"ஹபருல் ஆஹாத்" ஒற்றை வழிச்செய்திகளை அகீதாவில் ஆதாரமாகக் கொள்ளலாமா ?

"ஹபருல் ஆஹாத்" ஒற்றை வழிச்செய்திகள் (மஷ்ஹூர், அஸீஸ், கரீப்) ஸஹீஹானதாக இருந்தாலும் அகீதா சார்ந்த விடயங்களில் எடுப்பது கூடாது என்ற கருத்தை பகுத்தறிவுவாத முஃதஸிலாக்கள், கத்ரிய்யாக்கள், ஜஹ்மிய்யாக்களைத் தவிர வேறு எந்த நம்பத்தகுந்த அறிஞர்களும் குறிப்பிடவில்லை. வரலாற்றில் அன்று தொடக்கம் இன்று வரை வழிகெட்ட முஃதஸிலாக்களின் சிந்தனைகளால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவரும் இந்நச்சுக் கருத்தை மக்கள் மன்றத்தில் விதைக்கவில்லை.  

ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் தனது மஜ்மூஉல் பதாவாவில் "ஒரு ஹதீஸ் ஸஹீஹாஹிவிட்டால் எந்த விடயமாயினும் சரி அதில் அதனை பின்பற்றுவது வாஜிப் என்பதில் ஒட்டு மொத்த முஸ்லிம் அறிஞர்களும் உடன்பட்டிருக்கிறார்கள்" என்பதாக குறிப்பிடுகிறார்கள். 

இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் தனது ஸஹீஹின் முன்னுரையில் "ஹபருல் ஆஹாத்" ஸஹீஹானதாக இருந்தாலும் அகீதா சார்ந்த விடயங்களில் அதனை எடுக்க முடியாது என்ற நிலைப்பாடு முழு சுன்னாவையும் நிராகரிக்கும் நிலைப்பாடாகவே உள்ளது ஏனெனில் சுன்னாக்களில் அதிகமானவைகள் ஆஹாதானதாகவே உள்ளன" எனக் கூறியுள்ளார்கள். 

"ஹபருல் ஆஹாத்" ஒற்றை வழிச்செய்திகளை அகீதா சார்ந்த விடயங்களில் எடுக்க முடியாது என்று வாதிடுபவர்கள் கீழ்வரும் அகீதா சார்ந்த விடயங்களைப் புறக்கணிக்க வேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்படும், அல்லது முதவாதிரான செய்திகளிலிருந்து ஆதாரங்களை திரட்ட வேண்டும். ஒரு முஸ்லிமுக்கு இவ்விரண்டு காரியங்களும் முடியாதவைகளாகும்... 

1- நபிகளார் ஏனைய அனைத்து நபிமார்களை விடவும் கீர்த்திமிக்கவர்.

2- மஹ்ஷர் வெளியில் நபிகளாரின் ஷபாஅத். 

3- நபிகளாரின் உம்மத்தில் பெரும் பாவம் செய்த பாவிகளுக்கும் அவர்களது ஷபாஅத் உண்டு. 

4 - குர்ஆன் தவிர்ந்த ஏனைய நபிகளாரின் ( முஃஜிஸாத்கள் ) அற்புதங்கள். 

5 - படைப்பின் ஆரம்ப முறைமை,  மலக்குமார்கள், ஜின்கள், சுவனம், நரகம், போன்றவற்றின் அல்குர்ஆன் குறிப்பிடாத வர்ணனைகள். 

6 - கப்றில் முன்கர் நகீரின் கேள்வி கணக்கு. 

7 - மரணித்தவர் அடக்கப்பட்டதும் கப்றின் நெருக்குதல். 

8 - மனிதர்கள் மீள எழுப்பாட்டப்படுதல், ஸிராத் பாலம், ஹௌழுல் கௌஸர் நீர்த்தடாகம், இரண்டு தட்டுக்களுடைய மீஸான் (தராசு) 

9 - நபிகளாரின் தனிப்பட்ட சிறப்பம்சங்கள.

10 - ஈஸா (அலை) அவர்களின் வருகை, மஹ்தி (அலை) அவர்களின் வருகை, தஜ்ஜாலின் வருகை, மேற்கில் சூரியன் உதயமாதல்... போன்ற குர்ஆன் குறிப்பிடாத கியாமத் நாளின் அடையாளங்கள். 

மேலும் இமாம் ஷாபியின் ரிஸாலா, இமாம் இப்னுல் கையிமின் முஹ்தஸருஸ் ஸவாயிகில் முர்ஸலா, அல்லாமா அல்பானியின் வுஜூபுல் அஹ்தி பிஹதீஸில் ஆஹாத் பில் அகீதா போன்ற இன்னும் ஏரளமான நூற்களிலில் இந்த மனோ இச்சையை வணங்குபவர்களுக்கான மறுப்புரை தாராளமாக வழங்கப்பட்டுள்ளது. 

அகீதாவில் மாத்திரம் அளவு கடந்த  நம்பகத்தன்மை முக்கியமெனக் கருதி வழிபாடுகளில் நம்பகத்தன்மை முக்கியமில்லை எனக்கருதுவது போன்ற இந்த குருட்டு வாதத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! 

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
أحدث أقدم