விதியை நம்புவது

நன்மையும், தீமையும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து தான் என்று விதியைக் குறித்து நம்ப வேண்டும். மேலும், ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே அல்லாஹ் அதனை அறிந்து வைத்துள்ளான். அதனை "லவ்ஹுல் மஹ்பூழ்" எனும் ஏட்டில் அதை குறித்து எழுதி வைத்துள்ளான் என்றும் நம்பவேண்டும். அல்லாஹ் நாடியது நடக்கும்; அவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது; அவன் அனைத்திற்கும் ஆற்றல் உடையவன். அவன் தான் அனைத்தையும் படைத்தான். தான் நாடியதைச் செய்யக்கூடியவன். 
                                                
 இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையில் ஒன்று தான் விதியைப் பற்றிய நம்பிக்கை. 
                                                
 விதியைப் பொறுத்தவரை அதில் நான்கு படித்தரங்கள் உள்ளன. 
                                                
 முதலாவதாக: (1) 
                                                
 அல்லாஹ் அதனை அறிந்து வைத்துள்ளான். 

 அதாவது உலகில் படைக்கப்பட்ட இன்னும் படைக்கப்படாத சாத்தியமான, சாத்தியமற்ற அனைத்தையும் அல்லாஹ் அவனது ஞானத்தால் சூழ்ந்தறிவான் நடந்தவை, நடக்க இருப்பவை இது வரை நடக்காத ஒன்று அது நடந்தால் எப்படியிருக்கும் என்பதையும் அவன் அறிவான். 
                                                
 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ  يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ ۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَىْءٍ عِلْمًا 

 அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. 

 (அல்குர்ஆன் : 65:12) 
                                                
 இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், 'இவர்கள் (உயிருடன் இருந்திருந்தால்) என்ன செய்திருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன்' எனக் கூறினார்கள். 

 அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) 
 நூல்: ஸஹீஹ் புகாரி : 1384. 
                                                
 படைப்புகளைப் படைத்த அல்லாஹுதஆலா அனைத்திற்குமான விதியை அவைகளைப் படைப்பதற்கு முன்னரே நிர்ணயித்து விட்டான். 
                                                
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. 

 அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) 
 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5160. 
                                                
 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 

 நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக "பகீஉல் ஃகர்கத்" பொது மையவாடியில் இருந்தோம்.   அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள்.   நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.   நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள். 
 பிறகு, "உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை" என்று சொன்னார்கள். 
 அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா" என்று கேட்டார்.   அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார்.   யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்" என்று கூறினார்கள். 
 மேலும் அவர்கள், "நீங்கள் செயலாற்றுங்கள்.   (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது.   நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும்.   கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்" என்று கூறினார்கள். 
 பிறகு "யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்" 

 (அல்குர்ஆன் 92:5-10) எனும்  வசனங்களை ஓதிக்காட்டினார்கள். 

 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5150. 
                                                
 இரண்டாவதாக: (2) 
                                                
 மறுமை நாள் வரை நடக்க இருக்கும் அனைத்தையும் அல்லாஹ் எழுதி வைத்துள்ளான். 
                                                
 اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَآءِ وَالْاَرْضِ‌ اِنَّ ذٰ لِكَ فِىْ كِتٰبٍ‌  اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ 

 நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் உள்ளவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்) ஒரு புத்தகத்தில் (பதிவு செய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும் சுலபமானது. 

 (அல்குர்ஆன் : 22:70) 
                                                
 اِنَّا نَحْنُ نُحْىِ الْمَوْتٰى وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْؔ وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ فِىْۤ اِمَامٍ مُّبِيْنٍ 

 நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். 

 (அல்குர்ஆன் : 36:12) 
                                                
 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. 

 அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ்(ரலி) 
 நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 5160. 

 மூன்றாவதாக (3) 
                                                
 அல்லாஹ் நாடியது நடக்கும் அவன் நாட்டமின்றி எதுவும் நடக்காது. 
                                                
 اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ 

 எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. 

 (அல்குர்ஆன் : 36:82) 
                                                
 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ 

 ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள். 

 (அல்குர்ஆன் : 81:29) 
                                                
 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

 நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள்புரிவாயாக' என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை வலியுறுத்திக் கேளுங்கள். (இது, இறைவனைக் கட்டாயப்படுத்துவதாகாது.) ஏனெனில், அவனைக் கட்டாயப்படுத்துபவர் யாருமில்லை. 

 அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புகாரி : 6339. 
                                                
 நான்காவதாக (4) 
                                                
 அல்லாஹ் அனைத்தையும் படைக்க ஆற்றலுடையவன். 
                                                
 اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ 

 அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். 

 (அல்குர்ஆன் : 39:62) 
                                                
 وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ 

 “உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.” 

 (அல்குர்ஆன் : 37:96) 
                                                
 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், '(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?' என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே 'யமன் நாட்டு கஅபா' என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் சிறந்த குதிரைப் படையினராக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, 'இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு' என்று பிரார்த்தனை செய்தார்கள். எனவே, நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதருக்கு (காரியம் முடிந்துவிட்டதைத்) தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி(ஸல்) அவர்களிடம், 'உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப் போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுவிட்டுவிட்டுத் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைப் படை வீரர்களுக்கும் பரக்கத் (எனும் அருள்வளத்)தை அளிக்கும்படி ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். 

 அறிவிப்பாளர்: ஜரீர்(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புகாரி : 3020. 
                                                
 நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், '(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!' என்று கூறினார்கள். அவர்கள், 'எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்' என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், 'யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை' என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்' என்று பதில் கூறினார். பிறகு, 'நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்' என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, 'ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது' என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! 'நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)' என்று நான் ஆசைப்பட்டேன். 

 அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) 
 நூல்: ஸஹீஹுல் புகாரி : 3191. 
                                                
 விதியைக் குறித்து இந்த நான்கு படித்தரங்களையும் ஈமான் கொள்வது கட்டாயமாகும். இதில் எதையாவது ஒன்றை மறுத்தால் விதியின் மீதுள்ள நம்பிக்கை முழுமைபெறாது. 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                

أحدث أقدم