அல்லாஹ்வுக்கு அடிபனிந்து நடக்கும் ஒரு ஆண் மற்றும் பெண் ஆகியோரின் பிரதானமான பண்புகளை சொல்லும் அல்லாஹ் தன்னை ஞாபகப்படுத்தும் திக்ரை சொல்லும் போது அதிகமாக திக்ர் செய்பவர்கள் என்று சொல்வதை அவதானிக்கலாம்.
ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இடும் கட்டளையை பாருங்கள்:
“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!’ என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), ‘உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!’ என்று கூறினான்” சூரத்துல் ஆல இம்ரான் 41
மூஸா நபி அவர்கள் அல்லாஹ்வை எப்படிப் புகழ்ந்தார்கள் என்று பாருங்கள்:
“நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும், உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)” சூரத்துல் தாஹா 34,35
“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்”சூரத்துல் அஹ்ஸாப் 41,42
நம்பிக்கையாளர்களுக்கு மேற்படி கட்டளையை பிறப்பிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ், ‘நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை கொஞ்சமாகவே நினைவு கூறுகின்றனர்’ என்பதை பின்வருமாரு கூறுகின்றான்:
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர். ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான். தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்). இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை” சூரதுந் நிஸா 142
எதிரிகளை சந்திக்கும் யுத்த கலத்திலும் அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுமாறு பணிக்கின்றான்:
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் – அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் – நீங்கள் வெற்றியடைவீர்கள்” சூரத்துல் அன்பால் 45
மிகப் பெரும் இபாதத்:
– ஆனால் வுழு தேவைப்படாது!
– கிப்லாவை முன்னோக்க வேண்டியதில்லை!
– செல்வத்தை செலவு செய்ய வேண்டியதில்லை!
– உடலால் கூட சிரமப்படத் தேவையில்லை!
– குறிப்பிட்ட ஒரு நேரம் மட்டுப்படுத்தவும் இல்லை!
– ஆனால் அல்லாஹ்வின் தவ்பீக் (கிருபை, உதவி) இந்த இபாதத்தை செய்வதற்கு தேவையானது!
அதிகம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவது வெற்றிகளை கொண்டுவந்து தரும்:
யார் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துகின்றாரோ அல்லாஹ் அவரை விரும்புகின்றான். யாரை அல்லாஹ் விரும்புகின்றானோ அவருடைய காரியங்களை எளிதாக்கி நேர்வழியும் காட்டுகின்றான்.
“பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்! அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்” சூரத்துல் ஜுமுஆ 10
மௌலவி ரிஸ்கான் முஸ்தீன் மதனி,
அழைப்பாளர்,
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்,
சவூதி அரேபியா