அத்தியாயம் - 1 தூய்மை

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 1 தூய்மை

தண்ணீர்

1 கடலைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும்போது, ''அதன் தண்ணீர் சுத்தமானது அதில் (வசிப்பவை) இறந்தவை(யாக இருப்பினும்) அனுமதிக்கப்பட்டது'' என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ, இப்னு மாஜா, மற்றும் இப்னு அபீ ஷைபா, இப்னு குஸைமா, மாலிக் ஷாஃபி மற்றும் அஹ்மத். இங்கு இப்னு அபீ ஷைபாவின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இப்னு குஸைமா மற்றும் திர்மிதீயில் இது ஸஹீஹ் என்று குறிப்பிட்டுள்ளனர். இன்னும் இது ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

2 ''நிச்சயமாக தண்ணீர் சுத்தம் செய்யக் கூடியதாகும் அதனை எதுவும் அசுத்தமாக்கி விடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ஸல்) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ. அஹமதில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3 நிச்சயமாக தண்ணீரை அதனுடைய வாடை, சுவை, நிறம் இவற்றை மிகைக்கக் கூடியவற்றைத் தவிர்த்து வேறு எதுவும் அசுத்தமாக்காது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா அல்பாஹிலி(ரலி) அறிவிக்கிறார்.

இப்னு மாஜா. அபூஹாதிமில் இதை ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

4 அசுத்தம் (நீரில்) கலந்து, அதனுடைய வாடை, சுவை, நிறம் மாறாவிட்டால் அந்நீர் சுத்தமானது'' என்று பைஹகீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

5 தண்ணீர் 'குல்லத்தைன்' அளவுக்கு இருந்தால் அது அசுத்தமாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ, இப்னு மாஜா, திர்மிதீ, இப்னு குஸைமா, ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பான். இதை இப்னுகுஸைமா, ஹாகிம் மற்றும் இப்னு ஹிப்பான். இது பிந்திய மூன்று நூல்களிலும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

6 உங்களில் குளிப்புக் கடமையான எவரும் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

7 உங்களில் ஒருவர் ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழித்து விட்டு, பின்னர் அதில் குளிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புகாரியில் இடம் பெற்றுள்ளது.

8 உங்களில் ஒருவருக்கு குளிப்புக் கடமையான நேரத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிக்க வேண்டாம். முஸ்லிம், அபூ தாவூத்

9 கணவனால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் மனைவியும், மனைவியால் மீதம் வைக்கப்பட்ட தண்ணீரில் கணவனும் குளிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ''தேவை ஏற்பட்டால் இருவரும் சேர்ந்து குளித்துக் கொள்ளலாம்'' என நபித் தோழர்களில் ஒருவர் அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 ''உம்முல் முஃமினீன் மைமூனா(ரலி) அவர்கள் குளித்து விட்டு எஞ்சிய தண்ணீரில் நபி(ஸல்) அவர்கள் குளித்தார்கள்'' என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். முஸ்லிம்

11 நபி(ஸல்) அவர்களது மனைவியரில் ஒருவர், ஒரு பெரிய பாத்திரத்தில் குளித்தார் அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள் அதில் குளிக்க விரும்பிய போது, ''நிச்சயமாக நான் குளிப்பு கடமையானவளாக இருந்தேன்'' என்று (உம்முல் மூஃமினீன்) கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''(இதன் காரணமாக) தண்ணீர் ஒரு போதும் அசுத்தமானதாக ஆகாது'' என்று கூறினார்கள்

திர்மிதீ, இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

12 ''உங்களுடைய பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால், அதை சுத்தப்படுத்துவதற்காக ஏழுமுறை கழுவுங்கள். அதில் முதல்முறை மண்ணால் சுத்தம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம். 

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ''அதிலுள்ளதை கொட்டி விடுங்கள்'' என்று உள்ளது. திர்மிதீயின் மற்றோர் அறிவிப்பில் ''முதல் முறை அல்லது கடைசி முறை மண்ணால கழுவுங்கள்'' என்ற உள்ளது.

13 நபி(ஸல்) அவர்கள் பூனையைப் பற்றிக் கூறும் போது, ''அது அசுத்தமானதல்ல உங்களிடையே சுற்றி வரக் கூடியது தான்'' என்று கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத் நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா. திர்மிதீ மற்றும் இப்னு குஸைமாவில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 ஒரு நாட்டுப் புறத்தார் பள்ளிக்கு வந்து ஒரு மூலையில் சிறுநீர் கழித்து விட்டார். அவரை மக்கள் அதட்டினார்கள். அதை நபி(ஸல்) அவர்கள், தடுத்து, அவர் சிறுநீர் கழித்து முடித்த பின்னர் ஒரு வாளி தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்கள். பின்னர் அது அதன் மீது ஊற்றப்பட்டது என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

15 நமக்கு செத்தவை இரண்டும், இரத்தம் இரண்டும் (ஹலால்) அனுமதிக்கப்பட்டுள்ளது. அவைகளில் செத்தவை; வெட்டுக்கிளி மற்றும் மீனாகும். அந்த இரத்தம்; ஈரல் மற்றும் கல்லீரல் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், இப்னு மாஜா. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

16 ''உங்கள் குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால், அதை உள்ளே மூழ்கடித்து விட்டுப் பின்னர் வெளியில் எடுத்து விடவும். ஏனெனில், அதன் ஓர் இறக்கையில் நோயும் மற்றோர் இறக்கையில் நிவாரணமும் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, அபூ தாவூத்.

''நிச்சயமாக இது நோயிருக்கும் தன்னுடைய இறக்கையின் மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது'' என்றும் அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.

17 ''உயிருள்ள கால் நடைகளில் (உறுப்புகள்) வெட்டப்பட்டதும் செத்ததே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூவாஹித் அல்லைஸி(ரலி) அறிவிக்கிறார்.

திர்மிதீ, அபூ தாவூத். இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.



பாத்திரங்கள்

18 ''தங்கப் பாத்திரங்களிலும் வெள்ளிப் பாத்திரங்களிலும் பருகாதீர்கள், இன்னும் அத்தட்டுகளில் சாப்பிடாதீர்கள். ஏனெனில், அவை உலகில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்குரியதாகும்; மறுமையில் உங்களுக்கு உரியதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

19 ''எவர் வெள்ளிப் பாத்திரங்களில் பருகுகின்றாரோ அவர் தன்னுடைய வயிற்றில் நரக நெருப்பைக் கொட்டிக் கொள்கிறார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

20 ''பச்சைத் தோல் பதனிடப்பட்டு விட்டால் அது தூய்மையாகி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

21 இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக, எந்தத் தோலானாலும் பதனிடப்பட்டு விட்டால் (அது தூய்மையாகி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸலமா இப்னு அல் முஹய்யிக்(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்

22''இறந்து போன கால்நடைகளின் தோல்கள் பதனிடப்பட்டு விட்டால் அது தூய்மையாகிவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸலமா இப்னு அல் முஹய்யிக்(ரலி) அறிவிக்கிறார்.

இப்னு ஹிப்பான. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

23 இறந்து போன ஆட்டை இழுத்துச் சென்றோரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்ற போது, ''அதனுடைய தோலை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே?'' என்று கூறினார்கள். அதற்கவர்கள் ''அது தானாக செத்தாயிற்றே?'' என்று பதிலளித்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''அதைத் தண்ணீர் மற்றும் மரப்பட்டை சுத்தம் செய்துவிடும்'' என்று கூறினார்கள் என மைமூனா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ

24 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வேதம் கொடுக்கப்பட்டோரின் நாட்டில் நாங்கள் வசிக்கின்றோம். எனவே அவர்களது பாத்திரங்களில் நாங்கள் உண்ணலாமா?'' என்று நான் கேட்டேன். அதற்கு ''அவற்றில் நீங்கள் உண்ணாதீர்கள்! உங்களுக்கு வேறு பாத்திரங்கள் கிடைக்கவில்லையெனில், அவற்றைக் கழுவிவிட்டு அவற்றில் உண்ணுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூ ஸஅலபா அல் குஷனிய்யீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

25 ''(இறைவனுக்கு) இணை வைக்கும் ஒரு பெண்ணுடைய தண்ணீர்ப் பையிலிருந்த தண்ணீரைக் கொண்டு நபி(ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் உளு செய்தார்கள்'' என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்

26 ''நபி(ஸல்) அவர்களுடைய பாத்திரம் ஒன்று உடைந்து விட்டது. அவர்கள் ஓட்டை விழுந்த இடத்தில் வெள்ளித் துண்டினால் அடைத்தார்கள்'' என, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி



அசுத்தங்களை அகற்றுதல்

27 ''நபி(ஸல்) அவர்களிடம் சாராயத்திலிருந்து 'சிர்கா' செய்வது பற்றி வினவப்பட்டதற்கு அவர்கள் 'கூடாது' என்றார்கள் (தடை விதித்தார்கள்)'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்.

முஸ்லிம், திர்மிதீ. இது திர்மிதீயில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

28 நபி(ஸல்) அவர்கள் மினாவில் தங்களது வாகனத்தில் அமர்ந்தவாறே எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது அதன் (அக்கால் நடையின்) உமிழ் நீர் என்னுடைய தோளில் (விழுந்து) வழிந்தோடிக் கொண்டிருந்தது என அம்ர் இப்னு காரிஜா(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், திர்மிதீ. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

30 ''நபி(ஸல்) அவர்கள் (தங்களது ஆடையில் பட்ட) இந்திரியத்தைக் கழுவி விட்டு, அதே ஆடையுடன் தொழுகைக்குச் செல்வார்கள். அப்போது அந்த ஆடையில் கழுவப்பட்ட அடையாளத்தை நான் காண்பேன்'' என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

31 ''நான் நபி(ஸல்) அவர்களது ஆடையிலிருந்த (இந்திரியத்)தை சுரண்டி விடுவேன். அவர்கள் அதே ஆடையுடன் தொழுவார்கள்'' என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் பதிவாகியள்ளது.

32 ''ஆடையில் அது காய்ந்த பின் என்னுடைய நகத்தால் அதை சுரண்டி விடுவேன்'' என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

33 ''பெண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர்பட்ட இடத்தில் தண்ணீர் தெளித்தல் போதுமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸம்ஹி(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ, ஹாகிம். இது ஸஹீஹ் எனும் தரத்தில் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

34 ''மாதவிடாய் இரத்தம் பட்ட துணியை சுரண்டி, பின்னர் அதைத் தண்ணீரால் கழுவி, பின்பு அதன் மீது தண்ணீர் ஊற்றி அதில் தொழுது கொள்ளலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

35 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாதவிடாய் இரத்தத்தின் கறை (துணியிலிருந்து) போகாவிட்டால்?'' என்று கவ்லா(ரலி) வினவினார். அதற்கு ''அதன் மீது தண்ணீர் விட்டால் போதுமானது அதன் கறையால் உனக்குத் தீங்கில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



உளு

36 ''என்னுடைய சமுதாயத்திற்கு கஷ்டம் தந்து விடுவேன் என்று நான் அஞ்சாவிட்டால் ஒவ்வொரு உளுவுடனும் (மிஸ்வாக்) பல் துலக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டிருப்பேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

மாலிக், அஹ்மத், நஸயீ மற்றும் இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது புகாரியில் 'முஅல்லக்' தரத்திலுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

37 உஸ்மான்(ரலி) அவர்கள் உளுவிற்காகத் தண்ணீர் கேட்டார்கள். (தண்ணீர் கொடுக்கப்பட்டதும்) மூன்று முறை தம் கைகளைக் கழுவினார்கள் பின்னர் வாய் கொப்பளித்தார்கள், இன்னும் மூக்கில் தண்ணீர் செலுத்திச் சிந்தினார்கள். பின்னர் தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம்முடைய வலக்கரத்தை முழங்கை வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தம்முடைய இடக் கரத்தை அதே போன்று கழுவினார்கள். பின்னர் தம்முடைய தலைக்கு மஸஹ் செய்தார்கள். (தலையை ஈரக் கையால் தடவினார்கள்). பின்னர் தமது வலக் காலை கணுக்கால்கள் வரை மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தமது இடக் காலை அதே போன்று கழுவினார்கள். பின்னர், ''நபி(ஸல்) அவர்கள் உளு செய்வதை நான் பார்த்திருக்கின்றேன். அவர்களுடைய உளு (நான் செய்து காட்டிய) என்னுடைய இந்த உளுவைப் போன்று தான் அமைந்திருந்தது'' என்று கூறினார்கள் என ஹும்ரான் அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

38 அலீ(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களது உளுவை வர்ணிக்கையில், ''அவர்கள் தலைக்கு ஒருமுறை மஸஹ் செய்தார்கள்'' என்று கூறினார்கள்.

அபூதாவூத். திர்மிதீ மற்றும் நஸயீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திர்மிதீ மஸஹ் தொடர்பான ஹதீஸ்களில் இது மிகவும் ஸஹீஹானது என்று குறிப்பிட்டுள்ளார்.

39 நபி(ஸல்) அவர்களது உளுவைப் பற்றிக் கூறுகையில், ''நபி(ஸல்) அவர்கள் தலைக்கு மஸஹ் செய்தார்கள். அப்போது தம் இரு கைகளையும் முன்னே கொண்டு வந்து, பின்னால் கொண்டு சென்றார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு ஜைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

40 புகாரி, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், தலையின் முன் பகுதியில் இருந்து (மஸஹை) ஆரம்பம் செய்து, தம்முடைய பிடரிவரை கொண்டு சென்று, பின்னர் (மஸஹை) ஆரம்பித்த இடத்திற்குத் தமது கரங்களைக் கொண்டு வந்தார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

41 நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றிக் கூறுகையில் ''அவர்கள் தமது தலைக்கு மஸஹ் செய்தார்கள். இன்னும் தமது இரு ஆட்காட்டி விரல்களையும் காதினுள் நுழைத்து, தமது கட்டை விரல்கள் இரண்டினாலும் காதுகளின் வெளிப்பகுதியில் வைத்து மஸஹ் செய்தார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ மற்றும் இப்னு குஸைமா. இது ஸஹிஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

42 ''உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்து விட்டால், அவர் தன்னுடைய மூக்கை மூன்று முறை சிந்தட்டும். ஏனெனில், அவரின் மூக்குத் தண்டில் ஷைத்தான் இரவைக் கழிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

43 ''உங்களில் எவரேனும் தூக்கத்திலிருந்து எழுந்தால், தமது கரத்தை மூன்று முறை கழுவாத வரையில், தண்ணீருள்ள பாத்திரத்தினுள் தனது கையை நுழைக்க வேண்டாம். ஏனெனில், அவரது கை இரவை எங்கு கழித்ததென அவர் அறியமாட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம். இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

44 ''நிறைவாக உளுச் செய்யுங்கள். இன்னும் விரல்களைக் கோதிக் கழுவுங்கள். இன்னும் நோன்பாளியாக இல்லாதிருந்தால் நாசிக்கு நன்றாக நீர் செலுத்துங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு ஸபிரா(ரலி) அறிவிக்கிறார்.

அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

45 ''உளுச் செய்தால் நீ வாய்கொப்பளி'' எனும் வாசகம் அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.

46 ''நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும் போது, தமது தாடியைக் கோதிக் கழுவினார்கள்'' என உஸ்மான்(ரலி) அறிவிக்கிறார்.

திர்மிதீ, இப்னு குஸைமா. இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

47 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முத்து அளவு தண்ணீரில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் கொண்டு வந்து தரப்பட்டது. அவர்கள் (கழுவும் போது) தம் முழங்கைகளைத் தேய்க்கலானார்கள்!'' என அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவிக்கிறார்.

அஹமத், இப்னு குஸைமா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

48 நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும் போது காதுகள் மற்றும் தலைக்கு (மஸஹ் செய்ய) தனித்தனியாகத் தண்ணீர் எடுத்ததை தான் பார்த்ததாக அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ

முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில், ''நபி(ஸல்) அவர்கள் தம் கையில் மீதமிருந்த தண்ணீரை விட்டுவிட்டு வேறொரு தண்ணீரால் தம் தலைக்கு மஸஹ் செய்தார்கள்'' என்றுள்ளது.

49 ''நிச்சயமாக என்னுடைய சமுதாயம், மறுமை நாளில் உளுவின் அடையாளத்தால் கரங்கள் ஒளிர்ந்த வண்ணம் வருவார்கள். எவரால், தமது கரத்தின் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ள முடியுமோ அவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

50 ''நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணியும் போதும், தலை வாரும் போதும், உளுச் செய்யும் போது, தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்திலிருந்து ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

அபூதாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

52 ''நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும் போது தமது நெற்றி ரோமம், தலைப்பாகை மற்றும் இரண்டு காலணிகளுக்கும் மஸஹ் செய்தார்கள்'' என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

53 நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றி ஜாபிர்(ரலி) கூறுகையில், ''அல்லாஹ் எதைக் கொண்டு ஆரம்பம் செய்தானோ, அதைக் கொண்டே நீங்களும் ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அறிவிக்கிறார். நஸாயீ, முஸ்லிம்

54 ''நபி(ஸல்) அவர்கள் உளுச் செய்யும்போது தம்முடைய முழங்கைகளில் தண்ணீர் ஊற்றினார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். இது தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

55 ''(உளு செய்ய ஆரம்பிக்கும் போது) எவர் 'பிஸ்மில்லாஹ் சொல்லவில்லையோ, அவரின் உளு செல்லாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், அபூ தாவூத் இப்னுமாஜா. இது இப்னு மாஜாவில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

56 அபூ ஸயீது அல் குத்ரி(ரலி) வாயிலாக திர்மிதீயிலும் மேற்கண்ட ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இதில் ஆதாரமில்லை என்று அஹ்மத் கூறியுள்ளார்.

57 நபி(ஸல்) அவர்கள் தண்ணீரை, வாய் கொப்பாளிப்பதற்கும், நாசிக்கும் தனித்தனியாக எடுத்தார்களென தல்ஹா இப்னு முஸர்ரிஸப் தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இது அபூ தாவூதில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

58 நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றி அலி(ரலி) கூறுகையில், ''நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை (வாய் கொப்பளிக்க எடுத்த) அதே தண்ணீரைக் கொண்டே நாசியையும் சுத்தம் செய்தார்கள்'' என கூறினார். அபூதாவூத், நஸாயீ.

59 நபி(ஸல்) அவர்களின் உளுவைப் பற்றி அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) கூறுகையில், ''நபி(ஸல்) அவர்கள் உளுவுக்காகப் பாத்திரத்தினுள் தமது கையை நுழைத்தார்கள். பின்னர் ஒரு கை தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளித்து, நாசிக்கும் தண்ணீர் செலுத்தினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள்'' என்று கூறினார். புகாரி, முஸ்லிம்

60 தம் குதிங்காலில் நகத்தளவு மட்டும் தண்ணீர்படாத (வாறு உளு செய்த) ஒரு நபரைப் பார்த்து, ''திரும்பச் செல்! உன்னுடைய உளுவை நல்ல முறையில் செய்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ

61 நபி(ஸல்) அவர்கள் ஒரு 'முத்' அளவு தண்ணீரில் உளு செய்வார்கள். இன்னும் ஒரு 'ஸாவு' அளவிலிருந்து ஐந்து 'முத்' அளவு தண்ணீரில் குளிப்பார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

62 உங்களில் எவர் நிறைவாக உளு செய்த பின்னர், ''நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனது நல்லடியாராகவும், உண்மைத் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறுகிறாரோ? அவருக்கு சுவர்க்கத்தின் எட்டு வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் விரும்பிய வாயிலில் அவர் நுழைந்து கொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

''யா அல்லாஹ்! பாவமன்னிப்புக் கோருபவர்களின் , குழுவிலும், தூய்மையானவர்களின் குழுவிலும் என்னைச் சேர்ப்பாயாக!'' எனும் வாசகம் திர்மிதீயில் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



காலுறைகளில் மஸஹ் செய்வது விளக்கம்

63 நபி(ஸல்) அவர்களுடன் நானிருந்த போது, அவர்கள் உளு செய்தார்கள். அப்போது நான் அவர்களது காலுறைகளைக் கழற்ற முயன்றேன். (அதற்கு) ''அவை இரண்டையும் விட்டுவிடு. ஏனெனில், தூய்மையான நிலையில் தான் அவை இரண்டையும் நான் அணிந்துள்ளேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அவற்றின் மீது மஸஹ் செய்தார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

64 ''நபி(ஸல்) அவர்கள் காலுறையின் மேலும், கீழும் மஸஹ் செய்தார்கள்'' எனும் வாசகம் முகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்களிடமிருந்தே அபூ தாவூத் திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய மூன்றிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

65 ''மார்க்கம், அறிவை (மட்டும்) அடிப்படையாகக் கொண்டிருப்பின், காலுறைகளின் கீழ்ப்பக்கம் மஸஹ் செய்வது சிறப்பானதாய் இருந்திருக்கும். ஆனால், நான் நபி(ஸல்) அவர்களை காலுறைகளின் மேல்பக்கம் மஸஹ் செய்யக் கண்டிருக்கிறேன்'' என அலி(ரலி) கூறுகிறார்.

அபூ தாவூத். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

66 பயணத்தில், குளிப்பு கடமையானவர்களைத் தவிர்த்து, மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு மலம், ஜலம் கழித்தல் மற்றும் தூங்குதல் போன்றவற்றிற்காக எங்கள் காலுறைகளை கழற்ற வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என ஸஃப்வான் இப்னு அஸ்ஸால் (ரலி) அறிவிக்கிறார்.

நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு குஸைமா. இதில் திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. திர்மிதீயிலும் இப்னு குஸைமாவிலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

67 ''மூன்று பகலும் மூன்று இரவும் பயணிகளுக்கும், ஒரு பகல் ஒரு இரவு பயணியல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள்'' என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

68 நபி(ஸல்) அவர்கள் ஒரு சிறு படையை அனுப்பிய போது அவர்கள் தலைப்பாகைகளிலும், காலுறைகளிலும் மஸஹ் செய்து கொள்ளுமாறு அவர்களுக்குத் கட்டளையிட்டார்கள் என ஸல்பான்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

69 ''உங்களில் குளிப்புக் கடமையில்லாதவர் எவரேனும், காலுறைகள் அணிந்து கொண்டே உளுச் செய்தால் அவர் விரும்பினால் அவற்றின் மீது மஸஹ் செய்து கொண்டு, அவற்றுடனேயே தொழட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) வாயிலாக மவ்கூஃப் எனும் தரத்திலும், அனஸ்(ரலி) வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்திலும் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

70 ''மூன்று பகல் மூன்று இரவு பயணிகளுக்கும், ஒரு பகல் ஒரு இரவு பயணியல்லாதோருக்கும் காலுறைகளில் மஸஹ் செய்வதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவர்கள் அவற்றைத் தூய்மையான நிலையில் (உளுவுடன்) அணியும் போது (மட்டும்) தான் இந்தச் சலுகை என அபூ பக்ரா(ரலி) அறிவிக்கிறார்.

தாரகுத்னீ. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

71 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! காலுறைகளில் மஸஹ் செய்து கொள்ளட்டுமா?'' என்றார்கள். ''ஒரு நாள் (முழுவதும்)?'' என்று நான் கேட்டேன். ''ஆம்!'' என்றார்கள். ''இரண்டு நாட்கள்?'' என்று நான் கேட்டேன். ''ஆம்!'' என்றார்கள். ''மூன்று நாட்கள்?'' ''ஆம்! நீ விரும்பிய வரை'' என்று கூறினார்கள் என உபை இப்னு இமாரா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது பலமான ஹதீஸ் இல்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.



உளுவை முறிக்கக் கூடியவை

72 நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் தோழர்கள் இஷாத் தொழுகைக்காகக் காத்திருப்பார்கள். அப்போது (தூக்கத்தின் காரணமாக) அவர்களுடைய தலைகள் கீழே கவிழ்ந்திருக்கும். அவர்கள் (மீண்டும்) உளுச் செய்யாமல் அப்படியே தொழுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது தாரகுத்னீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.

73 ஃபாத்திமா பின்த்து அபீஹுபைஷ்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தொடர்ந்து இரத்தப்போக்குள்ள (இஸ்திஹாளா) பெண்ணாக இருக்கிறேன். நான் தூய்மை அடைவதே இல்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''கூடாது! அது மாதவிடாய் இரத்தமல்ல. ஒரு நரம்பு நோய். எனவே (வழக்கப்படி) உனக்கு மாதவிடாய் ஏற்படும் போது நீ தொழுகையை விட்டுவிடு! அது சென்றதும் இரத்தத்தைக் கழுவி விட்டுத் தொழுது கொள்!'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

74 பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உளு செய்து கொள்!'' என்று கூறியதாகவும் புகாரியில் உள்ளது.

75 நான் காம நீர் சுரக்கும் தன்மையைப் பெற்றவனாக இருந்தேன். இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாதிற்கு நான் கட்டளையிட்டேன். அவரும் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''அதற்காக உளு செய்து கட்டாயமாகும்'' என்று கூறினார்கள் என அலி(ரலி) அறிவிக்கிறார்.

புகாரி, முஸ்லிம். இங்கு புகாரியின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

76 நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிட்டு விட்டுப் பின் தொழுகைக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் (மறுபடியும்) உளுச் செய்யவில்லை'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத். இது புகாரியில் ளயீஃப் எனும் தரத்தில் புதிய செய்யப்பட்டுள்ளது.

77 ''உங்களில் எவரேனுனம் தன்னுடைய வயிற்றில் ஏதேனும் (சத்தம்) கேட்டு (காற்று) ஏதும் வெளியேறிதா, இல்லையா? எனும் சந்தேகம் அதனால் எழுந்தால், சத்தத்தைக் கேட்காத அல்லது காற்றை (வெளியேறியதாக) உணராத வரையில் (தொழுகையை முறித்து) பள்ளிவாசலை விட்டு வெளியே செல்ல வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

78 ''நான் எனது மர்ம உறுப்பைத் தொட்டு விட்டேன்'' என்றோ அல்லது, ''தொழுகையில் ஒரு மனிதர் தன் மர்ம உறுப்பைத் தொட்டுவிட்டால் அவர் உளுச் செய்ய வேண்டுமா?'' என்றோ ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''வேண்டியதில்லை; நிச்சயமாக அது உன்னுடைய (உடலின்) ஒரு சதைத் துண்டுதான்'' என்று கூறினார்கள் என தல்கிப்னு அலி(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மீதி மற்றும் இப்னு மாஜா. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 79வது ஹதீஸை விட இது அழகானது என இப்னு அல்மதீனீ குறிப்பிட்டுள்ளார்.

79 ''எவர் தனது மர்ம உறுப்பைத் தொட்டு விடுகிறாரோ அவர் உளுச் செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புஸ்ராஹ் பின்த் ஸஃப்வான் அறிவிக்கிறார்.

அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

80 ''உங்களில் எவருக்கேனும் (தொழுகையில்) வாந்தி அல்லது மூக்கில் இரத்தம் அல்லது வாயில் (வயிற்றின் உணவு) மேலாடும் உணர்வு ஏற்பட்டால், அல்லது காமநீர் வெளிப்பட்டால் அவர் திரும்பச் சென்று உளுச் செய்து கொள்ளட்டும்; இதற்கிடையில் அவர் (யாருடனும் எதுவும்) பேசாமலிருந்தால், பின்னர் அவர் தன் தொழுகையை (அப்படியே) தொடரட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

இப்னு மாஜா. இது அஹ்மதில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

81 ''நான் ஆட்டிறைச்சி உண்டதற்காக உளுச் செய்ய வேண்டுமா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீ விரும்பினால்'' என்று பதிலளித்தார்கள். ''நான் ஒட்டக இறைச்சி உண்டதற்காக உளுச் செய்ய வேண்டுமா?'' என்று அந்த மனிதர் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ''ஆம்'' என்று பதிலளித்தார்கள் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

82 ''எவர் மய்யித்(பிரேதத்)தைக் குளிப்பாட்டுகிறாரோ அவர் குளிக்கட்டும். எவர் அதைத் தூக்குகிறாரோ அவர் உளுச் செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், நஸாயீ மற்றும் திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் திர்மிதீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எந்த ஹதீஸும் ஸஹீஹ் எனும் தரத்தை அடையவில்லை என அஹ்மதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

83 அம்ர் இப்னு ஹஸ்கி(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடிதத்தில், ''தூய்மையானவர் அன்றி வேறெவரும் குர்ஆனைத் தொடவேண்டாம்'' என்று எழுதியிருந்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்.

இது மாலிக்(ரஹ்) 'முர்ஸல்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நஸாயீ மற்றும் இப்னு ஹிப்பானிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது மஃலூல் எனும் தரத்தில் உள்ளதாகும்.

84 ''நபி(ஸல்) அவர்கள் எந்நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்களாகவே இருந்தார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

முஸ்லிம். இது புகாரியில் 'முஅல்லா' எனும் தரத்தில் உள்ளது.

85 நபி(ஸல்) அவர்கள், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டார்கள் பின் (மீண்டும்) உளுச் செய்யாமல் தொழுதார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

தாரகுத்னீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

86 ''மலவாய்க்கு முடிச்சு கண்ணாகும். கண்கள் இரண்டும் தூங்கி விட்டால், முடிச்சு அவிழ்ந்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், தப்ரானீ

87 இந்த ஹதீஸில் அதிகப்படியாக, ''தூங்கி விட்டவர் (செய்த உளு முறிந்து விடும். ஆகவே அவர் மீண்டும் உளு செய்து கொள்ளட்டும்'' எனும் வாசகம் முஆவியா (ரலி) வாயிலாகவே அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது. அலி(ரலி) வாயிலாகவும் இவ்வாறே பதிவாகியள்ளது. மேற்கண்ட இரண்டு அறிவிப்பும் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

88 ''எவர் படுத்துத் தூங்கி விடுகிறாரோ, அவர் மீதே உளு கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அபூதாவூத் முன்கர் என்று குறிப்பிட்டுள்ளார்.

89 ''உங்களில் ஒருவர் தொழுகையில் இருக்கும் போது அவரிடம் (ஷைத்தான்) வந்து அவருடைய ஆசனப் பகுதியில் ஊதுகிறான். எனவே அவர் தனக்கு உளு (முறியாத நிலையிலும்) முறிந்து விட்டதாக எண்ணுகிறார். இவ்வாறு (உங்களில் எவருக்கேனும்) நிகழ்ந்தாலும், அவர் சத்தத்தைக் கேட்காத, அல்லது வாடையை உணராத வரையில் (தொழுகையை விட்டு) திரும்ப வேண்டாம்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். பஜ்ஜார்.

90 இது (89ம் எண் ஹதீஸ்) அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) வாயிலாக புகாரி மற்றும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

91 இங்கு 89வது ஹதீஸ் போன்றே அபூஹுரைரா(ரலி) வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

92 ''உங்களில் எவரிடமேனும் ஷைத்தான் வந்து (சந்தேகத்தைக் கிளப்பி), ''உனக்கு உளு முறிந்து விட்டது'' என்று கூறினால், ''நீ பொய் சொல்லிவிட்டாய்'' என்று அவர் கூறட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் (ரலி) அறிவிக்கிறார்.

ஹாகிம். மேலும் இப்னு ஹிப்பானில் ''அவர் தன்னுடைய மனதினுள் கூறிக் கொள்ளட்டும்'' எனும் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது.



மலம், சிறுநீர் கழிக்கும் ஒழுங்குகள்

93 நபி(ஸல்), அவர்கள் மலங் கழிக்கச் சென்றால், தமது மோதிரத்தை (கழற்றி) வைத்து விடுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸயீ, திர்மீதி, மற்றும் இப்னு மாஜா. இது மஃலூஸ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

94 நபி(ஸல்) அவர்கள், மலங்கழிக்கச் செல்லும் போது, ''யா அல்லாஹ்! (ஜின்களிலுள்ள) தீய ஆண் வர்க்கத்தை விட்டும், தீய பெண் வர்க்கத்தை விட்டும் உன்னிடம் காவல் தேடுகிறேன்!'' என்று கூறுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸாயீ மற்றும் அஹ்மத்.

95 நபி(ஸல்), அவர்கள், மலஜலம் கழிக்கச் செல்கையில், நானும் என் போன்ற மற்றொரு சிறுவரும் (தோலால் செய்யப்பட்ட) தண்ணீர் பாத்திரத்தையும், (அடியில் இரும்பு ஒட்டப்பட்ட) சிறுபாத்திரத்தையும் தூக்கிக் கொண்டு செல்வோம். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

96 நபி(ஸல்) அவர்கள், என்னைத் தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, என்னுடைய பார்வைபடாத தூரம் வரை சென்றார்கள். பின்னர் தன்னுடைய சுயதேவையை நிறைவேற்றிக் கொண்டார்கள் என, முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

97 ''மக்களுடைய வழியிலும், அவர்கள் (தங்கும் மர) நிழலிலும், மலம், ஜலம் கழிப்பதால் ஏற்படும் இரு சாபங்களை அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்.

98 ''நீருற்று, பொதுவழி, மற்றும் நிழலில், மலஜலம் கழிப்பதால் ஏற்படும் மூன்று சாபங்களையும் அஞ்சிக் கொள்ளுங்கள்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத்(ரலி) அறிவிக்கிறார். என்று அபூதாவூதில் அதிகப்படியாக உள்ளது.

99 ''அல்லது தண்ணீர் தேங்கும் இடங்களில்'' என்பது இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இரண்டும் 'ளயீஃப் எனும் தரத்தில் உள்ளவையாகும்.

100 ''கனி தரக் கூடிய மரங்களுக்குக் கீழும், ஓடிக் கொண்டிருக்கும் நதியின் கரையிலும் மலஜலம் கழிப்பதை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

தப்ரானீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

101 ''இரண்டு நபர்கள் மலஜலம் கழிக்கச் சென்றால், ஒருவரை ஒருவர் காணாதவாறு மறைத்துக் கொள்ளட்டும். அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் பேச வேண்டாம். ஏனெனில், இவ்வாறு பேசுவதால் அல்லாஹ் கோபமடைகின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் என ஜாபிர்(ரழி)அறிவிக்கிறார்.

அஹ்மத். இது இப்னுஸ் ஸகன் மற்றும் இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது மஃலூஸ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

102 ''உங்களில் எவரேனும் சிறுநீர் கழிக்கும் போது, தனது உறுப்பை வலக் கரத்தால் பிடித்துக் கொள்ள வேண்டாம். மேலும் மலஜலம் கழித்து விட்டுத் தனது வலக்கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம். இன்னும் பாத்திரத்தில் (தண்ணீர் பருகும் போது அதனுள்) மூச்சு விட வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூகதாதா(ரலி) அறிவிக்கிறார்.

புகாரி, முஸ்லிம். இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

103 நாங்கள் மலஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவதையும் (பின்னோக்குவதையும்), வலக் கரத்தால் (உறுப்பைப் பிடித்துக் கொண்டு) சுத்தம் செய்வதையும், மூன்று கற்களுக்கும் குறைவானதைக் கொண்டு (மலஜலம் கழித்து விட்டு) சுத்தம் செய்வதையும், விட்டை(சாணம்) மற்றும் எலும்பைக் கொண்டு சுத்தம் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என ஸல்மான்(ரழி) அறிவிக்கிறார். முஸ்லிம்

104 ''மலம், ஜலம் கழிக்கும் போது நீங்கள் கிப்லாவை, முன்னோக்கவோ, பின்னோக்கவோ செய்யாதீர்கள். மாறாக நீங்கள் கிழக்கிலோ, மேற்கிலோ (கஅபாவை முன்னோக்காத திசையில்) திரும்பிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ அய்யூப்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.

105 ''எவர் மலஜலம் கழிக்கச் செல்கிறாரோ, அவர் தன்னை மறைத்துக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்

106 நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழித்து விட்டு வரும் போது, ''(யா அல்லாஹ்!) நான் உனது மன்னிப்பை வேண்டுகிறேன்'' என்று கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.

அபூஹாத்திம், ஹாகிம் இருவரும் இதை ஸஹீஹ் தரத்திலுள்ளது என அறிவித்துள்ளனர்.

107 நபி(ஸல்) அவர்கள் மலஜலம் கழிக்கச் சென்ற போது மூன்று கற்களைக் கொண்டு வருமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். எனக்கு இரண்டு கற்கள் மட்டுமே கிடைத்தன. மூன்றாவது கல் கிடைக்கவில்லை. எனவே காய்ந்த ஒரு விட்டைத் துண்டையும் கொண்டு வந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த இரண்டு கற்களையும் எடுத்துக் கொண்டு, சாணத்தை விட்டு விட்டார்கள். மேலும், ''இது அசுத்தமானது'' என்று கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

இதைத் தவிர்த்து வேறொன்றைக் கொண்டு வா!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அஹ்மத் மற்றும் தாரகுத்னீயில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

108 எலும்பு மற்றும் விட்டையைக் கொண்டு (மலஜலம் கழித்து விட்டு) சுத்தம் செய்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். மேலும், ''நிச்சயமாக அவை இரண்டும் தூய்மைப்படுத்தாது'' என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

109 ''சிறுநீர் கழித்து விட்டு சுத்தம் செய்யாமல் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், மண்ணறை வேதனைகளில் பெரும்பாலனவை அதன் காரணத்தால் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னி.

110 ''மண்ணறையில் கிடைக்கும் தண்டனைகளில் பெரும்பாலனவை சிறுநீர் (கழித்து சுத்தம் செய்யாததால்) தான் ஏற்படுகின்றன'' எனும் வாசகத்தோடு ஸஹீஹ் எனும் தரத்தில் ஹாகிமில் பதிவாகியள்ளது.

111 ''நாங்கள் மலம் கழிக்கையில் இடக்காலில் அமர்ந்து கொண்டு, வலக் காலை நிற்க வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்'' சுராக்கா பின் மாலிக்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

112 ''உங்களில் எவரேனும் சிறுநீர் கழித்தால், அவர் தனது உறுப்பை (இடக்கரத்தால்) மூன்று முறை அழுத்தவும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஈசா இப்னு யஸ்தாத் தன் தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

113 ''அல்லாஹ் உங்களைப் புகழ்கிறானே (என்ன காரணம்?)'' என்று குபா வாசிகளிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், ''நாங்கள் (மலஜலம் கழித்துவிட்டு) கல்லைக் கொண்டு சுத்தம் செய்தபின், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறோம்'' என்று பதிலளித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார்.

இது புஜ்ஜாரில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் இது அபூ தாவூதிலும் இடம் பெற்றுள்ளது.

114 கல்லைப் பற்றி குறிப்பிடாமல் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ், இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



குளிப்பு மற்றும் குளிப்பு கடமையானவர்களுக்காக சட்டம்
115 ''இந்திரியம் வெளிப்படுவதால் குளிப்பு கடமையாகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

116 ''உங்களில் எவரேனும் (உங்கள் மனைவியரின் இரு கைகள், இரு கால்களான) நான்கு கிளைகளுக்கு மத்தில் அமர்ந்து விட்டு, பின்னர் இயங்கி (உடலுறவு கொண்டு) விட்டால் அவர் மீது குளிப்பு கடமையாகி விடுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

117 ''நீர் வெளிப்படாவிட்டாலும்'' எனும் வாசகம் முஸ்லிமில் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

118 ஆண்கள் கனவில் காண்பதைப் போன்றே, பெண்கள் தங்கள் கனவில் காண்பதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது ''அவள் குளிக்க வேண்டும்'' என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

119 ''இப்படியும் ஆகுமா?'' என்று உம்மு ஸலமா (வியப்பாகக்) கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள் ''ஆம்! அப்படி இல்லை என்றால் எப்படி சாயல் (தாயைக் போன்று) உண்டாகும்?'' என்றார்கள் என்ற வாசகமும் முஸ்லிமில் அதிகப்படியாக காணப்படுகிறது.

120 நபி(ஸல்) அவர்கள் பெருந்துடக்கின் காரணத்தாலும் வெள்ளிக் கிழமையன்றும், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டதற்காகவும், மய்யித்தைக் குளிப்பாட்டிய காரணத்தாலும் ஆக, நான்கு காரியங்களுக்காகக் குளித்து வந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்

இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

121 சுமாமா இப்னு உஸால் அவர்களைப் பற்றிக் கூறுகையில், ''அவர் இஸ்லாத்தை ஏற்ற போது நபி(ஸல்) அவர்கள் குளிக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம் மற்றும் அப்துர்ரஸ்ஸாக்

122 ''வெள்ளிக் கிழமையன்று குளிப்பது பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அஹ்மத், இப்னு மாஜா, நஸாயீ, திர்மிதீ மற்றும் அபூ தாவூத்

123 ''எவர் வெள்ளிக்கிழமையன்று உளுச் செய்கிறாரோ, அவர் சிறப்பான காரியத்தைச் செய்தார். எவர் அன்று குளித்து விடுகிறாரோ அவர் அதைவிட சிறப்பான காரியம் செய்தார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸமுரா இப்ன ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், நஸாயீ, அபூ தாவூத், திர்மிதி மற்றும் இப்னு மாஜா. இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

124 ''நபி(ஸல்) அவர்கள் குளிப்பு கடமையல்லாத காலங்களில் எங்களுக்கு குர்ஆன் கற்றுக் கொடுப்பார்கள்'' என அலி(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத் நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

இங்கு திர்மிதீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இதை திர்மிதீ ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்துள்ளார். இப்னு ஹிப்பான் இதை ஹஸன் தரத்தில் உள்ளது எனக் கருதுகின்றார்.

125 ''உங்களில் ஒருவர் மனைவியிடம் சென்று (உடலுறவு கொண்டு) விட்டு, பின்னர் மீண்டும் (உடலுறவு கொள்ள) விரும்பினால் அவர் அவ்விரண்டிற்குமிடையே உளுச் செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

126 ''ஏனெனில், மீண்டும் உளுச் செய்வதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது'' எனும் வாசகம் ஹாகிமில் அதிகப் படியாக இடம் பெற்றுள்ளது.

127 நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தண்ணீரை (கையால்) தொடாமலேயே தூங்கி விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. இது மஃலூல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

128 நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்க ஆரம்பித்தால், தம்முடைய கரங்களைக் கழுவுவார்கள். பின்னர் தமது வலக் கரத்தால் இடக் கரத்தின் மீது தண்ணீர் ஊற்றி, தம்முடைய மர்ம உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் உளுச் செய்வார்கள். பின்னர் தண்ணீரை எடுத்துத் தம்முடைய கை விரல்களை (தலை) முடியின் அடிப்பகுதியில் நுழைத்து (கோதி), தமது தலை மீது தண்ணீரை மூன்றுமுறை இரண்டு கைகளையும் கூடி அள்ளி ஊற்றுவார்கள். பிறகு உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் கொள்வார்கள். பின்னர் தமது இரண்டு கால்களையும் கழுவுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

129 புகாரி, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் மைமூனா (ரலி) வாயிலாக, ''பின்னர், அவர்கள் தம்முடையய மர்ம உறுப்பின் மீது தண்ணீர் ஊற்றி அதைத் தம் இடக் கரத்தால் கழுவுவார்கள். பின்னர் அதை (இடக் கரத்தை) தரையில் தேய்த்துக் கழுவுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

130 புகாரி, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ''தரையில் கையைத் துடைத்தார்கள்'' என்றும் அதன் இறுதியில் அவர்களிடம் நான் கைக்குட்டையைக் கொண்டு சென்றேன். அதை அவர்கள் மறுத்து விட்டு, தம்முடைய கரத்தால் தண்ணீரை உதறினார்கள்'' என்றுள்ளது.

131 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் (முடி அதிகம் உள்ளவளாக இருப்பதால்) என் தலை முடியினைக் கட்டிக் கொள்கிறேன். குளிப்புக் கடமையாகி நான் குளிக்கும் போது என்னுடைய முடியை அவிழ்க்க வேண்டுமா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், ''(வேண்டியது) இல்லை. மூன்று முறை உன் தலையில் தண்ணீர் ஊற்றினால் போதுமானது'' என்று கூறினார்கள் என உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார். முஸ்லிம்

மற்றோர் அறிவிப்பின்படி ''மாதவிடாய் குளிப்பிற்கும் என்னுடைய முடியை அவிழ்க்க வேண்டுமா?'' என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.

132 ''குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் பெண்களும், பள்ளிக்கு வருவதை நான் அனுமதிக்க மாட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

133 ''நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் (ஒரே நேரத்தில்) கடமையான குளிப்பை குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் மாறிமாறி (பாத்திரத்தில்) போய் வந்து கொண்டிருந்தன'' என ஆயியஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

''எங்கள் கைகள் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டுமிருந்தன'' எனும் வாசகம் இப்னு ஹிப்பானில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

134 ''நிச்சயமாக ஒவ்வொரு முடியின் அடிப்பாகமும், குளிப்புக்கடமையானதாக உள்ளது. எனவே முடியை (நன்றாகக்) கழுவிக் கொள்ளுங்கள். இன்னும் மேனியை (உடலை) நன்றாகச் சுத்தம் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

135 ஆயிஷா(ரலி) வாயிலாக அஹ்மதிலும் இது போன்ற ஹதீஸ் இடம் பெறுகிறது. ஆனால், அங்கு அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் ஒருவர் யாரென்றே அறியப்படவில்லை.



தயம்மும்

136 ''எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து (அருட் கொடைகள்) போன்று எனக்கு முன்னர் எவருக்கும் கொடுக்கப்படவில்லை. இன்னும் பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும், தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டு விட்டது. ஒருவர் தொழுகை நேரம் எங்கு வந்துவிட்டாலும் தொழுது கொள்ளலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) அஹ்மத் பைஹகீ

137 ''நமக்குத் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில், அதன் மண் நமக்குத் தூய்மையான தாக்கப்பட்டுள்ளது'' எனும் வாசகம் ஹுதைஃபா(ரலி) வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

138 ''(பூமியின்) மண் எனக்காகத் தூய்மையாக்கப்பட்டுள்ளது'' எனும் வாசகம் அலி(ரலி) வாயிலாக அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

139 என்னை நபி(ஸல்) அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் அனுப்பி இருந்தார்கள். அப்போது எனக்குக் குளிப்புக் கடமையாயிற்று. எனவே கால்நடைகள் மண்ணில் படுத்துப் புரளுவது போன்று நான் மண்ணில் படுத்துப் புரண்டேன். பின்னர் நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று. நடந்ததைக் கூறினேன். (அதற்கவர்கள்) ''நீ உனது கைகளை இவ்வாறு செய்திருந்தாலே போதுமானது'' என்று கூறி, பின்னர் தம் இரு கைகளையும் பூமியில் ஒரேயொருமுறை அடித்தார்கள் பின்னர் மணிக்கட்டு வரையிலான வலக்கரத்தின் மீது இடக் கரத்தால் துடைத்தார்கள். தம் இரு கரங்களின் வெளிப்பக்கத்தையும் தமது முகத்தையும் மஸஹ் செய்தார்கள் என்று அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

140 புகாரியின் மற்றோர் அறிவிப்பில் தமது உள்ளங்கையை பூமியில் அடித்தார்கள். இன்னும் அதில் ஊதினார்கள். பின்னர் தமது முகத்தையும், இரு கைகளையும் மஸஹ் செய்தார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

141 ''தயம்மும் என்பது இரண்டு அடிகளாகும். (அவற்றில்) ஒன்று முகத்திற்கும் மற்றொன்று முழங்கை வரையில் இரண்டு கரங்களுக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ. இது மவ்கூஃப் எனும் தரம் பெற்றதாகும்.

142 ''பத்து வருடங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ஒரு முஸ்லிமிற்குத் தூய்மையான மண் உளுவாகும். ஆனால், தண்ணீர் கிடைக்கும் போது, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும்! அவன் தன் மேனியைத் தண்ணீர் தீண்டச் செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.

பஜ்ஜார். இது இப்னுன கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்திலும், தாரகுத்னீயில் முர்ஸல் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

143 மேற்கண்ட ஹதீஸ் அபூதர்(ரலி) வாயிலாக திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

144 இரண்டு நபர்கள் பயணித்தவர்கள்: தொழுகையின் நேரம் வந்துவிட்டது. ஆனால் அவர்களிடம் (உளுவிற்கான) தண்ணீர் இல்லை. எனவே அவர்கள் தூய்மையான மண்ணில் தயம்மும் செய்தார்கள். பின்னர் தொழுதார்கள். பின்னர் அந்த (தொழுகையின்) நேரத்திற்குள் இருவருக்கும் தண்ணீர் கிடைத்து விட்டது. ஒருவர் உளு (செய்து) உடன் (தன்னுடைய தொழுகையை) மீண்டும் தொழுதார். மற்றவர் மீண்டும் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, நடந்ததை விவரித்தனர். மீண்டும் தொழாமலிருந்து விட்டவரை நோக்கி, ''நீயே சுன்னத்தை நிலை நிறுத்திவிட்டாய்! உனக்கு உன்னுடைய தொழுகை போதுமானது'' என்றும் (மீண்டும் தொழுத) மற்றவரை நோக்கி ''உனக்கு இருமுறை நன்மை உண்டு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார்.

145 ''நீங்கள் பயணத்திலிருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தாலோ'' என்று தொடங்கும் குர்ஆனின் அந்த (4:43) வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் விளக்கமளிக்கையில், ''ஒருவர் அல்லாஹ்வுடைய பாதையில் (போரில்) காயப்பட்டு பின் அவருக்குக் குளிப்புக் கடமையாகி தண்ணீர் ஊற்றுவதால் மரணமேற்படும் என தயம்மும் செய்து கொள்ளலாம்'' என விளக்கமளித்தார்கள்.

இது தாரகுத்னீயில் மவ்கூஃப் எனும் தரத்திலும், பஸ்ஸாரில் மர்ஃபூஃ எனும் தரத்திலும், இப்னு குஸைமா மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

146 என்னுடைய மணிக்கட்டுக்கை உடைந்திருந்தது. நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு, அதன் மருந்துக்கட்டின் மீது மஸஹ் செய்யுமாறு எனக்கு அலி(ரலி) அறிவிக்கிறார்.

இதை இப்னு மாஜா மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடருடன் அறிவித்துள்ளார்.

147 தலை உடைக்கப்பட்டிருந்த ஒருவர் குளித்து இறந்து போனார். (நபி(ஸல்) அவர்கள் அவரைப் பற்றிக் கூறுகையில்), ''அவர் தனது காயத்திற்கு கட்டுக்கட்டி, அதன் மீது மஸஹ் செய்து, உடல் முழுவதும் மட்டும் குளித்துவிட்டிருந்தாலே போதுமானதாம் இருக்கும்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத். இதன் அறிவிப்பாளர்களைப் பற்றிய கருத்து வேறுபாட்டினால் இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

148 ஒருவர் ஒரு தயம்முமை கொண்டு ஒரு தொழுகையைத் தொழுவதே. சுன்னத்தாகும். பின்னர் மறு தொழுகைக்கும் தயம்மும் செய்து கொள்ள வேண்டும் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

தாரகுத்னீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



மாதவிடாய்

149 ஃபாத்திமா பின்து அபீ ஹுபைஷ் அவர்களுக்கு தொடர் உதிரப்போக்கு இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்கள் அவரிடம், ''மாதவிடாய் இரத்தம் கறுப்பாக இருப்பதைக் கொண்டு அறியப்படும். உனக்கு அது ஏற்பட்டால் தொழுகையை விட்டு விடு. அதுவல்லாத மற்றேதும் (இரத்தம்) ஏற்படுமாயின் உளுச் செய்து தொழுது கொள்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், நஸாயீ. இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹாதிம் இதை முன்கர் எனக் கருதுகிறார்.

150 மஞ்சள் நிற நீரைப் பார்த்தால் லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்கு ஒரு முறை குளித்துக் கொள்! மேலும் மக்ரிப் மற்றும் இஷாவிற்கு, ஒரு முறையும் குளித்துக் கொள்! இன்னும் இதற்கிடையில் உளுச் செய்து கொள்! எனும் நபி(ஸல்) அவர்களின் சொல் அஸ்மா பின்த் உமைஸ் வாயிலாக அபூ தாவூதில் இடம் பெற்றுள்ளது.

151 எனக்கு அடிக்கடி கடுமையான தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நான் (இது பற்றி) சட்டம் கேட்க நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். ''நிச்சயமாக அது ஷைத்தானின் வேலைகளில் ஒன்றாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! நீ தூய்மையாகி விட்டால், இருபத்தி நான்கு அல்லது இருபத்தி மூன்று நாட்கள் தொழுது கொள்! நோன்பும் நோற்றுக் கொள்! நிச்சயமாக இது உனக்குப் போதுமானதாகிவிடும். (மற்ற) பெண்கள் எவ்வாறு மாதவிடாய்க் காலத்தைக் கழிக்கின்றார்களோ, அதுபோன்று ஒவ்வொரு மாதமும் செய்து கொள்! லுஹரைப் பிற்படுத்தியும் அஸரை முற்படுத்தியும் தொழ உன்னால் முடியுமானால், நீ தூய்மையடையும் போது குளித்துவிட்டு, லுஹரையும் அஸரையும் (ஒன்றாக இணைத்துத்) தொழுது கொள். பின்னர் மக்ரிபைப் பிற்படுத்தி; இஷாவை முற்படுத்தி குளித்து விட்டு இரண்டையும் சேர்த்துத் தொழுது கொள்! பின்னர் ஃபஜ்ருடைய தொழுகையை குளித்து விட்டுத் தொழுது கொள்! இவை இரண்டிலும் இது எனக்கு மிகவும் பிடித்தமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹம்னா பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத்

இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்திலும் புகாரியின் ஹஸன் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

152 உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் (தொடர்ந்து) உதிரப் போக்கு ஏற்படுவதைப் பற்றி முறையிட்டார்கள். அதற்கு, ''உனக்கு (மாதவிடாய்) இரத்தம் நிற்கும் வரை தொழுகையை நிறுத்திக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துக் கொண்டிருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

153 உம்மு ஹபீபா பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் ''நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உளுச் செய்து கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புகாரியின் மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

154 ''நாங்கள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்த பின் மண்ணின் நிறம் மற்றும் மஞ்சள் நிற (இரத்த)த்தைக் கணக்கில் கொள்ள மாட்டோம்'' என்று உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார்.

புகாரி, அபூ தாவூத். இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

155 ''நிச்சயமாக யூதர்கள் மாதவிடாயான பெண்களுடன் (சேர்ந்து) உண்ண மாட்டார்கள். நீங்கள் உடலுறவைத் தவிர்த்து (விரும்பியதை) எல்லாம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

156 நான் மாதவிடாயாக இருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் என் கீழ் அங்கியைக் கட்டச் சொல்வார்கள். நான் கட்டிக் கொள்வேன். பின்னர் என்னுடைய உடலோடு (தம்மைப்) பிணைத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

157 தன்னுடைய மனைவி மாதவிடாயாக இருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வோரைப் பற்றிக் கூறுகையில், ''அவர் ஒரு தீனார் அல்லது அர தீனார் தர்மம் செய்யட்டும்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

அஹ்மத், திர்மிதீ, அபூ தாவூத், நஸாயீ, இப்னு மாஜா. இது ஹாகிம் மற்றும் இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

158 ''பெண்ணுக்கு மாதவிடாய் வந்து விட்டால் அவள் தொழுவதுமில்லை மற்றும் அவள் நோன்பு நோற்பதுமில்லை அல்லவா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்

159 நாங்கள் ஸாரிஃப எனும் இடத்தை அடைந்ததும், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. ''நீ தூய்மையாகும் வரை தவாஃப்பை (பைத்துல்லாஹ்வை வலம் வருவதைத்) தவிர்த்து ஹாஜிகள் செய்கின்ற மற்ற அனைத்தையும் செய்து கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸின சுருக்கம்) புகாரி, முஸ்லிம்.

160 ''தனது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது ஓர் ஆணுக்கு (இல்லறத்தில்) எதை இஸ்லாம் அனுமதித்துள்ளது?'' என்று நான் கேட்டதற்கு, ''ஆடைக்கு மேல் அனைத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

161 ''நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் (நிஃபாஸ் என்னும்) பிரசவ கால உதிரப்போக்குக்குப் பின்னர் நாற்பது நாட்கள் தனித்திருப்பார்கள்'' என உம்மு ஸலமா(ரழி) அறிவிக்கிறார்.

அபூ தாவூத், அஹ்மத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

162 அபூ தாவூதின் மற்றோர் அறிவிப்பில், நபி(ஸல்) அவர்கள் நிஃபாஸுடைய காலத்தில் விட்டுவிட்ட தொழுகையை களாச் செய்யுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை என்பதும் இடம் பெறுகிறது. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post