அத்தியாயம் 64/3 (நபிகளார் காலத்துப்) போர்கள்

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 64

(நபிகளார் காலத்துப்) போர்கள் பகுதி 60-90

பகுதி 60

அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) மற்றும் அல்கமா இப்னு முஜஸ்ஸிஸ் அல் முத்லிஜீ(ரலி) ஆகியோரின் படைப்பிரிவு.

இது 'அன்சாரிகளின் படைப்பிரிவு' என்று அழைக்கப்படுகிறது. 374

4340. அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்களின் மீது அவர் கோபமுற்று, 'நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிடவில்லையா?' என்று கேட்டார். அவர்கள், 'ஆம் (கட்டளையிட்டார்கள்)'' என்று பதிலளித்தனர். அவர், 'அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், 'நெருப்பு மூட்டுங்கள்'' என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், 'இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள்'' என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும், அவர்கள், '(நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்'' என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியபோது, 'அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள். 375 கீழ்ப்படிதல் என்பது நற்செயல்களில் தான்'' என்று கூறினார்கள்.

பகுதி 61

அபூ மூஸா(ரலி) அவர்களும் முஆத்(ரலி) அவர்களும் 'ஹஜ்ஜத்துல் வதா'வுக்கு முன்பு யமன் நாட்டு அனுப்பப்படுதல். 376

4341 / 4342 அபூ புர்தா(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூ மூஸா(ரலி) அவர்களையும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் 'யமன் இரண்டு மாகாணங்களாகும்'' என்று கூறினார்கள். 377 பிறகு, '(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள்'' என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி(இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்துவிட்டால் (அவருடன்) தம் சந்திப்பைப் புதுப்பித்துக் கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத்(ரலி) தம் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தபோது தம் சகாவான அபூ மூஸா(ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்துவிட, தம் கோவேறுக் கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்று சேர்ந்தார். அப்போது அபூ மூஸா(ரலி), தம்மிடம் மக்கள் ஒன்று கூடியிருக்க (தம் அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இருகைகளும் தம் கழுத்துடனும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒருவர் நின்றிருந்தார். முஆத்(ரலி), அபூ மூஸா(ரலி) அவர்களிடம், 'அப்துல்லாஹ் இப்னு கைஸ் அவர்களே! என்ன இது?' என்று கேட்டார்கள். அதற்கு அபூ மூஸா(ரலி), 'இவன் இஸ்லாத்தை ஏற்ற பின் அதை நிராகரித்துவிட்டவன்'' என்று பதிலளித்தார்கள். 378

முஆத்(ரலி), 'இவன் கொல்லப்படும் வரை நான் (என் வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன்'' என்றார்கள். அபூ மூஸா(ரலி), 'இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத் தான். எனவே, நீங்கள் இறங்குங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு முஆத், 'இவன் கொல்லப்படும் வரை நான் (வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன்'' என்று (மீண்டும்) கூறினார்கள். உடனே அபூ மூஸா(ரலி) அவனைக் கொல்லும் படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு, முஆத் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி, 'அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அபூ மூஸா(ரலி), '(இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஓதிவருகிறேன்'' என்று பதிலளித்தார்கள். பிறகு அவர்கள், 'முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகீறீர்கள்?' என்று கேட்க, முஆத்(ரலி), 'இரவின் முற்பகுதியில் நான் உறங்கி விடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். எனவே, நான் எழு(ந்து வணக்கம் புரிவ)தற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

4343. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் 'அவை யாவை?' என்று கேட்டார்கள். நான் 'அல்பித்உ, அல் மிஸ்ர்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸயீத் இப்னு அபீ புர்தா(ரஹ்) கூறினார்:

நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூ புர்தா(ரஹ்) அவர்களிடம், 'பித் உ' என்றால் என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பித் உ' என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், 'மிஸ்ர்' என்பது வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம்'' என்று பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

4344 / 4345 அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள். பின்பு, நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒரு முறை சந்தித்த போது) முஆத், என்னிடம், 'நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்?' என்று கேட்டார். நான், 'நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன்'' என்று பதிலளித்தேன். முஆத், 'நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வணக்கம் புரி)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பது போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கிறேன்'' என்று கூறினார். பிறகு முடியாலான கூடாரமொன்றை அமைத்துக் கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்தபோது என்னிடம் ஒருவர் கட்டிவைக்கப்பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத்(ரலி) 'என்ன இது?' என்று கேட்டார். நான், 'இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன்'' என்று பதிலளித்தேன். முஆத், 'இவனுடைய கழுத்தை நான் துண்டிப்பேன்'' என்றார்.

இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4346. அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அப்தஹ்' பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம், இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் (இஹ்ராமின் போது) என்ன சொன்னீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'தாங்கள் இஹ்ராம் அணிந்ததைப் போன்றே நானும் இஹ்ராம் அணிகிறேன்' என்று சொன்னேன்'' என்று பதிலளித்தேன். அவர்கள், 'உங்களுடன் தியாகப் பிராணியை நீங்கள் கொண்டு வந்தீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'கொண்டு வரவில்லை'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவை வலம் வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்கமிடைய தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத் தலைவாரினாள். இவ்வாறே, உமர்(ரலி) கலீஃபாவாக ஆக்கப்படும் வரை நாங்கள் செயல்பட்டு வந்தோம். 379

4347. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பியபோது கூறினார்கள்.

நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்லப் போகிறீர்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும்போது, 'வணக்கத்திற்குரிய இறவைன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் சாட்சியம் பகரும்படி அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் அவர்களின் மீது ஒவ்வொரு நாளும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களில் செல்வந்தர்களாயிருப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகாளாயிருப்பவர்களிடையே பங்கிடப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதிலும் அவர்கள உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களின் செல்வங்களில் உயர்ந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாமென உங்களை எச்சரிக்கிறேன். அநீதிக்குள்ளானவரின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை. 380

4348. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்

முஆத்(ரலி) யமன் நாட்டிற்கு வந்தபோது மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுகை நடத்தினார்கள். அப்போது, 'அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீம் அவர்களை உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டான்'' என்னும் (திருக்குர்ஆன் 04: 125-ம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர், 'இப்ராஹீம்(அலை) அவர்களின் அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது'' என்று கூறினார். 381

மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது:

நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) அவர்களை யமன் நாடடிற்கு அனுப்பினார்கள். (அங்கு சென்ற பின்) முஆத்(ரலி) சுப்ஹுத் தொழுகையில் (இமாமாக நின்று திருக்குர்ஆனின் 4-வது அத்தியாயமான) சூரத்துந் நிஸாவை ஓதினார்கள். 'அல்லாஹ் இப்ராஹீம அவக்ளை உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டான்'' என்னும (திருக்குர்ஆன் 04: 125-ம்) வசனத்தை முஆத்(ரலி) ஓதியபோது அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர், 'இப்ராஹீம்(அலை) அவர்களின் அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்துவிட்டது'' என்று கூறினார்.

பகுதி 62

அலீ இப்னு அபீ தாலிப், காலித் இப்னு வலீத்(ரலி) ஆகிய இருவரும் 'ஹஜ்ஜத்துல் வதா'வுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல். 382

4349. பராஉ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீதின் இடத்தில் அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அலீயே! காலிதின் சகாக்களில் 'உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வர விரும்புவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்கிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்'' என்று கூறினார்கள். நான் அலீ(ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந்தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் 'ஊக்கியா'க்களை நான் பெற்றேன்.

4350. புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் காலித் இப்னு வலீத்(ரலி) அவர்களிடம் 'குமுஸ்' நிதியைப் பெற்று வர அலீ(ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ(ரலி) (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து, காலிதிடம், 'இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்டேன். நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னனே;. அதற்கு அவர்கள், 'புரைதாவே நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?' என்று கேட்க நான், 'ஆம்!'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், 'அவரின் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு 'குமுஸ்' நிதியில் அதை விட அதிக உரிமையுள்ளது'' என்று கூறினார்கள்.

4351. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

அலீ(ரலி) கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட்டார்கள்: உயைனா இப்னு பத்ர்(ரலி), அக்ரஉ இப்னு ஹாபிஸ்(ரலி), ஸைத் அல் கைல்(ரலி) நான்காவது நபர் அல்கமா(ரலி); அல்லது ஆமிர் இப்னு துஃபைல்(ரலி) அப்போது நபித்தோழர்களில் ஒருவர், 'இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம்'' என்று கூறினார். இந்த விஷயம் நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்த வண்ணமுள்ளன'' என்று கூறினார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப் பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்'' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடு தான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?' என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திருமபிச் சென்றார். அப்போது காலித் இப்னு வலீத்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரின் தலையைக் கொய்து விடட்டுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கு காலித்(ரலி), 'எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்'' என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை'' என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும், கூறினார்கள்; 'இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் 'ஆது' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன். 383

4352. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களுக்கு, (அவர்கள் யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்ய தியாகப் பிராணியுடன் வந்த போது) தம் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ(ரலி) யமன் நாட்டின் நிர்வாகியாக இருக்கும் நிலையிலேயே வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம், 'அலீயே! எதற்காக நீங்கள் இஹ்ராம் அணிந்தீர்கள்'' என்று கேட்டார்கள். அலீ அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானி கொடுங்கள்'' என்று கூறினார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு தியாகப் பிராணியை குர்பானி கொடுத்தார்கள். 384

4353 / 4354 அனஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் அணிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'எவருடன் தியாகப் பிராணி இல்லையோ அவர் தம் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணி இருந்தது. அப்போது எங்களிடம் அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) ஹஜ்செய்ய நாடியவண்ணம் யமனிலிருந்து வர, நபி(ஸல்) அவர்கள், 'எதற்காக இஹ்ராம் அணிந்தீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான ஃபாத்திமா (ரலி) நம்முடன் தான் இருக்கிறார்'' என்று கேட்டார்கள். அலீ(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் தியாகப் பிராணி உள்ளது'' என்று கூறினார்கள்.

பகுதி 63

'துல் கலஸா' போர். 385

4355. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) கூறினார்

அறியாமைக் காலத்தில் 'துல் கலஸா'' என்றழைக்கப்பட்டு வந்த (இணைவைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது 'யமன் நாட்டு கஅபா' என்றும் 'ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா' என்றும் அழைக்கப்பட்டு வந்தது. எனவே, என்னிடம் நபி(ஸல்) அவர்கள், 'என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை நாங்கள் உடைத்துப் போட்டுவிட்டு, அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்று விட்டோம். பிறகு நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விபரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) 'அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் (நலம் நாடிப்) பிரார்த்தனை புரிந்தார்கள். 386

4356. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது 'கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது 'யமன்' நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் 'அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். 'அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழி செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே, நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், 'தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தை சிரங்கு படித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், '(இறைவா!) 'அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!'' என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள். 387

4357. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

''துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், 'சரி (விடுவிக்கிறேன்)'' என்று சொன்னேன். அவ்வாறே, 'அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். 'அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தங்களின் கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களின் கையின் அடையாளத்தை நெஞ்சில் பார்த்தேன். அப்போது அவர்கள், 'இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும், நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. 'துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த 'கஸ்அம்' மற்றும் 'பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது 'அல்கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக குறிகேட்கிற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இங்கே (அருகில் தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக் கெண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்'' என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்' என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். பிறகு 'அஹ்மஸ்' குலத்தவாரில் 'அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, 'நபி(ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன். அவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது, 'இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றே (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்'' என்று கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) 'அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.

பகுதி 64

'தாத்துஸ் ஸலாஸில்' போர் 388

இதுவே 'லக்கி' மற்றும் 'ஜுதாம்' போர் ஆகும். இதை இஸ்மாயீல் இப்னு அபீ காலித்(ரஹ்) கூறினார்.

''(தாத்துஸ் ஸாலிஸ் என்பது) பனூ பலீ, பனூ உத்ரா, பனுல் கைன் ஆகிய குலங்களின் ஊராகும்'' என்று இப்னு இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்.

4358. அம்ர் இன்னு ஆஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்' (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி(ஸல்) அவர்களிடம் சென்று, 'மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?' என்ற கேட்டேன். அவர்கள், 'ஆயிஷா'' என்று பதிலளித்தார்கள். நான், 'ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?' என்று கேட்டேன். அவர்கள், 'அபூ பக்ர்(ரலி)'' என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு யார்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'உமர்'' என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் கணித்து (அவர்களெல்லாம் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். 'தமக்கு பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசிய ஆளாக ஆக்கி விடுவார்களோ' என்று அஞ்சியபடி நான் மௌனமாயிருந்து விட்டேன். 389

பகுதி 65

ஜாரீர்(ரலி) யமன் நாட்டிற்குச் சென்றது. 390

4359. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன் வாசிகளில் 'தூ கலாஉ' மற்றும் 'தூ அம்ர்' ஆகிய இருவரை சந்தித்தேன். 391 அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது 'தூ அம்ர்' என்னிடம், 'நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்து போய் மூன்று நாள்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்'' என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்து கொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்து கொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூ பக்ர் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனைவரும் நல்லவர்களாக உள்ளனர்'' என்று பதிலளித்தனர். உடனே, தூ கலாஉ மற்றும் தூ அம்ர் இருவரும், 'நாங்கள் இருவரும் வந்திருந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்'' என்று உங்கள் தோழரிடம் (அபூ பக்ரிடம்) சொல்லுங்கள்'' என்று கேட்டுக் கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள். நான் அபூ பக்ர் அவர்களிடம் யமன் வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூ பக்ர் அவர்கள், 'அவர்களை (என்னிடம்) நீங்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா?' என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், 'ஜாரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர்களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்.

பகுதி 66

'சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர். 392

நபித்தோழர்களின் ஒரு படை குறைஷிகளின் வணிகக் குழு ஒன்றை (இடைமறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக் கொண்டிருந்தது. அப்போது அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி), அப்படையினருக்கு தளபதியாக இருந்தார்கள்.

4360. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேராக இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம். சிறிது தொலைவு சென்றபின், வழியில் எங்கள் பயண உணவு தீர்ந்து போய்விட்டது. எனவே, அபூ உபைதா(ரலி) படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்று சேகரிக்கப்பட்டன. அவை இரண்டு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன. அபூ உபைதா அவர்கள் அது தீரும் வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். எனவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம்பழம் தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்து வந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் இப்னு கைஸான்(ரஹ்) கூறினார்:

நான் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), '(ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அதுவும் தீர்ந்து போன போதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாள்கள் அதிலிருந்து உண்டார்கள். பிறகு அபூ உபைதா(ரலி) அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு தம் வாகனத்தைச் செலுத்தும் படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றவிட்டது. 393

4361. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவக்ள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எனவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். எனவே, அந்தப் படைப் பிரிவு 'கருவேல இலைப்படைப் பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக 'அல் அம்பர்' எனப்படும் (ஒரு வகை மீன் இனப்) பிராணியை (கரையில்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம். அதனால் எங்கள் (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூ உபைதா(ரலி) அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்.)

மற்றோர் அறிவிப்பில் 'ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு அந்த எலும்பு(க் கூடடுக்)க்குக் கீழே நடந்து சென்றார்கள்'' என்று இடம் பெற்றுள்ளது.

ஜாபிர்(ரலி) கூறினார்:

அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூ உபைதா(ரலி), '(இனி அறுக்க வேண்டாம்'' என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள்.

அபூ ஸாலிஹ்(ரஹ்) அறிவித்தார்.

கைஸ் இப்னு ஸஅத்(ரலி), (போரிலிருந்து திரும்பிய பின் தம் தந்தை ஸஅத் இப்னு உபாதா - ரலி அவர்களிடம்) 'நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்.'' என்று கூறினார்கள். அவரின் தந்தை, 'நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். கைஸ்(ரலி), 'நான் அறுக்கத் தான் செய்தேன்'' என்று சொல்லிவிட்டு, 'அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்'' என்று சொல்ல, அவரின் தந்தை, 'நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். அவர், 'நான் அறுக்கத்தான் செய்தேன்'' என்று சொல்லிவிட்டு, 'மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்'' என்றார். மீண்டும் அவரின் தந்தை, 'நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்று கூறினார். உடனே அவர், 'நான் அறுக்கத் தான் செய்தேன்'' என்று சொல்லிவிட்டு 'மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்'' என்று சொல்ல, அவரின் தந்தை, 'நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்'' என்றார். அவர், '(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டு விட்டேன்'' என்று கூறினார்.

4362. ஜாபிர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் 'கருவேல இலைப்' படைப் பிரிவில் சென்றோம். அபூ உபைதா(ரலி) எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) எறிந்தது. (அதற்கு முன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது 'அம்பர்' என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூ உபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.

அறிவிப்பாளர்: அபுஸ் ஸுபைர்(ரஹ்) கூறினார்.

ஜாபிர்(ரலி) இவ்விதம் கூற கேட்டேன்.

அபூ உபைதா(ரலி), 'உண்ணுங்கள்'' என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்தபோது நபி(ஸல்), அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்கள்'' என்று கூறினார்கள். உடனே, அவர்களில் சிலர், நபி(ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டு வந்தனர். அதை நபி(ஸல்) அவர்கள் உண்டார்கள்.

பகுதி 67

அபூ பக்ர்(ரலி) மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது. 394

4363. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

'ஹஜ்ஜத்துல வதா'வுக்கு முந்திய ஹஜ்ஜின்போது அபூ பக்கர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் 10-ம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), 'இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக எவரும் வலம் வரவும் கூடாது'' என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூ பக்ர்(ரலி) அனுப்பி வைத்தார்கள். 395

4364. பராஉ(ரலி) அறிவித்தார்

முழுமையான வடிவில் அருளப்பட்ட கடைசி அத்தியாயம், 'பராஅத்' (என்னும் 9-வது 'அத் தவ்பா') அத்தியாயம் ஆகும். கடைசியாக அருளப்பட்ட அத்தியாயப் பகுதி 'அந்நிஸா'வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:

(நபியே!) மக்கள் உங்களிடம் 'கலாலா' பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு 'கலாலா' பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கிறான்.. (திருக்குர்ஆன் 04: 176) 396

4-ம் பாகம் முற்றிற்று.

பாகம்: 5

நபிகளார் காலத்துப் போர்கள் (தொடர்)

பகுதி 68

பனூ தமீம் குலத்தாரின் தூதுக்குழு.1

4365. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்

பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!'' என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள் (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்'' என்று கூறினார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கவலை காணப்பட்டது. அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், '(யமன் வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை'' என்று கூறினார்கள். அதற்கு யமனியர், 'நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். 2

பகுதி 69 (உயைனா படைப் பிரிவு)3

இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.

உயைனா இப்னு ஹிஸ்ன் இப்னி ஹுதைஃபா இப்னி பத்ர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனூல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். எனவே அவர்கள், அக்கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.

4366. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங்கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.

அவையாவன:

1. 'பனூ தமீம் குலத்தார் தாம் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர்கள்'' என்று (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க் கைதி ஒருவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் இருந்தார். எனவே, (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், 'அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததிகளில் உள்ளவள்'' என்று கூறினார்கள்.

3. (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவை 'ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது 'என் சமுதாயத்தின்' தானப் பொருள்கள்'' என்று கூறினார்கள். 4

4367. அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார்

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூ பக்ர்(ரலி), '(இறைத்தூதர் அவர்களே!) கஅகாஉ இப்னு மஅபத் இப்னி ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். உமர்(ரலி), 'இல்லை; அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்'' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (உமர்(ரலி) அவர்களிடம்), 'நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள்'' என்று சொல்ல, உமர்(ரலி), 'உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல'' என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, 'இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 49:1வது) வசனம் அருளப்பட்டது.

பகுதி70

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு5

4368. அபூ ஜம்ரா(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம், 'என்னிடம் 'நபீத்' (பழச்சாறு மது) வைக்கப்படுகிற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய் விடுவேன் என நான் அஞ்சினேன்'' என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) (இவ்வாறு) கூறினார்கள்:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், '(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!'' என்று கூறினார்கள். அம்மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே 'முளர்' குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போரிடக் கூடாதென தடைவிதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. எனவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் புகவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகிறேன்:

1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது.

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை'' என்று உறுதி கூறுவதே. (அது).

2. தொழுகையை நிலை நிறுத்துவது.

3. ஸகாத் வழங்குவது.

4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது.

மேலும், 'போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும் படியும் (உங்களுக்குக்) கட்டளையிடுகிறேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப்பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்கள் தாம் அவை'' என்றார்கள். 6

4369. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் 'ரபீஆ' கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்கவிடாமல்) உங்களுக்கும் எங்களுக்குமிடையே 'முளர்' குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில் தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். எனவே, எங்களுக்குச் சில விஷயங்களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும் படி அழைப்போம்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கிறேன்.

(கட்டளையிடும் நான்கு விஷயங்களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறுவது - இவ்வாறு சொல்லி 'ஒன்று' என (தம் விரலால்) எண்ணினார்கள் - தொழுகையை நிலை நிறுத்துவது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்துவது (ஆகியவைதாம் அவை)

(மது ஊற்றி வைக்கப் பயன்படும்) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், மண்சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன். 7

4370. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாருடைய அடிமையான குரைப்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ், அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்ஹர், மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) ஆகியோர் என்னிடம், 'ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுங்கள். அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அவரிடம் கேளுங்கள். 'நபி(ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத்தொழுகையை (அன்னையே!) தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே' என்று கேளுங்கள்'' என்று (அம்மூவரும்) கூறினர். மேலும், இப்னு அப்பாஸ்(ரலி), தாமும் உமர்(ரலி) அவர்களும் இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்தோம் என்று கூறினார்கள்.

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று என்னை அம்மூவரும் அனுப்பிய விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நீங்கள் உம்மு ஸலமாவிடம் சென்று கேளுங்கள்'' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்து அவர்கள் மூவரிடமும் ஆயிஷா(ரலி) சொன்னதைத் தெரிவித்தேன். ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று கேட்குமாறு அவர்கள் மூவரும் மீண்டும் என்னை அனுப்பினார்கள்.

(அவ்வாறே அவர்களிடம் வந்து நான் விஷயத்தைக் கேட்டபோது) உம்மு ஸலமா(ரலி) கூறினார்:

நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தொழ வேண்டாமெனத் தடை செய்ததை கேட்டிருக்கிறேன். பிறகு (ஒரு முறை) அஸ்ருத் தொழுதுவிட்டு அவர்கள் என்னுடைய அறைக்கு வந்து, அந்த இரண்டு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் 'பனூ ஹராம்' குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். நான் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று, 'இறைத்தூதர் அவர்களே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நீங்கள் தடை செய்ததை நான் கேட்கவில்லையா? ஆனால், தாங்களே இப்போது அதைத் தொழப் பார்க்கிறேனே' என நான் கேட்டதாக அவர்களிடம் நீ சொல். அவர்கள் தம் கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு' எனக் கூறினேன். அப்பெண்ணும் சொன்னபடி செய்தாள். நபி(ஸல்) அவர்கள் தம் கையால் சைகை செய்தபோது அப்பெண் திரும்பி வந்துவிட்டாள். தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! (உம்மு ஸலமாவே!) அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையினரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியைத் தெரிவிக்க என்னிடம் வந்திருந்ததால், லுஹ்ருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்களை என்னால் தொழ முடியவில்லை; அத்தொழுகையே (இப்போது நான் தொழுத) இந்த இரண்டு ரக்அத்களாகும்' என்றார்கள். 8

4371. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை தொழுகை) நடத்தப்பட்ட ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு (இஸ்லாத்தில்) முதன் முதலாக நடத்தப்பட்ட ஜுமுஆத் தொழுகை, 'ஜுவாஸா' எனுமிடத்தில் - அதாவது பஹ்ரைனில் இருந்த ஒரு கிராமத்தில் - அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே ஆகும். 9

பகுதி 71

பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழு மற்றும் ஸுமாமா இப்னு உஸால் அவர்களின் செய்தி. 10

4372. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் 'நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் 'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, '(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!'' என்று கேட்டார்கள். அவர், 'நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்'' என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம், 'ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்'' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்)விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, 'நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்'' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள்.

உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், 'முஹம்மது, இறைத்தூதர்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்' என்று மொழிந்துவிட்டு, 'முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துக் கொண்டுவிட்டார்கள்'' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், 'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), 'இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று கூறினார்கள். 11

4373. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) 'முஸைலிமா' எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், 'முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான் நான் அவரைப் பின்பற்றுவேன்'' என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பலபேருடன் மதீனா வந்திருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , (தம் பேச்சாளர்) ஸாபித் இப்னு கைஸ்(ரலி) தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முஸைலிமா தன் தோழர்களுடனிருக்க நபி(ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, 'இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைத் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித் இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார்'' என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.

4374. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத்தான் உன்னை காண்கிறேன்'' என்று (முஸைலிமாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) கூறினார்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என் இரண்டு கைகளிலும் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. எனவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்துவிட்டன. எனவே, நான் அவ்விரண்டுக்கும் 'எனக்குப் பின் வெளிப்படவிருக்கிற மகா பொய்யர்கள் இருவர்' என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ; மற்றொருவன் முலைஸி என்று கூறினார்கள். 12

4375. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. 'அவ்விரண்டும், எந்த இரண்டு மகா பொய்யர்களுக்கிடையே நான் இருக்கிறேனோ அவர்களைக் குறிக்கும்' என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) 'ஸன்ஆ' வாசியும் (முஸைலிமா என்ற) 'யமாமா' வாசியும் ஆவர். 13

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

4376. அபூ ரஜாஉ அல்உதாரித்(ரஹ்) 14 அவர்கள் அறிவித்தார்

நாங்கள் (அறியாமைக் காலத்தில்) கல்லை வணங்கிக் கொண்டிருந்தோம் (நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த) ஒரு கல்லைவிடச் சிறந்த மற்றொரு கல்லை நாங்கள் கண்டால் அதை எடுத்துக் கொண்டு பழையதை எறிந்து விடுவோம். கல் ஏதும் எங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் மண் கட்டியைச் சேகரி(த்துக் குவி)ப்போம். பிறகு, ஆட்டைக் கொண்டு வருவோம்; அதன் பாலை (குவிந்து கிடக்கும்) அந்த மண்கட்டியின் மீது கறப்போம்; பிறகு அதைச் சுற்றி வருவோம். ரஜப் மாதம் வந்துவிட்டால் (போர் நிறுத்தம் செய்வதைக் குறிக்கும் வகையில்) 'ஆயுத முனையை அகற்றக்கூடியது' என அந்த மாதத்தை அழைப்போம். ரஜப் மாதத்தில் எந்த ஈட்டி முனையையும், அம்பு முனையையும் கழற்றி எறியாமல் விடமாட்டோம்.

4377. அபூ ரஜாஉ(ரஹ்) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (இறைத் தூதராக) நியமிக்கப்பெற்ற நாளில் நான், என் வீட்டாருக்காக ஒட்டகத்தை மேய்க்கும் இளைஞனாக இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருகை தந்திருப்பதை நாங்கள் கேள்விப்பட்டவுடன் நரக நெருப்பை நோக்கி, (அதாவது) மகா பொய்யன் முஸைலிமாவை நோக்கி நாங்கள் ஓடினோம். 15

பகுதி 72

அல்அஸ்வத் அல் அன்ஸீயின் நிகழ்ச்சி 16

4378 உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா(ரஹ்) அறிவித்தார்

மகா பொய்யன் முஸைலிமா மதீனாவிற்கு வந்திருக்கிறான் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அவன் ஹாரிஸின் மகள் (கய்யிஸா என்பாள்) வீட்டில் தங்கினான். அந்த ஹாரிஸ் இப்னு குரைஸின் மகள் அவனுக்கு மனைவியாக இருந்தாள். அவள், அப்துல்லாஹ் இப்னு ஆமிருடைய (மக்களின்) தாய் ஆவாள். ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ்(ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஸைலிமாவிடம் சென்றார்கள். இந்த ஸாபித் இப்னு கைஸ் இப்னி ஷம்மாஸ் அவர்கள் தாம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (அதிகாரபூர்வ) பேச்சாளர்' என்று அழைக்கப்பட்டு வந்தவராவார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கையில் (பேரீச்ச மட்டைக்) குச்சியொன்று இருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முஸைலிமாவின் அருகே நின்று அவனிடம் (சிறிது) பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் முஸைலிமா, 'நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் (உங்கள் நபித்துவ) பதவிக்கும் இடையே குறுக்கிடாமல் நாம் விலகிக் கொள்வோம். (ஆனால்,) உங்களுக்குப் பின் நீங்கள் அந்தப் பதவியை எமக்கு அளித்திட வேண்டும்'' என்று சொன்னான். நபி(ஸல்) அவர்கள், 'நீ என்னிடம் இந்தக் குச்சியைக் கேட்டாலும் கூட நான் இதை உனக்குக் கொடுக்கமாட்டேன். எனக்கு (கனவில்) காட்டப்பட்ட அதே ஆள் தான் நீ என்று உன்னை கருதுகிறேன். இதோ, இந்த ஸாபித் இப்னு கைஸ் உனக்கு என் சார்பாக பதிலளிப்பார்'' என்று கூறினார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

4379. உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களின் கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது என் இரண்டு கைகளிலும் தங்கத்தாலான காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. நான் அவற்றை அருவருப்பாகக் கருதி வெறுத்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதிக்கப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்து போய்விட்டன. அவ்விரண்டும் இனி வரவிருக்கும் இரண்டு பெரும் பொய்யர்களைக் குறிப்பாக நான் விளக்கம் கண்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:

அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட (அஸ்வத்) அல் அன்ஸீ ஆவான்; மற்றொருவன் மகா பொய்யன் முஸைலிமா ஆவான்.

பகுதி 73

நஜ்ரான் வாசிகளின் சம்பவம் 17

4380. ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்

ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக்காரர்கள் இருவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'முபாஹலா - சாபப் பிரார்த்தனை' செய்வதற்காக வந்தனர். 18 அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், 'நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து; நாம் சாபப் பிரார்த்தனை செய்துவிட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின்வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருவப்படமாட்டார்கள்'' என்று கூறினார். (பிறகு) இருவரும் சேர்ந்து (நபி(ஸல்) அவர்களிடம்), 'நீங்கள் எங்களிடம் கேட்கிறவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிறோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்பவேண்டாம்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள், 'அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள். அவர் எழுந்து நின்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர்'' என்று கூறினார்கள். 19

4381. ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார்

நஜ்ரான் வாசிகள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுக்காக அனுப்புங்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரைத்தான் நான் உங்களிடம் அனுப்புவேன்'' என்று கூறினார்கள். மக்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) அவர்களை அனுப்பினார்கள்.

4382. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. இந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா இப்னு ஜர்ராஹ் அவர்களாவார்.

என அனஸ்(ரலி) அறிவித்தார். 20

பகுதி 74

உமான் மற்றும் பஹ்ரைனின் செய்தி 21

4383. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒருமுறை) 'பஹ்ரைனின் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன்'' என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், பஹ்ரைன் நிதி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கும் வரை வரவில்லை. அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தில்) அந்த நிதி வந்தபோது அவர்கள் பொது அறிவிப்புகள் செய்பவர் ஒருவரிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எவருக்காவது கடன் தரவேண்டியிருந்தாலோ, அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்துவிட்டிருந்)தாலோ அவர் என்னிடம் வரட்டும்'' என்று அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். எனவே, நான் அபூ பக்கர்(ரலி) அவர்களிடம் வந்து, 'நபி(ஸல்) அவர்கள், 'பஹ்ரைன் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன்' என்று கூறினார்கள்'' எனத் தெரிவித்தேன். அப்போது எனக்கு அபூ பக்ர்(ரலி) (சிறிது) கொடுத்தார்கள். அதற்குப் பின் அவர்களை நான் சந்தித்து மீண்டும் கேட்டேன். அப்போது அவர்கள் (எதுவும்) எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் அவர்களிடம் நான் சென்றேன். அப்போதும் அவர்கள் ஏதும் தரவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் மூன்றாவது முறையாகச் சென்றேன். அப்போதும் எனக்குத் தரவில்லை. எனவே, நான் அவர்களிடம், '(முதலில்) நான் உங்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (இரண்டாம் முறையாக) வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், என்னிடம் நீங்கள் கருமித்தனம் காட்டுவதாகவே நான் கருதுவேன்'' என்று சொன்னேன். அப்போது அவர்கள் 'நான் கருமித்தனம் காட்டுவதாகவா நீ சொன்னாய். கருமித்தனத்தை விடக் கொடிய நோய் ஏது?' என்று மூன்று முறை கேட்டார்கள். 'ஒவ்வொரு முறை உனக்குத் தர மறுத்த போதும் உனக்குக் கொடுக்க வேண்டுமென்றே கருதினேன்'' என்றும் கூறினார்கள்.

அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், 'நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், 'இதை எண்ணிக்கொள்' என்று கூறினார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு (தீனார் / திர்ஹம்) இருந்தது. அப்போது அவர்கள், 'இதே போன்று இன்னும் இரண்டு மடங்கை நீ எடுத்துக்கொள்' என்று கூறினார்கள்'' என ஜாபிர்(ரலி) கூறினார் என வந்துள்ளது. 22

பகுதி 75

அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன் வாசிகளின் வருகை 23

''அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மூஸா(ரலி) கூறினார். 24

4384. அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்

நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து (மதீனாவில்) சிறிது காலம் தங்கியிருந்தோம். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள்) அதிகமாகச் சென்று வருவதையும் அவர்களுடனேயே எப்போதும் இருப்பதையும் கண்டு, அவர்கள் (இருவரும்) நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம். 25

4385. ஸஹ்தம் இப்னு முள்ரிப்(ரஹ்) அறிவித்தார்

அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூஃபா நகரின் ஆட்சியாளராக) வருகை தந்தபோது இந்த 'ஜர்ம்' குடும்பத்தாரை 26 (சந்தித்து அவர்களை)க் கண்ணியப்படுத்தினார்கள். (ஒருமுறை) நாங்கள் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கோழியைப் பகல் உணவாக உண்டு கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அபூ மூஸா(ரலி) அவரை உணவு உண்ண அழைத்தார்கள். அம்மனிதர், 'இது, (அசுத்தம்) எதையோ தின்று கொண்டிருப்பதை பார்த்தேன். எனவே, நான் இதை அருவருக்கிறேன்'' என்றார். உடனே அபூமூஸா (ரலி) அவர்கள், “இங்கே வா! நபி (ஸல்) அவர்கள் இதை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். அம்மனிதர், “நான் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன்” என்று சொன்னார்.  உடனே அபூ மூஸா(ரலி), 'இங்கே வா! உன் சத்தியத்தைப் பற்றி நான் உனக்குத் தெரிவிக்கிறேன். நாங்கள், அஷ்அரீ குலத்தாரில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (பயணம் செய்ய) வாகனம் அளித்து உதவும் படி அவர்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு வாகனம் அளிக்க மறுத்துவிட்டார்கள். எனவே, மீண்டும் அவர்களிடம் (பயணம் செய்ய) வாகனம் கேட்டோம். அவர்கள், 'நீங்கள் பயணம் செய்வதற்காக உங்களுக்கு வாகனம் தரமாட்டேன். என்று சத்தியம் செய்துவிட்டார்கள். பிறகு சிறிது நேரம் தான் தங்கியிருந்திருப்பார்கள். அதற்குள் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களுக்கு (பத்துக்குட்பட்ட ஒட்டகங்கள் கொண்ட மந்தைகளில்) ஐந்து மந்தைகள் வழங்கும்படி கட்டளையிட்டார்கள். நாங்கள் அதை எங்கள் கைவசம் பெற்றுக் கொண்டபோது, 'நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கடித்து விட்டோம். எனவே, நாம் ஒருபோதும் முன்னேற முடியாது'' என்று சொல்லிக் கொண்டோம். உடனே நான் அவர்களிடம் சென்று, 'இறைத்தூதர் அவர்களே!'' நாங்கள் பயணம் செய்ய வாகனம் தரமாட்டேன் என்று தாங்கள் சத்தியம் செய்துவிட்டு இப்போது நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு வாகனம் தந்துவிட்டீர்களே'' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! ஆயினும், நான் ஒரு விஷயத்திற்காகச் சத்தியம் செய்து அதன்பின்னர் அதுவல்லாத வேறொன்றை, அதைவிடச் சிறந்ததாகக் கண்டால் அந்தச் சிறந்ததையே செய்வேன் (சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்)'' என்று கூறினார்கள். 27

4386. இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்

பனூ தமீம் குலத்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெறுங்கள். பனூதமீம் குலத்தாரே!'' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'நீங்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டீர்கள் தானே! (இனி ஏதேனும்) எங்களுக்கு வழங்கிடுங்கள்'' என்று கேட்டார்கள். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. அப்போது யமன்வாசிகளில் (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள் என்று கூறினார்கள். அந்த யமனியர், 'ஏற்றுக் கொண்டுவிட்டோம்; இறைத்தூதர் அவர்களே!'' என்று பதிலளித்தனர். 28

4387. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், 'இறைநம்பிக்கை இங்கேயுள்ளது'' என்று தம் கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், 'கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபவாமும்) ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும. அங்கிருந்து தான் ஷைத்தானின் இரண்டு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவைதோன்றும்'' என்று கூறினார்கள். 29

4388. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

யமன் வாசிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் இளகிய நெஞ்சமுடையவர்கள்; மென்மையான இதயமுடையவர்கள். இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். தற்பெருமையும் அகம்பாவமும் ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி) களிட(மு)ம் காணப்படுகின்றன. கம்பீரமும் (அதே நேரத்தில்) அமைதியும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகின்றன.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 30

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4389. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். குழப்பம் இங்கே (கிழக்கில்) உள்ளது. இங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 31

4390. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

யமன் வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகியமனம் படைத்தவர்கள். மென்மையான நெஞ்சம் உடையவர்கள். மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்; விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

4391. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்

நாங்கள் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது கப்பாப்(ரலி) வந்து, 'அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் (குர்ஆன்) ஓதுவதைப் போல் இந்த இளைஞர்களால் ஓதமுடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத்(ரலி), 'நீங்கள் விரும்பினால் உங்களுக்கு (குர்ஆன்) ஓதிக் காட்டும்படி இவர்களில் சிலருக்குக் கட்டளையிடுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு கப்பாப்(ரலி), 'சரி! (ஓதிக் காட்டச் சொல்லுங்கள்)'' என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத்(ரலி) (என்னிடம்), 'அல்கமா! நீங்கள் ஓதுங்கள்'' என்று கூற, ஸியாத் இப்னு ஹுதைர்(ரஹ்) அவர்களின் சகோதரர் ஸைத் இப்னு ஹுதைர்(ரஹ்), 'அல்கமா, எங்களில் மிகச் சிறந்த ஓதுநராக இல்லாதிருக்க, அவரையா ஓதச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார். உடனே இப்னு மஸ்ஊத்(ரலி), 'நீங்கள் விரும்பினால் நபி(ஸல்) அவர்கள் உங்கள் குலத்தார் (பனூ அசத்) பற்றியும், அல்கமாவுடைய குலத்தார் (நகஉ) பற்றியும் கூறியதை உங்களுக்கு நான் அறிவிப்பேன்'' என்று கூறினார்கள். அப்போது நான் (குர்ஆனின் 19வது) அத்தியாயம் மர்யமிலிருந்து ஐம்பது வசனங்களை ஓதினேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) (கப்பாப்(ரலி) அவர்களை நோக்கி), '(இவரின் ஓதல்) எப்படியிருப்பதாகக் கருதுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு அவர்கள், 'நன்றாக ஓதினார்'' என்று பதிலளித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), 'நான் எதை ஓதினாலும் அதை இருவரும் ஓதி விடுவார்'' என்று கூறினார்கள். பிறகு, கப்பாப்(ரலி) அவர்களின் பக்கம் திரும்பினார்கள். அப்போது அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். எனவே, 'இந்த மோதிரம் கழற்றி எறியப்படும் வேளை (இன்னும்) வரவில்லையா?' என்று கேட்டார்கள். கப்பாப்(ரலி), 'இன்றைக்குப் பிறகு இதை நான் அணிந்திருப்பதைப் ஒருபோதும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்'' என்று சொல்லிவிட்டு அதைக் கழற்றி எறிந்துவிட்டார்கள்.

பகுதி 76

தவ்ஸ் குலத்தாரின் செய்தியும் துஃபைல் இப்னு அம்ர் இப்னி தவ்ஸீ அவர்களின் செய்தியும்.

4392. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

துஃபைல் இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'தவ்ஸ் குலத்தார் அழிந்துவிட்டார்கள்; (இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்) மாறு செய்துவிட்டார்கள்; (இஸ்லாத்தை) ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, தாங்கள் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! 'தவ்ஸ்' குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டு வருவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 34

4393. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்பதற்காக) வந்தபோது, வழியில், 'எவ்வளவு நீண்ட, களைப்பூட்டுகிற இரவு! ஆயினும், அது இறைமறுப்பு கோலோச்சும் நாட்டிலிருந்து என்னை விடுதலை செய்துவிட்டது'' என்று பாடினேன். என் அடிமை ஒருவன் வழியில் தப்பியோடிவிட்டான். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். நான் அவர்களிடம் இருந்தபோது (என்னுடைய) அந்த அடிமை வந்தான். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'அபூ ஹுரைராவே! இதோ உன் அடிமை!'' என்று கூறினார்கள். நான், 'அவன் அல்லாஹ்வின் திருப்திக்காக (விடுதலை)'' என்று சொல்லி அவனை விடுதலை செய்துவிட்டேன். 35

பகுதி 77

'தய்யி' குலத்தாரின் தூதுக் குழு நிகழ்ச்சியும் அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அவர்களின் செய்தியும்36

4394. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தில்) ஒரு குழுவாக நாங்கள் வந்தோம். அவர்கள் ஒவ்வொரு மனிதராகப் பெயர் சொல்லி அழைக்கலானார்கள்; (என்னை முதலில் அழைக்கவில்லை.) எனவே நான், 'என்னைத் தெரியவில்லையா? நம்பிக்கையாளர்களின் தலைவரே!'' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம், தெரியும். மக்கள் மறுத்தபோது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றீர்கள்; அவர்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்) பின் வாங்கிச் சென்றபோது நீங்கள் (அதை ஏற்க) முன் வந்தீர்கள். அவர்கள் (ஸகாத்தை வழங்காமல்) மோசடி செய்தபோது நீங்கள் நிறைவேற்றினீர்கள். (உண்மையை) அவர்கள் நிராகரித்தபோது நீங்கள் ஏற்றீர்கள்'' என்று கூறினார்கள்.

நான், 'அப்படியென்றால் (என்னை முதலில் அழைக்காதது குறித்து) நான் பொருட்படுத்தப்போவதில்லை'' என்றேன்.

பகுதி 78

ஹஜ்ஜத்துல் வதா 37

4395. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் 'ஹஜ்ஜத்துல் வதா'வுக்காகப் புறப்பட்டோம். (முதலில்) உம்ரா செய்வதற்காக இஹ்ராம் கட்டினோம். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எவரிடம் தியாகப் பிராணியுள்ளதோ அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்து கொள்ளட்டும. அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்'' என்று கூறினார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் மக்காவுக்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே ஓடவுமில்லை. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், 'உன் தலை (முடியை) அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள். உம்ராவை விட்டு விடு'' என்று கூறினார்கள். அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர் அஸ்ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் தன்யீமுக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து நான் உம்ரா செய்தேன். 'இது (இந்த உம்ரா) உன்னுடைய (விடுபட்ட) உம்ராவுக்கு பதிலாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடவும் செய்தனர். பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டுப் பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறையும் சுற்றிவந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் சுற்றிவந்தனர். 38

4396. இப்னு ஜுரைஜ்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), 'உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார்'' என்று சொன்னதாக அதாஉ(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். நான், 'எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ்(ரலி) இப்படிக் கூறுகிறார்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற்கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது'' எனும் (திருக்குர்ஆன் 22:33வது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும், நபி(ஸல்) அவர்கள், 'ஹஜ்ஜத்துல் வதாவின்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடும் படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக் கொண்டும் தான் இப்படிக் கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள். நான், 'இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?' என்று கேட்டேன். அதற்கு அதாஉ(ரஹ்), 'அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங்கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங்களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ்(ரலி) கருதி வந்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

4397. நபி(ஸல்) அவர்கள் பத்ஹாவில் இருந்தபோது, நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'ஆம்' என்றேன். அவர்கள், எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன்'' என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மர்வாவுக்கு இடையே ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்து, ஸஃபா, மர்வாவுக்கு இடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண் ஒருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள். 39 என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

4398. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஹஃப்ஸா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவை நிறைவேற்றிய ஆண்டில், (தவாஃபும் சஃயும் செய்து தலைமுடி குறைத்துவிட்டு) துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், 'நீங்கள் ஏன் (இஹ்ராமிலிருந்து) விடுபடவில்லை?' என்று கேட்டேன். அவர்கள், 'நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியச் செய்துவிட்டேன். என் தியாகப் பிராணிக்குக் கழுத்தில் (அடையாள) மாலை தொங்க விட்டுவிட்டேன். எனவே, நான் தியாகப் பிராணியை அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடப் போவதில்லை'' என்று கூறினார்கள். 40

4399. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜத்துல்வதாவின்போது 'கஸ்அம்' குலத்துப் பெண்ணொருத்தி மார்க்கத் தீர்ப்பு கேட்டாள். அப்போது, ஃபள்ல் இப்னு அப்பாஸ்(ரலி) (வாகனத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார். அவள், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ், தன் அடியார்களின் மீது கடமையாக்கிய (ஹஜ்ஜின்) விதி, வாகனத்தில் சரியாக அமர முடியாத அளவிற்குத் தள்ளாத முதியவரான நிலையில் என் தந்தையிடம் வந்து சேர்ந்தது. எனவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?' என்று கேட்டாள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (நிறைவேறும்)'' என்று பதிலளித்தார்கள். 41

4400. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது 'கஸ்வா' எனும் (தம்) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா(ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) அவர்களிடம் '(கஅபாவின்) சாவியை எம்மிடம் கெண்டு வாருங்கள்'' என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி(ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் இப்னு தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக் கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு (உள்ளே நுழைந்து) விட்டேன். அப்போது பிலால்(ரலி) கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?' என்று கேட்டேன். அவர்கள், 'அந்த இரண்டு தூண்களுக்கிடையே தொழுதார்கள்'' என்று கூறினார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரண்டு தூண்களுக்கிடையே நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?' என்று கேட்க மறந்துவிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக்கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது. 42

4401. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான ஸஃபிய்யா பின்த் ஹுயை(ரலி) அவர்களுக்கு 'ஹஜ்ஜத்துல் வதா'வின்போது மாதவிடாய் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்துவிட்டாரா?' என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், 'அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்'' என்று கூற, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் பரவாயில்லை. அவர் புறப்படலாம்'' என்று கூறினார்கள். 43

4402. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜத்துல் வதாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். (நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை) ஹஜ்ஜத்துல் வதா ('விடை பெறும் 'ஹஜ்) என்பதன் கருத்தென்ன என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, (பிற்காலத்தில் தோன்றும் பெரும் பொய்யனான) அல்மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே கூறினார்கள். அப்போது, 'அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ்(அலை) அவர்கள் (தம் சமுதாயத்தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் (அவனைப் பற்றித் தத்தம் சமுதாயத்தாருக்கு) எச்சரித்தனர். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையே தான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்றுவான். அவனுடைய (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இதை மும்முறை கூறினார்கள் - உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ (தஜ்ஜாலோ) வலது கண் குருடானவன். அவனுடைய கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும். 44

4403. 'அறிந்து கொள்ளுங்கள். உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில் உங்களின் இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகிறதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கியுள்ளான்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, 'நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம் (சேர்த்து விட்டீர்கள்)'' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'இறைவா! நீ சாட்சியாக இரு'' என்று மும்முறை கூறிய பின், 'உங்களுக்கு என்ன நேரப் போகிறதோ!'' அல்லது 'அந்தோ பரிதாபமே!'' கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

4404. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பத்தொன்பது புனிதப் போர்களில் கலந்துகொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல் வதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்த ஹஜ்ஜும் செய்யவில்லை.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள். 45

4405. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் 'ஹஜ்ஜத்துல் வதா'வின்போது என்னிடம், 'மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்!'' என்று சொல்லிவிட்டு, 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் மாறிவிடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

4406. அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

''வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள 'முளர்' குலத்தாரின் ரஜப் மாதமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 46

(ஹஜ்ஜத்துல் வதாவின்போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா?' எனக் கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது துல்ஹஜ் இல்லையா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம்'' என்றோம். (பிறகு,) 'இது எந்த நகரம்?' எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது (புனிதமிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், 'ஆம்'' என்றோம். மேலும், 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர்'' என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்துவிட்டு, 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா?' எனக் கேட்க, நாங்கள், 'ஆம்'' என்றோம். (பிறகு,) 'உங்களின் புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்களுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்தீர்ப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்துவிடுங்கள். ஏனெனில், இச்செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம். 47

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) இதை அறிவிக்கும்போது, 'முஹம்மத்(ஸல்) அவர்கள் உண்மை கூறினார்கள்'' என்று கூறுவார்கள்.

பிறகு, நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?' என்று இரண்டு முறை கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) கூறினார்.

''உங்கள் மானமும்'' என்பதையும் சேர்த்தே அபூ பக்ரா(ரலி) கூறினார் என எண்ணுகிறேன்.

4407. தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார்

யூதர்களில் சிலர், (ஒரு குறிப்பிட்ட இறை வசனம் பற்றி), 'இந்த வசனம் (யூதர்களான) எங்களிடையே அருளப்பட்டிருந்தால் நாங்கள் (இது அருளப் பெற்ற) அந்த நாளை (கொண்டாடப்படவேண்டிய) பெருநாளாக ஆக்கிக்கொண்டிப்போம்'' என்று கூறினர். உமர்(ரலி) அவர்கள், 'எந்த வசனம் அது?' என்று கேட்க அவர்கள், 'இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன்; உங்களின் மீது என் அருட்கொடையை நிறைவாகப் பொழிந்து விட்டேன்; உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துக் கொண்டேன்' எனும் (திருக்குர்ஆன் 05:03) இறைவசனம் தான் அது'' என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர்(ரலி), 'இது எந்த இடத்தில் அருளப்பெற்றது'' என்று கூறினார்கள். 48

4408. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ('விடைபெறும்' ஹஜ்ஜின் போது) புறப்பட்டோம். எங்களில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டியிருந்தவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

இது வேறிரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் (சிறிய மாற்றத்துடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில், 'ஹஜ்ஜத்துல் வதா ஆண்டில்' என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. 49

4409. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'ஹஜ்ஜத்துல் வதா'வின் சமயம் (நான் மக்காவிலிருந்தபோது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். நான், 'இறைத்தூதர் அவர்களே! செல்வந்தனாகிய எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித்துள்ளது. எனவே, நான் என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'வேண்டாம்'' என்று கூறினார்கள். நான் 'அப்படியானால் என் சொத்தில் பாதியை தர்மம் செய்யட்டுமா?' என்று கேட்க அதற்கும், 'வேண்டாம்'' என்று கூறினார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விரும்பிச் செய்கிற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகிற ஒரு கவளம் உணவுக்கும் கூட (உங்களுக்குப் பிரதி பலன் அளிக்கப்படும்.)'' என்று கூறினார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! (என் தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் செல்வார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின் தங்கியவனாக ஆகிவிடுவேனா?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீங்கள் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்துகொண்டே இருந்தால் உங்கள் அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும்' எனக் கூறிவிட்டு உங்களை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பமடைவதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப்படலாம்'' என்று கூறினார்கள். மேலும், 'இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்தைய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே'' எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) ஸஅத் இப்னு கவ்லா(ரலி) மக்காவிலேயே இறந்து விட்டதற்காக, 'பாவம், ஸஅத் இப்னு கவ்லா! (அவர் நினைத்து நடக்கவில்லை) என்று நபி(ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள். 50

4410. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'ஹஜ்ஜத்துல் வதா' வின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்த பின்) தம் தலையை மழித்துக் கொண்டார்கள். 51

4411. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களில் சிலரும் ஹஜ்ஜத்துல் வதாவின்போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்த பின்) தம் தலையை மழித்துக் கொண்டார்கள். (தோழர்கள்) சிலர் தம் தலைமுடியைக் குறைத்துக் கொண்டார்கள். 52

4412. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஹஜ்ஜத்துல் வதாவின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுகை நடத்தியபடி நின்றுகொண்டிருந்தபோது, கழுதையொன்றில் பயணித்தபடி நான் அவர்களை நோக்கிச் சென்றேன். (என்னுடைய) அந்தக் கழுதை (தொழுகையாளிகளின்) ஓரணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்து சென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் நின்று கொண்டேன். 53

4413. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களுடன் நான் இருந்துகொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹஜ் பயணத்தின் வேகத்தைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், '(அவர்களின் பயணவேகம்) நடு நிலையானதாய் இருந்தது. (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடம் வந்ததும் அவர்கள் விரைந்து செல்வார்கள்'' என்று கூறினார்கள். 54

4414. அபூ அய்யூப் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

நான் ஹஜ்ஜத்துல் வதாவின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (முஸ்தலிஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் ஒரு சேரத் தொழுதேன். 55

பகுதி 79

தபூக் போர் - அதுதான் உஸ்ராப் போர் 56

4415. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்

என் நண்பர்கள் என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்'' என்று சொன்னேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கோபத்திலிருந்து சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி(ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், 'அப்துல்லாஹ் இப்னு கைஸே!'' என்று பிலால்(ரலி) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், 'உங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்'' என்று கூறினார்கள். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், 'ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்...'' என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, 'பிடித்துக்கொள்'' என்று கூறினார்கள்.

அவற்றை அப்போதுதான் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஒட்டிக்) கொண்டு சென்று அவர்களிடம், 'அல்லாஹ்' அல்லது 'இறைத்தூதர்' அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துளளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்படி சொல்லக் கூறினார்கள்' எனத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, 'நபி(ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ('நான் எந்த வாகனமும் தர மாட்டேன்' என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?' எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், '(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்'' என்று கூறினார்கள். நான் அவர்களுக்குத் தரமாட்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.

4416. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக மதீனாவில்) அலீ(ரலி) அவர்களை (தாம் திரும்பிவரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ(ரலி), 'குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னைவிட்டுச் செல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.

4417. யஅலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் சிரம(ப் போரான தபூக்) யுத்தத்தில் கலந்து கொண்டேன். என் செயல்களிலேயே அந்தப் புனிதப் போர் தான் என்னிடம் மிக உறுதி வாய்ந்ததாகும். என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அந்த இருவரில் ஒருவர் மற்றவரின் கையைக் கடித்துவிட்டார். கடிபட்டவர், கடித்தவரின் வாயிலிருந்து தன்னுடைய கையை இழுத்துக் கொள்ள முனைந்தபோது கடித்தவரின் முன்பற்களில் ஒன்று கழன்று (விழுந்து)விட்டது. இருவரும் (தங்கள் வழக்கை) நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றபோது, அவர்கள் பல்லை இழந்தவருக்கு நஷ்டயீடு தரத் தேவையில்லை (பழி வாங்கிக் கொள்ளவும் அனுமதியில்லை)'' என்று தீர்ப்பளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ(ரஹ்) கூறினார்:

அறிவிப்பாளர் ஸஃப்வான் இப்னு யஅலா(ரஹ்), 'அவ்விருவரில் யார், யாரைக் கடித்தார் என்று எனக்குத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அதை மறந்துவிட்டேன். மேலும், 'ஒட்டகத்தின் வாயில் மெல்லக் கொடுப்பது போல் உன்னுடைய வாயில் நீ மெல்லுவதற்காக அவர் தன்னுடைய கையைவிட்டு வைத்திருப்பாரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதாகவும் ஸஃப்வான் அவர்கள் கூறினார்கள் என்று நினைக்கிறேன். 57

பகுதி 80

கஅப் இப்னு மாலிக்(ரலி) அவர்களின் நிகழ்ச்சியும், '(தபூக் போரில் தக்க காரணமின்றி கலந்து கொள்ளாமலிருந்துவிட்டதற்காக) யாருடைய விஷயத்தில் தீர்ப்பளிக்காமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தோ அந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்தான்'' எனும் (திருக்குர்ஆன் 09:118வது) இறைவசனமும். 58

4418. கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

''தபூக் போரைத் தவிர, நபி(ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. இதுவல்லாது நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்துகொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப் போனார்கள். (போன இடத்தில்) போரிடும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்துவிட்டான். 59

'இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்' என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த 'அகாப இரவில்' இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கவேண்டும் என நான் விரும்பியதில்லை; 'அல் அகபா' பிரமாணத்தைவிட 'பத்ர்' மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே! 60

(தவூக் போரில் கலந்து கொள்ளாததையடுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) என்னுடைய செய்திகள் சில பின்வருமாறு:

அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாதபோது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒருபோதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின்போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரண்டு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை. 61 ஆனால், தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயியில் நபி(ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளவேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார்கள். அப்போதுதான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும் விட்டார்கள். 62 'எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது' எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.

(போரில் கலந்துகொள்ளாமல்) தலைமறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு (வஹீ) வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற) அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலாவேன். என்னுடைய பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்துவிடுவேன். '(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப்படவேண்டும்?)' என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடுபட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டுவிட்டார்கள். அப்போதும் நான் என்னுடைய பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை. 'நபி(ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்களில் பயண ஏற்பாடுகளைச் செய்து அவர்களடன் போய்ச் சேர்ந்துகொள்வேன்' என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பகுதி செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) என்னுடைய நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடடினயாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும்போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டிருக்கும்போது தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'கஅப் என்ன ஆனார்?' என்று கேட்டார்கள். பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! அவரின் இரண்டு சால்வைகளும் (ஆடை அணிகலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்துவிட்டன'' என்று கூறினார். உடனே, முஆத் இப்னு ஜபல்(ரலி), (அந்த மனிதரை நோக்கி), 'தீய வார்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டியபோது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். 'நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?' என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்துவிட்டார்கள் என்று (செய்தி) சொல்லப்பட்டபோது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தைவிட்டு விலகி விட்டது. 'பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்துவிடுவான்)' என்று உணர்ந்து, நபி(ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.

(பொதுவாக) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம் போல்) அதை அவர்கள் செய்தபோது, (தபூக் போரில் கலந்துகொள்ளச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்று அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டார்கள்.

அப்போது, நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்னபோது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போன்று புன்னகைத்தார்கள். பிறகு, 'வாருங்கள்'' என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், '(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துகொண்டிருக்கவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவருடைய) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம்கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்போது) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போல் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களைவிட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை'' என்று கூறினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இவர் உண்மை சொல்லிவிட்டார்'' (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்களின் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்'' என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.

பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமல் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!'' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்விடம் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, '(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கிறார்களா?' என்று கேட்டேன். அதற்கவர்கள், 'ஆம், இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போன்றே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) கூறினார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டதும் தான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது.'' என்று கூறினார்கள். உடனே நான், 'அவர்கள்'' இருவரும் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'முராரா இப்னு ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் இப்னு உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்'' என்று பத்ருப்போரில் கலந்துகொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்றுவிட்டேன்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்துகொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்களின் விஷயத்தில் மாறிப் போய்விட்டார்கள். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போன்றும் அது எனக்கு அன்னியமானது போன்றும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாள்கள் இருந்தோம். என்னுடைய இரண்டு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்துகொண்டும், கடை வீதிகளில் சுற்றிக்கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேசமாட்டார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும்போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது (என்னை நபி(ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று) ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக்கொள்வதுமாக இருந்தார்கள்.

மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து சென்று அபூ கத்தாதா(ரலி) அவர்களின் தோட்டத்தின் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார் அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், 'அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயாக?' என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போன்றே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரண்டு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்த அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி) னேன்.

(நிலைமை இவ்வாறு வீடித்துக் கொண்டிருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், 'கஅப் இப்னு மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?' என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே, அவர் என்னிடம் வந்து, 'ஃகஸ்ஸான்' நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்துவிடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.

இதை நான் படித்தபோது, 'இது இன்னொரு சோதனையாயிற்றே!'' என்று (என் மனத்திற்குள்) கூறிக்கொண்டு அதை எடுத்துச்சென்று (ரொட்டி சுடும்) அடுப்பிலிட்டு எரித்துவிட்டேன்.

ஐம்பது நாள்களில் நாற்பது நாள்கள் கழிந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஒரு தூதர் என்னிடம் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , நீங்கள் உங்கள் மனைவியைவிட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்'' என்று கூறினார். அதற்கு நான், 'அவளை நான் விவாகரத்துச செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டேன். அவர், 'இல்லை. (விவாகரத்து செய்யவேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகி விடவேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு)'' என்று கூறினார். இதைப் போன்றே என் இரண்டு சகாக்களுக்கும் (நபி(ஸல்) அவர்கள் உத்தரவு) அனுப்பியிருந்தார்கள். எனவே, நான் என் மனைவியிடம், 'உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!'' என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் இப்னு உமய்யா(ரலி) அவர்களின் மனைவி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(என் கணவர்) ஹிலால் இப்னு உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவுகொள்ள) நெருங்க வேண்டாம்'' என்று கூறினார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார்'' என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார்.

கஅப்(ரலி) கூறினார்:

என் வீட்டாரில் ஒருவர், 'தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் இப்னு உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடைபுரிய) அனுமதிக்கும்படி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினார். அதற்கு நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்கமாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்ன(பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்)'' என்று கூறி (மறுத்து) விட்டேன். அதற்குப் பின் பத்து நாள்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாள்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118வது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) 'பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறும், நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது அப்போது, 'சல்உ' மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், 'கஅப் இப்னு மாலிக்கே! நற்செய்தி பெற்றுக்கொள்!'' என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்துவிட்டது என்று அறிந்து கொண்டேன். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தபோது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று அறிவித்துவிட்டார்கள்' என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரண்டு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக்கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி கூறினார்.) மேலும், (மலைமீதிருந்து வந்த) அந்தக் குரல் அக்குதிரையைவிட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலைமீதிருந்து) கேட்டேனோ  அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரண்டு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூ கத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்துகொண்டு, இறைத்தூதர்(ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், 'அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்துவிட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்' என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா(ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னபோது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக்கொண்டிருக்க, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாள்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்'' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) சந்தோஷம் ஏற்படும்போது அவர்களின் முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களின் முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களின் சந்தோஷத்தை நாங்கள் அறிந்துகொள்வோம். 63 இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்மமாக அளித்துவிடுகிறேன்'' என்று சொன்னேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது'' என்று கூறினார்கள். 'கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். 64 இறைத்தூதர் அவர்களே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதையடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்'' என்று கூறினேன்.

எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து என்னுடைய இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று உறுதியாக நம்புகிறேன்.

மேலும், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், 'திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களின் மீதும் அன்சாரிகளின் மீதும் (அருள் புரிந்தான்.) அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்களின் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் முது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாமல்) விவகாரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்துவிட்டான்.) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கடியாகத் தோன்றி அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனைவிட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும் அவர்கள் உறுதிபட அறிந்துகொண்டனர். எனவே, அவர்கள் பாவத்திலிருந்து விலகி கொள்ளும் பொருட்டு அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கிறான். இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 09: 117-119) வசனங்களை அருளினான்.

எனவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒருபோதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்ன(வர்களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போன்று நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளியபோது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். 'நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும்போது, அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட வேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக்கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்களின் மீது திருப்தியுறவேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்களின் மீது திருப்தி கொண்டாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்களின் மீது ஒருபோதும் திருப்திகொள்ளமாட்டான்'' என்று (கடிந்த வண்ணம்) அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 09:95, 96)

குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களிடமும் உறுதிப்பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களின்) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் வரையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டு வந்தார்கள். இதனால் தான் (9வது அத்தியாயத்தின் 118-வது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து 'போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்' என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறவில்லை. (மாறாக, 'பின்தங்கிவிட்ட மூவர்' என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான்.) 'நபி(ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப் போக்குக் கூறியவர்களின் காரணங்களை உடனுக்குடன் ஏற்றது போன்றல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான்'' என்பதே அதன் கருத்தாகும்.

''தபூக் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து தம் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்'' என்று கஅப்(ரலி) முதிய வயதடைந்து கண்பார்வை இழந்துவிட்ட சமயம் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த - அவர்களின் புதல்வர் - அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள்.

பகுதி 81

நபி(ஸல்) அவர்கள் (ஸமூத் கூட்டத்தாரின் வசிப்பிடமாயிருந்த) 'ஹிஜ்ர்' பிரதேசத்தில் தங்கியது. 65

4419. இப்னு உமர்(ரலி) அவர்கள அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் 'ஹிஜ்ர்' பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, 'தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் நுழையும்போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுதுகொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள்'' என்று கூறினார்கள். பிறகு, தம் தலையை (தம் மேலங்கியால்) மறைத்துக்கொண்டு அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை வேக வேகமாகப் பயணித்தார்கள். 66

4420. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து, 'இவர்களைத் தீண்டியது போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே அல்லாமல் வேறுமுறையில், வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கிக்) கூறினார்கள். 67

பகுதி 82

4421. முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தம் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அவர்களின் தேவை முடிந்ததும் நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக எழுந்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். தம் முழங்கைகள் இரண்டையும் அவர்கள் கழுவப்போனபோது அவர்களின் (மேலங்கியின்) சட்டைக் கைகள் இரண்டும் (இறுக்கமாக) நெருக்கலாயின. அவர்கள் மேலங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் காலுறைகளின் மீது (கையால் தடவி) 'மஸ்ஹு' செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா இப்னு முஃகீரா(ரஹ்) கூறினார்கள்.

இது தபூக் போரின்போது நடைபெற்ற நிகழ்ச்சி என்றே (என் தந்தை) முஃகீரா(ரலி) குறிப்பிட்டார்கள் என அறிகிறேன்.

4422. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பியவாறு மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது அவர்கள், 'இது 'தாபா' (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கிறோம்'' என்று கூறினார்கள். 68

4423. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கியபோது, 'மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத்தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் மதினாவில் தான் இருக்கிறார்கள்; அத்தியாவசியக் காரணங்கள் தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்துகொள்ளவிடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்களின் உள்ளம் நம்முடன் தான் உள்ளது)'' என்று பதிலளித்தார்கள். 69

பகுதி 83

நபி(ஸல்) அவர்கள் கிஸ்ரா மற்றும் கைஸருக்கு எழுதிய நிருபம் 70

4424. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் 'குஸ்ரூ' எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் இப்னு ஹுதைஃபா அஸ்ஸஹ்மீ(ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதைக் கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள். 71 பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்:

''எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ம்ஸ்ரா' ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்'' என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) சொன்னதாக நினைக்கிறேன். 72

4425. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்டவர்களுடன் நானும் சேர்ந்துகொண்டு (ஆயிஷா(ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்) போரிட முனைந்தபோது, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் 'தம் ஆட்சியதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒருபோதும் உருப்படாது'' என்று கூறினார்கள். 73

(இதுதான் எனக்குப் பயனளித்த நபி(ஸல்) அவர்களின் சொல்.)

4426. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்

நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்பதற்காக 'வதா' மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவு கூர்கிறேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

('ஃகில்மான்' (சிறுவர்கள்) என்பதற்கு பதிலாக) 'ஸிப்யான் (சிறுவர்கள்) என்று சாயிப் இப்னு யஸீத்(ரலி) மற்றொரு முறை (இதை அறிவிக்கும்போது) கூறினார்கள்.

4427. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து வந்தபோது, அவர்களை வழியிலேயே சந்தித்து வரவேற்க சிறுவர்களுடன் சேர்ந்து நான் 'வதா' மலைக்குன்றுக்குச் சென்றதை (இப்போது) நினைவு கூர்கிறேன். 74

பகுதி 84

நபி(ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும். 75

அல்லாஹ் கூறினான்:

(நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக் கூடியவரே. இவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள் தாம். பிறகு திண்ணமாக, மறுமைநாளில் நீங்கள் (அனைவரும்) உங்களுடைய இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்து வைத்துத்) தர்க்கித்துக் கொள்வீர்கள். (திருக்குர்ஆன் 39:30,31)

4428. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண்ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். 76 அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக்குழய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது'' என்று கூறினார்கள்.

4429. உம்முல் ஃபள்ல் பின்த்தில் ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் கடைசியாகத் தொழுத) மஃக்ரிப் தொழுகையில், 'வல் முர்ஸலாத்தி உர்ஃபன்' எனும் (குர்ஆனின் 77வது) அத்தியாயத்தை ஓதுவதைச் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. 77

4430. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

உமர் இப்னு கத்தாப்(ரலி), என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக்கொள்வது வழக்கம். எனவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள, உமர்(ரலி) அவர்களிடம், 'எங்களுக்கு இப்னு அப்பாஸை போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்'' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவரின் (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்'' என்று (என்னைக் குறித்துச்) கூறினார்கள். பிறகு உமர்(ரலி) (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், '(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும்போது'' எனும் (திருக்குர்ஆன் 110:1,2 வது) இறைவனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், '(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர்(ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவித்தான்'' என்று பதிலளித்தேன். அதற்கு உமர்(ரலி), 'நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்ததையே நானும் அறிந்து கொண்டேன்'' என்று கூறினார்கள். 78

4431. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

(ஒரு முறை) இப்னு அப்பாஸ்(ரலி), '(அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)'' என்று கேட்டுவிட்டுக் கூறினார்கள்:

(வியாழக்கிழமையன்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், 'என்னிடம் (எலும்பைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபட்டு) சச்சரவிட்டுக் கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்து முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்'' என்று கூறினர். எனவே, நபி(ஸல்) அவர்கள், 'என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரணசாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது'' என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தருவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். 'அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்'' என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு அபில் முஸ்லிம்(ரஹ்) கூறினார்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) (நபி(ஸல்) அவர்களின்) 'மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள்' அல்லது '(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்து விட்டேன். 79

4432. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்களில் சிலர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (அவர்களை எழுதித் தரச் சொல்லித் தொந்தரவு செய்யாதீர்கள்) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே. நமக்கு அல்லாஹ்வின் வேதமே போதும்'' என்று கூறினார்கள். உடனே அங்கு வீட்டிலிருந்தோர், கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர் '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டு போய்க் கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்'' என்று கூறினார்கள். மற்ற சிலர் வேறு விதமாகக் கூறினார்கள். அவர்களின் கூச்சலும் சச்சரவும் அதிகரித்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'எழுந்திருங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:

''அவர்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதனால் இறைத்தூதர்(ஸல்) அவர்களால் அந்த மடலை எழுத முடியாமல் போனதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்'' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறி வந்தார்கள். 80

4433 / 4434 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டதோ அந்த நோயின்போது (தம் புதல்வி), ஃபாத்திமா(ரலி) அவர்களை அழைத்து (அவர்களின் காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை நபி(ஸல்) அவர்கள் அழைத்து இரகசியமாக ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள். நாங்கள் அதைப்பற்றி (ஃபாத்திமா(ரலி) அவர்களிடம்) விசாரித்தோம். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்கள் (முதல் முறை அழைத்தபோது), தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே இறந்துவிடப்போவதாக இரகசியமாக என்னிடம் கூறினார்கள். எனவே, நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறையில்), 'அவர்களின் குடும்பத்தாரிலேயே நான்தான் முதலாவதாக அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்லவிருப்பவள்'' என்று இரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். எனவே, நான் சிரித்தேன்'' என்று கூறினார்கள். 81

4435. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை'' என்று நான் (நபி(ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), 'அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்'' எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, 'இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது' என்று நான் எண்ணிக்கொண்டேன். 82

4436. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, '(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று சொல்லத் தொடங்கினார்கள்.

4437. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, 'சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்' அல்லது '(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்' எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை'' என்று சொல்லிவந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், 'இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், 'இனி (நபி(ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்'' என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.

4438. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி(ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக்கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன், அவர் பல்துலக்கும் ஈரமான (பேரீச்சங்)குச்சி இருந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவுடன் 'தம் கையை' அல்லது 'தம் விரலை' உயர்த்திப் பிறகு, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:

''என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே நபி(ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்தபோது அவர்கள் இறந்தார்கள்'' என்று ஆயிஷா(ரலி) கூறிவந்தார்கள்.

4439. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். 83 நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

4440. ஆயிஷாரலி) அவர்கள் அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் பக்கம் தம் முதுகைச் சாய்த்தபடி (என் அரவணைப்பில்) இருக்க, அவர்கள் பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்தபோது, அவர்கள், 'இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக'' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்.

4441. 'நபி(ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, 'அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கி விட்டார்கள்'' என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். 'தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 84

4442. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்தபோது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரனா) உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்:

ஆயிஷா(ரலி) கூறியதை அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நான் தெரிவித்தபோது அவர்கள், 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை'' என்று பதிலளித்தேன். 'அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்'' என்று அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

மேலும், ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (நோய்க்காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகிவிட்டபோது அவர்கள், 'வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியினால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும்'' என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா(ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது அமரவைத்தோம். பிறகு அவர்களின் மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள், '(சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்)'' என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்; பிறகு உபதேசமும் செய்தார்கள்.85

4443 / 4444 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்ளலானார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக் கொண்டார்கள். அவர்கள் இந்நிலையில் இருக்கும்போது, 'அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று அவர்கள் செய்ததைக் குறித்து (''அதே போல் நீங்களும் செய்து விடாதீர்கள்'' என்று) எச்சரித்தார்கள். 86

4445. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''(மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுகை நடத்தும்படி (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏன் கட்டளையிட்டீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் வாதிட்டேன். 87 நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு அவர்களின் அந்தஸ்தில் செயல்படும ஒரு மனிதரை மக்கள் விரும்புவார்கள் என்று என் மனத்திற்கு ஒருபோதும் படவில்லை. மேலும், அவர்களின் அந்தஸ்தில் செயல்பட முன்வரும் எவரையும் மக்கள் ஒரு துர்க்குறியாகவே கருதுவார்கள் என்றே நான் எண்ணிவந்தேன். எனவே, அபூ பக்ர்(ரலி) அவர்களைவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை விலக்கி விடவேண்டும் என்று விரும்பினேன்.

4446. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். 88 எனவே, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எவருடைய மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒருபோதும் நான் வருந்துவதில்லை.

4447. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்'' என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்'' என்று பதிலளித்தார்கள்.

4448. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

முஸ்லிம்கள் திங்கட்கிழமையன்று ஃபஜ்ருத் தொழுகையில் இருக்க, அபூ பக்ர்(ரலி) முஸ்லிம்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் திரையை விலக்கிக் கொண்டு திடீரென (வெளியே) வந்தவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம். மக்கள் தொழுகை அணிகளில் நின்று கொண்டிருக்க, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுப்பிறகு புன்னகைத்தார்கள். அபூ பக்ர்(ரலி) (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்துகொள்ளத் தம் குதிகால்களால் பின்வாங்கிச் சென்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவிரும்புகிறார்கள் என்று அபூ பக்ர்(ரலி) நினைத்துவிட்டார்கள். முஸ்லிம்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் தம் தொழுகையில் (கவனம் சிதறி) குழப்பத்திற்குள்ளாக இருந்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள்' என்று தம் கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு, அறைக்குள் நுழைந்துகொண்டு திரையைத் தொங்கவிட்டார்கள். 89

4449. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறையில் தங்க வேண்டிய) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களின் இறப்பின்போது அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட்கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தன்னுடைய கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக்கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள். என்று நான் புரிந்து கொண்டேன். எனவே, 'உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா?' என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், 'ஆம்'' என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், 'பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா?' என்ற கேட்டேன். அவர்கள், தம் தலையால், 'ஆம்'' என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய 'தோல் பாத்திரம் ஒன்று' அல்லது 'பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா? மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள், தம் இரண்டு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தை; தடவிக்கொண்டு, 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு'' என்று கூறலானார்கள். பிறகு தம் கரத்தைத் தூக்கி, '(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது. 90

4450. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, 'நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?' என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனதில் எண்ணியவாறு கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி(ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி), தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், 'என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள்! அப்துர் ரஹ்மானே!'' என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்துமென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களின் எச்சில் என்னுடைய எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

4451. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் என்னுடைய (முறை வரும்) நாளில் என்னுடைய நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் நோயுற்றுவிடும்போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர்களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக்கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, '(இறைவா!) சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) தம் கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார். நபி(ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதிலேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். பிறகு 'அவர்களின் கரம் விழுந்துவிட்டது' அல்லது 'அ(க்குச்சியான)து அவர்களின் கரத்திலிருந்து விழுந்துவிட்டது' இவ்விதம் நபி(ஸல்) அவர்களின் எச்சிலையும் என்னுடைய எச்சிலையும் (அவர்களின்) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்று சேர்த்தான்.

4452 / 4453 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அபூ பக்ர்(ரலி) 'ஸுன்ஹ்' எனுமிடத்திலுள்ள தம் உறைவிடத்திலிருந்து ஒரு குதிரை மீது பயணம் செய்து முன்னோக்கி வந்து (மதீனாவை அடைந்து குதிரையை விட்டு) இறங்கிப் பள்ளிவாசலுக்குள் நுழைத்தார்கள். மக்களிடம் பேசவில்லை. இறுதியில் என்னிடம் வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களைத் தேடினார்கள். அவர்கள் (இறந்து) யமன் நாட்டுத் துணி ஒன்றினால் போர்த்தப்பட்டிருக்க, அவர்களின் முகத்தைவிட்டு (அத்துணியை) நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தம் தலையைக் கவிழ்த்து அவர்களை முத்தமிட்டு அழுதார்கள். பிறகு, 'என் தந்தையும் என் தாயும் தங்களக்கு அர்ப்பணமாகட்டும். உங்களுக்கு அல்லாஹ் இரண்டு இருப்புகளை ஒன்று சேர்க்கவில்லை. உங்களின் மீது விதிக்கப்பட்டிருந்த இறப்பைத் தாங்கள் அனுபவித்துவிட்டீர்கள்'' என்று கூறினார்கள். 91

4454 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியே வந்தார்கள். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாகப்) பேசிக்கொண்டிருந்ததைக் கண்டதும், 'உமரே! அமருங்கள்'' என்று அபூ பக்ர்(ரலி) கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்தார்கள். அப்போது மக்கள் உமர்(ரலி) அவர்களை விட்டுவிட்டு அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு,

''நிற்க, உங்களில் யார் முஹம்மத்(ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மத்(ஸல்) நிச்சயம் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளட்டும் உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தார்களோ அவர்கள் 'அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான்' என்பதை அறிந்துகொள்ளட்டும்.

''அல்லாஹ் கூறினான்; முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்துவிட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான்' (திருக்குர்ஆன் 3:144) என்றார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை, அல்லாஹ் அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போன்றும், அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதை அவர்கள் அறிந்தது போன்றும் இதனை ஓதக் கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.

உமர்(ரலி) கூறினார்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான் கேட்டபோதுதான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையை தாங்க முடியவில்லை. அபூ பக்ர்(ரலி) ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்துவிட்டேன். 92

4455, 4456 / 4457. ஆயிஷா(ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

நபி(ஸல்) அவர்கள் இறந்த பின்னால் அவர்களை அபூ பக்ர்(ரலி) முத்தமிட்டார்கள்.

4458. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, 'என்னுடைய வாயில் மருந்தூற்றாதீர்கள்'' என்பது போல் சைகை செய்யலானார்கள். 'நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை)'' என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது, 'என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்கவில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்தபோது மருந்தூற்றினீர்கள்,'' என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், '(ஆம்! தடுத்தீர்கள்) நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் இதை வெறுத்து, 'வேண்டாம்' என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்)'' என்று கூறினோம். அவர்கள், 'நான் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந்தூற்றப்படவேண்டும்'' என்று கூறிவிட்டு, 'ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும்போது) உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4459. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்

''நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே'' என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், 'இதைச் சொன்னவர் யார்?' என்ற கேட்டுவிட்டு, '(நபி(ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?' என்று கேட்டார்கள். 93

4460. தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் வஸிய்யத் - மரண சாசனம் செய்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'இல்லை'' என்று பதிலளித்தார்கள். நான், 'அப்படியென்றால் மக்களின் மீது மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது' அல்லது மரணசாசகனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட்டது?' என்று கேட்டேன். 'அல்லாஹ்வின் வேதத்தின்படி செயல்படுமாறு நபி(ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

4461. அம்ர் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எச்செல்வத்தையுமோ)விட்டுச் செல்லவில்லை; 'பைளா' எனும் தம் கோவேற கழுதையையும், தம் ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. 95

4462. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் நோய் கடுமையானபோது, அவர்களுக்கு மயக்கமேற்படத் தொடங்கியது. அப்போது ஃபாத்திமா(ரலி), 'அந்தோ! என் தந்தைக்கு ஏற்பட்ட மரண வேதனையே!'' என்று கூறினார்கள். ஃபாத்திமா(ரலி) அவர்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், 'இன்றைய தினத்திற்குப் பின் உன் தந்தைக்கு எந்த வேதனையும் இல்லை'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் இறப்பெய்தியவுடன், ஃபாத்திமா(ரலி), 'அழைத்த அதிபதியின் அழைப்பை ஏற்ற என் தந்தையே! ஃபிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை தம் உறைவிடமாக்கிக் கொண்ட என் தந்தையே! இந்த இறப்புச் செய்தியை நாங்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கிறோம், என் தந்தையே!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டபோது ஃபாத்திமா(ரலி) (என்னை நோக்கி), 'அனஸே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது மண்ணைப் போட உங்கள் மனம் எப்படி இடம் தந்தது?' என்று கேட்டார்கள்.

பகுதி 85

நபி(ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை.

4463. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, 'சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாதவரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை'' என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தம் தலையை என்னுடைய மடி மீது வைத்திருந்த நிலையில் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களின் மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலை குத்தி நின்றது. பிறகு, 'இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன்'' (என்னைச் சேர்த்தருள்)'' என்று கூறினார்கள். அப்போது நான், 'அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை. (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக கொண்டுவிட்டார்கள்)'' என்று (மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது ('இறைத்தூதர்கள் அனைவரும் இறக்கும் முன் இரண்டிலொன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படுவார்கள்' என்று) அவர்கள் கூறியசொல் இதுதான் என நான் புரிந்துகொண்டேன். நபி(ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, 'இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)'' என்பதுதான்.

இதை (உர்வா(ரஹ்) போன்ற) பல அறிஞர்களின் அவையில் ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார்.

பகுதி 86

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பு(க் காலம்).

4464 / 4465 ஆயிஷா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்

நபி(ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள்; 96 (ஹிஜ்ரத்துக்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள்.

4466. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

''இதையே ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள். 97

பகுதி 87

4467. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

முப்பது 'ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தம் இரும்புக் காவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்படடிருந்த நிலையில் நபி(ஸல) அவர்கள் இறந்தார்கள். 98

பகுதி 88

நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களை (ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி) அனுப்பியது. 99

4468. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர், உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உஸாமாவின் (நியமன) விஷயத்தில் நீங்கள் (குறை) ஏதோ பேசியதாக எனக்குத் தெரிய வந்தது. நிச்சயமாக அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள்.

4469. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு புனிதப் போருக்காகப்) படையொன்றை அனுப்பி, அதற்கு உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். (அவரை விட மூத்தவர்கள் பலர் இருக்க, அவர் தலைமை தாங்குவது சரியல்லவென்று) மக்கள் (சிலர்) அவரின் தலைமையைக் குறை கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து, 'இவரின் தலைமையக் குறித்து நீங்கள் இப்போது குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதன்று;) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் தலைமையையும் தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஆட்சியதிகாரத்திற்குத் தகுதியானவராகத்தாம் இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராகவும் இருந்தார். மேலும், அவருக்குப் பின் (அவரின் புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவராவார்'' என்று கூறினார்கள். 100

பகுதி 89

4470. அபுல்கைர் மர்ஸத் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) கூறினார்

நான் அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்ஸுனாபிஹீ(ரஹ்) அவர்களிடம், 'நீங்கள் எப்போது (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஸுனாபிஹீ(ரஹ்) 'நாங்கள் யமன் நாட்டிலிருந்து (நபியின் நகரமான மதீனாவை நோக்கி) ஹிஜ்ரத் செய்து வந்தோம். நாங்கள் 'ஜுஹ்ஃபா'வுக்கு வந்த சேர்ந்தபோது, (தம் வாகனத்தில் பயணித்தபடி) பயணி ஒருவர் எங்களை நோக்கி வந்தார். நான் அவரிடம், '(முக்கியச்) செய்தி ஏதும் உண்டா?' என்று கேட்டேன். அந்தப் பயணி, 'ஐந்து நாள்களுக்கு முன்பு நாங்கள் நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்து விட்டோம்'' என்று பதிலளித்தார்.

நான் 'லைத்துல் கத்ர் (குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தின் கண்ணியமிக்க இரவு) பற்றி நீங்கள் (மதீனாவில்) ஏதேனும் செவியுற்றீர்களா?' என்று ஸுனாபிஹி அவர்களிடம் கேட்க, அவர், 'ஆம். நபி(ஸல்) அவர்களின் (பள்ளிவாசலின்) தொழுகை அழைப்பாளரான பிலால்(ரலி), 'அது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாள்களில் ஏழாவது இரவில் கிடைக்கும் என்று எனக்குத் தெரிவித்தார்கள்'' என்று பதிலளித்தார்கள். 101

பகுதி 90

நபி(ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் பங்கெடுத்தார்கள்?

4471. அபூ இஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார்

''இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் எத்தனை புனிதப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?' என்று நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'பதினேழு (புனிதப் போர்களில் நபி அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்)'' என்று பதிலளித்தார்கள். நான், 'நபி(ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் பங்கெடுத்தார்கள்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பத்தொன்பது போர்களில் (பங்கெடுத்தார்கள்)'' என்று பதிலளித்தார்கள். 102

4472. பராஉ(ரலி) அறிவித்தார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் பதினைந்து புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்.

4473. புரைதா இப்னு ஹுஸைப்(ரலி) அறிவித்தார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்துகொண்டேன்.
Previous Post Next Post