அத்தியாயம் 65/4 திருக்குர்ஆன் விளக்கவுரை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 65

 திருக்குர்ஆன் விளக்கவுரை 4739 - 4847

(21) 'அல்அன்பியா' அத்தியாயம்1

பகுதி 1

4739. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் உள்ளவையாகும். 2

கத்தாதா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுஃதாதன்' எனும் சொல்லுக்குத் 'துண்டு துண்டாக்கினார்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபலக்' எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) 'நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதன்னுடையன் நீள்வட்டப்பாதையில் நீந்திச் செல்கின்றன)'' என்று கூறினார்கள். 'யஸ்பஹூன்' எனும் சொல்லுக்குச் 'சுற்றுகின்றன' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஃபஷத்' எனும் சொல்லுக்கு 'மேய்ந்தது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:43 வது வசனத்தின் மூலத்திலள்ள 'வலா ஹும் மின்னா) யுஸ்ஹபூன்' எனும் சொல்லுக்கு '(எம்முடைய வேதனையிலிருந்து) அவர்கள் தடுக்கப்படமாட்டார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:92 வது வசனத்திலுள்ள) 'நீங்கள் யாவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே' என்பதற்கு 'நீங்கள் யாவரும் ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே' என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:98 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹஸப்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் 'விறகு' என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 21:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஹஸ்ஸூ' (உணர்ந்தனர்) எனும் சொல்லுக்கு 'அதை எதிர்பார்த்தனர்' என்று பொருள். இச்சொல் 'அஹஸஸ்த்து (இஹ்ஸாஸன்)' எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (இதற்கு 'ஐம்புலன்களால் உணர்ந்தேன்' என்று பொருள்.)

(திருக்குர்ஆன் 21:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காமிதீன்' எனும் சொல்லுக்கு 'அணைந்து போனவர்கள்' என்று பொருள். 'ஹஸீத்' எனும் சொல்லுக்கு 'வேரோடு அறுவடை செய்யப்பட்டது' என்று பொருள். 'ஹஸீத்' எனும் சொல்லுக்கு 'வேரோடு அறுவடை செய்யப்பட்டது' என்று பொருள். இச்சொல்லே ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்று நிலைகளுக்கும் பொருந்தும்.

(திருக்குர்ஆன் 21:19 வது வசனத்திலுள்ள) 'அவர்கள் சோர்வடையமாட்டார்கள்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'லா யஸ்தஸ்ஹிரூன்' எனும் சொல்லுக்குரியதாகும். 'ஹஸீர்' (சோர்வடைந்தவன்), 'ஹஸர்த்து பஈரீ' (என் ஒட்டகத்தைக் களைப்படையச் செய்தேன்) ஆகிய சொற்கள் இதில் அடங்கும்.

(அடுத்த அத்தியாயத்தில் வரும் 22;27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அமீக்' எனும் சொல்லுக்குத் 'தொலைவு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:65 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நும்சூ' எனும் சொல்லுக்கு 'அவர்கள் மீண்டும் (இறைமறுப்பின் பக்கமே) திருப்பப்பட்டனர்' என்று பொருள். (இச்சொல்லுக்கு 'வெட்கத்தால் தலை குனிந்தனர்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 21:80 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஸன் அத்த லபூஸ்' எனும் சொல்லுக்குக் 'கவசங்கள் தயாரிப்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:93 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகத்தஊ அம்ர்ஹும்' எனும் வாக்கியத்திற்குத் 'தங்களின் (மார்க்க) விஷயங்களில் பிளவுபட்டனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:102 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஹஸீஸ்' எனும் சொல்லும் அல்ஹிஸ்ஸு, அல்ஜர்ஸ், அல்ஹம்ஸ் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவையாகும். இவற்றுக்கு 'மெல்லிய சபதம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:109 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆஃதன்த்துகும்' எனும் சொல்லுக்கு 'உங்களுக்கு நான் அறிவித்துவிட்டேன்' என்று பொருள். (இதைப் போன்றே 41:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆஃதன்னாக்க' எனும் சொல்லுக்கு 'உமக்கு நாங்கள் அறிவிக்கிறோம்' என்று பொருள். 'ஒளிவு மறைவின்றி நீயும் எதிராளியும் சம நிலையில் இருக்கும் வகையில் போர்ப் பிரகடனம் செய்வதை'' இது (திருக்குர்ஆன் 21:109 வது வசனம்) குறிக்கும்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லஅல்லக்கும் துஸ்அலூன்' எனும் சொற்றொடருக்கு 'நீங்கள் (மற்றவர்களால்) புரிந்துக் கொள்ளப்படலாம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இர்தளா' எனும் சொல்லுக்கு 'அவன் விரும்பினான்' ('ரளிய') என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:65 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நும்சூ' எனும் சொல்லுக்கு 'அவர்கள் மீண்டும் (இறைமறுப்பின் பக்கமே) திருப்பப்பட்டனர்' என்று பொருள். (இச்சொல்லுக்கு 'வெட்கத்தால் தலை குனிந்தனர்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 21:80 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஸன்அத்த லபூஸ்' எனும் சொல்லுக்குக் 'கவசங்கள் தயாரிப்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸன்அத்த லபூஸ்' எனும் சொல்லுக்குக் 'கவசங்கள் தயாரிப்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:93 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகத்தஊ அம்ர்ஹும்' எனும் வாக்கியத்திற்குத் 'தங்களின் (மார்க்க) விஷயங்களில் பிளவுபட்டனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:102 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஹஸீஸ்' எனும் சொல்லும் அல்ஹிஸ்ஸு, அல்ஜர்ஸ், அல்ஹம்ஸ் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவையாகும். இவற்றுக்கு 'மெல்லிய சப்தம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:109 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆஃதன்த்துகும்' எனும் சொல்லுக்கு 'உங்களுக்கு நான் அறிவித்துவிட்டேன்' என்று பொருள். (இதைப் போன்றே 41:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆஃதன்னாக்க' எனும் சொல்லுக்கு 'உமக்கு நாங்கள் அறிவிக்கிறோம்' என்று பொருள். 'ஒளிவு மறைவின்றி நீயும் எதிராளியும் சம நிலையில் இருக்கும் வகையில் போர்ப் பிரகடனம் செய்வதை'' இது (திருக்குர்ஆன் 02:109 வது வசனம்) குறிக்கும்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 21:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லஅல்லக்கும் துஸ்அலூன்' எனும் சொற்றொடருக்கு 'நீங்கள் (மற்றவர்களால்) புரிந்துக் கொள்ளப்படலாம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இர்தளா' எனும் சொல்லுக்கு 'அவன் விரும்பினான்' ('ரளிய') என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்தமாஸீல்' எனும் சொல்லுக்குச் 'சிலைகள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 21:104 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸிஜில்லு' எனும் சொல்லுக்கு 'ஏடு' என்று பொருள்.

பகுதி 2

முதலில் (அவர்களை) நாம் படைத்தது போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும் (எனும் 21:104 வது வசனத் தொடர்).

4740. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, '(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் (செருப்பணியாத) வெறுங்காலுடையவர்களாக, உடையணியாதவர்களாக, 'விருத்த சேதனம்' செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்'' என்று கூறிவிட்டு, 'முதலில் நாம் (அவர்களைப்) படைத்தது போன்றே (மறுமை நாளில்) நாம் அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்முடைய வாக்குறுதியாகும். நாம் இதனைச் செய்தே தீருவோம்'' எனும் (திருக்குர்ஆன் 21:104 வது) இறைவசனத்தை ஓதினார்கள். பிறகு, மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள் தாம். அறிந்து கொள்ளுங்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டு செல்லப்படுவர். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்று சொல்வேன். அதற்கு, 'இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப் பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது'' என்று சொல்லப்படும். அப்போது நான், நல்லடியார் ஈசா(அலை) அவர்கள் சொன்னதைப் போல் 'நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்தவரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகி விட்டாய்'' என்று பதிலளிப்பேன். அதற்கு, 'இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிலிருந்து இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தம் மார்க்கத்திலிருந்து விலகிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்'' என்று கூறப்படும். 3

(22) 'அல்ஹஜ்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..)

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 22:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்முக்பித்தீன்' எனும் சொல்லுக்கு '(எல்லா நிலைகளிலும் இறைவிதியின் மீது) 'நிம்மதிகொள்வோர்', 'திருப்தியடைவோர்' என்று பொருள் (இதற்கு இசைவான வேறு பல பொருள்களும் இச்சொல்லுக்கு உண்டு.)

''(நபியே! உமக்குமுன் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதருடைய நபியுடையவும் விருப்பத்தில் ஷைத்தான் குழப்பத்தை உண்டுபண்ண முயலாது இருந்ததில்லை'' எனும் (திருக்குர்ஆன் 22:52 வது) வசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: நபியவர்கள் பேசினால், அவர்களின் பேச்சினூடே ஷைத்தான் (நுழைந்து) குழப்பத்தை விளைவிப்பான். உடனே, அல்லாஹ் ஷைத்தான் விளைவிக்கும் குழப்பங்களை முறியடித்து, தன் வசனங்களை நிலைநிறுத்திவிடுவான். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'உம்னிய்யத்' எனும் சொல்லுக்கு 'ஓதல்' என்று பொருள் எனக்கூறப்படுகிறது. (திருக்குர்ஆன் 02:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அமானிய்யு' என்னும் சொல்லுக்கு 'ஓதுவார்கள்: ஆனால் எழுதமாட்டார்கள்' என்று பொருள் (கொள்ளப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்).

முஜாஹித்(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 22:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'கஸ்ரின்) மஷீத்' எனும் சொல்லுக்குக் 'கரையினால் உறுதியாக்கப்பட்ட (எத்தனையோ மாடமாளிகைகள்)'' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 22:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஸ்த்தூன' எனும் சொல்லுக்கு 'எல்லை மீறி (அடக்கு முறையை அவிழ்த்து) விடுவர்' என்று பொருள். இச்சொல் 'சத்வத்' (அடக்கியாளுதல்) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ('யஸ்த்தூன' எனும்) இச்சொல்லுக்கு 'பாய்ந்தது (தாக்கி) விடுவார்கள்' என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

'பரிசுத்தமான வாக்கியத்தின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது' எனும் (திருக்குர்ஆன் 22:24 வது) வசனத்திற்குப் 'பரிசுத்தமான வாக்கியம் அவர்களின் உள்ளுணர்வில் வைக்கப்பட்டது' என்று பொருள்.

(இதே வசனத்திலுள்ள) 'மிக்க புகழுக்குரிய பாதை' என்பது இஸ்லாமாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 22:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பி ஸபபின் இலஸ் ஸமாயி' எனும் சொற்றொடருக்கு 'வீட்டின் கூரையில் ஒரு கயிற்றைக் கட்டி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 22:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஃத்ஹலு' எனும் சொல்லுக்கு 'மறக்கடிக்கப்படுவாள்' என்று பொருள்.

பகுதி 1

மேலும், (மறுமை நாளில்) மக்களை போதையுற்றோராய்க் காண்பீர். (உண்மையில்) அவர்கள் போதையில் இருக்கமாட்டார்கள். ஆயினும், (அந்த அளவு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும் (எனும் 22:2 வது வசனத் தொடர்.)

4741. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) 'ஆதமே!' என்பான். அதற்கு அவர்கள், 'என் இறைவா! இதோ வந்து விட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்'' என்று கூறுவார்கள். அப்போது 'நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடுகிறான்'' என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவர், 'ஒவ்வோர் ஆயிரம் போரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)'' என்று பதிலளிப்பார். இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயரங்க சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரை குறையாகப்) பிரசவித்துவிடுவாள்; பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், (அந்த அளவிற்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்.''

நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்களின் முகங்கள் நிறம் மாறிவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள்'' என்று கூறிவிட்டு பிறகு, 'நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்' அல்லது 'கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போன்றுதான்' (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்'' என்று கூறினார்கள். பின்னர் '(என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மம்ழ்ச்சியூட்டும் இந்த நற்செய்தி கேட்டு) 'அல்லாஹு அக்பர்'' (அல்லாஹ் மிகப் பெரிவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்களில், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒருபங்கினராக இருக்கவேண்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) 'அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம். பிறகு நபியவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்கவேண்டும்'' என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) 'அல்லாஹு அக்பர்'' என்று கூறினோம்.

இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) இவ்வாறே காணப்படுகிறது.

ஜாரீர் இப்னு அப்தில் ஹமீத், ஈசா இப்னு யூனுஸ், அபூ முஆவியா(ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (இந்த 22:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'சுகாரா' எனும் சொல்லுக்கு பதிலாக) 'சக்ரா' என்று காணப்படுகிறது. (பொருள் ஒன்றே).

பகுதி2

மேலும், மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக்கொண்டு மன நிறைவுகொள்கிறார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலைகீழாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் இம்மையையும் இழந்துவிட்டார்கள்; மறுமையையும் இழந்துவிட்டார்கள். இதுதான் பகிரங்கமான நஷ்டமாகும் (எனும் 22:11, 12ஆகிய இறைவசனங்கள்.)

(முதல் வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹர்ஃப்' (விளிம்பு) என்பதற்குச் 'சந்தேகம்' என்பது நோக்கப் பொருளாகும்.

(அடுத்த அத்தியாயத்தில் 23:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்ரஃப்னாஹும்' என்பதற்கு 'ஆடம்பரமான வாழ்க்கையை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம்' என்று பொருள்.

4742. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

''விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிற சிலரும் மக்களிடையே உள்ளனர்'' எனும் (திருக்குர்ஆன் 22:11 வது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகையில், 'சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, 'இது (-இஸ்லாம்-) நல்ல மார்க்கம்'' என்று கூறுவார்கள். அவர்களின் மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லையென்றால், 'இது கெட்ட மார்க்கம்'' என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)'' என்று கூறினார்கள்.

பகுதி 3

''இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' எனும் (திருக்குர்ஆன் 22:19 வது) வசனத்தொடர்.

4743. கைஸ் இப்னு உபாதா(ரஹ்) அறிவித்தார்

அபூ தர்(ரலி) 'இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 22:19 வது) வசனம், பத்ருப் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களின் இரண்டு நண்பர்கள் (அலீ, உபைதா) விஷயத்திலும், (இறைமறுப்பாளர்களான) உத்பா மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் (ஷைபா, வலீத்) விஷயத்திலுமே அருளப்பெற்றது'' எனச் சத்தியமிட்டுக் கூறி வந்தார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.3

4744. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்

(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.

அறிவிப்பாளர் கைஸ் இப்னு உபாத்(ரஹ்) கூறினார்: இவர்களைக் குறித்தே, 'இவர்கள் தங்களின் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்கித்துக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்'' எனும் (திருக்குர்ஆன் 22:19 வது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ருப்போரின்போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம்களான) அலீ, ஹம்ஸா, உபைதா(ரலி) ஆகியோரும் (மறுப்போரான) ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா ஆகியோரும் ஆவர். 4

(23) 'அல்முஃமினூன்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 23:17 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சப்உ தராயிக்' (ஏழு அடுக்குகள்) என்பதற்கு 'ஏழு வானங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:61 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'சாபிகூன்' (ஒருவரையொருவர் முந்திக் கொள்பவர்கள்) என்பதற்கு '(அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு நற்கதி முந்திவிட்டிருக்கிறது. (எனவே, அவர்கள் நன்மையான காரியங்களில் போட்டியிட்டு ஒருவரையொருவர் முந்துகின்றனர்)'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:60 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வஜிலத் குலூபுஹும்' எனும் சொற்றொடருக்கு 'அஞ்சுபவர்கள்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 23:36 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹய்ஹாத்த, ஹய்ஹாத்த' எனும் சொற்றொடருக்கு 'வெகுதூரம், வெகுதூரம்' (அசாத்தியம்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:113 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஆத்தீன்' (கணக்கு வைத்திருப்பவர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 23:74 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல நாக்கிபூன்' எனும் சொல்லுக்குப் 'புறக்கணித்தவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:104 வது வசனத்திலுள்ள) 'முகம் விகாரமானவர்கள்' எனும் பொருள் மூலத்திலுள்ள) 'காலிஹுன்' எனும் சொல்லுக்குரியதாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 23:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சுலாலத்' ('சத்து') என்பதில் (மனிதனிலிருந்து பிரியும்) விந்தும், (அதிலிருந்து உருவாகும்) குழந்தையும் அடங்கும்.2

(திருக்குர்ஆன் 23:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜின்னத்' எனும் சொல்லும், 'அல்ஜுனூன்' எனும் சொல்லும் ('பைத்தியம்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 23:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகுஸாஃ' எனும் சொல்லும், 'அல்ஜுனூன்' எனும் சொல்லும் நுரை மற்றும் பயனற்ற குப்பை கூளங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:65 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஜ்அரூன்' எனும் சொல்லுக்கு 'மாடு போன்று கத்துவார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:66 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அலா அஉகாபிக்கும்' எனும் சொல்லுக்குப் 'புறங்காட்டி (வந்த வழியே) சென்றான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 23:67 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சாமிர்' (நிலவொளியில் இராக்கதை பேசுபவர்) எனும் சொல் 'சமர்' எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். பன்மை: சுமார், சாமிர் எனும் இச்சொல் இந்த வசனத்தில் பன்மையின் இடத்தில் ஆளப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 23:89 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துஸ்ஹரூன்' எனும் சொல்லுக்கு' அறிவை இழந்து விட்டிருக்கிறீர்கள்'' என்ற பொருள். இச்சொல் 'சிஹ்ர்' (சூனியம்) எனும் மூலச் சொல்லிலிருந்து தோன்றியதாகும்.

(24) 'அந்நூர் அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(திருக்குர்ஆன் 24:43 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மின் கிலாலிஹி' (அதற்கிடையிலிருந்து) என்பதற்கு 'அடுக்கடுக்கான மேகங்களுக்கிடையேயிருந்தது' என்று கருத்து.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'சனா பர்கிஹி' எனும் சொல்லுக்கு '(மின்) ஒளி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 24:49 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஃத்இனீன்' எனும் சொல்லுக்குப் 'பணிந்தவர்களாக என்று பொருள்.

(திருக்குர்ஆன் 24:61 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷ்த்தாத்' எனும் சொல்லும் 'ஷத்தா', 'ஷதாத்', 'ஷத்து' எனும் சொற்களும் ('தனித் தனியானவை' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 24:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சூரத்துன் அன்ஸல்னாஹா' எனும் சொற்றொடருக்கு 'நாமே இதனை (இறக்கி)த் தெளிவுபடுத்தினோம்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்:

பல அத்தியாயங்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதனால் தான் குர்ஆனுக்கு 'குர்ஆன்' (ஒன்று சேர்க்கப்பட்டது) என்று பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயத்திற்கு 'சூரா' (பிரிக்கப்பட்டது) என்று பெயரிடப்படக் காரணம், ஓர் அத்தியாயத்திலிருந்து மற்றோர் அத்தியாயம் தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதேயாகும். (தனித் தனியாகப் பிரிக்கப்பட்ட அத்தியாயங்களில்) ஒன்றை ஒன்றோடு சேர்த்தபோது குர்ஆனுக்கு 'திருக்குர்ஆன்' (ஒன்று சேர்க்கப்பட்டது) என்று பெயர் வழங்கப்பட்டது.

ஸஅத் இப்னு இயாள் அஸ்ஸுமாலீ(ரஹ்) கூறினார். 2

(திருக்குர்ஆன் 24:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மிஷ்காத்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் 'மாடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 75:17 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ குர் அனஹு' எனும் சொல்லுக்கு 'அதில் ஒன்றை மற்றொன்றுடன் சேர்ப்பது' என்று பொருள். (திருக்குர்ஆன் 75:18 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஇதா கரஃனாஹு' எனும் சொற்றொடருக்கு, 'அதனை நாம் ஒருங்கிணைந்து ஒன்று சேர்த்தால்' என்று பொருள். 'ஃபத்தபிஉகுர்ஆனஹு' எனும் வாக்கியத்திற்கு' அதில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதன்படி செயலாற்று; (அதாவது) அல்லாஹ் உனக்கிட்டுள்ள கட்டளைப்படி செயலாற்று; அவன் தடை விதித்துள்ளனவற்றைவிட்டும் விலகியிரு!'' என்று பொருள்.

''அவனுடைய கவிதையில் 'குர்ஆன்' இல்லை'' என்றால், 'ஒருங்கிணைப்பு' இல்லை என்று பொருள். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பாகுபடுத்திக்காட்டுவதனால் தான் (குர்ஆனுக்கு) ஃபுர்கான் (பாகுபடுத்தக்கூடியது) என்று பெயர் வந்தது.

''ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்க்கவில்லை'' என்பதைக் குறிக்க 'மா கர அத்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

(திருக்குர்ஆன் 24:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஃபரள்னாஹா' என்னும் சொல் மற்றோர் ஓதலில் 'ஃபர்ரள்னாஹா' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'ஃபர்ரள்னாஹா' எனும் சொல்லுக்கு 'இதில் நாம் பல்வேறு விதமான விதிகளை அருளியுள்ளோம்' என்று பொருள். (அதே சொல்லை) 'ஃபரள்னாஹா' என்று ஓதியவர்கள்', 'உங்களுக்கும் விதியாக்கினோம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் விதியாக்கினோம்' என்று (பொருள்) கூறுகிறார்கள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபரள்னாஹா' என்னும் சொல் மற்றோர் ஓதலில் 'ஃபரள்னாஹா' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'ஃபரள்னாஹா' எனும் சொல்லுக்கு 'இதில் நாம் பல்வேறு விதமான விதிகளை அருளியுள்ளோம்' என்று பொருள். (அதே சொல்லை) 'ஃபரள்னாஹா' என்று ஓதியவர்கள், 'உங்களுக்கும் விதியாக்கினோம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் விதியாக்கினோம்' என்று (பொருள்) கூறுகிறார்கள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 24:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவித் திஃப்லில்லஃதீன லம் யழஹரு அலா அவ்ராத்தின்னிஸா' எனும் சொற்றொடர், வயது சிறியதாயிருப்பதானால் பெண்களின் மறைவான உறுப்புகள் குறித்து அறிந்திராத சிறுவர்களைக் குறிக்கிறது.

ஷஅபீ (ரஹ்) கூறினார்:

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகைரி உலில் இர்பத்' எனும் சொல், பெண் தேவையற்ற (வயோதிகர்கள், பாலுணர்வற்றவர்கள் போன்ற) ஆண்களைக் குறிக்கிறது.

முஜாஹித்(ரஹ்), 'தம் வயிற்றைக் குறித்த எண்ணத்தைத் தவிர (உணவைத் தவிர) வேறு எண்ணம் வராத (இவனால் பெண்களுக்குப் பாலியல் தொல்லை ஏதும் நேருமோ என்று பெண்களின் விஷயத்தில் அஞ்சப்படாத ஆணைக் குறிக்கும்' எனக் கூறுகிறார்கள்.

தாவூஸ்(ரலி) கூறினார்:

பெண் வேட்கையற்ற வெகுளியே 'ஃகைரு உலில் இர்பத்' ஆவான்.

பகுதி 1

''யார் தம் மனைவியர் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாக தாம் (தம் குற்றச்சாட்டில்) உண்மையாளர் தாம் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கவேண்டும்'' எனும் (திருக்குர்ஆன் 24:6 வது) இறைவசனம்.

4745. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

'பனூ அஜ்லான்' குலத்தாரின் தலைவராயிருந்த ஆஸிம் இப்னு அதீ(ரலி) அவர்களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) 'உவைமிர்' என்பவர்3 வந்து 'தன் மனைவியுடன் வேறொரு அன்னிய ஆடவன் (தகாத உறவுகொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அன்னிய ஆடவனைக் கொன்று விடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழி வாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள்'' என்று கூறினார். எனவே, ஆஸிம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே!'' என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார்). நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் என்று ஆஸிம்(ரலி) அவர்களிடம் உவைமிர்(ரலி) கேட்க, அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்பவில்லை; மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அசிங்கமாகக் கருதுகிறார்கள்'' என்று பதில் கூறினார்கள். உடனே உவைமிர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன்'' என்று கூறிவிட்டு, நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அன்னிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டார்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் உம்முடைய விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான்'' என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள ('லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள். 4 அவ்வாறே, தம் மனைவி மீது (குற்றம் சாட்டி) உவைமிர்(ரலி) 'லிஆன்' செய்தார்கள். பிறகு 'இறைத்தூதர் அவர்களே! நான் இவளை (விவாகரத்துச் செய்யாமல் என் மனைவியாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' என்று கூறிவிட்டு, அவளை விவாகரத்துச் செய்துவிட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப் பின் 'லிஆன்' செய்யும் கணவன் மனைவியருக்கு முன் மாதிரியாகிவிட்டது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கண் பாவையும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே, கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசியதாகவே நான் கருதுவேன்'' என்று கூறினார்கள். பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே ('இன்னவளின் மகன்' என்று) அழைக்கப்படலாயிற்று.

பகுதி 2

மேலும், ஐந்தாவது முறை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் 'அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும்!' என்று கூறவேண்டும் (எனும் 24:7 வது இறைவசனம்).

4746. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டார். அப்போது அல்லாஹ் அந்தக் கணவன் மனைவி தொடர்பாகக் குர்ஆனில் தான் கூறியுள்ள 'லிஆன்' எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், 'உம்முடைய விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் 'லிஆன்' செய்தார்கள். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே 'லிஆன்' செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்து வைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது. அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை ('தனக்குரியது' என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டு வந்தான். பிறகு, அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகிற வாரிசுரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

பகுதி 3

(தன் மீது தன்னுடைய கணவன் சுமத்திய குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) அவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டும் அகற்றி விடும் (எனும் 24:8 வது இறைவசனம்.)

4747. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஹிலால் இப்னு உமய்யா(ரலி) (கர்ப்பவதியான) தம் மனைவியை 'ஷாரீக் இப்னு சஹ்மா' என்பவருடன் இணைத்து (இருவருக்குமிடையே தகாத உறவு இருப்பதாகக்) குற்றம் சாட்டினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(உன்) ஆதாரத்தைக் கொண்டு வா! இல்லையென்றால், உன் முதுகில் கசையடி கொடுக்கப்படும்'' என்று கூறினார்கள். அதற்கு ஹிலால்(ரலி), 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! நான் உண்மையே சொல்கிறேன். என்னுடைய முதுகைக் கசையடிலிருந்து காப்பாற்றும் செய்தியை அல்லாஹ் நிச்சயம் அருள்வான்'' என்று கூறினார்கள். உடனே (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி, நபி(ஸல்) அவர்களுக்கு 'யார் தம் துணைவியர் மீது அவதூறு கூறி'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:6-9) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.5

நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து ஹிலால்(ரலி) அவர்களின் மனைவிக்கு ஆளனுப்பினார்கள். (இதற்கிடையே) ஹிலால்(ரலி) அவர்களும் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை) சத்தியம் செய்து சாட்சியமளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தன்னுடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகிறவர் யார்?' என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால்(ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார். ஐந்தாம் முறையாக (சாப அழைப்புப் பிரமாணம்) செய்யச் சென்றபோது மக்கள் அவரை நிறுத்தி 'இது (பொய்யான சத்தியமாயிருந்தால் இறை தண்டனையை) உறுதிப்படுத்திவிடும். (எனவே, நன்கு யோசித்துச் செய்!)'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி சற்றே தாமதித்து, பிரமாணம் செய்யத் தயங்கினார். நாங்கள் அவர் தம் பிரமாணத்திலிருந்து பின்வாங்கிவிடுவார் என்றே எண்ணினோம். ஆனால், பிறகு அவர், 'காலமெல்லாம் என் சமுதாயத்தாரை நான் இழிவுக்குள்ளாக்கப் போவதில்லை'' என்று கூறி (சாப அழைப்புப் பிரமாணத்தைச்) செய்துமுடித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இவளைக் கவனித்து வாருங்கள். இவள் காரிய விழிகளும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையைப் பெற்றெடுத்தால், அது 'ஷாரீக் இப்னு சஹ்மா'வுக்கே உரியதாகும்'' என்று கூறினார்கள். அப்பெண் நபியவர்கள் வர்ணித்தவாறே குழந்தை பெற்றெடுத்தார். இதையறிந்த நபி(ஸல்) அவர்கள், 'இது பற்றிய இறைச்சட்டம் ('லிஆன்' விதி) மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அவளைக் கடுமையாகத் தண்டித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

பகுதி 4

''ஐந்தாவது முறை, 'அவன் (தன்னுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக' என்று அவள் சாட்சியம் அளிக்கவேண்டும்' எனும் (திருக்குர்ஆன் 24:9 வது) இறைவசனம்.

4748. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் ஒருவர் (உவைமிர்) தம் மனைவியின் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி அவளுடைய குழந்தையை (தன்னுடையதாக) ஏற்க மறுத்தார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் ('சாப அழைப்புப் பிரமாணம்' செய்திடுமாறு) உத்தரவிட்டார்கள். அவர்களும் (குர்ஆனில்) அல்லாஹ் கூறியுள்ள முறைப்படி ('லிஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். பிறகு, நபி(ஸல்) அவர்கள் 'குழந்தை அப்பெண்ணிற்குரியது'' என்று தீர்ப்பளித்து, 'லிஆன்' செய்த (கணவன், மனைவி) இருவரையும் (மண பந்தத்திலிருந்து) பிரித்துவைத்தார்கள்.

பகுதி 5

''அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம். அதை உங்களுக்குத் தீங்காகக் கருதாதீர்கள். அது உங்களுக்கு நன்மையானதே! (அவதூறு கற்பித்த) அவர்களில் ஒவ்வொருவருக்கும், அவர் சம்பாதித்த பாவம் உண்டு. அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு'' எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள 'இஃப்க்' என்னும் சொல்லின் மிகைச் சொல்லான) 'அஃப்பாக்' எனும் சொல்லுக்கு 'மகா பொய்யன்' (பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்) என்று பொருள்.

4749. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''அதில் அதிகப் பங்குபெற்ற (அவர்களின் தலை)வனுக்கு மிகப்பெரும் வேதனையுண்டு'' எனும் (திருக்குர்ஆன் 24:11 வது) இறைவசனம், (நயவஞ்சகர்களின் தலைவன்) 'அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல்' என்பானைக் குறிக்கிறது.

பகுதி 6

''நீங்கள் இதனைச் செவியுற்றபோதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி நல்லெண்ணம் கொண்டு, இது ஓர் 'அப்பட்டமான அவதூறு' என்று கூறியிருக்கவேண்டாமா? அவர்கள் (தங்களின் குற்றச்சாட்டை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்கவேண்டாமா? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடம் அவர்களே பொய்யர்கள் ஆவர்'' (எனும் 24:12,13 ஆகிய வசனங்கள்.)

4750. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

என்னிடம் உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா இப்னி மஸ்வூத்(ரஹ்) ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா(ரலி) தூய்மையானவர்களென்று இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் மற்றவரின் அறிவிப்பு அமைந்திருந்தது.

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) தெரிவித்ததாக உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

இவ்வாறே அவர்கள் தம் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். (இது பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா எனும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். (அப்பயணத்தின்போது) நான் என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன். அதில் நான் இருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கவும்படுவேன்.

நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக்கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன்.

அப்போது (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) 'ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து(விழுந்து)விட்டது. எனவே, நான் (திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக்கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக்கட்டிவிட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்கு சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோது அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக வேறு இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்தபடி) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல்போன) என்னுடைய மாலை கிடைத்துவிட்டது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்.) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் என்னுடைய இடத்தில் அமர்ந்திருக்க என் கண்ணில் உறக்கம் மேலிட்டு விட நான் தூங்கிவிட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் (தவறவிடப்பட்ட பொருள்களைத் தேடுவதற்காக) வந்து சேர்ந்தார்.

அவர் (அங்கே) தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். எனவே, என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்க முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார்.

அவர் என்னை அறிந்துகொண்டு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில்) விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்' என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை (தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை நடத்திச் செல்லலானார்.

இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கிவிட்ட பின்னர் நாங்கள் அவர்களை வந்தடைந்தோம். இப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு(ப் பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து ஒரு மாதகாலம் நான் நோயுற்று விட்டேன்.

மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது.

நான் நோயுறும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகிற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்த போது) அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு 'எப்படி இருக்கிறாய்' என்று கேட்பார்கள். பிறகு திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான். (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டு வந்த) அந்தத் தீய சொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்கு முன்) எனக்குத் தெரியாது.

நோயிலிருந்து குணமடைந்த பின் நானும் என்னுடன் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' (எனப்படும் புறநகர் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களின் இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அப்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூ ருஹ்கி இப்னு முத்தலிப்) பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ராயித்தா) பின்த் ஸகர் இப்னு ஆமிர்தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அப்பாத் இப்னு முத்தலிப்) ஆவார்.

(இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என்னுடைய வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன்னுடைய ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப்போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?' என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர் என்ன கூறினார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கேட்டார். 'என்ன கூறினார்?' என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என்னுடைய நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அப்போது நான் 'என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?' என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள அப்போது விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்து(சேர்ந்)தேன்.

என் தாயாரிடம், 'அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொண்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுப்படுத்திக்கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்'' என்று கூறினார்.

உடனே நான், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!'' என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு காலை வரை நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.

(இதற்கிடையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு - தாற்காலிமாக) நின்று போயிருந்தது.

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களோ நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதையும் நபி(ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார் மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் துணைவியரிடமும் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று அப்போது உஸாமா கூறினார்கள்.

அலீ அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக) 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண் (பாரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள்.

எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பாரீராவை அழைத்து, 'பாரீராவே! (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பாரீரா, 'தங்களைச் சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியேவிட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார். (வீட்டிலுள்ள) ஆடுவந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விபரமும்) வயது(ம்) குறைந்த இளம்பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.

அன்றைய தினம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலுக்கு எதிராக உதவி கோரி எழுந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடையில் (மிம்பரில்) இருந்தவாறு 'முஸ்லிம் மக்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவிபுரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பிய நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போது தான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார். (தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.

உடனே (பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த) ஸஅத் இப்னு முஆத் அல் அன்சாரி(ரலி) எழுந்து நின்று, 'இறைத்தூதர் அவர்களே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனுடைய கழுத்தைத் துண்டித்துவிடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்'' என்று கூறினார்கள்.

உடனே ஸஅத் இப்னு உபாதா எழுந்தார். இவர் கஸ்ரஜ் குலத்தில் தலைவராவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆயினும், குலமாச்சர்யம் அவரை உசுப்பிவிடவே, அவர் ஸஅத் இப்னு முஆத் அவர்களைப் பார்த்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்! அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியாது'' என்று கூறினார்.

உடனே உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். அவர் ஸஅத் இப்னு உபாதா அவர்களிடம் 'நீர்தாம் தவறாகப் பேசினீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். எனவேதான் நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்!'' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை மேடைமீது நின்றுகொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அப்படியே இருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகே இருந்தார்கள். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) தூக்கம் என்னைத் தழுவாமலும் கண்ணீர் ஓயாமலும் அழுதுவிட்டிருந்தேன். என் ஈரல் பிளந்து விடுமோ என்று என் பெற்றோர் எண்ணிக்கொண்டிருந்தனர்.

நான் அழுது கொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்து கொண்டிருந்தபோது, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் (உள்ளேவர) அனுமதி கேட்டாள். நான் அவர்களுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்துகொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருக்கையில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு, அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும்) அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி, இறைவனைப் புகழ்ந்துவிட்டு, 'ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருக்கால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு! ஏனெனில், அடியான் தன்னுடைய பாவத்தை ஒப்புக்கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக்கோரினால், அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பேச்சை முடித்தபோது என்னுடைய கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை.

அப்போது நான் என் தந்தையார் (அபூ பக்ர்(ரலி)) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதற்கு பதில் கூறுங்கள்!'' என்று சொன்னேன். அதற்கு என் தந்தையார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு பதில் கூறுங்கள்!'' என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு நான், 'நானோ வயது குறைந்த இளம் பெண் குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இச்செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய் அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக அறிவேன். எனவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - அதை நீங்கள் நம்பப் போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப்(அலை) அவர்களின் தந்தை (நபி யாகூப் - அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோரவேண்டும் (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினேன். பிறகு (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும் மேலும், அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகிற வஹீயை (வேத அறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகிற ஒன்றைச் சொல்கிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது (குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே அவர்களுக்கு (வேத அறிவிப்பு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரமநிலை அவர்களைப் பற்றிக் கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து வேர்வைத் துளிகள் சிறு முத்துகளைப் போல் வழியத் தொடங்கிவிட்டன. அவர்களின் மீது அருளப்பட்ட இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியுடன்) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை 'ஆயிஷா! மாண்பும் மகத்துவமுமிக்க அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான்'' என்பதாகவே இருந்தது.

உடனே என் தாயார் 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்!'' என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான் 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்லமாட்டேன். மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்வையே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்து)வேன்'' என்று சொன்னேன்.

(அப்போது) அல்லாஹ், 'அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலை தொடர்பாக அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர் சித்தீக்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து மிஸ்தஹ் (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக, அபூ பக்ர்(ரலி) செலவிட்டுவந்தார்கள். அப்போது அல்லாஹ் 'உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான்.

அபூ பக்ர்(ரலி), 'ஆம்'' அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்'' என்றும் கூறினார்கள்.

(குர்ஆனில் என்னுடைய கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷா குறித்து) என்ன 'அறிந்திருக்கிறாய்?' அல்லது 'பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்கிறேன். ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்'' என்று கூறினார்கள். ஸைனப் அவர்கள்தாம் நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவரின் சகோதரி ஹம்னா (என்னுடன்) மோதிக் கொள்ளலானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்து போனார். 6

பகுதி 7

''உங்களின் மீது இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய அன்பும் இல்லாதிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தால், எந்த விஷயத்தில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் விளைவாக, உங்களுக்குப் பெரும் வேதனை நேர்ந்திருக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 24:14 வது இறைவசனம்)

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 24:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தலக்கவ்னஹு' (அதை எடுத்துக்கொண்டிருந்தீர்கள்) என்பதற்கு 'உங்களில் சிலர் சிலருக்கு அறிவித்துக்கொண்டிருந்தீர்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 25:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அஃபளத்தும்' எனும் சொல்லின் எதிர்கால வினைச்சொல்லும் 10:61 வது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) 'துஃபீளுன்' என்பதன் பொருள் 'நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தீர்கள்' என்பதாகும்.

4751. ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான்(ரலி) அறிவித்தார்

தம் மீது அவதூறு கூறப்பட்டபோது (அதைக் கேள்விப்பட்ட) ஆயிஷா மூர்ச்சையடைந்து கீழே விழுந்துவிட்டார்.7

பகுதி 8

இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவற்றைச் செய்துகொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்றுச் சிந்தியுங்கள்! நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதி விட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடம் அதுவோ, மிகப் பெரி விஷயமாய் இருந்தது (எனும் 24:15 வது இறைவசனம்).

4752. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 24:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'இஃத் தலக்கவ்னஹு' (உங்கள் நாவுகளால் பரப்பிக்கொண்டிருந்த நேரத்தை) எனும் பதத்தை) ஆயிஷா(ரலி) 'இஃத் தலிகூனஹு' (நீங்கள் பொய் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தை) என்று ஓதுவதை செவியுற்றேன். 8

பகுதி 9

நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே 'இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதன்று; சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!'' என்று நீங்கள் கூறியிருக்கவேண்டாமா? (எனும் 24:16 வது இறைவசனம்.)

4753. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) இறப்பதற்கு முன், (இறப்பின் துன்பத்தால்) அவதிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் (அவர்களைச் சந்திக்க) இப்னு அப்பாஸ்(ரலி) அனுமதி கோரினார்கள். ஆயிஷா(ரலி) 'என்னை அவர் புகழ்ந்து பேசி விடுவாரோ என அஞ்சுகிறேன்'' என்றார்கள். அப்போது '(வந்திருப்பவர்) நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் புதல்வரும் முஸ்லிம்களில் முக்கியமானவரும் ஆவார்'' என்று சொல்லப்பட்டது. உடனே ஆயிஷா(ரலி), 'அவரை (உள்ளே வர) அனுமதியுங்கள்'' என்று கூறினார்கள். (அன்னார் உங்ளே வந்ததும்,) 'உங்களுக்குத் தற்போது எப்படியுள்ளது?' என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'நான் அல்லாஹ்வை அஞ்சி நடந்திருந்தால் நலத்துடனேயிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), 'அல்லாஹ் நாடினால் நலத்துடனேயே இருப்பீர்கள். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களைத் தவிர வேறெந்தக் கன்னிப் பெண்ணையும் மணக்கவில்லை. நீங்கள் நிரபராதி எனும் செய்தி வானத்திலிருந்து (வேத அறிவிப்பாகவே) இறங்கிற்று'' என்று (புகழ்ந்து) கூறினார்கள். (அவர்கள் சென்றவுடன்) அவர்களுக்குப் பின்னாலேயே இப்னு ஸுபைர்(ரலி) வந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி), 'இப்னு அப்பாஸ் (என்னிடம்) வந்து என்னைப் புகழ்ந்தார். நான் முற்றாக மறக்கப்பட்டுவிட்ட (சாதாரணமான)வளாக இருந்திருக்க வேண்டும் என விரும்பினேன்'' என்று கூறினார்கள்.

4754. காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) கூறினார்

இப்னு அப்பாஸ்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் வர அனுமதி கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

காசிம்(ரஹ்) மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அறிவித்தார்கள். அவர்கள் தம் அறிவிப்பில், 'மறக்கப்பட்டுவிட்டவளாக' என்பதைக் கூறவில்லை.

பகுதி 10

''நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்க அறிவுறுத்துகிறான்'' எனும் (திருக்குர்ஆன் 24:17 வது) இறைவசனம்.

4755. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

ஆயிஷா(ரலி) (மரணப் படுக்கையில் இருந்தபோது) தம்மைச் சந்திக்க (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் அனுமதி கோரியதாக (என்னிடம்) கூறினார்கள். அப்போது நான் '(அவதூறு பரப்புவதில் பங்கெடுத்துக் கொண்ட) இவருக்கா அனுமதி அளிக்கிறிர்கள்?' என்று கேட்டேன். ஆயிஷா(ரலி) 'அவருக்குப் பெரும் வேதனை ஏற்பட்டுவிட்டதல்லவா?' என்று கூறினார்கள். 'ஹஸ்ஸான்(ரலி) (கடைசி காலத்தில்) கண்பார்வை இழந்துவிட்டதையே ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள்'' என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.

''நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்'' என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி அவர்களைப்ப பற்றி) குறிப்பிடுகிறார்கள்'' என சுஃப்யான்(ரஹ்) கூறினார்.

''நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர். (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்'' என்று ஹஸ்ஸான்(ரலி) (ஆயிஷா(ரலி) அவர்களைக் குறித்து கவிதை) பாடினார்கள். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி), 'ஆனால், நீங்கள் 9அத்தகையவரல்லர். அவதூறு பரப்பியவர்களுடன் சேர்ந்து கொண்டவர்தாம் நீங்கள்)'' என்று கூறினார்கள். 9

பகுதி 11

(இவ்வாறு) அல்லாஹ தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆவான் (எனும் 24:18 வது இறைவசனம்).

4756. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) ஆயிஷா(ரலி) அவர்களிடம் (அவர்கள் மரணப்படுக்கையில் இருந்போது) வந்து, 'நீங்கள் பத்தினி; அறிவாளி; சந்தேகத்திற்கப்பாற்பட்டவர்; (அவதூறு பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்துவிடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்'' என்று அவர்களைப் புகழ்ந்து கவிதை பாடினார்கள். ஆயிஷா(ரலி) '(ஹஸ்ஸானே!) நீங்கள் அப்படியில்லையே!'' என்று கூறினார்கள். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், 'இவரைப் போன்றவர்களை நீங்கள் உங்களிடம் வர விடுகிறீர்களா? அல்லாஹ்வோ 'இந்த அவதூறுப் பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தவர்களுக்குப் பெரும் வேதனை உண்டு'' என்று (திருக்குர்ஆன் 24:11 வது வசனத்தில்) கூறுகிறானே!'' என்று சொன்னேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'குருடாவதைவிடப் பெரி தண்டனை வேறெது?' என்று கேட்டுவிட்டு, 'அவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சார்பாக (அவர்களின் மீது வசைக் கவிதை பாடிய எதிரிகளுக்குக் கவிதை மூலமே) பதிலடி கொடுத்துவந்தார்'' என்று கூறினார்கள். 10

பகுதி 12

இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான்; நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்வின் அருளும் அவனுடைய அன்பும் உங்களின் மீது இல்லாதிருந்து, அல்லாஹ் மிகுந்த பாரிவும் கருணையும் கொண்டவனாய் இல்லாமலுமிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் (எனும் 24:19, 20 ஆகிய இறைவசனங்கள்.)

(திருக்குர்ஆன் 24:19 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'தஷீஅ' எனும் சொல்லுக்கு 'வெளிப்படுவது' என்று பொருள்.

''உங்களில் செல்வமும் தயாளகுணமும் உள்ளவர்கள் (தங்களின்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு வருத்தம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து விட்டுவிடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு அளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனும் ஆவான்'' (எனும் 24:22 வது இறைவசனம்.)

4757. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என் தொடர்பாக அவதூறு பேசப்பட்டபோது எனக்கு இன்னும் அது தெரிந்திராத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தொடர்பாக உரையாற்றிட எழுந்து நின்றார்கள். ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வைத் தக்கபடி போற்றிவிட்டு, 'என் மனைவியின் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களின் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடம் எந்தத் தீயொழுக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய பண்பையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறு எந்தச் சமயத்திலும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியில் சென்றால் அவரும் என்னுடனேயே இருப்பார்'' என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து, 'அவர்களின் கழுத்தைச் சீவுவதற்கு என்னை அனுமதியுங்கள் இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். 'கஸ்ரஜ்' குலத்தாரிடையேயிருந்து ஒருவர் எழுந்து, 'பொய் சொன்னீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் (அவதூறு கற்பித்தவர்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தால், அவர்களின் கழுத்துச் சீவப்படுவதை நீர் விரும்பமாட்டீர்'' என்று கூறினார். 'ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் தாயார் அந்த மனிதரின் குலத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். (அவர்களிடையே வாக்குவாதம் எந்த அளவுக்கு முற்றிவிட்டதென்றால்) 'அவ்ஸ்' குலத்தாருக்கும் 'கஸ்ரஜ்' குலத்தாருக்குமிடையே பள்ளிவாசலிலேயே குழப்பமும், கைகலப்பும் மூண்டுவிடப்பார்த்து. (இவற்றில் எதுவுமே) எனக்குத் தெரியாது.

அன்று மாலை நான் (இயற்கைத்) தேவைக்காக உம்மு மிஸ்தஹ் என்பாருடன் புறப்பட்டேன். (வழியில்) அவரின் கால் (அவரின் கம்பளி அங்கியால்) இடறியது. அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான், 'என் அன்னையே! உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?' என்று கேட்டேன். அவர் மௌனமாயிருந்தார். பிறகு இரண்டாவது முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான், 'உங்கள் புதல்வரையா திட்டுகிறீர்கள்?' என்று கேட்டேன். பின்னர், மூன்றாம் முறையாக அவரின் கால் இடறியது. அப்போதும் அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று கூறினார். நான் அவரை அதட்டினேன். அவர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவனை உங்களுக்காகத்தான் திட்டுகிறேன்'' என்று கூறினார். நான், 'என்னுடைய எந்த விஷயத்திற்காக?' என்று கேட்டேன். அப்போதுதான் அவர் என்னிடம் விஷயத்தை உடைத்தார். நான், 'இப்படியா நடந்தது?' என்று கேட்டேன். அவர் 'ஆம்!' அல்லாஹ்வின் மீதாணையாக, (இப்படித்தான் நடந்தது)'' என்று பதிலளித்தார். நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். (அதிர்ச்சியில்) நான் எங்கே போனேன்; எதற்காகப் போனேன் என்பது கூட எனக்கு நினைவில்லாதது போலாகிவிட்டது. அதில் கொஞ்சமோ அதிகமோ எதுவும் நினைவில் இல்லை. எனக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'என் தந்தையின் வீட்டிற்கு என்னை அனுப்பிவிடுங்கள்'' என்று சொன்னேன். (என்னை என் தந்தை வீட்டில்விட்டுவர) என்னுடன் ஒரு சிறுவனை நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.

நான் வீட்டினுள் சென்றபோது என் தாயார் உம்மு ரூமான்(ரலி) அவர்களைக் கீழ்த்தளத்திலும் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களை (குர்ஆன்) ஓதியவர்களாய் வீட்டின் மேல்தளத்திலும் இருக்கக் கண்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! என்ன விஷயமாக வந்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்து செய்தியைச் சொன்னேன். ஆனால், எனக்கு ஏற்பட்ட அளவிற்குக் கவலை அவர்களுக்கு ஏற்படவில்லை! அப்போது அவர்கள் 'என் அன்பு மகளே! இந்த விவகாரத்தை, உன் மீது (பெரிதாக்கிக் கொள்ளாமல்) இலோசாக்கிக் கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! தன்னை விரும்பும் கணவரிடம் இருக்கும் ஓர் அழகிய பெண்ணுக்குச் சக்களத்திகள் பல பேர் இருக்க, அவர்கள் அவளின் மீது பொறாமைப்படுவதும், அவளைப் பற்றிக் குறை கூறுவதும் இயல்பு தான்'' என்று கூறினார்கள். எனக்கு ஏற்பட்ட அளவிற்கு இந்த விஷயத்தில் அவர்களுக்குக் கவலை ஏற்படவில்லை என்பது இதிலிருந்து தெரிந்தது. நான் 'என் தந்தைக்கு இந்த விஷயம் தெரியுமா?' என்று கேட்டேன். தாயார் 'ஆம்' என்று கூறினார். 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு..?' என்று கேட்டேன். 'ஆம்' அல்லாஹ்வின் தூதருக்கும் தெரியும் என்றார் என் தாயார். நான் கண்ணீர் சிந்தி வாய்விட்டு அழலானேன். அபூ பக்ர்(ரலி) வீட்டின் மேல் தளத்தில் ஒதிக்கொண்டிருக்கையில், என் அழுகைச் சப்தத்தைக் கேட்டு கீழே இறங்கி வந்தார்கள். என் தாயாரிடம் 'இவள் விஷயம் என்ன?' என்று கேட்டார்கள். என் தாயார், 'அவளைப் பற்றிக் கூறப்பட்ட அவதூறுச் செய்தி அவளுக்கு எட்டிவிட்டது'' என்று கூறினார். உடனே அபூ பக்ர்(ரலி) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்தன. பிறகு அவர்கள், 'என் அன்பு மகளே! நீ உன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவேண்டுமென்று உன்னிடம் வற்புறுத்துகிறேன்'' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்துவிட்டேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப் பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள் 'இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து 'அவர்கள் பிசைந்து வைத்த மாவை' அல்லது 'அவர்கள் குழைத்து வைத்த மாவை'த் தின்றுவிட்டுச் செல்லும் அளவிற்கு (மெய் மறந்து) உறங்கிவிடுவார்கள் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (அவரிடமிருந்து) அறியவில்லை'' என்று சொல்லியிருந்தாள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்!'' என்று அவளிடம் விரிவாக விஷயத்தை விளக்கினார். அப்போதும் அவள் 'அல்லாஹ்வின் மீதாணையாக, பொற்கொல்லன், சிவப்பான (தூய்மையான) தங்கக் கட்டியை எப்படி மாசுமாறுவற்றதாகக் கருதுவோனோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்'' என்றே சொன்னாள். எந்த மனிதரைக் குறித்து (என்னுடன் இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் 'அல்லாஹ் தூய்மையானவன். நான் இதுவரை எந்த அன்னியப் பெண்ணின் ஆடையையும் நீக்கியதில்லையே!'' என்று கூறினார். பிறகு அவர் இறைவழியில் வீரமரணம் அடைந்தார்.11 என் தாய் தந்தை இருவரும் என்னிடம் காலையில் வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு வரும்வரை அவர்கள் (என்னிடமே) இருந்தார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, என் தாய் தந்தை இருவரும் (ஒருவர்) என் வலப்பக்கமும், (மற்றவர்) என் இடப்பக்கமும் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, போற்றிவிட்டு, 'ஆயிஷா! நீ 'தீய செயல் ஏதும் புரிந்திருந்தால்' அல்லது 'அநீதியிழைத்திருந்தால்', அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்! ஏனெனில் அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிப் பெண்யொருத்தி வந்து வாசலில் அமர்ந்திருந்தாள். நான், (நபி(ஸல்) அவர்களிடம்,) 'இந்தப் பெண் வெளியே சென்று ஏதாவது சொல்வாள் என்று நீங்கள் வெட்கப்படவில்லையா?' என்று கேட்டேன். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (எனக்கு) அறிவுரை கூறினார்கள். நான் என் தந்தையின் பக்கம் திரும்பி, 'இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்'' என்றேன். அவர்கள் 'நான் என்ன பதில் சொல்வது?' என்று கேட்டார்கள். பிறகு நான் என் தாயாரிடம் திரும்பி, 'இவர்களுக்கு பதில் சொல்லுங்கள்!'' என்றேன். அவர்கள், 'நான் என்ன சொல்வேன்?' என்று கேட்டார்கள். அவ்விருவருமே பதில் அளிக்காத காரணத்தால், நான் ஏகத்துவ உறுதிமொழிகூறி, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுடைய தகுதிக்கேற்ப அவனைப் போற்றிவிட்டு, 'அல்லாஹ்வின் மீதாணையாக, நான் (இப்படிச்) செய்யவில்லையென்று உங்களிடம் சொன்னால், -வலிவும் உயர்வும் மிக்க அல்லாஹ் நான் உண்மையே பேசுகிறேன் என்பதை அறிவான். -அது எனக்கு உங்களிடம் பயனளிக்கப்போவதில்லை. நீங்கள் அதைப் பேசிவிட்டீர்கள். அது உங்கள் உள்ளத்தில் பதிந்தும்விட்டது. நான் அப்படிச் செய்தேன் என்று சொன்னால் - நான் அப்படிச் செய்யவில்லை என்பதை அல்லாஹ் அறிவான் 'தனக்குத்தானே (செய்த குற்றத்தை ஏற்று) ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டாள்'' என்று நீங்கள் சொல்வீர்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக, (இறைத்தூதர்) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையே உங்களுக்கும் எனக்கும் உவமையாக காண்கிறேன்'' -அப்போது (யூசுஃப் அவர்களின் தந்தை) யஅகூப்(அலை) அவர்களின் பெயரை நினைவுபடுத்திப் பார்த்தேன். ஆனால், நினைவுக்கு வரவில்லை. '(இந்நிலையில்,) பொறுமையை மேற்கோள்வதே அழகானது. நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடமே பாதுகாப்புக் கோருகிறேன்'' என யஅகூப்(அலை) அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்.12

அந்த நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது, (குர்ஆன்வசனங்கள்) அருளப்பெற்றன. எனவே, நாங்கள் மௌனமாக இருந்தோ. 'வஹீ' (வேத அறிவிப்பு அருளப்படுவது) அவர்களுக்கு நிறுத்தப்பட்டபோது, நான் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைத் தெளிவாகக் கண்டேன். அவர்கள் தம் நெற்றி (வியர்வை)யைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், 'ஆயிஷா! ஒரு மகிழ்ச்சியான செய்தி. அல்லாஹ் நீ குற்றமற்றவள் என்று (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான்'' என்று கூறினார்கள். நான் அன்று கடுங்கோபத்துடன் இருந்தேன். என் தாய் தந்தையர் என்னிடம் 'நீ எழுந்து நபி(ஸல்) அவர்களிடம் செல்!'' என்று கூறினர். அதற்கு, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களிடம் எழுந்து செல்லவுமாட்டேன். அவர்களைப் பாராட்டவுமாட்டேன். உங்கள் இருவரையுங் கூட பாராட்டமாட்டேன். மாறாக, என்னைக் குற்றமற்றவளாக அறிவித்து வேத அறிவிப்பை அருளிய அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (என் மீதான) அவதூற்றைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதை மறுக்கவுமில்லை; அதை மாற்ற முயலவுமில்லை'' என்று சொன்னேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:

மேலும், ஆயிஷா(ரலி) (இவ்வாறு) கூறிவந்தார்கள்: (நபியவர்களுடைய துணைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை அவர்களின் மார்க்கப் பேணுதலின் காரணத்தினால், அல்லாஹ் (அவதூறுப் பிரசாரத்தில் பங்கு பெறவிடாமல்) காப்பாற்றிவிட்டான். அவர்கள் என்னைப் பற்றி நல்ல கருத்தையே கூறினார்கள். ஆனால், அவர்களின் சகோதரியான ஹம்னாவோ (அவதூறுபேசி) அழிந்தவர்களுடன் சேர்ந்து அழிந்து போனார். (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும், ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தும் ஆவர். நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபைதான் அதனுடன் (பல குற்றச்சாட்டுகளைத்) தேடி இணைத்து அதைப் பரப்பி வந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும் பங்கு வகித்தவனும் அவன்தான். ஹம்னாவும் கூட.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'மிஸ்தஹுக்கு எந்தப் பயன்தரும் உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன்'' என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் 'உங்களில் செல்வம் மற்றும் தாயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்யவேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்து (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும்! அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கருணையுடையோனுமாய் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 24:22 வது) இறைவசனத்தை அருளினான். (இந்த வசனத்தில்) 'உலுல் ஃபள்ல்' (செல்வம் படைத்தோர்) என்று அபூ பக்ர்(ரலி) அவர்களையே அல்லாஹ் குறிப்பிட்டான். 'மஸாக்கீன்' (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட்டான். இதையடுத்து அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் இறைவா! எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்புகிறோம்'' என்று கூறி, தாம் முன்பு செய்து வந்தது போன்றே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள்.

பகுதி 13

(நபியே!) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்! (எனும் 24:31 வது வசனத் தொடர்:)

4758. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! '(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்கள் மார்புக்கு மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்!'' எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனத்தை அல்லாஹ் அருளியபோது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் துப்பட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள். 13

4759. ஸஃபிய்யா பின்த் ஷைபா(ரஹ்) கூறினார்

''(நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தங்களின் மார்புகள் மேல் தங்களின் துப்பட்டாவைப் போட்டு (மறைத்து)க் கொள்ளட்டும்'' எனும் (திருக்குர்ஆன் 24:31 வது) வசனம் அருளப்பட்டபோது பெண்கள் தங்கள் கீழ் அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனைத் துப்பாட்டா ஆக்கி (மறைத்து)க் கொண்டார்கள்.

(25) 'அல்ஃபுர்கான்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 25:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹபாஅம் மன்ஸூரா' எனும் சொல் 'காற்று வாரியிறைக்கக்கூடிய (புழுதி போன்ற)வற்றை'க் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 25:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மத்தழ் ழில்ல' (நிழலை நீட்டுகிறான்) என்பது, 'ஃபஜ்ர் முதல் சூர்யோதயம் வரையிலான நிழலைக் குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'சாகின்' எனும் சொல்லுக்கு 'நிலையானது' என்று பொருள். 'அலைஹி தலீல்' (நிழலுக்கு ஆதாரமாக) என்பதற்கு 'சூர்யோதயம் நிழலுக்கு ஆதாரமாகும்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 25:62 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கில்ஃபத்' (பிரதி) எனும் சொல்லின் கருத்தாவது: இரவில் விடுபட்ட செயலைப் பகலிலும், பகலில் விடுபட்ட செயலை இரவிலும் ஒருவர் நிறைவேற்றிக் கொள்ளமுடியும். ('கில்ஃபத் எனும் இச்சொல்லுக்கு 'அடுத்தடுத்து வரக்கூடியது' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

ஹஸன் அல் பஸாரீ(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 25:74 வது வசனத்திலுள்ள) 'கண் குளிர்ச்சி' என்பதன் கருத்தாவது:

இறைவா! (என் மனைவி, மக்கள்) உனக்குக் கீழ்ப்படிவதன் மூலம் (என் கண்களைக் குளிர்ச்சி ஆக்குவாயாக!) தன் அன்பிற்குரியோர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைக் காண்பதைவிட வேறெதுவும் ஓர் இறைநம்பிக்கையாளனின் கண்ணைக் குளிர்ச்சியடையச் செய்துவிடுவதில்லை.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 25:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸுபூர்' எனும் சொல்லுக்கு 'நாசம்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 25:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸஈர்' (கொழுந்துவிட்டெரியும் நெருப்பு) எனும் சொல் ஆண்பாலாகும். (அதன் வேர்ச் சொல்லான) 'தஸஃஉர்' எனும் சொல்லுக்கும் 'அல் இள்திராம்' எனும் சொல்லுக்கும் 'கொழுந்துவிட்டெரிதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 25:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தும்லா அலைஹி' எனும் சொற்றொடருக்கு 'இவருக்கு ஓதிக்காட்டப்படுகின்றன' என்று பொருள். இச்சொல் 'அம்லைத்து','அம்லல்து' (ஓதிக் காட்டினேன்) ஆகிய (வினைச்) சொற்களிலிருந்து பிரிந்ததாகும்.

(திருக்குர்ஆன் 25:38 வது வசனத்தின் மூலத்தில் 'அஸ்ஹாபுர் ரஸ்ஸி' என்பதிலுள்ள) 'அர்ரஸ்ஸு' எனும் சொல்லுக்குச் 'சுரங்கம்' என்று பொருள். 'ரிஸாஸ்' (சுரங்கங்கள்) என்பது இதன் பன்மையாகும். (இச்சொல்லுக்குக் 'கிணறு' என்றும் பொருள் கொள்வோர் உள்ளனர்.)

(திருக்குர்ஆன் 25:77 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மா யஉபஉ' எனும் சொல்லுக்குப் பொருட்படுத்தியிருக்கமாட்டான்'' என்று பொருள். (இதன் இறந்த காலவினைச் சொல் இடம்பெற்ற) 'மா அபஉத்து பிஹி ஷைஆ' எனும் வாக்கியத்திற்கு 'அவனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 25:65 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகராம்' எனும் சொல்லுக்கு 'நாசம்' என்று பொருள். (இச்சொல்லுக்கு 'சதா தொல்லை தரக்கூடியது' என்றும் 'நிரந்தரமானது' என்றும் பொருள் கூறப்படுவதுண்டு.)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 25:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ அத்தவ்' எனும் சொல்லுககு 'வரம்பு கடந்து அக்கிரமம் புரிந்தனர்' என்று பொருள.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 25:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அத்தவ்' எனும் சொல்லின் வினையாலணையும் பெயரும், 69:6 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றதுமான) 'ஆத்தியா' எனும் சொல்லுக்குக் 'காற்றின் காவலர்களான வானவர்களின் கட்டுப்பாட்டை மீறிவிட்டது போன்றே கடுமையான சூறாவளிக் காற்று' என்று பொருள்.

பகுதி 1

''நரகத்தை நோக்கி தம் முகங்களால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படவிருப்பவர்களின் தங்குமிடம் மிகவும் மோசமானதாகும்; அவர்களின் வழியும் மிக மிக்த தவறானதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 25:34 வது) இறைவசனம்.

4760. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள்.

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) 'ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!'' என்று கூறினார்கள்.

பகுதி 2

''மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திறக்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்'' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனம்.

4761. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

''அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரிது?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'கேட்டேன்' அல்லது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது' அதற்கு அவர்கள், 'அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பது தான் (பெரும் பாவம்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள், 'உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது'' என்று கூறினார்கள். நான் 'பிறகு எது?' என்று கேட்க, அவர்கள் 'உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபசாரம் செய்வது'' என்று பதிலளித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், 'மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனம் அருளப்பட்டது.2

4762. காசிம் இப்னு அபீ பஸ்ஸா(ரஹ்) அறிவித்தார்

நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலைசெய்வதனுக்குப் பாவமன்னிப்பு உண்டா?' என்று கேட்டுவிட்டு, 'மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்வதில்லை...'' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) இறைவசனத்தையும் அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அதைக் கேட்ட ஸயீத்(ரஹ்), 'இதே வசனத்தை நீங்கள் (என்னிடம்) ஓதிக்காட்டியது போன்றே நானும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள், 'இது (திருக்குர்ஆன் 25:68) மக்காவில் அருளப்பெற்ற வசனமாகும். இ(தன் சட்டத்)தை, மதீனாவில் அருளப்பெற்ற 'அந்நிஸா' அத்தியாயத்திலுள்ள ஒரு வசனம் (திருக்குர்ஆன் 04:93) மாற்றிவிட்டது'' என்று பதிலளித்தார்கள். 3

4763. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இறைநம்பிக்கையாளரை (வேண்டுமென்றே) கொலை செய்தல் (பாவமன்னிப்புக்குரிய குற்றமா என்பது) தொடர்பாக (இராக்கைச் சேர்ந்த) கூஃபாவாசிகள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். எனவே, நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை நோக்கி பயணம் மேற்கொண்டேன். அவர்கள், 'இது (திருக்குர்ஆன் 04:93) இறுதியாக இறங்கிய வசனங்களில் ஒன்றாகும். இதை எந்த வசனமும் மாற்றவில்லை'' என்று பதிலளித்தார்கள். 4

4764. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான், 'அவனுக்குரிய தண்டனை நகரம் தான்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் 'அவனுக்குப் பாவமன்னிப்புக் கிடையாது'' என்று கூறினார்கள். புகழுயர்ந்த இறைவனின் 'மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனத்தைக் குறித்துக் கேட்டதற்கு, 'இந்த வசனம் அறியாமைக் காலத்தைப் பற்றியதாகும்'' என்று அவர்கள் பதிலளித்தார்கள்.5

பகுதி 3

''மறுமை நாளில் அவனுக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும். மேலும், அதிலேயே இழிவுக்குரியவனாய் அவன் என்றென்றும் வீழ்ந்து கிடப்பான்'' எனும் (திருக்குர்ஆன் 25:69 வது) இறைவசனம்.

4765. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம்தான்'' எனும் (திருக்குர்ஆன் 04:93 வது) இறைவசனத்தைப் பற்றியும், 'மேலும், (கொலை செய்யக்கூடாது என) அல்லாஹ் தடைவிதித்துள்ள எந்த உயிரையும் அவர்கள் கொல்லமாட்டார்கள்'' என்று தொடங்கி 'பாவமன்னிப்புக்கோரி இறை நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிபவர் தவிர'' என்று முடியும் (திருக்குர்ஆன் 25:68-70) வசனங்கள் பற்றியும் (விளக்கம்) கேட்கப்பட்டது. நானே அன்னாரிடம் கேட்டேன். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), 'இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 25:63-69) இறங்கியபோது (புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்காவாசிகள், நாம் அல்லாஹ்வுக்க இணை கற்பித்தோம்; அல்லாஹ் தடைவிதித்த உயிர்களை நியாயமின்றிக் கொலை செய்தோம்; தீயசெயல்கள் புரிந்தோம். (எனவே, இனி நமக்கு மன்னிப்புக் கிடைக்காது போலும்)'' என்று கூறிக்கொண்டனர். எனவே, அல்லாஹ் 'அவர்களில், மன்னிப்புக் கோரி, இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத் தவிர. அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும்மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 25:70 வது) வசனத்தை அருளினான்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 4

''அவர்களில், மன்னிப்புக்கோரி, இறை நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிவோரைத் தவிர, அவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவற்றை நன்மையாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான்'' (எனும் 25:70 வது இறைவசனம்.)

4766. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்

அப்துர் ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) 'ஓர் இறைநம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்தால் அவனுக்குரிய தண்டனை நரகம் தான்..'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 04:93 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்கும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (அவ்வாறே) நான் அந்த வசனம் குறித்து அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இந்த (திருக்குர்ஆன் 04:93 வது) வசனத்(தின் சட்டத்)தை வேறெந்த வசனமும் மாற்றவில்லை'' என்று கூறினார்கள். 'அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அவர்கள் அழைப்பதில்லை'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனம் குறித்துக் கேட்கும்படியும் உத்தரவிட்டிருந்தார்கள். அது குறித்து இப்னு அப்பாஸ்(ரலி), 'இது இணைவைப்போர் விஷயத்தில் அருளப்பெற்றது'' என்று பதிலளித்தார்கள்.6

பகுதி 5

அதன் வேதனை உங்களைப் பிடித்தே தீரும் (எனும் 25:77 வது வசனத் தொடர்.)

4767. மஸ்ரூக்(ரஹ்) அறிவித்தார்

(இந்த 25:77 வது வசனத்தில் 'லிஸாமன்' எனும் சொல்லுக்கு விளக்கமளிக்கும் போது) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) '(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் (வந்து) சென்றுவிட்டன. ஒன்று: புகை; இரண்டாவது, சந்திரன் பிளப்பது; மூன்றாவது, ரோமர்கள் (வெற்றி கொள்ளப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெறுவது); நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்'' என்று கூறினார்கள். 7

(26) 'அஷ்ஷு அரா' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 26:128 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஅபஸூன்' எனும் சொல்லுக்குத் '(தேவையில்லாமல் உயர உயரமான) கட்டடங்களை எழுப்புகிறீர்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 26:148 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹளீம்' எனும் சொல்லுக்குத் 'தொட்டால் பிய்ந்துவிடும் அளவுக்கு கனிந்தது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 26:153 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஸஹ்ஹாரீன்' எனும் சொல்லுக்கு 'மஸ்ஹூரீன்' (சூனியம் செய்யப்பட்டவர்கள்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 26:176 வது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம் பெற்றுள்ள) 'லைக்கத்' எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படி வந்துள்ள) 'ஜகத்' எனும் சொல்லும் 'ஐக்கா' எனும் சொல்லின் பன்மையாகும். இதற்கு 'மரத் தொகுப்பு (தோப்பு)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 26:189 வது வசனத்தின் மூலத்திலள்ள 'யவ்முழ் ழுல்லத்தி' (நிழலுடைய நாள்) எனும் சொல் அவர்களுக்கு வேதனை நிழலிட்டதைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 15:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவ்ஸுன்' எனும் சொல்லுக்கு 'அறியப்பட்டது' என்று பொருள். (இச்சொல்லுக்கு ஒழுங்கான முறை, மிகப் பொருத்தமான அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவு எனும் பொருள்களும் கொள்ளப்படுவதுண்டு. 2)

(திருக்குர்ஆன் 26:63 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மலையைப் போல்' எனும் பொருள் மூலத்திலுள்ள 'கத் தவ்த்' எனும் சொல்லுக்குரியதாகும்.

முஜாஹித்(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 26:54 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷிர்ஃதிமத்' எனும் சொல்லுக்குச் 'சிறிய குழு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 26:219 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸாஜிதீன் '(சிரம்பணியக் கூடியவர்கள்) எனும் சொல்லுக்குத் 'தொழக் கூடியவர்கள்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 26:129 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லஅல்லக்கும் தக்லுதூன்' எனும் சொற்றொடருக்கு 'நீங்கள் (அழியாது) என்றென்றும் இருக்கப் போகிறவர்களைப் போல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 26:128 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உயரமான இடம்' எனும் பொருள் (மூலத்திலுள்ள) 'ழீஉ' எனும் சொல்லுக்குரியதாகும். 'ரீஅத்' என்பது இதன் பன்மையாகும். 'அர்யாஉ' என்பது 'ரீஅத்' என்பதன் ஒருமையாகும்.

(திருக்குர்ஆன் 26:129 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸானிஉ' (எனும் சொல் 'மஸ்னஅத்' எனும் சொல்லின் பன்மையாகும்.) ஒவ்வொரு கட்டத்திற்கும் 'மஸ்னஅத்' எனப்படும்.

(திருக்குர்ஆன் 26:149 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபாரிஹுன்' எனும் சொல்லுக்குக் 'கர்வமுடையவர்கள்' என்று பொருள். ('பேரானந்தமுடையவர்கள்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுணடு.) 'ஃபாரீஹீன்' என்பதற்கும் இதே பொருள்தான். 'ஃபாரிஹீன்' என்பதற்கு 'கைதேர்ந்தவர்கள்' என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

(திருக்குர்ஆன் 26:183 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஅஸவ்' எனும் சொல்' மிகக் கொடிய விஷமத்தைக்' குறிக்கும். ஆஸ, யஈஸு, ஐஸன் என இதன் வாய்பாடு அமையும்.

(திருக்குர்ஆன் 02:184 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஜிபில்லா' எனும் சொல்லுக்குப் 'படைப்பினங்கள்' என்று பொருள். (அதன் வினைச் சொல்லான) 'ஜுபில்' எனும் சொல்லுக்கு 'குலிக்க (படைக்கப்பட்டது) என்று பொருள். 'ஜுபுல்' , 'ஜிபில்', 'ஜுப்ல்' ஆகிய சொற்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. அதாவது, படைப்பினங்கள் எனும் பொருள் கொண்டவையே. இதை இப்னுஅப்பாஸ்(ரலி) தெரிவிக்கிறார்கள்.

பகுதி 1

''மேலும், மனிதர்கள் அனைவரும் உயிர் கொடுக்கப்பட்டு எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்திவிடாதே! (என்றும் இப்ராஹீம் வேண்டினார்'' எனும் 26:87 வது இறைவசனம்)

4768. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

இப்ராஹீம்(அலை) அவர்கள் மறுமை நாளில் தம் தந்தையின் மீது தூசியும், கரும் புழுதியும் படிந்திருக்கும் நிலையில் அவர்களைக் காண்பார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 3

(இந்த ஹதீஸின் முகத்தில் இடம்பெற்றுள்ள) 'அல்ஃகபரா', அல்கத்தரா' ஆகிய சொற்களுக்கு ('புழுதி' எனும்) ஒரே பொருள் ஆகும்.

4769. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது 'இறைவா! மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்' என எனக்கு வாக்களித்தாயே!'' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன்'' என்ற பதிலளிப்பான்.4

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 3

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) 'அல்ஃகபரா' 'அல்கத்தரா' ஆகிய சொற்களுக்கு ('புழுதி' எனும்) ஒரே பொருள் ஆகும்.

4769. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(மறுமை நாளில்) இப்ராஹீம்(அலை) அவர்கள் தம் தந்தையைச் சந்திப்பார்கள். அப்போது 'இறைவா! 'மக்கள் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் அந்நாளில் நீ என்னை இழிவுபடுத்தமாட்டாய்' என எனக்கு வாக்களித்தாயே!'' என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், 'இறைமறுப்பாளர்கள் சொர்க்கத்தில் நுழையத் தடை விதித்து விட்டேன்'' என்று பதிலளிப்பான். 4

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் (எனும் 26:214 வது இறைவசனம்).

மேலும், (திருக்குர்ஆன் 26:215 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வக்ஃபின்ள் ஜனாஹக்க' எனும் வாசகத்திற்கு, 'உங்களைப் பின்பற்றம் இறை நம்பிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்'' என்று பொருள்.

4770. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, 'பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூ லஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி(ஸல்) அவர்கள், 'சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்க, மக்கள் 'ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்'' என்று (தம் மார்க்கக் கொள்கையைச்) கூறினார்கள். (இதைக் கேட்ட) அபூ லஹப், 'நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?' என்று கூறினான். அப்போதுதான் 'அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...'' என்று தொடங்கும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது.5

4771. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

அல்லாஹ் '(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை எச்சரியுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) வசனத்தை அருளியபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் கூட்டத்தாரே!' அல்லது 'இது போன்ற ஒரு வார்த்தையைக் கூறியழைத்து, 'உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்) கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்றிவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றமுடியாது. அப்துல் முத்தலிபின் புதல்வரான (என் பெரி தந்தை) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள். 6

இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(27) 'அந்நகில்' அத்தியாயம் 1

(திருக்குர்ஆன் 27:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கப்உ' எனும் சொல்லுக்கு 'மறைக்கப்பட்டிருப்பவை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 27:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா கிபல்' எனும் சொல்லுக்கு '(எதிர்க்க) வலிமை இல்லை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 27:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸர்ஹ்' எனும் சொல்லுக்கு 'மாளிகை' என்று பொருள். இதன் பன்மை 'ஸுருஹ்' என்பதாகும். கண்ணாடிச் சாந்துக்கும் 'ஸர்ஹ்' என்பர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 27:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ஷுன் அழீம்' (மகத்தான அரியாசனம்) என்பது, அழகான வேலைப்பாடுமிக்க விலை உயர்ந்த தரமான அரியணையைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 27:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வழிப்பட்டவர்கள்' எனும் சொல்லுக்கு 'நெருங்கிவிட்டது' என்று பொருள். (இச்சொல்லுக்குப் 'பின்தொடர்ந்து' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 27:88 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜாமிதா' எனும் சொல்லுக்கு 'நிலை கொண்டிருக்கக்கூடியது' என்று பொருள். (இச்சொல்லுக்கு 'வெகு உறுதியானது' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 27:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவ்ஸிஉனீ' எனும் சொல்லுக்கு 'என்னை ஆக்குவாயாக' என்று பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 27:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மாற்றி அமைத்துவிடுங்கள்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'நக்கிரூ' எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 27:42 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நாங்கள் முன்பே அறிந்திருந்தோம்' எனும் வாசகம், சுலைமான்(அலை) அவர்களின் கூற்றாகும்.

(திருக்குர்ஆன் 27:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸர்ஹ்' எனும் சொல், சுலைமான் (அலை) அவர்கள் கண்ணாடியிட்டு மூடிவைத்திருந்த நீர் நிலையைக் குறிக்கிறது.

(28) 'அல்கஸஸ்' அத்தியாயம்1

(திருக்குர்ஆன் 28:88 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இல்லா வஜ்ஹஹு' எனும் சொல்லுக்கு 'அவனுடைய ஆட்சியதிகாரத்தைத் தவிர' என்று பொருள். 'இறைவனின் திருமுகத்திற்காகச் செய்யப்பட்ட (நற்செயல் முதலிய)வற்றைத் தவிர' என்றும் பொருள் கூறப்படுகிறது.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 28:66 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் அன்பாஉ' எனும் சொல்லுக்கு 'ஆதாரங்கள் என்று பொருள். (இச்சொல்லுக்கு 'சகல விஷயங்கள்' என்றும் அர்த்தம் கொள்ளப்படுவதுண்டு.

பகுதி 1

''(நபியே!) நீங்கள் விரும்பாதவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்'' எனும் (திருக்குர்ஆன் 28:56 வது) வசனத் தொடர்.

4772. முஸய்யப் இப்னு ஹஸன்(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரணவேளை வந்துவிட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், 'அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா இப்னி முஃகீரா'வையும் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'என் பெரிய தந்தையே! 'லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை)' என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்'' என்று கூறினார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் 'அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?' என்று கேட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, 'நான் (என் தந்தை) அப்துல் முத்தலிப் மார்க்கத்தில் இருக்கிறேன்'' என்பதாகவே இருந்தது. 'லாஇலாஹா இல்லல்லாஹ்' எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள். அப்போதுதான், 'இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 09:113 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூ தாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் '(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிடமுடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்'' எனும் (திருக்குர்ஆன் 28:56 வது) வசனத்தை அருளினான்.2

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 28:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலில் குவ்வத்தி' (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால் கூட சுமக்கமுடியாது. 'லதனூஉ' எனும் சொல்லுக்குச் 'சிரமமாக மாறும்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபாரிஃகா' எனும் சொல்லுக்கு '(மூஸாவுடைய தாயாரின் உள்ளம்) மூஸாவின் நினைவைத்தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபாரிஹீன்' எனும் சொல்லுக்கு 'ஆணவம் கொண்டோர்' என்று பொருள். (இச்சொல்லுக்குப் 'பூரிப்படைவோர்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 28:11 வது வசனத்திலுள்ள) 'அவரை நீ பின்தொடர்ந்து செல்' எனும் பொருள் மூலத்திலுள்ள 'குஸ்ஸீஹி' எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் 'சம்பவத்தை எடுத்துரைத்தல்' எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன் ஜுனுபின்' எனும் சொல்லுக்கு 'தூரத்திலிருந்து' என்று பொருள். (இச்சொல்லும்) 'அன் ஜனாபத்தின்' எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. 'அன் இஜ்தினாப்' எனும் சொல்லும் அவ்வாறே!

(திருக்குர்ஆன் 28:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யப்திஷ்' (தாக்க) எனும் சொல் 'யப்துஷ்' என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 28:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஃதமிரூன்' எனும் சொல்லுக்கு 'ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்உத்வான்' எனும் சொல்லும், 'அல் அதாஉ' எனும் சொல்லும், 'அத்தஅத்தீ' எனும் சொல்லும் ('வரம்பு மீறல்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 28:29 வது வசனத்திலுள்ள) 'கண்டார்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'ஆனஸ' எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 28:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஜஃத்வா' எனும் சொல்லுக்குத் 'தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி' என்று பொருள். (திருக்குர்ஆன் 27:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷ்ஷிஹாப்' எனும் சொல்லுக்குத் 'தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜான்' எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். 'அஃபாஈ' (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் 'அசாவித்' (கருநாகம்) ஆகியவற்றையும் (திருக்குர்ஆன் 20:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹய்யத்' (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 28:34 வது வசனத்திலுள்ள) 'உதவியாளர்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'ரித்ஃ' எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ்(ரலி) 'யுஸத்திக்குனீ' (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (மற்ற சிலர் 'யுஸத்திக்னீ' என்று ஓதியுள்ளார்கள்.)

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 28:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸ நஷுத்து' எனும் சொல்லுக்கு, 'உமக்கு நாம் உதவி புரிவோம்' என்று பொருள். ('ஸநஷுத்து அளுதக்க' என்பதற்கு உம்முடைய கரத்தை நாம் வலுப்படுத்துவோம்' என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்காக கரமாக ஆகிறாய்! (அதனால், இங்கு 'கரம்' அல்லது 'கொடுங்கை' ('அளுத்') எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.)

(திருக்குர்ஆன் 28:42 வது வசனத்தின் மூலத்திலள்ள) 'மக்பூஹுன்' எனும் சொல்லுக்கு 'நாசமடைந்தவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:51 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல்' எனும் வாக்கியத்திற்கு '(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:57 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மக்பூஹீன்' எனும் சொல்லுக்கு 'நாசமடைந்தவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:51 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல' எனும் வாக்கியத்திற்கு '(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 28:57 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஜ்பா' எனும் சொல்லுக்குக் 'கொண்டுவரப்படுகிறது' என்று பொருள்.

(28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்திரத்’ எனும் சொல்லுக்கு ‘அடாவடித்தனம் புரிந்தனர்’ என்று பொருள். 

(திருக்குர்ஆன் 28:59 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உம்மிஹா' (அதன் தலைநகர்) என்பது மக்காவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 28:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துகின்னு' எனும் சொல்லுக்கு '(உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற' என்று பொருள். (இதன் இறந்தகால வினைச்சொல்லான) 'அக்னன்த்து' என்பதற்கு 'மறைத்தேன்' என்று பொருள். (இதையே) 'கனன்த்து' என்று சொன்னால் 'மறைத்தேன்' என்றும், 'வெளிப்படுத்தினேன்' என்றும் (எதிரிடைப்) பொருள் வரும்.

(திருக்குர்ஆன் 28:82 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வை கஅன்ன' எனும் சொல், 'அலம் தர' (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு 'என்ன நேர்ந்தது' என்றும், 'ஆச்சரியம்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'யப்சுத்து' எனும் சொல்லுக்குத் 'தாரளமாக வழங்குகிறான்' என்றும், 'யக்திரு' எனும் சொல்லுக்குச் 'சுருக்கிவிடுகிறான்' என்றும் பொருள்.

பகுதி 2

(நபியே!) இந்தக் குர்ஆனை உங்களுக்குச் சட்டமாக்கியவன் உங்களை நீங்கள் திரும்ப வேண்டிய இடத்திற்கு மீண்டும் கொண்டு போய்ச் சேர்க்கவிருக்கிறான் (எனும் 28:85 வது வசனத் தொடர்.)

4773. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆன் 28:85 வது வசனத்திலுள்ள) 'நீங்கள் திரும்பவேண்டிய இடம்' (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள்.

(29) 'அல் அன்கபூத்' அத்தியாயம்1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 29:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஸ்தப்ஸிரீன்' எனும் சொல்லுக்கு 'வழி தவறியவர்கள் (தங்களைத் தெளிவானவர்கள் எனக் கருதிக்கொண்டிருந்தார்கள்)' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 29:64 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஹயவான்' எனும் சொல்லும், 'அல் ஹய்யு' எனும் சொல்லும் ('நிலையானது' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 29:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப ல யஅமலமன்னல்லாஹு' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ் அதை அறிந்தே உள்ளான்' என்று பொருள். இது, 'அல்லாஹ் பகுத்துக் காட்டுவான்' என்று கூறுவதற்கு ஒத்ததாகும். 'நல்லவர்களிலிருந்து கெட்டவர்களை அல்லாஹ் பகுத்துக் காட்டுவதற்காக'' எனும் (திருக்குர்ஆன் 08:37 வது) வசனத்தைப் போன்று.

(திருக்குர்ஆன் 29:13 வது வசனத்திலுள்ள) 'தங்களின் சுமைகளுடன் மற்ற சுமைகளையும்' என்பதன் கருத்தாவது: தங்களின் பாவங்களுடன் மற்ற(வர்களை வழிகெடுத்த) பாவங்களையும் அவர்கள் சுமந்தே தீருவார்கள்.

(30) 'அர்ரும்' அத்தியாயம்1

30:39 வது வசனத்தின் கருத்தாவது:

தாம் வழங்கியதைவிடச் சிறந்தது தமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒருவர் வழங்கினால், அதற்கு (அல்லாஹ்விடம்) நற்பலன் கிடைப்பதில்லை.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 30:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஹ்பரூன்' எனும் சொல்லுக்குப் 'புதுப் புது இன்பங்களில் ஆழ்த்தப்படுவார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 30:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யம்ஹதூன்' எனும் சொல்லுக்குத் 'தங்களுக்காக படுக்கையை விரித்து வைக்கின்றனர்' என்று பொருள்.(இச்சொல்லுக்குத் 'தயார்படுத்துகின்றனர்' என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.)

(திருக்குர்ஆன் 30:48 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்வத்க்' எனும் சொல்லுக்கு 'மழை' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

''உங்கள் வலக்கரம் உடைமையாக்கிக் கொண்டவர்(களான அடிமை)களில் எவரையும், நாம் உங்களுக்கு வழங்கியுள்ள (செல்வம் முதலான)வற்றில் பங்காளிகளாக்கி அவற்றில் அவர்களுடன் நீங்கள் சமமாக இருப்பீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 30:28 வது) இறைவசனம் பொய்த் தெய்வங்கள் தொடர்பாகக் கூறப்பட்ட உதாரணம் ஆகும். அதாவது உங்கள் உறவினர்க)ளில் ஒருவர் மற்றவருக்கு வாரிசாவது போன்று அந்த அடிமைகள் உங்களுக்கு வாரிசாகி விடுவார்களோ என நீங்கள் அஞ்சுகிறீர்கள்.2

(திருக்குர்ஆன் 30:43 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஸ்ஸதத்ஊன' எனும் சொல்லுக்குப் 'பிரிந்து விடுவார்கள்' என்று பொருள். (இதிலிருந்து வந்ததே ஏவல் வினையான) 'ஃபஸ்தஉ' எனும் (திருக்குர்ஆன் 15:94 வது வசனத்தின் மூலத்திலுள்ள) சொல்லும்.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 30:54 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ளுஉஃப்' எனும் சொல்லும், 'ளஉஃப்' எனும் சொல்லும் ('பலவீனம்' என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 30:10 வது வசனத்தின் மூலத்திலள்ள) 'அஸ்ஸூஆ' எனும் சொல்லுக்குத் 'தீங்கு' என்று பொருள். தீயோருக்குக் கிடைக்கும் தண்டனை தீங்காகவே இருக்கும்.

4774. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

'கிந்தா3 எனும் இடத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது 'மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்'' என்று கூறினார். (இதைக்கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்து கொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்: அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் 'சொல்லுங்கள்: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்'' என்று (திருக்குர்ஆன் 38:86) கூறியுள்ளான். மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். எனவே, நபி(ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், 'இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!'' என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்து போனார்கள். மேலும், பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார் இந்நிலையில் அபூ சுஃப்யான் வந்து முஹம்மதே நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர் உம் சமுதாயத்தினரோ அழிந்துகொண்டிருக்கிறார்கள் எனவே நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார் அப்போது நபி (ஸல்)அவர்கள் (நபியே) வெளிப்படையானதொரு புகை வானத்திலுருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள் மனிதர்களை அது துன்புறுத்தும் வேதனையாகும் என்று தொடங்கி மெய்யாகவே (நீங்கள் உணர்ச்சிபெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம் எனினும் நீங்கள் (பாவம்செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள் என்பது வரையிலான (திருக்குர்ஆன் 44: 10- 15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும் மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப்படவா போகிறது (இல்லை . பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறை மறுப்புக்கே திரும்பிட்டனர். இதைத்தான் அல்லாஹ் மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயமாக அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம் என்று (திருக்குர்ஆன் 44:16 வது வசனத்தில் பத்ருப் போரக் குறிக்கும் வகையிலும் வ லிஸாமன் (தண்டனை உங்களை பிடித்தே தீரும்) என்று (திருக்குர்ஆன் 25:77 வது வசனத்தில் அதே பத்ருப் போரைக்குறிக்கும் வகையிலும் கூறுகிறான்.

மேலும், 'அலிஃப். லாம். மீம். (நபியே) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்டிக்கப்பட்டுவிட்டார்கள். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்'' என்றும் அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.4

பகுதி1

''அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது'' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது வசனத் தொடர்)

(இந்த 30:30 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கல்கில்லாஹ்' ('அல்லாஹ்வின் படைப்பு') என்பதற்கு, 'அல்லாஹ்வின் நெறி' என்று கருத்து. 'ஃபித்ரத்' (இயற்கை) என்பதற்கு 'இஸ்லாம்' என்று பொருள். (இதைப் போன்றே, ஓர் ஓதலின்படி 26:137 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கல்குல் அவ்வலீன்' என்பதற்கு 'முந்தையவர்களின் வழி' என்று பொருள்.

4775. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப்போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டும் திருப்பி,) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப், பிறகு, 'எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில், (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது'' எனும் (திருக்குர்ஆன் 30:30 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.5

(31) 'லுக்மான்' அத்தியாயம்1

பகுதி 1

''என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! இணைவைப்பது மாபெரும் அநியாயமாகும்'' (என்று லுக்மான் கூறினார் எனும் 31:13 வது வசனத் தொடர்.)

4776. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

''இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடாதவர்கள்...'' எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. எனவே, அவர்கள், 'எங்களில் எவர்தாம் தம் இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடாமல் (கலப்பற்ற இறைநம்பிக்கைமிக்கவராய்) இருக்கிறார்?' என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அது அப்படியல்ல (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் 'இணைவைப்பது மாபெரும் அநியாயமாகும்'' என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்கவில்லையா?' என்று கூறினார்கள்.2

பகுதி2

''நிச்சயமாக மறுமை(நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தொடர்.

4777. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள். அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றி) நடந்துவந்து, 'இறைத்தூதர் அவர்களே!'' ஈமான் எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?' என்று கேட்டார். அவர்கள், 'ஈமான் எனும் இறைநம்பிக்கை என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனுடைய சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே!'' 'இஸ்லாம்' (அடிபணிதல்) என்றால் என்ன?' என்று அவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான 'ஸக்காத்' தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்'' என்றார்கள். அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! 'இஹ்ஸான்' (நன்மை புரிதல் என்றால் என்ன?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வணங்குவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! மறுமை (நாள்) எப்போது வரும்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,) கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக் கூறுகிறேன்:

ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். 3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும். 'நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும், அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகிறான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்'' (எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். நபி(ஸல்) அவர்கள் 'அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!'' என்று கூறினார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்து வரச் சென்றார்கள். எங்கேயும் காணவில்லை. பின்னர், நபி(ஸல்) அவர்கள் 'இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்'' என்று கூறினார்கள். 4

4778. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'மறைவானவற்றின் திறவுகோல் ஐந்தாகும்'' என்று கூறிவிட்டு, பிறகு 'நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது வருமென்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 31:34 வது) இறைவசனத்தை ஓதினார்கள். 5

(32) 'அஸ்ஸஜ்தா' அத்தியாயம்1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 32:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஹீன்' எனும் சொல்லுக்கு 'பலவீனமானது' என்ற பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 32:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ளல்னா' எனும் சொல்லுக்கு 'நாங்கள் அழிந்து போனோம்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 32:27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஜுருஸ்' எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக்குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 32:26 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'யஹ்தி' எனும் சொல் மற்றோர் ஓதலில் 'நஹ்தி' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'நஹ்தி' எனும் சொல்லுக்கு 'நாம் தெளிவுபடுத்தினோம்' என்று பொருள.

பகுதி 1

''அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைந்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனம்.

4779. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், 'என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்'' என்று கூறுகிறான்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால், 'அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.''

மற்றோர் அறிவிப்பிலும் இவ்வாறே காணப்படுகிறது. அதில் (கூடுதலாக:) அறிவிப்பாளர் சுஃப்யான்(ரஹ்) அவர்களிடம் 'இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)'' என வினவப்பட, அன்னார் '(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?' என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இன்னுமோர் அறிவிப்பில், அபூ ஹுரைரா(ரலி) (திருக்குர்ஆன் 32:17 வது வசனத்தின் மூலத்தில் உள்ள 'குர்ரத்' (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) 'குர்ராத்' என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.

4780. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'மேன்மைமிக்க அல்லாஹ், 'என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்' எனக் கூறுகிறான்'' என்று சொல்லிவிட்டு, பிறகு, 'அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 32:17 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

(33) 'அல் அஹ்ஸாப்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 33:26 வது வசனத்திலுள்ள) 'அவர்களின் கோட்டைகள்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'ஸயாஸீஹிம்' எனும் சொல்லுக்குரியதாகும்.

பகுதி 1

திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார். (எனும் 33:6 வது வசனத்தொடர்.)

4781. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், 'திண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரை விட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்'' எனும் (திருக்குர்ஆன் 33:6 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். ஒரு நம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தைவிட்டுச்சென்றால் அவரின் தந்தை வழி உறவினர்கள் 'அவர்கள் எவ்வகையினராயினும் சரி - அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்! (இறக்கும் போது) ஒரு கடனை (அடைக்காமல்)விட்டுச் செல்கிறவர்கள், அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களைவிட்டுச் செல்கிறவர்கள் என்னிடம் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.2

பகுதி2

வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5 வது வசனத் தொடர்.)

4782. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

''வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே, அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (திருக்குர்ஆன் 33:5 வது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களை 'ஸைத் இப்னு முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.3

பகுதி 3

அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடையவேண்டும் என்ற) தம் நோக்கத்தை அடைந்துவிட்டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தம் வாக்குறுதியை ஒருபோதும் அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை'' (எனும் 33:23 வது வசனத் தொடர்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஹ்பஹு' எனும் சொல்லுக்குத் 'தம் வாக்குறுதி' என்று பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.)

(திருக்குர்ஆன் 33:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்தாரிஹா' எனும் சொல்லுக்கு 'அதன் பல பாகங்கள்' என்று பொருள். 'அல்ஃபித்னத்த லஆத்தவ்ஹா' எனும் சொற்றொடருக்கு 'குழப்பத்தைத் தந்திருப்பார்கள்' என்று பொருள்.

4783. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

''இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 33:23 வது) வசனம், அனஸ் இப்னு நள்ர்(ரலி) விஷயத்தில் அருளப்பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.4

4784. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்

நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள். 5 (அந்த வசனம் இதுதான்:) 'இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்.'' (திருக்குர்ஆன் 33:23)6

பகுதி 4

நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன் (எனும் 33:28வது இறைவசனம்).

மஅமர் இப்னு அல் முஸன்னா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 33:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்தபர்ருஜ்' எனும் சொல், ஒரு பெண் தன் அழகை (அந்நிய ஆடவர்களுக்கு) வெளிக்காட்டுவதைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 33:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சுன்னத்தல்லாஹ்' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்வின் வழிமுறை (மரபு') என்று பொருள். (இதன் வினைச்சொல்லான) 'இஸ்தன்ன' என்பதற்கு 'வழிமுறையாக்கினான்' என்று பொருள்.

4785. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7 என்னிடம் தான் முதன் முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: '(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்'' என்று கூறினார்கள். என்னுடைய பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், 'நபியே! உங்களுடைய துணைவியரிடம் கூறுங்கள்'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 33:28, 29) இரண்டு வசனங்களை முழுமையாகக் கூறினார்கள். அப்போது நான், 'இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்'' என்று நபியவர்களிடம் சொன்னே. 8

பகுதி 5

''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும், மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனைத் தயார் செய்து வைத்துள்ளான்'' எனும் (திருக்குர்ஆன் 33:29 வது) இறைவசனம்.

கத்தாதா(ரஹ்) கூறினார்:

''உங்கள் வீடுகளில் ஓதப்படுகிற இறைவசனங்களையும், ஞான (வாக்கிய)ங்களையும் நினைவில் வையுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:34 வது வசனத்திலுள்ள) 'இறைவசனங்கள்' என்பது குர்ஆனையும், 'ஞானங்கள்' என்பது நபிவழியையும் குறிக்கிறது.

4786. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டளையிட்டப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: '(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) 'நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்படவேண்டாம்'' என்று கூறினார்கள். என் பெற்றோர் நபி(ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பிறகு அவர்கள், 'நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களின் வாழ்க்கைக்க உரியதைக் கொடுத்து நல்லமுறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்து வைத்துள்ளான்'' எனும் (திருக்குர்ஆன் 33:28, 29 வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், 'இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்'' என்று சொன்னேன். பிறகு நபி(ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர். 9

இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 6

''(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டிருந்தீர்கள். மேலும், நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், அல்லாஹ்தான் நீங்கள் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்'' எனும் (திருக்குர்ஆன் 33:37 வது) வசனத் தொடர்.

4787. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

'(நபியே!) நீங்கள் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்தி நாடியிருந்த விஷயத்தை உங்களின் உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்கள்.'' எனும் இந்த (திருக்குர்ஆன் 33:27 வது) வசனம் (நபி(ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) மற்றும் நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்களின் விஷயத்தில் அருளப்பெற்றது. 10

''(நபியே!) உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்புக் காலம்வரை,) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) வசனத் தொடர். 11

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) 'துர்ஜீ' எனும் சொல்லுக்கு 'ஒதுக்கி வைக்கலாம்' என்று பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ளதுமான) 'அர்ஜிஹி' எனும் சொல்லுக்கு 'அவரைவிட்டுப்பிடி' என்று பொருள்.

4788. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், 'ஒரு பெண் தம்மைத் தாமே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?' என்றும் சொல்லிக் கொண்டேன். '(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை,) உங்களுடன் இருக்கவைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் 'உங்களுடைய இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாக பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்'' என்று (நபியவர்களிடம்) சொன்னேன். 12

4789. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா(ரஹ்) அறிவித்தார்

''(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கி வைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உங்களுடன் இருக்க வைக்கலாம். நீங்கள் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீர்களோ அவர்களை (மறுபடியும்) உங்களுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் மீது குற்றம் ஏதுமில்லை'' எனும் (திருக்குர்ஆன் 33:51 வது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனையிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறினார். நான், 'அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! (வேறொரு மனைவிக்காக என்னுடைய நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களைவிட்டுக் கொடுக்க விரும்பமாட்டேன்' என்று சொல்வேன்'' என்றார்கள். 13

இதே ஹதீஸ் வேறுவழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 8

''இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒருபொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும். அல்லாஹ்வின் தூதருக்கு தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவரின் துணைவியரை நீங்கள் மணந்து கொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் திண்ணமாக, பெரும் பாவமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'இனாஹு' எனும் சொல்லுக்குத் 'தயாராதல்' என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)

''உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்'' எனும் (திருக்குர்ஆன் 33:63 வது) வசனத்தொடர்.

(இவ்வசனத்தில் 'சமீபமாக' என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) 'காரீப்' எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய 'சாஅத்' எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) 'காரீபத்' என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் 'காரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.

4790. உமர்(ரலி) அறிவித்தார்

நான், 'இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். எனவே, தாங்கள் (தங்களின் துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!'' என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான். 14

4791. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். 15 மக்கள் (விருந்து) உண்டுவிட்டு, பிறகு பேசிக்கொண்டே அமர்ந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து போகத் தயாராயிருப்பது போல் (பலமுறை) காட்டினார்கள். ஆனால், மக்கள் எழுந்திருக்கவில்லை. அதைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் (ஒரேயடியாக) எழுந்துவிட்டார்கள். அவர்கள் எழுந்துவிடவே (அவர்களுடன்) மற்றவர்களும் எழுந்துவிட்டார்கள். ஆனால், மூன்று பேர் மட்டும் அமர்ந்து (பேசிக்) கொண்டேயிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (ஸைனப்(ரலி) அவர்களிடம்) செல்லப் போனார்கள். அப்போதும் அவர்கள் அமர்ந்து (கொண்டு பேசிக்) கொண்டேயிருந்தார்கள். பிறகு அவர்கள் (மூவரும்) எழுந்து சென்றார்கள். நான் உடனே, உள்ளே சென்று நபி(ஸல்) அவர்களிடம், அவர்கள் எழுந்து சென்றார்கள் என்று தெரிவித்தேன். மீண்டும் (வெளியே) வந்து பார்த்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் உள்ளே சென்றார்கள். நானும், அவர்களுடன் உள்ளே செல்லப்போனேன். அதற்குள் நபி(ஸல்) அவர்கள் எனக்கும் தமக்குமிடையே திரையைப் போட்டுவிட்டார்கள். அப்போதுதான் அல்லாஹ் 'இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்'' என்று தொடங்கும் இந்த (திருக்குர்ஆன் 35:53 வது) வசனத்தை அருளினான்.

4792. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ('வலீமா'விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டுவிட்டு) பேசிக்கொண்டே அமர்ந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அல்லாஹ்'' இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை. நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்துவிட்டார்கள்.

4793. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக, மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்கள் உண்பார்கள். புறப்பட்டுவிடுவார்கள். பிறகு, மற்றொரு கூட்டத்தார் வருவார்கள். உண்பார்கள். போய்விடுவார்கள். இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பது வரை நான் மக்களை அழைத்தேன். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை'' என்றேன். அவர்கள், 'உங்கள் உணவை எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்று பேர் மட்டும் வீட்டில் பேசிக்கொண்டே இருந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா(ரலி) அவர்களின் அறைக்குச் சென்று 'வீட்டாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்கிதுல்லாஹ் (உங்களின் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!)'' என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி), 'வ அலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹ் (தங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!) தங்களின் (புதிய) துணைவியாரை எப்படிக் கண்டீர்கள்? பாரக்கல்லாஹ் (அல்லாஹ் தங்களுக்கு சுபிட்சம் வழங்கட்டும்!)'' என்று (மணவாழ்த்துச்) கூறினார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா(ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா(ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா(ரலி) கூறியது போன்றே (பிரதி முகமனும், மணவாழ்த்தும்) கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (புதுமணப் பெண் ஸைனப்(ரலி) அவர்களிடம்) திரும்பி வர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்களோ அதிக வெட்க(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, (அவர்களைச் சீக்கிரம் போகச் சொல்லாமல்,) ஆயிஷா(ரலி) அவர்களின் அன்றைய நோக்கி நடந்தபடி (மீண்டும்) புறப்பட்டார்கள். அந்த மூவரும் வெளியேறிவிட்டார்கள் என்று 'நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா?' அல்லது, '(மற்றவர் மூலம்) தெரிவிக்கப்பட்டதா?' என்று எனக்குத் தெரியவில்லை. (இதைக் கேட்ட உடன்) நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்கு) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒருகாலை வாசல்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். (அப்போதுதான்) பர்தா (சட்டம்) தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

4794. அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது 'வலீமா' (மணவிருந்து) கொடுத்தார்கள். மக்களுக்கு ரொட்டியும், இறைச்சியும் வயிறு நிரம்ப உண்ணக் கொடுத்தார்கள். பிறகு, துணைவியாருடன் தாம்பத்தியத்தைத் தொடங்கும் நாளின் காலையில் வழக்கமாகத் தாம் செய்து வந்ததைப் போன்று (தம் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களுடைய அன்னையரின் அறைகளுக்கு (அன்றும்) சென்றார்கள். அவர்களுக்கு சலாம் (முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். துணைவியரும் நபி(ஸல்) அவர்களுக்கு சலாம் (பிரதி முகமன்) சொல்லி, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். (ஸைனப்(ரலி) அவர்களிருந்த, (தம் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது, இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். அவ்விருவரைக் கண்டதும் அவர்கள் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டிலிருந்து திரும்பிச் சென்றதைப் பார்த்தபோது, வேகமாக (வெளியே) சென்றார்கள். அவ்விருவரும் வெளியே சென்றுவிட்டதாக 'நானே நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேனா; அல்லது 'அவர்களுக்கு (இச் செய்தி வேறு யார் மூலமும்) தெரிவிக்கப்பட்டதா?' என்று எனக்குத் தெரியவில்லை. (இதையறிந்த) உடனே, நபி(ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று, (அவர்களைத் தொடர்ந்து வீட்டிற்குள் செல்ல முயன்ற) எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் பர்தா தொடர்பான இறைவசனம் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்தே வேறொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4795. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி (நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான) சவ்தா பின்த் ஸம்ஆ(ரலி) வெளியே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சாரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவர்களை அப்போது, உமர் இப்னு கத்தாப்(ரலி) பார்த்துவிட்டு 'சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!'' என்று கூறினார்கள். சவ்தா(ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத் துண்டு ஒன்று இருந்தது. அப்போது சவ்தா(ரலி) வீட்டினுள் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர்(ரலி) என்னிடம் இவ்வாறெல்லாம் கூறினார்கள்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டது. எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். 16

பகுதி 9

''நீங்கள் எதையேனும் வெளிப்படுத்தினாலும், அல்லது அதனை மறைத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான். (நபியின் துணைவியரான) அவர்களின் மீது தம் தந்தையர், தம் புதல்வர்கள், தம் சகோதரர்கள், தம் சகோதரிகளின் புதல்வர்கள், தம் (மார்க்கத் தோழியரான) பெண்கள் மற்றும் தம் வலக்கரம் உடைமையாக்கிக் கொண்டவர்கள் (ஆன அடிமைகள்) ஆகியோர் விஷயத்தில் (பர்தாவைக் கைவிடுவதில்) குற்றமில்லை. அல்லாஹ்வுக்கு பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 33:54, 55) வசனங்கள்.

4796. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் 'அஃப்லஹ்'(ரலி) அனுமதி கேட்டார்கள். அப்போது, 'நபி(ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாதவரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன்'' என்று கூறிவிட்டேன். ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அபுல் குஅய்ஸின் சகோதரான 'அஃப்லஹ்' என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காத வரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்!'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கரம் மண்ணாகட்டும்'' என்று கூறினார்கள். 17

(இதன் அறிவிப்பாளரான) உர்வா(ரஹ்) கூறினார்:

இதனால்தான் ஆயிஷா(ரலி), 'பிறப்பினால் (ஏற்படும் நெருங்கிய உறவுகளில்) யாரை மணப்பதற்குத் தடை விதிக்கிறீர்களோ, அவர்களை மணக்கப் பால்குடி உறவினாலும் தடைவிதியுங்கள்'' என்று கூறுவார்கள்.

பகுதி 10

''அல்லாஹ்வும், அவனுடைய வானவர்களும், நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரின் மீது ஸலவாத்தும், சலாமும் சொல்லுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:58 வது) இறைவசனம்.

அபுல் ஆலியா இப்னு மிஹ்ரான் அர்ரியாஹீ(ரஹ்) கூறினார்:

நபியின் மீது அல்லாஹ் 'ஸலவாத்' கூறுவதன் பொருளாவது, வானவர்களிடம் அவன் நபியைப் புகழ்ந்து பேசுகிறான் என்பதாகும். வானவர்களின் 'ஸலவாத்' என்பது (நபிக்காக அவர்கள் இறைவனிடம்) வேண்டுவதாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஸல்லூன' எனும் சொல்லுக்கு 'நபியின் சுபிட்சத்திற்காகப் பிரார்த்திக்கிறார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 33:60 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல நுஃக்ரியன்னக்க' எனும் சொல்லுக்கு 'நாம் உம்மை ஏவி விடுவோம்' என்று பொருள்.

4797. கஅப் இப்னு உஜ்ரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் மீது 'சலாம்' கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம்.18 (தங்களின் மீது) 'ஸலவாத்' கூறுவது எப்படி?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்'' என்று சொல்லுங்கள்!'' என பதிலளித்தார்கள். 19

4798. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) கூறினார்

நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! இது (தங்களின் மீது) சலாம் கூறும் முறை (தொழுகையில் ஓதப்படும் 'அத்தஹிய்யாத்' மூலம் இதனை நாங்கள் அறிவோம்.) ஆனால், உங்களின் மீது நாங்கள் 'ஸலவாத்' சொல்வது எப்படி?' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக்க வ ரசூலிக்க கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம வ பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம'' என்று சொல்லுங்கள்'' என்றார்கள். 20

மற்றோர் அறிவிப்பில், 'கமா பாரக்த்த அலா அலீ இப்ராஹீம' (இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கு நீ சுபிட்சத்தை வழங்கியதைப்போன்று) என்று காணப்படுகிறது.

...யஸீத் இப்னு ஹாத்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது:

''கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ பாரிக் அலா முஹம்மதின் வஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம' (என்று சொல்லுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.)

பகுதி 11

''மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) வசனத் தொடர்.

4799. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மூஸா(அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள். 'மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார்'' எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) இறைவசனம் அதைத்தான் குறிக்கிறது. 21

(34) 'ஸபஉ' அத்தியாயம் 1

(திருக்குர்ஆன் 34:5 வது வசனத்திலுள்ள) 'முஆஜிஸீன' என்பதற்கு 'முந்திச் செல்ல முயல்பவர்கள்' என்று பொருள்.

(இதே வகையைச் சேர்ந்ததும் 29:22 வது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) 'முஃஜிஸீன' எனும் சொல்லுக்குத் 'தப்பிச் செல்ல முயல்பவர்கள்' என்று பொருள்.

(முதலில் கூறப்பட்ட) 'முஆஜிஸீன' என்பதற்குத் 'தோல்வியுறச் செய்ய முயல்பவர்கள்' என்றும் பொருள் உண்டு.

'முஆஜிஸிய்ய' என்பதற்கு 'என்னை முந்திச் செல்ல முயல்பவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 08:59 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸபகூ' எனும் சொல்லுக்குத் 'தப்பிவிட்டார்கள்' என்று பொருள். 'லா யுஃஜிஸூ' எனும் சொல்லுக்கு '(நம்மைவிட்டும்) அவர்கள் தப்பமுடியாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 29:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஸ்பிகூனா' எனும் சொல்லுக்கு, 'அவர்கள் நம்மை மிகைத்துவிடலாம் (என நினைக்கிறார்களா?)' என்று பொருள்.

'முஆஜிஸீன' என்பதற்குப் 'பரஸ்பரம் மிகைத்துவிட நினைப்பவர்கள்' என்று பொருள். (அதாவது,) 'ஒவ்வொருவரும் தம் சகாவின் இயலாமையை வெளிப்படுத்திவிட எண்ணுவது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மிஃஷார்' எனும் சொல்லுக்குப் 'பத்திலொரு பங்கு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் உக்ல்' எனும் சொல்லுக்குக் 'கனிகள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பாஇத்' என்பதற்கும் (இன்னோர் ஓதலில் வந்துள்ள) 'பய்யித்' என்பதற்கும் 'தூரத்தை அதிகப்படுத்து' என்றே பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 34:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா யஃஸுபு' எனும் சொல்லுக்கு 'மறையாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அரிம்' எனும் சொல்லுக்கு 'அணைக்கட்டு' என்று பொருள். அதாவது, அல்லாஹ் அனுப்பிய செந்நீர், அணைக்கட்டை உடைத்துத் தகர்த்து, ஓடையை அரித்துப் பள்ளமாக்கிவிட்டது. (ஸபஉ சமுதாயத்தாரின்) இரண்டு தோட்டங்களும் இரண்டு மருங்கிலும் காணாமல் போய்விட்டன. தண்ணீர் வடிந்ததும் அவ்விரு தோட்டங்களும் வறண்டு காய்ந்து போய்விட்டன. இந்த செந்நீர் அணைக்கட்டிலிருந்த தண்ணீர் அல்ல. மாறாக, அல்லாஹ் தான் நாடிய இடத்திலிருந்து அனுப்பி வைத்த சோதனையே ஆகும்.

அம்ர் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்) கூறினார். 2

'யமன்' வாசிகளின் மொழி வழக்கில் அணைக்கட்டிற்கே 'அல் அரிம்' எனப்படும்.

வேறு சிலர், 'அல்அரிம்' என்பது நீரோடையையே குறிக்கும் என்பர்.

(திருக்குர்ஆன் 34:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சாபிஃகாத்' எனும் சொல்லுக்கு 'இரும்புக் கவசங்கள்' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 34:17 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'நுஜாஸீ' என்பதற்கு நாம் 'தண்டனை வழங்குகிறோம்' என்று பொருள்.) 'யுஜாஸா' என்பதற்குத் 'தண்டிக்கப்படுவான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:46 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஇழுக்கும் பிவாஹிதா' (நான் உங்களுக்குப் உபதேசிப்பதெல்லாம் ஒரே விஷயத்தைத்தான்) என்பதன் கருத்தாவது: அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிவதைத்தான்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸ்னா வஃபுராதா' என்பதற்கு 'ஒருவரொருவராய், இருவரிருவராய்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்தனாவுஷ்' எனும் சொல்லுக்கு 'மறுமையிலிருந்து உலகை நோக்கித் திரும்புதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:54 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வபைன மா யஷ்தஹூன்' (அவர்கள் ஆசைப்பட்டவை) என்பது, செல்வங்கள், குழந்தைகள் (உலக) அலங்காரப் பொருள்கள் ஆகியவற்றைக் குறிக்கும்.

(அதே வசனத்திலுள்ள) 'அஷ்யா இஹிம்' என்பதற்கு 'அவர்களைப் போன்றவர்கள்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 34:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கல்ஜவாப்' எனும் சொல்லுக்கு 'பூமியிலுள்ள தடாகம் போன்ற' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 34:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ககித்' என்பதற்கு 'அராக் (மிஸ்வாக்) மரம்' என்று பொருள். 'அஸ்ல்' என்பதற்கு 'சவுக்கு மரம்' என்று பொருள்.

'அல்அரிம்' என்பதன் (சொற்)பொருள் 'வலிமை வாய்ந்தது' என்பதாகும்.

பகுதி 1

(தீர்ப்பு நாளில்) மக்களின் உள்ளங்களிலிருந்து அச்சம் அகற்றப்படும்போது (பரிந்துரை புரிபவர்களிடம்), 'உங்களுடைய இறைவன் என்ன (பதில்) சொன்னான்?' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, 'சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனும் பெரியவனாகவும் இருக்கிறான்' என்று கூறுவார்கள் (எனும் 34:23 வது வசனத் தொடர்.)

4800. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்களிடம்) 'நம் இறைவன் என்ன சொன்னான்?' என்று வினவுகிறார்கள்.

அதற்கு அவர்கள் வினவியோரிடம், '(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் - அவன் உயர்ந்தவன்; பெரியவன்'' என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக்கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்துகொண்டு செவியேற்று விடுகின்றனர்.

இதைக் கூறும்போது (அறிவிப்பாளர்) சுஃப்யான்(ரஹ்), தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக் காட்டினார்கள்.

ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டு விடுகிறார்கள்.

சில நேரங்களில் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக் கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து) விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.) அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகிறான். அப்போது இதைக்கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர் (குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?' என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார். 3

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி2

(இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46 வது வசனத்தொடர்.)

4801. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் 'ஸஃபா' மலைக்குன்றின் மீது ஏறி, 'யா ஸபாஹா!'' (''உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!'') என்று கூறினார்கள். 4 உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, 'உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?' என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், 'எதிரிகள், காலையிலோ, மனைவியிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?' என்று கேட்டார்கள். 'ஆம் (நம்புவோம்)' என்று அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்'' என்று கூறினார்கள். உடனே அபூ லஹப், 'உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்று கூட்டினாயா?' என்று கேட்டான். உடனே அல்லாஹ், 'அபூ லஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்..'' எனும் (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை அருளினான்.5

(35) 'அல்மலாயிகா' (ஃபாத்திர்) அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 35:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கித்மீர்' எனும் சொல்லுக்குப் 'பேரீச்சங் கொட்டையினை மூடியுள்ள (மெல்லிய) இழை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 35:18 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஸ்கலா' எனும் சொல்லுக்கு '(பாவச்) சுமை ஏற்றப்பட்ட (ஆத்மா)' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 35:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஹரூர்' எனும் சொல், இரவு நேர வெப்பத்தைக் குறிக்கும். (மற்றொரு சொல்லான) 'சமூம்' என்பது, பகல் நேர வெப்பத்தைக் குறிக்கும்.

மற்றவர்கள் கூறுகின்றனர்: 'அல்ஹரூர்' என்பது, பகல் நேர வெயிலைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 35:27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகராபீப்' எனும் சொல்லுக்கு 'அடர்ந்த காரிய நிறம் கொண்டவை' என்று பொருள்.

(36) 'யாசீன்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 36:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஅஸ்ஸஸ்னா' எனும் சொல்லுக்கு 'நாம் வலுவூட்டினோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:30 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யா ஹஸ்ரத்தன் அலல் இபாத்' (அந்தோ! அடியார்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே!) என்பதன் கருத்தாவது: இறைத்தூதர்களை அவர்கள் பரிகாசம் செய்ததே அவர்களின் நஷ்டத்திற்குக் காரணமாக அமைந்தது.

(திருக்குர்ஆன் 36:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன்துத்ரிகல் கமர' (சூரியன் சந்திரனை எட்டிப் பிடிக்கமுடியாது) என்பதன் கருத்தாவது: சூரியன் சந்திரன் இரண்டில் ஒன்றின் ஒளி மற்றதன் ஒளியை மறைக்காது; அவைகளுக்கு அந்தத் தகுதியுமில்லை. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'சாபிக்குன்னஹார்' (இரவு, பகலை முந்த முடியாது) என்பதன் கருத்தாவது: இரவும் பகலும் ஒன்றன் பின் ஒன்றாக விடாது பின்தொடரும்.

(திருக்குர்ஆன் 36:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஸ்லகு' என்பதற்கு '(இரவு பகல்) ஒன்றிலிருந்து மற்றொன்றை நாம் வெளியேற்றுகிறோம்; அவை ஒன்றொடொன்று சேராமல் தனியாகவே சென்று கொண்டிருக்கின்றன' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:42 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மிம் மிஸ்லிஹி' எனும் சொற்றொடருக்கு, 'அதைப் போன்ற கால்நடைகளை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:55 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஃபாம்ஹுன்' எனும் சொல் இன்னோர் ஓதலில் 'ஃபம்ஹுன்' என்று ஓதப்பட்டுள்ளது அந்த) 'ஃபம்ஹுன்' என்பதற்கு '(இன்பத்தில் திளைத்து) மகிழ்பவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுன்தும் முஹ்ளரூன்' எனும் சொல்லுக்கு '(சிலை வணங்கிகளுக்கு எதிரான) படைகளாக, (அந்தச் சிலைகளே) விசாரணை நாளில் ஆஜர்படுத்தப்படும்'' என்று பொருள்.

''(திருக்குர்ஆன் 36:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஷ்ஹுன்' எனும் சொல்லுக்கு 'நிரப்பப்பட்ட' என்று பொருள்' என இக்ரிமா(ரஹ்) கூறினார்கள் என அறிவிக்கப்படுகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 36:51 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யன்சிலூன்' எனும் சொல்லுக்கு 'வெளியேறுவார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மர்கதினா' எனும் சொல்லுக்கு 'நாங்கள் வெளியேறுமிடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஹ்ஸைனாஹு' எனும் சொல்லுக்கு 'நாம் எல்லாவற்றையும் பாதுகாத்து வைத்துள்ளோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 36:67 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மகானத்திஹிம்' எனும் சொல்லும், 'மகானிஹிம்' எனும் சொல்லும் ('அவர்களின் இருப்பிடம்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

பகுதி 1

''சூரியனும் (நம்முடைய வல்லமையைப் பறைசாற்றும் பிறிதொரு சான்றாகும்). அதுதான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும், பேரறிவு கொண்டவனுமான (இறை)வளின் நிர்ணயமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனம்.

4802. அபூ தர் அல்ஃகிஃபாரீ(ரலி) அறிவித்தார்

சூரியன் மறையும் நேரத்தில் நான் நபி(ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தேன். அப்போது அவர்கள், 'சூரியன் எங்கு (சென்று) மறைகிறது என்று உமக்குத் தெரியுமா, அபூ தர்ரே?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள்'' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறைவனின் அரியாசனத்திற்கு)க் கீழே சிரவணக்கம் (சஜ்தா) செய்வதற்காகச் செல்கிறது. இதைத்தான், 'சூரியன், தான் நிலைகொள்ளும் ஓர் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இது வல்லமை மிக்கவனும் பேரறிவு கொண்டவனுமான (இறை)வனின் நிர்ணயமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) இறைவசனம் குறிக்கிறது'' என்று கூறினார்கள். 2

4803. அபூ தர்(ரலி) அறிவித்தார்

நான், நபி(ஸல்) அவர்களிடம், 'சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது'' எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது'' என்று கூறினார்கள்.3

(37) 'அஸ்ஸாஃப்பாத்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 37:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வாஸிப்' எனும் சொல்லுக்கு 'நிலையானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஃதூனனா அனில் யமீன்' எனும் வாக்கியத்திற்கு 'நீங்கள் சத்தியவழியில் வருவதுபோல் (தவறான வழிக்குக் கொண்டு செல்வதற்காக) எங்களிடம் வந்து கொண்டிருந்தீர்கள்'' என்று பொருள். இதை (மறுமையில்) இறைமறுப்பாளர்கள், ஷைத்தான்க(ளான தம் தலைவர்க)ளை நோக்கிக் கூறுவார்கள்.

(திருக்குர்ஆன் 37:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகவ்ல்' எனும் சொல்லுக்கு 'வயிற்று உபாதை' என்று பொருள். 'வலாஹும் அன்ஹா யுன்ஸஃபூன்' எனும் வாக்கியத்திற்கு '(சொர்க்கத்தின் மதுவினால்) அவர்களின் அறிவு அகன்றுவிடாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:51 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காரீன்' (நண்பன்) எனும் சொல் ஷைத்தானைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 37:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஹ்ரஊன்' எனும் சொல்லுக்கு 'ஓடுவதைப் போன்று (தம் மூதாதையர்களின் அடிச்சுவட்டைப்) பின்பற்றினார்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:94 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஸிஃப்ஃபூன்' எனும் சொல், அடுத்தடுத்து நெருக்கமாகக் கால் வைத்து நடப்பதைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 37:158 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ பைனல் ஜின்னத்தி நஸபா' (அல்லாய்வுக்கும் ஜின்களுக்குமிடையே வமிசாவளி உறவை அவர்கள் ஏற்படுத்துகின்றனர்) என்பதன் கருத்தாவது: 'வானவர்கள் அல்லாஹ்வின் புதல்வியர்; அவர்களின் அன்னையர் முக்கிய ஜின்களின் புதல்வியர்' எனக் குறைஷிகளில் இறைமறுப்பாளர்கள் கூறிவந்தனர். (இதற்கு மறுப்பாக) 'அந்த ஜின்களும் விசாரணைக்காகத் தாங்கள் ஆஜர்படுத்தப்படுவோம் என்பதை அறிந்துள்ளனர்'' என அல்லாஹ் கூறினான்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 37:165 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல நஹ்னுஸ் ஸாஃப்பூன்' (நாங்கள் அணிவகுத்து நிற்கிறோம்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 37:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸிராத்துல் ஜஹீம்' எனும் சொல்லுக்கு 'நரகத்தின் நடுப்பகுதி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:67 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல ஷவ்பன்' என்பதற்குக் 'கொதிக்கும் நீரில் அவர்களின் உணவு கலக்கப்படும்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'துஹூர்' எனும் சொல்லின் செயற்பாட்டு எச்சவினையும், 7:18, 17:18, 17:39 ஆகிய வசனங்களின் மூலத்தில் இடம் பெற்றதுமான) 'மத்ஹுரா' எனும் சொல்லுக்கு 'விரட்டப்பட்டவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:49 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பைளும் மக்னூன்' எனும் சொல்லுக்கு '(சிப்பிக்குள்) மறை(த்துப் பாதுகா)க்கப்பட்டிருக்கும் முத்து' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வதரக்னா அலைஹி ஃபில் ஆம்ரீன்' என்பதன் கருத்தாவது: (இறைத்தூதர்) நூஹுடைய புகழை மறுமை நாள்வரை பேசப்படும்படி நாம்விட்டு வைத்தோம்.

(திருக்குர்ஆன் 37:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஸ்தஸ்கிரூன்' எனும் சொல்லுக்கு 'ஏளனம் செய்கிறார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:125 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பஅல்' எனும் சொல்லுக்கு (யமனியரின் வழக்கில்) 'தெய்வம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:10, 40:36ஆகிய வசனங்களின் மூலங்களிலுள்ள) 'அல்அஸ்பாப்' எனும் சொல், வானத்தைக் குறிக்கிறது.

பகுதி 1

''நிச்சயமாக யூனுஸும் (இறைத்) தூதர்களாக அனுப்பப்பட்டவர்களில் ஒருவராவார்'' எனும் (திருக்குர்ஆன் 37:139 வது) இறைவசனம்.

4804. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

''எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர் என வாதிடுவது தகாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

4805. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

''நான் யூனுஸ் இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர்'' என்று (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார். 2

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(38) 'ஸாத்' அத்தியாயம்1

பகுதி 1

4806. அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார்

நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், 'ஸாத்' அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டபோது அதற்கு அன்னார், '(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றிச் செல்லுங்கள்..'' என்ற (திருக்குர்ஆன் 06:90 வது) வசனத்தை பதிலாகக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) இந்த வசனத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வது வழக்கம். 2

4807. அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) கூறினார்

நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், 'ஸாத்' அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?' என்று கேட்டேன். அதற்கு அன்னார், 'மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்'' என்று தொடங்கி, '(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்...'' என்று முடியும் (திருக்குர்ஆன் 06:84-90 ஆகிய) வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். பிறகு, 'எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி(ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தோ அத்தகையவர்களில் தாவூத்(அலை) அவர்களும் ஒருவராவார். எனவே, (நபி தாவூத்(அலை) அவர்களைப் பின்பற்றி) இறைத்தூதர்(ஸல்) அவர்களும் ('ஸாத்' அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்யவேண்டும்) என்று பதிலளித்தார்கள். 3

(திருக்குர்ஆன் 38:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உஜாப்' எனும் சொல்லுக்கு 'வியப்புக்குரியது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கித்து' எனும் சொல்லுக்கு (பொதுவாக) 'ஏடு' என்று பொருள். ஆனால், இங்கு 'நற்செயல்களின் பதிவேடு' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்ஸத்' எனும் சொல்லுக்கு 'ஆணவம் கொண்டவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்மில்லத்துல் ஆம்ரா' (வேறு சமுதாயம்) எனும் சொல், குறைஷியர் சமுதாயத்தைக் குறிக்கிறது.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'இக்திலாக்' எனும் சொல்லுக்குப் 'பொய்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஸ்பாப்' எனும் சொல், வானத்தின் வாயில்களுக்குச் செல்லும் வழிகளைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுன்த்' (படையினர்) எனும் சொல் குறைஷியரைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 38:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலாயிகல் அஹ்ஸாப்' (அந்தக் கூட்டத்தினர்) என்பது முந்தைய தலைமுறையினரைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 38:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபவாக்' (தாமதித்தல்) எனும் சொல்லுக்கு '(உலகின் பால்) திரும்புதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 38:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இத்த கஃத்னாஹும் சிக்ரிய்யா' (நாம் அவர்களைப் பரிகாசம் செய்துகொண்டிருந்தோமா? என்பதன் கருத்தாவது: (தாழ்ந்தவர்களாக) அவர்களை நாம் அறிந்திருந்தோமா?

(திருக்குர்ஆன் 38:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்ராப்' எனும் சொல்லுக்கு 'வயதொத்தவர்கள்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 38:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்அய்த்' எனும் சொல்லுக்கு 'வணக்க வழிபாட்டில் செயலாற்றல்' என்றும், 'அல் அப்ஸார்' எனும் சொல்லுக்கு 'அல்லாஹ்வின் விஷயத்தில் ஆழ்ந்த சிந்தனை' என்றும் பொருள்.

(திருக்குர்ஆன் 38:32 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹுப்பல் கைரி அன் ஃதிக்ரி ரப்பீ' எனும் சொற்றொடரிலுள்ள 'அன்' எனும் இடைச்சொல்லுக்கு 'மின்' எனும் இடைச்சொல்லின் பொருளாகும். (இதன்படி,) 'என்னுடைய இறைவனை நினைக்காமல் இந்த நல்ல (குதிரைச்) செல்வங்களில் லயித்துவிட்டேன்'' என்று இவ்வசனத்திற்குப் பொருள் அமையும்.

(திருக்குர்ஆன் 38:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஃபிக்க மஸ்ஹன்' என்பதற்கு 'அவற்றின் கணைக் கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுக்கலானார்' என்று பொருள்.4

(திருக்குர்ஆன் 38:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஸ்ஃபாத்' எனும் சொல்லுக்கு 'விலங்குச் சங்கிலி' என்று பொருள்.

பகுதி 2

''(இறைவா!) எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையாக கொடையாளன்'' (என்று சுலைமான் கூறினார்) எனும் (திருக்குர்ஆன் 38:35 வது) வசனத் தொடர்.

4808. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்:

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது - என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் - அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது 'இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக'' (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.

ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் 'எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்'' என்றும் இடம் பெற்றுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.5

பகுதி 3

''(நபியே! கூறுக:) நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்'' எனும் (திருக்குர்ஆன் 38:86 வது) வசனத் தொடர்.

4809. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், 'மக்களே! ஒன்றை அறிந்தவர், அதைப் பற்றிக் கூறட்டும்! அறியாதவர், 'அல்லாஹ்வே நன்கறிந்தவன்' என்று கூறட்டும்! ஏனெனில் ஒருவர் தாம் அறியாததைக் குறித்து 'அல்லாஹ்வே நன்கறிந்தவன் (எனக்குத் தெரியாது)' என்று சொல்வதும் அறிவின்பால்பட்டதாகும். வல்லவனும் மாண்புடையோனுமாகிய அல்லாஹ், '(நபியே!) கூறுக: நான் இதற்காக உங்களிடம் கூலி எதையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லலாததைச் சொல்லி) பாவனைசெய்வோரில் ஒருவனும் அல்லன்'' என்று தன் தூதர்(ஸல்) அவர்களுக்குக் கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 38:86) இதோ (கிந்தா எனுமிடத்தில் ஒருவர் பேசிவரும்) புகையைக் குறித்து உங்களுக்கு நான் சொல்கிறேன் கேளுங்கள்): இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷியரை இஸ்லாத்திற்கு (வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அவர்கள் அதில் காலம் தாழ்த்தினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! (இவர்களைத் திருத்த உன் தூதர்) யூசுஃப்(அலை) அவர்கள் காலத்து ஏழு (பஞ்சம் நிலவிய) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவி செய்!'' எனப் பிரார்த்தித்தார்கள். எனவே, அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அது அனைத்தையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், (பஞ்சத்தின் கோரப் பிடியினால்) அவர்கள் பிணத்தையும், (பிராணிகளின்) தோல்களையும் உண்டார்கள். மேலும், கடும் பசியினால் (கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகையைத்தான் காண்பார்.

அல்லாஹ் கூறினான்: (நபியே!) தெளிவானதொரு புகை வானத்திலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும். (திருக்குர்ஆன் 44:10,11)

உடனே குறைஷியர், 'எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இவ்வேதனையை நீக்கிவிடு; நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கிறோம்'' என்று வேண்டினர். (திருக்குர்ஆன் 44:12)

''(ஆனால், அந்நேரத்தில்) அவர்களுக்கு நல்லுணர்ச்சி எவ்வாறு பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) வெளிப்படையான தூதர் அவர்களிடம் வந்தே இருக்கிறார். எனினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து (அவரைப் பற்றி, 'இவர்) எவராலோ பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரர்தாம்' என்று கூறினர்.

மெய்யாகவே (நீங்கள் திருந்தக் கூடுமென்று) அவ்வேதனையை (இன்னும்) சிறிது (காலத்திற்கு) நீக்கிவைத்தோம். (எனினும்,) நிச்சயமாக நீங்கள், (பாவம் செய்யவே) மீளுகிறீர்கள்.'' (திருக்குர்ஆன் 44:13-15)

(நபி(ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றது.) ஆனால், மறுமை நாள் வேதனை (அவர்களைவிட்டு) அகற்றப்படவா போகிறது? ஆக, பஞ்சம் அகற்றப்பட்டது. பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்பிற்கே திரும்பிவிட்டார்கள். எனவே, அல்லாஹ் அவர்களை பத்ர் போரின்போது (கடுமையாகப்) பிடித்தான்.

அல்லாஹ் கூறினான்:

மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம். (திருக்குர்ஆன் 44:16)6

(39) 'அஸ்ஸுமர்' அத்தியாயம் 1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 39:24 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யத்தக்கீ பி வஜ்ஹிஹி' (மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தால் தடுத்துக்கொள்வான்) என்பதன் கருத்தாவது: தலைகீழாக இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் எறியப்படுவான். இதையே 'நரகத்தில் எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது மறுமை நாளில் நிம்மதியாக வருகை தருபவன் சிறந்தவனா?' எனும் (திருக்குர்ஆன் 41:40 வது) வசனம் குறிப்பிடுகிறது.

(திருக்குர்ஆன் 39:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இவஜ்' (கோணல்) சொல்லுக்குக் 'குழப்பம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 39:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வரஜுலன் சலமன் லிரஜுல்' என்பதன் பொருளாவது: ஒரே மனிதனுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் நல்ல மனிதன். இது, இணைவைப்பாளர்களின் (பல) பொய்த் தெய்வங்களுக்கும் உண்மையான (ஒரே) இறைவனுக்கும் சொல்லப்பட்ட ஓர் உவமையாகும்.

''(குறைஷிக் குலத்தோரான) இவர்கள் அவன் அல்லாதவர்களைக் கொண்டு (நபியே!) உங்களை அச்சுறுத்துகின்றனர்'' எனும் (திருக்குர்ஆன் 39:36 வது) வசனத்திற்கு, ('அல்லாஹ் அல்லாத) சிலைகளைக் காட்டி அச்சுறுத்துகிற்னர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 39:49 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கவ்வல்னா' எனும் சொல்லுக்கு, 'நாம் வழங்கினோம்' என்று பொருள்.

''எந்த மனிதர் உண்மையைக் கொண்டு வந்தாரோ, மேலும், அவரை உண்மையாளரென ஏற்றவர்களே வேதனையிலிருந்து தப்பக்கூடியவர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 39:33 வது) வசனத்திலுள்ள 'உண்மை' என்பது குர்ஆனையும், 'அவரை உண்மையாளர் என ஏற்றவர்' என்பது இறைநம்பிக்கையாளரையும் குறிக்கும். இத்தகைய இறை நம்பிக்கையாளர் (நாளை) மறுமை நாளில் (அல்லாஹ்வின் திருமுன்னில்) வந்து நின்றுகொண்டு, '(இறைவா!) எனக்கு நீ வழங்கிய இந்தக் குர்ஆனில் உள்ள (உபதேசப்)படி நான் (உலகில்) செயல்பட்டேன்'' என்று கூறுவார்.

(திருக்குர்ஆன் 39:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முதஷாம்சூன்' எனும் சொல், நேர்மையை விரும்பாத முரடர்களைக் குறிக்கும். 'சலமன்' எனும் சொல்லும் 'சாலிமன்' எனும் சொல்லும் நல்லவரைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 39:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஷ்மஅஸ்ஸத்' என்பதற்கு 'வெறுக்கும்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 39:61 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பி மஃபாஸத்திஹிம்' எனும் சொல், 'ஃபவ்ஸ்' (வெற்றி) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும்.

(திருக்குர்ஆன் 39:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாஃப்பீன்' எனும் சொல்லுக்கு '(இறைவனின் அரியாசனத்தை,) அதன் நாலாபாகங்களையும் சூழ்ந்த வண்ணம் சுற்றி வந்து கொண்டிருப்பார்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 39:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முத்தஷாபிஹ்' எனும் சொல் 'இஷ்த்திபாஹ் (குழப்பம்) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததன்று; ஷபஹ் (ஒப்பாகுதல்) எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். இதன்படி, 'அல்லாஹ் அருளிய இந்த வேதத்தில் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் இல்லை. மாறாக, இதன் ஒரு வசனம் மறுவசனத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று ஒத்ததாய்த் திகழ்கிறது'' என்று பொருள் அமையும்.

பகுதி 1

''(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னித்துவிடுகிறான். அவன் பொரிதும் மன்னிப்பவனும், கருணை காட்டுபவனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 39:53 வது) இறைவசனம்.

4810. இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினர். அப்போது, '(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை...'' எனும் (திருக்குர்ஆன் 25:68 வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், '(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்..'' எனும் (திருக்குர்ஆன் 39:53 வது) வசனமும் அருளப்பெற்றது.

பகுதி 2

'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்கவேண்டுமோ, அவ்வாறு மிதிக்கவில்லை' எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத் தொடர்.

4811. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

யூதம் அறிஞர்களில் ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, 'நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன்'' என்று சொல்வான் என நாங்கள் (எங்களின் வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம்'' என்று கூறினார். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத்தை ஓதினார்கள்.

பகுதி 3

''மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும் வானங்கள் அவனுடைய வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணைவைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையானவன்; உயர்ந்தவன்; எனும் (திருக்குர்ஆன் 39:67 வது) வசனத் தொடர்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 4

''மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பின்னர் மற்றொருமுறை எக்காளம் ஊதப்படும். உடனே, அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 39:68 வது) இறைவசனம்.2

4813. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்ட போதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களா; அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)?' என்று எனக்குத் தெரியாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 3

4814. அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'அந்த இரண்டு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். அவர்களின் நண்பர்கள், 'அபூ ஹுரைரா அவர்களே! நாள்களில் நாற்பதா?' என்று கேட்டனர். '(இதற்கு பதில் சொல்வதைவிட்டும்) நான் விலகிக் கொள்கிறேன்'' என்று அபூ ஹுரைரா(ரலி) பதிலளித்தார்கள். நண்பர்கள், 'ஆண்டுகள் நாற்பதா?' என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), 'நான் விலகிக்கொள்கிறேன்'' என்று பதில் கூறினார்கள். நண்பர்கள், 'மாதங்கள் நாற்பதா?' என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), 'நான் விலகிக் கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது)'' என்று கூறிவிட்டு, 'மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனுடைய (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்'' என்று கூறினார்கள்.

(40) 'அல்முஃமின்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 40:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாமீம்' எனும் ('ஹுரூஃபுல் முகத்தஆத்' வகையைச் சேர்ந்த) தனி எழுத்துகளுக்கு, மற்றச் சில அத்தியாயங்களின் தொடக்கத்தில் வரும் தனி எழுத்துகளின் சட்டமே ஆகும்.2 ஹாமீம்' என்பது (இந்த அத்தியாயத்தின்) பெயராகும் என்றும் சொல்லப்படுகிறது. 'ஷுரைஹ் இப்னு அபீ அவ்ஃப் அல்அப்ஸீ' என்பவரின் இந்தக் கவிதைவாரி இதற்குச் சான்றாகும்:

அம்புகள் (களத்தில்) பின்னிக்கொண்டிருக்கிற நேரத்திலே அவன் எனக்கு ஹாமீமை நினைவுபடுத்துகிறான்!

(இங்கு) வருவதற்கு முன்பே அவன் ஹாமீமை ஓதியிருக்கக் கூடாதா?!

(திருக்குர்ஆன் 40:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்தவ்ல்' எனும் சொல்லுக்கு 'இழிவுக்குள்ளானவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 40:60 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாம்ரீன்' எனும் சொல்லுக்கு 'இழிவுக்குள்ளானவர்கள்' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 40:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இலந் நஜாத்தி' (ஈடேற்றம்) என்பது இறை நம்பிக்கையைக் குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 40:43 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லைஸ லஹு தஅவா' (அவற்றிற்கு எவ்வித அழைப்பும் இல்லை) எனும் வாகத்திற்கு, '(தெய்வங்களாகக் கற்பனை செய்யப்பட்டு வணங்கப்பட்டு வரும்) கற்சிலைகளுக்கு (உங்கள் அழைப்பிற்கு பதில் தரும் சக்தியில்லை)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 40:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஸ்ஜரூன்' எனும் சொல்லுக்கு 'அவர்கள் நரகத்தின் எரிபொருளாக ஆக்கப்படுவர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 40:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தம்ரஹூன்' எனும் சொல்லுக்கு 'இறுமாப்புக் கொண்டவர்களாக இருந்தீர்கள்' என்று பொருள்.

(ஒரு முறை) அல்அலாவு இப்னு ஸியாத்(ரஹ்)3 மக்களுக்கு நரகத்தை நினைவூட்டி (உபதேசித்துக்) கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், '(அச்சுறுத்தும் தகவல்களைக் கூறி, அல்லாஹ்வின் கருணை குறித்து) மக்களுக்கு ஏன் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறீர்கள்?' என்று கேட்டதற்கு அன்னார், 'மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் ஆற்றல் எனக்கு ஏது? அல்லாஹ்வே, '(நபியே!) கூறுங்கள்: வரம்பு மீறி தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்'' (திருக்குர்ஆன் 39:53) என்று கூறுகிறான். அதே நேரத்தில் 'வரம்பு மீறுவோர் நரகம் செல்லக்கூடியவர்களாவர்'' (திருக்குர்ஆன் 40:43) என்றும் கூறுகிறான். (ஒன்றை நன்றாக நான் புரிந்து கொண்டேன்:) நீங்கள் புரிந்த தீய செயல்களுக்குக் கூட சொர்க்கத்தை உங்களுக்கு (இறைவன் வழங்குவதாக) நற்செய்தி வழங்கப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்! (ஆனால் ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்:) அல்லாஹ், தனக்குக் கீழ்படிந்து வாழ்பவருக்கு சொர்க்கத்தை நற்செய்தியாகக் கூறுபவராகவும், தனக்கு மாறு செய்யும் மனிதருக்கு நரகம் உண்டு என்று எச்சரிக்கை செய்பவராகவுமே முஹம்மத்(ஸல்) அவர்களை அனுப்பினான்'' என்று கூறினார்கள்.

4815. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்

நான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அவர்களிடம், 'இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!'' என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்தபோது, உக்பா இப்னு அபீ முஐத் என்பவன் முன்னோக்கி வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களின் கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூ பக்ர்(ரலி) முன்னால் வந்து, அவனுடைய தோளைப் பிடித்து இழுத்துவிட்டு, (நபியவர்களைத் துன்புறுத்தவிடாமல் தடுத்து,) 'என் இறைவன் அல்லாஹ்தான்' என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்'' (திருக்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள். 4

(41) 'ஹாமீம் அஸ்ஸஜ்தா' அத்தியாயம்1

(அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

தாவூஸ்(ரஹ்) கூறினார். 2

(திருக்குர்ஆன் 41:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஃதியா தவ்அன்' எனும் சொல்லுக்கு '(என் கட்டளைக்கு இணக்கம்) தாருங்கள்' என்று பொருள். அவை இரண்டும் (-வானமும் பூமியும்-) அவ்வாறே (இணக்கம்) தந்தோம் என்று கூறின என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘எனக்கு குர்ஆனில் சில (நான்கு) வசனங்கள் முரண்படுவதாகக் தெரிகிறதே!” என்று கேட்டார்.3 அவையாவன: 
(1) ‘‘பிறகு எக்காளம் (ஸூர்) ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவுமாட்டார்கள்” என்று (23:101ஆவது வசனத்தில்) காணப்படுகிறது. (அதே சமயம்) ‘‘பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் முன்னோக்கிக் கேள்வி கேட்டுக்கொண்டும் இருப்பார்கள்” என்று (37:27ஆவது வசனத்தில்) காணப்படுகிறது. 
(2) ‘‘அங்கு அவர்கள் தம்முடைய எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்திட முடியாது” என்கிறது ஒரு (4:42) வசனம். (அதே சமயம்,) ‘‘ ‘எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இணைவைப்போராய் இருக்கவில்லை’ என்று (இணைவைப்பாளர்கள்) கூறுவார்கள்” என்கிறது மற்றொரு (6:23) வசனம். இங்கே அவர்கள் (உண்மையை) மறைத்துவிடுகிறார்களே! 
(3) ‘‘உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா? அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை அவன் உயர்த்தினான். பிறகு அதை ஒழுங்குபடுத்தினான். மேலும் அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்...” எனும் (79:27-30) வசனங்கள் பூமியை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் வானத்தை நிர்மாணித்ததாகக் குறிப்பிடுகின்றன. (அதே சமயம்,) ‘‘(நபியே! இவர்களிடம்) கேட்பீராக: நீங்கள் பூமியை இரண்டு நாட்களில் படைத்த இறைவனை நிராகரிக்கின்றீர்களா? மேலும், மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகின்றீர்களா? அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்! அவன் (பூமியைப் படைத்தபிறகு) அதன் மேல் மலைகளை அமைத்தான். மேலும், அதில் வளங்களை அருளினான். கேட்பவர்கள் அனைவருக்காகவும் அவரவரின் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பச் சரியான அளவில் அதனுள் உணவுப் பொருட்களைச் செய்து வைத்தான். இந்த அனைத்துப் பணிகளும் நான்கு நாட்களில் நிறைவேறின. பிறகு அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தினான். அப்போது அது வெறும் புகையாய் இருந்தது. அவன் வானத்திடமும் பூமியிடமும் ‘நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ வாருங்கள்’ என்று கூறினான். அவை இரண்டும், ‘நாங்கள் விரும்பியே வந்துவிட்டோம்’ எனக் கூறின” எனும் வசனங்கள் (41:9-11) வானங்களுக்குமுன் பூமியை அல்லாஹ் படைத்ததாகக் குறிப்பிடுகின்றனவே!” 
(4) ‘‘அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணைகாட்டுபவனாகவும் இருந்தான்”; ‘‘அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருந்தான்”; ‘‘அல்லாஹ் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் இருந்தான்” என்று (இறந்த கால வினையில்) பல வசனங்கள் கூறுகின்றன. அப்படியானால், இந்தப் பண்புகளெல்லாம் அல்லாஹ்வுக்கு முதலில் இருந்து, பிறகு நீங்கிவிட்டனவா? 
(அவருடைய கேள்விகளுக்குப் பின்வருமாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்: (முதல் கேள்விக்கான பதில்:) ‘‘எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது” எனும் (23:101ஆவது) வசனம், முதலாவது எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நேரத்தைக் குறிக்கிறது. அப்போது அல்லாஹ் நாடிய சிலரைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். அப்போதுதான் ‘‘அவர்களிடையே எந்த உறவுகளும் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவுமாட்டார்கள்”. அதற்குப் பிறகு, அடுத்த எக்காளம் ஊதப்படும். அப்போது ‘அவர்கள் ஒருவரை ஒருவர் முன்னோக்கிக் கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பார்கள்’. (எனவே, இந்த இரண்டு வசனங்களுக்கும் இடையில் எந்த முரண்பாடுமில்லை)” என்று பதிலளித்தார்கள். 
(இரண்டாவது கேள்விக்கான பதில்:) சுத்தமான ஏகத்துவவாதிகளின் பாவங்களை அல்லாஹ் மறுமை நாளில் மன்னித்துக்கொண்டிருப்பான். அப்போது, இணைவைப்பாளர்கள் தங்களிடையே, ‘‘வாருங்கள், (தோழர்களே!) நாமும் அல்லாஹ்வின் முன் ‘நாங்கள் இணைவைப்போராக ஒருபோதும் இருக்கவில்லை’ என்று கூறி (பாவமன்னிப்புப் பெற்று)விடுவோம்” என்று கூறுவர். இதையே இந்த (6:23ஆவது) வசனம் குறிப்பிடுகின்றது. பிறகு, (அவர்கள் பேச முடியாதவாறு) அவர்களின் வாய்கள்மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிடுவான். அப்போது அவர்களின் கரங்கள் (அவர்களுக்கு எதிராகப்) பேசும். அப்போது அவர்கள் தம்முடைய எந்தச் செய்தியையும் அல்லாஹ்விடம் மறைத்துவிட முடியாது என்று புரிந்துகொள்வார்கள். (இந்தக் கருத்தைத்தான் 4:42ஆவது வசனம் குறிப்பிடுகின்றது.) 
(மூன்றாவது கேள்விக்கான பதில்:) பூமியை இரண்டு நாட்களில் அல்லாஹ் படைத்தான். பிறகு, வானத்தைப் படைத்தான். பிறகு, அவன் வானத்தின் பக்கம் கவனம் செலுத்தி, இரண்டு நாட்களில் அதனை ஒழுங்குபடுத்தினான். பிறகு பூமியை அவன் விரித்தான். (அதாவது முதலில் பூமியின் படைப்பு, அடுத்து வானத்தின் படைப்பு, அடுத்து பூமியின் விரிவாக்கம் அமைந்தது.) அல்லாஹ் பூமியை விரித்தான் என்பதன் பொருளாவது: அல்லாஹ் பூமியிலிருந்து தண்ணீரையும் புற்பூண்டுகளையும் வெளியாக்கினான். மேலும், மலைகள், ஒட்டகங்க(ள் முதலிய பிராணிக)ள், குன்றுகள் மற்றும் வானம் பூமிக்கிடையிலுள்ள அனைத்துப் பொருட்களையும் வேறு இரு நாட்களில் படைத்தான். இதையே ‘‘பூமியை அவன் விரித்தான்” எனும் (79:30ஆவது) வசனம் குறிப்பிடுகின்றது. ‘‘பூமியை இரண்டு நாட்களில் அவன் படைத்தான்” எனும் (41:9ஆவது) வசனத்திற்குப் பொருளாவது: பூமியும் அதிலிலுள்ள பொருட்களும் (மொத்தம்) நான்கு நாட்களில் படைக்கப்பட்டன. வானங்கள் இரண்டு நாட்களில் படைக்கப்பட்டன. (ஆக, வானங்களைப் படைக்கும்முன் பூமியைப் படைக்கும் பணியை மேற்கொண்டான். வானங்களைப் படைத்த பின்பே பூமியை விரிக்கும் பணியை மேற்கொண்டான். எனவே, இந்த இரு வசனங்களுக்குமிடையில் எந்த வித முரண்பாடும் கிடையாது)” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். 
(நான்காவது கேள்விக்கான பதில்:) ‘‘அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கருணைகாட்டுபவனாகவும் இருந்தான்” என்பது போன்ற வசனங்களில் அல்லாஹ் தன் பெயர்களை எடுத்துரைக்கின்றான். அதாவது (இப்பெயர்கள் அவனுக்கு ஏற்கெனவே உள்ளன. அத்துடன்) இப்பண்புகள் அவனுக்கு என்றென்றும் இருந்துகொண்டேயிருக்கின்றன. ஏனெனில், அல்லாஹ் ஒன்றை நாடிவிட்டால் அது நடந்தே தீரும். ஆகவே, குர்ஆனில் எந்த முரண்பாட்டையும் நீ காண முடியாது. ஏனெனில், குர்ஆன் முழுவதும் அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். இதை மின்ஹால் பின் அம்ர் அல்அசதீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(41:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகைரு மம்னூன்’ எனும் சொல்லுக்கு ‘கணக்கற்ற’ என்பது பொருள். 

(41:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாத்தஹா’ என்பதற்கு ‘பூமிக்குரிய உணவுப் பொருட்கள்’ என்று பொருள். 

(41:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீ குல்லி ஸமாஇன் அம்ரஹா’ என்பதற்கு ‘ஒவ்வொரு வானத்திற்கும் அல்லாஹ் ஏற்படுத்திய நியதிகள்’ என்று பொருள். 

(41:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஹிஸாத்’ எனும் சொல்லுக்கு ‘மோசமான’ என்பது பொருள். 

(41:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ கய்யள்னா லஹும் குரனாஅ’ எனும் வாக்கியத்திற்கு ‘(இறைமறுப்பாளர்களான) அவர்களுடன் நாம் சில (சாத்தான்) நண்பர்களை இணைத்துவிட்டோம்’ என்று பொருள். 

(41:30ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள்’ என்பது, மரண வேளையைக் குறிக்கின்றது. (அதாவது, ‘அல்லாஹ் எங்கள் இறைவன்’ என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்களின் மரண வேளையின்போது வானவர்கள் அவர்களிடம் இறங்கி வாழ்த்துச் சொல்கின்றனர் என்று பொருள்.) 

(41:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஹ்தஸ்ஸத்’ என்பதற்கு ‘(பசுமையான) தாவரங்களால் பூமி பூத்துக்குலுங்குகிறது’ என்று பொருள். ‘ரபத்’ என்பதற்கு ‘ஓங்கி வளர்கிறது’ என்று பொருள். 

முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: 

(41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் அக்மாமிஹா’ எனும் சொல்லுக்கு ‘பாளை மொட்டுக்களிலிருந்து அது வெளிவருகின்றது’ என்று பொருள். 

(41:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல யகூலன்ன ஹாதா லீ’ (இது எனக்கே உரியது என அவன் திடமாகக் கூறுவான்) என்பதன் கருத்தாவது: இது என் செயலாற்றலால்தான் விளைந்தது; நான் இதற்கு அருகதையுள்ளவன் ஆவேன். 

(41:10வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவாஅன் லிஸ்ஸாயிலீன்’ எனும் சொற்றொடருக்கு ‘கேட்போர் யாவருக்கும் சரியான அளவில் அவற்றை நிர்ணயம் செய்துவைத்தான்’ என்று பொருள். 

(41:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப ஹதய்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களுக்கு நாம் நன்மை தீமையைக் காட்டிக்கொடுத்தோம்’ என்று பொருள். (இதே சொல் இடம்பெற்ற 90:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஹதய்னாஹுந் நஜ்தைன்’ என்பதற்கு ‘(நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளையும் நாம் மனிதனுக்குக் காட்டினோம்’ என்று பொருள். இதைப் போன்றே (76:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இன்னா ஹதய்னாஹுஸ் ஸபீல்’ என்பதற்கு ‘நாம் அவனுக்கு (பகுத்தறிவைத் தந்து) வழிகாட்டினோம்’ என்று பொருள். ‘வழிகாட்டுதல்’ எனும் பொருள் கொண்ட ‘ஹுதா’ எனும் சொல், மோட்சத்திற்கான வழியைக் காட்டுவதையே பெரும்பாலும் குறிக்கும். இதே கருத்தில்தான் ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழி காட்டப்பட்டவர்கள்; அவர்களது வழியையே (நபியே! நீரும்) பின்பற்றிச் செல்வீராக!” எனும் (6:90ஆவது) வசனமும் வந்துள்ளது. 

(41:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யூஸஊன்’ எனும் சொல்லுக்கு ‘(பின்னோர்கள் வந்து சேர்ந்துகொள்ளும் வரையில் முன்னோர்களான) அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவர்’ என்று பொருள். 

(41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்மாம்’ எனும் சொல்லுக்கு ‘கனிகளை மூடியிருக்கும் பாளை’ என்பது பொருள். ‘அக்மாம்’ என்பதன் ஒருமை ‘கும்மு’ ஆகும். முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்: மொட்டுக்குள்ளிருந்து வெளிவரும் சமயத்தில் உள்ள திராட்சைப் பிஞ்சு ‘காஃபூர்’, ‘குஃபர்ரா’ என்று சொல்லப்படுகிறது. 

(41:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வலிய்யுன் ஹமீம்’ எனும் சொல்லுக்கு ‘நெருங்கிய நண்பர்’ என்று பொருள். 

(41:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீஸ்’ எனும் சொல் ‘ஹாஸ’ (தப்பியோடினான்) எனும் வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். (இதன்படி, ‘‘தப்பியோடித் தஞ்சம் புகுமிடம் அவர்களுக்கில்லை” என்று வசனத்தின் பொருள் அமையும்.) 

(41:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிர்யா’ எனும் சொல்லுக்கும் (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ‘முர்யா’ எனும் சொல்லுக்கும் ‘சந்தேகம்’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நீங்கள் விரும்பியவற்றை செய்துகொண்டிருங்கள்” எனும் 

(41:40ஆவது) வசனத்தொடர், ஓர் எச்சரிக்கையாகும். (‘‘நினைத்தபடியெல்லாம் நீங்கள் செய்துகொண்டிருங்கள். உங்களை நாம் கவனித்துக்கொண்டுதானிருக்கிறோம்” என்று கூறுவதற்கு ஒப்பாகும். மற்றபடி, நன்மை தீமை என்று பிரித்துணராமல் விருப்பப்படி செயல்படுங்கள் என்பது இத்தொடரின் பொருளன்று.) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘நன்மையைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக” எனும் 

(41:34ஆவது வசனத்திலுள்ள) ‘நன்மை’ என்பது, கோபமான நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பதையும், துன்பம் தரும் நேரத்திலும் மன்னித்துவிடுவதையும் குறிக்கும். அப்படிச் செய்தால் அவர்களை அல்லாஹ் பாதுகாக்கவும் செய்வான்; அவர்களுடைய எதிரிகள் அவர்களுக்குப் பணியவும் செய்வார்கள். இதன் மூலம் (முன்பு பகையாளியாக இருந்தவன்) உற்ற நண்பனாக மாறிவிடுவான். 

பகுதி: 1 

(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணியிருந்தீர்கள் (எனும் 41:22ஆவது இறைவசனம்) 

4816. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) 'குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்' அல்லது 'ஸகீஃப்' குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களின் மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும்' (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் 'நம்முடைய பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். அவர்களில் ஒருவர், '(நம்முடைய பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான்'' என்று பதிலளித்தார். மற்றொருவர் 'நம்முடைய பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக்கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான்'' என்று கூறினார். அப்போதுதான், '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை'' எனும் இந்த வசனம் (திருக்குர்ஆன் 41:22) அருளப்பெற்றது.

பகுதி 2

உங்களுடைய இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களின் இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. எனவே, நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள் (என்று அவர்களின் தோல்கள் கூறும் எனும் 41:23 வது இறைவசனம்.)

4817. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் 'குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்' அல்லது 'ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்' (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், 'நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?' என்று கேட்டார். மற்றொருவர், 'நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை' என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், 'நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ், '(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்தபோது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்த்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை'' எனும் வசனங்களை (திருக்குர்ஆன் 41:22-24) அருளினான்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(42) 'ஹாமீம் ஐன் சீன் காஃப்' (அஷ்ஷூரா) அத்தியாயம்1

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் என அறிவிக்கப்படுகிறது:

(திருக்குர்ஆன் 42:50 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அகீம்' எனும் சொல்லுக்குக் 'குழந்தை பெறா(முடியா)த மலடி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 42:52 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரூஹம் மின் அம்ரினா' (நம் கட்டளைகளில் உயிரான ஒன்றை) என்பது குர்ஆனைக் குறிக்கிறது.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 42:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யத்ரஉகும் ஃபீஹி' எனும் சொல்லுக்கு 'ஒரு சந்ததிக்குப் பின் அடுத்த சந்ததியென (உங்கள் சந்ததிகளைப் பெருகச் செய்கிறான்)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 42:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தர்ஃபின் கஃபிய்யின்' எனும் சொல்லுக்கு 'அற்பமான கடைக்கண் பார்வை' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 42:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப யழ்லல்ன ரவாம்த அலா ழஹ்ரிஹி' என்பதற்கு, 'பிறகு அந்தக் கப்பல்கள் கடலில் செல்ல முடியாமல் (அலையசைவில்) ஆடிக்கொண்டு அப்படியே நின்று போய்விடும்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 42:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷறஊ' எனும் சொல்லுக்கு, 'ஒரு புதிய வழிமுறையை வகுத்துக் கொடுத்தார்கள்'' என்று பொருள்.

பகுதி 1

''உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர, இந்த (இறை)ப் பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கேட்கவில்லை என (நபியே!) கூறுக!'' எனும் (திருக்குர்ஆன் 42:23 வது) வசனத் தொடர்.

4818. தாவூஸ் இப்னு கைஸான் அல்யமானீ(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'உறவினர்களிடம் அன்பு காட்டுவதைத் தவிர'' எனும் (திருக்குர்ஆன் 42:23 வது) வசனத் தொடர் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது (அங்கிருந்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), '(இந்த வசனத்திலுள்ள) 'உறவினர்கள்' என்பது 'முஹம்மத்(ஸல்) அவர்களின் உறவினர்களை (பனூ ஹாஷிமை)க் குறிக்கும்'' என்று கூறினார்கள். உடனே, இப்னு அப்பாஸ்(ரலி), 'அவசரப்பட்டுவிட்டீர்; குறைஷிக் குலத்தின் எல்லாக் கிளையினருக்கும் நபி(ஸல்) அவர்களுடன் உறவு முறை இருக்கத்தான் செய்தது'' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்கள், (குறைஷியரின் அனைத்துக் கிளையினரையும் நோக்கி) குறைந்தபட்சம் எனக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள உறவு முறையைப் பேணி (நல்ல முறையில்) நடந்து கொள்வேண்டுமென்றே பெரிதும் விரும்புகிறேன் என்று கூறினார்கள்'' என விளக்கமளித்தார்கள்.

(43) 'ஹாமீம் அஸ் ஸுக்ருஃப்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 43:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அலா உம்மத்தின்' எனும் சொல்லுக்கு 'முன்னோடியாக' என்று பொருள்.

'(இறை மறுப்பாளர்களான) இவர்கள், நாம் அவர்களின் இரகசிய உரையாடல்களையும் ஆலோசனைகளையும் பேச்சுவார்த்தைகளையும் கேட்க முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதே 'வகீலிஹி யாரப்பி'.. என்று தொடங்கும். (திருக்குர்ஆன் 43:88 வது) வசனத்தின் விளக்கமாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

பகுதி 1

''(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்! என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள். அவர் 'நீங்கள் (இப்படியே) இருக்கப் போகிறீர்கள்' என்று பதிலளிப்பார்' எனும் (திருக்குர்ஆன் 43:77 வது) இறைவசனம்.

4819. யஅலா இப்னு உமைய்யா அத்தமீமி(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, '(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!' என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 43:77 வது) வசனத்தை ஓதக் கேட்டேன். 2

கத்தாதா(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 43:56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸலன் லில் ஆம்ரீன்' எனும் சொற்றொடருக்குப் 'பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)' என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) அல்லாதோர் கூறினார்

(திருக்குர்ஆன் 43:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முக்ரினீன்' எனும் சொல்லுக்குக் 'கட்டுப்படுத்தக் கூடியவர்கள்' என்று பொருள். 'இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக் கூடியவர்' என்பதைக் குறிக்க 'முக்ரின்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

(திருக்குர்ஆன் 43:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்வாப்' எனும் சொல்லுக்குக் 'கைப்பிடிகள் இல்லாத கோப்பைகள்' என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 43:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உம்முல் கிதாப்' என்பதற்கு 'மொத்த ஏடு - மூல ஏடு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 43:81 வது வசனத்தின் பொருளாவது:) ரஹ்மானுக்குக் குழந்தை இல்லை; (அவ்வாறு இருப்பதாக யாரும் கூறினால்) கடுமையாக எதிர்ப்பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். 'ரஜுலுன் ஆபிதுன்' எனும் சொல்லுக்கும், 'ரஜுலுன் அபிதுன்' எனும் சொல்லுக்கும் 'வணங்கும் மனிதன்' என்றே பொருள்.

(வகீலிஹீ யா ரப்பீ எனும் 43:88 வது வசனத்தை) 'வ காலர் ரஸூலு யாரப்பீ' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதியுள்ளார்கள். 3 'அபித, 'ய அபது எனும் வினைச் சொற்கள் வழியாக வரும் (ஆபித் எனும் விணையாலணையும் பெயரின் பன்மையான) 'ஆபிதின்' என்பதற்கு மறுக்கக் கூடியவர்கள்' என்று பொருள்'' என்றும் கூறப்படுகிறது.

பகுதி2

''நீங்கள் வரம்பு மீறிச் சென்றுவிட்டிருக்கிறீர்கள் என்பதற்காக நாம் உங்களின் மீது வெறுப்படைந்து இந்த அறிவுரையை உங்களிடம் அனுப்பாமல் நிறுத்தி விடுவோமா, என்ன?' எனும் (திருக்குர்ஆன் 43:5 வது) வசனத்திலுள்ள 'வரம்பு மீறிச் சென்றவர்கள்' என்பதற்கு 'இணைவைப்பவர்கள்' என்று பொருள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (இறுதிச்) சமுதாயத்தின் முன்னோர்கள் (குறைஷியர்) இந்தக் குர்ஆனை நிராகரித்தபோது அது திருப்பி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்குமானால் இந்தச் சமுதாயமே அழிந்துபோயிருக்கும்.

(திருக்குர்ஆன் 43:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸலுல் அவ்வலீன்' எனும் சொற்றொடருக்கு, 'முன்பு வாழ்ந்த சமூகங்களின் தண்டனைகள் (முன்னுதாரணங்களாக) வந்து போயிருக்கின்றன' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 43:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுஸ்ஆ' என்பதற்கு 'நிகரானவர்' என்று பொருள்.

(44) 'அத்துகான்' அத்தியாயம்1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித்(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 44:24 வது வசனத்தில் மூலத்திலுள்ள) 'ரஹ்வன்' எனும் சொல்லுக்குக் 'காய்ந்த வழி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 44:32 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஆலமீன்' (உலகத்தார்) எனும் சொல் அக்காலத்தில் வாழ்ந்த மக்களைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 44:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஉத்திலூஹு' எனும் சொல்லுக்கு 'அவனை இழுத்துச் செல்லுங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 44:54 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ ஸவ்வஜ்னாஹும் பி ஹூர்' எனும் சொற்றொடருக்கு, 'அகன்ற விழி கொண்ட அழகிய நங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம். அவர்களைக் காணும் கண்கள் (அவர்களின் அழகைக் கண்டு) பிரமிக்கும்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 44:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தர்ஜுமுன்' எனும் சொல்லுக்கு, 'என்னை நீங்கள் கொல்வது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 44:24 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரஹ்வன்' எனும் சொல்லுக்கு 'அசையாததாக' என்றும் பொருளுண்டு.

பகுதி 1

எனவே, வானம் ஒரு வெளிப்படையான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்த்திருப்பீராக! (எனும் 44:10 வது இறைவசனம்.)

கத்தாதா(ரஹ்), '(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபர்தம்ப்' எனும் சொல்லுக்கு 'எனவே, எதிர்பார்த்திருப்பீராக' என்று பொருள்'' எனக் கூறினார்கள்.

4820. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), '(மறுமைநாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து(முடிந்து)விட்டன. ஒன்று புகை; இரண்டாவது ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது); மூன்றாவது சந்திரன் பிளந்தது; நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்'' என்று கூறினார்கள். 2

பகுதி 2

அ(ந்தப் புகையான)து, மக்களைச் சூழ்ந்து கொள்ளும். இது துன்புறுத்தக்கூடிய வேதனையாகும். (எனும் 44:11 வது இறைவசனம்.)

4821. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

(குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி(ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தபோது நபி(ஸல) அவர்கள், 'யூசுஃப்(அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்' எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், '(நபியே!) வெளிப்படையொனதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூ சுஃப்யான்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழைவேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகிவிட்டார்கள்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'முளர் குலத்தினருக்கா? நீங்கள் துணிவுமிக்கவர் தாம்'' என்று கூறிவிட்டு, (அவர்களுக்காக) மழைவேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே, அவர்களுக்கு வானம் பொழிந்தது. அப்போது, 'மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 44:15 வது) வசனம் அருளப்பட்டது. (பிறகு அவர்களுக்குப் பஞ்சம்விலகி,) வளமான வாழ்வு ஏற்பட்டபோது, பழைய (இணைவைக்கும்) நிலைக்கே திரும்பிச் சென்றனர்.

அப்போது வல்லவனும் மாண்பாளனுமாகிய அல்லாஹ், 'மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்'' எனும் (திருக்குர்ஆன் 44:16 வது) வசனத்தை அருளினான்.

அந்நாள் பத்ருப்போர் நாளாகும்.3

பகுதி 3

''எங்கள் இறைவனே! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம் (என்று அப்போது கூறுவார்கள்)'' எனும் (திருக்குர்ஆன் 44:12 வது) இறைவசனம்.

4822. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

(ஒருமுறை) நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும்போது,) 'அல்லாஹ்வே நன்கறிவான்'' என்று கூறுவது அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரிடம், '(நபியே! அவர்களிடம்) நீங்கள் கூறிவிடுங்கள்: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பவானை செய்வோரில் ஒருவன் அல்லன்'' என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 38:86). குறைஷியர் நபி(ஸல்) அவர்களிடம் வரம்பு மீறி நடந்து, மாறுசெய்தபோது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. மக்கள் (பசிக்) கொடுமையால் எலும்புகளையும், செத்தவற்றையும் தின்றனர். அவர்களில் ஒருவர் பசி மயக்கத்தால், (கண் பஞ்சடைந்து) தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அவர்கள் 'எவர்கள் இறைவனே! எங்களைவிட்டு இந்த வேதனையை நீக்கிடுவாயாக! நிச்சயமாக, நாங்கள் நம்பிக்கை கொண்டு விடுகிறோம்'' என்று கூறினர். (திருக்குர்ஆன் 44:12)

அப்போது, (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) 'நாம் அவர்களைவிட்டுச் சற்று வேதனையை அகற்றிவிட்டால், அவர்கள் (பழைய இணைவைப்புநிலைக்குத்) திரும்பச் சென்றுவிடுவர்'' என்று கூறப்பட்டது. ஆனாலும், நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்காக) தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ், அவர்களைவிட்டு (தன்னுடைய வேதனையை) அகற்றினான். உடனே அவர்கள் (பழைய இணைவைக்கும் நிலைக்கே) திரும்பச் சென்றனர். (சத்திய நெறியை ஏற்போம் என்று அவர்கள் செய்து கொடுத்த வாக்குறுதியை விட்டெறிந்தனர்.) எனவே, அல்லாஹ் பத்ருப் போர் நாளில், அவர்களைப் பழிவாங்கினான் இதைத்தான் '(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்'' என்று தொடங்கி, 'நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம்'' என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-16) வசனங்கள் குறிப்பிடுகின்றன.4

பகுதி 4

(அந்நேரத்தில்) இவர்கள் உணர்வு பெறுவது எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? (நம்முடைய) வெளிப்படையான தூதர் (முன்பே) அவர்களிடம் வந்திருந்தார் (எனும் 44:13 வது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'திக்ரா' என்பதற்கும், 'திக்ர்' என்பதற்கும் ('உணர்வு பெறுதல்' என்ற) ஒரே பொருளாகும்.

4823. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறுசெய்த குறைஷியருக்கெதிராக, 'இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் (பசியினால்) செத்த பிராணிகளைப் புசிக்கலாயினர். அவர்களில் ஒருவர் பசியினாலும் களைப்பினாலும் எழுந்து (பார்த்தால் கண் பஞ்சடைந்துப் போய்) தமக்கும் வானுக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். பிறகு, '(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்'' என்று தொடங்கி, 'மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்'' என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-15) வசனங்களை இப்னு அப்பாஸ்(ரலி) ஓதினார்கள். பிறகு அன்னார், அவர்கள் 'மறுமை நாளில் அவர்களைவிட்டு வேதனை அகற்றப்படுமா என்ன?' என்று கேட்டுவிட்டு, 'பலமாக பிடிக்கும் நாள்' என்பது, 'பத்ருப் போர் தினமாகும்' என்று (திருக்குர்ஆன் 44:16 வது வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.

பகுதி 5

பின்னர் அவர்கள் அவரைப் புறக்கணித்தது மட்டுமின்றி, 'பயிற்றுவிக்கப்பட்ட பைத்தியக்காரர்' என்றும் கூறினார்கள் (எனும் 44:14 வது இறைவசனம்).

4824. மஸ்ரூக்பின் அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: அல்லாஹ் முஹம்மத்(ஸல்) அவர்களை (நபியாக) அனுப்பி '(நபியே!) கூறிவிடுங்கள்: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் நான் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவன் அல்லன்'' என்று கூறினான். (திருக்குர்ஆன் 36:86) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தமக்குக் குறைஷியர் மாறுசெய்ததைக் கண்டபோது 'இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது; அனைத்துப் பொருட்களையும் அழித்துவிட்டது. அவர்கள் (பசியினால்) எலும்புகளையும் தோல்களையும் புசிக்க வாட்டியது.

அறிவிப்பாளர்களில் ஒருவர் 'அவர்கள் தோல்களையும், செத்தவற்றையும் சாப்பிட்டனர்'' என்று கூறினார். (அப்போது) பூமியிலிருந்து புகையின் தோற்றத்தைப் போல் வெளியேறத் தொடங்கியது. அப்போது அபூ சுஃப்யான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'முஹம்மதே! உம் சமுதாயத்தினர் அழிந்துவிட்டார்கள். அவர்களைவிட்டும் (பஞ்சம்) விலகப் பிரார்த்தனை புரியுங்கள்!'' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (பஞ்சமும் அகன்றது.) பிறகு 'இதற்குப் பின் நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிவிடுவீர்கள்'' என்று கூறினார்கள்.

மன்ஸூர் இப்னு முஃதமிர்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'பிறகு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) '(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்'' என்று தொடங்கித் 'திரும்பச் செல்கிறீர்கள்'' என்று முடியும் (திருக்குர்ஆன் 44:10-15) வசனங்களை ஓதினார்கள்'' என்றும், '(அவர்களைவிட்டும்) மறுமையின் வேதனை அகற்றப்படுமா என்ன? புகை, பலமான பிடி, வேதனை ஆகியன நடந்து முடிந்துவிட்டன'' என்றும் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவர் சந்திரன் பிளந்தது பற்றியும், இன்னொருவர் ரோம (பைஸாந்திய)ர்கள் (தோற்கடிக்கப்பட்டு, பிறகு வென்றது) குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். 5

பகுதி 6

மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் நாம் பழிவாங்கியே தீருவோம் (எனும் 44:16 வது இறைவசனம்).

4825. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாயங்கள் நடந்து (முடிந்து)விட்டன. ஒன்று, (பத்ருப் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை இரண்டாவது, ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது). மூன்றாவது, இறைவனின் தண்டனைப் பிடி, நான்காவது, சந்திரன் பிளந்தது. ஐந்தாவது, புகை 6

(45) 'அல்ஜாஸியா' அத்தியாயம் 1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(திருக்குர்ஆன் 45:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜாஸியா' எனும் சொல்லுக்கு, 'முழந்தாளிட்டு நிம்மதியற்ற நிலையில் இருப்பவர்கள்' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 45:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஸ்தன்ஸிகு' எனும் சொல்லுக்கு 'நாம் பதிவுச் செய்து கொண்டிருந்தோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 45:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நன்ஸாக்கும்' எனும் சொல்லுக்கு 'நாம் உங்களை (நினைக்காது)விட்டுவிடுகிறோம்' என்று பொருள்.

பகுதி 1

காலம் தவிர வேறெதுவும் நம்மை அழிப்பதில்லை என (மறுமையை நம்பாத) அவர்கள் கூறுகிறார்கள் (எனும் 45:24 வது வசனத் தொடர்).

4826. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். 2

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(46) 'அல்அஹ்காஃப்' அத்தியாயம் 1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 46:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துஃபீளுன்' எனும் சொல்லுக்கு 'நீங்கள் கூறுவதை' என்று பொருள்.

சிலர் கூறுகின்றனர்: (திருக்குர்ஆன் 46:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸாரத்' எனும் சொல்லுக்கும் (இன்ன பிற ஓதல்களில் வந்துள்ள) 'உஸ்ரத்', 'அஸரத்' ஆகிய சொற்களுக்கும் 'எஞ்சியுள்ள ஏதேனும் ஞானம்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 46:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பித்அம் மினர் ருசுலி' எனும் சொற்றொடருக்கு 'நான் ஒன்றும் முதன் முதலாய் வந்த இறைத்தூதர் அல்லன்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்.

(திருக்குர்ஆன் 46:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அ ரஅய்த்தும்' (நீங்கள் கவனித்தீர்களா?) என்பதிலுள்ள (வினாப் பொருளைத் தரும்) 'அ' எனும் இடைச்சொல், (அல்லாஹ் அல்லாத கற்பனைக் கடவுள்களை வணங்குவது நியாயம் தான் என்று வாதிட்டு வந்த மக்கா நகர இறை மறுப்பாளர்களுக்கு) எச்சரிக்கையாகவே கூறப்பட்டுள்ளது. (மறுப்பாளர்களே!) உங்களின் வாதம் உண்மை என வைத்துக் கொண்டாலும் அந்தக் கடவுள்கள் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர். (படைத்தவனே வணங்குவதற்குத் தகுதியானவன் ஆவான். படைக்கப்பட்ட பொருள்கள் அல்ல.) என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

'அரஅய்த்தும்' (நீங்கள் கவனித்தீர்களா) என்பதற்கு 'நீங்கள் கண்ணால் கண்டீர்களா?' என்பது பொருளன்று. நீங்கள் வணங்கிவரும் அல்லாஹ் அல்லாதவை ஏதேனும் ஒன்றைப் படைத்தன என்பதை நீங்கள் அறிவீர்களா? (நிலைமை இவ்வாறிருக்க, அந்த இயக்கமற்ற கற்பனைக் கடவுள்களை வணங்கிவரும் நீங்கள் அநியாயக்காரர்கள் அல்லவா? உங்களின் இந்தப் பகுத்தறிவற்ற நிலையை நீங்களே யோசித்துப் பார்த்ததுண்டா?)'' என்றே பொருள்.

பகுதி 1

ஒருவன் தன் பெற்றோரிடம் 'சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே)' என்று கூறுகிறான். பெற்றோர் இருவரும் (மகனுக்காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, 'உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது'' என்று கூறினார்கள். ஆனால், அவனோ 'இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை'' என்று கூறுகிறான் (எனும் 46:17 வது இறைவசனம்).

4827. யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்

மர்வான் இப்னு அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா(ரலி) நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா(ரலி) அவர்களின் புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) மர்வானுக்கு (மறுப்புக் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் 'அவரைப் பிடியுங்கள்''! என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே, அப்துர் ரஹ்மான்(ரலி) தம் சகோதரி ஆயிஷா(ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். எனவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான் 'ஒருவன் தன் பெற்றோரிடம் 'சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?...'' எனும் (திருக்குர்ஆன் 46:17 வது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில் தான் அல்லாஹ் அருளினான்'' என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) திரைக்கப்பால் இருந்துகொண்டு, '(அபூ பக்ர்(ரலி) அவர்களின் குடும்பத்தினராகிய) எங்களின் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருளவில்லை'' என்று கூறினார்கள்.

பகுதி 2

''ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும்' என்று கூறினார்கள். 'அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவரசப்பட்டுக்கொண்டிருந்தீர்களோ அதுதான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு' (எனக் கூறப்பட்டது)'' எனும் (திருக்குர்ஆன் 46:24 வது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆரிள்' எனும் சொல்லுக்கு 'மேகம்' என்று பொருள்.

4828. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள். 2

4829. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி(ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், 'இறைத்தூதர் அவர்களே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ('ஆத்' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, 'இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்'' என பதிலளித்தார்கள்.

(47) 'முஹம்மத்' அத்தியாயம் 1

(திருக்குர்ஆன் 47:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவ்ஸாரஹா' எனும் சொல்லுக்கு 'எதிரணியின் பாவங்கள் முற்றுப்பெற்று அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிந்தவர் தவிர வேறெவரும் எஞ்சாத வரையில்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 47:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ரஃபஹா' எனும் சொல்லுக்கு 'எந்த சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறானோ' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 47:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவ்வல்லதீன ஆமனூ' எனும் சொற்றொடருக்கு 'நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்து பாதுகாப்பவன்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 47:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸமல் அம்ர்' எனும் சொற்றொடருக்குக் 'கட்டளை முடிவானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 47:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபலா தஹினூ' எனும் சொல்லுக்கு 'எனவே, நீங்கள் பலவீனமடைந்துவிடாதீர்கள்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 47:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அள்ஃகானஹும்' எனும் சொல்லுக்கு 'அவர்களின் குரோதங்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 47:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆசின்' எனும் சொல்லுக்குச் 'சுவை மாறுகின்ற' என்று பொருள். (இதன்படி, 'ஃகைரி ஆசினின்' என்பதற்குச் 'சுவைமாறாத' என்று பொருள் அமையும்).

பகுதி 1

மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவுகளைத் துண்டித்துவிட முனைகிறீர்களா? (எனும் 47:22 வது வசனத் தொடர்.)

4830. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், 'என்ன?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்'' என்று கூறியது. 'உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ் 'இது (அவ்வாறுதான்) நடக்கும்'' என்று கூறினான்.

அறிவிப்பாளர் அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

4831. ஸயீத் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்

மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்துவிட்டுப் பிறகு, 'நீங்கள் விரும்பினால், '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று கூறினார்கள்.

4832. மேற்சொன்ன இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுளள்து.

(திருக்குர்ஆன் 47:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆசின்' எனும் சொல்லுக்கு 'மாறுகின்ற' என்று பொருள்.

(48) 'அல்ஃபத்ஹ்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 48:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பூறா' எனும் சொல்லுக்கு 'அழிவிற்குள்ளானவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 48:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சீமாஹும் ஃபீ வுஜூஹிஹிம்' (அவர்களின் முகங்களில் உள்ள அடையாளம்) என்பது, முகமலர்ச்சியைக் குறிக்கும் என்று முஜாஹித்(ரஹ்) கூறினார்கள் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது.

மன்ஸூர் இப்னு முஃதமிர்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'அது பணிவைக் குறிக்கும்'' என்று முஜாஹித்(ரஹ்) கூறினார்கள் எனக் காணப்படுகிறது.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷத்அஹு' எனும் சொல்லுக்கு, 'அதன் தளிர்' என்று பொருள். 'ஃபஸ்தஃக்லழ' எனும் சொல்லுக்கு 'அது பருத்துக் கனமாகிறது' என்று பொருள். 'சூக்' எனும் சொல்லுக்குப் 'பயிரைத் தாங்கி நிற்கும் தண்டு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 48:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாயிரத்துஸ் ஸவ்ஃ' எனும் சொல்லுக்குத் 'தீமையின் சுழற்றி' என்று பெருள். 'ரஜ்லுஸ் ஸவ்ஃ' (தீய மனிதன்) என்று சொல்லப்படுவது போல் இங்கு (தீமையின் சுழற்றி என்று சொல்லப்பட்டுள்ளது) 'தீமையின் சுழற்சி' என்பது (இறைவன் அளிக்கும்) வேதனையைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 48:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துஅஸ்ஸிரூஹு' எனும் சொல்லுக்கு, 'நீங்கள் அவருக்கு உதவி புரிவீர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 48:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷத்அஹு' (அதன் தளிர்) என்பது, கதிரின் தளிரைக் குறிக்கும். அந்தக் கதிர் பத்து, அல்லது எட்டு, அல்லது ஏழு தானிய விதையைத் தந்து ஒன்றை மற்றோடொன்று சேர்த்து பலப்படுத்துகிறது. இதைத்தான் அல்லாஹ், 'ஃபஆஸரஹு' (அதனைப் பலப்படுத்தியது) என்று கூறுகிறான். அந்தக் கதிர் ஒன்றே ஒன்றாக இருக்குமானால், ஒரு தண்டின் மீது நிலைத்து நிற்க முடியாது.

இது நபி(ஸல்) அவர்கள் குறித்து அல்லாஹ் கூறியுள்ள உவமையாகும். (இஸ்லாமிய அழைப்புப் பணிக்காக,) நபி(ஸல்) அவர்கள் தன்னந்தனியாக புறப்பட்டார்கள். முளைத்து வரும் தளிரின் மூலம் விதைக்கு வலுவூட்டுவது போல், அவர்களின் தோழர்களின் மூலம் நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வலுவூட்டினான்.

பகுதி 1

நபியே! நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் (எனும் 48:1 வது இறைவசனம்.)

4833. அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) ஏதோ ஒன்றைக் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர்(ரலி) (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), 'உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே'' என்று கூறினார்கள்.

மேலும், உமர்(ரலி) கூறினார்: அதற்குப் பிறகு நான் என்னுடைய ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக்கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள் 'இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதே அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்'' என்று கூறிவிட்டு, 'உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம்'' என்று (தொடங்கும் 48:1 வது இறைவசனத்தை) ஓதினார்கள். 2

4834. கத்தாதா இப்னு தீஆமா(ரஹ்) அறிவித்தார்

''(நபியே!) நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம்'' எனும் (திருக்குர்ஆன் 48:1 வது) இறைவசனம் ஹுதைபிய்யா உடன் படிக்கையையே குறிக்கிறது'' என்று அனஸ்(ரலி) கூறினார். 3

4835. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்காவெற்றி தினத்தில் (தம் ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) 'அல்ஃபத்ஹ்' எனும் (48 வது) அத்தியாயத்தைத் 'தர்ஜீஉ' செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன். 4

பகுதி 2

''(நபியே!) உங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தன்னுடைய அருட்கொடையை உங்களின் மீது நிறைவு செய்து, உங்களுக்கு வேர்வழியைக் காட்டுவதற்காகவும் தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்)'' எனும் (திருக்குர்ஆன் 48:2 வது) இறைவசனம்.

4836. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் 'தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?)'' என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கேட்டார்கள்.5

4837. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். எனவே நான், 'ஏன் இப்படிச் செய்கிறீர்கள், இறைத்தூதர் அவர்களே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?' என்று கேட்டேன். அவர்கள், 'நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா?' என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி(ஸல்) அவர்களின் உடல் சதை போட்டபோது அமர்ந்து தொழுதார்கள். 'ருகூஉ' செய்ய நினைக்கும்போது, எழுந்து (சிறிதுநேரம்) ஓதுவார்கள். பிறகு, 'ருகூஉ' செய்வார்கள். 6

பகுதி 3

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8 வது இறைவசனம்.)

4838. அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்

''(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 48:8 வது) குர்ஆன் வசனத்தையே 'தவ்ராத்' வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

''நபியே! நிச்சயமாக, நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் ('முத்தவக்கில்') என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்.)

(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்துவிட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரின் உயிரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் 'அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார். 7

பகுதி 4

அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4 வது வசனத் தொடர்.)

4839. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபித்தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். அவரின் குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.

அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்தபோது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டு கொண்டிருந்தது. விடிந்தவுடன் அவர் நபி(ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது'' என்று கூறினார்கள். 8

பகுதி 5

''(நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் உங்களிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்துகொண்டிருந்தபோது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி அடைந்துகொண்டான்'' எனும் (திருக்குர்ஆன் 48:18 வது) வசனத் தொடர்.

4840. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஹுதைபிய்யா நாளில் நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். 9

4841. அந்த மரத்தினடியில் நடைபெற்ற ('பைஅத்துர் ரிள்வான்' எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை) இரண்டு விரல்களால் எறிந்து விளையாடும்) 'கத்ஃப்' எனும் கல்சுண்டு விளையாட்டிற்குத் தடைவிதித்தார்கள். 10

4842. உக்பா இப்னு ஸுஹ்பான்(ரஹ்) கூறினார்

குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரலி) கூற கேட்டேன். (நபி(ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.)11

4843. அபூ கிலாபா அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரஹ்) கூறினார்

அந்த மரத்(தடியில் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு அள்ளஹ்ஹாக்(ரலி) (கூறினார்கள்:)12

4844. ஹுபைப் இப்னு அபீ ஸாபித்(ரஹ்) கூறினார்

நான் அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்களிடம் ('காரிஜிய்யா' எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

நாங்கள் 'ஸிஃப்பீன்' எனுமிடத்தில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது '(அப்துல்லாஹ் இப்னு அல்கவ்வா' என்றழைக்கப்படும்) ஒருவர், 'அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படுகிறவர்களை நீங்கள் காணவில்லையா?' என்று கேட்டதற்கு அலீ(ரலி), 'ஆம், (அல்லாஹ்வின் வேதம் கூறுகிற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக்கொள்வேன்'') என்று கூறினார்கள். அப்போது ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) கூறினார்:

(இப்போரில் கலந்துகொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி(ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடைபெற்ற ஹுதைபியா நாளில் எங்களை பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போரிடுதல் பொறுத்தமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர்(ரலி) வந்து, '(அல்லாஹவின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும்) இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 'ஆம்'' என்று பதிலளித்தார்கள். உமர்(ரலி) 'அப்படியிருக்க, நாம் நம்முடைய மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வின் தூதராவேன். என்னை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்'' என்று கூறினார்கள்: (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணைவைப்பாளர்களின் மீது) உமர்(ரலி) கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'அபூ பக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா?' என்று (நபி(ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றே) கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'கத்தாபின் புதல்வரே! நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்'' என்று கூறினார்கள். அப்போது 'அல்ஃபத்ஹ்' எனும் (48 வது) அத்தியாயம் இறங்கிற்று. 13

(49) 'அல்ஹுஜுராத்' அத்தியாயம்1

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 49:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா துக்கத்திமூ' (முந்தாதீர்கள்) எனும் சொல்லுக்குத் 'தன்னுடைய தூதரின் நாவால் அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்பாக, முந்திக் கொண்டு நீங்களாகத் தீர்ப்பு வழங்க முற்படாதீர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 49:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இம்தஹன (பாரிசோதித்தான்) எனும் சொல்லுக்குத் 'தூய்மைப்படுத்தினான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 49:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா தனாபஸூ' (புனைபெயர் சூட்டாதீர்கள்) என்பது இஸ்லாத்தை ஏற்ற பின்னர், ஒருவரை (அவரின் பழைய) இறைமறுப்பு (மதத்து)டன் இணைத்து அழைப்பதைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 49:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா யலித்கும்' எனும் சொல்லுக்குக் 'குறைக்க மாட்டான்' என்று பொருள். (இதன் இறந்த கால வினைச் சொல்லும், 52:21 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றதுமான) 'வமா அலத்னாஹும்' எனும் சொல்லுக்கு 'அவர்களுக்கு நாம் குறைத்துவிடமாட்டோம்'' என்று பொருள்.

பகுதி 1

''இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும்'' என்று (திருக்குர்ஆன் 49:2 வது) இறைவசனம்.

(இந்த வசனத்திலுள்ள) 'நீங்கள் அறியாத நிலையில்' என்பது (மூலத்திலுள்ள) 'லா தஷ்உரூன்' எனும் சொல்லின் பொருளாகும். இதனடிப்படையில் தான் 'அஷ்ஷாஇர்' (கவிஞர்) எனும் சொல்லுக்கு 'அறிஞர்' என்றும் பொருள் சொல்லப்படுகிறது.

4845. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்

(ஒருமுறை) நல்லவர்களான அபூ பக்ர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக்கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ இப்னு ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூ பக்ர்), இன்னொருவரை (கஅகாஉ இப்னு மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். 'அந்த இனனொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது'' என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ(ரஹ்) கூறினார்: அப்போது அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'எனக்க மாறு செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள்'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'தங்களுக்கு மாறு செய்வது என் விருப்பமன்று'' என்று கூறினார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, 'இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!'' எனும் (திருக்குர்ஆன் 49:2 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்:

இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி(ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்துகொள்வார்கள்.

இப்னு ஸுபைர்(ரலி) இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூ பக்ர்(ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

4846. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 49:2 வது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒருவர் 'அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தம் தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தம் வீட்டில் அமர்ந்துகொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்டதற்கு ஸாபித்(ரலி), '(என்னுடைய நிலை) மோசம் தான். நான் நபி(ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் என்னுடைய குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரகவாசிகளில் ஒருவன்தான்'' என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'ஸாபித் இப்னு கைஸ் இப்படி இப்படிக் கூறினார்'' என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூஸா இப்னு அனஸ்(ரஹ்) கூறினார்:

அந்த மனிதர் ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களிடம், (இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஸாபித் இப்னு கைஸ் அவர்களிடம் சென்று 'நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே' என்று சொல்!'' என்று கூறினார்கள். 3

பகுதி 2

(நபியே! உங்கள்) அறைகளுக்கு வெளியே இருந்து உங்களை இரைந்து கூப்பிடுவோரில் பெரும்பாலோர் விவரமில்லாதவர்களே! (எனும் 49:4 வது இறைவசனம்.)

4847. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூ பக்ர்(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) 'கஅகாஉ இப்னு மஅபத்' அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்'' என்று (யோசனை) கூறினார்கள். உமர்(ரலி), 'அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!'' என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களை நோக்கி, 'எனக்கு மாறு செய்வதை' அல்லது 'எனக்கு எதிராக மாறு செய்வதையே' நீங்கள் விரும்பினீர்கள்'' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று'' என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன. இது தொடர்பாகவே 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 49:1 வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று. 4

 பகுதி 3

''(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 49:5 வது) வசனத் தொடர். 5
Previous Post Next Post