானது, எப்போதும் உண்மைக்கு உடன்பட்டதாக இருக்கும். அவ்வாறு உண்மைக்கு உடன்பட்டவர்களில் நீ மட்டும் இருந்தாலும், (அப்போது) நீயும் ஒரு ஜமாஅத்தாகவே கருதப்படுவாய்’.
(هو)
இப்பிரதிச் சொலின் மூலம் ‘வெற்றி பெறக்கூடிய கூட்டத்தின் அகீதா’ நாடப்படுகின்றது.
(الإيمان)
‘ஈமான்’ என்ற வார்த்தைக்கு அறபு மொழிக்கருத்தின் அடிப்படையில் ‘உண்மைப்படுத்தல்’ என்று பொருள் கொள்ளப்படும். இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டே பின்வரும் திருக்குர்ஆன் வசனமும் அமைந்துள்ளது.
‘நாம் உண்மையாளர்களாக இருந்தாலும் நீங்கள் எம்மை நம்புவோராக இல்லை’ (யூஸூப்:17)
மேலும், மார்க்க அடிப்படையில் ‘ஈமான்’ என்பது, ‘(குறித்த ஓரு விடயத்தை) நாவால் மொழிவதும், மனதால் உறுதிப்படுத்துவதும், உருப்புக்களால் செயலுருப்படுத்துவதுமாகும்’.
(الإيمان بالله)
அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் பின்வரும் அம்சங்கள் உள்ளடங்குகின்றன.
அவனே அனைத்து வஸ்த்துக்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் என நம்புதல்.
அவனுக்கு பூரண பண்புகள் உள்ளன என நம்புதல்.
அவன் அனைத்து விதமான குற்றம் குறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என நம்புதல்.
அவன் மாத்திரமே வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் என நம்புதல்.
மேற்கூறப்பட்ட அடிப்படைகளை முறையாக அறிந்திருப்பதும், செயலுருப்படுத்துவதும் அல்லாஹ் பற்றிய நம்பிக்கையைப் பூரணப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
(وملائكته)
மலக்குகளைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது, பின்வரக்கூடிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
மலக்குகள் என்ற ஒரு படைப்பு இருப்பதாக எற்றுக் கொள்ள வேண்டும்.
அல்லாஹூத்தஆலா, அல்குர்ஆனில் வர்ணித்துக் கூறியுள்ள பிரகாரம் அவர்களுக்கென்று தனியான பல பண்புகள் உள்ளன என நம்ப வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.. ‘(அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள், சொல்லைக் கொண்டு அவனை அவர்கள் முந்தமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.’ (அல் அன்பியா: 26,27)
அல்குர்ஆனும் அஸ்ஸூன்னாவும் மலக்குகளின் பிரிவினர் தொடர்பாகவும் அவர்களின் பண்புகள் தொடர்பாகவும் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகள் தொடர்பாகவும் சிலாகித்துப் பேசியுள்ளன. அவை அனைத்தையும் உள்ளபடி ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.
(وكتبه)
வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்வதாகிறது பின்வரக்கூடிய விடயங்களைப் பொதிந்ததாக இருக்கும்.
அல்லாஹ் தன் தூதர்களுக்கு இறக்கிவைத்த வேதங்களை உண்மைப்படுத்தல்.
அவ்வேதங்கள் அனைத்தும் அவனது பேச்சு என்று நம்புதல்.
அவ்வேதங்களில் இடம்பெற்றுள்ள அனைத்தும் உண்மையானதும், ஒளிமயமானதும், நேர்வழி காட்டக்கூடியதுமாக இருக்கும் என நம்புதல்.
அல்லாஹூத்தஆலா பெயர் குறிப்பிட்ட வேதங்களான தவ்ராத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிடாத வேதங்களையும் நம்புதல்.
وَرُسُلِهِ
விளக்கம்:
இவ்வாசகத்தின் மூலம் ‘அல்லாஹ்வின் தூதர்கள்’ நாடப்படுகின்றார்கள். அத்தகையவர்கள், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹி மூலம் தெரியப்படுத்தப்பட்டவர்களாகவும், அவற்றை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவர்களாகவும் இருப்பர். அவர்களில் முதலாமவராக நூஹ் (அலை) அவர்களும், இறுதியானவராக முஹம்மத் (ஸல்) அவர்களும் இருக்கின்றார்கள்.
உண்மையில் நூஹ் (அலை) அவர்கள் தூதர்களில் முதலாவது அனுப்பப்பட்டவர் என்பதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆனிலும் அஸ்ஸூன்னாவிலும் காணக்கூடியதாக இருக்கின்றன. அவற்றுள் பிரதானமான ஆதாரங்களை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.
அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(நபியே!) நூஹூக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம்’. (அன்னிஸா:163) இந்த வசனத்தில் நூஹ் (அலை) அவர்களுக்கும், அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கும் அல்லாஹூத்தஆலா வஹீ அறிவித்ததாகக் கூறுகின்றான். நிச்சயமாக அவ்வஹீயானது தூதுத்துவத்தைக் குறிக்கும் வஹீயாகத்தான் இருக்க வேண்டும்.
அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘மேலும், நூஹையும், இப்றாஹீமையும் திட்டமாக நாம் (நம்முடைய தூதர்களாக) அனுப்பிவைத்தோம் அவ்விருவருடைய சந்ததியில் நபித்துவத்தையும், வேதத்தையும் ஆக்கியிருந்தோம்’. (அல்ஹதீத்:26) இவ்வசனத்தில் மிகத் தெளிவாக தூதர்களாகிறவர்கள், நூஹ் (அலை) மற்றும் இப்றாஹீம் (அலை) ஆகியோரின் சந்ததியில் இருந்து அனுப்பப்பட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இப்படியிருக்க, அவ்விருவருக்கும் முன்வாழ்ந்தவர்களை எப்படி அவர்களின் சந்ததிகளாகக் கூற முடியும்?
அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘(இவர்கள் அனைவருக்கும்) முன்னர் நூஹூடைய சமூகத்தாரையும் (நாம் அழித்துவிட்டோம்). நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தனர்’. (அத்தாரியாத்:46) இவ்வசனத்தில் இடம்பெறும் ‘ مِنْ قَبْلُ ‘ என்ற வார்த்தை ‘முன்னர்’ என்ற கருத்தை உணர்த்தி நிற்கின்றது. இக்கருத்தானது எல்லாத் தூதர்களுக்கும் ஆரம்பமாக நூஹ் (அலை) தூதராக அனுப்பப்பட்டார் என்ற கருத்தைப் பிரதிபலிக்கச் செய்கின்றது.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் இருந்து நூஹ் (அலை) அவர்களே முதலாவது அனுப்பப்பட்ட தூதர் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இது தவிர இவ்வாதத்தை ஊர்ஜீதப்படுத்தும் செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றில் மிகப்பிரதானமான ஒரு செய்தியை உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.
புகாரி (7440) முஸ்லிம் (194) ஆகிய கிரந்தங்களில் ஷபாஅத் தொடர்பாக இடம்பெற்ற ஒரு செய்தியில் மஹ்ஷர் மைதானத்தில் குழுமியிருக்கும் மக்கள் நூஹ் (அலை) அவர்களிடத்தில் வந்து ‘நீங்கள் தான் உலகத்தாருக்கு அல்லாஹூத்தஆலாவினால் அனுப்பப்பட்ட தூதர்களில் முதலாமவராக இருக்கின்றீர்கள் ……….’ என்று கூறுவார்கள். இச்செய்தி மிகப்பட்டவர்த்தனமாக நாம் மேலே எடுத்துரைத்த வாதத்தை உறுதி செய்யக்கூடியதாக இருக்கின்றது.
ஆதம் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அவர் ஒரு நபியாக மாத்திரம் இருந்தார் என்பதே உறுதியான தகவலாகும். மேலும் இத்ரீஸ் (அலை) அவர்களைப் பொறுத்தவகையில் அதிகமான வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் சில அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் அவரை நூஹ் (அலை) அவர்களுக்கு முன்பு வாழ்ந்தவராகவும் நூஹ் (அலை) அவர்களின் மூதாதையர்களில் ஒருவராகவும் கூறுகின்றனர். ஆயினும் இக்கருத்து மிக பலவீனமானது என்பதை அல்குர்ஆன் அஸ்ஸூன்னா ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.
وَالبَعْثِ بَعْدَ المَوْتِ
விளக்கம்:
மேலும், இறைத்தூதர்களில் இறுதியானவராக நபியவர்கள் உள்ளார்கள். இதனைப் பல ஆதாரங்கள் உறுதி செய்கின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தைக் கவனிக்க.
‘எனினும், அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (க்கடைசி) முத்திரையாகவும், (இறுதி நபியாகவும்) இருக்கிறார்’. (அல்அஹ்ஜாப்: 40)
இவ்வசனத்தில் தூதர்களில் இறுதியானவர் என்று கூறாமல் நபிமார்களில் இறுதியானவர் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், நபியவர்களுடன் நுபுவ்வத் நிறைவு பெற்றது என்று கூறுவதின் மூலம் தூதுத்துவமும் அவருடன் நிறைவு பெற்றது என்ற வாதம் உறுதியாகின்றது.
நபிமார்களை ஈமான் கொள்வதில் உள்ளடங்கக்கூடிய அம்சங்கள்
நபிமார்கள் அனைவரும் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்ளல்.
அவர்கள் அனைவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றினார்கள் என நம்புதல்.
அவர்களுக்கு மத்தியில் எவ்வித ஏற்றத்தாழ்வும் பார்க்காதிருத்தல்.
மொத்தமாக அல்லாஹுத்தஆலா பெயர் குறிப்பிட்ட நபிமார்களையும் பெயர் குறிப்பிடாமல் விட்ட நபிமார்களையும் ஈமான் கொள்ளல்.
அல்லாஹ் சிறப்பித்துக் கூறியவர்களை சிறப்பித்தல். அதன் வரிசையில் ‘உலுல் அஸ்ம்’ எனும் நபிமார்கள் குழு முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் முறையே, நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆகியோர்களாவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய தூதர்களும் பிறகு நபிமார்களும் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றனர். ஆயினும், அவர்கள் அனைவரையும் விட சிறப்புக்குரிய நபராக நபியவர்கள் இருக்கின்றார்கள் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
‘நபி’, ‘ரஸூல்’ ஆகிய வார்த்தைகளுக்கிடையிலான வேறுபாடுகள் குறித்து பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவற்றுள் மிக ஏற்றமான கருத்தாகவும், பலரால் வரவேற்கத்தக்க கருத்தாகவும் பின்வரும் கருத்து அமையப்பெற்றுள்ளது.
‘நபியானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்படாதவருமாக இருப்பார். ரஸூலானவர், மார்க்க சட்டதிட்டங்களைக் கொண்டு வஹீ மூலம் தெரியப்படுத்தப்பட்டவராகவும், அதனை மக்கள் மன்றத்தில் எத்திவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டவராகவும் இருப்பார்’.
(والبعث بعد الموت)
இவ்வாசகமானது, மரணித்தவர்கள் தங்களது மண்ணறைகளைவிட்டும் உயிர் பெற்று எழுப்பப்படும் மறுமை நாள் குறித்த நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அவ்வாறு எழுப்பப்படுவதாகிறது, அவர்கள் உலகில் புரிந்த அமல்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டு கூலி கொடுக்கப்படுவதற்காகும். இது குறித்த வர்ணனைகள் அல் குர்ஆனிலும் அஸ்ஸுன்னாவிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை உள்ளபடி ஈமான் கொள்வது எமது கடமையாகும்.
இவ்விடயம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினரின் கொள்கை கோட்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. யூத கிரிஸ்தவர்கள் கூட இதுவிடயத்தில் தெளிவான கொள்கையை உடையவர்களாக இருக்கின்றனர்.
அல்குர்ஆனில் இவ்விடயம் குறித்து அல்லாஹுத்தஆலா குறிப்பிடும் போது….
‘(மரணித்த பின்னர் நிச்சயமாக உயிர் கொடுத்து) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராகரிப்போர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக: ‘அவ்வாறல்ல! என் இரட்சகன் மீது சத்தியமாக! நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்’. (அத்தகாபுன்: 7)
‘(மனிதர்களே!) பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பெய்தக் கூடியவர்கள். பின்னர், மறுமை நாளின் போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்’. (அல் முஃமினூன்: 15,16)
மேலும், இது குறித்த பல செய்திகள் ஹதீஸ்களிலும் இடம்பெற்றுள்ளன. அவற்றையும் கருத்திற் கொண்டு மறுமை விடயத்தில் பூரண நம்பிக்கையுள்ள மக்களாக நானும் நீங்களும் ஆகுவோமாக!
விதி பற்றிய விளக்கம்
وَالإيْمَانُ بِالقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ
விளக்கம்:
இது ஈமானின் கடமைகளில் இறுதிப்பகுதியைத் தெளிவுபடுத்தும் வாசகமாகும். அதன்படி விதியைப்பற்றிய நம்பிக்கை, ஈமான் கொள்ள வேண்டியவற்றில் இறுதியானதும் மிக முக்கியமானதுமாக இருக்கின்றது. விதி எனும் பதத்திற்கு ‘கத்ர்’ என்று அறபு மொழியில் வழங்கப்படும். இப்பதத்தின் மூலம் அல்லாஹுத்தஆலாவினால் அனைத்து வஸ்துக்கள் மீதும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு நாடப்படுகின்றது.
அல்லாஹுத்தஆலா அந்நிர்ணயத்தை வானங்கள் மற்றும் பூமையைப் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக எழுதியுள்ளான். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமறையில் அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:
‘நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் உள்ளது. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.’ (அல் ஹஜ்: 70)
நபியவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக படைப்பினங்களுக்கான விதியை எழுதிவிட்டான்.’ (முஸ்லிம்: 2653)
(خَيْرِهِ وَشَرِّهِ)
இது கத்ரினுடைய பண்புகளைப் பற்றிப் பேசும் வாசகமாகும். அதனடிப்படையில் கத்ரானது, நல்லதைக் கொண்டும் தீயதைக் கொண்டும் வர்ணிக்கப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் விளக்கங்கள் சற்று வேறுபடுகின்றன. கத்ரானது நல்லதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கம் பட்டவர்த்தனமானது. ஆயினும், அது தீயதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
அல்லாஹுத்தஆலா நிர்ணயம் செய்த கத்ரின் தீய பண்பானது, அல்லாஹ்வின் நாட்டப்படி இடம்பெற்ற செயலில் உள்ள தீய தன்மையை பற்றிக் குறிப்பிடுகிறது. மாற்றமாக, அவனது செயலாகவுள்ள கத்ரின் தீங்கைப் பற்றிக் குறிப்பிடமாட்டாது. ஏனெனில், அல்லாஹ்வின் செயலில் தீயது கிடையாது. அவனது அனைத்துக் காரியங்களும் சிறப்புமிக்கதாகவும், ஞானமுடையாதாகவும் இருக்கின்றன. எனவே, இங்கு தீயதானது, இடம்பெற்ற செயலின் தன்மையைக் கருத்திற் கொண்டேயன்றி அவனின் செயலைக் கருத்திற் கொண்டல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வடிப்படையைக் கருத்திற் கொண்டு தான் நபியவர்கள்: ‘இறைவா! தீங்கு உனக்குரியதன்று’ என்று தனது பிரார்த்தனையில் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 771) மேலும்,
இவ்விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள
பின்வரும் விளக்கத்தைக் கூர்ந்து கவனியுங்கள்…..
நாம் அல்லாஹுத்தஆலாவின் படைப்புக்களில் மற்றும் நிர்ணயித்த அம்சங்களில் மனிதனுக்குத் தீங்கிழைக்கக்கூடிய பலவற்றை அவதானித்து வருகின்றோம். அந்தவிதத்தில் அவனது படைப்புக்களில் பாம்புகள், தேள்கள், வேட்டை மிருகங்கள், நோய்கள், ஏழ்மை, வறுமை போன்ற பல அம்சங்களை இனங்காட்டலாம். இவை அனைத்தும் மனிதனுக்குக்கு உகந்ததாக அமையாததினால் தீயதாகக் கருதப்படுகின்றன. அதே போன்று பாவமான காரியங்கள், இறை நிராகரிப்பை எற்படுத்தக் கூடியவைகள், கொலை, கொள்ளை போன்றனவும் மேற்கூறப்பட்ட அடிப்படையைச் சாரும். எனவே, இவையனைத்தும் மனிதனுக்குத் தீயதாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன. ஏனெனில், அல்லாஹுத்தஆலா இவற்றை மேலான ஞானத்தைக் கொண்டே நிர்ணயித்துள்ளான். அதனைப் புரியக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள், புரியாதவர்கள் மடமையில் சிக்கித்தவிர்ப்பார்கள்.
விதி பற்றிய நம்பிக்கை:
மேலும், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சம் சில சமயங்களில் தன்னிலே தீங்குடையதாக இருந்தாலும், வேறு ஒர் கோணத்தில் நோக்குகையில் அது நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும். இவ்வடிப்படையை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் ஒப்புவைக்கின்றது.
‘மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டுவிட்டன, அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதித்தான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பிவிடலாம்’. (அர்ரூம்: 41)
எனவே, இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பிரகாரம் கரையிலும் கடலிலும் வெளிப்பட்டிருக்கும் அழிவு, மற்றும் குழப்பம் ஆகியன ஒரு விதத்தில் தீங்கானவையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சத்தில் காணப்படும் தீங்கானது, அதனுடன் இணைக்கப்பட்ட ஓன்றாக அன்றி எதார்த்தமான தீங்காக இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கான சில எடுத்துக்காட்டுகளாவன,
திருமணம் செய்யாத ஒருவர் விபச்சாரம் செய்யும்போது அவருக்கு வழங்கப்படும் தண்டனையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் அத்தண்டனையானது குறித்த அந்நபருக்கு தீங்குடையாதாக இருந்தாலும் அவருக்கும், அத்தண்டனையை கண்ணுறக்கூடியவர்களுக்கும் அதில் பல நலவுகள் உள்ளன. அந்நலவுகளாவன,
1. விபச்சாரம் செய்தவனுக்கு குறித்த அத்தண்டனை குற்றப்பரிகாரமாக அமைகின்றது.
2. விபச்சாரத்திற்கு மறுமையில் வழங்கப்படவிருக்கும் தண்டனையைவிட உலகில் வழங்கப்படும் தண்டனை மிக இலகுவானது.
3. குறித்த அத்தண்டனையைக் கண்ணுறக்கூடியவர்களுக்கு சிறந்த படிப்பினை கிடைக்கின்றது. அதனால் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் தூரமாவதற்கு வழியமைக்கின்றது.
4. விபச்சாரம் செய்தவர் கூட இனிவரும் காலங்களில் தன்னால் இவ்வீனச் செயல் நடைபெறாதவிதத்தில் தற்காத்துக் கொள்வார்.
மேலும், எமக்கேற்படக்கூடிய நோய்களை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். உண்மையில் அந்நோய்கள் எமக்கு தீங்களிக்கக்கூடியனவாக இருந்தாலும், அவை தம்மிலே பல நலவுகளை கொண்டனவாகத் திகழுகின்றன. அந்நலவுகளாவன,
1. எமது சிறுபாவங்களுக்கான குற்றப்பரிகாரமாக அமையும்.
2. அல்லாஹ் எமக்களித்த ‘ஆரோக்கியம்’ என்ற அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொள்ளலாம்.
3. எமது உடம்பில் காணப்படுகின்ற சில வகையான கிருமிகளை அழிப்பதற்கு அந்நோய்கள் உறுதுணையாக இருக்கின்றன. இக்கருத்தை மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
விதிபற்றிய மேலும் பல விளக்கங்கள் இருக்கின்றன. இமாமவர்கள் அடுத்து கூற இருக்கின்ற விடயம் விதியைப்பற்றியதாகவுள்ளதால் அதனைத் தெளிவுபடுத்தும் போது மேலதிக விளக்கங்களைக் காண்போம்.
وَمِنَ الإيْمَانِ باللهِ : الإيْمانُ بِمَا وَصَفَ بِهِ نَفْسَهُ فِيْ كِتَابِهِ وَبِمَا وَصَفهُ بِهِ رَسُوْلُهُ مُحَمَّد صلى الله عليه وسلم
விளக்கம்:
அல்லாஹ் தொடர்பான வர்ணனை விடயத்தில் எமது நம்பிக்கை:
மேற்கூறப்பட்ட வாசகத்தில் இருந்து அல்லாஹ் தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதியாகும். அதாவது, அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதானது பிரதானமாக நான்கு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன,
அவனின் இருப்பை விசுவாசம் கொள்ளல்.
அவனை ருபூபிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
அவனை உழூஹிய்யாவைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
அவனை அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்தைக் கொண்டு ஒருமைப்படுத்தல்.
எனவே மேற்குறிப்பிடப்பட்ட வாசகமானது, நான்காம் பிரிவின் ஒருபகுதியான அல்லாஹ்வின் ஸிபாத் (பண்புகள்) பற்றிய நம்பிக்கையைத் தெளிவுபடுத்துகின்றது. அதனால் தான் எமது விளக்கத்தின் துவக்கத்தில் “அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையின் ஒரு பகுதி” என்று குறிப்பிட்டிருந்தோம்.
(في كتابه) இங்கு كتابه என்ற வார்த்தையின் மூலம் அல்குர்ஆன் நாடப்படுகின்றது. மேலும், அல்லாஹுத்தஆலாவே அல்குர்ஆனுக்கு இப்பெயரைச் சூட்டியுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அது, லவ்ஹூல் மஹ்பூல் எனும் ஏட்டிலும், சங்கைமிக்க மலக்குகளின் கரங்களில் தவளக்கூடிய ஏடுகளிலும், எம்மத்தியில் காணப்படுகின்றன அல்குர்ஆன் பிரதிகளிலும் எழுதப்பட்டுள்ளது. எனவே, இங்கு كتاب (கிதாப்) என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்டாலும் مكتوب (எழுதப்பட்டது) என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மேலும், அல்லாஹுத்தஆலா இச்சொல்லை தன்னுடன் இணைத்துக் கூறியுள்ளான். அதற்குக் காரணம், அல்குர்ஆனானது அவனது வார்த்தையாக இருப்பதினாலாகும்.
மேற்கூறப்பட்டுள்ள அறபு வாசகத்தில் விரிவாக ஆராயத்தக்க பல பகுதிகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.
1. அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில், அவன் தன்னைப்பற்றி வர்ணித்த விடயங்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கும். அதன் விளக்கமாவது,
நாம் முன்பு குறிப்பிட்ட பிரகாரம், அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில் அவனது அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்களை விசுவாசம் கொள்வதும் உள்ளடங்கியுள்ளது. ஏனெனில், அல்லாஹுத்தஆலா தன்னைப்பற்றிக் குறிப்பிடும் போது, தனக்குத் தனியான பெயர்களும் பண்புகளும் இருப்பதாகக் கூறியுள்ளான். அவற்றையே நாம் “அல் அஸ்மாஉ வஸ்ஸிபாத்” என்கிறோம்.
மேலும், இவ்விடயம் சாதாரணமாக அனைவரினாலும் ஏற்றுக் கொள்ள முடியுமான ஓர் உண்மையாகும். ஒருவன் எவ்விதப்பண்புகளும் இல்லாமல் இருக்கிறான் என்று கூறுவது சாத்தியமற்ற ஒன்றாகும். எந்த ஒன்றுக்கும் பண்புகள் அவசியம். அப்போது தான் அப்பொருள் இனம் காணப்படுகின்றது. இதனால் தான் அல்லாஹ் தொடர்பான நம்பிக்கையில் ஒரு பகுதியாக அவனது பண்புகளை விசுவாசம் கொள்வதும் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, அவனது பண்புகளை முழுமையாக விசுவாம் கொள்ளாதவன் அல்லாஹ்வை முழுமையாக விசுவாசம் கொள்ளாதவனைப் போலாவான்.
2. அல்லாஹ்வின் பண்புகளானது மறைவான விடயங்களுடன் தொடர்புடையனவாகும். எனவே, மறைவான விடயங்களில் மனிதனின் நிலைப்பாடானது உள்ளதை உள்ளபடி நம்புவதாகும். அதைவிடுத்து மற்றொரு விளக்கத்தின் பால் செல்வது தடுக்கப்பட்ட காரியமாகும்.
இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹுத்தஆலா தன்னை எவ்வாறு வர்ணித்துள்ளானோ அல்லது அவனது தூதர் எவ்வாறு அவனைப்பற்றி வர்ணித்துள்ளாரோ அவ்வாறன்றி வேறு விதங்களில் அவனை வர்ணிக்க முடியாது” என்கிறார். (மஜ்மூஉல் பதாவா)
இக்கூற்றை உறுதி செய்யக்கூடிய பல ஆதாரங்களை அல்குர்ஆனில் இருந்து முன்வைக்கலாம். மேலும் புத்திரீதியான பல ஆதாரங்களும் கூட இதற்குள்ளன.
அல்லாஹூத்தஆலா கூறுகின்றான்: ‘என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்’ என்று (நபியே) நீர் கூறுவீராக!
(அல் அஃராஃப்: 33)
மேற்கூறப்பட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் ஒருவர் அல்லாஹ்வை அவன் வர்ணித்தற்கு மாற்றமாக வர்ணிக்க எத்தனிப்பது தனக்கு அறிவில்லா ஒன்றில் தலையை நுழைப்பதற்குச் சமனாகும். எனவே, இவ்வாறு நடந்து கொள்வது ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை மேற்கூறப்பட்ட வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
பிறிதோர் இடத்தில் அல்லாஹ் பிரஸ்தாபிக்கும் போது, ‘ (நபியே!) எதைப்பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக, செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் – அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.’
(பனீ இஸ்ராயீல்: 17)
இவ்வசனத்தில் கூட எவ்விடயத்தில் எமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அவ்விடயத்தில் நாம் ஈடுபடலாகாது என்ற பாடம் புகட்டப்பட்டுள்ளது. அதையும் மீறி எவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்களோ நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட ஒன்றில் ஈடுபட்டவர்களாகிவிடுவர்.
நாம் மேலே குறிப்பிட்ட பிரகாரம் அல்லாஹ்வுடைய பண்புகளானது மறைவான விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். அவற்றை புத்தியின் மூலம் அணுகமுடியாது. எனவே, அவனை அவன் வர்ணித்த வர்ணனைகள் மூலமன்றி எம் இஷ்டப்படி வர்ணிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அவன் எமக்கு இனங்காட்டித்தந்த வர்ணனைகளைக்கூட எம் கற்பனைக்குத்தக்கவிதத்தில் பயன்படுத்தி உருவமைத்துவிடவும் முடியாது. இந்த அடிப்படையை அல்லாஹ் விடயத்தில் நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக, சுவனத்து இன்பங்கள் தொடர்பான எத்தனையோ வர்ணனைகளை நாம் குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இருந்து தெரிந்து வைத்துள்ளோம். ஆயினும் அவை முழுமையாக படைக்கப்பட்டிருந்தும் எங்களில் எவராலும் அதனுடைய உண்மையான அமைப்பை விளக்கிக் கொள்ள முடியாதுள்ளது. சான்றாக, சுவனவாசிகளுக்கு சித்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கனிகள் மற்றும் அக்கனிகளில் உள்ளடங்கக்கூடிய பேரீச்சம் பழம், மாதுளை போன்ற பல கனி வர்க்கங்களை எடுத்துக் கொள்வோம். அவை எமக்கு நன்கு அறிமுகமான கனிகளாக இருந்தாலும் அதன் எதார்த்த தன்மையை எங்களால் கூற முடியாது இருக்கின்றது. அதேநேரத்தில் அவ்வின்பங்கள் பற்றி சற்று வர்ணிக்குமாறு எம்மிடத்தில் வினவப்பட்டாலும் எங்களால் முழுமையாக அதன் இன்பங்களை வர்ணித்துக் கூற முடியாது. காரணம், அல்லாஹ் சுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘ ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கனிகளின் குளிர்ச்சியை எந்த ஒர் ஆத்மாவும் அறியாது’ என்கிறான். (அஸ்ஸஜ்தா: 17)
மேலும், ஹதீஸூல் குத்ஸியில் அல்லாஹ் கூறும் போது, ‘நான் என்னுடைய ஸாலிஹான அடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனித உள்ளமும் கற்பனை செய்திராத சுவனத்தை தயார் செய்து வைத்துள்ளேன்’ என்கிறான். எனவே, படைக்கப்பட்டு பண்புகளில் பல இனங்காட்டப்பட்ட ஒரு படைப்பையே எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ள நிலையில் எவ்வாறு படைப்பாளனான அல்லாஹ்வைப்பற்றி கற்பனை செய்ய முடியும் ?!!!
மேலும் புரிந்து கொள்வதற்காக பிறிதோர் உதாரணத்தை முன்வைக்கின்றேன். எம்முடன் இருக்கும் ரூஹைப்பற்றி உங்களில் எவரும் சிந்தித்ததுண்டா? அணு தினமும் அது எம்முடன் இருந்தும் அதனைப்பற்றி அறிவற்றவர்களாகவுள்ளோம். உண்மையில் அர்ரூஹானது கைப்பற்றப்படும் போது கண்களால் பார்க்கமுடியுமான ஒன்றாக இருந்தும் கூட எம்மால் அதனைப் பற்றி வர்ணிக்க முடியாதுள்ளது. காரணம் அதன் வர்ணனைகளில் அல்லாஹ் தெரியப்படுத்தியதைத் தவிர வேறு எதனையும் எம்மால் கூற முடியாததேயாகும். இவ்வாறிருக்க, எப்படி ஒருவர் அல்லாஹ்வின் பண்புகளைக் கண்டறிவதில் தன் சிந்தனையை முடுக்கிவிடுவதை காத்திரமான செயல் எனக்கூற முடியும்?!!!
எனவே, அல்லாஹ்வின் பண்புகளை உள்ளபடி நம்புவதே எமது கடமை. அதைவிடுத்து அவற்றை விளக்கிக்கூற எத்தனிப்பது தனது மடமையின் வெளிப்பாடே!!! அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக.
1. அல்லாஹ் குறித்து குர்ஆன் ஹதீஸ் மூலாதாரங்களில் இடம்பெற்றுள்ளவற்றிற்கு வெளிப்படையான கருத்தை மாத்திரமே கொடுக்க வேண்டும். அவற்றில் எல்லை மீறிவிடக்கூடாது. உதாரணமாக, அல்லாஹ் தனக்கு கண் இருப்பதாக தன்னை வர்ணித்துள்ளான். அவ்வர்ணனையைக் கருத்திற் கொண்டு அதற்கு வியாக்கியானம் செய்யும் போது, கண் என்ற வாசகமானது எதார்த்தமாக கண்ணைக் குறிக்காது மாற்றமாக, அதன் மூலம் அவனது பார்வைதான் நாடப்படுகிறது என்று கூறலாகாது.
அதே போன்று அவனுக்கு இரு கைகள் இருப்பதாக அல்மாயிதா அத்தியாயத்தின் 64ம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய இரு கைகள் என்ற வார்த்தையானது, அவனது எதார்த்தமான கைகளைக் குறிக்காது மாற்றமாக, தனது அடியார்களுக்கு அருள் புரியத்தக்க அருட்கொடைகளைத் தன்வசம் வைத்திருப்பதாகக் கூறுவதைக் குறிப்பிடுகிறது என்று விளக்கம் கூறக்கூடாது. எனவே, சிந்தித்துப்பாருங்கள்! அல்லாஹ்வை இவ்வாறெல்லாம் வர்ணிப்பது அவன் தன்னைப்பற்றி வர்ணித்த வர்ணனையைப்போலாகுமா ?!!!
2. பொதுவாக இமாமவர்கள் குறிப்பிட்ட, ‘அல்லாஹ்வின் பண்புகள்’ என்ற வாசகமானது அல்லாஹ் தன்னைப்பற்றி வர்ணித்த அனைத்து வகையான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வின் பண்புகளைப் பிரதானமாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. அவனது தன்மை சார்ந்த பண்புகள்
இவ்வகைப் பண்புகளைப் பொருத்தளவில், அவை எப்போதும் அவனுக்கு நிலைத்திருக்கக்கூடிய பண்புகளாக இருக்கும். இதனுள் பிரதானமாக இரு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
அ. கருத்து சார்ந்த பண்புகள்
இவ்வகைப்பண்புகளுக்கு உதாரணங்களாக வெட்கம், அறிவு, ஆற்றல், ஞானம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
ஆ. விடயம் சார்ந்த பண்புகள்
இவ்வகையான பண்புகளுக்கு உதாரணங்களாக இரு கரங்கள், முகம், இரு கண்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
எனவே, நாம் மேலே குறிப்பிட்ட பண்புகளானது என்றென்றும் அல்லாஹ்வுக்கு நிலைத்திருக்கக்கூடிய பண்புகளாகும். அவை எச்சந்தர்ப்பத்திலும் அவனை விட்டும் நீங்கிவிடாது. இதனைக்க ருத்திற்கொண்டுதான் அறிஞர்கள் இத்தகைய பண்புகளை அல்லாஹ்வின் தன்மை சார்ந்த பண்புகள் என்ற பட்டியலில் உள்ளடக்கியுள்ளனர்.
2. அவனது செயல் சார்ந்த பண்புகள்
இவ்வகைப்பண்புகள் முழுமையாக அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்புள்ள பண்புகளாகும். இதனுள் இரு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
அ. காரணம் அறியப்பட்ட பண்புகள்:
இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாக அவனது திருப்பொருத்தத்தைக் குறிப்பிடலாம். ஏனெனில், அவனது திருப்பொருத்தத்திற்குத் தக்க காரணம் பெறப்படும்போது அப்பொருத்தமானது உரியவருக்குக் கிடைக்கின்றது. இவ்வடிப்படையைப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் காணலாம்.
‘(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால், நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் திருப்தியடைவான்.’ (அல் ஜூமர்:39)
ஆ. காரணம் அறியப்படாத பண்புகள்:
இத்தகைய பண்புகளுக்கு உதாரணமாக இரவின் கடைசி மூன்றில் ஒரு பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்ற செய்தியைக் குறிப்பிடலாம்.
அல்லாஹ்வின் தன்மை மற்றும் செயல் சார்ந்த அம்சங்களை ஒரே பண்பில் ஒன்றித்ததாகவும் சில பண்புகள் உள்ளன. அவற்றை அதற்குரிய கோணத்தில் அணுகுவதின் மூலம் இத்தன்மையைக் கண்டு கொள்ளலாம். உதாரணமாக அவனது பேசுதல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். இப்பண்பானது அவனது பேசும் ஆற்றல் என்ற தன்மையுடனும், அவனது பேசுதல் என்ற செயலுடனும் தொடர்புடையதாக இருக்கின்றது. இருப்பினும் இத்தகைய பண்புகள் அவனது செயலுடன் கூடிய தொடர்பினைக் கொண்டிருப்பதனால் அறிஞர்கள் அல்லாஹ்வின் செயல் சார்ந்த பண்புகளில் உள்ளடக்குகின்றனர்.
مِنْ غَيْر تحْرِيْفٍ وَلا تعْطِيْلٍ وَمِنْ غَيْر تكْيِيْفٍ وَلا تمْثِيْلٍ
விளக்கம்:
நாம் முன்பு பார்த்த விளக்கங்களில் இருந்து அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
மேற்குறிப்பிடப்பட்ட அறபு வாசகமானது நாம் முன்பு புரியவைத்த அம்சங்களை வலுப்படுத்தக்கூடயதாக இருக்கின்றது. அதாவது, அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இமாமவர்கள் அறபியில் குறிப்பிட்ட تحريف تعطيل , تكييف , تمثيل ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடாது.
التحريف
(அத்தஹ்ரீப்)
அத்தஹ்ரீப் எனும் பதத்திற்கு மாற்றுதல், ஒரு விடயத்தினுடைய எதார்த்த கருத்தில் இருந்து சாய்ந்து செல்லுதல் போன்ற கருத்துக்கள் உள்ளன. இப்பதமானது அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் பிரயோகிக்கப்படும் போது அதன் விளக்கமாவது, ‘அல்லாஹ்வின் பண்புகள் உணர்த்தும் எதார்த்தமான கருத்தை விடுத்து வேறு ஒரு கருத்தின் பால் நாடிச்செல்லல்’ என்று அமையும். பொதுவாக இத்தகைய நடவடிக்கையை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. சொல் ரீதியான மாற்றம்
2. கருத்து ரீதியான மாற்றம்
சொல் ரீதியான மாற்றம்:
இப்பிரிவானது ஒரு சொல்லின் தன்மையில் மாற்றத்தை ஏற்படுத்துவதைக் குறிக்கின்றது. அத்தகைய மாற்றமானது, ஒரு சொல்லை அல்லது எழுத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பதின் மூலமோ அல்லது, உயிர்க்குறியீடுகளில் மாற்றம் ஏற்படுத்துவதின் மூலமோ இடம்பெறலாம். இதனைப் புரிந்து கொள்வதற்காக சில நவீன வாதிகளின் திருவிளையாடல்களைத் தருகின்றேன்.
– الرَّحْمنُ عَلى العَرْشِ اسْتَوَى இவ்வசனத்தின் ஈற்றில் இடம்பெற்றிருக்கக்கூடிய சொல்லான اسْتَوَى என்ற சொல்லில் ஒரு لَ ஐ அதிகரித்து اسْتوْلَى என்று மாற்றம் செய்து குறித்த அச்சொல்லின் கருத்தில் திருப்பம் செய்துள்ளனர்.
-وَجَاءَ رَبُّكَ என்ற திருக்குர்ஆன் வசனத்தில் رَبُّكَ என்ற சொல்லுக்கு முன்னால் أمْرُ என்ற சொல்லை அதிகரித்து கருத்தில் மாற்றம் செய்துள்ளனர்.
وَكَلَّمَ الله مُوْسَى تكلِيْمَا என்ற வசனத்தில் الله என்று இடம்பெற்றிருக்கக்கூடிய வார்த்தைக்கு வரக்கூடிய ـُ ஐ ـَ ஆக மாற்றி வியக்கியானம் செய்துள்ளனர்.
இவையனைத்தும் அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கக்கூடியவர்களின் திருவிளையாடல்களாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வார்த்தைகளில் மிக உண்மையான அல்லாஹ்வின் வார்த்தையில் தம் இஷ்டப்படி விளையாடியுள்ளனர். அது மாத்திரமின்றி, அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு தம் கொள்கை கோட்பாடுகளுக்கு இயங்கும் விதத்தில் விளக்கமும் கொடுத்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டும் அல்லாஹ் எம்மனைவரையும் பாதுகாப்பானாக!
குறிப்பு:
-استوى என்ற வார்த்தைக்கு உயர்ந்து நிலைபெற்றுவிட்டான் என்றும் استولى என்ற வார்த்தைக்கு ஆக்கிரமித்தான் என்றும் பொருள் கொள்ளப்படும். எனவே, அல்லாஹ் அர்ஷின் மீது உயர்ந்து நிலை பெற்றுவிட்டான் என்று வியாக்கியானம் செய்வதற்குப் பதிலாக அவன் அர்ஷை ஆக்கிரமித்தான் என்று வியாக்கியானம் செய்துள்ளனர்.
-وجاء ربك என்ற வசனத்திற்கு உமது இரட்சகன் வரும் போது… என்று பொருளாகும். இவ்வசனத்திற்கு விளக்கம் கூற முற்பட்ட சில நவீன வாதிகள் أمر ربك என்று வசனத்தை திரிவுபடுத்தி, அல்லாஹ்வின் கட்டளை வரும் போது என்று வியாக்கியானம் செய்து அல்லாஹ்வின் உண்மையான வருகையை மறுத்துரைத்துள்ளனர்.
-وكلم الله موسى تكليما என்ற வசனத்தில் الله என்ற வார்த்தையின் இறுதியில் ـُ வந்துள்ளது. அவ்வாறு ـُ வந்தால், அல்லாஹ் மூஸா நபியுடன் பேசினான் என்று பொருளாகும். அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கக்கூடியவர்கள் அல்லாஹ்வின் பேசுதல் என்ற பண்பை மறுக்கும் விதத்தில் الله என்ற வார்த்தைக்கு ـُ க்குப் பதிலாக ـَ ஐ செய்துள்ளனர். இவ்வாறான மாற்றம், குறித்த அவ்வசனத்தில் இடம்பெறும் போது, மூஸா நபிதான் அல்லாஹ்வுடன் பேசினார் அல்லாஹ் அவருடன் பேசவில்லை என்று கருத்தில் மாற்றம் ஏற்படும்.
கருத்து ரீதியான மாற்றம்:
ஒரு சொல்லினுடைய அமைப்பை விட்டும் விலகி அதன் எதார்த்த கருத்தைக் கொடுக்காது வேறு ஒரு சொல்லின் கருத்தை அதற்கு வழங்கும் செயற்பாடே கருத்து ரீதியான மாற்றமாகும். இவ்வகைச் செயற்பாட்டுக்கு உதாரணமாக சில நவீன வாதிகளின் விளக்கங்களைத் தருகிறேன்.
الرحمة
(அர்ரஹ்மத்) என்ற வார்த்தைக்கு ‘அருள் புரிய நாடுதல்’ என்று விளக்கம் கூறியமை.
الغضب
(அல்களப்) என்ற வார்த்தைக்கு ‘பலிவாங்க நாடுதல்’ என்று விளக்கம் கூறியமை.
التعطيل
(அத்தஃதீல்)
‘அத்தஃதீல்’ என்ற சொல்லுக்கு ‘கலைதல்’ என்று பொருளாகும். அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டால், அல்லாஹ்வைவிட்டும் அனைத்து வகையான பண்புகளையும் கலைவதாகப் பொருள் கொள்ளப்படும். இச்செயற்பாட்டின் போது சரியான கருத்துக்குப் பிரதியாக வேறு கருத்தைத் தெரிவிக்கக்கூடிய ஒரு சொல் முன்வைக்கப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்க.
التكييف
(அத்தக்யீப்)
இச்செயற்பாடானது ஒரு பண்பின் வர்ணனையின் அமைப்பை தெளிவுபடுத்துவதைக் குறிக்கின்றது. ஒருவன் அல்லாஹ்வின் பண்புகளின் அமைப்பை சித்தரித்துக் காண்பிக்கும் போது அவன் ‘அத்தக்யீப்’ எனும் செயற்பாட்டில் ஈடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். இத்தகைய சித்தரித்தல் முறையை எப்போதும் ஒரு மனிதனால் செய்துவிட முடியாது. ஏனெனில், அவையனைத்தும் மறைவான அறிவுடன் சம்பந்தப்பட்டவைகளாகும். எப்படி அல்லாஹ்வை மனிதனால் அறிந்து கொள்ள முடியாதோ அதேபோன்று அவனது பண்புகளின் எதார்த்த தன்மையையும் அறிந்து கொள்ள முடியாது.
இதனால் தான் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடத்தில் الرحمن على العرش استوى என்ற வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய استوى என்ற சொல்லின் விளக்கத்தைப்பற்றி வினவப்பட்டபோது பின்வருமாறு பதிலளித்தார்கள்.
‘இஸ்திவா என்ற சொல் அறிமுகமானது, அதனுடைய அமைப்பு அறிமுகமற்றது, அதனை விசுவாசம் கொள்வது வாஜிபாகும், அதனைப்பற்றி வினாத்தொடுப்பது நூதன அனுஷ்டானம் – பித்ஆத் – ஆகும்.’
இமாமவர்கள் அளித்த இந்த பதில் பொதுவாக அல்லாஹ்வின் அனைத்து பண்புகள் விடயத்திலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
التمثيل
(அத்தம்ஸீல்)
இச்சொல் ஒப்பிடுதலைக் குறிக்கின்றது. அதாவது நிச்சயமாக அல்லாஹ்வின் பண்புகளானது படைப்பினங்களின் பண்புகளை ஒத்ததாக இருக்கின்றன என்று கூறுவதாகும். உதாரணமாக, அல்லாஹ்வுடைய கை எங்களுடைய கைகளைப் போன்றிருக்கின்றது என்று கூறுவதாகும். இப்படி அல்லாஹ்வின் பண்புகளை படைப்பினங்களின் பண்புகளுடன் ஒப்பிடுவது அல்குர்ஆனின் போதனைக்கு மாற்றமான செயலாகும். அதற்குச் சான்றாக பின்வரும் வசனத்தை குறிப்பிடலாம்.
‘அவனைப் போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.’ (அஷ்ஷுரா: 42)
எனவே, ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விசுவாசி, அல்லாஹ்வினுடைய அனைத்துப் பண்புகளையும் அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் இருப்பதாகக் கூறி உண்மைப்படுத்தக்கூடியவனாக இருப்பான்.
அத்தகைய வழிமுறை எம்மிலும் காணப்பட வேண்டும். இது விடயத்தில் ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்துயர்ந்து வந்த அறிஞர் பெருமக்கள் எமக்கு நல்லுதாரணமாகத் திகழ்கின்றார்கள். அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் நாம் காணக்கூடிய அதே அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் அவர்களும் பார்த்திருக்கிறார்கள். ஆயினும், அவர்களில் எவரும் அவற்றுக்கு வலிந்துரை செய்யக்கூடியவர்களாக இருக்கவில்லை. அவற்றைக் கேட்ட மாத்திரத்திலே உண்மைப்படுத்தக் கூடியவர்களாகவே இருந்தார்கள். அந்த நிலைப்பாடே எமக்கும் பொருத்தமாகும். ஏனெனில், இந்நிலைப்பாட்டைக் கடைபிடிக்காது பேன பிரிவினர்களுக்கு ஈற்றில் என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அல்லாஹ் எம்மை அவர்களின் சிந்தனைகளைவிட்டும் பாதுகாப்பானாக!
بل يؤمنون بالله سبحانه ليس كمثله شيء وهو السميع البصير , فلا ينفون عنه ما وصف به نفسه ولا يحرفون الكلم عن مواضعه
விளக்கம்:
அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு:
இமாமவர்கள், அல்லாஹ்வின் பண்புகளை விசுவாசம் கொள்வதின் அவசியத்தைத் தெளிவுபடுத்தியதன் பிற்பாடு அவைகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அதனடிப்படையில், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஆத்தினரைப் பொறுத்தளவில், அவர்கள் ‘அல்லாஹ்வைப் போன்று எப்பொருளும் இல்லை’ என்ற அடிப்படையை வைத்துக் கொண்டு படைப்பினங்களின் பண்புகளுக்கு அவனை ஒப்பாக்குவதைவிட்டும் தூரமாவதற்காக முஅத்திலாக்கள் அவனது பண்புகளை மறுத்ததைப் போன்று மறுக்கமாட்டார்கள். மாற்றமாக, அவர்கள் எப்படி படைப்பினங்களுக்கு தனிப்பட்ட பண்புகள் உள்ளனவோ அதே போன்று அல்லாஹ்வுக்கும் அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் தனிப்பட்ட பண்புகள் உள்ளன எனக் கூறுகின்றனர். மற்றும், அவற்றுக்கிடையே எவ்வித ஒப்பீடுகளும் இருக்காது எனவும் இயம்புகின்றனர்.
மேலும், அவர்கள் முஅத்திலாக்களைப் போன்று அல்குர்ஆனின் வசனங்களை மாற்றக்கூடியவர்களாகவோ அவற்றின் கருத்துக்களில் மாற்று விளக்கம் சொல்லக்கூடியவர்களாகவோ இருக்கமாட்டார்கள்.
ولا يلحدون في أسماء الله وآياته , ولا يكيفون ولا يمثلون صفاته بصفات خلقه
விளக்கம்:
அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் அவனது வசனங்கள் விடயத்தில் இல்ஹாத்:
அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடுத்த நிலைப்பாடு, அவர்கள் அவற்றில் ‘இல்ஹாத்’ எனும் செயலை மேற்கொள்ளக்கூடியவர்களாக இருக்கமாட்டார்கள்.
இல்ஹாத் என்றால் என்ன?
இல்ஹாத் எனும் அறபு வாசகத்திற்கு அறபு மொழிக் கருத்தின் அடிப்படையில் ‘ஒரு விடயத்தைவிட்டும் சாய்ந்து செல்லல்’ எனப் பொருள் கொள்ளப்படும். இங்கு அல்லாஹ்வின் பண்புகள் மற்றும் அவனது வசனங்கள் ஆகியவற்றில் இல்ஹாத் செயல்முறை என்பதின் மூலம் நாடப்படுவது, ‘அவற்றினது எதார்த்த கருத்தை விடுத்து தவறான கருத்தின் பால் சாய்ந்து செல்லலாகும்’.
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் இல்ஹாத்:
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் இல்ஹாத் செயல்முறையை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை சிலைகளுக்குப் பெயராகச் சூட்டுதல்
இச்செயல்முறையின் வெளிப்பாடாகவே அறியாமைக்கால மக்கள் தங்களது சிலைகளுக்குப் பெயர் சூட்டி வந்தனர். அதன்படி ‘இலாஹ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘லாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘அஸீஸ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘உஸ்ஸா’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘மன்னான்’ என்ற வார்த்தையில் இருந்து ‘மனாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
2. அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற பெயர்களைச் சூட்டி அழைத்தல்
இதற்கு உதாரணமாக, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை ‘பிதா’ (தந்தை) என்று அழைப்பதையும், தத்துவவியலாளர்கள் அல்லாஹ்வை ‘மூலகாரணி’ என்று அழைப்பதையும் குறிப்பிடலாம்.
3. அல்லாஹ்வின் அந்தஸ்திற்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் அவனை வர்ணித்தல்
இதற்குச் சான்றாக யூதர்கள் அல்லாஹ்வை ஏழை என்றும், அவனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவன் சனிக்கிழமைகளில் ஓய்வு எடுக்கின்றான் என்றும் வர்ணித்தவற்றைக் குறிப்பிடலாம்.
4. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் கருத்துக்களையும் அதன் எதார்த்த தன்மைகளையும் மறுத்தல்
இல்ஹாதின் இப்பிரிவுக்கு ஜஹ்மிய்யாக்களின் செயற்பாடுகளைச் சான்றாக முன்வைக்கலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் குறித்துக் குறிப்பிடுகையில், ‘நிச்சயமாக அவை எவ்வித பண்புகளையும், கருத்துக்களையும் உள்ளடக்காத வெற்று வார்த்தைகளாகும்’ என்கின்றனர். மேலும், கூறுகையில்: ‘ஸமீஉ’ என்ற வார்த்தை செவியேற்றலைக் குறிப்பிடாது என்றும், ‘பஸீர்’ என்ற வார்த்தை பார்த்தலைக் குறிப்பிடாது என்றும், ‘ஹய்யு’ என்ற வார்த்தை உயிருடன் இருத்தலைக் குறிப்பிடாது என்றும் கூறுகின்றனர்.
5. அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பிடுதல்
இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ‘அத்தம்ஸீல்’ எனும் செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடியவர்களின் கருத்துக்களைக் குறிப்பிடலாம். அவர்கள் அல்லாஹ்வின் கையைப் பற்றிக் கூறும் போது, அவனது கை எமது கையைப்போன்றது என்கின்றனர்.
அல்லாஹுத்தஆலா தன்னுடைய பெயர்களிலும் அவனது பண்புகளிலும் இத்தகைய இல்ஹாத் நடவடிக்கையை மேற்கொள்வோரைக் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:
‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.’ (அல் அஃராப்: 180)
மேலும் கூறுகையில்:
‘நிச்சயமாக எவர்கள் நமது வசனங்களைத் திரிபுபடுத்துகின்றார்களோ அவர்கள் நம்மிடமிருந்து மறைந்து விட மாட்டார்கள். மறுமை நாளில் நரகத்தில்;; எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது அச்சமற்றவராக வருபவரா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.’ (புஸ்ஸிலத்: 30)
لأنه سبحانه لا سمي له ولا كفء له ولا ند له , ولا يقاس بخلقه سبحانه وتعالى . فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه .
விளக்கம்:
அல்லாஹ்வுக்கு ஏன் உவமை கிடையாது?
இவ்வசனத்தின் துவக்கத்தில் இமாமவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் அல்லாஹுத்தஆலாவுக்கு ஒப்புவமை கூறுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொறுத்தளவில் அவர்கள் பின்வரக்கூடிய அல்குர்ஆன் வசனங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தமது கொள்கைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
‘அவனுக்கு நிகராக எவரையேனும் நீர் அறிவீரா?’ (மர்யம்: 65)
‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை’ (அல் இஹ்லாஸ்: 4)
‘எனவே, அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.’ (அல்பகரா: 22)
இத்திருவசனங்களின் கருப்பொருட்களை மையமாக வைத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, அல்லாஹ்வின் பெயருக்குப் பாத்திரமாக உலகில் வேறு எவரும் இல்லை என்றும், அவனுக்கு ஒப்பாக அல்லது நிகராக ஆற்றல்படைத்தவர்கள் எவரும் இருக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.
இது தவிர ‘எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள்.’ (அந்நஹ்ல்: 74) என்ற திருக்குர்ஆன் வசனத்தை வைத்து அவனை படைப்பினங்களுடன் ஒப்பிட முடியாது எனக் கூறுகின்றனர். இப்படியிருக்க சிந்திக்கும் ஆற்றல் படைத்த எவராவது பூரணத்துவம் மிக்க படைப்பாளனை குறைகள் நிறைந்த சிருஷ்டிகளுடன் ஒப்பிடுவாரா? மாற்றமாக அல்லாஹுத்தஆலா, தன்னையும் பிறரையும் பற்றி நன்கறிந்தவனாக இருக்கின்றான். எனவே, அதனைக் கருத்தில் கொண்டு அவன் தன்விடயத்தில் உறுதிப்படுத்தியவற்றை நாமும் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், படைப்பினங்களிடத்தில் அவனைப்பற்றிய பூரண அறிவு கிடையாது. அல்லாஹுத்தஆலாவோ படைப்பினங்களின் சிந்தனைக் கொட்டாத பூரண பண்புகளைக் கொண்டு வரணிக்கப்பட்டுள்ளான். எனவே, அல்லாஹ் தனக்குப் பொருந்திக் கொண்டவற்றை நாமும் அவனுக்குப் பொருந்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவனுக்குத்தகுதியானவற்றை அவனே நன்கறிந்தவனாகவுள்ளான். நிச்சயமாக அவன் அறிவித்தவை அழகானதும் உண்மையானதுமாகும். நாம் என்றென்றும் அவற்றை உண்மைப்படுத்தக்கூடியவர்களாகத் திகழ்வோமாக!
ثم رسله صادقون مصدقون , بخلاف الذين يقولون عليه ما لا يعلمون
விளக்கம்:
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மை.
மேற்குறித்த வசனமானது, இதற்கு முன்னால் நாம் பார்த்த வசனத்தின் தொடராக அமைந்துள்ளது. இவ்வசனத்தில் இமாமவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மையைப் பற்றி விளக்கியுள்ளார்கள்.
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள், அவன் குறித்து மக்களுக்குப் போதித்தவற்றில் உண்மையாளர்களாகவும், வானவர்கள் மூலமாக அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வஹியின் மூலம் உண்மைப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். மேலும், அவர்கள் தங்களது மனோ இச்சையின் அடிப்படையில் எதையும் மொழியமாட்டார்கள். இது அவர்களுக்கு இருக்கின்ற நம்பகத்தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன் மூலம், அவர்களுக்கு அல்லாஹ்வின் விடயத்தில் சொல்லப்பட்டதும், அவர்கள் மக்களுக்கு போதித்ததும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி வர்ணித்தவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வது எமது கடமையாகும்.
மேலும், அவர்கள் அல்லாஹ்வின்; விடயத்தில் அறிவின்றிக்கூறக்கூடியவர்களுக்கு மாற்றமானவர்களாக இருந்தனர். அத்தகைய அறிவிலிகள் தமது மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்களாக வெறும் கற்பனைகளையும் யூகங்களையும் வகுத்து ஷைத்தானுக்கு அடிமைப்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். இதற்குப் பின்வரும் வசனங்கள் சான்று பகருகின்றன.
‘ஷைத்தான்கள் யார் மீது இறங்குகின்றனர் என உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். (ஒட்டுக்) கேட்டவற்றை (இவர்களின் காதுகளில்) போடுவார்கள். அவர்களில் அதிகமானோர் பொய்யர்களே!’ (அஷ்ஷுஅரா: 221-223)
‘அற்ப கிரயத்தைப் பெறுவதற்காக தம் கைகளால் ஒரு நூலை எழுதி பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகின்றவர்களுக்குக் கேடுதான்.’ (அல்பகரா: 79)
அல்லாஹ் எம்மனைவரையும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைவிட்டும் பாதுகாப்பானாக!
ولهذا قال: { سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين } سورة الصافات , الآيات : 180-182 فسبح نفسه عما وصفه به المخالفون للرسل . وسلم على المرسلين لسلامة ما قالوه من النقص والعيب .
விளக்கம்:
அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் வார்த்தைகள் உண்மையானதும் அழகானதுமாகும் என்பதற்கான சான்று.
இமாமவர்கள் மேற்குறித்த சான்றின் மூலம் அவர்கள் முன்பு குறிப்பிட்ட, அல்லாஹ்வினதும் அவனது தூதர்களினதும் வார்த்தைகள் உண்மையானதும் அழகானதுமாகும் என்பதை நிரூபிக்கின்றார்கள்.
அதற்காக அவர்கள் முன்வைத்த சான்றின் தமிழ் வடிவமாவது: ‘(நபியே!) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் கண்ணியத்தின் இரட்சகனாகிய உமது இரட்சகன் தூய்மையானவன். (நமது) தூதர்கள் மீது சாந்தி உண்டாவதாக. அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.’ (அஸ்ஸாப்பாத்: 180-182)
இச்சான்றானது பின்வரும் சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
அல்லாஹ்வின் அந்தஸ்திற்குத் தகாதவிதத்தில் வழிகேடர்களும் அறிவிலிகளும் அவனை வர்ணித்தவைகளைவிட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கின்றான்.
தூதர்களின் நம்பகத்தன்மையும், அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் அறித்தவற்றை ஏற்றுக் கொள்வதின் அவசியமும் புலப்படுகின்றது.
தூதர்கள் மீது சாந்தியை வேண்டிப் பிரார்த்தித்தலும், அவர்களை கௌரவப்படுத்தலும்.
தூதர்கள் கொண்டுவந்ததிற்கு மாற்றமான கருத்துக்களைப் புறக்கணித்தல். அதிலும் குறிப்பாக, அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் அறிவித்தவற்றிக்கு மாற்றமான கருத்துக்களைப் புறக்கணிப்பது அவசியமாகும்.
அல்லாஹ்வைப் புகழ்வதும், அவனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும் எமது கடமையாகும். அத்தகைய அருட்கொடைகளில் பிரதானமாக எமக்கு ஏகத்துவம் என்ற அருட்கொடை கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
وهو سبحانه قد جمع فيما وصف به نفسه بين النفي والإثبات. فلا عدول لأهل السنة والجماعة عما جاء به المرسلون فإنه الصراط المستقيم.
விளக்கம்:
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் எதார்த்த தன்மை மேற்கூறப்பட்டுள்ள வசனமானது, அல்லாஹுத்தஆலாவின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதி செய்யும் விடயத்தில் அவன் தனது வேதத்தில் வகுத்துத்தந்துள்ள போக்கை – மன்ஹஜ் – ஐத் தெளிவுபடுத்தக்கூடியதாகவுள்ளது. விசுவாசிகளாக இருக்கக்கூடிய நாம் அதனைப் புரிந்து எமது போக்கை சீராக்கிக் கொள்வது கடமையாகும்.
பொதுவாக அல்லாஹுத்தஆலாவின் அனைத்துவிதமான பெயர்களும் பண்புகளும் இரு விடயங்களுக்கு மத்தியில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அவையாவன,
1. அல்லாஹ்வின் பூரணத்துவத்திற்கு மாற்றமாக அவனுக்கு குறை கற்பிக்கும் அம்சங்களை மறுத்தல். உதாரணமாக, அல்லாஹுத்தஆலாவிற்கு நிகரில்லை என்றும் அவனுக்கு சிறு தூக்கமோ பெருந்தூக்கமோ மரணமோ ஏற்படாது என்றும் கூறுவதைக் குறிப்பிடலாம்.
2. அல்லாஹ்விற்கு பூரணத்துவத்தை வழங்குகின்ற பண்புகளை அவனுக்கு உறுதிப்படுத்தல். உதாரணமாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை நோக்குக.
‘அவன்தான் அல்லாஹ். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அவனையன்றி வேறு யாரும் இல்லை. (அவனே) ஆட்சியாளன், பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன், பாதுகாப்பவன், கண்காணிப்பவன், யாவற்றையும் மிகைத்தவனும், அடக்கியாளுபவனும், பெருமைக்குரியவனுமாவான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவனே அல்லாஹ். (அவனே) படைப்பவனும், தோற்றுவிப்பவனும், உருவமமைப்பவனுமாவான். அவனுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவைகள் அவனைத் துதிக்கின்றன. அவன் யாவற்றையும் மிகைத்தவன், ஞானமிக்கவன்.’ (அல்ஹஷ்ர்: 23,24)
எனவே, அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தினரைச் சார்ந்தோருக்கு தூதர்கள் காட்டித்தந்த பாதையைவிட்டும் வேறுபாதைகளை நாடிச் செல்வது உகந்ததல்ல. மாற்றமாக, அவர்கள் தூதர்களின் கருத்துக்களில் ஒருமைப்பட்டவர்களாகவும், அவர்களின் ஒளியைக்கொண்டு பிரகாசிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதன் பிரதிபலிப்பாகவே அவர்கள் அல்லாஹ்விற்கு பூரணத்துவத்தைக் கற்பிக்கும் பண்புகளை உறுதிப்படுத்தக்கூடியவர்களாகவும், அவனது அந்தஸ்திற்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய பண்புகளை மறுக்கக்கூடியவர்களாகவும் இருந்து வந்துள்ளார்கள்.
மேலும், தூதர்கள் காண்பித்த பாதையானது நேரிய பாதையாகும். அந்நேரிய பாதையைவிட்டும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு விலகிச் செல்ல முடியாது. அப்பாதை குறித்து அல்லாஹுத்தஆலா கூறும் போது,
‘நிச்சயமாக இது எனது நேரான வழியாகும். எனவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள் பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அப்பொழுது அது அவனது வழியைவிட்டும் உங்களைச் சிதறடித்துவிடும்.’ (அல்அன்ஆம்: 153)
صراط الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين.
விளக்கம்:
அல்லாஹ் அருள் புரிந்தோரின் பாதை
அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர்கள் அகீதா மற்றும் எனைய விடயங்களில் காட்டித்தந்த நேரிய பாதையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் பயணிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மேலும், அதுவே அல்லாஹ் அருள்புரிந்தோரின் பாதையுமாகும். அவ்வருளுக்குச் சொந்தக்காரர்களாக நான்கு பிரிவினர் உள்ளனர்.
1. நபிமார்கள்: இவர்கள் அல்லாஹுத்தஆலாவினால் தனது நபித்துவத்திற்கும் தூதுத்துவத்திற்கும் தகுதியானவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.
2. ஸித்தீகீன்கள்: இவர்கள் உண்மையிலும், உண்மைப்படுத்துவதிலும் உச்ச கட்டத்தை அடைந்தவர்களாவர். இன்னும், இவர்கள் அல்லாஹ்வோடு பூரண இஹ்லாஸுடன் நடந்து கொண்டு நபியவர்களுக்கு முழுமையாகக் கட்டுப்படக்கூடியவர்களாகத் திகழ்ந்தனர்.
3. ஷுஹதாக்கள்: இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிந்து கொலை செய்யப்பட்டவர்களாவர். மேலும், இவர்கள் சுவனத்தைக் கொண்டு சாட்சியளிக்கப்பட்டவர்களாக இருப்பதினாலும், இவர்களது மரணத்தின் போது ரஹ்மத்துடைய வானவர்கள் சமுகம் தருவதினாலும் இப்பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.
4. ஸாலிஹீன்கள்: இவர்கள் அல்லாஹ்வினதும் அவனது அடியார்களினதும் உரிமைகளை சரிவர நிறைவேற்றுபவர்களாவர்.
மேலும், الصراط – ஸிராத் – என்ற சொல்லானது சிலசமயங்களில் அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படுவது, சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தவனாக அல்லாஹ் இருக்கின்றான் என்பதைக் குறிப்பதற்காகும்.
இதனைப் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில் அவதானிக்கலாம்.
‘நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். எனவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள்.’ (அல்அன்ஆம்: 153)
மேலும் சில சமயங்களில் இச்சொல்லானது அடியார்களுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும். அவ்வாறு பயன்படுத்தப்படுவது, அல்லாஹுத்தஆலாவின் அடியார்கள் அப்பாதையில் பயணிப்பதைக் கருத்திற்கொண்டேயாகும். அந்நேரிய பாதையில் பிரயாணிப்பவர்களின் சிறப்பைக் கருதியே நாம் நாள்தோரும் ஐவேளைத் தொழுகையில் ஸுரதுல் பாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பிரார்த்திக்கின்றோம். தற்காலத்தில் அதில் பிரயாணிக்கக்கூடியவர்கள் சொற்ப தொகையினராக இருந்தாலும் அப்பாதை நாம் முன்பு குறிப்பிட்டோரின் பாதை என்பதை நினைவில் கொள்க!
وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن . حيث يقول : ” قل هو الله أحد , الله الصمد , لم يلد ولم يولد , ولم يكن له كفوا أحد ”
(سورة الإخلاص , 1 – 4)
விளக்கம்:
அல்லாஹ்வின் பெயர்களையும் அவனது பண்புகளையும் அல்குர்ஆனில் இருந்து உறுதிப்படுத்துவதற்கான சான்றுகள்
1. அல்லாஹ் தொடர்பான வர்ணனையில் உறுதிப்படுத்துவதற்கும் மறுப்பதற்குமிடையிலான கூட்டுச் சேர்வு
இதற்கு முன்னர் நாம் பார்த்த விளக்கத்தில் இருந்து அல்லாஹ்வின் பெயர்களும் அவனது பண்புகளும் உறுதிப்படுத்தல் மற்றும் மறுத்தல் ஆகியவற்றிக்கிடையில் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அதனை அடுத்து இக்கூற்றை உறுதி செய்வதற்கான ஆதாரங்களை இமாமவர்கள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவில் இருந்து முன்வைத்துள்ளார்கள். அதன் முதற்கட்டமான அல்குர்ஆனில் இருந்து சில ஆதாரங்களை முன்வைத்து தனது விளக்கத்தைத் துவங்கியுள்ளார்கள். வாசகர்களின் பூரண தெளிவை நாடி அவ்விளக்கத்தை ஒவ்வொரு தொகுதியாகப் பிரித்து உபதலைப்புக்களில் இலகுபடுத்தியுள்ளோம்.
இமாமவர்கள் தனது விளக்கத்தின் முதல் கட்டத்தை அல் இஹ்லாஸ் அத்தியாயத்தைக் கொண்டு ஆரம்பித்துள்ளார்கள். ஏனெனில், இவ்வத்தியாயமானது:
அல்லாஹ்வின் பண்புகள் விடத்தில் பூரண தெளிவை வழங்கும்.
அதனைப் பாராயணம் செய்யக்கூடியவரை இணைவைப்பைவிட்டும் பாதுகாக்கும்.
மேலும், இமாமவர்கள் அல் இஹ்லாஸ் அத்தியாயத்தின் சிறப்பு பற்றிக் குறிப்பிடுகையில், இவ்வத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்கிறார்கள். அதன் விளக்கமாவது, மொத்தமாக அல்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ள கருத்துக்களை மூன்று பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.
ஏகத்துவம்
வரலாறு
சட்டதிட்டங்கள்
இவ்வத்தியாயத்தைப் பொருத்தளவில் இதில் அல்லாஹ்வுடைய பண்புகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் ஏகத்துவம் என்ற பகுதியை இது நிரப்பக்கூடியதாக அமைந்துள்ளது எனலாம்.
மேலும், அல் இஹ்லாஸ் அத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்ற செய்தியை நபியவர்களே தன் நாவால் நவின்றுள்ளதாக அபூ ஸஈத் அல்குர்திரி (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் இது குறித்த செய்திகள் தொடர்பாகக் கூறுகையில்: ‘அல்இஹ்லாஸ் அத்தியாயமானது அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமனாகும் என்பதைக் குறிக்கும் நபிமொழிகள் ஹதீஸ் கலையில் அல்முதவாதிர் எனும் பொய்ப்பிக்க முடியாத தரத்தை பெற்றுள்ளன’ என்கிறார்.
அல் இஹ்லாஸ் அத்தியாயத்தில் உள்ளடங்கியுள்ள வசனங்களை ஒவ்வொன்றாக உற்று நோக்கினால் அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் பயன்தரும் பல அம்சங்கள் உள்ளடங்கியிருப்பதை அவதானிக்கலாம். அந்தவிதத்தில்…
قل (கூறுவீராக): என்ற வார்த்தையானது நபியவர்களை விழித்துக் கூறப்பட்டுள்ளது. இது அல்குர்ஆனானது அல்லாஹ்வின் வார்த்தை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உண்மையில் அல்குர்ஆனானது நபியவர்களின் வார்த்தையாகவோ அல்லது வேறு ஒருவரின் வார்த்தையாகவோ இருந்திருந்தால் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா நபியவர்களை விழித்து قل (கூறுவீராக) என்று சொல்லியிருக்கமாட்டான்.
الله أحد (அவன் ஒருவன்): இவ்வசனமானது அவன் ஒருவன் அவனுக்கு உதவியாளனோ, அமைச்சரோ, கூட்டாளியோ கிடையாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
الله الصمد (அவன் எவ்வித தேவையுமற்றவன்): இவ்வசனமானது படைப்பினங்கள் அனைத்தும் அவன் பால் தேவையுடையனவாக இருக்கின்றன என்பதை தெளிவுற இயம்புகின்றது.
لم يلد ولم يولد (அவன் எவரையும் பெறவும் இல்லை, அவன் எவருக்கும் பிறக்கவும் இல்லை): இவ்வசனமானது அல்லாஹ்வுக்கு மகனோ, தந்தையோ இல்லை என்பதைக் சூசகமான விளக்குகின்றது. மேலும், இவ்வசனம் அல்லாஹ்வுக்கு மகன் உண்டு என்று கூறக்கூடிய கிரிஸ்தவர்கள், அரேபிய இணைவைப்பாளர்கள் பேன்றோருக்கு சிறந்த மறுப்பாக அமைந்துள்ளது.
ولم يكن له كفوا أحد (மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை): இவ்வசனமானது அவனது அந்தஸ்துக்குப் பாத்திரமாக உலகில் எவரும் இல்லை என்பதைப் பறை சாட்டுகின்றது.
எனவே, இவ்வத்தியாயத்தில் அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளடங்குபவை மற்றும் உள்ளடங்காதவை பற்றிய தெளிவு உள்ளது என்பதை அறிந்து கொண்டிருப்பீர்கள்..
இவற்றைக் கருத்தில் கொண்டு நாமும் அவனது பண்புகளில் உறுதிப்படுத்த வேண்டியதை உறுதிபடுத்தியும் மறுக்க வேண்டியதை மறுத்தும் வாழ்வோமாக!
وما وصف به نفسه في أعظم آية في كتابه حيث يقول :
اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
سورة البقرة : 255
ولهذا كان من قرأ هذه الآية في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح .
ஆயதுல் குர்ஷியில் அல்லாஹ் பற்றிய வர்ணனை:
இதற்கு முன்னர் நாம் பார்த்த தொடரை முதற்கொண்டு அல்லாஹுத்தஆலா பற்றி அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய வர்ணனைகளை ஆரம்பித்து வைத்தோம். அதன் வரிசையில் இத்தொடரில் அல்குர்ஆனில் இடம்பெற்றிருக்கக்கூடிய மகத்துவமிக்க ஒரு வசனம் குறித்துப் பேசவுள்ளோம். அதுதான் அல்லாஹுத்தஆலாவின் குர்ஸி பற்றிப் பேசக்கூடிய ஆயதுல் குர்ஷியாகும்.
அவ்வசனமானது மகத்துவமிக்கது என்பதற்குச் சிறந்த சான்றாக பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
ஒரு முறை நபியவர்கள் உபை இப்னு கஃப் (ரழி) அவர்களை நோக்கி அல்குர்ஆனில் மகத்துவமிக்க ஒரு வசனத்தைக் குறிப்பிடுமாறு வினவினார்கள். அதற்கு அவர், இது குறித்து அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என பதிலளித்தார். இப்படி பல விருத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து அவர் ஆயதுல் குர்ஷி என பதிலளித்தார். அதற்கு நபியவர்கள், அபூ முன்திரே உனது அறிவு உனக்கு வாழ்த்தைத் தெரிவிக்கக்கூடியாதாக இருக்கட்டும்! எனக்கூறி போற்றினார்கள். (முஸ்லிம்)
ஆயதுல் குர்ஷியானது முழுமையாக அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை உறுதிப்படுத்தக்கூடியதாகவும், அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளை விட்டும் தூய்மைப்படுத்தக்கூடியதாகவும் இருப்பதினால் இவ்வசனம் இது விடயத்தில் பிரதானமாகக் கணிக்கப்படுகின்றது. அதன் பொருளாவது:
‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன். நிலைத்திருப்பவன்;. சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார் தான் பாரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது குர்ஸி வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது அவனுக்கு சிரம மன்று அவன் மிக உயர்ந்தவனும் மிக்க மகத்துவமானவனுமாவான்.’ (அல்பகரா: 255)
இவ்வசனத்தில் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் எவை அவனுக்குத் தகுந்தன இன்னும் எவை அவனுக்குத் தகாதன என்ற தெளிவு இடம்பெற்றுள்ளது. அந்தவிதத்தில் அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
அல்லாஹ்வுக்கு பூரணத்துவத்தைக் கற்பிக்கும் பண்புகளை உறுதி செய்தல்.
அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன்.
அவன் என்றென்றும் உயிருடன் நிலைத்திருப்பவன்.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிப் பொறுப்பு அவனிடமே உள்ளது.
அவனிடத்திலே இறந்த காலம் மற்றும் நிகழ்காலம் தொடர்பான பூரண அறிவுள்ளது.
அனைத்துப் படைப்பினங்களும் அவன் பால் தேவையுடையனவாக இருக்கின்றன.
அவனுக்கொன்று தனியான குர்ஸி இருக்கின்றது. அதன் மூலம் அவன் பூரணமான மகத்துவத்திற்குச் சொந்தக்காரனாக விளங்குகின்றான்.
அவன் உயர்வான இஸ்தானத்தில் இருந்து கொண்டிருக்கின்றான்.
குறிப்பு: இத்தகைய பண்புகளை உறுதிப்படுத்துவதின் மூலம் அல்லாஹ்வுக்கு பூரண பண்புகளைச் சேர்ப்பிக்க முடியும்.
அல்லாஹ்வுக்கு குறை கற்பிக்கும் பண்புகள் நிராகரித்தல்.
அல்லாஹ்வுக்கு சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ ஏற்படாது.
அவனது அனுமதியின்றி எவருக்கும் சிபார்சு செய்ய முடியாது.
அவனுக்கு இயலாமையும் களைப்பும் இருக்காது.
குறிப்பு: இப்படியான அல்லாஹ்வுக்கு குறை கற்பிக்கும் பண்புகளை நாம் நிராகரிக்காது போனால், அல்லாஹ்வின் தகுதிக்குத் தகாத விதத்தில் அவனை வர்ணித்த குற்றத்திற்குள்ளாவோம். எனவே, இப்பண்புகளில் நிராகரிக்கப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக நிராகரிப்பது எமது பொறுப்பாகும்.
இமாமவர்கள் ஆயதுல் குர்ஷியைக் குறிப்பிட்டுவிட்டு அதன் ஈற்றில் அவ்வாயத்திற்கு இருக்கக்கூடிய சிறப்பு குறித்துப் பேசியுள்ளார்கள். அதாவது ஆயதுல் குர்ஷியை இரவு நேரத்தில் ஓதக்கூடிய ஒருவருக்கு காலை வரை ஷைத்தானில் இருந்தும் பாதுகாப்பளிக்க ஒரு வானவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார்கள். இச்செய்தியானது நபியவர்களின் பொன்மொழிகளில் உறுதி செய்யப்பட்ட விடயமாகும். (பார்க்க: புகாரி, இப்னு ஹுஸைமா, அஸ்ஸூனனுல் குப்றா லின் நஸாயி) எனவே, அதன் சிறப்பை உணர்ந்து ஆவன செய்ய எல்லாம் வல்ல நாயன் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
وقوله سبحانه : (هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم) الحديد
விளக்கம்:
2.அல்லாஹ்வின் உயர்விஸ்தானம், அவனின் நெருக்கம், அவனது நிரந்தரத்தன்மை ஆகியவற்றிக்கிடையிலான கூட்டுச் சேர்வு
மேற்குறித்த வசனத்தில் அல்லாஹுத்தஆலாவுக்குரிய பிரதானமான நான்கு பண்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நான்கு பண்புகளும் எவ்வித முரண்பாடுகளுமின்றி ஒரே வசனத்தில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன என்பதை அவதானிப்பீர்கள். அவ்வசனத்தின் தமிழ்வடிவமானது..
“முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனும் அவனே! அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்.” (அல்ஹதீத்: 3)
இவ்வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய பண்புகள் தொடர்பாக நபியவர்கள் செய்த ஒரு துஆ வியாக்கியானமாக அமைந்துள்ளது.
“இறைவா! நீ ஆரம்பமானவன் உனக்கு முன் எதுவும் கிடையாது, மேலும், நீ இறுதியானவன் உனக்குப் பிறகு எதுவும் கிடையாது, இன்னும் நீ மேலானவன் உனக்கு மேலால் எதுவும் கிடையாது, மற்றும் நீ அந்தரங்கமானவன் உனக்குக் கீழால் எதுவும் கிடையாது.” (முஸ்லிம்)
இத்தகைய பண்புகளானது, அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய யாவற்றையும் சூழ்ந்த தன்மையைப்பற்றிப் பேசுகின்றன. அந்தவிதத்தில் இந்நான்கு பண்புகளையும் பிரதானமாக இரு பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.
1. காலத்துடன் தொடர்புடைய பண்புகள்
இப்பிரிவுக்குள் மேற்குறித்த பண்புகளில் முதலாமவன், இறுதியானவன் ஆகியன உள்ளடங்குகின்றன.
2. இடத்துடன் தொடர்புடைய பண்புகள்
இப்பிரிவுக்குள் மீதமாக இருக்கக்கூடிய பண்புகளான மேலானவன், அந்தரங்கமானவன் ஆகியன உள்ளடங்குகின்றன.
இப்பண்புகளின் எதார்த்த தன்மை குறித்து இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறும்போது: “இந்நான்கு பண்புகளும் ஒன்றுக்கொன்று நிகரானது, அவற்றுள் இரு பண்புகள் அல்லாஹுத்தஆலாவின் ஆதி மற்றும் நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளைப் பிரதிபலிக்கின்றன. ஏனைய இரு பண்புகளும் அவனது உயர் இஸ்தானத்தையும், சமீபமாக இருக்கும் தன்மையையும் பிரதிபலிக்கின்றன. மேலும், அவனது முதன்மைத் தன்மையானது அவனுக்கு முன் எதுவும் முதன்மைவகிக்க முடியாது என்பதையும், அவனது இறுதித் தன்மையானது அவனுக்குப் பிறகு எதுவும் இடம்பெற முடியாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே, அவனது முதன்மைத்தன்மையானது மற்றெல்லாவற்றையும் விட முந்தியவன் என்பதையும், அவனது இறுதித்தன்மையானது அனைத்துக்குப் பிறகும் அவன் நிலைத்திருப்பான் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. இன்னும், மேலானவன் என்ற அவனது பண்பு எல்லாவற்றையும் விட அவன் உயர இருக்கின்றான் என்பதையும், அந்தரங்கமானவன் என்ற பண்பு ஆத்மாவைவிட அவன் மிக சமீபமாக இருக்கும் விதத்தில் எல்லா விடயங்கள் பற்றிய அவனது அறிவு சூழ்ந்திருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.”
மேலும், மேற்குறித்த வசனத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய “அவன் யாவற்றையும் நன்கறிந்தவன்” என்ற வாசகமானது, மேலுலகம், கீழுலகம், வெளிப்படையானவை, மறைமுகமானவை தொடர்பான முக்காலத்துடனும் சம்பந்தப்பட்ட அறிவு அல்லாஹ்விடத்தில் இருக்கின்றது என்பதைப் பிரஸ்தாபிக்கின்றது.
எனவே, காலம், இடம், நுண்ணிய கண்காணிப்பு, வரையறுத்தல், நிர்வகித்தல், மேன்மையாக விளங்குதல், பரிசுத்தமானவன் போன்றவற்றுடன் தொடர்புடைய இப்பண்புகளை நாமும் உறுதிப்படுத்துவோமாக!
وَقَوْلُهُ : ﴿وَهُوَ الْحَكِيمُ الْخَبِير﴾ وَقَوْلُهُ : ﴿وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ ﴾، وَقَوْلُهُ سُبْحَانَهُ: ﴿وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لا يَمُوتُ﴾
விளக்கம்:
அல்லாஹ்வின் நிலைத்திருக்கும் தன்மை, அவனது ஞானம் மற்றும் நல்லறிவு என்பவற்றிக்கான எடுத்துக்காட்டுகள்.
அல்லாஹ் கூறுகின்றான்: “மரணிக்காத, (என்றும்) உயிருடன் இருப்பவன் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக!’ (அல்புர்கான்: 58)
இவ்வசனத்தில் இருந்து அல்லாஹுத்தஆலா எப்போதும் ஜீவிக்கக்கூடியவனாக இருக்கின்றான் என்றும் அவன் மரணிக்கமாட்டான் என்றும் புரிந்து கொள்ளலாம். இந்நிலை அவனது பண்புகளில் உறுதிப்படுத்தல் மற்றும் மறுத்தல் ஆகியவற்றிக்கிடையிலான கூட்டுச் சேர்வைப் பிரதிபலிக்கின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்:
‘இன்னும் அவன் நன்கறிந்தவன், ஞானமிக்கவன்.’ (அத்தஹ்ரீம்: 2)
அல்லாஹ் கூறுகின்றான்:
‘அவன் ஞானமிக்கவனும் நன்கறிந்தவனுமாவான்.’ (ஸயஃ: 1)
இவ்வசனங்களில் அல்லாஹ்வுக்கு இருக்கின்ற மூன்று பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, அவனது ஞானத்தைப் பிரதிபலிக்கும் அல்ஹகீம் என்ற பெயரும், நல்லறிவைப் பிரதிபலிக்கும் அல்அலீம் மற்றும் அல்ஹபீர் என்ற பெயர்களுமாகும்.
وَقَوْلُهُ : ﴿يَعْلَمُ مَا يَلِجُ فِي الأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاء وَمَا يَعْرُجُ فِيهَا ﴾، ﴿ وَعِندَهُ مَفَاتِحُ الْغَيْبِ لاَ يَعْلَمُهَا إِلاَّ هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلاَّ يَعْلَمُهَا وَلاَ حَبَّةٍ فِي ظُلُمَاتِ الأَرْضِ وَلاَ رَطْبٍ وَلاَ يَابِسٍ إِلاَّ فِي كِتَابٍ مُّبِين﴾ وَقَوْلُهُ:﴿ وَمَا تَحْمِلُ مِنْ أُنثَى وَلا تَضَعُ إِلاَّ بِعِلْمِه ﴾، وَقَوْلُهُ: ﴿ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا﴾
விளக்கம்:
அல்லாஹ்வின் அறிவு அனைத்துப் படைப்பினங்களையும் சூழ்ந்துள்ளது என்பதற்கான சான்றுகள்
மேற்கூறப்பட்ட அனைத்து திருமறை வசனங்களும் நாம் தலைப்பாக இட்டுள்ள மையக்கருத்தைத் தெளிவுபடுத்தக் கூடியனவாக இருக்கின்றன. அத்திருமறை வசனங்களின் கருத்துக்களைத் தொகுத்துத் தருகின்றோம், நன்கு அவதானமாக வாசித்துப் பாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக!
அல்லாஹ் கூறுகின்றான்:
‘பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளிவருவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் உயர்வதையும் அவன் நன்கறிவான்.’ (ஸபஃ: 2)
அல்லாஹ் கூறுகின்றான்: ‘அவனிடமே மறைவானவற்றின் திறவுகோல்கள் இருக்கின்றன. அவனைத் தவிர வேறுயாரும் அவற்றை அறியமாட்டார்கள். மேலும், தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அவன் நன்கறிவான். எந்த ஒர் இலையும் அவன் (அதை) அறியாமல் விழுவதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையோ பசுமையானதோ காய்ந்ததோ எதுவாயினும் தெளிவான ஏட்டில் இல்லாமலில்லை.’ (அல்அன்ஆம்: 59)
அல்லாஹ் கூறுகின்றான்:
‘அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை.’ (பாதிர்: 11)
அல்லாஹ் கூறுகின்றான்: ‘நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்றும், நிச்சயமாக அல்லாஹ் அறிவால் யாவற்றையும் சூழ்ந்தவன் என்றும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (இவ்வாறு படைத்தான்)’ (அத்தலாக்: 12)
அல்லாஹ் கூறுகின்றான்: ‘நிச்சயமாக அல்லாஹ்வே உணவளிப்பவனும், பலமிக்கவனும் , உறுதியானவனுமாவான்.’ (அத்தாரியாத்: 58)
وَقَوْلُهُ: ﴿ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ﴾
وَقَوْلُهُ:﴿ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا﴾
விளக்கம்:
அல்லாஹ்வுக்கு செவிப்புலனும், கட்புலனும் உள்ளன என்பதை உறுதி செய்யும் சான்றுகள்
மேற் கூறப்பட்ட திருமறை வசனங்களில் அல்லாஹ்வுக்கு செவிப்புலனும் கட்புலனும் உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்திருமறை வசனங்களின் தமிழ் வடிவமானது,
அல்லாஹ் கூறுகின்றான்: ‘அவனைப் போன்று எதுவுமில்லை, அவன்செவியேற்பவன், பார்ப்பவன்.’ (அஷ்ஷுரா: 11)
இவ்வசனம் குறித்து இமாம் ஷவ்கானி (ரஹ்) அவர்கள் கூறும்போது: ‘எவர்கள் இந்த வசனத்தை உரிய முறையில் விளங்கி ஆராய்ந்துள்ளார்களோ அவர்கள் அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் முரண்பட்ட கருத்தையுடையவர்களுடன் உண்டாகும் கருத்துவேறுபாட்டின் போது தெளிவான மற்றும் வெண்மையான பாதையில் பயணிப்பர். அத்துடன் அவன் செவியேற்பவன், பார்ப்பவன் என்ற வசனத்தை கருத்தூண்றிப் பார்ப்பவர்களுக்கு மென்மேலும் தெளிவு கிடைக்கின்றது, என்று தொடர்கிறது
அவரது கருத்துரை…
அல்லாஹ் கூறுகின்றான்: ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குச் செய்யும் உபதேசம் மிகச் சிறந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவனும், பார்ப்பவனுமாக இருக்கின்றான்.’ (அந்நிஸா: 58)
எனவே, இத்திருவசனங்களில் அல்லாஹ்வுக்கு செவிப்புலனும், கட்புலனும் உள்ளன என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இவ்விடயத்தை நாம் முதலில் குறிப்பிட்ட வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அணுக வேண்டும். அதாவது, அவனுக்கு இவ்விரு பண்புகளும் இருந்தாலும் அவை படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாகாது என்பதுவாகும்.
وقوله : (ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله) (ولوشاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد) (أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محلي الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد)
விளக்கம்:
அல்லாஹ்வின் நாட்டத்தை உறுதி செய்யும் சான்றுகள்
அல்லாஹ் கூறுகின்றான்: ‘ நீ உன் தோட்டத்தில் நுழைந்த போது, ‘மாஷா அல்லாஹு லாகுவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ் நாடியதே நடக்கும். சக்தி அனைத்தும் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை) என்று கூறியிருக்கக் கூடாதா?’ (அல்கஹ்ப்: 39)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்;டை செய்திருக்கமாட்டார்கள் என்றும், அல்லாஹ்தான் நாடுவதைச் செய்வான்.’ (அல்பகறா: 253)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘(பின்னர்) உங்களுக்கு ஓதிக்காட்டப்படுபவற்றையும், நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில், வேட்டையாடுபவற்றையும் தவிர கால்நடைகள் உங்களுக்கு (உண்ண) அனுமதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதைச் சட்டமாக்குகின்றான்.’ (அல்மாயிதா: 1)
மேற்கூறப்பட்ட வசனங்களில் இருந்து நாடுதல், சக்தி பெற்றிருத்தல், ஞானமிக்கவனாகத் திகழ்தல் ஆகியன அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
(وقوله : (فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في النار
விளக்கம்:
அல்லாஹ்வுக்கு நாடுதல் என்ற பண்பு உண்டு என்பதை உறுதி செய்யும் மற்றொரு சான்று
அல்லாஹ் கூறுகின்றான்: ‘யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த விரும்புகின்றானோ, அவரது உள்ளத்தை அவன் இஸ்லாத்தின் பால் விரிவாக்குவான். அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட நாடுகின்றானோ, அவனது உள்ளத்தை வானத்திற்கு ஏறிச் செல்பவன் (உள்ளம்) போன்று இறுக்கமானதாகவும் கஷ்டமானதாகவும் ஆக்கிவிடுகின்றான்.’ (அல் அன்ஆம்: 125)
இவ்வசனத்தில் அல்லாஹுத்தஆலாவுக்கு இருக்கின்ற நாடுதல் என்ற பண்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பண்பானது நேர்வழி காட்டல் மற்றும் வழி சறுகச் செய்தல் ஆகியவற்றில் பூரணமாகக் காணப்படும். அதாவது, தனது பூரணமான ஞானத்தைக் கொண்டு நேர்வழிகாட்டல் மற்றும் வழிசறுகச் செய்தல் ஆகிய விடயங்களை விதியாக நாடுகிறான் என்பதுவாகும்.
இறை நாட்டத்தின் வகைகள்
பொதுவாக இறைநாட்டத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அமைப்பு மற்றும் விதி சார் நாட்டம்
2. மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டம்
அமைப்பு மற்றும் விதி சார் நாட்டம்:
இவ்வகை நாட்டத்திற்கு உதாரணங்களாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.
அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஒரு கிராமத்தை நாம் அழிக்க நாடினால் அதன் சுகபோகிகளை (கட்டுப்படுமாறு) ஏவுவோம். அதில் அவர்கள் பாவம் செய்வர்.’ (பனீஇஸ்ராஈல்: 16)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் ஒரு சமூகத்துக்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுக்கமுடியாது.’ (அர்ரஃத்: 11)
இதே வகையை அடிப்படையாகக் கொண்டே நாம் முன்பு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட அல்அன்ஆம் அத்தியாயத்தின் 125-ஆம் வசனத்தின் ‘அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட நாடுகிறானோ ………….’ என்று ஆரம்பிக்கும் தொடர் அமைந்துள்ளது.
மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டம்:
இவ்வகை நாட்டம் குறித்து பல வசனங்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில பின்வருமாறு,
அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகின்றான்.’ (அந்நிஸா: 27)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. எனினும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு உங்களைத் தூய்மைப்படுத்தவும் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே அவன் விரும்புகின்றான்.’ (அல்மாயிதா: 6)
இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அஹ்லுல் பைத் (எனும் நபியின் குடும்பத்)தினராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ் விரும்புகின்றான்.’ (அல் அஹ்ஸாப்: 33)
இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகள்:
இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒப்பீட்டு ரீதியில் புரிந்து கொள்வதற்காக அவற்றைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.
அமைப்பு மற்றும் தீர்வு சார் நாட்டம்:
இவ்வகை நாட்டத்தின் கீழ் இடம்பெறக்கூடியவற்றை அல்லாஹ் பொருந்திக் கொள்ளவோ, பொருந்திக் கொள்ளாமல் இருக்கவோ முடியும். உதாரணமாக அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதை அவன் அமைப்பு ரீதியில் மத்திரம் நாடுவதைக் குறிப்பிடலாம்.
இவ்வகை நாட்டம் பிரிதொரு விடயத்தை மையப்படுத்தி நாடப்படகின்றது. உதாரணமாக ஷைத்தான் மற்றும் ஏனைய தீங்கிழைக்கக் கூடியவற்றைப் படைத்தது அவற்றின் மூலம் மக்களுக்கு மத்தியில் முயற்சித்தல், பாவமன்னிப்புக் கோரல் போன்ற அவன் விரும்புகின்றவற்றை நிலைநாட்ட நாடுவதைக் குறிப்பிடலாம்.
இவ்வகை நாட்டம் அவசியம் இடம் பெற்றாக வேண்டும்.
மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டம்:
இவ்வகை நாட்டத்தின் கீழ் இடம்பெறக்கூடியவற்றை அல்லாஹ் அவசியம் பொருந்திக் கொண்டிருப்பான். உதாரணமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை அவன் சட்டரீதியில் பொருந்திக் கொள்ளாததைக் குறிப்பிடலாம்.
இவ்வகை நாட்டம் தன்னை மையப்படுத்தி நாடப்படுவதாகும். உதாரணமாக அல்லாஹ் தன்னை வழிப்படுவதை அமைப்பு மற்றும் சட்ட ரீதியில் பொருந்திக் கொண்டு நாடுவதைக் குறிப்பிடலாம்.
இவ்வகை நாட்டம் கட்டாயம் இடம்பெறவேண்டிய அவசியம் கிடையாது. சில சமயம் இடம்பெறலாம் இடம்பெறாமலும் இருக்கலாம்.
குறிப்பு:
இவ்விரு நாட்டங்களும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் மனத்தூய்மை மிக்க ஒருவரில் சங்கமிக்கும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் பாவி விடயத்தில் தனித்து நிற்கும்.
எவர்கள் இவ்விரு நாட்டங்களையும் உறுதிப்படுத்தாது அவற்றுக்கிடையில் வேற்றுமையை ஏற்படுத்துகின்றார்களோ நிச்சயமாக அவர்கள் வழிதவறிச் செல்வார்கள். இந்நிலையே இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பிரிவினர்களான அல்ஜபரிய்யா, மற்றும் அல்கதரிய்யா ஆகியோருக்கு ஏற்பட்டது.
மேலும், இவ்விரு நாட்டங்கள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாத், அல்ஜபரிய்யா, அல்கதரிய்யா ஆகியோர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அந்தவிதத்தில் அல்ஜபரிய்யாகள், அமைப்பு மற்றும் தீர்வு சார் நாட்டத்தை மாத்திரம் உறுதிப்படுத்தக் கூடியவர்களாகவும், அல்கதரிய்யாக்கள், மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களாகவும், அஹ்லுஸ் ஸுன்னத்தைச் சேர்ந்தோர், இவ்விரு நாட்டங்களையும் உறுதிப்படுத்தி அவற்றுக் கிடையலான வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
وقوله : {وأحسنوا إن الله يحب المحسنين} البقرة :195 {وأقسطوا إن الله يحب المقسطين} الحجرات: 9 {فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين} التوبة: 7 {إن الله يحب التوابين ويحب المتطهرين} البقرة: 222 وقوله: {قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله} آل عمران: 31 وقوله: {فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه} المائدة: 54 وقوله: {إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص} الصف :4 وقوله: {وهو الغفور الودود} البروج: 14
விளக்கம்:
அல்லாஹ்வின் நேசம் மற்றும் அவனது இறை நேசர்கள் மீதான அன்பு ஆகியவற்றை தனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் வெளிப்படுத்துகின்றான் என்பதை உறுதி செய்யும் சான்றுகள்.
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களின் மொழி பெயர்ப்புக்களாவன:
நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (அல்பகரா: 195)
மேலும், நீதியாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்ஹுஜுராத்: 9)
அவர்கள் உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களை நேசிக்கின்றான். (அத்தவ்பா: 7)
நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும், தூய்மையாளர்களையும் நேசிக்கின்றான். (அல்பகரா: 222)
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (ஆலஇம்றான்: 31)
வேறொரு சமுகத்தை (அதற்குப் பதிலாக) அல்லாஹ் கொண்டுவருவான். அவன் அவர்களை நேசிப்பான் அவர்களும் அவனை நேசிப்பார்கள். (அல்மாயிதா: 54)
ஈயத்தால் வார்க்கப்பட்ட உறுதியான ஒரு கட்டிடம் போன்று, ஒரே அணியாக நின்று தனது பாதையில் போரிடுவோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான். (அஸ்ஸப்: 4)
அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன். (அல்புரூஜ்: 14)
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் அல்லாஹுத்தஆலாவின் அன்பு, நேசம் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அவன் சில நபர்களையும் மற்றும் சில செயற்பாடுகளையும் விரும்புகின்றான் என்பதையும் புரிந்து கொள்ளலாம். இன்னும், அவனது ஞானத்திற்குத் தக்க வித்தில் சிலவற்றை மாத்திரம் நேசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா நன்மை செய்வோர், நீதி செலுத்துவோர், பயபக்தியுடையோர், நபியவர்களைப் பின்பற்றுவோர், அவனது பாதையில் போரிடுவோர், மன்னிப்புத் தேடுவோர், தூய்மையானோர் போன்றோரை நேசிப்பதாக மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
மேலும், ஏலவே குறிப்பிடப்பட்ட வசனங்களில் இருந்து மற்றுமொரு விடயத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது, நேசமானது இறைவன் மற்றும் அடியான் ஆகிய இரு சாராலும் ஒருவருக்கொருவர் இடம்பெறலாம் என்பதாகும்.
இதனை நாம் முன்பு குறிப்பிட்ட அல்மாயிதா அத்தியாயத்தின் 54 ஆவது வசனம் தெளிவுபடுத்துகின்றது. மேலும், இப்படியான இரு சாராரினதும் நேசம் ஜஹ்மிய்யாக்கள் மற்றும் முஃதஸிலாக்கள் ஆகியோருக்கு மறுப்பாகவும் அமைகின்றது. ஏனெனில், அவர்கள் இப்படியான இரு சாராரினதும் நேசத்தையும் மறுக்கக் கூடியவர்களாக உள்ளார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார்கள். “அல்லாஹ் ஆகிறவன் நேசிக்காதவனாகவும் நேசிக்கப்படாதவனாகவும் உள்ளான்” என்கிறார்கள்.
இவர்கள் அல்லாஹ் மீதுள்ள அடியார்களின் நேசத்தை வணக்கிவழிபாடுதல், அடிபணிதல் ஆகியவற்றில் கொண்டுள்ள ஆர்வமாக விபரிக்கின்றனர். மேலும், அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட அன்பை அவர்களுக்கு அவன் செய்த நலவாகவும், அவர்களை சத்தியத்தில் உறுதிப்படுத்தியதையும் கொண்டும் வலிந்துரைக்கின்றனர்.
இது தவறான வியாக்கியானமாகும். அவனது நேசத்தையும் அன்பையும் எதார்த்தமான கருத்தைத் கொண்டே அணுக வேண்டும். எப்படி ஏனைய பண்புகள் அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அணுகப்படுகின்றனவோ அப்படியே இப்பண்பும் அணுகப்பட வேண்டும்.
وقوله : بسم الله الرحمن الرحيم ربنا وسعت كل شيء رحمة وعلما وكان بالمؤمنين رحيما ورحمتي وسعت كل شيء كتب ربكم على نفسه الرحمة وهو الغفور الرحيم فالله خير حافظا وهو أرحم الراحمين
விளக்கம்:
அருள் புரிதல் மற்றும் பாவமன்னிப்பு வழங்கல் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்படுவதை உறுதி செய்யும் சான்றுகள்.
அருள் புரிதல் மற்றும் பாவமன்னிப்பு வழங்கல் ஆகியன அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளன என்பதை உறுதி செய்யும் சான்றுகளாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை இமாமவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஆரம்பிக்கின்றேன்.)
மேலும், எங்கள் இரட்சகனே! நீ யாவற்றையும், அருளாலும், அறிவாலும் சூழ்ந்திருக்கின்றாய்.' (முஃமின்: 7)
அவன் நம்பிக்கையாளர்களுடன் நிகரற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.' (அல்அஹ்ஜாப்: 43)
இன்னும், எனது அருளோ யாவற்றையும் வியாபித்துள்ளது.' (அல்அஃராப்: 156)
உங்களது இரட்சகன் கருணை காட்டுவதைத் தன்மீது கடமையாக்கிக் கொண்டான்.' (அல்அன்ஆம்: 54)
அவன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான்.' (யூனுஸ்: 107)
அல்லாஹ்வே சிறந்த பாதுகாவலன். அவனே கருணையாளர்களில் எல்லாம் மிகப் பெரிய கருணையாளன் என்று (யஃகூப்) கூறினார்.' (யூசுப்: 64)
மேற்குறிப்பிடப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் அருள் புரிதல், மன்னிப்பு வழங்கல் ஆகிய பண்புகளைக் கொண்டு அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்பட்டிருப்பதை அவதானித்திருப்பீர்கள். எப்படி ஏனைய பண்புகளை அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் ஏற்றிருக்கின்றோமோ அவ்வாறே இப்பண்புகளையும் ஏற்றுக் கொள்ளவது எமது கடமையாகும்.
மேலும், இவ்வசனங்களில் இஸ்லாத்தில் தோற்றம் பெற்ற வழிகொட்ட பிரிவினர்களான அல்ஜஹ்மிய்யா, அல்முஃதஸிலா போன்றோருக்கும் சிறந்த மறுப்புள்ளது. அவர்கள் தங்களது வழி கெட்ட சிந்தனையை அல்லாஹ்வுக்கு ஒப்புவமையாக்கமாட்டோம் என்ற தோரணையில் வகுத்துள்ளார்கள். ஆயினும், இச்சிந்தனை தவறானது. அல்லாஹுத்தஆலா தன்னைப் பல பண்புகளைக் கொண்டு வர்ணித்துள்ளான். அவற்றை படைப்பினங்களின் பண்புகளைக் கொண்டு ஒப்பிடுவது முறையற்ற செயலாகும். ஏனெனில், அல்லாஹ்வுக்கு ஒப்பாக எதுவுமில்லை என்பது அல்குர்ஆன் எமக்கு இயம்பும் தராக மந்திரமாகும். இப்படியிருக்க ஓர் அடியான் அகிலத்தாரின் இரட்சகனை பலவீனத்திலும் மிக பலவீனத்தில் உள்ள மனிதனுடன் எப்படி ஒப்பிடுவான்? பண்புகள் ஒரே வகையில் இருப்பதை வைத்து அப்பண்புகளுக்குச் சொந்தக்காரர்களாக விளங்குபவர்கள் ஒரே நபர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எப்படி படைப்பினங்களுக்கு அவைகளின் அந்தஸ்திக்குத் தக்க விதத்தில் பண்புகள் காணப்படுகின்றனவோ, அதேவகையான பண்புகள் படைப்பாளனின் அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. அல்லாஹ் மிக அறிந்தவன்.
وقوله : رضي الله عنهم ورضوا عنه وقوله : ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وقوله : ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه وقوله : فلما ءاسفونا انتقمنا منهم وقوله : ولكن كره الله انبعاثهم فثبطهم وقوله : كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون
விளக்கம்:
அல்லாஹ்வின் திருப்பொருத்தம், கோபம், வெறுப்பு பற்றி அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதும் அவற்றைக் கொண்டு அவன் வர்ணிக்கப்பட்டுள்ளான் என்பதும் தொடர்பான பாடம்.
மேற்குறித்த தலைப்பின் கீழ் இடம்பெறக்கூடிய சில அல்குர்ஆன் வசனங்களை இமாமவர்கள் தெரிவு செய்துள்ளார்கள். அவற்றின் தமிழ்வடிவம் பின்வருமாறு,
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். ( அல்மாயிதா: 119)
நம்பிக்கையாளரான ஒருவரை யார் வேண்டுமென்றே கொலை செய்கின்றானோ அவனுக்குரிய கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டு அவனைச் சபித்தும்விட்டான். (அந்நிஸா: 93)
நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக்கூடியதைப் பின்பற்றியதும், அவனது பொருத்தத்தை வெறுத்ததுமே இதற்குக் காரணமாகும். (முஹம்மத்: 28)
மேலும், அவர்கள் நம்மைக் கோபப்படுத்திய போது, நாம் அவர்களைப் தண்டித்து... (அஸ்ஸுஹ்ருப்: 55)
எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்களைத் தடுத்துவிட்டான். (அத்தவ்பா: 46)
நீங்கள் செய்யாதவற்றைக் கூறுவது அல்லாஹ்விடம் கோபத்தல் பெரிதாகிவிட்டது. (அஸ்ஸப்: 3)
மேற்கூறப்பட்ட வசனங்களில் அல்லாஹ்வின் பண்புகளாக, கோபம் கொள்ளல், பொருந்திக்கொள்ளல், சபித்தல், வெறுத்தல், தண்டித்தல் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் அல்லாஹ்வின் செயல்சார் பண்புகளாகும். இவற்றை அவன் நாடிய வேளையில் நாடிய வித்தில் பிரயோகிக்கின்றான். அஹ்லுஸ் ஸுன்னத்தைச் சேர்ந்தோர் இவை அனைத்தையும் அவனது அந்தஸ்திக்குத் தக்கவிதத்தில் உறுதிப்படுத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
قوله : (هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر) البقرة : 210 وقوله : (هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك) الأنعام : 158 وقوله : (كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا) الفجر : 21،22 وقوله تعالى : (ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا) الفرقان : 25
விளக்கம்:
அல்லாஹ் தன்னுடைய அந்தஸ்திற்குத் தக்கவாறு தனது அடியார்களுக்கு மத்தியில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்க வருவான் என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வும் வானவர்களும் மேகத்தின் நிழல்களில் அவர்களிடம் வந்து அவர்களின் காரியம் முடிக்கப்படுவதையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?
- அல்பகரா: 210
மேலும் கூறுகின்றான்: அவர்கள் தம்மிடம் வானவர்கள் வருவதையா? அல்லது உமது இரட்சகன் வருவதையா அல்லது உமது இரட்சகனின் சில அத்தாட்சிகள் வருவதையா எதிர் பார்க்கின்றனர்? உமது இரட்சகனின் அத்தாட்சிகளில் சில வரும் நாளில் ...
- அல்அன்ஆம்: 158
இன்னும் கூறுகின்றான்: அவ்வாறன்று பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது வானவர்கள் அணி அணியாக நிற்க உமது இரட்சகன் வருவான்.
- அல்பஜ்ர்: 21, 22
அடுத்து கூறுகின்றான்: வானம் மேகத்தால் பிளந்து மலக்குகள் தொடராக இறக்கப்படும் நாளை நபியே! நீர் எண்ணிப்பார்ப்பீராக.
- அல்புர்கான்: 25
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் அல்லாஹ்வின் வருகையை உறுதி செய்யக்கூடியனவாக உள்ளன. அவ்வருகையானது மறுமைநாளில் இடம்பெறும். அல்லாஹுத்தஆலா மறுமை நாளில் அடியார்களுக்கு மத்தியில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவதற்காகவே அவ்வாறு சமுகம் தருகின்றான்.
அத்தகைய வருகையானது அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அமைந்திருக்கும் என்று நாம் விசுவாசம் கொள்ள வேண்டும்.
இப்படி அல்லாஹுத்தஆலா வருகை தருவது அவனது செயல் சார்ந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படும். எனவே, இத்தகைய பண்பை அதனுடைய எதார்த்த கருத்தைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும். மாற்றமாக அல்லாஹ்வின் பண்புகளை நிராகரிக்கக்கூடியவர்கள் மாற்று வியாக்கியானம் செய்வதைப் போன்று நாமும் இப்பண்பு விடயத்தில் மாற்று வியாக்கியானம் செய்யக்கூடிடாது.
அல்லாஹ்வின் பண்புகள் விடயத்தில் மாற்று வியாக்கியானம் செய்யக் கூடியவர்கள் இப்பண்பு குறித்துக் கூறும் போது மறுமைநாளில் அல்லாஹ்வின் வருகை என்பது இடம்பெறாது மாற்றமாக அவனது கட்டளையே வருகை தரும் என்று கூறுகின்றார்கள். இத்தகைய விளக்கம் முற்றிலும் தவறான விளக்கமாகும்.
பொதுவாக அல்லாஹ்வின் வருதல் செயற்பாடு தொடர்பாக இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்ட வருதல் என்ற பண்பானது இருவகையான கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1. பொதுப்படையான கருத்து
2. வரையறுக்கப்பட்ட கருத்து
பொதுப்படையான கருத்தின் அடிப்படையில் இப்பண்பானது அல்லாஹ்வின் எதார்த்தமான வருதல் செயற்பாட்டைத்தவிர வேறு எக்கருத்தையும் உணர்த்தி நிற்காது. இதனையே மேற்குறித்த அல்பகரா அத்தியாயத்தின் 210 ஆவது வசனமும் அல்பஜ்ர் அத்தியாயத்தின் 21, 22 ஆகிய வசனங்களும் பிரஸ்தாபிக்கின்றன. மேலும், வரையறுக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில் அவனது வருதல் செயற்பாடு அருட்கொடை அல்லது வேதனை போன்றவற்றைக் கொண்டு வரையறுக்கப்பட்டு வரும்போது குறித்த சொல்லுடைய கருத்தும் வரையறுக்கப்பட்ட கருத்தாக வரும். அந்தவித்தில் அவனது அருள் வருதல் அல்லது அவனது வேதனை வருதல் என்று அமையும். இவ்வகையைப் பிரதிபலிக்கும் விதமாகவே பின்வரும் ஆதாரங்கள் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு வேதத்தை நிச்சயமாக நாம் அவர்களிடம் கொண்டு வந்து அதனை அறிவு பூர்வமாக நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
- அல்அஃராப்: 52
நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அருள் மற்றும் நலவைக் கொண்டு வரும்வரை .....
எனவே, மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படையைக் கருத்திற் கொண்டு அவனது பண்புகள் விடயத்தில் சரியான நிலைப்பாட்டைக் கடைபிடிப்போமாக!
وقوله : ويبقى وجه ربك ذو الجلال والإكرام - الرحمن : 27 وقوله : كل شيء هالك إلا وجهه - القصص : 88
விளக்கம்:
அல்லாஹ்வுக்கு முகம் இருப்பதை உறுதிசெய்யும் சான்றுகள்.
அல்லாஹ் கூறுகின்றான்: மகத்துவமும் கண்ணியமும் மிக்க உமது இரட்சகனின் சங்கையான முகமே நிலைத்திருக்கும்.
- அர்ரஹ்மான்: 27
மேலும் கூறுகின்றான்: அவனது சங்கையான முகத்தைத் தவிர அனைத்தும் அழியக்கூடியவையே.
- அல்கஸஸ்: 88
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் அல்லாஹ்வுக்கு முகம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இது அவனின் தன்மையுடன் தொடர்புபட்ட பண்பாகும். எனவே, அவனது முகம் அவனின் அந்தஸ்திற்குத் தக்கவாறு எதர்த்த நிலையில் உள்ளது என்று நாம் விசுவாசம் கொள்ள வேண்டும். மாற்றமாக, அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கக்கூடிய முஅத்திலாக்களைப் போன்று அவனது முகம் என்பதின் மூலம் எதார்த்தத்தில் முகமாக நாடப்படமாட்டாது என்றும் அதன் மூலம் அல்லாஹ் அல்லது கூலி அல்லது வேறு விடயம் என்றெல்லாம் விளக்கம் கூறுவதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
இப்படியான மாற்று விளக்கங்கள் தவறானவை என்பதை பல வழிகளில் நிரூபிக்கலாம்.
• முகம் என்ற வார்த்தை அல்லாஹ்வுடன் தனியாக இணைக்கப்பட்டு வந்துள்ளது, இவ்வமைப்பை பின்வரும் துஆவிலும் காணலாம்.
மகத்துவமிக்க அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகின்றேன். மேலும், சங்கைமிக்க அவனது முகத்தைக் கொண்டும் - பாதுகாப்புத் தேடுகின்றேன் -
எனவே, இப்படித் தனியாக இணைக்கப்பட்டுவருவது இரண்டும் வெவ்வேறானவை என்ற விடயத்தை உணர்த்தி நிற்கின்றது.
• முகம் என்ற வார்த்தை அல்லாஹ்வுடன் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அந்தவித்தில் ஏலவே குறிப்பிட்ட அர்ரஹ்மான் அத்தியாயத்தின் 27 ஆம் வசனத்தை நோக்குகையில் உமது இரட்சகனின் முகம் என்றும் அம்முகமானது மகத்துவமும் கண்ணியமும் மிக்கது என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. மாற்றமாக, முகம் என்ற வார்த்தை அல்லாஹ்வைக்குறிப்பதாக இருந்தல் குறித்த வார்த்தை தொடர்பான வர்ணணை ذي الجلال والإكرام என்று அல்லாஹ்வைத் தொடர்புபடுத்தி இடம்பெற்றிருக்க வேண்டும். ஆயினும், இதற்கு மாற்றமாக ذو الجلال والإكرام என்று முகத்தின் வர்ணணையாகவே இடம்பெற்றுள்ளது. எனவே, இவ்வம்சமும் முகமானது அவனது பண்பைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது என்பதைப் புரிய வைக்கின்றது.
• உலகில் தோன்றிய எந்த ஒரு சமுகத்தினதும் மொழிவழக்கில் முகம் என்ற வார்த்தை குறித்த நபரையோ அல்லது கூலியையோ குறிப்பதாக அறியப்பட்டில்லை மாற்றமாக, முகம் என்ற வார்த்தை மொழிவழக்கில் ஒவ்வொன்றினதும் நேரில் தென்படுவதையே குறிக்கின்றது. ஏனெனில், குறித்த உறுப்பே முதலாவது முன்னோக்கப்படக்கூடியதாக உள்ளது. மேலும், இவ்வுறுப்பு எவற்றுடன் இணைக்கப்படுகின்றதோ அவற்றின் அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அது அமைந்திருக்கும் என்றே நாம் நம்ப வேண்டும்.
وقوله : ما منعك أن تسجد لما خلقت بيدي - ص : 75 ، وقوله : وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء - المائدة : 64
விளக்கம்:
சங்கைமிக்க அல்குர்ஆனில் அல்லாஹுத்தஆலாவின் கரங்கள்
அல்லாஹ்வின் கரங்கள் தொடர்பாகப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.
அல்லாஹ் கூறுகின்றான்: எனது இரு கரங்களால் நான் படைத்ததற்கு நீ சுஜூது செய்ய உன்னைத் தடுத்தது எது?
- ஸாத்: 75
மேலும் கூறுகின்றான்: அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறுகின்றார்கள். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறியதினால் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். மாறாக, அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே இருக்கின்றன. அவன் விரும்பியவாறு செலவு செய்கின்றான்.
- அல்மாஇதா: 64
மேற்குறித்த வசனங்களில் அல்லாஹ்வுக்கு இரு கரங்கள் உள்ளன என்ற செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்கரங்களாவன அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் எதார்த்தமானவையாகக் காணப்படுகின்றன. எனவே, எவர்களெல்லாம் அல்லாஹ்வின் கரங்களை மறுக்கும் முகமாக அவற்றை ஆற்றல் என்றும் அருள் என்றும் மாற்று விளக்கம் கூறுகின்றார்களோ அத்தகையவர்களுக்கு இவ்வசனங்கள் சிறந்த மறுப்பாக அமைந்துள்ளன. அப்படித்தான் எவர்கள் இவ்வியாக்கியானத்தை முன்வைக்கின்றார்களோ அவர்களுக்கு மறுப்பாகப் பின்வரும் நியாயங்களை முன்வைக்கலாம்.
• ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் தன் ஆற்றலைக் கொண்டு படைத்தான் என்றாகியிருந்தால் நாம் குறிப்பிட்ட முதல் வசனத்தில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விசேடமாக தனதிரு கரங்களால் படைத்தான் என்று கூற வேண்டிய அவசியமில்லை. மாற்றமாக, எல்லாப் படைப்பினங்களைப் போன்று வெறுமனே படைத்தான் என்று மாத்திரம் கூறியிருக்க வேண்டும்.
• எல்லாப் படைப்பினங்களும் ஏன் இப்லீஸும் கூட அல்லாஹ்வின் ஆற்றலைக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் இப்லிஸுக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்க முடியும்? ஏன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் மாத்திரம் தனது கரங்களைக் கொண்டு படைத்ததாகக் கூற வேண்டும்? மேலும், இவ்விளக்கம் கூட இப்லீஸுக்கு சார்பான ஆதாரமாக அமைந்துவிடாதா?
• உண்மையில் கை என்பதன் மூலம் ஆற்றல் நாடப்படுமாயின் அல்லாஹ்வுக்கு இரு ஆற்றல்கள் உள்ளதாகக் கூறவேண்டும். அவ்வாறு கூறுவது தவறானது என்பது அனைத்து முஸ்லிம்களினதும் ஏகோபித்த முடிவாகும்.
قوله تعالى : (واصبر لحكم ربك فإنك بأعيننا) - الطور : 48
وقوله تعالى : (وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر) - القمر : 13،14
وقوله تعالى : (وألقيت عليك محبة مني ولتصنع على عيني) - طه : 39
விளக்கம்:
அல்லாஹுத்தஆலாவுக்கு இரு கண்கள் உள்ளன என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள்
அல்லாஹ் கூறுகிறான்: '(நபியே!) உமது இரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக நீர் எமது கண்களுக்கு முன் இருக்கிறீர்.” (அத்தூர் : 48)
மேலும் கூறுகிறான்: 'மேலும், பலகைகளையும் ஆணிகளையும் கொண்ட (கப்பல்) ஒன்றின் மீது நாம் அவரைச் சுமந்து சென்றோம். நிராகரிக்கப்பட்டவருக்குரிய கூலியாக, அது நமது கண்களின் முன்னே சென்றது.” (அல்கமர்: 13, 14)
இன்றும் கூறுகிறான்: 'மேலும், எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம்மீது எனது நேசத்தைப் பொழிந்தேன்.” (தாஹா: 39)
மேற்குறித்த வசனங்களில் அல்லாஹுத்தஆலா தனக்கு இரு கண்கள் இருப்பதை உறுதி செய்துள்ளான். அக்கண்களாவன எதார்த்தமானவையாகவும் அவனது அந்தஸ்திற்குத் தக்கனவாகவும் காணப்படுகின்றன.
உண்மையில் அல்குர்ஆனில் கண்ணைக் குறிப்பிடும் வார்த்தையான عين என்ற வார்த்தை அல்லாஹ்வின் பால் ஒருமையாகவும் பன்மையாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், சுன்னாவில் குறித்த வார்த்தை இருமையாகப் பயன்படுத்தப்பட்டள்ளது. சான்றாக:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் ஒரு கண் குருடானவன் அல்லன்.” (புகாரி, முஸ்லிம்)
பொதுவாக, இப்படியான சந்தர்ப்பங்களில் அறபு மொழியில் எதன்பால் சேர்க்கப்பட்டுள்ளதோ அதன் நிலைகளைக் கருத்தில் கொண்டே சேர்க்கப்படும் விடயத்தை ஒருமையாகவோ அல்லது, இருமையாகவோ அல்லது, பன்மையாகவோ கருத்தில் கொள்ளப்படும்.
அந்த அடிப்படையில் அவ்வாசகம் ஒருமையான ஒன்றுடன் இணைக்கப்பட்டுக் கூறப்பட்டால் அவர்கள் - அறேபியர்கள் - ஒருமைப்படுத்துவார்கள். மாற்றமாகப், பன்மையுடன் வெளிப்படையாகவோ அல்லது, மறைமுகமாகவோ இணைக்கப்பட்டால் சொல்லுக்குத் தோதுவாக அதனைப் பன்மையாகக் கொண்டுவருவதே மிகச் சிறந்ததாகும்.
இவ்வடிப்படையிலேயே 'அது நமது கண்முன்னே சென்றது” என்ற வசனமும் 'நமது கைகள் செய்தவற்றிலிருந்து நிச்சயமாக நாமே அவர்களுக்காகக் கால்நடைகளைப் படைத்தோம்” (யாஸின்: 71) என்ற வசனமும் அமைந்துள்ளன.
அதேபோன்று, இருமையில் அமைந்து ஒரு பெயர்ச் சொல்லுடன் இணைந்து வரும் போது, மிகச் சரியான கருத்தின் அடிப்படையில் பன்மையாகக் கருதுவதே ஏற்புடையதாகும். இவ்வடிப்படையை மையமாக வைத்துப் பின்வரும் வசனம் அமைந்துள்ளது.
'ஏனெனில், உங்கள் இருவரின் உள்ளங்களும் (உண்மையை விட்டும்) சாய்ந்திருத்தன.” (அத்தஹ்ரீம்: 4)
இவ்வசனத்தில் இரு உள்ளங்களைப் பற்றிப் பேசப்பட்டுள்ளன. ஆனால், பயன்படுத்தப்பட்ட வார்த்தை பன்மை வார்த்தையாகும்.
எனவே, இவ்வடிப்படையை வைத்து பேசக்கூடிய ஒருவரின் வார்த்தையைச் செவிமடுப்பவர் ஒருபோதும் 'நாங்கள் எங்களுடைய கண்களைக் கொண்டு உன்னைப் பார்க்கிறோம்” என்று கூறும் போது ஒரு முகத்தில் பல கண்கள் உள்ளன என்றோ, 'எங்களுடைய கரங்களைக் கொண்டு நாம் உன்னைப் பிடிக்கிறோம்” என்று கூறும் போது ஓர் உடம்பில் பல கைகள் உள்ளன என்றோ விளங்கிக் கொள்வதில்லை.
மேற்குறித்த விளக்கங்ளைப் பின்வரும் நூற்களில் காணலாம்:
1. இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அர்ரிஸாலதுல் மதனிய்யா (பக்கம்: 61)
2. இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் பத்ஹு ரப்பில் பரிய்யா தல்ஹீஸுல் ஹமவிய்யா (பக்கம்: 71)
3. அல்கவாகிபுல் ஜலிய்யா (பக்கம்: 253)
4. இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஷர்ஹுல் அகீததில் வாஸிதிய்யா (1ஃ312)
5. ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்களின் ஷர்ஹுல் அகீததில் வாஸிதிய்யா (பக்கம்: 51)
وقوله: (قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير) سورة المجادلة : 1
وقوله: (لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء) سورة آل عمران: 181
وقوله : (أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون) سورة الزخرف: 80
وقوله تعالى: (إنني معكما أسمع وأرى) سورة طه : 46
وقوله تعالى : (ألم يعلم بأن الله يرى) سورة العلق: 14
وقوله تعالى : (الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم) سورة الشعراء: 218-220
وقوله تعالى: (وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون) سورة التوبة: 105
விளக்கம்:
அல்லாஹுத்தஆலாவின் செவிப்புலன் மற்றும் பார்வைப்புலன் ஆகியவற்றை உறுதிசெய்யும் சான்றுகள்
அல்லாஹ் கூறுகின்றான்: "(நபியே!) தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, (அதைப் பற்றி) அல்லாஹ்விடம் முறையிட்டாளே அத்தகையவளுடைய கூற்றை - முறையீட்டை - த் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான், அல்லாஹ் உங்களிருவரின் (வாக்கு)வாதத்தையும் செவியேற்றான், நிச்சயமாக அல்லாஹ் மிக செவியேற்கிறவன், (அனைத்தையும்) பார்க்கிறவன்.” (முஜாதிலா: 1)
மேலும் கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள்தான் சீமான்கள் என்று கூறினார்களே அத்தகையவர்களுடைய சொல்லைத் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுவிட்டான்.” (ஆலு இம்றான்: 181)
இன்னும் கூறுகின்றான்: "அல்லது அவர்களின் இரகசியத்தையும் அவர்களின் இரகசிய ஆலோசனையையும் நிச்சயமாக நாம் செவியேற்பதில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? அல்ல. அவர்களிடத்திலிருக்கும் (மலக்குகளாகிய) நம்முடைய தூதர்கள் எழுதிக் கொள்கிறார்கள்.” (அஸ்ஸுஃரூப்: 80)
மற்றும் கூறுகிறான்: "நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய அவன் கூறினான்.)” (தாஹா: 46)
மேலும் கூறுகிறான்: "நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?” (அல்அலக்: 14)
இன்னும் கூறுகிறான்: "அவன் எத்தகையவனென்றால் நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும் சமயத்தில் அவன் உம்மைப் பார்க்கிறான். சிரம்பணிவோரில் (ருகூவு, ஸுஜூது செய்வது கொண்டு நீர் இருக்கின்ற போது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்.) நிச்சயமாக அவனே செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.” (அல்ஷுஅரா: 218-220)
மற்றும் கூறுகிறான்: "மேலும், (நபியே) நீர் கூறுவீராக: நீங்கள் செய்பவற்றை செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விசுவாசிகளும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்.” (அத்தவ்பா: 105)
ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: "மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களை அவதானிக்கையில் அவ்வசனங்களில் செவிப்புலனைக் கொண்டும் கற்புலனைக் கொண்டும் அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும். அவன் தனது அந்தஸ்துக்குத் தக்க விதத்தில் செவியேற்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கின்றான். மேலும், அவன் படைப்பினங்களிடத்தில் காணப்படக்கூடிய அனைத்துவகையான பண்புகளைவிட்டும் தூய்மையானவனாகவும் அவற்றுக்கு ஒப்பற்றவனாகவும் இருக்கின்றான்.
எனவே, இந்த வசனங்கள் அல்லாஹ்வுக்கு செவிப்புலனையும் கற்புலனையும் உறுதி செய்யும் விடயத்தில் மிகத் தெளிவானவையாக உள்ளன. அந்தவிதத்தில் அவனின் செவியேற்றல் பண்பானது இறந்த காலம், நிகழ் எதிர்காலம் மற்றும் எழுவாய் ஆகிய சொல்லமைப்புக்களில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, அவன் செவியேற்றவனாகவும் செவியேற்பவனாகவும் செவியேற்கக்கூடியனாகவும் இருக்கின்றான்.
பொதுவாக, அரேபியர்களின் மொழிவழக்கில் எதனையும் செவியேற்காத மற்றும் பார்க்காத ஒன்றை செவியேற்கக்கூடியது என்றோ பார்க்கக்கூடியது என்றோ சொல்வதில்லை. அந்த அடிப்படையில் மலை செவியேற்கக்கூடியது என்றோ பார்க்கக்கூடியது என்றோ யாரும் சொல்வதில்லை. ஏனெனில், அவை மலையுடைய விடத்தில் சாத்தியமற்றவையாகக் காணப்படுகின்றன.” (ஷர்ஹு அகீததில் வாஸிதிய்யா: 54)
அல்லாஹுத்தஆலா அவனது அந்தஸ்துக்குத் தக்கவிதத்தில் சூழ்ச்சி செய்கின்றான் என்பதை உறுதி செய்யும் சான்றுகள்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும், (அவர்களைத் தண்டிக்க நாடினால், அவர்களை நழுவாது பிடிப்பதில்) அவன் மிக்க சூழ்ச்சி செய்பவன்.” (அர்ரஃது: 13)
இப்னுல் அஃராபி என்பவர் கூறும்போது: “(இவ்வசனத்தில் இடம்பெறும்) 'அல்மிஹால்' என்ற வார்த்தை சூழ்ச்சியைக் குறிக்கின்றது.
அல்லாஹுத்தஆலா மிக்க சூழ்ச்சி செய்பவனுமாக இருக்கின்றான். மேலும், அல்லாஹ்வுடைய சூழ்ச்சியானது வெறுக்கத்தக்க ஒன்றை உரியவருக்கு அவர் உணராத விதத்தில் கொண்டு சேர்ப்பதாகும்” என்கிறார்.
இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்யச் சதி செய்தார்கள்.) (எனினும், அல்லாஹ் அவரை இரட்சித்துக் கொண்டு தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்துவிடும்படி) அல்லாஹ்வும் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். இன்னும், அல்லாஹ் சதி செய்பவர்களி(ன் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களி)ல் மிகச் சிறந்தவன்.” (ஆலுஇம்றான்: 54)
“அல்லாஹ்வும் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான்” என்ற வார்த்தை தொடர்பாக அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பவ்ஸான் அவர்கள் கூறும் போது: “அல்லாஹ் அவர்களைப் படிப்படியாகப் பிடித்து அவர்களின் சதிக்குத் தக்கவிதத்தில் கூலி வழங்கினான். அதன்படி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தை அவர்களல்லாத ஒருவருக்கு வழங்கி ஈஸா அலைஹிஸ்ஸலாத்தைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான்” என்கிறார்கள்.
மேலும் கூறுகின்றான்: “இன்னும், (இது போன்றே) அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். நாமும் (நம் தண்டனையைக் கொண்டு அவர்களின் சூழ்ச்சியை முறியடிக்கச்) சூழ்ச்சி செய்தோம். அவர்களோ (அதனை) உணர்ந்து கொள்ளவில்லை.” (அந்நம்லு: 50)
இவ்வசனத்தில் இடம்பெறும் “நாமும் சூழ்ச்சி செய்தோம்” என்ற வார்த்தைக்கு விளக்கமளிக்க முற்பட்ட ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள்: “அவர்களது அந்த செயலுக்கு நாம் கூலி வழங்கினோம். அதன் நிமித்தமாக நாம் அவர்களை அழித்தோம். எங்களது நபியைப் பாதுகாத்தோம்” என்கிறார்கள்.
பிறிதோர் இடத்தில் கூறும் போது: “(நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கின்றார்கள். நானும் (அவர்களுக்கெதிராக அதை முறியடிக்க) ஒரு சூழ்ச்சி செய்வேன்.” (அத்தாரிக்: 15,16)
இவ்வசனத்தில் இடம்பெறும் “நானும் ஒரு சூழ்ச்சி செய்வேன்” என்ற வாசகத்திற்கு ஸாலிஹ் அல்பவ்ஸான் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் விளக்கமளிக்கையில் : “நான் அவர்களைப் படிப்படியாகப் பிடிப்போன் அவர்களது சூழ்ச்சிக்காக அவர்களுக்குக் கூலி வழங்குவேன். மேலும், அவர்கள் உணராத விதத்தில் பொடுபோக்கில் வீற்றிருக்கும் போது நாம் அவர்களைப் பிடிப்போம்” என்கிறார்கள்.
அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹுத்தஆலா சூழ்ச்சி, சதி போன்ற வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான். இத்தகைய பண்புகள் அல்லாஹ்வின் அளவில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது எதார்த்தமானவை என்ற அடிப்படையிலாகும். சூழ்ச்சியானது மறைவான அமைப்பில் ஒருவர் மீது ஒன்றைக் கொண்டு சோர்ப்பதாகும். இதேபோன்ற கருத்தை சூழ்ச்சியைச் சுட்டிக்காட்டக்கூடிய அல்கைத், அல்முஹாதஆ போன்ற வார்த்தைகள் குறிக்கின்றன.
சூச்சியின் வகைகள்
சூழ்ச்சியை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. மோசமான சூழ்ச்சி: இவ்வகை சூழ்ச்சியானது உரியவருக்கல்லாமல் ஒன்றைச் சேர்ப்பதாகும்.
2. அழகான சூழ்ச்சி: உரியவருக்கு ஒன்றைத் தண்டனை என்ற அமைப்பில் சேர்ப்பதையே இவ்வகை அமைப்பு குறிக்கும்.
இப்பிரிப்புக்களில் முதல் வகை இழிவுக்குரியதும் இரண்டாவது வகை புகழுக்குரியதுமாகும்.
இப்படியான சூழ்ச்சியை அல்லாஹ் செய்வது அவன் நீதத்தைக் கொண்டும் ஞானத்தைக் கொண்டும் புகழப்படுவதற்காகும். அவனே அநியாயக்காரனையும் பாவியையும் அவர்கள் எண்ணிப்பார்க்காத விதத்தில் பிடிப்பவன்.
மேலும், படைப்பினங்களுக்கு மத்தியில் தண்டனை என்ற அமைப்பில் சிலர் சிலரைப் பிடிப்பது ஆகுமானதாக இருக்கும் போது படைப்பாளனான அல்லாஹ்வுக்கு ஏன் அப்படித் தண்டனையைக் கொண்டு முடியாது?
குறிப்பு: சூழ்ச்சி செய்தல் மற்றும் சதி செய்தல் போன்ற வார்த்தைகள் அல்லாஹ்வின் செயல்கள் என்ற அமைப்பில் பொதுப்படையாகக் கூறப்பட்டுள்ளன. பொதுவாகச் செயல்கள் பெயர்களைவிட விசாலத் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன. அதனால் தான் அல்லாஹ் தனது செயல்களைப் பொதுப்படையாகக் கூறியுள்ளான். ஆனால், அவைகளில் இருந்து பெயர்கள் உருவாக்கப்படமாட்டாது. உதாரணமாக அல்லாஹ் நாடுகின்றான் என்று கூறியுள்ளான். அதற்காக அதனில் இருந்து அல்முரீத், அஷ்ஷாஇ போன்ற பெயர்கள் உருவாக்கப்படுவதில்லை. அதேபோன்றே அல்லாஹ் சூழ்ச்சி செய்கிறான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இச்சொற்களை வைத்து அல்லாஹ்வை அல்மாகிர், அல்காயித் என்று பெயர் சூட்டி அழைக்க முடியாது. ஏனெனில், பெயர் சூட்டப்பட்டவைகள் புகழத்தக்கவை இகழத்தக்கவை என இருவகைகளாகப் பிரிக்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்க!
விட்டுக் கொடுப்பு, மிக்க மன்னிப்பு, கிருபை, கண்ணியம், சக்தி ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹுத்தஆலா வர்ணிக்கப்படுகிறான் என்பதற்கான சான்றுகள்.
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(செய்யும்) நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது, அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது, (ஒருவர் உங்களுக்குச் செய்த) யாதொரு தீங்கை நீங்கள் மன்னித்துவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ், (குற்றங்களை) மிக்க மன்னிப்போனாக, (தண்டிக்க) பேராற்றலுடையோனாக இருக்கின்றான்”. (அந்நிஸா: 149)
மேலும் கூறுகின்றான்: “அவர்களை மன்னித்துவிடவும், (பழைய வருத்தத்தைப்) பொருட்படுத்தாது விட்டுவிடவும் அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்”. (அந்நூர்: 22)
இன்னும் கூறுகின்றான்: “(நபியே நீர் கூறுவீராக) கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசிகளுக்கும் உரியதாகும்”. (அல்முனாபிகூன்: 08)
மேலும் கூறுகின்றான்: “(அப்போது) அவன், 'உன் மகத்துவத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் அனைவரையும் வழிகெடுத்துவிடுவேன்' என்றான்”. (ஸாத்: 82)
மேற்குறித்த வசனங்களில் அல்லாஹுத்தஆலா விட்டுக்கொடுப்பு, மிக்க மன்னிப்பு, சக்தி, கிருபை மற்றும் கண்ணியம் ஆகியவற்றைக் கொண்டு வர்ணிக்கப்பட்டுள்ளான் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இத்தகைய பண்புகள் அனைத்தும் அவனின் அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் காணப்படுகின்றன என்று நாம் கூற வேண்டும்.
அல்லாஹ்வுக்கு அவனின் பெயர்களை உறுதிப்படுத்துதலும், அவனுக்கு உதாரணம் கூறாமல் இருத்தலும்.
மேற்குறித்த தலைப்பு தொடர்பான சில அல்குர்ஆன் வசனங்களை இமாவர்கள் இடம்பெறச் செய்துள்ளார்கள். அவற்றுக்கான தமிழ் வடிவமானது:
அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க பாக்கியமுடையது”. (அர்ரஹ்மான்: 78)
மேலும் கூறுகின்றான்: “ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?” (மர்யம்: 65)
இன்னும் கூறுகின்றான்: “அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை”. (அல்இஹ்லாஸ்: 04)
மற்றும் கூறுகின்றான்: “(இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்”. (பகரா: 22)
மேலும் கூறுகின்றான்: “அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்”. (பகரா: 165)
இவ்வசனங்களை நன்கு நோட்டமிடுகையில் இவற்றில் அல்லாஹ்வினுடைய பெயர்கள் உறுதிப்படுத்தப்பட்டு மேன்மைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அவற்றில் அவனுக்கு எவ்வித ஒப்புவமையும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படியாக அல்லாஹ்வுக்கு இருக்க முடியாது என்று மறுக்கப்பட்டவைகள் சுருக்கமான அமைப்பில் காணப்படுவதே அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவுடைய போக்காகும். இப்போக்கு அவனின் கட்டாயமான பூரணத்துவத்திற்கு எதிராகக் காணப்படக்கூடிய எல்லா வகையான குறைகளையும் மறுப்பதாக அமைகின்றது.
அல்லாஹ்வுக்குக் கூட்டுச் சேர்த்தலைத் தவிர்த்தல்
அல்லாஹ்வுக்குக் கூட்டுச் சேர்த்தலைத் தவிர்க்கக்கூடிய பல திருக்குர்ஆன் வசனங்களை இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றின் நிரலில்...
1. “இன்னும் 'பிள்ளையை (தனக்கு) எடுத்துக் கொள்ளாதவனும் ஆட்சியில் தனக்குத் துணைவன் இல்லாதவனும் இழிவிலிருந்து (காக்க) அவனுக்கு உதவி செய்பவரே இல்லாதவனும் ஆகிய இத்தகைய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக' எனவும் (நபியே) நீர் கூறுவீராக! ஆகவே, (மாபெரும் மகத்துவத்திற்குரிய) அவனை மிகமிக பெருமைப்படுத்துவீராக!” (பனீ இஸ்ராயீல்: 111)
இவ்வசனத்தில் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உரியதாகவும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சில அரேபிய இணைவைப்பாளர்கள் கூறுவதைப் போன்று அவன் தனக்கொன்று எந்தப் பிள்ளையையும் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், பல கடவுள் கோட்பாட்டைக் கூறக்கூடிய அஸ்ஸனவிய்யாக்கள் போன்ற பிரிவினர்கள் கூறுவதைப் போன்று கூறுவதைத் தவிர்த்து, ஆட்சி அதிகாரத்தில் அவனுக்கு யாதொரு துணையுமில்லை என்றும் மேற்கோந்த வாசனத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பு: ஸனவிய்யா என்பது நெருப்பு வணங்கிகளின் மதக் கோட்பாடாகும். இப்பிரிவினர் உலகமானது உருவாக்கப்பட்டது என்றும், மிகப் பழமை வாய்ந்த நெருப்பு மற்றும் இருள் ஆகிய இரு அடிப்படைகளைக் கொண்டு பின்னிப் பிணைந்துள்ளது என்றும் கூறுகின்றனர். (அல்மிலல் அந்நிகல்: 2/72)
அதேநேரத்தில் எந்தவொரு பொறுப்புதாரர் அல்லது அமைச்சர் போன்றோரின் பால் தேவையுடையவனாக அல்லாஹ் இருப்பதற்கு அவன் தாழ்ந்தவனும் அல்லன். மேலும், அவன் யாரிடத்திலும் உதவியை எதிர்பார்த்தவனும் அல்லன். எனவே, அநியாயக்காரர்கள் கூறுவதை விட்டும் அவனை நாம் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அவன் பணிக்கின்றான்.
2. “வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. ஆட்சி அவனுக்கே உரியது. மேலும், புகழனைத்தும் அவனுக்கே உரியது. மேலும், அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்”. (அத்தகாபுன்: 01)
இவ்வசனத்தில் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் எல்லா வகையான குறைகளை விட்டும் அவனைத் துதி செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆட்சி அதிகாரம், புகழ் ஆகிய இரண்டும் அவனுக்கு மாத்திரமே உரியன. மாற்றமாக, அடியார்களிடத்தில் காணப்படும் அதிகாரமானது, அது அவனால் கொடுக்கப்பட்ட ஒன்றே! இன்னும், அவனை எந்த ஒன்றும் இயலாமல் செய்துவிடாது ஆகிய தகவல்கள் இவ்வசனத்தில் பதிவாகியுள்ளன.
3. “தன் அடியார் (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) மீது (அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்தறிவிக்கும்) புர்கானை அது அகிலத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதாக ஆவதற்காக இறக்கிவைத்தானே அத்தகையோன் மிகப் பாக்கியமுடையவன். (இவ்வேதத்தை அருட் செய்தவன்) எத்தகையோனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கென) மகனை எடுத்துக் கொள்ளவுமில்லை. (அவனுடைய ) ஆட்சியில் அவனுக்குக் கூட்டுக் காரரும் இல்லை. அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தான். பிறகு அதனதன் முறைப்படி அதைச் சரியாக அமைத்தான்”. (அல்புர்கான்: 1,2)
இமாம் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: “அல்லாஹ் தனக்கு மகன் மற்றும் கூட்டுக்காரரை எடுத்துக் கொள்வதை விட்டும் தன்னைத் தூய்மைப்படுத்தியுள்ளான். பிறகு அவன் அனைத்து வஸ்துக்களையும் படைத்து முறைப்படி அவற்றைச் சரி செய்ததாகக் கூறுகின்றான். அதாவது, அவனல்லாத அனைத்தும் படைக்கப்பட்டவையாகவும் அவனுடைய கண்காணிப்பின் கீழ் உள்ளவையாகவும் கூறுகின்றான். எனவே, அவனே அனைத்து வஸ்துக்களையும் படைத்தவனாகவும் அவற்றின் இரட்சகனாகவும் அவற்றில் ஆட்சி அதிகாரம் செலுத்துபவனாகவும் இருக்கின்றான். மேலும், அனைத்து வஸ்துக்களும் அவனுடைய அடக்கியாளும் வல்லமைக்குக் கீழால் இருக்கின்றன' என்கிறார்கள்”. (தப்ஸீர் இப்னு கஸீர்: 4/582)
4. “அல்லாஹ் எந்த ஒரு மகனையும் (தனக்குச் சந்ததியாக) எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வணக்கத்திற்குரிய வேறு எந்த) நாயனும் இல்லை. (அவர்கள் கற்பனையின் படி) அவ்வாறிருப்பின் ஒவ்வொரு நாயனும் தான் படைத்ததைக் கொண்டு சென்றுவிடுவர். இன்னும், தம்மில் சிலர் சிலரை (மிகைத்து) உயர்ந்தும் விடுவர். இ(ந்நிராகரிப்ப)வர்கள் வர்ணிப்பவற்றைவிட்டும் அல்லாஹ் மிகத் தூயவன். (அவன்) மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவன். இவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவன்”. (அல்முஃமினூன்: 91, 92)
இவ்வசனத்திலும் அல்லாஹ் தனது ஆட்சி அதிகாரம் மற்றும் வணக்க வழிபாடுகள் அனைத்திலும் தன்னுடன் கூட்டுச் சேர மகனோ அல்லது பங்குதாரரோ இல்லை என்று பிரஸ்தாபிக்கின்றான். அப்படி பல கடவுள்கள் இருக்கிறார்கள் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும் அவர்களில் ஒவ்வொருவரும் தன்னுடைய படைப்பினங்களோடு சுருக்கிக் கொள்வார்கள். இப்டியான நிலைமை நீடிக்கும் போது உலகத்தின் செயற்பாடுகள் ஒழுங்கீனமாக ஆகிவிடும். மாற்றமாக, நாம் கண்கூடாகப் பார்ப்பதைப் போன்று உலகம் ஒரு சீராண அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலை பல கடவுள்கள் இல்லை என்பதை எமக்கு உணர்த்துகின்றது.
அதேபோன்று மேற்கூறப்பட்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டதைப் போன்று அவ்வாறு பல கடவுள்கள் இவ்வுலகை ஆட்சி புரிந்தால், ஒவ்வொரு கடவுளும் மற்றக் கடவுளை அடக்குவதற்கும், முரண்பட்டு நடப்பதற்குமே முயற்சி எடுக்கும். உலகில் காணப்படும் அரசர்களைப் போன்று சிலர் சிலரை விட மேலோங்கிச் செல்லவே எத்தணிப்பர். அப்படியான நிலை காணப்படுமிடத்து பலவீனப்படுத்தப்பட்ட கடவுள், கடவுள் என்ற இஸ்தானத்திற்குத் தகுதியற்றவராகவே காணப்படுவார். எனவே, அல்லாஹ் தனக்கு உதவியாக மகன் அல்லது கூட்டாளி போன்றோரை ஏற்படுத்துவதை விட்டும் தூய்மையானவன்.
5. “ஆகவே அல்லாஹ்வுக்கு நீங்கள் உதாரணங்களைக் கூறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (சகலவற்றையும்) அறிவான். நீங்களோ அறிய மாட்டீர்கள்”. (அந்நஹ்ல்: 74)
உதாரணம் கூறுதல் என்பது ஒரு நிலைக்கு மற்றொரு நிலையை ஒப்பாக்குதலாகும். அக்கால இணைவைப்பாளர்கள், நிச்சயமாக அல்லாஹ்வை எங்களில் ஒருவர் வணங்குவதை விட்டும் அவன் தூய்மையானவன். எனவே, அவசியம் எங்களுக்கும் அவனுக்கும் மத்தியில் ஒர் இடைத்தரகரை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்று கூறி, அவர்கள் இதற்காக சிலைகளையும் அவையல்லவற்றையும் இடைத்தரகர்களாக எடுத்துக் கொண்டார்கள். இந்நடவடிக்கையை உலகில் காணப்படும் மன்னர்களுக்கு ஒப்பாகக் கருதி மேற்கொண்டார்கள். ஆனாலும், அவ்வொப்புவமை அல்லாஹ்வுக்குப் பொருந்தாது. அல்லாஹ்வுக்கு உதாரணம் இல்லை என்பதை அவன் நன்கறிவான். ஆனாலும், அவர்களின் இச்செயல் வெறும் பிழையான சிந்தனையின் வெளிப்பாடாகும். இத்தகையவர்கள் சிலை வணக்கதின் இறுதிப் பேறை அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.
6. “என்னுடைய இரட்சகன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் 'மானக்கேடான செயல்களை அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும் (இதர) பாவத்தையும் உரிமையின்றி வரம்பு மீறுதலையும் அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைப்பதையும் அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவதையும் தான்' என்று (நபியே) நீர் கூறுவீராக” (அல்அஃராப்: 33)
இவ்வசனத்தில் அல்லாஹ் தன்னுடைய நபியை நோக்கி சில ஆகாத காரியங்களை இனங்காட்டி அவற்றை மேற்கொள்ளக்கூடாது என்று பணித்துள்ளான். அவற்றின் வரிசையில் நாம் அலசிக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு இணை ஒன்றை ஏற்படுத்துவதும் உள்ளடங்குகின்றது.
இப்படியான இணையை நியாயப்படுத்தக் கூடிய எவ்வித ஆதாரத்தையும் அவன் ஏற்படுத்தாதிருக்க இத்தகைய செயலில் ஈடுபடுவது மிகப் பாரதூரமான குற்றமாகும்.
எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் ஒருமித்து நோட்டமிடும் போது அவற்றில் இணைவைப்பு முற்றிலும் தடுக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
மேலும், அவனுடைய ஒருமைத்துவத்தைப் பூரணத்தைக் கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளலாம். மேலும், இவ்வசனங்களில் இணைவைப்பைத் தகர்த்தெரியக்கூடிய ஆதாரங்களும் நிலைநாட்டப்பட்டுள்ளன.
மாற்றமாக, இணைவைப்பானது வெறுமனே மடமை, கற்பனை ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. எமது இரட்சகன் அல்லாஹ்வுக்கு எந்த உதாரணமும் ஒப்புவமையும் கிடையாது.
அல்லாஹுத்தஆலா அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்பதை உறுதி செய்யக்கூடிய ஆதாரங்கள்
“அர்ரஹ்மானாகிய அவன் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான்” என்ற கருத்துப்பட இடம்பெறக்கூடிய வசனங்கள் அல்குர்ஆனில் ஏழு இடங்களில் பதிவாகியுள்ளன. அப்படியான ஒவ்வோர் இடத்திலும் “இஸ்தவா” என்ற வார்த்தைப் பிரயோகம் காணப்படுகின்றது.
இச்சொல் அதனுடைய எதார்த்தமான கருத்தின் அடிப்படையிலேயே அணுகப்பட வேண்டும். மாற்று வியாக்கியானங்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
“இஸ்திவா” என்பது அல்லாஹ்வுக்கு உரித்தான செயல் சார்ந்த பண்பாகும். இப்பண்பானது ஏனைய பண்புகளைப் போன்று அவனது அந்தஸ்திற்குத் தக்க விதத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும், இவ்வார்த்தைக்கு உயர்ந்தான், நிலைபெற்றான் ஆகிய கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய கருத்துக்கள் “இஸ்திவா” தொடர்பாகக் கூறப்பட்ட ஸலபுஸ் ஸாலிஹீன்களின் கூற்றுக்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இஜ்திமாஉல் ஜுயூஷில் இஸ்லாமிய்யா” என்ற தனது நூலில் இது தொடர்பாகத் தனியான ஒரு பாடத்தை ஏற்படுத்தி அதில் அரபு மொழியியல் அறிஞர்களின் “இஸ்திவா” தொடர்பான கருத்துக்களைத் தொகுத்துள்ளார்கள்.
மேலும், இது தொடர்பாக உஸாமா அல்கஸ்ஸாஸ் என்பவர் “இஸ்பாது உலுவ்வில்லாஹி அலா ஹல்கிஹி வர்ரத்து அலல் முகாலிபீன்” என்ற தனது நூலிலும் அல்லாலகாஇ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஷர்ஹு உஸூலி இஃதிகாதி அஹ்லிஸ் ஸுன்னா” என்ற தனது நூலிலும் பேசியுள்ளார்கள்.
தற்போது நாங்கள் மேற்குறித்த தலைப்பு தொடர்பாக இடம்பெறக்கூடிய ஏழு அல்குர்ஆன் வசனங்களையும் காண்போம்.
1. “நிச்சயமாக உங்கள் இரட்சகன் அல்லாஹ்தான். அவன் எத்தகையவனென்றால் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீது இருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அல்அஃராப்: 54)
2. “நிச்சயமாக உங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான். அவன் எத்தகையவனென்றால் வானங்களை மற்றும் பூமியை ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (யூனுஸ்: 3)
இவ்வசனங்களில் “அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்” என்று இடம்பெற்றிருக்கக்கூடிய வாசகமே ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டிய வாசகமாகும்.
மேலும், இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் “அல்அர்ஷ்” என்ற பதம் அரபு மொழி வழக்கில் மன்னர்கள் உட்காருவதற்குப் பயன்படுத்தும் சிம்மாசனத்தைக் குறிக்கும். (பார்க்க: கிதாபுல் அர்ஷ், அத்தன்பீஹாதுஸ் ஸனிய்யா) இக்கருத்தே எல்லா வகையான ஆதாரங்களையும் இணைத்துப் பார்க்கும் போது அறிய முடியுமான கருத்தாகும். இன்னும், அர்ஷானது கால்களையுடைய மலாஇகாமார்கள் சுமந்திருக்கும் சிம்மாசனமாகும். மேலும் அது அகிலத்திற்கு டோமாகவும் படைப்பினங்களுக்கு முகடாகவும் இருக்கும்.
3. “(இவ்வேதத்தை உமக்கு இறக்கிவைத்த) அல்லாஹ் எத்தகையோனென்றால் வானங்களைத் தூணின்றி உயர்த்தியுள்ளான். அவற்றை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அர்ரஃது: 2)
4. “அர்ரஹ்மான் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமே அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (தாஹா: 5)
5. “பின்னர் (தன் கண்ணியத்திற்குத்தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அல்புர்கான்: 59)
6. “அல்லாஹ் எத்தகையவனென்றால் வானங்களையும் பூமியையும் இவையிரண்டிற்கும் மத்தியலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான் பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.)” (அஸ்ஸஜ்தா: 4)
7. “அவன் எத்தகையவனென்றால் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.” (அல்ஹதீத்: 4)
இவ்வசனங்கள் அனைத்தையும் ஒருமித்து நோக்குகையில் அல்லாஹ் தனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான் என்பது உறுதியாகின்றது. மேலும், இத்தகைய திருக்குர்ஆன் வசனங்களில் இடம்பெறும் “இஸ்தவா” என்ற வாசகத்திற்கு எவர்களெல்லாம் மாற்று விளக்கம் வழங்குகின்றார்களோ அவர்களுக்கும் சிறந்த பதில் காணப்படுகின்றது. ஏனெனில், சிலர் “இஸ்தவா” என்ற வாசகத்திற்கு விளக்கமளிக்கையில் ஆக்கிரமித்தல், அதிகாரம் செலுத்துதல் போன்ற விளக்கங்களைக் கூறுகின்றனர். மேலும், “அர்ஷ்” என்ற சொல்லுக்கு ஆட்சி, அதிகாரம் என்று வலிந்துரைக்கின்றனர். இப்படியான மாற்று விளக்கத்தின் மூலம் அல்லாஹ் ஆட்சியைக் கைப்பற்றினான் அவனல்லாதவர்களை அடக்கியாண்டான் என்று தெரிவிக்க முற்படுகின்றனர். இப்படி விளக்கமளிப்பது முற்றிலும் தவறானது என்பதைப் பல வழிகளில் நிரூபிக்கலாம். அவற்றுள் சில வழிகளாவன.
1. இத்தகைய விளக்கம் புதிதாகக் கூறப்பட்ட விளக்கமாகும். மேலும், ஸலபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்திற்கும் மாற்றமானதாகும். இவ்விளக்கத்தை ஆரம்பமாகக் கூறியோர் ஜஹ்மிய்யாக்களும் முஃதஸிலாக்களுமாவர். ஆயினும், இக்கருத்து நிராகரிக்கத்தக்கதாகும்.
2. அவ்வாறு “இஸ்தவா” என்ற சொல்லின் கருத்து ஆட்சியைக் கைப்பற்றுவதாக இருந்தல், அர்ஷிக்கும் மிகத் தாழ்ந்த இஸ்தளத்திலுள்ள 7ம் பூமிக்கும் இடையிலும் கால்நடைகள் மற்றும் அனைத்துப் படைப்புக்களுக்கு இடையிலும் வேறுபாடு இருக்காது. எனெனில், அவன் அனைத்தையும் ஆக்கிரமித்திருப்பவன், அனைத்திற்கும் சொந்தக்காரன். எனவே, அர்ஷை விசேடமாகக் குறிப்பிடுவதில் எவ்விதப் பிரயோசனமும் இருக்காது.
3. استوى على العرش - அர்ஷின் மீது உயர்ந்து விட்டான் - என்ற வாசகம் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாற்றமாக, استولى على العرش - அர்ஷை ஆக்கிரமித்தான் -என்று ஓர் இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை.
4. “இஸ்தவா” உடன் தொடர்புடைய வசனங்களில் ثم என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பதம் ஒழுங்கமைப்பை வேண்டி நிற்கின்றது. உண்மையில், “இஸ்தவா” என்பதற்கு ஆக்கிரமித்தல், சக்திபெறல் என்ற கருத்துக்கள் காணப்பட்டிருப்பின் வானங்கள் மற்றும் பூமிகள் அனைத்தும் படைக்கப்படும் வரை குறித்த சக்தியைப் பிற்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அர்ஷானது வானங்கள் பூமிகள் படைக்கப்படுவதற்கு 50000 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. இப்படியிருக்க வானங்கள் பூமிகள் படைக்கப்படும் வரை எப்படி அவன் சக்தியற்றவனாகவும் ஆக்கிரமிக்காதவனாகவும் இருக்க முடியும். இது பாதில்களில் மிகப் பெறிய பாதிலாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.
தனது படைப்பினங்களுக்கு மேலால் அல்லாஹ்வின் உயர்வை உறுதி செய்யும் சான்றுகள்
இது விடயத்தை உறுதி செய்யக்கூடிய சான்றுகளில் சிலவற்றை ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் குறிப்பிட்ட வசனங்களையும் அவற்றுக்கான சுருக்க விளக்கத்தையும் தற்போது நாம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
1. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்பவனாகவும் இருக்கின்றேன்.' (ஆலு இம்றான்: 55)
இவ்வசனத்தில் இடம்பெறும் إني متوفيك என்ற வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் தூக்கம் நாடப்படுவதாக பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றார்கள். (பார்க்க: தப்ஸீர் இப்னு கஸீர்: 2/42)
மேலும், இக்கருத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்துள்ளன.
'அன்றியும் அவன் எத்தகையவனென்றால் (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும் போது) அவன் தான் உங்க(ளின் உயிர்க)ளைக் கைப்பற்றிக் கொள்கிறான்.' (அல்அன்ஆம்: 60)
'உயிர்களை அவை இறக்கும் பொழுதும் தம் நித்திரையில் இறப்பெய்யாதவற்றையும் அல்லாஹ்வே கைப்பற்றுகிறான்.' (அல்ஜுமர்: 42)
மேலும், ஆரம்பமாக இமாமவர்கள் கொண்டுவந்த வசனத்தில் ورافعك إلي என்று ஒரு வாசகம் இடம் பெற்றுள்ளது. அதனுடைய கருத்து அல்லாஹ் அவரை உயிருடன் வானத்தில் தன்பால் உயர்த்தினான் என்பதுவாகும். இதுவே அந்த வசனத்தில் ஆதாரம் பிடிக்கப்படும் இடமுமாகும். இவ்விடயம் அல்லாஹ்வுக்கு உயர்வு உண்டு என்பதை உறுதி செய்கின்றது. ஏனெனில், உயர்த்துதல் என்பது மேல் நோக்கியே இடம்பெறக்கூடியதாக உள்ளது.
2. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'மாறாக அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான்.' (அன்னிஸா: 158)
இவ்வசனம் யூதர்களுக்கு சிறந்த மறுப்பாக உள்ளது. அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொலை செய்துவிட்டதாக வாதிடுகின்றார்கள். இதற்கு மறுப்பளிக்கும் முகமாக அல்லாஹுத்தஆலா பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்.
'அவரை அவர்கள் கொல்லவுமில்லை அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும் அவர்களுக்கு (ஈஸாவின் தோற்றத்தைப் பெற்ற) ஒருவரை ஒப்பாக்(கிக் காண்பிக்)கப்பட்டது.' (அன்னிஸா: 157)
இங்கு நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட இவ்வசனமும் அல்லாஹ் தன் படைப்புகளுக்கு மேலால் உள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
3. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'தூய வாக்கியங்கள் அவனளவில் மேலேறிச் செல்கின்றன. நல்ல செயலும் அதை (அல்லாஹ்வின் பால்) உயர்த்துகிறது.' (பாதிர்: 10)
இவ்வசனத்தை அடிப்படையாக வைத்து நிச்சயமாக தூய வார்த்தைகள் ஸாலிஹான அமல்கள் இன்றி ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இயாஸ் இப்னு முஆவியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: 'ஸாலிஹான அமல் இல்லாவிட்டால் வார்த்தை உயர்த்தப்பட மாட்டாது' என்கிறார்கள்.
மேலும் ஹஸன், கதாதா ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் கூறும் போது: 'ஒரு வார்த்தை அமல் இன்றி பொருந்திக் கொள்ளப்படமாட்டாது' என்கிறார்கள்.
மேலும், இந்த வசனத்திலும் படைப்புக்களைவிட்டும் அல்லாஹ்வுடைய உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், மேலேறிச் செல்லல், உயர்தல் ஆகியன மேல் நோக்கியே அன்றி சாத்தியமாகாது என்பதைப் புரிந்த கொள்ளலாம்.
4. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: '(அதற்கு) பிர்அவ்ன் ஹாமனே! (சகலருக்கும் தெரியும்படியான) உயர்ந்த (ஒரு) மாளிகையை எனக்காக கட்டும்! (அதன் மூலம் உயரச் செல்லும்) வழிகளை நான் அறியலாம் என்று கூறினான். வானங்களை அடையும் வழிகளை (நான் அறியலாம். அவற்றின் மூலம் சென்று) மூஸாவுடைய வணக்கத்திற்குரியவனை நான் பார்க்க வேண்டும் அவர் பொய் செல்கிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்.' (அல்முஃமின்: 36,37)
இவ்வசனத்திலும் அல்லாஹ்வுடைய உயர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் உயர இருக்கின்றான் என்பதை அறிவித்த போதே பிர்அவ்ன் அவரைப் பொய்ப்பிக்கும் முகமாக இம்முயற்சியில் இறங்கினான்.
5. அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: 'வானத்திலிருப்பவன் உங்களை பூமியில் அழுத்தச் செய்துவிடுவான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? (பூமியாகிய) அது அந்நேரத்தில் நடுங்கும் அல்லது வானத்தில் இருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்பி வைப்பான் என்பதிலிருந்து நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.' (அல்முல்க்: 16,17)
இவ்வசனத்தில் இடம்பெறும் في السماء என்ற வாசகத்திற்கு வானத்தின் மீது என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இப்படியான பொருள் கொள்ளல் அமைப்பே பின்வரும் திருக்குர்ஆன் வசனத்திலும் காணப்படுகின்றது.
'இன்னும் பேரீச்ச மரங்களின் அடிப்பாகங்களில் உங்களை நிச்சயமாக நான் கழுவேற்றுவேன்.' (தாஹா: 71)
எனவே, விளக்கத்திற்காக நாம் எடுத்துக் கொண்ட இவ்வசனமும் கூட ஏற்கெனவே கூறப்பட்ட வசனங்களைப் போன்று அல்லாஹ்வின் உயர்வுத் தன்மையை உறுதி செய்கின்றன.
ஏனெனில், இவ்வசனங்களில் வெளிப்படையாக அல்லாஹ் வானத்தில் உள்ளான் என்று கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ் உயர்ந்துவிட்டான் (استوى) என்ற வார்த்தைக்கும் அவனுடைய உயர்வு குறித்த (العلو) என்ற வார்த்தைக்கும் இடையிலுள்ள வேறுபாடு
1. அல்லாஹ்வின் உயர்வு என்பது அவனுடைய தன்னளவிலான பண்புகளில் ஒன்றாகும். மாறாக, அல்லாஹ் உயர்ந்துவிட்டான் என்பது அவனுடைய செயல் சார்ந்த பண்பாக உள்ளது. எனவே, படைப்பினங்களைவிட்டும் அல்லாஹ்வின் உயர்வானது தன்னளவில் அவனிடத்தில் அவசியம் காணப்படும் பண்பாகும். ஆனால், அவன் அர்ஷின் பால் உயர்ந்தான் என்பது அவனுடைய செயல்களில் ஒன்றாகவும் அவன் நாடும் போது அதனை தனது நாட்டம் மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டு மேற்கொள்பவனாக இருக்கின்றான். அதனால் தான் இது தொடர்பான திருக்குர்ஆன் வசனத்தில் 'பிறகு அவன் உயர்ந்தான்' என்று இடம்பெற்றுள்ளது. ஏனெனில் இத்தகைய உயர்தல் செயற்பாடானது வானங்கள் மற்றும் பூமியின் படைப்புக்குப் பிறகே இடம்பெற்றது.
2. அல்லாஹ்வின் உயர்வு என்ற பண்பு புத்தி மற்றும் குர்ஆன் சுன்னா ஆதாரங்களைக் கொண்டு உறுதியான பண்பாகும். மேலும், அவன் உயர்ந்தான் என்ற செயல் குர்ஆன் சுன்னா ஆதாரங்களைக் கொண்டு மாத்திரம் உறுதியானதாகும்.
- இன்ஷா அல்லாஹ் தொடரும்