குணத்தை மாற்ற முடியுமா?

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் இறுதித் தூதர் முஹம்மது (ஸல் ) அவர்களை அனுப்பியதன் நோக்கம் வல்ல அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கைக்கு மக்களை அழைப்பது என்று சொல்லி விடுவோம். உண்மைதான். ஆனால் வேறு முக்கிய நோக்கமும் உள்ளது.

மனிதர்களின் குணங்களை சீர் படுத்துவது தான் அது. இது குறித்து நபி (ஸல் ) அவர்கள், “நல்ல குணங்களை முழுமைப் படுத்துவதற்காக தான் நான் அனுப்பப்பட்டுள்ளேன். “ என்று கூறினார்கள் (நூல் : அஹ்மத் 8939)

இந்நபிமொழியில், தான் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளதன் நோக்கமாக நல்ல குணங்களை முழுமைப்படுத்துவதை குறிப்பிடுகிறார்கள். முழுமைப் படுத்துவது என்பதன் விளக்கம், இனி எவரும் வந்து குணங்கள் பற்றி விவரிக்கவோ நடைமுறைப் படுத்திக் கட்டவோ தேவை இல்லை என்கிற அளவிற்கு மனிதர்களுக்கு எத்தி வைத்துவிட்டார்கள் என்பது தான்.
ஆக நற்குணங்களை கைக் கொள்வதும் தீய குணங்களை கைவிடுவதும் மார்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் அம்சம். இதை விளக்கும் ஒரு நபிமொழி
“இறை நம்பிக்கையாளர்களில் முழுமையான இறை நம்பிக்கை உடையவர் அவர்களில் அழகிய குணம் உடையவரே!” (நூல் : அபூ தாவூத் 4684,திர்மிதி,அஹ்மத் )

ஒருவரிடம் இருக்க வேண்டிய அழகிய குணங்கள் சகிப்புத்தன்மை, பணிவு, தயாளம், நாணம், மென்மை, வீரம் போன்றவை. இருக்க கூடாத தீய குணங்கள் பதட்டம், கோபம், பெருமை, கஞ்சத்தனம், ஆபாச சிந்தனை, கடுமை, கோழைத்தனம் போன்றவை.
இவை குறித்தெல்லாம் திருகுர்ஆனிலும் நபி மொழியிலும் படிக்கிறோம். பிரசங்கங்களிலும் அறிவுரைகளிலும் கேட்கிறோம். ஆனாலும் தன்னிடம் இல்லாத நற்குணத்தை ஒருவர் தனக்குள் கொண்டு வருவதில்லை. அதே போல தன்னிடம் இருக்கும் விரும்பத்தகாத குணத்தை விட்டொழிப்பதும் இல்லை. இதற்கு காரணம் குணங்களை மாற்ற முடியாது என்று ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. இது தவறாகும். மாற்றிக் கொள்ள இயலும் என்பதுதான் உண்மை.
ஒருவர் தன்னிடம் இல்லாத நற்குணத்தை தனக்குள் கொண்டு வருவதற்கும்,  இருக்கும் தீய குணத்தை கைவிடுவதற்கும் சில வழிகள் உண்டு. அவற்றை தெரிந்து கொள்வோம்.

1) நம்பிக்கை வேண்டும்
முதலில் குணத்தில் மாற்றம் செய்ய இயலும் என்று நம்ப வேண்டும். அது ஒரு பெரிய சிரமமான காரியம் தான் என்றாலும் முறைப்படி முயற்சி செய்தால் இயலும் என்பது தான் திருக்குர்ஆன், நபி மொழி ஆதாரத்தின் அடிப்படையில் கிடைக்கும் முடிவு.
உதாரணத்திற்கு ஒரு திருகுர்ஆன் வசனம்: “நிச்சயமாக மனிதன் அவசரக் காரனாகவே படைக்கப் பட்டிருக்கிறான். அவனை கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான். ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் ( அது பிறருக்கு கிடைக்காதவாறு ) தடுத்துக் கொள்கிறான். தம் தொழுகையில் நிலைத்திருக்கும் தொளுகையாளிகளைத் தவிர” (70:19-23)

இந்த வசனங்களில் முந்தியவை மனிதனில் உள்ள கெட்ட குணங்களை குறிப்பிடுகின்றன. அதனை, அந்த கெட்ட குணங்களை மாற்றவே இயலாது என்றால் அந்த குணங்களுக்கு மாற்றமான நற்குணத்துடன் படைக்கப் பட்டவர்களை தவிர என்றுதான் அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நிலையாகத் தொழும் தொளுகையாளிகளைத் தவிர என்று இதன் மூலம் இந்த விரும்பத்தகாத குணங்களை நிலையாக தொழுவதன் மூலம் மாற்றிக் கொள்ள இயலும் என்பதை புரிய முடிகிறதல்லவா ?

அத்துடன் மார்க்கம் ஒன்றை கட்டளையிடுகிறதென்றால் நடைமுறைப்படுத்த சாத்தியமானதை தான் கட்டளையிடும். நடைமுறைப் படுத்துவதற்கு அறவே சாத்தியமற்ற ஒன்றை மார்க்கம் கட்டளையிடாது என்பது ஓர் அடிப்படை . இதை மனதில் வைத்துக் கொண்டு கீழ்வரும் நபிமொழியைப் பார்ப்போம்.

எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! தீமையை தொடர்ந்து நன்மை செய்துவிடும். இது அதனை அழித்துவிடும்! மக்களுடன் நற்குணத்துடன் நடந்து கொள்!“

இந்த நபி மொழியில் மூன்று விசயங்கள் அறிவுரையாக கூறப்படுகிறது. மார்க்கம் நடைமுறை படுத்த இயலுமானதை தான் மனிதருக்கு கட்டளையிடும் என்ற நியதியின் படி ஒருவரிடம் இல்லாத நற்குணத்தை தன்னுள் ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதை தான் இந்த நபிமொழி உணர்த்துகிறது.

குர் ஆனிலும் நபிமொழியிலும் இவ்வாறான ஆதாரங்கள் நிறையவே உள்ளன.

உலக நடப்பை கவனித்தாலும் குணத்தில் மாறுதல் செய்வது சாத்தியமானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக மிருகங்கள், பறவைகளைப் பிடித்து மனிதன் வளர்த்துப் பழக்கி அதன் தன்மைகளில் சில மாறுதல்களை ஏற்படுத்துகிறான். அவ்வாறெனில் பகுத்தறிவு பெற்றுள்ள மனிதனால் நிச்சயம் தன் குணத்தில் சீர்திருத்தம் செய்துகொள்ள இயலும்.

இத்துடன் உளவியல் படிப்பு என்றொரு கல்வி இருப்பதும் அதை கற்றவர்கள் மனநல மருத்துவர்களாக பணியாற்றுவதும் அதன் மூலம் விளையும் பலன்களும் இதற்கு பெரிய ஆதாரமாக உள்ளது.

ஆக மனிதரிடம் இல்லாத நற்குணத்தை கொண்டுவர இயலும். இருக்கும் தீய குணத்தை கைவிடவும் இயலும். இதற்கு முதல்வழி இது சாத்தியமானது தான் என்று நம்ப வேண்டும் .

2) விமர்சனத்தை ஏற்பது :

பொதுவாக பிறர் தன்னை குறித்து விமர்சித்து பேசுவதை மனிதன் திறந்த மனதுடன் ஏற்க வேண்டும். பெரும்பாலும் மனிதன் தன்னை குறித்து பிறர் பாராட்டுவதை தான் விரும்புகிறானே தவிர தன்னிடம் உள்ள குறையை பிறர் விமர்சிப்பதை விரும்புவதில்லை. ஆனால் நம்மிடமுள்ள விரும்பத்தகாத குணத்தைப் பற்றி பிறர் விமர்சித்து விடுவதுதான் நல்லது. அப்போது தான் நமது குறையை நாம் திருத்திக் கொள்ள முடியும்.

நமது இருவிதமான குணத்தினால் ஏற்படும் தாக்கத்தை அனுபவிப்பது மற்றவர்கள் தான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஓர் இறை நம்பிக்கையாளன் மற்ற இறை நம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான்.“ (நூல் : அபூதாவூத் 4920, அல் பஸ்ஸார், பைஹஹீ)

கண்ணாடிக்கு முன் நிற்கும் போது அதன் மூலம் நம் நிறைகுறைகள் வெளிப்படுவது போல எவர்களுக்கு முன்னிலையில் நமது குணங்கள் வெளிப்படுகின்றனவோ அவர்கள் மூலமாகத்தான் நம்மைப் பற்றிய நிறைகுறைகள் வெளிப்படும். ஆகவே நம்மை குறித்து பிறர் விமர்சிப்பதை பரந்த மனதுடன் செவியேற்கவும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அந்த விமர்சனம் தவறாக இருந்தால் முறையாக பதிலளிக்க வேண்டும்.

நமது குணம், நடத்தை குறித்த பிறரின் விமர்சனத்தை நாம் மனப்பூர்வமாக ஏற்க முன்வந்து விட்டாலே இந்த குணச் சீர்திருத்தப் பாதையில் பெரும் பகுதியை கடந்து விட்டோம் என்று அர்த்தம்.

3) சுய பரிசோதனை :

ஒருவர் தனது நல்ல தீய குணத்தை பிறரது விமர்சனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதே போல் தனது நிலையை தானே பரிசோதித்துப் பார்ப்பது மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

நாம் பிறரது தீய குணத்தை விமர்சிக்கும் போது அந்த தீய குணம் நம்மிடம் இருக்கிறதா என்று யோசித்து பார்க்க வேண்டும். அல்லது இது பற்றி நாம் இவரை விமர்சிப்பது போல பிறர் நம்மை விமர்சிப்பதற்கு வாய்ப்பாக நம்மிடம் விரும்ப தகாத வேறு குணம் உண்டா என்று யோசித்து பார்க்க வேண்டும்.
அல்லாஹூ தஆலா கூறுகிறான் : தூய்மையடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார் (அல்குர்ஆன் 87:34, மேலும் பார்க்க : 91- 9,10)

வெற்றியடைவதற்கான நிபந்தனையாக தூயமையடைதல் இருக்கிறதென்றால் நாம் தீய பண்புகளிலிருந்து தூய்மையாகத்தான் இருக்கிறோம் என்பதை நிச்சயித்துக் கொள்வது அவசியம்.
“ நீங்கள் கேள்வி கணக்கு கேட்கப்படுவதற்கு முன் உங்களை நீங்களே கேள்வி கணக்கு கேட்டுக் கொள்ளுங்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.” (நூல்: முஸன்னஃப், இப்னு அபீ ஷைபா 35600)

இந்த அறிவுரையை செயல்களை சீர்படுத்தி கொள்வதர்க்குரியது என்று மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. குணத்தை சீர்படுத்திக் கொள்வதற்கான அறிவுரையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சொர்க்கம் செல்ல அதிக காரணமாக இருப்பதில் இறையச்சத்துடன் நற்குணமும் இணைத்து நபிமொழியில் கூறப்பட்டுள்ளது. ( நூல் : திர்மிதி 2004,இப்னுமாஜா :4246)

4)  பயிற்சி எடுத்தல்:

(அ) கைக்கொள்ள வேண்டிய நற்குணத்தை வலியுறுத்தும் வாசகத்தையும் கைவிட வேண்டிய கெட்ட குணத்தை குறித்து எச்சரிக்கும் வாசகத்தையும் எப்போதும் பார்க்கும் விதத்தில் எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தாளில் எழுதி சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்துப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். இதனால் அந்த விஷயம் மனதில் பதிந்து போகும். அடிக்கடி அது நினைவுக்கு வரும். எழுதப்பட்டதற்கு தொடர்புள்ள ஒரு சம்பவம் நடக்கும் போது அது நம் நினைவுக்கு வந்து நடைமுறைப் படுத்த வாய்ப்பாக அமையும்.
(ஆ) நம்மை சுற்றி இருப்பவர்களிடம் அடிக்கடி நினைவூட்டும்படிக் கூறலாம். உதாரணமாக நம்மிடம் கோபம் என்கிற விரும்பத்தகாத குணம் இருந்தால் அடிக்கடி அவர் நம்மிடம் கோபப்படாதே என்று கூறும்படி சொல்லி வைக்க வேண்டும் .

நாம் கோபப்படுகிற சந்தர்ப்பமாக இருந்தாலும் சாதரணமாக இருந்தாலும் இவ்வாறு அவர்கள் கூற வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதன் காரணமாகவும் அந்த விஷயம் நம் மனதில் பதிந்து நடைமுறையில் வருவதற்கு வழி ஏற்படும்.

இ) நம்மிடமுள்ள தவிர்க்க வேண்டிய குணம் நம்மிடம் வெளிப்படும்படியான சூழ்நிலையை ஏற்படுத்தி அப்போது அதை தவிர்க்கப் பழகலாம். உதாரணமாக நாம் கோபக்காரராக இருந்தால் அவ்வப்போது வேண்டுமென்றே என்னை கோபப் படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளுங்கள் என்று நமது நலன் விரும்பிகளிடம் சொல்லி வைக்கலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் அவர்களிடம் சொல்லி வைத்திருப்பதை நினைவு கூறுவதன் மூலம் அல்லது அவர்கள் நினைவூட்டுவதன் மூலமாக இந்த கெட்ட குணத்தை கைவிடப் பழகலாம்.

ஈ ) நம்மைப் பற்றி நாமே செய்தியை பரப்புவது அதன் மூலம் நமக்கு நாமே ஒரு நிர்பந்தத்தை ஏற்ப்படுத்தி நம் மனதை சரியான வழிக்கு கொண்டு வருவது.
உதாரணமாக நம்மிடம் கஞ்சத்தனம் இருப்பதாக விமர்சிக்கப் பட்டால் அல்லது அவ்வாறு நாமே உணர்ந்தால் நாமாக வலிய சென்று நம்மைப்பற்றி நான் தாராள மனம் கொண்டவன் என்றும் தயாள குணம் கொண்டவன் என்றும் எல்லோரிடமும் சொல்ல வேண்டும். இப்படி நம்மைப் பற்றி பரப்பி விடுவதன் மூலம் இந்த நல்ல குணத்தை கைக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு நாமே ஏற்ப்படுத்திக் கொள்கிறோம். செலவழிக்க யோசிக்க வேண்டிய தருணத்தில் தாரளமாக நடந்து கொள்ளக் கூடிய நிலை இடப்பட்டு விடும்.

இவ்வாறு செய்யப்படுவது நல்ல நோக்கத்துடன் உண்மையில் அவ்வாறு மாறிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதால் நம்மை பற்றி இல்லாததை சொல்லிக் கொண்ட குற்றம் ஏற்படாது, இன்ஷா அல்லாஹ்.

5) போராட்டம்

இது மனதுடன் நடத்தும் போராட்டம். ஒருவர் தன்னிடமுள்ள தீய குணத்தை அறிந்து அதை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று முயற்சித்தால் அது அவ்வளவு சீக்கிரத்தில் நடந்தேறி விடாது. தன் மனதுடன் அதிகம் போராட வேண்டி இருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ அறப்போராளி என்பவர் அல்லாஹ்வுக்காக தன் மனதுடன் போராட்டம் நடத்துபவரே “ (நூல் : அஹமத் 23997,இப்னு ஹிப்பான் )

இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவது தாமதமாகலாம். அதற்காக நம்மால் இயலவே இயலாது என்று முயற்சியை கைவிட்டு விடக் கூடாது. அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைவது கூடாதென அல்லாஹ் தடுத்துள்ளான்.

நம்முடைய இந்த அறப்போரட்டத்தை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இறுதியில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கிட்டும். அல்லாஹ் கூறுகிறான்

“எவர்கள் நமது வழியில் முயற்சிக்கின்றார்களோ அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் நடத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 29-69)

6) நடைமுறைப் படுத்தும் உறுதியுடன் குர்ஆனைப் படித்தல் :

குர்ஆனை ஓதுவது அதிகமான மறுமை நன்மைகளை பெற காரணமாகும் ஒரு நற்செயல். இவ்வாறு ஓதும் போது அதை புரியாமல் ஓதுவது குறையல்ல என்றாலும் இப்போது நாம் பேசுவது நம்மிடம் இல்லாத நற்குணத்தை நமக்குள் கொண்டுவருவதர்க்காகவும் நம்மிடம் இருக்கும் தீய குணத்தை கைவிடுவதற்காகவும் படிப்பது பற்றியாகும்.
ஆகவே இந்த நோக்கமுள்ளவர்கள் இதற்காக குர்ஆனை படிக்கும் போது அதில் சொல்லப்பட்டுள்ளதை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற மன உறுதியுடன் தனக்கு புரியும் மொழியில் படிக்க வேண்டும். அப்போது குர்ஆனில் வலியுறுத்தப்பட்டுள்ள நற்குணம் நமக்குள் வந்துவிடும். அதில் கண்டிக்கப்படும் தீய குணம் நம்மிடமிருந்து அகன்றுவிடும்.

அல்லாஹ் கூறுகிறான் : இது (குர்ஆன் )அகில மக்களுக்கெல்லாம் உபதேசமாகும். உங்களில் (நேர்வழியில்) நிலைத்திருக்க விரும்புகிறவருக்கு! (அல் குர்ஆன் 81:27,28)

இவ்விரு வசனங்களிலும் அல்லாஹுதஆலா சொல்ல வருவதென்ன? குர்ஆன் எல்லோருக்கும் உபதேசம் தான். ஆனால் நேர்வழியில் நிலைத்திருக்க விருப்பமில்லாதவரை அதுவாக இழுத்து சென்று விடாது என்பதை தான்!

ஆகவே அதைப் படிப்பவர் அல்லது படிக்கப்படுவதைக் கேட்பவர் அதில் கூறப்படுவதைத் தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாட்டமும் விருப்பமும் கொள்ள வேண்டும்.

ஸஅத் பின் ஹிஷாம் கூறுகிறார்:
நன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் குணத்தை குறித்து எனக்கு கூறுங்கள் என்றேன். அதற்கவர்கள் “இறைத்தூதரின் குணம் குர்ஆனாக இருந்தது “ என்று கூறினார்கள். (நூல் :அஹ்மத் 25341)

குர் ஆனில் பரிந்துரைக்கப்பட்ட குணமெல்லாம் அவர்களிடம் வெளிப்படும். அதில் இகழ்ந்துரைக்கப்பட்ட குணமெல்லாம் அவர்களிடம் காணப்படாது .

ஆகவே குர்ஆன் நமது குணத்தில் வெளிப்படும் விதத்தில் அதை ஆர்வத்துடன் படித்து நடைமுறைப் படுத்த வேண்டும் .

7) பிரார்த்தனை:

நம்முடைய எல்லாத் தேவைகளையும் அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். அதன்படி இந்த உலகிலும் மறு உலகிலும் நமக்கு நன்மையை தரும் நற்குணத்தை கேட்க வேண்டும். அதே போல் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நமக்கு தீங்கை தரும் கெட்ட குணத்திலிருந்து விலகி இருக்க உதவும் படி அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.

நபி (ஸல்)அவர்கள் இதற்காகவும் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள். . அந்தப் பிரார்த்தனை :
“இறைவா! நற்குணங்களுக்கு எனக்கு வழி காட்டுவாயாக! நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறு எவரும் இல்லை. துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னை தவிர வேறு எவரும் இல்லை.” (நூல்: அஹ்மத்)

உலக தேவைகளுக்காக அதிகமதிகம் பிரார்த்திக்கும் நம்மில் பலர் இப்படி நபிமொழியில் வந்துள்ள படி குணத்திற்காக பிரார்த்திப்பது இல்லை. குணத்தில் சீர்திருத்தம் காணவும் கூட பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இந்த நபிமொழி நமக்கு உணர்த்துகிறது.

மேற்கண்ட வழிமுறைகளை கையாண்டு அல்லாஹ்வின் உதவியுடன் நம்மிடம் இல்லாத நற்குணத்தை கைக்கொள்ளவும் இருக்கும் தீய குணத்தை கைவிடவும் முடியும்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் ‘(நன்மை, தீமை நிறுக்கப்படும் ) தராசில் வைக்கப்படுவதிலேயே நற்குணத்தை விட மிக கனமானது எதுவும் இல்லை. நற்குணத்தை உடையவர் அதன் மூலம் பகலெல்லாம் நோன்பு நோற்று இரவெல்லாம் தொழுபவரின் நன்மையை அடைவார்” (நூல்: திர்மிதி 2003)

 -M. அப்துர்ரஹ்மான் மன்பஈ.,MA.,M.phil 
أحدث أقدم