புன்முறுவலின் மகத்துவம் – படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

 புன்முறுவலின் மகத்துவம் – படிப்பினையூட்டும் ஒரு நிகழ்வு!

அரபுலகில் பிரபலமான இஸ்லாமிய அழைப்பாளர்களில் ஒருவரான ‘அஷ்ஷைக் நபீலுல் அவலி’ தனது ஒரு தஃவா அனுபவத்தை இவ்வாறு நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்:

நான் அமெரிக்காவில் ஒரு முறை ஓர் இஸ்லாமிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது திடீரென ஒருவர் எழுந்து அவரது பக்கத்தில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமேரிக்கருக்கு திருக்கலிமாவை சொல்லிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். நான் ஆனந்தத்தில் அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறி, நீர் இஸ்லாத்தை நேசித்ததற்குரிய காரணம் என்ன? இஸ்லாத்தை உமது வாழக்கை நெறியாக தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? என்று அவரிடம் வினவினேன்.

அதற்கவர் அளித்த பதில்: “நான் ஒரு மிகப் பெரிய செல்வந்தன்; பல கம்பனிகளுக்கு சொந்தக்காரன்; உலக இன்பங்களில் எந்தக் குறையும் எனக்கில்லை; ஆனால் நான் எனக்குள் நிம்மதியற்றிருக்கின்றேன். என்னிடம் பணி புரியும் ஒரு முஸ்லிம் இந்தியர் மிகக்குறைந்த சம்பளத்தையே ஊதியமாக பெறுபவர்; அவரை நான் பார்க்கும் போதெல்லாம் மலர்ந்த முகத்துடன் தான் காட்சியளிப்பார். இது எனக்குள் மிகப் பெரிய வியப்பை தந்ததுடன் பல கேள்விகளையும் எனக்குள் தொடுத்தது. நான் மிகப் பெரிய செல்வந்தன்; ஒரு நாளாவது எனக்கு மலர்ந்த முகத்துடன் இருக்க முடியவில்லை; ஆனால் சாதாரன ஒரு ஊதியத்தை பெறுகின்ற ஒரு தொழிலாளி எந்நேரமும் மலர்ந்த முகத்துடன் இருக்கு முடிகிறது என்றால் இதன் பின்னனி என்ன?

ஒரு நாள் அவரிடம் சென்று, “நான் உன்னுடன் சற்று உட்கார வேண்டும்? எனக்கு உன்னிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீ எந்நேரமும் புன்முறுவல் பூத்த நிலையில், மலர்ந்த முகத்துடன் இருக்கின்றாயே! அதெப்படி உன்னால் முடிகிறது?”

அதற்கவர் சொன்னது: “நான் ஒரு முஸ்லிம். ‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ்; வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என நான் நம்பியிருக்கின்றேன்”.

அதற்கு நான் அவரிடம், “அப்படியானால் ஒரு முஸ்லிமுக்கு வாழ்நாள் முழுவதும் மலர்ந்த முகத்துடன் இருக்க முடியுமா?” எனக் கேட்டேன்.

அதற்கவர், “ஆம்” என்று பதிலளித்தார்.

நான், “அதெப்படி?” என மறுபடியும் ஆச்சரியத்தில் கேட்டேன்.

அதற்கவர், “நமது தலைவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் நமக்கு இப்படி கூறியிருக்கின்றார்கள்: ‘இறை நம்பிக்கையாளனின் காரியம் வியப்பிற்குரியதாகும்; நிச்சயமாக அவனது வாழ்கையின் சகல காரியங்களும் அவனுக்கு நன்மையளிப்பதாகவே உள்ளது. அவன் தனது வாழ்நாளில் ஒரு துன்பத்தை சந்திக்கும் போது (அல்லாஹ்விற்காக) அதை சகித்துக்கொள்கின்றான்; அது அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது; அவன் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியான ஒன்றை சந்திக்கின்றான் அப்போது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் அதுவும் அவனுக்கு நன்மையாகிவிடுகின்றது. இந்நிலை ஓர் இறை நம்பிக்கையாளனுக்குத் தவிர வேறு எவருக்கும் இல்லை’. எனவே எமது காரியங்கள் அனைத்தும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மத்தியில் தான் உள்ளது; துன்பமெனில் அதை அல்லாஹ்விற்காக ஏற்றுக்கொள்வோம்; இன்பமெனில் நன்றியுடன் அல்லாஹ்வைப் புகழ்வோம். எனவே எமது மொத்த வாழ்க்கையும் நிம்மதியாகும்; ஈடேற்றமாகும்; இன்பமாகும்” என அவர் பதிலளித்தார். இது தான் என்னை இஸ்லாத்தில் நுழைய வைத்தது.”

‘அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்) என்று கூறி அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

الله أكبر الله أكبر الله أكبر

அல்லாஹ் மிகப்பெரியவன்

இந்நிகழ்வு நமது வாழக்கைக்கு வழங்கும் படிப்பினைகள் என்ன?

சிலர் தஃவா (அழைப்புப் பணி) என்ற உடன் ஏதோ மலையை உடைப்பது போன்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர். எனக்கு உரை நிகழ்த்த முடியாதே! எனக்கு எழுத முடியாதே! என்னிடம் தஃவாவிற்காக செலவிட வசதி இல்லையே. இவ்வாறு தன்னிடம் இல்லாததைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் இவர்கள். தன்னிடம் உள்ளதை வைத்து இப்பணியை செய்யத் தவறி விடுகின்றனர் என்பது தான் வேதனையான விடயம். இது நமது சமூகத்தின் அதிகமானவர்களின் இன்றைய நிலையாகும்.

புன்முறுவல் பூப்பதற்கு மலர்ந்த முகத்துடன் இருப்பதற்கு எந்த ஒரு பணமோ வசதியோ தேவை இல்லை. தஃவாவிற்காக செலவிடுவதற்கு வசிதி இல்லையே என்று எண்ணும் பலர். தன்னிடம் உள்ள இந்த மிகப்பெரிய ஆயுதத்தை தஃவாவிற்கு பயன்படுத்தாது இருப்பது மிகப் பெரிய வேதனையாகும்.

அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த ஒரு பண்பை தனது வாழக்கையின் அணிகலனாக்கிக் கொண்ட ஒரு சாதாரன ஊதியம் பெறும் தொழிலாளி. அவருக்கு பல ஆயிரங்களை பல லட்சங்களை அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக செலவிட முடியாமல் இருக்கலாம்; ஆனால் அவரின் உயரிய ஒரு பண்பினூடாக இஸ்லாத்தில் கவரப்பட்டாரே மிகப் பெரிய செல்வந்தர் அவர் இஸ்லாத்திற்காக செலவிடும் ஒவ்வொரு ரூபாவிலும்இ நன்மையில் அவருக்கும் பங்கிருக்கின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா?. இதற்கு அல்லாஹ் வைத்திருக்கும் வெகுமதியை பார்த்தீர்களா?. நமது வாழ்வில் நாம் அர்ப்பமாக கருதிக்கொண்டிருக்கும் பலவற்றுக்கு இருக்கும் ஆற்றலை நாம் அறியாமல் இருப்பதுதான் மிகப்பெரிய அறிவீனம்.

ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போதே மலர்ந்த முகத்துடன் வரவேற்பது இருக்கின்றதே! இது பல மணி நேர உரை, பல கோடிகளை செலவளிப்பதை விட வலிமை மிக்கதாகும். முஸ்லம்களிடம் அல்லாஹ்வின் தூதரின் இந்த உயரிய முன்மாதிரி குடிகொண்டிருக்குமனால் ஏனைய சமூகங்கள் எப்படித் தெரியுமா பேசக்கொள்வார்கள். ‘முஸ்லிம்கள் என்றாலே மலர்ந்த முகத்துடன் வரவேற்பவர்கள்தான்’. எந்த ஒரு பைசாவும் செலவாகாத இதையே இஸ்லாத்திற்காக செய்ய முன்வராத இவர்கள் வேறு அர்ப்பணிப்புகளை செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்ப்பது வெறும் கர்ப்பணையே ஆகும்.

எங்கே அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தந்த முன்மாதிரிகள் நமது வாழ்வில்?

‘உங்களது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பது உற்பட எந்த ஒரு நன்மையான காரியத்தையும் அற்பமாகக் கருதாதீர்கள்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), முஸ்லிம்).

‘நபி (ஸல்) அவர்களை விட அதிகம் புன்முறுவல் பூக்கும் ஓருவரை பார்த்தில்லை’ என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹ்மத்).

‘நான் இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் அல்லாஹ்வின் தூதரை புன்முறுவல் பூத்த நிலையிலேயே தவிர பார்த்தில்லை’ என ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (புஹாரி).

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; ‘உன் சகோதரனது முகத்தைச் சிரித்த முகத்துடன் நோக்குவதும் தர்மமாகும்!‘ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதிஇ இப்னு ஹிப்பான்).

தூய இஸ்லாத்தின் உறுப்பினர்களாக இருக்கும் நாம், அல்லாஹ்வின் தூதரின் உயரிய முன்மாதிரகளை நமது வாழ்வில் செயல்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தின் அழகை உலகிற்கு எடுத்துச் சொல்வோம்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Previous Post Next Post