அநாதைகள் குறித்து அல்-குர்ஆன்!

 


அநாதைகளை ஆதரிப்பது புண்ணியமாகும்!

“புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)” (அல்-குர்ஆன் 2:177)

“அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; ‘எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்’ என்று; நீர் கூறும்: ‘(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்); மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்” (அல்-குர்ஆன் 2:215)

அநாதைகள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்!

“(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) ‘அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;’ நீர் கூறுவீராக: ‘அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது; நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்; இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்; அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்” (அல்-குர்ஆன் 2:220)

அநாதைகளின் சொத்துக்களை அவர்களிடமே ஒப்படைத்து விடுங்கள்!

“அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் – (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் – ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் – (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்-குர்ஆன் 4:6)

அநாதைகளின் சொத்துக்களில் நல்லவற்றிற்கு பதிலாக கெட்டதை மாற்றிக் கொடுக்காதீர்கள்!

“நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் – நிச்சயமாக இது பெரும் பாவமாகும்” (அல்-குர்ஆன் 4:2)

புத்தி சுவாதீனமற்ற அநாதைகளுக்கு உணவு, உடை அளித்து ஆதரியுங்கள்!

“(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் – எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்” (அல்-குர்ஆன் 4:5)

அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பவர்களுக்கான தண்டணைகள்!

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் – நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். (அல்-குர்ஆன் 6:152)

“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)

நீங்கள் பாகப்பிரிவினை செய்யும் போது அநாதைகள் வந்தால் அவர்களுக்கும் ஏதாவது கொடுங்கள்!

“பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (அல்-குர்ஆன் 4:8)

வீண்பெருமையடித்து கர்வம் கொள்ளாமல் அநாதைகளுக்கு அன்புடன் உபகாரம் செய்யுங்கள்!

“மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)

செல்வம் பணக்காரர்களிடையே மட்டும் சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது! அநாதைகளுக்கும் கொடுத்து உதவிட வேண்டும்!

“அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (அல்-குர்ஆன் 59:7)

அநாதைகளைக் கண்ணியப்படுத்த வேண்டும்!

“ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: ‘என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்’ என்று கூறுகிறான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், ‘என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்’ எனக் கூறுகின்றான். அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (அல்-குர்ஆன் 89:15-20)

அநாதைகளைக் கடிந்து கொள்ளாதீர்கள்!

“முற்பகல் மீது சத்தியமாக- ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை. மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும். இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர். (நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான். மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான். எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர். யாசிப்போரை விரட்டாதீர். மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக” (அல்-குர்ஆன் 93:1-11)

மக்களிடம் பிரதிபலன் எதிர்பாராமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளித்தவர்களின் உன்னத நிலை!

“நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும், (காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள். அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும். மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். ‘உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை’ (என்று அவர்கள் கூறுவர்). ‘எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்’ (என்றும் கூறுவர்). எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான். மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான். அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள். மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும். (பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும். (அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள். மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள். ‘ஸல்ஸபீல்’ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது. இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர். அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர். (அல்-குர்ஆன் 76:5-20)

அநாதைகளை விரட்டுபவன் நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்தவன் ஆவான்!

“(நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை” (அல்-குர்ஆன் 107:1-3)

أحدث أقدم