ஸலவாத் (பிரார்த்தனை)

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (33:56)

 பாங்கு கூறுபவரின் பாங்கை நீங்கள் கேட்டால் அவர் கூறியது போன்று கூறுங்கள். பின்பு என் மீது ‘ஸலவாத்” கூறுங்கள். என்மீது ஒரு முறை ஸலவாத் கூறினால் அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலவாத் கூறுகிறான். அம்ர் இப்னு ஆஸ்(ரலி) திர்மிதி, முஸ்லிம், அபூதாவூத்.

ஸலவாத் என்றால் என்ன?

ஸலாத் என்ற வார்த்தையின் பன்மை தான் ஸலவாத். ஸலாத் என்ற வார்த்தைக்குத் தொழுகை என்று பொருள் கொண்டாலும் பிரார்த்தனை என்ற பொருளும் உள்ளது.

 (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக. நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். 9:103

 ஜகாத் நிறைவேற்றியவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும்படி அல்லாஹ் நபி(ஸல்) அவர்களை ஏவுகிறான்.

 ஒரு முறை எனது தந்தை அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் ஜகாத்தை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தபோது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம ஸல்லி அலாஆலீ அபீ அவ்ஃபா” (இறைவா அபீ அவ்ஃபா குடும்பத்தினருக்கு நீ அருள் செய்வாயாக ) எனப் பிரார்த்தித்தார்கள். அவ்ஃபா (ரலி) புகாரி.

இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (33.56)

அ) அல்லாஹ்வின் ஸலவாத் – அருள்புரிதல்

ஆ) மலக்குகளின் (வானவர்) ஸலவாத் – பாவமன்னிப்பும், அருளும் வேண்டுதல்.

இ) முஃமின்களின் ஸலவாத் – பிரார்த்தித்தல், உயர்வை வேண்டுதல்.

 

ஸலவாத்

ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே உங்கள் மீது ‘ஸலாம்” உரைப்பதை அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ‘ஸலவாத்” சொல்வது எவ்வாறு என்று கேட்டோம். இதனை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பின்னர் ‘அல்லாஹும்ம ஸல்லி அலாமுஹம்மதின் வஅலா ஆலிமுஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதுன் மஜீத்” எனக் கூறும்படி கூறினார்கள் புகாரி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் – கஃப் இப்னு உஜ்ரா (ரலி).

பொருள்: இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிந்ததைப் போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள்புரிவாயாக! நிச்சயமாக நீ(புகழப்பட்டவனும்) புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

இறைவா! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் பரக்கத் (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் அபிவிருத்தியை(பரக்கத்தை) அருள்வாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும், கண்ணியத்திற்குரியவனுமாவாய்.

 

ஸலவாத்தின் சிறப்பு

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என் மீது கூறப்படும் ஸலாத்தினை பூமியில் (அதற்கென) சுற்றித் திரியும் மலக்குகள் எனக்கு எத்திவைக்கின்றனர். திர்மிதி, ஹாகிம், நஸாயீ இப்னு மஸ்வூத் (ரலி)

மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவர்கள் என் மீது அதிகம் ஸலவாத்து கூறியவர்களே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள் – அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் – திர்மிதி

 

ஸலவாத் எந்தெந்த நேரங்களில் கூறவேண்டும்? 

1. பாங்கு சொல்லி முடிந்ததும்

நீங்கள் பாங்கு சொல்பவரின் (பாங்கு) சப்தத்தைக் கேட்டால் அவர் கூறுவதுபோல் (பாங்கு வாசகங்களைக்) கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத்துக் கூறுங்கள். எவர் என் மீது ஸலவாத்து ஒரு முறை சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான். பிறகு எனக்காக அல்லாஹ்விடம் ‘வஸீலா”வைக் கேளுங்கள். ‘வஸீலா” என்பது சுவர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் ஒரு பதவியாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கு மட்டுமேயன்றி வேறு எவருக்கும் கிடைக்காது. அந்த ஒருவர் நானாக இருக்கவேண்டு மென நான் ஆதரவு வைக்கிறேன். எவர் எனக்காக ‘வஸீலா” எனும் அப்பதவி கிடைக்க (அல்லாஹ்விடம்) வேண்டுகிறாரோ அவருக்கு (என்) பரிந்துரை (ஷஃபாஅத்) நிச்சயம் உண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி)

பாங்கு துஆ

‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்”” என்று பிராத்தனை செய்தால் அவருக்கு மறுமையில் எனது பரிந்துரை (கடமையாகிவிட்டது) கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஜாபிர் (ரலி) புகாரி

மற்றொரு அறிவிப்பில் “வஸீலா என்பது சுவர்க்கத்திலுள்ள ஒரு உயர்வான நிலையாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் எவராவது ஒருவருக்குத் தான் கிடைக்கும். அது எனக்காக இருக்க வேண்டும் என நான் ஆதரவும், நம்பிக்கையும் வைக்கிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – முஸ்லிம்

பொருள்:

பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!

2. வெள்ளிக்கிழமைகளில்

உங்களின் நாட்களில் மிகவும் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அதே நாளில் தான் அவர்களின் உயிரும் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் தான் சூர் (எக்காளம்) ஊதப்படும். அந்நாளில் தான் மக்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். இத்தினத்தில் என் மீது அதிகமாக ஸலவாத்தைக் கூறுங்கள். எவர் என்மீது ஒரு முறை ஸலவாத்தைக் கூறுகிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான். நீங்கள் கூறும் ஸலவாத் எனக்கு எடுத்துக்காட்டப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறிய போது நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே நீங்கள் மரணமாகி மக்கிப் (மண்ணோடு மண்ணாகிப்) போன பின்னர் எவ்வாறு உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக நபிமார்களின் உடல்களை மண் திண்பதை அல்லாஹ் தடுத்து (ஹரமாக்கியு)ள்ளான் எனக் கூறினார்கள் – அவ்ஸ் இப்னு அவஸ் (ரலி) – அபூதாவூத், நஸயீ

3. நபி(ஸல்) அவர்களின் பெயர் கூ(றும் போது)றப்பட்டால்

எனது பெயர் எவரிடம் கூறப்படுகின்றதோ அவர் என் மீது ‘ஸலவாத்” கூறட்டும். எவர் என் மீது ஒரு முறை ‘ஸலவாத்” கூறுகின்றாரோ அல்லாஹ் அவர் மீது பத்து முறை அருள்புரிகின்றான் அனஸ் (ரலி) திர்மிதி

மற்றொரு அறிவிப்பில் எவரிடம் எனது பெயர் கூறப்பட்டு அவர் என் மீது ‘ஸலவாத்” கூறவில்லையோ அவன் நாசமாகட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹாகிம்: கஃப் இப்னு உஜ்ரா (ரலி) 

4. பிரார்த்தனை புரியும் போது

உங்களில் யாராவது பிராத்தனை புரிந்தால் அவர் முதலில் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு என்மீது ‘ஸலவாத்” கூறிய பின்னர் தனது பிராத்தனையை ஆரம்பிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் புழாலா இப்னு உபைத் (ரலி) திர்மிதி, அஹ்மத், முஸன்னஃப்

5. பொதுவாக நேரம் கிடைக்கும் போதெல்லாம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே உங்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூற விரும்புகிறேன் அப்படியானால் நான் உங்கள் மீது ‘ஸலவாத்” கூற வேண்டிய அளவு என்ன? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ விரும்பும் அளவுக்கு கூறும் என்றதும் (எனது நேரத்தில்) கால் பகுதியை ஆக்கிக்கொள்ளவா? எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைவிட அதிகப்படுத்திக் கொள்வது உனக்கு (நன்மை) நல்லது என்றார்கள். (எனது நேரத்தின்) அரைப்பகுதியை ஸலவாதிற்காக ஒதுக்கட்டுமா? என்றதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைவிடவும் அதிகப்படுத்திக் கொள்வது உனக்கு நல்லது என்றார்கள். அப்படியானால் எனது முழு நேரத்ததையும் உங்கள் மீது ‘”ஸலவாத்” கூறுவதற்காக ஒதுக்கிக் கொள்கிறேன் என்றேன். அப்படி நீர் செய்தால் உமது சஞ்சலம் (கஷ்டம்) நீங்கி, உமது பாவமும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், ஹாகிம்: உபை இப்னு கஃப் (ரலி).

 

ஸலவாத்து கூறுவதில் பித்அத்

1. பாங்கு சொல்வதற்கு முன்

2. இரண்டு முஸ்லிம்கள் கை (லாகு)கொடுத்துக் கொள்ளும் போது

3. கடமையான ஐந்து வேளை தொழுகைகளுக்குப் பின்னால்

4. இரவுத்(தராவீஹ்)தொழுகைக்குப் பின்னால்

மேலும் பல சந்தர்ப்பங்களில்…

ஸலாத்துன்னாரியா, மௌலூத் ஓதுதல்

 இவற்றில் வல்ல இறைவனுக்கு இணை வைக்கும் வாசகங்களும், வரம்பு மீறிய புகழ்ச்சியும், நபி (ஸல்)அவர்கள் தடுத்துள்ள சொல், செயல்களும் மலிந்து கிடக்கின்றன. நபி(ஸல்)அவர்களோ, அவர்களின் தோழர்களோ சொல்லாத, காட்டித்தராத செயல்(பித்அத்) பள்ளிவாயிலின் ஒழுக்கங்கள் பாதிக்கிறது. பின்னால் தொழுபவர்களுக்கு இடைஞ்சலாக ஏற்படுத்துகிறது.

”அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன, எனவே, அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (72:18)

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் மர்யமின் குமாரர் ஈஸா(அலை) அவர்களை கிருஸ்தவர்கள் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழ வேண்டாம். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும், அவன் தூதர் என்றும் கூறுங்கள். புகாரி, முஸ்லிம், உமர்(ரலி)

 

வணக்கங்கள் ஏற்கப்பட இரண்டு நிபந்தனைகள்:

1. மனத்தூய்மை(இஃலாஸ்)

2. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல். (இத்திபா)

மேற்கூறிய ஸலாத்துன்னாரியா, மௌலூத் ஓதுதல் போன்ற (பித்அத்தான) விஷயங்கள் நபியவர்களின் வழிகாட்டுதலில் உள்ளவை அல்ல.  எனவே ஸலவாத் என்பதன் உள்ளர்த்தத்தினை ஆதாரப்பூர்வமான நபிவழிப்படி முழுமையாக விளங்கி அதனைக் கடைபிடித்து முழுமையான நன்மைகளை பெற்றவர்களாக முயற்சி செய்வோம்.

தொகுப்பு: அபூ ஸாலிஹா

أحدث أقدم