அத்தியாயம் 65/3 திருக்குர்ஆன் விளக்கவுரை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 65

 திருக்குர்ஆன் விளக்கவுரை 4680 - 4738

(10) 'யூனுஸ்' அத்தியாயம் 1

பகுதி 1

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 10:24 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபக்த்தலத்த' (அது கலந்தது) என்பதன் கருத்தாவது: அந்த (மழை) நீரினால் பல்வேறு நிறங்களில் (மனிதனும் மிருகமும் புசிக்கிற புற்பூண்களாக) முளைத்தன.

(அல்லாஹ் கூறினான்:) அல்லாஹ்வுக்கு சந்ததி உண்டென்று அவர்கள் கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததி முதலியவற்றின்) தேவையற்றவன். (திருக்குர்ஆன் 10:68)

ஸைத் இப்னு அஸ்லம்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 10:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கதம ஸித்கின்' எனும் சொல் முஹம்மத்(ஸல்) அவர்களைக் குறிக்கிறது.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(கதம ஸித்கின் எனும்) இச்சொல்லுக்கு, ('முன்னேற்பாடாகச் செய்த) நன்மை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 10:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தில்க்க ஆயாத்' (இவை இவ்வேதத்தின் வசனங்களாகும்) எனும் வாக்கியத்திற்கு 'இவை இவ்வேதத்தின் குறியீடுகளாகும்'' என்று பொருள். 2

இதைப்போன்றே (திருக்குர்ஆன் 10:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜரைன பிஹிம்' (அவர்களை நடத்திச் சென்றது) என்பதற்கு 'பிக்கும்' (உங்களை நடத்திச் சென்றது) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 10:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஅவாஹும்' எனும் சொல்லுக்கு 'அவர்களின் பிரார்த்தனை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 10:22 வது வசனத்தில்) 'நிச்சயமாக நாம் (அலைகளால் நாலாபக்கங்களிலிருந்தும்) சூழந்து கொள்ளப்பட்டோம்'' என்பதற்கு 'அழிவை நெருங்கிவிட்டோம்' என்று பொருள். (அல்லாஹ் கூறினான்:) 'அவர்களின் பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது'' (திருக்குர்ஆன் 02:81)

(திருக்குர்ஆன் 10:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஅத்பஅஹும்' எனும் சொல்லும் (அதே வேர்ச் சொல்லில் இருந்து வந்த) 'ஃபத்தபஅஹும்' எனும் சொல்லும் ('அவர்களைப் பின்தொடர்ந்தனர்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

''மனிதர்கள் நன்மையைப் பெற அவசரப்படுவதைப் போல், (அவர்கள் அவசரப்பட்டுக் கோரும்) தீமையை அல்லாஹ் அவர்களுக்கு அவசரமாக வழங்கினால், அவர்களின் ஆயுள் அவர்களுக்கு (என்றோ) முடிக்கப்பட்டிருக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 10:11 வது) வசனத்தின் கருத்தாவது: மனிதன் கோபப்படுகிறபோது தன் குழந்தை மற்றும் தன் செல்வத்தைப் பார்த்து 'அல்லாஹ்வின் சாபம் இதன் மீது உண்டாகட்டும்! இதில் வளம் (பரக்கத்) இல்லாமல் போகட்டும்!'' என்று பிரார்த்திக்க, அதை அல்லாஹ் அவரசப்பட்டு நடைமுறைப்படுத்தினால், யாருக்கெதிராக இது கூறப்பட்டதோ அவர் (உடனுக்குடன்) அழிக்கப்பட்டிருப்பார்; அவரை அல்லாஹ் இறக்கச் செய்திருப்பான்.

''நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 10:26 வது) வசனத்தின் கருத்தாவது: நன்மை செய்தவர்களுக்கு அதுபோன்ற நன்மையும், அதைவிடக் கூடுதலாகப் பாவமன்னிப்பும் கிடைக்கும்.

மற்றவர்கள் கூறுகிறார்கள்: அதைவிடக் கூடுதலாக அல்லாஹ்வின் தரிசனமும் கிடைக்கும்.

(திருக்குர்ஆன் 10:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கிப்ரியாஉ' எனும் சொல், 'ஆட்சியதிகாரத்தைக் குறிக்கும்.

பகுதி 2

மேலும், நாம் இஹ்ராயீலின் வழித்தோன்றல்களைக் கடலைக் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும் அநீதியும், அக்கிரமமும் இழைப்பதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில், ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கத் தொடங்கியபோது 'இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டார்களோ அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாருமில்லை என்று நானும் நம்பிக்கை கொண்டேன். மேலும், (அந்த இறைவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களில் நானும் ஒருவனாவேன்' என்று கூறினான் (எனும் 10:90 வது இவைசனம்).

(திருக்குர்ஆன் 10:92 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நுன்ஜீக்க' (அல்லது 'நுனஜ்ஜீக்க') எனும் சொல்லுக்கு 'உன்னை (பூமியின்) மேடான ஓரிடத்தில் எறிவோம்'' என்று பொருள்.

4680. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தார்கள். (அங்கு) யூதர்கள் 'ஆஷூரா' (முஹர்ரம் 10ஆம் நாள்) நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அன்றி அவர்கள், 'இது மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றிகொண்ட நாள்'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் தம்தோழர்களிடம், '(யூதர்களான) இவர்களைவிட மூஸா(அலை) அவர்களுக்கு நீங்கள்தாம் அதிக உரிமையுடையவர்கள்; எனவே, (அந்நாளில்) நீங்கள் நோன்பு நோற்பீர்களாக!'' என்று கூறினார்கள். 3

(11) 'ஹூத்' அத்தியாயம் 1

அபூ மைஸரா அம்ர் பன் ஷர்ஹபீல்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 11:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் 'இரக்க சிந்தனையுடையவர்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 11:27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பாதியர் ரஃயி' (எங்கள் பார்வையில்) எனும் சொற்றொடருக்கு 'எங்களுக்குத் தென்பட்ட வகையில்' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 11:44 வது வசனத்திலுள்ள) 'ஜூதீ' என்பது ஒரு தீவிலுள்ள மலையாகும்.2

ஹஸன் அல் பஸாரீ(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 11:87 வது வசனத்திலுள்ள) 'நிச்சயமாக நீர் கருணைமிக்க நேர்மையாளர்தாம்' எனும் வாக்கியத்தை (மத்யன் நகர மக்கள்) ஷுஐப்(அலை) அவர்களிடம் பரிகாசமாகவே கூறினர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 11:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்லிஈஃ' எனும் சொல்லுக்கு '(வானமே!) நிறுத்திக் கொள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:77 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸீப்' எனும் சொல்லுக்குக் 'கடுமையானது என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லாஜரம' எனும் சொல்லுக்கு 'ஆம் (மெய்யாகவே!)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வ ஃபாரத் தன்னூர்' (அடுப்புப் பொங்கியது) எனும் வாக்கியத்திற்கு 'வெள்ளம் பீறிட்டது' என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

('அத்தன்னூர்' எனும்) இச்சொல்லுக்கு 'பூமியின் மேற்பரப்பு' என்று பொருள்.

பகுதி1

இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார்கள். தெரிந்துகொள்ளுங்கள்: இவர்கள் ஆடைகளால் தங்களை மூடி மறைத்துக்கொண்ட போதிலும் அவர்கள் மறைக்கிறவற்றையும், அவர்கள் வெளிப்படுத்துகிறவற்றையும் அல்லாஹ் நன்கறிகிறான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் (எனும் 11:5 வது இறைவசனம்).

(திருக்குர்ஆன் 11:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாக்க' எனும் சொல்லுக்கு 'இறங்கியது' என்று பொருள். (அதன் எதிர்காலவினைச் சொல்லான) 'யஹீக்கு' என்பதற்கு 'இறங்கும்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஊஸுன்' (நம்பிக்கையிழந்தவன்) எனும் சொல் 'யஇஸ்த்து (நம்பிக்கையிழந்தேன்) என்பதிலிருந்து 'பஃஊல்' எனும் வாய்ப்பாட்டில் வந்ததாகும்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 11:36 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தப்தயிஸ்' எனும் சொல்லுக்குக் 'கவலைப்படுதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:5 வது வசனத்திலுள்ள) 'அவனிடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்'' என்பதன் கருத்தாவது: முடிந்தால் அல்லாஹ்விடமிருந்து மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் சத்தியத்தில் சந்தேகம் கொள்கிறார்கள்.

4681. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) வசனத்தை 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்'' என ஓத கேட்டேன். அவர்களிடம் அது குறித்து நான் (விளக்கம்) கேட்டதற்கு அவர்கள் 'மக்கள் சிலர், இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்று (ஆடையை நீக்கிடத் தம் பிறவு உறுப்பு) வானத்திற்குத் தெரியும்படி உட்காருவதையும், இவ்வாறே தம் மனைவிமார்களுடன் உறவு கொள்ளும்போது (தம் ஆடையை நீக்கிப் பிறவி உறுப்பு) வானத்திற்குத் தெரிந்து விடுவதையும் எண்ணி வெட்கப்பட்டு (அதை மறைக்க முயன்று தலைகுனிந்து) கொள்வார்கள். அவர்களைக் குறித்தே இந்த வசனம் அருளப்பட்டது'' என்று கூறினார்கள்.

4682. முஹம்மத் இப்னு அப்பாத் இப்னி ஜஅஃபர்(ரஹ்) கூறினார்

இப்னு அப்பாஸ்(ரலி) 'அலா இன்னஹும் தஸ்நவ்னீ ஸுதூருஹும்'' என்று இந்த (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை ஓதினார்கள். நான், 'அபுல் அப்பாஸே! இந்த வசனத்திலுள்ள 'தங்கள் நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கிறார்கள்'' என்பதன் பொருள் என்ன?' என்று கேட்டேன். அவர்கள், 'சிலர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ள விரும்பும்போது, அல்லது (இயற்கைக் கடனை நிறைவேற்ற) தனியே ஒதுங்கச் செல்லும்போது (தம் பிறவி உறுப்பு வெளியே தெரிந்து விடுகிறதே என்று) வெட்கப்பட்டு (குனிந்து தம் நெஞ்சுகளால் அதை மூடி மறைக்க முற்பட்டு) வந்தார்கள். அப்போது இந்த இறை வசனம் அருளப்பட்டது'' என்று கூறினார்கள்.

4683. அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) 'இதோ! அவர்கள் (தம் தீய எண்ணங்களை) அல்லாஹ்விடமிருந்து மறைப்பதற்காகத் தம் நெஞ்சங்களைத் திருப்பிக்கொள்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 11:5 வது) இறைவசனத்தை (பிரபல ஓதலின் படி) 'அலா இன்னஹும் யஸ்னூன ஸுதூரஹும்' என்றே ஓதினார்கள்.

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களல்லாத மற்ற சிலர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'யஸ்தஃக்ஷூன' எனும் சொல்லுக்கு 'அவர்கள் தங்கள் தலைகளை மூடிக்கொள்கிறார்கள்' எனும் பொருள்.

(திருக்குர்ஆன் 11:77 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சீஅ பிஹிம்' என்பதற்கு 'லூத் (அலை) நல்லெண்ணத்தை இழந்தார்கள்' என்று பொருள். 'ளாக்க பிஹிம்' என்பதற்குத் 'தம் விருந்தினர்களைக் குறித்து(அவர்களைத் தம் தீய செயலுக்குப் பயன்படுத்திக்கொள்ளத் தம் சமுதாயத்தார் முயல்வார்களோ எனும்) சங்கடம் லூத்(அலை) அவர்களுக்கு ஏற்பட்டது'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:81 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பிகித்இம் மினல் லைல்' என்பதற்கு 'இரவின் இருட்டு இருக்கும்போதே' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:88 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இலைஹி உனீப்' எனும் வாக்கியத்திற்கு 'அவன் பக்கமே நான் திரும்புகிறேன்' என்று பொருள்.

பகுதி : 2

''(அப்போது) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மீதிருந்தது'' எனும் (திருக்குர்ஆன் 11:7 வது வசனத் தொடர்.

4684. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

வலிவும் உயர்வும் கொண்ட அல்லாஹ், 'நீ (என் திருப்தியை அடைந்திட) செலவுசெய். உனக்காக நான் செலவுசெய்வேன்'' என்று சொன்னான்.

மேலும் ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ்வின் கரம் நிரம்பியுள்ளது. செலவிடுவதால் அது வற்றிப் போய்விடுவதில்லை. அது இரவிலும் பகலிலும் (அருள் மழையைப்) பொழிந்து கொண்டேயிருக்கிறது. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் அவன் செலவிட்ட எதுவும் அவனுடைய கைவசமுள்ள (செல்வத்)தைக் குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா! (வானங்களையும் பூமியையுளம் படைப்பதற்கு முன்னர்) அவனுடைய அரியாசனம் (அர்ஷ்) நீரின் மேலிருந்தது. அவனுடைய கரத்திலேயே தராசு உள்ளது. அவனே (அதைத்) தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 11:54 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஉதராக்க' எனும் சொல் 'அரவ்த்துஹு' எனும் (வினைச்) சொல்லிலிருந்து 'இஃப்த அல்த்த' எனும் வாய்பாட்டு வினையெச்சத்தில் அமைந்துள்ளது. 'அரவ்த்துஹு' என்பதற்கு 'அவனுக்கு நான் கேடு உண்டாக்கினேன்' என்று பொருள். இ(ந்த மூலத்)திலிருந்துதான் 'யஉரூஹு' (அவனுக்குப் பாதிப்பை உண்டாக்கினான்) ஆகிய வினைச்சொற்கள் பிறந்தன.

''ஒவ்வோர் உயிரினத்தின் குடுமியும் அவனுடைய பிடியிலேயே இருக்கிறது'' எனும் (திருக்குர்ஆன் 11:56 வது) வசனத்தின் கருத்தாவது: அவனுடைய ஆட்சியதிகாரத்திலேயே உள்ளது.

(திருக்குர்ஆன் 11:59 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யகூலுல் அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள் கூறுவர்) என்பதன் ஒருமை 'ஸாஹிப்' (நண்பன்) என்பதைப் போன்று.

(திருக்குர்ஆன் 11:61 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்தஉமரக்கும்' எனும் சொல்லுக்கு 'உங்களை (அதில்) வசிப்பவர்களாக ஆக்கினான்' என்று பொருள். இதே வகையைச் சேர்ந்ததே 'அஉமர்த்துஹுத் தார' என்பதும். இதன் பொருள்: அவனுக்கு இவ்வீட்டை (அவன் வாழ்நாள் முழுவதும்) உடைமையாக்கிக் கொடுத்தேன்.

(திருக்குர்ஆன் 11:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நம்ரஹும்' எனும் சொல்லும், (அதே போன்ற) 'அன்கரஹும்', 'இஸ்தன்கரஹும்' ஆகிய சொற்களும் ('அவர்களைப் பற்றிச் சந்தேகம் கொண்டார்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 11:73 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹமீதுன் மஜீத்' என்பதில் 'மஜீத்' (மாட்சிமை மிகுந்தவன்) எனும் சொல் 'மாஜித்' எனும் (வினையாலணையும் பெயர்ச்) சொல்லில் இருந்து 'ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும். 'ஹமீத்' (புகழுக்குரியவன்) எனும் சொல் 'ஹமித' எனும் (வினைச்) சொல்லிலிருந்து செயப்பாட்டு எச்சவினையின் (மஹ்மூத்) பொருள் கொண்டதாகும்.

(திருக்குர்ஆன் 11:82 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சிஜ்ஜீல்' எனும் சொல்லுக்குக் 'கெட்டியான, பெரிய' என்று பொருள். 'சிஜ்ஜீல்', 'சிஜ்ஜீன்' இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இச்சொற்களின் இறுதியிலுள்ள) 'லாம்', நூன்' ஆகிய எழுத்துகள் (உச்சரிப்பில்) நெருக்கமானவையாகும்.

(கவிஞர்) தமீம் இப்னு முக்பில் கூறினார்:

எத்தனையோ காலாட் படையினர் முற்பகல் வேளையில் தலைக் கவசங்களில் மிகக் கடுமையாகத் தாக்கிவிடுகின்றனர்; (அது சாதாரணத் தாக்குதல் அல்ல! அதை) மாபெரும் வீரர்கள் கூட தம் இறுதி உபதேசத்தில் குறிப்பிடுவர்.

பகுதி : 3

''மத்யனுக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை (நம் தூதராக நியமித்தோம்.) எனும் 11:84 வது வசனத் தொடர்.

அதாவது 'மத்யன்வாசிகளுக்கு (நாம் நியமித்தோம்)'' என்று பொருள். ஏனென்றால், 'மத்யன்' என்பது ஓர் ஊராகும்.

இதைப் போன்றுதான் (திருக்குர்ஆன் 12:82 வது வசனத்திலுள்ள) 'அந்த ஊரைக் கேளுங்கள்; அந்த ஓட்டகக் கூட்டத்தைக் கேளுங்கள்'' என்பதற்கு அந்த ஊர்வாசிகளையும் ஒட்டகக் கூட்டத்தினரையும் (கேளுங்கள்)'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:92 வது வசனத்திலுள்ள) 'நீங்கள் அவனைப் புறக்கணித்துவிட்டீர்கள்'' என்பதற்கு 'இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பவில்லை என ஷுஐப்(அலை) அவர்கள் (அந்த மத்யன்வாசிகளிடம்) கூறினார்கள்'' என்று பொருள்.

(இதன் மூலத்திலுள்ள 'ழிஹ்ரிய்யு'என்பதற்கு 'முதுகுக்கப்பால்' என்று பொருள். பொதுவாக) ஒரு மனிதன் தன் தேவை நிறைவேறாதபோது 'ழஹர்த்த பி ஹாஜத்தீ' (என் தேவையைப் புறக்கணித்துவிட்டாய்) என்றும், 'வ ஜஅல்த்தனீ ழிஹ்ரிய்யன்' (என்னை முதுகுக்கப்பால் ஆக்கிவிட்டாய்) என்றும் கூறுவதுண்டு. ஒரு வாகனப் பிராணியை, அல்லது ஒரு பையை உதவிக்காக உடன் எடுத்துச் செல்வதற்கும் 'ழிஹ்ரிய்யு' என்பர்.

(திருக்குர்ஆன் 11:27 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அராஃதில்' எனும் சொல்லுக்குத் 'தரம் தாழ்ந்தோர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:35 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஜ்ராமீ' (என் குற்றம்) என்பது 'அஜ்ரகித்து' எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லாகும். 'ஜம்ரத்து' எனும் (வினைச்) சொல்(லின் வேர்ச் சொல்) என்றும் சிலர் கூறுகின்றனர்.

(திருக்குர்ஆன் 11:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஃபுல்க்' எனும் சொல்லே ஒருமைக்கும் பன்மைக்கும் உரியதாகும். பொருள்: மரக்கலம், மரக்கலங்கள்.

(திருக்குர்ஆன் 11:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஜ்ராஹா' எனும் சொல்லுக்கு 'அது ஓடுகிறபோது' என்று பொருள். இச்சொல் 'அஜ்ரைத்து' எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லாகும். (இதிலுள்ள 'முர்ஸாஹா (நிறுத்தும் போது) எனும் சொல்) 'அர்ஸைத்து' எனும் (வினைச்) சொல்லின் (வேர்ச் சொல்லாகும். இதன்) பொருள்.: நிறுத்தினேன்.

(இதே சொல் இன்னோர் ஓதல் முறையில்) 'மர்ஸாஹா' என்றும் ஓதப்படுகிறது. (இப்போது அச்சொல்) 'ரஸத் ஹிய' (அது அசையாமல் நின்றது) என்ற வினைச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். 'மஜ்ராஹா' என்பது 'ஜரத் ஹிய' (அது ஓடியது) என்பதிலிருந்து பிரிந்ததாகும்.

முஜ்ரீஹா, முர்ஸீஹா எனும் சொற்கள், செயப்பாட்டு வினைச் சொற்களாகும்.

'அர் ராஸியாத்' எனும் சொல்லுக்கு 'அசையாத' என்று பொருள்.

பகுதி : 4

''அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிடக் கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டுவரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் 'இவர்கள் தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்'' என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:18 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷ்ஹாத்' (சாட்சியாளர்கள்) எனும் சொல்லின் ஒருமை 'ஷாஹித்' என்பதாகும். இது (வாய்பாட்டில்) ஸாஹிப், அஸ்ஹாப் தோழர்கள்) போன்றதாகும்.

4685. ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ்(ரஹ்) அறிவித்தார்

'(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர்(ரலி) (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒருவர் குறுக்கிட்டு, அபூ அப்திர்ரஹ்மானே!'' அல்லது 'இப்னு உமரே!' (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி (நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?' என்று கேட்டதற்கு இப்னுஉமர்(ரலி), 'இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.' அல்லது 'இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். அவரிடம் இறைவன்) 'நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா'' என்(று கேட்)பான். அவர், '(ஆம்) அறிவேன். என் இறைவா! என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், 'இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன்;. இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்.'' என்று கூறுவான். பிறகு அவரின் நற்செயல்களின் பதிவேடு (அவரிடம் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும். 'மற்றவர்கள்' அல்லது 'இறைமறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலையில் அழைக்கப்பட்டு, 'இவர்கள்தாம், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்'' என்று அறிவிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன் என்றார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

பகுதி : 5

'மேலும அக்கிரமம் புரிந்து கொண்டிருக்கக் கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடிவேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்.'' எனும் (திருக்குர்ஆன் 11:102 வது) இறைவசனம்.

(திருக்குர்ஆன் 11:99 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர் ரிஃப்த்' எனும் சொல்லுககு 'உதவி' என்று பொருள். 'அல் மர்ஃபூத்' எனும் சொல்லுக்கு 'உதவியாளர்' என்று பொருள். (அதன் இறந்த கால வினைச் சொல்லான) 'ரஃபத்துஹு' எனும் சொல்லுக்கு 'அவனுக்கு நான் உதவிபுரிந்தேன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:113 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தர்கனூ' எனும் சொல்லுக்குச் 'சாய்ந்து விடுதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 11:116 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப லவ் லா கான' எனும் சொற்றொடருக்கு 'இருந்திருக்க வேண்டாமா' என்று பொருள். 'உத்ரிஃபூ' '(ஆசாபாசங்களைப் பின்பற்றி) அழிந்து போயினர்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 11:106 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸஃபீர்' எனும் சொல்லுக்குக் 'கடுமையான (கூச்சல்)' என்று பொருள. 'ஷஹீக்' எனும் சொல்லுக்குப் 'பலவீனமான குரல்' என்று பொருள்.

4686. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அல்லாஹ் அக்கிரமக்காரனுக்குவிட்டுக் கொடுத்து அவகாசமளிப்பான். இறுதியில் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விடவே மாட்டான்'' என்று கூறிவிட்டு, பிறகு, 'மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்(க்காரர்)களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய பிடி இப்படித்தானிருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 19:102 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பகுதி : 6

''பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலைநாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. அல்லாஹ்வை நினைவுகூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'ஸுலஃப்' எனும் சொல்லுக்கு ஒரு நேரத்திற்குப்பின் ஒரு நேரம்' என்று பொருள். 'ஸுலஃப்' எனும் சொல்லிலிருந்துதான் 'அல் முஸ்தலிஃபா' (இரவில் சிறிது தூரம் மக்கள் கூடுமிடம்) என்ற பெயர் மக்காவிலிருந்து ஓரிடத்திற்கு) வந்தது.

'அஸ்ஸுல்ஃப்' எனும் இச்சொல்லுக்கு 'ஒரு நிலைக்குப்பின் ஒரு நிலை' என்ற பொருளும் உண்டு. (திருக்குர்ஆன் 38:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ஸுல்ஃபா' என்பது 'நெருக்கம்' என்ற பொருள் கொண்ட வேர்ச் சொல்லாகும். 'இஸ்தலஃபூ' எனும் சொல்லுக்கு 'ஒன்று கூடினர்' என்று பொருள். (திருக்குர்ஆன் 26:64 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்லஃப்னா' எனும் சொல்லுக்கு 'நாம் ஒன்று கூட்டினோம்' என்று பொருள்.

4687. இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்

ஒருவர் (அன்னியப்) பெண் ஒருத்தியை முத்தமிட்டுவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் வந்து (பரிகாரம் கேட்டு), இந்த விவரத்தைக் கூறினார். அப்போது 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் நிலைகளிலும் தொழுகையை நிலை நாட்டுங்கள். திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்துவிடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கிறவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்'' எனும் (திருக்குர்ஆன் 11:114 வது) இறைவசனம் அருளப்பட்டது. அந்த மனிதர், 'இது எனக்கு மட்டுமா? (அல்லது அனைவருக்குமா?)'' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என் சமுதாயத்தினரில் இதன்படி செயல்படும் அனைவருக்கும்தான்'' என்று பதிலளித்தார்கள்.

12. 'யூசுஃப்' அத்தியாயம்

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 12:31 வது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள 'முத்கஅன்' எனும் சொல்லுக்கு 'எலுமிச்சை'' (அல்உத்ருஜ்ஜு) என்று பொருள். இதை 'ஹுஸைன் இப்னு அப்திர் ரஹ்மான்'(ரஹ்) அவர்களிடமிருந்து 'ஃபுளைல் இப்னு இயாள்'(ரஹ்) அவர்ககள் அறிவித்தார்கள். மேலும் பெயர் குறிப்பிடாத) ஒருவரிடமிருந்து சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.

ஃபுளைல்(ரஹ்) கூறினார்:

அபிசீனிய மொழியில் எலுமிச்சை 'முத்கன்' எனப்படும்.

கத்தியால் வெட்டப்(பட்டு உண்ணப்)படும் எல்லாப் பொருள்களுக்கும் 'முத்கன்' என்று சொல்லப்படும்.

கத்தாதா(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 12:68 வது வசனத்தின் மூலத்திலுளள) 'ல ஃதூ இல்கி' எனும் சொற்றொடருக்கு 'அறிந்தபடி செயலாற்றுபவர்' என்று பொருள்.

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 12:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸுவாஉ' எனும் சொல், (மேற்) பாகங்கள் இணைந்து (குறுகலான) பாரசீர்களின் மரக்கால் (அளவுப்படியைக் குறிக்கும்; அரபியரல்லாதோர் அதை (நீர் அருந்துவதற்கு உபயோகித்து வந்தனர்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 12:94 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துஃபன்னிதூன்' எனும் சொல்லுக்கு 'என்னை நீங்கள் முட்டாளாக்கிவிடுவீர்கள்' என்று பொருள்.

மற்றவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 12:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃகயாபத்' எனும் சொல் பொதுவாக, உன்னுடைய கண்ணைவிட்டு ஒன்றை மறைக்கிற யாவற்றையும் குறிக்கும். சுற்றுச் சுவர் எழுப்பப்படாத (பாழுங்) கிணறு 'ஜுப்பு' எனப்படும்.

(திருக்குர்ஆன் 12:17 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வமா அன்த்த பி முஃமினீன் லனா' எனும் வாக்கியத்திற்கு 'எங்களை நீங்கள் நம்பவே மாட்டீர்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஷுத்தஹு' எனும் சொல், ஒருவருக்கு (முதுமையின்) பலவீனம் தொடங்கும் முன்புள்ள பருவத்தைக் குறிக்கும். 'பலஃக அஷுத்தஹு' (அவன் தன் வாலிபத்தை அடைந்தான்), 'பலஃகூ அஷுத்தஹும்' (அவர்கள் தம் வாலிபத்தை அடைந்தனர்) என்று (ஒருமை, பன்மை இரண்டுக்குமே 'அஷுத்து' என்றே) கூறப்படுகிறது 'அஷுத்து' எனும் சொல்லின் ஒருமை 'ஷத்துன்' என்றும் சிலர் கூறுவர்.

(திருக்குர்ஆன் 12:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முத்தகஅன்' எனும் சொல், 'உண்ண, பருக, உரையாட நீ எதன் மீது சாய்ந்து அமர்ந்தாயோ அ(ந்தப் பொருள்)தனைக் குறிக்கும். '('முத்தகஅன்' என்பதற்கு) 'எலுமிச்சை' என்று பொருள் கொள்பவர்களின் கருத்துப் பொருத்தமற்றதாகும் அரபுகளின் மொழி வழக்கில் 'எலுமிச்சை' அல்லது ‘நாரத்தைக் காய்' எனும் பொருளில் இச்சொல் வரவேயில்லை.

'முத்தகஉ' என்பதற்குச் 'சாய்ந்துகொள்ளப் பயன்படும் திண்டு' என்பதே பொருள் என நிரூபிக்கப்பட்டவுடன், (மாற்றுப் பொருள் கூறுவோர்) 'எலுமிச்சை' என்பதைக் குறிப்பது 'முத்க்' எனும் சொல்லே என்று கூறி, அதை விட மோசமானதொரு பொருளுக்கு ஓடுகிறார்கள். ஏனெனில் 'முத்க்' எனும் சொல் பெண்குறியின் ஓரத்தையே குறிக்கும். இதனாலேயே பெண்ணை 'மத்கா' (நுனித்தோல் அகற்றப்படாதவள்) என்றும், அவளுடைய மகனை 'இப்னுல் மத்கா' என்றும் கூறுவர். அப்படி ஒருக்கால் அங்கே (திருக்குர்ஆன் 12:31 வது வசனம் கூறுகிற நிகழ்ச்சியில்) எலுமிச்சை இருந்திருப்பின், அது சாய்வுத் திண்டு (வைக்கப்பட்டது)க்குப் பிறகே இருந்திருக்கும்.

(திருக்குர்ஆன் 12:30 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஷஃகஃபஹா' எனும் சொல்லுக்கு, 'அவளுடைய இதயத் திரை வரையில் காதல் வந்துவிட்டது'' என்று பொருள். (இதே சாயலில் உள்ள) 'ஷஅஃபஹா' எனும் சொல்லுக்கு 'அவளுடைய இதயத்தைக் காதல் எரித்துவிட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்பு' எனும் சொல்லுககுச் 'சாய்ந்திடுவேன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அள்ஃகாஸு அஹ்லாம்' எனும் சொற்றொடருக்கு 'விளக்கம் கூற முடியாத (வீண்) கனவுகள்' என்று பொருள். இதன் ஒருமை 'ளிஃக்ஸ்' என்பதாகும். (எனினும்,) 'ஒரு பிடி(புல்) கற்றையை கையில் எடுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 38:44 வது) வசனத்தின் மூலத்திலுள்ள 'ளிஃக்ஸ்' எனும் சொல் இதன் ஒருமையன்று, 'ஒரு கைப்பிடி புல் போன்றது' என்பதே இதன் பொருளாகும்.

(திருக்குர்ஆன் 12:65 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நமீரு' (நாம் உணவு தானியங்கள் வாங்கி வருவோர் எனும் (வினைச்) சொல், 'மீரத்' எனும் வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும் 'நஸ்தாது கைல பஈர்' எனும் வாக்கியத்திற்கு 'ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவிற்குக் கூடுதலாக தானியம் பெற்று வருவோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ஸிக்காயா' எனும் சொல்லுக்கு 'அளவைப் படி' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:80 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஸ்தய் அஸூ' எனும் சொல்லுக்கு 'யஇஸூ' (அவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டார்கள்) என்று பொருள்.

(12:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ லா தைஅஸூ மின் ரவ்ஹில்லாஹ்' எனும் வாக்கியத்திற்கு “அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:80 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கலஸூ நஜிய்யா' எனும் வாக்கியத்திற்கு 'அவர்கள் இரகசியமாக ஒப்புக் கொண்டனர்' என்று பொருள். ('நஜிய்யு எனும் சொல்லின்) பன்மை: 'அன்ஜியா' என்பதாகும். (அதன் எதிர் கால வினைச் சொல்:) 'யத்தனாஜூன' என்பதாகும். ஒருமை, இருமை, பன்மை ஆகிய அனைத்திலும் 'நஜிய்யு' என்பர். பன்மையில் 'அன்ஜியா' என்றும் கூறுவர்.

(திருக்குர்ஆன் 12:85 வது வசனத்தின் மூலத்திலுள்ள) . 'தஃபதஉ (தஃத்குரு) எனும் சொல்லுக்கு 'எப்போதும் (நினைத்துக் கொண்டே) இருப்பீர்' என்று பொருள். 'ஹரள்' எனும் (வேர்ச்) சொல்லுக்கு 'முஹ்ரள்' (உடல் இளைத்துப் போனவர்) எனும் (செயப்பாட்டு வினை எச்சத்தின் பொருளாகும். 'கவலை உங்களை உருக்கிவிடும்' என இதற்குப் பொருள் விரியும்.

(திருக்குர்ஆன் 12:87 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஹ்ஸ்ஸஸூ' எனும் சொல்லுக்குத் 'தகவல் அறிந்து வாருங்கள்' என்று பொருள.

(திருக்குர்ஆன் 12: 88 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஸ்ஜாத்' எனும் சொல்லுக்கு 'அற்பமானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12: 107 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகாஷியா' எனும் சொல்லுக்கு 'நன்கு சூழ்ந்து கொள்ளக்கூடியது' என்று பொருள்.

பகுதி 1

''இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீது தன் அருட்பேற்றினை அவன் நிறைவு செய்தது போன்று உம் மீதும், யஅகூபின் குடும்பத்தினர் மீதும் நிறைவு செய்வான்'' எனும் (திருக்குர்ஆன் 12:6 வது வசனத் தொடர்)

4688. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர்தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான  யஅகூப்(அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப்(அலை) அவர்களேயாவார்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பகுதி : 2

''திண்ணமாக, (நம் தூதர்) யூசுஃப் மற்றும் அவரின் சகோதரர்களி(ன் வரலாற்றி)ல் (அது குறித்து) வினவுகிறவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன'' எனும் (திருக்குர்ஆன் 12:7 வது) இறைவசனம்.

4689. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடம் மக்களிலேயே கண்ணியத்திற்குரியவர் அல்லாஹ்வுக்கு அதிகமாக அஞ்சுபவர் தாம்'' என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள் 'நாங்கள் தங்களிடம் இதைப்பற்றிக் கேட்கவில்லை'' என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர்(இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்'' என்று பதிலளித்தார்கள். மக்கள், 'இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை'' என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அரபுகளின் சுரங்கங்கள் (எனப்படும் அரபுகளின் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? என்றார்கள். மக்கள் 'ஆம்' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'அறியாமைக் காலத்தில் உங்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள்தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்'' என்று பதிலளித்தார்கள்.

இதே நபிமொழி இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி : 3

''இல்லை; உங்கள் மனம் ஒரு (மா பாவச்) செயலை(க் கூட) உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று)'' என்று (திருக்குர்ஆன் 12:18 வது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'சவ்வலத்' எனும் சொல்லுக்கு 'அலங்கரித்துக் காட்டியது' என்று பொருள்.

4690. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) மீது அவதூறு கற்பித்தவர்கள், தாம் சொன்னதைச் சொல்லிக் கொண்டிருந்தபோது ஆயிஷா குற்றமற்றவர்கள் என்று அல்லாஹ் அறிவித்ததைப் பற்றி நான், உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோரிடமிருந்து செவியுற்றுள்ளேன். இவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு எடுத்துரைத்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) 'நீ நிரபராதி என்றால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிடுவான். நீ குற்றமேதும் புரிந்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு'' என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை விட(ச் சிறந்த) முன்னுதாரணம் எனக்குக் கிடைக்கப்போவதில்லை. எனவே, அழகான பொறுமைதான் (எனக்கு நன்று). நீங்கள் புனைந்து கூறும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் உதவி கோர வேண்டும்'' (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ் 'இந்த அவதூற்றைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்...'' என்று (தொடங்கும் 24:11முதல் 20 வரையுள்ள) பத்துவசனங்களை அருளினான்.

4691. ஆயிஷா(ரலி) அவர்களின் தாயார் உம்மூ ரூமான்(ரலி) கூறினார்

நானும் ஆயிஷாவும் வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தபோது ஆயிஷாவுக்கு காய்ச்சல் கண்டுவிட்டது. (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், '(அவரைப் பற்றிப்) பேசப்பட்டு வரும் பேச்சின் காரணத்தினால் (காய்ச்சல் வந்து) இருக்கலாம்!'' என்று கூறினார்கள். நான் 'ஆம்! (அப்படித்தான்)'' என்றேன். ஆயிஷா எழுந்து உட்கார்ந்து கொண்டு, எனக்கும் உங்களுக்கும் உரிய முன்னுதாரணம் யஅகூப்(அலை) அவர்களும் அவர்களின் பிள்ளைகளுமாவார். இல்லை; உங்கள் மனம் ஒரு (பெரிய) காரியத்தை உங்களுக்குக் கவர்ச்சியாக்கிவிட்டது. எனவே, அழகான பொறுமையே (எனக்கு நன்று.) நீங்கள் புனைந்துரைப்பவற்றிலிருந்து அல்லாஹ்விடமே உதவிகோர வேண்டும்'' (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினார்கள்.

பகுதி 4

''அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ அந்தப் பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அவரிடம் கோரி, வாயில்களையெல்லாம் அடைத்துத் தாழிட்டுவிட்டு, 'வாரும்' என்று அழைத்தாள்'' எனும் (திருக்குர்ஆன் 12:23) வது வசனத் தொடர்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹய்த்தலக்க' என்பதற்கு 'ஹவ்ரானியா' எனும் (சிரியா) மொழியில் 'இங்கே வா!' என்று பொருள்.

இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களும், இச்சொல்லின் பொருள் 'வா!' என்பதுதான் என்று கூறுகிறார்கள்.

4692. அபூ வாளில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 12:23 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காலத் ஹைத்த லக்க' எனும் தொடரை, அது நமக்கு எப்படிக் கற்றுத் தரப்பட்டுள்ளதோ அப்படியே நாம் ஓதுகிறோம் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 12:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'மஸ்வாஹு' எனும் சொல்லுக்கு 'இவரின் அந்தஸ்து' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 12:25 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்ஃபயா' எனும் சொல்லுக்கு 'அவர்கள் இருவரும் கண்டனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 37:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'அல்ஃபவ் ஆபா அஹும்' என்பதற்கு 'அவர்கள் தம் மூதாதையரைக் கண்டார்கள்' என்று பொருள்.

இப்னு மஸ்ஊத்(ரலி), (திருக்குர்ஆன் 37:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'பல்அஜிப்த்த வ யஸ்கரூன்' என்பதை) 'பல் அஜீப்த்து வ யஸ்கரூன்' (நான் ஆச்சரியப்டுகிறேன்; அவர்களே பரிகசிக்கின்றனர்) என்று ஓதினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்களிடமிருந்து குறைஷியர் இஸ்லாத்தை ஏற்கக் காலம் தாழ்த்தியபோது நபி(ஸல்) அவர்கள், இறைவா! (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட) ஏழாண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்தி என்னை இவர்களிடமிருந்து பாதுகாத்திடு'' என்று (அவர்களுக்கெதிராகப்) பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் வந்து (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவிற்கென்றால், அவர்கள் எலும்புகளைச் சாப்பிட்டனர்; (கடும் பசி, பட்டினியால் கண் பஞ்சடைத்து பார்வை மங்கி அவர்களில்) ஒருவர் வானத்தை நோக்கினால் அவர் தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். அல்லாஹ் கூறுகிறான்: இனி ஒரு நாளை எதிர்ப்பார்த்திருப்பீராக! அந்நாளில் வானம் வெளிப்படையான புகையைக் கொண்டு வரும்''(திருக்குர்ஆன் 44:10). மேலும், அல்லாஹ் கூறினான்: நாம் சற்று வேதனையை அகற்றிவிடுகிறோம். (ஆனால், அப்போதும்) நீங்கள் (பழைய நிலைக்கே மீள்கிறீர்கள் (திருக்குர்ஆன் 44:15) இந்நிலையில், மறுமை நாளில் இறைமறுப்பாளர்களைவிட்டு வேதனை நீக்கப்படுமா என்ன? (நிச்சயம் நீக்கப்படபோவதில்லை) ஆக, (கடுமையான பசி, பட்டினி ஏற்பட்டதன் மூலம்) அந்த புகையும் வந்துவிட்டது; பத்ருப் போரில் (இறைவனின்) தண்டனையும் வந்துவிட்டது.

பகுதி : 5

அரசர், 'அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார். (அரசரின்) தூதுவர் யூசுஃப் அவரிடம் நீர் உம் எஜமானிடம் திரும்பிச் சென்று, 'தம் கரங்களை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்னவாயிற்று? என்று கேட்டு வாரும். திண்ணமாக, என் இறைவன் அப் பெண்களின் சூழ்ச்சியை நன்கு அறிந்தவனாவான்' என்று கூறினார். பிறகு அரசர் அப்பெண்களிடம் 'நீங்கள் யூசுஃபை உங்கள் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றபோது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன?' என்று வினவியதற்கு அப்பெண்கள், அல்லாஹ் தூய்மையானவன்! நாங்கள் அவரிடம் எத்தகைய தீய அம்சத்தையும் காணவில்லை' என்று கூறினர்'' எனும்(1250, 51 ஆகிய) வசனங்கள்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாஷ' மற்றும் 'ஹாஷா' ஆகிய சொற்களுக்கு 'தூயவன்' என்றும் 'தவிர' என்றும் (அரபி மொழி வழக்கில்) பொருள்.

'ஹஸ்ஹஸ்' எனும் சொல்லுக்குத் தெளிவாகிவிட்டது என்று பொருள்.

4694 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இறைத்தூதர்) 'லூத்' (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணைகாட்டுவானாக! அன்னார் வலுவான ஓர் ஆதவாளனிடமே தஞ்சம் புகுபவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் கழித்த காலம் அளவிற்கு நான் சிறையில் காலம் கழித்திருந்தால் (என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய) அழைப்பு விடுத்தவரை ஏற்று (விடுதலை பெற்று)க் கொண்டிருப்பேன். இப்ராஹீம் (அலை) அவர்களைவிட நாமே (இறைவனின் படைப்பாற்றலைக் கண்கூடாகக் கண்டு உறுதி பெற) அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். அல்லாஹ், நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?' என்று கேட்டபோது அவர்கள், ஆம்; (நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது) ஆயினும், என் நெஞ்சம் நிம்மதியடைவதற்காகத்தான் (இறந்ததை உயிர்ப்பித்துக் காட்டும்படி) கேட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி : 6

(முந்தைய இறைத்தூதர்களுக்கும் இதே நிலை ஏற்பட்டது. அவர்கள் நீண்ட காலம் மக்களுக்கு நல்லுரை புகன்று வந்தார்கள். ஆனால், மக்கள் அதனைக் கேட்கவில்லை) எதுவரையேனில், (மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்துவிட்டார்கள்; மேலும், தங்களிடம் பொய்தான் சொல்லப்பட்டது என்று மக்களும் கருதலானார்கள். அப்பொழுது, நம் உதவி அவர்களை வந்தடைந்தது'' எனும் (திருக்குர்ஆன் 12:110 வது) வசனத் தொடர்.

4695 உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம், '(நிராகரிக்கும் மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறை உதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களை வந்தடைந்தது'' என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110) இவ்வசனத்தின் மூலத்தில் ('பொய்யுரைக்கப்பட்டது என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) 'குஃத்திபூ' (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது 'குஃதிபூ' (மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.

''குஃத்திபூ (தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள்) என்றே வாசிக்க வேண்டுமென ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.

உடனே, 'தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பித்திருக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள். (ஆனால், 'ழன்னூ - நபிமார்கள் சந்தேகித்தார்கள்' என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகிறவாறு எப்படிப்பொருள் கொள்ளமுடியும்?)'' என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி), 'ஆம்! என் ஆயுளின் (இரட்சகன்) மீதாணையாக! அதை அவர்கள் உறுதியாக நம்பியே இருந்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், 'ழன்னூ' என்பதற்கு 'நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்' என்றே பொருள் கொள்ளவேண்டும்; 'சந்தேகித்தார்கள்' என்று பொருள் கொள்ளக்கூடாது)'' என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) அவர்களிடம் நான், ' 'கத்குஃதிபூ' (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்ற நபிமார்கள் கருதலானார்கள்) என்று இருக்கலாமோ!'' என்று கேட்டேன்.

அதற்கு ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும்! நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை'' என்றார்கள்.

உடனே நான், 'இந்த வசனம் (கூறும் பொருள்) தான் என்ன?' என்று கேட்டேன். ஆயிஷா(ரலி), 'இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தினர் தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என்று ஏற்று, அதன்பிறகு (தாம் ஏற்ற மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே போய், இறை உதவியும் தள்ளிப்போய்க்கொண்டிருந்த அந்த(ச் சூழ்) நிலையில்தான், அந்த இறைத்தூதர்கள், தம் சமுதாயத்தினரில் தம் செய்தியை பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டார்கள். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும், துன்பமும் துயரமும் நீண்டுகொண்டே சென்ற காரணத்தாலும்) நம்முடைய செய்தியைப் பொய்யென்று, கருதுகிறார்கள் என்றும் அந்த இறைத்தூதர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நம்முடைய உதவி அவர்களை வந்தடைந்தது'' (என்பதே அந்த வசனத்தின் பொருள்) என பதிலளித்தார்கள்.7

4696. உர்வா(ரஹ்) அறிவித்தார்

நான், (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) 'அது அழுத்தல் குறி இல்லாமல் 'குஃதிபூ' என்றிருக்கலாம் அல்லவா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் காப்பாற்றட்டும்' என்று மேற்கண்டபடி கூறினார்கள்.

(13) 'அர்ர அத்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..)

''தண்ணீரை நோக்கித் தன் இரண்டு கரங்களையும் நீட்டிக்கொண்டிருப்பவனைப் போன்று'' எனும் (திருக்குர்ஆன் 13:14 வது) வசனத்திற்கு இப்னு அப்பாஸ்(ரலி) (விளக்கம்) கூறுகிறார்கள்:

அல்லாஹ்வுடன் அவன் அல்லாத (பொய்யான) தெய்வங்களை வணங்குகிற இணைவைப்பாளனின் நிலை, தாகத்திலுள்ள ஒருவன் தண்ணீரைக் கற்பனை செய்துகொண்டு அதை அடைய விரும்பி, தொலைவிலிருந்து தன் கைகளை நீட்டிக்கொண்டிருப்பதைப் போன்றதாகும். ஆனால், அவனால் (அதை அடைய) முடியாது. மற்றவர்கள் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 13:2 வது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) 'ஸக்கர' எனும் சொல்லுக்குத் 'தனக்குப் பணியவைத்துள்ளான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸுலாஸ்' (முன்னுதாரணங்கள்) எனும் சொல்லின் ஒருமை 'மஸுலா' என்பதாகும். அதற்கு 'ஒப்பானவை', 'நிகரானவை' என்று பொருள். அல்லாஹ் கூறினான்: தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு வந்த (வேதனை நிறைந்த) நாள்கள் போன்றதைத் தவிர வேறு எதனை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? (திருக்குர்ஆன் 10:102)2

(திருக்குர்ஆன் 13:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பி மிக்தார்' எனும் சொல்லுக்குக் 'காலக்கெடு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஅக்கிபாத்' (அடுத்தடுத்து வரக்கூடியவர்கள் எனும் சொல்லானது, (மனிதனின்) பாதுகாப்பில் ஈடுபடும் வானவர்களைக் குறிக்கும்; இவர்கள் ஒருவர் பின் ஒருவராக (காலை மாலையில் முறைவைத்து) வருகை புரிகின்றனர். இச்சொல்லி(ன் வேர்ச் சொல்)லிருந்துதான் 'அல்அகீப்' (பின்தொடர்பவன்) எனும் சொல் பிறந்ததாகக் கூறப்படுகிறது. 'அக்கப்துஃபீ அஸாரிஹி' எனும் வாக்கியத்திற்கு 'அவனுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றேன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:13 வது வசனத்தின் மூலத்தின் இறுதியிலுள்ள) 'அல்மிஹால்' என்பதற்குத் 'தண்டனை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:14 வது வசனத்திலுள்ள) 'தண்ணீரை நோக்கித் தன் இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டிருப்பவனைப் போன்று' என்பதற்குத் 'தண்ணீரைப் பெறுவதற்காக (கைகை நீட்டிக் கொண்டு இருப்பவன்)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:17 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ராபியா' எனும் சொல் ரபா, யர்பூ (உயர்ந்தது, உயரும்) எனும் (வினைச்) சொற்களிலிருந்து பிரிந்ததாகும்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவ் மத்தாஇன் ஸபதும் மிஸ்லுஹு' (அல்லது அதைப்போன்ற சாமான்களுக்காவோ) என்று குறிப்பிடப்பட்டுள்ளதில் 'மத்தாஉ' ('சாமான்கள்') எனும் சொல், 'நீ எதனைப் பயன்படுத்தி வருகிறாயோ அ(த்தகைய தட்டுமுட்டுச் சாமான்கள், வேளாண் கருவிகள், போர்த் தளவாடங்கள் முதலிய)வற்றைக் குறிக்கும்.

மேலும், 'ஜுஃபாஅன்' எனும் சொல், '(அடுப்பிலுள்ள) பாத்திரம் பொங்கி நுரையெழுந்து, பிறகு அது அடங்கியபோது அந்த நுரை எந்தப் பயனுமில்லாமல் (நொடியில்) மறைந்து போவதை'க் குறிக்கும். இவ்வாறுதான் பொய்மையிலிருந்து உண்மை பாகுபடுத்தப்படுகிறது.

(திருக்குர்ஆன் 13:18 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்மிஹாத்' எனும் சொல்லுக்குப் 'படுக்கை விரிப்பு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யத்ரஊன' எனும் சொல்லுக்குத் 'தள்ளிவிடுவார்கள் என்று பொருள். (இதன் இறந்த கால வினைச்சொல் இடம் பெற்றுள்ள) 'தரஃதுஹு அன்னீ' எனும் வாக்கியத்திற்கு 'என்னைவிட்டும் அவனைத் தள்ளிவிட்டேன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:24 வது வசனத்திலுள்ள) 'உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக' எனும் வாக்கியத்திற்கு 'உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்று கூறுவார்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:30 வது வசனத்திலுள்ள) 'அவனிடமே நான் மீளுவேன்' எனும் வாக்கியத்திற்கு 'அவனிடமே நான் பாவமன்னிப்புக் கோரி மீளுவேன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஃபலம் யய்அஸ்' எனும் சொற்றொடருக்குத் 'தெளிவாகவில்லையா' என்று பொருள்.

(அதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'காரிஆ' எனும் சொல்லுக்குத் 'திடுக்கிடச் செய்கின்ற' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 13:32 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஅம்லைத்து' எனும் சொல்லுக்கு 'நீட்டித்தேன்' என்று பொருள். இது, 'மலிய்யு' மற்றும் 'முலாவா' எனும் (வேர்ச்) சொற்களிலிருந்து பிறந்ததாகும்.

இதிலிருந்துதான் (திருக்குர்ஆன் 19:46 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மலிய்யா' (வெகுகாலம்) எனும் சொல் பிறந்தது. பூமியின் விசாலமான பகுதி 'மலன்' எனப்படும்.

(திருக்குர்ஆன் 13:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அபீ க்கு' எனும் சொல்லுக்குக் 'கடுமையானது' என்று பொருள். இச்சொல் 'மஷக்கத்' (துன்பம்) எனும் (வேர்ச்) சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

(திருக்குர்ஆன் 13:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஅக்கிப்' எனும் சொல்லுக்கு 'மாற்றக்கூடியவன்' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 13:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முத்தஜாவிராத்' எனும் சொல், பூமியில் அடுத்துடுத்துள்ள விளைநிலத்தையும் தரிசு நிலத்தையும் குறிக்கும். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸின்வான்' எனும் சொல் ஒரே அடித்தண்டைக் கொண்ட இரண்டு, அல்லது அதற்கு மேற்பட்ட பேரீச்ச மரங்களையும், 'ஃகைருஸின்வான்' எனும் சொல் ஒரே மரத்தையும் குறிக்கும். இவ்வாறுதான் ஒரே தந்தையான ஆதமுடைய மக்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர்.

(திருக்குர்ஆன் 13:12 வது வசனத்திலுள்ள) 'கனமான மேகம்' என்பது 'மழை நீருள்ள மேகத்தைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 13:14 வது வசனத்தில் வரும் 'தண்ணீரை நோக்கித் தன் இரண்டு கரங்களையும் நீட்டிக் கொண்டிருப்பவனைப் போன்று' என்பதன் கருத்தாவது: (எங்கோ இருக்கின்ற) தண்ணீரை நோக்கித் தன்னிடம் வருமாறு நாவால் அழைத்து, கையால் அதற்கு சைகை செய்வான். ஆனால், அது ஒருபோதும் அவனிடம் வரப்போவதில்லை.

(திருக்குர்ஆன் 13:47 வது வசனத்திலுள்ள) 'நீருக்குத் தக்கவாறு ஓடைகளாக ஓடுகிறது' என்பதற்கு 'ஓடை நிரம்பி வழிகிறது' என்று பொருள்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸபதர் ராபியா எனும் சொல் 'ஓடும் வெள்ளத்தின் நுரையைக்' குறிக்கும். ('ஸபதும் மிஸ்லுஹு-அதைப் போன்ற நுரை' என்பது) இரும்பு மற்றும் ஆபரணங்களின் அழுக்கு நுரையைக் குறிக்கிறது.

பகுதி :1

ஒவ்வொரு கர்ப்பிணியும் (தன் கருப்பையில்) சுமந்து கொண்டிருப்பவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகிறான். மேலும், கருப்பைகளில் ஏற்படுகிற குறைவையும் கூடுதலையும் அவன் அறிகிறான். அவன் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை நிர்ணயித்துள்ளான்'' எனும் (திருக்குர்ஆன் 13:8 வது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஃகீளு' எனும் சொல்லுக்குக் 'குறைகின்ற' என்று பொருள்.

4697 ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். (பெண்களின்) கருவறைகளில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். மழை எப்போது வருமென்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கம் என்பதை அறியாது. மேலும், மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.3

(14) 'இப்ராஹீம்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 13:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாதின்' (வழிகாட்டி) எனும் சொல்லுக்கு '(நேர்வழிக்கு)அழைப்பவர்' என்று பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 14:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸகீத்' எனும் சொல்லுக்குச் 'சீழும் இரத்தமும்' என்று பொருள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

'உங்களின் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 05:20 வது) வசனத் தொடரின் கருத்தாவது: உங்கள் வசமுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளையும் அவன் (நிகழ்த்தக்காட்டிய) சம்பவங்களையும் நினைத்துப் பாருங்கள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

நீங்கள் கேட்டவற்றை எல்லாம் அவன் உங்களுக்கு அளித்தான்'' எனும் (திருக்குர்ஆன் 13:34 வது) வசனத் தொடரின் கருத்தாவது: அவனிடம் நீங்கள் விரும்பி ஆசைப்பட்டதையெல்லாம் அவன் உங்களுக்கு வழங்கினான்.

(திருக்குர்ஆன் 14:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யப்ஃகூனஹா இவஜா' என்பதற்கு 'இறைவழியில் கோணலைத் தேடுகின்றனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 14:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஃத் தஅஃத்தன ரப்பு(க்)கும்' என்பதற்கு 'உங்களுடைய இறைவன் அறிவிப்புச் செய்ததை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 14:9 வது வசனத்தில்) 'அவர்களின் கைகளை அவர்களின் வாயின் பக்கமே தட்டிவிட்டார்கள்' என்று கூறப்பட்டிருப்பது, தங்களுக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றாமல் தங்களைத் தாங்களே தடுத்துக் கொண்டதற்கு ஓர் உதாரணமாகும்.

(திருக்குர்ஆன் 14:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மகாமீ' (எனக்கு முன்னால்) என்பது, (விசாரணைக்காக மறுமை நாளில்) மனிதனை அல்லாஹ் தனக்கு முன்னால் நிறுத்திவைக்கும் இடத்தைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 14:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மின் வராயிஹி' எனும் சொற்றொடருக்கு 'அவர்களுக்கு முன்பாக' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 14:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லகும் தபஅன்' எனும் சொற்றொடருக்கு 'உங்களைப் பின்பற்றியோர்' என்று பொருள். இதிலுள்ள 'தபஉ' என்பதன் ஒருமை 'தாபிஉ' என்பதாகும். 'ஃகயப்' (மறைந்தோர்), 'ஃகாயிப்' (மறைந்தவன்) ஆகியவற்றைப் போன்று.

(திருக்குர்ஆன் 14:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பி முஸ்ரிம்க்கும்' என்பதற்கு 'உங்களுக்கு உதவக்கூடியவனாக' என்று பொருள். இது 'சுராக்' (அபயக்குரல்) எனும் வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும்.

(திருக்குர்ஆன் 14:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வலா கிலால' எனும் சொற்றொடருக்கு 'எந்த நட்பும் இல்லாத' என்று பொருள். இது, 'காலல்துஹு கிலாலன்' (நான் அவனுடன் மிக நெருக்கமான நேசம் பாராட்டினேன்) எனும் (வினைச்) சொல்லின் வேர்ச் சொல்லாகும். 'கிலால்' எனும் இச்சொல் 'குல்லத்' (நண்பன்) என்பதன் பன்மையாகவும் இருக்கலாம்.

(திருக்குர்ஆன் 14:26 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உஜ்துஸ்ஸத்' எனும் சொல்லுக்கு 'வேரோடு பிடுங்கப்பட்டது' என்று பொருள்.

பகுதி :1

நல்ல வார்த்தை (கலிமா தய்யிபாவு)க்கு அல்லாஹ் எவ்வாறு உவமை கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அதன் வேர் பூமியில் ஆழப் பதிந்திருக்கிறது; அதன் கிளைகள் வானளாவ உயர்ந்த நிற்கின்றன் எந்நேரமும் அம்மரம் தன் இறைவனின் ஆணைக்கேற்பக் கனிகளை வழங்கிக் கொண்டிருக்கிறது''எனும் (திருக்குர்ஆன் 14:24,25) இறைவசனங்கள்.

4698 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், 'ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்' அல்லது '(அவரைப்) போன்றிருக்கும்' ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. மேலும் இப்படி.. இப்படி.. இப்படியெல்லாம் இராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கும். (அத்தகைய ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள்)'' என்று கூறினார்கள். அப்போது என் மனத்தில் 'இது பேரீச்ச மரம்தான்'' என்று தோன்றியது. அபூ பக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை கண்டேன். எனவே, நான் பேசவிரும்பவில்லை. (அங்கிருந்த) மக்கள் ஒன்றும் சொல்லாமலிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தாமே) 'அது பேரீச்ச மரம்'' என்று கூறினார்கள். நாங்கள் (புறப்பட) எழுந்தபோது நான் உமர்(ரலி) அவர்களிடம், 'என் அன்புத் தந்தையே! அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனத்தில் அது பேரீச்ச மரம் தான் என்று தோன்றியது'' என்றேன். அதற்கு அவர்கள், '(அப்துல்லாஹ்!) நீ ஏன் (மனத்தில் தோன்றியதைக்) கூறாமலிருந்தாய்?' என்று கேட்டார்கள். நான், 'நீங்கள் பேசாமலிருப்பதைப் பார்த்தேன். எனவே, நான் பேசவோ எதுவும் சொல்லவோ விரும்பவில்லை'' என்று பதிலளித்தேன். உமர்(ரலி), 'நீ அதைச் சொல்லியிருந்தால் அதுவே இன்ன இன்ன(செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்'' என்று கூறினார்கள். 2

பகுதி 2

நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான். (எனும் 14:27 வது வசனத் தொடர்.)

4699. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒரு முஸ்லிம் (இறந்தபின்) மண்ணறையில் விசாரிக்கப்படும்போது, அவர் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள்'' என்று உறுதிமொழி கூறுவார். இதுதான் '(இறை) நம்பிக்கை கொண்டோரை, அல்லாஹ் ஒரு வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும், மறுமையிலும் உறுதிப்படுத்துகிறான்'' எனும் (திருக்குர்ஆன் 14:27 வது) இறை வசனத்தின் கருத்தாகும்.

என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.3

பகுதி 3

அல்லாஹ்வின் அருட்கொடையை (அடைந்தபின் அதனை) நன்றி கொல்லும் போக்கைக் கொண்டு மாற்றி (தங்களுடன்) தங்கள் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் (நரகில்) தள்ளியவர்களை நீர் பார்க்கவில்லையா? (எனும் 14:28 வது இறை வசனம்.)

(இவ்வசனத்திலுள்ள) 'நீர் பார்க்கவில்லையா?' (அலம் தர) எனும் சொற்றொடருக்கு 'நீர் அறியவில்லையா?' என்று பொருள். 'அலம் தர கைஃப்' (திருக்குர்ஆன் 14:24; 89:6, 105:01) மற்றும் 'அல தர இலல்லஃதீன கரஜூ' (திருக்குர்ஆன் 02:243) ஆகிய வசனங்களிலும் இதே பொருள்தான்.

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்பவார்' எனும் சொல்லுக்கு 'அழிவு' என்று பொருள். (திருக்குர்ஆன் 25:18, 48:12 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள 'கவ்மன் பூரா' என்பதன் பொருள் 'அழிந்துவிடும் சமுதாயம்' என்பதாகும்.

4700. அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்

''அல்லாஹ்வின் அருட்கொடையை(ப் பெற்ற பின்பு அதனை) நன்றி கெட்ட போக்கால் மாற்றி (தங்களுடன்) தம் சமூகத்தாரையும் அழிவுக் கிடங்கில் தள்ளிவிட்டவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?' எனும் (திருக்குர்ஆன் 14:28 வது) இறைவசனம், மக்காவாசிகளில் இருந்து இறைமறுப்பாளர்களைக் குறிக்கிறது'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 4

(15) 'அல்ஹிஜ்ர்' அத்தியாயம் 1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

''அதுதான் என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழி'' எனும் (திருக்குர்ஆன் 15:41 வது) வசனத்தின் கருத்தாவது: சத்திய வழி அல்லாஹ்விடமே உண்டு; அதன்படி நடப்பதே அல்லாஹ்வை அடைவதற்கான பாதையாகும்.

(திருக்குர்ஆன் 15:79 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லபிஇமாமிம் முபீன்' எனும் சொற்றொடருக்கு '(அனைவருக்கும்) தெரிந்த பாதையில்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 15:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லஅம்ர்க்க' எனும் சொல்லுக்கு 'உம்முடைய ஆயுள் மீது சத்தியமாக' என்று பொருள்.

'நீங்கள் அறிமுகமற்ற மக்களாக இருக்கிறீர்களே!' எனும் (திருக்குர்ஆன் 15:62 வது) வசனத்தின் கருத்தாவது: 'லூத்(அலை) அவர்கள் (தம்மிடம் மனிதர்கள் தோற்றத்தில் வந்த) வானவர்களை அன்னியர்களாகக் கண்டார்கள்.

மற்றவர்கள் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 15:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கிதாபும் மஃலூம்' என்பதற்குக் 'குறிப்பிட்ட தவணை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லவ்மா தஃதீனா' எனும் சொற்றொடருக்கு 'நீர் எம்மிடம் (வானவர்களை) அழைத்துக்கொண்டு வரவேண்டாமா?' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷியாஉ' எனும் சொல்லுக்குச் 'சமுதாயங்கள்' என்று பொருள். (இறை) அன்பர்களுக்கும் 'ஷியஉன்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: ('ஹூத்' அத்தியாயத்தில் 11:78 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஹ்ரஊன' எனும் சொல்லுக்கு 'விரைந்தவர்களாக' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லில் முத்தவஸ்ஸிமீன்' எனும் சொல்லுக்குச் 'சிந்திப்போருக்கு' என்று பெயர்.

(திருக்குர்ஆன் 15:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸுக்கிரத்' எனும் சொல்லுக்குத் 'திரையிடப்பட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லவாகிஹ்' எனும் சொல்லுக்கு 'மேகத்தை சூல் கொள்ளச் செய்யக்கூடியவை' (மலாகிஹ்) என்று பொருள். 'மலாகிஹ்' எனும் சொல் 'முல்கிஹா' என்பதன் பன்மையாகும்.

(திருக்குர்ஆன் 15:26 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹமஃ' எனும் சொல், 'ஹம்அத்' என்பதன் பன்மையாகும். அதற்கு '(நீண்ட நாள்கள் நீரோடு சேர்ந்திருந்ததனால் குழைந்த கறுப்பு நிறத்தில்) மாறிவிட்ட (பிசுபிசுப்பான) களிமண்' என்று பொருள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸ்னூன்' எனும் சொல்லுக்கு 'அச்சில் வார்க்கப்பட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:53 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தவ்ஜல்' எனும் சொல்லுக்கு 'பயப்படுதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:66 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாபிர்' எனும் சொல்லுக்குக் 'கடைசி நபர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 15:79 வது வசனத்தின் மூலத்தில்) 'லபிஇமாமிம் முபீன்' என்பதிலுள்ள 'அல் இமாம்' எனும் சொல் 'நீ எதனையெல்லாம் பின்பற்றி நேர்வழியடைவாயோ' அவற்றைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 15:83 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸைஹத்' (பயங்கர சப்தம்) என்பது, அழிவைக் குறிக்கும்.

பகுதி 1

விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானைவிட்டும் வான்வெளியை நாம் காத்தோம். (ஆகையால் எந்த ஒரு ஷைத்தானும் அங்கு செல்ல முடியாது;) எதையேனும் ஒட்டுக் கேட்பவர் தவிர! (அப்படி அவர் ஒட்டுக் கேட்க முயன்றால்) பிரகாசமான ஒரு தீச்சுவாலை அவரைப் பின்சென்று விரட்டும் (எனும் 15:17, 18 ஆகிய வசனங்கள்).

4701. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.)

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னுஅப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்:

(சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், '(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்'' என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.

(இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தைவிட்டு பீதி அகற்றப்படும்போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், 'நம் இறைவன் என்ன சொன்னான்?' என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், '(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்'' என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக்கேட்பவர்கள் செவியேற்றுவிடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர்.

சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.

அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்துவிடுகிறார்கள்.

சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'கடைசியில் அது பூமிக்கு வந்து சேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், 'இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?' என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக்கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்'' என்று இடம் பெற்றுள்ளது.

அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், 'சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது' எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனி(ரஹ்) கூறினார்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், 'நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?' என வினவினேன். அதற்கு சுஃப்யான் 'ஆம்' என்று பதிலளித்தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம் 'இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள 'ஃபுஸ்ஸிஅ' (பீதி அகற்றப்படும் போது) எனும் சொல்லை நபி(ஸல்) அவர்கள் அவ்வாறுதான் ('ஃபுஸ்ஸிஅ' என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)'' என்று வினவினேன். அதற்கு அன்னார் 'அம்ர் இப்னு தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவிமடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே, எங்களின் ஓதல் முறையாகும்'' என்று பதிலளித்தார்கள்.2

பகுதி 2

''ஹிஜ்ர்'' வாசிகளும் இறைத்தூதர்களைப் பொய்யர்களெனக் கூறினார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 15:80 வது) இறைவசனம்.

4702. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஹிஜ்ர்' வாசிகளைக் குறித்து, 'இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப்போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டிவிடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்து செல்லாதீர்கள்'' என்று கூறினார்கள்.3

பகுதி 3

''திரும்பத் திரும்ப ஓதப்படக்கூடிய ஏழு வசனங்களையும் மகத்துவமிக்க குர்ஆனையும் நிச்சயமாக நாம் உமக்கு வழங்கியுள்ளோம்'' எனும் (திருக்குர்ஆன் 15:87 வது) இறைவசனம்.

4703. அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், '(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு, 'நான் தொழுது கொண்டிருந்தேன்'' என்று சொன்னேன். அப்போது அவர்கள், 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்'' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு, 'நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், 'அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' (என்று தொடங்கும் 'அல்ஃபாத்திஹா' அத்தியாயம் தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்'' என்று கூறினார்கள்.4

4704. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்கள் ('அல்ஃபாத்திஹா' அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 4

''அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 15:91 வது) இறைவசனம்.

(திருக்குர்ஆன் 15:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்முகத்ஸிமீன்' எனும் சொல்லுக்குச் 'சத்தியம் செய்தவர்கள்' என்று பொருள்.5 இதே இனத்தில் உள்ளதுதான் (திருக்குர்ஆன் 90:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா உக்ஸிமு' எனும் சொல்லும். இதற்குச் 'சத்தியம் செய்கிறேன்' என்று பொருள். இதனை 'ல உக்ஸிமு' (உறுதியாக சத்தியம் செய்கிறேன்) என்றும் ஓதலாம்.

(திருக்குர்ஆன் 07:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காஸமஹுமா' எனும் சொல்லுக்கு, '(ஆதம், ஹவ்வா ஆகிய) அவ்விருவரிடமும் ஷைத்தான் சத்தியம் செய்தான். ஆனால், அவ்விருவரும் அவனிடம் சத்தியம் செய்யவில்லை' என்று பொருள். 6

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 27:49 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகாஸமூ' எனும் சொல்லுக்கு 'ஒருவருக்கொருவர் சத்தியம் செய்துகொள்ளுங்கள்' என்று பொருள்.

4705. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''அவர்களோ (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாக ஆக்கிவிட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 15:91 வது) வசனம் வேதக்காரர்களைக் குறிக்கிறது. அவர்கள் (இந்தக்) குர்ஆனைப் பல கூறுகளாகப் பிரித்துக்கொண்டு, அதில் (தமக்கு இசைவான) சிலவற்றை நம்பி ஏற்றார்கள். (இசைவில்லாத) சிலவற்றை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

என ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

4706. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''(தம்) வேதத்தைப் பலவாறாகப் பிரித்தோர் மீது (முன்னர்) நாம் (வேதனையை) இறக்கியதைப் போன்றே'' எனும் (திருக்குர்ஆன் 15:90 வது) வசனம் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. அவர்கள் (தம் வேதத்தில்) சிலவற்றை நம்பி ஏற்று, சிலவற்றை மறுத்தார்கள்.

இதை அபூ ழப்யான் ஹுஸைன் இப்னு ஜுன்துப்(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 5

''உறுதி உங்களிடம் வரும் வரை (நபியே!) நீங்கள் உங்களுடைய இறைவனை வணங்கி வாருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 15:99 வது) இறைவசனம்.

''இவ்வசனத்திலுள்ள 'உறுதி' (யகீன்) எனும் சொல் இறப்பைக் குறிக்கிறது'' என்று சாலிம் இப்னு அப்தில்லாஹ் இப்னி உமர்(ரஹ்) கூறினார்கள்.

(16) 'அந்நஹ்ல்' அத்தியாயம்1

(திருக்குர்ஆன் 16:102 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரூஹுல் குத்ஸ்' (பரிசுத்த ஆவி) என்பது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களைக் குறிக்கும். '(எம்முடைய கட்டளைப்படி) 'ரூஹுல் அமீன்' (நம்பிக்கையாளரான ஆவி எனப்படும் ஜிப்ரீல்) இதை உங்கள் இதயத்தில் இறக்கி வைத்தார்'' எனும் (திருக்குர்ஆன் 26:193 வது) இறைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது.

(திருக்குர்ஆன் 16:127 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ளைகின்' எனும் சொல்லுக்கு 'நெருக்கடியானது' என்று பொருள். 'அம்ர்ன் ளைகுன்' என்பதற்கும், 'ளய்யிகுன்' என்பதற்கும் ('நெருக்கடி நிலை' என்ற) ஒரே பொருள்தான்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 16:48 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தத்தஃபய்யஉ' எனும் சொல்லுக்குத் 'தயாராகும்' என்று பொருள்.2

(திருக்குர்ஆன் 16:69 வது வசனத்திலுள்ள) 'உன்னுடைய இறைவன் ஏற்படுத்தியுள்ள வழிகளில் எளிதாகச் சென்று கொண்டேயிரு'' எனும் தொடர், 'அது செல்லும் எந்த இடமும் அதற்கு இடராக இராது' என்பதைக் காட்டுகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 16:46 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகல்லுப்' எனும் சொல்லுக்கு 'நடமாட்டம்' என்ற பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 16:46 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகல்லுப்' எனும் சொல்லுக்கு 'நடமாட்டம்' என்று பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 16:15 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தமீத்' எனும் சொல்லுக்கு 'அசைதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 16:62 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஃப்ரத்தூன்' எனும் சொல்லுக்கு 'மறக்கடிப்பட்டவர்கள்' (கேட்பாரற்றவர்கள்) என்று பொருள். (இதற்கு, 'முதன் முதலில் விரட்டப்படுகிறவர்கள்' என்றும் பொருள் செய்யப்படுவதுண்டு.)

முஜாஹித்(ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(திருக்குர்ஆன் 16:98 வது வசனத்திலுள்ள) '(நபியே! நீர் குர்ஆனை ஓதினால் வெருட்டப்பட்ட ஷைத்தானைவிட்டும் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் கோருவீராக!'' என்பது (வெளிப்படையில் பார்க்குமிடத்து) முன் பின்னாகக் கூறப்பட்டுள்ளது. ஏனென்றால், '(ஷைத்தானைவிட்டும்) பாதுகாப்புக் கோருதல்' என்பது குர்ஆன் ஓதுவதற்கு முன்பு செய்யவேண்டியதாகும். (ஆனால், இந்த வசனத்தில் 'நீர் குர்ஆனை ஓதினால் பாதுகாப்புக் கோரும்' என்றிருப்பது, நீர் குர்ஆனை ஓதிய பின்னர் பாதுகாப்புக் கோரும்' என்று கூறுவதுபோல் இருக்கிறது. உண்மையில் அது நோக்கமல்ல.)

மேலும், 'பாதுகாப்புக் கோருதல்' என்பதற்கு '(ஷைத்தானின் ஊசலாட்டங்களைவிட்டும் தப்ப) அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்ளுதல்' என்று பொருளாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 16:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'துசீமுன்' எனும் சொல்லுக்கு '(கால் நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:84 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷாக்கிலத்திஹி' எனும் சொல்லுக்கு 'தன் தரப்பில்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 16:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கஸ்துஸ் ஸபீல்' என்பதற்கு 'வழிகாட்டுதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 16:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'திஃப்உ' எனும் சொல், குளிர்காயப் பயன்படும் பொருளைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 16:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) “துரீஹூன்' எனும் சொல்லுக்கு “மாலையில் திரும்புதல்' என்றும், “தஸ்ரஹூன்' எனும் சொல்லுக்கு “காலையில் செல்லுதல்' என்றும் பொருளாகும்.

(திருக்குர்ஆன் 16:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷிக்கு' எனும் சொல்லுக்குக் 'கஷ்டம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 16:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தகவ்வுஃப்' எனும் சொல்லுக்கு 'இழப்புக்கு மேல் இழப்பு' என்று பொருள். (இதற்கு 'திகிலுக்கு மேல் திகில்' என்றும், 'அச்சுறுத்தல்' என்றும், 'படிப்படியான வீழ்ச்சி' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 16:66 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அன்அம்' (கால்நடைகள்) எனும் சொல் பெண்பாலுக்கும், ஆண்பாலுக்கும் பொருந்தும். 'அந்நஅம்' எனும் சொல்லும் இதைப் போன்றது தான். 'அல்அன்ஆம்' எனும் சொல் 'அந்நஅம்' எனும் சொல்லின் பன்மையாகும்.

(திருக்குர்ஆன் 16:81 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்னான்' (தங்குமிடங்கள்) எனும் சொல்லின் ஒருமை 'கின்னு' என்பதாகும். 'ஹகில்' (சுமை - ஒருமை) 'அஹ்மால்' (சுமைகள் - பன்மை) ஆகியவற்றைப் போன்று. 'சராபீல தகீகுமுல்ஹர்ர' எனும் சொற்றொடருக்கு 'வெப்பம் காக்கும் சட்டைகள்' என்று பொருள். 'சராபீல தகீகும் பஃஸகும்' (போரில் உங்களைக் காக்கும் சட்டைகள்) என்பது கவசங்களைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 16:92, 16:94 ஆகிய வசனங்களின் மூலத்திலுள்ள) 'தகல்' (காரணம்) எனும் சொல், நேர்மையற்ற, அனுமதிக்கப் பெறாத எல்லாவற்றையும் குறிக்கும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 16:72 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹஃபதா' (பேரர்கள்) எனும் சொல் 'மகனின் குழந்தைகளைக்' குறிக்கும்.

(திருக்குர்ஆன் 16:67 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸக்ர்' (போதைப் பொருள்) எனும் சொல், (பேரீச்சம் பழம், திராட்சை ஆகிய) பழங்களிலிருந்து (தயாரிக்கப்படும்) தடைவிதிக்கப்பட்ட (போதைப்) பொருளைக் குறிக்கும். 'ரிஸ்குன் ஹஸன்' (நல்ல ஆகாரம்) என்பது, அல்லாஹ் அனுமதித்துள்ள பொருளைக் குறிக்கும்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 16:92 வது வசனத்தில்) 'தான் நூற்ற நூலைத் தானே துண்டுதுண்டாக ஆக்குபவள்' என்று கூறப்பட்டிருப்பது, (மக்காவில் வாழ்ந்த மனநிலை சரியில்லாத) 'கர்காஃ' எனும் பெண்ணைக் குறிக்கிறது. அவள் (தன் தோழியருடன் சேர்ந்து காலையிலிருந்து நண்பகல் வரை) தான் நூற்ற நூலை (நண்பகலுக்குப் பின்) தானே துண்டித்துவிடுபவளாக இருந்தாள் என்று அபூ ஹுதைல் ஸதக்கா(ரஹ்) கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 16:120 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'உம்மத்தன்' எனும் சொல்லுக்கு 'நல்லவற்றைக் கற்பிப்பவர்' என்று பொருள். (இதற்கு வழிகாட்டும் தலைவர், சமுதாயம் எனும் பொருள்களுமுண்டு.)

(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கானித்' எனும் சொல்லுக்கு 'வழிப்பட்டு நடப்பவர்' என்று பொருள்.

பகுதி 1

''தள்ளாத முதுமை வயதுவரை (வாழ) விடப்படுகிறவர்களும் உங்களில் உள்ளனர்'' எனும் (திருக்குர்ஆன் 16:70 வது) வசனத் தொடர்.

4707. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

''(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத் தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.

(17) 'பனூ இஸ்ராயீல்' அத்தியாயம்1

பகுதி 1

4708. அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

இப்னு மஸ்வூத்(ரலி), பனூ இஸ்ராயீல், கஹ்ஃப் மற்றும் மர்யம் ஆகிய அத்தியாயங்கள் குறித்துக் கூறுகையில், 'இவை அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் உள்ளவையாகும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் அடங்கும்'' என்று குறிப்பிட்டார்கள்.2

(இந்த அத்தியாயத்தில் 56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஸயுன்ஃகிளுன' எனும் சொல்லுக்கு, '(தலையை) அசைப்பார்கள்'' என்று பொருள்.

(இதே வார்த்தையின் இறந்தகால வினைச் சொல்லான) 'நஃகளத் சின்னுக்க' என்பதற்கு 'உன் பல் அசைந்தது' என்று பொருள் - என மற்றவர்கள் கூறுகிறார்கள்.

பகுதி 2

(திருக்குர்ஆன் 17:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'களைனா இலா பனீ இஸ்ராயீல்' எனும் தொடருக்கு 'இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் குழப்பம் விளைவிப்பார்கள் என அவர்களிடம் (அவர்களின் வேதத்தில்) நாம் தெரிவித்துள்ளோம்'' என்று பொருள். (இத்தொடரில் இடம் பெற்றுள்ள) 'களா' எனும் சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் உண்டு:

1. 'களா ரப்புக்க' என்பதற்கு 'உம்முடைய இறைவன் உத்தரவிட்டான்' என்று பொருள். (திருக்குர்ஆன் 17:23)

2. 'தீர்ப்பு' எனும் பொருளும் அதற்கு உண்டு. (அல்லாஹ் கூறினான்:) 'உம்முடைய இறைவன் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்.'' (திருக்குர்ஆன் 10:93)

3. 'படைத்தல்' எனும் பொருளும் அதற்கு உண்டு. (அல்லாஹ் கூறினான்:) 'பின்னர் அவன் இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக அவற்றைப் படைத்தான்.'' (திருக்குர்ஆன் 41:12)

(திருக்குர்ஆன் 17:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஃபீர்' (கூட்டத்தார்) எனும் சொல், ஒருவருக்குப் பக்கபலமாக வருவோரைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 17:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மைசூர்' எனும் சொல்லுக்கு 'மென்மையானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வலியுத்தப்பிரூ' எனும் சொல்லுக்குத் 'தம் கைக்கு எட்டியவற்றையெல்லாம் அழிப்பதற்காக'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹஸீர்' எனும் சொல்லுக்குச் 'சிறைக்கூடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹக்க' எனும் சொல்லுக்கு 'உறுதியாகிவிட்டது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கித்உ' எனும் சொல்லுக்கு 'பாவம்' என்று பொருள். இது 'கதிஃத்து' (நான் பாவம் செய்தேன்) எனும் வினைச் சொல்லின் பெயர்ச் சொல்லாகும். 'கதாஉ' (குற்றமிழைத்தல்) என்பது 'கதிஃத்து' என்பதன் வேர்ச் சொல்லாகும். இதற்கு 'குற்றமிழைத்தேன்' (அக்தஃத்து) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தக்ரிக்க' எனும் சொல்லுக்குப் 'பிளந்து விடுவீர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வஇஃத் ஹும் நஜ்வா' (அவர்கள் இரகசியம் பேசிக்கொள்ளும்போது) எனும் சொற்றொடரில் 'நஜ்வா' என்பது 'நாஜைத்து' (நான் இரகசியம் பேசினேன்) என்பதன் வேர்ச் சொல்லாகும். வேர்ச் சொல்லே இங்கு (பயனிலையில்) அடைமொழியாக இருந்து வினைச் சொல்லின் பொருள் தருகிறது.

(திருக்குர்ஆன் 17:49 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ருஃபாத்' எனும் சொல்லுக்குத் 'துகள் துகளாக' என்று பொருள். (இதற்கு 'மக்கிப் போனது', 'மண்' ஆகிய பொருள்களும் உண்டு.)

(திருக்குர்ஆன் 17:64 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வஸ்த்ஃப்ஸிஸ்' எனும் சொல்லுக்கு 'ஆட்டங் காணச் செய்; வழி பிறழச் செய்!' என்று பொருள். 'பி கைலிக்க' எனும் சொல்லுக்கு 'உன்னுடைய குதிரைப் படை' என்று பொருள்.

'அர்ரஜ்ல்' எனும் சொல்லுக்குக் 'காலாட்படை' என்று பொருள். இதன் ஒருமை 'அர்ராஜில்' என்பதாகும். இது 'ஸாஹிப்' (நண்பன்), 'ஸஹ்ப்' (நண்பர்கள்) என்பனவற்றையும், 'தாஜிர்' (வியாபாரி), 'தஜ்ர்' (வியாபாரிகள்) என்பனவற்றையும் போன்றதாகும்.

(திருக்குர்ஆன் 17:68 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹாஸிப்' எனும் சொல்லுக்குக் 'கடுமையாக வீசும் புயல் காற்று' என்று பொருள். காற்று வாரியிறைக்கும் பொடிக் கற்களுக்கும் 'ஹாஸிப்' என்பர். இதிலிருந்து வந்ததுதான் 'ஹஸபு ஜஹன்னம்' (நரகத்தின் எரிபொருள்) என்ற சொல்லும். நரகத்தில் வீசப்படும் பொருள்களையே இது குறிக்கிறது. பூமிக்குள் செல்வது 'ஹஸப' எனப்படும். 'ஹஸப்' எனும் சொல், 'ஹஸ்பாஉ' (பொடிக்கற்கள்) எனும் சொல்லிலிருந்து மருவியதாகும்.

(திருக்குர்ஆன் 17:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாரத்' எனும் சொல்லுக்கு 'மீண்டும் ஒரு முறை' என்று பொருள். 'தியரத்', தாராத்' ஆகியன இதன் பன்மைகளாகும்.

(திருக்குர்ஆன் 17:62 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல அஹ்த்தனிக்கன்ன' எனும் சொல்லுக்கு 'அவர்களை நான் (வழிகெடுத்து) வேரறுத்து விடுவேன்' என்பது பொருளாகும். 'இஹ்தனக்க' என்பதற்கு, ஒருவர் மற்றவரிடமிருந்து எல்லா அறிவையும் தமதாக்கிக் கொண்டார் என்று (மொழி வழக்கில்) பொருள்கொள்ளப்படும்.

(திருக்குர்ஆன் 17:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தாயிரஹு' எனும் சொல்லுக்கு 'அவனுக்குரிய பங்கு' என்று பொருள். (இச்செயலுக்கு செயல்கள் பற்றிய குறிப்பு, செயல் சகுனம் ஆகிய பொருள்களும் உண்டு.)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

குர்ஆனில் எங்கெல்லாம் 'சுல்த்தான்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் 'ஆதாரம்' (அல்லது அதிகாரம்) என்றே பொருள் கொள்ளப்படும். 3

(திருக்குர்ஆன் 17:111 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வலிய்யும் மினஃத்துல்லி' என்பதன் கருத்தாவது: '(இடர் ஏற்பட்டு, அதிலிருந்து தன்னைக் காக்க) அதன் யாரையும் நண்பராக்கிக் கொள்வதில்லை. (காரணம், இறைவனுக்கு இடர் ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.)

பகுதி 3

''அல்லாஹ் தூயவன். அவன் தன்னுடைய அடியாரை(க் கஅபாவாகிய) புனிதப் பள்ளி வாசலிலிருந்து (வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் மக்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்' எனும் (திருக்குர்ஆன் 17:1 வது) வசனத் தொடர்.

4709. அபூ ஹுரைரா(ரலி), அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'ஈலியா' (எனும் ஜெரூசலத்து)க்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாரிடம் மது மற்றும் பால் கோப்பைகள் இரண்டு கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டையும் அவர்கள் கூர்ந்து நோக்கிவிட்டு, பால் கோப்பையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் 'உங்களை இயற்கை நெறியின் பக்கம் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மதுக் கோப்பையை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழிதவறிப் போயிருக்கும்'' என்று கூறினார்கள். 4

4710. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(இரவின் ஒரு சிறு பகுதியில் நான் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மக்திஸ் வரை சென்றுவந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர். அப்போது நான் (கஅபாவின்) 'ஹிஜ்ர்' எனும் (வளைந்த) பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்க அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தப்படியே அதன் அடையாளங்களை அவர்களுக்கு விவரிக்கலானேன்.

என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 5

முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'இரவில் நான் பைத்துல் மக்திஸிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயத்தில் குறைஷியர் என்னை நம்பமறுத்தனர். (அப்போது நான் 'ஹிஜ்ர்' பகுதியில் நின்றிருந்தேன்.)'' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

(திருக்குர்ஆன் 17:68 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காஸிஃப்' எனும் சொல்லுக்கு 'எல்லாவற்றையும் பிடுங்கி எறியும் பலத்த காற்று' என்று பொருள்.

பகுதி 4

(திருக்குர்ஆன் 17:70 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கர்ரம்னா' எனும் சொல்லுக்கு (இதே வகையிலான) 'அக்ரம்னா' எனும் சொல்லும் ('கண்ணியப்படுத்தினோம்' என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 17:75 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ளிஉஃபல் ஹயாத்தி வளிஉஃபல் மமாத்தி' எனும் சொற்றொடருக்கு 'உலக வாழ்விலும் இரண்டு மடங்கு வேதனை, மரணத்திற்குப் பின்பும் இரண்டு மடங்கு வேதனை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:76 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகிலாஃபக்க' எனும் சொல்லும் (மற்றோர் ஓதல் முறைப்படியான) 'கல்ஃபக்க' எனும் சொல்லும் ('உமக்குப் பின்னர்' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.

(திருக்குர்ஆன் 17:83 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நஆ' எனும் சொல்லுக்கு 'ஒதுங்கிக் கொண்டான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:84 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷாம்லாத்திஹி' எனும் சொல்லுக்குத் 'தன் தரப்பில்' என்று பொருள். இச்சொல் 'ஷக்ல்' (நிகர்) எனும் சொல்லிருந்து பிரிந்ததாகும்.

(திருக்குர்ஆன் 17:41 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸர்ரஃப்னா' எனும் சொல்லுக்கு 'முன் வைத்துள்ளோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:92 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கபீல்' எனும் சொல்லுக்கு 'நேரடியாகக் கண்ணெதிரே' என்று பொருள். (இச்சொல்லிருந்து பிறந்ததே) 'அல்காபிலா' ('பிரசவப் பெண் மருத்துவர்') எனும் சொல்லும். ஏனெனில், இந்தப் பெண் மருத்துவர், பிரசவிக்கும் பெண்ணுக்கெதிரில் இருந்து அவளுடைய குழந்தையை எதிர்நோக்குகிறார்.

(திருக்குர்ஆன் 17:100 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கஷ்யத்தல் இன்ஃபாக்' எனும் சொல்லுக்குச் 'செலவாகிவிடுமோ என்ற அச்சம்' என்று பொருள். 'இன்ஃபாக்' என்பதற்கு 'வறுமை' என்றும், 'நஃபிக' என்பதற்குப் 'போய்விட்டது' என்றும் பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'கத்தூர்' எனும் சொல்லுக்குக் 'கஞ்சன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:107 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஃத்கான்' எனும் சொல்லுக்கு 'முகத்தாடைகள் இரண்டும் இணையுமிடங்கள்' (முகவாய்கள்) என்று பொருள். இதன் ஒருமை 'ஃதகன்' என்பதாகும்.

முஜாஹித இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 17:63 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவ்ஃபூர்' (நிறைவாக்கப்பட்டது) எனும் (செயப்பாட்டு எச்சவினைப் பெயர்ச்) சொல்லுக்கு (வினையாலணையும் பெயரான) 'வாஃபிர்' (நிறைவானது) என்பதன் பொருளாகும்.

(திருக்குர்ஆன் 17:69 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தபீஉன்' எனும் சொல்லுக்குப் 'பழிவாங்குபவன்' என்று பொருள். இப்னு அப்பாஸ்(ரலி), 'உதவியாளர்' எனப் பொருள் கொள்கிறார்கள். (இதற்குக் 'குற்றம் சாட்டுவோர்', 'விசாரணை செய்யக்கூடியவர்' என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.)

(திருக்குர்ஆன் 17:97 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கபத்' எனும் சொல்லுக்குத் 'தணிந்தது' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 17:26 வது வசனத்திலுள்ள) 'வீண் செலவு செய்யவேண்டாம்' என்பதன் கருத்தாவது: (மார்க்கம் அனுமதிக்காத) தீய வழியில் செலவு செய்யவேண்டாம்.

(திருக்குர்ஆன் 17:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரஹ்மத்' (அருள்) எனும் சொல், (வாழ்க்கைக்குத் தேவைப்படும்) வாழ்வாதாரத்தைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 17:102 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஸ்பூர்' எனும் சொல்லுக்கு 'சபிக்கப்பட்டவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:36 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃப ஜாஸு' எனும் சொல்லுக்குத் 'திட்டமிட்டனர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 17:107 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்அஃத்கான்' எனும் சொல்லுக்கு 'முகங்கள்' என்று பொருள்.

பகுதி

''(அக்கிரமக்காரர்கள் வாழ்கின்ற) ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிக்க விரும்பினால், அங்கு சொகுசாக வாழ்வோருக்கு நாம் கட்டளையிடுகிறோம்; அதில் அவர்கள் பாவம் இழைக்கிறார்கள். அதையடுத்து அவ்வூரின் மீது நம்முடைய ஆணை உறுதியாகி, அதனை நாம் அடியோடு அழித்துவிடுகிறோம்'' எனும் (திருக்குர்ஆன் 17:16 வது) இறைவசனம்.

4711. அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அறிவித்தார்

அறியாமைக் காலத்தில், ஒரு குலத்தாரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், 'அமிர பனூ ஃபுலான்'' (இன்ன குலத்தார் எண்ணிக்கையில் பெருகி விட்டார்கள்) என்று கூறிவந்தோம்.

மற்றோர் அறிவிப்பில் '(அமிர என்பதற்கு பதிலாக) 'அமர' என்று காணப்படுகிறது.6

பகுதி 5

நாம் நூஹுடன் கப்பலில் ஏற்றியிருந்த மக்களின் வழித் தோன்றல்களே நீங்கள். திண்ணமாக, நூஹ் நன்றியுள்ள ஓர் அடியாராகவே திகழ்ந்தார் (எனும் 17:3 வது இறைவசனம்).

4712. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஒரு விருந்தில்) இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) புஜம் (முன்கால் சப்பை) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது. நபி(ஸல்) அவர்கள் (அதை) வாயாலேயே (பற்களால்) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள். பிறகு 'நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை (நன்கு) சூழ்ந்துகொண்டிருக்கும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம், அவர்களால் தாங்கிக்கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும். அப்போது மனிதர்கள் (சிலர் வேறு சிலரை நோக்கி) 'உங்களுக்கு எத்தகையை (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடிப்) பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், '(உங்களுடைய ஆதி பிதா) ஆதம் (அலை) அவர்களை அணுகுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்) என்பர்.

எனவே மனிதர்கள், ஆதம்(அலை) அவர்களிடம் சென்று, 'நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு 'ஆதம்(அலை) அவர்கள் ('நான் செய்ததவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது இன்று (கடும்) கோபம்கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப்போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது' என்று கூறிவிட்டு 'நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள்.

உடனே மக்களும் நூஹ்(அலை) அவர்களிடம் சென்று 'நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (அனுப்பப்பெற்ற) முதல் (புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த) இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான். 7 எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு நூஹ்(அலை) அவர்கள் 'என் இறைவன் இன்று என் மீது (கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப்போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பிரயோகித்துவிட்டேன். 8 நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!' (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீமிடம் செல்லுங்கள்” என்பார்கள். 

(அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று,) “இப்ராஹீமே! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்பார்கள்.   அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “என் இறைவன் இன்று (கடுங்)கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன். -அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.9- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத்தூதர்) மூஸாவிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்களும் மூஸா(அலை) அவர்களிடம் சென்று 'மூஸாவே நீங்கள் இறைத்தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தினை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள் 'இன்று என் இறைவன் (என் மீது கடும்) கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப்போல் அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம்கொள்ளப் போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்பாடாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன்.10 நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது. (எனவே,) வேறெவரிடமாவது நீங்கள் சொல்லுங்கள். (இறைத்தூதர்) ஈசாவிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அவ்வாறே மக்கள் ஈசா(அலை) அவர்களிடம் சென்று, 'ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனுடைய வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள். (எனவே,) எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஈசா(அலை) அவர்கள், 'என் இறைவன் இன்று (என் மீது கடும்) கோபம்கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை - (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது! (எனவே,) நீங்கள் வேறெவரிடமாவது சொல்லுங்கள்; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள்.

அப்போது மக்கள் என்னிடம் வந்து 'முஹம்மதே! நீங்கள் இறைத்தூதர். இறைத்தூதர்களில் இறுதியானவர். உங்களின் முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்துவிட்டான். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக் கொண்டு) இருக்கம் (அவல) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா?' என்று கூறுவர். அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று, என் இறைவனுக்கு (பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு 'முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி 'இறைவா! என் சமுதாயம். இறைவா! என் சமுதாயம்' என்பேன். அதற்கு 'முஹம்மதே! சொர்க்கத்தின் வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்விக் கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்துகொள்ளலாம்' என்று கூறப்படும். என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரண்டு பக்கங்களுக்கிடையேயான தூரம் 'மக்காவிற்கும் (யமனிலுள்ள) 'ஹிகியர்' எனும் ஊருக்கும் இடையிலுள்ள' அல்லது 'மக்காவிற்கும் (ஷாமிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள' தூரமாகும்'' என்று கூறினார்கள். 11

பகுதி 6

''மேலும், நாம் தாவூதுக்கு ஸபூர் வேதத்தை வழங்கினோம்'' எனும் (திருக்குர்ஆன் 17:55 வது) வசனத் தொடர்.

4713. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

தாவூத்(அலை) அவர்களுக்கு வேதம் ஓதுவது இலேசாக்கப்பட்டிருந்தது. அவர்கள் தம் வாகனப் பிராணிக்குச் சேணம் பூட்டிடக் கட்டளையிடுவார்கள். (பணியாள்) சேணம் பூட்டி முடிப்பதற்குள் -வேதம் - முழுவதையும் ஓதிவிடுவார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 12

பகுதி 7

(நபியே!) இவர்களிடம் கூறுக: அல்லாஹ்வை விடுத்து (உங்கள் தேவைகளை நிறைவேற்றும் கடவுளர்களாய்) யாரை நீங்கள் கருதுகிறீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள்! உங்களின் எந்தத் துன்பத்தையும் அவர்களால் அகற்றிவிடவோ மாற்றிவிடவோ முடியாது (எனும் 17:56 வது இறைவசனம்).

4714. அபூ மஅமர்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனுக்கு அதிகம் நெருக்கமானவராய் ஆவது யார் என்பதற்காக அவனுடைய நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) வசனம் குறித்து விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்: மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்(டு அல்லாஹ்வை வழிபட்)டனர். (அப்படியிருந்தும்,) இந்த மனிதர்கள் தம் (இணைவைக்கும்) மார்க்கத்தையே (தொடர்ந்து) பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றோர் அறிவிப்பில் '17:56 வது வசனம் குறித்து விளக்கமளிக்கையில்...'' என்று காணப்படுகிறது.

பகுதி 8

''இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாக) அழைக்கின்றனரோ அவர்களே கூட தங்களின் (உண்மையான) இறைவனின் நெருக்கத்தை அடைவதற்குரிய வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) இறைவசனம்.

4715. அபூ மஅமர்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) 'இந்த இணைவைப்பாளர்கள் யாரை(க் கடவுளர்களாய்) அழைக்கின்றனரோ அவர்களே கூடத் தங்களின் (உண்மையான) இறைவனது நெருக்கத்தை அடைவதற்கான வழியைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்'' எனும் (திருக்குர்ஆன் 17:57 வது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்: 'ஜின்' இனத்தாரில் சிலர் (மனிதர்கள் சிலரால்) வணங்கப்பட்டு வந்தனர். பின்னர் அந்த ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

பகுதி 9

(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட (கள்ளி) மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம் மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம் (எனும் 17:60 வது வசனத் தொடர்.)

4716. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்

''(நபியே!) உங்களுக்கு நாம் காண்பித்த (இக்) காட்சியையும், சபிக்கப்பட்ட மரத்தை (அது மறுமையில் பாவிகளுக்கு உணவாகும் என) குர்ஆனில் நாம் கூறியிருப்பதையும் இம்மக்களுக்கு ஒரு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்'' எனும் (திருக்குர்ஆன் 17:60 வது) வசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதவாது: இது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸிற்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் அன்னாருக்குக் காட்டப்பட்ட கண்கூடான காட்சியைக் குறிக்கிறது. 'சபிக்கப்பட்ட மரம்' என்பது 'சப்பாத்திக் கள்ளி' மரத்தைக் குறிக்கிறது. 13

பகுதி 10

''நிச்சயமாக அதிகாலையில் ஓதுவது சாட்சியம் சொல்லப்படக் கூடியதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 17:78 வது) வசனத் தொடர்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்: ('அதிகாலையில் ஓதுவது' என்பது) அதிகாலை (ஃபஜ்ர்)த் தொழுகையைக் குறிக்கும்.

4717. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒருவர் தனியாகத் தொழுவதை விடக் கூட்டாகத் தொழுது இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலைத் தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.

இதை அறிவித்த அபூ ஹுரைரா(ரலி), 'நீங்கள் விரும்பினால், '(நபியே!) அதிகாலையில் ஓதுவதைக் கடைப்பிடியுங்கள். (ஏனெனில்,) அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்'' எனும் (திருக்குர்ஆன் 17:78 வது) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். 14

பகுதி 11

''இரவில் 'தஹஜ்ஜுத்' எனும் தொழுகையைக் கடைப்பிடிப்பீராக. இது உமக்கு அதிகப்படியான தொழுகையாகும். உம்முடைய இறைவன் உம்மை ('மகாமு மஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்துக்கு அனுப்பலாம்'' எனும் (திருக்குர்ஆன் 17:79 வது) இறைவசனம்.

4718. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

மக்கள் மறுமை நாளில் பல குழுக்களாக ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தத்தம் நபியைப் பின்தொடர்ந்து சென்று, 'இன்னாரே (எங்களுக்காக அல்லாஹ்விடம்) பரிந்துரை செய்யுங்கள்'' என்று கேட்பார்கள். (ஒவ்வொருவராகத் தம்மால் இயலாதென்று மறுத்துக்கொண்டே வர) இறுதியில் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை (கோரிக்கை) செல்லும். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள்.) நபியவர்களை அல்லாஹ் ('மகாமு மஹ்மூத்' எனும்) உயர் அந்தஸ்திற்கு அனுப்பும் நாளில் இது நடக்கும். 15

4719. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(தொழுகை அழைப்பான) பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது 'இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிய இடத்தையும் தனிச் சிறப்பையும் அன்னாருக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை அனுப்பி வைப்பாயாக!'' என்று பிரார்த்திக்கிறவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

இதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் வேறொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 16

பகுதி 12

மேலும் (நபியே!) 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது. நிச்சயமாக அசத்தியம் அழியக்கூடியதே!' என்று கூறும்! (எனும் (திருக்குர்ஆன் 17:81 வது இறைவசனம்).

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸஹக' எனும் சொல்லுக்கு 'அழிந்தது' என்று பொருள்.

4720. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறையில்லம் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருந்த நிலையில், நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நுழைந்தார்கள். தம் கரத்திலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தியபடி, 'சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதே!'' என்றும் 'உண்மை வந்துவிட்டது; அசத்தியம் புதிதாக ஒன்றையும் செய்துவிடவுமில்லை; (இனி) அது மீண்டும் ஒருமுறை பிறக்கப்போவதுமில்லை'' என்றும் கூறலானார்கள். 17

பகுதி 13

(நபியே!) உயிர் (ரூஹ்) குறித்து உங்களிடம் அவர்கள் வினவுகிறார்கள் (எனும் 17:85 வது வசனத் தொடர்.)

4721. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண்பூமியில் (பேரீச்சந்தோப்பில்) இருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் (அவ்வழியே) சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி) 'இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்'' என்றார். மற்றவர், 'உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது?' என்று அவரிடம் கேட்டார். இன்னொருவர் 'நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக்கூடாது. (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)'' என்றார். பின்னர், (அனைவரும் சேர்ந்து) 'அவரிடம் கேளுங்கள்'' என்றனர். அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் உயிரை(ரூஹைப்) பற்றிக் கேட்டனர். நபி(ஸல்) அவர்கள் மௌனமாக இருந்துவிட்டார்கள். அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அப்போது நான், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என அறிந்துகொண்டேன். எனவே, நான் என்னுடைய இடத்திலேயே எழுந்து நின்று கொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள், '(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்: உயிர் என்பது என் இறைவனின் கட்டளையினால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது'' எனும் (திருக்குர்ஆன் 17:85 வது) இறைவசனத்தைக் கூறினார்கள். 18

பகுதி 14

(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம். இவ்விரண்டுக்குமிடையில் ஒரு வழியை (-மிதமான தொனியை-)க் கடைப்பிடியுங்கள் (எனும் 17:110 வது வசனத் தொடர்.)

4722. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), '(நபியே!)'' உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்'' எனும் (திருக்குர்ஆன் 17:110 வது) இறைவசனம் தொடர்பாகக் கூறினார்கள்: 'இறைத்தூதர்(ஸல) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் தம் தோழர்களுடன் மறைந்து தொழும்போது குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்கள். அதை இணைவைப்பவர்கள் கேட்கும்போது, குர்ஆனையும் அதை இறக்கியருளிய இறைவனையும், அதை (மக்கள் முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள். எனவே, உயர்ந்தவனாகிய அல்லாஹ் தன் நபியிடம் 'நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை உயர்த்தாதீர்கள். அதாவது உரத்த குரலில் ஓதாதீர்கள். (ஏனெனில்,) இணைவைப்போர் அதைக் கேட்டுவிட்டு குர்ஆனை ஏசுவார்கள். (அதற்காக உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்களுக்கே கேட்காதவாறு ஒரேயடியாகக் குரலைத் தாழ்த்தவும் செய்யாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே, மிதமான போக்கைக் கைக்கொள்ளுங்கள்'' என்று கூறினான்.

4723. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

''இந்த (திருக்குர்ஆன் 17:110 வது) வசனம், பிரார்த்தனை (துஆ எனும் வேண்டுதல்) தொடர்பாக அருளப்பெற்றது'' என ஆயிஷா(ரலி) கூறினார். 19

(18) 'அல்கஹ்ஃப்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 18:17 வது வசனத்தின் மூலத்திலுள்ள) தக்ரிளுஹும் எனும் சொல்லுக்கு 'அவர்களைவிட்டு விடுகிறது' என்று பொருள். (இதற்குக் 'கடந்து செல்கிறது' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 18:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஸமர்' எனும் சொல் மற்றோர் ஓதல் முறைப்படி 'ஸுமுர்' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'ஸுமுர்' எனும் சொல்லுக்குத் 'தங்கமும் வெள்ளியும்' என்று பொருள். முஜாஹித்(ரஹ்) அல்லாதோர், '('ஸுமுர்' என்பது) 'ஸமர்' என்பதன் பன்மையாகும்'' என்று கூறுகிறார்கள்.

(திருக்குர்ஆன் 18:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பாகிஉன்' எனும் சொல்லுக்கு 'அழித்துக்கொள்ளக்கூடியவர்' என்று பொருளாகும். 'அஸஃப்' எனும் சொல்லுக்குக் 'கவலை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கஹ்ஃப்' எனும் சொல்லுக்கு 'மலைக் குகை' என்று பொருள். 'அர்ரக்கீம்' எனும் சொல்லுக்கு 'எழுதப்பட்டது' என்று பொருள். (இதற்குக் 'கல்வெட்டு' என்ற பொருளும் உண்டு..)

''அவர்களின் உள்ளங்களை நாம் திடப்படுத்தினோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:14 வது வசனத்) தொடரின் கருத்தாவது: பொறுமையை அவர்களுக்கு வழங்கினோம். (திருக்குர்ஆன் 28:10 வது வசனத்தில் வரும்)'' அவரின் இதயத்தை நாம் உறுதிப்படுத்தியிராவிட்டால்'' என்ற தொடருக்கும் இதே பொருள்தான்.

(திருக்குர்ஆன் 18:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷ(த்)தத்' எனும் சொல்லுக்கு 'எல்லை மீறுதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:18 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்வஸீத்' எனும் சொல்லுக்கு 'முற்றம்' என்று பொருள். இதற்குத் 'தலைவாயில்' என்ற பொருளும் உண்டு. இதன் பன்மை: 'வஸாயித்' மற்றும் 'வுஸுத்'. (இதே சொல்லிலிருந்து வந்த 104:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஃஸதா' எனும் சொல்லுக்கு 'மூடப்பட்டது' என்று பொருள். (இதன் வினைச்சொற்களான) 'ஆஸத்' மற்றும் 'அவ்ஸத' ஆகியவற்றுக்குக் 'கதவை மூடினான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்கா' எனும் சொல்லுக்கு 'அதிகமான' என்று பொருள். ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என்றும் (இதற்குப் பொருள்) கூறப்படுகிறது. 'அதிகம் விளையக்கூடியது' என்றும் (பொருள்) சொல்லப்படுகிறது.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 18:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வலம் தழ்லிம்' எனும் சொல்லுக்கு, 'அது குறைக்கவில்லை' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) சொன்னதாக ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 18:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ரக்கீம்' என்பது 'ஓர் ஈயப் பலகை'யைக் குறிக்கிறது. அந்தப் பலகையில் குகையிலிருந்தவர்களின் பெயர்களை அவர்களின் ஆட்சியாளர் பொறிக்கச் செய்து அதனைத் தம் பெட்டகத்தில் போட்டு வைத்திருந்தார்.

(திருக்குர்ஆன் 18:11 வது வசனத்திலுள்ள 'அவர்களின் காதுகளை நாம் தட்டிக் கொடுத்தோம்' என்பதற்கு)' எனவே, அல்லாஹ் அவர்களின் காதுகளைத் தட்டிக் கொடுத்தான். எனவே, அவர்கள் உறங்கிவிட்டார்கள்' (என்று பொருள்.)

(திருக்குர்ஆன் 18:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மவ்யில்' எனும் சொல்லுக்குத் 'தப்புமிடம்' என்று பொருள். இதன் வினைச் சொற்களாவன: அலத், தஇலு.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(இச்சொல்லுக்கு) 'காப்பகம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:101 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா யஸ்தத்தீஊன சம்ஆ' (அவர்கள் செவியுறும் சக்தியற்றுவிட்டார்கள்) என்பதற்கு 'அவர்கள் விளங்கிக் கொள்ளமாட்டார்கள்' என்று பொருள்.

பகுதி 1

''மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 18:54 வது) வசனத் தொடர்.

4724. அலீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, 'நீங்கள் இருவரும் (''தஹஜ்ஜுத்') தொழவில்லையா?' என்று கேட்டார்கள். 2

(திருக்குர்ஆன் 18:22 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரஜ்மம் பில் ஃகைப்' (மறைவான விஷயங்களைத் தாங்கள் கண்டுபிடித்துவிட்டவர்களைப் போல்) என்பதன் கருத்தாவது: (குகைவாசிகள் எத்தனைபேர் என்பது பற்றிய உண்மை நிலை) அவர்களுக்குத் தென்படவில்லை.

(திருக்குர்ஆன் 18:28 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபுருத்' எனும் சொல்லுக்குக் 'கவலைக்குரியது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:29 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சுராதிக்' எனும் சொல்லுக்கு '(நரகத்தின் ஜுவாலை) கூடாரங்களையும், கூடாரங்களால் சூழப்பட்ட அறையையும் போன்று (அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:37 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுஹாவிருஹு' (அவனிடம் பேசிக்கொண்டிருக்கிறான்) எனும் சொல் 'முஹாவரா' (உரையாடல்) எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும்.

(திருக்குர்ஆன் 18:38 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லாகின்ன ஹுவல்லாஹு ரப்பீ' எனும் தொடருக்கு 'லாகின் அன ஹுவல்லாஹு ரப்பீ' (நிச்சயமாக அந்த அல்லாஹ்தான் என்னைப் படைத்துப் பராமரிப்பவன் என்று நான் உறுதியாக நம்பியிருக்கிறேன்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கிலாலஹுமா எனும் சொல்லுக்கு 'அவ்விரண்டுக்கும் இடையே' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸலக்' எனும் சொல்லுக்கு 'யாரும் காலூன்றி நிற்கமுடியாத அளவுக்கு வழுவழுப்பானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:44 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் வலாயா' (அதிகாரம்) எனும் சொல், 'அல்வல்யு' எனும் வேர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். (இதே வசனத்திலுள்ள) 'உக்பன்' எனும் சொல்லுக்கு ஆம்பத், உக்பா, உக்பத் ஆகிய சொற்களும் ஒன்றாகும். இவற்றுக்கு 'முடிவு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:55 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'குபுல்' மற்றும் (இன்ன பிற ஓதல் முறைகளில் வந்துள்ள) கபல், கிபல் ஆகிய சொற்களுக்குக் '(கண்) எதிரில்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லியுத்திஹளு' எனும் சொல்லுக்கு 'வீழ்த்தி விடுவதற்காக' என்று பொருள். (இச்சொல்) 'வழுக்கிவிடுதல்' எனும் பொருள் கொண்ட 'தஹள்' எனும் வேர்ச் சொல்லிருந்து வந்ததாகும்.

பகுதி 2

மூஸா தம் பணியாளரிடம் 'நான் இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அடைந்தே தீருவேன்; அல்லது (இப்படியே) நீண்ட காலம் நடந்து கொண்டேயிருப்பேன்' என்று கூறியதை (நபியே!) நினைவுகூருக! (எனும் 18:60 வது இறைவசனம்.)

''இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹுகுப்' எனும் சொல்லுக்கு '(நீண்ட) காலம்' என்று பொருள். இதன் பன்மை 'அஹ்காப்'.

4725. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'கிள்ர் (அலை) அவர்களின் தோழரான மூஸா, இஸ்ரவேலர்களின் இறைத்தூதரான மூஸா(அலை) அல்லர். (அவா வேறொரு மூஸா) என்று (பேச்சாளரான) நவ்ஃப் அல்பிகாலி3 கூறுகிறாரே!'' என்று கேட்டேன்.

அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'அல்லாஹ்வின் விரோதி பொய் உரைத்துவிட்டார். உபை இப்னு கஅப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செவிமடுத்ததாக எமக்கு அறிவித்தார்கள்.

(ஒரு முறை) மூஸா (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், 'மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?' என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'நானே'' என்று பதிலளித்துவிட்டார்கள்.

எனவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில் மூஸா(அலை) அவர்கள் '(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என்று சொல்லாமல்விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, '(இல்லை;) இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்'' என்று அறிவித்தான்.

மூஸா(அலை) அவர்கள், 'என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?' என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், 'நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்!) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்'' என்று சொன்னான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் ஒரு கூடையில் மீனை எடுத்துக்கொண்டு நடந்தார்கள். தம்முடன் தம் உதவியாளர் யூஷஉ இப்னு நூனையும் அழைத்துக்கொண்டார்கள். இருவரும் (இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்தபோது அங்கு இருவரும் தலைவைத்து உறங்கினார்கள்.

கூடையிலிருந்த அந்த மீன் கூடையிலிருந்து குதித்து வெளியேறிக் கடலில் விழுந்தது. கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துக் கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. நீரோட்டத்தை மீனைவிட்டு அல்லாஹ் தடுத்துவிடவே அதைச் சுற்றி ஒரு வளையம் போல் நீர் ஆகிவிட்டது.

மூஸா(அலை) அவர்கள் (தூக்கத்திலிருந்து) விழித்தபோது அன்னாருடைய தோழர் (யூஷஉ) மீனைப் பற்றி அன்னாருக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார். எஞ்சிய பகலிலும் இரவிலும் அவர்கள் '(தம் பயணத்தில்) தொடர்ந்து) நடந்தனர். மறு நாள் ஆனபோது மூஸா தம் உதவியாளரை நோக்கி, 'நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வாரும்! நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்'' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 18:62)

அல்லாஹ் தமக்குக் கட்டளையிட்ட (இடத்)தை தாண்டிச் செல்லும் வரை, மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.

அவர்களின் உதவியாளர் 'நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்ததையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது'' என்று கூறினார். (திருக்குர்ஆன் 18:63)

''அது மீனுக்குப் பாதையாகவும் மூஸா(அலை) அவர்களுக்கும் அன்னாருடைய உதவியாளருக்கும் வியப்பாகவும் அமைந்தது.

அதற்கு மூஸா(அலை) அவர்கள் 'அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம்'' என்று கூறினார்கள். உடனே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில் அந்தப் பாறைக்கு இருவரும் வந்துசேர்ந்தார்கள். அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் மூடிக்கொண்டபடி ஒருவர்(கிள்ர்) இருந்தார். மூஸா(அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் (கிள்ர்) 'உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?' என்று வினவினார்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'நானே மூஸா'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், 'பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா?' என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்துவிட்டு, 'உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு கிள்ர் (அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூஸாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்; அல்லாஹ் உங்களுக்கும் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமையாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறுசெய்யமாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு கிள்ர் அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் நானாக உமக்கு அதனை அறிவிக்கும் வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று விளக்கம்) கேட்கலாகாது'' என்று கூறினார்.

பிறகு (மூஸா கிள்ர்)  இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் (மூவரும்) தங்களை ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (ஏழைகளான மரக்கல உரிமையாளர்கள்) கிள்ர் (அலை) அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்களை(த் தங்கள் மரக்கலத்தில்) கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர்.

இருவரும் மரக்கலத்தில் ஏறியதுதான் தாமதம்; கிள்ர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றால் மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றைக் கழற்றி (அந்த இடத்தில் முளைக்குச்சியை அறைத்து)விட்டார்கள். (இதைக் கண்ட) மூஸா(அலை) அவர்கள் திடுக்குற்றார்கள்.

உடனே மூஸா(அலை) அவர்கள், களிரை நோக்கி, 'கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றிக்கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கி விட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

அதற்கு களிர், 'என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து, என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதல் முறையில் மூஸா(அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.

(அப்போது) சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பில் மீது விழுந்து, தன் (சின்னஞ்சிறு அலகால்) கடலில் ஒரு முறை உறிஞ்சி (நீர் அருந்தி)யது. அப்போது மூஸா(அலை) அவர்களிடம் களிர்(அலை) அவர்கள் 'உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் கடலிலிருந்து எடுத்த (நீரின்) அளவுதான் (நம் அறிவு)'' என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் மரக்கலத்திலிருந்து வெளியேறி, கடலோரமாக நடந்து கொண்டிருந்தபோது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்ட களிர்(அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் திருகிக் கொன்றுவிட்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள், களிர்(அலை) அவர்களிடமும், 'ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்துவிட்டீர்கள்!'' என்று கூறினார்கள். அதற்கு களிர்(அலை) அவர்கள், 'நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) உங்களுக்கு நான் சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள்.

-(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) 'இம்முறை களிர்(அலை) அவர்கள் கூறியது முதல்முறை கூறியதை விட (சற்று)க் கடுமையானதாகும்'' என்று கூறினார்கள். 4

அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது'' என்றார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர்(அலை) அவர்கள் அந்தச் சுவரைத் தம் கரத்தால் செப்பனிட்டார்கள்.

அப்போது மூஸா(அலை) அவர்கள், 'இந்த மக்களிடம் நாம் வந்து(உணவு கேட்டு)ம், இவர்கள் நமக்கு உணவளிக்கவுமில்லை; உபசரிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களின் சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!'' என்றார்கள்.

களிர்(அலை) அவர்கள், 'இதுதான் நானும் நீங்களும் பிரியவேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்துவிடுகிறேன்'' என்று கூறினார்கள்.

(இந்த நிகர்ச்சியைக் கூறி முடித்த பின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'மூஸா பொறுமையாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகளை) நமக்கு இறைவன் அறிவித்திருப்பான் என்று நாம் விரும்பினோம்'' என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆன் 18:79 வது வசனத்தின் மூலத்தில்) 'வகான அமாமஹும் மலிக்குன் யஃகுஃது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா'' என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்பே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக் கொண்டிருந்தான்.) மேலும், (திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தின் மூலத்தில்) 'வஅம்மல் ஃகுலாமு ஃபகான காஃபிரன் வகான அபவாஹு முஃமினைனி'' என்று ஓதுவார்கள். (பொருள்: அச்சிறுவன் இறைமறுப்பாளனாகவும் அவனுடைய தாய் தந்தை நம்பிக்கையாளர்களாகவும் இருந்தனர்''5)

பகுதி 3

''பிறகு இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தை அவ்விருவரும் அடைந்தபோது, தங்கள் மீனை மறந்துவிட்டார்கள். அது கடலில் (சுரங்கம் போல்) பாதை அமைத்துக் கொண்டு (தப்பித்துச் சென்று)விட்டது'' எனும் (திருக்குர்ஆன் 18:61 வது) இறைவசனம்.

இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'சரப்' எனும் சொல்லுக்கு 'வழி' என்று பொருள். (அதன் எதிர்கால வினைச் சொல்லான) 'யஸ்ருபு' என்பதற்கு 'நடப்பான்' என்று பொருள். இச்சொல்லிலிருந்துதான் (திருக்குர்ஆன் 13:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சாரிபும் பின்னஹார்' (பகலில் சுற்றித் திரிபவன்) எனும் சொற்றொடர் வந்தது.

4726. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்துகொண்டிருந்தபோது அவர்கள், 'என்னிடம் (ஏதேனும் விளக்கம் கேட்க நினைத்தால்) கேளுங்கள்!'' என்றார்கள்.

நான், 'அபூ அப்பாஸ் 6 அவர்களே!'' அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! (இராக்கிலுள்ள) 'கூஃபா'நகரில் கதை சொல்லும் மனிதர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு 'நவ்ஃப்' என்று சொல்லப்படும். அவர், (களிர்(அலை) அவர்களின் தோழரான) மூஸா(அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸா(அலை) அவர்கள் அல்லர்; (அவர் வேறொரு மூஸா தாம்)' என்று கூறுகிறார்'' என்று சொன்னேன்.

அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை இப்னு கஅப்(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள்.

ஒருநாள் இறைத்தூதர் மூஸா(அலை) அவர்கள் (தம் சமுதாய) மக்களுக்கு, (இறைவன் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை) நினைவூட்டிக் கண்கள் ததும்ப இதயங்கள் நெகி்ழந்துருகும் அளவுக்கு உபதேசித்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து சேர்ந்து, 'அல்லாஹ்வின் தூதரே! பூமியில் உங்களைவிட அறிந்தவர் எவரேனும் உண்டா?' என்று கேட்டார். மூஸா(அலை) அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். எனவே, மூஸா(அலை) அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா(அலை) அவர்கள் '(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என பதிலளிக்காமல்விட்டுவிட்டார்கள். எனவே, மூஸா(அலை) அவர்களிடம், 'இல்லை. (உம்மைவிட அறிந்தவர் ஒருவர் பூமியில் இருக்கிறார்)'' என்று (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) சொல்லப்பட்டது. மூஸா(அலை) அவர்கள், 'என் இறைவா! எங்கே (அவர் இருக்கிறார்)?' என்று கேட்க, இறைவன், 'இரண்டு கடல்கள் சங்கமிக்குமிடத்தில் (அவர் இருக்கிறார்)'' என்றான்.

மூஸா(அலை) அவர்கள், 'என் இறைவா! நான் அவரைப் புரிந்துகொள்ள அடையாளமொன்றை எனக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்:

''மீன் உங்களைவிட்டுப் பிரிகிற இடத்தில் (அவர் இருப்பார்) என அல்லாஹ் கூறினான்'' என்று அறிவிப்பாளர் அம்ர் இப்னு தீனார் என்னிடம் கூறினார்கள்.

''உயிரற்ற மீன் ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்; அதற்கு உயிரூட்டப்படும் இடமே (அவர் இருக்கும் இடமாகும்) என அல்லாஹ் கூறினான்'' என்று யஅலா இப்னு முஸ்லிம்(ரஹ்) என்னிடம் கூறினார்கள்.

ஆக, மூஸா(அலை) அவர்கள் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு ('யூஷஉபின் நூன்' எனும்) தம் உதவியாளரிடம், 'மீன் உம்மைவிட்டுப் பிரிந்துவிடும் இடத்தை நீர் எனக்குத் தெரிவிக்கவேண்டும் என்பதைத் தவிர வேறெந்தச் சிரமத்தையும் உமக்கு நான் தரமாட்டேன்'' என்றார்கள்.

உதவியாளர், '(எனக்கு) நீங்கள் அதிகமான சிரமத்தைத் தரவில்லை'' என்றார். 'மூஸா தம் உதவியாளரை நோக்கி..'' என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 18:60 வது) இறைவசனம் இதையே குறிப்பிடுகிறது. உதவியாளர் என்பது யூஷஉ இப்னு நூனைக் குறிக்கிறது. அவரின் பெயர் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை.

மூஸா(அலை) அவர்கள் ஈரப்பசை மிகுந்த ஓரிடத்தில் பாறையொன்றின் நிழலில் இருந்து கொண்டிருந்தபோது அந்த மீன் (உயிர் பெற்றுக் கடலில்) துள்ளிக் குதித்தது. அப்போது மூஸா(அலை) அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உதவியாளர், 'தாமாக விழித்தெழும் வரை நான் இவர்களை எழுப்பமாட்டேன்'' என்று சொல்லிக்கொண்டார். இறுதியில் (மீன் உயிர் பெற்றுவிட்ட செய்தியை) அவர்களுக்குத் தெரிவிக்க மறந்துவிட்டார். மீன் (கூடையிலிருந்து) துள்ளிக் குதித்துக் கடலினுள் நுழைந்துகொண்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட, மீன் சென்ற அடையாளம் கல்லில் பதிந்தது போலானது.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்.

என்னிடம் அம்ர் இப்னு தீனார்(ரஹ்), 'அந்த மீன் சென்ற (வழியின்) அடையாளம் வளையம் போலாகிவிட்டது'' என்று கூறியவாறு தம்மிரு பெருவிரல்களையும் அவற்றை அடுத்துள்ள இரண்டு (ஆட்காட்டி) விரல்களையும் வளையமிட்டு இவ்வாறெனக் காட்டினார்கள்.

(மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டேயிருந்தார்கள். மறுநாள் புலர்ந்தபோது, மூஸா(அலை) அவர்கள் தம் உதவியாளரிடம், 'நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா!) நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று கூறினார்கள்.

அதற்கு உதவியாளர், (மூஸா(அலை) அவர்களிடம்,)'' அல்லாஹ் உங்களிடமிருந்து களைப்பை அகற்றிவிட்டான்'' என்று கூறினார்.

இத்தகல் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இல்லை.

உடனே அவர்கள் இருவரும் (வந்த வழியே) திரும்பியபோது களிர்(அலை) அவர்களைக் கண்டார்கள்.

அறிவிப்பாளர் உஸ்மான் இப்னு அபீ சுலைமான்(ரஹ்), 'களிர்(அலை) அவர்கள் கடல் நடுவி(லிருந்த தீவி)ல் பசுமையான விரிப்பொன்றின் மீது விற்றிருந்ததார்கள்'' என்று என்னிடம் கூறினார்கள்.

(தொடர்ந்து) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்:

களிர்(அலை) அவர்கள், தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடிக்கொண்டு (அமர்ந்து) இருந்தார்கள். ஆடையின் ஓர் ஓரத்தைத் தம் தலைக்குக் கீழேயும் வைத்திருந்தார்கள். அப்போது மூஸா (அலை) அவர்கள் அன்னாருக்கு சலாம் (முகமன்) கூற, அவர் (பதில் சலாம் கூறிவிட்டு) தம் முகத்திலிருந்து (அந்த ஆடையை) விலக்கி, 'என்னுடைய இந்தப் பகுதியில் (இவ்வாறு) சலாம் கூறும் வழக்கமும் உண்டா? நீங்கள் யார்?' என்று கேட்டார்கள்.

மூஸா(அலை) அவர்கள், 'நானே மூஸா'' என்று பதிலளித்தார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், 'பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்றார்கள். அதற்கு களிர்(அலை) அவர்கள், 'என்ன விஷயம்?' எனக் கேட்க, 'உங்களுக்குக் கற்றுத்தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்'' என்று மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள்.

''உங்கள் கரங்களிலுள்ள 'தவ்ராத்' வேதமும் உங்களுக்கு இறைச்செய்தி (வஹி) வந்துகொண்டிருப்பதும் உங்களுக்குப் போதாதா? மூஸாவே! (அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு என்னிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்துகொள்வது உங்களுக்கு அவசியமாகாது. (இதைப் போன்றே அல்லாஹ் வழங்கியுள்ள) சில அறிவு உங்களிடம் உள்ளது. அதை (எல்லாம்) அறிந்துகொள்வது எனக்கு முறையாகாது'' என்று களிர் (அலை) அவர்கள் கூறினார்கள். 7

அப்போது பறவை ஒன்று (பறந்து வந்து) தன் அலகால் கடலிலிருந்து (நீரை உறிஞ்சி) எடுத்தது.

களிர் (அலை) அவர்கள் (மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பறவை தன் அலகால் இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில் என அறிவும் உங்கள் அறிவும் உள்ளது'' என்றார்கள்.

அவர்கள் இருவரும் மரக்கலத்தில் (ஏறி) பயணம் செய்தபோது சிறு சிறு மரக்கலங்களைக் கண்டனர். அவை இக்கரைக்காரர்களை அக்கரைக்காரர்களிடம் ஏற்றிச் சென்று கொண்டிருந்தன. அவர்கள் களிர்(அலை) அவர்களை அடையாளம் புரிந்து கொண்டு, '(இவர்) அல்லாஹ்வின் நல்லடியார்; இவரிடம் நாம் கட்டணம் கேட்கக்கூடாது'' என்று கூறினார்.

-அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்:

நாங்கள் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், 'அவர் களிர்(அலை) அவர்கள் தாமே?' என்று கேட்டோம். ஸயீத்(ரஹ்), 'ஆம்' என்றார்கள்.

அப்போது களிர்(அலை) அவர்கள் (வாய்ச்சியின் உதவியால்) மரக் கலத்தின் ஒரு பலகையைக் கழற்றி அந்த இடத்தில் ஒரு முளைக்கச்சியை வைத்(து அறைந்)தார்கள். (இதைக் கண்ணுற்ற) மூஸா(அலை) அவர்கள் (களிர் அவர்களிடம்), '(கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின்) மரக்கலத்தை ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்து விட்டீர்கள்!'' என்று கூறினார்கள்.

-'அபாயமானது' என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுளள் 'இம்ர்' எனும் சொல்லுக்கு 'வெறுக்கப்பட்டது' என்று முஜாஹித்(ரஹ்) (விளக்கம்) கூறினார்கள்.

களிர்(அலை) அவர்கள், 'உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்கமுடியாது என்று நான் உங்களுக்கு (ஏற்கெனவே) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள்.

(களிர்(அலை) அவர்களின் நடவடிக்கைகள் குறித்து மூஸா(அலை) அவர்கள்) முதல் முறை பொறுமையிழந்தது மறதியினாலாகும். இரண்டாம் முறை பொறுமையிழந்தது சார்பு நிலை (ஷர்த்) ஆகும். மூன்றாம் முறை பொறுமையிழந்தது வேண்டுமென்றேயாகும். 8

மூஸா(அலை) அவர்கள், 'நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து என்னைச் சிரமத்திற்குள்ளாக்கிவிடாதீர்கள்.'' என்று கூறினார்கள். பிறகு இருவரும் (நடந்தனர். வழியில்) ஒரு சிறுவனைச் சந்திக்கவே, களிர்(அலை) அவர்கள் அவனைக் கொன்றுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் யஅலா இப்னு முஸ்லிம்(ரஹ்) கூறினார்:

''களிர்(அலை) அவர்கள், (வழியில்) விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டார்கள். உடனே (அவர்களில்) இறை மறுப்பாளனாகவும் அழகாகவும் இருந்த சிறுவன் ஒருவனைப் பிடித்துப் படுக்கவைத்துக் கத்தியால் அறுத்துவிட்டார்கள்'' என ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்கள்.

அப்போது மூஸா(அலை) அவர்கள் (களிர்(அலை) அவர்களிடம்,) 'ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே?' என்று கூறினார்கள்.

-('ஒரு பாவமும் அறியாத' என்பதைக் குறிக்க குர்ஆன் மூலத்தில் ஆளப்பட்டுள்ள) 'ஸகிய்யத்' எனும் சொல்லை மற்றோர் ஓதல் முறையில் இப்னு அப்பாஸ்(ரலி), 'ஸாக்கியத்' என்று ஓதுவார்கள். அதற்குக் 'கீழ்ப்படிகிறவன்' என்று பொருள். 'ஃகுலாமன் ஸாக்கியா' ('கீழ்ப்படியும் சிறுவன்') என்பதைப் போன்று.

மீண்டும் இருவரும் நடந்தார்கள். (இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள்.)

அந்த ஊரில் கீழே விழவிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். அதைக் கண்ட உடனே, களிர்(அலை) அவர்கள் அந்தச் சுவரை நிலை நிறுத்தினார்கள்.

-இதைக் கூறும்போது ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்), தம் கையால் இவ்வாறு என சாடைசெய்து காட்டினார்கள்.

யஅலா(ரஹ்) கூறினார்:

''களிர்(அலை) அவர்கள், தம் கையால் சுவரைத் தடவ, அது நேராக நின்று கொண்டது'' என்று ஸயீத் இப்னு ஜுபைர் கூறினார்கள் என்றே கருதுகிறேன்.

மூஸா(அலை) அவர்கள், 'நீங்கள் இதற்குக் கூலி வாங்கிக் கொண்டிருக்கலாமே'' என்றார்கள்.

'நாம் சாப்பிடுவதற்காக(வாவது) கூலி வாங்கியிருக்கலாமே' என்று மூஸா(அலை) அவர்கள் கூறினார்கள் என ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 18:79 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வகான வராஅஹும் மலிக்' (அவர்களுக்கப்பால் ஓர் அரசன் இருந்தான்) என்பதை 'வகான அமாமஹும் மலிக்' (அவர்களுக்கு முன்னால் ஓர் அரசன் இருந்தான்) என்று இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியுள்ளார்கள்.

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், 'அ(ம்மன்ன)வன் (பெயர்) 'ஹுதத் இப்னு புதத்' என்றும், கொல்லப்பட்ட அச்சிறுவன் (பெயர்) 'ஜைஸூர்' என்றும் கருதுகின்றனர்.

''அந்த மரக்கலம் கடலில் (கூலி) வேலை பார்க்கும் ஏழைகள் சிலருக்குரியது. அதனைப் பின்னப்படுத்தவே நான் அவ்வாறு செய்தேன். (ஏனென்றால், அம்மரக்கலம் செல்லும் மார்க்கத்தில்) இவர்களுக்கு முன் ஓர் (கொடுங்கோல்) அரசன் இருக்கிறான். அவன் (தான் காணும் நல்ல) மரக்கலங்கள் யாவற்றையும் அக்கிரமமாக அபகரித்துக் கொள்வான்'' என்று களிர்(அலை) அவர்கள் கூறினார்கள். (திருக்குர்ஆன் 18:79)

அதாவது பின்னமான மரக்கலங்கள் அவனைக் கடந்து சென்றால் அதிலுள்ள பின்னத்தைக் கண்டு அதனை அவன்விட்டு விடுவான். மரக்கலக்காரர்கள் அவனைக் கடந்து சென்றதும் அதனைப் பழுது பார்த்து பயன் பெற்றுக்கொள்வர். (அவர்களின் கையிலிருந்து மரக்கலம் போகாது.)

அறிவிப்பாளர்களில் சிலர், '(மரக்கலத்தில் ஏற்பட்ட) ஓட்டையைக் கண்ணாடியால் அவர்கள் அடைத்துவிட்டார்கள்' என்பர். வேறு சிலர், 'அதைத் தாரினால் அடைத்துவிட்டார்கள்'' என்பர்.

(கொல்லப்பட்ட சிறுவனுடைய விஷயம் என்னவெனில்,) அவனுடைய தாய் தந்தையர் இருவரும் (நல்ல) இறைநம்பிக்கையாளர்களாய் இருந்தனர். (ஆனால்,) அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அக்கிரமம் செய்யும்படியும் (இறைவனை) நிராகரிக்கும்படியும் செய்துவிடுவான் என்று நாம் பயந்(து அவ்வாறு செய்)தோம். அதாவது அவன் மீதுள்ள பாசம் அவனுடைய (பொய்மையான) மதத்தைப் பின்பற்றும்படி அவர்களைத் தூண்டிவிடுமோ என்றஞ்சினோம். 'அவ்விருவருக்கும் இறைவன், இவனை விட நல்லவனையும் பரிசுத்தமானவனையும் (பெற்றோர் மீது) அதிக அன்பு கொள்ளக்கூடியவனையும் பிரதியாகக் கொடுப்பதை நாம் விரும்பினோம்.'' என்று களிர்(அலை) அவர்கள் கூறினார்கள்.

''ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரையா (நீங்கள்) கொன்றுவிட்டீர்கள்?' என்று மூஸா(அலை) அவர்கள் வினவியதற்கேற்பவே இவ்வாறு களிர்(அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

(திருக்குர்ஆன் 18:81 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அக்ரப ருஹ்மா' எனும் சொற்றொடருக்கு 'களிர்(அலை) அவர்கள் கொன்ற முதல் (சிறு)வனைவிட (பெற்றோரான) அவர்கள் இருவர் மீதும் மிகவும் அன்பு பாராட்டுபவன்'' என்று பொருள். '(அவனுக்குப்) பிரதியாக ஒரு பெண் மகவு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது'' என ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அல்லாதவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.

''அ(ச்சிறுவனுக்குப் பிரதியான வழங்கப்பட்ட)து பெண் மகவாகும்'' என (அறிஞர்) பலர் வாயிலாக தாவூத் இப்னு அபூ ஆஸிம்(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 4

''அவ்விருவரும் (அவ்விடத்தைக்) கடந்து சென்றபோது மூஸா தம் பணியாளரிடம் 'நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்' என்று கூறினார். அதற்குப் பணியாளர் 'நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்குதான் நான் மீனை மறந்து(தவறவிட்டு) விட்டேன்' என்று கூறினார்'' எனும் (திருக்குர்ஆன் 18:62, 63 ஆகிய) இறைவசனங்கள்.

(திருக்குர்ஆன் 18:104 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸுன்உ' எனும் சொல்லுக்குச் 'செயல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:108 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹிவல்' எனும் சொல்லுக்குத் 'திரும்புதல்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இம்ர்' எனும் சொல்லுக்கும் (திருக்குர்ஆன் 18:74 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நுக்ர்' எனும் சொல்லுக்கும் 'அதிர்ச்சியளிப்பது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 18:77 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யன்கள்ள' எனும் சொல்லும், 'யன்காளு' எனும் சொல்லும் ('விழுந்து விடுகிற நிலையில் உள்ளது' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். 'யன்காளுஸ் ஸின்னு' (பல் விழப்போகிறது) என்பதைப் போல்.

இதே வசனத்தின் மூலத்திலுள்ள) 'லத்தக்கஃத்த' எனும் சொல்லும் (மற்றோர்) ஓதல் முறையில் வந்துள்ள) 'ல தம்ஃத்த' எனும் சொல்லும் ('பெறுதல்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(திருக்குர்ஆன் 18:81 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ருஹ்கி' (அதிக பாசமிக்கவர்) எனும் சொல் 'ரஹ்மத்' (அன்பு) எனும் சொல்லைவிட மிகையான பொருளைக் கொண்டதாகும்.

இது 'ரஹீம்' (நிகரிலா அன்புடையோன்) எனும் சொல்லிலிருந்து வந்தது என்றும் கருதப்படுகிறது. இறையருள் பொழிவதால் மக்கா நகர் 'உம்மு ருஹ்கி' (அருளின் அன்னை) என் அழைக்கப்படுவதுண்டு.

4727 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'இறைத்தூதரான மூஸா(அலை) அவர்கள், களிரைச் சந்தித்த மூஸா(அலை) அல்லர்(; அவர் வேறொரு மூஸா) என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலி கூறுகிறார்'' என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை இப்னு கஅப்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்தார்கள்:

(ஒருமுறை) மூஸா(அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், 'மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?' என்று வினவப்பட்டது. அதற்கு மூஸா (அலை) அவர்கள், 'நானே'' என்று பதிலளித்துவிட்டார்கள்.

எனவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூஸா(அலை) அவர்கள் '(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என்று சொல்லாமல்விட்டுவிட்டார்கள். எனவே, அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு, 'இல்லை; இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்'' என்று அறிவித்தான்.

அதற்கு அல்லாஹ், 'நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார். அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்' என்று சொன்னான்.

எனவே, மூஸா(அலை) அவர்கள் தம் உதவியாளர் 'யூஷஉ இப்னு நூனுடன்' அந்த மீன் சகிதமாகப் புறப்பட்டு (இரண்டு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்து அதனருகில் ஓய்வெடுத்தனர். உடனே மூஸா(அலை) அவர்கள் தம் தலையை வைத்து (படுத்து) உறங்கியும்விட்டார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், 'மேலும் அந்தப் பாறைக்கடியில் ஒரு நீருற்று இருந்தது. அதற்கு 'ஜீவ நீருற்று' எனப்படும். அதன் நீர் பட்ட எந்தப் பொருளும் உயிர் பெறாமல் இருக்காது. அவ்வாறே அந்த மீனின் மீதும் அந்த ஊற்றின் நீர்பட்டது'' என்று காணப்படுகிறது.

உடனே, அந்த மீன் (உயிர் பெற்று) அசைந்து, கூடையிலிருந்து நழுவி கடலுக்குள் புகுந்தது.

மூஸா(அலை) அவர்கள் கண் விழித்தபோது தம் உதவியாளரை நோக்கி, 'நம்முடைய காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நம்முடைய இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்'' என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 18:62)

தமக்குக் கட்டளையிடப்பட்ட (இடத்)தைத் தாண்டிச் செல்லும்வரை மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை.

உதவியாளர் யூஷஉ இப்னு நூன் மூஸா(அலை) அவர்களிடம், 'நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக் கொண்டது'' என்று கூறினார். அதற்கு மூஸா, 'நாம் தேடி வந்த இடம் அதுதான்'' என்று கூறினார். (திருக்குர்ஆன் 18:63, 64)

எனவே, அவர்களிருவரும் தங்கள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். (மீன் நழுவிய பாறைக்கு அருகிலிருந்த கடற்பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) மீன் (நீந்திச்) சென்ற இடத்தில் (இருந்த தண்ணீர்) வளையம் போலிருக்கக் கண்டனர்.

மூஸா(அலை) அவர்களின் உதவியாளருக்கு அது வியப்பாகவும், மீனுக்கு அது (தப்பும்) வழியாகவும் இருந்தது.

அவர்கள் இருவரும் அந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் (போர்த்தி) மூடிக் கொண்டபடி ஒருவர் (களிர்) இருந்தார். மூஸா(அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர் 'உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?' என்று வினவினார்.

அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'நானே மூஸா'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், 'பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூஸாவா?' என்று கேட்டார். மூஸா (அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்துவிட்டு, 'உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா?' என்று கேட்டார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், மூஸா(அலை) அவர்களிடம், 'மூஸாவே! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

(மீண்டும்) மூஸா(அலை) அவர்கள், 'இல்லை; நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்'' என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், 'நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், நானாக உமக்கு அதனை அறிவிக்கும் வரையில் நீர் என்னிடம் (அதைப் பற்றி ஏன், எதற்கு என்று) கேட்கலாகாது'' என்று கூறினார்.

பிறகு (மூஸா, களிர்) இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர்(அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு அவர்களை தங்கள் மரக்கலத்தில் அவர்கள் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர். அவர்களிருவரும் மரக்கலத்தில் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, தன் (சின்னஞ் சிறிய) அலகைக் கடலில் அமிழ்த்தி (ஓரிரு 'திவலை' நீர் அருந்தி)யது. அப்போது மூஸா(அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள் 'உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும், (ஏன்) படைப்பினங்கள் யாவற்றின் அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகை (கடலுக்குள்) அமிழ்த்தி(நீர் எடுத்தி)ட்ட அளவுதான்'' என்று கூறினார்கள்.

மூஸா(அலை) அவர்கள் மரக்கலத்தில் ஏறிச் சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றை எடுத்து மரக்கலத்தை ஒட்டையாக்கி (அதை முளைக்குச்சியால் அடைத்து)விட்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள், களிரை நோக்கி, 'கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்து விட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி?) நடந்து, சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கருகில் சென்றனர். அப்போது களிர்(அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்து துண்டாக்கி(த் தனியே எடுத்து)விட்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள், களிர்(அலை) அவர்களிடம், 'ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்துவிட்டீர்கள்!'' என்று கூறினார்கள்.

அதற்கு களிர்(மலை) அவர்கள், 'நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று முன்பே நான் சொல்லவிலையா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள், 'இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால், என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது'' என்றார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்பார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழவிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர்(அலை) அவர்கள் இவ்வாறு தம் கரத்தால் அதைநிலை நிறுத்தினார்கள்.

அப்போது மூஸா(அலை) அவர்களிடம், 'இந்த ஊருக்குள் நாம் வந்து(உணவு கேட்டு)ம், இவர்கள் நம்மை உபசரிக்கவில்லை; நமக்கு உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களின் சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!'' என்றார்கள்.

களிர்(அலை) அவர்கள், 'இதுதான் நானும் நீங்களும் பிரியவேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்கமுடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்துவிடுகிறேன்'' என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்தபின்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'மூஸா பொறுமையாக இருந்திருப்பாரேயானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்று நாம் விரும்பினோம்'' என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆன் 18:79 வது வசனத்தின் மூலத்தில்) 'வகான அமாமஹும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா'' என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.) மேலும், (திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தின் மூலத்தில்) 'வ அம்மல் ஃகுலாமு ஃபகான காஃபிரன்'' என்று ஓதுவார்கள். (பொருள்: அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)9

பகுதி 5

''தம் செயல்களில் பெரும் இழப்பிற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே!) கேளுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 18:103 வது) இறைவசனம்.

4728. முஸ்அப் இப்னு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் என் தந்தை (ஸஅத் இப்னு அபீ வக்காஸ்) அவர்களிடம் 'இந்த (திருக்குர்ஆன் 18:103 வது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், 'ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன். 10 அதற்கு அவர்கள், '(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறிஸ்தவர்களும் தாம் அவர்கள். யூதர்கள், முஹம்மத்(ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறிஸ்தவர்களோ சொர்க்கத்தை நிராகரித்துள்ளார்கள்; அங்கு உணவோ, பானமோ கிடையாது என்று கூறினார்கள். 11 'ஹரூரிய்யாக்களே', அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அல்லாஹ்வுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்'' என்று கூறினார்கள்.

(என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஹரூரிய்யாக்களை 'பாவிகள்' என்று குறிப்பிட்டு வந்தார்கள். ('இறைமறுப்பாளர்கள்' என்று கூறுவதில்லை.)

பகுதி 6

''அவர்கள்தாம் தம் இறைவனின் வசனங்களையும் (மறுமையில்) அவனுடைய சந்திப்பையும் ஏற்க மறுத்தவர்கள் ஆவர். எனவே, அவர்களின் செயல்கள் வீணாகிவிட்டன. மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனம்.

4729. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடை கூட அவன் (மதிப்பு) பெறமாட்டான். 'மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்'' எனும் (திருக்குர்ஆன் 18:105 வது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

(19) 'காஃப், ஹா, யா, ஐன், ஸாத்' ('மர்யம்') அத்தியாயம் 1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

''அவர்கள் நம்மிடம் வரும்நாளில் அவர்களின் கேள்விதான் என்ன! பார்வைதான் என்ன!! ஆயினும், இன்னோ அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே உள்ளனர்'' எனும் (திருக்குர்ஆன் 19:38 வது) வசனத்தின் கருத்தாவது: இறைமறுப்பாளர்கள் இன்று (இவ்வுலகில் நல்லதைக் கேட்பதுமில்லை; பார்ப்பதுமில்லை. அன்று (மறுமையில்) நன்றாகவே கேட்பார்கள்; நன்றாகவே பார்ப்பார்கள். (ஆனால், அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.)

(திருக்குர்ஆன் 19: 46 வது வசனத்தின் மூலத்திலள்ள) 'ல அர்ஜு மன்னக்க' எனும் சொல்லுக்கு 'உன்னை நான் ஏசுவேன்'' என்று பொருள். (இச்சொல்லுக்கு 'உன்னை நான் கல்லால் அடிப்பேன்' என்றும் 'கல்லெறிந்து கொல்வேன்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.

(திருக்குர்ஆன் 19:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ல அர்ஜுமன்னக்க' எனும் சொல்லுக்கு 'உன்னை நான் ஏசுவேன்' என்று பொருள். (இச்சொல்லக்கு 'உன்னை நான் கல்லால் அடிப்பேன்' என்றும், 'கல்லெறிந்து கொல்வேன்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 19:47 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரிஃயு' எனும் சொல்லுக்குத் 'தோற்றம்' என்று பொருள்.

அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) கூறினார்.

'இறையச்சமுள்ளவர் நல்லறிவு படைத்தவராகவே இருப்பார்' என மர்யம் விளங்கினர். எனவேதான், (மனித உருவில் வந்த வானவர் ஜிப்ரீலை நோக்கி:) 'உம்மைவிட்டுக் கருணைமிக்க இறைவனிடம் பாதுகாப்புக் கோருகிறேன். நீர் இறையச்சம் உள்ளவராயின்!'' (திருக்குர்ஆன் 19:18) என்று மர்யம்(அலை) அவர்கள் கூறினார்கள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 19:83 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'த உஸ்ஸுஹும் அஸ்ஸா' எனும் சொற்றொடருக்கு 'முழு முனைப்புடன் பாவங்களைச் செய்யுமாறு தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 19:89 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இத்து' எனும் சொல்லுக்குக் 'கோணலாகாது' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 19:86 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'விர்து' எனும் சொல்லுக்குத் 'தாகித்தவர்கள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 19:74 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸாஸ்' எனும் சொல்லுக்குச் 'செல்வம்' என்று பொருள். (இச்சொல்லுக்குத் 'தளவாடம்', 'சாதனம்' என்றும் பொருள் கொள்ளப்படுவதண்டு.

(திருக்குர்ஆன் 19:89 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ரிக்ஸ்' எனும் சொல்லுக்கு 'சப்தம்' என்று பொருளாகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்:

(திருக்குர்ஆன் 19:59 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகைய்யு' எனும் சொல்லுக்கு 'இழப்பு' (என்று பொருள்.

(திருக்குர்ஆன் 19:58 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'புகிய்யா' (அழுதவர்களாக) எனும் சொல்' பார்க்கின் என்பதன் பன்மையாகும்.

(திருக்குர்ஆன் 19:70 வது வசத்தின் மூலத்திலுள்ள) 'ஸிலிய்யு' (நரகத்தில் நுழைதல்) எனும் வேர்ச் சொல்லின் வினைச் சொற்களே ஸலிய, யஸ்லா ஆகியன.

(திருக்குர்ஆன் 19:73 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'நதிய்யு' எனும் சொல்லும் 'நாதி' எனும் சொல்லும், ('சபை; அவை' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.

பகுதி 1

(நபியே!) துக்கத்திற்குரிய அந்த (மறுமை) நாளைக் குறித்து இவர்களை எச்சரியுங்கள் (எனும் 19:39 வது வசனத் தொடர்.)

4730. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், 'சொர்க்கவாசிகளே!' 'இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம்! இதுதான் மரணம்'' என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.

பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: 'நரகவாசிகளே!' என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் 'இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்பார். அவர்கள், 'ஆம் (அறிவோம்;) இதான் மரணம்'' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், 'சொர்க்கவாசிகளே நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை'' என்று கூறுவார்.

இதை அறிவித்த அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்:

இதைக் கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள், '(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். எனவே, இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 19:39 வது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், 'இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர். எனவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள்.

பகுதி 2

''(வானவர்கள் கூறுகின்றனர்: 'நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும்.! (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்' எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம்.

4731. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம்: 'நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?' என்று கேட்டார்கள். 2 அப்போதுதான் '(நபியே!) உங்களுடைய இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்களுடைய இறைவன் மறப்பவன் அல்லன்'' எனும் (திருக்குர்ஆன் 19:64 வது) இறைவசனம் அருளப்பெற்றது.

பகுதி 3

''(நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 19:77 வது) இறைவசனம்.

4732. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

'ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ' என்பவர் 3 எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். 'நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக் கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன்'' என்று அவர் கூறினார். நான், 'நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்'' என்று கூறினேன். அவர் 'நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா?' என்று கேட்டார். நான் 'ஆம்' என்று பதிலளித்தேன். அதற்கவர், 'அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்திவிடுகிறேன்'' என்று கூறினார். அப்போதுதான் '(நபியே!) நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீங்கள் பார்த்தீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 19:77 வது) இறைவசனம் அருளப்பெற்றது.4

பகுதி 4

''மறைவானவற்றை அவன் அறிந்து கொண்டானா? அல்லது கருணையாளனிடத்தில் அவன் உறுதிமொழி ஏதேனும் வாங்கியுள்ளானா?' எனும் (திருக்குர்ஆன் 19:78 வது) இறைவசனம்.

4733. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

நான் மக்காவில் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். அப்போது 'ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ' என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர், அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன்'' என்று கூறினார். நான், 'உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும் வரை நான் முஹம்மதை நிராகரிக்க மாட்டேன்'' என்று சொன்னேன். அதற்கவர் 'என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்கு செல்வமும் சந்ததியும் இருக்கும்'' என்று கூறினார். உடனே அல்லாஹ்: 'நம் வசனங்களை நிராகரித்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா?' எனும் (திருக்குர்ஆன் 19:77, 78) வசனங்களை அருளினான்.

பகுதி 5

''இல்லை, அவன் சொல்வதை நாம் எழுதி வைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம்'' (எனும் 19:79 வது இறைவசனம்.)

4734. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. நான் திருப்பித் தரும் படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர் 'நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனக்குத் தரமாட்டேன்'' என்று கூறினார். நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ மறுமையில் உயிரூட்டப்பட்டு எழுப்பப்படும் வரை நான் முஹம்மத்(ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்'' என்றேன். அவர், 'அப்படியாயின், நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை என்னைவிட்டு விடு! பின்பு மறுமையில், எனக்குச் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படும். அப்போது நான் உன்னுடைய கடனைச் செலுத்துவேன்'' என்று கூறினார். அப்போதுதான் 'நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (திருக்குர்ஆன் 19:77, 78 வது) வசனங்கள் இறங்கின.

பகுதி 6

''அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக்கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் தனியாகவே நம்மிடம் வருவான்'' எனும் (திருக்குர்ஆன் 19:80 வது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 19:90 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தம்ர்ருல் ஜிபாலு ஹத்தா' எனும் வாக்கியத்திற்கு 'மலைகள் இடிந்து சரிந்து விழக்கூடும்'' என்று பொருள்.

4735. கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார்

நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. எனவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் 'நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உன்னுடைய கடனைச் செலுத்தமாட்டேன்'' என்று கூறினார். நான், 'நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்கமாட்டேன்'' என்று சொன்னேன். அதற்கவர் 'இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்'' என்று கூறினார். அப்போதுதான்'' நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் மறைவானவற்றை அறிந்துகொண்டானா? அல்லது, கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் (செல்வம் சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான்'' எனும் (திருக்குர்ஆன் 19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.5

(20) 'தாஹா' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

ஸயீத் இப்னு ஜுபைர், ளஹ்ஹாக் இப்னு முஸாஹிம்(ரஹ்)2 ஆகியோர் கூறுகின்றனர்:

'நப்த்தீ' மொழிவழக்கில்3 'தாஹா' எனும் சொல்லுக்கு 'மனிதரே!' என்று பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 20:87 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கா (எறிந்தான்) என்பதற்கு 'உருவாக்கினான்' என்று பொருள்.

('என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்ப்பாயாக!'' எனும் 20:27 வது வசனத்திலுள்ள) 'முடிச்சு' (உக்தத்) என்பதன் பொருளாளவது: ஓரிரு எழுத்துகள் கூட நாவிலிருந்து (முழுமையாக) வெளிவர முடியாத நிலை. அல்லது (பேசும்போது அடிக்கடி) தா..தா.. என்றோ, ஃபா... ஃபா.. என்றோ, திக்கிக் கொண்டேயிருக்கும் (கொண்ணல்) நிலை.

(திருக்குர்ஆன் 20:31 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஸ்ரீ' எனும் சொல்லுக்கு 'என் முதுகு' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:91 வது வசனத்தின் மூலத்தில் - ஓர் ஓதல் முறைப்படி உள்ள') 'ஃப யஸ்ஹித்தகும்' எனும் சொல்லுக்கு 'உங்களை அழித்துவிடுவான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:63 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் முஸ்லா' (மிக மேலானது) எனும் சொல் 'அல் அம்ஸல்' என்பதன் பெண்பாலாகும். 'தரீகத்' எனும் சொல்லுக்கு 'மார்க்கம்' என்று பொருள். 'குஃதில் முஸ்லா' என்று (வழக்கில்) கூறப்படுவதுண்டு. இதற்கு 'குஃதில் அம்ஸல்' (உயர்வானதை எடுத்துக்கொள்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:64 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸஃப்பா' எனும் சொல்லுக்கு 'அணி அணியாக' என்று பொருள். தொழுமிடத்தையும் 'ஸஃப்பு' என்பர்.

(திருக்குர்ஆன் 20:67 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவ்ஜஸ' எனும் சொல்லுக்கு 'உள்ளூர ஊசாடியது' என்று பொருள். 'கீஃபத்' எனும் சொல்லுக்குப் 'பயம்' என்று பொருள். (அதன் அசல் வடிவம் 'கிவ்ஃபத்' என்பதாகும்.) முதல் எழுத்து 'கி' இகரம் பெற்றிருப்பதனால் இரண்டாம் எழுத்தான 'வ' ஆனது இகரத்திற்கு இயைந்த 'ய்' ஆக (சொல் இலக்கண விதிப்படித்) திரிந்துவிட்டது.

(திருக்குர்ஆன் 20:71 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபீ ஜுதூஇந் நக்லி' (பேரீச்ச மரங்களில்) என்பதற்கு 'அலா ஜுதூஇந்நக்லி' (பேரீச்ச மரங்களின் மீது) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:95 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கத்புக்க' எனும் சொல்லுக்கு 'உன்னுடைய நிலை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:97 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மிஸாஸ்' (தீண்டல்) எனும் சொல் 'மாஸ்ஸஹு என்பதன் வேர்ச் சொல்லாகும். 'ல நன்ஸிஃபன்னஹு' எனும் சொல்லுக்கு 'நாம் அதனை (சாம்பலாக்கித்) தூற்றுவோம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:106 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'காஉ' எனும் சொல்லுக்கு 'மேற்பரப்பில் தண்ணீர் ஓடத்தக்க' என்று பொருள். 'ஸஃப்ஸஃப்' எனும் சொல்லுக்கு 'சமதளம்' என்று பொருள்.

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 20:87 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவ்ஸார்' எனும் சொல்லுக்கு 'சுமைகள்' என்று பொருள். இது, 'ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து (இஸ்ராயீலின் சந்ததியான) அவர்கள் இரவலாகப் பெற்ற ஆபரணங்களைக்' குறிக்கும். 'ப கதாஃப்துஹா' எனும் சொல்லுக்கு 'அதை நான் போட்டேன்' என்று பொருள். 'அல்க்கா' எனும் சொல்லுக்கு '(அவர்களைப் போன்றே) அவன் செய்தான் (போட்டான்)' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:88 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபநஸிய' எனும் சொல்லுக்கு 'அவர் -மூஸா- மறந்துவிட்டார்' என்று பொருள். அதாவது '(காளைக்கன்று எனும்) தம் இறைவனுக்கு மாறுசெய்துவிட்டார் மூஸா'' என்று சாமிரீயும் அவனுடைய பக்தர்களும் கூறினர். 'லா யர்ஜிஉ' (அது பதிலளிக்காது) என்றால் 'காளைமாடு பதிலளிக்காது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:108 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹம்ஸ்' எனும் சொல்லுக்குக் 'காலடி ஓசை' என்று பொருள்.

''என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான்'' எனும் (திருக்குர்ஆன் 20:125 வது) வசனத்தின் கருத்தாவது: உலகில் நான் எதை எனக்கு ஆதாரம் என்று நம்பியிருந்தேனோ அதனை ஏன் இங்கு இல்லாமல் செய்துவிட்டாய்? என்று கேட்பான்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 20:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கபஸ்' (எரிகொள்ளி) என்பதன் விளக்கம் பின்வருமாறு மூஸா(அலை) அவர்களும், அன்னாருடைய குடும்பத்தாரும் எகிப்தை நோக்கிக் குளிர் காலத்தில் வந்தபோது பாதை மாறிப் போய்விட்டார்கள். (இருள் கப்பிய அந்த இரவில்) அப்போது மூஸா(அலை) அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கி, 'சற்று நேரம் நீங்கள் இங்கேயே இருங்கள்! நான் (மலை மீது) ஏதோ நெருப்பைக் காண்கிறேன். அங்கு நமக்குப் பாதை காட்டக்கூடிய ஒருவரையும் நான் காணவில்லையாயின் நீங்கள் தீ மூட்டுவதற்காக எரி கொள்ளியையாவது உங்களிடம் ஏதேனும் வருகிறேன்'' என்று கூறினார்கள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 20:104 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அம்ஸலுஹும், தரீக்கத்தன்' எனும் சொற்றொடருக்கு 'நேர்மையான வழியில் செல்பவர்கள்'' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

'அவன் குறைக்கப்படுவதையும் அஞ்சான்' எனும் (திருக்குர்ஆன் 20:112 வது வசனத்) தொடருக்கு அவனுடைய நன்மைகளைக் குறைத்து அவனுக்கு அநியாயம் செய்யப்படாது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:107 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இவஜ்' (பள்ளம்) எனும் சொல்லுக்கு 'ஓடை' என்றும், 'அகித்' எனும் சொல்லுக்கு 'மேடு' என்றும் பொருள்.

(திருக்குர்ஆன் 20:21 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'சீரத்தஹா' எனும் சொல்லுக்கு 'அதன் (முன்னைய) நிலை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:128 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அந்நூஹா' (அறிவு) எனும் சொல்லுக்கு 'இறையச்சம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:124 வது வசனத்தின் மூலத்திலுளள்) 'ளன்க்' (நெருக்கடி) என்பதற்குத் 'துர்பாக்கியமான' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:81 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹவா' (வீழ்வான்) எனும் சொல்லுக்கு 'பாக்கியமற்றவனாகி விடுவான்' என்று பொருள். (இச்சொல்லுக்கு 'அழிந்துவிடுவான்' என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(திருக்குர்ஆன் 20:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'பி மல்க்கினா' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் 'பி மில்கினா' என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) 'பி மில்க்கினா' எனும் சொல்லுக்கு 'எங்கள் கட்டளைப் பிரசாரம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:58 வது வசனத்தின் மூலத்தில் மற்றோர் ஓதல் முறைப்படியுள்ள) 'மகானன் சிவா' (சமதூரமுள்ள) என்பதற்கு 'அவர்களிடையே பொதுவாக அமைந்துள்ள இடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:77 வது வசனத்திலுள்ள) 'உலர்ந்தது' எனும் பொருள், மூலத்திலுள்ள 'யபஸ்' எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 20:40 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கத்ர்' எனும் சொல்லுக்குக் 'குறித்த நேரம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 20:42 வது வசனத்திலுள்ள) 'நீங்கள் இருவரும் சோர்வடைந்துவிடாதீர்கள்' எனும் பொருள், மூலத்திலுள்ள 'லா தனியா' எனும் சொல்லுக்குரியதாகும்.

(திருக்குர்ஆன் 20:45 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யஃப்ருத்த' எனும் சொல்லுக்கு '(நாங்கள் எங்கள் அறிவுரையை சொல்லி முடிப்பதற்குள்) அவன் எங்களை வரம்புமீறி தண்டித்துவிடுவான்' என்று பொருள்.

பகுதி 1

''(மூஸாவே!) எனக்காக உங்களை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்'' எனும் (திருக்குர்ஆன் 20:41 வது) இறைவசனம்.

4736. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம், 'நீங்கள் தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?' என்று கேட்டார்கள். ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்து தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள். 4

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(திருக்குர்ஆன் 20:39 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் யம்மு' எனும் சொல்லுக்குக் 'கடல்' என்று பொருள்.5

பகுதி 2

நாம் மூஸாவிற்கு வஹீ (இறைச்செய்தி) (செய்தி) அனுப்பினோம்: நீர் இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துச் சென்று, கடலில் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின்தொடர்வார்களோ எனச் சற்றும் நீர் அஞ்சத் தேவையில்லை; (கடலைக் கடந்து செல்லும் போது) உமக்கு பயமும் ஏற்பட வேண்டியதில்லை. ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. ஃபிர்அவ்ன் தன்னுடைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை (எனும் 20:77 - 79 வசனங்கள்).

4737. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் 'இதுதான் மூஸா(அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'இவர்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். எனவே, நீங்கள் இந்நாளில் நோன்பு வையுங்கள்'' என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். 6

பகுதி 3

''ஆதமே! இவன் (இப்லீஸ்) உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனானவான். எனவே, இவன் உங்களிருவரையும் சொர்க்கத்திலிருந்தும் வெளியேற்றிவிட (இடமளிக்க) வேண்டாம்; (அப்படி வெளியேற்றிவிட்டால்) நீங்கள் இன்னலுக்குள்ளாம் விடுவீர்கள்'' என்று நாம் கூறினோம் எனும் (திருக்குர்ஆன் 20:117 வது) இறைவசனம்.

4738. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள் தாமே!'' என்று மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். (பதிலுக்கு) ஆதம்(அலை) அவர்கள் 'மூஸா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள் தாமே? என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் 'எழுதிவிட்ட' அல்லது 'விதித்துவிட்ட 'ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறிர்கள்'' என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஆதம் (அலை) அவர்கள் (தம் இந்த பதிலால்) மூஸா(அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 7
Previous Post Next Post