முஃதஸிலாக்கள் யார்?

இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட கூட்டம்தான் முஃதஸிலாக்கள்.  ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் 105 லிருந்து 110 வரை உள்ள காலத்தில் வாஸில் பின் அதா அல் கஸ்ஸால் என்பவரால் உருவாக்கப்பட்ட கூட்டம் தான் இவர்கள். அக்கால கட்டத்தில் இருந்த பல்வேறு சிந்தனையின் தாக்கமாக முஃதஸிலாக்கள் உருவானார்கள். ஜஹ்மியாக்களின் சிந்தனையிலிருந்து பெரும்பான்மையான கருத்துக்களை இவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அதன் பின்னர் முஸ்லிம் நாடுகளில் இந்த சிந்தனை வேகமாக பரவியது.

குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் விளக்கம் என்ற பெயரில் மனம் போன போக்கில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல செய்திகளை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர்.

அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டனர்.

இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடிய யாரும் உலகில் இல்லை. அப்படி யாரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் போவதுமில்லை.

ஏனெனில், அந்தப் பெயர் வழிகெட்ட கொள்கையுடையவர்களின் பெயராக  வரலாற்றில்  இடம்பெற்றுவிட்டது. ஏற்கனவே இருந்த முஃதஸிலாக்கள் கூட தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தம்மை ‘அஹ்லுத் தவ்ஹீத் வல் அத்ல்’ என்றே அழைத்துக் கொண்டனர். எனவே, இன்றும் கூட தூய இஸ்லாத்தை சொல்லக்கூடியவர்கள்‌ என்ற பெயரிலும், இஸ்லாமிய அமைப்புக்கள் என்ற பெயரில் முஃதஸிலாக்களின் எச்ச சொச்சங்கள் சமூகத்திற்குள் ஊடுருவியுள்ளது.

முஃதஸிலாக்கள் என்ற பெயரில் எந்த அமைப்பும் உலகில் இல்லையென்றாலும் முஃதஸிலாக்களின் பாணியில் குர்ஆன், ஸுன்னாவை அணுகும் வழிகெட்ட அடிப்படையில் இயங்கும் அமைப்புக்கள் இருக்கவே செய்கின்றன.

எனவே, முஃதஸிலாக்கள் என்பது அழிந்து போன அமைப்பு அல்ல. சிந்தனை ரீதியில் வாழ்ந்து, வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பாகும். இந்த வழிகெட்ட அமைப்பின் தாக்கம் இஸ்லாமிய சிந்தனையாளர்கள், நவீனகால அறிஞர்கள் என அடையாளம் காணப்பட்ட பலரிடமும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

எனவே, முஃதஸிலாக்களின் வழிகேட்டு வலையில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

முஃதஸிலா பெயர் விளக்கம்:

‘இஃதஸல’ என்றால் பிரிந்து சென்றான், விலகிச் சென்றான், ஒதுங்கினான் என்று அர்த்தம் செய்யலாம்.

وَاِنْ لَّمْ تُؤْمِنُوْا لِىْ فَاعْتَزِلُوْنِ

“மேலும், நீங்கள் என் மீது நம்பிக்கை கொள்ளவில்லையாயின் என்னை விட்டு விலகிக் கொள்ளுங்கள்” (என்று மூஸா கூறினார்).(அல்குர்ஆன் : 44:21)

மேற்படி வசனத்தில் விலகிச் செல்லுங்கள் என்பதற்கு ‘பஃதஸிலூன்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.


பெயருக்கான காரணம்:

முஃதஸிலா என்ற பெயர் இவர்களே தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் அல்ல. அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் இவர்களை இழிவுபடுத்துவதற்காகவும், அடையாளப்படுத்துவதற்காகவும் இவர்களுக்கு இட்ட பெயரே இதுவாகும். இவர்கள் இஸ்லாமிய உம்மத்திலிருந்து சிந்தனை ரீதியில் பிரிந்து சென்றுவிட்டனர் என்று அடையாளப்படுத்தும் விதமாகவே இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். இந்தப் பெயர் இவர்களுக்குச் சொல்லப்படுவதற்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது என்பது பிரபலமான கருத்தாகும்.

இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் ஒரு சபையில் இருந்தார்கள். அப்போது ஒருவர் வந்து, ‘இமாமவர்களே! இப்போது ஒரு கூட்டம் தோன்றியுள்ளது. அவர்கள் பெரும் பாவம் செய்பவர்களைக் காபிர்கள் என்று கூறுகின்றனர். பெரும் பாவம் செய்வது அவர்களின் பார்வையில் குப்ர் ஆகும். பெரும் பாவம் செய்தவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிட்டான் என்பது அவர்களது நிலைப்பாடு. இவர்கள் கவாரிஜ்கள்.

மற்றுமொரு கூட்டம் பெரும்பாவம் செய்பவருக்கும் மன்னிப்பு உண்டு என்று கூறுகின்றனர். அவர்களது பார்வையில் ஈமான் என்பது நம்பிக்கை மட்டுமே, செயல் கிடையாது. ஈமானுடன் பெரும் பாவம் செய்வதால் ஈமானுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கின்றனர். குப்ருடன் நன்மை செய்தால் எப்படி எந்த நன்மையும் இல்லையோ அவ்வாறே ஈமானுடன் பாவம் செய்வதால் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறுகின்றனர். இவர்கள் முர்ஜிய்யாக்கள். இந்தக் கொள்கை பற்றி நீங்கள் எங்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்’ என்று கேட்டார்.

இதற்கு இமாமவர்கள் பதிலளிப்பதற்கு முன்னர் அந்த சபையில் இருந்த வாஸில் பின் அதாஃ (ஹி. 80-131) என்பவன் பெரும் பாவம் செய்பவனை முழுமையான முஃமின் என்றும் நான் சொல்லவும் மாட்டேன், காபிர் என்று முழுமையாகக் கூறவும் மாட்டேன். எனினும், ஈமான்-குப்ர் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்கின்றான். அவன் முஃமினும் இல்லை காபிரும் இல்லை.

மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன்.

இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றான் என்று கூறிவிட்டு ஹஸன் பஸரியின் மஜ்லிஸை விட்டும் ஒதுங்கி மஸ்ஜிதில் ஒரு ஓரத்தில் போய் அமர்ந்து கொண்டான். அம்ர் இப்னு உபைத் என்ற அவனது நண்பனும் அவனுடன் இணைந்து கொண்டான். இந்த சந்தர்ப்பத்தில்தான் இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் ‘இஃதஸல அன்னா வாஸில்’ ‘வாஸில் எம்மை விட்டும் ஒதுங்கிவிட்டார்’ என்றார்கள். அதுவே அவர்களை அடையாளப்படுத்தும் பெயராக மாறிவிட்டது என இமாம் ஸஹ்ருஸ்த்தானி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அல் மிலல் வந்நிஹல் - 1/47,48)


முஃதஸிலாக்களின் கொள்கைகள்:

1.தௌஹீத் :

இதன் மூலம் அல்லாஹுடைய ஏகத்துவத்தை உறுதி செய்வதும் அவனுக்கு இணையில்லை என்பது தான் அவர்களின் கொள்கை. அல்லாஹ்வின் பண்புகளை மறுத்தார்கள். இல்மு, குத்ரத், போன்ற பண்புகள் மட்டும் தான் அல்லாஹ்விற்கு இருப்பதாக ஏற்றுக்கொண்டார்கள்.

2. அல் அத்ல் :

அறிவின் தேட்டங்களுக்கேற்ப அல்லாஹ்வின் சட்டங்களை ஒப்பிடுவது என்பது தான் இதன் மூலம் அவர்கள் நாடுகிறார்கள். இதன் அடிப்படையில் சில விஷயங்களை அவர்கள் மறுத்துள்ளார்கள். வேறு சிலவற்றை கடமையாக்கவும் செய்துள்ளார்கள். அடியார்களின் செயல்களை அல்லாஹு தான் படைத்தான் என்பதை அவர்கள் மறுத்தார்கள்.  மனிதன் தான் நன்மையையும் தீமையையும் படைக்கிறான் என்று கூறினார்கள். மனிதனின் அறிவு நன்மை என்று தீர்மானிக்கும் அனைத்தும் நன்மையாகும்; அது தீமை என்று தீர்மானிக்கும் அனைத்தும் தீமையுமாகும் என்றும் கூறினார்கள். விதி விஷயத்தில் அவர்கள் மஃபதல் ஜுஹ்னி கைலான் அல் திமக்‌ஷி ஆகியோர்களின் வழியைக் கடைபிடித்தார்கள். அவர்கள் கூறினார்கள், அல்லாஹு தாஆலா நுன்னறிவாளன், நீதிமிக்கவன் எனவே அநியாயத்தையும், தீங்கையும் அவன் பால் சேர்த்துக் கூறக்கூடாது. அல்லாஹ் ஏவியதற்கு மாற்றமான ஒன்று அடியார்களிடம் எதிர் பார்க்கக்ப்படாது.  அதே போன்று அவர்கள் மீது அல்லாஹ் ஒன்றை கடமையாக்கி அதற்கு அவனே கூலி கொடுப்பது ஆகுமானதல்ல. எனவே நன்மை, தீமை, ஈமான், குஃப்ர், கட்டுப்படுதல், மாறுசெய்தல் என அனைத்து செயலையும் மனிதர்கள் தான் தன்னிச்சையாக செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களின் செயலுக்கு கூலி வழங்குகிறான் என்றும் கூறினார்கள். இதன் மூலம் விதி என்பதாக ஒன்றும் இல்லை என்று வாதிடுகிறார்கள்.   இதனால் இவர்களுக்கு கத்ரியாக்கள் என்ற பெயருமுள்ளது.

கத்ரியாக்கள் இந்த உம்மத்தின் மஜூஸிகள் ஆவார்கள். அவர்கள் நோயுற்றால் அவர்களை நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள், அவர்கள் மரணித்தால் அவர்களது ஜனாஸாவில் கலந்துக் கொள்ளாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: சுனன் அபீதாவூத் - 4691.

3.அல்மன்ஸீலத்து பைனல் மன்ஸிலத்தைன்:

பாவம் செய்யக்கூடிய ஒருவன் முஃமினுமல்ல காஃபிருமல்ல அவன் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பான் என்று கூறினார்கள்.

ஒரு முறை ஒரு மனிதர் இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் வந்து இமாம் அவர்களே இக்காலத்தில் சில கூட்டத்தார்கள் பெரும் பாவம் புரிபவர்களை காஃபிர்கள் என்று கூறுகிறார்கள் அவர்களிடம்  பெரும் பாவம் மார்க்கத்தை விட்டு வெளியேற்றிவிடும் குஃப்ர் ஆகும். இன்னொரு கூட்டம் பெரும் பாவம் செய்பவர்களை பிற்படுத்துவார்கள்  ஈமான் இருப்பதுடன் பெரும் பாவம் செய்வதால் எந்த தீங்குமில்லை என்று கூறுகிறார்கள். இன்னும் அமல் செய்வதென்பது ஈமானின் பகுதியல்ல ஈமானுடன் மாறுசெய்வதால் எவ்வித தீங்குமில்லை எப்படி குஃப்ரில் இருப்பதுடன் ஒருவர் நன்மை செய்தால் எந்த பயனுமில்லையோ  அதே போன்று தான் இது என்றும் கூறுகிறார்கள் இவர்களைப்பற்றி என்ன தீர்ப்பு சொல்கிறீர்கள்.

இதற்கு பதிலளிப்பதற்கு முன் இமாம் சிறிது நேரம் யோசித்தார்கள். அப்போது அவையில் இருந்த வாஸில் பெரும் பாவம் செய்தவர் முஃமின் என்றும் நான் கூறமாட்டேன், காஃபிர் என்றும் நான் கூறமாட்டேன். மாறாக அவன் இரண்டிற்கும் மத்தியில் இருக்கிறார் என்று தான் கூறுவேன்  என்று கூறி மஸ்ஜிதின் ஒரு பகுதியில் அமர்ந்து தனது கருத்தை வலியுறித்திக் கொண்டிருந்தார். அப்போது இமாம் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் வாஸில் நம்மை விட்டு விலகிச்சென்றார் என்று கூறினார்கள்.

4. ஜமல் போர் மற்றும் ஸிஃப்ஃபீன் போரில் கலந்துகொண்ட  இரண்டு அணியில் ஒரு கூட்டத்தார் தவறிழைத்தவர்கள் ஆவார்கள் என்று கூறினார்கள். இதன் மூலம் அவர்கள் நபித்தோழர்களேயே குறைக் கூறினார்கள்.  இவ்வாறாக இவர்களிடம் பல வழிகேடுகள் தோன்றியது.

5. அல் வஈதிய்யா :

முஃதஸிலாக்களின் ஐந்து அடிப்படைகளில் அல் வஃத் வல் வஈத் வாக்கும் எச்சரிக்கையும் என்பது ஒன்றாகும்.

மறுமையில் பெரும்பாவம் புரிந்தவர்கள் மீது அல்லாஹ் தனது எச்சரிக்கையை நிறைவேற்றுவான். அவர்கள் விஷயத்தில் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளமாட்டான், நரகிலிருந்து யாரையும் வெளியேற்றமாட்டான். அவர்கள் நிராகரிப்பாளர்கள், மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பவர்கள் என்று கூறினார்கள்.

இமாம் ஷஹருஸ்தானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ஒரு முஃமின் அல்லாஹுக்கு கட்டுப்பட்டு, பாவமன்னிப்பு கோரியவனாக இவ்வுலகிலிருந்து விடைபெற்றால் அவன் மறுமையில் நற்கூலியையும் சொர்க்கத்தையும் பெற தகுதியானவனாக இருப்பான். பெரும் பாவம் செய்து  பாவமன்னிப்பு தேடாதவனாக இருந்தால் அவன் நரகில் நிரந்தரமாக இருப்பான். ஆனாலும் அவனுக்கு காஃபிரை விட குறைவான தண்டனைதான் கிடைக்கும் என்பதில் முஃதஸிலாக்கள் ஏகோபித்தார்கள். (அல்மிலல் வந்நிஹல் - 1/45)

- அஷ்ஷெய்க்  M. பஷீர் ஃபிர்தவ்ஸி
أحدث أقدم